ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திர பந்தத்தில் திரு எழுகூற்றிருக்கை–

ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திர பந்தத்தில் திரு எழுகூற்றிருக்கை–

494-499ஆம்பக்கங்களிலுள்ளது.
https://www.tamilvu.org/node/154572?linkid=118853

——–

ஒரு தனித் திகிரியி னிரு விசும்பொழுக்கத்
தொருஞான்றொரு பகலொடியா வுழப்பிற்

(இருவிசும்பொழுக்கத்து) பெருமையை யுடைய ஆகாச வீதியினிடத்து
(ஒருஞான்று…… வுழப்பின்) ஒருநாளின் கண் ணொரு கணப்பொழுது மொழிவில்லாத முயற்சியோடும்

பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின்
முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா
னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண்
மும்மத நால்வாய்க் கரியுரிமுக்கட்
செம்மல்

(முந்நீர்… .. வியப்பான்) சமுத்திரத்தை யெல்லையாக வுடைய நிலத்தின்
கண் ணுயர் திணையிடத் தாண் பெண் ணென்னு மிரண்டு பாலு மதிக்கும்படிக்கு

(ஒருதனி…. யூர்தியின்) ஒன்றென்னப்பட்ட ஒப்பற்றவுருளோடு தாளிரண்டு மில்லாத பாகனையுடைய தேரின் மீதே

(ஒருபிணர்…… செம்மலின்) ஒன்றாய சற்சரைவடிவினை யுடைய பெரிய கையினையும், பெருகாது சிறுகாது
தம்மி லொத்த புழையொடு கூடிய விரண்டு கரடத்தினையும், மூன்று மதத்தினையும்,
நான்ற வாயினையு முடைய யானையை யுரிக்கு முருத்திரனைப் போலச் சிவந்து,

இருகணு மிமையாத் தேவர்க
ளொருபோழ்தகலா தொரு வழிப்பட நின்
றிருகையுங் கூப்பி முப்போதினுமிறைஞ்ச
நான்முக முதல்வனினசைஇய நல்கு
மைந்தருநீழலினறமுதனான்கினுண்

முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள
விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய
ரொருதிறத்திருபதநடநவின்றொழுக
மும்முரசானாமுன்றிலினிரட்டத்
தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு
மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச்
செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த

முக்கோற்பகவர்முறைமுறைபிறழா
விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென
வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர்
முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட
னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு
மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச
வாழ்நாளறுதியில்வவ்வுதற்கமைத்த
நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன
வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர்

முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத்
திருபிறப்பாளனோரிடத்தெதிருபு
லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர
வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ
னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த
வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்

நலங்கிளரொருதனிமுதலெனநாடிப்
பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு
முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு
நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந்
தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென
வாறறியந்தணரருமறைப்பொருளா

பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள்
ஞானபூரணககோதயநாவீற
மானபூடணகுருகாபுரிவரோதய
மறுசமயத்தவர்மத்தமால்யானையைத்
தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர்

வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட
விருசரணாம்புயத்தென்னையுமொன்றா
யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத்
திம்மாநிலத்தென்பொருட்டாற்
கைம்மாறெவனீகைக்கொண்டதுவே.

இது 297, 298-ஆஞ் சூத்திரங்களிலும் உரையிலுங் கூறியமுறையைத் தழுவி யெழுதியது.
இதில் முதலேழுநிலங்களும் நிலந்தொறும் எண்ணேறியிறங்கி ஏழிறுதியேறிய பேரேற்றமும்,
பின்னேழுநிலங்களும் அவ்வாறு ஒன்றிறுதியிறங்கிய பேரிறக்கமுமாகக்கொள்க.
பேரிறக்கத்துள் முதனிலமட்டும் நடத்தி முடிக்கப்பெற்றிருக்கிறது.
ஏனைய நிலங்களும் நடத்திமுடிப்பதற்கு உதாரணம் வந்துழிக்காண்க.

(இருகணுமிமையாத்தேவர்கள்…… நாலாங்கடவுள் வீற்றிருக்கும் நற்றிசைவரு மிளங்கதிர்)
இரண்டுநயனமு மிமையாத வானோ ரொருகாலமும் விட்டுநீங்காது திரிவிதகரணங்களு மாத்மஞானத்துடனொரு
நெறிப்பட விரண்டுகரங்களையுங்குவித்து மூன்று பொழுதுந் தலைவணக்கஞ்செய்ய,
நான்குமுகங்களையுடைய பிரமனைப் போல விரும்பியதெல்லாங்கொடுக்கு மைந்துவிருக்கமாகிய
கற்பகாடவி நீழலிலே அறமுதலாய நாலுபொருள்களுள் முன்னேநின்ற மூன்றுபாலுந் தம்மாலாய
பெரியவின்பத்தைக் கைக்காள்வாயாகவென் றெதிர்கொண்டு நிற்ப, விரண்டுபக்கமு மின்போன்றதொரு
மருங்குலையுடைய வானவர் மகளிர் தாளமுங் கானமும் வாச்சியமு மபிநயமு மொருகூறுபாடெய்த
விரண்டுபதங்களினாலு நாடகத்தைநடித் தொழுகாநிற்ப, நாலுதிக்கிலுமுள்ள சத்துருக்கள்மாறுபாட்டைக்கெடுத்து
மூன்றுமுரசமும் நீங்காமல் முன்றிலின்கண் ணாரவாரிப்ப, செவியாதிய பொறியைந்தினுந் தங்கப்பட்ட
சத்தாதிக ளைந்தினையு மடக்கி யுண்மைப்பொருளைக்கூறு நாலுவேதத்தினையுந் தெளியவாராய்ந்த
முக்கோற்பகவராகி யெடுத்தசென னந்தோறு மிழைத்தமுறையே யடைவுதப்பாமல்வரு
நல்வினை தீவினை யென்னு மிரண்டையு மொக்கவென்று பரத்துவ சொரூபரூபகுணவிபூதி களினிலைமை
யித்தன்மைத்தென நிச்சயமாகவுட்கொண்டோ ரிம்மை மறுமை யிரண்டுந் தெளிந்தோர்
சாத்துவிக ராசத தாமதமென்னுங் குண மூன்றனுள் முற்குணங் குடிகொண்டோராகிய எதிகளுட னாற்
பெருங் கடவுளென்னும் இந்திர னொரு பராக்கற வீற்றிருக்குங் கிழக்கென்னு நல்லதிக்கினி லுதிக்கு மிளைய நாயிறு,
உலகின்கண்ணுள்ள இனியவுயிர்க ளஞ்சுவதாக அவரவர்வாழ்நாளற்ற அந்தியத்தி லுயிரை யுண்ணும்படிக்கு விதித்த
நமன்றிக்கி லெழுந்த கூறுபாடு ஆச்சரியமென்று, நினது திருமேனியிற் சுடர்ச்சோதியைக்கண் டுட்கொண் டது
விளங்கும்படிக் குத்தர கங்கையினின்றும் ஆறுதளையு மழகியசிறையையு முடைய வண்டின் சாதிநான்குங் குடையத்
தேனையொழுக்கு நறுவிதாந் தாமரைத்தாரும் முப்புரி நூலுங் கிடக்கு மார்பினையுடைய இருபிறப்பாளனாகிய
மதுரகவி, யொருதானத் தெதிர்ந்து, பேரானந்தந் தழையாநின்ற மூவரா மொருதனி முதலாகிய
ஸ்ரீமந்நாராயணனென ஞானத்தா லுட்கொண்டு, பொன்னாற் செய்த வீரக்கழலையுடைய நினது
திருவடிகளிரண்டையுங் கட்புலனுறவும் பெருமையெய்திய மனோவாக்குக்காயங்களின்முயற்சியாற் போற்றலும்,
அறமுதலிய நான்குபொருளும் பயப்பதாக நல்ல கனிபோன்ற திருப்பவளத்தினைத் திறந்து,
வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி மருட்பா வெனப் பெயர்பொருந்துதலுடைய யாப்பைந்தினுக்கு மிலக்கண மென்று சொல்வதாக,
ஆறங்கத்தையுந் தெளிந்த வந்தணர்க்குரியவா யறிதற்கரிய வா நால்வேதப்பொருளினாற் பரமபதநாதனாகிய இறை
கருடவாகனத் தேறி யெழுகடலுஞ்சூழ்ந்த பூலோகத்தில் வெளிவரும்படிக்குச் சுவை யாறனுள்ளு மதிமதுரமென்னு
முக்கியச்சுவை மிகுவதாக, ஐந்துபொருளொடுங்கூடிய தமிழ்மொழியால்,
திருவிருத்தம் திருவாசிரியம் திருவந்தாதி திருவாய்மொழி யென்னு நான்குகூறுபாடுடைய நாலுபிரபந்தங்களையு
முலகமூன்றுமளந்த வவன் றிருச்செவிகட்கு அமிர்தமென்று சொல்லும்படி யினிமையெய்தவூட்டிய வொப்பற்ற வரிய
செயலொடு முலகின்கண்ணுள்ளவுயிர்கள் யாவும் பிறந் திறந் தலம்வரு பிறப்பாகிய பெரிய
பிணியைத் தீர்த்துக் கிருபைசெய்த ஞானபூரணனே ! ஆனந்தத்திற்குப் பிறப்பிடமானவனே ! நாவீறுடையானே !
அபிமானபூஷணனே ! குருகைமாநகரிடத்துதித்த பலவரங்களு முதயமானவனே !
பரசமயிகளான மதயானைத்திரளை வெல்லும் ஒருசிங்கமான திருப்பெரும்பூதூரடிகளாகிய வெதிராசனைத்
திருவுளமகிழ்ந் தினிதாகவாண்ட இரண்டென்னுஞ் சரணதாமரையால் அறிவில்லாத என்னையும் ஒருபொருளாகக்
கருணை புரிந் தடிமைகொண்டதற் கிந்தப் பெரியநிலத்து முற்காலத் தெனது ஏதுவாக நீ கைக்கொண்ட
கைம்மா றியாதென்று சொல்லுவாயாக வென்றவாறு.

இதனுள் ஒருபகலென்றது கணப்பொழுதை ; “ஒருபகலுள்ளே யுருப்பவிர்” என்பதனா லறிக.

ஒடியா வுழப்பு-ஒழிவில்லா முயற்சி.

பாகன் பாகுடையென அன்விகுதி கெட்டது.

பிணர் – சற்சரைவடிவு.

செம்மல் – பெரியோன். இன் உவமஉருபு.

நசைஇய – விரும்பப்பட்டன.

முழுநலம் – பேரானந்தம்.

தெற்றென – தெளிய.

பிறழாது – மாறாடாது.

ஒருங்கு – ஒக்க.

ஒரு தலை – நிச்சயம்.
இருமை – இம்மை மறுமை.

முற்குணம் – சாத்துவிககுணம்.

நாலாங்கடவுள் – இந்திரன்.

அமைத்த – விதித்த.

இறும்பூது – ஆச்சரியம்.

உளர்தல் – குடைதல்.

அவிழ்த்தல் – ஒழுக்குதல்.

நலம் – ஆனந்தம்.

நாற்பொருள் – அறம் பொருள் இன்பம் வீடு.

உறுபொருளைந்துடன் என்பது
“மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் – தொக்கியலு,
மூழ்வினையும் வாழ்வினையும்” என்னும் பொருளைந்துடன் என்றவாறு.
பேராண்மை – அரியசெயல். பொருட்டு – ஏது. கைம்மாறு – உபகாரங்கொண்டு உபகாரஞ்செய்கை.
எவன் – யாதென்றவாறு.

முந்நீர்வரைப்பி னிருபால்வியப்பா னிருவிசும்பொழுக்கத்து ஒரு தனித்திகிரிப் பதமிரண்டுமிலாப் பாகுடை
யூர்தியின் முக்கட்செம்மலி னாலாங்கடவுள்வீற்றிருக்கு நற்றிசைவரு மிளங்கதிர், நமன்றிசையெழு திறனிறும்பூதென்ன,
விருபிறப்பாளனோரிடத்தெதிருபு முதலெனநாடிப் போற்றலுங் கனிவாயினைத்திறந் தருமறைப்பொருளா லெழுகடற்புவனத்
தெழுந்திறைவெளிவர வுறுபொருளைந்துட னுயர்தமிழ்மொழியா னால் வகைப்பனுவல் மூவுலகமுமளந்தவனிரு
செவிக் கமிர்தாமெனவினி தளித்த பேராண்மையி னுயிர்கடாம் பிறந்திறந்துழலும் பிணிதவிர்த்தருள் ஞானபூரண!
நாவீற!
குருகாபுரிவரோதய!
எதிராசனையாண்ட விருசரணாம்புயத் தென்னையு மொன்றா யருள்புரிந்தாண்டதற்
கென்பொருட்டாற் கைம்மா றெவனீ கைக்கொண்டதுவே
எனக் கூட்டுக.

பஞ்சாயுதங்களெனப்பாற்கடலான் பற்றியவைக்
கெஞ்சாதசாதிப்பேரிட்டெழுத–நெஞ்சே
கணக்காயர்புள்ளியிட்டகாலத்தேயோகம்
பிணக்காதவர்பேர்பெறும். (804)
இது மாத்திரைச்சுருக்கம்.

—————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: