உபய காவேரி மத்தியிலே ஸ்ரீரங்கத்தில் அழகிய மணவாளனது சயந திருக்கோலத்தை
ஸேவிக்கப் பெற்ற பின்பு, யான் அந்தக் கிடையழகிலே மனம் ஈடுபட்டுப்
புறம்பே செல்ல மாட்டாது தவித்து வருந்துதலை யொழிய
அதனை மறந்து தரித்திருக்க உபாயமுண்டோ என்று -தாம்
எம்பெருமானது கிடையழகில் ஈடுபட்டமையை இதனால் கூறுகின்றனரென்க.
கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப்
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே
பதவுரை
ஏழையேன்–(எம்பெருமானைக் கிட்டினால் அநுபவிக்க மாட்டாமலும், பிரிந்தால் தரிக்க மாட்டாமலும்)
பேதைமைக் குணத்தையுடைய நான்
கங்கையின் புனிதம் ஆய காவிரி நடுவு பாட்டு–கங்காநதியிற் காட்டிலும் பரிசுத்தி யுடையதாகிய காவேரிநதியினது நடுவிடத்திலே
பொங்கு நீர்–பெரிய கிளர்த்தியோடு வருகின்ற (அந்நதியின்) நீர்ப் பெருக்கு
பரந்து பாயும்–எங்கும் பரவிப் பாய்தற்கிட மானதும்
பூ பொழில்–அழகிய சோலைகளை யுடையதுமாகிய
அரங்கம் தன்னுள்–கோயிலிலே
எங்கள் மால்–(அடியவரான) எங்களிடத்தில் பேரன்பு உடையவனும்
இறைவன்–ஸர்வ ஸ்வாமியும்
ஈசன்–ஸர்வ நியாமகனுமாகிய ஸ்ரீ ரங்கநாதன்
கிடந்தது ஒர் கிடக்கை–சயனித்திருப்பதாகிய ஒப்பற்ற பள்ளி கொண்ட திருக்கோலத்தை
கண்டும் –ஸேவிக்கப் பெற்ற பின்பும்
மறந்து–(அந்த கிடையழகை) மறந்து போய்
எங்ஙனம் வாழ்கேன்–எவ்வாறு தரித்திருப்பேன் யான்?
ஏழையனே–ஒன்றுஞ் செய்யமாட்டாது திகைத்தவனாகவே நிற்பேன்.
விளக்க உரை
கங்காநதியானது
விஷ்ணு பாதத்தில் நின்றும் தோன்றியதலால் பரிசுத்தமானது; என்றாலும்,
சிவனுடைய சடை முடியில் தங்கியதனால் ‘ரெளத்ரம்’ (ருத்ர ஸம்பந்தமுள்ளது- சடைச்சாறு) என்று
சொல்லுகிற ஒரு குறைவை அடைந்திட்டது;
இந்தக் காவேரியோ
அங்ஙனம் குறைபாடு ஒன்றுமில்லாததோடு அந்தக் கங்கையைத் தனது திருவடியில் நின்றும்
உண்டாக்கின பெருமான் தான் மிக்க அன்பு பூண்டு தன் நடுவிற் பள்ளிக் கொள்ளும் பாக்யமும் பெற்றது பற்றி,
அந்த கங்கையை பார்க்கிலும் இது ஏற்றம் பெற்றதாகுமென்பர் .
*பேநைர் ஹஸந்தீவ த்த்கங்காம் விஷ்ணுபதித்துவ மாத்ரமுகராம் ஹேமாபகா ஹந்த்வகம் என்று
பட்டரும் அருளிச் செய்தது காண்க.
(பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழிலரங்கம்)
கோயிலைக் கிட்டுகின்றோமென்கிற குதூஹத்தினால் பெரிய கிளர்த்தி கொண்டு தனது பெரு மகிழ்ச்சி
யெல்லாம் தோற்றுமாறு எங்கும் காவேரிநதி பாய்வதனால்
எப்போதும் மலர்கள் மாறாத சோலைகள் சூழ்ந்த பெரிய பெருமாளது ஸெளகுமார்யத்துக்கு
அநுகூலமான நீர்வளத்தையும்
எப்போதும் இளவேனிற் பருவம்போலத் தோன்றுகிற பூஞ்சோலைகளையுமுடைய ஸ்ரீரங்கம்:
இதனால் அத்தேசத்தினது
தூய்மையும் .
இனிமையும் வெளியாமென்க.
இறைவன் என்பது –
அவன் ஸகல பதார்த்தங்களுக்கும் தலைவன் என்பதையும்;
ஈசன் என்பது –
தனது தலைமைக்குத் தகும்படி ஆளவல்ல திறமையுடையவ னென்பதையும் தெரிவிக்கு மென்ப.
கண்டும் மறந்து எங்ஙனம் வாழ்கேன்-
இவ் விஷயத்தைக் கண்டு அநுபவிப்பதற்கு முன்பாகில் மறந்தாலும் மறக்கலாம்;
கண்டு அநுபவித்த பின்பு மறக்கும் வழி தெரியவில்லையே!
மறக்க மருந்துண்டாகில் கொடுங்கள் என்கிறார்.
கவேரனுடைய மகள் என்னும் பொருளதான காவேரீ என்ற வடசொல் காவிரி எனத் திரிந்தது.
நடுவு பாட்டு –ஏழனுருபு: இடத்திலே.
எங்கள்- தம்மை போன்ற அடி யாரையும் உளப்படுத்திய தன்மைப் பன்மை.
மால் –அன்பு;அதனையுடையவனுக்கு ஆகுபெயர்.
ஏழையேன் – “நுண்ணுணர்வின்மை வறுமை” என்றபடி ‘அறிவில்லாதவன்’ என்றவாறு.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply