“கரும்பினைக் கண்டுகொண்டு” என்றும்,
“அரவணைத் துயிலுமா கண்டு” என்றும்
அழகிய மணவாளனை நீர் கண்ணால் கண்டாமையாலன்றோ “என்செய்கேன்! என் செய்கேன்!!” என்று தவிக்கிறீர்;
அப்பெருமான் பள்ளி கொண்டருளும்படியைக் கண்ணால் காண வேண்டா;
ஒரு மூலையிலே உட்கார்ந்து நெஞ்சினால் தியாநஞ் செய்துகொண்டிரும் என்று சிலர் சொல்ல
அதற்கு உத்தரமாக தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார் –
அப்பெருமான் பள்ளி கொண்டருளுமாற்றை நெஞ்சினால் தான் நினைத்துத் தரிக்க முடியுமோ? என்கிறார்.
பணிவினால் மனம தொன்றிப் பவள வாயரங்க னார்க்கு
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியனார் செம் பொனாய அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்க லாமே
பதவுரை
பவளம் வாய்–பவளம் போன்ற அதரத்தை யுடைய
அரங்கனார்க்கு–அழகிய மணவாளன் விஷயத்திலே
பணிவினால்–கைங்கர்ய ருசியால்
மனம் அது ஒன்றி–கருத்தைப் பொருந்த வைத்து
துணிவினால்–துணிவுடன்
வாழ மாட்டா–வாழ மாட்டாத
தொல்லை நெஞ்சே–கிழத்தனமுள்ள மநஸ்ஸே!
அணியின் ஆர்.–அழகினாலே பூர்ணமாய்
செம் பொன் ஆய அருவரை அணைய–செவ்விய பொன்னாலே செய்யப்பட்ட சிறந்த மேரு பர்வதத்தை யொத்த
கோயில் –கோயிலிலே
மணி அனார்–நீலமணி போன்ற எம்பெருமான்
கிடந்த ஆற்றை–கண் வளர்ந்தருளுகிற படியை
மனத்தினால்–நெஞ்சினால்
நினைத்தல் ஆமே –(அளவிட்டு அறியக் கூடுமோ?
நீ சொல்லாய்–நீயே சொல்லிக் காண்.
விளக்க உரை
நெஞ்சால் நினைக்க முடியா தென்பதை உபபாதிப்பன-முன் இரண்டடிகள்.
நெஞ்சே! நீ வெகுகாலத்தைப் பாழே கழித்தவனல்லையோ?
நீ அநுகூலப்பட்டிருந்தா யாகில் முன்னமே உஜ்ஜீவித்திருக்கலாமன்றோ
அதற்காக நீ செய்திருக்கவேண்டிய காரியமும் அதிகமொன்றுமில்லை;
உன்னுடைய சிந்தனையை எம்பெருமான் விஷயத்திலே செலுத்தி அவனை பணிவாக நிலைநிறுத்தி,
‘இனி நாம் பணியவேண்டிய வ்யக்தி வேறில்லை’ என்று திண்ணி தாக அத்யவஸாயங் கொண்டிருந்தால்
இவ்வளவே போதும் உஜ்ஜீவநத்திற்கு;
வெகுகாலமாக இப்படிப்பட்ட பணிவும் அத்யவஸாயமும் இல்லாமல் நெடுநாளாகப் பாழாய்போனவனன்றோ நீ;
இப்படி சிறிது காலம் ஒரு விஷயத்திலே நிலைநிற்கமாட்டாத நீ
எம்பெருமான் அரவணைமேல் சாய்ந்தருளும்படியை நினைப்பதென்றால்
இது கூடுமான காரியமா என்பதை நீயே ஆராய்ந்து பார் என்கிறார் என்னவுமாம்.
(பணிவினால் மனமது ஒன்றி)
இங்கு மனம் என்று மநோ வ்ருத்தியாகிய சிந்தனையைச் சொல்லுகிறது.
ஒன்றி-
பிறவினைப் பொருளில் வந்த தன்வினை;
ஒன்றுவித்தது என்றபடி.
சிந்தனையைப் பணிவினால் ஒன்றுவித்தலாவது
எம்பெருமானைப் பணிவதாக முயற்சி செய்தல்,
“இதர விஷயங்களிலேயே போகிற நெஞ்சை அவற்றில் நின்றும் மீட்டு
ப்ராப்த விஷயத்திலே ப்ரவணமாக்குவோ மென்னும் உத்யோக மாத்ரமே யாய்த்து
இவ்விஷயத்திற்கு வேண்டுவது” என்பர் பெரியவாச்சான் பிள்ளையும்.
துணிவினால் –
த்ருடாத்யவஸாயத்தினால் என்றபடி.
வாழமாட்டா என்று-
இத்தனை காலமாக வாழா தொழிந்தமையைக் கூறியவாறு
(தொல்லை நெஞ்சே)
இழவிலே உள்ள தொன்மையை (அநாதித்வத்தை) நெஞ்சினிலே ஏறிட்டுக் கூறுகிறபடி;
அநாதிகாலம் வாழ்ச்சியை இழந்தொழிந்த நெஞ்சே! என்றவாறு.
(அணியினார் இத்யாதி)
மஹாமேருவைப் புடைப்படத் துளைத்து அது விம்மும்படி அதிலே ஒரு நீல ரத்நத்தை அழுத்தினாற்
போலாய்த்துக் கோயிலாழ்வார்க்குள்ளே பெரியபெருமாள் கண் வளர்ந்தருளுகிறபடி.
மணி அனார்-
‘அன்னார்’ என்பது
அனார் எனத் தொக்கிக் கிடக்கிறது.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply