ஸ்ரீ திரு மாலை-16-சூதனாய்க் கள்வனாகி–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

சூதனாய்க் கள்வ னாகித் தூர்த்தரோ டிசைந்த காலம்
மாதரார் கயற்க ணென்னும் வலையுள் பட் டழுந்து வேனை
போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன் பால்
ஆதரம் பெருக வைத்த அழகனூ ரரங்க மன்றே.

பதவுரை

சூதன் ஆய்–(முதலில்) சூதிலே ஊன்றினவனாய்
கள்வன் ஆகி–(பிறகு) களவிலே ஆழ்ந்தவனாய்
தூர்த்தரோடு இசைந்தகாலம்–விஷயாந்தர ப்ரவணரோடே பொருந்தியிருந்த காலத்திலே
மாதரார் –ஸ்திரீகளுடைய
கயல் கண் என்னும்–கயல் போன்ற கண்களாகிற
வலையுள் பட்டு–வலையினுள்ளே அகப்பட்டு
அழுந்துவேனை–அழுந்திக் கிடக்கிற என்னை
போதரே என்று சொல்லி–‘அடா! இப்படிவா’ என்று அருளிச் செய்து
புந்தியில் புகந்து –என் மணஸிலே வந்து புகந்து
தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகன்–தன்னிடத்திலே அன்பை வளரச் செய்த அழகையுடைய எம்பெருமானது
ஊர்–இருப்பிடம்
அரங்கம்–திருவரங்கமாகும்.
(அன்றே-ஈற்றசை; தேற்றமுமாம்)

விளக்க உரை

எம்பெருமானால் தாம் பெற்ற பேற்றை மற்றொரு வகையாகப் பேசுகிறார்.
முன்னிரண்டடிகளால்-தாம் முன்பு நின்ற நிலையைக் கூறி,
பின்னடிகளால்-இப்போது பெற்ற நன்மையைக் கூறுகிறார்.

ஒருவன் விஷயாந்தரங்களிலே அகப்பட்டால் அந்த ஸப்தாதி விஷயங்களை இஷ்டப்படி அநுபவிப்பதற்குப்
பொருள் விஸேஷமாக வேண்டுமாதலால் எவ்வழியிலாவது
அது திரட்ட வேண்டிச் சூதாடுவதிலும் களவு செய்வதிலும் இறங்குவான்;

சூதாவது-பச்யதோஹரத்வம்;
அதாவது-
ப்ரத்யக்ஷக்களவு; ‘ கன்னக்களவன்று’ என்கிற மாத்திரமேயொழிய, களவு என்பதில் தட்டில்லை;

சூதாடுகிறவன் முதலில் விஸேஷ லாபம் வரக் கண்டு மேன்மேலும் அதிலே முயல்வான்;
அடைவிலே, சூதில் பெற்ற பொருளையும் இழந்து
ஏற்கனவே கையிலுள்ளதையுமிழந்து அனைத்தையும் கொதுகை வைத்துக் தோற்கும்படியான நிலைமைக்கு வருவான்;
இதில் இவ்வளவு தன்மை யானவாறே பிறகு கன்னக்கனவிலே கைவைப்பான்.
அதிலே ஏகாகியாகத் திருடுவது சிலநாள் வரையில்;
தேர்ச்சி பெற்றவாறே தீவட்டிக் கொள்ளையிலிறங்குவான்;
அது ஒருவனாய்ச் செய்யக்கூடிய காரியமன்றாகையால் பலரையும் துணை கூட்டிக்கொள்வான்.
நாலு தூர்த்தரோடு நெருங்கினவாறே அவர்கள் மாதரார் கயற்கணெனனும் வலையில் பட்டழுந்தும்படி செய்வார்கள்.
அதற்கு மேற்பட்ட ஆபத்து வேறொன்று சொல்ல வேண்டா.
இத்தனையும் தமக்கு உண்டானதாகச் சொல்லுகிறார் இவ்வாழ்வார்.

இப்படிப்பட்ட துஸ் சரிதங்களாலே எம்பெருமானுடைய அலம் புரிந்த நெடுந்தடக்கைக்கும் எட்டாமல்
நெடுந்தூரஞ்சென்ற என்னை அவ்வெம்பெருமானுடைய அழகானது
‘பயலே இங்குவா’என்றழைக்க அதை நான் செவியிலேற்றுக் கொள்ளாமற்போக,
பின்னையும் அவ்வழகு என்னை விடமாட்டாதே
என் நெஞ்சினுள்ளே வந்து சிக்கனப் புகுந்து ஸ்திரமாகக் குடியிருந்து எம்பெருமான் பக்கலில் நான் மிக்கு
ஆதரம் வைக்கும்படி செய்த விசித்திரம் என்னே! என்று சிந்தித்து உருகுகின்றனர்-பின்னடிகளில்.

இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்;-
“தன்பால் ஆதரம் பெருகவைத்த”என்ற அடைமொழியை
அழகனிடத்திலே அந்வயிக்காமல்
அழகிலே அந்வயிக்க வேண்டும்:-
எம் பெருமான் ஓர் அழகு உடையவன்; அவ்வழகு எப்படிப்பட்டதென்றால்,
சூதனாய்க் கள்வனாகி வலையுள்பட்டழுந்து வேனைப் போதரேயென்று சொல்லிப் புந்தியிற்புகந்து
தன்பால் ஆதரம் பெருகவைத்து-என்றிங்ஙனே உய்த்துணர்க.
தன்பால்-எம்பெருமானிடத்திலே என்றபடி.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: