Archive for March, 2022

ஸ்ரீ திரு மாலை-21-பணிவினால் மனமது ஒன்றி-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 31, 2022

“கரும்பினைக் கண்டுகொண்டு” என்றும்,
“அரவணைத் துயிலுமா கண்டு” என்றும்
அழகிய மணவாளனை நீர் கண்ணால் கண்டாமையாலன்றோ “என்செய்கேன்! என் செய்கேன்!!” என்று தவிக்கிறீர்;
அப்பெருமான் பள்ளி கொண்டருளும்படியைக் கண்ணால் காண வேண்டா;
ஒரு மூலையிலே உட்கார்ந்து நெஞ்சினால் தியாநஞ் செய்துகொண்டிரும் என்று சிலர் சொல்ல
அதற்கு உத்தரமாக தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார் –
அப்பெருமான் பள்ளி கொண்டருளுமாற்றை நெஞ்சினால் தான் நினைத்துத் தரிக்க முடியுமோ? என்கிறார்.

பணிவினால் மனம தொன்றிப் பவள வாயரங்க னார்க்கு
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியனார் செம் பொனாய அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்க லாமே

பதவுரை

பவளம் வாய்–பவளம் போன்ற அதரத்தை யுடைய
அரங்கனார்க்கு–அழகிய மணவாளன் விஷயத்திலே
பணிவினால்–கைங்கர்ய ருசியால்
மனம் அது ஒன்றி–கருத்தைப் பொருந்த வைத்து
துணிவினால்–துணிவுடன்
வாழ மாட்டா–வாழ மாட்டாத
தொல்லை நெஞ்சே–கிழத்தனமுள்ள மநஸ்ஸே!
அணியின் ஆர்.–அழகினாலே பூர்ணமாய்
செம் பொன் ஆய அருவரை அணைய–செவ்விய பொன்னாலே செய்யப்பட்ட சிறந்த மேரு பர்வதத்தை யொத்த
கோயில் –கோயிலிலே
மணி அனார்–நீலமணி போன்ற எம்பெருமான்
கிடந்த ஆற்றை–கண் வளர்ந்தருளுகிற படியை
மனத்தினால்–நெஞ்சினால்
நினைத்தல் ஆமே –(அளவிட்டு அறியக் கூடுமோ?
நீ சொல்லாய்–நீயே சொல்லிக் காண்.

விளக்க உரை

நெஞ்சால் நினைக்க முடியா தென்பதை உபபாதிப்பன-முன் இரண்டடிகள்.
நெஞ்சே! நீ வெகுகாலத்தைப் பாழே கழித்தவனல்லையோ?
நீ அநுகூலப்பட்டிருந்தா யாகில் முன்னமே உஜ்ஜீவித்திருக்கலாமன்றோ
அதற்காக நீ செய்திருக்கவேண்டிய காரியமும் அதிகமொன்றுமில்லை;
உன்னுடைய சிந்தனையை எம்பெருமான் விஷயத்திலே செலுத்தி அவனை பணிவாக நிலைநிறுத்தி,
‘இனி நாம் பணியவேண்டிய வ்யக்தி வேறில்லை’ என்று திண்ணி தாக அத்யவஸாயங் கொண்டிருந்தால்
இவ்வளவே போதும் உஜ்ஜீவநத்திற்கு;

வெகுகாலமாக இப்படிப்பட்ட பணிவும் அத்யவஸாயமும் இல்லாமல் நெடுநாளாகப் பாழாய்போனவனன்றோ நீ;
இப்படி சிறிது காலம் ஒரு விஷயத்திலே நிலைநிற்கமாட்டாத நீ
எம்பெருமான் அரவணைமேல் சாய்ந்தருளும்படியை நினைப்பதென்றால்
இது கூடுமான காரியமா என்பதை நீயே ஆராய்ந்து பார் என்கிறார் என்னவுமாம்.

(பணிவினால் மனமது ஒன்றி)
இங்கு மனம் என்று மநோ வ்ருத்தியாகிய சிந்தனையைச் சொல்லுகிறது.
ஒன்றி-
பிறவினைப் பொருளில் வந்த தன்வினை;
ஒன்றுவித்தது என்றபடி.

சிந்தனையைப் பணிவினால் ஒன்றுவித்தலாவது
எம்பெருமானைப் பணிவதாக முயற்சி செய்தல்,
“இதர விஷயங்களிலேயே போகிற நெஞ்சை அவற்றில் நின்றும் மீட்டு
ப்ராப்த விஷயத்திலே ப்ரவணமாக்குவோ மென்னும் உத்யோக மாத்ரமே யாய்த்து
இவ்விஷயத்திற்கு வேண்டுவது” என்பர் பெரியவாச்சான் பிள்ளையும்.

துணிவினால் –
த்ருடாத்யவஸாயத்தினால் என்றபடி.

வாழமாட்டா என்று-
இத்தனை காலமாக வாழா தொழிந்தமையைக் கூறியவாறு

(தொல்லை நெஞ்சே)
இழவிலே உள்ள தொன்மையை (அநாதித்வத்தை) நெஞ்சினிலே ஏறிட்டுக் கூறுகிறபடி;
அநாதிகாலம் வாழ்ச்சியை இழந்தொழிந்த நெஞ்சே! என்றவாறு.

(அணியினார் இத்யாதி)
மஹாமேருவைப் புடைப்படத் துளைத்து அது விம்மும்படி அதிலே ஒரு நீல ரத்நத்தை அழுத்தினாற்
போலாய்த்துக் கோயிலாழ்வார்க்குள்ளே பெரியபெருமாள் கண் வளர்ந்தருளுகிறபடி.

மணி அனார்-
‘அன்னார்’ என்பது
அனார் எனத் தொக்கிக் கிடக்கிறது.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-20-பாயு நீர் அரங்கம் தன்னுள்-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்அருளிய -வியாக்யானம் –

March 31, 2022

பாயுநீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க் ககல லாமே.

பதவுரை

பாயும் நீர்–பாயாநின்றுள்ள காவிரி சூழ்ந்த
அரங்கம் தன்னுள்–கோயிலிலே
பாம்பு அணை–சேஷ சயநத்திலே
பள்ளி கொண்ட–கண் வளர்ந்தருளா நின்ற
மரகதம் உருவும்–மரகத மணி போன்ற திருமேனி நிறமும்
தோளும் –திருத் தோள்களும்
தூய தாமரை கண்களும்–பரிசுத்தமான தாமரை மலர்போன்ற திருக்கண்களும்
துவர் இதழ்–சிவந்த அதரமும்
பவளம் வாயும்–பவளம் போன்ற வாயும்
மாயனார்–ஆச்சரிய சக்தி வாய்ந்த எம் பெருமானது
திரு நல் மார்வும்–பிராட்டி வாழ்கின்ற விலக்ஷணமான மார்பும்.
ஆய சீர் முடியும் –வேலைப்பாடுள்ள அழகிய திருமுடியும்
தேசும்–(இவற்றாலுண்டான) தேஜஸ்ஸும்.
அடியரோர்க்கு–ஸ்வரூப ஜ்ஞான முடைய தாஸர்களுக்கு
அகலலாமோ–இழக்கத் தகுமோ?

விளக்க உரை

கீழ் “பனியரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே” என்றும்,
“உடலெனக் குருகுமாலோ என் செய்கேனுலகத்தீரே” என்றும்
கதறின ஆழ்வாரை நோக்கிச் சில ஸம்ஸாரிகள் “ஓய்! பகவத் விஷயத்திலே அகப்பட்டு ஏன் இங்ஙன கதறுகிறீர்?
அதில் ஊற்றத்தை விட்டு எங்களோடே கூடினீராகில் என் செய்கேன்! என் செய்வேன்!! என்று வாய்
வெருவ வேண்டாதபடி தரித்து ஸுகமே வாழலாமே! உம்முடைய ஸ்வயம் க்குருதாநத்தம் மிகவ மழகிறது! என்றாற்போலே சில சொல்ல;

அது கேட்ட ஆழ்வார், ‘ பாவிகாள்! கண் வளர்ந் தருளுகிற அழகைக் கண்டு வைத்து
இவ்வழகெல்லாம் நமக்காகவாயிற்று? என்று களிக்கும் படியான ஸ்வரூப ஜ்ஞாநமுடைய:எங்களுக்கு,
“அஹம்-மம” என்றிருக்கிற உங்களைப்போல் அகலமடியுமோ? என்கிறார்.

எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏட்டுப் புறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே
பரம பாவநமான திருவரங்கந் திருப்பதியிலே திருவனந்தாழ்வான் மீது
“தன் தாளுந் தோளும் முடிவுகளும் சமனிலாத பல பரப்பி” என்றபடி ஸகலாவயவ ஸெளந்தரியமும் நன்கு விளங்கும்படி
சாய்தருள்கின்ற எம்பெருமானது திவ்ய தேஜஸ்ஸைக் காணப் பெற்றவர்களும் மீண்டு கால் பேர்ந்து விலகமடியுமோ? என்க.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-19-குட திசை முடியை வைத்து–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 31, 2022

கண் முதலிய அவயவங்களுக்கு உண்டாகிற விகாரமேயல்லாமல்
அவற்றுக்கு ஆஸ்ரய மாய் அவயவியான ஸரீரமும் கட்டழியாநின்றதே! இதற்கு என் செய்வேன்! என்கிறார்.

அழகிய மணவாளன் நான்கு திக்குக்களுக்கும் தன் ஸம்பந்தமுண்டாம்படி ஸேஷ ஸயநனாய்
யோக நித்திரை செய்தருள்வதை ஸேவித்துத் தமது ஸரீரம் நீராய்க் கரைந்து உருகிச் செயலற்றிருத்தலை
உலகத்தார்க்கு வியப்போடு அறிவிக்கின்றனரென்க.

பூமியின் ஸ்ருஷ்டி – மநுஷ்யதிர்யக்ஸ் தாவரங்களான பொருள்கள் வாழ்தற்காக என்றும்
ஆகாஸத்தின் ஸ்ருஷ்டி – தேவர்கள் வாழ்தற்காக என்றும் ஏற்பட்டிருக்கிறது;
திக்குக்களின் ஸ்ருஷ்டி வ்யர்த்தம் என்று நினைக்கவேண்டா;
சேதநர்க்கு தன்மீது அன்பைக் யுண்டாக்குமாறு எம்பெருமான் தான் பள்ளி கொள்வதற்காகவே
திக்குக்களை ஸ்ருஷ்டித்ததும் என்று இப்பாட்டால் கூறுவதாக விஸேஷார்த்த முரைப்பார்.

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே.

பதவுரை

உலகத்தீரே–உலகத்திலுள்ளவர்களே!
கடல் நிறம் கடவுள்–கடல் போன்ற கருநிறத்தையுடைய கடவுளான
எந்தை–எம்பெருமான்
குடதிசை–மேற்கு திக்கில்
முடியை வைத்து–திருமுடியை வைத்தருளியும்
குண திசை–கிழக்குத் திக்கில்
பாதம் நீட்டி–திருவடிகளை நீட்டியும்
வடதிசை–வடக்குத் திக்கிலே
பின்பு காட்டி–(தனது) பின்புறத்தைக் காட்டியும்
தென்திசை–தெற்குத்திக்கில்
இலங்கை–(விபீஷணன் வாழுமிடமான) லங்கையை
நோக்கி–(அன்போடு) பார்த்துக் கொண்டும்
அரவும் அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையில்
துயிலும் ஆ–யோகநித்திரை செய்யுந் தன்மையை
கண்டு–காண்பதனால்
எனக்கு உடல் உருகும்-;
ஆலோ–ஐயோ
என் செய்வேன்–(நான்) என்ன செய்ய மாட்டுவேன்.

விளக்க உரை

மேலைத்திக்கு –
உபயவிபூதிக்கும் தலைமை வஹித்தலைத் தெரிவிக்குமாறு
தான் சூடின திருவபிஷேகத்தையுடைய திருமுடியை வைப்பதனாலும்
கீழைத்திக்கு –
ஸகலலோகமும் உஜ்ஜீவிக்கும்படி ஸரணமடைந்தற்குரிய தனது திருவடிகளை நீட்டுவதனாலும்,
வடக்குத்திக்கு
முரட்டு ஸம்ஸ்க்ருதம் நடையாடுவதாகி ஆழ்வார்களின் செவிக்கினிய ஈரச்சொல் நடையாடாத தேசமாகையாலே
அத்திக்கிலுள்ளாரெல்லாரும் ஈடேறுதற்கு ஏற்படவேண்டிய பின்னழகையெல்லாம் காட்டுவதனாலும்,
தெற்குத்திக்கு –
தனது அந்தரங்க பக்தனான விபீஷணாழ்வானுக்காகத் தனது திருக்கண்களை வைத்து அன்போடு நோக்குவதனாலும்
என இவ்வாறு நான்கு திக்குக்களும் பயன் பெறுமென்க.

விபீஷணாழ்வான் சிரஞ்ஜீவியாய் என்றும் இலங்கையில் வாழ்ந்து வருகின்றானென்பது நூற்கொள்கை.

இப்படி நாற்றிசையிலுள்ளாரும் பயன்பெற வேண்டுமென்று ஒரு வ்யாஜம் வைத்து
எம் பெருமான் பள்ளிகொண்டதும்
ஆழ்வார் பொருட்டாகவே யாயிற்றென்ற கருத்து மூன்றாமடியில் தோன்றும். (எந்தை)

உடல் உருகும் –
உணர்வுடைய ஜீவன் உருகுவதன்றி ஜடபதார்த்தமான உடம்பும் உருகு மென்றபடி.

(”எனக்கு உடலுருகுமாலோ என் செய்கேனுலகத்தீரே”:) –
ஆற்றுப் பெருக்கிலே அருகிலுள்ள கரைகள் உடைந்தால் கரையைப் பாதுகாப்பவர்கள் கைவிட்டுக் கடக்க
நின்று கூப்பிடுமாபோலே கூப்பிடுகிறார்.
பெரியபெருமா ளழகைக் கண்டுவைத்துக் குறியழியாதே புறப்படுகிற ஸ்ம்ஸாரிகளைப் பார்த்து
உங்களைப்போலே உடல் உருகாதே கல்லாயிருப்பதற்கு ஒரு உபாயம் சொல்லமாட்டீர்களோ? என்கிறார்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-18—இனித் திரைத் திவலை மோத -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 31, 2022

இனித் திரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே
தனிக் கிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ண னெம்மான்
கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணணைக் கண்ட கண்கள்
பனி யரும்புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவி யேனே.

பதவுரை

திரை திவலை–அலைகளிலுண்டான திவலைகளானவை
இனிதுமோத–இனிதாக அடிக்க (வீச)
எறியும்–கொந்தளிக்கிற
தண்–குளிர்ந்த
பரவை மீது–கடல் போன்ற திருக்காவேரியிலே
தனி கிடந்து–தனியே வந்து கண்வளர்ந்தருளி
அரசு செய்யும்–செங்கோல் செலுத்துகிற
தாமரை கண்ணன்–புண்டரீகாக்ஷனாய்
எம்மான் –எமக்கு தலைவனாய்
கனி இருந்தனைய செம் வாய் கண்ணனை –கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயை யுடையனான கண்ணபிரானை
கண்ட கண்கள்–ஸேவிக்கப் பெற்ற (எனது) கண்களில் நின்றும்
பனி அரும்பு–குளிர்ந்த கண்ண நீர்த் துளிகள்
உதிரும்–பெருகா நின்றன,
பாவியேன்–(கண்ணாரக் கண்டு களிக்கைக்குப்) பாக்கியமில்லாத நான்
என் செய்தேன்–ஏது செய்வேன்?

விளக்க உரை

எம்பெருமானை ஸேவிக்கப் பெற்றமைக்கு உகந்து உரைத்த ஆழ்வார் , கண்களினுடைய களிப்புக்குப் போக்கு வீடான
ஆநந்தக் கண்ணீர் பெருகப்பெற்று ஐயோ! இக்கண்ணீர் அரும்பரும்பாகத் துளித்துக் கண்களை மறைத்து
எம்பெருமானை இடைவிடாது ஸேவிக்க வொட்டாமல் துடைச் சுவராய்த் தடை செய்கின்றவே !
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாதொழியும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான்
இந்த துக்கத்திற்கு எங்குபோய் முறையிட்டுக் கொள்வேன் என்று வெறுக்கிறார்.

பரவை என்று கடலுக்குப் பெயர் ;
திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளுகிறவன் திருக்காவிரியிடையிலே வந்து கண்
வளர்ந்தருள்வதாக அதுஸந்திக்கிறர் என்னலாம்:
அன்றியே,
காவேரி தான் ஒரு பெருங்கடல் பெருகுமாபோலே பெருங்வெள்ளங் கோத்துப் புரளுகையாலே
காவேரியையே கடலாகச் சொல்லிற்றாகவுமாம் முற்றுவமை.

தனி கிடந்து -பிராட்டிமாருமில்லாமல் பரதேஸியாய்க் கிடக்கிறானென்றபடி யன்று;
நினைவறிந்து பரிமாறும் நித்யமுக்தாதிகளை ஒருநாடாகவுடையவன் அவர்களையெல்லாம் விட்டுவிட்டு,
ஸம்ஸாரிகள் பக்கல் நசையாலே “ஒருவனாகிலும் கிடைக்கக்கூடுமோ?” என்று வந்து கிடக்கும்படியைச் சொல்லுகிறது.

தனி-
ஒப்பில்லாதபடி என்றுமாம்.

அரசு செய்கையாவது –
விரோதி நிரஸநம் செய்கை
அதாவது –
‘அஹம்-யம’ என்றிருக்கும் ஸம்ஸாரிகளின் பாழான நிலைமையைக் குலைத்து ‘நம:’ என்னும்படி செய்து கொள்ளுகை.
“அரசு செய்யுந் தாமரைக் கண்ணன் “என்ற சொற்போக்கால் எம்பெருமான்
தனது திருக்கண்ணழகால் அனைவரையும் அகப்படுத்திக் கொள்ளுகிறான் என் விளங்கும்.

பெரியபெருமாளை ஸேவித்தால், அவதாரத்திற் பிற்பட்டவர்கட்கும் உதவுகைக்காகக் கண்ணபிரான் தான்
வந்து கண்வளர்ந்தருளுகிறானென்று ஸ்மரிக்கலாம்படி யிருக்குமாதலால் கண்ணனை என்கிறார்:
“ கோவலனாய் ப் வெண்ணெயுண்டவாயன்……….. அண்டர்கோ னணிய ரங்கன் திருப்பாணாழ்வாரும்.

இவ்விடத்திலே பட்டர் அருளிச்செய்யும்படி;
“யசோதைப் பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கைவளரும்படி வளர்த்த மொசுமொசுப் பெல்லாம்
பெரிய பெருமாள் பக்கலில் தோற்றியிருக்கும்:
வஸிஷ்டாதிகளாலே ஸுஸிகத ராய் வார்ந்து வடிந்த விநயமெல்லாம் தோற்றும்படியான சக்ரவர்த்தி திருமகளை
ஸ்மரிக்கலாம் படியிருக்கும் – நம்பெருமானைக் கண்டால்” என்று.

இனிது + திரை-இனிதிரை; கடைக்குறை.

இருந்தனைய –இருந்தாலனைய;
இருந்தாற் போன்ற என்றபடி.

ஆல் ஓ – வியப்பிடைச் சொற்கள்;;
இரக்கமும்
கூப்பீடும் தோற்றுகிற குறிப்பிட்டைச் சொற்களுமாம்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-17–விரும்பி நின்று ஏத்த மாட்டேன் –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 31, 2022

தரித்ரனுக்கு நித்ய பாயஸம் கிடைத்தாற்போலே, ஒருவகை யோக்யதையு மில்லாத
கல்நெஞ்சனான எனக்கு
அழகிய மணவாளன் ஸேவை ஸாதிக்கப் பெற்ற பாக்கியத்தை நான்
என்னவென்று சொல்லுவேன் என்று தடுமாறுகின்றனர்.

விரும்பி நின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே.

பதவுரை

விரும்பி நின்று–ஆதாரத்தோடே ஒருபடிப்பட நின்று
ஏத்த மாட்டேன்–ஸ்தோத்ரம் பண்ண மாட்டாதவனா யிரா நின்றேன்;
விதி இலேன்–(கை கூப்புதல் முதலிய) காயிக வ்யாபாரங்களும் செய்யப் பெறாதவனாயிரா நின்றேன்,
மதி ஒன்று இல்லை–(‘ஈச்வரன் ஒருவன் உண்டு என்கிற) ஒரு அறிவும் (எனக்கு) இல்லை;
(இப்படிப்பட்ட என்னுடைய)
இரும்பு போல் வலிய நெஞ்சம்–இரும்பைப் போல் கடினமான கல் நெஞ்சானது
இறை இறை உருகும் வண்ணம்–கொஞ்சம் கொஞ்சமாக உருகும்படி;
சுரும்பு அமர்-வண்டுகள் பொருந்திய
சோலை சூழ்ந்த–சோலைகளாலே சூழப்பட்ட
மா அரங்கம்–மாட்சிமை தங்கிய ஸ்ரீரங்கத்தை
கோயில் கொண்ட–இருப்பிடமாகத் திரு வுள்ளம் பற்றின
கரும்பினை–பரம யோக்யனான எம்பெருமானை
என் கண் இணை–எனது இரண்டு கண்களும்
கண்டு கொண்டு –பார்த்த வண்ணமாய்
களிக்கும் ஆறு ஏ –மகிழ்ச்சி யடைகிற விதம் என்னே?
(என்று ஆச்சர்யப்படுகிறபடி.)

விளக்க உரை

மனஸ்ஸு, வாக்கு, காயம் என்ற மூன்று வகை யுறுப்புகளில் ஒன்றினாலும்
நான் பகவத் விஷயத்தில் அந்வயிக்கப் பெறவில்லை;
சிறிது காலமாகிலும் ஒருபடிப்பட நிலைத்து நின்று உண்மையான அன்புடன் ஸ்தோத்ரஞ் செய்யுமவனல்லேனாதலால்
வாய் படைத்த பயன் பெற்றிலேன்;

(“நின் தலையைத் தாழ்த்து இருகை கூப்பென்றால் கூப்பாது பாழ்த்த விதி” என்றபடி)

ஒரு அஞ்சலியும் நேராகச் செய்யமாட்டாதவனாகையால் காயம் படைத்த பயனும் பெற்றிலேன்;
எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைப்பற்றி விஸேஷமாகச் சிந்திக்க மாட்டாமற் போனாலும்
‘எம் பெருமான் ஒருவன் உண்டு’ என்று அவனுடைய ஸத்தையையாகிலும் சிந்திக்கலாமே;
அதுவும் சிந்தித்திலேனாதலால் மனம் படைத்த பயனும் பெற்றிலேன்.

இனி மேலாவது மநஸ்ஸைத் திருத்திக்கொள்ளக்கூடுமோ வென்று பார்த்தாலும்
அதற்கும் யோக்யதையில்லாதபடி மனம் கல்லாய்க் கிடக்கிறது.

(“இரும்புபோல் நெஞ்சம்” என்னுமளவே போதுமாயிருக்க,
‘வலிய’ என்று விபேஷித்ததற்குக் கருத்து யாதெனில்;
“இரும்புபோல்”என்று சொன்னவுடனே நமது நெஞ்சுக்கு இரும்பை உவமை கூறியது ஒக்குமாவென்று ஆராய்ந்தார்;
இரும்பை நெருப்பிலே காய்ச்சி நிமிர்த்துக் கொள்ளலாம்;
நமது நெஞ்சு ஒருபடியாலும் ஸர்வசக்தனாலும் நிமிர்த்தமுடியாதிருத்தலால் இவ்வுபமாநம் ஒவ்வாது
வேறு எவ்வுபமாநமும் எலாது என்றெண்ணி, வலிய என்றார்.
ஸாமாந்யமாக, ‘கடினமான நெஞ்சு’ என்னலாமேயொழிய,
இன்னதுபோல் கடினமானதென்று சொல்ல முடியாதென்க.)

இத்தகைய கல் நெஞ்சம் கரையும்படி யாயன்றோ எம்பெருமான் கோயிலிலே கண் வளர்ந்தருள்வது!.
சோலைவாய்ப்பு அமைந்த அரங்கமாநகரில் அமர்ந்த நாதனை என் கண்கள் கண்டு
களிக்கும் விதத்திற்கு நான் என்ன பாசுரமிடுவேனென்கிறார்.

உபநிஷத்திலே “ ரஸோ வை ஸ:” என்று எம்பெருமானை ரஸமயனாக ஓதியிருப்பதால்
இவரும் (‘கரும்பு போன்றவனை’ என்னாமல்) கரும்பினை என்று ஸாக்ஷாத் கரும்பாகவே கூறுகின்றார்.

உருகும் வண்ணம் என்பது –
கோயில் கொண்ட என்பதனொடு அந்வயிக்கும் ;
கண்டு கொண்டு என்பதனோடு இசையுமென்பாருமுளர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-16-சூதனாய்க் கள்வனாகி–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 31, 2022

சூதனாய்க் கள்வ னாகித் தூர்த்தரோ டிசைந்த காலம்
மாதரார் கயற்க ணென்னும் வலையுள் பட் டழுந்து வேனை
போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன் பால்
ஆதரம் பெருக வைத்த அழகனூ ரரங்க மன்றே.

பதவுரை

சூதன் ஆய்–(முதலில்) சூதிலே ஊன்றினவனாய்
கள்வன் ஆகி–(பிறகு) களவிலே ஆழ்ந்தவனாய்
தூர்த்தரோடு இசைந்தகாலம்–விஷயாந்தர ப்ரவணரோடே பொருந்தியிருந்த காலத்திலே
மாதரார் –ஸ்திரீகளுடைய
கயல் கண் என்னும்–கயல் போன்ற கண்களாகிற
வலையுள் பட்டு–வலையினுள்ளே அகப்பட்டு
அழுந்துவேனை–அழுந்திக் கிடக்கிற என்னை
போதரே என்று சொல்லி–‘அடா! இப்படிவா’ என்று அருளிச் செய்து
புந்தியில் புகந்து –என் மணஸிலே வந்து புகந்து
தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகன்–தன்னிடத்திலே அன்பை வளரச் செய்த அழகையுடைய எம்பெருமானது
ஊர்–இருப்பிடம்
அரங்கம்–திருவரங்கமாகும்.
(அன்றே-ஈற்றசை; தேற்றமுமாம்)

விளக்க உரை

எம்பெருமானால் தாம் பெற்ற பேற்றை மற்றொரு வகையாகப் பேசுகிறார்.
முன்னிரண்டடிகளால்-தாம் முன்பு நின்ற நிலையைக் கூறி,
பின்னடிகளால்-இப்போது பெற்ற நன்மையைக் கூறுகிறார்.

ஒருவன் விஷயாந்தரங்களிலே அகப்பட்டால் அந்த ஸப்தாதி விஷயங்களை இஷ்டப்படி அநுபவிப்பதற்குப்
பொருள் விஸேஷமாக வேண்டுமாதலால் எவ்வழியிலாவது
அது திரட்ட வேண்டிச் சூதாடுவதிலும் களவு செய்வதிலும் இறங்குவான்;

சூதாவது-பச்யதோஹரத்வம்;
அதாவது-
ப்ரத்யக்ஷக்களவு; ‘ கன்னக்களவன்று’ என்கிற மாத்திரமேயொழிய, களவு என்பதில் தட்டில்லை;

சூதாடுகிறவன் முதலில் விஸேஷ லாபம் வரக் கண்டு மேன்மேலும் அதிலே முயல்வான்;
அடைவிலே, சூதில் பெற்ற பொருளையும் இழந்து
ஏற்கனவே கையிலுள்ளதையுமிழந்து அனைத்தையும் கொதுகை வைத்துக் தோற்கும்படியான நிலைமைக்கு வருவான்;
இதில் இவ்வளவு தன்மை யானவாறே பிறகு கன்னக்கனவிலே கைவைப்பான்.
அதிலே ஏகாகியாகத் திருடுவது சிலநாள் வரையில்;
தேர்ச்சி பெற்றவாறே தீவட்டிக் கொள்ளையிலிறங்குவான்;
அது ஒருவனாய்ச் செய்யக்கூடிய காரியமன்றாகையால் பலரையும் துணை கூட்டிக்கொள்வான்.
நாலு தூர்த்தரோடு நெருங்கினவாறே அவர்கள் மாதரார் கயற்கணெனனும் வலையில் பட்டழுந்தும்படி செய்வார்கள்.
அதற்கு மேற்பட்ட ஆபத்து வேறொன்று சொல்ல வேண்டா.
இத்தனையும் தமக்கு உண்டானதாகச் சொல்லுகிறார் இவ்வாழ்வார்.

இப்படிப்பட்ட துஸ் சரிதங்களாலே எம்பெருமானுடைய அலம் புரிந்த நெடுந்தடக்கைக்கும் எட்டாமல்
நெடுந்தூரஞ்சென்ற என்னை அவ்வெம்பெருமானுடைய அழகானது
‘பயலே இங்குவா’என்றழைக்க அதை நான் செவியிலேற்றுக் கொள்ளாமற்போக,
பின்னையும் அவ்வழகு என்னை விடமாட்டாதே
என் நெஞ்சினுள்ளே வந்து சிக்கனப் புகுந்து ஸ்திரமாகக் குடியிருந்து எம்பெருமான் பக்கலில் நான் மிக்கு
ஆதரம் வைக்கும்படி செய்த விசித்திரம் என்னே! என்று சிந்தித்து உருகுகின்றனர்-பின்னடிகளில்.

இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்;-
“தன்பால் ஆதரம் பெருகவைத்த”என்ற அடைமொழியை
அழகனிடத்திலே அந்வயிக்காமல்
அழகிலே அந்வயிக்க வேண்டும்:-
எம் பெருமான் ஓர் அழகு உடையவன்; அவ்வழகு எப்படிப்பட்டதென்றால்,
சூதனாய்க் கள்வனாகி வலையுள்பட்டழுந்து வேனைப் போதரேயென்று சொல்லிப் புந்தியிற்புகந்து
தன்பால் ஆதரம் பெருகவைத்து-என்றிங்ஙனே உய்த்துணர்க.
தன்பால்-எம்பெருமானிடத்திலே என்றபடி.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-15-மெய்யர்க்கே மெய்யன் ஆகும் -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 31, 2022

தம் உபதேசத்தை மதியாத ஸம்ஸாரிகளைக் குறித்து ஹிதம் கூறுவதில் நின்றும் கால்வாங்கின ஆழ்வார் -‘
இந்த ஸம்ஸாரிகளுக்குள்ளே ஒருவனான என்னைப் பரோபதேசம் பண்ண வல்லேனாம்படி
எம்பெருமான் தன் விஷயத்தில் படிப்படியாகப் பரம பக்தியளவான ஊற்றத்தைப் பிறப்பித்து
இப்படி நிர்ஹேதுகமாகக் கடாக்ஷித்தவாறு என்னே!’ என்று
தமது நன்றி யறிவு தோன்றக் கொண்டாடுகிறார்;
இதுவன்றோ அறிவுடையாருடைய செயல்.

‘தெய்வம் உண்டு’ என்று ஆதரவோடு அங்கீகரியாவிடினும்
‘தெய்வம் உண்டு’ என்று ஒருவன் சொன்னால் அதில்
ஆக்ஷேபாதிகளாலே பகைமை பாராட்டாதிருக்கும் நிலை – அத்வேஸ் மெனப்படும்:
இதுவே பரமபக்திக்கு முதற்படி எனப்படும்.
ஒரு வஸ்துவில் ஒருவனுக்கு த்வேஷம் குடி கொண்டிருந்தால் அவன் அவ் வஸ்துவைப்பற்றிச் சிந்திக்கவே முடியாது:
அன்றி, ‘நேசமுமில்லை, த்வேசமுமில்லை’ என்கிற நிலைமையிலிருந்தால் அவன் நாளடைவில்
அவ்வஸ்து விடத்தில் பரமபக்தி பர்யந்தமான அன்பைப் பெற்றுவிடக்கூடும் என்பது அனைவர்க்கு அநுபவம் ஸித்தமான விஷயம்.
ஆனது பற்றியே அத்வேஷமென்பது பரம ப்ரீதிக்கு முதற்படியாகக் கொள்ளப்புட்டிருக்கின்றதென்க.

இத்தகைய அத்வேஷமுடையார்க்குத்
தனது ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுத்தும்,
அவ்வாறன்றிப் பகைமை கொண்டிருக்கும் நாஸ்திகர்க்குத்
தனது ஸ்வருபத்தைக் காட்டித்தராமலும் இருப்பவனான எம்பெருமான்,
‘தெய்வம் ஒன்று உண்டு’ என்று மாத்திரம் கருதுபவரான அந்த ஆஸ்திகர்க்கு
‘நாம் அடைய வேண்டிய அக் கடவுள்தான் யாவன்?
அக் கடவுளை நாம் அடையுமிடத்து நமக்கு நேரக்கூடிய இடையூறுகளைத் தவிர்ப்போன் யாவன்?’ என்று
இவை முதலாகத் தோன்றுகிற ஸந்தேககங்களையெல்லாம் தனது வடிவழகு முதலியவற்றால் போக்குவான்:
அப்படிப்பட்டவன் நித்யவாஸம் செய்யுமிடம் திருவரங்கம் என்பது இப்பாட்டின் கருத்து.

எம்பெருமானுடைய இத்தகைய தன்மையை இவர் தம் அநுபவத்தாலே உணர்ந்து கூறினராதலால்
தம்முடைய குருதஜ்ஞதையை வெளியிடுவது இப்பாட்டு என உரைக்கப்பட்டதென்க.

மெய்யர்க்கே மெய்ய னாகும் விதியிலா வென்னைப் போல
பொய்யர்க்கே பொய்ய னாகும் புட் கொடி யுடைய கோமான்
உய்யப் போ முணர்வினார் கட் கொருவனென் றுணர்ந்த பின்னை
ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூ ரரங்க மன்றே.

பதவுரை

புள் கொடி உடைய கோமான்–கருடனைக் கொடியாக வுடைய ஸ்வாமியான திருமால்
விதி இலா என்னை போல–(நெடுங்காலம் எம்பெருமானது அருளைப் பெறுதற்கு ஏற்ற) நல்வினை இல்லாதிருந்த என்னைப் போல
மெய்யர்க்கு–அத்வேஷ மாத்திரமுடையவர்க்கு
மெய்யன் ஆகும்–(தன் ஸ்வரூபத்தை) உள்ளபடி காட்டித் தருவன்;
பொய்யர்க்கு–(எம்பெருமான் விஷயத்தில்) அத்வேஷத்தைப் பெற்றிராதவர்க்கு
(எம்பெருமான் விஷயத்திலே பகைமை கொண்டிருப்பவர்க்கு)
பொய்யன் ஆகும் –(தனது ஸ்வரூபத்தைக் காட்டித் தராமல் தானும்) பொய்யனாயிருப்பன்;
உய்யப்போம் உணர்வினார்கட்கு–உஜ்ஜீவிப்பதற்கு உரிய நல்லறிவு உடையவர்க்கு (கீழ்க்கூறிய மெய்யர்க்கு)
ஒருவன் என்று உணர்ந்த பின்னை –‘கடவுள் ஒருவன் உண்டு’ என்று நல்லறிவு பிறந்த பின்பு
ஐயப்பாடு அறுத்து–பின்னும் வரக்கூடிய ஸந்தேகங்களைப் போக்கி
தோன்றும்–ஸேவை ஸாதிக்கிற
அழகன்–அழகை யுடைய அந்த எம்பெருமானது
ஊர்–இருப்பிடம்
அரங்கம்–திருவரங்கமாகும்;
(அன்றே ஈற்றசை; தேற்றமுமாம்)

விளக்க உரை

‘மெய்யர்க்கு’ என்பதற்கு
‘தத்வஜ்ஞானமுடையவர்கட்கு’ என்று பொருள் கூற வேண்டியதாயிருக்க
அங்ஙன் கூறாது ‘அத்வேஷமுடையார்க்கு ‘என்று கூறியது எங்ஙனே?
இது ஸப்தார்த்தமாகுமோ? என்று ஸங்கிக்கக்கூடும்; கேண்மின்;-
‘தத்துவ ஞானிகட்கு எம்பெருமான்தான் மெய்யனாவான்;’ என்று கூறினால்
அதனால் எம்பெருமானுக்கு ஒரு சிறப்புத் தோன்றாதாகையாலும்,
எம்பெருமானது சிறப்பைக் கூற வேண்டியது இங்கு அவசியமாகையாலும்
இங்ஙனே பொருள் கூறவேண்டியதாயிற்று.

மெய்யாவது –
ஆஸ்திகபுத்தி,

பொய்யாவது –
நாஸ்திகபுத்தி;
அதாவது –
‘கடவுளுண்டு’ என்பதை அங்கீகரியாமல் தாம் கண்ணாற் காண்கின்ற பொருளையே நம்புகின்ற ஞானம்;
ஆகவே இப்பாட்டில் மெய்யர் என்பது ஆஸ்திகரையும்,
பொய்யர் என்பது நாஸ்திகரையும் குறிக்குமென்க.

விதியிலா வென்னைப் போல என்பது மத்திமதீபமாக
(மத்திமதீபமாவது – ஒரு மாளிகையின் நடுவிலே வைக்கப்பட்ட விளக்கு முன்னும் பின்னும் வெளிச்சம் தருவதுபோல,
நடுநின்ற சொல்லாவது சொற்றொடராவது முன்னும் பின்னும் சென்று இயைவது.)
மெய்யர்க்கு மெய்யனாவதற்கும் பொய்யார்க்குப் பொய்யனாவதற்கும் உவமையாம்.
எங்ஙனேயெனில்;
நான் நாஸ்திக புத்திகொண்டு கடவுளின் உண்மையை மறுத்து உலகத்துப் பொருள்களிடத்துப் பற்றுக் கொண்டு
திரிந்த கீழ்நாள்களிலெல்லாம் அவ்வெம்பெருமானும் என்னைக் கிட்டாமல்,
தான் ஒருவன் உளன் என்றும் தோன்றாதபடி உபேக்ஷித்திருந்தான்;

எனக்கு ஆஸ்தீக புத்தியால் தான் எம்பெருமானிடத்து அத்வேசம் தோன்றிய இப்போதோ
அவ்வெம்பெருமான் தனது ஸ்வரூபமெல்லாம் நன்கு தோன்றுமாறு
விசேஷ ஜ்ஞானத்தைப் பிறப்பித்தானெனக் காண்க.

ஞானம் பிறந்த பின்பு இவ்வாழ்வார் தம்மைக்குறித்து
“ விதியிலாவென்னை” என்று வெறுத்துக்கூறுவது –
முன்னமே எம்பெருமானைக் கிட்டித்தாம் ஈடேற வேண்டியிருக்க
அங்ஙனமில்லாமல் நெடுநாள் அவனை யிழந்துகிடந்த தமது தெளர்ப்பாக்யத்தை நினைப்பதனாலாம்.
“பழுதேபலபகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்றார் பொய்கையாழ்வாரும்.

இப்படி ஆஸ்திக புத்தி மாத்திரத்தையே வியாஜமாகக் கொண்டு
தத்வ ஜ்ஞானம் நிரம்பாத உயிர்களையும் எம்பெருமான் காத்தருள்வதற்குக் காரணம் –
அவர்கட்கெல்லாம் தாம் ஸ்வாமியாயிருப்பதே என்பது தோன்றக்
கோமான் என்றார்.

“ ஸம்பந்நராயிருக்குமவர்களேயாகிலும் ஒரு காசு விழுந்தவிடத்தே போய்த் தேடா நிற்பந்தங்களாய்
தந்தாம் வஸ்துவை விடமாட்டாமையாலே” என்ற வியாக்யாந ஸூக்தியை நோக்குக.

ஒருவனென்றுணர்ந்தபின்னை-
கேவலம் தேகமே அன்று உள்ளது ;
தேஹாதிரிக்தமாயிருப்பதொரு ஆத்மா உண்டு;
அவனுக்கு ஸ்வாமியாயிருப்பானொரு எம்பெருமானுமுண்டு, என்னும் அறிவு பிறந்தபின்பு என்றபடி.

ஐயப்பாடு-ஐயம், படு என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து ஒருசொல் தன்மைப்பட்டு
ஐயப்படு என்று முதனிலையாகி
அது ஐயப்பாடு எனத் திரிந்தது; முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-14-வண்டினம் முரலும் சோலை -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 31, 2022

வண்டின முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோனமரும் சோலை அணி திரு வரங்க மென்னா
மிண்டர் பாய்ந் துண்ணும் சோற்றை விலக்கி நாய்க் கிடுமி னீரே.

பதவுரை

வண்டு இனம் முரலும் சோலை–வண்டுகளின் கூட்டங்களானவை காநம் செய்யா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்,
மயில் இனம் ஆலும் சோலை–மயில்களின் கூட்டங்களானவை கூத்தாடா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்
கொண்டல் மீது அணவும் சோலை–மேகங்களானவை மேலே வந்து படியா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்
குயில் இனம் கூவும் சோலை–குயில்களின் கூட்டங்கள் ஒன்றையொன்று அழையா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்,
அண்டர் கோன் அமரும் சோலை–தேவர்கட்குத் தலைவனான ஸ்ரீரங்கனாதன் நித்ய வாஸம் பண்ணப் பெற்ற சோலைகளை
அணி–ஆபரணமாக வுடையதுமான
திரு அரங்கம் என்னா–ஸ்ரீரங்கம் என்று சொல்ல மாட்டாத
மிண்டர்-நன்றி யறிவில்லாத மூர்க்கர்கள்
பாய்ந்து உண்ணும் சோற்றை–மேல் விழுந்து உண்ணுகிற சோற்றை
விலக்கி –(அவர்கள் உண்ணக் கூடாதபடி) தடுத்து
நீர் நாய்க்கு இடுமின்–நீங்கள் (அந்தச்சோற்றை) நாய்க்கு இடுங்கள்.

விளக்க உரை

இதுவரை பகவத் விஷய விரோதிகளான பாவிகளை நினைத்ததற்கும்
அவர்களோடு ஸம்பாசனை செய்ததற்கும் ப்ராயஸ்சித்தமாக
“வண்டினமுரலுஞ் சோலை” இத்யாதியைப் பரம போக்யமாகத் தாம் அநுஸந்திக்கச் செய்தேயும்,
மீண்டும் “திருவரங்கமென்னாமிண்டர்”என்று அப்பாவிகளையே நினைக்கிறார்.
அவர்களையொழிய இவர்க்கு ஒரு க்ஷணமும் செல்லாதுபோலே.

ஸம்ஸாரத்திலேயே நெடுநாள் ஊன்றினவன் கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றத்தவரோடுண்டான
பற்றை அறுத்துக் கொண்டு பகவத் விஷய சிந்தையினாலேயே போது போக்குவேணுமென்று பெரு முயற்சி செய்தாலும்
பழையதான வாஸநையின் கணத்தினால் அந்த ஸம்ஸாரப்பற்றை விரைவில் அறுத்துக்கொள்ள முடியாமல்
“அங்குற்றேனல்லே னிங்குற்றேனல்லேன்” என்றாற்போல
இருகரையனாய்த் தடுமாறுமாபோலே
பராங்முகரையும் சீர்திருத்தி மங்களாபாஸநத்துக்கு ஆளாக்கிக் கொள்வதற்காகப் பாடுபடுகையாகிற
ஒரு விலக்ஷண ஸம்ஸாரத்திலே நெடுநாளாக ஊன்றின இவ்வாழ்வார்,
மநோரதம் நிறைவேறப்பெறாத வருத்தத்தினால் அப்பாவிகளின் பற்றை அறுத்துக் கொள்ள வேணுமென்று
பெருக்க முயன்றாலும் அது இவர்க்கு விரைவில் கைகூடுகிறதில்லை.
மங்களாபாஸணத்திற்கு ஆள்சேர்க்கப் படுகிறபாட்டின் உறைப்பு என்னே.

திருவரங்கமென்னாமிண்டர்-
அவன் தங்களுக்காக வந்து கிடவா நிற்க,
அவனுடைய தேசத்தை வாயாலே சொல்லவுங்கூ டமாட்டாத மூர்க்கர்.

நரகவாஸம், கர்ப்பவாஸம் முதலானவை பிடரியைப் பிடித்துக் கொண்டு நிற்க,
கேவலம் தேக போஷணத்திலேயே ஊன்றிக் கிடக்கிறவர்களுக்கு மேற்பட்ட மூர்க்கரும் உண்டோ?

(“மிண்டர் பாய்ந்துண்ணுஞ் சோற்றைவிலக்கி நாய்க்கிடுமிளீரே.”)
“நேமிசேர் தடங்கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடைப்,
பூமிபாரங்களுண்ணுஞ் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே” என்றார் பெரியாழ்வார்;
இவர் நாய்க்கிடுங்களென்கிறார்.
தங்களை உத்தேசித்து வந்து கண்வளர்ந்தருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர்
ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி,
ஒருநாள் ஒருபிடி சோறிட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்குமத்தனை நன்றி யறிவுடைய நாய்க்கிடுங்களென்கை.

நாய் நன்றியறிவுடையதென்பது உண்மையே;
அதற்கு சோறிடவேணுமானால் தனக்கு உரிய சோற்றை இடட்டும்;
பிறர் உண்கிற சோற்றைப் பிடுங்கி நாய்க்கு இடுவதற்கு என்ன அதிகாரமுண்டு? என்று மங்கிக்க வேண்டாயோ

அஸாதுப்யோர்த்த மாதாய ஸாதுப்பயஸ் ஸம்ப்ரயச்சதி-கல்பகோடி கைஸ்ராணி ஸ யாதி ச்ரேயஸாம் பதம்” என்று
அஸத்துக்களின் பொருளைப் பறித்து ஸத்துக்களுக்கு இடும்படி ப்ரஸ்த்ரம் விதித்திரா நின்றதிறே;
இவ்வர்த்தத்தை உண்மையாக அறிந்து அநுஸ்டாந பர்யந்தம் வெளிக் காட்டியவர் திருமங்கையாழ்வாரென்க.

அண்டர்–
இடையர்க்கும்
தேவர்க்கும் பெயர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-13-எறியு நீர் வெறி கொள் வேலை -ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 31, 2022

கீழெல்லாம் பிறருடைய துயரத்தைக்கண்டு தாம் பொறுக்கமாட்டாமல் கவல்கிறபடியை வாய்விட்டுச் சொன்னார்;
ஒன்றும் பயன்படவில்லை; இனி பரோபதேசத்தில் நின்றும் மீண்டுவிடுவோம் என்று பார்த்தார்;
பிறர்க்கென்றே அவதரித்த இவர் எங்ஙனே சடக்கென மீளக்கூடும்?
தீயகுணம் நிறைந்த பிள்ளையைப் பற்றி ஒன்றும் கவனிக்கக்கூடாதென்று தகப்பன் மீள நினைத்தாலும்
அந்நினைவின்படி உடனே மீளமுடியுமோ?
அப்படியே இவ்வாழ்வாரும் பிறருடைய துயரத்தைப்பற்றிக் கவலைப்படுவதினின்றும் உடனே மீளமாட்டாமல்
அவர்களை நோக்கிக் கூறுகிற முறையை மாத்திரம் விட்டிட்டு, தம் நெஞ்சோடு தாமே வருந்துகின்றார்,
இப்பாட்டில்.

எறியுநீர் வெறிகொள் வேலை மாநிலத் துயிர்க ளெல்லாம்
வெறிகொள்பூந் துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த
அறிவிலா மனித ரெல்லாம் அரங்கமென் றழைப்ப ராகில்
பொறியில் வாழ் நரக மெல்லாம் புல்லெழுந் தொழியு மன்றே.

பதவுரை

எறியும் நீர் வெறி கொள் வேலை –அலைகள் வீசுகின்ற தண்ணீரையும் (புலாலின்) நாற்றத்தையும் கொண்டிருக்கிற கடலினாற் சூழப்பட்ட
மா நிலத்து–பெரிய இந்தப் பூலோகத்திலுள்ள
உயிர்கள் எல்லாம்–ஆத்மாக்கள் யாவும்
வெறிகொள் பூ துளபம் மாலை–நல்ல பரிமளமுடைய அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள
விண்ணவர் கோனை–தேவாதி தேவனான திருமலை
ஏத்த–தோத்திரம் பண்ணுவதற்காகவே (ஏற்பட்டிருக்கின்றன)
(அவ்வாறு துதிப்பது அற்பஞானமுடையார்க்கு முடியாவிடினும்)
அறிவு இலா மனிதர் எல்லாம்–தத்வ ஜ்ஞானம் நிரம்பாத அந்த மனிதர் யாவரும்
அரங்கம் என்று அழைப்பர் ஆகில்–அபுத்தி புர்வமாகவாகது ஸ்ரீரங்கமென்று சொல்லுவர்களானால்
(அம்மாத்திரத்தாலேயே)
பொறியின் வாழ்–பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டு வாழ்கின்ற
நரகம் எல்லாம்–(ஞானிகளுக்கு நரகமாகிய ) இப்பிரபஞ்சம் முழுதும்
புல் எழுந்து–புல் முளைத்து
ஒழியும் அன்றே–பாழாய்ப் போய்விடுமென்றோ.

விளக்க உரை

“ஆமாகில் சொல்லிப்பார்க்கிறேன்” என்பதும் (மெய்யெழுத்து நீக்கி) எட்டெழுத்து,
திருமந்த்ரமும் எட்டெழுத்து என்க.

மூலப்ரக்ருதியிலே அழுந்தி ஒளி மழுங்கிக் கிடந்த ஆத்மாக்களை யெல்லாம் எம்பெருமான் தனது இன்னருளால்
உஜ்ஜீவிப்பிக்க விரும்பித் தன்னை அடையுமாறு கரசரணம் முதலிய அவயவங்களையும்
சாஸ்திரங்களையும் காட்டிக்கொடுத்தான் என்ற நூற்கொள்கை,
முன் இரண்டடிகளிற் குறிப்பிடப்பட்டது.

அதற்கு ஏற்ப, கடவுளையடைந்து ஈடேறுவது தத்வ ஞானத்தின் காரியமாதலால் அறிவிலா மனிசர்க்கு அது கைகூடாவிடினும்,
அவர்கள் யாவரும் அபுத்தி பூர்வமாகவாவது எம்பெருமான் நித்யவாஸஞ் செய்கின்ற திருவரங்கம் பெரியகோயிலை
ஒருதரமாவது வாய்விட்டுச் சொன்னாரானாலும்,
அவனது ஊரைச்சொன்னதன் பயனாக அவ்வெம்பெருமானால் கடாக்ஷிக்கப்பெற்று மோக்ஷத்தையடையத் தட்டில்லை;
பின்பு பாபத்தின் பயனாக வாழ்கின்ற பிராணி ஒன்றும் இங்கு இருக்கக் காரணமில்லாமையால்
இந்தப் பூலோகம் முழவதும் புல் முளைத்துப் பாழாய்விடும்;
இத்துணை எளியவழியையும் மேற்கொள்ளாமற் கைவிட்டு இவ்உலகத்தவர் அறிவு கேடராயிருக்கின்றார்களே!
என்று பின்னிரண்டடிகளால் இரங்குகின்றனரென்க.

நலமந்தமில்லதோர் நாடாகிய பரமபதத்தை அடைந்து அங்கு
‘ஸர்வகந்தஸ்ஸர்வரஸ:’ என்கிற எம்பெருமானுடைய திருத்துழாய் நறுமணத்தை அநுபவித்துக் கொண்டு
அப்பிரானை ஏத்தி இனிதாக இருக்கவேண்டிய சேதநர்கள்
”வெள்ளத்திடைப்பட்ட நரியினம்போலே” என்றபடி கலங்கிப் புலால் நாற்றம் வீசுகிற கடல் வெள்ளத்துக்கு உட்பட்ட
இப்பூமியிலே கிடந்து வருந்துகின்றார்களே! என்ற இரக்கப்பொருள் தோன்ற
“ எறியுநீர் வெறிகொள்வேலை மாநிலத்துயிர்கள்” என்கிறார்.

மாநிலம் -ஐம்பது கோடி விஸ்தீர்ணையான பூமி.

அழைப்பாராகில் என்றது –
பெரும்பாவிகளான இவர்கட்குக் கடுஞ்சொற்களைச் சொல்வது எளிதேயன்றி,
அரங்கமென்று வாயாற்சொல்லுவதும் அருமை என்பது தோன்ற.

யந்திரம்போல எல்லா அவஸ்தையிலும் தப்பாதபடி தன் பக்கலிலே அகப்படுத்திக் கொள்ளவற்றாகையாலே
பொறி என்று இந்திரியங்களைச் சொல்லுகிறது.
“இருள் தருமா ஞாலத்து ளினிப்பிறவி யான்வேண்டேன்” என்னும் ஆழ்வார் போன்ற அறிவுடையார்க்கு
இந்த உலகவாழ்வு நரகம்போலத் தோன்றுமாதலால், இந்த ஸம்ஸாரத்தை நரகம் என்றே கூறினார்.

இவ்வுலகத்திலுள்ளோர் யாவரும் எம்பெருமானுடைய திருப்பதியின் திருநாமத்தைச் சொன்னாராகில்
அதுவே காரணமாகப் பரமபதத்தை அடைவராதலால் அப்போது நரகத்திற்குச் செல்வார் ஒருவருமில்லாமற்போக,
அந்நரகம் புல்லெழுந்தொழியும் என்று உரைப்பாருமுண்டு;
இப்பொருளில், பொறி இல் என்று பிரித்து ‘அழகு இல்லாத’ எனப் பொருள் கொள்க.

வாழ்-அசை.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

ஸ்ரீ திரு மாலை-12-நமனும் முற்கலனும் பேச -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

March 30, 2022

நமனும் முற் கலனும் பேச நரகில் நின் றார்கள் கேட்க
நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி
அவனதூ ரரங்க மென்னாது அயர்த்து வீழ்ந் தளிய மாந்தர்
கவலை யுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே.

பதவுரை

நமனும் –யமதர்மராஜாவும்
முற்கலனும்–முத்கல பகவானும் ஒருவர்க்கொருவர்
பேச–வார்த்தை யாடிக் கொண்டிருக்க
நரகில் நின்றார்கள் கேட்க –அந்த வார்த்தை நரகத்திலே பாப பலன்களை அனுபவிக்கிற பாவிகளின் காதில் பட்டவளவிலே
நரகமே–அந்த நரகந்தானே
சுவர்க்கம் ஆகும்–ஸ்வர்க்க லோகமாய்விட்டது என்று சொல்லுதற்கீடான மேன்மை வாய்ந்த
நாமங்கள் உடைய–திருநாமங்களை யுடைய
நம்பி அவனது–பரிபூரண எம்பெருமானுடைய
ஊர்–திவ்யதேசம்
அரங்கம் என்னாது–திருவரங்கமாகும் என்று சொல்லாமல்
அளிய மாந்தர்–அருமந்த மனுஷ்யர்கள்
அயர்ந்து -(ஸ்வரூபத்தை) மறந்து
வீழ்ந்து –(விஷயாந்தரப் படுகுழியிலே) விழுந்து
கவலையுள் படுகின்றார் என்று–துக்கத்திலே அகப்படுகிறார்களேயன்று
அதனுக்கே–அதற்காகவே
கவல்கின்றேன்–நான் கவலைப்படா நின்றேன்.

விளக்க உரை

திருநாமத்தின் பெருமையை நான் அறியாதிருந்தேனாகில் ஸம்ஸாரிகளைப் பற்றிக் கவலைப் படமாட்டேன்
மநுஷ்ய ஜந்மம் எளிதிற் பெறக்கூடுமாயின் நான் கவலைப்படமாட்டேன்;
இவர்கள் உஜ்ஜீவநத்திற்காகச் செய்யவேண்டிய காரியம் மிகப்பெரியதாயின் கவலைப்படமாட்டேன்.

திருநாமங்களின் மேன்மையோ சொல்லுந்திரமல்ல
பெறுதற்கு அரிதான மானிடஜந்மத்தையோ இவர்கள் பெற்றிருக்கிறார்கள்;
இவர்கள் செய்யவேண்டிய காரியமோ மிக அற்புதமானது-
‘எம்பெருமான் ஊர் திருவரங்கம்’ என்றிவ்வளவே சொல்ல வேண்டுமத்தனை இங்ஙனிருக்கவும் இவர்கள்
விஷயாந்தரப் படுகுழியிலே தலைகீழாக விழுந்து வருந்துவர்களாகில் நான் எங்ஙனே கவலைப்படாதிருக்கமுடியும்?
இவர்கள் சிறிது திருந்தினராகில் என் அநுபவத்திற்கு எவ்வளவோ துணையாகுமே! என்கிறார்.

முத்கலோபாக்கியாநம் ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலே தொண்ணூறாவது அத்யாயத்திற் கூறப்பட்டுள்ளது.
அதன் சுருக்கம் வருமாறு:-
முத்கலனென்பவன் பெரும்பாவிகளில் தலைவன்;
அவன் ஒருநாள் கோதாநம் பண்ணும் போது ‘க்ருஷ்ணாய’ என்று சொல்லி தாநஞ்செய்தான்.
பின்பு அவன் மாண்டபிறகு யமகிங்கரர் வந்து நெருங்கி அவனை யமன் பக்கலிலே கொண்டு செல்ல,
யமன் இவனை எதிர்கொண்டு ஸம்பாவனை செய்தான்;

அது கண்ட முத்கலன், “உன்னுடைய படர்கள் என்னை நெருங்கிக் கொண்டு வாரா நிற்க,
நீ என்னை கௌரவிப்பதற்கு என்ன காரணம்?” என்று கேட்க
“உன்னுடைய மேன்மையை அவர்களும் அறிந்திலர், நீயும் அறிந்திலை,-
க்ருஷ்ண நாமத்தை நீ ஒருநாள் சொன்னாய்காண்!” என்று யமன் அதனைப் புகழ்ந்துகூற,
இப்படி ப்ரஸக்தாநுப்ரஸக்தமான இந்த ஸம்வாதம் நரகாநுபவம் பண்ணுகிறவர்களுடைய காதிலே விழுந்தவாறே
அந்த நரகந்தானே துக்காநுபவ நிலமாயிருக்க நிலைமாறி ஆநந்தாநுபவ நிலமாய் விட்டதென்றால்
இத்திருநாமத்தின் வைபவம் எப்படிப்பட்ட தாயிருக்கவேணும்?

“என்னை நீ ஸத்கரிப்பதற்குக் காரணமென்ன?” என்று முத்கலன் கேட்க,
“முன்பு நீ க்ருஷ்ணநாமம் சொன்னாய்” என்று யமன் உத்தரமுரைத்த இவ்வளவேயாய்த்துப் பிறந்தது;
யமன் தனக்குப் பாவநமாக அத்திருநாமத்தை உச்சரித்தவனல்லன்;
முற்கலன் ப்ரார்த்திக்க அவனுக்கு உபதேசித்தவனுமல்லன்;
நரகாநுபவம் செய்கிறவர்களின் காதிலே இது விழுந்து அவர்கள் உய்வுபெறவேணுமென்று நினைத்துச் சொன்னவனுமல்லன்;
இனி இதனைக் கேட்டவர்களோ பாபம்பண்ணுகிற ஸமயத்திலே அநுதபித்து மீண்டு பிராயச்சித்தம்
செய்துகொள்ள க்கூடிய காலத்திலே கேட்டவர்களல்லர்;
பாபத்தினுடைய பலன்களை அநுபவிக்கும் போதாயிற்றுக் கேட்டது.
அப்போது தானும் இச்சையோடு கேட்டாருமல்லர்; யாத்ருச்சிகமாகத் திருநாமம் செவிப்பட்டவித்தனையே:
இப்படிப்பட்ட திரு நாமமே இவ்வளவு பெருமையுடைத்தானால், பின்னை என் சொல்லவேண்டும்?

பாபபலாநுபவம் பண்ணும்போது யாத்ருச்சிகமாகத் திருநாமம் செவிப்பட்டாற் போலே
பாபம் செய்யும்போது ஒரு தடவையாவது திருநாமம் செவிப்பட்டிராதா?
அதுகொண்டு அவன் நற்கதிபெறலாமன்றோ என்னில்;
அப்போது விஷய ப்ராவண்யத்தால் வந்த செருக்கர்லே இவையொன்றும் செவிப்படா துக்காநுபவம் பண்ணும்
சமயத்தில் தான் “நல்வார்த்தை சொல்வார் ஆரேனும் கிடைப்பாரோ?” என்று
எதிர்பார்க்கிறவர்களாகையாலே செவிப்படும் என்ப.

நரகமே சுவர்க்கமாகும்-
நரகத்தையே ஸ்வர்க்கமாக்கவல்ல என்றபடி.
பாபஸ்தாநம் புண்யஸ்தாநமாக உடனே மாறிவிடக்கூடுமோவென்று சங்கிக்கவேண்டர்,
இராவணன் கையைவிட்டு நீங்கி விபீஷ ணாழ்வான் கையில் வந்தவாறே
லங்கை ‘தாமஸபுரி’ என்னும் பெயர்நீங்கி
‘ஸாத்விகபுரி ‘என்று புகழ்பெறவில்லையோ?

“ஒருவனுடைய அந்திம ஸமயத்திலே திருமந்த்ரத்தை உபதேசித்து ‘இத்தைச் சொல்லாய்’ என்ன;
அவனும் ‘ஆமாகில் சொல்லிப்பார்க்கிறேன், ஆமாகில் சொல்லிப்பார்க்கிறேன்’ என்று இத்தை
அநேகமுறைச் சொல்லித் திருமந்த்ரந்தன்னைச் சொல்லாதே செத்துப்போனான்;
இரண்டும் அஷர மொத்திருக்கச் செய்தே சொல்ல வொட்டிற்றில்லையிறே பாப பலம்!“ என்ற வியாக்யாந ஸூக்தியை நோக்குக.

அளிய மாந்தர் –
திருநாமம் சொல்லுகைக்கு உரிய நாக்குப்படைத்த அருமருந்தன்ன மநுஷ்யர்கள்.

அதனுக்கே கவல்கின்றேனே-
என் குடும்பத்தைப்பற்றி நான் கரைகின்றேனில்லை:
என்னதும் பிறரதுமான குடும்பத்தைப்பற்றியும் கரைகின்றேனில்லை;
பிறர் குடும்பம் கெட்டுப் போகிறதே! என்பதற்காகவே கரைகின்றேனென்றார்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.