ஸ்ரீ பரவாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த -ஸ்ரீ சைல வைபவம் /ஸ்ரீ அபி நவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த மா முனி ஊசல் பிரபந்தம் —-

கூறுகேன் உலகீரே குங்குமத்தோள் அரங்கேசர்
மாறன் மறைப்பொருளைக் கேட்க மணவாள மா முனியை
ஏறும் மணை தனில் இருத்தி இரு நிலத்தில் தாம் இருந்து
வீறுடனே செவி சாத்தி விரை யடி பூசனை யாற்றி –1-

ஏறும் மணை–உயர்ந்த ஆசனம்
இரு நிலத்தில் -பூமியில் தாம் இருந்து
பூசனை யாற்றி –ஆராதனை செய்து

——-

ஆறு இரண்டு புரம் சூழ அரங்கம் முதல் நூற்று எட்டும்
கூறிய சீர் சயிலத்தைக் கொண்டாடி உரைக்க வெனா
ஊறிய தேன் பெருக்கு என்ன யுன்னி யதை யுகந்து யுரைத்தான்
சேறு வளர் கமலை மைந்தன் சிந்தை மகிழ்ந்து ஒருப்பட்டே –2-

ஆறு இரண்டு -உபய காவேரி
புரம் சூழ அரங்கம் –ஆராத அருள் அமுதம் பொதிந்த கோயில் –திருவரங்கம் எனத் திகழும் கோயில் தானே
முதல் நூற்று எட்டும் -ஈர் இருபதாம் சோழம் ஈர் ஒன்பதாம் பாண்டி -ஓர் பதின்மூன்றாம் மலை நாடு –
ஓர் இரண்டாம் சீர் நடுநாடு -ஆறோடு ஈர் எட்டுத் தொண்டை அவ்வட நாடு ஆறு இரண்டு கூறு திருநாடு ஒன்றாக்கொள்
கூறிய சீர் சயிலத்தைக் கொண்டாடி உரைக்க -ஸ்ரீ சைல என்று தொடங்கும் மந்த்ரம்
யுன்னி -சிந்தித்து
சேறு வளர் கமலை -பங்கயச் செல்வி
ஒருப்பட்டே –சம்மதித்து

———-

பட்டர் பிரான் முதலாய பதின்மர் கலை பழிச் சலிலும்
சிட்டர்களாய்த் தினம் தோறும் திருமண் இடு வேளையினும்
இட்ட முற யுணும் பொழுதத்து ஒண் கர நீர் ஏற்கையினும்
அட்ட திக்கும் விளங்க உரைத்தார் ஆரியர்கள் அனைவருமே –3-

சீர் அணிந்த பாண்டியன் தன் நெஞ்சு தன்னில் துயக்கற மால் பரத்துவத்தைத் திறமாச் செப்பி
வாரணம் மேல் மதுரை வலம் வரவே வானில் மால் கருட வாகனனாயத் தோன்ற வாழ்த்தும்
ஆழ்வாராதலால் முதலில் எடுத்து அருளுகிறார் –
பழிச்சல் -துதித்தல்
சிட்டர் -நல்லோர் -கல்வி நிரம்பிய சான்றோர்
திருமண் இடு வேளை -புண்ட்ரம் தரிக்கும் போது பன்னிரு திருநாமப் பாடல்கள் அனுசந்தேயம்

———

ஆரியர்கள் கொண்டாடி யாசரித்த தனியனைத் தான்
பேரியலும் தொண்டர் குழாம் பெரும் பேறாக் கொண்டனரால்
சீரியராய் வாழ எண்ணில் செக தலத்தீர் கற்று உணர்மின்
தாரியலும் அரங்கருக்கும் தமிழ் மறைக்கும் மணமாமே -4-

————-

மணவாள மா முனியை வழுத்து உறவோர் பயன் பெறுவர்
குணமாகக் கொண்மின் இதைக் கொடும் பிறவிப் பிணி அகல்வீர்
பண வாள் அரவு இவராம் பகைத்தாரே யுய்தல் இலர்
மணமுடைய மந்திர மா மதிக் கொள்ளீர் தனியனையே –5-

———

தனியன் என்று பேர் சாற்றித் தண் அரங்கர் முன்னர்
இனிய திருப் பவளத்தாலே -முனி வரனார்
மாறன் மறை முப்பத்து ஆறாயிரத்தின் மாண் பொருளைக்
கூற உபதேசித்தார் கொண்டு –6-

முனி வரனார் -சடகோப மா முனிவர்
மாண் பொருள் -சிறந்த கருத்து
முப்பத்து ஆறாயிரம் -ஈடு

———

தேசம் எங்கும் ஈது திருப்பதிகள் தோர் உரைக்க
நேச முற வரங்கர் நேமித்தார் -ஏசுமவர்
பாதகராய் எரி வாய் பாழ் நரகில் துய்ப்பர் இன்னல்
வேதனார் உள்ள மட்டு மெய்த்து –7-

வேதனார் -பிரமன்
எய்த்து -வருந்தி

———

எய்யத் துணிய இராவணியைக் கொன்றவன் காண்
செய்ய நெறி விளங்கும் சேடன் அவன் -வையம்
தனை வளர்க்குமாறு வர யோகி தானாய்
வினை யறுத்து வீடு அருளும் வேந்து–8-

இராவணி -இராவணன் மகன் இந்திரஜித்
கொன்றவன் -இலக்குவன்
செய்ய நெறி -சரணாகதி மார்க்கம்
சேடன் -அநந்தன்
வையம் -பூமி
வரயோகி -ஸ்ரீ மணவாள மா முனிகள்
வேந்து -முனி யரசன்
வீடு -பரம புருஷார்த்த மோக்ஷம்

————

வேந்தராய் மண்ணாண்டு விண்ணேறலாம் எளிதாய்த்
தோய்ந்த உறவாய் இருக்கிற்று எல்லுலகீர் -ஓர்ந்து உய்ய
ஏதி கொடு காலன் இழிந்தமர்மே வான் விண்ணோர்
நாதனும் வந்தே வணங்கு நன்கு –9-

ஏதி-ஆயுதம்

————

வணங்கினார் சீர் பெற்றார் வரன் முறையால் வீடணர் போல்
இணங்கினார் ஓர் ஒருவர் இரு நிலத்தில் சிறப்புற்றார்
பிணங்கினார் பேய்ப்பிறவிப் பேதையர்கள் தமைக்கண்டே
உணங்கினார் தாமதராய் உட் சினந்தார் தென்றவரே –10-

வீடணர் -விபீஷணர்
உணங்கினார் -காய்கின்றவர்
தாமதர் -மந்தர்
சினந்தார் -கோபமுடையார் –

————

தென் கலையாம் தமிழ் வேதச் சீர் சைல தனியன் எனும்
நன் கலையை யுள் கசிந்து நவிற்று பெருந்தகை மாந்தர்
மின் கலையும் புரி நூலும் மேல் நோக்கு புண்டரமும்
தென் கலையும் வட கலையும் திகழ் நாவர் ஆகுவாரே –11-

தென் கலை -அழகிய கலை
மின் -ஒளி வீசும்
மேனோக்கு புண்ட்ரம் -ஊர்த்வ புண்ட்ரம்

———–

ஆகுகல் என் இனி எனக்கோர் ஆராவமுதாய என்
சோகம் அற யுளத்தடத்து துலங்கு வர வர யோகி
சேகறு செம் மலர்த்தாளும் சீர் சைலத் தனியனும் இன்று
ஓகை யுறப் பெற்றனனால் ஒலி கடல் தரணியீரே — 12-

ஆராவமுதாய அடியேனாவி அகமே தித்திப்பாய் –திருவாய் மொழி -5-8-10-
சேகறு -குற்றம் அற்ற
ஓகை -உவகை

————-

தாராணியோர் வாழ எண்ணித் தானே திரு வனந்தன்
பேரணியும் குருகை நகர் பிறங்க நனிப் பேர் அருளால்
சீரணியும் மணவாள மா முனியாய்ச் செனித்தனனால்
தார் அணியும் அரங்கருக்குத் தமிழ் மறைத் தேசிகன் எனவே — 13-

பிறங்க -விளங்க
செனித்தனன் -அவதரித்து அருளினன்
தேசிகன் -ஆச்சார்யன் –

————–

தமிழ் மறையோர் ஓதுவரேல் தனியன் இது மற்றும் இல்லை
திமிரம் அற மெய்ஞ்ஞானச் செழும் சுடர் சேர் மனமுடையீர்
அமிழாமல் சமுசாரத் தாழ் கடலைக் கடத்தி ஒரு
நிமிடத்தில் நித்யராய் நிறுத்தும் பேர் இன்பத்தே —14-

————-

பத்துத் திசைகளினும் பண மணிகள் சுடர் எறிப்ப
முத்தி தரும் அரங்கருக்கும் மூவணையாய்ச் சூழ்ந்து இலங்கும்
எத்திசையும் பணிந்து ஏத்தும் எம் பெரிய முனியாகும்
அத்தன் எழில் வர யோகி யாயிவராய் அரவரசே –15-

முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
முத்தி தரும் எதிராசர் பொன்னடியே நம் பெரிய ஜீயர்
அத்தன் -உயர்ந்தோன்
அரவரசு -ஆதி சேஷன் –

————-

அரவேறு மேவி அறி துயில் கொள்ளும் அரங்கர் உரை
வர யோகி சீர் சைலத்தின் பெரும் புகழ் வைபவத்தை
விரகால் இசை மறையோர் திலகன் தமிழ் வீறுடைய
பரவாதி கேசரி பாப் பதினைந்து பணித்தனன் –16-

—————————-

பண வாள் அரவப் பளியில் பங்கயக் கண் துயில் அவனி
யுணவாளற்கு ஈடு அளித்தான் உத்தம நம்பிக்கு அருள் மெய்க்
குணவாளன் விளைக்கு மறை கூறாமல் தமிழ் விளக்கும்
மணவாள மா முனிவன் மலரடி சந்ததம் பணிவாம் –பொதுப்பாயிரம் -4–கூரேச விஜயத் துதி

——-

ஸ்ரீ திருமாலிருஞ்சோலை மலை ஸ்ரீ அழகர் பிள்ளைத் தமிழ்–ஆசிரியர்: ஸ்ரீ கவி காளருத்திரர்–

மணவாளமாமுனிகள்

குணவா யதித்தெற்று வேலைஞா லத்திருட்
கொள்ளைவெயில் சீத்தகற்றும்
கோகனக மணவாள னெனவடியர் தொல்லைநாட்
கொண்டவினை யிருளகற்றும்
மணவாள மாமுனிவன் மகிழ்வுடன் கருணைபொழி
மலர்விழியி னெம்மைநோக்கி
வயிறுபசி யாமனா வறளாம னாளுமறை
வாய்த்தவிரு நாலெ ழுத்தே
உணவாக நஞ்செவியி லிருபுறமும் வழியவார்த்
துயிர்தளிர்ப் பித்தவெங்கோன்
ஒளியீட்டு திருநாட்டு வழிகாட்டு தாட்கமல
முளமீது வைப்பனெட்டைப்
பணவா ளராவுலக முடைநாறு வெண்ணெய்பேய்ப்
பாவைதன் முலையுளமுதம்
பருகிச் செவந்தவாய் மாலலங் காரனைப்
பாடுமென் கவிதழையவே. (13)

————-

ஸ்ரீ அபி நவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த மா முனி ஊசல் பிரபந்தம்

திரு வாழப் புவி மகளாம் கோதை வாழ
தெய்வ நாயகன் வாழப் பதின்மர் வாழக்
குருவான நாதமுனி முதலோர் வாழக்
கோட்டி நகரோனாதி ஐவர் வாழத்
திருவாய்ந்த பெரும் பூதூர்ச் சிங்கம் வாழச்
சிரீ வர மங்கைப் பதி வாழ் எதியும் வாழ
மருவாரும் வண் துளவோன் அடியார் வாழ
மணவாள மா முனிவர் ஆடீர் ஊசல் –1-

வர மங்கை மா முனியோர் வடம் தொட்டு ஆட்ட
வட திருவேங்கட முனியோர் வடம் தொட்டு ஆட்டப்
பரவஸ்து பட்டர் பிரான் எறும்பி அப்பா
பணிவுடன் பின் இரு மருங்கு வடம் தொட்டு ஆட்டத்
தர மிகு இரண்டு அண்ணர் கவரி வீசத்
தக்க திருவால வட்டம் தெருள் அப்புள்ளார்
வர குண அப்பிள்ளை இரு மருங்கில் ஓச்ச
மணவாள மா முனிவர் ஆடீர் ஊசல் –4-

சிரம் அதனில் சிகை அசைய ஆடீர் ஊசல்
திருமண் உறு முகம் அசைய ஆடீர் ஊசல்
சரமதனை வென்ற ஜெயக்கொடி போல் காண் முத்
தண்டு இலகு கரம் அசைய ஆடீர் ஊசல்
உரமதில் முந்நூல் அசைய ஆடீர் ஊசல்
உயர் துளவ வடம் அசைய ஆடீர் ஊசல்
வர வனச வடம் அசைய ஆடீர் ஊசல்
மணவாள மா முனிவர் ஆடீர் ஊசல்–5-

சாதுரிய மாமொழிந்த குருகை மாறன்
தமிழ்த் திருவாய் மொழியாம் பால் புணரி தன்னைக்
காதலுடன் ஞானம் எனும் மத்தை நாட்டிக்
கடைந்து அதிலே சாரமதாத் திரண்டு வந்த
மாதுரிய நாள் நூற்றந்தாதியான
வண் சுதையைத் திருமாலின் அன்பர்க்கு ஈந்து
மாதுறவோர் மாதுறவோர் தொழவே வந்த
மணவாள மா முனிவர் ஆடீர் ஊசல்–9-

பால் புணரி -திருப்பாற் கடல்
மா துறவோர் -பெரிய துறவிகளும்
மாது உறவோர் -இல்லற தர்மத்தினர்
சுதை -அம்ருதம்

பன்னிருவர் எதிராசர் உதித்த மாதம்
பகர் திரு நக்ஷத்ரத்தோடு அவர்களூர்கள்
நல் நயமாம் தமிழ் மறைக்கு இங்கு உரைகள் கூறும்
நா வலராம் ஆரியர்கள் மகிமையோடும்
உன்னும் உலகாரியனார் நூலின் சீர்மை
உணர்ந்த படி உபதேச ரத்ன மாலை
மன்னுலகில் மாலடியார்க்கு அமுதம் ஈந்த
மணவாள மா முனிவர் ஆடீர் ஊசல்–11-

சோலை திகழ் அரங்க நகர் அப்பன் அந்நாள்
தூய தமிழ் மறைக்கு வரயோகியாம் நீர்
சீலமுடன் ஈடு சேவிக்கும் போது
சீர்ச் சி சைல தயா பாத்ரம் என்றோர்
பாலகனாய் வந்து நலத் தனியன் தன்னைப்
பகர்ந்து ஏகவே அதனைத் ததீயர் யாரும்
மாலினது மொழி என்றே வழுத்தும் சீர்த்தி
மணவாள மா முனிவர் ஆடீர் ஊசல் –14-

வீற்று இருக்கும் சீர் தெய்வ நாதன் வாழி
மின்னு மணி வர மங்கை கோதை வாழி
நாற்றமுறு மகிழ் மாலை மாறன் வாழி
ஞானியராம் மற்று ஆழ்வார்கள் வாழி
மாற்றலரை வென்ற எதிராசன் வாழி
மணவாள மா முனியும் குருவும் வாழி
தோற்று புகழ் வர மங்கை யோகி வாழி
தூய மனத் ததியர்களும் வாழி வாழியே -14

ஆரியர் வாழ் வர மங்கை யோகி தன்னால்
அபி நவ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்றும்
பேரிசை கொள் சாமி நாத ஐயராதிப்
பெரியோரால் அபி நவக் கார் மேகம் என்றும்
பேர் இசைந்தோன் சியார்ச்சைந்தான் மகுடம் கொள் நாள்
பெற்ற விரு தணிகரத்தோன் கவர்னர் கோஷன்
ஆரு வகையால் குலுக்கும் கையோன் பேரை
அனந்த கிருஷ்ணன் இயற்றினன் இவ்வூசல் பாவே –16-

சின்னக்கலியன் ராமானுஜ ஜீயர் -வானமா மலை -பட்டம் -25-சந்நிதியியில்
சாமிநாத ஐயர் சென்னை கவர்னர் கோஷன் துரை மகனார்
இவர்களும் கொண்டாடி தங்கத்தோடா பாரிஸில் பெற்றாராம் –

———-

ஸ்ரீ வர மங்கை கலம்பகம் -கவி பூஷணம் ஸ்ரீ நரசிம் மாச்சாரியார்

குணவாளார் ஆகும் எதிராசர் தாள் மிசைக்கொண்ட பக்தி
தணவாத யுள்ளத்தன் மாறன் மறைப்பொருள் தண் அரங்கர்
பண வாள் அரவணை நின்று உற்றுக் கேட்கப் பணித்த அத்தன்
மணவாள மா முனிவன் மலர்ப்பாதம் வணங்குதுமே –காப்புச் செய்யுள் –4-

தனமும் திரியும் தரணியும் வெக்கித்
தினமும் திரியும் திரிபார் -மனமே
குணவாள மா முனியை கொண்ட றொண் டனாநம்
மணவாள மா முனியை வாழ்த்து – இவர் அருளிய
சூடிக் கொடுத்த நாய்ச்சியார் ஸ்தோத்ர மாலை நூலில் காப்புச் செய்யுள் -4-

————

பெரும் தொகைப் பாசுரங்கள்

சுருதித் தமிழ் மொழியும் சடகோபர் துணை அடியைக்
கருதிப் பரவும் எதிராசன் கவி யமுதம்
வரு திக்கு அறிய வுரை செய் வர முனி வண் புகழ்ப் போய்ப்
பருதிக் கதிர் செல்லு மண்டலம் ஏறப் பரந்ததுவே –1865-

வாது செய வென்று சில வாதியர்கள் வந்து மிக மனமுறிய நிற்பர் ஒரு பால்
வாழி எனவே பெரிய சாபமற நின்று சிலர் வந்தனைகள் செய்வர் ஒரு பால்
போதும் இனி வாதம் உன பாதம் அருள் என்று அடி புகழ்ந்து சிலர் நிற்பர் ஒரு பால்
பொங்கி வரும் எங்கள் வினை மங்க அருள் என்று சிலர் போற்றி செய்து நிற்பர் ஒரு பால்
ஈதிவை கிடக்க மறை நூல் தமிழ் தெரிந்து சிலர் இன்பமுற வாழ்வர் ஒரு பால்
ஏதமற வாதுலர்கள் பேதையர் மயக்கற விறைஞ்சி யயன் நிற்பர் ஒரு பால்
மா தகவினான் உலகம் ஏழையும் அளிக்க என வந்த எதிராசன் அடி சேர்
மா முனிவர் தீபம் அருளாளு மணவாள முனி மன்னு மடம் வாழும் வளமே –1866-

மண்ணாடு வாழ வந்தான் மணவாள முனிவன் வண்மைக்
கண்ணார் அருளுக்கு இலக்காக வாழவும் கண்டவன் தன்
திண்ணார் அடிகளில் குற்றேவல் செய்து திரியவு நாம்
எண்ணாது இருக்க நடுவே நமக்கு வந்து எய்தியதே –1867-

பொன்னி தனில் குளிர் நகரம் தனில் புகுதப் பெற்றோம்
பொருவரும் சீர் நம்பெருமாள் பதம் புகழப் பெற்றோம்
மன்னிய சீர் மணவாள மா முனி என் ஐயன்
வாழ்ந்து இருக்கும் மடம் தன்னில் வந்து இருக்கப் பெற்றோம்
சென்னி தனில் அவன் அடியார் பதம் சூடப் பெற்றோம்
திருமலை ஆழ்வாரில் ஒன்றும் சிறந்து இருக்கப் பெற்றோம்
பின்னை யவர்க்கு அந்தரங்கர் பேர் அருளும் பெற்றோம்
பெரும் திவத்தில் இன்பம் இங்கே பெருகவும் பெற்றோமே –1868-

பூதூரில் வந்து உதித்த புன்னியனோ பூம் கமழும்
தாதார் மகிழ் மார்பன் தான் இவனோ -தூதூர
வந்த நெடுமாலோ மணவாள மா முனிவன்
எந்தை இவர் மூவரிலும் யார் –திரு நாராயண புரத்து ஆயி ஸ்வாமிகள் அருளிச் செய்தது –

————–

ஈதோ திருவரசு ஈதோ மணம் கொல்லை
ஈதோ திருவாலி என்னுமூர் -ஈதோ தான்
வெட்டும் கலியன் வேல் வெற்றி திருமால் எழுத்து
எட்டும் பறித்த இடம்

நாமார் பெரிய திரு மண்டபமார் நம்பெருமாள்
தாமாக என்னைத் தனித்து அழைத்து -நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளும் இங்கே
வந்து யுரை என்று ஏவுவதே வாய்ந்து –

————–

வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்துச்
சொல்லார வாழ்த்தும் மணவாள நாயனார் தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி இன்று அளித்தோன்
புல்லார விந்தத் திருத்தாள் இரண்டையும் போற்று நெஞ்சே –அருகில் இருந்த முதலிகள் விஞ்ஞாபித்து அருளியது –

————

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் மா முனி மேல் அன்புப்பெருக்கு

நெடியான் அருள் சூடும் படியான சடகோபன்
அடி சேர் அடியார்க்கு அடையா இடர் தானே

அருமறை முடியினரும் பொருள் தந்த
வர வர முனியின் திருவடி வாழியே

வர வர முனி அடி வணங்கும் வேதியர்
திருவடி யிணைகள் என் சிரம் மேல் சேர்க்கவே

————

மா முனிகள் திருநாடு அலங்கரித்தது
ருதிரோத்காரி வருஷம் மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ துவாதசி

மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்ட்டி –யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
வேதாந்த தேசிகர் ஸர்வஞ்ஞராகையாலே -பின்னால் திருவவதரிக்கப் போகும் மா முனிகளின்
அவதாரம் அறிந்து விண்ணப்பம் செய்து
பொலிக பொலிக பொலிக என்று மங்களா ஸாஸனம் செய்து அருளினார்

ருஷீ ணாம் புனராத்யாநாம் வாஸம் அர்த்த அநு தாவதி
பெரியார் வாய் வழி சொல்லையே அர்த்தம் பின் தொடர்ந்து செல்லுமே
இவர் அருளிச் செய்ததாலேயே பெரிய பெருமாள் மா முனிகளுக்குத் தாமே சிஷ்யராக அமைந்து
குரு பரம்பரை ஹாரம் நிறைவு படச் செய்து அருளினார்

மா முனிகளின் தீர்த்த திவசத்தை இன்றும் தாமே நடத்தி வைத்து அருளுகிறார் –

——————-

வடக்கு திரு வீதிப்பிள்ளை சிஷ்யர் கிடாம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார்
அவர் குமாரரும் சிஷ்யரும் கேசவாச்சார்யர்
அவர் குமாரரும் சிஷ்யரும் ஸ்ரீ நிவாஸாச்சார்யார்
அவர் குமாரரும் சிஷ்யரும் கேசவாச்சார்யர்
அவர் குமாரரும் சிஷ்யரும் ஸ்ரீநிவாஸாச்சார்யார்
இவர் திரு நாராயண புரத்தில் அவதாரம் -இவரே ஆதி வண் சடகோப யதீந்த்ர மஹா தேசிகன்
அஹோபில மட மூலஸ்தர் –
இவர் நடாதூர் அம்மாளின் திருப்பேரனான ஸ்ரீ வரத விஷ்ணு வாசர் இடம் கிரந்த காலஷேபம் பண்ணினார்
இவர் காலம் -கிபி 1379-1458

———

மா முனிகள் கலி 4472 சாதாரண வருஷம் -ஐப்பசி சுக்ல பஷ சதுர்த்தி -வியாழக்கிழமை
மூலம் நக்ஷத்ரம் திரு அவதாரம்
கி பி -1370-1443-
சிக்கில் கிடாரம் திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய அண்ணர் திருக்குமாரர்

இவரது திருநாமங்கள்
பெரிய ஜீயர்
சவும்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்
காந்தோ பயந்தா
வர வர முனி
வர யோகி
இராமானுசன் பொன்னடி
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்
யதீந்த்ர பிரவணர்
அழகிய மணவாள ஜீயர்
ஸ்வேத வார்னர் ஆகையால் வெள்ளை ஜீயர்

வடமதுரை ஜீர்ண உதாரணம் செய்து அருளினார்
வானமா மலை ஜீயர் பிரியாது ஆட் செய்து இருப்பார்
கோயில் கந்தாடை அண்ணன் உடையவருக்கு முதலியாண்டான் போல் பாதுகா ஸ்தாநீயர்
எரும்பி அப்பா வடுக நம்பி போல் தேவு மற்று அறியாதே அத்யந்த அபிமதர்
பட்டர் பிரான் ஜீயர் எம்பாரைப் போல் பதச்சாயா பன்னராய் இருப்பர்
அப்பிள்ளார் மட நிர்வாஹகர்
பிரதிவாதி பயங்கர அண்ணா கூரத்தாழ்வானைப் போல் உஸாத் துணை

———

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரவாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: