வந்தித்து இருக்கு மறை போற்றும் வேங்கட வாண மலர்
உந்தித் திருக் குங்குமம் அணி மார்ப உள் வஞ்சனையும்
புந்தித் திருக்கும் வெகுளியும் காமமும் பொய்யும் விட்டுச்
சிந்தித் திருக்குமது எக்காலம் யான் உன் திருவடியே –81-
(இ – ள்.) இருக்கு மறை – ருக்முதலிய வேதங்கள்,
வந்தித்து போற்று – வணங்கித் துதிக்கப்பெற்ற,
வேங்கட வாண – திருவேங்கடமலையில் வாழ்பவனே!
மலர் உந்தி திரு குங்குமம் அணி மார்ப – திருநாபித்தாமரைமலரையும் திருமகளோடு குங்குமச்சாந்தை யணிந்த திருமார்பையு முடையவனே! –
யான் -, உள் வஞ்சனையும் – மனத்திலடங்கிய வஞ்சனைகளையும்,
புந்தி திருக்கும் – அறிவின் மாறுபாட்டையும்,
வெகுளியும் – கோபத்தையும்,
காமமும் – சிற்றின்பவிருப்பத்தையும்.
பொய்யும் – பொய்யையும்,
விட்டு – ஒழித்து.
உன் திரு அடி சிந்தித்திருக்குமது – உனது திருவடிகளைத் தியானித்திருப்பது,
எ காலம் – எப்பொழுதோ? (எ – று.)
————-
திருவடி வைக்கப் புடவி பற்றாது அண்டம் சென்னி முட்டும்
கருவடிவைக் கலந்து ஆற்றா எண் திக்கும் கடல் மண் கொள்வான்
பொரு வடிவைக் கனல் ஆழிப் பிரான் புனல் ஆழி கட்டப்
பெரு வடிவைக் கண்ட அப்பன் எவ்வாறு அடி பேர்ப்பதுவே –82-
(இ – ள்.) பொரு – போர்செய்கின்ற,
வடி – (பலவகைப்படைக்கலங்களில்) தேர்ந்தெடுத்த,
வை – கூர்மையான,
கனல் ஆழி – அக்கினியைச்சொரிகிற சக்கராயுதத்தையுடைய,
பிரான் – தலைவனும்,
ஆழி கட்ட – சமுத்திரத்தை அணைகட்டிக் கடப்பதற்காக,
புனல் பெரு வடிவை கண்ட – (அக்கடலின்) நீர்மிக்கவற்றுதலை அடையும்படி செய்த,
அப்பன் – ஸ்வாமியுமான திருவேங்கடமுடையான், (திரிவிக்கிரமாவதாரங்கொண்ட காலத்து),
திருஅடி வைக்க புடவி பற்றாது – (அப்பெருமான் தனது) ஒரு திருவடியை வைப்பதற்கே பூமிமுழுவதும் இடம்போதா தாயிற்று;
சென்னி அண்டம் முட்டும் – (அப்பெருமானது) திருமுடியோ அண்டகோளத்தின் மேன் முகட்டைத் தாக்கியது;
எண் திக்கும் கரு வடிவை கலந்து ஆற்றா – எட்டுத்திக்குக்களும் (அவனது) கருநிறமான திருமேனி பொருந்துதற்கு இடம்போதாவாயின;
(இங்ஙனம் பெருவடிவனான அத்திருமால்), கடல் மண் கொள்வான் – கடல்சூழ்ந்த நிலவுலகத்தில் (மூன்றடியிடம்) அளந்துகொள்வதற்காக,
அடி பேர்ப்பது – திருவடிகளை எடுத்துவைப்பது, எ ஆறு – எப்படியோ?
அளத்தலாவது ஒருவன் நின்றவிடமொழிய மற்றோரிடத்தில் மாறிக் காலிடுத லாதலால், அங்ஙனம் அடிமாறியிட
வொண்ணாதபடி நிலவுலகமுழுவதும் ஓரடிக்குள்ளே யடங்குமாறு பெருவடிவுடையவன் மூன்றடி நிலத்தை அளந்து
கொள்ளுதற்கு இடம் ஏது? எனத் திரிவிக்கிரமாவதாரஞ்செய்த திருமாலினது வடிவத்தின் பெருமையை வியந்து கூறியவாறாம்;
பெருமையணி. திருமால் வஞ்சனையால் மாவலியை மூன்றடிநிலம்வேண்டி அதுகொடுக்க அவன் இசைந்தவுடன்
உலகங்களை அளந்துகொண்டன னென்று ஒரு சாரார் கூறும் ஆக்ஷேபத்துக்கு ஒருசமாதானம் இதில் தோன்றும்;
சரீரம் இயல்பிலே வளருந்தன்மையதாதலால், முந்தியவடிவையேகொண்டு அளந்தில னென்று குறைகூறுதல் அடா தென்க.
கலந்து = கலக்க; எச்சத்திரிபு. கொள்வான் – எச்சம். ஈற்றடியில், வடிவு – வடிதல்; தொழிற்பெயர்.
————-
பேர் ஆனைக் கோட்டினைப் பேர்த்தானை வேங்கடம் பேணும் துழாய்த்
தாரானை போதானைத் தந்தானை எந்தையை சாடு இறப் பாய்ந்து
ஊர் ஆனை மேய்த்து புள் ஊர்ந்தானை பஞ்சவர்க்கு உய்த்து நின்ற
தேரானை நான் மறை தேர்ந்தானை தேரும் நும் தீது அறுமே –83-
(இ – ள்.) பேர் – பெரிய, ஆனை – (குவலயாபீடமென்னும்) யானையினது,
கோட்டினை – தந்தங்களை,
பேர்த்தானை – பெயர்த்துஎடுத்தவனும், –
வேங்கடம் பேணும் – திருவேங்கடமலையை விரும்பித் தங்குமிடமாகக் கொண்ட,
துழாய் தாரானை – திருத்துழாய்மாலையையுடையவனும், –
போதனை தந்தானை – பிரமனைப் படைத்தவனும், –
எந்தையை – எமது தலைவனும், –
சாடு இற பாய்ந்து – சகடாசுரன் முறியும்படி தாவியுதைத்து,
ஊர் ஆனை மேய்த்து – ஊரிலுள்ள பசுக்களை மேய்த்து,
புள் ஊர்ந்தானை – கருடப்பறவையை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்தியவனும், –
பஞ்சவர்க்கு – பஞ்சபாண்டவரில் ஒருவனான அருச்சுனனுக்கு,
உய்த்து நின்ற – செலுத்திநின்ற,
தேரானை – தேரையுடையவனும், –
நால் மறை தேர்ந்தானை – நான்கு வேதங்களாலும் ஆராயப்பட்டவனுமான திருமாலை,
தேரும் – (முழுமுதற்கடவுளாக) அறிந்து தியானித்துத் துதியுங்கள்; (அங்ஙனஞ் செய்தால்),
நும் தீது அறும் – உங்கள் துன்பங்களெல்லாம் நீங்கும்; (எ – று.)
ஊர் – இங்குத் திருவாய்ப்பாடி. பஞ்சவர்க்கு உய்த்துநின்ற தேரான் – அருச்சுனனுக்குச் சாரதியாய்நின்று தேரோட்டியவன்.
பஞ்சவர் – ஐவர்; இது, ஐந்து என்னும் பொருள்தரும் பஞ்ச என்ற வடமொழியெண்ணுப்பெயரடியாப் பிறந்த பெயர்;
இங்கே, பாண்டவர்க்கு, தொகைக்குறிப்பு. இப்பொதுப் பெயர், சிறப்புப்பொருளின் மேலதாய்,
இங்கு அருச்சுனனைக் குறித்தது. ‘தேறும்’ என்பதும் பாடம்.
இச்செய்யுளின் அடிகளில், பேரானை, பேர்த்தானை, தாரானை, தந்தானை, ஊரானை, ஊர்ந்தானை,
தேரானை தேர்ந்தானை என்பவை எதிர்மறையும் உடன்பாடுமாய் ஒன்றுக்கொன்று மாறுபடுவதாக மேல்நோக்கில்தோன்றி,
பொருளையுணருமிடத்து வேறுவகையாப்பொருள்பட்டு மாறுபாடின்றிமுடிதலால், முரண்விளைந்தழிவணி;
வடநூலார் விரோதாபாஸாலங்காரமென்பர். இது, சொல்லால்வந்த முரண்தொடை;
“சொல்லினும் பொருளினும் முரணுதல் முரணே” என்றது காண்க.
அழகரந்தாதியின் 83 – ஆஞ்செய்யுளும் இத்தன்மையதாம்; அது வருமாறு :-
“தொலைந்தானை யோதுந் தொலையானை யன்னை சொல்லான் மகுடங்,
கலைந்தானை ஞானக் கலையானை யாய்ச்சி கலைத்தொட்டிலோ,
டலைந்தானைப் பாலினலையானை வாணன்கையற்றுவிழ,
மலைந்தானைச் சோலைமலையானை வாழ்த்தென் மட நெஞ்சமே.”
“மாத்துளவத், தாரானை வேட்கை யெலாந் தந்தானை மும்மதமும், வாரானை யன்றழைக்க வந்தானைக் –
காரான, மெய்யானை யன்பருக்கு மெய்த்தானைக் கண்கைகால், செய்யானை வேலையணைசெய்தானை –
வையமெலாம், பெற்றானைக்காணப்பெறாதானைக் கன்மழைக்குக், கற்றானைக்காத்ததொரு கல்லானை –
யற்றார்க்கு, வாய்ந்தானைச் செம்பவளவாயானை மாமுடியப், பாய்ந்தானை யாடரவப்பாயானை” என்ற
திருநறையூர் நம்பிமேகவிடு தூதினடிகளையுங் காண்க.
————–
அறுகு ஊடு கங்கை தரித்தான் அயன் அழைத்தாலும் இச்சை
அறு கூடு மால் அடியார் அடிக்கே அப்பன் வேங்கடவன்
மறுகு ஊடு மாதர் ஏறி பூண் எறிக்கும் மதில் அரங்கன்
மறு கூடு நம்மை மருவாமல் வாழ்விப்பன் மா மனமே –84-
(இ – ள்.) மா மனமே – சிறந்த (எனது) மனமே! –
அறுகு ஊடு கங்கை தரித்தான் – (முடியிற்சூடிய) அறுகம்புற்களினிடையே கங்காநதியைத் தரித்தவனான சிவனும்,
அயன் – பிரமனும்,
அழைத்தாலும் – (வலியவந்து உன்னைத் தம்மிடத்துக்கு) அழைத்தாலும்,
இச்சை அறு – (அவர்கள்பக்கல்) விருப்பங்கொள்ளாதொழிவாய்:
மால் அடியார் அடிக்கே கூடு – திருமாலினது அடியார்களின்திருவடிகளிலேயே சேர்வாய்: (அங்ஙனஞ் சேர்ந்தால்), –
ஊடு மாதர் எறி பூண் மறுகு எறிக்கும் மதில் அரங்கன் – (தம்கணவரோடு) பிணங்கிய மகளிர் கழற்றியெறிந்த
ஆபரணங்கள் (எடுப்பவரில்லாமல்) வீதிகளிலே (கிடந்து) ஒளிவீசப்பெற்றதும் மதிள்கள் சூழ்ந்ததுமான ஸ்ரீரங்கத்தை யுடையவ னாகிய,
அப்பன் வேங்கடவன் – ஸ்வாமியான திருவேங்கட முடையான்,
மறு கூடு மருவாமல் நம்மை வாழ்விப்பன் – (இவ்வுடம்புநீங்கிய பின்) மற்றோருடம்பிற்சேராதபடி நம்மை வாழச்செய்வன்
(மீண்டும் பிறப்பில்லாதபடி நமக்கு முத்திதந்து அதில் நம்மை அழிவின்றிப் பேரின்பநுகர்ந்து வாழ்ந்திருக்கச்செய்வன்); (எ – று.)
சிவபிரான் பிரியங்கொண்டு சூடுபவற்றில் அறுகம்புல்லும் ஒன்றாதலால், “அறுகூடு தரித்தான்” என்றார்;
சிவபூசைக்கு உரிய பத்திரபுஷ்பாதிகளில் அறுகம்புல்லும் ஒன்றாதல் காண்க.
இச்சா என்ற வடசொல், இச்சையென விகாரப்பட்டது. அடிக்கு – உருபுமயக்கம்.
ஊடலாவது – இன்பநிலையில் அவ்வின்பத்தை மிகுவிக்குமாறு ஆடவர்மீது மகளிர் கோபித்தல்; இது, பிரணயகலக மெனப்படும்.
செல்வம் நிரம்பிய மகளிர் அங்ஙனம் கோபங் கொள்ளுகின்றபொழுது தாம் அணிந்துள்ள ஆபரணங்களைக் கழற்றித்
தெருவில் எறிதலையும், அனைவரும் செல்வவான்களாதலால் அங்ஙனம் பிறர்கழித் தெறிந்தவற்றை எவரும்
விரும்பியெடுத்துக் கொள்ளாராக அவை அங்கங்கேயே கிடந்து விளங்குதலையும்,
“கொல்லுலைவேற்கணல்லார் கொழுநரோடூடி நீத்த,
வில்லுமிழ்கலன்கள்யாவும் மிளிர்சுடரெறிக்குமாற்றால்,
எல்லியும் பகலுந் தோன்றா திமையவருலகமேய்க்கும்,
மல்லன் மாவிந்தமென்னும் வளநகர்” என்ற நைடதத்துங் காண்க.
ஊடுமாதர் – வினைத்தொகை. பூணப்படுவது பூண் எனக்காரணக்குறி.
“செம்பொன் மதிலேழுடுத்த திருவரங்கப் பெருங்கோயில்” என்றபடி ஏழுமதில்கள் சூழப்பெற்ற தாதலால்,
அச்சிறப்புத் தோன்ற, “மதிலரங்கம்” என்றார்.
பறவைதங்குதற்கு இடமாகிற கூடு போல உயிர்தங்குமிட மாதலால், உடல், ‘கூடு’ எனப்பட்டது; உவமையாகு பெயர்;
“கூடுவிட்டிங், காவிதான்போயினபின்பு” என்ற ஒளவையார்பாடலையுங் காண்க.
பந்தமோக்ஷங்களுக்கு மனம் காரணமாதலால், ‘மாமனம்’ எனப்பட்டது;
இனி, மனத்தைத் தம்வசப்படுத்துதற் பொருட்டு அதனை ‘மாமனமே’ எனக் கொண்டாடி விளித்தன ரெனினுமாம். மூன்றாமடி – வீறுகோளணி.
தேவதாந்தரபஜநம் பந்தத்துக்கே காரணமாதலால், அவ்வழியிற்செல்வதைவிட்டு மோக்ஷத்தை யடையுமாறு
பாகவதபஜநஞ் செய்வா யென்று தம்மனத்துக்கு அறிவுறுத்தினார்.
இச்செய்யுளில் முன்னிரண்டடிகளிலும், பின்னிரண்டடிகளிலும் தனித்தனி யமகம் காண்க; மேல் 98 – ஆஞ் செய்யுளும் இது.
—–
மாமன் அங்காந்த வல் வாய்ப் புள்ளை ஏவமடித்து பித்தன்
நா மனம் காந்த அன்று ஓட எய்தான் நறும் பூங்கொடிக்குத்
தாமன் அம் காந்தன் திருவேங்கடத்து எந்தை தாள்களில் என்
தீ மனம் காந்தம் கவர் ஊசி போல் என்று சேர்வதுவே –85-
(இ – ள்.) மாமன் – மாமனான கம்சன்,
அங்காந்த வல் வாய் புள்ளை ஏவ – திறந்த வலியவாயையுடைய பறவையை (பகாசுரனை) அனுப்ப,
மடித்து -(அதனைக்) கொன்று,
பித்தன் நா மன் அம் காந்த அன்று ஓட எய்தோன் – சிவன் (தனது) நாவிற்பொருந்திய நீர் வற்றுமாறு அக்காலத்தில்
(பாணாசுரயுத்தத்தில்) ஓடும்படி அம்பெய்தவனும்,
நறும் பூ கொடிக்கு தாமன் அம் காந்தன் – பரிமளமுள்ள தாமரைமலரில் வாழ்கின்ற கொடிபோன்ற பெண்ணுக்கு
(திருமகளுக்கு) இருப்பிடமானவனும் அழகிய கணவனுமான,
திருவேங்கடத்து எந்தை – திருவேங்கடமலையிலெழுந்தருளியிருக்கிற எம்பெருமானுடைய,
தாள்களில் – திருவடிகளில்,
என் தீ மனம் – எனது கொடியமனமானது,
காந்தம் கவர் ஊசிபோல் சேர்வது – காந்தத்தினாற் கவரப்பட்ட ஊசிபோலச் சேர்ந்துபற்றுவது,
என்று – எப்பொழுதோ? (எ – று.)
மாமன் – இங்கே, தாயுடன்பிறந்தவன். மன் அம் – வினைத்தொகை. நாமன்அம் காந்த – நாஉலர.
கொடி – உவமையாகுபெயர். பூங்கொடி – மலர்க்கொடிபோன்றவ ளெனினுமாம்.
திருமகளைத் திருமார்பில் வைத்துள்ளதனால், “நறும்பூங்கொடிக்குத்தாமன்” எனப்பட்டான்.
ஊசி – ஸூசீ என்ற வடசொல்லின் விகாரம். எந்தைதாள்களில் என்தீமனம் காந்தங்கவரூசி போற்சேர்வது –
“இரும்பைக் காந்த மிழுக்கின்ற வாறெனைத், திரும்பிப் பார்க்கவொட்டாமல்” திருவடிக், கரும்பைத்தந்து” என்பர் பிறரும்.
காந்தம். இரும்பைக் கவர்ந்து இழுத்தல், வெளிப்படை.
—————
சேரும் மறுக்கமும் நோயும் மரணமும் தீ வினையின்
வேரும் அறுக்க விரும்பி நிற்பீர் வட வேங்கடத்தே
வாரும் மறுக்க அறியான் எவரையும் வாழ அருள்
கூரும் மறுக் கமலை அணி மார்பன் கைக் கோதண்டனே –86–
(இ – ள்.) சேரும் – (கருமகதியால் வந்து) அடைகின்ற,
மறுக்கமும் – மனக்குழப்பங்களையும்,
நோயும் – வியாதிகளையும்,
மரணமும் – மரணத்தையும்,
தீவினையின் வேரும் – கொடியகருமத்தின்மூலத்தையும்,
அறுக்க – ஒழிப்பதற்கு,
விரும்பி நிற்பீர் – விருப்பங்கொண்டு நிற்பவர்களே! (நீங்கள்),
வடவேங்கடத்தே வாரும் – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையினிடத்தே வாருங்கள்: (அங்கு எழுந்தருளியிருக்கிற),
மறு கமலை அணி மார்பன் – (ஸ்ரீவத்ஸமென்னும்) மறுவையும் இலக்குமியையுங் கொண்ட (வலத்திரு) மார்பை யுடையவனும்,
கை கோதண்டன் – கையில் வில்லை யுடையவனுமான திருமால்,
எவரையும் மறுக்க அறியான் – (தன்னைச் சரணமடைந்தவர்) எத்தன்மையராயினும் அவரை விலக்க அறியான்:
(எவரையும்) வாழ அருள்கூரும் – தனது அடியவரனைவரையும் இனிதுவாழுமாறு கருணைபுரிவன்: (எ – று.)
அடியார்களின் பிழைகளைப் பாராட்டாது பொறுத்து ஆட்கொண்டருளுதற்குப் புருஷகாரமாகிற திருமகள்
எப்பொழுதும் விட்டுப்பிரியாமல் உடனிருக்கப்பெற்றவ னாதலால் அனைவரையும் மறாது அருள்செய்வ னென்பது தோன்ற,
‘மறுக்கவறியான் எவரையும் வாழ அருள்கூரும் கமலையணி மார்பன்’ என்றார்.
இடையிலுள்ள ‘எவரையும்’ என்றதை மத்திமதீபமாகக் கொண்டு, முன்நின்ற ‘மறுக்கவறியான்’ என்றதனோடும்,
பின்நிற்கும் ‘வாழவருள்கூரும்’ என்பதனோடுங் கூட்டுக. மறுக்கம் – தொழிற்பெயர்.
————
கோதண்டத்தான் நந்தன் வாள் கதை நேமியன் கோல வட
வேதண்டத்தான் அத்தன் இன் இசையான் மண்ணும் விண்ணும் உய்ய
மூதண்டத் தானத்து அவதரித்தான் எனில் முத்தி வினைத்
தீது அண்டத்தான் அத்தனு எடுத்தான் எனில் தீ நரகே –87-
(இ – ள்.) கோதண்டத்தான் – வில்லையுடையவனும்,
நத்தன் – சங்கத்தையுடையவனும்,
வாள்கதைநேமியன் – வாளையும் கதையையும் சக்கரத்தையுமுடையவனும்,
கோலம் வட வேதண்டத்தான் – அழகிய வடமலையான திருவேங்கடத்தை இடமாகவுடையவனும்,
அத்தன் – (எல்லாவுயிர்கட்குந்) தலைவனும்,
இன் இசையான் – இனிமையான வேய்ங்குழலினிசையையுடையவனுமான திருமால்,
மண்ணும் விண்ணும் உய்ய – நிலவுலகத்திலுள்ள மனிதர்முதலியோரும் மேலுலகத்திலுள்ள தேவர்முதலியோரும் துன்பந்தவிர்ந்து வாழ்தற்காக,
மூது அண்டம் தானத்து – பழமையான அண்டத்துக்கு உட்பட்ட இடங்களில்,
அவதரித்தான் – திருவவதாரஞ்செய்தான்,
எனில் – என்று (மெய்ம்மையுணர்ந்து) கூறினால்,
முத்தி – பரமபதங் கிடைக்கும்; (அத்திருமால்),
வினை தீது அண்ட – ஊழ்வினையின்தீமை வந்து தொடர,
தான் அ தனு எடுத்தான் – தான் அந்தந்தத்தேகத்தை யெடுத்துப் பிறந்தான்,
எனில் – என்று (உண்மையுணராது) கூறினால்
தீ நரகே – கொடியநரகமே நேரும்: (எ – று.)
ஜீவாத்மாக்கள் தேவ திர்யங் மநுஷ்ய ஸ்தாவர ரூபங்களாய்ப் பிறப்பது போலக் கருமவசத்தினா லன்றி,
பரமாத்மா உபேந்திர மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்கள்செய்வது துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலநத்தின்பொருட்டும்
தருமத்தை நிலைநிறுத்துதற்பொருட்டும் அப்பெருமான்கொண்ட இச்சையினாலேயே யாகு மென்ற இவ்வுண்மையை உணர்தல்,
அவதாரரஹஸ்யஜ்ஞாந மெனப்படும். இந்தஞானத்தையுடையராய்ப் பகவதவதாரங்களை அவனது சங்கல்பத்தினாலாயவை
யென்றுகொண்டு அப்பெருமானது அருள் ஆற்றல் அடியவர்க்கெளிமை முதலிய திருக்கல்யாணகுணங்களில் ஈடுபட்டுத்
துதிப்பவர் முத்தியையடைவர்:
அங்ஙனமன்றி, அவ்வவதாரங்களைக் கருமவசத்தாலாயவையென்றுகொண்டு இகழ்பவர் நரகமடைவர் என்பது, கருத்து.
“தராதலத்து, மீனவதாரமுதலானவை வினையின்றி யிச்சை, யானவதாரறிவா ரவரே முத்தராமவரே” என்பர் அழகரந்தாதியிலும்.
திருமால் பஞ்சாயுதங்களை யுடைமையை ‘கோதண்டத்தான் நத்தன்வாள் கதை நேமியன்’ என்று குறித்தார்.
வேதண்டம் – மலை. இன்இசையான் – கேட்டற்கு இனிய புகழையுடையவ னெனினுமாம். மண், விண் – இடவாகுபெயர்.
————
நரகம் அடங்கலும் சென்று எய்த்த பாவிக்கு நாரியர் மேல்
விரகம் அடங்க மெய்ஞ்ஞானம் வெளி செய வீடு பெற
உரகம் மடங்க நடித்த பொற்றாள் இன்று என் உச்சி வைப்பாய்
வரகமடம் கயல் ஆனாய் வடமலை மாதவனே –88–
(இ – ள்.) வரம் கமடம் கயல் ஆனாய் – சிறந்த ஆமையும் மீனுமாய்த் திருவவதரித்தவனே!
வடமலை மாதவனே – திருவேங்கடமலையி லெழுந்தருளியிருக்கிற திருமாலே! –
நரகம் அடங்கலும் சென்று எய்த்த பாவிக்கு – (இதுவரையிலும் பலபிறப்புக்கள்பிறந்து பலதீவினைகளைச்செய்து) நரகங்களனைத்திலும் போய் வருந்திய பாவியான எனக்கு, நாரியர்மேல் விரகம் அடங்க – மகளிர்விஷயமாக உண்டாகின்ற ஆசைநோய் தணியவும்,
மெய் ஞானம் வெளி செய – தத்துவஞானம் தோன்றவும்,
வீடு பெற – பரமபதம் கிடைக்கவும்,
உரகம் மடங்க நடித்த பொன் தாள் இன்று என் உச்சி வைப்பாய் – (காளியனென்னும்) பாம்பு தலைமடங்கும்படி
(அதன்முடியின்மேலேறி) நடனஞ்செய்த (நினது) அழகியதிருவடிகளை இப்பொழுதே எனது சிரசின்மேல் வைத்தருள்வாய்: (எ – று.)
அடங்கலும் என்றது, எஞ்சாமை குறித்தது, எய்த்தல் – இளைத்தல், மெலிதல். பாவிக்கு – தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.
பாபீ, நாரீ, விரஹம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. பாவி – தீவினைசெய்தவன்.
மெய்ஞ்ஞானம் – பிறப்புவீடுகளையும் அவற்றின்காரணங்களையும் பரமாத்மஜீவாத்மஸ்வரூபங்களையும்
விபரீதஐயங்களாலன்றி உண்மையால் உணர்தல்.
உரகம் என்ற வடசொல் – மார்பினால் (ஊர்ந்து) செல்வதென்று பொருள்படும்.
பொன் தாள் – பொன்னினாலாகிய கழலென்னும் அணியை அணிந்த திருவடி யெனினுமாம்:
இப்பொருளில், பொன் – கருவியாகுபெயர். வர கமடம் – வடமொழித்தொடர்.
கண்ணன் காளியனுடைய முடியின்மே லேறி, ஐந்துதலைகளையுடைய அந்நாகம் எந்தெந்தப் படத்தைத் தூக்குகின்றதோ
அந்தந்தப்படத்தைத் துவைத்து அழுத்திநின்று அப்பாம்பின்வலிமையை அடக்கி அதனை மூர்ச்சையடையச்செய்கையில்,
பலவகைநடனத்திறங்களைச் செய்துகாட் டியமை தோன்ற, ‘உரகமடங்க நடித்த பொற்றாள்’ என்றார்.
அத்தன்மையை, ‘ஸ்வாமி, நர்த்தநமுறையில் வட்டமாய்ச்சுற்றுவது முதலான பிராந்தி கதிகளினாலும்,
ஒரு பக்கத்திலிருந்து மற்றொருபக்கத்துக்குப் போவது முதலிய ரேசககதிகளினாலும்,
பாதத்தை முன் நீட்டிவைப்பதாகிய தண்ட பாதகதியினாலும், அந்தச்சர்ப்பராசன் நசுங்கி மிகுந்த உதிரத்தையுங் கக்கினான்’ என்ற
விஷ்ணுபுராணவாக்கியத்தால் நன்கு அறிக.
“கானகமாமடுவிற் காளியனுச்சியிலே, தூயநடம்பயிலுஞ் சுந்தர,”
“காளியன்பொய்கை கலங்கப்பாய்ந்திட்டவன், நீண்டமுடியைந்திலு நின்று நடஞ்செய்து” என்ற
பெரியாழ்வாரருளிச்செயல்களையுங் காண்க.
முன்னொருகாலத்திற் பிரமதேவன் கண்துயில்கையில், சோமகனென்னும்அசுரன் வேதங்களையெல்லாங் கவர்ந்துகொண்டு
கடலினுள் மறைந்து செல்ல, பிரமன்முதலிய தேவர்களின் வேண்டுகோளினால் திருமால் ஒரு பெருமீனாகத்திருவவதரித்துக்
கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப் பிடித்துக் கொன்று, அவன்கவர்ந்துசென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து கொடுத்தன னென்றும்;
திருப்பாற்கடல் கடைந்தபொழுது மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே சென்று அழுந்திவிடாதபடி திருமால் மகா கூர்ம ரூபத்தைத்
தரித்து அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தா னென்றும் கூறப்படுகின்ற வரலாறுகள்பற்றி,
‘வரகமடங் கயலானாய்’ என்றார். வர என்று தனியே எடுத்து, சிறந்தவனே யென்று கொள்ளினுமாம்; வரன் என்பதன் விளி.
————
மாதிரம் காதல் மனை வாழ்க்கை என்று எண்ணி வான் பொருட்டு
மாதிரம் காதம் பல உழல்வீர் இன்னும் மைந்தன் என்று ஓர்
மாது இரங்காத படி வணங்கீர் அரிமா வொடு கைம்
மா திரங்காது அமர் செய்கின்ற சேட மலையினையே –89-
(இ – ள்.) காதல் மனை வாழ்க்கை – விருப்பத்துக்குஇடமான மனையாளோடுகூடி இல்லத்துவாழ்தலை,
மா திரம் என்று எண்ணி – மிக்கநிலையுள்ளதென்று நினைத்து, (அந்தஇல்லறவாழ்வுக்கு உபயோகமாக,)
வான் பொருட்கு – மிக்க செல்வத்தை ஈட்டுதற்பொருட்டு,
மாதிரம் – திக்குக்கள்தோறும்,
பல காதம் வளைவீர் – அநேககாததூரம் சுற்றியலைபவர்களே! –
இன்னும் மைந்தன் என்று ஓர் மாது இரங்காதபடி – இன்னமும் (உங்களைப்) புத்திரனென்று ஒருபெண் அன்புசெய்யாதபடி
(இனியாயினும் பிறப்பற்று முத்திபெறுமாறு),
அரிமாவொடு கைம்மா திரங்காது அமர் செய்கின்ற சேடமலையனை வணங்கீர் – சிங்கங்களோடு யானைகள் பின்வாங்காமற்
போர் செய்யப்பெற்ற சேஷகிரியெனப்படுகிற திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானை வணங்குங்கள்; (எ – று.)
மீண்டும் பிறப்பில்லாதபடி யென்ற பொருளை ‘இன்னும்மைந்தனென்று ஓர்மாது இரங்காதபடி’ என்று
வேறுவகையாற் கூறினது, பிறிதினவிற்சியணி.
‘அரிமாவொடு கைம்மா திரங்காது அமர்செய்கின்ற’ என்றது, மலைவளங் கூறியவாறாம்.
கஜேந்திராழ்வானைப் பாதுகாத்தவனும் நரசிங்காவதாரஞ்செய்தவனுமான திருவேங்கட முடையானைச் சார்ந்து
அவனதருள் பெற்ற யானைக ளாதலால், சிங்கத்துக்கு அஞ்சுகின் றனவில்லை யென்க.
மஹாஸ்திரம், சேஷன் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. வான் – உரிச்சொல். வணங்கீர் – ஏவற்பன்மை.
————–
மலையின் அரக்கர் உடன்று எழுந்தார் என்று மா மறை நூல்
கலையினர் அக்கருடன் இந்திராதியர் காட்ட செய்யும்
கொலையினர் அக்கருடன் ஏறும் வேங்கடக் குன்றர் என்றால்
உலையின் அரக்கு அருள் தந்திலர் ஏனும் என் உள் அவர்க்கே –90-
(இ – ள்.) மா மறை நூல் கலையினர் அக்கர் உடன் – சிறந்தவேதசாஸ்திரங்களாகிய கல்வியில் தேர்ந்த பிரமதேவரும்
எலும்புமாலையைத்தரித்தவரான சிவபிரானு மாகிய இருமூர்த்திகளுடன்,
இந்திர ஆதியர் – இந்திரன் முதலிய தேவர்கள்,
மலையின் அரக்கர் உடன்று எழுந்தார் என்று காட்ட – “மலைகள்போல இராக்கதர்கள் உக்கிரங்கொண்டு ஓங்கினார்கள்” என்று சொல்லி முறையிட,
செய்யும் கொலையினர் – செய்த (அவ்விராக்கத) வதத்தையுடையவரான,
அ கருடன் ஏறும் வேங்கடம் குன்றர் – அந்தக்கருடனாகிய வாகனத்தின்மேல் ஏறியருள்கிற திருவேங்கடமலையை யுடையவர்,
என்றால் – என்றுசொன்னால்,
அருள் தந்திலர் ஏனும் என் உள் அவர்க்கு உலையின் அரக்கு – (அவர் என்பக்கல்) கருணைபுரியாராயினும்
அவர் விஷயத்தில் என்மனம் உலைக்களத்திலிட்ட அரக்காம் (நெகிழ்ந்துஉருகும்).
பகவத்விஷயத்தில் தமக்குஉள்ள பக்திமிகுதியா லாகும் நெஞ்சுருக்கத்தை இதில் வெளியிட்டார்.
எம்பெருமான் அருள்புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவன்திறத்தில் அன்புசெலுத்துதல் முமுக்ஷுக்களுக்கு
(முத்தி பெறவிரும்புவார்க்கு)க் கடமையாதல் காண்க.
இச்செய்யுளை, விரகவேதனையுற்ற தலைவியின் கூற்றாகவுங் கொள்ளலாம்.
அரக்கரெழுந்தாரென்று பிரமருத்திரருடன் இந்திராதியர் காட்ட –
“விதியொடு முனிவரும் விண்ணுளோர்களும், மதிவளர்சடைமுடிமழுவலாளனும்,
அதிசயமுட னுவந்தய லிருந்துழிக், தொள்வேலரக்கர்தங் கொடுமை கூறினார்” என்ற கம்பராமாயணங் களுக்கு –
தன்மையிற் இராவணன் முதலியோர். பிரமன் திருமாலினிடம் வேதசா என்ற வடசொற்கள் பிறர்க்கு வெளியிட்டதனால்,
அவனை, ‘மாமறைநூற்கலையினர்’ என்றார். அக்கர் – ருத்திராக்ஷமாலையையுடையவ ரெனினுமாம்.
கலையினர், அக்கர் – உயர்வுப்பன்மை. இனி, மா மறை நூல் கலையினர் அக்கருடன் என்பதற்கு –
சிறந்த வேதசாஸ்திரங்களில் வல்லவர்களான முனிவர்களும், யக்ஷர்களுமாகிய இவர்களோடு என்று உரைத்தலுமொன்று;
அவ்வுரைக்கு, யக்ஷ ரென்ற வடசொல் அக்கரெனச் சிதைந்த தென்க;
யசோதை = அசோதைஎன்பதுபோல. யக்ஷர் – பதினெட்டுத்தேவ கணங்களுள் ஒருசாரார். யக்ஷராஜனான குபேரனுக்கு
இராவணன் பகைவனானதனால், அரக்கரெழுச்சியை முறையிடுதற்கு இயக்கரும் உரியவராவர்.
“அக் கருடன்” எனச் சுட்டினது, பிரசித்தி பற்றி: அழகிய கருட னெனினுமாம். கருடன் – பக்ஷிராஜன்;
இவனுக்கு, வைஷ்ணவசம்பிரதாயத்தில் ‘பெரிய திருவடி’ என்று பெயர் வழங்கும்.
————-
தோழி தலைமகனை ஏதம் கூறி இரவு வரல் விலக்கல் –
உள்ளம் அஞ்சாய்வலியாய் வலியார்க்கும் உபாயம் வல்லாய்
கள்ளம் அஞ்சு ஆயுதம் கை வரும் ஆயினும் கங்கு லினில்
வெள்ள மஞ்சு ஆர் பொழில் வேங்கடக் குன்றினில் வீழ் அருவிப்
பள்ளம் அம்சாரல் வழி வரில் வாடும் இப்பாவையுமே –91–
(இ – ள்.) (நீ), உள்ளம் அஞ்சாய் – (எதற்கும்) மனம் அஞ்சுகின்றாயில்லை;
வலியாய் – வலிமையையுடையாய்;
வலியார்க்கும் உபாயம் வல்லாய் – வல்லமையுடையவர்க்கும் உபாயங்கற்பிக்கும்படி உபாயம்வல்லை;
கள்ளம் – களவும்,
அஞ்சு ஆயுதம் – பஞ்சாயுதங்களும்,
கைவரும் – (உனக்குப்) பழக்கமாயுள்ளன;
ஆயினும் -, கங்குலினில் – இரவிலே,
வெள்ளம் மஞ்சு ஆர் பொழில் வேங்கடம் குன்றினில் – வெள்ளமாகப் பொழிகின்ற மேகங்கள் தங்குகிற சோலைகளையுடைய திருவேங்கடமலையில்,
வீழ் அருவி பள்ளம் – விழுகிற அருவிப்பெருக்கையுடைய பள்ளங்களோடு கூடிய,
அம்சாரல் வழி – அழகிய மலைப்பக்கத்து வழியாக,
வரில் – (நீ) வந்தால்,
இ பாவையும் வாடும் – (நினதுவரவை மகிழ்ச்சியோடு எதிர்ப்பார்ப்பவளான) இப் பெண்ணும் வருந்துவள்; (எ – று.)
இயற்கைப்புணர்ச்சிபெற்ற தலைமகன் பின்பு தலைமகளினது தோழியி னுதவியைக்கொண்டு தலைமகளைப்
பகலிலும் இரவிலும் களவுநெறியில் ஏகாந்தத்திலே சந்தித்தல் இயல்பு; அது, பகற்குறி இரவுக்குறி எனப்படும்.
தலைமகனது வேண்டுகோளின்படி ஒருநாள் இரவிற் குறிப்பிட்டதொரு சோலையினிடத்தே
அத்தலைமகனையுந் தலைமகளையுஞ் சந்திக்கச்செய்த தோழி, பின்பும் அக்களவொழுக்கத்தையே வேண்டிய தலைமகனுக்கு,
அவன் வரும்நெறியின் அருமையையும், அது கருதித் தாங்கள் அஞ்சுதலையுங்குறித்து
“நீ எந்த இடத்திலும் எந்தப்பொழுதிலும் அஞ்சாது வரக்கூடிய தேகபலம் மநோபலம் தந்திரம் வஞ்சனை படைக்கலத்
தேர்ச்சி இவற்றையுடையாயாயினும், நின்வரவு எங்கட்குத் துன்பமாகத் தோன்றுதலால்,
இனி இவ்விருளிடை நீ இங்ஙனம் வரற்பாலையல்லை’ என்று கூறி விலக்குதல், இச்செய்யுளிற் குறித்த அகப்பொருள் துறையாம்;
இது, ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவியின்பாற்படும்; (ஆறு – வழி, கிளவி – பேச்சு:)
தலைவன் வரும் வழி மிகவும் இன்னாது, நீருடையது, கல்லுடையது, முள்ளுடையது, ஏற்றிழிவுடையது,
கள்ளர் புலி கரடி யானை பாம்பு முதலிய கொடிய பிராணிகளை யுடையது என்று கவலுங் கவற்சியாற் சொல்லுவ தென்க.
இதில், மெய்ப்பாடு – அச்சம். இதன் பயன் – வெளிப்படையாகவந்து மணஞ்செய்துகொள்ளுதலை வற்புறுத்துதல்.
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்ற ஐவகைநிலங்களுள் மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியா மென்பதும்,
“புணர்தல் நறுங்குறிஞ்சி” என்றபடி புணர்ச்சி குறிஞ்சித்திணைக்குஉரிய பொரு ளென்பதும்,
“குறிஞ்சி, கூதிர் யாம மென்மனார் புலவர்” என்ற படி பெரும்பொழுதினுட் சரத்காலமும் சிறுபொழுதினுள்
நள்ளிரவும் குறிஞ்சிக்கு உரிய கால மென்பதும் அறியத்தக்கன.
“துறைமதியாம லிக்கான்யாறுநீந்திச் சுரங்கடத்தல்,
நிறைமதியாளர்க் கொழுக்கமன்றால் நெடு மாலரங்கத்,
திறைமதியாவருமாராவமிர்தன்ன விந்தநுதற்,
குறைமதியாள் பொருட்டாற் கங்குல்வார லெங்கொற்றவனே” என்ற திருவரங்கக்கலம் பகச்செய்யுளையுங் காண்க.
சாரல் – மலையைச் சார்ந்தது; மலைப்பக்கம்: தொழிலாகு பெயர் ‘இப்பாவை’ என்றது, தலைமகளை;
உம்மையால், தோழி தான்வாடுதலையும் உணர்த்தினாளாம்.
அஞ்சாமை, வலிமை, தந்திரம், மாயை, ஐம்படை இவற்றையுடைமையால் எவ்வகைச்செயலையுஞ் செய்ய
வல்லவனான சர்வேசுவரன், இருள்போலப் பொருள்களை உள்ளபடி எளிதிற் காணவொண்ணாது மறைப்பதான
மாயையின் பிரசாரத்தையுடைய இந்த இருள்தருமாஞாலத்திலே ஐயங்கார் வாழும்பொழுது
அவரது நெஞ்சென்னும் உட்கண்ணுக்கு ஒரோசமயத்து இலக்காகி மறைய, நிரந்தராநுபவத்திலே பிரியமுடையரான ஐயங்கார்,
அவ்வளவிலே திருப்திப்படாததோடு, பொங்கும்பரிவுடைய பெரியாழ்வார்போல, எம்பெருமானுடைய ஸர்வசக்தித்வம் முதலிய
திவ்வியகுணங்களைக் கருதுதற்குமுன்னே எதிர்ப்பட்ட சௌந்தர்ய சௌகுமார்யங்களில் ஈடுபட்டு,
‘காலாதீதமான வைகுண்டத்திலேயிருக்கின்ற இவ்வரும்பொருள் காலம் நடையாடப்பெற்ற இவ்வுலகத்தில்வந்து
புலனாதலால் இதற்கு என்ன தீங்குவருமோ?’ என்று அதிகமானபயசங்கை கொண்டவராக,
அந்த அதிசங்கையை ஐயங்காரது அன்பர்கள் எம்பெருமான் பக்கல்விண்ணப்பஞ்செய்து, இனி இவர்க்கு
இவ்வகைக்கலக்கமுண்டாகாதபடி இவரைக் காலாதீதமான வைகுண்டத்திற் சேர்த்துக்கொள்ளவேண்டு மென்று
விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள். விவரம் கேட்டுணர்க.
இரணியன் இராவணன் முதலியோர் எவ்வளவோ சாமர்த்தியமாக வேண்டிப்பெற்ற வரங்களெல்லாம் ஒவ்வொருவகையால்
ஒதுங்கும்படி சூழ்ச்சி செய்து அவர்களையழித்தமையும். துரியோதனன் முதலியோர் செய்த அளவிறந்தசூழ்ச்சிகட் கெல்லாம்
மேம்பட்ட சூழ்ச்சிசெய்து அவர்களைத்தொலைத்தமையும் பற்றி, ‘வலியார்க்கு முபாயம் வல்லாய்’ என்றார்.
————–
பாவை இரங்கும் அசோதைக்கு முத்து பதுமச் செல்விக்கு
ஏவை இரண்டு அன்ன கண்மணி நீலம் இடு சரணப்
பூவை இரந்தவர்க்கு இன்ப வளம் புல் அசுரர்க்கு என்றும்
மா வையிரம் திரு வேங்கடத்து ஓங்கும் மரகதமே –92–
(இ – ள்.) திருவேங்கடத்து ஓங்கும் மரகதம் – திருவேங்கடமலையின் மீது உயர்ந்துதோன்றுகின்ற மரகதரத்தினம்போல
விளங்குந் திருமேனி நிறத்தையும் ஒளியையுமுடைய பரம்பொருளானது, –
பாவை இரங்கும் அசோதைக்கு – சித்திரப்பிரதிமைகளும் (இவ்வகையழகு எமக்கு இல்லையே யென்று) இரங்கும்படியான (கட்டழகுடைய) யசோதைக்கு,
முத்து – (அருமையால்) முத்துப்போலும்;
பதுமம் செல்விக்கு – தாமரைமலரில் வீற்றிருக்கின்ற செல்வத்தலைவியான திருமகளுக்கு,
இரண்டு ஏவை அன்ன கண்மணி நீலம் – (அருமையால்) இரண்டு அம்புகளைப்போன்ற கண்களிலுள்ள கருவிழிபோலும்;
இரு சரணம் பூவை இரந்தவர்க்கு – உபயதிருவடித்தா மரைமலர்களைப் பிரார்த்தித்தவர்கட்கு,
இன்ப வளம் – பேரின்பப் பெருக்காம்;
புல் அசுரர்க்கு – இழிகுணமுடைய அசுரர்கட்கு,
என்றும் – எப்பொழுதும்,
மா வையிரம் – பெரும்பகையாம்; (எ – று.)
திருவேங்கடத்துஓங்கும் மரகதரத்தினமொன்றே யசோதைத்தாய்க்கு முத்தாகவும், பெரியபிராட்டிக்கு நீலமணியாகவும்,
அடியார்க்குப் பவளமாகவும், அசுரர்க்கு வைரமாகவும் ஆகின்றது எனச் சொற்போக்கில்
ஒருவகை வியப்புத் தோன்றக் கூறியது, பலபடப்புனைவணி. இதில் பஞ்சரத்தினங்களின்பெயர் அமைந்திருப்பது காண்க.
யசோதை – கண்ணனை வளர்த்த தாய்; நந்தகோபன் மனைவி.
அருமைக்குழந்தையாகிய கண்ணன் அவளால் “முத்து” என்று பாராட்டப்படுதல்பற்றி, “யசோதைக்கு முத்து” என்றார்.
அம்பைக்குறிக்கும் ஓரெழுத்தொருமொழியாகிய “ஏ” என்ற பெயர்ச்சொல், “ஐ” என்று இரண்டனுருபை யேற்கும்போது
“ஏமுனிவ்விருமையும்” என்றபடி வகரவுடம்படுமெய்பெற்று ‘ஏவை’ எனநின்றது.
மணிநீலம் = நீலமணி: கருமணி, கருவிழி. இதுவும், அருமைபாராட்டப்படுதற்கு உவமம்.
‘இன்ப வளம்’ எனவே, பேரின்ப மென்றாம்; வளம் – சிறப்பு. அஸுரர் என்ற வடசொல் – தேவர்கட்கு எதிரானவரென்றும் (சுரர் – தேவர்),
பாற்கடலினின்று உண்டான சுரையைப் பானஞ்செய்யாதவரென்றும் (சுரை – மது),
பகைவருயிரைக் கவர்பவரென்றும் (அஸு – உயிர்) காரணப்பொருள்படும்.
மா வைரம் – தவறாது அழிப்பவ னென்றபடி. வைரம்என்பது வையிரம் எனப்போலிவிகாரம்பெற்றது, திரிபுநயத்தின்பொருட்டு.
மரகதம் – பச்சையிரத்தினம்; நிறமும் ஒளியும்பற்றி, ‘மரகதம்’ என்றார்: மரகதம்போன்ற எம்பெருமானை மரகத மென்றது, உவமையாகுபெயர்.
————–
மரகதத்தைக் கடைந்து ஒப்பித்தது ஒத்தன வாழ்த்தினர் தம்
நரகதத்தைத் தள்ளி வைகுந்தம் நல்கின நப்பின்னை ஆம்
விரகதத்தைக்கு விடை ஏழ் தழுவின வேங்கடவன்
குரகதத்தைப் பிளந்தான் தோள்கள் ஆகிய குன்றங்களே –93-
(இ – ள்.) குரகதத்தை பிளந்தான் – குதிரைவடிவாய்வந்த (கேசியென்னும்) அசுரனை வாய்பிளந்தழித்தவனான,
வேங்கடவன் – திருவேங்கடமுடையானுடைய,
தோள்கள் ஆகிய – புயங்களாகிய,
குன்றங்கள் – மலைகள் (மலைகள் போன்ற தோள்களானவை), –
மரகதத்தை கடைந்து ஒப்பித்தது ஒத்தன – மரகதமென்னும் பச்சையிரத்தினத்தைக் கடைந்து ஒப்பனைசெய்தாற் போன்றன;
வாழ்த்தினர்தம் – (தம்மை) வாழ்த்திய மெய்யடியார்களுடைய,
நரக தத்தை – நரகத்துன்பங்களை,
தள்ளி – ஒழித்து,
வைகுந்தம் நல்கின – (அவர்கட்குப்) பரமபதத்தைக் கொடுத்தன;
நப்பின்னை ஆம் – நப்பின்னைப்பிராட்டியாகிய,
விரக தத்தைக்கு – ஆசைநோயால் தவிக்கப்பட்டவளான பெண்ணை மணஞ்செய்தற்பொருட்டு,
விடை ஏழ் தழுவின – ஏழுஎருதுகளைத் தழுவி வலியடக்கின; (எ – று.)
இது, புயவகுப்பு.
நிறமும், ஒளியும், திரண்டுருண்டு நெய்ப்புடைமையும்பற்றி, ‘மரகதத் தைக்கடைந் தொப்பித்த தொத்தன’ என்றார்.
பின்னையென்பது – அவள் பெயர்; ந – சிறப்புப்பொருளுணர்த்துவதோர் இடைச்சொல் (உபசர்க்கம்):
நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற்போல; நம்பின்னையென்பதன் விகாரமுமாம்.
நற்பின்னை யென்பாரு முளர்.
விரஹதப்தா, வ்ருஷம் என்ற வடசொற்கள் – விரகதத்தை, விடை என்று விகாரப்பட்டன. விரகம் – காதல் நோயையுடைய,
தத்தைக்கு – கிளிபோன்ற (இன்மொழிபேசுகின்ற) பெண்ணுக்கு என்று உரைப்பாரு முளர்.
கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத் திருமணஞ்செய்து கொள்ளுதற்காக, அவள்தந்தை கந்யாசுல்கமாகக்குறித்தபடி
யாவர்க்கும் அடங்காத அசுராவேசம் பெற்ற ஏழெருதுகளையும் ஏழு திருவுருக்கொண்டுசென்று வலியடக்கித் தழுவினதற்கு
முன்னமே கண்ணபிரான்பக்கல் காதல்கொண்டிருந்தமை தோன்ற, ‘நப்பின்னையாம் விரக தத்தைக்கு விடையேழ்தழுவின’ என்றார்.
குர கதம் என்ற வடசொல், (ஒற்றைக்) குளம்புகளாற் செல்வதென்று பொருள்படும்.
பருத்தவடிவமும் வலிமையும் படைக்கலங்களால் அழித்தற்கருமையும்பற்றி, தோள்கள் குன்றங்க ளெனப்பட்டன.
குன்றங்கள் என்ற உபமானப்பொருள், ஒத்தலும் வைகுந்தநல்குதலும் விடையேழ் தழுவுதலுமாகிய செய்கையிற்
பயன்படும்பொருட்டு உபமேயமாகிய தோள்களினுருவத்தைக் கொள்ளத் திரிதலால், ‘தோள்களாகிய குன்றங்கள்’ என்றது. திரிபணி;
உருவக மன்று. குன்றங்கள் என்ற ஈற்றில் நின்ற சொல், முன்னுள்ள ஒத்தன நல்கின தழுவின என்ற முற்றுக்களோடு முடிந்தது, கடைநிலைத்தீவகம்.
————-
குன்றுகள் அத்தனையும் கடல் தூராக் குவித்து இலங்கை
சென்று களத்து அனைவோரையும் மாய்த்து திருச் சரத்தால்
அன்று களத்தனை அட்டானை அப்பனை ஆய் மகள் தோள்
துன்று களத்தனை ஏத்த வல்லார்க்கு இல்லை துன்பங்களே –94-
(இ – ள்.) குன்றுகள் அத்தனையும் – மலைகளையெல்லாம்
கடல் தூர குவித்து – கடல்தூர்ந்திடும்படி (வாநரங்களைக்கொண்டுகொணர்ந்து) ஒருங்கு சேர்த்து (அணைகட்டி),
இலங்கை சென்று – (அதன்வழியாகப்) போய் இலங்காபுரியைச் சார்ந்து,
களத்து அனைவோரையும் மாய்த்து – போர்க்களத்தில் அரக்கர்களெல்லாரையுங் கொன்று,
திரு சரத்தால் – சிறந்த அம்பினால் (பிரமாஸ்திரத்தால்),
அன்று – அந்நாளில்,
களத்தனை (கள்ளத்தனை) – வஞ்சகனான இராவணனை,
அட்டானை – கொன்றவனும்,
ஆய் மகள் தோள்துன்று களத்தனை – இடைச்சாதிமகளான நப்பின்னையினது கைகளால் தழுவப்பட்ட கழுத்தையுடையவனுமான,
அப்பனை – திருவேங்கடமுடையானை,
ஏத்த வல்லார்க்கு – துதிக்கவல்லவர்கட்கு,
துன்பங்கள் இல்லை – எவ்வகைத்துன்பமும் உளவாகா; (எ – று.)
அனைவர் அனைவோர் எனச் சிறுபான்மை ஈற்றயல்அகரம் ஓகாரமாயிற்று. இராவணன் சீதையை வஞ்சனையாற்
கவர்ந்துசென்றதனால், ‘கள்ளத்தன்’ எனப்பட்டான். களத்தன் – தொகுத்தல்விகாரம். ஆய் – சாதிப்பெயர்.
தோள் – இங்கே, கை; சீவகசிந்தாமணியில், “தோளுற்றொர் தெய்வந்துணையாய்” என்றவிடத்திற் போல.
நான்காமடியில், களம் – வடசொல்.
————-
துன்பம் களையும் சனனம் களையும் தொலைவு அறு பேர்
இன்பம் களையும் கதி களையும் தரும் எங்கள் அப்பன்
தன்பங்கு அளையும் படி மூவரை வைத்து தாரணியும்
பின்பு அங்கு அளையும் இழுதும் உண்டானுடைப் பேர் பலவே –95–
(இ – ள்.) மூவரை – (பிரமன் சிவன் இலக்குமி என்ற) மூன்றுபேரை,
தன் பங்கு அளையும்படி – தனது திருமேனியின் பாகங்களிலே பொருந்தும்படி, வைத்து-,
தாரணியும் – (கற்பாந்தகாலத்திலே) பூமியையும்,
பின்பு – பிறகு (கிருஷ்ணாவதாரத்திலே),
அங்கு – அவ்விடத்தில் (திருவாய்ப்பாடியில்),
அளையும் இழுதும் – தயிரையும் நெய்யையும்,
உண்டான் – அமுதுசெய்தவனான,
எங்கள் அப்பனுடை – எமது திருவேங்கட முடையானுடைய,
பேர் பல – பல திருநாமங்கள், –
துன்பம் களையும் – (தம்மைச் சொன்னவர்களுடைய) கிலேசங்களையொழிக்கும்;
சனனம் களையும் – பிறப்பை வேரோடு அழிக்கும்;
தொலைவு அறு பேர் இன்பங்களையும் கதிகளையும் தரும் – முடிவில்லாத பேரின்பங்களையும் சிறந்தபதவிகளையும் தரும்; (எ – று.)
இது, திருநாம மகிமை.
“குலந்தருஞ் செல்வந்தந்திடு அடியார்படுதுய ராயினவெல்லாம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெரு நிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணாவென்னுநாமம்” என்ற பெரியதிருமொழியையுங் காண்க.
ஸ்ரீமந்நாராயணன் தனதுதிருமேனியில் திருநாபியிலே பிரமனையும், வலப்பக்கத்திலே சிவனையும்,
திருமார்பிலே திருமகளையும் வைத்திருத்தலை, ‘தன்பங்களையும்படி மூவரை வைத்து’ எனக்குறித்தார்;
“பிறைதங்குசடையானை வலத்தேவைத்துப் பிரமனைத்தன் னுந்தியிலே தோற்றுவித்துக்,
கறைதங்குவேற்றடங்கண்திருவை மார்பிற் கலந்தவன்”,
“ஏறனைப் பூவனைப் பூமகள்தன்னை, வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து”,
“திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ், ஒருவிடமும் எந்தைபெருமாற்கு அரன்”,
“ஏறாளு மிறையோனுந் திசைமுகனுந் திருமகளுங், கூறாளுந் தனியுடம்பன்”,
“சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாசகம்”,
“மலர்மகள் நின் ஆகத்தாள் – செய்ய, மறையான் நின்உந்தியான் மாமதிள்மூன்றெய்த, இறையான் நின்ஆகத்திறை” என்ற
ஆழ்வார்களருளிச்செயல் பல காண்க.
மூவர் – தொகைக்குறிப்பு. தொலைவறு பேரின்பம் – “அந்தமில் பேரின்பம்.” ‘உண்டானடிப்பேர்பல’ என்ற பாடத்துக்கு,
எம்பெருமானுடைய திருவடிகளின் திருநாமங்கள் பல வென்க; அடி – தொன்றுதொட்டுவருகிற எனினுமாம்.
—————
தலைவனைப் பிரிந்த தலைவி கடலை நோக்கி இரங்கிக் கூறல் –
பல குவளைக்குள் சில கஞ்சம் போலும் படிவ அப்பன்
நலகு அளைக்கு முன் உண்டான் நின் மாட்டும் நணுகிலனோ
உலகு வளைக்கும் கடலே நின் கண் முத்து உகுத்து இரங்கி
இலகு வளைக் குலம் சிந்தி துஞ்சாய் இன்று இரா முற்றுமே –96-
(இ – ள்.) உலகு வளைக்கும் கடலே – உலகத்தைச்சூழ்ந்திருக்கிற கடலே! –
நின் கண் முத்து உகுத்து – உனதுகண்களினின்று முத்துப்போன்ற நீர்த்துளிகளைச்சொரிந்து (உன்னிடத்தினின்று முத்துக்களைச் சிந்தி).
இரங்கி – புலம்பி (ஒலித்து),
இலகு வளை குலம் சிந்தி – விளங்குகின்ற கைவளைகளின் வரிசையைக் கீழேசிந்தி (விளங்குகிற சங்குகளின் கூட்டத்தை வெளியேசிதறி),
இன்று இரா முற்றும் – இன்றை யிராப்பொழுது முழுவதும்,
துஞ்சாய் – தூங்குகின்றாயில்லை (அமைதிகொண்டிருக்கின்றாயில்லை); (ஆதலால்),
பல குவளைக்குள் சில கஞ்சம் போலும் படிவம் அப்பன் – பலநீலோற்பலமலர்களின் இடையிடையே சிலசெந்தாமரைமலர்கள்
(பூத்தன) போன்ற திருமேனியையுடைய ஸ்வாமியான,
அளைக்கு முன் நல கு உண்டான் -(கிருஷ்ணாவதாரத்தில்) வெண்ணெயையுண்பதற்குமுன்னே (கற்பாந்தகாலத்திலே)
நல்லபூமியை விழுங்கியவனுமான தலைவன்,
நின்மாட்டும் நணுகிலனோ – (என்னிடத்திற்போலவே) உன்னிடத்திலும் வந்துசேர்ந்திலனோ?
இதற்குத் துறைவிவரம், கீழ் 19 – ஆஞ்செய்யுட்குக் கூறியதுகொண்டு உணர்க. அது, தோழிகூற்று; இது, தலைவிகூற்று.
இது, கடலைநோக்கித் தன்னோடொப்பத் துன்பமுறுவதாகக்கருதிக் கூறியது.
இங்ஙனம் தலைவி சொல்லுதலின் பயன் – தலைமகன் கேட்பின், விரைவில் வெளிப்படையாக மணம்புரிந்து கொள்வன்;
தோழி கேட்பின், தலைவனுக்குச் சொல்லி விரைவில் மணம்புரிந்துகொள்ளச்செய்வள்; யாரும் கேளாராயின், தலைவிதானே சொல்லி ஆறினளாம்.
‘நின்மாட்டும்நணுகிலனோ’ என்பதற்கு – (இத்தலைவியிடத்திற் போலவே) உன்னிடத்திலும் வந்து சேர்ந்திலனோ? என்று பொருள்
கொண்டு, இதனையும் தோழிகூற்றென்றலுமாம். இதுவும், செம்மொழிச்சிலேடையுவமையணி கொண்டது.
‘நின்கண் முத்துகுத்து’ என்றது முதலிய தொடர்கள் இருபொருள்பட்டமை காண்க.
தலைவி வளையல்களைச் சிந்துதல், பிரிவாற்றாமைத்துயரால் உடல் மிகமெலிந்தது பற்றி.
பல குவளைமலர்கள் – எம்பெருமானது நீலநிறமுள்ள திருமேனிக்கும்,
அவற்றிடையே சிலசெந்தாமரைமலர்கள் – வாய் கண் கை உந்தி பதம் ஆகிய திருவவயவங்கட்கும் உவமை.
குவலயம் என்ற வடசொல், குவளை என விகாரப்பட்டது. கஞ்ஜம் – வடசொல்: நீரில் தோன்றுவதென்று பொருள்படும்:
கம் – நீர். நல – நல்ல என்பதன் தொகுத்தல். கு – வடசொல். நின்மாட்டும், உம் – இறந்தது தழுவிய எச்சம்.
முத்து – நீர்த்துளியைக் குறிக்கும்போது, உவமையாகுபெயர்.
எம்பெருமானது பிரிவை யாற்றாமல் வருந்துகின்ற ஐயங்கார் தமக்கு உள்ள கலக்கத்தால் தம் கண்ணெதிர்ப்படுகிற
பொருள்களையெல்லாம் தம்மைப்போலவே எம்பெருமானது பிரிவினால் வருந்துகின்றனவாகக்கொண்டு,
கடலைநோக்கி ‘நீயும் நான்பட்டது படுகின்றனையோ?’ என்று வினவுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
தம்மைப்போலவே பிறரையும் பாவித்தல், பெரியோரியல்பு. இவர்க்கு, வளைக்குலம் சிந்துதல் – அடிமைக்கு அறிகுறியான
ஆத்மகுணங்கள் குலையப்பெறுதல்; பாரதந்திரியம்நீங்கி ஸ்வாதந்திரியம் மிகுதல். மற்றவை, முன்கூறியவாற்றால் விளங்கும்.
“காமுற்ற கையறவோ டெல்லே யிராப்பகல்,
நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்,
தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,
யாமுற்றதுற்றாயோ வாழிகனைகடலே” என்ற திருவாய்மொழிப்பாசுரத்தைப் பின்பற்றியது, இது.
“வாயினிரங்கினை யாரமெறிந்தனை வால்வளை சிந்தினை தண்,
பாயலையுந்தினை மாலை யடைந்தனை பாரிலுறங்கிலையால்,
கோயிலரங்கனை மாகனகந்திகழ் கோகனகம்பொலியும்,
ஆயிழைநண்பனை நீயும்விரும்பினையாகு நெடுங்கடலே” என்றார் திருவரங்கக்கலம்பகத்தும்.
இவை, பிரிவுக்காலத்திற் கடலைநோக்கிப் பெண்பால் இரங்கியன.
(இங்ஙனமே ஆண்பால் இரங்குதலை,
“போவாய் வருவாய் புரண்டுவிழுந் திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் –
தீவாய், அரவகற்றுமென்போல வார்கலியே மாதை,
யிரவகற்றி வந்தாய்கொ லின்று” என நளவெண்பாவிற் காண்க.)
———–
நீட்டித்து வந்த தலைவனொடு தலைவி ஊடிப் பேசுதல் –
முற்றிலை பந்தை கழங்கை கொண்டு ஓடினை முன்னும் பின்னும்
அற்றிலை தீமை அவை பொறுத்தோம் தொல்லை ஆலின் இளங்
கற்றிலை மேல் துயில் வேங்கடவா இன்று உன் கால் மலரால்
சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெரு வீட்டினைச் செய்தருளே –97-
(இ – ள்.) தொல்லை – முற்காலத்தில் (பிரளயகாலத்தில்),
ஆலின் இளங்கன்று இலைமேல் – இளமையான ஆலங்கன்றினது இளந்தளிரின்மேல்,
துயில் – பள்ளிகொண்டு யோகநித்திரை செய்த,
வேங்கடவா – திருவேங்கடமுடையானே! –
முன்னும் – முன்னமும், (நீ எம்முடைய),
முற்றிலை – சிறுமுறத்தையும்,
பந்தை – பந்தையும்,
கழங்கை – (ஆடுதற்குஉரிய) கழற்காய்களையும்,
கொண்டு ஓடினை – எடுத்துக்கொண்டு ஓடினாய்;
பின்னும் தீமை அற்றிலை – பின்பும் (எம்பக்கல்) தீங்குசெய்தலை ஒழிந்தாயில்லை;
அவை பொறுத்தோம் – அப்பொல்லாங்குகளையெல்லாம் யாம் பொறுத்திட்டோம்;
இன்று – இப்பொழுது,
உன் கால் மலரால் – உனது திருவடித்தாமரையினால்,
சிற்றிலை தீர்த்ததற்கு – (யாம் மணல்கொண்டு விளையாட்டாக அமைத்த) சிறுவீட்டைச் சிதைத்ததற்கு ஈடாக,
பெரு வீட்டினை செய்தருள் – பெரியதொரு வீட்டை (எமக்கு)க் கட்டிக்கொடுப்பாய்; (எ – று.)
இன்றியமையாததொரு காரியத்தினிமித்தம் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் மீண்டுவருவதாகக் குறித்த பருவத்தில்
வாரானாய்க் காரிய வசத்தாற் சிறிதுநீட்டிக்க, அதற்குள்ளே தலைவி ‘தலைவன்வாராதது, என்னை உபேக்ஷித்து
என்னினும் அழகுசிறந்த வேறுபலமகளிர்பக்கல் உறவுகொண்டதனாலாம்’ என்று எண்ணிப் பிணங்கி
‘இனி அவன் வந்தாலும் நாம் முகங் கொடுப்பதில்லை’ என்று நிச்சயித்துத் தனது தோழியரையும்
தான்வளர்த்த கிளி பூவை முதலிய பேசும்பறவைகளையும் தன்வழிபடுத்திவைத்துக்கொண்டு ஓரிடத்திலே அவர்களோடு
விளையாடுகிற வியாஜத்தாற் பராமுகமாயிருக்க, பின்பு மிக்க அன்போடு வெகுவிரைவாக மீண்டுவந்த தலைவன்,
பிரணயகோபத்தால் அணுகவொண்ணாதபடி யிருக்கின்ற இவளிருப்பைக் கண்டு வருந்திச் சிந்தித்து அருகிற்சென்று
தோழியர்மூலமாக இவளுடைய ஊடலைத் தீர்க்கக் கருதி நோக்கியவிடத்து,
அவர்களும் தலைவியின்கோட் பாட்டின்படி தங்களில் ஒருமித்து அவனை அநாதரித்து முகம்மாறி மிக்க கோபங்காட்ட,
அவ்வாயிலைப் பெறானாய்க் கிளி பூவை முதலியவற்றைக் கொண்டு ஊடல் தணிக்கப்பார்த்து அவையும் தலைவியின்
சங்கேதப்படி தன்னை உபேக்ஷித்ததனால் அவ்வாயிலையும்பெறாது மிகவருத்தமுற்று, அசேதநமாகையால்
தன்னை உபேக்ஷித்துப்போகமாட்டாமல் அங்குக்கிடந்த இவளுடைய விளையாட்டுக்கருவிகளான
முற்றிலையும் பந்தையும் கழங்கையும் எடுத்து அவற்றைத் தன்உடம்பின்மேற்படவைத்துத் தழுவியும் அன்போடு நோக்கியும்
கண்களில் ஒற்றியும் தலைமேல் வைத்துக்கொண்டு தான் ஒருவாறு ஆறித் தனதுகாதலையும் தலைவிக்குப் புலப்படுத்த,
அச்செயல்களை யெல்லாம் அவள் வேறுசில மகளிரைப் பிரிந்த ஆற்றாமையால் இவன்செய் கின்றன வெனக்கொண்டு
சீற்றங்காட்டி உறவறப்பேச, முதலில் தலைவி நோக்கையும்பெறாதிருந்த அத்தலைவன்,
முகம்பார்த்து அவ்வளவு வார்த்தை பேசப்பெற்றதையே தாரகமாகக்கொண்டு, அவ்வார்த்தைகட்கு ஏற்றவிடை கள்
சொல்லுகிறவியாஜத்தாற் பேச்சுவளர்த்திக்கொண்டே மேன்மேல்நெருங்கிக் கிளிபூவைகளோடுகொஞ்சிப்பேசுதல்,
அருகிற்கிடந்த அவளது விளையாட்டு மரப்பாவையை யெடுத்தல், அவள்கையிலுள்ள பாவையைத் தொட்டுப் பறித்தல்,
அங்குநில்லாமல் தோழியருடன் அப்பாற்செல்லப்புக்க அவளைக் கைகளால் வழிமறித்துத்தடுத்தல் முதலியன செய்து
அவளை ஊடல்தணிக்க முயன்றவிடத்தும்
அவள் சினந்தணியாள்போன்று தனது உள்ளக்காதலைப் புலனாகாதபடி மறைத்துக்கொண்டு அவனைப் புறக்கணித்துத்
தோழியரோடு மணலிற் சிற்றிலிழைத்து விளையாடாநிற்க, இவளது கடைக்கண் பார்வையை ஏதேனும்
ஒருவிதத்தாற்பெற்றுத் தான் உய்யலாமென்று பார்த்து அவன் இவளமைத்தசிற்றிலைத் தன்கால்களாற்சிதைக்க,
அப்பொழுது அவனுடைய முகத்தைப் பார்த்து அவனது கண்ணழகு முதலியவற்றால் நெஞ்சுருகி நிலைகலங்கியவளவிலும்
அவள் முந்தின புலவியின் தொடர்ச்சியாற் சிறிது ஊடல்காட்டிப் பேசியது, இது. திருவாய்மொழியில் ஊடற் பாசுரமான
“மின்னிடை மடவார்கள்” என்ற திருப்பதிகம் முழுவதும் இச்செய்யுட்கு மூலமாம்.
“பின்னும் அற்றிலை தீமை” என்றது – கிளிபூவைகளோடு கொஞ்சிப் பேசுதல், மரப்பாவையையெடுத்தல்,
கையிற்பாவைபறித்தல், வழிமறித்தல் முதலியவற்றைக் குறித்தது. “பொறுத்தோம்” என்றதை,
உயர்வுபற்றிவந்த தனித்தன்மைப்பன்மை யென்றாவது, தோழியரையுங் கூட்டிச்சொன்ன உளப்பாட்டுத் தன்மைப்பன்மை யென்றாவது கொள்க.
“ஆலினிலைமேல் துயில் வேங்கடவா” என்றது, பிரமன் முதலிய சகலதேவர்களு முட்பட யாவும் அழிந்துபோகின்ற
கல்பாந்தகாலத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களை யெல்லாம் தன்வயிற்றில்வைத்து அடக்கிக்கொண்டு
சிறுகுழந்தை வடிவமாய்ப் பிரளயப்பெருங்கடலிலே ஆதிசேஷனது அம்சமானதோர் ஆலிலையின்மீது பள்ளிகொண்டு
அறிதுயில்செய்தருள்கின்றன னென்ற வரலாறு பற்றி. இங்கு இதுகூறி விளித்தது,
நினது செயற்கரியனசெய்யுந்திறம் விசித்திர மென்றவாறாம். “பெருவீட்டினைச் செய்தருள்” என்றது,
இனி என்னைப் பிரியாது என்னுடன் என்றுங் கூடியிருந்து சிறந்த இல்வாழ்க்கையின்பத்தைத் தந்தருள்வாயென்று
வேண்டுகிற குறிப்பாதலால், இது, ஊடல்தணிகிறநிலைமையில் நிகழ்ந்த பேச்சென்க.
அற்றிலை – முன்னிலை யொருமை யெதிர்மறை யிறந்தகாலமுற்று; அறு – பகுதி. தொல்லை –
தொன்மை; ‘ஐ’ விகுதிபெற்ற பண்புப்பெயர்; இது, பண்பாகுபெயராய், பழையநாளைக் குறித்தது.
கன்று + இலை = கற்றிலை; மென்றொடர், வேற்றுமையில் வன்றொடராயிற்று. ‘நன்று’ என்றது,
இங்கு, மரத்தின் இளமைப்பெயர்; இளமரம். பிரளயப்பெருங்கடலிற் புதிதாகத்தோன்றியதோ ராலமரத்தின்
இளமையானஇலை யென்பார், “ஆலினிளங்கற்றிலை” என்றார். சிறுமை + இல் = சிற்றில்;
பண்புப்பெயர் ஈறுபோய்த் தன்னொற்றுஇரட்டிற்று: இல் – வீடு.
தியானநிலையிலே ஐயங்காரது அகக்கண்ணுக்குப்புலனாகிமறைந்த எம்பெருமான் மீளவும்வந்து தோன்றானாக,
இவர் தம்மினும்விலக்ஷணரான வேறு பல அடியார்கள்பக்கல் அன்பினால் தம்மை உபேக்ஷித்தனனென்று கொண்டு கலங்கி,
அக்கலக்கமிகுதியால் ‘இனி அவன்தானேவந்தாலும், மீளவும்பிரிந்து வருத்துவனாதலால்,
யாம் கண்ணெடுத்துப்பார்ப்பதில்லை’ என்று பிரணயரோஷங் கொண்டிருக்கிறநிலையில்,
அடியவரைக்கைவிடாத இயல்புடையனான அப்பெருமான் மீளவும்வந்து அவர்க்குவந்தேறியாயுள்ள பராமுகத்தன்மையைப் போக்கி
அவரை அபிமுகராக்கிக்கொள்ளப் பலவகையால் முயன்றபோது, அவர் தமதுமுந்தினமநஸ்தாபந் தோன்ற
அப்பெருமானைநோக்கிப் பேசும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.
“முற்றில்” என்றது, கொள்வன தவிர்வன ஆய்ந்துணரவல்ல விவேகத்தை. “பந்து” என்றது, சரீரத்தை;
ஸத்வகுணம் ரஜோகுணம் தமோகுணம் என்கிற மூன்று குணங்களோடு விசித்திரமான கர்மமாகிய கயிறு
கொண்டு கட்டி எம்பெருமான் அந்த ராத்மாவாயிருந்து செலுத்த விழுந்தும் எழுந்தும் சுழன்றும் உழன்றும் சமய
பேதத்தால் விரும்பவும் வெறுக்கவும் படுவதான உடம்பு, செந்நூல் வெண்ணூல் கருநூல்கொண்டு புனையப்பட்டு
உரியவர் விளையாட்டாகச்செலுத்த விழுந்துஎழுந்து சுழன்றுஉழன்று கூடியநிலையில் விரும்பவும் கூடாத நிலையில்
வெறுக்கவும் படுவதான பந்தென்னத் தகும். “கழங்கு” என்றது,
ஐம்பொறிகளை: ஐம்புலநுகர்தற்கருவியான பஞ்சேந்திரியங்கள், சிறுகி அஞ்சாயிருக்கிற விளையாட்டுக்கருவியான கழங்குக ளெனப்பட்டன.
இவற்றை முன்பு அவன் கொண்டு ஓடியதாவது – இவருடைய விவேகம் முதலியவற்றை முன்னமே அவன் இவர்வசமின்றித்
தன்வசப்படுத்திக் கொண்டமை. மற்றும் இவருடைய ஐம்புலன் முதலியவற்றையும் அவன் வலியத் தன்வசப்படுத்திக்
கொண்டதை “பின்னும்அற்றிலை தீமை” என்று குறித்தார்.
இடையிலே அவன் உபேக்ஷித்துவிட்டதாக இவர் கருதிக் கொண்ட வெறுப்பினால், அந்நன்மையையே “தீமை” என்றார்.
‘அவைபொறுத்தோம்’ என்றது, நீசெய்கின்ற செயல்கட்கெல்லாம் இலக்காம்படி யாம் பரதந்திரமாயிருந்தோ மென்றபடி;
பன்மை, தனித்தன்மைப்பன்மை யென்றாவது, அன்பர்களைக் கூட்டிச்சொன்ன தென்றாவது கொள்ளத்தக்கது.
‘தொல்லையாலி னிளங்கற்றிலைமேல்துயில் வேங்கடவா’ என்றது, லோகரக்ஷணத்தில் ஜாக்கி ரதையுள்ளவனே யென்றபடி.
‘இல்’ ஆவது, போகாநுபவத்திற்கு உரிய இடம். ‘சிற்றில்’ என்றது, சிற்றின்பநுகர்ச்சிக்கு உரிய பிரபஞ்சவாழ்க்கையை.
உனது திருவடிஸ்பரிசத்தால் எனது இவ்வுடல்வாழ்விலாசையை யொழித்த தற்கு ஈடாக மீண்டும் இவ்வகை
நிலையிலாவாழ்க்கையைத் தராமல் பெருவீடான பரமபதத்தைத்தந் தருள்க வென்பது,
இறுதிவாக்கியத்தின் கருத்து. இடையீடுள்ள நினது அநுபவமாயின் எமக்கு வேண்டா:
நிரந்தராநுபவம் தந்தருள்வதானால் தந்தருள் என்ற போக்கு அமைய “பெருவீட்டினைச்செய்தருள்” என்றதனால்,
இது மநஸ்தாபந்தீர்கிறநிலையில் நிகழ்ந்த பேச்சென்க. இங்குக் குறிப்பாகக்காட்டிய ஸ்வாபதேசார்த்தங்களின் விவரணம்,
ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயம்வல்லார்வாய்க் கேட்டு உணரத்தக்கது.
————-
அரும்பாதகன் பொய்யன் காமுகன் கள்வன் அருள் சிறிதும்
அரும்பாத கல் நெஞ்சன் ஆறாச் சினத்தான் அவாவில் நின்றும்
திரும்பாத கன்மத்தன் ஆனேற்கு சேடச் சிலம்பு அமர்ந்து அ
திரும் பாத கஞ்சம் தரில் அது காண் உன் திருவருளே –98–
(இ – ள்.) அரும் பாதகன் – (போக்குதற்கு) அரிய பாவங்களையுடையவனும்,
பொய்யன் – பொய்பேசுபவனும்,
காமுகன் – சிற்றின்பவிருப்பமுடையவனும்,
கள்வன் – களவுசெய்பவனும்,
அருள் சிறிதும் அரும்பாத கல் நெஞ்சன் – கருணையென்பதுசிறிதேனுந்தோன்றப்பெறாத கல்லைப்போன்ற கடின சித்தமுடையவனும்,
ஆறா சினத்தன் – தணியாக்கோபமுள்ளவனும்,
அவாவினின்றும் திரும்பாத கன்மத்தன் – ஆசையினின்று மீளாத கருமத்தை யுடையவனும்,
ஆனேற்கு – ஆகிய எனக்கு,
சேடன் சிலம்பு அமர்ந்து அதிரும் பாத கஞ்சம் தரில் – திருவேங்கடமலையி லெழுந்தருளிப் பாததண்டைகள்) ஒலிக்கப்பெற்ற
(நினது) திருவடித்தாமரைமலர்களைக் கொடுத்தால்,
அதுகாண் உன் திரு அருள் – அதுவன்றோ உனது மேலானகருணையாம்; (எ – று.) – காண் – தேற்றம்.
தீக்குணந் தீச்செயல்கட்கெல்லாங் கொள்கலமான என்னை உன் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்ளுதலே நினது
திருவருட்குச் சிறப்பு என்பதாம். “அரும்பாதகன்” என்றது முதலாகத் தமதுதாழ்வை எடுத்துரைத்தார்.
எம்பெருமானுக்கு இயல்பில் அடிமையாகவுள்ள தமதுஆத்மாவை அங்ஙனம் எண்ணாது ஸ்வதந்திரமென்று எண்ணுதல்
அவனுக்கு உரியபொரு ளைக் களவுசெய்த தாகுதலால், அங்ஙனம் அகங்காரமுடையே னென்பார், தம்மை “கள்வன்” என்றார்;
“பண்டேயுன்தொண்டாம் பழவுயிரை யென்ன தென்று, கொண்டேனைக் கள்வனென்று” என்னும்
நூற்றெட்டுத்திருப் பதியந்தாதியையும் காண்க.
“அவாவென்ப வெல்லாவுயிர்க்குமெஞ்ஞான்றுந், தவா அப்பிறப்பீனும்வித்து” என்றபடி அவா கர்மத்துக்கு மூலகாரணமாதலால்,
‘அவாவினின்றுந் திரும்பாத கன்மம்’ எனப்பட்டது.
சிலம்பு – மலை. அணியப்பட்ட ஆபரணத்தின் அதிர்ச்சியை அணியும்உறுப்பான திருவடியின் மே லேற்றிச் சொன்னது,
இடத்துநிகழ்பொருளின்தொழிலை இடத்தின் மேற் சார்த்திக்கூறிய உபசாரவழக்கு.
காமுகன் – காமமுடையவன். சேஷன் என்ற பெயர் – (பிரளயகாலத்திலும் அழியாது) சேஷித்திருப்பவனென்று காரணப்பொருள்படும்;
சேஷித்தல் – மிச்சப்படுதல். ஈற்றடியில், ‘திருப்பாதகஞ்சம்’ என்பது மெலித்தல் விகாரம் பெற்றுவந்த தெனக்கொண்டு,
சேஷகிரியில் நின்ற திருவடித்தாம ரைமலர்கள் என்று உரைகொள்ளுதலும் உண்டு.
————
திருமந்திரம் இல்லை சங்கு ஆழி இல்லை திரு மண் இல்லை
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் செம்பொன் தானவனை
மருமம் திரங்கப் பிளந்தான் வடமலை வாரம் செல்லீர்
கருமம் திரண்டதை எத்தால் களையக் கருதுதிரே –99–
(இ – ள்.) (பேதைச்சனங்களே! உங்கள்பக்கல்),
திரு மந்திரம் இல்லை – பெரியதிருமந்திரமெனப்படுகிற திருவஷ்டாக்ஷரமகாமந்திரம் இல்லை;
சங்கு ஆழி இல்லை – சங்கசக்கரமுத்திரை இல்லை;
திருமண் இல்லை – திரு மண்காப்பும் இல்லை;
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் – (எம்பெருமானைச்சரணமடைதலாகியசரணாகதி) தருமத்தை நிலையாகச்சிறிதும் செய்து பயின்றீரில்லை;
செம் பொன் தானவனை – சிவந்த பொன்னின்நிறமுள்ள இரணியாசுரனை,
மருமம் திரங்க – மார்பு வருந்த,
பிளந்தான் – (நரசிங்க மூர்த்தியாய்ப்) பிளந்திட்டவனான எம்பெருமானுடைய,
வட மலை வாரம் – திருவேங்கடமலையின் அடிவாரத்திலேனும்,
செல்லீர் – சென்றீரில்லை; (இத்தன்மையரானநீங்கள்),
கருமம் திரண்டதை எத்தால் களைய கருதுதிர் – (உங்கள்) ஊழ்வினை தொகுதிப்பட்டுள்ளதை எவ்வாற்றால் நீக்க நினைக்கிறீர்கள்?
இங்ஙனம் இரங்கிக் கூறியதனால், இனியேனும் நீங்கள் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமாய் உஜ்ஜீவநோபாயமாகிற
திருமந்த்ரோபதேசத்தையும், தப்தசங்க சக்ரமுத்திரை தரிக்கப்பெறுதலாகிய திருவிலச்சினையையும்,
கேசவாதி துவாதசநாமங்களை முறையேசொல்லிஉடம்பிற்பன்னிரண்டிடத்தில் திருமணிடுதலாகிய ஊர்த்வபுண்டரத்தையும்
நல்ல ஆசிரியரது அருளாற் பெற்று, பிரபத்திமார்க்கத்தி லிழிந்து, துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலந சீலனான
எம்பெருமானுடைய திவ்வியதேசத்தைச் சார்ந்து, ஊழ்வினையொழித்து வாழ்வீர்க ளென்று அவைஷ்ணவர்கட்குக் குறிப்பித்தபடியாம்.
சங்காழி, திருமண், திருமந்திரம் என்பது முறையாயினும், தலைமைபற்றித் திருமந்திரத்தை முதலில் வைத்து,
மந்திரோபதேசத்திற்கு அங்கமாகின்ற தாபத்தையும் புண்டரத்தையும் அதன்பின் நிறுத்தினார்.
பஞ்சஸம்ஸ்காரங்களில் தாபம் புண்டரம் மந்திரம் என்ற மூன்றைக் கூறினது, நாமம் யாகம் என்ற மற்றையிரண்டற்கும் உபலக்ஷணம்;
(நாமம் – அடிமைப்பெயரிடப்பெறுதல். யாகம் – திருவாராதநக்கிகரமம் அருளப்பெறுதல்.)
“எல்லாத்தருமங்களையும் பற்றறவிட்டு என்னையொருவனைச் சரணமாக அடை, நான் உன்னை எல்லாத்
தீவினைகளினின்றும் விடுவிப்பேன், வருந்தாதே” என்றது ஸ்ரீகீதையிற் கண்ணன் அருளிய முடிவுரையாதல்கொண்டு,
தருமம்என்பதற்கு – சரணாகதியென்று உரைக்கப்பட்டது.
செம்பொற்றானவன் – செம்பொன்னின் பெயரையுடைய அசுர னெனினுமாம்; பொன் என்ற தென்மொழியும்,
ஹிரண்யம்என்ற வடமொழியும் பரியாயநாமமாதல் காண்க. பிறப்பு அநாதி யாய்வருதலின் உயிரால் அளவின்றியீட்டப்பட்ட
வினைகளின் பயன்கள் மலைபோலப் பெருந்தொகுதியாகக் குவிந்துள்ளதனால், “கருமந் திரண்டது’ என்றார்.
எது என்ற வினாப்பெயர் “ஆல்” என்ற மூன்றனுருபை யேற்கும்போது இடையிலே தகரவொற்றுவிரிந்து, எத்தால் என நின்றது.
கருதுதிர் என்ற முன்னிலைமுற்று, நிகழ்காலத்தில் வந்தது.
————
கருமலையும் மருந்தும் கண்ணும் ஆவியும் காப்பும் அவன்
தரும் அலை உந்திய பேரின்ப வெள்ளமும் தாய் தந்தையும்
வருமலையும் திருப்பாலாழியும் திரு வைகுந்தமும்
திரு மலையும் உடையான் எனக்கு ஈந்த திருவடியே –100-
(இ – ள்.) வரு மலையும் – பொருந்திய திருக்கடல்மல்லை யென்கிற ஸ்தலத்தையும்,
திரு பால் ஆழியும் – திருப்பாற்கடலையும்,
திரு வைகுந்தமும் – பரமபதத்தையும்,
திருமலையும் – திருவேங்கடமலையையும்,
உடையான் – (தனக்குத் தங்குமிடமாக) உடையவனான எம்பெருமான்,
எனக்கு ஈந்த – அடியேனுக்கு அருளிய,
திரு அடி – சீர்பாதங்கள், – (அடியேனுக்கு), –
கரு மலையும் மருந்தும் – பிறவிநோயையொழிக்கிற மருந்தும், கண்ணும் -,
ஆவியும் – உயிரும்,
காப்பும் – பாதுகாவலும்,
அவன் தரும் அலை உந்திய பேர் இன்ப வெள்ளமும் – அவன் (பரமபதத்தில்) தந்தருளும் அலைகளை யெறிகிற பேராநந்தப்பெருக்கும்,
தாய் தந்தையும் – தாய்தந்தையருமாம்; (எ – று.)
கரு மலையும் மருந்து – “மருந்தாங் கருவல்லிக்கு” என்பர் நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியிலும்.
திருவடியை ‘மருந்து’ என்றதற்கு ஏற்ப, பிறவியை “நோய்” என்னாததனால், ஏகதேசவுருவகவணி.
இன்றியமையாதனவாய் அருமைபாராட்டப்படுதல்பற்றி ‘கண்’ என்றும், அங்ஙனம் தாரகமாதல் பற்றி ‘உயிர்’ என்றுங் கூறப்பட்டன.
காப்பு – ரக்ஷகம். வெள்ளமென்றதற்கு ஏற்ப ‘அலையுந்திய’ என்ற அடைமொழி கொடுத்தது,
பேரின்பத்தின்மிகுதியை யுணர்த்தும்; இது, சஞ்சலத்தையொழித்த என்றும் பொருள்படும்.
அன்புடன் ஆவனசெய்தலில், தாயும் தந்தையுமா மென்க. இச்செய்யுள் – பலபடப்புனைவணி.
மூன்றாமடியில், மல்லை யென்பது ‘மலை’ எனத் தொகுத்தல்விகாரப்பட்டது.
திருக்கடன்மல்லை – தொண்டைநாட்டுத்திருப்பதிகளி லொன்று. வரும் அலையும் என்று எடுத்து,
இரண்டுபெயரெச்சங்களையும் திருப்பாற்கடலுக்கு அடைமொழியாக்குதலு மொன்று. வரும் அலை – பிரளயப்பெருங்கடல் எனினுமாம்.
———-
தற்சிறப்புப் பாசுரம் –
மட்டளை தண்டலை சூழ் வடவேங்கட வாணனுக்குத்
தொட்டளை யுண்ட பிரானுக்கு அன்பாம் பட்டர் தூய பொற்றாள்
உள் தளை யுண்ட மணவாள தாசன் உகந்து உரைத்த
கட்டளை சேர் திரு அந்தாதி நூறு கலித் துறையே –
(இ – ள்.) பட்டர் – பட்டரென்ற ஆசாரியருடைய,
தூ பொன் தானுள் பரிசுத்தமான அழகிய திருவடிகளிலே, தளை யுண்ட – பக்தியினாலாயே சம்பந்தம்பெற்ற,
மணவாளதாசன் – அழகியமணவாளதாசன்,
உகந்து உரைத்த – விரும்பிப் பாடிய,
திரு அந்தாதி – சிறந்த அந்தாதிப்பிரபந்தவடிவமான,
நூறு கட்டளை சேர் கலித்துறை – நூறு கட்டளைக்கலித்துறைச் செய்யுள்களும், –
அளை தொட்டு உண்ட பிரானுக்கு – வெண்ணெயைக் கையினா லெடுத்து அமுதுசெய்த பிரபுவான,
மட்டு அளை தண்டலை சூழ் வடவேங்கட வாணனுக்கு – வாசனை நிறைந்த சோலைகள் சூழ்ந்த வடக்கின் கணுள்ள
திருவேங்கடமலையில் வாழ்கிற எம்பெருமானுக்கு,
அன்பு ஆம் . பிரியமாம்; (எ – று.)
பட்டர் தூயபொற்றாளுள்தளையுண்ட – பட்டரது அந்தரங்கசிஷ்யரான என்றபடி. பட்டர் – கூரத்தாழ்வானுடைய குமாரர்,
எம்பாருடைய சிஷ்யர்: பண்டிதர்க்கு வழங்குகிற பட்ட ரென்ற பெயர், இவர்க்குச் சிறப்பாக வழங்கும்;
இவர், ஸ்ரீபாஷ்யகாரரால் நாமகரணஞ்செய்தருளப்பெற்றவர்.
கட்டளைசேர்கலித்துறை – கலிப்பாவின் இனம் மூன்றனுள் ஒன்றான கலித்துறையினும் வேறுபட்டுவருவது;
அதன் இலக்கணம் – “முதற்சீர்நான்கும் வெண்டளைபிழையாக், கடையொருசீரும் விளங்காயாகி, நேர்பதினாறே நிரைபதினேழென்,
றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே” எனக் காண்க.
மட்டு – தேனுமாம். தாள் உள் தளையுண்ட – தாளினிடத்து மனப் பிணிப்புப் பொருந்திய எனினுமாம்.
இச்செய்யுள், நூலாசிரியர் தாமே தம்மைப் பிறன்போலும் பாயிரங் கூறியது.
(பிரயோகவிவேகநூலார் ‘இது, தன்னைப் பிறன்போலும் நாந்தி கூறுகின்றது,’ வடநூலார் தாமே பதி+மும் உரையுஞ் செய்வார்’,
‘இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும் பதினெண்கீழ்க்கணக்குச் செய்தாரும் முன்னாகப்
பின்னாகப் பதிகங்கூறுவதுங் காண்க’ என்றவை கருதத்தக்கன.) இது, தற்சிறப்புப்பாயிர மெனப்படும்.
திருவேங்கடத்தந்தாதி முற்றிற்று.
—————————————————————–————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply