ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –61-80-

பண்டை இருக்கும் அறியாப் பரம பதத்து அடியார்
அண்டை இருக்கும் படி வைக்கும் அப்பனை அண்டத்துக்கும்
தண் தையிருக்கும் மலர்ந்த செவ்வாயனை தாள் வணங்கா
மண்டை யிருக்கும் விடுமோ சனன மரணமுமே –61-

(இ – ள்.) பண்டை இருக்கும் அறியா – பழமையான வேதங்களும் முழுதும் அறியமாட்டாத,
பரம பதத்து – (தனது உலகமாகிய) ஸ்ரீவைகுண்ட த்தில்,
அடியார் அண்டை இருக்கும்படி – (நித்தியமுக்தர்களாகிய) அடியார்களின் அருகில் இருக்கும்படி,
வைக்கும் – (தன்னைச்சரணமடைந்தவர்களை) வைத்தருள்கின்ற,
அப்பனை – திருவேங்கடமுடையானும்,
அண்டத்துக்கும் தண் தயிருக்கும் மலர்ந்த செவ் வாயனை – (பிரளயகாலத்தில்) உலகங்களை விழுங்குதற்கும்
(கிருஷ்ணாவதாரத்திலே) குளிர்ச்சியான தயிரை யுண்ணுதற்கும் திறந்த சிவந்த திருவாய்மலரை யுடையவனுமான எம்பெருமானை,
தாள் வணங்கா – திருவடிதொழாத,
மண்டையிருக்கும் – தலையையுடைய வர்களாகிய உங்களுக்கும்,
சனனம் மரணமும் விடுமோ – பிறப்பும் இறப்பும் நீங்குமோ? (நீங்கா என்றபடி); (எ – று.)

வேதம் ஒருகாலத்தில் தோன்றியதன்றி நித்தியமாதலால், “பண்டையிருக்கு” எனப்பட்டது.
பண்டு – பழமைகுறிக்கும் இடைச்சொல். பண்டை – ஐயீற்றுடைக் குற்றுகரம். உம் – உயர்வுசிறப்பு.
தயிர் – தையிர் என இடைப்போலிபெற்றது, திரிபுநயத்தின்பொருட்டு. “மலர்ந்த” என்ற வினையின் ஆற்றலால், வாய், மல ரெனப்பட்டது.
மண்டையிர் – முன்னிலைப்பன்மைக் குறிப்பு வினையாலணையும் பெயர்; இர் – விகுதி;
அப்பெயரின்மேல், உ – சாரியை, கு – நான்கனுருபு; உம் – இழிவுசிறப்பு.
“கோளில்பொறியிற் குணமிலவே யெண்குணத்தான், தாளை வணங்காத் தலை” என்றபடி இறைவனது திருவடிகளை
வணங்காத தலை பயன்படாதாதலின், அதனது இழிவு தோன்ற, தலையோட்டைக்குறிக்கிற, ‘பண்டை’ என்ற சொல்லாற் குறித்தார்.
ஓ – எதிர்மறை. பரம பதம் – (எல்லாப்பதவிகளினும்) மேலான ஸ்தாநம்; வடமொழித்தொடர்.

———–

மரணம் கடக் குஞ்சரம் நீங்க வாழ்வித்து வல் அரக்கர்
முரண் அங்கு அடக்கும் சர வேங்கடவ கண் மூடி அந்தக்
கரணம் கடக்கும் சரமத்து நீ தருகைக்கு எனக்கு உன்
சரணம் கடக்கும் சரண் வேறு இல்லை தந்து தாங்கிக் கொள்ளே –62-

(இ – ள்.) கடம் குஞ்சரம் – மதத்தையுடைய யானை,
மரணம் நீங்க – (முதலையினால்) இறத்தலை யொழியும்படி,
வாழ்வித்து – (அக்கஜேந்திராழ்வானை) உயிர்வாழச்செய்து,
வல் அரக்கர் முரண் அங்கு அடக்கும் – வலிய இராக்கதர்களுடையபலத்தை அக்காலத்தில் (ஸ்ரீராமாவதாரத்தில்) அடக்கிவிட்ட,
சர – அம்புகளையுடையவனே!
வேங்கடவ – திருவேங்கடமுடையானே! –
கண் மூடி – கண்கள் இருண்டு,
அந்தக்கரணம் கடக்கும் – மனம் அழியும்படியான,
சரமத்து – (எனது) அந்திமதசையில்,
நீ எனக்கு தருகைக்கு – நீ எனக்கு அளித்தற்கு,
உன்சரணம் கடக்கும் சரண் வேறு இலை – உனது திருவடியன்றி வேறுரக்ஷகம் இல்லை;
தந்து தாங்கிக்கொள் – (அதனை) அளித்து (என்னை) ஏற்றுக்கொள்; (எ – று.)

அங்கு – அவ்விடத்தி லெனினுமாம். அந்த:கரணம் – வடசொல்; அகத்துஉறுப்பு. சரமம், சரணம் – வடசொற்கள்.
சரண் – சரணமென்ற வட சொல்லின் விகாரம். எனக்கு உன்சரணங்கடக்குஞ் சரண் வேறு இலை –
“உன் சரணல்லாற் சரணில்லை” என்றார் குலசேகராழ்வாரும்.

————-

தாங்கு அடல் ஆழி வளை தண்டு வாள் வில்லில் தானவரை
ஈங்கு அட வீசி குறித்து அடித்து துணித்து எய்து வெல்லும்
பூங்கடல் வண்ணன் நிலை கிடை வந்தது போக்கு இடுப்பு
வேங்கடம் வேலை அயோத்தி வெங்கானகம் விண்ணுலகே –63–

(இ – ள்.) தாங்கு – (தனதுதிருக்கைகளில்) ஏந்திய,
அடல் – வலிமை யையுடைய,
ஆழி – சக்கரமும்,
வளை – சங்கமும்,
தண்டு – கதையும்,
வாள் – வாளும்,
வில்லின் – வில்லும் ஆகிய பஞ்சாயுதத்தால், (முறையே),
தானவரை – அசுரர்களை,
ஈங்கு – இவ்வுலகத்தில்,
அட – அழிக்குமாறு,
வீசி – சுழற்றிவீசியும்,
குறித்து – ஊதிமுழக்கியும்,
அடித்து – அடித்தும்,
துணித்து – அறுத்தும்,
எய்து – அம்பெய்தும்,
வெல்லும் – சயிக்குந்தன்மையனான,
பூ கடல் வண்ணன் – அழகிய கடல்போன்ற திருநிறமுடைய திருமால்,
நிலை – நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கிற இடமும்,
கிடை – பள்ளிகொள்கிற இடமும்,
வந்தது – வந்துதிருவவதரித்த இடமும்,
போக்கு – நடந்துசென்ற இடமும்,
இருப்பு – வீற்றிருக்கின்ற இடமும், (முறையே),
வேங்கடம் – திருவேங்கடமலையும்,
வேலை – திருப்பாற்கடலும்,
அயோத்தி – அயோத்யாபுரியும்,
வெம் கானகம் – வெவ்விய காடும்,
விண் உலகு – பரமபதமுமாம்.

ஆழியின்வீசி, வளையிற்குறித்து, தண்டின் அடித்து, வாளின் துணித்து, வில்லின்எய்து என முதலடியோடு இரண்டாமடியும்;
நிலைவேங்கடம், கிடைவேலை, வந்தது அயோத்தி, போக்குக்கானகம். இருப்புவிண்ணுலகு என மூன்றாமடியோடு நான்காமடியும்
முறைநிரனிறைப்பொருள்கோளாதல் காண்க. இச்செய்யுளில், முன்னிரண்டடியும், பின்னிரண்டடியும் – தனித்தனி கிரமாலங்காரம்;
(மேல் 80 – ஆஞ் செய்யுளில் நான்கடிகளிலுந் தொடர்ந்து வருகிற கிரமாலங்காரத்தோடு இதற்குள்ள வேறுபாட்டை உணர்க.)
வந்தது – இராமனாய்த் திருவவதரித்தது. இராமவதாரத்திற் பதினான்கு வருடம் வனவாசஞ்சென்றதும்,
கிருஷ்ணாவதாரத்திற் கன்றுகாலிகளைமேய் த்தற்பொருட்டு வனத்திற்சென்றதும், “போக்கு வெங்கானகம்” என்றதற்கு விஷயம்.

தண்டு – தண்டமென்ற வடசொல்லின் விகாரம். பூங்கடல்வண்ணன் – தாமரைமலர் பூக்கப்பெற்றதொரு
வடிவமுடையானுமாம்; “அம்பரந்தாமரை பூத்தலர்ந்தன்ன வவயவர்” என்றாற் போல.
கிடை – கிடக்கும்இடம் – அயோத்யா என்ற வடசொல் – (பகைவராற்) போர்செய்து வெல்லமுடியாத தென்று காரணப்பொருள்படும்.

—————

உலகம் தர உந்தி பூத்திலையேல் சுடர் ஓர் இரண்டும்
இலகு அந்தரமும் புவியும் எங்கே அயன் ஈசன் எங்கே
பலகந்தரமும் உணவும் எங்கே பல் உயிர்கள் எங்கே
திலகம் தரணிக்கு என நின்ற வேங்கடச் சீதரனே –64-

(இ – ள்.) தரணிக்கு திலகம் என நின்ற – பூமிக்குத் திலகம்போல அழகுசெய்துநின்ற,
வேங்கடம் – திருவேங்கடமலையிலெழுந்தருளியிருக்கிற,
சீதரனே – திருமாலே! – (நீ),
உலகம் தர – உலகங்களைப் படைக்க,
உந்தி பூத்திலை ஏல் – திருநாபித்தாமரை மலர்ந்திராயாயின், –
சுடர் ஓர் இரண்டும் – (சூரியசந்திரராகிய) இருசுடர்களும்,
இலகு அந்தரமும் – அவைவிளங்கு மிடமான ஆகாயமும்,
புவியும் – பூமியும்,
எங்கே – எவ்விடத்தே தோன்றும்?
அயன் ஈசன் எங்கே – பிரமனும் சிவனும் எவ்விடத்தே தோன்றுவர்?
பல கந்தரமும் உணவும் எங்கே – பலமேகங்களும் (அவற்றாலாகிற) உணவுகளும் எவ்விடத்தே தோன்றும்?
பல் உயிர்கள் எங்கே – பலவகைப்பிராணி வர்க்கங்கள் எங்கே தோன்றும்? (எ – று.)
சராசரப்பொருள்கள்யாவும் உளவாகா என்பதாம்.

“உண்டிறக்கும்புவ னங்களை மீளவுமிழ்ந்திலையேற், பண்டிறக்கும்பதுமத்தோன்புரந்தரன்பைந் தழல்போற்,
கண்டிறக்குஞ்சங்கரன் முதலோர்களைக் கண்டவரார், திண்டி றக்குஞ்சரஞ்சேர் சோலைமாமலைச் சீதரனே” என்ற
அழகரந்தாதிச் செய்யுளோடு இச்செய்யுளை ஒப்பிடுக.
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத், துப்பாயதூஉ மழை” என்றபடி பிராணிகளின் பசி தாகங்களை
நீக்கும் உணவுக்கெல்லாம் மேகம் ஏதுவாதலால், அக்காரணகாரியமுறைப்படி ‘கந்தரமுமுணவும்’ என்றார்.
ஈற்றடி = “திலதமுலகுக்காய்நின்ற திருவேங்கடத் தெம்பெருமானே” என்ற திருவாய்மொழியடியை அடியொற்றியது;
“ஸ்த்ரீகளுக்குப் பூரணமான ஆபரணம்போலே யாய்த்து, பூமிக்குத் திருமலை’ என்று அங்கு வியாக்கியானமிட்டனர் நம்பிள்ளை.
திலகம் – நெற்றிப்பொ ட்டு; அது நெற்றிக்கு அழகுசெய்வதுபோல, பூமிக்கு அழகுசெய்வது திரு வேங்கட மென்க.

உலகம் – லோக மென்ற வடசொல்லின் விகாரம்; (இதனைத் தமிழ் மொழியேயா மென்பர், ஆசிரியர் நச்சினார்க்கினியர்.)
அந்தரம், புவி, தரணீ, ஸ்ரீதரன் – வடசொற்கள். தரணி – (பொருள்களைத்) தரிப்பது. ஸ்ரீதரன் – திருமகளை (மார்பில்) தரிப்பவன்.

————-

சீவார் கழலை இரண்டையும் செப்பு என்று தீங்கு உளவி
னாவார்கழலைப் பயில் செங்கையார் நலம் பேணும் ஐவர்
ஆவார் கழல் ஐ இரண்டாம் அவத்தையின் அன்று எனக்கு உன்
பூவார் கழலை அருள் அப்பனே அண்ட பூரணனே –65-

(இ – ள்.) அப்பனே – திருவேங்கடமுடையானே!
அண்ட பூரணனே – அண்டமுழுவதிலும் வியாபித்து நிறைந்திருப்பவனே! –
கழலை பயில் செம் கையார் – கழற்சிக்காயையாடுகிற சிவந்த கைகளையுடையவர்களான மகளிரது,
சீ வார் கழலை இரண்டையும் – சீஒழுகுகின்ற கழலைக்கட்டியாகிய தன மிரண்டையும்,
செப்பு என்று – கிண்ணங்களென்று புனைந்துரைத்து,
தீங்கு உள வினாவார் – (அவர்களிடத்து) உள்ளனவான தீமைகளை விசாரித்தறி யாதவர்களாய்,
நலம் பேணும் – (அவர்களுடைய) இன்பத்தை விரும்புகிற,
ஐவர்ஆவார் – பஞ்சேந்திரியங்கள்,
கழல் – (தம்தமதுஆற்றல்) ஒழியப்பெறுகிற,
ஐ இரண்டு ஆம் அவத்தையின் அன்று – பத்தாம்அவத்தையாகிய மரணம் நேர்கிற அந்நாளில்,
எனக்கு – உன் பூ ஆர் கழலை – உனது தாமரை மலர்போன்ற திருவடிகளை,
அருள் – தந்தருள்; (எ – று.)

“ஈச்சிறகன்னதோர் தோலறினும் வேண்டுமே, காக்கை கடிவதோர் கோல்” என்ப வாதலால்,
மார்பில் திரண்டெழுந்து பால்பெருகுந்தனங்களை அருவருப்புத்தோன்ற ‘சீ வார் கழலை யிரண்டு’ என்றார்;
(“சிலந்திபோலக் கிளைத்துமுன்னெழுந்து, திரண்டுவிம்மிச் சீப்பாய்ந்தேறி, யுகிராற்கீற வுலர்ந் துள்ளுருகி,
நகுவார்க்கிடமாய் நான்றுவற்றும், முலையைப் பார்த்து முளரி மொட்டென்றுங், குலையுங் காமக்குருடர்” என்றார் பிறரும்.)
உள – பலவின் பாற்பெயர். வினாவார் – எதிர்மறைப்பலர்பால்முற்றெச்சம்; வினாவல் – உசாவுதல்.
இனி, தீங்கு உள வினாவார் என்பதற்க – தீமைவிளைக்கின்ற சொற்களையுடையவரென்று உரைத்து,
மகளிர்க்கு அடைமொழியாக்குதலு மொன்று.
இனாஎன்று எடுத்தால் பரிகாசவார்த்தையென்றும், இன்னா என்பதன் தொகுத்த லெனக்கொண்டால்
இனியவையல்லாத செயல் களென்றும் பொருள்படுமாதலால், அவற்றையுடையவரெனினுமாம்.
தீம் குளம் வினாவார் என்று பிரித்து இனிமையான வெல்லம்போன்ற சொற்களையுடையவரென்றும்,
தீங்கு உளவின் ஆவார் என்று பிரித்துக் கொடியவஞ்சனையிற் பொருந்துபவ ரென்றும் உரைக்கவும்படும்.
“தீங்குழலினாவார்” என்ற பாடத்துக்கு – தீம் – இனிமையான, குழலின் – புள்ளாங்குழலி னிசைபோன்ற,
நாவார் – நாவினாற்பேசுஞ்சொற்களையுடையவர் என்று பொருள் காண்க.
கழல் என்ற கொடியின் பெயர் – அதன்காய்க்கு முதலாகுபெயர். ‘கழலைப் பயில்செங்கையார்’ என்றது –
கவலையின்றி விளையாடுபவ ரென்றும், தம் விளையாட்டினால் ஆடவரை வசீகரிப்பவரென்றும் கூறியவாறாம்.

“ஐவராவார்” என்றவிடத்து, “ஆவார்” என்றது – முதல்வேற்றுமைச் சொல்லு ருபாய் நின்றது.
நினைவு பேச்சு இரங்கல் வெய்துயிர்த்தல் வெதுப்பு துய்ப்பனதெவிட்டல் அழுங்கல் மொழிபலபிதற்றல் மிகுமயக்கு
இறப்பு என்ற மந்மதபாணாவஸ்தை பத்தில் ஈற்றதாதல் கொண்டு, இறத்தல் ‘ஐயிரண்டாமவத்தை’ எனப்பட்டது.
மன்மதாவஸ்தை பத்து – காட்சி அவா சிந்தனை அயர்ச்சி அரற்றல் நாணொழிதல் திகைத்தல் மோகம் மூர்ச்சை இறந்துபடுதல்
எனக் கூறவும்படும். ஐயிரண்டு – பண்புத்தொகை. அவத்தை – அவஸ்தா என்ற வடசொல்லின் விகாரம்.
அண்டபூர்ணன் – வடமொழித்தொடர்.

பூவார்கழல் என்றவிடத்து, ‘ஆர்’ என்றது – உவமவாசகமாய் நின்றது; ஆர்தல் – பொருந்துதல்:
இனி, ‘பூவார்கழல்’ என்ற தொடர் – (அடியார்கள் அருச்சித்துஇட்ட) மலர்களால் எப்பொழுதும் நிறைந்துள்ள
திருவடிக ளென்றும் பொருள்படும்:
‘வானவர்வானவர்கோனொடுஞ், சிந்துபூமகிழுந் திருவேங்கடம்” என்றபடி பரமபதத்திலுள்ளார் பூமாரிசொரியு மிட மாதலாற்
புஷ்பமண்டபமெனப்படுகிற திருமலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானது திருவடிகள்,
அப்பரமபதவாசிகள் அர்ச்சிக்கின்ற அப்ராக்ருத புஷ்பங்களும், தேவர்கள் அர்ச்சிக்கின்ற கற்பகமலர்களும்,
முனிவர்கள் அர்ச்சிக்கின்ற கோட்டுப்பூ முதலியனவும், தொண்டைமான்சக்கரவர்த்தி அர்ச்சித்த ஸ்வர்ணபுஷ்பங்களும்,
குரவைநம்பி அர்ச்சித்த மண்பூவும் பொருந்தப்பெறு தலால், “பூவார்கழல்” என்று சிறப்பாக வழங்கப்படும்;
“தேவாசுரர்கள் முனிக்கணங்கள் விரும்புந் திருவேங்கடத்தானே,
பூவார்கழல்க ளருவினை யேன் பொருந்துமாறு புணராயே” என்ற திருவாய்மொழியையும்,
“வேங்கடமே….. பூவார்கழலார்பொருப்பு” என்ற திருவேங்கடமாலையையும், இந்நூலின் 70 – ஆஞ் செய்யுளையுங் காண்க.

————–

பூரணன் ஆரணன் பொன்னுலகு ஆளி புராரி கொடி
வாரணன் ஆர் அணன் வாழ்த்தும் பிரான் வட வேங்கடத்துக்
காரணன் ஆர் அணங்கு அனா இறைவி கணவன் மண் ஏழ்
பாரணன் நாரணன் என்பார்க்கு நீங்கும் பழுது அவமே –66-

(இ – ள்.) பூரணன் – எங்கும் நிறைந்தவன்:
ஆரணன் – பிரமனும்,
பொன் உலகு ஆளி – பொன்மயமான சுவர்க்கலோகத்தை அரசாள்பவனான இந்திரனும்,
புர அரி – திரிபுரசங்காரஞ்செய்தவனான சிவனும்,
கொடி வாரணன் – துவசத்திற் கோழிவடிவையுடையவனான சுப்பிரமணியனும்,
ஆர் அணன் – (அவனுக்குப்) பொருந்திய தமையனான விநாயகனும்,
வாழ்த்தும் – பல்லாண்டு பாடித் துதிக்கிற,
பிரான் – பிரபு:
வட வேங்கடத்து – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற,
காரணன் – (அனைத்துக்குங்) காரணமானவன்:
ஆனா – (தன்னை) விட்டுநீங்காத,
இறைவி தலைவியாகிய,
ஆர் அணங்கு – அருமையான திருமகளுக்கு, கணவன் -;
மண் ஏழ் பாரணன் – ஏழுவகையுலகங்களையும் உண்டவன்:
நாரணன் – நாராயணன்:
என்பார்க்கு – என்று (எம்பெருமானுடைய குணஞ்செயல்களையும் மகிமையையும் திருநாமத்தையுங்) கருதிச் சொல்பவர்க்கு,
பழுது அவம் நீங்கும் – (அவர்கள் முன்புசெய்த) தீவினைகளெல்லாம் பயன் தராதனவாய் ஒழியும்; (எ – று.)

ஆரணம் – வேதம்; அதனை ஓதுபவன் – ஆரணன். ஆளி, இ – கருத் தாப்பொருள்விகுதி. புராரி – புர + அரி;
தீர்க்கசந்திபெற்ற வடமொழித் தொடர்: திரிபுரத்துக்குச் சத்துரு. கொடிவாரணன் – கோழிக்கொடியோன்;
“கொடிக்கோழிகொண்டான்” என்றார் நம்மாழ்வாரும். ஆர் அணன் – வினைத்தொகை; அணன் – அண்ணன்: தொகுத்தல்.
காரணன் – ஆதிமூலப்பொருள். அணங்கு – மகளிரிற் சிறந்தவள், தெய்வப்பெண். ஆனாமை – நீங்காமை.
“அகலகில்லேனிறையுமென்று அலர்மேன்மங்கையுறை மார்பா,….. திருவேங்கடத்தானே” என்றபடி
திருமகள் திருமாலை ஒரு பொழுதும்விட்டுப்பிரியாமையால், “ஆனாவிறைவி” எனப்பட்டாள்.
இறைவி – தேவி. மண்ஏழ் – பூலோகம் புவர்லோகம் ஸுவர்லோகம் மகர்லோகம் ஜநலோகம் தபோலோகம் சத்தியலோகம்
என்ற மேலேழுலகங்களும், அதலம் விதலம் ஸுதலம் தராதலம் ரஸாதலம் மகாதலம் பாதாலம் என்ற கீழேழுலகங்களும் ஆகிய ஈரேழுலகங்கள்;
மண் என்ற பூமியின்பெயர், இங்கு உலகமென்ற மாத்திரமாய் நின்றது: சிறப்புப்பெயர், பொதுப்பொருளின் மேலது.
பழுது – எழுவாய். ‘ஆரணங்காணாவிறைவி’ என்று பாடமோதி, வேதங்களும் கண்டறியமாட்டாத திருமக ளென்பாரு முளர்.

————–

பழுத்தெட்டி பொன்ற நடுச் செல்வர் பின் சென்று பல் செருக்கால்
கொழுத்து எள் தினை அளவு எண்ணம் அற்றீர் குவடு ஏறி மந்தி
கழுத்து எட்டி அண்டர் பதி நோக்கும் வேங்கடக் காவலனை
எழுத்து எட்டினால் எண்ணி ஏத்தீர் பரகதி ஏறுவதற்கே –67–

(இ – ள்.) பழுத்த எட்டி போன்ற – பழுத்தஎட்டிமரம்போன்ற (பிறர்க் குப்பயன்படாத),
நடு செல்வர் பின் – (பரம்பரையாக அமைந்த செல்வ மன்றி) இடையிலே வந்த செல்வத்தை யுடையவர்களின் பின்னே,
சென்று – தொடர்ந்து சென்றும்,
பல் செருக்கால் கொழுத்து – பலவகைச் செருக்குக் களினாற் கொழுத்தவர்களாகியும்,
எள் தினை அளவு எண்ணம் அற்றீர் – எள்ளளவு தினையளவேனும் (கடவுளைப்பற்றின) சிந்தனை யில்லாதவர்களே!-
(இனியாயினும் நீங்கள் பழுதே பலபகலும்போக்காமல்),
பர கதி ஏறுதற்கு – (எல்லாவுலகங்கட்கும்) மேலுள்ளதான பரமபதத்தில் ஏறிச்சென்று சேர்தற் பொருட்டு, –
மந்தி குவடு ஏறி கழுத்து எட்டி அண்டர் பதி நோக்கும் வேங் கடம் காவலனை – பெண்குரங்குகள் சிகரத்திலேறிக் கழுத்தைத்
தூக்கி மேலுள்ள தேவலோகத்தை எட்டிப்பார்க்கப்பெற்ற திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற ஸ்வாமியை,
எழுத்து எட்டினால் எண்ணி ஏத்தீர் – அஷ்டா க்ஷரமகாமந்திரத்தைக்கொண்டு தியானித்துத் துதியுங்கள்; (எ – று.)

பழுத்தஎட்டியென்பது பழுத்தெட்டி யெனப் பெயரெச்சவீறு தொ குத்தல்விகார மடைந்தது.
தொன்றுதொட்டு வறியராயிருந்து இடையே செல்வங்கிடைக்கப்பெற்றவர் அச்செல்வத்தினருமையைக்கருதிப்
பிறர்க்கு உதவாது லோபிகளாயிருத்தலும், “அற்பன் பணம்படைத்தால் அர்த்தராத் திரியிற் குடைபிடிப்பான்” என்றபடி
பிறரைமதியாத இறுமாப்புடையரா யிருத்தலும் பெரும்பான்மை யாதலால், அந்நடுச்செல்வரை எடுத்துக்கூறி னார்.
பிறர்க்குஉதவாமைபற்றி, அவர்க்கு, பழுத்தஎட்டி உவமைகூறப்பட்டது;
(“ஈயாதபுல்ல ரிருந்தென் னபோயென்ன எட்டிமரம், காயாதிருந்தென்ன காய்த்துப் பலனென்ன” என்பர் பிறரும்.)
செல்வர்பின்செல்லுதல், தாம் அவராற் செல்வம் பெறலாமென்னும் நசையினால். எள் தினை என்ற தானி யங்கள்,
சிறுமைக்கு அளவையாக எடுத்துக்காட்டப்பட்டன. குவடு – மரக் கிளையுமாம்.
மந்தி – குரங்கின் பெண்மைப்பெயர்; ஆண்மைப்பெயர் – கடுவன்.
‘குவடேறி மந்தி கழுத்தெட்டி யண்டர்பதி நோக்கும் வேங்கடம்’ என்றது, மலையின் உயர்வை விளக்குந் தொடர்புயர்வுநவிற்சியணி.
இவ் வருணனை கூறியது, அங்குச்சேர்கிற அனைத்துயிரும் உயர்கதியைப்பெறு மென்ற குறிப்பு.
எழுத்துஎட்டு – எட்டுஎழுத்துக்களையுடைய பெரியதிருமந்திரம். எழுத்தெட்டினா வெண்ணியேத்தீர் பரகதியேறுதற்கே –
“எட்டெழுத்து மோதுவார்கள் வல்லர் வானமாளவே” என்பது பெரியார்பாசுரம்.

————–

ஏறு கடாவுவர் அன்னம் கடாவுவர் ஈர் இரு கோட்டு
உறு கடா மழை ஓங்கல் கடாவுவர் -ஓடு அருவி
ஆறு கடாத அமுது எனப் பாய அரிகமுகம்
தாறுகள் தாவும் வட வேங்கடவரைத் தாழ்ந்தவரே –68-

(இ – ள்.) ஓடு அருவி ஆறு – நதிகளாக விரைந்து செல்லுகின்ற நீரருவிகள்,
கடாத அமுது என – கடுக்காத (இன்சுவையுடைய) அமிருதம் போல,
பாய – பாய்ந்துவர, (அவற்றிற்கு அஞ்சி),
அரி – குரங்குகள்,
கமுகம் தாறுகள் தாவும் – பாக்கு மரக்குலைகளின் மேல் தாவியேறப்பெற்ற,
வடவேங்கட வரை – வடக்கின் கணுள்ள திருவேங்கடமலையி லெழுந்தருளியிருக்கிற பெருமானை,
தாழ்ந்தவர் – வணங்கினவர்கள், –
ஏறு கடாவுவர் – ருஷபத்தை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்துவர்;
அன்னம் கடாவுவர் – அன்னப்பறவையை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்துவர்;
ஈர் இரு கோடு – நான்கு தந்தங்களையுடையதும்,
ஊறு கடாம் மழை – மேன்மேற்சுரக்கின்ற மதநீர்ப்பெருக்கையுடையதுமான,
ஓங்கல் – மலைபோன்ற (ஐராவத) யானையை,
கடாவுவர் – ஏறிநடத்துவர்; (எ – று.)

திருவேங்கடமுடையானை வணங்கினவர் அதன்பயனாக மறுமையில் ருத்திரபதவி பிரமபதவி இந்திரபதவிகளை யடைவ ரென்பதாம்.
ருத்திர பதவி முதலியவற்றை யடைவ ரென்ற பொருளை “ஏறுகடாவுவர்” என்பது முதலியசொற்களாற் குறித்தது,
பிறிதினவிற்சியணியின் பாற்படும். ருஷபம் சிவனுக்கும், அன்னப்பறவை பிரமனுக்கும், ஐராவதயானை இந்திரனுக்கும் வாகனமாம்.
“ஊறுகடாமழை யோங்கல” எனவே யானையென்றும், “ஈரிரு கோட்டுஓங்கல்” எனவே ஐராவதயானை யென்றும் ஆயிற்று.
ஐராவதம், இரு புறத்தும் இரட்டைத்தந்த முடையது.

ஏறு – பசுவின் ஆண்மைப்பெயர். அன்னம் – ஹம்ஸ மென்ற வடசொல் லின் சிதைவு.
ஈரிருகோடு – பண்புத்தொகைப்பன்மொழித்தொடர். கடாம் – கடமென்பதன் விகாரம்.
ஓங்கல் – உயர்ச்சி; மலைக்குத் தொழிலாகுபெயர்: அல் – கருத்தாப்பொருள்விகுதி யென்றுங் கொள்ளலாம்;
யானைக்கு உவமை யாகுபெயர். கடாத – இன்னாச்சுவை பயவாத; கடு – பகுதி.
தாபந்தவிர்த் துக் களிப்பையளிக்கும் மலையென்று பின்னிரண்டடிகளால் விளங்கும்.

—————-

தாழ்ந்த அருக்கம் தரு ஒக்குமோ பல தாரகையும்
சூழ்ந்த அருக்கன் சுடர் ஒக்குமோ தொல் அரக்கர் என்று
வாழ்ந்த வருக்கம் களைந்தான் வடமலை மால் அடிக்கீழ்
வீழ்ந்தவருக்கு அன்பருக்கு ஒப்பரோ அண்டர் மெய்த்தவரே –69-

(இ – ள்.) தாழ்ந்த – இழிவான,
அருக்கம் – எருக்கஞ்செடியானது,
தரு ஒக்குமோ – பெரிய மரத்துக்கு ஒப்பாகுமோ?
பல தாரகையும் – பல நக்ஷத்திரங்களும்,
சூழ்ந்த அருக்கன்சுடர் ஒக்குமோ – சுற்றிலும் பரவுகின்ற சூரியனது ஒளிக்கு ஒப்பாகுமோ? (ஒப்பாகா: அவைபோல),
அண்டர் – தேவர்களும்,
மெய்தவர் – உண்மையான தவத்தையுடைய முனிவர்களும், –
தொல் அரக்கர் என்று வாழ்ந்த வருக்கம் களைந்தான் – பழமையான இராக் கதர்க ளென்று பிரசித்திபெற்று
வாழ்ந்த கூட்டங்களையெல்லாம் வேரோடழித்தவனான,
வட மலை மால் – திருவேங்கடத்துறைவானது,
அடிக்கீழ் – திருவடிகளில்,
வீழ்ந்தவருக்கு – வீழ்ந்துவணங்கின அடியார்கட்கு,
அன்பருக்கு – அன்பு பூண்டொழுகுபவர்க்கு,
ஒப்பரோ – ஒப்பாவரோ? (ஆகார் என்றபடி); (எ – று.)

பாகவதர்க்கு அடிமை பூண்பவர் தேவரிஷிகணங்களினும் மேம்பட்டவ ரென அவர்கள்மகிமையை எடுத்துக்கூறியவாறாம்.
முதலிரண்டுவாக்கியங் கள் – உபமானம்; மூன்றாவதுவாக்கியம் – உபமேயம்: உபமான உபமேயவாக் கியங்களினிடையில்
உவமவுருபுகொடாமற் கூறினமையால், எடுத்துக்காட் டுவமையணி.

அர்க்கம், தரு, தாரகா, அர்க்கன், வர்க்கம் – வடசொற்கள். ஓகாரங் கள் – எதிர்மறை. மெய்த் தவம் – பழுதுபடாத தவம்;
கூடாவொழுக்கமொழிந்த தவம். அண்டம் – வானம், மேலுலகம்; அதிலுள்ளவர், அண்டர் சூழ்ந்த – திரண்டனவாயினும் எனினுமாம்.

————-

மெய்த்தவம் போர் உக வெஞ்சொல் இராமன் வில் வாங்கி வளைத்து
உய்ந்த அம் போர் உகம் நாலும் செய்தோர் உயர் வேங்கடத்து
வைத்த அம் போருகப் பூ ஆர் கழலை மறை மனு நூல்
பொய்த்த வம்போர் உகவார் காமம் வேட்டுப் புரளுவரே –70-

(இ – ள்.) மெய் தவம் – உண்மையாகச்செய்த தவம்,
போர் – யுத்தத்தில் உக – பழுதுபட்டொழியுமாறு,
வெம் சொல் இராமன் வில் வாங்கி வளைத்து உய்த்த அம்போர் – கடுஞ்சொற்களைப்பேசிவந்த பரசுராமனுடைய
வில்லை (அவன்கையினின்று தம்கையில்) வாங்கி வளைத்து எய்த அம்பையுடைய வரும்,
உகம் நாலும் செய்தோர் – நான்குயுகங்களையுஞ் செய்தவருமான திருமால்,
உயர் வேங்கடத்து வைத்த – உயர்ந்த திருவேங்கட மலையில் வைத்துநின்ற,
அம்போருகம் பூ ஆர் கழலை – தாமரைமலர்போன்ற திருவடிகளை,
மறை மனு நூல் பொய்த்த வம்போர் – வேதங்களையும் மநுதர்மசாஸ்திரத்தையும் பொய்யென்று கூறுகிற வம்புப் பேச்சையுடையவர்கள்,
உகவார் – விரும்பாதவர்களாய்,
காமம் வேட்டு புரளுவர் – சிற்றின்பத்தை விரும்பிப் புரண்டுவருந்துவர்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – கழிவிரக்கம்: அந்தோ! என்றபடி.

சீதாகலியாணத்தின்பின் தசரதசக்கரவர்த்தி திருக்குமாரர்களுடனே மிதிலையினின்று அயோத்திக்கு மீண்டுவருகையில்,
பரசுராமன் வலியச்செ ன்று எதிர்த்து ‘முன்பு ஹரிஹரயுத்தத்தில் இற்றுப்போன சிவதநுசை முறித்த திறத்தை அறிந்தோம்!
அதுபற்றிச் செருக்கடையவேண்டா: இந்த ஸ்ரீ மகாவிஷ்ணுதநுசை வளை, பார்ப்போம்’ என்று அலட்சியமாகச்
சொல்லித் தான் கையிற்கொணர்ந்த ஒருவில்லைத் தசரதராமன்கையிற் கொடுக்க,
அப் பெருமான் உடனே அதனைவாங்கி எளிதில்வளைத்து நாணேற்றி அம்புதொ டுத்து ‘இந்தப்பாணத்துக்கு இலக்கு என்?’ என்று வினாவ,
பரசுராமன் அதற்கு இலக்காகத் தனது தபோபலம் முழுவதையுங் கொடுக்க, அவன்
க்ஷத்திரியவம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்டவனுமா யிருத்தல்பற்றி
அவனைக் கொல்லாமல் அவனதுதவத்தைக் கவர்ந்தமாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளின னென்ற வரலாறு, இங்கு முதல்விசேஷணத்திற் குறிக்கப்பட்டது.

“என்வில்வலிகண்டுபோ வென் றெதிர்வந்தான், தன்வில்லினோடுந் தவத்தை யெதிர்வாங்கி” என்றார் பெரி யாழ்வாரும்.
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஆறாமவதாரமான பரசுராமனும் ஏழாமவதாரமான தசரதராமனும் ஒருவரோடொருவர் பொருதலும்,
அவர்களில் ஒருவர்மற்றொருவரைவெல்லுதலும் பொருந்துமோ? எனின், –
துஷ்டர்களாய்க் கொழுத்துத்திரிந்த அரசர்களைக் கொல்லுதற்பொருட்டுப் பரசுராமனிடத்தில் ஆவேசித்திருந்த
விஷ்ணுசக்தி அக்காரியம் முடிந்த பின்பு அவ்விஷ்ணுவின் அவதாரமான தசரதராமனாற் கவர்ந்துகொள்ளப் பட்ட தாதலிற் பொருந்து மென்க.
இதனால், ஆவேசாவதாரத்தினும் அம் சரவதாரத்துக்கு உள்ள ஏற்றம் விளங்கும்.
வெஞ்சொல் – “இற்றோடியசிலையின்றிற மறிவென் னினியா னுன்,
பொற்றோள்வலிநிலை சோதனைபுரி வா னசையுடையேன்,
செற்றோடிய திரடோளுறு தினவுஞ் சிறிதுடை யேன்,
மற்றோர் பொருளிலை யிங்கிதென்வரவென்றன னுரவோன்” என்றது முதலாகக் காண்க.
“வெஞ்சொலிராமன்” எனவே, பரசுராமனாவன்; தசரதராமன் பிறர் கடுஞ்சொற்கூறினாலும் தான் கடுஞ்சொற்கூறுதலின்றி
எப் பொழுதும் இன்சொல்லே பேசுபவ னென்பது பிரசித்தம்: (வால்மீகிராமா யணம், அயோத்தியாகாண்டம், 1 – 10.)
பரசுராமன், பிறப்பிலேயே கோப மூர்த்தியாதலால், வெஞ்சொல்லுக்கு உரியன்.

யுகம் நான்கு – கிருதயுதம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்பன. காலம் நித்தியமாயிருக்கவும்.
‘உகநாலுஞ் செய்தோர்’ என்றது, காலத்துக்குநியாமகன் கடவு ளென்ற கருத்துப்பற்றி;
அன்றியும், காலத்தின்அளவு பகவானது சிருஷ்டிக்கு உட்பட்ட சூரியசந்திராதியரால் நிகழ்தலுங்காண்க.
உய்த்த அம்போர் = அம்புய்த்தோர். உகம் – யுகமென்ற வடசொல்லின் விகாரம்.
நான்கு என்பது, ஈற்றுஉயிர்மெய்கெட்டு னகரமெய் லகரமாய் நால் என நின்றது.
அம்போருஹம் என்ற வடசொல் – நீரிற்பிறப்பதென்று காரணப்பொருள்பெறும்; அம்பஸ் – ஜலம்.
மனுநூல் – மநுவென்னும்அரசனாற் செய்யப்பட்ட அறநூல். வம்போர் – வம்பர்; நேரில்லார்.

—————

புரண்டு உதிக்கும் உடற்கே இதம் செய் பொருள் ஆக்கையின் நால்
இரண்டு திக்கும் தடுமாறும் நெஞ்சே இனி எய்துவம் வா
திரண்டு திக்கும் அரன் வேள் அயனார் முதல் தேவர் எல்லாம்
சரண் துதிக்கும் படி மேல் நின்ற வேங்கடத் தாமத்தையே –71-

(இ – ள்.) புரண்டு உதிக்கும் – நிலைநில்லாது மாறிமாறித்தோன்றுந் தன்மையுள்ள,
உடற்கே – உடம்புக்கே,
இதம் செய் – நன்மையைச் செய்கிற,
பொருள் – செல்வத்தை,
ஆக்கையின் – சம்பாதித்தற்காகு,
நால் இரண்டு திக்கும் தடுமாறும் – எட்டுத் திசைகளிலும் திரிந்துஉழலுகின்ற,
நெஞ்சே – (எனது) மனமே! – இனி – –
திக்கும் அரன் – (நெற்றிக்கண்ணின் நெருப்பினால்) எரிக்குந்தன்மையுள்ள சிவனும்,
வேள் – சுப்பிரமணியனும்,
அயனார் – பிரமதேவரும்,
முதல் – முதலிய,
தேவர் எல்லாம் – தேவர்களெல்லாரும்,
திரண்டு – ஒருங்குகூடி,
சரண் துதிக்கும்படி – (தனது) திருவடிகளைத் தோத்திரஞ்செய்யும்படி,
வேங்கடம் மேல் நின்ற – திருவேங்கடமலையின் மேல் நின்றதிருக்கோலமாக எழுந்தருளியிருக்கிற,
தாமத்தை – ஒளிவடிவமுள்ள கடவுளை, எய்துவம் – அடைவோம்: வா -; (எ – று.)

புரண்டு உதித்தல் – இறப்பதும் மீண்டும் பிறப்பது மாதல். யாக்கை நிலையாமையை விளக்குவார், “புரண்டுஉதிக்கும் உடல்” என்றார்.
எய்துதல் – இடைவிடாது நினைத்தல்; (“மாணடி சேர்ந்தார்” என்றவிடத்தில், “சேர்தல்” போல.)
மனத்தை வசப்படுத்தினா லன்றி நன்முயற்சி இனிது நிறைவேறா தாதலால், அதனை முன்னிலைப்படுத்தி அறிவுறுத்துகிறார்.
திரண்டு துதிக்கும்படி என இயையும். தீக்கும் என்பது, திக்கும் எனக் குறுக்கலென்னுஞ் செய்யுள்விகாரமடைந்தது;
(“திருத்தார் நன்றென்றேன் தியேன்” என்றதில் “தீயேன்” என்பது ‘தியேன்’ என்றும்,
“பரிதியொ டணிமதிபனி வரைதிசைநில, மெரிதியொ டெனவினவியல்வினர் செலவினர்” என்றவிடத்து
“தீ” என்பது “தி” என்றுங் குறுகினமை காண்க.
( அரன் வேள் அயனார் முதல் தேவர்எல்லாம் சரண் துதிக்கும்படி மேல்நின்ற வேங்கடத்தாமம் –
“நீலார்கண்டத்தம்மானும் நிறைநான்முகனு மிந்திரனுஞ், சேலேய் கண்ணார்பலர் சூழ விரும்புந் திருவேங்கடத்தானே”,
“நிகரி லமரர் முனிக்கண ங்கள் விரும்புந் திருவேங்கடத்தானே” என்பன திருவாய்மொழி.

————–

பிரிவாற்றாத தலைவி தோழியரை நோக்கி இரங்கிக் கூறுதல் –

தாம் மத்து அளை வெண்ணெய்உண்ட அந்நாள் இடைத் தாயார் பிணி
தாமத் தளை உவந்தார் வேங்கடாதிபர் தாமரைப் பூந்
தாமத்தளை அணியும் மணி மார்பில் நல் தண் அம் துழாய்த்
தாமத்து அளைவது என்றோ மடவீர் என் தட முலையே –72-

(இ – ள்.) மடவீர் – மடமையையுடையவர்களே! –
மத்து அளை வெண்ணெய் – மத்துக்கொண்டு கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணெயை,
தாம் உண்ட – தாம் (களவுசெய்து) விழுங்கிய,
அ நாளிடை – அந்த நாளிலே (கிருஷ்ணாவதாரஞ்செய்துவளர்ந்த இளம்பருவத்திலே),
தாயர்பிணி – வளர்த்த தாயாரான யசோதைப்பிராட்டி கட்டின,
தாமம் தளை – கயிற்றினாலாகிய கட்டை,
உவந்தார் – விரும்பி யேற்றுக்கொண்டவரான,
வேங்கட அதிபர் – திருவேங்கடமுடையானுடைய,
தாமரை பூ தாமத்தளை மணியோடு அணி மார்பில் – தாமரைமலரை இடமாகவுடையளான திருமகளையும்
(கௌஸ்துப மென்னும்) இரத்தினத்தையும் அணிந்த திருமார்பில் (தரித்த),
நல் தண் அம் துழாய் தாமத்து – சிறந்த குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையில்,
என் தட முலை அளைவது – எனது பெரிய தனங்கள் பொருந்துவது, என்றோ – எந்நாளோ? (எ – று.)

தலைவனைப்பிரிந்த தலைவி, இனித் தலைவனது சேர்க்கை நேர்வது எக்காலமோ வென்று இரங்கிக் கூறினள்.

கண்ணன் இளம்பிராயத்தில் திருவாய்ப்பாடியிலுள்ள ஆயர்மனைகளிற் சென்று அவர்களுடைய
பால் தயிர் வெண்ணெய் முதலியவற்றைக் களவு செய்து உண்டமையை ஆய்ச்சியர் சொல்ல அறிந்த யசோதை
அக் குற்றத்துக்கு ஒரு தண்டனையாகக் கண்ணனை வயிற்றிற் கயிற்றினாற்கட்டி உரலோடு பிணித்துவைத்தனள்
என்ற வரலாறு, முதல்விசேஷணத்திற் குறிக்கப்பட்டது.
“பத்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்கரியவித்தகன்” என்றபடி தேவாதிதேவனான சர்வேசுவரன் திருவருளினால்
இங்ஙனம் எளிமைபூண்டு கட்டுப்பட்டதாகிய சௌலப்யகுணாதிசயத்தில் ஈடுபட்டு “தளையுவந்தார்” என்றார்.
அப்பொழுது முதலில் யசோதை கட்டத்தொடங்கிய கயிறு சிறிதளவுபோதாதாம்படி கண்ணன் இடைபருத்துக்காட்டி,
அது கண்டு அத்தாய் இடையர்வீடுகளிலுள்ள தாம்புகளையெல்லாங் கொணர்ந்துசேர்த்து ஒன்றாக
முடிந்து கட்டப்புகுந்தோறும் அதுவும் போதாதாம்படி அத்திருமகன் வளர்ந்துவந்து, பின்பு அவள் கை
சலித்து மெய்வேர்த்துக் கண்பிசைந்து வருந்தக் கண்டு உடல்சிறுத்துக் கட்டுண்டனன் என்ற விவரமும்,
“உவந்தார்” என்றதனாற் குறிக்கப்படும்.

தாயர் – உயர்வுப்பன்மை. நாள் இடைத்தாயர் என்றும் பிரிக்கலாம். திருமால் திருமகளை வலத் திருமார்பிலும்,
கௌஸ்துபமென்னுந் திவ்வியரத் தினத்தை இடத்திருமார்பிலுந் தரித்துள்ளான்.
மடமை – மகளிர்க்குச் சிறந்த பேதைமை யென்னுங் குணம்;
அது, நாணம் முதலிய மற்றைப்பெண் குணங்கட்கும் உபலக்ஷணம்: இளமையுமாம்.

எம்பெருமானது பிரிவை யாற்றாத ஐயங்கார், “எனதுபக்தி அப்பெருமா னோடுசேர்ந்து இனிமையை நுகர்தற்குப்
பாங்காவது எக்காலமோ” என்று, தம்பக்கல் பரிவுள்ள அன்பர்களை நோக்கிக் கூறுதல், இதற்கு உள்ளுறை பொருள்.
அந்யாபசேத்தில் “முலை” என்றது, ஸ்வாபதேசத்தில் பக்தியாம். மகளிருறுப்பாய்ச்சிறக்கின்ற இது,
அடியார்க்கு இலக்கணமாய்ச் சிறக்கின்ற அதனைக் குறிப்பிக்கும்.
தலைவனைச் சேர்ந்து அனுபவித்தற்கு உபகரணமாதல் இரண்டுக்கும் உண்டு.
“தடமுலை” என்றது, பக்குவமாய் முதிர்ந்த பக்தி யென்றவாறு: பரமபக்தி யென்க. ஸ்வாபதேசத்தில்,
துழாய் – இனிமை. விஸ்தாரம் ஆய்ந்து உணர்க.

இது, யமகச்செய்யுள்.

———–

தடவிகடத் தலை வேழ முன் நின்றன சாடு உதைத்துப்
படவிகள் தத்து அலை ஈர் எழ் அளந்தன பூந்திரு வோடு
அடவி கடத்தலை வேட்டன -வேங்கடத்து அப்பன் புள்ளைக்
கடவி கடத்தலை நெய் உண்ட மாதவன் கால் மலரே –73-

(இ – ள்.) புள்ளை கடவி – (கருடப்) பறவையை வாகனமாகக் கொண்டு ஏறி நடத்துபவனும்,
கடத்தலை – குடத்தில் வைத்திருந்த,
நெய் – நெய்யை,
உண்ட – அமுது செய்த,
மாதவன் – மதுகுலத்துத் தோன்றியவனுமான,
வேங்கடத்து அப்பன் – திருவேங்கடமுடையானுடைய,
கால் மலர் – தாமரை மலர் போன்ற திருவடிகள், –
தட – பெரிய,
விகடம் தலை – (கும்ப ஸ்தலங்களையுடைமையால் மேடுபள்ளங்கொண்டு) மாறுபாடுற்ற தலையை யுடைய,
வேழம் முன் – (கஜேந்திராழ்வானாகிய) யானையின் முன்னிலையில்,
நின்றன – சென்று நின்றன;
சரடு உதைத்து – சகடாசுரனை உதைத்துத் தள்ளி,
தத்து அலை புடவிகள் ஈர் எழ் அளந்தன – பாய்ந்து வருகின்ற அலைகளை யுடைய கடல் சூழ்ந்த பூமி முதலிய உலகங்கள் பதினான்கையும் அளந்தன;
பூ திருவோடு – தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளின் அவதாரமான சீதாபிராட்டியுடனே,
அடவி கடத்தலை வேட்டன – வனத்தைக்கடப்பதை விரும்பி நடந்தன; (எ – று.)

இது, இந்நூலின் முதற்செய்யுள் போன்ற பாதவகுப்பு.

பூலோகத்தையளந்ததில் அதன்கீழுலகங்களேழும், மேலுலகத்தையள ந்ததில் புவர்லோகம்முதலிய ஆறும் அடங்குதலால்,
“புடவிகளீரேழளந்தன” என்றார்.
திருமால் இராமனாகத் திருவவதரித்துபோது திருமகள் சீதையாகவும்,
அப்பெருமான் கண்ணனாகத் திருவவதரித்தபோது அப்பிராட்டி ருக்மிணியாகவும் அவதரித்தன ளென்று புராணங் கூறுதலால்,
“பூந்திரு” என்றது – ஜாநகியைக் குறித்தது. தாய் தந்தையர்சொற் காத்தற்பொருட்டு வனவாசஞ் செய்தலே யன்றித்
தண்டகாரணியங்கடந்து இராவணவதத்தின் பொருட்டு இலங்கைக்குச் செல்லவேண்டுமென்னும் உத்தேசமும் இராமபிரானுக்கு இருத்தலால்,
“அடவிகடத்தலை வேட்டன” என்றார்; பெருமானது விருப்பத்தை அவனதுதிருவடியின்மே லேற்றிக் கூறினது, உபசாரவழக்கு.

சாடு – சகடமென்பதன் விகாரம். “தத்தஅலை” என்பது – வினைத்தொகையன்மொழியாய், கடலின்மேல் நின்றது.
கடவி, இ – கருத்தாப்பொருள்விகுதி: சங்கேந்தி, உலகாளி, குடமாடி என்ற பெயர்களிற் போல. கடம் – வடசொல்; தலை – ஏழனுருபு.

————–

கானகம் உண்டு அதில் போம் என்னின் நீங்கிக் கடும் பிணி காள்
தேன் அக முண்டகத் தாள் வேங்கடேசனை சென்று இரக்கும்
போனாக முண்ட வெண் நீற்றான் அயனொடும் பூமியொடும்
வானகம் உண்ட பெருமானை இன்று என் மனம் உண்டதே –74-

(இ – ள்.) சென்று இரக்கும் போனகம் – (பலவிடங்களிலுஞ்) சென்று யாசித்துப் பெறும் பிச்சை யுணவைக் கொள்கிற,
முண்டம் – (பிரம) கபாலத்தையேந்திய,
வெள் நீற்றான் – வெண்ணிறமாகிய விபூதியைத் தரித்தவனான சிவனும்,
அயனொடும் – பிரமனும் ஆகிய இருமூர்த்திகளோடும்,
பூமியொடும் வானகம் – நிலவுலகத்தையும் மேலுலகங்களையும் (ஆகிய அனைத்தையும்),
உண்ட – (பிரளயகாலத்தில்) உட்கொண்டருளிய,
பெருமானை – பெருமையை யுடையவனான,
தேன் அகம் முண்டகம் தாள் வேங்கட ஈசனை – தேனைத் தனது அகத்தேயுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளையுடைய திருவேங்கடமுடையானை,
இன்று – இப்பொழுது,
என் மனம் உண்டது – எனது மனம் உட்கொண்டது; (ஆதலால்),
கடும் பிணிகாள் – கொடியநோய்களே! (நீங்கள்),
என்னின் நீங்கி – என்னை விட்டு நீங்கி,
கானகம் உண்டு அதில் போம் – காடு உளது அதிற் செல்லுங்கள்; (எ – று.)

இச்செய்யுள், கீழ் 6 – ஆஞ்செய்யுள்போலவே வியாதிகளை முன்னிலைப் படுத்திக்கூறியது.
இதனை, “ஒங்காரவட்டத்து மாசுணப்பாயி லுலோகமுண்ட,
பூங்கார் விழிக்குப் புலப்பட்டதா லெப்பொழுதுமென்னை,
நீங்காதிடர்செயுந்தீவினைகா ளினிநின்று நின்று,
தேங்காது நீரு மக்கானிடத்தே சென்றுசேர்மின்களே” என்ற திருவரங்கத்துமாலைச் செய்யுளோடு ஒப்பிடுக.
எம்பெருமான் எல்லாநோய்க்கும் மருந்தாவ னென்பது போதரும்.
‘நீற்றானயனொடும் பூமியொடும் வானகமுண்ட பெருமானை மனமுண்டது’ என்ற விடத்துச்
சிறிய ஆதாரத்திற் பெரிய ஆதேயம் அடங்கியதாகச் சொன்னது,பெருமையணியின் பாற்படும்;

“சூழ்ந்ததனிற்பெரிய பரநன்மலர்ச்சோதீயோ,…… சூழ்ந்ததனிற்பெரியவென்னவா” என்பது நம்மாழ்வார் பாசுரம்.
“கானகமுண் டதிற்போம்” என்ற முன்வாக்கியத்தை “பெருமானையென்மனமுண்டது” என்ற பின்வாக்கியம் சாதித்து நிற்பது,
தொடர்நிலைச்செய்யுட்குறியணி.
நீங்கி அதிற்போம் என்ற விடத்து, “கானகமுண்டு” என்ற வாக்கியம் இடைப்பிறவரலாய் நின்றது. அகம் – உள்ளிடம்.

————-

மனம் தலை வாக்கு உற எண்ணி வணங்கி வழுத்தும் தொண்டர்
இனம் தலைப் பெய்தனன் ஈது அன்றியே இமையோரும் எங்கள்
தனம் தலைவா எனும் வேங்கடவாண தடம் கடலுள்
நனந்தலை நாகணையாய் அறியேன் அன்பும் ஞானமுமே –75–

(இ – ள்.) இமையோரும் – தேவர்களும்,
‘எங்கள் தனம் – எங்கட்குச் செல்வம்போன்றவனே!
(எங்கள்) தலைவா – எங்கள் தலைவனே!’
எனும் – என்று துதிக்கப்பெற்ற,
வேங்கட வாண – திருவேங்கடமுடையானே!
தட கடலுள் – பெரிய (திருப்பாற்)கடலில்,
நனந் தலை நாக அணையாய் – பரந்த இடமுள்ள ஆதிசேஷனாகிய சயனத்தை யுடையவனே! –
மனம் தலை வாக்கு – மனமும் தலையும் வாக்கும் ஆகிய திரிகரணங்களாலும்,
உற – தகுதியாக, (முறையே),
எண்ணி வணங்கி வழுத்தும் – (உன்னைத்) தியானித்து நமஸ்கரித்துத் துதிக்கின்ற,
தொண்டர் – (உனது) அடியார்களுடைய,
இனம் – கூட்டத்தோடு,
தலைப்பெய்தனன் – சேர்ந்தேன்;
ஈது அன்றியே – இதுவே யல்லாமல்,
அன்பும் ஞானமும் அறியேன் – ஞானபக்திகளின் தன்மையை (அடியேன்) அறிகிறேனில்லை; (எ – று.)

அன்புஞானங்களை அறியேனாயினும், அவற்றையறிந்து திரிகரணத்தாலும் நின்னைவழிபடுகிற
மெய்யடியார்களோடு சேர்ந்தேனாதலால், அச்சம்பந்தத்தையே வியாஜமாகக்கொண்டு என்னைக் காத்தருளவேண்டு மென்பதாம்.
முதலடியில் மனத்தினால் எண்ணி, தலையினால் வணங்கி, வாக்கினால் வழுத்தும் என முறையே சென்று இயைதல்,
முறைநிரனிறைப்பொருள்கோள். உற – மனம் முதலியவற்றைப் பெற்றதன் பயன்சித்திக்க என்றபடி.
தலைப்பெய்தல் – ஒரு சொல்; இதில், தலைஎன்பது – தமிழுபசர்க்கம்: பெயர்க்கும் வினைக்கும் முன் அடையாய் நின்று
பொருள் தராதும் அப்பெயர்வினைப் பொருளை வேறுபடுத்தியும் வரும் இடைச்சொல் வடமொழியில் உபசர்க்கமெனப்படும்;
கைகூடல், தலைப்பிரிதல், கண்தீர்தல், மேற்கொள்ளல், பரிமாறல், பாதுகாத்தல் என்றவற்றில் –
கை, தலை, கண், மேல், பரி, பாது என்பன தமிழுபசர்க்கமாம். ஈது – சுட்டு நீண்டது. ஈதன்றியே, ஏ – பிரிநிலை.

இமையோர் – கண்இமையாதவர்; எதிர்மறை வினையாலணையும்பெயர். எதிர்மறை ஆகாரம் புணர்ந்துகெட்டது.
விகுதிமுதல்ஆகாரம் ஓகாரமாயிற்று. இமையோர் – ஞானசங்கோசமில்லாத நித்தியசூரிகளுமாம். உம் – உயர்வுசிறப்பு.
அதனால், பிறர்துதித்தல் தானே பெறப்படும். தனம் – அண்மைவிளியாதலின், இயல்பு.
ஆபத்துக்காலத்தில் உதவுதல்பற்றியும், விருப்பத்துக்கிடமாதல்பற்றியும், “எங்கள்தனம்” என்றார்.

“கறங்காழி நாலெட்டிலக்கமியோசனை கட்செவியின், பிறங்காக மும்மையிலக்க மியோசனை பேருலகி,
லிறங்காழிமேகமெனவேயரங்கத்திலெந்தையதி, லுறங்காகநீளமைந்தைம்பதினாயிரமோசனையே” என்பது நூல்துணிபாதலால்,
“தடங்கடலுள் நனந்தலைநாகணையாய்” என்றார்.
ஆசிரியர் நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டுள் முல்லைப்பாட்டில் “நனந்தலை யுலகம்” என்றதற்கு
“அகலத்தை இடத்தேயுடைய உலகம்” என்றும், மதுரைக்காஞ்சியில் “நாளங்காடிநனந்தலை” என்றதற்கு
“அகற்சியையுடைத்தாகிய இடத்தினையுடைய நாட்காலத்துக்கடை” என்றும் உரைத்தமை உணர்க.
தொல்காப்பியத்து “நனவேகளனும் அகலமுஞ் செய்யும்” என்ற உரிச்சொல்லியற்சூத்திரத்தால்,
நனவென்னும் உரிச்சொல் அகலமென்னும் பொருளை யுணர்த்துதல் காண்க.
நாகவணை என்பது நாகணை யெனத் தொகுத்தல்விகாரப்பட்டது;
“நஞ்சுபதி கொண்ட வளநாகணை” எனச் சீவக சிந்தாமணியிலும்,
“நச்சுநாகணைக் கிடந்த நாதன்” எனத் திருச்சந்தவிருத்தத்திலும்,
“நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய்” எனச் சிறியதிருமடலிலுங் காண்க.
காரியகாரணமுறைபற்றி, ‘அன்புஞானமும்’ என்றார்.
மநோ வாக் காயமென்ற முறைபிறழக் கூறினார், செய்யுளாதலின்: யமகநயத்தின்பொருட்டென்க.
மெய்யென்னுமிடத்துத் தலையைக் கூறினது, உத்தம அங்கமாதலின்.

———-

ஞானக் கண் தா கனவு ஒக்கும் பவம் துடை நஞ்சு இருக்கும்
தானக் கண்டா கனற்சோதி என்று ஏத்தும் வன் தாலமுடன்
வானக் கண் தா கன வண்ணா என்று ஒது ஒலி வந்து அடையா
ஈனக் கண்டா கனற்கு ஈந்தான் பர கதி என் அப்பனே –76-

(இ – ள்.) “நஞ்சு இருக்கும் – விஷம் தங்குகின்ற,
தானம் – இடமாகிய,
கண்டா – கழுத்தையுடையவனே!
கனல் சோதி – அனற்பிழம்பின் வடிவமானவனே!
ஞானம் கண் தா – (எனக்கு) ஞானமாகிய கண்ணைக் கொடு;
கனவு ஒக்கும் பவம் துடை – கனாத்தோற்றத்துக்குஒப்பான பிறப்பை (எனக்கு) ஒழித்தருள்வாய்,”
என்று – என்றுசொல்லி,
ஏத்து – (சிவபிரானைத்) துதிக்கிற,
வல் தாலமுடன் – வலிய நாவினுடன் (கூடி),
வானக்கண் தாகனம் வண்ணா என்று ஓது ஒலி வந்து அடையா – “வானத்தில் தாவிச் செல்லுகிற மேகம் போன்ற
நிறத்தையுடையவனே!” என்று (திருமாலைத்) துதித்துச்சொல்லும் ஓசை தன் (செவிகளில்) வந்துநுழையப் பெறாத,
ஈனம் கண்டாகனற்கு – இழிவையுடைய கண்டாகர்ணனென்னும் பூதகணநாதனுக்கும்,
என் அப்பன் – எனது தலைவனான திருவேங்கடமுடையான்,
பரகதி ஈந்தான் – பரமபதத்தைத் தந்தருளினன்; (எ – று.)தாலமுடன் அடையா என்று இயையும்.

“எந்தைவானவர்க்கும், வணங்கரியா னன்றிக் காப்பாரில்லாமை விண்மண்ணறியும்,
வணங் கரியானவர் வாணன் கண்டாகனன் மார்க்கண்டனே” என்றபடி
ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருளென்று சாதித்தற்குச் சாக்ஷியாகிற திவ்வியசரித்திரங்களுள் முதலிற்
சிவபக்தியோடு விஷ்ணுத்வேஷமும் மேலிட்டிருந்த கண்டாகர்ணன் பின்புசிவனால் முத்திபெறமாட்டாது
கண்ணபிரானாற் பெற்றனனென்ற வரலாறு சிறத்தலால், அதனை இங்கு எடுத்துக்காட்டினர்,
‘திருமாலினிடத்து இத்துணைக்காலமாக மனப்பதிவில்லாது பெரும்பாதகராய் மாறுபாடுகொண்டிருந்த நாம் இப்பொழுது
அப்பிரானைச் சரண்புக்கால் அவன் காப்பனோ? காவானோ?’ என்று ஐயுறுவாரது சந்தேகத்தைப் போக்கக் கூறியதாக
இச்செய்யுட்குச் சங்கதி காணலாம்.
(“பாதகக்கண்டா கன்னனெனுமியக்கன் பத்தியற் றுன்பெரும்புகழைக்கேளோமென்று,
காதிரண்டிற் சத்தமிகு மணியைக் கட்டிக் கணப்பொழுதுமோயாம லசைத்திருக்கத்,
தீதுநினைந்தானென்றுன்மனத்தெண்ணாமற் சிந்தையினான் மறவாமல் தியானித்தானென்று,
ஏதமற வவனுக்குமவன் தம்பிக்கு மிரங்கி முத்தியளித்தனையே யெம்பிரானே” என்றார் பின்னோரும்.)

தத்துவப்பொருள்களை உள்ளபடிகாணுதற்குக் கருவியாதலால், ஞானம் ‘கண்’ எனப்பட்டது.
காண்பது கண் எனக் காரணக்குறி. ‘கனவொக்கும் பவம்’ என்றது, சொப்பனத்திலே காணப்பட்ட பொருள் போலப்
பிரபஞ்சவாழ்க்கை சிறிதும் நிலைபேறின்றி அழியுந்தன்மையதாதலால்;
“கண்டகனாவின் பொருள்போல யாவும்பொய்” என்பது திருவரங்கத்தந்தாதி.
பிறப்பை ஒழித்தருளுதலாவது – இனிப் பிறவியில்லாதபடி மீளாவுலகமாகிய முத்தியை யளித்தல்.

திருப்பாற்கடல்கடைகையில் அதனினின்று எழுந்ததோர் அதிபயங்கரமான பெருவிஷத்தைக் கண்டமாத்திரத்தில்
அதன்கொடுமையைப் பொறுக்கமாட்டாமல் அஞ்சியோடிச் சரணமடைந்த தேவர்களின் வேண்டுகோளினால்
அவ்விஷத்தைச் சிவபிரான் அமுதுசெய்து கண்டத்தில் நிறுத்தி அனைவரையும் பாதுகாத்தருளின னென்றும்,
தாம்தாம் கடவுளென்னுங் கருத்துக்கொண்டு ஒருவர்க்கொருவர் பகைமைபூண்டு போர்தொடங்கிய
பிரமவிஷ்ணுக்களின் மாறுபாட்டை யொழித்தற்பொருட்டுப் பரமசிவன் அவ்விருவர்க்கும் நடுவில்
ஒரு பெரிய சோதிமலைவடிவமாய்த் தோன்றி நின்றனனென்றும் சைவபுராணங்களிற் கூறப்படுகிற வரலாறுகளை
யுட்கொண்டு சைவர்கள் சிவனைத் துதிக்கிற மரபின்படி மகாசைவனாயிருந்த கண்டாகர்ணன்
“நஞ்சிருக்குந்தானக்கண்டா, கனற்சோதி” என்று ஏத்தினனென்றார்.
“கனச்சோதி” என்ற பாடமும் – திரண்ட சோதிவடிவானவனே யெனப் பொருள்படும்.
“விஷகண்டா! தழல்வண்ணா!” என்று கடுஞ்சொற்களால் துதிப்பவன் “முகில்வண்ணா! என்ற செவிக்கினிய
சொல்லைக் கேட்கவும் மாட்டாத வனாயின னெனக் கண்டாகர்ணனது இழிபை விளக்கியவாறு;
இங்கு “காணிலும்முருப்பொலார் செவிக்கினாதகீர்த்தியார்,
பேணிலும்வரந்தரமிடுக்கிலாத தேவரை,
யாணமென்றடைந்துவாழுமாதர் காளெம்மாதிபாற்,
பேணிநும்பிறப்பெனும் பிணக்கறுக்ககிற்றிரே” என்ற திருச்சந்தவிருத்தம் கருதத்தக்கது.

தாடையைக்குறிக்கிற “தாலு” என்ற வடசொல், தமிழில் நாவென்ற பொருளில் வருதலை “தமிழிலே தாலை நாட்டி” எனக்
கம்பராமாயணச் சிறப்புப்பாயிரத்திலுங் காண்க. தாலம், அம் – சாரியை, தா கனம் – வினைத்தொகை;
கீழ் 11 – ஆஞ்செய்யுளின் ஈற்றடியில் “தாமரை” என்றது போல, “வானக்கண் தா” என்றது, மேகத்துக்கு அடைமொழி;
மேகவண்ணனுக்கு அடைமொழியாகக் கொண்டால், உலகளந்த வரலாற்றைக் குறிக்கும்.

———–

என் அப்பன் ஆகத்துப் பொன் நூலன் வேங்கடத்து எந்தை துயில்
மன் அப்பன் நாகத்துக்கு அஞ்சல் என்றான் பல் மணி சிதறி
மின்னப் பல் நாகத்துப் பாய்ந்தான் கதை அன்றி வெவ்வினைகள்
துன்னப் பல் நா கத்துப் பொய்ந்நூல் புகா என் துளைச் செவிக்கே –77–

(இ – ள்.) என் அப்பன் – எனது ஸ்வாமியும்,
ஆகத்து பொன் நூலன் – திருமார்பிலே பொன்னினாலாகிய பூணூலைத் தரித்தவனும்,
துயில் மன் அப்பன் – சயனித்துத் துயில் பொருந்துதற் கிடமாகிற கடலையுடையவனும்,
நாகத்துக்கு அஞ்சல் என்றான் – (“ஆதிமூலமே” என்ற) யானைக்கு ‘அஞ்சாதே’ என்று சொல்லி அபயமளித்து (அதனை)ப் பாதுகாத்தவனும்,
பல்மணி சிதறி மின்ன – (பல முடிகளிலுமுள்ள) பலமாணிக்கங்கள் தெறித்து மின்னல்போல விளங்கும்படி,
பல் நாகத்து பாய்ந்தான் – பற்களையுடைய (காளியனென்னும்) பாம்பின்மீது வலியப்பாய்ந்திட்டவனுமான,
வேங்கடத்து எந்தை – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய,
கதை அன்றி – திவ்வியசரித்திரங்கள் என்காதுகளிற் செல்லுமேயல்லாமல், –
வெவ்வினைகள் துன்ன – கொடிய தீவினைகள் நெருங்க,
பல் நாகத்து – (பரசமயத்தாரது) பலநாக்குக்கள் கத்துதலையுடைய,
பொய் நூல் – பொய்யான சமயநூல்களின் பொருள்கள்,
என் துளை செவிக்கு புகா – எனது செவித்தொளைகளில் நுழையா; ( எ – று.)

“மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்றபடி தேவதாந்தரங்களிடத்தில் தமக்கு உள்ள உபேக்ஷையையும்,
பரதேவதையினிடத்தில் தமக்குஉள்ள அபேக்ஷையையும் இங்ஙனங் கூறி வெளியிட்டார்.

“ஆகத்துப் பொன்நூலன்” என்பது – திருமார்பிலே பொன்னையும் (திருமகளையும்) பூணூலையும் உடையவனென்றும் பொருள்படும்.
உபவீதத்தைப்போலவே பெரியபிராட்டியையும் எப்பொழுதும் நீங்காது தரிப்பவனென்க.
துயில் மன் அப்பன் – அப்பில் துயில் மன்னுபவன்; அப்பு – ஜலம்; இங்கு, பிரளயப்பெருங்கடல்; அப் – வடசொல்.
நாகத்தின் விஷப்பற்கள், காளி காளாத்திரி யமன் யமதூதி எனப் பெயர்பெறும்.

கத்து – முதனிலைத்தொழிற்பெயர்; இரண்டாம் வேற்றுமையுருபும்பயனுமுடன் தொக்கதொகை;
கத்துகிற என வினைத்தொகையாகக் கொண்டால், கத்துப்பொய்ந்நூல் என வருமொழிமுதல்வலிமிகாது,
துளைச்செவிக்கு – உருபுமயக்கம்.
“கேட்பினுங் கேளாத்தகையவே கேள்வியாற், றோட்கப்படாத செவி” என்றபடி நூற்கேள்வி யில்லாதசெவி
செவிட்டுச் செவியாதலால், அங்ஙனமன்றிப் பெரியோரிடத்து நுண்ணியபொருளைக் கேட்ட செவியென்பார், “துளைச்செவி” என்றார்.

———–

நாரை விடு தூது

செவித்தலை வன்னியன் சூடு உண்ட வேய் இசை தீப்பதும் யான்
தவித்து அலை வன்மயலும் தமர் காப்பும் தமிழ்க் கலியன்
கவித்தலைவன் திரு வேங்கடத்தான் முன் கழறுமின் பொன்
குவித்து அலை வந்து உந்து கோனேரி வாழும் குருகினமே –78-

(இ – ள்.) அலை – அலைகள்,
பொன் குவித்து வந்து உந்து – பொன்னைக் கொழித்துக்கொண்டுவந்து (கரைகளில்) மோதப்பெற்ற
கோனேரி – கோனேரியில்,
வாழும் – வாழ்கிற,
குருகு இனமே – நாரைகளின் கூட்டங்களே! –
வன்னியின் சூடுண்ட வேய் இசை – நெருப்பிற் சுடப்பட்ட மூங்கிலினாலாகிற புள்ளாங்குழலின் இசைப்பாட்டு,
செவித்தலை தீப்பதும் – (எனது) காதுகளினிடத்தைச் சுடுவதையும்,
யான் தவித்து அலைவல் மயலும் – யான் விரகதாபங்கொண்டு வருந்துகிற வலிய (எனது) மோகத்தையும்,
தமர் காப்பும் (பாங்கியர் செவிலியர் முதலிய) உற்றார் (சைத்யோபசாரஞ்செய்து என்னைப்) பாதுகாக்கும் வகையையும்,
தமிழ் கலியன் கவி தலைவன் திருவேங்கடத்தான் முன் கழறுமின் – தமிழ்ப்பாஷையில் தேர்ந்த திருமங்கை யாழ்வார் பாடிய
பாட்டுக்களுக்குத் தலைவனான திருவேங்கடமுடையானது முன்னிலையிற் (சென்று) சொல்லுங்கள்; (எ – று.)

தலைவனைப் பிரிந்த தலைவி அப்பிரிவாற்றாது வருந்தும்போது, அங்ஙனம் இரங்குமிடம் நெய்தல்நில மாதலால்,
திருவேங்கடமலையின் மீதுள்ள கோனேரியெனப்படுகிற ஸ்வாமிபுஷ்கரிணியில் வாழ்கிற குருகென்னும்
நீர்வாழ்பறவைகள் அந்நெய்தனிலத்துக்கழிக்கரையில் இரைதேடுதற்குவர அவற்றைநோக்கி
“எனது நிலைமைகளை எனது தலைவனான திருவேங்கடமுடையான் பக்கல் சொல்லுதற்கு
நீங்கள் எனக்குத் தூதாகவேண்டும்” என வேண்டுகிறாள்.

கூடினநிலையில் இன்பஞ்செய்யும் பொருள்கள்யாவும் பிரிந்தநிலையில் துன்பஞ்செய்தல் இயல்பாதலால்,
வேய்ங்குழலின் இனியசங்கீதம் தன் செவிகளைச் சுடுகிறதென்றாள்.
இடையர் மாலைப்பொழுதிற் பசுக்களை ஊர்க்கு ஓட்டிவரும்போது ஊதுகிற வேய்ங்குழலின்இசை அம்மாலைப்
பொழுதுக்குச்சூசகமாய்க் காமோத்தீபகமாகிப் பிரிந்தாரைவருத்து மென்பதை உணர்க;
“தீங்குழலீரூமாலோ” என்பது நம்மாழ்வார்பாசுரம்.
‘வன்னியிற் சூடுண்ட’ என்றது, வேய்க்கு அடைமொழி; பதப்படுதற்காக மூங்கிலை நெருப்பிற் காய்ச்சுதல் இயல்பு.
வேயிசைக்கு அடைமொழியாக்கொண்டு, நெருப்புப்போலச்சுடுதல் கொண்ட வேய்ங்குழலிசை யெனினுமாம்.
மயல் – ஆசை நோயாலாகிய மயக்கம். தோழியர்முதலியோர் செய்யுஞ் சீதோபசாரங்கள் விரகதாபத்தைத் தணிக்க
மாட்டாமையையு முட்படச் சொல்லுங்க ளென்பாள், “தமர்காப்புங் கழறுமின்” என்றாள்.

கோனேரி – கோன்ஏரி; ஸ்வாமி புஷ்கரிணி: திருவேங்கடமலையின்மேல் திருக்கோயிலுக்கு அருகிலுள்ள பிரதாநமான திவ்வியதீர்த்தம் இது.
திருவேங்கடமுடையானுக்கு அருகில் வாழ்கின்ற வாதலால் அவன் சந்நிதியிற் சொல்லுதற்கு உரியனவா மென்று உட்கொண்டு,
“திருவேங்கடத்தான்முன் கழறுமின் கோனேரிவாழுங்குருகினமே” என்றாள்.
‘கோனேரிவாழுங் குருகினமே’ என விளித்ததனால், அப்பறவைகள்போலத் தானும் திருவேங்கடமுடையான் கருணைக்கு
இலக்காகி அவனருகில் கோனேரிதீரத்தில் வாழ்தலை வேண்டினாளாம்.

ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்த வளவிலே, அவனது நிரந்தராநுபவத்தைப் பெற
விரும்பிய ஐயங்கார் தமது நிலைமையை அப்பெருமான் சந்நிதியில் விண்ணப்பஞ்செய்யும்படி
ஆசாரியர்களைப் பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
வெண்ணிறமுடையனவாய் இரண்டு இறகுகளுடன்கூடி எங்குங் கவலையற்றுத்திரிந்து தம்மையே யன்றித்
தமது பரிவாரத்தையும் பாதுகாப்பனவாய்க் கருமமேகண்ணாயிருந்து உத்தேசித்தகாரியத்தைச் சமயம் வாய்க்கும்போது
தவறாதுசெய்து முடித்துக்கொள்வனவான நாரைகளை, சுத்தசத்துவகுணமுடைமையால் உள்ளும்புறமும்
ஒக்க நிர்மலஸ்வபாவராய் ஞானம் ஒழுக்கம் என்ற இரண்டு சாதனங்களுடன் கூடித் திவ்விய தேசங்களிலெல்லாம்
கவலை யற்றுயாத்திரை செய்பவராய்த் தம்மையேயன்றித் தம்மையடுத்தவர்களையும் பாதுகாப்பவராய்க் காரியமே
கருத்தாயிருந்து அதனை உரியகாலத்தில் தவறாதுசெய்து முடிக்கவல்ல ஆசாரிய ரென்னத்தகும்.

“செவித்தலை வன்னியிற்சூடுண்ட வேயிசைதீப்பது” என்றது, பிரபத்தி மார்க்கத்தில் நிற்கிற தமக்குப்
பிரபஞ்ச விஷயங்கள் வெறுப்பைவிளைத்தலைக் கூறியவாறாம்.
“யான்தவித்தலை வன்மயல்” என்றது, தாம் அடைந்திருக்கிற மோகாந்தகாரத்தை உணர்த்தும்.
“தமர்காப்பு” என்றது, பரிவுடையாரும் ஞானிகளுமான அன்பர்கள் தம்மை ஆதரித்தலை.
“கோனேரிவாழுங் குருகினம்” – எம்பெருமானது திருக்கலியாணகுணங்களில் மூழ்கி ஆனந்தமடைகிற ஆசாரியரென்றபடி.
பாகவதர்கள் ஸ்வாமி புஷ்கரிணியில் நீராட்டஞ்செய்து களிப்பவராதலாலும்,
அவர்களை “கோனேரிவாழுங் குருகினம்” என்னலாம்.
இதனால், திருமலைவாஸத்தில் ஐயங்கார்க்குஉள்ள அபேக்ஷை குறிப்பிக்கப்பட்டதாம்;
பெருமாள்திருமொழியில் “வேங்கடத்துக், கோனேரிவாழுங் குருகாய்ப் பிறப்பேனே” என்றதும்,
அதன் வியாக்கியானத்தில் “வர்த்திக்குமென்கிற விடத்துக்கு வேறே வாசகசப்தங்கள் உண்டாயிருக்கச்செய்தே
“வாழும்” என்கிற சப்தத்தை இட்டபடியாலே, அங்குத்தைவாஸந்தானே போகரூபமாயிருக்கு மென்கை’ என்றதும் அறியத்தக்கவை. விரிப்பிற் பெருகும்.

திருவேங்கடமுடையான் திருமங்கையாழ்வாரது பாடல் பெற்றவனாதலால், “கலியன்கவித்தலைவன்” என்றார்.
நான்குவேதங்கட்கு ஆறுஅங்கங்கள்போல, நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு பிரபந்தங்கட்கு ஆறு அங்கங்களாகத்
திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்,
திருவெழுகூற்றிருக்கை, சிறியதிருமடல், பெரியதிருமடல் என்ற ஆறு திவ்வியப்பிரபந்தங்களுள்
திருக்குடந்தையின் விஷயமான திருவெழுகூற்றிருக்கையொன்றிலன்றி மற்றை ஐந்திலும் திருவேங்கடமுடையான் பாடப்பட்டுள்ளதனால்,
“கலியன்கவித்தலைவன் திருவேங்கடத்தான்” என்றல் தகும்.

“என்னாவிலின்கவி யானொருவர்க்குங் கொடுக்கிலேன்,
தென்னாதெனாவென்று வண்டுமுரல் திருவேங்கடத்து,
என்னானையென்னப்ப னெம்பெருமானுளனாகவே” என நம்மாழ்வார் தமது திவ்யப்பிரபந்தங்களின் தலைவன்
திருவேங்கடமுடையானே யென அறுதியிட்டுள்ளதனால், அவற்றின் அங்கங்களான கலியனது திவ்வியப்பிரபந்தங்கட்கும்
திருவேங்கடமுடையானே தலைவனென்னலா மென்பர் ஒருசாரார்.
கலியன் – மிடுக்குடையவன். சோழமண்டலத்தில் திருமங்கையென்னும்நாட்டிற் சோழராசனுக்குச் சேனைத்தலைமைபூணும்
பரம்பரையில் தோன்றி நீலனென்னும்பெயருடையராய்ப் படைக்கலத்தேர்ச்சி பெற்று அவ்வரசனுக்குச் சேனாபதியாகிப்
பகைவென்று அம்மன்னன்கட்டளைப்படி மங்கைநாட்டுக்கு அரசராகிய இவர்,
குமுதவல்லியென்னுங் கட்டழகியை மணஞ்செய்துகொள்ளுதற்பொருட்டு அவள்சொற்படி நாள்தோறும்
ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்வித்து வருகையில், கைப்பொருள் முழுதும் செலவாய்விட்டதனால்,
வழிபறித்தாகிலும் பொருள்தேடிப் பாகவத ததீயாராதநத்தைத் தடையறநடத்தத்துணிந்து வழிச்செல்வோரைக்
கொள்ளையடித்துவரும்போது, ஸ்ரீமந்நாராயணன் இவரை ஆட்கொள்ளக்கருதித் தாம் ஒருபிராமணவேடங்கொண்டு
பல அணிகலங்களைப் பூண்டு மணவாளக்கோலமாய் மனைவியுடனே இவரெதிரில் எழுந்தருள,
இவர் கண்டு களித்து ஆயுதபாணியாய்ப் பரிவாரத்துடன்சென்று அவர்களைவளைந்து வஸ்திராபரணங்களையெல்லாம் அபகரிக்கையில்,
அம்மணமகன் காலிலணிந்துள்ள மோதிரமொன்றைக் கழற்றமுடியாமையால் அதனையும் விடாமற் பற்களாலே கடித்துவாங்க
அம்மிடுக்கை நோக்கி எம்பெருமான் இவர்க்கு “கலியன்” என்றுபெயர் கூறினான்.
பின்இவர் பறித்த பொருள்களையெல்லாம் சுமையாகக்கட்டிவைத்து எடுக்கத்தொடங்குகையில்,
அப்பொருட்குவை இடம்விட்டுப்பெயராதிருக்க, கண்டு அதிசயித்து அவ்வந்தணனைநோக்கி
“நீ என்ன மந்திரவாதம் பண்ணினாய்? சொல்” என்று விடாது தொடர்ந்து நெருக்க,
அப்பொழுது அந்த அழகிய மணவாளன் “அம்மந்திரத்தை உமக்குச் சொல்லுகிறோம் வாரும்” என்று
இவரை அருகில் அழைத்து அஷ்டாக்ஷரமகாமந்திரத்தை இவர்செவியில் உபதேசித்தருளி உடனே
கருடாரூடனாய்த் திருமகளோடு இவர்முன் சேவைசாதிக்க,
அத்திருவுருவத்தைத் தரிசித்ததனாலும், முன்பு காலாழிவாங்கியபொழுது பகவானுடைய திருவடியில் வாய்வைத்ததனாலும்,
இவர் அஜ்ஞாநம் ஒழிந்து தத்துவஞானம் பெற்றுக் கவிபாடவல்லராகிச் சிறந்த ஆறுபிரபந்தங்களைப் பாடினர்.
இவர் “நாலுகவிப்பெருமாள்” என்ற பிருது பெறும்படி தமிழ்வல்ல ராதலால், “தமிழ்க்கலியன்” எனப்பட்டனர்.
கலியனது தமிழ்க்கவி யென்று இயைப்பினுமாம்.

————–

குருகூரர் அங்க மறைத் தமிழ் மாலை குலாவும் தெய்வ
முருகு ஊர் அரங்கர் வட வேங்கடவர் முன் நாள் இலங்கை
வரு கூரர் அங்கம் துணித்தார் சரணங்கள் வல்வினைகட்கு
இரு கூர் அரங்கள் கண்டீர் உயிர்காள் சென்று இரவுமினே –79-

(இ – ள்.) உயிர்காள் – பிராணிகளே! –
அங்கம் – (திருமங்கையாழ்வார் அருளிச்செய்த ஆறுபிரபந்தங்களாகிய ஆறு) அங்கங்களையுடைய,
குருகூரர் மறை தமிழ் மாலை – நம்மாழ்வார் அருளிச்செய்த நான்குதமிழ்வேதமாகியபாமாலைகளில்,
குலாவும் – பொருந்திய,
தெய்வம் முருகு – தெய்வத்தன்மையுள்ள நறுமணம்,
ஊர் – வீசப் பெற்ற,
அரங்கர் – ஸ்ரீரங்கநாதரும்,
முன்நாள் இலங்கை வரு கூரர் அங்கம் துணித்தார் – முற்காலத்திலே இலங்காபுரியில் வந்துசேர்ந்த கொடியவர்களான இராக்கதர்களுடைய உடம்புகளைச் சேதித்தவருமான, வடவேங்கடவர் – வடதிருவேங்கடமுடையானது,
சரணங்கள் – திருவடிகள்,
வல் வினைகட்கு இரு கூர் அரங்கள் கண்டீர் – வலியஇருவினைகளையும் அறுத்தற்கு இரண்டு கூரிய வாள்விசேடங்களாம்;
சென்று இரவுமின் – (எம்பெருமான் பக்கல்)சென்று (உங்கள்வினைகளை அறுக்குமாறு அத்திருவடிகளைப்) பிரார்த்தியுங்கள்; (எ – று.) – கண்டீர் – தேற்றம்.

நம்மாழ்வாரது பாடல்களைப் பெற்றவ ரென்பது, முதல்விசேடணத்தினால் தேர்ந்தபொருள்.
பிரபந்தங்களை “தமிழ்மாலை” என்றதற்குஏற்ப, அவற்றின் சம்பந்தம் பெற்று விளங்குதலை முருகூர்தலாகக் குறித்தார்;
ஊர்தல் – பரத்தல். சிக்ஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறுசாஸ்திரங்களும்
நான்கு வேதங்கட்கு அங்கமாதல்போல, நம்மாழ்வாரது நான்குபிரபந்தங்கட்குத் திருமங்கையாழ்வாரது ஆறுபிரபந்தங்களும் அங்கமென்க.
“முன்னா ளிலங்கைவரு கூரரங்கந் துணித்தார்” என்றது – இராமாவதாரத்தில் இராவணன் முதலியராக்ஷசர்களை அழித்ததையேயன்றி,
அதற்குமுன்பு இலங்கையில் வாழ்ந்த மாலிமுதலிய பூர்விகராக்ஷசர்களைத் திருமாலின்வடிவமான உபேந்திரமூர்த்தி அழித்திட்டதையுங் குறிக்கும்.
இருதிறத்தரக்கர்களும் இலங்கையிற்பிறந்தவரன்றி அங்குக்குடியேறினவ ராதலால், ‘இலங்கைவருகூரர்’ எனப்பட்டனர்.
கூரர் – க்ரூரர் என்ற வடசொல்லின் விகாரம். அரம் – இரும்பு முதலிய வலியபொருள்களை அராவி
யழிக்குந்தன்மையுள்ள ஒருவகைவாள்.
இங்கு எம்பெருமான் திருவடிகள் கொடிய கருமங்களையொழிப்பனவாதலால், “வல்வினைகட்கு இருகூரரங்கள்” எனப்பட்டன;
உருவகவிசேடம். சரண் நங்கள் என்று பிரித்தும் பொருள் கொள்ளலாம்.

————–

இரணிய நாட்டன் இரணியன் ஈர் ஐந் தலையன் கஞ்சன்
முரணிய கோட்டின் நகத்தின் சரத்தின் முன் தாளின் துஞ்சத்
தரணியில் குத்தி இடந்து எய்து உதைத்தவன் சர்ப்ப வெற்பன்
அரணிய கேழல் அரி ராகவன் கண்ணன் ஆகி வந்தே –80-

(இ – ள்.) சர்ப்ப வெற்பன் – சேஷகிரியென்று ஒருபெயர் பெற்ற திருவேங்கடமலை யிலெழுந்தருளி யிருப்பவனான திருமால், –
அரணிய – அரண்போல அடுத்தவர்களைக் காக்குந்தன்மையுள்ள,
கேழல் – வராகமூர்த்தியும்,
அரி – சிங்கப்பிரானும்,
ராகவன் – ஸ்ரீராமனும்,
கண்ணன் – கிருஷ்ணனும், ஆகி வந்து -, – (முறையே), –
இரணியநாட்டன் – ஹிரண்யாக்ஷனும்,
இரணியன் – ஹிரண்யனும்,
ஈரைந்தலையன் – பத்துத்தலைகளையுடையவனான இராவணனும்,
கஞ்சன் – கம்ஸனும், –
முரணிய – வலிமையுள்ள,
கோட்டின் – கொம்பினாலும்,
நகத்தின் – நகங்களினாலும்,
சரத்தின் – அம்புகளாலும்,
முன் தாளின் – முந்திநீட்டிய காலினாலும்,
துஞ்ச – இறக்கும்படி, -(அவர்களை) தரணியில் – பூமியிலே,
குத்தி – குத்தியும்,
இடந்து – பிளந்தும்,
எய்து – தொடுத்தும்,
உதைத்தவன் – உதைத்தவனாவன்; (எ – று.)

கேழலாகி வந்து இரணிய நாட்டன் துஞ்சக் கோட்டினாற் குத்தியவன், அரியாகி வந்து இரணியன் துஞ்ச நகத்தினால் இடந்தவன்,
ராகவனாகி வந்து ஈரைந்தலையன் துஞ்சச் சரத்தினால் எய்தவன், கண்ணனாகி வந்து கஞ்சன் துஞ்ச முன்தாளினால் உதைத்தவன்
என நான்கடிகளிலும் முறையே இயைந்து பொருள்படுதலால், நிரனிறையணி.

ஹிரண்யாக்ஷன் என்ற பெயர் – பொன்னிறமான கண்களையுடையவனென்று பொருள்படுதலால்,
அதன் பரியாயநாமமாக “இரணியநாட்டன்” என்றார்; நாட்டம் – கண்; நாடுதற்கருவி.
ராகவன் – சூரியகுலத்துப் பிரசித்திபெற்ற ரகுவென்னும் அரசனது மரபில் தோன்றியவன்; தத்திதாந்தநாமம்.
ஆகிவந்து – இங்ஙனம் திருவவதரித்து என்றபடி. “சரத்தின்” என்றவிடத்து, “கரத்தின்” என்றும் பாடமுண்டு;
அப்பொழுது, கரத்தின் – கைகளால், எய்து – அம்புதொடுத்து என்க. அரண் – கோட்டை, மதிள், காவல். அரண்ய என்ற வடசொல்,
அரணிய என்று விகாரப்பட்ட தெனக்கொண்டு, காட்டிலே (சஞ்சரிக்குந்தன்மையுள்ள) என்று உரைத்தலு மொன்று.
சரண்ய என்ற வடசொல் அரணிய என்று விகாரப்பட்டுவந்த தெனக்கொண்டால், ரக்ஷகமான என்று பொருள்படும்.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: