ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –21-40-

இருபது மந்தரத் தோளும் இலங்கைக்கு இறைவன் சென்னி
ஒருபதும் அந்தரத்தே அறுத்தோன் அப்பன் உந்தி முன் நாள்
தருபதுமம் தர வந்தன நான்முகன் தான் முதலா
வருபதுமம் தரம் ஒத்த பல் சீவனும் வையமுமே –21-

(இ – ள்.) இலங்கைக்கு இறைவன் – இலங்காபுரிக்கு அரசனான இராவணனுடைய,
இருபது மந்தரம் தோளும் – மந்தரமலைபோன்ற இருபது தோள்களையும்,
சென்னி ஒருபதும் – பத்துத்தலைகளையும்,
அந்தரத்தே அறுத்தோன் – ஆகாயத்தே அறுத்திட்டவனான,
அப்பன் – திருவேங்கடமுடையானுடைய,
உந்தி முன் நாள் தரு பதுமம் – திருநாபி ஆதிகாலத்திற்பூத்த தாமரைமலர்,
தர – படைக்க, –
நான்முகன் தான் முதல் ஆ வரு – பிரமன் முதலாக வருகின்ற,
பதுமம் தரம் ஒத்த – பதுமமென்னுந் தொகையளவினவான,
பல் சீவனும் – பலபிராணிவர்க்கங்களும்,
வையமும் – உலகங்களும்,
வந்தன – தோன்றின; (எ – று.)

“ஒருநாலுமுகத்தவனோ டுலகீன்றா யென்பரதுன், திருநாபிமலர்ந்ததல் லால் திருவுளத்தி லுணராயால்” என்றார்
திருவரங்கக்கலம்பகத்தும்.
குலபர்வதங்களிலொன்றாய்ப் பாற்கடலைக்கடைந்த மலையாகிய மந்தரம், போரிற் பகைவர்சேனைக்கடல்கலக்கவல்ல
வலிய பெரியதோள்களுக்கு உவமை கூறப்பட்டது.
இறைவன் – இறைமையென்றபண்பினடியாப் பிறந்த பெயர்; வ் – பெயரிடைநிலை.
இராவணனது தோள்களும் தலைகளும் ஆகாயத்தை யளாவிவளர்ந்துள்ளன வாதலால், அவற்றை “அந்தரத்தேயறுத்தோன்” என்றார்.
“அந்தரத்தே யறுத்தோன்” என்பதற்கு – (உடம்பினின்று) வேறுபடும்படி அறுத்திட்டவ னென்றும்,
(போரின்) இடையிலே அறுத்திட்டவ னென்றும் பொருள்கொள்ளலாம்; அந்தரம் – ஆகாயம்,
வேறுபாடு, இடை. பத்மம், ஜீவன் – வடசொற்கள். நான்முகன் – நான்குதிசையையும் நோக்கிய நான்குமுக முடையவன்.
தான் – அசை. பதுமமென்பது – ஒரு பெருந்தொகை; அது, கோடியினாற் பெருக்கிய கோடி. ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்,
பதினாயிரம், நூறாயிரம் (லக்ஷம்), பத்துலக்ஷம், நூறுலக்ஷம் (கோடி), பத்துக்கோடி, நூறுகோடி, ஆயிரங்கோடி, பதினாயிரங்கோடி,
லக்ஷங்கோடி, பத்துலக்ஷங்கோடி, நூறுலக்ஷங்கோடி என முறையே எண்வகுப்புக் காண்க:
இங்ஙனம் ஒன்றுமுதற் பதினைந்தாவதுதானமான நூறுலக்ஷங்கோடியே பதுமமென வழங்கும்; (100000000000000).
கோடாகோடி யெனவும் படும். இங்குப் பதுமமென்றது, பெருந்தொகை யென்றவாறாம். வையம் – (பொருள்களை) வைக்கும் இடம்.

———–

வையம் அடங்கலும் ஓர் துகள் வாரி ஒருதிவலை
செய்ய மடங்கல் சிறு பொறி மாருதம் சிற்றுயிர்ப்பு
துய்ய மடங்கல் இல் ஆகாயம் தான் விரல் தோன்றும் வெளி
வெய்ய மடங்கல் வடிவான வேங்கட வேதியற்கே –22-

(இ – ள்.) வெய்ய மடங்கல் வடிவு ஆன – பயங்கரமான நரசிங்கவடிவ மாகிய,
வேங்கட வேதியற்கு – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனும் வேதங்களினால் எடுத்துரைக்கப்படுபவனுமான எம்பெருமானுக்கு, –
(ஐம்பெரும்பூதங்களில்), வையம் அடங்கலும் – பூமிமுழுவதும்,
ஓர் துகள் – ஒருதூசியாம்:
வாரி – ஜலம்முழுவதும்,
ஒரு திவலை – ஒரு நீர்த்துளியாம்;
செய்ய மடங்கல் – செந்நிறமான அக்கினிமுழுவதும்,
சிறு பொறி – சிறிய ஓர் அனற்பொறியாம்;
மாருதம் – காற்றுமுழுவதும்,
சிறு உயிர்ப்பு – சிறிய ஒருமூச்சாம்;
துய்ய மடங்கல் இல் ஆகாயம் தான் – சுத்தமானதும் மடங்குதலில்லாது பரந்ததுமான ஆகாயம் முழுவதும்,
விரல் தோன்றும் வெளி – விரல்களினிடையே தோன்றுகின்ற சிறிய வெளியிடமாம்; (எ – று.)

இரணியனைச் சங்கரித்தற்பொருட்டு நரசிங்கவடிவங்கொண்ட திருமால் விசுவரூபமாய்வளர்ந்த வடிவத்தின்
பெருமையை யெடுத்துக்கூறுவார், அப்பெருவடிவுக்கு முன் பஞ்சமகாபூதங்கள் மிகச்சிறுபொருளாகத் தோன்றுதலை விளக்கினார்.
மற்றநான்குபூதங்களும் தன்னுள் ஒடுங்கப்பெற்றுநிற்கும் பெருமைதோன்ற,
ஆகாயத்திற்கு “மடங்கலில்” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. தான் – அசை. வாரி, மாருதம், ஆகாசம் – வடசொற்கள்.
மடங்கல் – (பிடரிமயிர்) மடங்குதலையுடைய தென ஆண்சிங்கத்துக்குக் காரணக்குறி; தொழிலாகுபெயரென்றாவது,
அல் – கருத்தாப் பொருள்விகுதியென்றாவது இலக்கணங் காண்க. வேதியன் – வேதவேத்யன், வேதப்ரதிபாத்யன்.
“அடங்கலும்” என்பதை எல்லாப்பூதங்கட்கும் எடுத்துக் கூட்டுக. துய்ய என்ற குறிப்புப்பெயரெச்சத்தில்,
தூய்மையென்ற பண்புப்பகுதியின் ஈறு போய் முதல்நெடில் குறுகிற்று.

இச்செய்யுளில், பஞ்சபூதங்களும் முறைபிறழாமற் சொல்லப்பட்டது, அரதனமாலையணி;
வடநூலார் ரத்நாவளியலங்கார மென்பர்: சொல்லும் பொருள்களை முறைவழுவாதுவரச்சொல்லுதல், இதன் இலக்கணம்.

———–

வேதா வடம் அலை வெங்காலன் கையில் விடுவித்து என்னை
மாதா வடம் அலை கொங்கை உண்ணாது அருள் -மண் அளந்த
பாதா வடம் அலை மேல் துயின்றாய் கடற் பார் மகட்கு
நாதா வட மலையாய் அலர் மேல் மங்கை நாயகனே –23-

(இ – ள்.) மண் அளந்த பாதா – பூமியை யளந்த திருவடியை யுடைய வனே!
அலைமேல் வடம் துயின்றாய் – பிரளயப்பெருங்கடலில் ஆலிலை யின்மீது பள்ளிகொண்டு யோகநித்திரைசெய்பவனே!
கடல் பார் மகட்கு நாதா – கடல்சூழ்ந்த நிலவுலகத்தின் அதிதேவதையான பூமிப்பிராட்டிக்குத் தலைவனே!
வட மலையாய் – வடக்கிலுள்ள திருவேங்கடமலையில் எழுந் தருளியிருப்பவனே!
அலர்மேல் மங்கை நாயகனே – அலர்மேல்மங்கைப் பிராட்டிக்குக் கணவனே! – என்னை -,
வேதா வடம் அலை வெம் காலன் கையில் விடுவித்து – பிரமனும் பாசத்தாற்கட்டிவருத்துகிற கொடிய யமனும் என்கிற
இவர்களது கைகளினின்று விடுதல்பண்ணி,
மாதா வடம் அலைகொ ங்கை உண்ணாது – (யான் இனி) ஒருதாயினது ஆரங்கள்புரளப்பெற்ற தனங் களின் பாலை உண்ணாதபடி,
அருள் – கருணைசெய்வாய்; (எ – று.)

படைத்தற்கடவுளான பிரமனது கைவசத்தினின்று விடுவித்தலாவது – பிறப்புத்துன்பமில்லாதபடி செய்தல். பிராணிகளை
யழிப்பவனான யமனது கைவசத்தினின்று விடுவித்தலாவது – மரணவேதனையும் நரகத்துன்பமுமில் லாதபடி செய்தல்.
மாதாகொங்கை யுண்ணாதருளுதலாவது – மீளவும் பிறப் பில்லாதபடி செய்தல். எனக்கு ஜநந மரணதுக்கங்களைப் போக்கி
யான் மீண்டும் ஒருபிறப்பெடுக்கவேண்டாதபடி எனதுகருமங்களையெல்லாந் தொலைத்து மீளாவுலகமாகியமுத்தியை
எனக்குத்தந்தருளவேண்டு மென்ற பொருளை இங்ஙனம் வேறுவகையாற்கூறினது, பிறிதினவிற்சியணி.
வேதாஎன்றவட மொழிப்பெயர் – விதித்தற்கடவுளென்றும், காலன் என்ற வடமொழிப்பெயர் –
(பிராணிகளின்) ஆயுட்காலத்தைக் கணக்கிடுபவ னென்றும் காரணப் பொருள்படும்.
வடம் – கயிற்றுவடிவமான யமனாயுதம். வடம் மலை என்றும் பதம்பிரிக்கலாம்: மலைதல் – பொருதல்.
கையில் – இல் – ஐந்தனுருபு, நீக்கம். வடம் – மணிவடம். அலர்மேல்மங்கை என்றது, திருவேங்கடமுடையானது தேவியாரின் திருநாமம்;
“அகலகில்லேனிரையுமென் றலர்மேன் மங்கை யுறைமார்பா,…… திருவேங்கடத்தானே” என்ற திருவாய்மொழியைக் காண்க:
தாமரைமலரின்மேல் வாழ்கின்றவ ளென்பது பொருள்; பத்மாவதீ என்ற வடமொழித்திருநாமமும் இப்பொருள்படுவதே.
“பார்மகட்கு நாதா” என்பதற்கு – பூமிதேவியின் பெண்ணான (பூமியினின்று தோன்றியவளான)
சீதாபிராட்டிக்குக் கொழுநனே யென்றும் உரைக்கலாம்.

———-

நாயகராத் திரியும் சில தேவர்க்கு நாண் இலை கொல்
தூய கராத்திரி மூலம் எனாமுனம் துத்திப் பணிப்
பாயக ராத்திரி மேனி அம்மான் பைம்பொன் வேங்கடவன்
தீய கராத்திரி சக்கரத்தால் கொன்ற சீர் கண்டுமே –24-

(இ – ள்.) தூய கராத்திரி – பரிசுத்தமான யானை,
மூலம் எனா முனம் – ஆதிமூலமேயென்றுகூப்பிடுதற்குமுன்னமே (கூப்பிட்டவுடனே வெகுவிரைவில் என்றபடி),
துத்தி பணி பாயகம் ராத்திரி மேனி அம்மான் பைம் பொன் வேங்கடவன் – புள்ளிகளையுடைய படமுள்ள ஆதிசேஷனாகிய சயநத்தையும் இருள்போலுங் கரியதிருமேனியையுமுடைய தலைவனும் பசும் பொன்விளையுந்திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்,
தீய கரா – (அந்தயானையைக்கௌவியிருந்த) கொடிய முதலையை,
திரி சக்கரத்தால் கொன்ற – சுழற்றிவிட்ட சக்கராயுதத்தினாற் கொன்ற,
சீர் – சிறப்பை,
கண்டும் – பார்த்திருந்தும், –
நாயகர் ஆ திரியும் சில தேவர்க்கு நாண் இலைகொல் – கடவுளரென்று திரிகின்ற வேறுசில தேவர்களுக்கு வெட்கமில்லையோ? (எ – று.)

திருமாலே பரம்பொரு ளென்ற உண்மையை இங்ஙனங் காரணங் காட்டி வெளியிட்டார்.
கஜேந்திராழ்வான் இன்னதெய்வமென்று பெயர் குறியாது “ஆதிமூலமே!” என்று பொதுப்படக் கூப்பிட்டபொழுது
திருமாலல்லாத பிறதேவரெல்லாரும் தாம்தாம் அச்சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதி யொழிய,
அதற்குஉரிய அத்திருமால்தானே வந்து அருள் செய்தமை கருதத்தக்கது;

“அழைத்தது செவியிற்கேட்டும் அயனரனாதியாயோர்,
புழைக்கைவெங்கரிமுன் காப்பப் புகுந்தில ராதியாகித்,
தழைத்த காரணனேயென்ற தனிப்பெயர்ப்பொருள் யாமல்லோம்,
இழைத்தகாரியம் யாமாவோ மென்செய்துமாலின் றென்றார்” என்ற ஸ்ரீபாகவதத்தையுங் காண்க.

“கானேந்துதாமரைவாவியுளானை கராவினயர்ந்து,
ஊனேந்திமூலமெ ன்றோதியநாட்சென்றுதவுகையால்,
தேனேந்து சோலையரங்கனல்லால் தெய்வமில்லையென்றே,
மானேந்துகையன் மழுவேந்தினா னிந்தமாநிலத்தே”,

“மத்தக் கரியைக் கராப்பற்றிநின்றதொர் வாவியுள்ளே,
சித்தந்தெளிந்து முறையிடும்போது செழுந்துளவக்,
கொத்துக்கிளர்முடிக் கோவிந்தவென் றதுகூப்பிட்டதோ,
செத்துக்கிடந்தனவோ கெடுவீ ருங்கள்தெய்வங்களே”,

“வெங்கண்வேழமூலமென்ன வந்த துங்கள்தேவனோ” என்று இவ்வாசிரியர் பிறவிடங்களிற் கூறியவை இங்கு ஒப்புநோக்கத்தக்கன.

மூலமென்றவுடனே கொன்றவென விரைவுகுறித்தற்பொருளில் ‘மூலமெனாமுனம் கொன்ற’ எனக் காரணத்தின்
முன் காரியம் நிகழ்ந்ததாகக் கூறினது, மிகையுயர்வுநவிற்சியணி.
ஆக, இல்லை, என்னா, முன்னம் என்பன – ஆ. இலை, எனா, முனம் என்று தொகுத்தல்விகார மடைந்தன.
பரம்பொருளுணர்ச்சி கைகூடப் பெற்றதனால், ‘தூயகராத்திரி’ என்று சிறப்பித்துக் கூறினார்.
கராத்திரி – தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்; கரஅத்ரி என்றுபிரிந்து, துதிக்கையையுடையமலை யென்றுபொருள்படும்:
எனவே, யானையாயிற்று; ‘கைம்மலை’ என்பது, இப்பொருள்கொண்ட தமிழ்ப் பெயர்; பிறகுறிப்பு.
பணம் – படம்; அதனையுடையது பணீ என வடமொ ழிக்காரணக்குறி; இது ஈயீறு இகரமாய்ப் பணியென நின்றது.
பாய் அகம் – பாயின்இடம். ராத்ரி, க்ராஹம், சக்ரம், ஸ்ரீ என்ற வடசொற்கள் விகாரப் பட்டன. ராத்திரிமேனி –
“இருளன்னமாமேனி” ராத்திரி இருளுக்குக் காலவாகுபெயர். அம்மான் – அந்த மகான்.
பொன் குறிஞ்சி நிலத்துக் கருப் பொருள்களுள் ஒன்றாதலின், ‘பைம்பொன்வேங்கடம்’ எனப்பட்டது;
“பொன்னும்மணியும் பொலிந்தோங்கிப் பார்மகட்கு, மின்னுமணிமுடியாம் வேங்கடமே” என்றார் திருவேங்கடமாலையிலும்,
தீய கரா – கொண்டது விடாத மூர்க்ககுணமுடைய முதலை. கண்டும், உம் – உயர்வுசிறப்பு.

———-

கண்டவன் அந்தரம் கால் எரி நீர் வையம் காத்து அவை மீண்டு
உண்டவன் அம் தரங்கத்து உறைவான் உயர் தந்தை தமர்
விண்டவன் அந்த மேலவன் வேங்கடமால் அடிமை
கொண்ட அனந்தரத்து உம்பர் நினைக்கவும் கூற்று அஞ்சுமே –25–

(இ – ள்.) அந்தரம் – ஆகாயம்,
கால் – காற்று,
எரி – நெருப்பு,
நீர் – ஜலம்,
வையம் – பூமி,
(என்ற ஐம்பெரும்பூதங்களையும்),
கண்டவன் – படைத்தவனும்,
அவை – அவற்றை,
காத்து, பாதுகாத்து,
மீண்டு – பின்பு (கற்பாந்தகாலத்தில்),
உண்டவன் – உட்கொண்டு தன்வயிற்றில் வைத்தருளியவனும்,
அம் தரங்கத்து உறைவான் – அழகிய (திருப்பாற்) கடலிற் பள்ளி கொண்டிருப்பவனும்,
உயர் தந்தை தமர் விண்டவன் – சிறந்த தந்தையும்மற்றையுறவினரும் இல்லாதவனும்,
அந்தரம் மேலவன் – பரமபதத்தி லெ “ந்தருளியிருப்பவனும், (ஆகிய),
வேங்கடம் மால் – திருவேங்கடமலையில் வாழ்கின்ற திருமாலுக்கு,
அடிமை கொண்ட அனந்தரத்து – (நீங்கள்) அடிமை செய்தலை மேற்கொண்டபின்பு,
உம் பேர் நினைக்கவும் கூற்று அஞ்சும் – உங்கள்பெயரை நினைத்தற்கும் யமன் அஞ்சுவான்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்.

அனைவரையும் அஞ்சுவிப்பவனான யமன் திருமாலடியார்க்கு அஞ்சுவன்: ஆதலால், நீங்கள் எம்பெருமானுக்கு அடிமை
பூண்டு உய்யக்கடவீர் என்று உலகத்தார்க்கு உபதேசித்தபடியாம்.
“நரகந்தரம்புவி யிம்மூன்றி டத்துநனிமருவு, நரகந்தரங்கித்து வெங்காலற்கஞ்சுவர் நாயகவா,
நரகந்தரம் புட்பிட ரே றரங்கர் நல்லாய்க்குலத்தி,ந ரகந்தரங்கமுற்றா ரடியார்க்கு நமனஞ்சுமே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
அடியார்கள் பிறவுயிர் கள்போலக் கருமபந்தமுடையவரல்ல ராகுதலால், கர்மிகளைத் தண்டிப்பவனான யமனுக்கு அஞ்சாராக,
அவர்களைக் குறித்து அவன் அஞ்சுவ னென்க. திருமாலடியார்க்கு யமன் அஞ்சுதலை
“திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன்னாமம், மறந்தும் புறந்தொழா மாந்த – ரிறைஞ்சியுஞ்,
சாதுவராய்ப் போதுமின்க ளென்றான் நமனுந் தன், தூதுவரைக் கூவிச்செவிக்கு” என்ற அருளிச்செயலினாலும் அறிக.

“ஒருகாலத்தில், பாசத்தைக் கையிலெடுத்துக் கொண்டு பிராணிகளைக் கொண்டுவரும்படி புறப்பட்ட தன்சேவகனை
யமதருமராசனானவன் அந்தரங்கத்தில் அழைத்து “ஓ படனே! நீ உன்தொழிலை நடத்திவருகையில்
ஸ்ரீமதுசூதநனை ஆசிரயித்தவரைத் தொடாதே, விட்டுவிடு; நான் மற்றவர்கட்குப்பிரபுவேயல்லது வைஷ்ணவர்கட்குப்பிரபு வல்லேன்……
“கமலநயன! வாசுதேவ! விஷ்ணுவே! தரணிதர! அத்சுத! சங்கசக்ரபாணி! நீ அடியேங்களுக்குச் சரணமாகவேண்டும்” என்று
எவர்கள் சொல்லிக்கொண்டேயிருப்பார்களோ, அப்படிப்பட்டமகா பரிசுத்தபுருஷரை ஓபடனே! நீ கண்ணெடுத்துப்பாராமல் தூர ஓடிப்போ;
விகார நாசாதிகளில்லாமல் சத்தியஞாநாநந்தமயனாய்ப் பிரகாசிக்கின்ற அந்த எம் பெருமான் எவனுடைய
இருதயகமலத்தில் வாசஞ்செய்துகொண் டிருப்பனோ, அந்தமகாபுருஷனுடைய கடாக்ஷம் பிரஸரிக்கு மிடங்களிலெல்லாம்
நீ செல்லத்தக்கவனல்லை: நானும் செல்லத்தக்கவனல்லேன்; பதறிச்சென் றால், அவ்வெம்பெருமானுடைய திருவாழியின்
தேஜோவிசேஷத்தினாலே பதராக்கப்படுவோம்; அந்தமகாபுருஷன் ஸ்ரீவைகுண்ட திவ்வியலோகத்துக்கு எழுந்தருளத்தக்கவன்”
என்று கூறினன்” என்ற வரலாற்றை ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் யமகிங்கரசம்வாதரூபமான வைஷ்ணவப்பிரபாவத்திற் பரக்கக் காணலாம

படைத்தல் காத்தல் ஒடுக்குதல் என்னும்முத்தொழிலையுஞ் செய்தருள் பவன் திருமாலே யென்பதை,
“கண்டவன்… காத்து அவை மீண்டு உண்டவன்” என்று விளக்கினார்.
கண்டவன்என்பது – செய்தவனென்னும் பொருளதாதலை, “முற்பகற் கண்டான் பிறன்கேடு” என்றவிடத்துங் காண்க;
உண்டாக்கிப் பார்த்தவ னென்க. அந்தரங் கா லெரி நீர் வையம் என்ற ஐம்பூதமுறைமை, உற்பத்திக்கிரமம்பற்றியது;
ஆகாயத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து அக்கினியும், அக்கினியிலிருந்து ஜலமும், ஜலத்திலிருந்து பூமியும் உண்டானதாக வேதம் ஓதும்.
அந்தரங்கத்து உறைவான் என்று எடுத்து, (அடியார்களுடைய) உள்ளத்தில் வாழ்பவனெனினும் அமையும்.
சீவகசிந்தாமணியில் “உயர்தந்தை” என்றவிடத்து ஆசிரியர் நச்சினார்க்கினியர்
“பிள்ளை யுயர்ச்சிமிகுதிக்குக் காரணமான தந்தை” என உரைத்துள்ளார். தமது – கிளைப் பெயர்.
பரமாத்மாவாகிய எம்பெருமான் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலநத்தின்பொருட்டுத் தனது இச்சையினால் இராமகிருஷ்ணாதி
அவதாரங்கள் கொள்ளும்போதன்றி இயல்பிலே ஜீவாத்மாக்கள்போலக் கருமவசத்தாலாகும் பிறப்பையும்
தந்தை தாய் மக்கள் தம்பி தமையன் முதலிய சுற்றத்தவரையு முடையவனல்ல னென்பது, “தந்தை தமர் விண்டவன்” என்பதன் கருத்து.

“உயரத்தமமர்விண்டவன்” என்ற பாடத்துக்கு – உயர் அத்தம் – சிறந்த அர்த்தத்தை (பரமார்த்தமாகிய ஞானப்பொரு ளடங்கிய கீதையை),
அமர் – பாரதயுத்தத்தில், விண்டவன் – (அருச்சுனனுக்குத்) திருவாய்மலர்ந்தருளிய வன் என்று பொருள் காண்க.
அதன்விவரம்: மகாபாரதயுத்தத்தில் முதல் நாட்போர்த்தொடக்கத்தில் எதிர்வந்துநின்ற வீரர்களெல்லாரும் பாட்டனும்
அண்ணன்தம்பிமாரும் மாமனும் உறவினரும் கல்விபயிற்றிய ஆசாரியரும் மனங்கலந்தநண்பரு மாகவே யிருக்கக் கண்டு
“உற்றாரையெல்லாம் உடன்கொன்று அரசாளப், பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்” என்றுஎண்ணிப் போர்
புரியேனென்று காண்டீவம்கைந்நெகிழத் தேர்த்தட்டின்மீதே திகைத்துநின்ற அருச்சுனனுக்குக் கண்ணன் தத்துவோபதேசஞ் செய்து
தனது விசுவரூபத்தைக்காட்டி அவனது மயக்கத்தை ஓட்டி அவனைப் போர்புரியுமாறு உடன்படுத்தினன் என்பதாம்.
அப்பொழுது உபதேசித்த தத்துவப்பொருளே, ஸ்ரீபகவத்கீதையென வழங்கப்படுகின்ற நூலாம்.
அர்த்தம், ஸமரம் என்ற வடசொற்கள் – அத்தம், அமர் என்று விகாரப்பட்டன.

நம் தரம் மேலவன் என்று பதம்பிரித்து, ஜீவாத்மாக்களாகிய நம்முடைய தகுதிக்கெல்லாம் மேம்பட்ட
நிலைமையுடைவனென்று உரைத்தலுமொன்று. மால் அடிமைகொண்ட அநந்தரத்து என்பது,
திருமால் ஆட் கொண்டபின்பு என்றும் பொருள்படும். கூற்று – (பிராணிகளின் உடலையும் உயிரையும் வெவ்வேறு)
கூறாக்குந் தேவன். கூற்று அஞ்சும் – செய்யுமென்முற்று – ஆண்பாலுக்கு வந்தது.

————

அஞ்சு அக்கர வட மூலத்தன் போதன் அறிவு அரிய
செஞ்சக்கர வட வேங்கட நாதனை -தேசத்துள்ளீர்
நெஞ்சக் கரவடம் நீக்கி இன்றே தொழும் நீள் மறலி
துஞ்சக் கரவடம் வீசும் அக்காலம் தொழற்கு அரிதே –26-

(இ – ள்.) தேசத்து உள்ளீர் – நாட்டிலுள்ளவர்களே! –
அஞ்சு அக்கரம் வடம் மூலத்தன் – பஞ்சாக்ஷரமந்திரத்துக்குஉரியவனும் ஆலமரத்தினடியில்வீற்றிருந்தவனுமான சிவபிரானும்,
போதன் – பிரமதேவனும்,
அறிவு அரிய – அறிதற்கு அரியவனான,
செம் சக்கரம் வட வேங்கடம் நாதனை – சிவந்தசக்கராயுதத்தையேந்திய வடதிருவேங்கடமுடையானை,
நெஞ்சம் கரவடம் நீக்கி இன்றேதொழும் – மனத்திலுள்ளவஞ்சனையைஒழித்து இப்பொழுதே (நீங்கள்) வணங்குங்கள்; (ஏனென்றால்,-)
நீள் மறலி – பெரியவடிவமுடைய யமன்,
துஞ்ச – (நீங்கள்) இறக்கும்படி,
கரம் வடம் வீசும் அ காலம் – தன்கையிற் கொண்ட பாசாயுதத்தை (உங்கள்மேல்) வீசும் அந்தஅந்திமகாலத்தில்,
தொழற்கு அரிது – வணங்குதற்கு இயலாது; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்.

“ஒற்றைவிடையனும் நான்முகனும் உன்னையறியாப் பெருமையோனே,”
“பெண்ணுலாஞ்சடையினானும் பிரமனு முன்னைக்காண்பா, னெண்ணிலாவூரியூழிதவஞ்செய்தார்வெள்கிநிற்ப” என்ற
ஆழ்வார்களருளிச்செயல்களைப் பின்பற்றி “வடமூலத்தன் போத னறிவரிய நாதன்” என்றும்,
“எய்ப்பென்னைவந்துநலியும்போ தங்கேது நானுன்னை நினைக்கமாட்டேன், அப்போதைக் கிப்போதே சொல்லிவைத்தேன்”
என்ற ஆழ்வாரருளிச்செயலைப் பின்பற்றி
“இன்றேதொழும் மறலிவடம்வீசுமக்காலம் தொழற்கரிது” என்றும் கூறினார்.
முன்னொருகாலத்திற் சிவபிரான் தக்ஷிணாமூர்த்தியென் னுங்குருவடிவமாய்க் கைலாசகிரியில் தென்சிகரத்திலே
கல்லாலமரத்தின் கீழ்வீற்றிருந்து பிரமபுத்திரரான ஸநகர் ஸநந்தநர் ஸநத்குமாரர் ஸநத்ஸுஜாதர் என்ற முனிவர்
நால்வர்க்கும் ஞானோபதேசஞ்செய்தன னாதலால், “வடமூலத்தன்” எனப்பட்டான்;
“ஆலநிழற்கீ ழறநெறியை நால்வர்க்கு, மேலையுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன் –
ஞால, மளந்தானை யாழிக்கிட ந்தானை யால்மேல், வளர்ந்தானைத் தான்வணங்குமாறு,”
“ஆலமரநீழலற நால்வர்க்கன்றுரைத்த, ஆலமமர்கண்டத்தரன்” என்றார் பெரியாரும்.
இங்குக் கூறிய நால்வர் – அகஸ்த்ய புலஸ்த்ய தக்ஷ மார்க்கண்டேய ரென்றலுமுண்டு.

அக்ஷரம், வடமூலம், சக்ரம், தேசம், கரம், காலம் – வடசொற்கள். கரவடம் – கபடம். மறல் – கொடுமை: அதனையுடையவன்,
மறலி; இ – பெயர்விகுதி. துஞ்சுதல் – தூங்குதல். இறத்தலைத் துஞ்சுதலென்பது, மங்கல வழக்கு;
மீளஎழுந்திராத பெருந்தூக்க மென்க. தொழற்குஅரிது என்ற விடத்து, நான்கனுருபு – கருத்தாப்பொருளில் வந்தது.

————-

தொழும் பால் அமரர் தொழும் வேங்கடவன் சுடர் நயனக்
கொழும் பாலனை ஒரு கூறு உடையான் நந்த கோபன் இல்லத்து
அழும் பாலன் ஆகிய காலத்து பேய்ச்சி அருத்து நஞ்சைச்
செழும் பால் அமுது என்று உவந்தாற்கு என் பாடல் சிறக்கும் அன்றே –27–

(இ – ள்.) சுடர் நயனம் கொழும் பாலனை – நெருப்புக்கண்ணைக் கொழுமையுள்ள நெற்றியி லுடையனான சிவபிரானை,
ஒரு கூறு உடையான் – (தனது திருமேனியில்) ஒரு பாகத்திலே (வலப்பக்கத்திலே) கொண்டவனும்,
நந்தகோபன் இல்லத்து – நந்தகோபனுடைய திருமாளிகையில்
அழும் பாலன் ஆகிய காலத்து – அழுகின்ற குழந்தையாய்த் தான் வளர்ந்தகாலத்தில்,
பேய்ச்சி அருத்து – பேய்மகளாகிய பூதனை ஊட்டிய,
நஞ்சை – விஷத்தை,
செழும் பால் அமுது என்று உவந்தான் – செழித்த பா லாகியஉண வென்று விரும்பி யுட்கொண்டவனுமான,
தொழும்பால் அமரர் தொழும் வேங்கடவற்கு – அடிமைத்தன்மையால் தேவர்கள் வணங்கப்பெற்ற திருவேங்கடமலையின் தலைவனுக்கு, –
என் பாடல் சிறக்கும் அன்றே – என்னுடைய கவியும் சிறந்ததாகுமன்றோ? (எ – று.) –
அன்றே – தேற்றம்.

தமோகுணதேவதையாகையால் உக்கிரமூர்த்தியான விஷகண்டனைத் தனது திருமேனியில் ஒருபக்கத்திலே ஏற்றுக்
கொண்டருளியவனும், வஞ்ச னையிற்சிறந்தபூதனை உண்பித்த விஷத்தை அமுதுபோல உட்கொண்டவனு மாகிய திருமால்,
அவ்வாறே, யான்பாடும் இழிவானசெய்யுள்களையும் குற்றம் பாராது இனியனவாக அங்கீகரிப்பன் என்பதாம்.
சுடர்நயனக் கொழும்பால னையொரு கூறுடையான், பேய்ச்சியருத்துநஞ்சைச் செழும்பாலமுதென்றுவந்தான் என்ற விசேஷணங்கள்
ஒருகருத்தை யுட்கொண்டன வாதலால், கருத்துடையடைமொழியணி. “உவந்தாற்கு” என்பதி லுள்ள நான்கனுருபு,
பிரித்து “வேங்கடவன்” என்பதனோடு கூட்டப்பட்டது. சுடர்நயனக் கொழும்பாலனை யொருகூறுடையான் –
“வலத்தனன் திரிபுரமெரித்தவன்”,
“பிறைதங்குசடையானை வலத்தேவைத்து” என்றார் ஆழ்வார்களும்.
அமரர் – “அயர்வறுமமரர்களதிபதி” என்ற திருவாய்மொழியிற் போல நித்தியசூரிக ளெனினுமாம்.

இச்செய்யுள், எம்பெருமானது திருவருட்சிறப்பைக் கூறு முகத்தால் அவையடக்கங் கூறியவாறாம்.

நயனம், பாலம், பாலன் – வடசொற்கள். பாலமுது – இருபெயரொட் டுப்பண்புத்தொகை; ஒருபொருட்பன்மொழியுமாம்.
அழும்பாலன் – சிறுகுழந்தை யென்றபடி; இன்னகாரணமென்று உணரவொண்ணாதபடியும் எளிதிற்
சமாதானப்படுத்தமுடியாதபடியும் அழுதல், சிறுகுழந்தையினியல்பு.

————

சிறக்கும் பதம் தருவார் திருவேங்கடச் செல்வர் செய்ய
நிறக்கும் பதம் தொழுது உய்ய எண்ணீர் -நெறியில் பிழைத்து
மறக்கும் பதந்தியும் சேலும் அசுணமும் வண்டினமும்
பறக்கும் பதங்கமும் போல் ஐவரால் கெடும் பாதகரே –28–

(இ – ள்.) மறம் கும்பம் தந்தியும் – கோபகுணத்தையும் மஸ்தகத்தையு முடைய யானையும்,
சேலும் – மீனும்,
அசுணமும் – அசுணமென்ற பறவையும்,
வண்டு இனமும் – வண்டுவகைகளும்,
பறக்கும் பதங்கமும் – பறக்கின்ற விட்டிற்பறவையும்,
போல் -, நெறியின் பிழைத்து – நன்னெறியினின் றுதவறி,
ஐவரால் கெடும் – பஞ்சேந்திரியங்களால் அழிந்துபோகின்ற,
பாதகரே – தீவினையுடையவர்களே! – (நீங்கள்),
சிறக்கும் பதம் தருவார் – (எல்லாப்பதவிகளினுஞ்) சிறந்த பரமபதத்தைத் (தம்அடியார்க்குத்) தந்தருள் பவரும்,
திருவேங்கடம் செல்வர் – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக் கின்றவரும் எல்லாச்செல்வங்கட்கும் உரியதலைவருமான எம்பெருமானுடைய,
செய்ய நிறக்கும் பதம் – சிவந்த நிறமமைந்த திருவடிகளை,
தொழுது – வணங்கி,
உய்ய – ஈடேறுமாறு,
எண்ணீர் – நினையுங்கள்; (எ – று.)

ஐம்பொறிகட்கு உரியசப்த ஸ்பர்ச ரஸரூப கந்தமென்னும் ஐம்புலன்க ளிலாசையாற் கெடுதற்கு,
யானை முதலிய ஐந்து பிராணிகள் உவமைகூறப்பட்டன. அதன் விவரம் –
யானை பரிசத்தால் அழியும்: எங்ஙனமெனின், – யானை பிடிக்கும்வேடச்சாதியர் யானைக்காட்டிற்சென்று அங்கு
ஒருபெரும்பள்ளம் பறித்து அதன்இப்புறத்தில் தாம்பழக்கியபெண்யானையை நிறுத்திவைக்க,
அப்புறத்திலுள்ள ஆண்யானை அதனோடுசேரும் விருப்பத்தால் ஓடிவருகையில் அப்படுகுழியில்வீழ்ந்து மேலேறமாட்டாது அகப்பட்டுக்கொள்ள,
அதனை அவ்வெயினர்கள் பின்பு தந்திரமாக விலங்கிட்டு மேலேற்றித் தம் வசப்படுத்திக்கொள்வர்;
இது, மெய்யென்னும் பொறிக்குஉரிய ஊற்றின்பத்திலாசையால் அழிந்தது.

மீன் ரசத்தால் அழியும்; எங்ஙனமெனின், –
செம்படவர் மீன்பிடித்தற்பொருட்டு நீர்நிலையிலிட்டதூண்டிலில் வைத்துள்ள தசையை யுண்ணவேண்டுமென்னும்
அவாவினால் மீன்விரைந்துவந்து அதில் வாய்வைத்து, அத்தூண்டில்முள் தன்வாயில்மாட்டிக் கொள்ளுதலால் மீள மாட்டாதாக,
அதனை வலைஞர் எடுத்துப் பறியிற்போகட்டுக்கொள்வர்;
இது, வாய்என்னும் பொறிக்கு உரிய சுவையின்பத்தி லாசையால் அழிந்தது.

அசுணம் சப்தத்தால் அழியும்; எங்ஙனமெனின், –
இசையறிவிலங்காகிய அசுணமென்னுங் குறிஞ்சிநிலப்பறவையைப் பிடிக்கக்கருதிய அந்நிலத்துமக்கள் செழுமையுள்ள
மலைச்சாரலிலே நிலாவிளங்கும் மாலைப்பொழுதில் வேய்ங்குழல்முதலியவற்றால் இனியஇசைபாட,
அச்சங்கீதத்தைக்கேட்டு ஆனந்தமடையவிரும்பி அப்பறவைகள் அருகில்வந்து அவ்வின்னிசையைச் செவியிலேற்றுப்
பரவசப்பட்டிருக்கிறசமயத்தில் அக்கொலையாளர் பறைகொட்ட அக்கொடியஓசையைக்கேட்டவுடன் அப்பறவைகள் இறந்துபடும்.
அவற்றை அவர் எடுத்துச்செல்வர்; இது, செவியென்னும்பொறிக்கு உரிய ஓசையின்பத்தி லாசையால் அழிந்தது.

வண்டு கந்தத்தால் அழியும்; எங்ஙனமெனின், –
வண்டுகள் மலர்களின் நறுமணத்தை அவாவித் தாமரைமுதலிய பெருமலர்களினிடையே புக்கிருக்கும்போது அவை குவிந்துகொள்ள,
அங்கு அகப்பட்டு வருந்தும்; அன்றியும், சண்பகமலரின் நறுமணத்தையும் அதன்நறுந்தேனையும் நுகரும் அவாவினால்
அதனை அணுகிமொய்த்து அதன் உஷ்ணம் தாக்கப் பொறாது இறந்துபடும்;
மற்றும், நறுமணவிருப்பினால் தேனிலேமொய்த்து அதனை மிகுதியாகஉண்டு மயங்கி மீளமாட்டாது சிக்கியழிதலும் உண்டு;
இது, மூக்கு என்னும் பொறிக்கு உரிய நாற்றவின் பத்திலாசையால் அழிந்தது.

விட்டில் ரூபத்தால் அழியும்; எங்ஙனமெனின், –
விட்டிற்பறவை விளக்கொளியைக் கண்டவுடனே அதனிடத்து அவாவோடு ஓடிவந்து விழுந்து இறக்கும்;
இது, கண்ணென்னும் பொறிக்கு உரிய ஒளியி லாசையால் அழிந்தது. ஐம்புல நுகர்ச்சியில் ஒவ்வொன்றால் அழிகின்ற
யானை முதலிய ஐந்து பிராணிகளையும், ஐம்புலன்களையும் ஒருங்கு நுகரத்தொடங்கி அழிகின்ற பாவிகட்கு உவமைகூறினார்.
“மணியிசைக்காவந்திடுமாச் செவியான்மாயும் மகிழ்புணர்ச்சிக்காகஇபம் மண்ணிற்சிக்கும்,
கணில்விளக்கைக்கண்டு விட்டில் வீழ்ந்து பொன்றும் கடுந்தூண்டிற்கவ்வி மச்சம் வாயான்மாளும்,
அணுகி யளி நாசியிற் செண்பகமோந்தெய்க்கும் ஐம்பொறியுமுடைய நா னலைந்திடாமல்,
இணையிலுபதேசத்தால் திருத்திக்காக்கைக்கு எழிற்குருவா யுதித்தனையே யெம் பிரானே,”
“அழுக்குடைப்புலன்வழி யிழுக்கத்தினொழுகி, வளைவாய்த் தூண்டிலினுள் ளிரைவிழுங்கும்,
பன்மீன்போலவும், மின்னுறுவிளக்கத்து விட்டில்போலவு, மாசையாம்பரிசத்தி யானைபோலவு,
மோசையின்விளிந்த புள்ளுப்போலவும், வீசியமணத்தின் வண்டுபோலவு, முறுவதுணராச் செறுவுழிச் சேர்ந்தனை” என்பவை இங்குக் காணத்தக்கன.

அசுணமென்பது ஒருவகைமிருக மென்றும், அது மானில் ஒருவகை யென்றும், அது வேடர்கள்பாடும்இனிய இசையைக்கேட்டு
ஆனந்தமடையவிரும்பி அருகில் ஓடிவந்து அவ்வின்னிசையைச் செவியிலேற்றுப் பரவசப்பட்டுநிற்கையில்
அவர்களாற் கவர்ந்து கொள்ளப்பட்டு அழியு மென்றுங் கூறுதலு முண்டு.

பதம், கும்பதந்தீ, பதங்கம், பாதகம் – வடசொற்கள். செல்வர் – இம்மை மறுமைவீடுகளில் அனுபவிக்கப்படுஞ்
செல்வங்கட்கெல்லாம் உரியதலைவர். திருவேங்கடச்செல்வர் செய்யநிறக்கும்பதம் தொழுது நெறியிற்பிழைத்து
(சந்மார்க்கத்தில் வாழ்ந்து) உய்ய எண்ணீர்: (அவர் உங்கட்குச்) சிறக்கும்பதந்தருவார் என்றுகூட்டிப் பொருள் கொள்ளினுமாம்.
பிழைத்துஎன்ற விடத்து “பிறழ்ந்து” என்றும் பாடமுண்டு.
“யானை, யறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்” என்றபடி தீராக்கோபமுடைய தாதலால், “மறம்” அதற்கு அடைமொழியாக்கப்பட்டது.
கும்பம் – யானைத்தலையிற் குடங்கவிழ்த்தாற் போலுள்ள உறுப்பு. தந்தமுடையது தந்தீ எனக் காரணக்குறி.

———-

பாதம் அரா உறை பாதளத் தூடு பகிரண்டத்துப்
போது அமர் ஆயிரம் பொன் முடி ஓங்கப் பொலிந்து நின்ற
நீதமர் ஆனவருக்கு எவ்வாறு -வேங்கடம் நின்றருளும்
நாத மராமரம் எய்தாய் முன் கோவல் நடந்ததுவே –29-

(இ – ள்.) வேங்கடம் நின்று அருளும் நாத – திருவேங்கடமலையில் நின்ற திருக்கோலமாக எழுந்தருளியிருந்து
(எல்லாவுயிர்கட்கும்) அருள்புரிகின்ற தலைவனே!
மராமரம் எய்தாய் – ஏழு மராமரங்களை அம்பெய்து துளைத்தவனே! –
பாதம் – திருவடிகள்,
அரா உறை பாதாளத்தூடு – பாம்புகள் வசிக்கின்ற பாதாளலோகத்திலும்,
போது அமர் ஆயிரம் பொன் முடி – (சூட்டிய) மலர்கள் பொருந்திய அழகிய ஆயிரந்திருமுடிகள்,
பகிர் அண்டத்து – இவ்வண்டகோளத்தின் மேன்முகட்டுக்கு வெளியிலும்,
ஓங்க – வளர்ந்துதோன்ற,
பொலிந்து நின்றாய் – (விசுவரூபத்தில்) விளங்கிநின்றவனான, நீ -,
முன் – முற்காலத்தில்,
தமர் ஆனவர்க்கு – நினது அடியார்களான முதலாழ்வார்கட்குக் காட்சிகொடுத்தற்பொருட்டு,
கோவல் நடந்தது – திருக்கோவலூரில் (அவர்களிருந்தவிடத்துக்கு) நடந்துசென்றது, எ ஆறு – எங்ஙனமோ? (எ – று.)

இச்செய்யுளின்கருத்து 82-ஆஞ் செய்யுளின் கருத்தோடு ஒப்பிடுக.
(“அன்றையிலும் வையமகன்றதோ வல்லவென்று, குன்றெடுத்து நீதிருத்திக் கொண்டாயோ – என்றும்,
அடைந்தாரைக் காக்கு மகளங்கா துங்கா, நடந்தாயே காலாறடி” என்பதும் இதுபோன்ற கருத்துக் கொண்டதே.)
இச் செய்யுளில் ஆதாரமாகிய கோவலூரினும் ஆதேயமாகிய திருமாலுக்குப் பெருமை கூறியிருப்பது, பெருமையணியின்பாற்படும்:
உலகுநிறைய உயர்ந்தோங்கினவன் உலகின் ஒருபகுதியில் நடந்தா னென்று குறித்திருப்பது, முரண்விளைந்தழிவணி;
இது திருமாலின் சொல்லொணாமகிமையைவிளக்கும்.

திருக்கோவலூர் – நடுநாட்டிலுள்ள திருமால்திருப்பதியிரண்டில் ஒன்றும்,
தென்பெண்ணையாற்றின் தென்கரையிலுள்ளதுமான ஒருதிவ்வியதேசம்.

பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் என்ற முதலாழ்வார் மூவரும், ஓடித்திரியும் யோகிகளாய், செஞ்சொற்கவிகளுமாகி,
தம்மில் ஒருவரையொருவர் அறியாமல் தனித்தனியே பலவிடத்தும் சஞ்சரித்து வருகையில், ஒருநாள்
சூரியாஸ்தமனமானபின் பொய்கையாழ்வார் திருக்கோவலூரையடைந்து அங்கு மிருகண்டுமுனிவரது திருமாளிகையிற் சென்று
அதனது இடைகழியிற் சயனித்துக்கொண்டிருந்தார்.
பின்னர் பூதத் தாழ்வாரும் அவ்விடத்திலே சென்று சேர, பொய்கையாழ்வார் “இவ்விடம் ஒருவர் படுக்கலாம்: இருவர் இருக்கலாம்” என்று
சொன்னபின், அவ்வாறே அவ்விருவரும் அங்கு இருந்தனர்.
அதன்பிறகு பேயாழ்வாரும் அவ்விடத்தை அடைந்திட, முன்னையரிருவரும்
“இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்” என்றுகூற, அங்ஙனமே அம்மூவரும்
அவ்விடத்திலே நின்றுகொண்டு எம்பெருமானுடைய திருக்கலியாணகுணங்களை ஒருவரோடொருவர்
சொல்லிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் மகிழ்ந்திருந்தனர். அவர்களை ஆட்கொண்டு அவர்களால் உலகத்தை உய்விக்கவேண்டு
மென்று நினைத்து அம்மூவரையும் ஓரிடத்திற் சேர்த்த திரிவிக்கிரம மூர்த்தி, அவர்களை அநுக்கிரகிக்கும்பொருட்டு
அப்பொழுது பேரிருளையும் பெருமழையையும் உண்டாக்கித் தான் சென்று அவர்களுடன் நின்று பெரு வடிவுகொண்டு
பொறுக்க வொண்ணாத அதிக நெருக்கத்தைச் செய்தருளினான்.
அவர்கள் “முன்இல்லாத நெருக்கம் இப்பொழுது உண்டானது என்னோ? பிறர் எவரேனும் இந்தஇடைகழியிற் புகுந்தவர் உண்டோ?” என்று
சங்கிக்கையில், பொய்கையாழ்வார் பூமியாகிய தகழியில் கடல்நீரை நெய்யாகக்கொண்டு சூரியனை விளக்காக ஏற்ற,
பூதத்தாழ்வார் அன்பாகியதகழியில் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தையைத் திரியாகவுங் கொண்டு ஞான தீபத்தை ஏற்ற,
இவ்விரண்டன் ஒளியாலும் இருள் அற்றதனால், பேயாழ்வார் பெருமானைத் தாம் கண்டமை கூறியவளவிலே,
மூவரும் எம்பெருமானுடைய சொரூபத்தைக் கண்ணாரக்கண்டு சேவித்து அனுபவித்து ஆனந்தமடைந்து,
அப்பெருங்களிப்பு உள்ளடங்காமையால் அதனைப் பிரபந்தமுகமாக வெளியிட்டு உலகத்தாரைவாழ்விக்கக்கருதி,
பொய்கையாழ்வார் “வையந் தகளியா” என்று தொடங்கி முதல் திருவந்தாதியைப் பாடியருள,
பூதத்தாழ்வார் “அன்பே தகளியா” என்று தொடங்கி இரண்டாந் திருவந் தாதியை அருளிச்செய்ய,
பேயாழ்வார் “திருக்கண்டேன்” என்று தொடங்கி மூன்றாந்திருவந்தாதியைத் திருவாய்மலர்ந்தருளினார் என்பது
இங்கு அறிய வேண்டிய வரலாறு.
பாதம், பாதாளம், பஹிரண்டம் – வடசொற்கள். ஆயிரமென்றது, எண்ணிறந்த பலவென்றமாத்திரமாய் நின்றது.

———-

நடைக்கு அலங்கார மடவார் விழிக்கு நகைக்கு செவ்வாய்க்கு
இடைக்கு அலங்கு ஆர முலைக்கு இச்சையான இவன் என்று என்னை
படைக்கலம் காணத் துரந்தே நமன் தமர் பற்றும் அன்றைக்கு
அடைக்கலம் காண் அப்பனே அலர் மேல் மங்கை அங்கத்தனே –30-

(இ – ள்.) அப்பனே – ஸ்வாமீ!
அலர்மேல் மங்கை அங்கத்தனே – அலர்மேன்மங்கைப்பிராட்டியைத் திருமேனியில் (திருமார்பில்) உடையவனே! –
அலங்காரம் மடவார் – (இயற்கையும் செயற்கையுமான) அழகுகளையுடைய இளமங்கையரது,
நடைக்கு – நடையழகுக்கும்,
விழிக்கு – கண்ணழகுக்கும்,
நகைக்கு – புன்சிரிப்பினழகுக்கும்,
செம் வாய்க்கு – சிவந்த வாயினழகுக்கும்,
இடைக்கு – இடையினழகுக்கும்,
அலங்கு ஆரம் முலைக்கு – புரளுகின்ற ஆரங்களை யணிந்த தனங்களி னழகுக்கும்,
இச்சை ஆன – விரும்பியீடுபட்ட,
இவன் -, என்று -,
எண்ணி – (என்னை) நினைத்து,
நமன் தமர் – யமதூதர்கள்,
படைக்கலம் – ஆயுதங்களை,
காண – (யான்) கண்டு அஞ்சும்படி,
துரந்து – (என்மீது) செலுத்தி (பிரயோகித்து),
பற்றும் – (என்னைப்) பிடித்துக்கொண்டுபோகும்,
அன்றைக்கு – அந்த அந்திமகாலத்தில் என்னைப்பாதுகாத்தற்பொருட்டு,
அடைக்கலம் காண் – (நான் இன்றைக்கே உனக்கு) அடைக்கலப்பொருளாகிறேன்காண்; (எ – று.) – காண் – தேற்றம்.

“வம்புலாங்கூந்தல்மனைவியைத் துறந்து பிறர்பொருள் தார மென்றி வற்றை,
நம்பினா ரிறந்தால் நமன்தமர்பற்றி யெற்றிவைத் தெரியெழுகின்ற,
செம்பினாலியன்றபாவையைப் பாவீ தழுவென மொழிவதற்கஞ்சி,
நம்பனே வந் துன்திருவடி யடைந்தேன்”,
“வஞ்சவுருவி னமன்றமர்கள் வலிந்து நலிந்தென்னைப் பற்றும்போது,
அஞ்சலமென் றென்னைக் காக்கவேண்டும்” என்ற அருளிச்செயல்களை அடியொற்றி இதுகூறினார்.
அடைக்கலம் – பாதுகாக்கப்படுதற்கு உரியதாகும் பொருள். எனக்கு நீ அடைக்கல மென்றுங் கொள்ளலாம்;
அப்பொழுது, அடைக்கல மென்பது – சரணமடையப்படு பொருள்: அதாவது – ரக்ஷக னென்ற பொருளை யுணர்த்தும்.

அலங்காரம், ஹாரம், இச்சா, அங்கம் – வடசொற்கள். மடவார் – மடமையையுடையவர்: மடமை – இளமை;
மாதர்க்கு அணிகலமான பேதைமையென்னுங் குணமுமாம். ஆரம் – பொன் மணிகளாலாகிய மார்பின்மாலை.
படைக்கலம் – போர்க்கருவி. நமன் – யமன் என்ற வடசொல்லின் சிதைவு.

————–

அங்கம் அலைக்கும் வினையால் அலமரவோ உனக்கும்
அம் கமலைக்கும் அடிமைப் பட்டேன் அரவு ஆனபரி
அங்க மலைக் குடையாய் அக்கராவுடன் அன்று அமர் செய்
அங்க மலைக்கு முன் நின்றருள் வேங்கடத்து அற்புதனே –31-

(இ – ள்.) அரவு ஆன – ஆதிசேஷனாகிய,
பரியங்க – கட்டிலையுடையவனே!
மலை குடையாய் – கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு பிடித்தவனே!
அ கராவுடன் – அந்த முதலையுடனே,
அன்று – அக்காலத்தில்,
அமர் செய் – போர்செய்த,
அங்கம் மலைக்கு – அவயவங்களையுடைய மலைபோன்றதான யானைக்கு,
முன் – எதிரில்,
நின்று – சென்று நின்று,
அருள் – (அதனைப்) பாதுகாத்தருளிய,
வேங்கடத்து அற்புதனே – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற ஆச்சரியகரமான குணஞ்செயல்களை யுடையவனே! –
அங்கம் அலைக்கும் வினையால் அலமரவோ – உடம்பை வருத்துகிற தீவினையினால் வருந்துதற்காகவோ,
உனக்கும் அம் கமலைக்கும் அடிமைப்பட்டேன் – உனக்கும் (உனது மனைவியான) அழகிய திருமகளுக்கும் அடிமைப்பட்டேன், (யான்)? (எ – று.)

கருணாநிதியான உனக்கும் புருஷகாரபூதையான பெரியபிராட்டிக்கும் யான் அடிமைப்பட்டபின்னரும் வினையினால்
வருந்துதல் ஏலா தாதலால், அங்ஙனம் வருந்தாதபடி எனக்கு அருள்புரியவேண்டு மென்பதாம்.

கமலை – கமலா என்ற வடசொல் ஆவீறுஐயாயிற்று; தாமரைமலரில் வாழ்பவள். பர்யங்கம் – வடசொல்; படுக்கை.
அக் கரா – தேவலனென் னும்முனிவனது சாபம்பெற்ற ஹூஹூஎன்ற கந்தருவனாகிய முதலை
அங்கமலை – துதிக்கை முதலிய உறுப்புக்களையுடைய மலை; எனவே, யானையாயிற்று.
இனி, அமர் செய் அங்கு – போர்செய்த அவ்விடத்தில் (நீர்நிலையில்), அ மலைக்கு – அந்த மலைபோன்ற யானைக்கு
என்று உரைகூறுதலு மொன்று; இப்பொருளுக்கு, அம்மலையென்பது அமலை யெனத் தொக்க தென்க.
முன் – இடமுன். அத்புதன் – வடசொல்.

இரண்டாமடியினிறுதியில் பரியங்கம் என்ற ஒருசொல்லைப் பரி அங்கம் என்றுபிரித்துப் பிரயோகித்தது, யமக நயத்தின்பொருட்டு.
(அதற்கு அறிகுறியாக மூலத்தில் இரண்டாமடியீற்றில் (-) இக்குறி இடப்பட்டது.) இங்ஙனம் சொல்லணிக்காகப் பிரித்துக்
காட்டியிருந்தாலும் பொருள்நோக் கும்பொழுது பரியங்க வென்று சேர்த்துப் படித்துக்கொள்க.
பர்யங்கம் என்ற வடசொல் பகுபதமாதலும், அது பிரிக்குமிடத்துப் பரி அங்கம் என்று பிரிதலுங் காண்க.

———-

அற்ப ரதத்து மடவார் கல்வியும் ஆங்கு அவர்கள்
நல் பரதத்து நடித்தலும் பாடலும் நச்சி நிற்பார்
நிற்ப ரத்தத்துக் கதிர் தோயும் வேங்கடம் நின்றருளும்
சிற் பரதத்துவன் தாள் அடைந்தேன் முத்தி சித்திக்கவே –32-

(இ – ள்.) அற்ப ரதத்து – சிற்றின்பத்தையேயுடைய,
மடவார் – இள மகளிரது,
கலவியும் – சேர்க்கையையும்,
அவர்கள் – அவ்விளமங்கையர்,
நல்பரதத்து நடிப்பதும் – நல்ல பரதசாஸ்திரமுறைப்படி நர்த்தநஞ்செய்வதையும்,
பாடலும் – (அவர்கள்) பாடுகின்ற இசைப்பாட்டையும்,
நச்சி நிற்பார் – விரும்பிநிற்கின்ற பேதையர்,
நிற்ப – நிற்க, (நான் அவர்களோடுசேராமல்),-
முத்தி சித்திக்க – பரமபதம் (எனக்கு) வாய்க்கும்படி, –
ரதத்து கதிர் தோயும் வேங்கடம் நின்று அருளும் சித் பர தத்துவன் தாள் அடைந்தேன் -தேரின் மேல்வருகிற சூரியன்
தவழப்பெற்ற திருவேங்கடமலையில் நின்றதிருக் கோலமாய் எழுந்தருளியிருந்து கருணைசெய்கிற ஞானமயமான
பரதத்வப் பொருளாகிய திருமாலினது திருவடிகளைச் சரணமடைந்தேன்; (எ – று.)

“நூலினேரிடையார்திறத்தே நிற்கும், ஞாலந்தன்னொடுங் கூடுவதில் லையான்,
ஆலியா வழையா வரங்கா வென்று, மாலெழுந்தொழிந்தே னென் றன்மாலுக்கே” என்றபடி,
விஷயாந்தரப்ரவணரோடு சேர்ந்து கெடாமல் பகவத்விஷயத்தில் ஈடுபட்டு வாழ்வுபெறுபவனானே னென்பதாம்.

அல்பரஸம், பரதம், ரதம், சித்பரதத்வம், முக்தி – வடசொற்கள். பாவம் ரஸம் தாளம் என்ற மூன்றையு முடைமைபற்றி,
இம்மூன்றுசொற்களின் முதலெழுத்துக்குறிப்புக்கள் தொடர்ந்து பரத மென்று நாட்டியத்திற்குப் பெயராயிற் றென்பர்.
சீவகசிந்தாமணியில் “ராசமாபுரி”, “ரவிகுலதிலகன்” என்றவை போல,
இங்கு ‘ரதம்’ என்பது, “ரவ்விற்கு” அம்முதலா முக்குறிலும்,….. மொழிமுதலாகிமுன்வருமே” என்றபடி
முதலில் இகரம்பெ றாது நின்றது. முக்தி – பற்றுக்களை விட்டு அடையுமிடம்; வீடு என்ற தமிழ்ப் பெயரும் இப்பொருள் கொண்டதே.
கலவி – கலத்தல்; ‘வி’ விகுதி பெற்ற தொழிற்பெயர். பாடல் – சங்கீதம். ரதத்துக் கதிர் – ஒற்றைத்தனியாழித் தேரையுடைய சூரியன்.
“கதிர்தோயும் வேங்கடம்” என்றது, மலையின் உயர்வை விளக்குந் தொடர்புயர்வுநவிற்சியணி.
பரதத்வன் – எல்லாப் பொருளுக்கும் மேம்பட்ட மெய்ம்மைப்பொருளாயுள்ளவன்.
சித்பரதத்வன் – உணர்ச்சியுடையதாதலால் “சித்” எனப்படுகிற ஜீவாத்மாவென்னுந் தத்வத்தைக் காட்டிலும்
மேம்பட்ட பரமாத்மதத்வமாயுள்ளவன் என்றுமாம். ஆங்கு – அசை.

———–

சித்திக்கு வித்து அதுவோ இதுவோ என்று தேடி பொய்ந்நூல்
கத்திக் குவித்த பல் புத்தகத்தீர் கட்டுரைக்க வம்மின்
அத்திக்கு இத்தனையும் உண்ட வேங்கடத்து அச்சுதனே
முத்திக்கு வித்தகன் என்றே சுருதி முறையிடுமே -33-

(இ – ள்.) சித்திக்கு வித்து – வீடுபேற்றிற்கு மூலம்.
அதுவோ – அப் பொருளோ,
இதுவோ – இப்பொருளோ,
என்று தேடி – என்று ஆராயத் தொடங்கி,
பொய் நூல் கத்தி – பொய்யான பரசமயநூல்களைத் தொண்டை நோகக் கதறிப்படித்து,
குவித்த – தொகுத்த,
பல் புத்தகத்தீர் – பல புத்தகங்களையுடையவர்களே! –
கட்டுஉரைக்க வம்மின் – (மோக்ஷசாதநமான பரம்பொருள் இன்னதென்ற உண்மைப்பொருளை யான்) உறுதியாகச் சொல்ல (அதுகேட்டு) உய்யவாருங்கள்: –
“அத்தி கு இத்தனையும் உண்ட – கடல் சூழ்ந்த உலகமுழுவதையும் (பிரளயகாலத்தில்) உட்கொண்டருளிய,
வேங் கடத்து அச்சுதனே – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற திருமாலே,
முத்திக்கு வித்தகன் – வீடுபேற்றுக்குச்சாதநமான ஞானசொரூபி,
“என்றே -, சுருதி முறையிடும் – வேதங்கள் பலமுறை வற்புறுத்திக்கூறி முழங்குகின்றன; (எ – று.)

“பரந்ததெய்வமும் பல்லுலகும் படைத் தன்றுடனேவிழுங்கிக்,
கரந்து மிழ்ந்து கடந்திடந்தது கண்டுந் தெளியகில்லீர்,
சிரங்களாலமரர்வணங்குந் திருக்குருகூரதனுட்,
பரன்திறமன்றிப் பல்லுலகீர் தெய்வம்மற்றில்லை பேசுமினே” என்றாற்போன்ற பாசுரங்களின் வாய்பாட்டைக் கொண்டது, இச்செய்யுள்.
“கத்தி” என்ற வினையின் ஆற்றலாலும், பொய்ந்நூல்களை யோதிய தெல்லாம் வீ ணென்பது விளங்கும்.
கட்டுரைக்க வம்மின் என்பதற்கு – நுமக்கு வல்லமையுண்டானால் எம்மோடு வாதஞ்செய்ய வாருங்க ளென்று சொற்போர்க்குப்
பிறரை வலியஅறைகூவியழைக்கின்றதாக வுரைத்தலு மொன்று;
இங்ஙனம் அழைத்தற்குக் காரணம், தாம் தவறாது பரமதநிரஸ நம்பண்ணி ஸ்வமதஸ்தாபநஞ்செய்து வாதப்போரில்
வெல்லலா மென்னுந் துணி வென்க. பிரளயகாலத்தில் எல்லாத் தெய்வங்களையும் வயிற்றில் வைத்துப் பாதுகாத்த
தேவாதிதேவ னென்பது தோன்ற, “அத்திக்குவித்தனை யும்முண்ட வேங்கடத்தச்சுதன்” என்றார்;
இது, முத்திக்குவித்தகனாதற்கு உரியவ னென்ற கருத்தை விளக்குதலால், கருத்துடையடைமொழியணி.
சரணமடைந்தவர்களைக் கைவிடாதவ னென்றும் அழிவில்லாதவ னென்றும் பொருள்படுகிற
“அச்யுதன்” என்ற திருநாமத்தாற் குறித்ததும் இச்சந் தர்ப்பத்திற்கு ஏற்கும்.

ஸித்தி, புஸ்தகம், அப்தி, அச்யுதன், ச்ருதி என்ற வடசொற்கள் விகா ரப்பட்டன.
அப்திஎன்பது – நீர்தங்குமிட மென்றும் (அப் – நீர்), ச்ருதி என் பது – (எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்யக்கிரமத்திலே கர்ணபரம்பரையாகக்)
கேள்வியில் வழங்குவ தென்றும் காரணப்பொருள் பெறும். கு – வடசொல். வித்து – விதை; இங்குக் காரண மென்றபடி.
இத்தனையும் – இவ்வளவும். இத்தனையும்முண்ட, மகரவொற்று – விரித்தல்.

————

முறையிடத் தேசம் இலங்கை செற்றான் முது வேங்கடத்துள்
இறை இடத்தே சங்கு உடையான் இனி என்னை ஆண்டிலனேல்
தறை இடத்தே உழல எல்லாப் பிறவி தமக்கும் அளவு
உறை இடத் தேய்ந்திடும் இவ்வந்தி வானத்து உடுக்குலமே –34-

(இ – ள்.) தேசம் முறையிட – உலகத்தவர்பலரும் குறைகூறிவேண்ட,
இலங்கை செற்றான் – இலங்கையிலுள்ள அரக்கர்களை அழித்தவனும்,
இடத்தே சங்கு உடையான் – இடக்கையிலே சங்கத்தை யுடையவனுமாகிய,
முது வேங்கடத்துள் இறை – பழமையான திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற பெருமான்,
இனி என்னை ஆண்டிலன் ஏல் – அவனை நான் சரணமடைந்தபின்பும் என்னை ஆட்கொள்ளாது விடுவனானால், –
தறையிடத்தே உழல் எல்லாப் பிறவிதமக்கும் – நிலவுலகத்திலே யான் மாறிமாறிப்பிறந்து திரியும் பலவகைப்பட்ட பிறப்புக்களுக்கெல்லாம்,
அளவு உறை இட – உறையிட்டுத் தொகைசெய்தற்கு,
இ அந்தி வானத்து உடு குலம் தேய்ந்திடும் – மாலைப்பொழுதிலே வானத்தில்விளங்குகின்ற இந்த நக்ஷத்திரக்கூட்ட மெல்லாம் (போதாது) குறைந்திடும்; (எ – று.)

இறைவன் என்னை ஆட்கொள்ளாவிட்டால், இன்னமும் அளவிறந்த பலசன்மங்களெடுத்து உழன்றுவருந்துவே னென்றபடி.
உறையிடுதலாவது – பொருள்களைக் கணக்கிடும்போது ஞாபகத்தின்பொருட்டு ஒவ்வொருபெ ருந்தொகைக்கு
ஒன்றாக இடுவதோர் இலக்கக்குறிப்பு.
இந்த நக்ஷத்திரங்க ளின்தொகை எனதுபிறவிகளின் தொகைக்கு உறையிடவும் போதாதென்று அப்பிறப்புக்களின்
வரம்பின்மையை விளக்கியவாறாம்.
“இராமன்கை, யம்பினுதவும் படைத்தலைவரவரை நோக்கி னிவ்வரக்கர்,
வம்பின்முலையா யுறையிடவும் போதார் கணக்குவரம்புண்டோ” என்ற கம்பராமாயணமும்,
“அன்றுபட்டவர்க் குறையிடப் போதுமோ வநேகநாளினும் பட்டார்” என்ற வில்லிபுத்தூரார் பாரதமும் இங்கு நோக்கத்தக்கவை.

தேசம் – இலங்கை – இடவாகுபெயர்கள். இறை – இறைவன்; பண் பாகுபெயர். “இனி” எதிர்காலங்குறிப்பதோர் இடைச்சொல்.
தரா என்ற வடசொல்லின் விகாரமான தரையென்பது இங்கு எதுகைநோக்கித் தறை யென்று விகாரப்பட்டது.
தறையிடத்து ஏய் உழல் என்று பதம் பிரித்து, மண்ணுலகத்திற் பொருந்தியுழலுதற்கு இடமான என்று உரைத்தலு மொன்று.

————-

உடுக்கும் உடைக்கும் உணவுக்குமே உழல்வீர் இன் நீர்
எடுக்கும் முடைக்குரம்பைக்கு என் செய்வீர் இழிமும் மதமும்
மிடுக்கும் உடைக்குஞ்சரம் தொட்ட வேங்கட வெற்பர் அண்ட
அடுக்கும் உடைக்கும் அவர்க்கு ஆட்படுமின் அனைவருமே -35-

(இ – ள்.) உடுக்கும் உடைக்கும் உணவுக்குமே உழல்வீர் – உடுத்துக் கொள்ளும் ஆடையையும் உண்ணும் உணவையும் தேடிப்பெறுதற்காகவே அலைகின்றவர்களே! –
இனி நீர் எடுக்கும் – இனிமேலும் நீங்கள் எடுக்கவே ண்டிய,
முடை குரம்பைக்கு – முடைநாற்றத்தையுடைய உடம்புகளை (பிறப்புக்களை) யொழிப்பதற்கு,
என் செய்வீர் – என்ன உபாயஞ் செய்வீர் கள்?
இழி மும் மதமும் – ஒழுகுகின்ற மூன்றுவகைமதஜலங்களையும்,
மிடுக் கும் – வலிமையையும்,
உடை – உடைய,
குஞ்சரம் – யானையை (கஜேந்தி ராழ்வானை),
தொட்ட – (தாம் அதற்கு அபயப்ரதாநஞ்செய்தற்கு அறிகுறி யாகத் தமதுதிருக்கையை அதன் தலைமேல்வைத்துத்) தொட்டருளிய,
வேங்கட வெற்பர் – திருவேங்கடமலையை யுடையவரும்,
அண்டம் அடுக்கும் உடைக்கும் அவர் – அண்டகோளங்களின் வரிசைகளையெல்லாம் (சங்கார காலத்தில்) அழிக்கின்றவருமான எம்பெருமானுடைய,
அடி – திருவடிகளை,
அனைவரும் காண்மின் – நீங்களெல்லாரும் தரிசியுங்கள்; (எ – று.)

தரிசித்தால் இனிப் பிறவியெடாது முத்திபெற்று உய்வீ ரென்பது, குறிப்பு. உடை – உடுக்கப்படுவது. முடை – புலால்நாற்றம்.
குரம்பை – சிறு குடிசை; உயிர் சிலநாள்தங்குஞ் சிறுகுடிசை போலுதலால், உடல், குரம்பை யெனப்பட்டது: உவமையாகுபெயர்.
“ஊனிடைச்சுவர்வைத்து என்பு தூண்நாட்டி உரோமம்வேய்ந்து ஒன்பதுவாசல், தானுடைக்குரம்பை” என்றார் திருமங்கையாழ்வாரும்.
மும்மதம் – கன்னமிரண்டும் குறியொன்றுமாகிய மூன்றிடத்தினின்றும் பெருகுவன;
கர்ணமதம் கபோலமதம் பீஜமதம் என்றலும் உண்டு. குஞ்சரந் தொட்ட வேங்கடவெற்பர் –
“ஆடியசிரசின் மீதில் அரிமலர்க்கையை வைத்து,
வாடினை துயரமெய்தி மனமொருமித்து நம்மை,
நாடினை யினியோர்நாளு நாசமேவாராதென்று,
நீடியவுடலைக்கையால் தடவின னெடியமாலும்” என்னுஞ் கஜேந்திரமோக்ஷமும் காண்க.
காண்மின் அனைவரும் என்றது, முன்னிலையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி; காண்மின் அனைவிரும் என்பது, வழாநிலையாம்.

————-

வரும் மஞ்சு ஆனவன் ஒருவனையே உன்னி வாழ்ந்தும் தொண்டீர்
கருமம் சனனம் களைந்து உய்ய வேண்டில் கருதிற்று எல்லாம்
தரும் அஞ்சன வெற்பன் தாள் தாமரையைச் சது முகத்தோன்
திரு மஞ்சனம் செய் புனல் காணும் ஈசன் சிரம் வைத்தே –36-

(இ – ள்.) தொண்டீர் – அடியார்களே! –
கருமம் சனனம் களைந்து உய்ய வேண்டில் – ஊழ்வினையினாலாகிற பிறப்புக்களை (நீங்கள்) ஒழித்து
(மீளாவுலகமாகிய முத்திபெற்று) வாழவேண்டுவீராயின்,
வரு மஞ்சு அனவன் ஒருவனையே உன்னி வாழ்த்தும் – (மழைபொழிய) வருகிற நீர்கொண்ட காளமேகத்தைப்
போன்றவனான ஒப்பற்ற திருமாலையே தியானித்துத் துதியுங்கள்:
கருதிற்று எல்லாம் தரும் – (அடியார்கள்) நினைத்த பொருள் களையெல்லாம் (அவர்கட்குக்) கொடுத்தருள்கிற,
அஞ்சன வெற்பன் – திரு வேங்கடமுடையானாகிய அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய,
தாள் தாமரையை – தாமரைமலர்போன்ற திருவடியை,
சதுமுகத்தோன் – நான்குமுகங்களை யுடையவனான பிரமன்,
திருமஞ்சனம் செய் – திருமஞ்சனஞ்செய்த,
புனல் காணும் – தீர்த்தமன்றோ,
ஈசன் சிரம் வைத்தது – சிவபிரான் தலையில் தரித்தது? (எ – று.)

திருமால் உலகமளந்தகாலத்தில் மேலே சத்தியலோகத்துச்சென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன் கைக்
கமண்டலதீர்த்தத்தாற் கழுவி விளக்க, அந்தஸ்ரீபாததீர்த்தமாகப்பெருகிய கங்காநதியைச் சிவபிரான் தனது
முடியிலேற்றுக்கொண்டு பின்பு பூமியில்விட்டன னென்பது, இங்கு அறியவேண்டியகதை.
(“குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்பெய்து, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் –
கறைகொண்ட, கண்டத்தான் சென்னிமே லேறக் கழுவினான், அண்டத்தான் சேவடியையாங்கு,”
“சதுமுகன்கையிற் சதுப்புயன்றாளிற் சங்கரன் சடையினிற் றங்கிக்,
கதிர்முகமணி கொண்டிழிபுனற்கங்கை” என்ற ஆழ்வார்களருளிச் செயல்களையும்,
“அண்ட கோளகைப்புறத்ததா யகில மன் றளந்த, புண்டரீக மென் பதத்திடைப் பிறந்து பூமகனார்,
கொண்ட தீர்த்தமா யரன்கொளப் பகிரதன்கொணர, மண்டலத்துவந்தடைந்த திம்மாநதிமைந்த” என்ற கம்பராமாயணத்தையும்,
“உலகந்தாய வுயரடிநின்றிழிந்து, அலரின்மேலவ னங்கைதவழ்ந்து பொற், றிலகவாணுதல்பங்கன்றிரள்சடை,
சுலவிவீழ்ந்தது தூநதி யிங்ஙனே” என்ற பாகவதத்தையுங் காண்க.)
“திரிமூர்த்திகளில் ஒருமூர்த்தி திருவடியைநீட்ட, மற்றொருமூர்த்தி அங்கு ஸ்ரீபாததீர்த்தம் சேர்க்க,
வேறொரு மூர்த்தி அத்திருவடித்தீர்த்தத்தைச் சிரமேற்கொண்டு புனிதனாயினன்: இவர்களிற் பெரியோன் யாவன்?
நீங்களே ஆராய்ந்தறிந்து சொல்லுங்கள்” என்று உலகத்தாரைநோக்கி உரைத்துப் பரம்பொருள் இன்னதென்று காரண
பூர்வமாக அறுதியிடுகின்ற கருத்து அமைய,
“அஞ்சனவெற்பன் றாட் டாமரையைச் சதுமுகத்தோன் திருமஞ்சனஞ்செய்புனல்காணும் ஈசன்சிரம் வைத்ததே” என்றார்.
(“தன்றாதை யவர் தாமரைத்தாள்விளக்கும் அலையாறு சூடும்,”
“செங்கண்மால்கழல்மஞ்சனம் விழுந் தொட்டி சங்கரன் தலைகளே”,
“மங்கைபாகன் சடையில் வைத்த கங்கை யார் பதத்து நீர்” என இவ்வாசிரியர் பிறவிடங்களிற் கூறியனவுங் காண்க.
“கேசவனார் சேடகிரிமா யர்க் கைந்துமுகத், தீச னதிபத்த னிதுசரதம் –
நேசமிகச், சங்கங்கை யேந்துமவர் தாட்புனலென்றே தினமு, மங்கங்கை சென்னிவைத்தானால்” என்ற திருவேங்கடக்கலம்பகச்செய்யுள்,
இதனை அடியொற்றியது போலும்.)

தம்நெஞ்சார எம்பெருமானுக்கு அடிமைப்படாத உயிர்களும் இயல்பில் அப்பெருமானுக்கு அடிமையே யாதலால்,
“தொண்டீர்” என்று விளித்தார். அனவன் – அன்னவன் என்பதன் தொகுத்தல். ஒருவன் – அத்விதீயன்.
கர்மம், ஜநநம், சதுர்முகம், மஜ்ஜநம், சிரஸ் என்ற வடசொற்கள் விகாரப் பட்டன.
கருதிற்று – ஒன்றன்பா லிறந்தகால வினையாலணையும்பெயர்; சாதியொருமை. கருதிற்று எல்லாம் – ஒருமைப்பன்மைமயக்கம்.
காணும் என்ற ஏவற்பன்மை முற்று, தேற்றப்பொருள்பட நின்றது. புனல்காண் நும்ஈசன் சிரம்வைத்தது என்று பிரித்து உரைத்து,
தொண்டீர் என்பதற்கு – சிவனடியார்களே யென்று பொருள்கொள்வாரு முளர்.

————

சிரம் தடிவான் இவனோ என்று அயன் வெய்ய தீய சொல்ல
கரம் தடிவான் தலை கவ்வ பித்து ஏறலின் கண்ணுதலான்
இரந்து அடி வீழ துயர் தீர்த்த வேங்கடத்து எந்தை கண்டீர்
புரந்து அடியேனைத் தன் பொன் அடிக்கீழ் வைக்கும் புண்ணியனே –37-

(இ – ள்.) “சிரம் தடிவான் இவனோ – (எனது) தலையைக் கொய்பவன் இவனோ?” என்று -,
அயன் – பிரமன், வெய்ய தீய சொல்ல – கொடிய தீச்சொற்களைக் கூறி யிகழ,
கரம் – (சிவபிரானது) கை,
தடி வான் தலை கவ்வ – தசையையுடைய பெரிய (பிரமனது) தலையைக் கொய்திட (அதுபற்றி),
பித்து ஏறலின் – பைத்தியங்கொண்டதனால்,
கண் நுதலோன் – நெருப்புக் கண்ணை நெற்றியிலுடையனான அச்சிவபிரான்,
இரந்து அடி வீழ – பிச்சையேற்றுவந்து திருவடிகளில் விழுந்து வணங்க,
துயர் தீர்த்த – (அவனது) துன்பத்தைப் போக்கியருளிய,
வேங்கடத்து எந்தை கண்டீர் – திருவேங்கட மலையில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானன்றோ,
அடியேனை – தாசனான என்னை,
புரந்து – பாதுகாத்து,
தன் பொன் அடி கீழ் வைக்கும் -தன்னுடைய அழகிய திருவடியில் வைத்தருளும்,
புண்ணியன் – பரிசுத்த மூர்த்தியாவான்; (எ – று.)

ஒருகாலத்திலே, பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்துதலை யுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு
இடமாயிருக்கின்ற தென்றுகருதி, அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட,
அக்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்டிக்கொள்ளுதலும், அவன் “இதற்கு என் செய்வது?” என்று கவலைப்பட,
தேவர்களும் முனிவர்களும் “இப்பாவந்தொ லையப் பிச்சையெடுக்க வேண்டும்:
என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையை விட்டு அகலும்” என்று உரைக்க,
சிவபிரான் பலகாலம் பலதலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக,
பின்பு ஒருநாள் பதரிகாச்சிரமத்தையடைந்து அங்குஎழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது,
அப்பெருமான் “அக்ஷயம்” என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையை விட்டு அகன்றது என்ற வரலாறு, இங்கு அறியத்தக்கது.

இவ்வரலாற்று முகத்தால், எம்பெருமானுடைய பரத்வத்தை வெளியிட்டு அப்படிப்பட்ட ஸர்வேச்வரனே யான்வழிபடுங்கடவு ளென்றார்.
(“பிண்டியார்மண் டையேந்திப் பிறர்மனைதிரிதந்துண்ணு, முண்டியான்சாபந்தீர்த்த வொருவனூர்,…..,
மண்டினாருய்யலல்லால் மற்றையார்க்குய்யலாமே” என்பது, திருமங்கையாழ்வார் பாசுரம்.
“அஞ்சக்கரத் தலைக்கங்கைய னேற்றலு மஞ்சிறைய,
அஞ்சக் கரத்தலைக் குண்டிகையான் மண்டை யங்கைவிட்டே,
அஞ்சக் கரத்தலைச் செய்து பித்தேக வரு ளரங்கன்,
அஞ்சக்கரத்தலைவன் றாளலான் மற்றரணில்லையே” என்றார் திருவரங்கத்தந்தாதியிலும்.
“வையத்தார் வானத்தார் மழுவாளிக் கன்றளித்த, ஐயத்தாற் சிறிதையந் தவிர்ந்தாரு முளரையா” எனக் கம்பர்கூறியதுங் காண்க)
பிரமன்தலையைச் சிவன் கொய்யவந்தபோது பிரமன் அவனை இகழ்ந்துபேசியதை முதலடியில் விளக்கினார்.

அஜன் என்ற வடசொல் – திருமாலிடத்தினின்று தோன்றியவ னென்று பொருள்படும்; அ – திருமால்.
தீய – பலவின்பாற் குறிப்புவினையாலணையும் பெயர். கண்டீர் என்ற முன்னிலைப்பன்மை யிறந்தகாலமுற்று,
இடைச் சொல்தன்மைப்பட்டுத் தேற்றப்பொரு ளுணர்த்தும்.
தடிதல் – துணித்தல். தடி – தசை. எந்தை – எமது சுவாமி. அடிக்கீழ், கீழ் – ஏழனுருபு.

————-

புண்ணியம் காமம் பொருள் வீடு பூதலத்தோர்க்கு அளிப்பான்
எண்ணி அம் காமன் திருத்தாதை நிற்கும் இடம் என்பரால்
நண்ணி அங்கு ஆம் அன்பரைக் கலங்காத் திரு நாட்டு இருத்தி
மண் இயங்காமல் பிறப்பு அறுத்து ஆளும் வடமலையே –38-

(இ – ள்.) நண்ணி – விரும்பி,
அங்கு – அவ்விடத்து (தன்னிடத்து),
ஆம் – வந்துசேர்கின்ற,
அன்பரை – பக்தர்களை,
கலங்கா திருநாடு இருத்தி – (எக்காலத்தும்) நிலைகலங்குதலில்லாத சிறந்த இடமாகிய பரமபதத்திலேஇருக்கவைத்து,
மண் இயங்காமல் – (மீண்டும்) நிலவுலகத்தில்உழலாதபடி,
பிறப்பு அறுத்து – (அவர்களுடைய) பிறப்பை யொழித்து,
ஆளும் – (அவர்களை) ஆட்கொள்ளுகின்ற,
வட மலை – வடக்கின்கண்உள்ள திருமலையாகிய திருவேங்கடத்தை, –
அம்காமன் திரு தாதை – அழகியமன்மதனது சிறந்த தந்தையான திருமால்,
புண்ணியம் காமம் பொருள் வீடு – அறம் இன்பம் பொருள் வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களையும்,
பூதலத்தோர்க்கு அளிப்பான் – நிலவுலகத்தில்வாழ்கிற சனங்கட்குக் கொடுத்தருள,
எண்ணி – நினைத்து,
நிற்கும் – எழுந்தருளிநிற்கிற, இடம் -,
என்பர் – என்றுசொல்வர், (ஆன்றோர்); (எ – று.) –
ஆல் – ஈற்றசை; (செய்யுளிறுதியில் நிற்பதேயன்றிச் செய்யுளடியினிறுதியிலும் பயனிலையினீற்றிலும் நிற்கிற
இடைச்சொல்லும் பொருள்தராதாயின் ஈற்றசை யெனப்படும்.)

இச்செய்யுள் – இடம் அல்லது பதி என்னுந் துறையின்பாற் படும்.

திருவேங்கடத்தையடைந்து எம்பெருமானைச்சேவித்தவர் தாம்வேண்டியபடி இம்மைமறுமைகளில் அறம் பொருளின்பங்களைப்
பெறுதலன்றிப் பின்பு கருமமொழியப் பிறப்பற்று மீளாவுலகமாகிய முத்தியையும் பெற்று வாழ்வ ரென்பது கருத்து;
“திருவேங்கடம் நங்கட்குச், சமன்கொள்வீடு தருந் தடங்குன்றமே,”
“குன்றமேந்திக் குளிர்மழைகாத்தவ, னன்றுஞால மளந்தபிரான் பரன்,
சென்றுசேர்திருவேங்கடமாமலை, யொன்றுமே தொழ நம்வினையோயுமே” என்ற அருளிச்செயல் இங்குக் கருதத்தக்கது.

சதுர்வித புருஷார்த்தங்களைத் தருமம் அர்த்தம் காமம் மோக்ஷம் என முறைப்படுத்தி நிறுத்துவது மரபாயினும்,
இங்குச் செய்யுள்நோக்கி முறை பிறழ வைத்தார்; அன்றியும், அறம்போலவே இன்பமும் பொருளின் பயனாதலால்,
சாதநமான பொருளைச் சாத்தியமான அறம் இன்பம் என்பவற்றின்பின் வைத்தன ரென்று காரணங்காணலாம்.
கண்ணபிரானது மனைவியும் திருமகளின் திருவவதாரமுமான ருக்மிணிப்பிராட்டியினிடம் மன்மதன் பிரத்யும்நனென்னுங்
குமாரனாகத் தோன்றியதுபற்றி, திருமால் “காமன்தாதை” எனப்படுவன்.
காமன் – (எல்லாவுயிர்கட்கும்) சிற்றின்பவிரு ப்பத்தை விளைப்பவன்; (யாவராலுங்) காமிக்கப்படும் (விரும்பப்படும்) கட் டழகுடையவன்.
இங்கு “காமன்திருத்தாதை” என்றது, காமனுக்குநியாமகன் என்றபடி,
“சிறுகாவயிலா நிவயோ திரியா குறுகா நெடுகா குணம்வேறுபடா,
உறுகால்கிளர்பூதமெலா முகினும், மறுகாநெறி” என்றபடி பரமபதம் என்றும் ஒருதன்மைத்தாயிருத்தல் தோன்ற
“கலங்காத் திருநாடு” எனப் பட்டது;
“கலங்காப் பெருநகரம்” என்றார் பேயாழ்வாரும்; புக்கவர் கலக்கம் ஒழியப்பெறுகிற திருநா டெனினுமாம்.
கலங்கா – ஈறுகெட்ட எதிர்மறை ப்பெயரெச்சம்; ஈறுகெட்ட எதிர்மறைவினையெச்சமாகக் கொண்டு,
கலங்கா (மல்) – கலங்காதபடி திருநாட்டிலிருத்தி யென்று உரைப்பாரு முளர்.

“என்பர்” என்ற முற்றுக்கு ஏற்றபடி தோன்றா எழுவாய் வருவிக்கப்பட் டது. செய்யுளாதலின்,
“அங்கு” எனச் சுட்டுப்பெயர் “வடமலை” என்ற இயற் பெயர்க்கு முன் வந்தது. இயங்குதல – உலாவுதல்.

—————-

வடம் அலை அப்பன்னகம் சேர்ந்தவன் இடை மங்கை கொங்கை
வடம் அலையப் பன் அரும் போகம் துய்த்தவன் மாயன் கண்ணன்
வடமலை அப்பன் அடி போற்றி ஐவர் மயக்கு கர
வடம் அலையப் பன்னிரு நாமம் நாவின் மலக்குவனே –39-

(இ – ள்.) வடம் – (பிரளயப்பெருங்கடலில்) ஆலிலையிலும்,
அலை அ பன்னகம் – (திருப்பாற்) கடலில் (ஆதிசேஷனாகிய) அந்தப்பாம்பினிடத்தி லும்,
சேர்ந்தவன் – படுத்துக்கண்வளர்ந்தவனும்,
இடை மங்கை கொங்கை வடம் அலைய – இடையர்சாதிப்பெண்ணான நப்பின்னைப்பிராட்டியினது தனங்களில் அணிந்த ஆரங்கள் அசையும்படி,
பன் அரும் போகம் துய்த்தவன் – சொல்வதற்குஅரிய (அளவிறந்த) இன்பத்தை யனுபவித்தவனும்,
மாயன் – அற்புதசக்தியுள்ளவனும்,
கண்ணன் – கிருஷ்ணாவதாரஞ்செய்தவனு மான,
வடமலை அப்பன் – திருவேங்கடமுடையானது,
அருள் – திருவருளை,
போற்றி – துதித்து, –
ஐவர் மயக்கு கரவடம் அலைய – பஞ்சேந்திரியங்கள் (மனத்தை) மயங்கச்செய்கிற வஞ்சனை ஒழியுமாறு,
பன்னிரு நாமம் – (அப் பெருமானுடைய) பன்னிரண்டு திருப்பெயர்களையும்,
நாவின் மலக்குவன் – நாவினால் விடாமற்சொல்வேன், (யான்); (எ – று.)

துவாதசநாமம் – கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதநன், திரிவிக்கிரமன், வாமநன்,
ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்பன.
நாவின் மலக்குதல் – நாவினால் இடை விடாது உச்சரித்து அடிப்படுத்துதல்; பயிற்றுதல்.
“அலை” என்பதை மத்தி யமதீபமாக “வடம்” என்பதனோடுங் கூட்டுக. அப் பன்னகம், அகரச்சுட்டு – பிரசித்தியைக் காட்டும்.
பந்நகம் என்ற வடசொல் – பத் ந கம் என்றுபிரிந்து, கால்களால் நடவாதது என்று காரணப்பொருள்படும்.
இடை – சாதிப்பெயர். பன் – பன்னுதற்கு; முதனிலைத்தொழிற்பெயர்: நான்காம்வேற்றுமைத்தொகை.
போகம், நாமம் – வடசொற்கள். அலைய – நிலைகுலைய.

இது,யமகச்செய்யுள்.

———

மலங்கத் தனத்தை உழன்று ஈட்டி மங்கையர் மார்பில் வடம்
அலங்கத் தனத்தை அணைய நிற்பீர் அப்பன் வேங்கடத்துள்
இலங்கு அத்தன் அத்தை மகன் தேரில் நின்று எதிர் ஏற்ற மன்னர்
கலங்க தன் நத்தைக் குறித்தானைப் போற்றக் கருதுமினே –40-

(இ – ள்.) மலங்க – மனங்கலங்க,
தனத்தை – செல்வத்தை, உழன்று ஈட்டி – (பலவிடத்தும்) அலைந்து சேர்த்து,
மங்கையர் மார்பில் வடம் அலங்க – இளமகளிரது மார்பிலணிந்துள்ள ஆரங்கள் புரளும்படி,
தனத்தை அணைய – (அவர்களது) கொங்கையைத் தழுவ,
நிற்பீர் – முயன்று நிற்பவர்களே! –
அப்பன் – ஸ்வாமியும்,
வேங்கடத்துள் இலங்கு அத்தன் . திருவேங்கடமலையில் எழுந்தருளிவிளங்குகின்ற தலைவனும்,
அத்தை மகன் தேரில் நின்று – அத்தைமுறையான குந்தியின் குமாரனாகிய அருச்சுனனது தேரில் (பாகனாய்) நின்று,
எதிர் ஏற்ற மன்னர் கலங்க தன் நத்தை குறித்தானை -எதிரிற் பகைத்து வந்துநின்ற அரசர்கள் நடுங்கும்படி
தனது (பாஞ்சசந்ய மென்னுஞ்) சங்கத்தை ஊதிமுழக்கினவனுமான எம்பெருமானை,
மேவ – சரணமடைய,
கருதுமின் – நினையுங்கள்; (எ – று.)
என்று உலகத்தார்க்கு இதோபதேசஞ் செய்தபடியாம்.

கண்ணபிரானது தந்தையான வசுதேவனுக்கு உடன்பிறந்தவ ளாதலால், குந்தி, கண்ணனுக்கு அத்தையாவள்,
அருச்சுனனது வேண்டுகோளின்படி கண்ணன் திருவருளால் மகாபாரதயுத்தத்தில் அவனுக்குத் தேரூர்ந்து
பார்த்தசாரதி யென்று பெயர்பெற்றமை, பிரசித்தம்.
அப்பொழுது கண்ணன் தனதுசங்கி னொலியாற் பகைவரை அஞ்சுவித்து அழித்தனன்;
“தருணவாணிருபர் மயங்கிவீழ்தர வெண்சங்கமு முழக்கி” என்பது பாரதம்.
ஈட்டுதல் சம்பாதித்துத்தொகுத்தல்.

இச்செய்யுளின் முன்னிரண்டடி – யமகம்; பின்னிரண்டடி – திரிபு.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: