கொல்லைக் குறவர் குளிர் மதி மானைக் ககன
வில்லைக் குனித்து எய்யும் வேங்கடமே –கல்லை
அரிவை வடிவு ஆக்கினான் அன்னம் ஆய் வேத
விரிவை வடிவாக்கினான் வெற்பு –21-
(இ – ள்.) கொல்லை – தினைக்கொல்லையைக் காக்கின்ற,
குறவர் – குறவர்கள்,
குளிர் மதி மானை – குளிர்ந்த சந்திரனிடத்து உள்ள (களங்கத்தோற்ற மாகிய) மான்வடிவை,
(தினைப்பயிரை மேயவருகின்ற மானென்று எண்ணி),
ககனம் வில்லை குனித்து எய்யும் – வானத்திற்காணப்படுகிற வில்வடிவமான தநுரிராசியைக் கை வில்லாகக்
கொண்டு வளைத்து அதுகொண்டு அம்பு எய்ய முயலுதற்கு இடமான,
வேங்கடமே – , –
கல்லை அரிவை வடிவு ஆக்கினான் – (சாபத்தாற்) கல்வடிவமாய்க் கிடந்த அகலிகையைப் பெண்வடிவமாகச் செய்தவனும்,
அன்னம் ஆய் – அன்னப் பறவையின் வடிவங்கொண்டு,
வேதம்விரிவை வடி – மிகப்பரந்ததான வேதத்தை (ப் பிரமனுக்கு)த் தெளிவாகக் கூறியருளிய,
வாக்கினான் – திருவாக்கையுடையவனுமாகிய திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)
சந்திரனிடத்து உள்ள களங்கத்தை மானென்று கூறுவார் கொள்கை, இங்குக் கொள்ளப்பட்டது.
“ககனவில்லைக் குனித்து எய்யும்” என்பதற்கு – வானத்திற்காணப்படுகிற இந்திர தனுசை வளைத்து
அம்பெய்ய முயலும் என்று உரைப்பாரும் உளர்; முன்னும் பின்னும் உள்ள செய்யுள்களிலெல்லாம் பன்னிரண்டு மாசங்களுக்கு
உரிய இராசிகளையே கூறிவருகிற சந்தர்ப்பத்தை நோக்கின், அங்ஙனம் உரைத்தல் இவ்விடத்துக்குப் பொருந்தாமை தெற்றென விளங்கும்.
தநுரிராசி, மார்கழிமாதத்துக்கு உரியது. அரிவை என்பது – இங்குப் பருவப்பெயராகாமல் பெண்என்ற மாத்திரமாய் நின்றது;
அப்பருவத்துக்கு வயதெல்லை – இருபதுமுதல் இருபத்தைந்தௌவும். பாலையும் நீரையுங் கலந்துவைத்தால் நீரைப்பிரித்துப்
பாலையே உட்கொள்ளும் இயல்பினதான அன்னப்பறவை ஸாராஸாரவிவேக முடைமைக்கு உவமை கூறப்படுமாதலின்,
அத்தன்மையதான அன்னப்பறவையின் வடிவைக் கொண்டு அஸாரத்தைக் கழித்து ஸாரத்தை
யுணர்த்தியருளின னென்பது, “வடி” என்ற சொல்லின் ஆற்றலால் விளங்கும்;
வடித்தல் – தேர்ந்தெடுத்துக்கொடுத்தல். வாக் – வடசொல்; சொல்என்னும் பொருளது: வாய்க்கு இலக்கணை.
வேதம் அநந்தமாதலால், “வேதவிரிவு” எனப்பட்டது.
————–
தேன் ஏறி தேன் வைக்கும் திண் கழை மேல் விண் மகர
மீன் ஏறி வேள் கொடி ஆம் வேங்கடமே -வான் ஏறித்
தீ முக நாகத்து இருப்பார் சேவடிக்கு ஆள் ஆனவனைக்
காமுகனாகத் திருப்பார் காப்பு –22-
(இ – ள்.) தேன் – வண்டுகள்,
ஏறி – உயரப்பறந்து சென்று சேர்ந்து,
தேன் வைக்கும் – தேனைச் சேர்த்துவைக்கப்பெற்ற,
திண் கழைமேல் – வலிய மூங்கிலின்மேல்,
விண் மகரம் மீன் ஏறி – வானத்திற்செல்லுகிற சுறாமீன் வடிவமான மகரராசி வந்து தங்குகையில்,
வேள் கொடி ஆம் – மன்மதனது துவசம்போலத் தோன்றப்பெற்ற,
வேங்கடமே – , –
வான் – பரமபதத்தில்,
தீ முகன் நாகத்து – விஷாக்கினியைச் சொரியும் முகங்களையுடைய ஆதிசேஷன்மீது,
ஏறி இருப்பார் – ஏறிவீற்றிருப்பவரும்,
சே அடிக்கு ஆள் ஆனவரை – (தமது) சிவந்த திருவடிகளுக்கு அடிமைப்பட்டவர்களை,
காமுகன் ஆக திருப்பார் – காமமுடையவனாகச் செல்லவிடாதவரும் ஆகிய திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்கும் இடம்; (எ – று.)
மன்மதன் சுறாமீன்வடிவத்தைக் கொண்ட கொடியையுடையவனென அறிக; அவனுக்கு வடமொழியில் “மகரத்வஜன்” என்றும்,
தென்மொழியில் “சுறவக்கொடியோன்” என்றும் பெயர்கள் உண்டு. “தேனேறித் தேன் வைக்குந் திண்கழை” என்று
அம்மலையின் மூங்கிலை அடைமொழி கொடுத்துச் சிறப்பித்ததனால், அம்மலையின் வளத்தை விளக்கியவாறாம்.
வானத்தையளாவிமிகஓங்கிவளர்ந்துள்ள மூங்கிலுக்கு நேராக வருகிற மகரராசி, மன்மதனது துவசதண்டத்தின்மேற்
காணப்படுகின்ற சுறாமீன்வடிவம் போலு மென்க. மகரராசி, தைமாதத்துக்கு உரியது.
வேள் – (ஆண்பாற்கும் பெண்பாற்கும்) விருப்பத்தை விளைப்பவன்; காமதேவன்: அன்றி, விரும்பப்படும் மிக்க அழகையுடையவன்.
வேள் என்ற வினைப்பகுதி – விரும்புதலென்று பொருள் தரும்; அது இங்குப் பெயர்த்தன்மைப்பட்டது.
வான் நாகத்து ஏறியிருப்பாரென இயையும். வான்ஏறி நாகத்துஇருப் பார் என்றே இயைத்துப் பொருள்கொண்டால்,
பரமபதத்திலிருப்பு வந் தேறி யென்னும்படி யுள்ளது திருவேங்கடத்தில் நிலைத்திருக்கின்ற இருப்பு என்று கருத்து விளங்கும்.
“தீமுகன்” என்றது, நாகத்துக்கு இயற்கை யடைமொழி. முகன் – முகம் என்பதன் போலி.
“சென்றாற் குடையாம் இருந்தாற் சிங்காசனமாம், …… திருமாற்கு அரவு” என்றபடி திருவனந் தாழ்வான்
எம்பெருமான் வீற்றிருத்தற்கு இடமாகுமாறு திவ்வியசிங்காசன மாய் அமைதலால், “நாகத்துஇருப்பார்” என்றார்.
தமக்கு அடிமைப்பட்டவர் களைப் பின்பு காமம் முதலிய தீநெறியில் மனஞ்செலுத்தவிடாதபடி குறிக்கொண்டு
தம்வழிப்படுத்தி யாளுபவ ரென்பது, “சேவடிக்காளானவரைக் காமுகனாகத் திருப்பார்” என்றதன் கருத்து.
“ஆளானவரை” என்ற பன்மை க்கு ஏற்ப, “காமுகராக” என்னாது “காமுகனாக” என ஒருமையாகக்கூறியது, பன்மையொருமை மயக்கம்;
தனித்தனி காமுகனாக வென்க. இது, திரிபுநய த்தை நோக்கியது. “ஆளானவெனை” என்றும் பாடம். காமுகன் – வடசொல்.
—————-
ஒண் கொம்பின் தேன் இறால் ஊர் பிறைக் கோட்டால் உடைந்து
விண் கும்ப வாய் நிறைக்கும் வேங்கடமே –வண் கும்ப
கம்பத்து ஆனைக்கு அடுத்தார் கார் அரக்கர் போர் மாளக்
கம்பத்தானைக் கடுத்தார் காப்பு –23-
(இ – ள்.) ஒள் – ஓங்கிவிளங்குகின்ற,
கொம்பில் – மரக்கொம்புகளிற் கட்டப்பட்டுள்ள,
தேன் இறால் – தேன்கூண்டு,
ஊர் பிறை கோட்டால் உடைந்து – (வானத்திற்) செல்லுகிற பிறைச்சந்திரனது வளைந்த வடிவமாகிய கொம்பு படுதலால் உடைந்து,
விண் கும்பம் வாய் நிறைக்கும் – வானத்தி லுள்ள குடவடிவமான கும்பராசியின் வாயளவும் (தேனைச் சொரிந்து) நிறைத்தற்கு இடமான,
வேங்கடமே – , –
வள் கும்பம் – (இயல்பிற்) கொழுமையுள்ள மத்தகத்தையுடையதும்,
கம்பத்து – (முதலைவௌவியதனா லாகிய) நடுக்கத்தையுடையதுமாகிய,
ஆனைக்கு – கஜேந்திராழ்வானுக்கு,
அடுத்தார் – அருகில் ஓடிவந்து அபயமளித்தவரும்,
கார் அரக்கர் போர் மாள – கருநிறமுடைய இராக்கதர்கள் போரில் இறக்க,
கம் பத்தானை கடுத்தார் – பத்துத்தலைகளையுடையவனான இராவணனைக் கோபித்து அழித்த வருமாகிய திருமால்,
காப்பு – (உயிர்களைப்) பாதுகாக்கும் இடம்; (எ – று.)
பிறைக்கோட்டால் என்பதற்கு – வளைந்தவடிவமுடைய பிறையினது நுனி படுதலால் என்று உரைப்பினும் அமையும்.
கும்பராசி, மாசிமாதத்துக்குஉரியது. திருவேங்கடமலையிலுள்ள கொம்பு கும்பராசிக்கு மேலுள்ள தென்றும்,
தன்மீது பிறைச்சந்திரன் படப்பெறுவதென்றும் கூறியதனால், அதனது உயர்வை விளக்கி மலைவளத்தை வருணித்தபடியாம்.
கும்பம் – குடம்; இரண்டுகுடம் கவிழ்த்தாற்போன்ற யானைத்தலையிலுறுப்புக்குப் பெயராக வழங்கும்.
அடுத்தல் – சமீபித்தல். ரக்ஷஸ் என்ற வடசொல், அரக்க ரெனச் சிதைந்தது. கம் – தலை; வடசொல்.
————–
கூனல் இள வெண் குருகு கோனேரியில் விசும்பு ஊர்
மீன நிழலைக் கொத்தும் வேங்கடமே –கானகத்துப்
பொன் ஆர் உழை எய்தார் பூங்கழலே தஞ்சம் என
உண்ணா ருளை எய்தார் ஊர் –24-
(இ – ள்.) கூனல் இள வெள் குருகு – (கழுத்து) வளைவையுடைய இளமையான வெண்ணிறமுள்ள குருகென்னும் நீர்ப்பறவை,
கோனேரியில் – கோனேரிதீர்த்தத்தில்,
விசும்புஊர்மீனம் நிழலை – வானத்திற் செல்லுகின்ற மீன்வடிவமான மீனராசியினது நிழல் தெரிய அதனை,
கொத்தும் – (அந் நீரிற்செல்லுகிற உண்மையான மீனென்றே கருதி உண்ணும்பொருட்டு மூக்கினாற்) குத்துதற்கு இடமான,
வேங்கடமே – , –
கான் அகத்து – தண்ட காரணியத்திலே,
பொன் ஆர் உழை – பொன்னிறமாய்ப் பொருந்திய (மாரீசனாகிய) மாயமானை,
எய்தார் – அம்புஎய்து வீழ்த்தியவரும்,
பூ கழலே தஞ்சம் என உன்னாருழை எய்தார் – தமது திருவடித்தாமரை மலர்களையே சரணமென்று
நினையாதவரிடத்திற் சென்றுசேராதவரு மாகிய திருமாலினது,
ஊர் – திருப்பதி; (எ – று.)
கூன் நல் எனப்பிரித்து, வளைவுள்ள அழகிய என்றும் பொருளுரைக்க லாம்.
குருகு – நாரை, கொக்கு. கோன் ஏரி – வடமொழியில், ஸ்வாமிபுஷ் கரிணி யென்று வழங்கும்.
திருவேங்கடமலையின்மேல் திருக்கோயிலுக்கு அருகிலுள்ள பிரதானமான திவ்வியதீர்த்தம் இது.
மீனராசி, பங்குனி மாதத்துக்கு உரியது. கொத்துதலெனினும், குத்துதலெனினும் ஒக்கும்.
மீனராசியின் நிழலை மீனென்று மயங்கியதாகக் கூறியது, மயக்கவணி. சீதையைக் கவர்ந்து செல்லக் கருதிய
இராவணனது தூண்டுதலால் அவனுக்கு மாமன்முறையுள்ள மாரீசனென்ற ராக்ஷசன் மாயையாற் பொன் மானுயிருவங் கொண்டு
தண்டகாரணியத்திற் பஞ்சவடியிலே சீதையினெதிரிற் சென்று உலாவுகையில், அப்பிராட்டியின் வேண்டுகோளின்படி
அவனைப் பிடித்தற்குத் தொடர்ந்துசென்ற இராமபிரான், நெடுந்தூரம் ஓட்டங்காட்டிய அம்மானை மாயமானென்று
அறிந்தவளவிலே அதன்மேல் அம்புஎய்து வீழ்த்தின னென்பது பிரசித்தம்.
ஆருழை – வினைத்தொகை; பண்புத்தொகை யாகக் கொண்டால், (பெறுதற்கு) அரிய மானென்று பொருள்படும்.
எய்தார் என்பது – மூன்றாமடியில் எய் என்னும் பகுதியின்மேற் பிறந்த உடன் பாட்டு இறந்தகால வினையாலணையும் பெயரும்,
நான்கா மடியில் எய்து என்னும் பகுதியின் மேற் பிறந்த எதிர்மறை வினையாலணையும் பெயருமாம்.
கழலே தஞ்சமென வுன்னாருழை யெய்தார் – தமக்கு அடிமைபூணாதவரிடத்தில் அன்போடு சென்றுசேராதவர்;
எனவே, கழலே தஞ்சமென்று உன்னுவாரிடத்து எய்துபவ ரென்பது அருத்தாபத்தியால் விளங்கும்.
————–
மண் மூலம் தா என்று மந்தி கடுவற்கு உரைப்ப
விண் மூலம் கேட்டு எங்கும் வேங்கடமே -ஒண் மூல
வேதத்து இருக்கு உழையார் வெய்யோன் இரண்டு அனைய
சீதத் திருக் குழையார் சேர்வு –25-
(இ – ள்.) மண் மூலம் தா என்று மந்தி கடுவற்கு உரைப்ப – “மண்ணி லிருக்கிற கிழங்கை (உண்ணுதற்காகப் பெயர்த்தெடுத்துக்)
கொடு” என்னும் பொருளில் “மூலம்தா” என்று பெண்குரங்கு ஆண்குரங்கை நோக்கிச் சொல்ல,
விண் மூலம் – வானத்திலுள்ள மூலநட்சத்திரம்,
கேட்டு – (அச்சொல்லைக்) கேட்டு,
ஏங்கும் – (தன்னைப்பிடித்துக் கொடுக்கச் சொன்னதாகக் கருதி) அஞ்சிக் கலங்குதற்கு இடமான,
வேங்கடமே – , –
ஒள் – (எல்லாப் பிரமாணங்களிலும்) சிறந்த பிரமாணமாக வுள்ளவையும்,
மூலம் – (எல்லா நூல்களுக்கும்) முதல்நூலாகவுள்ளவையுமான,
வேதத்து – வேதங்களின்,
இருக்கு – மந்திரங்களை,
உழையார் – தமக்கு இடமாகக் கொண்டு அவற்றில் (பொருள் வடிவமாகப்) பொதிந்திருப்பவரும்,
வெய்யோன் இரண்டு அனைய – சூரியமண்டலம் இரண்டு உளவாயின் அவற்றைப் போன்ற (மிக விளங்குகிற),
சீதம்திரு குழையார் – குளிர்ந்த ஒளியுள்ள சிறந்த திவ்விய குண்டலங்களை யணிந்தவருமான திருமால்,
சேர்வு – சேர்ந்து தங்குமிடம்; (எ – று.)
மந்தி “மூலந்தா” என்று வேண்டியதனால், அதனிடத்து மிக்கஅன்பு கொண்ட கடுவன் தன்னைப்பிடித்து மந்தியின்
கையிற் கொடுத்து விடுமேயெ ன்று மூலநக்ஷத்திரம் அஞ்சு மென்க.
இவ்வர்ணனையில், அம்மலை வானத்து நட்சத்திர வீதிக்கு அருகாம்படி ஓங்கிய தென்பதனோடு,
அம்மலைக்குரங்கு தேவகணமும் அஞ்சத்தக்க வலிமையுடையதென்பதும் விளங்கும்.
மண்மூலம் என்றவிடத்து “வண்மூலம்” என்றும் பாடம் உண்டு; அது சிறக்கும்: செழிப் பான மூலமென்க.
மந்தி – குரங்கின் பெண்மைப்பெயர். கடுவன் – அதன் ஆண்மைப்பெயர்: கடுமையுடையது.
“மூலம்” என்ற பெயர்கொண்டு சமத்காரங் கற்பிக்கப்பட்டது.
இருக்கு – ருக் என்ற வடசொல்லின் விகாரம். “வெய்யோனிரண்டனைய” என்றது, இல்பொருளுவமை.
———
நாலா விட்ட பொன் ஊசல் நன்னுதலார் உந்து தொறும்
மேல் அவிட்டம் தொட்டு இழியும் வேங்கடமே –ஆலம் இட்ட
பொற்புக் களம் கறுத்தார் போர் சரியாய் வாணன் தோள்
வெற்புக்கள் அங்கு அறுத்தார் வீடு –26-
(இ – ள்.) நால விட்ட – தொங்கவிடப்பட்டுள்ள,
பொன் ஊசல் – பொன்னினாலாகிய ஊஞ்சல்,
நல் நுதலார் உந்துதொறும் – அழகிய நெற்றியை யுடைய மகளிர் வீசித்தள்ளியாட்டுந்தோறும்,
மேல் அவிட்டம் தொட்டுஇழி யும் – வானத்திலுள்ள அவிட்ட நக்ஷத்திரத்தின்மீது பட்டு இறங்குதற்கு இடமான,
வேங்கடமே – , –
ஆலம் இட்ட – விஷத்தை உட்கொண்ட,
பொற்பு களம் – பொலிவையுடைய கண்டம்,
கறுத்தார் – கருநிறமடைந்தவ ரான சிவபிரான்,
போர் சரிய – யுத்தத்திலே பின்னிட,
வாணன் – தோள் வெற்புக்கள் – பாணாசுரனுடைய தோள்களாகிய மலைகளை,
அங்கு – அப் பொழுது (அல்லது அப்போர்க்களத்தில்),
அறுத்தார் – துணித்தவரான திருமாலினது,
வீடு – வசிக்குமிடம்; (எ – று.) –
எதுகையமைதி நோக்கி, அவிட்டத்தைக் கூறினார்.
முன்னிரண்டடியில் திருவேங்கடத்தின் உயர்வும், பின்னிரண்டடியில் திருவேங்கடமுடையானது பரத்வமும் குறிக்கப்பட்டன.
நுதல் – புருவமு மாம். ஹாலம், பாணன் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
பொற்பு – பொலிவையுணர்த்தும் உரிச்சொல். களம் – வடசொல்.
கருமை யென்ற பண்பினடியாகிய கருஎன்பது, கறு என விகாரப்பட்டு வினைத்தன்மைய டையும்.
திருமாலின் கட்டளைப்படியே தேவர்கள் அசுரர்களைத் துணைக் கொண்டு திருப்பாற்கடல் கடைகையில் அதனினின்று
எழுந்ததோர் அதி பயங்கரமான பெருவிஷத்தைக் கண்டமாத்திரத்தில் அதன் கொடுமையைப் பொறுக்கமாட்டாத
தேவர்களின் வேண்டுகோளினாலும், திருமாலின் கட்டளையினாலும், அவ்விஷத்தைச் சிவபிரான் அமுதுசெய்து
கண்டத்தில் நிறுத்தியதனால், அப்பெருமானது கண்டம் கருநிறமடைந்த தென அறிக.
————
பால் நிறம் கொள் தெங்கின் இளம் பாளை விரிய சுனையில்
மீன் இனம் கொக்கு என்று ஒளிக்கும் வேங்கடமே –வான் நிமிர்ந்த
வெள்ளத்துக் கப்பு ஆலான் மெய்ப்பரம யோகியர் தம்
உள்ளத்துக்கு அப்பாலான் ஊர் –27-
(இ – ள்.) பால் நிறம் கொள் – வெண்மைநிறத்தைக் கொண்ட,
தெங்கின் இள பாளை – தென்னமரத்தினது இளமையான பாளை,
விரிய – மலர, (அதுகண்டு),
சுனையின் மீன் இனம் – சுனைநீரி லுள்ள மீன்கூட்டங்கள்,
கொக்கு என்று – (அதனைக்) கொக்கென்று கருதி,
ஒளிக்கும் – அஞ்சி மறைதற்கு இடமான,
வேங்கடமே – , –
வான் நிமிர்ந்த – வானத்தையுங் கடந்து பொங்கி மேலெழுந்த,
வெள்ளத்து – பிரளயப் பெருங்கடல்வெள்ளத்திலே,
கப்பு ஆலான் – கிளைகளையுடையதோர் ஆலமரத்தினது இலையிற் பள்ளி கொண்டிருப்பவனும்,
மெய் பரம யோகியர்தம் உள்ளத்துக்கு அப்பாலான் – உண்மையான சிறந்த யோகப்பயிற்சியையுடைய
மகான்களுடைய மனத்துக்கும் முழுவதும் எட்டாமல் கடந்துள்ளவனுமான திருமாலினது,
ஊர் – திருப்பதி; (எ – று.)
முன்னிரண்டடி – மயக்கவணி. கொக்கு மீனைக்குத்தியுண்ணுந் தன்மைய தாதலால், அதற்கு அஞ்சியொளித்தல், மீனுக்கு இயல்பு.
சுனை – மலையிலுள்ள நீருற்றுடைய குளம். எல்லாம் அழிந்துபோகின்ற யுகாந்தகாலத்தில் கடல் பொங்கி உலகங்களை மூடிக்கொள்ள,
எங்கும் ஏகார்ணவமான அந்த மகாப்பிரளய சமுத்திரத்தில் ஓர் ஆலமரம் தோன்ற, ஸ்ரீமகாவிஷ்ணு சிறுகுழந்தை வடிவமாய
ஆதிசேஷாம்சமான அம்மரத்தின் இலையொன்றன் மீது பள்ளிகொண்டு தனது மாயாசொரூபமான
யோக நித்திரையைக்கைக் கொண்டு திருக்கண்வளர்ந்தருளுகின்றனனென அறிக.
கப்பு – ஆலமரத்துக்கு அடைமொழி. இச்சொல்லுக்கு – கவர் என்றும் பொருள்உண்டு; அதாவது – கிளைபிரியுமிடம்.
மெய் என்ற அடைமொழி, யோகியரது பொய்யொழுக்க மின்மையை உணர்த்தும். மனமொழி மெய்களைக் கடந்தவ னாதலால்,
“மெய்ப்பரமயோகியர்த முள்ளத்துக்கு அப்பாலான்” என்றார்.
————
கொம்பு அணியும் தேமாங்குயில் கருடன் போல் கூவ
வெம்பணிகள் புற்று அடையும் வேங்கடமே –வம்பு அணியும்
விண்ணின் ஐந்து காப்பார் மிசை வைத்தார் பத்தரைத்தம்
உள் நினைந்து காப்பார் உவப்பு –28-
(இ – ள்.) கொம்பு அணியும் தே மா குயில் – கிளைகள் அழகியனவாகப் பெற்ற இனிய மாமரத்தின் மேல் இருக்கிற குயிலென்னும் பறவை,
கருடன் போல் கூவ – (அத்தேமாமரத்தின் இனியதளிரை நிரம்பஉண்டதனாலாகிய கொழுமைவளத்தால் பக்ஷிராஜனான) கருடன்போலக் கூவி யொலிசெய்ய,
(அதுகேட்டு), வெம் பணிகள் புற்று அடையும் – (கருடனுக்கு அஞ்சும் இயல்பினவான) கொடியபாம்புகள் அஞ்சிப் புற்றினுள்ளே நுழைதற்கு இடமான,
வேங்கடமே – , –
வம்பு அணியும் – வாசனையை மிகுதியாகக் கொண்ட,
விண்ணின் ஐந்து கா – தேவலோகத்திலுள்ள பஞ்சதருக்களுள் ஒன்றை,
பார் மிசை வைத்தார். (சத்தியபாமைக்காக) நிலவுலகத்திற் கொணர்ந்துநாட்டிய வரும்,
பத்தரை – தமது அடியார்களை,
தம் உள் நினைந்து காப்பார் – தமது உள்ளத்தில் நினைத்துக் குறிக்கொண்டு பாதுகாப்பவருமாகிய திருமால்,
உவப்பு – திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கும் இடம்; (எ – று.)
சிறியோரும் கொழுமைவாய்ந்தால் பெரியோர்போலக் கம்பீரமாகக் குரல் வாய்விடுதல். இயல்பு;
அவ்வாறே பறவைகளி லொன்றான குயில் பறவைக்கரசனான கருடன்போலக் கூவ என்றார்.
திருமாலுக்கு வாகனமான கருடன் திருமலையிற் பயிலுந்தோறும் அதன் குரலைச் செவியுற்ற பழக்கத்தால்
குயில் கருடன்போலக் கூவு மென்க. “கொம்பணியுந்தேமா” என்ற அடைமொழி, குயிற்குக் கொழுமைவாய்ந்ததன் காரணத்தை விளக்கிற்று.
தேமா – தேன்போல் இனிய காய்கனிகளையுடைய ஒருவகை மாமரம். தேன் + மா = தேமா; தேன்மொழி மெலிவர இறுதியழிந்தது.
மாங்குயில் – மரப்பெயர் முன்னர் இனமெல்லெழுத்து வரப்பெற்றது.
“கருடன்பேர்கூவ” என்று பாடமோதி, தங்கட்கு அரசனான கருடனது திருநாமத்தை உச்சரிக்க என்று உரைப்பாரு முளர்.
ஐந்து தேவதருக்கள் – சந்தாநம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம், அரிசந்தநம் என்பன.
இவை, இந்திரனது நந்தனவனத்தி லுள்ளன. உவப்பு – தொழிலாகுபெயர்.
————
தெங்கு இள நீர் வீழச் சிதறும் மணி யைக் கரிகள்
வெங்கனல் என்று அஞ்சிப் போம் வேங்கடமே –பைங்கழையின்
மாண் தாரைப் பண் தழைத்தார் மா மறையோன் பால் தோன்றி
மாண்டாரைப் பண்டு அழைத்தார் வாழ்வு –29-
(இ – ள்.) தெங்கு – தென்னமரத்தினது,
இளநீர் – இளநீர்க்காய்கள்,
வீழ – விழுதலால்,
சிதறும் – சிதறுகின்ற,
மணியை – இரத்தினங்களை,
கரிகள் – யானைகள்,
வெம் கனல் என்று – வெவ்விய நெருப்பு என்று கருதி,
அஞ்சி போம் – அச்சங்கொண்டு விலகிச் செல்லுதற்கு இடமான,
வேங்கடமே – , –
பைங் கழையின் – பசிய வேய்ங்குழலின்,
மாண் தாரை பண் – மாட்சிமைப்பட்ட ஒழுங்கான கீதம்,
தழைத்தார் – செழிக்க ஊதின வரும்,
மா மறையோன்பால் தோன்றி மாண்டாரை – சிறந்த ஓர் அந்தண னிடத்திற் பிறந்துஇறந்த மக்களை,
பண்டு – முன்பு (கிருஷ்ணாவதாரத்தில்),
அழைத்தார் – மீட்டு அழைத்து வந்தவரு மாகிய திருமால்,
வாழ்வு – வாழுமிடம்; (எ – று.)
இளநீர் – தெங்கின் இளங்காய். இரத்தினங்கள், அம்மலையி லுள்ளவை. முன்னும் “பொன்னு மணியும், பொலிந்தோங்கி” என்றார்.
சிவந்து மிகவிளங்குகிற ஒளியினால் இரத்தினங்கள் நெருப்பென்று கருதப்பட்டன; மயக்கவணி.
தீக்கு அஞ்சி விலகுதல், யானையின் இயல்பு. கழை – மூங்கில்; வேய்ங்குழலுக்குக் கருவியாகுபெயர்.
பண் – இசை. அதற்கு மாட்சி – செவிக்கு இனியதாதல்; ஒழுங்கு – இலக்கணம் அமைதல். வாழ்வு – தொழிலாகுபெயர்.
“மீளாப்பதம்புக்க பாலரை நீயன்று மீட்டது” என்பர் திருவரங்கத்து மாலையிலும்.
“பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்,
இறைப்பொழுதிற் கொணர்ந்துகொடுத் தொருப்படுத்த வுறைப்பனூர்” என்ற பெரியாழ்வார் திருமொழியையுங் காண்க.
————
அங்கு அயலில் மேகம் அதிர பெரும் பாந்தள்
வெங்கயம் என்று அங்காக்கும் வேங்கடமே -பங்கயனோடு
அம்புவனங்கள் தந்தார் அம்புயத்து மங்கையொடு
வெம்பு வனம் கடந்தார் வெற்பு –30-
(இ – ள்.) அங்கு – அவ்விடத்து,
அயலில் – அருகிலே,
மேகம் – மேகங்கள்,
அதிர – இடிமுழங்க,
பெரும் பாந்தள் – (அம்முழக்கத்தைக் கேட்ட) பெரிய மலைப்பாம்புகள்,
வெம் கயம் என்று – வெவ்விய மதயானைகள் பிளிறிக் கொண்டுவருகின்றன வென்றுகருதி,
அங்காக்கும்- (அவற்றைவிழுங்குதற்கு) வாய்திறத்தற்கு இடமான,
வேங்கடமே – , –
பங்கயனோடு – பிரமனுடனே,
அம் புவனங்கள் – அழகிய உலகங்களை,
தந்தார் – (தமது திருநாபிக் கமலத்தினின்று) தோன்றுவித்தவரும்,
அம்புயத்து மங்கையொடு – தாமரை மலரில் வீற்றிருக்கிற என்றும் மாறாத இளமைப்பருவத்தையுடைய திருமகளினது அவதாரமான சீதாதேவியுடனே,
வெம்பு வனம் கடந்தார் – வெப்பங்கொண்ட காட்டைக் கடந்துசென்றவரும் ஆகிய திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)
இதுவும், மயக்கவணி. வேங்கடமலையிலுள்ள பெரிய மலைப்பாம்புகள் யானையை விழுங்குந்தரத்தன வென்று
மலைவளத்தை வருணித்தவாறு. கஜம், பங்கஜம், அம்புஜம் என்ற வடசொற்களின் ஜகரம் யகரமாகத் திரிந்தது.
பங்கஜம் – சேற்றில் முளைப்பது; அம்புஜம் – நீரில்தோன்றுவது; இரண்டும் – தாமரைக்குக் காரணவிடுகுறி;
அதன் மலர்க்கு முதலாகுபெயர். மேகம், புவநம், வநம் – வடசொற்கள்.
திருமால் இராமபிரானாகத் திருவவதரித்த போது அதற்கு ஏற்பத் திருமகள் சீதையாகத் திருவவதரித்தனள்.
பித்ரு வாக்ய பரியிலநத்திற்காக இராமபிரான் ஜாநகியுடன் பதினான்கு வருஷம் வனத்திற்சென்று வசிப்பவனாகித்
தண்டகாரணியமுதலியவற்றைக் கடந்து இலங்கையளவும்போய் மீண்டமை பிரசித்தம்.
வெம்புஎன்ற அடைமொழி, வனத்தின் கொடுமையை விளக்கும்.
—————-
திங்கள் இறுமாந்து உலவ தீம் பாற் கவளம் என்று
வெங்களிறு கை நீட்டும் வேங்கடமே –பொங்கு அமரில்
ஆர்த்த வலம் புரியார் ஆட்பட்டார் செய்த பிழை
பார்த்து அவலம் புரியார் பற்று –31-
(இ – ள்.) திங்கள் – சந்திரன்,
இறுமாந்து – செருக்கி (கலைநிறைதலாற் களித்து என்றபடி),
உலவ – அருகிலே வானத்திற்சஞ்சரிக்க, (அதனை),
தீம் பால்கவளம் என்று – இனியபாலினாற்கலந்த உணவுத்திரளை யென்றுஎண்ணி,
வெம் களிறு கை நீட்டும் – வெவ்விய மதயானை (அதனை உண்ணும்பொருட்டுப் பற்றுதற்காகத்) துதிக்கையை நீட்டுதற்கு இடமான,
வேங்கடமே – , –
பொங்கு அமரில் – உக்கிரமான போரிலே,
ஆர்த்த – முழக்கின,
வலம் புரியார் – (பாஞ்சஜந்யமென்னும்) வலம்புரிச்சங்கையுடையவரும்,
ஆள் பட்டார் செய்த பிழை பார்த்து அவலம் புரியார் – (தமக்கு) அடிமைப்பட்டவர்கள் செய்த குற்றத்தைக் கண்டு
(அதற்கு ஏற்ப அவர்கட்குத்) துன்பத்தைச் செய்யாதவரு மாகிய திருமால்,
பற்று – விரும்பித் தமதுஇடமாகக் கொண்டு எழுந்தருளியிருக்குமிடம்; (எ – று.)
இதுவும் மயக்கவணி. பாற்கவளத்தை விரும்புதல், யானையின் இயல்பு. இறுமாந்து, இறுமா – பகுதி.
கவளம் – கபள மென்ற வடசொல் திரிந்தது. மகாபாரதயுத்தத்திலும், மற்றும் பல யுத்தங்களிலும் கண்ணபிரான்
தனது திவ்விய சங்கத்தை வாயில்வைத்து ஊதி முழக்கி, அதன் ஒலிகேட்டவளவிற் பகைவர்
அஞ்சி நடுங்கி யழியும்படி செய்தமை, பிரசித்தம்;
“நிருபர் மயங்கி வீழ்தர வெண்சங்கமு முழக்கி” என்ற வில்லிபுத்தூரார் பாரதத்தையும்,
“அரங்கர்சங்கோசையிலண்டமெல்லாம், வெருட்கொண்டிடர்படமோகித்து வீழ்ந்தனர்” என்ற திருவரங்கத்துமாலையையுங் காண்க.
தனக்கு அடிமைப்பட்டவர் பிழைசெய்தால் அதனைப் பொறுத்தலும், குற்றமாகப் பாராட்டாது விடுதலே யன்றிக் குணமாகக் கொள்ளுதலும்,
எம்பெருமானுக்கு இயல்பு;
“தன்னடியார்திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல்,
என்னடியா ரதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர் போலும்,
மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த,
என்னுடைய திருவரங்கர்க் கன்றியு மற்றொருவர்க் காளாவரே” என்ற பெரியாழ்வார் திருமொழிப் பாசுரம் காண்க.
அப்பாசுரத்து வியாக்கியாநத்தில் “செய்தாரேல் நன்று செய்தார்” என்ற இடத்தில்
“நாம் உண்டு என்றும், ஒரு பிரமாணம் உண்டு என்றும், நாம்பொறுப்போம் என்றும் நினைத்துச் செய்தார்களாகில்
அழகிதாகச் செய்தார்கள்; ஒரு தருமாதருமமும் பரலோகமும் இல்லை யென்று செய்தார்களன்றே;
பிராமாதிகத்துக்கு நாம் உளோம் என்றன்றோ செய்தது?” என்று எம்பெருமான் திருவுள்ளமாக உரைத்ததும் உணரத்தக்கது.
பற்று – பற்றப்படும் இடம்; செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர்.
—————-
அம்புலியின் வாழ் மான் அதிரும் குரற் பகுவாய்
வெம்புலியைக் கண்டு ஏங்கும் வேங்கடமே –நம்பும் எனை
வீங்கு ஊத்தைக் கண் திருப்பார் விண்ணோர் நரர் பிறந்து
சாம் கூத்தைக் கண்டு இருப்பார் சார்பு –32-
(இ – ள்.) அம்புலியின் வாழ் மான் – சந்திரனிடத்தில் வாழ்கின்ற மான்,
அதிரும் குரல் பகு வாய் வெம் புலியை கண்டு எங்கும் – கர்ச்சிக்கின்ற குரலையும் திறந்த வாயையு முடைய கொடிய புலியைப் பார்த்துப் பயப்படுதற்குக் காரணமான,
வேங்கடமே – , –
நம்பும் எனை – (தம்மையே சரணமென்று) நம்பிய என்னை,
வீங்கு ஊத்தைக்கண் திருப்பார் – மிக்க அசுத்தமான பிறப்பிலே திரும்பிச் செல்ல விடாதவரும்,
விண்ணோர் நரர் பிறந்து சாம் கூத்தை கண்டு இருப்பார் – தேவர்களும் மனிதர்களும் பிறந்து இறக்கின்றமை யாகிய கூத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவருமாகிய திருமால்,
சார்பு – சார்ந்துள்ள இடம்; (எ – று.)
சந்திரமண்டலத்திற் காணப்படுகின்ற களங்கவடிவத்தை மானென்பா ரது கொள்கைபற்றி, இவ்வருணனை கற்பிக்கப்பட்டது.
அருகிற் புலியைக் கண்டால் அஞ்சுதல் மானின் இயல்பாதலின், இங்ஙனங் கூறினார்.
இதில், மலையினுயர்வு விளங்கும். கொடியஜந்துக்கள் அகப்பட்ட பிராணிகளையெல் லாம் வௌவித்தின்னும் பொருட்டு
எப்பொழுதும் வாய்திறந்திருத்தல் இயல் பாதலின், “பகுவாய்” என்ற அடைமொழி புலிக்குக் கொடுக்கப்பட்டது.
தமக்கு அடிமைப்பட்ட என்னை மறுபடி பிறப்பெடுக்கவேண்டாதபடி கருமமொழித்து முத்தியிற் சேர்த்துக்கொள்வர்
கருணாநிதியான எம்பெருமானென்ற துணிவு தமக்கு இருத்தல்பற்றி, “நம்புமெனை வீங்கூத்தைக்கண் திருப்பார்” என்றார்.
எனை – என்னை; தொகுத்தல். ஊத்தைக்கண், கண் – ஏழனுருபு.
“உலகம் யாவையுந் தாமுள வாக்கலும், நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா,
அலகிலா விளையாட்டுடையா ரவர், தலைவ ரன்னவர்க்கே சரணாங்களே” என்றபடி
உயிர்களைப் படைத்தலும் காத்தலும் அழித்தலும் எம்பெருமானுக்குத் திருவிளையாட்டாதலால்,
“விண்ணோர் நரர் பிறந்து சாங் கூத்தைக் கண்டிருப்பார்” என்றார்.
கூத்தாடிகள் அரங்கில் வெளிப்பட்டுத் தம்தமது வேடத்திற்கு ஏற்பச் சிறிதுபொழுது ஆடியொழிதல் போல,
பிராணிகள் உலகில் பிறப்பெடுத்துப் புடைபெயர்ந்து அழியுமென்க. நரர் – வடசொல். இருப்பார் – உவந்திருப்பவர்;
தாம் பிறப்பு இறப்பு இன்றி என்றும் ஒருபடிப்பட இருப்பவர்; பொழுதுபோக்காகக் கண்டுகொண்டிருப்பவர்.
திருப்பார் – எதிர்மறை; இருப்பார் – உடன்பாடு. மனிதராகப் பிறந்து செய்த நல்வினையால் மறுமையில்
தேவராகத் தோன்றினும் அவர்க்கும் அந்நல்வினைமுடிவில் அத்தேவவடிவம் நீங்க மறுபிறப்பு நேர்தல் இயல்பு;
அதுவே இங்குச் சாதலாகக் குறிக்கப்பட்டது. பகு வாய் – வினைத் தொகை; பக்க பகுகிற பகும் வாய் என விரியும்.
———–
கண்ணால் வெடித்த கழை முத்தம் கார் துளைத்து
விண் ஆலியோடு உதிரும் வேங்கடமே –எண்ணார்
கலங்க வரும் அஞ்சனையார் கான் முளையை ஊர்ந்தார்
சலம் கவரும் மஞ்சு அனையார் சார்பு –33-
(இ – ள்.) கண்ணால் – கணுக்களிலே,
வெடித்த -, கழை – மூங்கில்களினின்று வெளிச்சிதறிய,
முத்தம் – முத்துக்கள்,
கார் துளைத்து – மேகத்தைத் தொளைசெய்து,
விண் ஆலியோடு உதிரும் – அந்தமேகத்தினின்று வெளிப்படுகிற மழைநீர்க்கட்டியுடனே கீழ்ச்சிந்துதற்கு இடமான,
வேங்கடமே – , –
எண்ணார் கலங்க வரும் – பகைவர்கள் உறுதிநிலைகலங்கும்படி செல்லுகின்ற,
அஞ்சனையார் கான்முளையை – அஞ்சநாதேவியினது புத்திரனான அநுமானை,
ஊர்ந்தார் – வாகனமாகக்கொண்டு ஏறிநடத்தியவரும்,
சலம் கவரும் மஞ்சு அனையார் – நீரைநிரம்ப மொண்டுகொண்ட காளமேகத் தைப் போன்றவருமாகிய திருமால்,
சார்பு – சார்ந்துள்ள இடம்; (எ – று.)
சிறந்தசாதிமூங்கில் முற்றினபொழுது அதன்கணுக்கள் வெடிக்க அவற் றினின்று முத்துப் பிறக்குமென்றல், கவிமரபு.
அங்ஙனம் திருவேங்கடமலை யின்மீது உள்ள மூங்கிலினின்று சிதறிய முத்து அருகிலுள்ள மேகத்தின் மீது தெறித்து
அதனைத் தொளைபடுத்தி அத்துளையின்வழியாக அம்மேகத்தி னின்று விழும் ஆலாங்கட்டியுடனே தானும்
கீழ்விழும் என அம்மலையின் உயர்வை வருணித்தவாறு.
கண்ணால் என்பதில் “ஆல்” என்னும் மூன்றனுருபு ஏழனுருபின் பொருளில் வந்தது, உருபுமயக்கம்.
கேசரியென்னும் வாநரவீரனது மனைவியான அஞ்சனையென்பவளிடத்தில் வாயுதேவனால் உதித்தவன் அநுமான்;
ஆதலால், அவனுக்கு, ஆஞ்சநேயன் என்று ஒருபெயர் வழங்கும்.
“எண்ணார்கலங்கவரும்” என்ற அடைமொழி, அந்த அநுமானுடைய பல பராக்கிரமங்களின் தோற்றத்தை விளக்கும்.
எண்ணார் – ஒரு பொருளாக மதியாதவர்; எதிர்மறை வினையாலணையும் பெயர்.
இங்கு “எண்ணார்” என்றது, இராக்கதர்களை. அஞ்சனையார் – உயர்வுப்பன்மை.
கால் முளை – சந்ததியில் தோன்றியவன்; பிள்ளைக்குக் காரணக்குறி. இராமபிரான் அநுமானை வாகனமாகக் கொண்டு
அவன்மேல் ஏறிப் போர்க்குச் சென்றமை, பிரசித்தம். நீர் கொண்டமேகம் – எம்பெருமானது திருமேனிக்கு,
நிறத்திலும் அழகிலும் குளிர்ந்த தோற்றத்திலும் உவமம்;
கைம்மாறுகருதாது கருணைமழைமொழிபொழிந்து உதவுங் குணத்தில் உவம மென்னவுமாம்.
————
செல்லுக்கு மேல் செல்லும் திண்ணிய வேய் வசவனார்
வில்லுக்கு வாளி ஆம் வேங்கடமே -எல்லுக்குள்
அந்தகாரம் படைத்தார் ஆர் அழல் வாய் அம்பினால்
வெந்த கார் அம்பு அடைத்தார் வெற்பு –34-
(இ – ள்.) செல்லுக்கு மேல் செல்லும் – மேகத்திற்குமேலாக வளர்ந்து செல்லுகின்ற,
திண்ணிய வேய் – வலிமையையுடைய மூங்கில்,
வாசவனார் வில்லுக்கு வாளி ஆம் – (வானத்தில்தோன்றுகிற) இந்திர தனுசுக்கு அம்பு போன்றிருக்கப்பெற்ற,வேங்கடமே – , –
எல்லுக்குள் – பகற்பொழுதினுள்ளே,
அந்தகாரம் படைத்தார் – இருளை உண்டாக்கினவரும்,
ஆர் அழல் வாய் அம்பினால் – நிறைந்த அக்கினியை வாயிலுடைய அஸ்திரத்தினால் (ஆக்நேயாஸ்திரத்தினால்),
வெந்த – தவிப்படைந்த,
கார் அம்பு – கருநிற மான கடலை,
அடைத்தார் – அணைகட்டி அணைத்தவருமான திருமாலினது, வெற்பு – திருமலை; (எ – று.)
திருவேங்கடமலையின்மீது மேகமண்டலத்தையளாவி ஓங்கிவளர்ந்துள்ள மூங்கில், வானத்தில்தோன்றும்
இந்திரவில்லில் தொடுத்தற்கு அமைந்த அம்புபோலு மென்க; தற்குறிப்பேற்ற உவமையணி.
செல் – (வானத்திற்) செல்வது என்று பொருள்படுங் காரணக்குறி.
திண்ணிய – திண்மையென்னும் பண்பினடியாப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம். வாசவனார் – உயர்வுப்பன்மை.
செல்லுக்கு என்பதில் நான்கனுருபு ஐந்தனுருபிற்குரிய எல்லைப்பொருளில் வந்ததனால், உருபுமயக்கம்.
வில்லுக்கு என்பதில், நான்கனுருபு – தகுதிப்பொருளது. அந்தகாரம் – வடசொல்.
அம்பு என்ற சொல் இரண்டனுள், பிந்தினது வடமொழி. அம்பு – நீர்; கடலுக்கு இலக்கணை.
ஆர் அழல் – தணித்தற்குஅரிய நெருப்புமாம்; அருமை கருமை என்ற பண்புப்பெயர்கள், ஆர் கார் என விகாரப்படும்.
வாய் – நுனி. இனி, அழல்வாயம்பு – நெருப்பு வாய்ந்த அம்பு எனினுமாம்; வாயம்பு – வினைத்தொகை.
—————-
பொன் கமழும் கற்பகத்தின் பூங்கா வனத்துக்கு
மென் கமுகம் காலாகும் வேங்கடமே -நன்கமரும்
ஊர் அத்தி கிரியார் ஊதும் திகிரியார்
வீரத் திகிரியார் வெற்பு –35-
(இ – ள்.) மெல் கமுகு – காட்சிக்கு இனிய பாக்குமரங்கள்,
பொன் கமழும் கற்பகத்தின் பூ காவணத்துக்கு – பொன்மயமானதும் வாசனைவீசுவது மான மேலுலகத்துக் கற்பகச்சோலையாகிய பொலிவுபெற்ற பந்தலுக்கு,
அம் கால் ஆகும் – அழகிய கால்கள் நாட்டியவை போன்றிருக்கப்பெற்ற,
வேங்கடமே – , –
நன்கு அமரும் – நன்றாகப்பொருந்திய,
ஊர் அத்தி கிரியார் – அத்திகிரியென்னுந் திருப்பதியையுடையவரும்,
ஊதும் திகிரியார் – ஊதிஇசைக்கின்ற வேய்ங்குழலையுடையவரும்,
வீரம் திகிரியார் – பகையழிக்குந்திறமுள்ள (சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதத்தை யுடையவரும் ஆகிய திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)
பொன்னுலகத்திலுள்ளவை யாவும் பொன்மயமானவை யென்ற கருத்தினால், கற்பகத்துக்கு ”
பொன்” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
கல்பகம் என்ற வடமொழி – வேண்டுவார்க்கு வேண்டுபவற்றைக் கல்பிப்பது என்று பொருள்படும்;
கல்பித்தல் – உண்டாக்குதல். கமுகு – க்ரமுகம் என்றவடசொல்லின் சிதைவு.
பாக்கு மரங்கள் மேலுலகத்து நந்தனவனத்தை யளாவி வளர்ந்துள்ளன வென்று, மலையின் உயர்வையும் வளத்தையும் உணர்த்தியவாறாம்.
கால் – பந்தற்கால். அத்திகிரி – காஞ்சீபுரியிலுள்ள பெருமாள்கோவி லென்னும் பிரதானமான தலம்.
திகிரி – மூங்கில்; வேய்ங் குழலை யுணர்த்தும்போது, கருவியாகுபெயர்.
பின்னிரண்டடியில் “திகிரி” என மூன்று முறை வந்தது, சொற்பின்வருநிலையணி.
———-
தண் இலைக்கண் மூங்கில் தலை கொடுத்த தேன் இறால்
விண் நிலைக்கண் ஆடி ஆம் வேங்கடமே –உள் நிலைக்கும்
சோதி வணம் கரியார் தூய சன காதியரும்
ஓதி வணங்கரியார் ஊர் –36-
(இ – ள்.) தண் இலைகண் மூங்கில் தலை – குளிர்ந்த இலைகளையும் கணுக்களையுமுடைய மூங்கிலின் உச்சியிலே,
தொடுத்த – கட்டிய,
தேன் இறால் – தேன்கூடு,
விண் நிலை கண்ணாடி ஆம் – தேவருலகத்து நிலைக்கண்ணாடிபோல விளங்கப்பெற்ற,
வேங்கடமே – , –
உள் நிலைக்கும் – அன்பருள்ளத்தில் நிலைபெற்றிருக்கின்ற,
சோதி – ஒளிவடிவமானவரும்,
வணம் கரியார் – திருமேனிநிறம் கருமையுள்ளவரும்,
தூய சனக ஆதியரும் ஓதி வணங்கு அரியார் – (திரிகரண) சுத்தியையுடைய ஸநகர்முதலிய மகாயோகிகளும் துதித்து
வணங்குதற்கு அருமையானவருமாகிய திருமாலினது,
ஊர் – திருப்பதி; (எ – று.)
விண் நிலைக்கண்ணாடி – தேவர்கள் தம் அழகுகாண்டற்கு நிறுவிய கண்ணாடி. தேனிறாலுக்கும் நிலைக்கண்ணாடிக்கும் ஒப்புமை,
வடிவத்தோற்றம் பற்றியது. ஆம் – உவமவுருபு. வணம் – வர்ணம் என்ற வடசொல்லின் திரிபாகிய வண்ணம் என்பதன் தொகுத்தல்.
ஸநகாதியர் – ஸநகர், ஸநந்நகர், ஸநத்குமாரர், ஸநத்ஸுஜாதர் என்னும் நால்வர்;
இவர்கள், பிரமனது குமாரர். வணங்கு – முதனிலைத்தொழிற்பெயர்; நான்காம் வேற்றுமைத் தொகை.
————
தண் கமுகின் பாளை தடம் கதிரின் செல்வனுக்கு
வெண் கவரி போல் அசையும் வேங்கடமே ஒண் கடல் சூழ்
வண் துவரை நாட்டினான் மத்தாக வாரிதியுள்
பண்டு வரை நாட்டினான் பற்று -37-
(இ – ள்.) தண் கமுகின் பாளை – குளிர்ந்த பாக்குமரத்தின் (வெண்ணிற மான) பாளைகள்,
தட கதிரின் செல்வனுக்கு – மிக்க ஒளிகளைச் செல்வமாக வுடையவனான சூரியனுக்கு,
வெள் கவரி போல் – (உபசாரமாக இருபுறத் தும் அசைக்கப்படுகின்ற) வெண்சாமரம்போல,
அசையும் – அசையப்பெற்ற,
வேங்கடமே – , –
ஒள் கடல் சூழ் – பெரிய கடலினாற் சூழப்பட்ட,
வள்துவரை – வளப்பமுள்ள துவாரகையாகிய,
நாட்டினான் – நாட்டையுடையவனும்,
பண்டு – முற்காலத்தில்,
வாரிதியுள் – கடலிலே,
வரை – மந்தரமலையை,
மத்து ஆக நாட்டினான் – கடைகருவியாக இட்டவனுமாகிய திருமால்,
பற்று – விரும்பி வாழுமிடம்; (எ – று.)
கமுகம்பாளையை வெண்சாமரம்போலசையு மென்றது, நிறமும் வடிவும் பற்றியது; உயர்வுமிகுதியால், சூரியனுக்கு வெண்சாமர மென்றார்.
கண்ணபிரான் வடமதுரையில் வசிக்கையில், பகைவர் பலர் ஒருங்கு போர்க்குவந்து சூழ்தலை நோக்கி,
அச்சமயத்தில் தனது நகரத்துக்குடிகள் அழியாதபடி காக்கக் கருதி, மேல்கடலினிடையே துவாரகை யென்ற த்வீபத்தை நிருமித்து,
அங்கு இச்சனங்களையெல்லாம் குடியேற்றித் தானும் அவ்விடத்துக்கு எழுந்தருளின தன்மையை,
“ஒண்கடல்சூழ் வண்டுவரைநாட்டினான்” என்று குறித்தார். த்வாரகா மந்தம் என்ற வடசொற்கள், துவரை மத்து எனச் சிதைந்தன.
வாரிதி – நீர் தங்கு மிடம்; வடசொல்; இங்கே பாற்கடலுக்கு வழங்கப்பட்டது. பண்டு – இடைச்சொல்.
துர்வாசமுனிசாபத்தால் இந்திரனது செல்வமனைத்தும் கடலில்ஒளித்துவிட்ட சமயம் பார்த்து வந்துபோர்செய்த
அசுரர்க்குத் தோற்றதேவர்கள் திருமாலைச்சரணமடைந்தபோது அப்பெருமான் அவர்கட்கு அபயமளித்து
மந்தரமலையை மத்தாகக் கொண்டு பாற்கடல் கடையும்படி கட்டளையிட, அங்ஙனமே தேவர்கள் அம்மலையை
அக்கடலில் மத்தாக நாட்டிக் கடைவாராயினர்;
அத்தன்மையை ஏவுதற்கருத்தாவின் வினையாக எம்பெருமான் மேல் ஏற்றி “மத்தாக வாரிதியுள் பண்டு வரைநாட்டினான்” என்றார்.
———–
அங்கு அதிரும் கான்யாற்று அடர்திவலை யால் நனைந்து
வெங்கதிரும் தண் கதிர் ஆம் வேங்கடமே –செங்கதிர் வேற்
சேந்தன் அத் தம் ஐந்தான் திருத் தாதை விற்கு இளையாள்
பூந்தனத்து அமைந்தான் பொருப்பு –38-
(இ – ள்.) அங்கு – அவ்விடத்து,
அதிரும் – ஆரவாரிக்கின்ற,
கான்யாறு – காட்டாறுகளின்,
அடர் திவலையால் – மிக்க நீர்த்துளிகள் தன்மேல் தெறித்தலினால், நனைந்து -,
வெம் கதிரும் – இயல்பில் உஷ்ணகிரணங்களை யுடையவனான சூரியனும்,
தண் கதிர் ஆம் – குளிர்ந்த கிரணங்களை யுடையவனாதற்குக் காரணமாகின்ற,
வேங்கடமே – , –
செம் கதிர் – சிவந்த ஒளியையுடைய,
வேல் – வேலாயுதத்தையுடைய,
சேந்தன் – சுப்பிரமணியனுக்கும்,
அத்தம் ஐந்தான் – ஐந்துகைகளையுடையவனான, விநாயகனுக்கும்,
திரு தாதை – சிறந்த தந்தையான சிவபிரானுடைய,
விற்கு – வில்லுக்கு,
இளையாள் – இளையவளான சீதையினது,
பூ தனத்து – அழகிய கொங்கைகளிலே,
அமைந்தான் – விரும்பிப் பொருந்தியவனான திருமாலினது,
பொருப்பு – திருமலை; (எ – று.)
தண்கதிர் ஆம் – சீதகிரணனான சந்திரன் போல்கின்ற என்க. சூரிய மண்டலத்தின்மீது கான்யாற்றுத்திவலை
தெறிக்கும்படி யுள்ள தென்றதனால் அத்திருமலையின் உயர்வும், மிகப் பெரிய வடிவமுடைய சூரியமண்டலத்தைக்
கான்யாற்றுத் திவலைகள் குளிரச்செய்கின்றன வென்றதனால் அந்நீர்த்திவலைகளின் மிகுதியும்,
மிக்க குளிர்ச்சி தருந்தன்மையும் தோன்றும். வெங்கதிர், தண்கதிர் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைகள்.
ஓரடியில் இவ்வாறு மாறுபட்ட சொற்கள் வந்தது, தொடைமுரண். நான்குதிருக்கைகளோடு யானைவடிவத்துக்கு
உரியதான துதிக்கையுமாக ஐந்து கைகளை யுடைமையால், விநாயகன், ‘அத்த மைந்தான்’ எனப்பட்டான்.
ஹஸ்தம் என்ற வடசொல், அத்தம் எனத் திரிந்தது. சிவபிரானுக்கு விநாயகன் மூத்தகுமாரனும், முருகன் இளையகுமாரனு மாவர்.
தாதை – தாத என்ற வடசொல்லின் விகாரம்.
‘சிவன் விற்கிளையாள்’ என்றதிற் குறித்த வரலாறு:- விசுவகருமனால் நிருமிக்கப்பட்ட இரண்டு விற்களில் ஒன்றை
ஸ்ரீமகாவிஷ்ணுவும், மற்றொன்றைப் பரமசிவனும் எடுத்துக்கொண்டு தேவர்களின் வேண்டுகோளின் படி தம்மிற் போர்செய்கையில்,
சிவபிரான் எடுத்த வில் சிறிதுமுறியவே, போர் நிறுத்தப்பட்டது;
அவ்வில்லை அப்பெருமான் நிமிகுலத்துத் தேவராத னென்னும் மகாராசனிடம் ஒப்பிக்க, அவ்வரசன் அதனை
வெகுசாக்கிர தையாகப் பாதுகாத்துவந்தான். பின்பு அக்குலத்தில் தோன்றிய ஜநகனென்னும் அரசன் யாகசாலை
அமைத்தற்காகப் பூமியை உழுதபொழுது அவ்வுழு படைச்சாலில் தோன்றிய லக்ஷ்மியம்சமான பெண்ணை
அவ்வரசன் தனது மகளாகக்கொண்டு சீதையென்று பெயரிட்டு வளர்த்து
“அச்சிவதநுசை யெடுத்து வளைத்து நாணேற்றுபவனுக்கே இம்மகளை மணஞ்செய்துகொடுப்பேன்” என்று
அதனைக் கன்னியாசுல்கமாக நியமிக்க, பற்பலர்முயன்று முடியாதபின், விஷ்ணுவினது திருவவதாரமான ஸ்ரீராமன்
அவ்வில்லை யெடுத்து வளைத்து நாணேற்றி அப்பெண்ணை மணஞ்செய்துகொண்டான்.
இங்ஙனம் நிமிகுலத்தில் சிவதநுசு முன்பு வந்துசேர, பின்பு சீதை வந்து சேர்ந்ததனால்,
அவள் சிவபிரானது வில்லுக்கு இளையவ ளெனப்பட்டனள். இளையாள் – பின்தோன்றினவள்.
இனி, சிவபிரானது வில்லுக்கு இளைக்காதவளென்றுபொருளுரைப்பாரும் உளர்; சீதை தோழிகளோடு பந்து
விளையாடிக் கொண்டிருக்கையில் அப்பந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிவதநுசின் கீழ்ப் போய்விழ,
அவள் அவ்வில்லை இடக்கையால் தூக்கிப் பந்தை யெடுத்துக் கொண்டன ளென்று ஒருவரலாறு வழங்குதல் காண்க.
முந்தினபொருளில், இளையாள் என்பது – இளமையென்னும் பண்பினடியாப்பிறந்த உடன்பாட்டுக் குறிப்பு
வினையாலணையும்பெயரும், பிந்தினபொருளில் இளையென்னும் வினைப்பகுதி யடியாப் பிறந்த
எதிர்மறைத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம். இனி, வில் கிளையாள் என்று பதம்பிரித்து,
சிவபிரானது வில் வந்துசேர்ந்த குடும்பத்தில் தோன்றியவளென்று உரைப்பாரும்உளர்; கிளை – உறவினம்.
விற்கிளையாள் பூந்தனத்து அமைந்தான் – “நப்பின்னை கொங்கை மேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா.”
“மலராள்தனத்துள்ளான்” என்றாற் போலக் கொள்க.
—————
கேன் உளவு திங்கள் எனும் சித்தச வேள் வெண் குடைக்கு
வேணு ஒரு காம்பாகும் வேங்கடமே -கோணும் மனத்து
என்னை ஆளாக தான் இன் அருள் செய்தான் கமல
மின்னை ஆள் ஆகத்தான் வெற்பு –39-
(இ – ள்.) சேண் உலவு – வானத்திற் சஞ்சரிக்கின்ற,
திங்கள் ஏனும் – சந்திரனாகிய,
சித்தச வேள் வெள் குடைக்கு – சித்தஜனான மன்மதனதுவெண்கொற்றக்குடைக்கு,
வேணு – மூங்கில்,
ஒரு காம்பு ஆகும் – காம்பு போல் அமையப்பெற்ற, வேங்கடமே – , –
கோணும்மனத்து என்னை – செவ்வைப்படாத மனத்தை யுடைய என்னை,
ஆள் ஆக – (செவ்வைப்பட்டுத் தனக்கு) அடிமையாகும்படி,
தான் இன் அருள் செய்தான் – தானாக இனிய கருணையைச் செய்தருளியவனும்,
கமலம் மின்னை – செந்தாமரைமலரில் வாழ்கின்ற மின்னல்போல விளங்குகிற திருமகளை,
ஆள் – கொண்ட,
ஆகத்தான் – திருமார்பையுடையவனுமாகிய திருமாலினது,
வெற்பு – திருமலை; (எ – று.)
மன்மதன் – காமத்துக்கு உரிய தேவன். வெண்ணிறமாய் வட்டவடி வங்கொண்டு விளங்குகின்ற பூர்ணசந்திரமண்டலம்,
காதலைவளர்க்குந் தன்மைய தாதலால், மன்மதனது வெண்கொற்றக்குடை யென்று கூறப்படும்;
“ஆலைக்கரும்பு சிலை ஐங்கணை பூ நாண் சுரும்பு, மாலைக்கிளி புரவி மாருதம் தேர் –
வேலை, கடிமுரசங் கங்குல் களிறு குயில் காளம், கொடி மகரம் திங்கள் குடை” என்ற இரத்தினச் சுருக்கத்தையுங் காண்க.
திருவேங்கடமலையின்மீது வானத்தையளாவி ஓங்கிவளர்ந்துள்ள மூங்கில் சந்திரமண்டலமாகிய குடைக்கு ஏற்ப
இட்ட காம்பு போலு மென்று, அம்மூங்கிலின் உயரத்தோடு வலிமையையும் பருமையையும் விளக்கியவாறாம்.
சித்தஜன் – மனத்தினின்று தோன்றியவன்; திருமாலினது திருவுள்ளத்தினின்று மன்மதன் ஆதியில் தோன்றியதனாலும்,
ஆசைவடிவமான காமன் யாவர்மனத்தையும் இடமாகக்கொண்டு அங்குநின்று எழுதலாலும்,
சித்தஜ னென்று ஒருபெயர் பெறுவன். குமரவேளை விலக்குதற்கு, “சித்தசவேள்” என்றார்.
வேணு – வடசொல். கோணும் மனம் – வக்கிரத் தன்மையையுடைய மனம்; அதாவது –
தீ நெறியிற்செல்லும் மனம். இங்ஙனம் செவ்வையில்லாத மனத்தையுடைய யான் ஆட்கொள்ளப்படுதற்கு
உரியனல்லே னாயினும் என்னைத் தனது காரணமின்றியெழுங் கருணையால் திருத்திப் பணிகொண்டருளியவன் என்பார்,
“கோணுமனத் தென்னை யாளா கத்தான் இன்னருள்செய்தான்” என்றார்.
கமலமின்னையாளாகத்தான் – திருமகளைத் தனது திருமார்பில் வீற்றிருக்க வைத்துக்கொண்டவன்.
———–
தேவர் உடை ஐந்தருவின் செந்தேன் இறால் கிழிய
மீவருடை பாய்கின்ற வேங்கடமே –மூவடி மண்
போய் இரந்தார் அத்தர் புனையும் ஒரு பதினாறு
ஆயிரம் தாரத்தர் அகம் -40-
(இ – ள்.) தேவருடை – தேவர்களுடைய,
ஐந் தருவின் – ஐவகைக் கற்பக விருட்சங்களிற் கட்டிய,
செம் தேன் இறால் – செவ்விய தேன்கூடு,
கிழிய – கிழிபடும்படி,
மீ வருடை பாய்கின்ற – தன்மேலுள்ள வரையாடுகள் தாவிப் பாயப்பெற்ற,
வேங்கடமே – , –
மூ அடி மண் – – மூன்றடி நிலத்தை,
போய் இரந்தார் – (மகாபலிசக்கரவர்த்தியி னிடத்திற்) சென்று யாசித்தவரும்,
அத்தர் – (எல்லாவுயிர்கட்குந்) தந்தையாகின்றவரும்,
புனையும் – அலங்காரம் பெற்ற,
ஒரு பதினாறாயிரம் தாரத்தர் – ஒப்பற்ற பதினாறாயிரம் மனைவியரையுடையவருமாகிய திருமாலினது,
அகம் – இருப்பிடம்; (எ – று.)
திருமலையின் உயர்ச்சியோடு அம்மலையிலுள்ள ஆட்டின் கொழுமையும் விளங்கும்.
இந்திரன் முதலிய அனைவரையும் வென்று மூவுலகையும் தன் வசப்படுத்திச் செருக்கி உலகத்தை வருத்திய
மகாபலியென்னும் அசுரராசனது கர்வத்தைப் பங்கஞ் செய்யும் பொருட்டுத் தேவர்களின் வேண்டுகோளின்படி
திருமால் குள்ளவடிவமான வாமநாவதாரங்கொண்டு, அவ்வசுரன் யாகஞ் செய்துகொண்டிருக்கையிற் சென்று
தன் காலடியால் மூவடி மண் வேண்டி, அது கொடுத்தற்கு அவன் இசைந்தவுடனே திரிவிக்கிரமாவதாரஞ்செய்து,
ஓரடியால் மண்ணையும் மற்றோரடியால் விண்ணையும் அளந்து, மூன்றாமடிக்கு ஈடாக அவனது முடியில்
தனது அடியை வைத்து அவனைப் பாதாளத்தில் அழுத்தி யடக்கின னென்ற வரலாறு பிரசித்தம்.
கண்ணபிரான் இளமையில் திருவாய்ப்பாடியில் வளரும்போது தன்னிடம் காதல்கொண்ட பதினாறாயிரம் கோப ஸ்திரீகளோடு
கூடி விளையாடினமையும், கண்ணன் நரகாசுரனைச் சங்கரித்தபின்பு அவனால் மந்தரபருவதசிகரமான மணிபருவதத்திற்
சிறை வைக்கப்பட்டிருந்த தேவ சித்த கந்தருவாதி கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும் பதினாறாயிரம் வடிவமெடுத்து
விவாகஞ்செய்துகொண்டு அவர்களோடு தனித்தனி கூடி வாழ்ந்துவந்தமையும் பற்றி, “பதினாறாயிரந் தாரத்தர்” என்றார்.
“புனையும்” என்றது, அம் மங்கையருடைய இயற்கையழகோடு ஆடையாபரணாதிகளாகிய செயற்கை யழகையும் விளக்கும்.
“புனையும்” என்ற இடத்து “புணரும்” என்றும் பாடமுண்டு. அத்தர் – மைந்தரைத் தந்தை அன்போடு பாதுகாப்பது போல
எல்லா வுயிர்களையும் அன்போடு பாதுகாத்தருள்பவர்; பிராணிகளின் உற்பத்திக்குக் காரணமானவர்.
“போயிரந்தாரத்தார்” என்றும், “ஆயிரந்தாரத்தார்” என்றும் பாடமோதுவாரு முளர்;
அப்பொழுது, அத்தார் புனையும் என்று எடுத்து, அழகிய மணமாலையைத் தரித்த என்று பொருள் கொள்க; மற்றது ஒக்கும்.
—————————————————————–————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே —சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply