ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –61-80-

கையுறை -முத்தம் –
61- விலையானது இலை என்று நீ தந்த முத்தம் வேய் தந்த முத்து ஆகில் வெற்பா வியப்பு ஆல்
இலை ஆர் புனல் பள்ளி நாராயணன் பால் எந்தாய் அரங்கா இரங்காய் எனப் போய்
தலையால் இரக்கும் பணிப்பாய் சுமக்கும் தன் தாதை அவர் தாமரைத் தாள் விளக்கும்
அலை ஆறு சூடும் புராணங்கள் பாடும் ஆடும் பொடிப் பூசி ஆனந்த மாயே –61-

(இ – ள்.) வெற்பா – மலைநாடனே! –
விலையானது இலை என்று – இதற்கு விலையில்லையென்றுசொல்லி,
நீ தந்த முத்தம் – நீ கொடுத்த முத்தானது,
வேய் தந்த முத்து ஆகில் – மூங்கில்பெற்ற முத்தானால், (அது),
வியப்பு – அதிசயிக்கும்படி,
ஆல்இலை – வடபத்திரத்தில்,
ஆர் புனல் – நிறைந்த பிரளயநீரில்,
பள்ளி – பள்ளிகொண்டருளுதலையுடைய,
நாராயணன்பால் – ஸ்ரீமந்நாராயணனிடத்தில்,
போய் -, ‘எந்தாய் – எனது தலைவனே! அரங்கா -!
இரங்காய் – இரங்கியருளவேண்டும்,’ என – என்று பிரார்த்தித்து,
தலையால் – பிரம கபாலத்தைக்கொண்டு,
இரக்கும் – பிச்சையெடுக்கும்;
பணிபாய் சுமக்கும் – (அந்நாராயணனது) பாயாகிய பாம்பைச் சுமந்துகொண்டிருக்கும்;
தன் தாதை – தன்னுடைய தகப்பனாகிய பிரமன்,
அவர் தாமரை தாள் விளக்கும் – அந்தநாராயணனது திருவடித்தாமரைகளைத் திருமஞ்சனஞ்செய்ததனாலுண்டான ஸ்ரீபாததீர்த்தமாகிய,
அலை ஆறு – அலைகின்ற நதியை (கங்கையை),
சூடும் – தலைமேல் தரிக்கும்;
புராணங்கள் – புராணங்களை,
பாடும் -; ஆனந்தமாய் – (இங்ஙனம் இரந்து சுமந்து சூடிப்பாடுதலாலுண்டான) பேரானந்தத்தால்,
பொடி பூசி – விபூதியை அணிந்து கொண்டு,
ஆடும் – நர்த்தனஞ்செய்யும்; (எ – று.)

இது, முத்தைக் கையுறையாகக் கொண்டுசென்ற தலைமகனைத் தோழி தன்சாதுரியத்தால் அதன் சிறப்பின்மை கூறி மறுத்தது.

இத்தன்மையொன்றும் இல்லாமையால், அம்முத்தமன்று என்றவாறு. இதன் கருத்து –
வேய்தந்தமுத்த மென்றது உருத்திரனையாதலால், அவன் விஷ்ணுவினிடத்தே செய்ததனை விநோதமாக விவரித்தா ரென்பர்.

வேதங்கள் பிரளயகாலத்தில் தமக்கு ஆபத்து ஒன்றும் இல்லாதிருக்க வேண்டுமென்று பிரார்த்தித்தபடி,
சிவபிரானது கருணையினால் அவை மூங்கிலாக வந்து பிறக்க, அவற்றில் தான் முத்தாகத் தோன்றினனாதலால்,
சிவபிரானை இங்கு “வேய்தந்தமுத்து” என்றார்.
(மூங்கில் முத்துப்பிறக்குமிடங்கள் இருபதில் ஒன்று;
“தந்தி வராகமருப் பிப்பி பூகந் தழைகதலி, நந்துசலஞ்சல மீன்றலை கொக்கு நளின மின்னார்,
கந்தரஞ் சாலி கழை கன்ன லாவின்பல் கட்செவி கா ரந்து வுடும்பு, கரா முத்தமீனு மிருபதுமே” என்றதுகாண்க.)

ஸர்வேஸ்வரன் எல்லாவுலகங்களையுந் தன்ஒருவயிற்றி லடக்கிக்கொண்டு சிறியவடிவத்தோடு சிறியதோராலிலையிற்
பள்ளிகொண்டருளுதலால் “வியப்பாலிலையார் புனற்பள்ளிநாராயணன்” என்றும்,
உருத்திரன் நாகாபரணனாதலால் “பணிப்பாய் சுமக்கும்” என்றும்,
அவன் விஷ்ணுவிஷயமாகப் பல புராணங்களைப்பாடியிருத்தலால் “புராணங்கள்பாடும்” என்றுங் கூறினார்.
முன்னும் “சாத்திய மாலையுந் தாள்விளக்கும், வானந்தருங் கங்கைநன்னீருஞ் சென்னியில் வைக்கப்பெற்ற,
வானந்தந்தா னல்லவோ முக்கணான் மன்றுளாடுவதே” என்றார்.

இது, நான்கும் எட்டும் மாச்சீர்களும், மற்றவை காய்ச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்.

—————

தவம்
62- ஆனந்தமாய் அரங்கற்கே உயிர்கள் அடிமை என்னும்
ஞானம் தனால் ஐம்பொறி வாயில் சாத்தி நல் தாளைப் பற்றி
ஈனம் தரும் பற்றும் அற்று என்றும் யான் எனது என்னும் அபி
மானம் தவிர்ந்து இருப்பார்க்கு இது போல் இல்லை மாதவமே –62-

(இ – ள்.) அரங்கற்கே – திருவரங்கநாதனுக்கே,
உயிர்கள் – எல்லா ஆத்துமாக்களும்,
அடிமை என்னும் – அடிமையென்று அறிகின்ற,
ஞானந்தனால் – தத்துவஞானமாகிய கதவினாலே,
ஐம் பொறி வாசல் – (மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும்) பஞ்சேந்திரியங்களாகிய வாயில்களை,
சாத்தி – அடைத்து (ஐம்புலன்வழியே செல்லவொட்டாமல் மனத்தை அடக்கிவைத்து),
நல் தாளை – (அவனது) நல்ல திருவடிகளை,
பற்றி – சரணமாக அடைந்து,
ஈனம் தரும் – இழிவைத்தருகின்ற,
பற்றும் – ஆசைகளும்,
அற்று – நீங்கப்பெற்று,
யான் எனது என்னும் அபிமானம் – அகங்கார மமகாரங்கள்,
தவிர்ந்து -நீங்கப்பெற்று,
என்றும் – எந்நாளும்,
ஆனந்தம் ஆய் – பேராநந்தமடைந்து,
இருப்பார்க்கு – இருப்பவர்களுக்கு,
இதுபோல் – இங்ஙனமிருத்தல்போன்ற,
மா தவம் – பெரிய தவம்,
இல்லை – வேறுஇல்லை; (எ – று.)

தவத்தை விலக்கிப் பகவத் தியானத்தை வற்புறுத்துதல், தவம் என்னும் உறுப்பின் இலக்கணம்.

“ஆத்மா எம்பெருமானுக்கே யடிமை” என்ற ஸ்வஸ்வரூபத்தை யுணர்ந்து, ஐம்புலன்களிற் செல்லாமல் எம்பெருமானிடத்து
மனம்வைத்து அகப்பற்றுப் புறப்பற்றுக்களை யொழிதலே மிகச்சிறந்த தவ மென்பதாம்.
“நெறி வாசல்தானேயாய் நின்றானை யைந்து,
பொறிவாசல் போர்க்கதவஞ் சார்த்தி – யறிவான்” என்றார் பூதத்தாரும்.
பொறிவாசல் சாத்தியென்றதற்கேற்ப, ஞானமாகிய கதவு எனப்பட்டது.
“யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்த வுலகம் புகும்” என்ற திருக்குறள் இங்குக் கருதத்தக்கது.
பிறவிப்பிணிக்கு மருந்தாகலின், நற்றா ளென்றார். அபிமானம் – செருக்கு.

இது, நேர் முதலாகிய கட்டளைக்கலித்துறை.

————–

தவம் –
63-மாதவங்கள் என்று ஒத்து அவங்களின் மருவு சீவன் என்றொருவன் நீ பெரும்
பூதம் அல்லை இந்த்ரியம் அல்லை ஐம் புலனும் அல்லை நல புந்தி அல்லை காண்
சீதரன் பரந்தாமன் வாமனன் திரு அரங்கனுக்கு அடிமை நீ உனக்கு
ஏதும் இல்லை என்று அறி அறிந்த பின் ஈதின் மாதவம் இல்லை எங்குமே –63-

(இ – ள்.) மா தவங்கள் என்று – பெரிய தவங்க ளென்று,
ஓது – சொல்லப்படுகின்ற,
அவங்களில் – வீண்தொழில்களில்,
மருவு – பொருந்துகின்ற,
சீவன் என்ற – ஆத்துமாவென்கின்ற,
ஒருவ – ஒருத்தனே! – நீ -,
பெரும் பூதம் அல்லை – பெரிய பஞ்சபூதங்களு மல்லாய்;
இந்திரியம் அல்லை – பஞ்சேந்திரியங்களு மல்லாய்;
ஐம்புலனும் அல்லை – பஞ்சதந்மாத்திரைகளு மல்லாய்;
நல் புந்தி அல்லை காண் – நல்ல அறிவு மல்லாய்காண்; (பின்னை என்னையென்றால்), – நீ -,
சீதரன் – திருமகளைத் (திருமார்பில்) தரிப்பவனும்,
பரம் தாமன் – பரமபதத்தை யுடையவனும்,
வாமனன் – (மாவலியின் செருக்கை அடக்குவதற்கு) வாமநாவதாரஞ் செய்தவனுமாகிய, திருவரங்கனுக்கு -,
அடிமை – அடியவன்;
உனக்கு -, ஏதும் – யாதொரு சுவதந்திரமும், இல்லை -, என்று அறி -;
அறிந்த பின் – (அங்ஙனம்) அறிந்தால், ஈதின் – இதுபோன்ற,
மா தவம் -, எங்கும் இல்லை -; (எ – று,)

இதனால், தம்மனத்துக்குத் தாமே உபதேசிக்கும் முகத்தால், ஜீவாத்ம ஸ்வரூபம் இத்தன்மையதென்று விளக்குகின்றன ரென்க.
எளிதிற் பயன் கொடாது துன்பந் தருவனவாதலால், ‘தவங்களென்றோம தவங்கள்’ என்றார்.
என்றொருவ – தொகுத்தல்.ஐந்தைப் பூத இந்திரியங்களோடுங் கூட்டுக. அறிந்தபின் – பின்னீற் றெதிர்கால வினையெச்சம்.

இது, முதல் மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்.

———-

தலைவி இரங்கல்
64-எம் காந்தாள்-அங்கை நல்லீர் என் செய்கேன் இரண்டு ஏந்திழையீர்
தம் காந்தன் என்று அறிந்தாலும் நில்லாது தரைக்கும் நெய்க்கும்
அங்காந்த செம்பவளத்து எம்பிரான் அரங்கன் புயங்கள்
செங்காத்த மால் வரையோ இரும்போ என் தன சிந்தனையே -64–

(இ – ள்.) எம் – எமது (தோழியராகிய),
காந்தள் அம் கை நல்லீர் – காந்தள்மலர்போலும் அழகியகைகளையுடைய நல்லமகளிர்களே! –
இரண்டு ஏந்திழையார்தம் காந்தன் என்று – தரித்த ஆபரணங்களையுடைய (திருமகள் நிலமகளென்னும்) இரண்டு பிராட்டிமார்களிடத்து ஆசைகொண்ட கணவனென்று, அறிந்தாலும் -,
(என் மனம்), நில்லாது – (விரும்பிப் பின் செல்லாமல்) தரித்து நிற்காது;
என் செய்கேன் – (யான்) என்ன செய்வேன்?
தரைக்கும் – உலகங்களை உண்ணுதற்கும்,
நெய்க்கும் – நெய்யைப் பருகுதற்கும்,
அங்காந்த – திறந்த,
செம் பவளத்து – சிவந்த பவழம்போன்ற திருவாயையுடைய,
எம் பிரான் – எமது பெருமானாகிய,
அரங்கன் – ரங்கநாதனது,
புயங்கள் – திருத்தோள்கள்,
செங் காந்தம் மால் வரையோ – அழகிய காந்தத்தாலாகிய பெரிய மலைகளோ?
என்தன் சிந்தனை – எனது மனம், இரும்போ -? (எ – று.)

இது, தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப் பிரிந்த தலைமகள், அப்பிரிவுத்துயரை யாற்றி யடக்கும் வல்லமையிலளாகி,
தனது நிலைமையை அன்புடைத்தோழியர்க்கு வெளிப்படையாக உரைத்தது.
தன் விருப்பத்தை நிறைவேற்றுதற்பொருட்டுத் தோழியரைக் கொண்டாடி யழைப்பவளாய்,
‘எங்காந்தளங்கைநல்லீர்’ என்று புனைந்துரைத்து விளித்தாள்.
‘செம்பவளத்தெம்பிரான்’ என்றது அவரது திவ்விய சௌந்தரியத்திலே தான்கொண்ட ஈடுபாட்டினால்.

தரைக்கு அங்காந்தது – பிரளயகாலத்தில் உலகங்களை வயிற்றில் வைத்துக் காக்கும்பொருட்டு,
நெய்க்கு அங்காந்தது – கிருஷ்ணாவதாரத்தில், இருவர் மனைவியருளரென்று அறிந்தும் அப்பிரானது தோள்கள்
இரும்பைக் காந்தம் இழுக்கின்றவாறுபோலத் தன்மனத்தைத் திரும்ப வொண்ணாமற் கவர்ந்ததனால்,
இவ்வாறு கூறினாள்; ஐயத் தற்குறிப்பேற்றவுவமை.

இக் கட்டளைக்கலித்துறை, நேரசை முதலாக வந்தது.

————–

களி
65-சிந்தையில் குடி கொண்டிருந்தது திருக்கு அறுத்து அடிமைக் கொளும்
திரு வரங்கர் பொருப்பு உயர்ந்த திருப்புயம் புகழ் களியரோம்
புந்தி மிக்கது வந்து புக்கது போத மாதர்கள் எழுவர் தம் பூசையேமாக
பூசை என்றது புதுமை அன்று இது புத்தர்காள்
அந்தரத்து இமையோர் அருந்தும் மருந்தும் வெள்ளையது அன்றியே
அரிய சாதி கொளாத மானிடர் அகலிடத்தினில் இல்லையே
மந்திரத்தில் நிலாத தேவதை வானகத்தினில் இல்லையே வடிவு
இல்லாதவை அண்ட கோளம் வளைந்த வைப்பு அதில் இல்லையே –65

இ – ள்.) புத்தர்காள் – புத்தர்களே! – (நாங்கள்),
சிந்தையில் – (அன்பால் நினைவாரது) உள்ளத்தில்,
குடிகொண்டு இருந்து – (சென்று நீங்காது) தங்கியிருந்து,
திருக்கு அறுத்து – (அவர்களது) குற்றங்களைப் போக்கி,
அடிமை கொளும் – ஆட்கொள்ளுகின்ற,
திரு அரங்கர் – ஸ்ரீரங்கநாதரது,
பொருப்பு – மலைபோல,
உயர்ந்த -, திரு புயம் – திருத்தோள்களை,
புகழ் – துதிக்கின்ற,
களியரேம் – கட்குடியராவோம்;
புந்தி மிக்கது – மனம் மிகமகிழ்தற்குக் காரணமாகிய களிப்பு,
போத – மிகுதியாய்,
வந்து புக்கது – வந்து நேர்ந்தது;
மாதர்கள் எழுவர்தம் – ஸப்தமாதாக்களுடைய,
பூசையே – பூஜை தானே,
மக பூசை என்றது இது – யாகத்திற் செய்யப்படும் பூஜையென்ற இத்தன்மை,
புதுமை அன்று – புதியதொன்றன்று;
அந்தரத்து – சுவர்க்கலோகத்திலுள்ள,
இமையோர் – தேவர்கள்,
அருந்தும் – பருகுகின்ற,
மருந்தும் – அமிருதமும்,
வெள்ளை – வெள்ளைதான்;
அது அன்றியே – அதுவுமல்லாமல்,
அரிய – அருமையான,
சாதி – சாதிகளை,
கொளாத – உடைத்தாகாத,
மானிடர் – மனிதர்கள்,
அகல் இடத்தினில் – பரந்த பூமியில், (எங்கும்), இல்லையே -;
மந்திரத்தின் இலாத – மந்திரத்துக்கு வசப்படாத,
தேவதை – தெய்வம்,
வானகத்தினில் – தேவலோகத்திலும், இல்லையே -;
வடிவு இலாதவை – உருவமில்லாத பொருள்கள்,
அண்டகோளம் வளைந்த – அண்டகோளத்துக்கு உட்பட்ட,
வைப்பதில் – இடத்தில், இல்லையே -. (எ – று.)

கட்குடியர் அக்கள்ளைச் சிறப்பித்துக்கூறுவதாகச் செய்யுள்செய்வது, களி யென்னும் உறுப்புக்கு இலக்கணமாம்.

புத்தசமயத்தார் கட்குடியைவிலக்குதலை முக்கிய தருமமாகக் கொண்டவராதலால், அவர்களை விளித்துக் கூறுகின்றார்.
இனி, முதலடிக்கு – திருவரங்கநாதனது மலைபோன்ற திருத்தோள்களைப் பாடித் துதித்துப் பக்தி மிகுதியாற்
கூத்தாடுகின்ற களிப்புடையராவோ மென்றுமாம். கட்குடியர் துர்க்கபூசைசெய்தல் இயல்பாதலின்,
அதனைப் பெருமைப்படுத்திக்கூறினர்.

கட்குடித்தலையுங் குடியென்பராதலின் ‘சிந்தையிற் குடிகொண்டிருந்து’ என்றும், களியரென்பதற்குக் கட்குடியரென்றும்
பொருளாதலால் ‘களியரேம்’ என்றும்,
அமிருதமுங் கள்ளும் வெண்ணிற வொற்றுமை யுடைமையால் ‘இமையோ ரருந்து மருந்தும் வெள்ளை’ என்றும்,
சாதி மந்திரம் வடிவு என்பன கள்ளுக்கும் பெயராதலால் அதை உட்கொள்ளாத மனிதர்கள் பூமியிலில்லை யென்றும்,
அதுகொள்ளாத தேவர்கள் வானுலகத்திலில்லை யென்றும், அதுபெறாத பொருள்கள் அண்டமுழுவதிலுமில்லை யென்றுங்
களியென்னுமுறுப்பிற்குப்பொருந்தச் சிலேடையாக் கூறினரெனக்காண்க.
பொருப்புயர்ந்த – மலையினும் உயர்ந்த வென்றுமாம்.
மாதர்களெழுவர் – அபிராமி, மாயேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி.
மக பூசை – மஹாபூஜையென்பதன் திரிபாகக் கொண்டு, சிறந்த பூசை யென்றுமாம். மானிடரென்பது – மாநுஷ சப்த பவம்.

இது, முதல் மூன்று ஐந்தாஞ் சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும்,
அஃது இரட்டிகொண்டது ஓரடியாகவும் வந்த பதினான்குசீராசிரியவிருத்தம்.

————-

66-இல்லறம் எனத் துறவறம் எனச் சொல் அறம் பிற துணை அன்று என
பவக் கடலுள் துவக்கு அறுப்பான் காவிரி இடைப் பூவிரி பொழில்
சில மந்திகள் சினை தாவ பல தெங்கின் பழக் குலை உதிர
அடர் கமுகின் மிடறு ஓடி தர தேமாங்கனி சிதறு புவிழ முடப் பலவின் குடக்கனி உக
அரம்பைக் கனி வரம்பில் புக வயல் மருங்கின் மலர்ப் பொய்கையுள் துயில் வலம் புரி துண்ணனவு உற
தா அள் தாமரைத் தவிசு உறை தரு சூ உதடு ஓதி மம் பே எட்டுடன் எழ
மயிர்சேவல் மனம் களிப்ப குயில் பேடைக் குலம் ஒளிப்ப மழை முகில் என முழவு அதிர் தரு
திரு அரங்கப் பெரு நகருள் அரவணை மிசை அறி துயில் அமர்ந்து அருள் புரி
திரு நாரணனைச் சேர்ந்தனம் சரணா விந்தம் தஞ்சம் என்று இரந்தே–66-

(இ – ள்.) இல்லறம் என – இல்லறமென்றும்,
துறவறம் என – துறவறமென்றும்,
சொல் அறம் – (இருவகையாகச்) சொல்லப்படுகின்ற அறமும்,
பிற – மற்றைப் பொருளின்பங்களும்,
துணை அன்று என – துணையல்ல வென்று எண்ணி,
பவம் கடலுள் – பிறவிக்கடலினுள்ளே,
துவக்கு – கட்டுப்பட்டிருத்தலை,
அறுப்பான் – நீக்கும்பொருட்டு, –
காவிரியிடை – உபயகாவேரி மத்தியில்,
பூவிரி பொழில் – மலர்களலர்கின்ற சோலைகளில்,
சில மந்திகள் – சில பெண்குரங்குகள்,
சினை – மரக்கிளைகளில்,
தாவ – தாவிப்பாய, – (அதனால்),
பல தெங்கின் – பல தென்னமரங்களில்,
பழம் குலை – முதிர்ந்த காய்களின் குலைகள்,
உதிர – உதிரவும், –
அடர் கமுகின் – நெருங்கின பாக்குமரங்களினது,
மிடறு – கண்டம்,
ஒடிதர – ஒடியவும், –
தே மா கனி – தேன் மாம்பழங்கள்
சிதறுபுவிழ – சிதறிவி ழவும், –
முடம்பலவின் – வளைந்த பலாமரத்தினது,
குடம் கனி – குடம்போன்ற பழங்கள்,
உக – சிந்தவும், –
அரம்பை கனி – வாழைப்பழங்கள்,
வரம்பில் புக – வயல்வரப்புக்களில் விழவும், –
வயல் மருங்கின் – கழனிகளி னருகிலுள்ள,
மலர் பொய்கையுள் – பூக்கள் நிறைந்த தடாகத்தில்,
துயில் – தூங்குகின்ற,
வலம்புரி – வலம்புரிச் சங்கங்கள்,
துண்ணனவு உற – திடுக்கிட்டலறவும், –
தாள் தாமரை தவிசு – நாளத்தையுடைய தாமரை மலராகிய இருப்பிடத்தில்,
உறைதரு – தங்குகின்ற,
சூட்டு ஓதிமம் – உச்சியையுடைய அன்னப்பறவைகள்,
பேட்டுடன் – (தம் தமது) பேடைகளுடன்,
எழ – எழுந்திருப்பவும், –
மயில் சேவல் – பெண் மயில்களும் ஆண்மயில்களும்,
மனம் களிப்ப – மனமகிழ்ந்து கூத்தாடவும், –
குயில் பேடை குலம் – ஆண்குயில்கள் பெண்குயில்களின் கூட்டம்,
ஒளிப்ப – மனம்வருந்தி மறையவும், –
மழை முகில் என – மழைபெய்கின்ற மேகம்போல,
முழவு – வாத்தியங்கள்,
அதிர்தரு – ஒலிக்கின்ற, –
திரு அரங்கம் பெரு நகருள் – திருவரங்கமென்கிற பெரிய திருநகரத்தில்,
அரவணை மிசை – சேஷசயனத்தின்மேல்,
அறி துயில் அமர்ந்து அருள்புரி – யோகநித்திரை செய்தருளுகின்ற,
திருநாரணனை – ஸ்ரீமந்நாராயணனை,
சரண அரவிந்தம் – (அவனது) திருவடித்தாமரைகளே,
தஞ்சம் என்று – அடைக்கல மென்று, சொல்லி,
இரந்து – பிரார்த்தித்து,
சேர்ந்தனம் – அடைந்தோம், (யான்); (எ – று.)

காவிரியிடைத் திருவரங்கப்பெருநகருள் அரவணைமிசை அறிதுயிலமர்ந்தருள்புரி திருநாரணனைப் பவக்கடலுள்
துவக் கறுப்பான் சேர்ந்தன மென்க. இல்லறமாவது – இல்வாழ்க்கைநிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் நின்று,
அதற்குத் துணையாகிய கற்புடைமனைவியோடுஞ் செய்யப்படுவதாகிய அறம். துறவறமாவது –
மேற்கூறிய இல்லறத்தின் வழுவாதொழுகி அறிவுடையராய்ப் பிறப்பினையஞ்சி வீடுபேற்றின் பொருட்டுத் துறந்தார்க்கு உரித்தாகிய அறம்.
அறம் பொருளின்பமென உடனெண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்து இல்லறந் துறவற மென்னும்
இருவகை நிலையாற் கூறப்பட்டதனால், ஏனைப் பொருளும் இன்பமும் ‘பிற’ என்னப் பட்டன.
பவம் – வடசொல். இங்குக் கூறிய வருணனை,
“காய்மாண்ட தெங்கின்பழம்வீழக் கமுகினெற்றிப், பூமாண்டதீந்தேன்றொடைகீறி வருக்கைபோழ்ந்து,
தேமாங்கனிசிதறி வாழைப்பழங்கள்சிந்து, மேமாங்கத நாடு” என்னுஞ் சிந்தாமணிச்செய்யுள் போன்றது.

மந்தி, பேடு, பேடை – பெண்பெயர்கள். “குரங்கு முசுவு மூகமு மந்தி,” (“புள்ளு முரிய வப்பெயர்க் கென்ப,”)
“பேடையும் பெடையு நாடினொன்றும்” என்பன காண்க. கமுகு – க்ரமுகமென்னும் வடசொல்லின் சிதைவு.
சிதறுபு – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். சேவல் – ஆண்பெயர்.
“சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணு, மாயிருந் தூவி மயிலலங் கடையே” என்றார் தொல்காப்பியனா ராதலின்,
சேவலென்னும் பெயர் மயிலுக்கு வருதல், புதியனபுகுதல். மழைக்காலத்தில் மயிலினம் மகிழ்தலும், குயிலினம் வருந்துதலும் இயல்பு.
மயிலுங் குயிலும் முழவொலியை மழையொலியென மயங்கினவென்க; மயக்கவணி. “தஞ்சமென் றறிந்து” என்றும் பாடம்.

இது, இருசீரடி பத்தொன்பது கொண்டு தனிச்சொற்பெற்று அகவற் சுரிதகத்தான் முடிந்த குறளடி வஞ்சிப்பா:
அருள்புரி யென்பது, தனிச்சொல்; ஈற்றிரண்டடியும், நேரிசையாசிரியச்சுரிதகம்.

————–

67- இரவியை இரவின் மதியினை மதியுள் இறையினை இறையும் எண்ணரிய
கரவனை கரவு இல் முனிவனை முனிவர் கருத்தனை கருத்தனைத் துடைத்து ஆள்
பரமனை பரம பதத்தனை பதத்துள் பாரனை பார நத்து ஊதும்
அரவணை அரவின் அரங்கனை அரங்கத்து அடிகளை அடிகள் சேவியுமே –67–

(இ – ள்.) இரவியை – சூரியனானவனை,
இரவின் மதியினை இராத்திரியில் விளங்குகின்ற சந்திரனானவனை,
மதியுள் இறையினை – அறிவிலுறைகின்ற தலைவனை,
இறையும் எண்ணரிய கரவனை – சிறிதும் நினைத்தற்குமரிய மாயையையுடையவனை,
கரவுஇல் முனிவனை – கபடமில்லாத முனிவனா யிருப்பவனை,
முனிவர் கருத்தனை – முனிவர்களது உள்ளத்தி லுறைபவனை,
கருத்தனை துடைத்து ஆள் பரமனை – (தன்னையடைந்தவர்களது) பிறப்பைப் போக்கியருளுகின்ற உயர்ந்தவனை,
பரமபதத்தனை – பரமபதத்தையுடையவனை,
பதத்துள் பாரனை – திருவடியினின்றும் பூமியை யுண்டாக்கினவனை,
பாரம் நத்து ஊதும் அரவனை – பெரியபாஞ்சசன்னியத்தை ஊதுகின்ற ஓசையை யுடையவனை,
அரவின் அரங்கனை – பாம்பை இடமாக வுடையவனை,
அரங்கத்து அடிகளை – திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற ஸ்வாமியை,
அடிகள் சேவியும் – திருவடிதொழுங்கள்; (எ – று.)

இச்செய்யுளில் ஒருசொல்லைப்பற்றி முன்வந்த ஒருசொல்லை விட்டிட்டு இவ்வாறு ஒருதொடர்புபடுத்திக்கூறியது –
ஒருவகை ஏகாவளியலங்காரம். முனிவன் என்றது – உலகங்களின் படைப்பளிப்பழிப்புக்களை மநநம் பண்ணுபவன்;
“முனியே நான் முகனே” என்றார் ஆழ்வாரும்.
இனி, கரவின் முனிவனை யென்பதற்கு – முதலையினிடத்துக் கோபத்தையுடையவனை யென்றும்,
முனிவர் கருத்தனை யென்பதற்கு – முனிவர்கள் தலைவனை யென்றும் உரைக்கலாம்.
எம்பெருமானது திருவடியினின்று பூமி உதித்த தென்று வேத மோதுதலால், “பதத்துட் பாரனை” என்றார்;
திரிவிக்கிரமாவதார கதையை யுட்கொண்டு, ஒருதிருவடியுளடக்கிய பூமியையுடையவ னென்றுமாம்.
“பாரதத்தூதவரவனை” என்னும் பாடத்துக்கு – பரதகுலத்தில் தோன்றிய பாண்டவர்க்குத் தூதனாய்த் துரியோதனனிடத்து
வந்தவனை யென்று உரைக்க. “பாரனைத்தோது மரவனை” என்றும் பாடம்.
அரவம் – ரவம். அடிகள் சேவியும் – பெரியோர்களே! சேவியு மெனவுமாம்.
இப்பொருளில், அடிகளென்பது – அடியென்னும் பகுதியிற் பிறந்து உயர்வுப்பொருளுணர்த்தி நின்ற படர்க்கைச்சொல்.

இதற்கு யாப்பிலக்கணம், 36-ஆங் கவியிற் கூறியது கொள்க.

—————

தலைவி இரங்கல்
68-சேவிக்க வாழ்விக்கும் எம் கோன் அரங்கன் திருக் கோயில் சூழ்
காவில் கலந்து ஆசை தந்து ஏகினார் நெஞ்சு கல் நெஞ்சமோ
வாவிப் புறத்து அன்னமே இன்னம் ஏதோ வரக் கண்டிலேன்
பாவிக்கு அநேகம் தனிக்காலம் இந்தப் பனிக்காலமே –68-

(இ – ள்.) வாவிப்புறத்து அன்னமே – தடாகங்களினிடத்தே சஞ்சரிக்கின்ற அன்னப்பறவையே! –
சேவிக்க – (தன்னைக்கண்டு) வணங்க, (அவர்களை),
வாழ்விக்கும் – (இம்மை மறுமை வீடுகளிற் சிறந்து) வாழச்செய்கின்ற,
எம் கோன் – எமதுதலைவனாகிய, அரங்கன் – ரங்கநாதனது,
திரு கோயில் – அழகிய கோயிலை, சூழ் – சூழ்ந்த,
காவில் – சோலையில், கலந்து – கூடியிருந்து,
ஆசை தந்து – ஆசைகாட்டி,
ஏகினார் – சென்றவரது,
நெஞ்சு – மனம், கல் நெஞ்சமோ – கல்லினாலாகிய நெஞ்சோ?
இன்னம் – இன்னமும் (பனிக்காலம் வந்த பின்னும்), ஏதோ – என்ன காரணத்தாலோ,
வர கண்டிலேன் – மீண்டுவரக் கண்டேனில்லை;
பாவிக்கு – தீவினையேனாகிய எனக்கு,
இந்த பனி காலம் -, அனேகம் தனி காலம் – தனியேயிருக்கின்ற நெடுங்கால மாகவாயிற்று; (எ – று.)

இது, தலைமகன் புணர்ந்து தணந்துவர நீட்டித்த நிலைமைக்கண் தலைமகள் நெய்தனிலத்து அன்னத்தோடு கூறி இரங்கியது.

கணவனைப் பிரிதற்கேற்ற தீவினையுடைமையால், தலைவி தன்னை “பாவியேன்” என்று பழித்துக் கூறுகின்றாள்.
கணவனைப் பிரிந்த நிலையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பலயுகங்கள் போலு மாதலால்,
‘அனேகந் தனிக்கால மிந்தப்பனிக்காலம்’ என்றாள்;
“பலபல வூழிகளாயிடு மன்றியோர் நாழிகையைப் பலபல கூறிட்ட கூறாயிடும்…..,…. அம்மவாழி யிப்பாயிருளே” என்றார் நம்மாழ்வாரும்.

இது, முதல் நான்குசீருங் காய்ச்சீர்களும், ஈற்றுச்சீரொன்று மாங்கனிச்சீருமாகிய கலிநிலைத்துறை.

————–

குறம்
69-காலம் உணர்ந்த குறத்தி நான் கருதியது ஓன்று அது சொல்லுகேன்
பாலகன் உச்சியில் எண்ணெய் வார் பழகியது ஓர் கலை கொண்டு வா
கோல மலர்க் குழல் மங்கை நின் கொங்கை முகக் குறி நன்று காண்
ஞாலம் உவந்திட நாளையே நண்ணுவை நம் பெருமாளையே –69-

(இ – ள்.) நான் -, காலம் – முக்காலத்து விருத்தாந்தங்களையும்,
உணர்ந்த – அறிந்து சொல்லவல்ல,
குறத்தி – குறவர்மகள்;
ஒன்று கருதினை – (நீ மனத்தில்) யாதொன்று நினைத்தாயோ,
அது – அதனை, சொல்லுவேன் -:
பாலகன் – (என்) சிறுகுழந்தையது,
உச்சியில் – தலையில்,
எண்ணெய் வார் – எண்ணெய் வாரு;
பழகியது ஓர் கலை – பழையதொரு சீலையை,
கொண்டுவா – கொண்டுவந்து கொடு;
கோலம் மலர் கையின் – அழகிய மலர்போலுங் கைகளையுடைய,
மங்கை – பெண்ணே! நின் – உன்னுடைய,
கொங்கை முகம் குறி – முலைக்கண்களின் குறியானது, நன்று – நன்றாயிருக்கிறது; (ஆகையால்),
ஞாலம் உவந்திட – உலகமுழுவதும் மகிழும்படி,
நாளையே – நாளைக்கே,
நம்பெருமாளை -, நண்ணுவை – சேர்வாய்; (எ – று.)

தலைமகனைக் கண்டு காமுற்று மயங்கிநிற்கும் நிலைமைக்கண் தன்னிடம் வந்த குறிகண்டறிந்து கூறவல்ல
குறத்தியாகிய கட்டுவிச்சியைத் தலைவி குறி வினவக் குறத்தி குறிதேர்ந்து நல்வரவு கூறுவதாகச் செய்யுள்செய்வது,
குறம் என்னும் உறுப்பின் இலக்கணமாம்.
தலைமகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து ஆற்றாது மெலிந்து வருந்திய தலைமகளைக் கண்ட செவிலித்தாய்,
இவள்நோய்க்குக் காரணம் இன்னதென்று அறியாமல் நிமித்தங்கண்டுகூறவல்லகட்டுவிச்சியை அழைத்து வினாவ,
அவள் குறியிலக்கணப்படி சிறுமுறத்திலே சிலநெற்குறிகண்டு அதனால் உண்மையுணர்ந்து கூறுகின்றாள்.
காலமுணர்ந்த குறத்தி நான் – முக்கால வரலாறுகளையும் முன்னறிந்துகூறவல்ல குறத்தி யானென்று தனது சிறப்பை வெளியிட்டனள்.

“எந்தவிதங்களு மறி குறமகணா னிங்கெதிர்வந் தினியென திதமொழிகே,
ளந்தமுறந்தனி னவமணி கொடுவா வன்பிலணிந்திட வழகியகலைதா,
கந்தமிகுந்த தனந்தனிற் குறியே கண்டன னின்றலர் கமழ்குழன்மடவாய்,
வந்தெவருந்தொழ வடமலைதனில்வாழ் வண்டுளவன் தின மருவுவ னுனையே” என்ற திருவேங்கடக் கலம்பகச் செய்யுள் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

காலம் – ஆகுபெயர். பாலகன் – கப்பிரத்தியயம், இரங்கற்பாடுணர்த்திற்று.
இனி, மூன்றாமடிக்கு, நினது கைகளிலும் கொங்கைகளிலும் முகத்திலு முள்ள குறி நன்றென்றும்,
கைக்குறியினும் கொங்கைமுகத்தின்குறி நன்றென்றும் பொருள்கொள்ளலாம். “மலர்க்குழல்” என்றும் பாடம்.
ஞாலமுவத்தல் – ஒத்த தலைமகனுக்குந் தலைமகளுக்குங் கூட்டம் நேர்தலால். தான் குறிசொல்வதற்கு வெகுமதியாகத்
தன்பாலகனுச்சியில் எண்ணெய் வார்க்குமாறும் பழைய வஸ்திரமொன்றைத் தனக்குக் கொடுக்குமாறும் குறத்தி கேட்கின்றன ளென்க.

இது, எல்லாச்சீரும் விளச்சீராகிய அறுசீராசிரிய விருத்தம்.

———

மேக விடு தூது
70–பெருமாலை யார்க்கு உரைப்பேன் உமக்கே விண்டு பேசின் அல்லால்
கரு மாலையாய் எழும் கார்க் குலங்காள் தொண்டர் காற்பொடி தன்
திருமாலை கொண்ட திருமால் அரங்கம் தெய்வத் துழாய்
மரு மாலை வாங்கி வம்மின் அந்தி மாலை வரும் முன்னமே –70-

(இ – ள்.) கரு மாலையாய் எழும் கார் குலங்காள் – கரிய தொரு வரிசையாய் ஆகாயத்தே எழுகின்ற மேகங்களது கூட்டங்களே! –
பெருமாலை – (எனது) பெரிய மயக்கத்தை, உமக்கே – உங்களுக்கே,
விண்டு பேசின் அல்லால் – விவரித்துச்சொன்னாலல்லாமல், யார்க்கு – வேறே யாவர்க்கு,
உரைப்பேன் – எடுத்துச்சொல்லுவேன்? (நீங்கள் போய்),
தொண்டர் கால் பொடிதன் – தொண்டரடிப்பொடியாழ்வார ரருளிச்செய்த,
திருமாலை – திருமாலை யென்னுந் திவ்வியப்பிரபந்தமாகிய மாலையை, கொண்ட – கொண்டருளிய,
திரு மால் அரங்கர்தம் – திருமாலாகிய ரங்கநாதரது,
தெய்வம் துழாய் மரு மாலை – திவ்வியமான நறுமணம்பொருந்திய திருத்துழாய்மாலையை,
அந்திமாலை வருமுன்னம் -அந்திப்பொழுது வருதற்குமுன்னே,
வாங்கி வம்மின் – வாங்கிக்கொண்டு வாருங்கள்; (எ – று.)

தலைவனைப் பிரிந்து தனித்து வருந்துந் தலைவி, இங்ஙனஞ் சொல்லித் தலைவனிடத்து மேகங்களைத் தூதுசெல்லுமாறு வேண்டுகின்றாள்.

புண்ணிற்புளிப்பெய்தாற்போல இந்நிலையில் அந்திமாலை வருமாயின் யான் இறந்துபடுவேன்: அது வருவதற்குமுன்னமே
எனது தலைவன் அணிந்த மாலையை எனக்குக்கொணர்ந்துகொடுத்தால்மாத்திரமே யான் அதுகொண்டு சிறிது ஆறியிருப்பே னென்றாள்;
தொண்டரடிப்பொடி யாழ்வார் “இந்திரலோகமாளு மச்சுவை பெறினும் வேண்டேன்” என்று
“பரமபதம் கிடைப்பதானாலும் அதிலும் எனக்கு நசையில்லை; பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்க ணச்சுதா!
அமரரேறே ஆயர்தம் கொழுந்தே! என்னும் இச்சுவையே யான் வேண்டுவது” என்று அறுதியிட்டுத் திருவரங்கநாதனையன்றி
வேறு எத்தேவரையும் கடைக் கணியாது அப்பிரான் திறத்தில் திருமாலை யென்னுந் திவ்வியப்பிர பந்தத்தை
யருளிச்செய்தன ராதல்பற்றி, ‘தொண்டர்காற்பொடிதன் றிருமாலைகொண்ட திருமாலரங்கர்’ என்றார்.
தொண்டர் காற் பொடி – பக்தாங்க்ரிரேணு. திருமாலை கொண்ட திருமால் என்னு மிடத்தில், சொன்னயம் பாராட்டற்பாலது.
“பாவோநாந்யத்ரகச்சதி (எனது சிந்தை ஸ்ரீராமனைத்தவிர வேறொருதெய்வத்தினிடத்திற் செல்லாது” என்ற சிறிய திருவடியும்,
“அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே” என்ற தொண்டரடிப்பொடியாழ்வாரும்,
“என்னமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக்காணாவே” என்ற திருப்பாணாழ்வாரும் தம்மில் ஒப்பரென்ற காரணம்பற்றி,
ஸ்ரீரங்கந்திருக்கோயிலில் இம்மூவர்க்கும் ஒருங்கே சந்நிதி யமைக்கப்பட்டுள்ள தென்பர்.
தொண்டர்காற்பொடிதன் திருமாலை – செய்யுட்கிழமைப் பொருளில் வந்த ஆறாம்வேற்றுமைத்தொகை.
வம்மின் – வா என்னும் முதனிலையடியாப் பிறந்த ஏவற்பன்மைமுற்று. அந்தி – ஸந்த்யா என்னும் வடமொழியின் சிதைவு.

இது, நிரையசை முதலாகிய கட்டளைக்கலித்துறை.

——————

71-முன்னம் பிறந்த பிறப்போ முடிவு இல்லை
இன்னம் பிறப்பிக்க எண்ணாதே தென் அரங்கம்
மேவிக் கிடந்தானே வீற்று இருக்கும் நின் பதத்து என்
ஆவிக்கு இடம் தான் அருள் –71-

(இ – ள்.) தென் அரங்கம் மேவி கிடந்தானே – அழகிய திருவரங்கத்தில் திருவுள்ள முவந்து திருப்பள்ளிகொண்டருளுபவனே! –
(யான்), முன் (ஆகையால்), பிறப்போ – முன்னே பிறந்த பிறவிகளுக்கோ வென்றால்,
முடிவு நாளை இவர்களை வென்று ஒரளவில்லை; (ஆகையால்), இன்னம் – இனிமேலும்,
பிறப்பிக்க – பிறவியெடுக்கும்படி, எண்ணாதே – திருவுள்ளத்திற் கொள்ளாமல்,
வீற்றிருக்கும் – ஒப்பில்லாத சிறப்போ டிருக்கின்ற, நின் பதத்து – உனது பரமபதத்தில்,
என் ஆவிக்கு – எனது உயிர்க்கு, இடம் – இடத்தை, அருள் – தந்தருள்வாய்; (எ – று.)

பலபிறப்பெடுத்து உழன்று வருந்திய என்னை இனிமேற் பிறப்பற்று முத்திபெறுமாறு அருள்செய்யவேண்டு மென்று வேண்டுகின்றவாறு.

“வீற்றிருக்க” என்றும் பாடம். பதத்து – திருவடிநிழலி லென்றுமாம்: திருவடியே வீடாயிருக்கு மாதலால், “நின்பதத்து” என்றது ஏற்கும்.

இது, மலரென்னும் வாய்பாடுபட முடிந்த நேரிசைவெண்பா.

———–

தலைவி இரங்கல் –மடக்கு –
72- அரும்புன்னாகத் தடங்காவே அவா என் ஆகத்து அடங்காவே
அம்போருகக் கண் பொரும் தேனே அழு நீர் உகக்கண் பொருந்தேனே
பரம்பும் கடல் ஊர் நாவாயே பாவிக்கு அடல் ஊர் நாவாயே
பார் மீது உயர மறி அலையே படும் என் துயரம் அறியலையே
கருங்கண் கயலே மாசுறவே கரைவேற்கு அயலே மாசு உறவே
கண்டல் போது உகு வாலுகமே கங்குல் போது குவால் உகமே
குரும்பை தழைக்கும் கரும் பனையே குயில் வந்து அழைக்கும் கரும் பனையே
குருகீர் நந்து அமர் அம் கரையே கொணரீர் நம் தம் அரங்கரையே –72 –

(இ – ள்.) அரும் புன்னாகம் தடம் காவே – அரிய பெரிய புன்னைமரச் சோலையே!
அவா – ஆசை, என் ஆகத்து அடங்காவே – எனது மனத்தில் அடங்குகிறதில்லை;
அம்போருகம் கண் பொரும் தேனே – தாமரைமலரினிடத்துப் பொருந்திய வண்டே!
அழு நீர் உக – அழுகின்ற கண்ணீ ரறாதொழுக, கண் பொருந்தேனே – கண்ணுறங்குகிறேனில்லை;
பரம்பும் கடம் ஊர் நாவாயே – பரவிய கடலி லோடுகின்ற மரக்கலமே!
பாவிக்கு – பாவியேனுக்கு, ஊர் நா வாயே – (அலர்தூற்றுகின்ற) ஊராரது நாவும் வாயும்,
அடல் – பகைமையாகும்; பார்மீது உயர மறி அலையே – கரையின்மேல் உயர்ந்து மடங்கி விழுகின்ற அலையே!
படும் என் துயரம் அறியலையே – யான்படுகின்ற துன்பத்தைக் கண்டறிகின்றாயல்லையே;
கருங் கண் கயலே – கண்களையுடைய கயல்மீனே! மா சுறவே – பெரிய சுறாமீனே!
கரைவேற்கு – இங்ஙனம் வருந்துகின்ற எனக்கு, மாசு உறவே – குற்றமுள்ள உறவினரும்,
அயலே – அயலாரேயாவர்; வண்டல் போது உகு வாலுகமே – தாழைமலர்கள்சிந்துகின்ற வெண்மணற்குன்றே!
கங்குல் போது குவால் உகமே – இராப்பொழுது திரண்ட அநேகம்யுகங்களேயாகும்;
குரும்பை தழைக்கும் கரும் பனையே – குரும்பைகள் தழைக்கின்ற கரிய பனைமரமே!
குயில் – குயிலானது, வந்து -, கரும்பனை – கருப்புவில்லையுடைய மன்மதனை,
அழைக்கும் – அழையா நின்றது; குருகீர் – நாரைகளே!
நந்து அமர் அம் கரையே – சங்குகள்பொருந்திய அழகிய கரையே!
நந்தம் அரங்கரை – நமது அரங்கநாதரை, கொணரீர் -கொண்டுவாருங்கள்; (எ – று.)

இது, பிரிந்துறைகின்ற நெய்தனிலத்துத்தலைமகள் ஆங்குள்ளபொருள் களை நோக்கித் தான்படும் வருத்தங் கூறி இரங்கியது.

ஈண்டுக் கேளாமரபின கேட்பனபோலக் கூறப்பட்டன; மரபுவழு வமைதி. அம்போருஹம் – நீரில்முளைப்பது. கண் – ஏழனுருபு. ஊர், உறவு –
ஆகுபெயர்கள். உறவினரெல்லாம் தான்படும் வருத்தத்திற்கு இரங்காது ஊரவர்போலத் தூற்றுதலால்,
‘கரைவேற்கயலே மாசுறவே’ என்றாள்.
விரகிகளுக்கு இரவு நீட்டித்ததுபோலத் தோன்றி வருத்துதலால், ‘கங்குற்போது குவாலுகமே’ எனப்பட்டது.
குரும்பை – இளங்காய். குயிலொலி காமோத்தீபகமா யிருத்தலால், ‘குயில்வந்தழைக்குங் கரும்பனை’ யென்றாள்.

இதற்குச் செய்யு ளிலக்கணம், 33 – ஆங் கவியிற் கூறியது.

————-

73-கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே –
வகிர் இளம் பிறையான் வார் சடை தேங்கப் பகிரதி கான்றது ஓர் பங்கே ருகமே
யாவையும் யாரையும் படைக்க நான் முகக் கோவை ஈன்றது ஓர் கோகனகமே
திரு மகட்கு இனிய திருமனை ஆகி பரு மணி இமைப்பது ஓர் பதும மலரே
சடைத்தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப முடித்தலை தவிர்த்தது ஓர் முளரி மா மலரே
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கல நாண் வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென் திசை புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே
மண் தினிஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போ ருகமே
கடை சிவந்து அகன்று கரு மணி விளங்கி இடை சில அரி பரந்து இனி ஆய நெடிய ஆய
இன்பம் தழீ இய இரு பெரும் கமலம் துன்பம் தழீ இய தொண்டனேனையும்
உவப்புடன் ஒரு கால் நோக்கி பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே –73-

(இ – ள்.) கரை பொருது ஒழுகும் – இருகரைகளையும் மோதிப் பெருகுகின்ற,
காவிரி யாறு – காவேரிநதி (ஒன்றுஉண்டு);
யாற்றிடை கிடப்பது – அவ்வாற்றினிடையே பொருந்தியிருப்பதாகிய,
ஓர் ஐந் தலை அரவு – ஐந்து தலைகளையுடையதொரு நாகம் (உண்டு);
அரவம் சுமப்பது – அத் திருவனந்தாழ்வான் தாங்குவதாகிய,
ஓர் அஞ்சன மலை – மைம்மலையொன்று (நம் பெருமாள்), (உண்டு) ;
அம்மலை பூத்தது – அந்தநீலமலையினிடத்தே மலர்ந்ததாகிய,
ஓர் அரவிந்த வனம் – ஒரு தாமரைமலர்க்காடு (திருவவயங்கள்), (உண்டு);
அரவிந்தமலர்தொறும் – அத்தாமரைமலர்கள்தோறும்,
அதிசயம் உள – ஒவ்வொரு வியப்பு உண்டு; (அஃதென்னவெனில்), –
ஒரு தாமரை – ஒரு தாமரைமலர் (இடத்திருவடி)
கடல் விளிம்பு உடுத்த – கடலாற் சுற்றிலுஞ் சூழப்பட்ட,
கண் அகல் ஞாலம் முழுது – இடமகன்ற பூமிமுழுவதையும்,
உடன் – ஒருசேர, அளந்தது -;
ஓர் பங்கேருகம் – ஒருதாமரைமலர் (வலத்திருவடி),
வகிர் இளம் பிறையான் – துண்டமாகிய இளம்பிறைச் சந்திரனை முடியிலுடைய உருத்திரனது,
வார் சடை – நீண்ட சடையில்,
தேங்க – நிறைந்து தங்கும்படி,
பகிரதி -கங்கைநதியை,
கான்றது – வெளியுமிழ்ந்தது;
ஓர் கோகனகம் – ஒருதாமரைமலர் (திருநாபி),
யாவையும் – எல்லா அஃறிணைப் பொருள்களையும்,
யாரையும் – எல்லா உயர்திணைப்பொருள்களையும்,
படைக்க – படைக்கும்படி,
நான்முகம் கோவை – பிரமதேவனை,
ஈன்றது – உண்டாக்கிற்று;
ஓர் பதுமமலர் – ஒரு தாமரைப்பூ (திருமார்பு),
திருமகட்கு – பெரியபிராட்டிக்கு,
இனிய – வசித்தற்கினியதான,
திரு மனைஆகி – அழகிய இடமாய்,
பரு மணி இமைப்பது – பருத்த கௌஸ்துபரத்தினம் விளங்கப்பெற்றது;
ஓர் முளரி மா மலர் – ஒரு அழகிய தாமரைமலர் (வலத்திருக்கை),
சங்கரன் – சிவபிரான்,
சடை தலை தாழ்த்து – சடையினையுடைய தலையினால் வணங்கி,
இரப்ப -யாசிக்க,
முடை தலை தவிர்த்தது – (அவன்கையிலொட்டிய) முடைநாற்றத்தையுடைய பிரமகபாலத்தை ஒழித்தது;
வனசமும் ஒன்று – ஒரு தாமரைமலர் (இடத் திருக்கை),
ஆங்கு – அவ்விடத்தில் (இலங்கையில்),
மண்டோதரி – மந்தோதரியென்பவள்,
அணிந்த – (கழுத்தில்) தரித்திருந்த,
மங்கல நாண் – மாங்கல்யசூத்திரத்தை,
வாங்க – இழக்கும் படி,
வில் வாங்கியது – கோதண்டத்தை வளைத்தது;
ஓர் புண்டரீகம் – ஒரு தாமரைமலர் (திருமுகமண்டலம்),
விரிந்த புகழ் – பரவிய கீர்த்தியையுடைய,
இலங்கை வேந்தற்கு – இலங்கைக்கரசனாகிய விபீஷணாழ்வானுக்காக,
தென்திசை புரிந்து – தெற்குத்திக்கை நோக்கி,
அருள் மலர்ந்தது – எப்பொழுதும் அருளோடு மலர்ந்திருந்தது;
ஓர் அம்போருகம் – ஒரு தாமரைமலர் (திருப்பவளம்),
மண் திணி ஞாலமும் – மண்ணுலகமாகிய பூமியும், வானமும் தேவலோகமும்,
உட்பட – அடங்கும்படி,
அண்டம் – அண்ட முழுவதையும்,
உண்டு – (பிரளயகாலத்தில்) உட்கொண்டு, (மீண்டும்),
உமிழ்ந்தது – (பிரளயம்நீங்கியவுடன்) வெளியேஉமிழ்ந்தது;
கடை சிவந்து – நுனி சிவந்தனவாகி,
அகன்று – விசாலமாய்,
கரு மணி விளங்கி – இடையே கரிய கண்மணி விளங்கப்பெற்று,
இடை சில அரி பரந்து – இடையிலே சில ரேகைகள் பரவப்பெற்று,
இனியஆய் – இனியனவாகியும்,
நெடியஆய் – நீண்டனவாகியும்,
இன்பம் தழீஇய – இன்பம்நிறைந்த,
இரு பெருங் கமலம் – இரண்டு பெரிய தாமரைமலர்கள் (திருக்கண்கள்),
துன்பம் தழீஇய – துன்பம் நிறைந்த,
தொண்டனேனையும் – அடியவனாகிய என்னையும்,
உவப்புடன் – மகிழ்ச்சியுடனே,
ஒருகால் நோக்கி – ஒருதரங் கடாக்ஷித்து,
பவம் கடல் – கடக்கும் பரிசு – (கடத்தற்கரிய) பிறவியாகியகடலைக் கடக்கும்படி, பண்ணின -; (எ – று.)

ஸ்ரீகாவேரிநதியினிடையி லுள்ள தீவாகிய ஸ்ரீரங்கமென்னுந் திவ்விய க்ஷேத்திரத்தில் எம்பெருமான் ஆதிசேஷ
பர்யங்கத்தின்மேற்பள்ளிகொண்டு அடியேனைக்கடாட்சித்து உய்யுமாறு செய்தன னென்பதாம்.
“அமலங்களாக விழிக்குமைம்புலனு மவன்மூர்த்தி” என்றவாறு எம்பெருமானது திருவருள் நோக்கமே உய்தற்கு ஏதுவாத லறிக.
(“ஜாயமாநம்ஹிபுருஷம் யம்பஸ்யேந் மதுஸூதந:-ஸாத்விகஸ்ஸதுவிஜ்ஞேயஸ்ஸவைமோக்ஷார்த்தஸாதக:” என்றதும் இங்குக் கருதத்தக்கது.)

“மாமுதலடிப்போ தொன்று கவிழ்த்தலர்த்தி, மண்முழுது மகப்படுத்து, ஒண்சுடரடிப்போதொன்று விண்செலீஇ,
நான் முகப்புத்தேள் நாடுவியந்துவப்ப, வானவர் முறை முறை வழிபட நெறீஇத்,
தாமரைக்காடு மலர்க்கண்ணொடு கனிவாயுடைய,…. முடிதோளாயிரந் தழைத்த,
நெடியோய்க்கல்ல தடியதோ வுலகே” என்ற பாசுரம் இங்கு ஒருசார் ஒப்புநோக்கத்தக்கது.

“சரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப், பெரியவாய கண்க ளென்னைப் பேதைமைசெய்தனவே” என்றார் திருப்பாணாழ்வாரும்.

இதனுள் பத்துத்தாமரையும் ஒன்பது அதிசயமுங் காண்க.

முதலைந்தடிகளில் ஒருசொல்லைப் பற்றி ஒன்றை விடுதலாகிய ஏகாவளியலங்காரம் காண்க.
அரவிந்தம், தாமரை, பங்கேருகம், கோகநகம், பதுமமலர், முளரி, வனசம், புண்டரீகம், அம்போருகம், கமலம்
என்ற தாமரையின் பரியாயமொழிகளாகப் பத்துப்பதங்கள் வந்திருப்பது – பொருட்பின்வருநிலையணி.

பகிரதி – பாகீரதியென்பதன் விகாரம். பகீரதனென்னுஞ் சூரியகுலத் தரசனால் தேவலோகத்தினின்றும்
பூமிக்குக் கொணரப்பட்ட தென்பது பொருள். பங்கேருஹம்.- சேற்றில் முளைப்பது; பங்கம் – சேறு.
கோகனகம் – கோகநத மென்பதன் விகாரம்; சக்கரவாகப்பறவைகள் கூடிக் குலாவுவதற்கு இடமாயிருப்பதென்றும்,
கோக மென்னும் நதியில் மிகுதியாய்த் தோன்றுவதென்றும் பொருள்.
ஆங்கு – அப்பொழுது (ஸ்ரீராமாவதாரத்தில்) என்றுமாம். மண்டோதரி – மந்தோதரி; இராவணன்மனைவி: சிறியவயிறு டையாளென்பது பொருள்.
இவள், பஞ்சகன்னிகைகளில் ஒருத்தி; (மற்றையோர் – அஹல்யா, திரௌபதி, சீதை, தாரை.)
மங்கலநாண்வாங்குதல் – அமங்கலியாதல். வநஜம் – நீரில் முளைப்பது.

இது, ஈற்றயலடி முச்சீரடியும், மற்றை யடிகளெல்லாம் நாற்சீரடிகளுமாக வந்த நேரிசையாசிரியப்பா.

————

தலைவனைப் பிரிந்த தலைவி கார் காலம் கண்டு வண்டுகளை நோக்கி இரங்கிக் கூறுதல்
74-பண் கொண்ட வேய் ஊது செவ்வாய் அரங்கேசர் பைம்பொன்னி நாட்டு
எண் கொண்ட பேராசை தந்தார் மறைந்தார் கொல்-இசை வண்டுகாள்
விண் கொண்ட மலை மீது விண் மாரி பொழிகின்ற விசை போலே என்
கண் கொண்ட மலை மீது கண் மாரி பொழிகின்ற கார் காலமே –74-

(இ – ள்.) இசை வண்டுகாள் – இசைபாடுகின்ற வண்டுகளே! –
பண் கொண்ட – இசைகளைக் கொண்ட,
வேய் – வேய்ங்குழலை ஊது – (கிருஷ்ணாவதாரத்தில்) ஊதிய,
செம் வாய் – சிவந்த வாயினையுடைய,
அரங்கேசர் – ரங்க நாதரது,
பைம் பொன்னி நாடு – குளிர்ந்த காவிரிசூழ்ந்த நாட்டில்
எண் கொண்ட பேராசை – எண்ணமுழுவதுங் கொண்ட மிக்க ஆசையை,
தந்தார் – தந்து சென்றவர், –
விண் கொண்ட – ஆகாயத்தை அளாவிய,
மலைமீது – மலையின்மேல்,
விண் மாரி பொழிகின்ற – வானம் மழையைப் பெய்கின்ற,
விசை போல – வேகம்போல,
என் – எனது,
கண் கொண்ட – கண்பொருந்திய,
மலைமீது – மலைகளின் (முலைகளின்) மேலே,
கண் மாரி பொழிகின்ற – கண்ணீர்மழையைச் சொரிகின்ற,
கார் காலம் – மழைக்காலத்தை,
மறந்தார் கொல் – மறந்தாரோ? (எ – று.) – மறவாராயின், முன்னமே வந்திருப்ப ரென்றபடி.

இது, புணர்ந்து பருவங்குறித்துப் பிரிந்து சென்ற தலைமகன், தான் குறித்த கார்காலம் வந்தவிடத்தும் வாராமலிருக்க,
அதனால் வருத்தங் கொண்ட தலைவி, வண்டுகளை முன்னிலைப்படுத்தி இரங்கிக் கூறியது.
இசைவண்டுகாள் என்பதற்கு – புகழையுடைய வண்டுகளே யென்று பொருள்கொண்டு, நீங்கள் இதுவரையில்
என்போல்வார்பலர்க்குத் தூது சென்று நன்மைசெய்து புகழ்படைத்ததுபோல இப்பொழுதும் எனது நிலைமையை
எனது தலைவர்க்கு உரைத்து எனக்கு இன்பமுண்டாக்கி இன்னமும் புகழ்படைப்பீரா மென்று கூறுதலு மொன்று.

தன்பாற்சிறிதும் இரக்கமின்றிப் பிரிந்துசென்ற தலைவரது பெயரைவெ ளிப்படையாகச் சொல்லவும் விருப்பங்கொள்ளாமல்
“ஆசைதந்தார்” எனச் சுட்டிக்கூறினள். கார்காலத்தில் வானம் மலைமீது மழையைப்பொழிவது போலவே,
எனது தலைவன் தான் குறித்துச்சென்ற பருவம் வந்தும் வாராதது கண்டு எனது கண்களும் இக்காலத்து
முலைமலைமேல் மழைபொழி கின்றனவென்பது, பின்னிரண்டடிகளிற் போந்த பொருள்.
“முலைமலை மேனின்றும் ஆறுகளாய், மழைக்கண்ணநீர் திருமால் கொடியா னென்று வார்கின்றதே” என்றார், நம்மாழ்வாரும்.

இதற்கு யாப்பிலக்கணம், 68 – ஆங் கவியிற் கூறியதே.

——————

கைக்கிளை
75-காரகமோ நம் வட திருவேங்கடக் காரர் வரையோ
நீரகமோ நெடு வானகமோ துயில் நீடு பணிப்
பேர் அகமோ தென் திரு அரங்கப் பெரும் கோயில் என்னும்
ஊரகமோ இடம் தண் காவில் நின்ற ஒருவருக்கே –75-

(இ – ள்.) தண் காலில் நின்ற – குளிர்ச்சிபொருந்திய சோலையில் நின்ற,
ஒருவருக்கு – (யான்கண்ட தலைமகளுக்கு),
இடம் – வசித்தற்கிடமாவது, –
காரகமோ – மேகமண்டலமோ? நம் – நமது,
வட திருவேங்கடம் – வடக்கின்கண் உள்ள திருவேங்கடமென்னும்,
கார் வரையோ – பெரிய மலையோ?
நீரகமோ – நீரினிடமோ?
நெடு வானகமோ – பெரிய தேவலோகமோ?
துயில் நீடு பணி பேர் அகமோ – தூக்கம்மிக்க பாம்புகளின் பெரியஇடமாகிய நாகலோகமோ?
தென் திருவரங்கம் பெருங் கோயில் என்னும் ஊரகமோ – அழகிய திருவரங்கம் பெரியகோயிலென்கிற ஊரினிடமோ? (எ – று.)

இது, தலைமகளைக் கண்ணுற்ற தலைமகன், இங்ஙனந் தோன்றாநின்ற இவள் தெய்வமோ? அன்றி மக்களுள்ளாளோ?
வென்று ஐயுற்றது. “போதோ விசும்போ புனலோ பணிகளதுபதியோ, யாதோ வறிகுவ தேது மரிதி யமன் விடுத்த,
தூதோ வனங்கன் றுணையோ விணையிலி தொல்லைத் தில்லை, மாதோ மடமயிலோவெனநின்றவர்வாழ்பதியே” என்றார் கோவையாரிலும்.
“ஊரும் பேருங் கெடுதியும் பிறவும், நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித், தோழியைக் குறையுறும் பகுதியும்” என்றபடி
தலைவியும் தோழியும் ஒருங்கிருந்த சமயம் நோக்கித் தலைவன் அங்குச்சென்று தன்கருத்தைக்குறிப்பிப்பதற்கு
ஒருவியாஜமாக ஊர்வினாவியது இது. “பதியொடு பிறவினாய் மொழி பல மொழிந்து, மதியுடம்படுக்க மன்னன் வலிந்தது” என்பதுங் காண்க.

மின்னற்கொடி போன்றமையாற் காரகமோ வென்றும், வரையரமக ளிர் போன்றமையால் வடதிருவேங்கடக்கார்வரையோ வென்றும்,
நீரர மகளிர் போன்றமையால் நீரகமோவென்றும், வானரமகளிர் போன்றமையால் வானகமோ வென்றும்,
நாககன்னியர் போன்றமையால் துயில்நீடு பணிப்பேரகமோ வென்றும், மானுடமாதர்போன்றமையால்
தென்றிருவரங்கப் பெருங்கோயிலென்னு மூரகமோ வென்றும் விகற்பித்துக் கூறினான்.
காரகம், நீரகம், பேரகம், ஊரகம் என்பன தொண்டைநாட்டுத் திருப்பதிகள் இருபத்திரண்டிற் சேர்ந்துள்ள திருப்பதிகட்குத்
திருநாமங்களாதலால், தண்காவினின்ற ஒருவர்க்கு அத்திருப்பதிகளுள் ஏதேனுமொன்றுதானோ இடம்? என்ற
மற்றொரு பொருளும் இங்குக் கொள்ளத்தக்கது. இப்பொருளில் ஊரக (ஆதிசேஷன்) சம்பந்தமுள்ளது ஊரகம் ஆதலால்,
திருவரங்கந் திருப்பதிக்கும் ஊரகத்திற்கும் அபேதமாக “திருவரங்கப்பெருங்கோயிலென்னு மூரகமோ” என்றா ரென்க.

இனி, தலைமகள் கூற்றாய், காரகம் முதலிய திருப்பதிகளாகவுமாம்.

இது, நேரசை யாதியதாகிய கட்டளைக்கலித்துறை.

————–

76- ஒரு நயம் பேசுவன்
திரு அரங்கேசர் தாள்
மருவுமின் நாசம் ஆம்
கருமவன் பாசமே –

(இ – ள்.) (உலகத்தீரே)! ஒருநயம் பேசுவன் – ஒரு நல்வார்த்தை சொல்வேன்: (கேளுங்கள்; அது எதுவென்றால்), –
திருவரங்கேசர் தாள் மருவுமின் – ஸ்ரீரங்கநாதரது திருவடிகளைச் சேருங்கள் (என்பதே);
(அதனாலு ண்டாகும் பயனென்னை யெனின்), –
கருமம் வல் பாசம் நாசமாம் – வினைகளாகிய வலிய பந்தங்கள் அழிந்து போய்விடும் (மோக்ஷமுண்டாகும்); (எ – று.)

ஸ்ரீரங்கநாதனது திருவடிகளைப் பற்றுங்கோள்; உமது இருவினையும் நீங்கி நீவிர் நற்கதிபெறுவீரென்று
உலகத்தோர்க்கு உபதேசித்தவாறு. இங்கு இருவினைபோதற்கு எம்பெருமானது திருவடியைப்பற்றுகை சாதனமாமெனின், ஆகாது;
பிரபந்நாதிகாரிக்கு இஃது அதிகாரி விசேஷணமாம். எம்பெருமானது நிர்ஹேதுக கடாக்ஷமல்லது மற்றொன்றை உபாயமாகக்கொள்வது –
அரசன்பக்கல் ராஜ்யத்தைப் பெறுதற்கு எலிமிச்சம்பழமீதலை உபாயமாகக்கொள்ளுதல்போலு மென்க. விரிக்கிற் பெருகும்.
நல்வினையும் பிறப்பிற்கு ஏதுவாதலால், “கருமவன்பாசம்” எனப் பொதுப்படக்கூறினர். வினையைப் பாசமாக உருவகப்படுத்தியது,
தம் இஷ்டப்படி எவ்வழியும் செல்லவொட்டாது பிணிப்புண்ணப்பண்ணுதலால்.

இது, – இருசீரும் விளச்சீராகிய குறளடிநான்குகொண்ட வஞ்சித்துறை.

————-

தலைவி இரங்கல்
77- பாசம் ஆம் அடியார் பால் நேசம் ஆம் அடிகளும்
பைம்பொன் ஆர் ஆடையும் செம்பொன் மா மேனியும்
ஆசை ஆம் மலர் உளாள் வாசம் ஆர் அகலமும்
அஞ்சல் என்று அருள் செயும் கஞ்சமும் கருணையன்
தேசு உலா வதனமும் மாசு இலா முறுவலும்
சீரிதாய் எழுது கத்தூரி நாமமும் எனக்கு
ஈசனார் திரு அரங்கேசனார் திகிரியும்
இலகு வெண் சங்குமே உலகம் எங்கும் எங்குமே –77-

(இ – ள்.) உலகம் எங்கு எங்கும் – எல்லாவுலகங்களிலும் எல்லாவிடமும், –
எனக்கு ஈசனார் – எனக்குத் தலைவராகிய, திரு அரங்கேசனார் – ஸ்ரீரங்கநாதரது,
பாசம் ஆம் அடியர்பால் – (தம்பக்கல்) அன்புள்ள அடியார்களிடத்தில்,
நேசம் ஆம் – கருணையுள்ள,
அடிகளும் – திருவடிகளும்,
பைம்பொன் ஆர் ஆடையும் – பசும்பொன் மயமான பீதாம்பரமும்,
செம் பொன் மா மேனியும் – செவ்விதாய் அழகிய பெரிய (கரிய) திருமேனியும்,
ஆசை ஆம் மலர் உளாள் – (மிக்க) காதலை யுடைய தாமரைப்பூவி லுறைகின்ற திருமகளுக்கு,
வாசம் ஆர் – தங்குமிடமாகப் பொருந்திய,
அகலமும் – திருமார்பும்,
அஞ்சல் என்று அருள் செயும் – (தன்னையடைந்தாரை) அஞ்சற்க வென்றுசொல்லிப் பாதுகாக்கின்ற,
கஞ்சமும் – தாமரைமலர்போன்ற அபய ஹஸ்தமும்,
கருணையின் தேசு உலா – அருளினது ஒளி விளங்குகின்ற,
வதனமும் – திருமுகமண்டலமும்,
மாசு இலா முறுவலும் – மறுவில்லாத புன் சிரிப்பும்,
சீரிது ஆய் எழுது கத்தூரி நாமமும் – சிறப்பினையுடைத்தாம்படி கஸ்தூரியால் எழுதப்பட்ட திருநாமமும் (திலகமும்),
திகிரியும் – சக்கரமும்,
இலகு வெள் சங்குமே – விளங்குகின்ற வெண்மையாகிய சங்கமுமேயாகும்; (எ – று.)

தலைவனைக்கூடிப்பிரிந்த தலைமகள் எப்போதும் தலைவனைக்குறித்தே சிந்தித்துக்கொண்டிருத்தல்பற்றிச் சிந்தனையின்
மிகுதியால் அத்தலைவனது உருவம் எங்குந்தோன்ற, உண்மையில் தலைமகனே யென்று எண்ணி முயங்கப் புக,
அஃது மெய்ப்புலனாகாது நிற்கவே, ஆற்றாளாகிய தலைவி இரங்கிக் கூறியது, இது.

திருவடிகள் தம்மையடைந்தார்க்கு முத்தியளித்தல் பற்றி, “பாசமாமடியர்பானேசமாமடிகளும்” என்றார்.
திருவடிகள் முதலியன மனத்தைக் கவர்தல்பற்றிப் பாராட்டிக்கூறப்பட்டன.
“நாயன்தே! ஆஸநபத்மத்திலே அழுத்தியிட்ட திருவடித்தாமரைகளும் அஞ்சலென்றகையும் கவித்தமுடியும்
முறுவல்பூரித்த சிவந்ததிருமுகமண்ட லமும் திருநுதலில் கஸ்தூரித் திருநாமமும் பரமபதத்திலே கண்டிலேனாகில்
ஒரு மூலையடியிலே முறித்துக்கொண்டு குதித்து மீண்டுவருவேன்” என்பது, இந்நூலாசிரியரின் ஆசார்யரான ஸ்ரீபட்டர்வார்த்தை.
அடிகள் முதலியன பலவிடங்களிலிருப்பதாகக் கூறியது – சிறப்பணியின்பாற்படும்.

“மார்பகலம்” என்னும் பாடத்துக்கு, அகலமாகிய மார்பென்க.

இது, எல்லாச்சீரும் விளச்சீராகிய எண்சீராசிரியவிருத்தம்.

————–

தலைவன் இடம் அணித்து என்றல்
78–எங்கணும் நிறைந்து உறையும் எம்பிரான்
கொங்கு அணுகி வண்டு முரல் கோயில் சூழ்
உங்கள் வரை எங்கள் வரை ஒன்றியே
மங்கை உன்ன கொங்கைகளை மானுமே –78–

(இ – ள்.) எங்கணும் – எல்லாவிடத்திலும்,
நிறைந்து உறையும் – அந்தரியாமியாய்த் தங்கி வசிக்கின்ற,
எம்பிரான் – நம்பெருமாளது,
வண்டு – வண்டுகள்,
கொங்கு அணுகி – தேனுக்காக நெருங்கி,
முரல் – ஆரவாரிக்கின்ற,
கோயில் – திருவரங்கத்தை,
சூழ் – சூழ்ந்த,
உங்கள் வரை – உங்களது – மலையும்,
எங்கள் வரை – எங்களது மலையும்,
ஒன்றி – நெருங்கி,
மங்கை – பெண்ணே!
உன் கொங்கைகளை – உனது தனங்களை,
மானும் – ஒத்திருக்கும்; (எ – று.)

இது, பிரியக் கருதிய தலைமகன், தலைமகள் அதற்கு உடம்படுவது காரணமாக, அவளைத் தன் ஊரினணிமை கூறி வற்புறுத்தியது.

எம்பிரானது கோயிலென இயையும். மங்கை – அண்மைவிளி. வரை ஒன்றிக் கொங்கைகளை மானு மென்றது,
கொங்கைகள் ஒன்றுக்கொன்று மிகநெருங்கியிருக்குமாறு போல, உனது இடமும் எமது இடமும், மிகவும் அணித்தென்றபடி.
இதனால் கொங்கைகளது மிக்க வன்மையும், பருமையுந் தொனிக்கின்றது. மகளிர்க்குத் தனங்கள்நெருங்கியிருத்தல், உத்தம விலக்கணம்.
எம்பெருமான் எல்லாப்பொருள்களிலும் அந்தர்யாமியாக வாழ்வனென்று சொல்லுமிடத்து அவ்வப்பொருள்களிலுள்ள
குற்ற நற்றங்களும் அவ்வெம்பெருமானைப்பற்றாவோ? என்னின், பற்றாது;
ஓருடம்பினிடத்தே வாழும் ஆத்மாவுக்கு அவ்வுடம்பைப் பற்றிவரும் இளமை முதுமை முதலியன பற்றாதவாறுபோல வென்க.

இது, முதலிரண்டுங் கூவிளங்காய்ச்சீர்களும், ஈற்றது கூவிளச்சீருமாகிய சிந்தடி நான்கு கொண்ட வஞ்சிவிருத்தம்.

————-

நாரையை நோக்கித் தலைவி இரங்கிக் கூறல்
79-மான் ஆர் கேசன் மேலார் மால் ஆய் வாழ் கோயில்
தேன் ஆர் காவில் பூ ஆராயும் தேனே போல்
நானா போகத்து இன்பம் கண்டார் நான் வாடப்
போனார் வாராது ஏதோ ஓதாய் போதாவே –79-

(இ – ள்.) போதாவே – பெருநாரையே! –
மான் ஆர் கேசன் – கங்கைமகள் பொருந்திய சடைமுடியினையுடைய உருத்திரன் முதலிய,
மேலார் – தேவர்கள், மால் ஆய் – பேரன்புகொண்டு,
வாழ் – வந்து தங்குகின்ற,
கோயில் – திருவரங்கத்தில்,
தேன் ஆர் காவில் – தேன் நிறைந்த சோலையில்,
பூ ஆராயும் – மலர்கள் தோறும் ஆராய்ந்து இனிதாய்த் தேனுண்கின்ற,
தேனே போல் – வண்டுகளைப்போல, –
நானா போகத்து இன்பம் – பலவகைப்பட்ட போகசுகங்களை,
கண்டார் – அனுபவித்தவரும்,
நான் வாட போனார் – நான் வாட்டமடையும்படி பிரிந்துபோனவருமாகிய தலைவர்,
வாராது – மீண்டும் வாராமை,
ஏதோ – யாது காரணத்தாலோ? ஓதாய் – சொல்லு; (எ – று,)

தலைமகளைப் புணர்ந்து பிரிந்து சென்ற தலைமகன் வெகுகாலமாகியும் மீண்டுவராமை கண்டு, தலைவி,
நாரையை நோக்கி யிரங்கிக் கூறியது, இது.
“பூவாராயுந் தேனேபோல் நானாபோகத் தின்பங்கண்டார்…. போனார் வாராதேதோ” என்றதனால்,
அத்தலைவர் உத்தமஜா திஸ்திரீகளாகிய பத்மினிகளிருக்குமிடமெல்லாஞ் சென்று அன்னாருடைய இன்பத்திற் பழகியவராதலின்
இப்போது எந்த மங்கையின் இன்பத்தில் மூழ்கியிருக்கின்றாரோ? என்றும், பலமகளிரது இன்பந்துய்த்தவ ராதலின்
என்னொருத்தியின்பத்திற் கருத்தைச் செலுத்தாது என்னை வருந்தும்படி விட்டுப் பிரிந்துசென்றாரென்றும் இரங்கிக் கூறியவாறு.

கேசம் – மயிர்: அதனையுடையவன் கேசன். மேலா ரென்பதற்கு – மேலுலகத்தவ ரென்றும்,
மேன்மையையுடையவ ரென்றுங் கொள்க. போதா பெருநாரை.

இது, முதல் நான்குந் தேமாச்சீர்களும், ஈற்றது தேமாங்காய்ச்சீருமாகிய கலிநிலைத்துறை.

————-

மதங்கு -மடக்கு –
80-போத எனக்கு எளிது ஆனார் போதவனுக்கு அரிது ஆனார்
நாதர் அரங்கர் திருத் தாள் நாடி அரங்கில் நடக்கின்
ஓதும் மதங்கி நடித்தால் உள்ளம் அது அங்கி அரக்கு ஆம்
வேதம் அறைந்திட வல்லீர் விரைய மறைந்து விடீரே –80-

(இ – ள்.) வேதம் அறைந்திட வல்லீர் – வேதமோத வல்லவர்காள்!-
போத எனக்கு எளிது ஆனார் – அடியனாகிய எனக்கு மிகவும்எளிமையான வரும்,
போதவனுக்கு அரிதுஆனார் – தாமரைமலரில் தோன்றிய பிரமனுக்கு அருமையானவருமாகிய,
நாதர் அரங்கர் – ரங்கநாதரது,
திரு தாள் – திருவடிகளை,
நாடி – சேவிக்க விரும்பி,
அரங்கில் – அங்குள்ள சபையில்,
நடக்கின் (நீங்கள்) செல்லுமிடத்து, (அங்கு),
ஓதும் மதங்கி -சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற மதங்கியானவள்,
நடித்தால் – நடனஞ்செய்தால்,
உள்ளமது – (அதனைக்காண்பவரது) மனமானது,
அங்கி அரக்கு ஆம் – நெருப்பிலிட்ட அரக்குப்போலக் கரைந்து உருகிப்போம்; (ஆகையால்),
விரைய மறைந்து விடீர் – விரைவாக மறைந்துசெல்லுங்கள்; (எ – று.)

மதங்குஎன்றும், மதங்கமென்றும், மதங்கியாரென்றும் வழங்குவர். இரண்டு கைகளிலும் வாளையெடுத்துச் சுழற்றிக்கொண்டு
தானும் சுழன்று ஆடுவாளோ ரிளமாதின் அழகுமிகுதியை ஒருவன் பாராட்டிக்கூறுவதாகச் செய்யுள்செய்வது, இதன் இலக்கணம்.
அங்ஙனம் ஆடுபவள், மதங்கி யெனப்படுவள். மதங்கி – ஆடல் பாடல் வல்ல பதினாறுவயதுப்பெண்.

“போதவெனக்கெளிதானார் போதவனுக்கரிதானார்” –
“பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரிய வித்தகன்” என்றார் ஆழ்வாரும்.
அரங்கு – நடன மண்டபம். அங்கியரக்கு – நெகிழ்ந்து கரைந்து உருகுதலில் உவமம். அங்கி = அக்நி; வடசொற்சிதைவு.
“வினையைமறந்துவிடீர்” என்னும் பாடத்துக்கு – நீங்கள் செய்யும் வைதிக கருமங்களை மறந்துவிடுங்க ளென்க.

இது, எல்லாச்சீரும் மாச்சீர்களாகிய அறுசீரடியாசிரியவிருத்தம்.

——————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: