ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –21-40-

தலைவனைப் பிரிந்த தலைவி கடலை நோக்கி இரங்கிக் கூறுதல்

21- வாயின் இரங்கினை ஆரம் எறிந்தனை வால் வளை சிந்தினை தண்
பாயலை உந்தினை மாலை அடைந்தனை பாரில் உறங்கி லையால்
கோயில் அரங்கனை மாகனகம் திகழ் கோகனகம் பொலியும்
ஆயிழை நண்பனை நீயும் விரும்பினை ஆகும் நெடும் கடலே –21-

(இ – ள்.) நெடுங் கடலே – பெரிய சமுத்திரமே! – (நீ என் போலவே),
வாயின் இரங்கினை – வாயினால் இரங்குகின்றாய்;
ஆரம் எறிந்தனை – ஹாரத்தை எறிகின்றாய்;
வால் வளை சிந்தினை – வெள்ளிய வளைகளைச் சிந்துகின்றாய்;
தண் பாயலை உந்தினை -; மாலை அடைந்தனை -;
பாரில் – பூமியில்,
உறங்கிலை – உறங்குகின்றாயில்லை;
ஆல் – ஆகையால், நீயும் -,
மா – பெருமை பொருந்திய,
கனகம் – பொன் மயமாகி,
திகழ் – விளங்குகின்ற,
கோகனகம் – செந்தாமரை மலரில்,
பொலியும் – வீற்றிருக்கின்ற,
ஆயிழை – ஆராய்ந்தெடுத்தணிந்த ஆபரணங்களை யுடைய திருமகளது,
நண்பனை – கணவனாகிய,
கோயில் அரங்கனை -,
விரும்பினை ஆகும் – விரும்பினாயாக வேண்டும்; (எ – று.)

“போக்கெல்லாம்பாலை புணர்தல்நறுங்குறிஞ்சி, ஆக்கஞ்சேரூடலணி மருதம் –
நோக்குங்கால், இல்லிருக்கைமுல்லை இரங்கல்நறுநெய்தல், சொல்லிருக்குமைம்பாற்றொகை” என்றபடி
இரங்கல் நெய்தல்நிலத்துக்குஉரிய தாதலாலும், அந்நெய்தல் நிலந்தான் கடலும் கடல் சார்ந்த இடமுமாதலாலும்,
அந்நிலத்திலே தலைமகனைப்பிரிந்து வருந்துகின்ற தலைமகள் தலைமகனைப்பிரிந்த தன்னிடத்துக் காணப்பட்ட
வாயினிரங்குதல் வால்வளைசிந்துதல் முதலிய செயல்கள் கடலினிடத்தும் காணப்பட்டதனால்,
அருகிலுள்ள கடலை முன்னிலைப்படுத்தி இரங்கிக்கூறுகின்றன ளென்க.

இத்துறை, “தன்னுட்கையாறெய்திடுகிளவி” எனப்படும்;
அதாவது – தமக்குநேர்ந்த துன்பத்தைத் தம்ஆற்றாமையாற் பிறிதொன்றன்மே லிட்டுச் சொல்லுஞ் சொல்.
இங்ஙனஞ்சொல்லுதலின் பயன் – களவுப்புணர்ச்சியொழுக்கத்திலே நின்று சிறைப்புறத்தானாகிய தலைமகன்
கேட்பின் விரைவில் வெளிப்படையாக வந்து இத்தலைமகளை மணம்புரிந்துகொள்வன்;
தோழிகேட்பின் தலைவனுக்குச்சொல்லி விரைவில் மணம்புரிந்துகொள்ளச் செய்வள்;
யாரும் கேளாராயின் தலைவி தானேசொல்லி ஆற்றினளாம்.

கடலுக்கு – வாயினிரங்குதல் – பேரொலிசெய்தலும், ஆரமெறிதல் – இரத்தினாகரமாதலால் முத்துக்களை வீசுதலும்,
வால்வளை சிந்துதல் – வெள்ளிய சங்குகளைச் சிந்துதலும்,
தண்பாயலையுந்துதல் – குளிந்து பாய்கின்ற அலைகளைத் தள்ளுதலும்,
மாலையடைதல் – பெருமைபெறுத லுங் கருநிறமுடைமையும் ஒழுங்காயிருத்தலும்,
உறக்கமின்மை – அல்லும் பகலும் அந்வரதமும் ஓயாது அலைத்துக் கொண்டிருத்தலும் என்றும்;
தலை மகளுக்கு – வாயி னிரங்குதல் – வாயினா லிரங்கிப் புலம்புவதும்,
ஆரமெறி தல் – முத்துமுதலியவற்றாலாகிய மாலைகளைக் கழற்றி யெறிவதும்,
வால்வளை சிந்துதல் – கையிலணிந்த வெள்ளிய சங்குவளையல்களை உடம்புமெலிதலாற் சிந்திவிடுதலும்,
தண்பாயலை யுந்துதல் – மெத்தென்ற பாயைத் தள்ளி விடுதலும், மாலையடைதல் – வேட்கைமிகுதியால் மயக்கமடைதலும்,
உறக்கமின்மை – வேதனைமிகுதியால் இரவுமுழுவதும் நித்திரைபெறாமையும் என்றும் பொருள்கொள்க.
சிலேடையை அங்கமாகக்கொண்டுவந்த தற்குறிப்பேற்றவணி.

“காமுற்றகையறவோடெல்லே யிராப்பகல், நீமுற்றக்கண்டுயிலாய் நெஞ்சுருகியேங்குதியால்,
தீமுற்றத்தென்னிலங்கை யூட்டினான் றாள்நயந்த, யாமுற்றதுற்றாயோவாழிகனைகடலே” என்றார் நம்மாழ்வாரும்.

இது, பிரிவுக்காலத்திற் கடலைநோக்கிப் பெண்பால் இரங்கியது; இங்ஙனமே ஆண்பால் இரங்குதலை,
(“போவாய் வருவாய் புரண்டுவிழுந்திரங்கி, நாவாய்குழற நடுங்குறுவாய் –
தீவாய், அரவகற்றுமென்போலவார்கலியே நீயும், இரவகற்றிவந்தாய்கொலின்று” என்ற புகழேந்திப் புலவர்வாக்கிற் காண்க.)

கோகனகம் – கோகநத மென்பதன் திரிபு; இதற்கு – சக்கரவாகப் பறவைகள் தன்னிடத்து ஒலிக்கப்பெறுவ தென்றும்,
கோகமென்னும் நதி யினிடத்தே முதலில் தோன்றிய தென்றும் பொருள்.
ஆயிழை – வினைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.
இழை – நவரத்தினங்களும் இழைத்துச் செய்யப்படுவது. நீயுமென்ற எச்சவும்மையால், என்போல வென்பது பெறப்பட்டது.
விரும்பினையாகு மென்றது – விரும்பினை போலு மென்றபடி.

இது, முதலைந்துங் கூவிளச்சீர்களும், ஈற்றுச்சீர் கூவிளங்காய்ச்சீரு மாகிய அறுசீராசிரியவிருத்தம்.

————

பிரிவாற்றாது வருந்திய தலைமகள் இரங்கல்

22-கடல் வழி விட நிசிசரர் பொடி பட இரு கண் சீறி
வடகயிலையின் எழு விடை தழுவியதும் மறந்தாரோ
அடல் அரவு அமளியில் அறி துயில் அமரும் அரங்கேசர்
இடர் கெட வருகிலார் முருகு அலர் துளவும் இரங்காரே –22-

(இ – ள்.) அடல் அர அமளியில் – வலிமைபொருந்திய சேஷசயனத் தில்,
அறி துயில் அமரும் – யோகநித்திரைகொண்டருளுகின்ற,
அரங்கேசர் -,
இடர் கெட (எனது) விரகவேதனை தீரும்படி,
வருகிலர் – வந்தணைந் தாரில்லை; (அங்ஙனம் அடையாமையேயன்றி),
முருகு அலர் துளவும் – வாசனைவீசுகின்ற திருத்துழாய்மாலையையும்,
இரங்கார் – இரங்கித்தந்தாரு மில்லை; (ஆகையால், முன்பு ஸ்ரீராமாவதாரத்திற் சீதைக்காக,)
கடல் -, வழி விட – (அஞ்சி) வழியை விடவும்,
நிசிசரர் – (இராவணன் முதலிய) அரக்கர்கள்,
பொடிபட – பொடியாகவும்,
இரு கண் சீறி – (தனது) இரண்டு கண்களுஞ் (சிவக்கும்படி) சீற்றங்கொண்டு, –
(ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் நப்பின்னைக்காக),
வட கயிலையின் – வடக்கின்கணுள்ள கைலாசமலை போன்ற,
எழு விடை – ஏழுவிருஷபங்களையும்,
தழுவியது – தழுவி நெரித்ததை,
மறந்தாரோ – மறந்துவிட்டாரோ? (எ – று.)

இயற்கைப்புணர்ச்சி முதலிய வகைகளால் தலைவியைக் களவிற்கூடி நின்ற தலைவன் அங்குப்பழியெழுந்ததென்று
தோழியால் விலக்கப்பட்டபின்னர் அப்பழியடங்கச் சிலநாள் ஒருவழிப்பிரிந்துறைத லுண்டு;
அது, ஒருவழித்தணத்த லெனப்படும். அன்றி, களவுப்புணர்ச்சி பெற்ற தலைமகன் தோழியால் வரைவுமுடுக்கப்பட்டுத்
தலைமகளை வரைந்துகொள்ளுதற்கு வேண்டியபொருள் தேடுதற்பொருட்டும் பிரிவன்; அது, வரைபொருட் பிரித லெனப்படும்.
அங்ஙனம் தலைமகன் பிரிந்த சமயங்களில், அப்பிரிவை யாற்றாத தலைவி, நெஞ்சொடுகூறலாகத் தன்னிலேதான் இரங்குதலும்,
மனமொத்த தன்உயிர்த்தோழியோடு இரங்குதலுஞ் செய்வள். இங்ஙனம் இச்செய்யுட்குத் துறைப்போக்கு உணர்க.
தலைவனைப்பிரிந்து தவிக்கின்ற நிலையிலே தலைவனது தாரும் பெறாது வருந்தி இரங்கி இங்ஙனங் கூறின ளென்க.
இதன் மெய்ப்பாடு – அழுகை; பயன் – ஆற்றாமை நீங்குதல். பிரிந்த நிலையிலே தலைவனது மாலை கிடைக்கப் பெற்றால்
அது கொண்டேனும் ஒருவாறு ஆறியிருக்குங் கருத்தினளாதலின், அதனைக் கொடுத்தனுப்பாமை பற்றியுங் குறைகூறினள்.
தலைவனோடு சம்பந்தம்பெற்ற பொருள் யாதாயினும் இதற்குப் பரிகாரமாமென்பது, இதனாற்போந்த பொருள்.
அவனது பிரசாதமான திருத்துழாய் தான்கொண்ட நோய் தணித்தற்கு ஏற்ற பசுமருந்தாகிய சஞ்சீவி மூலிகை என்றவாறு.

எனது தலைவர் என்னை மறவாராயின், சநகர்மகளுக்கும் ஆயர்மக ளுக்கும் இரங்கியதுபோலவே
என்பக்கலிலும் இரங்கியருளுவ ரென்க. முன்பு சீதாபிராட்டியினிடத்து ஆராதஅன்பினால் அவள்பிரிவை ஆற்றமாட்டாது
அவளைக்கூடுதற்பொருட்டுத் தன்னிலுந் தாழ்ந்தவனாகிய ஒருவனைத் தலையால் வணங்கிக் கடலையடைத்தலாகிய
செயற்கருஞ் செயலைச் செய்தவரும், நப்பின்னைப்பிராட்டியை மணஞ்செய்துகொள்ளும் விருப்பினால்
ஓர்இடையனது அடங்காத ஏழுஎருதுகளை வலியடக்கித் தழுவினவருமாகிய தலைவர் என்திறத்து இவ்வாறு
உபேட்சித்திருப்பது அவரதுநடுவு நிலைக்குப் பெரியதோரிழுக்கா மென்பது, குறிப்பு.

“கடல்வழிவிட” என்றது – கடலில் மலைகளைக்கொண்டு சேதுபந்தஞ்செய்த அருமையையும்,
அதற்குக் கடல் இடங்கொடுக்கும்படி அதனைச்சினந்த பெருமையையுங் குறித்தற்கு. இருகண்சீறி – இருகாற்சீற்றங்கொண்டு எனவுமாம்.
“அடலரவமளியி லறிதுயிலமரு மரங்கேசர்” என்றது –
“பாம்பணையார்க்குந் தம்பாம்புபோல், நாவுமி ரண்டுளவாய்த்து நாணிலியேனுக்கே” என்றதன் கருத்தை உட்கொண்டது.
முருகலர்தல் – தேனொழுகுதலுமாம். துளவு – அதனாலாகிய மாலைக்குக் கருவியாகுபெயர்.
கயிலை, விடை – வடமொழிச்சிதைவுகள். கயிலை – வெண்மை பெருமை வலிமைகளால் விடைக்கு உவமை. ஓகாரம் – இரக்கம்.

இது, முதல்நான்குங் கருவிளச்சீர்களும், ஈற்றது தேமாங்காய்ச்சீரு மாகிய கலிநிலைவண்ணத்துறை.
“தனதன தனதன தனதன தனதன தந்தான” என்பது, இதன் வாய்பாடு.

————–

23-இரங்கத் தனித் தனியே எய்துகின்ற துன்பத்
தரங்கத்தை ஏதால் தடுப்பீர் -அரங்கர்க்குக்
கஞ்சம் திருப்பாதம் கார் மேனி என்று அவர் பால்
நெஞ்சம் திருப்பாத நீர் –23-

(இ – ள்.) அரங்கர்க்கு -, திரு பாதம் – திருவடிகள்,
கஞ்சம் – தாமரை மலர்போலும்;
மேனி – திருமேனி,
கார் – காளமேகம்போலும், என்று -,
அவர்பால் – அவ்வெம்பெருமான்பக்கல்,
நெஞ்சம் – மனத்தை,
திருப்பாத – (தீநெறிக்கட் செல்லவொண்ணாது) திருப்பிச் செலுத்தாத,
நீர் – நீங்கள், (இந்த ஸம்ஸாரஸாகரத்தில்),
இரங்க – தளர்ந்து வருந்தும்படி,
தனி தனியே எய்துகின்ற – ஒன்றன்மேலொன்றாக ஓயாமல் ஓடிவந்தடைகின்ற,
துன்பம் தரங்கத்தை – துன்பங்களாகிய அலைகளை,
ஏதால் – வேறு எதனை (ப்புணையாக)க் கொண்டு,
தடுப்பீர் – தடைசெய்து (கடந்து) உய்வீர்; (எ – று.)

உங்கட்கு உய்ய வேறொரு விரகில்லையே யென்று இரங்கியவாறு, கண்டவர் மனத்தைக் கவரும் பேரழகும்
நம்பிச் சரணமடைந்தார்க்குப் பெரும்பயனளித்தலு முடைய எம்பெருமானைக் கதியென்று பற்றாதார்க்கு இடையறாது
வந்து வருந்துகின்ற கடல்போன்ற சமுசாரசிலேசங்கள் ஒழிய மாட்டா என்பதாம்.
எம்பெருமான் திருவடிகளே பிறவிப்பெருங்கடலுக்குப் புணையாகுமென்பது கருத்து.

காரண காரியத் தொடர்ச்சியாய் ஒழிவின்றி வருதலால், துன்பத்தரங்க மென்றார். கஞ்சம் – நீரில் முளைப்பது.
கஞ்சம், கார் என்பன – பெயர்ப்பயனிலைகள், பால் – ஏழனுருபு.
திருப்பாதவென்பது, திருப்புதலின் அருமை குறித்து நின்றது. உலகியல்பை நினையாது இறைவனடியையே
நினைப்பார்க்குப் பிறவியறுதலும், இவ்வாறன்றி மாறநினைப்பார்க்கு அஃது அறாமையுமாகிய இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன.
“பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா, ரிறைவ னடிசேரா தார்” என்றார் திருவள்ளுவரும்.

இது, இரண்டாங்கவிபோன்ற இருவிகற்பநேரிசைவெண்பா.

————-

தான் தூது விட்ட நெஞ்சு திரும்பி வாராமைக்குத் தலைமகள் இரங்குதல்

24-நீர் இருக்க –மட மங்கைமீர் -கிளிகள் தாம் இருக்க -மதுகரம் எலாம் நிறைந்து இருக்க –
மட அன்னம் முன்னம் நிரையாய் இருக்க -உரையாமல் யான் ஆர் இருக்கினும்
என்நெஞ்சம் அல்லது ஒரு வஞ்சம் அற்ற துணை இல்லை என்று ஆதரத்தினொடு
தூது விட்ட பிழை ஆரிடத்து உரை செய்து ஆற்றுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேடரிய திரு அரங்கரை வணங்கியே திருத் துழாய்
தாரில் விரும்பியே கொடு திரும்பியே வருதல் இன்றியே
வார் இருக்கும் முலை மலர் மடந்தை உறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கி
இன்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –24–

(இ – ள்.) மட மங்கைமீர் – பேதைமைக்குணத்தையுடைய தோழிகளே! –
முன்னம் – எதிரில்,
நீர் இருக்க – நீங்களெல்லாரும் இருக்கவும்,
கிளிகள் இருக்க – கிளிகளெல்லாம் இருக்கவும்,
மதுகரம் எலாம் நிறைந்து இருக்க – வண்டுகளெல்லாம் நிறைந்திருக்கவும்,
மட அன்னம் – அழகிய அன்னங்களெல்லாம்,
நிரை ஆய் இருக்க – திரளாக இருக்கவும்,
உரையாமல் – (இவர்களொருவரையும் நம்பித் தூதாகச்) சொல்லியனுப்பாமல், யான் -,
ஆர் இருக்கிலும் – வேறே யார் இருந்தாலும்,
என் நெஞ்சம் அல்லது -எனது மனத்தையன்றிக்கே,
ஒரு வஞ்சம் அற்ற துணை – வஞ்சனையில்லாத தொரு (வேறு) துணை,
இல்லை என்று – இல்லையென்றெண்ணி,
ஆதரத்தினொடு – அன்போடு,
தூது விட்ட (அம்மனத்தைத் திருவரங்கநாதர்பக்கல்) தூதாக அனுப்பியதனா லுண்டான,
பிழை – தவற்றை,
யாரிடத்து -, உரை செய்து – சொல்லி,
ஆறுவேன் – மனந்தணிவேன்; (அம்மனம் என்செய்த தென்னில்), –
சீர் இருக்கும் – சிறப்புப்பொருந்திய,
மறை முடிவு – வேதாந்தங்களும்,
தேடுஅரிய – தேடிக்கண்டறிய வொண்ணாத,
திருவரங்கரை -, வணங்கி – (கண்டு) வணங்கி, (என் குறையைச் சொல்லி),
விரும்பி – (அவர்) திருவுள்ளமுவந்து,
திருத்துழாய் தரில் – திருத்துழாய்மாலையைத் தந்தருளினால்,
கொடு – (அதனை) வாங்கிக்கொண்டு,
திரும்பி வருதல் இன்றியே – திரும்பிவருத லில்லாமலே,
வார் இருக்கும் – கச்சுப்பொருந்திய,
முலை – தனங்களையுடைய,
மலர் மடந்தை – தாமரைமலரில்வாழும் பெரியபிராட்டியார்,
உறை – வீற்றிருக்கின்ற,
மார்பிலே – திருமார்பிலும்,
பெரிய தோளிலே – பெரிய திருத்தோள்களிலும்,
மயங்கி – (வேட்கை மிகுதியால்) மயக்கங் கொண்டு,
இன்புற – இன்பமுண்டாக,
முயங்கி – தழுவிக் கொண்டு,
என்னையும் மறந்து -, தன்னையும் மறந்தது – (தூதாகப்போன) தன்னையும் மறந்துவிட்டது; (எ -று.)

இது, நெஞ்சத்தைத் தூதுவிடுத்த தலைமகள், அது மீண்டுவாராததாகத் தோழிமாரை நோக்கி இரங்கிக் கூறியது.

சுக துக்கங்களில் எனக்குத் துணையாயிருந்து உதவுகின்ற பாங்கியர்க ளாகிய உங்களைத் தூதனுப்பலாமென்று
பார்த்தாலோ நீங்கள் என்னோ டொத்த பருவமுடைய இளமகளிராதலால்,
அத்தலைவரழகில் ஈடுபட்டு ஆழ்ந்திடுவீரேயன்றி என்காதலை அவரிடம் சொல்லி மறுமொழிகொண்டு மீண்டுவருவீரல்லீர்.
கிளியைத் தூதனுப்பலாமென்றாலோ அதனை மன்மதனது குதிரையாகக் கூறுவராதலின், அதுவும் எனக்கு இணங்கிவாராது;
மேலும், அது சொல்லியதேசொல்லும் இயல்புடைய தன்றோ? வண்டோ வெனின் மன்மதனது வில்லின் நாணாதலால்,
அதுவும் என்திறத்து அன் புடையதாகாது. அன்னப்பறவை சிரமம்பொறாததும் மந்தகதியுடையதும்
இனியவிடத்து வீற்றிருந்து கிடைத்தஇரையை யுண்டு பிரிவுத்துயரறியாது தானுந் தன்துணையும் கூடி
வாழ்ந்து களித்திருப்பதும் தன்நலம்பேணுவதும் நட்புப்பிரிக்குங் குணமுடையதுமாதலால்,
அது அந்தப்போகத்தை விட்டு எனக்காக அவ்வளவுதூரம் வருந்திச் சென்று விரைவில் என்நிலைமையைத்
தலைவர்க்குச் சொல்லி நேரில்மீண்டுவந்து அவர்சொல்லை எனக்குச் சொல்லமாட்டாது.
ஆதலின், அப்பொருள்களுள் எதனிடத்தும் நம்பிக்கை கொள்ளாமல் “நெஞ்சையொளித்தொரு வஞ்சக மில்லை” என்றபடி
எனதுநெஞ்சினிடத்து நம்பிக்கைகொண்டு அதனைத் தலைவர்பால் தூதனுப்பி அது மீண்டுவராமையால்,
இதனை யாரிடத்துக் கூறியாறுவே னென்று இரங்கின ளென்க.

“குருத்தத்தை மாரன்குரகதமாமென்றே, வருத்தத்தை யங்குரைக்கமாட்டேன் –
கருத்துற்ற, மாதண்டலைவாய் மதுகரத்துக்கும் மவன்றன், கோதண்டநாணென்று கூறேன்நான் –
பொற்கால், வெறிப்பதும வீட்டன்னம் வெண்பாலுநீரும், பிறிப்பதுபோல் நட்புப்பிறிக்குங் -:
குறிப்பறிந்து, காதலா லுள்ளக்கவலை யதுகேட்க, வோதலாகாதென்று உரை யாடே – னாதலா, லுள்ளே
புழுங்குவ தன்றி யொருவருக்கும் விள்ளேன்” என்னுந் திருநறையூர் நம்பி மேகவிடுதூதும் ஒப்பு நோக்கத்தக்கது.

மடமை – அறிந்தும் அறியாதுபோலிருக்குந் தன்மை; இது – நாணம், அச்சம், பயிர்ப்பு முதலிய பெண்குணங்கள்
பலவற்றிற்கும் உபலக்ஷணம். இனி, இளமையும், அழகுமாம். “எலாம்” என்பதைப் பிறவிடத்துங் கூட்டுக.
மறைமுடிவு – உபநிஷத்துக்கள். விரும்பியே கொடு – மகிழ்ந்து பெற்றுக் கொண்டென்றுமாம்.
கொடு – கொண்டு என்பதன் விகாரம். தன்னையும் மறந்தது – பரவசமாயிற் றென்றபடி.
எனக்கு நேரும் இன்பதுன்பங்களை என்னோடு ஒக்கஉண்டு என்னுள்ளே உறைந்து என்னினும் வேறாகாததான
என்நெஞ்சமே எனக்குத் துணையாகப்பெறாத யான் வேறு யாரை வெறுப்பே னென்பது குறிப்பு.

இது, முதல் மூன்று ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள் கூவிளங்காய்ச்சீர்களும்,
ஏழாஞ்சீர் விளச்சீருமாய் வந்தது அரையடியாகவும், அஃதுஇரட்டிகொண்டது ஓரடியாகவும் வந்த பதினான்கு சீராசிரியவிருத்தம்.

——————–

வண்டு விடு தூது
25- மறக்குமோ காவில் மது அருந்தி அப்பால்
பறக்குமோ சந்நிதி முன்பு ஆமோ சிறக்கத்
தரு வரங்கள் கேட்குமோ தாழ்க்குமோ நெஞ்சே
திருவரங்கர் பால் போனதேன் –25-

(இ – ள்.) நெஞ்சே -! திருவரங்கர்பால் – ஸ்ரீரங்கநாதரிடத்து,
போன – தூதுசென்ற,
தேன் – வண்டு, –
காவில் – (இடையிலுள்ள) சோலைகளில் (தங்கி),
மது அருந்தி – (அங்குள்ள) தேனைப் பருகி,
மறக்குமோ – (என்னை) மறந்து விடுமோ? (அன்றிக்கே),
அப்பால் பறக்குமோ – (அச்சோலைகளுக்கு) அப்புறத்தே பறந்து செல்லுமோ?
சன்னிதி முன்பு ஆமோ – (அங்ஙனஞ்சென்று) கோயிலின்முன்னே சேருமோ? (சேர்ந்து),
சிறக்க – (எனக்குச்) சிறப்புண்டாக,
தரு – (அவர்) அருளுகின்ற,
வரங்கள் – வரங்களை, கேட்குமோ -? (அன்றிக்கே),
தாழ்க்குமோ – தாமதித்து நிற்குமோ? (அறியேன்!) (எ – று.)

இது, தலைமகன்பக்கல் வண்டைத் தூதுவிடுத்த தலைமகள், அது திரும்பி வாராமையால் அதன் நிலைமையை
ஐயுற்றுத் தன்நெஞ்சோடு கூறியது.
“வாயான் மலர்கோதி வாவிதொறு மேயுமோ, மேயாம லப்பால் விரையுமோ –
மாயன், திருமோகூர் வாயின்று சேருமோ நாளை, வருமோ கூர்வா யன்னம் வாழ்ந்து” என்பதோடு ஒப்பிடுக.
மதுவருந்துதல் உடனே மறந்து விடுதற்கு ஏதுவாதலால், அதனை முற்கூறினார்.
ஓகாரங்கள் – ஐயப்பொருளன. வரம் – வேண்டுவன கோடல். தேன் – வண்டின் சாதிபேதங்களில் ஒன்று;
இது, நல்லமணத்தே செல்லும்.

இது, முன்பு கூறியதுபோன்ற நேரிசைவெண்பா.

—————

அம்மானை
26-தேன் அமரும் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்
ஆனவர் தான் ஆண் பெண் அலி அலர் காண் அம்மானை
ஆனவர் தாம் ஆண் பெண் அலி அலரோ ஆமாகில்
சானகியைக் கொள்வாரோ தாரமாய் அம்மானை
தாரமாய்க் கொண்டதும் ஓர் சாபத்தால் அம்மானை –26-

(இ – ள்.) தேன் அமரும் சோலை – வண்டுகள் விரும்பி நெருங்குகின்ற சோலைகளையுடைய,
திருவரங்கர் -, எ பொருளும் ஆனவர்தாம் – எல்லாப்பொருள்களுமானவரே; (ஆயினும்),
ஆண் பெண் அலிஅலர் காண் – ஆணும் பெண்ணும் அலியும் அல்லாதவரே; அம்மானை -;
ஆனவர்தாம் – (அங்ஙனம்) எல்லாப்பொருள்களுமாகிய அவர்,
ஆண் பெண் அலி அலரே ஆம் – ஆகில் – ஆணும் பெண்ணும் அலியு மல்லாதவரே யாவ ரானால்,
சானகியை – சீதையை,
தாரம் ஆ கொள்வரோ – மனைவியாகக் கொள்வாரோ? அம்மானை -;
தாரம் ஆ கொண்டதும் – (அங்ஙனம்) மனைவியாகக் கொண்டதும்,
ஓர் சாபத்தால் – ஒரு சாபத்தினால்; அம்மானை -; (எ – று.)

மூன்றுமங்கையர் அம்மானையாடும்போது பிரபந்தத்தலைவனது தன்மையை வார்த்தையாடுவது,
அம்மானையென்னும் உறுப்பின் இலக்கணம்.

தேன் – இங்கே வண்டின் பொதுப்பெயர். இனி, தேனமர்தல் – மதுப் பெருகுதலுமாம். தாம், காண் – தேற்றம்.
முதலடி – “ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்” என்றபடி எம்பெருமான் ஸர்வவ்யாபி யென்பதை விளக்கும்.
ஆண் பெண்ணலியலரென்றதுக்குக் கருத்து –
எம்பெருமானோடு ஒவ்வாமைக்குப் பெண் அலிகளோடு ஆண்களோடு வாசியில்லை யென்பது; புருஷோத்தம னென்றபடி:
உலகத்திற்காணப்படுகின்ற ஆணும் பெண்ணுமலியு மல்லாத ஒருபொருள் சூனியமன்றோவென்னில்:
ஆண்பெண்ணலியல தென்னாமல் “அலர்” என அன்மையைத் துணிந்தபொருளின்மேலேற்றிச் சிறப்புப்பற்றி
வந்த உயர்திணைப்பன்மையீற்றாற் கூறியதுதானே உலகத்திற்காணப்படுகின்ற ஆணின்தன்மையரு மல்லர்,
பெண்ணின் தன்மையருமல்லர், அலியின் தன்மையரு மல்லர்; ஸ்த்ரீ புந்நபும்ஸகாதிஸர்வவஸ்து
விலக்ஷணர் புருஷோத்தமரென்று நன்கு காட்டாநின்ற தென்க.
“ஆணல்லன் பெண்ணல்ல னல்லாவலியு மல்லன்” என்ற ஆழ்வார்பாசுரசம்பந்தமாகப் பட்டர் திருவாய் மலர்ந்தருளிய
உபந்யாசம் இங்குக்கருதத்தக்கது.
“சாபமே சபித்தல் வில்லாம்” என்பது நிகண்டாதலின், சாபமென்பதற்கு – சபிப்பென்றும் வில் லென்றும் பொருள்கொண்டு,
பிருகுமுனிவரதுசாபத்தாலென்றும், சிவபிரானது வில்லை முறித்ததனா லென்றுங் கருத்துக்கொள்க.

இச்செய்யுளில் “ஆண்பெண்ணலியலர்” முதலாக எடுத்துக்கூறிய சொற்றொடர்களின் சாதுரியத்தையும்
ஆழ்ந்தபொருள் நுணுக்கத்தையும் சிலேடைப்பொருளின் நயத்தையுங் கருதாது
ஆசிரியர்மீது அழுக்காற்றினாற் குற்றங்கூறுவது சிறிது பொருத்தமில்லாதொழியு மென்க.

இது, நான்கு அடிகளால் தனித்து வந்து ஈற்றடி எண்சீராய் மிக்கு ஏனையடிகள் அளவடிகளாய் நின்ற கலித்தாழிசை.

————-

பிரிவாற்றாத தலைவியின் நிலை கண்டு நல் தாய் இரங்கல்

27- மானை எய்தவர் இன்னம் என் மட மானை எய்திலர் நேமியால்
மாலை தந்தவர் பைந்துழாய் மது மாலை தந்திலர்-இந்திரன்
சோனை மாரி விலக்கி விட்டவர் சொரி கண் மாரி விலக்கிலார்
சுரர் தமக்கு அமுதம் கொடுத்தவர் சோதி வாய் அமுதம் கொடார்
தானை ஐவர் கொடிக்கு அளித்தவர் தானை கொண்டது அளிக்கிலார்
சங்கற்கு இரவைத் தடுத்தவர் தையலுக்கு இரவைத் தடார்
ஆனை முன் வரும் அன்புளார் முலை ஆனை முன் வரும் அன்பிலார்
அணி அரங்கர் நடத்தும் நீதி அநீதியாக இருந்ததே –27-

(இ – ள்.) (முன்பு சீதைக்காக), மானை – (மாயையால் வந்த மாரீசனா கிய) மானை,
எய்தவர் – (அம்பினால்) எய்தவர்,
இன்னம் – இன்னமும்,
என்மட மானை – எனது இளைய மான்போன்ற பார்வையையுடைய மகளை,
எய்திலர் – அடைந்தாரில்லை; (முன்பு பாரதயுத்தத்தில்),
நேமியால் – சக்கரத்தால், (சூரியனை மறைத்து),
மாலை தந்தவர் – அந்திப்பொழுதைச் செய்தவர், (என் மகளுக்கு),
பைந் துழாய் மது மாலை – தேனினையுடைய பசியதிருத்துழாய்மாலையை,
தந்திலர் – தந்தாரில்லை; (முன்பு கோவர்த்தனத்தைக் குடையாகப் பிடித்து),
இந்திரன் சோனை மாரி – இந்திரனால் விடாது பெய்விக்கப்பட்ட பெருமழையை,
விலக்கிவிட்டவர் – தடுத்தருளியவர்,
சொரி கண் மாரி – (என்மகள்) கண்களினின்றும் பெய்கின்ற கண்ணீர் மழையை,
விலக்கிலார் – தடுத்தாரில்லை; (முன்பு பாற்கடல்கடைந்து),
சுரர்களுக்கு – தேவர்களுக்கு,
அமுதம் – அமிருதத்தை, கொடுத்தவர் -, (என்மகளுக்கு),
சோதிவாய் அமுதம் – ஒளிபொருந்திய (தமது) திருவாய்மலரிடத்துளதாகிய அதராமிருதத்தை,
கொடார் – கொடுத்தாரில்லை;
ஐவர் கொடிக்கு – (துரியோதனன் தம்பியால் துகிலுரியப்பட்ட) பாண்டவர் மனைவியாகிய திரௌபதிக்கு,
தானை அளித்தவர் – துகிலை (மேன்மேல் மாளாது வளரும்படி) அருளியவர், (என்மகளுக்கு),
தானை கொண்டது – தாங்கொண்ட துகிலை,
அளிக்கிலார் – கொடுத்தருளினாரில்லை;
சங்கரற்கு – உருத்திரனுக்கு,
இரவை – பிச்சை யெடுத்தலை,
தடுத்தவர் – போக்கியருளியவர்,
தையலுக்கு – (என்) மகளுக்கு,
இரவை – (நெடிதூழிகாலமாய்த் தோன்றிவளர்கின்ற) இராப்பொழுதை,
தடார் – (அங்ஙனம் வளரவொட்டாது) தடுத்தாரில்லை;
ஆனை முன் வரும் – கஜேந்திராழ்வானுக்கு எதிரில் வந்து பாதுகாத்தருளிய,
அன்பு உளார் – அன்புடையவர்,
முலை யானை முன் வரும் – (என்மகளது) தனங்களாகிய யானைகளுக்குமுன்னே வந்து தோன்றுகின்ற,
அன்பு இலார் – அன்பில்லாதவராயிருந்தார்; (ஆகையால்),
அணி அரங்கர் – அழகிய ரங்கநாதர்,
நடத்தும் நீதி – நடத்துகின்ற முறைமையெல்லாம்,
அநீதி ஆக – முறைமையல்லாததாக, இருந்தது -; (எ – று.)

இது, தலைமகனோடு புணர்ந்து பிரிந்த தலைமகள் பிரிவாற்றாமையாற் படுகிற பலவகைத் துன்பங்களையுங் கண்டு
ஆற்றாளான நற்றாய் தன்ஆற்றாமை மிகுதியால் இரங்கிக் கூறியது.
விரகவேதனையால் துகில்நெகிழ்ந்துபோகின்றமை பற்றி, தானைகொண்ட தென்றார்.
ததயல் – அழகு; அஃதுடையாளுக்கு ஆகுபெயர். கொங்கை களுக்கு யானையின்கோடுகளையும் மஸ்தகங்களையும்
உவமையாகக்கூறுவது மரபாதலால், முலையானை யென்றார்.
இனி, “தானைகொண்ட தளிக்கிலார்” என்பதில் தானையென்பதனைத் தான் ஐ எனப்பிரித்துத் தான்
விரகவேத னையையுண்டாக்கிக் கவர்ந்துகொண்ட அழகை மீட்டும் வந்து புணர்ந்து அளிக்கில ரென்றும்,
‘ஆனைமுன்வரு மன்புளார்’ என்னுமிடத்தில் மன்புள்ளார் எனப் பிரித்துக் கஜேந்திராழ்வான் முன்னே
விரைந்து வருகின்ற பெரிய கருடனை யுடையவ ரென்றும், ‘முலையானைமுன்’ என்பதை முலையால் நைமுன் எனப்
பிரித்துத் தனங்களால் வருந்துமுன்னே யென்றும் பொருள் கொள்ளலாம்.

இச்செய்யுளில் எய்தவர் எய்திலார் முதலாகக் கூறப்பட்டவை எதிர் மறையும் உடன்பாடுமாய்ச் சிலசொற்றொடர்கள்
சொல்லாலும் சிலசொற்றொடர்கள் சொல்லாலும் பொருளாலும் மறுதலைப்படத் தொடுக்கப்பட்டதனால்,
முரண்தொடை; “சொல்லினும் பொருளினும் முரணுதல் முரணே” என்றது காண்க.
அழகரந்தாதி – 83, திருவேங்கடத்தந்தாதி – 83 – ஆஞ் செய்யுள்களும் நோக்கத்தக்கன.

“மாத்துளவத், தாரானை வேட்கையெல்லாந் தந்தானை மும்மதமும், வாரானை யன்றழைக்க வந்தானைக் – காரான,
மெய்யானை யன்பருக்கு மெய்த்தானைக் கண்கைகால், செய்யானை வேலையணைசெய்தானை –
வையமெலாம், பெற்றானைக் காணப் பெறாதானைக் கன்மழைக்குக், கற்றானைக் காத்ததொரு கல்லானை – யற்றார்க்கு,
வாய்ந்தானைச் செம்பவள வாயானை மாமுடியப், பாய்ந்தானை யாடரவப் பாயானை” என்னும்
திருநறையூர்நம்பி மேகவிடுதூதும் ஒருசார் ஒப்புநோக்கத்தக்கது.
அடிதோறும் வந்தசொற்களே மீண்டும் வந்ததனால், மடக்கு.

இது, முதல் மூன்று ஐந்தாஞ் சீர்கள் மாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறு ஏழாஞ் சீர்கள் கூவிளச்சீர்களுமாய்
வந்தது அரையடியாகவும், அஃது இரட்டிகொண்டது ஓரடியாகவும் வந்த பதினான்குசீராசிரியவிருத்தம்.

———————-

இருளினும் வெளியினும் மருளினும் தெருளினும்
இன்பமே அடையினும் துன்பமே மிடையினும்
ஒருவர் முன் புகழினும் இருவர் பின்பு இகழினும்
ஊன் இறந்து அழியினும் யான் மறந்து ஒழிவனோ
சுருதி நின்று ஒலிடும் கரதலம் நாலொடும்
துவளும் நூல் மார்பமும் பவள வாய் மூரலும்
திரு அரங்கேசர் சுருள் கரும் கேசமும்
செய்ய நீள் முடியும் அத்துய்ய சேவடியுமே –28-

(இ – ள்.) இருளினும் – இருட்பொழுதிலும்,
வெளியினும் – பகற்பொ “திலும்,
மருளினும் – (மாயைவசத்தால்) மயங்குங்காலத்தும்,
தெருளினும் – (அங்ஙனம் மயங்காது) தெளிந்திருக்குங்காலத்தும்,
இன்பமே அடையினும் – இன்பந்தானே வந்து சேர்ந்தாலும்,
துன்பமே மிடையினும் – துன்பந்தானே மிக்கு நெருங்கி வந்தாலும்,
ஒருவர் முன் புகழினும் – ஒருத்தர் முன்னே வந்துநின்று புகழ்ந்தாலும்,
இருவர் பின்பு இகழினும் – பலர் பின்னே நின்று இகழ்ந்தாலும்,
ஊன் இறந்து அழியினும் – உடம்பு அழிந்து ஒழிந்தாலும், – யான் -, –
திருவரங்கேசர்தம் – ஸ்ரீரங்கநாதரது,
சுருதிநின்று ஓலிடும் – நான்கு வேதங்களும் புகழ்ந்துநின்று முறையிடுகின்ற,
கரதலம் நாலொடும் – நான்கு திருக்கைகளையும்,
துவளும் நூல் மார்பமும் – முப்புரி நூலசைந்து விளங்குகின்ற திருமார்பையும்,
பவளம் வாய் மூரலும் – பவழம் போலச் சிவந்த திருவாய்மலரினது புன்சிரிப்பையும்,
சுருள் கருங்கேசமும் – சுருண்ட கரிய மயிர் முடியையும்,
செய்ய நீள் முடியும் – செவ்விதாகிய (அழகிய) நீண்ட திருமுடியையும்,
துய்ய சேவடியும் – தூய்மையான சிவந்த திருவடிகளையும்,
மறந்து ஒழிவனோ – மறந்து போவேனோ? (மறவேன்).

ஸர்வதேஸ ஸர்வகால ஸர்வ அவஸ்தைகளிலும் எம்பெருமானது திருவுருவத்தை மறவே னென்பதாம்.
“என்வாய்முதலப்பனை யென்றுமறப்பனோ”, “மறப்பனோ வினியா னென்மணியையே” என்று நம்மாழ்வார் பாசுரம்.
“ஒருவர்முன்புகழினும் இருவர்பின்பு இகழினும்” என்றதனால், ஒருவர் ஒருத்தனை முன்னேநின்று புகழ்ந்தால்,
பலர் அவனை இகழ்வரென்ற உலகவியற்கையை வெளியிட்டார்.
இருவரென்பது, ஒன்றின்மேற்பட்டவ ரென்னும் பொருள்பட நின்றது. பின்பு இகழ்தல் – புறங்கூறுதல்.
சேவடியை இறுதியில் வைத்துக்கூறியது, எம்பெருமானது எந்தத் திருவவயவத்தை மறப்பினும்
பிறவிப்பெருங்கடலுக்குப் புணையாகிய திருவடிகளை மறவேனென்னுந் துணிவு குறித்தற்கு.
இத்திருவடிக்குத் தூய்மையாவது – தன்னையடைந்தவரைப் பிறவிக்கடலுள் அழுந்தாதபடி குறிக்கொண்டு
பாதுகாத்துப் பரிசுத்தமாகிய முத்தியென்னும் அக்கரையிற் கொண்டுசேர்க்குந்திறம்.

இது, எல்லாச்சீரும் விளச்சீராகிய எண்சீராசிரியவிருத்தம்.

———-

29-சேவடியால் மூவடி மண் தென் அரங்கத்து அம்மான் நீ
மாவலி பால் வாங்கிய நாள் மண் உலகோ -மூ வுலகும்
வீசும் காலோ வலிய வெவ்வினையேன் நெஞ்சமோ
பேசுங்கால் ஏதோ பெரிது –29-

(இ – ள்.) தென்அரங்கத்து அம்மான் – அழகிய ரங்கநாதனே! – நீ -,
சேவடியால் – சிவந்த திருவடிகளால்,
மூ அடி மண் – மூன்றடி நிலத்தை,
மாவலிபால் – மகாபலிசக்கரவர்த்திபக்கல்,
வாங்கிய நாள் – வேண்டியிரந்து உலகனைத்தும் ஈரடியா லொடுக்கி யளந்த பொழுது, –
மண் உலகோ – நிலவுலகமோ, (அந்நிலவுலகத்தைத் தன்னுள் அடிக்கியளந்த),
மூவுலகும் வீசும் காலோ – மூன்றுலோகத்திலும் பரவிய திருவடியோ,
வலிய வெம் வினையேன் நெஞ்சமோ – (அத்திருவடிகளைத் தன்னுளடக்கிய) வன்மையாகிய கொடியவினைகளையுடைய எனது மனமோ,
பேசும்கால் – சொல்லுமிடத்து, ஏதோ – எதுவோ, பெரிது – பெரியது? (எ – று.)

எம்பெருமானது திருவடிகள் உலகங்களையெல்லாம் தனது ஈரடிக்குள் அடக்கியமையால் மிகப்பெரியன:
அவற்றை எனதுநெஞ்சு தன்னுள் அடக்கிக்கொண்டிருத்தலால், என்நெஞ்சே அத்திருவடிகளினும் பெரிய தென்பதாம்;
யான் பக்திவசப்படுதலாலாகும் மெய்ப்பாடுகளிற் குறைவுற்ற கொடுவினையேனாயினும் எம்பெருமானது திருவடிகளை
எப்பொழுதும் மனத்திற்கொண்டு தியானிக்கின்றே னென்பது, கருத்து.
இங்கு, ஆதேயமாகிய (நெஞ்சமென்னும் ஆதாரத்தி லிருப்பதாகிய) திருவடிகளினும் அதற்கு ஆதாரமாகிய
நெஞ்சத்திற்குப் பெருமை கூறியதனால், இது – மிகுதியணியின்பாற்படும்;
இதனை வடநூலார் அதிகாலங்கார மென்பர்.

“புவியுமிரு விசும்பும் நின்னகத்த நீ என்,
செவியின்வழி புகுந்து என்னுள்ளாய் – அவிவின்றி,
யான்பெரியன் நீபெரியை யென்பதனை யார்அறிவார்,
ஊன்பெருகுநேமியாய்! உள்ளு” என்ற அருளிச்செயல், இங்கு நோக்கத்தக்கது.

இது, பிறப்பென்னும் வாய்பாட்டான் முடிந்த இருவிகற்ப நேரிசை வெண்பா.

————–

நாரை விடு தூது
30-பெறு வரம் கேசவன் அல்லாது அருள் செயும் பேர் இலை வேறு
ஒருவர் அங்கே சற்றும் ஓதார் என் காதலை ஓடி எங்கும்
கரு அரங்கே சலிக்கத் திரிவோர்க்குக் கருணை செய்யும்
திரு அரங்கேசற்கு நீ சொலல் வேண்டும் செழுங்குருகே –30-

(இ – ள்.) செழுங் குருகே – செழுமையான நாரையே! –
பெரு வரம் – பெரியவரங்களை,
அருள்செயும் பேர் – கொடுத்தருளுகின்றவர்,
கேசவன்அல்லாது – கேசவனேயல்லாமல்,
(வேறு) இலை – வேறொருவரும் இல்லை;
அங்கே – அவ்வெம்பெருமானிடத்தே,
ஓடி – விரைந்துசென்று,
என்காதலை – எனது விருப்பத்தை,
வேறு ஒருவர் -, சற்றும் ஓதார் – சிறிதுஞ் சொல்லார்; (ஆகையால்), –
எங்கும் – எவ்விடத்தும் (எல்லாப் பிறப்புக்களிலும்).
கரு அரங்கே – கருப்பத்தினிடத்தே,
சலிக்க – துன்பமுண்டாக,
திரிவோர்க்கு – மாறி மாறிப் பிறந்திறந்து அலைபவர்களுக்கு,
கருணை செய்யும் – அருள் செய்கின்ற, திருவரங்கேசற்கு -, நீ -,
(விரைந்து சென்று என்காதலை), சொல்ல வேண்டும் -; (எ – று.)

இது, தலைவனைப் பிரிந்த தலைவி அப்பிரிவாற்றாது வருந்தும்போது அங்ஙனம் இரங்குமிடம் நெய்தல்நில மாதலால்,
அந்நிலத்தில் குருகென்னும் பறவைகள் கழிக்கரையில் இரைதேடுவதற்கு வர, அவற்றை நோக்கி
“எனது நிலைமைகளை எனதுதலைவனான திருவரங்கநாதன்பக்கல் சென்று சொல்வார் ஒருவரும் இலர்;
நீ சென்று சொல்லவேண்டும்ழுஎன்று வேண்டிய துறை.

வேண்டியதை யளிப்பவனும் ஸ்ரீரங்கநாதனே; அவ்வெம்பெருமானிடத்து என் அன்பை அறிவிக்கத்தக்கவனும் நீயே யென்பதாம்.
மூன்றாமடி – எம்பெருமான் நிர்ஹேதுகமாக உயிர்களின் மீது பாராட்டும் கருணையின் ஏற்றத்தை விளக்கும்.
முதலெழுத்துத்தவிர இரண்டுமுதலிய சிலஎழுத்துக்கள் ஒன்றிநிற்கப் பொருள்வேறுபட்டு வந்ததனால்,
திரிபு என்னுஞ் சொல்லணியாம். வேறு – மத்திமதீபம். கரு – கர்ப்பமென்பதன் விகாரம். அரங்கு – சிறுவீடு.

இது, நிரையசைமுதலாக வந்த கட்டளைக்கலித்துறை

————-

31-குருகு உறங்கு கானலே கரு நிறம் கொள் பானலே
கொடி இருண்ட ஞாழலே நெடிய கண்டல் நீழலே
பொரு தரங்க வேலையே நிருதர் அங்க மாலையே
போது அயின்ற கம்புளே ஏதை என்று இயம்புகேன்
திரு அரங்கர் இணை இலா ஒரு புயங்க அணையிலே
திகழ் வலக்கை கீழதா முகில் மலர்க்கண் வளர்வதோர்
கருணை நம்பு வதனமும் அருணவிம்ப அதரமும்
காவி கொண்ட மேனியும் ஆவி கொண்டு போனவே –31–

இ – ள்.) குருகு உறங்கு கானலே – நாரைகள் தங்குவதற்கிடமாகிய கடற்கரைச்சோலையே!
கரு நிறம் கொள் பானலே – கரியநிறத்தைக் கொண்ட கருங்குவளையே!
கொடி இருண்ட ஞாழலே – (தன்னைக் கொள்கொம்பாகப் பற்றிச் சுற்றியிருக்கின்ற) கொடிகளால் இருண்டிருக்கின்ற குங்கும மரமே!
நெடிய கண்டல் நீழலே – நீண்ட தாழையின் நிழலே!
பொரு தரங்கம் வேலையே – மோதுகின்ற அலைகளையுடைய கடலே!
நிருதர் அங்கம் மாலையே – அரக்கரது உருவம்போன்ற கருநிறத்தையுடைய அந்திப்பொழுதே!
போது அயின்ற கம்புளே – மலர்களை (உணவாகக்கொண்டு) உண்கின்ற நீர்வாழ்பறவையே! –
எதை இன்று இயம்புகேன் – இப்பொழுது (யான்) என்னவென்று (எடுத்துச்) சொல்லப்போகிறேன்!
திருஅரங்கர் – ஸ்ரீரங்கநாதர்,
இணைஇலா – ஒப்பில்லாத,
ஒரு புயங்கம்அணையிலே – ஒரு சேஷ சயனத்திலே,
திகழ் வலக்கை – விளங்குகின்ற வலத் திருக்கையை,
கீழதா – (தலையின்) கீழிடத்ததாகக்கொண்டு,
முகிழ் மலர்கண் வளர்வது – அரும்பி மலர்ந்த தாமரைபோன்ற திருக்கண்கள் அறிதுயில் செய்யப்பெற்ற,
ஓர் – ஒப்பில்லாத,
கருணை நம்பு வதனமும் – அருளால் விரும்பப்படுகின்ற திருமுகமண்டலமும்,
அருண விம்ப அதரமும் – சிவந்த கொவ்வைப்பழம் போன்ற திருவதரமும்,
காவி கொண்ட மேனியும் – கருங்குவளை மலர் போன்ற திருமேனியும்,
ஆவி – (எனது) உயிரை,
கொண்டு போன – கொள்ளைகொண்டு போயின; (எ – று.)

இரங்குதல் நெய்தற்றிணைக்குரியதாதலால், இக்கவி, அங்ஙனம்நெய்தலில் தலைவனைப் பிரிந்து தனியேயிருந்து
வருந்துகிற தலைமகள் ஆண்டுள்ள பொருள்களை நோக்கி இரங்கிக் கூறியது இது.

‘குருகுறங்குகானல், பொருதரங்கவேலை” என்பதனால் நிலமுதற்பொருளும்,
“நிருதரங்கமாலை” என்றதனால் காலமுதற்பொருளும்,
“பானலேஞாழலே’ என்பன முதலியவற்றால் கருப்பொருளும்,
‘ஏதையின்று இயம்புகேன் ….. ஆவிகொண்டுபோனவே’ என்பதனால் உரிப்பொருளும் கூறப்பட்டமை காண்க.

குருகு – மற்றை நீர்வாழ்பறவைகளுக்கும் உபலக்ஷணம் கம் – நீர்; கம்புள் – சம்பங்கோழி.
இயற்கையாய் உயிர்கண்மே லுளதாகின்ற நிர்ஹேதுக கிருபை திருமுகத்தே நன்றாக விளங்குவதென்பார்,
“கருணை நம்பு வதனம்” என்றார்.
விம்பம் – பிம்பம். அதரம் – கீழுதடு. கொண்ட – உவமவுருபு;
“யாழ்கொண்ட விமிழிசை” என்பதிற் போல. “ஞாயிறு திங்க ளறிவே நாணே, கடலே கானல் விலங்கே மரனே,
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே, யவையல பிறவு நுவலிய நெறியாற், சொல்லுந போலவுங் கேட்குந போலவுஞ்,
சொல்லியாங் கமையு மென்மனார் புலவர்” என்னுஞ் சூத்திரத்தால் அஃறிணைப்பொருள்கள் கேட்பன போலச் சொல்லப்பட்டன.

இது, முதல் மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் விளங்காய்ச்சீர்களும், இரண்டு நான்கு ஆறு எட்டாஞ்சீர்கள்
விளச்சீர்களுமாகிய எண்சீராசிரியவிருத்தம்; பன்னிருசீரெனினும் அமையும

———–

எம்பெருமானது அளவிடற்கு அரிய பெருமை –

32-போனகம் பதினாலு புவனம் திருப்பள்ளி பொறி அரவணைப் பாற் கடல்
-பூ மடந்தையும் நிலா மடந்தையும் தேவியர் -புராதன மறைக்கும் எட்டா
வானகம் பேரின்ப முடன் வீற்று இருக்கும் இடம் வாகனம் வயின தேயன் –
மலர் வந்த நான்முகன் திரு மைந்தன் அவன் மைந்தன் மதி சூடி வாக வன் முதல்
தேன் நறும் தொடை மௌலி முப்பத்து முக்கோடி தேவர் உனது ஏவல் செய்வோர்
திங்களும் பரிதியும் சங்கமும் திகிரியும் திரிவனவும் நிற்பனவும் ஆம்
ஏனைமன் உயிர் முழுதும் விளையாட நீ வகுத்திட்ட பல மாயை அதனால்
எழில் அரங்கம் துயிலும் எம்பிரான் நின் பெருமை யாவரே வாழ்த்து வாரே –32-

(இ – ள்.) எழில் அரங்கம் – திருவரங்கத்தே,
துயிலும் – பள்ளிகொள்கின்ற,
எம் பிரான் – எமது தலைவனே! – (உனக்கு),
போனகம் – உணவு,
பதினாலு புவனம் – பதினான்கு உலகங்கள்;
திரு பள்ளி – அழகிய சயனம்,
பொறி அர அணை பால் கடல் – புள்ளிகளையுடைய ஆதிசேஷனாகிய சயனத்தையுடைய திருப்பாற்கடல்;
தேவியர் – மனைவியர்,
பூமடந்தையும் நிலமடந்தையும் -; பேரின்பமுடன் -,
வீற்றிருக்கும் – எழுந்தருளியிருக்கின்ற,
இடம் -, புராதனம் மறைக்கும் – பழமையாகிய (அநாதியாகிய) வேதங்களுக்கும்,
எட்டா – அறியவொண்ணாத,
வானகம் – பரமபதம்;
வாகனம் -, வயினதேயன் – கருடன்;
திரு மைந்தன் – அழகிய குமாரன்,
மலர்வந்த நான்முகன் – நாபீகமலத்தில் தோன்றிய பிரமதேவன்;
அவன் மைந்தன் – அப்பிரமதேவனது மகன் (பேரன்),
மதி சூடி – பிறையை முடியிற்சூடிய உருத்திரன்;
உனது – ஏவல்செய்வோர் – உனது குற்றேவல்களைச் செய்பவர்கள்,
வாசவன் முதல் – இந்திரன் முதலிய,
தேன் நகும் தொடை மௌலி – தேனோடு மலர்கின்ற பூமாலையைச் சூடிய முடியையுடைய,
முப்பத்து முக்கோடி தேவர் – முப்பத்துமூன்றுகோடி தேவர்கள்;
சங்கமும் திகிரியும் – சங்கசக்கரங்கள்,
திங்களும் பரிதியும் – சந்திர சூரியர்கள்;நீ -,
விளையாட – விளையாட்டாக,
வகுத்திட்ட – ஏற்படுத்திய, பல மாயை – பலவாகிய மாயைப்பொருள்கள்,
திரிவனவும் – சஞ்சரிப்பனவும்,
நிற்பனவும் – (சஞ்சரியாமல்) நிலையாக நிற்பவைகளும்,
ஆம் – ஆகிய,
ஏனை மன் உயிர் முழுதும் – மற்றை நிலைபொருந்திய உயிர்களெல்லாம்;
அதனால் – ஆகையால், –
நின் பெருமை – உனது பெருமையை,
யாவரே – எவர்தாம்,
வாழ்த்துவார் – வாழ்த்த வல்லவர்? (எவர்க்கும் வாழ்த்தலரி தென்றபடி); (எ – று.)

“காந்தஸ்தே புருஷோத்தம: பணிபதிஸ் ஸய்யாஸநம் வாஹநம், வேதாத்மா விஹகேஸ்வரோ
யவநிகா மாயா ஜகந்மோஹிநீ – ப்ரஹ்மேஸாதி ஸுரவ்ரஜஸ்ஸ தயிதஸ்த்வத்தாஸதாஸீஜந:
ஸ்ரீரித்யேவச நாம தே பகவதி! ப்ரூம: கதம் த்வாம் வயம்” என்னும் ஆளவந்தார் ஸ்ரீஸூக்தியின் கருத்தைக்கொண்டு,
ரங்கநாதன் விஷயமாக இப்பாடல் இருக்கின்றதென அறிக.

இதில், ஒருவாறு எம்பெருமானது ஸ்வரூபரூபகுண விபூதிகள் சொல்லப்பட்டிருத்தல் காண்க.
“போதின்மங்கை பூதலக்கிழத்தி தேவியன்றியும், போதுதங்கு நான்முகன் மகன்
அவன்மகன்சொலில், மாதுதங்கு கூறன்” என்பது, திருமழிசையாழ்வார்பாசுரம்.
வயினதேயன் – விநதையின் மகன். திரிவன, நிற்பன என்பவை – முறையே சரமென்றும், அசரமென்றும்; ஜங்கமமென்றும், ஸ்தாவரமென்றும்; இயங்குதிணைப்பொருளென்றும், நிலைத்திணைப்பொருளென்றுங் கூறப்படும்.
“பொங்கர வென்பது மெல்லணை யூர்தி வெம்புள்ளரசு,
பங்கய மின்னொடு பார்மகள் தேவி படைப்பவன் சேய்,
கிங்கரர் விண்ணவர் சாதகநாடிறை கேழலொன்றா,
யங்கணெடும்புவி யெல்லா மிடந்த வரங்கருக்கே” என்றார் திருவரங்கத்துமாலையிலும்.
முப்பத்து முக்கோடிதேவர் – ஆதித்தியர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், வசுக்கள் எண்மரும்,
மருத்துவர் இருவருமாகிய முப்பத்து மூவரையுந் தலைவராகவுடைய தேவர்கள்;
“எண்மர் பதினொருவ ரீரறுவ ரோரிருவர், வண்ண மலரேந்தி வைகலு – மெண்ணி,
நறுமாலையாற்பரவி யோவாதெப்போதுந், திருமாலைக் கைதொழுவர் சென்று” என்றார் பொய்கையாழ்வாரும்.

எம்பெருமான் எல்லாவற்றிலும் நிரம்பி யாதொரு குறைவுமின்றி யிருப்பவனாதலால், அவன் உலகங்களைப் படைத்தல்
யாதுபயனைக்கருதியோ? என்று ஐயப்பாடுதோன்ற வினாவினார்க்கு,
ஸௌர்யவீர்யபராக்கிரமங்களால் நிரம்பி இந்நானில முழுவதையும் தனிச்செங்கோல் செலுத்தும் மண்டலாதிபதி
கேவலம் வினோதத்தின் பொருட்டுப் பந்து முதலியவற்றைச் செய்துகொள்ளுதல்போலவே எம்பெருமானும்
கேவலம் விளையாட்டின்பொருட்டே உலகங்களைப் படைப்ப னென்று
வேதாந்தங்களில் அறுதியிடப்பட்டிருத்தல் காண்க எனச் சமாதானங் கூறியவாறு.

இது, பெரும்பாலும் முதல் ஐந்தாஞ் சீர்கள் விளச்சீர்களும், இரண்டு மூன்று நான்காஞ் சீர்கள் காய்ச்சீர்களும்,
ஆறு ஏழாஞ் சீர்கள் மாச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும், அஃது இரட்டி கொண்டது ஓரடியாகவும் உள்ள
பதினான்குசீராசிரியவிருத்தம்.

————–

தலைவனது உறுப்பு எழுத அரிது எனத் தலைவி -பிரிவாற்றாது வருந்தி இரங்குதல்-

33- வாழும் மௌலித் துழாய் மணமும்-மகரக் குழை தோய் விழி அருளும்
-மலர்ந்த பவளத் திரு நகையும் -மார்பில் அணிந்த மணிச் சுடரும்
தாலும் முளரித் திரு நாபித் தடத்துள் அடங்கும் அனைத்து உயிரும்
-சரண கமலத்து உமை கேள்வன் சடையில் புனலும் காணேனால் –
ஆழம் உடைய கரும் கடலின் அகடு கிழியச் சுழித்து ஓடி
அழைக்கும் குட காவிரி நாப்பண் ஐவாய் அரவில் துயில் அமுதை
ஏழு பிறப்பில் அடியவரை எழுதாய் பெரிய பெருமானை
எழுத அரிய பெருமான் என்று எண்ணாது எழுதி இருந்தேனே –33-

(இ – ள்.) வாழும் – (திவ்வியமங்களஸ்வரூபமாக) வாழ்கின்ற,
மவுலி – திருமுடியிற் சூடிய,
துழாய் – திருத்துழாயில்,
மணமும் – நறுநாற்றத்தையும்,
மகரம் குழை தோய் – (காதிலணிந்த) மகரகுண்டலங்களை அளாவுகின்ற,
விழி – திருக்கண்களில்,
அருளும் – திருவருளையும்,
மலர்ந்த பவளம் திரு நகையும் – பவழம்போலச் சிவந்த திருவாய்மலரில் அழகிய புன்சிரிப்பையும்,
மார்பில் அணிந்த மணி சுடரும் – திருமார்பிற் சாத்திய கௌஸ்துப மணியில் ஒளியையும்,
தாழும் முளரி திரு நாபி தடத்துள் – ஆழ்ந்த அழகிய நாபீகமலத்தினிடத்தில்,
அடங்கும் – அடங்கியிருக்கின்ற,
அனைத்து உயிரும் – எல்லாவுயிர்களையும்,
சரண கமலத்து – திருவடித்தாமரைமலர்களில்,
உமை கேள்வன் சடையில் புனலும் – பார்வதியின் கணவனாகிய பரமசிவனது (கபர்த்தமென்னுஞ்) சடையில் தங்குகின்ற கங்கைநீரையும்,
காணேன் – காண்கிறேனில்லை;
ஆல் – ஆகையால்,
ஆழம்உடைய -, கருங்கடலின் – கரிய கடலினது,
அகடு – நடுவிடம்,
கிழிய – பிளவுறும்படி,
சுழித்து – சுழித்துக் கொண்டு,
ஓடி – விசையாக ஓடி,
அலைக்கும் – அலைக்கின்ற,
குட(க்கு) காவிரி – மேற்றிசையினின்றும் வருகின்ற காவேரிநதியினது,
நாப்பண் – நடுவில்,
ஐ வாய் அரவில் – ஐந்தலை நாகத்தில்,
துயில் – கண்வளர்கின்ற,
அமுதை – அமிருதம்போலினியவனும், –
அடியவரை – தன்னடியார்களை,
ஏழுபிறப்பில் – எழுவகைப்பிறவித்தொகையுள்,
எழுதா – எழுதாத (சேர்க்காத),
பெரிய பெருமானை – பெரியபெருமாளுமாகிய அரங்கநாதனை,
எழுத அரிய பெருமான் என்று – எழுதுதற்கரிய (கட்டழகுடைய) எம்பெருமானென்று,
எண்ணாது – நினையாமல்,
எழுதி – (எண்பேதைமைத்தன்மையாற் சித்திரத்தில்) தீட்டி,
இருந்தேன் – வாளா போயினேன்; (எ – று.)

இது, எம்பெருமானைப் பிரிந்து வருந்தி அப்பெருமானது திருவுருவத்தைச் சித்திரத்தில் எழுதியேனுந் தனது துயரத்தை
ஒருவாறு தணியக்கருதி அவ்வாறு எழுதியதனுள் அவ்வுருவம் முழுவதும் அமையாமையாற் கருதிய
பயன் கைகூடப்பெறாத தலைமகளது கூற்று; எழுதரிதென்னுந் துறை.

எம்பெருமானது திருவுருவத்தை எழுதத் தொடங்கி, திருத்துழாய்மாலையோடுகூடிய திருமுடி திருக்கண்கள் திருப்பவளம்
திருமார்பத்திற் கௌஸ்துபரத்நம் நாபீபத்மம் சரணகமலம் முதலிய வடிவங்களை எழுதுகையில்,
துளசிமாலையின் நறுமணத்தையும், திருக்கண்களின் திருவருளையும், திருப்பவளத்தின் மந்தஹாஸத்தையும்,
கௌஸ்துபரத்நத்தின் ஒளியையும், நாபீகமலத்தில் உயிர்கள்யாவும் அடங்கியிருப்பதையும்,
திருவடிகளில் கங்கையடங்கியிருப்பதையும் எழுதுவது அரிதாதல் காண்க.
சித்திரத்தில் உருவம் மாத்திரம் எழுதப்படுமே யன்றி, அதன் குணஞ் செயல் முதலியன எழுதப்படாவாம்.

மகரக்குழை – முதலையின் வடிவமாகச் செய்த குண்டலம். காதளவும் நீண்ட கண்ணென்பார், “குழைதோய்விழி” என்றார்.
பவளம் – உவமவாகு பெயர். தன் அடியவரது பிறப்பை ஒழித்தலால், “பிறப்பி லடியவரை யெழுதாப்பெரிய பெருமான்” எனப்பட்டான்.
மனத்திற்குத்திருப்தியுண்டாகு மளவும் அவித்தவித்து எழுதுதற்குரிய சித்திரத்திலும் எழுதவொண்ணாத
பெருமானென அழகின்பெருமை கூறியவாறு.

இது, மூன்று ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றை நான்கும் மாச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும்,
அஃது இரட்டி கொண்டது ஓரடியாகவும் வந்த பன்னிருசீராசிரியவிருத்தம்.

————-

தலைவி மாலையை வேண்டி இரங்குதல்

34- இருங்குங்குமத் தோள் அரங்கேசர் முன் நாள்
இலங்கா புரம் காவலன் காலினால் வீழ்
கருங்குன்று போல் மண் முகம் குந்தி வீழக்
கண்டார் எனக்கு இன்று தண் தார் அளித்தால்
மருங்கு எங்கும் வம்பு ஓதுவார் வாய் அடங்கும்
வாடைக்கும் நில மங்கை ஆடைக்கும் நோகேன்
நெருங்கும் தனம் சந்தனம் பூசல் ஆகும்
நீளாது இரா மையல் மீளாது இராதே –34-

(இ – ள்.) முன்நாள் – முற்காலத்தில் (இராமாவதாரத்தில்),
இலங்கா புரம் காவலன் – இலங்கை நகருக்கரசனாகிய இராவணன்,
காலினால் வீழ் கருங் குன்றுபோல் – பெருங்காற்றினால் விழுகின்ற கரியபெரிய மலைபோல,
மண்முகம் குத்தி வீழ – மண்ணை முகத்தாற்குத்தி (தலைகவிழ்ந்து) விழும்படி,
கண்டார் – செய்தவராகிய,
இரு குங்குமம் தோள் – குங்குமமணிந்த பெரியதோள்களையுடைய, அரங்கேசர் -,
இன்று – இன்றைக்கு, எனக்கு -,
தண் தார் – குளிர்ந்த திருத்துழாய் மாலையை,
அளித்தால் – அருள்செய்வாராயின், –
மருங்கு எங்கும் – சுற்றுப்பக்கங்களெல்லாம் (இருந்து),
வம்பு ஓதுவார் – வம்பளக்கின்ற மகளிரது, வாய் -, அடங்கும் -;
வாடைக்கும் – வாடைக் காற்றுக்கும்,
நில மங்கை ஆடைக்கும் – நிலமகளது ஆடையாகிய கடலுக்கும்,
நோகேன் – வருந்தேன்;
நெருங்கும்தனம் – நெருங்கியகொங்கைகளில்,
சந்தனம் பூசல் ஆகும் -;
இரா – இராப்பொழுது,
நீளாது – நீடியாது;
மையல் – காதல்நோயும்,
மீளாது இராது – நீங்காமலிராது (நீங்கும்).(எ – று.)

தலைவனைப் பிரிந்து தவிக்கின்ற நிலையிலே வாடை கடல் முதலியவற்றிற்கு ஆற்றாத தலைவி தாரும் பெறாது
வருந்தி இங்ஙனங் கூறின ளென்க. இதன் மெய்ப்பாடு – அழுகை; பயன் – ஆற்றாமை நீங்குதல்.
தலைவனைப் பிரிந்து வருந்தும் நிலையில் தலைவி அத்தலைவன் சாத்திய மாலை கிடைக்கப்பெற்றால்
அதனை அவனாகவே பாவித்து உடம்பில் ஒற்றிக்கொண்டு அவனைத் தழுவியணைத்தவள் போன்று மகிழ்வுறக்கருதின ளாதலால்,
“எம்பெருமான் தனது மாலையைத் தந்தானாயின், அப்போது தமக்குத்தோன்றியபடியெல்லாம் வம்பளக்கின்ற மகளிர்வாயும் அடங்கும்;
காமோத்தீபகப் பொருள்களாகிய வாடை முதலியனவும் என்னை வருத்தமாட்டா; யான் இனிதிருப்பேன்” என்றன வென்பதாம்.
தனது தளர்ச்சியை ஊரலர் முதலியவற்றால் அறிந்த செவிலித்தாயர் முதலியோர் அதற்குத் தக்க பரிகாரமொன்றுஞ் செய்யாது
முனிந்துகூறும் வார்த்தைகள் தன்வருத்தத்தை மிகுவித்தல் பற்றி,
“மருங்கெங்கும் வம்போதுவார் வாயடங்கும்” என்றாள்.
வம்பு ஓதுதுல் – வீணே நிந்தித்துப் பேசுதல்; நிட்டூரவார்த்தைகளைக் கூறுதல்.
துணைவரோடு கூடியுள்ளார்க்கு இன்பஞ்செய்யும் தென்றலும் கடலும் அவரைப் பிரிந்தார்க்குத் துன்பஞ்செய்யு மென்றல் வெளிப்படை.
“ஊழிபலவோரிரவாயிற்றோ வென்னும்”,
“ஊழியிற் பெரிதால் நாழிகையென்னும்,”
“இது ஓர்கங்கு லாயிரமூழிகளே” என்றபடி கூடியநிலையில் ஒருகணமாகக் கழிகிற இரவு பிரிந்த நிலையில்
அநேகயுககாலமாக நீட்டித்துத் தோன்றுகின்றமை பற்றி, ‘நீளாதிரா’ என்றாள்;
“நீடிரவொன்று அஞ்சுகம் தத்தை விளைக்கும்” என்ற திருவேங்கடத்தந்தாதியும் காண்க.

காலினால் வீழ் கருங்குன்று – இல்பொருளுவமை;
இனி, ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் பகைமை நேர்ந்தபொழுது வாயுவினாற் கொணர்ந்து தள்ளப்பட்ட
மேரு சிகரமென உள்பொருளுவமையுமாம். வாடை – வடக்கினின்று வருங் காற்று; வடக்கிற்செல்லுங் காற்றெனத் தென்றலுமாம்.
பூமியைச் சூழ்ந்த கடலை அதற்கு ஆடையென்பது மரபு; இதனை “அப்திமேகலா” என்னும் பூமியின் வடமொழிப் பெயரானு முணர்க.
மீளாதிராது – இரண்டு எதிர்மறை உடன்பாடு உணர்த்திற்று.

இது, எல்லாச்சீரும் புளிமாச்சீராகிய எண்சீராசிரியவிருத்தம்.

————-

நெஞ்சிற்கு அறிவுறுத்தல் –

35-தேடுகின்றனை ஐம்பொறிகளுக்கு இரை தேடியும் கிடையாமல்
வாடுகின்றன வீடு சென்று என்று இனி மருவுவை மட நெஞ்சே
ஆடு கின்றிலை அழுகிலை தொழு கிலை அரங்கனைக் கரம் கூப்பி
பாடு கின்றிலை நினைகிலை பதின்மர்தம் பாடலின் படியாயே–35-

(இ – ள்.) மட(மை) நெஞ்சே – அறியாமையையுடைய மனமே! அரங்கனை -,
கரம் கூப்பி – கைகூப்பி,
தொழுகிலை – வணங்குகின்றாயில்லை; (அங்ஙனம் வணங்கிப் பேராநந்தத்தால்),
ஆடுகின்றிலை – நர்த்தனஞ்செய்கின்றாயில்லை;
அழுகிலை – (கண்ணீர்விட்டு) அழுகிறாயில்லை;
பதின்மர்தம் பாடலின் படியாய் – ஆழ்வார்கள் பதின்மரது பாசுரத்தின்படியே,
பாடுகின்றிலை – பாடித்துதிக்கின்றாயில்லை;
நினைகிலை – தியானஞ்செய்கின்றாயுமில்லை; (இவையேயுமன்றி), –
ஐம்பொறிகளுக்கு – பஞ்சேந்திரியங்களுக்கும்
இரை – உணவை,
தேடுகின்றனை – தேடுகின்றாய்;
தேடியும் – (அவ்வாறு) தேடியும்,
கிடையாமல் – (இரை) அகப்படாமையால்,
வாடுகின்றனை – வருந்துகின்றாய்; (ஆகையால் நீ), இனி -,
என்று – என்றைக்கு,
வீடு சென்று மருவுவை – பரமபதம்போய்ச் சேர்வாய்? (எ – று.)

எம்பெருமானைத் தியானித்து ஆநந்தக்கூத்தாடுதல் முதலிய நற்றொழில்கள் ஒன்றும் செய்யாமல் ஐம்பொறிகளின்
வசப்பட்டு வாடும் தமது மனத்திற்கு இனியேனும் விஷயாந்தரங்களிற் செல்லுதலைவிட்டு
அரங்கனைத்தொழுதல் முதலியன செய்து வீடுபெறுவாயென அறிவுறுத்தியபடி.

“ஆடிப்பாடியரங்கவோவென்றழைக்குந்தொண்டர்” என்றபடி ஆடிப்பாடித் தொழுதல் தொண்டர்களின் செயலாத லறிக.
அரங்கநாதனுக்கு “பதின்மர்பாடும் பெருமாள்” என ஒருவிருது இருத்தல் கருதத்தக்கது.
இரை – சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமாகிய புலன்கள். நினைதல் ஒழிந்த ஆடுதல் முதலிய தொழில்கள்
மெய்மொழிகளதாயினும், இவற்றிற்கெல்லாம் மூலகாரணம் மனமாதலால், அதன் தொழிலாகக் கூறினார்.

இது, முதற்சீர் தேமாச்சீரும், ஈற்றுச்சீர் புளிமாங்காய்ச்சீரும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய அறுசீராசிரிய விருத்தம்.

——–

உலகிற்கு அறிவுறுத்தல்

36-ஆயினை மனையை சேயினை பிதாவை
அனத்தினை தனத்தினை விரும்பும்
பேயினை மறந்து நோயினை மூப்பை
பிறப்பினை இறப்பினை துடைப்பீர்
ஆயனை முளரி வாயனை என்கண்
அமலனை கமலனைப் பயந்த
தாயனை நெடிய மாயனை வடபால்
தரங்கனை அரங்கனை தொழுமே –36-

(இ – ள்.) ஆயினை – தாயையும்,
மனையை – மனைவியையும்,
சேயினை – மக்களையும்,
பிதாவை – தந்தையையும்,
அனத்தினை – சோற்றையும்,
தனத்தினை – பொருளையும்,
விரும்பும் – விரும்புகின்ற,
பேயினை – அறியாமைக்குணத்தை,
மறந்து – விட்டொழிந்து,
நோயினை – வியாதியையும்,
மூப்பை – கிழத்தனத்தையும்,
பிறப்பினை – ஜநநத்தையும்,
இறப்பினை – மரணத்தையும்,
துடைப்பீர் – ஒழிக்க விரும்புபவர்களே! –
ஆயனை – திருவாய்ப்பாடியில் வளர்ந்தவனும்,
முளரிவாயனை – செந்தாமரைமலர்போன்ற திருவாயையுடையவனும்,
அமலனை – குற்றமற்றவனும்,
கமலனை பயந்த – நாபீகமலத்துப் பிரமதேவனைப் பெற்ற,
தாயனை – தாயானவனும்,
நெடிய – மிகுந்த,
மாயனை – மாயையையுடையவனும்,
வடம் பால் தரங்கனை – ஆலிலையிலும் பாற்கடலிலும் பள்ளிகொள்பவனுமாகிய,
எங்கள் அரங்கனை -, தொழும் – வணங்குங்கள். (எ – று.)

மனைவி மக்களை நினைந்து பிறப்புக்களில் உழல்வதை விட்டு நற்கதிபெற விரும்பினால் ஸ்ரீரங்கநாதனை
வணங்குவதொன்றுமே செய்யவேண்டும் என்று உலகத்தோர்க்கு நல்லறிவு கூறியவாறு.
பேய் – பேய்க்குணம்; ஆகுபெயர். தரங்கம் – ஆகுபெயர். தொழும் – உம்மீற்று. முன்னிலையேவற்பன்மைமுற்று;
உம்மீறு முன்னிலைக்கு வருதல், புதியனபுகுதல். இனி, நீவிர் தொழும்; தொழுவீரேல் துடைப்பீ ரெனவுங் கூட்டி முடிக்கலாம்.

இது, இரண்டு நான்கு ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய எழுசீராசிரியவிருத்தம்.

————–

இறுதி மடக்கு

37-தொழப் பெறாதது அந்த ஆரணத்து அந்தமே
தொட்டு இறுத்ததும் வாரணத் தந்தமே
வழுத்து தாள் முன்பு வனம் கடந்ததே
மலர்ந்த உந்தி முன் புவனங்கள் தந்ததே
ஒழித்ததும் குழைச் சங்கரன் சாபமே
ஒசித்ததும் குழைச் சங்கு அரன் சாபமே
அழித்ததும் பொரு தானவர் அங்கமே
அரிதன் ஊர் இனிது ஆன அரங்கமே –37-

(இ – ள்.) தொழ பெறாது – (எம்பெருமானை வணங்கி அவன் பெருமையை இவ்வளவிற்றென்று முற்றும்) அறியமாட்டாதது,
அந்த ஆரணத்து அந்தமே – அப்படிப்பட்ட வேதாந்தமே;
தொட்டு இறுத்ததும் – கையால் தொட்டு முறிக்கப்பட்டதுவும்,
வாரணம் தந்தமே – குவலயாபீடமென்னும் யானையின் கோடுதானே;
வழுத்து தாள் – (யாவராலும்) புகழப்படுகின்ற திருவடி,
முன்பு – முன்காலத்தில் (ராமாவதாரத்தில்),
வனம் – காட்டை,
கடந்தது – நடந்துகடந்தது;
மலர்ந்த உந்தி – மலர்ந்த நாபீகமலம்,
புவனங்கள் – எல்லாவுலகங்களையும்,
தந்தது – படைத்தது;
ஒழித்ததும் – போக்கியருளப்பட்டதும்,
குழை சங்கு அரன் சாபமே – சங்கினாலாகிய குண்டலத்தையுடைய சிவனது சாபமே;
ஒசித்ததும் – முறித்ததும்,
குழை சங்கரன் சாபமே – வளையுந்தன்மையையுடைய சிவனது வில்லே;
அழித்ததும் – அழிக்கப்பட்டதும்,
பொரு தானவர் அங்கமே – போர்செய்கிற அசுரரது உடம்பே;
அரிதன் ஊர் – அப்பெருமானது திருப்பதி, இனிது ஆன அரங்கமே -;(எ – று.)

‘ஒசித்ததுங் குழைச்சங்கரன் சாபமே’ என்னுமிடத்து, குழைச்சு அங்கு அரன் எனப்பிரித்து, குழைச்சு என்பதைக்
குழைத்து என்பதன் போலியாக்கொண்டு, அங்கு – மிதிலாநகரத்தில், குழைச்சு – வளைத்து, ஒசித்ததும் – முறித்ததும்,
சிவனது வில்லே யென்றும் பொருள் கொள்ளலாம். சாபம் – பிரமகபாலங் கையைவிட்டு நீங்காமை.
“சாபமேசபித்தல் வில்லாம்” என்ற நிகண்டின்படி இங்கு இருபொருள் கொள்ளப்பட்டது.
அரி – ஹரி; அடியார்களின் அருந்துயரைப் போக்குபவர்;
அன்றிக்கே, தேவர்களுக்குப் பகைவர்களாகிய அசுரர் அரக்கர் முதலியோரை அழிப்பவர்.

இஃது, அடிதோறுந் தனித்தனியே வந்த இறுதிமுற்றுமடக்கு.

இது, முதற்கண் மாச்சீர்பெற்று நாற்சீரான்வந்தது அரையடியாகவும் அஃது இரட்டி கொண்டது ஓரடியாகவும்,
அவ்வடி நான்குகொண்டு, அரையடிக்கு நிரையசைமுதலாயின் ஒற்றொழித்துப் பன்னிரண்டு எழுத்தும்
நேரசைமுதலாயிற் பதினொன்றும் பெற்று வந்த கட்டளைக்கலிப்பா.

——————–

உயிர் வருக்க மோனை

38-அரங்க மாளிகைக் கரும் கடல் வண்ணனை
ஆலிமா முகிலை வாலி காலனை
இந்தளூர் உறை எந்தை பெம்மானை
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை
உள்ளுவார் உள்ளத்துள் உறை சோதியை
ஊரகம் நின்றருள் நீரகத்து அடிகளை
எவ்வுள் மாயனை தெய்வ நாயகனை
ஏர் மலி சிகரத்து நீர் மலை ஆதியை
ஐ வாய் அரவில் அறி துயில் அமலனை
ஒரு கால் மொழியினும் ஒழி குவை நெஞ்சே
ஓத நீர் ஞாலத்து உழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே –38-

(இ – ள்.) நெஞ்சே -! – அரங்க மாளிகை – திருவரங்கம் பெரியகோயிலிலெழுந்தருளியிருக்கின்ற,
கருங் கடல் வண்ணனை – கரிய கடல்போலுந் திருநிறமுடையவனை,
ஆலி மா முகிலை – திருவாலியில் எழுந்தருளியிருக்கிற கரிய மேகம் போன்றவனை,
வாலி காலனை – வாலிக்கு யமனாயிருந்தவனை,
இந்தளூர் உறை – திருவிந்தளூரி லெழுந்தருளியிருக்கின்ற,
எந்தை பெம்மானை – எந் தந்தையாகிய பெருமானை,
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை – சிவன் பிரமன் இந்திரன் இவர்களுக்கு இறைவனானவனை,
உள்ளுவார் உள்ளத்துள் உறை சோதியை – அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்தின்கண்
(அவர்நினைந்த வடிவோடு விரைந்து சென்று) தங்குகின்ற ஒளியுருவமானவனை,
ஊரகம் நின்று அருள் நீரகத்து அடிகளை – திருவூரகத்திலும் திருநீரகத்திலும் எழுந்தருளியிருக்கின்ற மாயவனை,
எவ்வுள்மாயனை – திருவெவ்வுளூரி லெழுந்தருளியிருகின்ற சுவாமியை,
தெய்வம் நாயகனை – தேவர்தலைவனை,
ஏர் மலி சிகரத்து நீர்மலை ஆதியை – அழகுமிக்க சிகரத்தையுடைய திருநீர்மலையிலெழுந்தருளியிருக்கின்ற முதல்வனை,
ஐ வாய் அரவில் அறி துயில் அமலனை – ஐந்தலை நாகத்தில் யோகநித்திரை செய்தருளுகின்ற குற்றமற்றவனை,
ஒரு கால் மொழியினும் – நீ ஒருதரம் (திருநாமத்தைச்) சொல்லித் துதித்தாலும்,
ஓதம் நீர் ஞாலத்து – குளிர்ச்சியையுடைய கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தில்,
உழலும் – அலைந்து வருந்துகின்ற,
ஒளவியம் பிறப்பில் – பொறாமையையுடைய பிறவிக்கடலில்,
அழுந்தி – முழுகி,
வாடுவது – வாட்டமடைவதை,
ஒழிகுவை – நீங்குவாய்.

இதனால், எம்பெருமானது திருநாம ஸங்கீர்த்தனத்தின் மகிமையை வெளியிட்டவாறு.
ஆலி, இந்தளூ ரென்பவை – சோழநாட்டுத் திருப்பதிகள். ஊரகம் முதலியன – தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.
ஊரகமும், நீரகமும் – கச்சியுட் சேர்ந்தவை.
“அழன்று, பொரு வாலி காலன் பரகாலன் போற்றுந், திருவாலிமாயன்” என்றார் நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியிலும்.
ஒளவியமென்பது – அவா வெகுளி இன்னாச்சொல் முதலிய தீக்குணங்களுக்கும் உபலக்ஷணம்.

இது, உயிர்வருக்கமோனை.

இது, ஈற்றயலடி முச்சீரடியும், மற்றையடிகளெல்லாம் நாற்சீரடிகளுமாய் வந்ததனால், நேரிசையாசிரியப்பா.

———

செவிலி இரங்குதல்

39-வாடி ஓட வனசம் அன்ன இரு கண் வெள்ளம் அருவி போல்
மருவி ஓட மதனன் வாளி உருவி ஓட வாடை ஊடு
ஆடி ஓட அன்றில் ஓசை செவியில் ஓட வண் துழாய்
ஆசை யோடும் எங்கள் பேதை ஆவி ஓடல் நீதியோ
மோடி ஓட அங்கி வெப்பு மங்கி ஓட ஐங்கரன்
முடுகி ஓட முருகன் ஓட முக்கண் ஈசர் மக்களைத்
தேடி ஓட வாணன் ஆயிரம் புயங்கள் குருதி நீர்
சிந்தி ஓட நேமி தொட்ட திரு அரங்க ராசரே –39-

இ – ள்.) மோடி ஓட – துர்க்கை ஓடவும்,
அங்கி – அக்கினியும்,
வெப்பு – ஜ்வரமும்,
மங்கி ஓட – வலியழிந்து ஓடவும்,
ஐங் கரன் – ஐந்து கைகளையுடைய விநாயகன்,
முடுகி ஓட – விரைந்து ஓடவும்,
முருகன் – அவன் தம்பியாகிய சுப்பிரமணியன்,
ஓட – ஓடவும்,
முக்கன் ஈசன் – மூன்று கண்களையுடைய சிவன்,
மக்களை – தன்பிள்ளைகளை,
தேடி – தேடிக்கொண்டு,
ஓட – ஓடவும்,
வாணன் – பாணாசுரனது
ஆயிரம் புயங்கள் – ஆயிரங் கைகளும்,
குருதி நீர் சிந்தி ஓட – ரத்த வெள்ளத்திற் சிதறியோடவும்,
நேமி தொட்ட – சக்கரத்தைப் பிரயோகித்த,
திருவரங்கராசரே – ஸ்ரீரங்கநாதரே! –
வனசம் அன்ன – தாமரைமலர்போன்ற,
இரு கண் – இரண்டு கண்களும்,
வாடி ஓட – வாடிப்போகவும்,
வெள்ளம் – (அக்கண்களினின்று பெருகுகின்ற) கண்ணீர்ப் பெருக்கு,
அருவிபோல் – மலையருவிபோல,
மருவி ஓட – வழிந்தோடவும்,
மதனன் வாளி – மன்மதனது புஷ்பபாணங்கள்,
உருவி ஓட – உள்ளே தைத்து ஊடுருவிச் செல்லவும்,
வாடை – வாடைக்காற்று,
ஊடு ஆடி ஓட – இடையே நுழைந்து செல்லவும்,
அன்றில் ஓசை – அன்றிற்பறவை கூவுகின்ற ஒலி,
செவியில் ஓட – காதுகளினுட்புகவும்,
வள் துழாய் ஆசையோடும் – வளப்பம்பொருந்திய திருத்துழாய்மாலையினிடத்துள்ள ஆசையுடனே,
எங்கள் பேதை – எங்கள் பெண்ணாகிய இவள்,
ஆவி ஓடல் – உயிர் நீங்கப் பெறுதல்,
நீதியோ – (உமக்கு) நியாயமாகுமோ? (ஆகாதென்றபடி); (எ – று.)

இது, பிரிவாற்றாதுவருந்துந் தலைவியின் நிலையைக் கண்ட செவிலி தலைவனைநோக்கி இரங்கிக் கூறியது;
தோழி இரங்கியதென்பாரு முளர்.

உஷையைப் பிரத்யும்நனுக்கு மணஞ்செய்விக்கக் கருதிச் செயற்கரிய பெருங்காரியத்தைச் செய்த நீர்,
எங்கள் பெண்ணை மணந்துகொள்ளுதற்கு வேண்டிய செயலைத் தேடாது உபேட்சித்தல் சிறிதுந்தக்கதன் றென்பதாம்;
திருவரங்கராசருக்குக் கொடுத்துள்ள அடைமொழி இவ்வாறு ஒருகருத்தை உட்கொண்டிருத்தலால், கருத்துடையடைமொழியணியாம்.
“ஓட” என்ற சொல் ஒருபொருளில் பலமுறை வந்தது – சொற்பொருட்பின்வருநிலையணியாம்:
இவ்வாறு இரண்டணிகள் எள்ளும் அரிசியும் போலச்சேர்ந்துவந்தது, சேர்வையணி யெனப்படும்.

“மோடியோடிலச்சையாய சாபமெய்தி முக்கணான், கூடுசேனை மக்களோடு கொண்டு
மண்டி வெஞ்சமத், தோட வாண னாயிரங் கரங்கழித்த வாதிமால்,”
“வண்டுலாவுகோதைமாதர் காரணத்தினால் வெகுண், டிண்ட வாண னீரைஞ்ஞூறு தோள்களைத் துணித்தநாள்,
முண்டநீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி யோடிடக், கண்டு நாணி வாணனுக் கிரங்கினா னெம் மாயனே,”
“கார்த்திகையானுங் கரிமுகத்தானுங் கனலு முக்கண், மூர்த்தியு மோடியும் வெப்பு முதுகிட்டு மூவுலகும்,
பூத்தவனே யென்று போற்றிட வாணன் பிழைபொறுத்த, தீர்த்தன்” என்றார் பெரியார்களும்.

இது, முதலாறுசீரும் மாச்சீர்களும், ஏழாஞ்சீரொன்று விளச்சீருமாய் வந்தது அரையடியாகவும்,
அது இரட்டிகொண்டது ஓரடியாகவும் உள்ள பதினான்குசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

————-

ஊர்
40-சருகு அருந்தி ஐம்பொறி வருந்து அருந்தவர்கள் அண்டர் குஞ்சர முகன் குகன்
பருதி சந்திரன் சிவன் அயன் புரந்தரன் நிரந்தரம் பரவும் எந்தை ஊர்
குருகை தஞ்சை தென் கரை புரம் குறுங்குடி குடந்தை வண் துவரை இந்தளூர்
திருவைகுந்தம் அஞ்சன சிலம்பு அயிந்திர புரம் செழும் திரு அரங்கமே –40-

(இ – ள்.) சருகு அருந்தி – உலர்ந்த இலைகளைப் புசித்து,
ஐம்பொறி வருந்து – பஞ்சேந்திரியங்களும் வருந்துகின்ற,
அருந் தவர்கள் – (பிறராற்) செய்தற்கரிய தவத்தையுடைய முனிவர்களும்,
அண்டர் – தேவர்களும்,
குஞ்சரமுகன் – யானைமுகத்தையுடைய விநாயகனும்,
குகன் – முருகனும்,
பரிதி – சூரியனும்,
சந்திரன் – சந்திரனும்,
சிவன் – சிவனும்,
அயன் – பிரமனும்,
புரந்தரன் – இந்திரனும்,
நிரந்தரம் – இடைவிடாமல் (எக்காலத்தும்),
பரவும் – புகழ்ந்து வணங்குகின்ற,
எந்தை – எம்பெருமானது,
ஊர் – திருப்பதி, –
குருகை – திருக்குருகூரும்,
தஞ்சை – திருத்தஞ்சைநகரும்,
தென் கணபுரம் – அழகிய திருக்கண்ணபுரமும்,
குறுங்குடி – திருக்குறுங்குடியும்,
குடந்தை – திருக்குடந்தையும்,
வள் துவரை – வளப்பம் பொருந்திய திருத்துவாரகையும்,
இந்தளூர் – திருவிந்தளூரும்,
திரு வைகுந்தம் – ஸ்ரீவைகுண்டமும்,
அஞ்சன சிலம்பு – திருவேங்கடமலையும்,
அயிந்திரபுரம் – திருவயிந்திரபுரமும்,
செழு – செழுமையான,
திரு அரங்கமே – ஸ்ரீரங்கமுமேயாம்; (எ – று.) – என்றது, மற்றைத் திருப்பதிகளுக்கும் உபலக்ஷணம்.

தஞ்சை – தஞ்சாவூ ரென்பதன் மரூஉ. துவரை – த்வாரகா வென்னும் வடமொழியின் சிதைவு.
திருவைகுந்தம் – பாண்டியநாட்டகத்துத் திருக்குருகையைச் சார்ந்த நவதிருப்பதிகளுள் ஒன்று; அன்றிக்கே, பரமபதமுமாம்.
அஞ்சனசிலம்பு – திருமாலிருஞ்சோலைமலையுமாம். அயிந்திரபுரம் – அஹீந்த்ரபுரம்.

இது, பிரபந்தங்களுக்கு உரிய ஊர் என்னுந் துறையின் பாற்படும்.

இது, ஒன்று மூன்று ஐந்து ஏழாஞ்சீர்கள் புளிமாச்சீர்களும், மற்றை நான்கும் கூவிளச்சீர்களுமாகிய எண்சீராசிரியச் சந்தவிருத்தம்.
“தனன தந்தன தனன தந்தன தனன தந்தன தனன தந்தனா” எனச் சந்தக்குழிப்புக் காண்க.

——————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: