ஸ்ரீ அஷ்டபிரபந்தத்தி லடங்கிய ஸ்ரீ புராண கதைகள்–

ஸ்ரீ அஷ்டபிரபந்தத்தி லடங்கிய ஸ்ரீ புராண கதைகள்–

கஜேந்திரனைப் பாதுகாத்த கதை:-
இந்திரத்யும்நனென்னும் அரசன் மிக்கவிஷ்ணுபக்தியுடையனாய் ஒருநாள் விஷ்ணுபூசைசெய்கையில் அகஸ்தியமகாமுனிவன் அவனிடம்எழுந்தருள, அப்பொழுது அவன் தன்கருத்து முழுவதையும் திருமாலைப் பூசிப்பதிற் செலுத்தியிருந்ததனால், அவ்விருடியின் வருகையை அறிந்திடானாய் அவனுக்கு உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க, அம்முனிவன் தன்னை அரசன் அலட்சியஞ்செய்தா னென்று கருதிக் கோபித்து “நீ யானைபோலச் செருக்குற்றிருந்ததனால், யானையாகக் கடவை’ என்று சபிக்க, அங்ஙனமே அவன் ஒருகாட்டில் யானையாகத் தோன்றினனாயினும் முன்செய்த விஷ்ணுபக்தியின் மகிமையால் அப்பொழுதும் விடாமல் நாள்தோறும் ஆயிரந்தாமரைமலர்களைக் கொண்டு திருமாலை அருச்சித்துப் பூசித்துவருகையில், ஒருநாள், பெரியதொரு தாமரைத்தடாகத்தில் அருச்சனைக்காகப் பூப்பறித்தற்குப் போய் இறங்கினபொழுது, அங்கே முன்பு நீர்நிலையில்நின்று தவஞ்செய்துகொண்டிருந்த தேவலனென்னும் முனிவனது காலைப் பற்றியிழுத்து அதனாற் கோபங்கொண்ட அவனது சாபத்தாற் பெரியமுதலையாய்க்கிடந்த ஹூஹூஎன்னுங் கந்தருவன் அவ்வானையின் காலைக் கௌவிக்கொள்ள, அதனை விடுவித்துக்கொள்ள முடியாமல் கஜேந்திரன் ஆதிமூலமேயென்று கூவியழைக்க, உடனே திருமால் கருடாரூடனாய் அங்குஎழுந்தருளித் தனதுசக்கரத்தைப் பிரயோகித்து முதலையைத்துணித்து யானையை அதன்வாயினின்று விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியை அருள்செய்தனன் என்பதாம். கஜேந்திராழ்வான் ஆதிமூலமேயென்று பொதுப்படக் கூப்பிட்டபொழுது எம்பெருமானல்லாத பிறதேவரெல்லோரும் தாம்தாம் அச்சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதியொழிய, அதற்கு உரிய திருமால் தானே வந்து அருள்செய்தன னென நூல்கள் கூறும், ஒரு விலங்கினாலே மற்றொருவிலங்குக்கு நேர்ந்த துன்பத்தைத் தான் இருந்தவிடத்திலிருந்தே தீர்ப்பது சர்வசக்தனான எம்பெருமானுக்கு மிகவும் எளியதாயினும் அப்பெருமான் அங்ஙனஞ்செய்யாமல் தனதுபேரருளினால் அரைகுலையத் தலைகுலைய மடுக்கரைக்கே வந்து உதவின மகாகுணத்தில் ஈடுபட்டு, அதனைப் பாராட்டிக்கூறுவர். இவ்வரலாற்றில், திருமாலே பரம்பொருளாந்தன்மை வெளியாம்.

ஹம்ஸாவதார கதை:-
முன்னொருகாலத்தில் மது கைடப ரென்ற அசுரர்கள் பிரமதேவனிடத்திலிருந்து வேதங்களை அபகரித்துக்கொண்டு
கடலில் மூழ்கி மறைந்துவிட, ஞானவொளியைத்தரும் பெருவிளக்கான வேதங்கள் ஒழிந்தமைபற்றி உலகமெங்கும் பேரிருள்மூடி நலியாநிற்க, பிரமன்முதலியோ ரனைவரும் கண்கெட்டவர்போல யாதொன்றுஞ்செய்யவறியாமல் திகைத்து வருந்துவது கண்டு திருவுள்ளமிரங்கித் திருமால் ஹயக்கிரீவனாகிக் கடலினுட் புக்கு அவ்வசுரர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொன்று வேதங்களை மீட்டுக் கொணர்ந்து, ஹம்ஸரூபியாய்ப் பிரமனுக்கு உபதேசித்தருளின னென்பதாம். இவ்வரலாறு சிறிதுவேறுபடக் கூறுதலுமுண்டு.

அண்டமுண்டு ஆலிலைகலந்த கதை:-
பிரமன்முதலிய சகலதேவர்களுமுட்பட யாவும் அழிந்துபோகின்ற யுகாந்தகாலத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களையெல்லாம் தன்வயிற்றில்வைத்து அடக்கிக்கொண்டு சிறுகுழந்தைவடிவமாய் ஆதிசேஷனது அம்சமானதோர் ஆலிலையின்மீது பள்ளிகொண்டு யோகநித்திரைசெய்தருளுகின்றன னென்பதாம்.

கடல்கடைந்த கதை:-
முன்னொருகாலத்தில், இவ்வண்டகோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணுலோகத்துச் சென்று திருமகளைப் புகழ்ந்து பாடி அவளால் ஒருபூமாலை பிரசாதிக்கப்பெற்ற ஒரு வித்தியாதரமகள், மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன்கைவீணையில் தரித்துக்கொண்டு பிரமலோக வழியாய் மீண்டுவருகையில், துர்வாசமகாமுனி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க, அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள்; அதன்பெருமையை யுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம்முனிவன் ஆனந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து, அப்பொழுது, அங்கு வெகுஉல்லாசமாக ஐராவதயானையின்மேற் பவனிவந்துகொண்டிருந்த இந்திரனைக் கண்டு அவனுக்கு அம்மாலையைக் கைந்நீட்டிக்கொடுக்க, அவன் அதனை அங்குசத்தால் வாங்கி அந்த யானையின் பிடரியின்மேல் வைத்தவளவில், அம்மதவிலங்கு அதனைத் துதிக்கையாற் பிடித்து இழுத்துக் கீழெறிந்து காலால் மிதித்துக் துவைத்தது; அதுகண்டு முனிவரன் கடுங்கோபங்கொண்டு இந்திரனை நோக்கி “இவ்வாறு செல்வச்செருக்குற்ற நினது ஐசுவரியங்களெல்லாம் கடலில் ஒளித்துவிடக்கடவன’ என்று சபிக்க, உடனே தேவர் செல்வம்யாவும் ஒழிந்தன; ஒழியவே, அசுரர் வந்து பொருது அமரரை வெல்வாராயினர். பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து, அப்பிரான் அபயமளித்துக்கட்டளையிட்டபடி, அசுரர்களையுந் துணைக்கொண்டு, மந்தரமலையை மத்தாக நாட்டி, வாசுகியென்னும் மகாநாகத்தைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடலைக்கடையலாயினர் என்பதாம்.

துருவனது வரலாறு:-
சுவாயம்புவமனுவின் மகனான உத்தான பாத மகாராஜனுக்குச் சுநீதி யென்னும் மனைவியினிடத்துப் பிறந்த துருவனென்பவன், ஒருநாள் சிங்காதனத்தில் வீற்றிருந்த தன்தகப்பனுடைய மடியிலே யுட்கார்ந்திருந்த தனது மாற்றுத்தாயான சுருதியின் மகனாகிய உத்தமனென்பவனைப் பார்த்துத் தானும் அப்படி உட்காரவேண்டு மென்று அருகிற்போக, அதுகண்ட சுருசி, செருக்குக்கொண்டு “என்வயிற்றிலே பிறவாமல் வேறொருத்தி வயிற்றிற் பிறந்த நீ இச்சிங்காசனத்திலே யிருக்க
நினைக்கின்றது அவிவேகம்; நீ அதற்குத் தகுந்தவ னல்லன்; என்மகனே அதற்குயோக்கியமானவன்’ என்று இவனை இழித்துச்சொல்ல, அதுபொறாமல் துருவன் சரேலென்று தனது தாயார் வீட்டுக்குப் போய் அவளுடைய அநுமதியைப் பெற்றுக்கொண்டு, அப்பட்டணத்திற்குச் சமீபத்திலே யிருப்பதொரு உபவனத்திலே யிருந்த ஸப்தரிஷிகளைக்கண்டு தண்டனிட்டு அவர்களால் வாசுதேவ விஷயமான ஸ்ரீதுவாதசாக்ஷர மகாமந்திரம் உபதேசிக்கப்பெற்று, மதுவனத்துக்குப்போய் ஸ்ரீவிஷ்ணுவைத் தன் இருதயகமலத்திலே இடைவிடாது தியானித்துக்கொண்டிருக்க, எம்பெருமான் அவனது தியானத்திற்குத் திருவுள்ளமுகந்து பிரதியக்ஷமாய்க் கிருபைசெய்து வரமளிக்க,அவனுடைய அநுக்கிரகத்தினாலே மூன்றுலோகங்களுக்கும்மேற்பட்டதும், சகலதாரா கிரகநக்ஷத்திரங்களுக்கும் ஆதாரபூதமும், அவர்களுடைய ஸ்தானங்களுக்கெல்லாம் அதியுன்னதமுமான திவ்வியஸ்தானத்தை யடைந்து, தனதுதாயான சுநீதியும் நக்ஷத்திரரூபமாய்த் தனது அருகிலே பிரகாசித்துக் கொண்டிருக்க, கல்பாந்த பரியந்தம் சுகமாக இருக்கின்றன னென்பதாம்.

மத்ஸ்யாவதார வரலாறு:-
முன் ஒரு கல்பத்தின் அந்தத்திற் பிரமதேவன் துயிலுகையில் அவன்முகங்களினின்று வெளிப்பட்டுப் புருஷரூபத்துடன் உலாவிக்கொண்டிருந்த நான்குவேதங்களையும் மகாபலசாலியும் நெடுங்காலந் தவஞ்செய்து பெருவரங்கள் பெற்றவனுமான சோமுகனென்னும் அசுரன் கவர்ந்துகொண்டு பிரளயவெள்ளத்தினுள் மறைந்துசெல்ல, அதனையுணர்ந்து திருமால் ஒருபெருமீனாகத் திருவவதரித்து அப்பெருங்கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப் பிடித்துக் கொன்று, அவன்கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து அவற்றைப் பிரமனுக்குக் கொடுத்தருளின னென்பதாம். இவ்வசுரன்பெயர் சோமகனென்றலும், இவ்வரலாற்றை வேறுவகையாக விரித்துக்கூறுதலு முண்டு.

கூர்மாவதார கதை:-
கடல் கடைந்தகாலத்தில் அப்பொழுது, மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமைவடிவ மெடுத்து அம்மலையின் கீழேசென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்தி விடாமற் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தன னென்பதாம்.

வராகாவதார கதை:-
இரணியனது உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரராஜன் தன்வலிமையாற் பூமியைப் பாயாகச்சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது, தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மகாவராகரூபமாகத் திருவவதரித்துக் கடலினுட் புக்கு அவ்வசுரனை நாடிக் கண்டு பொருது கொன்று பாதாளலோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற்குத்தி அங்குநின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளின னென்பதாம்.நரசிங்காவதார கதை:- தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும் வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமில்லாதபடி வரம்பெற்றவனும், இரணியாக்கனது உடன்பிறந்தவனுமான இரணியன் தேவர் முதலிய எல்லோர்க்கும் கொடுமை இயற்றித் தன்னையே கடவுளாக அனைவரும் வணங்கும்படி செய்துவருகையில், அவனது மகனான பிரகலாதாழ்வான், இளமை தொடங்கி மகாவிஷ்ணுபக்தனாய்த் தந்தையின் கட்டளைப்படியே அவன்பெயர்சொல்லிக் கல்விகற்காமல் நாராயணநாமம் சொல்லிவரவே, கடுங்கோபங்கொண்ட இரணியன் பிரகலாதனைத் தன்வழிப்படுத்துதற்குப் பலவாறு முயன்றபின், அங்ஙனம்வழிப்படாத அவனைக் கொல்லுதற்கு என்ன உபாயஞ் செய்தும் அவன் பகவானருளால் இறந்திலனாக, ஒரு நாள் சாயங்காலத்தில் தந்தை மைந்தனை நோக்கி ‘நீ சொல்லும் நாராயணனென்பான் எங்குஉளன்? காட்டு’ என்ன, அப்பிள்ளை, “தூணிலும் உளன், துரும்பிலும் உளன், எங்கும் உளன்’ என்று சொல்ல, உடனே இரணியன் ‘இங்கு உளனோ?’ என்று சொல்லி எதிரிலிருந்த தூணைப் புடைக்க, அதினின்று திருமால் மனிதரூபமும் சிங்கவடிவமுங்கலந்த நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி இரணியனைப் பிடித்து வாயிற்படியில் தன்மடியின்மீது வைத்துக் கொண்டு தனது திருக்கைந்நகங்களால் அவன்மார்பைப் பிளந்து அழித்திட்டு, பிரகலாதனுக்கு அருள்செய்தனன் என்பதாம்.

உலகமளந்தது, திரிவிக்கிரமாவதாரத்தில்; அவ்வரலாறு வருமாறு:-
மகாபலியென்னும் அசுரராஜன் தன்வல்லமையால் இந்திரன்முதலிய யாவரையும் வென்று மூன்றுஉலகங்களையுந் தன்வசப்படுத்தி அரசாட்சிசெய்து கொண்டு செருக்குற்றிருந்தபொழுது, அரசிழந்ததேவர்கள் திருமாலைச்சரணமடைந்து வேண்ட, அப்பெருமான் குள்ளவடிவான வாமநாவதாரங் கொண்டு காசியபமகாமுனிவனுக்கு அதிதிதேவியினிடந் தோன்றிய பிராமணப்பிரமசாரியாகி, வேள்வியியற்றி யாவர்க்கும் வேண்டியஅனைத்தையுங் கொடுத்து வந்த அந்தப்பலியினிடஞ் சென்று, தவஞ்செய்தற்குத் தன்காலடியால் மூவடிமண் வேண்டி, அதுகொடுத்தற்கு இசைந்து அவன் தாரைவார்த்துத் தத்தஞ்செய்த நீரைக் கையிலேற்று உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை யளாவி வளர்ந்து ஓரடியாற் பூலோகத்தையும், மற்றோரடியால் மேலுலகத்தையும் அளந்து, தானமாகப்பெற்ற மற்றோரடி நிலத்திற்கு இடமின்றாகவே அதற்காக அவன்வேண்டுகோளின்படி அவனது முடியில் அடியைவைத்து அவனைப் பாதாளத்திலழுத்தி அடக்கின னென்பதாம். பூலோகத்தையளந்ததில், அதன்கீழுள்ள பாதாளலோகமும் அடங்கிற்று; எனவே, எல்லாவுலகங்களையும் அளந்ததாம். இவ்வரலாற்றினால், கொடியவரையடக்குதற்கும் இயல்பில் அடிமையாகின்ற அனைத்துயிரையும் அடிமைகொள்வதற்கும் வேண்டிய தந்திரம் வல்லவனென்பது தோன்றும்.

வெள்ளிநாட்டங் கெடுத்த கதை:-
திருமால் வாமனவடிவங்கொண்டு மாவலியினிடஞ் சென்று மூவடிமண் வேண்டியபோது அவ்வசுரன் அங்ஙனமே கொடுக்கிறே னென்று வாக்குதத்தஞ்செய்கையில் அருகுநின்ற அசுரகுருவாகிய சுக்கிராசாரியன் “உன்னை வஞ்சனையால் அழிக்கும்பொருட்டுத்திருமால்தானே இங்ஙனம் வந்துள்ளானாதலின், அவனுக்குக் கொடாதே’ என்று சொல்லி ஈவது விலக்க, அதுகேளாமல் மகாபலி ‘என்னிடம் ஒன்றை இரப்பவன் புருஷோத்தமனாயின் அவனுக்கு நான் அதனைக்கொடுத்துப் புகழ்பெறாதுவிடுவேனோ?’ என்றுகூறித் தாரைவார்த்துத் தத்தஞ்செய்யும் பொழுது அவ்வசுரராசனிடத்து மிக்க அன்பையுடைய சுக்கிரன் சிறுவடிவங்கொண்டு அம்மாவலியின் கைக்குண்டிகையின் துவாரத்திலே சென்று அடைத்து நீர்விழவொட்டாது செய்ய, அப்பொழுது வாமனன் அங்ஙனம் அடைத்துக்கொண்ட பொருளை அகற்றுவான்போலத் தனது திருக்கையிற் பவித்திரமாகத் தரித்திருந்த தருப்பைப்புல்லின் நுனியினால் அந்தச்சலபாத்திரத்தின் துவாரத்தைக் குடையவே, அதுபட்டுச் சுக்கிரனது கண்ணொன்று சிதைந்த தென்பதாம்.

இராவணனைக் கார்த்தவீரியன் வென்ற கதை:-
இராவணன் திக்குவிசயஞ் செய்துவருகிறபொழுது கார்த்தவீரியார்ச்சுனனது மாகிஷ்மதிநகரத்திற்குச் சென்று போர்செய்ய முயலுகையில், அங்குள்ளார் ‘எங்களரசன் தனக்கு உரிய மாதர்களுடனே போய் நருமதையாற்றில் ஜலக்கிரீடைசெய்கின்றான்’ என்று சொன்னதனால், உடனே இராவணன் அங்கிருந்து நருமதையாற்றைச் சேர்ந்து அதில்நீராடிக் கரையில்மணலாற் சிவலிங்கத்தை யமைத்துப் பிரதிஷ்டைசெய்து பூசிக்கும்போது, அந்த யாற்றில் மேற்கே இறங்கியுள்ள கார்த்தலீரியார்ச்சுனன் தனது நீர்விளையாட்டுக்கு அந்நீர்ப்பெருக்குப் போதாதென்றகருத்தால் அந்நீரைத் தனதுஆயிரங்கைகளுள் ஐந்நூற்றினால் தடுத்து நீரைமிகுவித்து மற்றை ஐந்நூறுகைகளைக்கொண்டு பலவகை விளையாட்டுக்கள் நிகழ்த்துகின்றதனால் எதிர்வெள்ளமாகப் பொங்கி வருகின்ற நீர்ப்பெருக்குத் தனது சிவலிங்கத்தை நிலைகுலையச்செய்ததுபற்றிக் கடுங்கோபங்கொண்டு இராக்கதசேனையுடனே சென்று அருச்சுனனை யெதிர்த்துப்போர்செய்ய, அவன் தனது ஆயிரங்கைகளுள் இருபதினால் இராவணனது இருபதுகைகளைப் பிடித்துக்கொண்டு மற்றையகைகளால் அவனைப் பலவாறு வருத்தித் தனது ஆற்றலால் எளிதிற்கட்டித் தனதுபட்டணத்திற்கொண்டுபோய்ச் சிறையில்வைத்திட, அதனை விபீஷணனால் அறிந்து அவன்பாட்டனாராகிய புலஸ்தியமகாமுனிவர் அருச்சுனனிடம்வந்து வேண்டி அவனுக்கு ‘ராவணஜித்’ என்ற ஒரு பெரும்பெயரைக் கொடுத்து, இராவணனைச் சிறைவிடுவித்துச் சென்றன ரென்பதாம்.

தார்த்தவீரியனைப் பரசுராமன் கொன்ற கதை:-
அவ்வருச்சுனன் ஒரு காலத்திற் சேனையுடனே வனத்திற்சென்று வேட்டையாடிப் பரசுராமரது தந்தையான ஜமதக்நிமுனிவரது ஆச்சிரமத்தை யடைந்து அவரநுமதியால் அங்கு விருந்துண்டு மகிழ்ந்து மீளுகையில், அவரிடமிருந்த காமதேனு அவர்க்குப் பலவளங்களையும் எளிதிற் சுரந்தளித்தமை கண்டு அதனிடம் ஆசை கொண்டு அப்பசுவை அவரநுமதியில்லாமல் வலியக்கவர்ந்துபோக, அதனை யறிந்த அப்பார்க்கவராமர் பெருங்கோபங்கொண்டு சென்று கார்த்தவீரியனுடன் போர்செய்து அவனைப் பதினொருஅகௌகிணிசேனையுடனே நிலைகுலைத்து அவனது ஆயிரந்தோள்களையும் தலையையும் தமது கோடாலிப் படையால் வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்டன ரென்பதாம்.

அகலிகையின் சாபவிமோசன வரலாறு:-
கௌதமமுனிவனது பத்தினியான அகலிகையினிடத்திற் பலநாளாய்க் காதல்கொண்டிருந்த, தேவேந்திரன் ஒருநாள் நடுராத்திரியில் அம்முனிவனாச்சிரமத்துக்கு அருகேவந்து பொழுதுவிடியுங்காலத்துக் கோழிகூவுவதுபோலக்கூவ, அதுகேட்ட கௌதமமுனிவன் சந்தியாகாலஞ் சமீபித்துவிட்டதென்று கருதியெழுந்து காலைக்கடன் கழித்தற்பொருட்டு நீர்நிலைநோக்கிப் புறப்பட்டுச் செல்ல, அப்பொழுது இந்திரன் இதுவே சமயமென்று அம்முனிவருருக்கொண்டு ஆச்சிரமத்துட்சென்று அவளிடஞ் சேர்கையில் “தன்கணவனல்லன், இந்திரன்’ என்று உணர்ந்தும் அகலிகைவிலக்காமல் உடன்பட்டிருக்க, அதனை ஞானக்கண்ணினால் அறிந்து உடனே மீண்டுவந்த அம்முனிவன் அவளைக் கருங்கல் வடிவமாம்படி சபித்து, உடனே அவள் அஞ்சி நடுங்கிப் பலவாறு வேண்டியதற்கு இரங்கி, “ஸ்ரீராமனது திருவடிப்பொடி படுங்காலத்து இக்கல்வடிவம் நீங்கி நிஜவடிவம் பெறுக’ என்று அநுக்கிரகிக்க, அவ்வாறே கல்லுருவமாய்க் கிடந்த அகலிகை ஸ்ரீராமலக்ஷ்மணர் விசுவாமித்திரனோடு மிதிலைக்குச் செல்லும்போது இராமமூர்த்தியின் திருவடித்துகள் பட்டமாத்திரத்திலே கல்வடிவம் நீங்கி இயற்கைநல்வடிவம் அடைந்தன ளென்பதாம்.

தசரதராமன் பரசுராமனை வென்ற வரலாறு:-
விதேகதேசத்து மிதிலாபுரியில் வாழ்கின்ற ஜநகமகாராஜன், தனதுகுலத்துப் பூர்விகராசனான தேவராதனிடம் சிவபிரானால் வைக்கப்பட்டிருந்ததொரு பெரிய வலிய வில்லை எடுத்து வளைத்தவனுக்கே தான் வளர்த்தமகளான சீதையைக் கல்யாணஞ் செய்து கொடுப்பதென்று கந்யாசுல்கம் வைத்திருக்க, வேள்விமுடித்த விசுவாமித்திர முனிவனுடன் மிதிலைக்குச் சென்ற ஸ்ரீராமபிரான் அவ்வில்லை யெடுத்து வளைத்து நாணேற்றுகையில், அது பேரொலிபடுமாறு முறிந்திட, அதனாற்சனகன் இராமனாற்றலைக்கண்டு மிக்ககளிப்புக்கொண்டு சீதையை இராமனுக்கு மணஞ்செய்து வைத்தனன். சீதாகல்யாணத்தின்பின்பு தசரதசக்கரவர்த்தி தனதுகுமாரர்களுடன் மிதிலையினின்று அயோத்திக்கு மீண்டுவருகையில், பரசுராமன் வலியச்சென்று இராமபிரானை யெதிர்த்து ‘முன்பு ஹரிஹரயுத்தத்தில் இற்றுப்போன சிவதநுசை முறித்த திறத்தையறிந்தேன்; அதுபற்றிச் செருக்கடையவேண்டா; வலிய இந்த விஷ்ணுதநுசை வளை, பார்ப்போம்’ என்று அலக்ஷ்யமாகச் சொல்லித் தான் கையிற் கொணர்ந்த வில்லைத் தசரதராமன்கையிற் கொடுக்க, அப்பெருமான் உடனே அதனைவாங்கி எளிதில்வளைத்து நாணேற்றி அம்புதொடுத்து ‘இந்தப் பாணத்திற்கு இலக்கு யாது?’ என்றுவினாவ, பரசுராமன் அதற்கு இலக்காகத் தனது தபோபலம் முழுவதையும் கொடுக்க, அவன் க்ஷத்திரிய வம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்டவனுமாயிருத்தல் பற்றி அவனைக்கொல்லாமல் அவனது தவத்தைக் கவர்ந்த மாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளின னென்பதாம்.
இராமபிரான் வனஞ்சென்ற வரலாறு: – சீதாகல்யாணத்தின்பிறகு தச ரதசக்கரவர்த்தி இராமபிரானுக்குப் பட்டாபிஷேகஞ்செய்ய யத்தனிக்கையில் மந்தரைசூழ்ச்சியால் மனங்கலக்கப்பட்ட கைகேயி, தன்கொழுநரான தசரதரை நோக்கி, முன்பு அவர் தனக்குக்கொடுத்திருந்த இரண்டுவரங்களுக்குப் பயனாகத் தன்மகனான பரதனுக்குப் பட்டங்கட்டவும் கௌசல்யை மகனான இராமனைப் பதினான்குவருஷம் வனவாசஞ்செலுத்தவும் வேண்டுமென்று சொல்லி நிர்ப்பந்திக்க, அதுகேட்டு வருந்திய தசரதர் சத்தியவாதி யாதலால், முன்பு அவட்கு வரங்கொடுத்திருந்த சொல்லைத் தவறமாட்டாமலும் இராமன்பக்கல் தமக்குஉள்ள மிக்கஅன்பினால் அவ்வரத்தை நிறைவேற்றுமாறு அவனை வனத்திற்குச் செல்லச்சொல்லவும் மாட்டாமலும் கலங்கி வாய்திறவாதிருக்கிற சமயத்தில், கைகேயி இராமனை வரவழைத்து “பிள்ளாய்! உங்கள்தந்தை பரதனுக்கு நாடுகொடுத்துப் பதினான்குவருஷம் உன்னைக் காடேறப்போகச் சொல்லுகிறார்’ என்றுசொல்ல, அச்சொல்லைத் தலைமேற்கொண்டு, அந்த மாற்றாந்தாயின் வார்த்தையையும், அவட்குத் தனதுதந்தை கொடுத்திருந்த வரங்களையும் தவறாது நிறைவேற்றி மாத்ரு பித்ருவாக்ய பரிபாலனஞ்செய்தலினிமித்தம் இராமபிரான் தன்னைவிட்டுப் பிரியமாட்டாதுதொடர்ந்த சீதையோடும் இலக்குமணனோடும் அயோத்தி யைவிட்டுப் புறப்பட்டு வனவாசஞ்சென்றன னென்பதாம்.

காகன் நயனங்கொண்ட கதை: –
வனவாசகாலத்தில் சித்திரகூடமலைச் சாரலிலே இராமபிரானும் ஜாநகிப்பிராட்டியும் ஏகாந்தமாக இருக்கிற சமயத்தில், இந்திரன்மகனான ஜயந்தன் பிராட்டியினழகைக்கண்டு மோகித்து அவளைத் தான் ஸ்பர்சிக்க வேண்டுமென்னுந் தீயகருத்தினனாய்த் தேவவேஷத்தை மறைத்துக் காகவேஷத்தைப் பூண்டுகொண்டுவந்து, பிராட்டியின் மடியிலே பெருமாள் பள்ளிகொண்டருளுகையில் தாயென்றறியாதே பிராட்டியின் திருமார்பினிற்குத்த, அவ்வளவிலே பெருமாள் உணர்ந்தருளி அதிகோபங்கொண்டு ஒருதர்ப்பைப்புல்லை யெடுத்து அதிற் பிரமாஸ்திரத்தைப் பிரயோகித்து அதனை அந்தக்காகத்தின்மேல் மந்தகதியாகச்செலுத்த, அக்காகம் அந்த அஸ்திரத்துக்குத் தப்பி வழிதேடிப் பலவிடங்களிலும் ஓடிச்சென்று சேர்ந்தவிடத்தும் ஒருவரும் ஏற்றுக்கொள்ளாமையாலே மீண்டும் இராமனையே சரணமடைய, அப்பெருமான் அருள்கொண்டு, அக்காகத்துக்கு உயிரைக்கொடுத்து அந்த அஸ்திரம் வீண்படாமல் காகத்தின் ஒரு கண்ணை அறுத்தவளவோடு விடும்படி செய்தருளின னென்பதாம்.

இராவணன் மாரீசனைக்கொண்டு மாயஞ்செய்து சீதையைக்கவர்ந்த வரலாறு:-
தாடகையின் மகனும், சுபாகுவின் உடன்பிறந்தவனும், இராவணனுக்கு மாமன்முறை பூண்டவனும், இராமபிரானிடத்துப் பழம்பகைமை யுடையவனும், மாயையில் மிகவல்லவனுமான மாரீசனென்ற ராக்ஷசன், சீதையைக் கவர்ந்து செல்லக்கருதி இராவணனது தூண்டுதலின்படி மாயையினாற் பொன்மானுருவங்கொண்டு தண்டகாரணியத்திற் பஞ்சவடியிலே சீதையினெதிரிற் சென்று உலாவுகையில், அவள் அதனைநோக்கி அதன்பக்கல் அன்புகொண்டு அதனைப்பிடித்துத்தரும்படி இராமபிரானைப் பிரார்த்திக்க, இலக்குமணன் “இது பொய்ம்மான்’ என்றுஉண்மை கூறித்தடுக்கவும் கேளாமற் பிராட்டி மீண்டும்நிர்ப்பந்திக்கவே, இராமன் அதனைப்பிடித்தற்குத் தொடர்ந்துசென்றபோது, அந்த மான் கையிலகப்படாமற் பலவாறு ஓட்டங்காட்டி நெடுந்தூரஞ்செல்ல, அதுகண்டு இராமன் மாயமானென்று துணிந்து அதன்மேல் அம்பெய்ய, மாரீசன் அம்புபட்டுவீழ்கையில், தன் மெய்வடிவங்கொண்டு “ஹாஸீதே! லக்ஷ்மணா!’ என்று இராமன்குரலாற் சத்தமிட்டு விழுந்திறக்க, அக்குரல்கேட்டவுடனே அதனை அரக்கன்வஞ் சனையென்று உணர்ந்த இலக்குமணன் வாளாஇருக்க, அவ்வுண்மையுணராமற் சீதை இராமனுக்கு அபாயம்நேர்ந்ததென்றே கருதிக் கலங்கி அதனையுணர்ந்து பரிகரித்தற்பொருட்டு இலக்குமணனை வற்புறுத்தியனுப்பி விட, சீதைதனித்துநின்ற சமயம் பார்த்து இராவணன் சந்யாசிவடிவங் கொண்டுவந்து பிராட்டியை வலியக்கவர்ந்து தேரின்மேல்வைத்துச்சென்று இலங்கைசேர்ந்தன னென்பதாம்.

மராமரம் எய்த கதை:-
இராவணனால் அபகரிக்கப்பட்ட சீதையைத் தேடிக்கொண்டு சென்ற இராமலக்ஷ்மணரை அநுமான்மூலமாகச் சிநேகித்த பிறகு, சுக்கிரீவன், தனதுபகைவனும் மகாபலசாலியுமான வாலியைக் கொல்லும் வல்லமை இராமபிரானுக்கு உண்டோ இல்லையோ வென்று ஐயமுற்று, தன்சந்தேகம்தீரும்படி “எதிரிலுள்ள ஏழுமராமரங்களையும் ஏக காலத்தில் தொளைபடும்படி எய்யவேண்டும்’ என்று சொல்ல, உடனே இராமபிரான் ஓரம்புதொடுத்து அந்த ஸப்த ஸாலவிருக்ஷங்களை ஒருங்கு தொளைபடுத்தின னென்பதாம்.

கவிக்கு முடிகவித்த கதை: –
இராமன் இலக்குமணனுடனே சீதையைத் தேடிச்செல்லுகையில் வழியிலெதிர்ப்பட்ட அநுமான் மூலமாகச் சூரிய குமாரனான சுக்கிரீவனோடு நண்புகொண்டு அவன்வேண்டுகோளின் படி அவனது தமையனும் வாநரராசனுமான வாலியைத் தந்திரமாகக் கொன்று சுக்கிரீவனுக்குக் கிஷ்கிந்தைநகரத்தில் முடிசூட்டிவைத்தனன் என்பதாம்.

சூர்ப்பணகையின் மூக்கை யறுத்த வரலாறு:-
வனவாசம் புறப்பட்ட இராமலக்ஷ்மணர் சீதையுடனே கோதாவரி நதிதீரத்திற் பஞ்சவடியாச்சிர மத்தில் வசித்தபொழுது, அவர்களைக்கண்டு மோகங்கொண்ட இராவணன் தங்கையான சூர்ப்பணகை அந்த இராகவ வீரர்களிடம் தனித்தனி வந்து தன்னை மணம் புணரும்படி பலவாறு வேண்டவும், அவர்கள் உடன்படாததனால், அவள் ‘சீதையை அகற்றிவிட்டால் இராமன் என்னை மணம்புரிதல் கூடும்’ என்று எண்ணி, தனிப்பட்ட சமயம் பார்த்துப் பிராட்டியை யெடுத்துச்செல்ல முயன்றபோது, இலக்குமணன் கண்டு ஓடிவந்து சூர்ப்ப ணகையை மறித்து அவளது மூக்கு காது முதலிய சிலவுறுப்புக்களை அறுத்து விட்டனன் என்பதாம்.
கரனைக்கொன்ற வரலாறு:- இலக்குமணனால் மூக்குமுதலியன அறுக் கப்பட்டவுடனே இராமலக்குமணரிடங் கறுக்கொண்டு சென்ற சூர்ப்பணகை கரன்காலில்விழுந்து முறையிட, அதுகேட்டு அவன் பெருங்கோபங் கொண்டு மிகப்பெரியசேனையோடும் அறுபதுலக்ஷம் படைவீரரோடும் சேனைத்தலைவர்பதினால்வரோடும் தூஷணன் திரிசிரா என்னும் முக்கிய சேனாதிபதிகளோடும் புறப்பட்டுவந்து போர்தொடங்குகையில், இராமன் லக்ஷ்மணனைச் சீதைக்குப் பாதுகாவலாகப் பர்ணசாலையில் நிறுத்தித் தான் தனியே சென்று எதிர்த்துப் பெரும்போர்செய்து அவ்வரக்க ரனைவரையுந் துணித்து வெற்றிபெற்றன னென்பதாம்.

இராமபிரான் சடாயுவுக்கு முத்தியளித்த வரலாறு:-
இராவணன் மாய மான்வடிவுபூண்ட மாரீசனைக்கொண்டு இராமலக்குமணரைப் பிரித்துச் சீதைதனித்துநின்ற சமயம் பார்த்து அவளை வலியஎடுத்துத் தேரின்மேல் வைத்துச் செல்லுமளவிலே, அவள்கூக்குரலிட்டதைக் கேட்டுக் கழுகரசனும் தசரதசக்கரவர்த்திக்கு உயிர்த்தோழனாய்ப் பிராயத்தில் அவரினும் தான் மூத்தவனாதலால் தமையன்முறை பூண்டவனும் அதனால் மக்களிடத்தும் மருகி யிடத்துங் கொள்ளும் அன்பை இராமலக்ஷ்மணரிடத்தும் சீதையினிடத்தும் கொண்டு பஞ்சவடியில் அவர்கட்குக் காவலாக இருந்தவனுமான ஜடாயு ஓடிவந்து எதிர்த்துப் பெரும்போர்செய்து அவனது கொடிமுதலியவற்றைச் சிதைத்து, முடிவில், அவனெறிந்த தெய்வவாளினாற் சிறகுஅறுபட்டு வீழ, இராவணன் சீதையைக் கொண்டுபோய் இலங்கையிற் சிறைவைத்திட்டான்; பின்புவந்த இராமலக்ஷ்மணர் பர்ணசாலையிற் சீதையைக்காணாமற் கலங்கி அவளைத்தேடிச்செல்லும்வழியிற் சடாயு வீழ்ந்துகிடக்கக்கண்டு சோகிக்கையில், குற்றுயிருடனிருந்த அக்கழுகரசன் நடந்தசெய்தியைச் சிறிதுகூறி உயிர்நீப்ப, இராமபிரான் தமக்குப்பெரியதந்தைமுறையான அச்சடாயுவுக்குப் பரமபதமளித்துச் சரமகைங்கரியஞ்செய்துமுடித்தன ரென்பதாம்.

கபந்தனைக் கொன்ற வரலாறு:-
இவன், தண்டகாரணியத்தில் ஒருபக் கத்திலே இருந்து தனது நீண்டகைகளிரண்டையும் எட்டியமட்டிற் பரப்பித் துழாவி அவற்றினுள் அகப்பட்ட ஜீவராசிகளையெல்லாம் வாரி வாய்ப்பெய்து விழுங்கிக்கொண்டிருக்க, அங்குச்சென்று இவன்தோள்களினிடையே அகப்பட்ட இராமலக்ஷ்மணர் அத்தோள்களை வாள்களால் வெட்டித்தள்ளியவளவில், இவன், முன்னையசாபமும் முற்பிறப்பின் தீவினையும் தீர்ந்து இராக்கத சரீரத்தையொழித்துத் திவ்வியசொரூபம்பெற்றுப் பெருமானைப் பலவாறு துதித்து நற்கதிக்குச் சென்றன னென்பதாம்.

கடல்சுட்ட கதை:-
இராவணனாற் கவரப்பட்ட சீதாபிராட்டி இலங்கையிலிருக்கின்ற செய்தியை அநுமான் சென்று அறிந்துவந்து சொன்ன பின்பு இராமபிரான் வாநரசேனையுடனே புறப்பட்டுச் சென்று கடற்கரையை யடைந்து, கடலைக்கடக்க உபாயஞ்சொல்லவேண்டுமென்று அக்கட லரசனாகிய வருணனைப் பிரார்த்தித்து அங்குத் தருப்பசயனத்திலே படுத்து ஏழுநாளளவும் பிராயோபவேசமாகக்கிடக்க, சமுத்திரராசன் அப்பெருமானது மகிமையை அறியாமல் உபேக்ஷையாயிருக்க, ஸ்ரீராமன் அதுகண்டு
கோபங்கொண்டு, அனைவரும் நடந்துசெல்லும்படி கடலை வற்றச்செய்வே னென்று ஆக்கிநேயாஸ்திரத்தைத் தொடுக்கத் தொடங்கியவளவிலே, அதன் உக்கிரத்தால் வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து அப்பெருமானைச் சரணமடைந்து கடல்வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு ஒடுங்கி நிற்க, பின்பு இராமமூர்த்தி வாநரங்களைக்கொண்டு மலைகளால் சேதுபந்த நஞ் செய்தனன் என்பதாம்.

அநுமான் ஓஷதிமலைகொணர்ந்த வரலாறு:-
இராமலக்ஷ்மணர் வாநர சேனைகளுடனே கடல்கடந்து இலங்கைசேர்ந்து நடத்திய பெரும்போரில் ஒருநாள் இராவணன்மகனான இந்திரசித்து பிரமாஸ்திரத்தைப் பிரயோகித்து அதனால் லக்ஷ்மணனையும், வாநரராஜனான சுக்கிரீவனையும் வாநரசேனைகளையும் கட்டுப்படுத்தி அவசமாய் மூர்ச்சித்து மரணமடைந்தவர்போற் கிடக்கும்படி செய்தபொழுது, இராமபிரானும் அவர்கள் நிலைமையைக் கண்டு துக்கித்து விழுந்திட, ஜாம்பவான்சொன்னபடி அநுமான் அதிவேகமாகப் புறப்பட்டு, இமவத்பர்வதத்திற்கு வடக்கேயுள்ள ஓஷதிபர்வதத்தைச் சார்ந்து அம்மலையிலுள்ள ம்ருதஸஞ்சீவநீ, விஸல்யகரணீ, ஸாவர்ண்யகரணீ, ஸந்தாநகரணீ என்ற மூலிகைகளைத் தேடுகையில், அந்தத்திவ்வியஓஷதிகள் மறைந்தனவாக, அநுமான் அந்தமலையையே வேரோடுபெயர்த்து எடுத்துக்கொண்டு வந்துசேர, அதன்காற்றுப்பட்டமாத்திரத்தால் அனைவரும் மயக்கம்ஒழிந்து மூர்ச்சைதெளிந்து ஊறுபாடுதீர்ந்து உயிர்த்துஎழுந்தனர் என்ற வரலாறு, இங்கு அறியத்தக்கது. அப்போரில் மற்றொருசமயத்தில் இராவணன் விபீஷணன்மேல் எறிந்த தெய்வத்தன்மையுள்ள வேலாயுதத்தை அவன்மேற்பட வொட்டாமல் இலக்குமணன் தன்மார்பில் ஏற்றுக்கொண்டு அதனால் மூர்ச்சையடைகையில் மீளவும் அநுமான் அம்மலையைக்கொண்டுவந்து இலக்குமணனை உயிர்ப்பித்தன னென்பதும் உணர்க.

இராமபிரான் சராசரங்களை வைகுந்தத்தில் ஏற்றிய வரலாறு:-
இராம பிரான் இவ்வுலகத்தை விட்டுச்செல்லத்தொடங்கிய சமயத்தில், அயோத்தியா நகரத்து உயிர்களெல்லாம் அப்பெருமானைச் சரணமடைந்து “தேவரீர் எங்குச்சென்றாலும் அடியேங்களையும் உடனழைத்துக்கொண்டு செல்ல வேண்டும்’ என்று பிரார்த்திக்க, ஸ்ரீராமன் அவர்களுடைய அன்பின் உறுதியைக் கண்டு ‘அப்படியே ஆகட்டும்’ என்று அருளிச்செய்து, அனைவரையும் தம்மைப் பின்தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பிரயாணப்பட்டனர்; அப்பொழுது, அந்நகரத்திருந்த மனிதர்களே யன்றி விலங்கு பறவை முதலிய அஃறிணையுயிர்களும் அகமகிழ்ந்து சுவாமியின்பின் சென்றன: இங்ஙனம் பலரும் புடைசூழ ஸ்ரீபகவான் சரயூநதியில் இறங்கித் தன்னடிச்சோதிக்கு எழுந்தருளும்போது, தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில்மூழ்கி உடம்பைத்துறந்த எல்லாவுயிர்கட்கும், பிரமலோகத்திற்கு மேற்பட்டதாய்ப் பரமபதம்போலவே புக்கவர் மீண்டுவருதலில்லாத மேம்பாடுள்ள ஸாந்தாநிகமென்னும் உலகத்தை அளித்தருளினர் என்பது, இங்கு அறியத்தக்கது.
பலராமன் யமுனா நதியை அடக்கிய வரலாறு:- ஒரு காலத்தில் பலராமர், பக்கத்தில் ஓடுகின்ற யமுநாநதியை நோக்கி, “ஓ யமுனாய்! நீ இங்கே வா, நான் நீராடவேண்டும்’ என்று அருளிச்செய்ய, அவ்யமுனை அவர் மதுபானமதத்தினால் இப்படிச்சொல்லுகின்றாரென்று அவர்வார்த்தையை அவமதித்து அங்கே வரவில்லையாக, அதுகண்டு அவர் வெகுண்டு தமது ஆயுதமான கலப்பையைக் கையிலெடுத்து அதன் நுனியாலே அந்நதியை இழுக்க, அந்நதி தான்போகும்வழியைவிட்டு அவரெழுந்தருளியிருக்கும் வனத்தில் வந்து பெருகிய தன்றியும், தன்னுடைய சரீரத்தோடு அவர்க்கெதிரில்வந்து பயத்தினாலே மிகவும் நடுநடுங்கி விசேஷமாக வேண்டிக்கொள்ள, பின்பு அந்நதியை க்ஷமித்து அதில்நீராடின ரென்பதாம்.

பலராமன் அஸ்தினாபுரத்தைச் சாய்த்த வரலாறு:-
அஸ்தினாபட்டணத் திலே துரியோதனன் தன்மகளான இலக்கணைக்குச் சுயம்வரங்கோடிக்க, அக்கன்னிகையை ஸ்ரீகிருஷ்ணனது மஹிஷிகளுளொருத்தியாகிய ஜாம்பவதியின் குமாரனான ஸாம்பனென்பவன் பலாத்காரத்தால் தூக்கிக்கொண்டுபோக, துரியோதனாதியர் எதிர்த்து யுத்தஞ்செய்து அவனைப் பிடித்துக் காவலிலிட்டுவைக்க, அச்செய்திகேட்ட பலராமர், தான் அவனை விடுவித்து வருவதாய்ச் சொல்லிப் புறப்பட்டு அஸ்தினாபுரத்திற்கு எழுந்தருளி ‘நம்முடைய ஸாம்பனை விடவேண்டும்’ என்று அருளிச்செய்ய, அக்கௌரவர் யாவரும் “துஷ்டகாரியஞ்செய்த அவனை நாங்கள் விடமாட்டோம்’ என்று ஒரேகட்டுப்பாடுடையவர்களாய் இகழ்ந்துபேச, பலராமர் கரையில்லாத கோபங்கொண்டு எழுந்திருந்து, “குருகுலத்தார் வாசஞ் செய்துகொண்டிருக்கின்ற இந்நகரத்தைக் கங்கையிற் கவிழ்த்துவிட்டு, பூமியிற் கௌரவப் பூண்டில்லாமற் செய்துவிடுவோம்’ என்று சொல்லி, தமது கலப்பையை மதிலின்மேலுள்ள நாஞ்சிலென்னும் உறுப்பில் மாட்டியிழுக்க, அதனால் அப்பட்டணமுழுவதும் அசைந்துசாயவே, அதுகண்ட கௌரவரெல்லாரும் மனங்கலங்கிச்சாம்பனை இலக்கணையோடும்பல சிறப்புக்களோடும் கொண்டு வந்து சமர்ப்பித்து வணங்கி வேண்ட, இராமபிரான் அவ்வளவோடு கலப்பையை வாங்கியருளின ரென்பதாம்.

கண்ணன் பேய்ச்சியூட்டிய நஞ்சை அமுதுசெய்த விவரம்:-
கிருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன்பிறந்தவ னாதலால் அக்கண்ண பிரானுக்கு மாமனாகிய கம்சன், தன்னைக்கொல்லப்பிறந்த தேவகீபுத்திரன் ஒளித்து வளர்தலை அறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்துகொல்லும்பொருட்டுப் பலஅசுரர்களை யேவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷசி நல்லபெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து, அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கண்ணனாகியகுழந்தையை எடுத்துத் தனது நஞ்சுதீற்றியமுலையைக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின்தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்புநரம்புகளின்கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன் என்பதாம்.

சகடுதைத்த கதை:-
நந்தகோபகிருகத்தில் ஒருவண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிற் பள்ளிகொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணன், ஒருகால் அச்சகடத்திற் கம்சனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்துத் தன்மேலே விழுந்து தன்னைக்கொல்லமுயன்றதை யறிந்து பாலுக்குஅழுகிற பாவனையிலே தன் சிறிய திருவடிகளை மேலேதூக்கி உதைத்தருள, அவ்வுதைபட்ட மாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழேவிழுந்து அசுரனுள்பட அழிந்த தென்பதாம்.

ததிபாண்டன் முக்தியடைந்த வரலாறு:-
ததிபாண்டன் – தயிர்க்கல முடையவன். ஒரு நாள் கண்ணன் யசோதை முலைகொடாததற்காக வெகுண்டு தயிர்த்தாழிகளை உடைத்து உருட்டிவிட்டு, அதுகண்டு தன்னை அடிக்கக் கோலெடுத்துவந்த அவளுக்கு அகப்படாதபடி ததிபாண்டனென்பவனது மனையிலே ஓடிமறைய, அதுகண்ட அவன் கண்ணனது திருவடித் தாமரைகளைப் பிடித்துக்கொண்டு “எனக்குமுத்தியளிக்கவேண்டும்’ என்ன கண்ணன் ‘எனதுதாய் என்னை அடிக்கவருகிறாள்; என்காலை விடு’ என்றுசொல்ல, அவன் ‘நீ எனக்கும் எனக்குவேண்டிய இருபத்தெட்டுமனையிலுள்ளோர்க்கும் எனது தயிர்த்தாழிக்கும் பரமபதங்கொடாயானால், யான் உன்காலை விடாமல் உன்னை யசோதை கையிற் காட்டிக்கொடுப்பேன்’ என்று கூற, ஸ்ரீகிருஷ்ணன் உடனே அவன் வேண்டுகோளின்படியே முத்தி யருளிச்சென்றன னென்பதாம்.

நாகத்துப்பாய்ந்த கதை:-
யமுநாநதியில் ஓர்மடுவில் இருந்துகொண்டு அம்மடுமுழுவதையும் தன்விஷாக்கினியினாற் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப் பானத்துக்கு யோக்கியமாகாதபடி செய்த காளியனென்னுங் கொடிய ஐந்தலைநாகத்தைக் கிருஷ்ணன் தண்டிக்கவேண்டுமென்று திருவுள்ளங்கொண்டு, அம்மடுவிற்குச்சமீபத்தி லுள்ளதொரு கடம்பமரத்தின்மே லேறி அம்மடுவிற் குதித்து, கொடியஅந்நாகத்தின் படங்களின்மேல் ஏறித் துவைத்து நர்த்தனஞ்செய்து நசுக்கி வலியடக்குகையில், மாங்கலியபிக்ஷையிட்டருள வேண்டுமன்று தன்னைவணங்கிப்பிரார்த்தித்த நாககன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி அந்தக்காளியனை உயிரோடு கடலிற் சென்று வாழும்படி விட்டருளினன் என்பதாம்.

தேநுகனை வதைத்த கதை:-
கண்ணன் பலராமனோடும் ஆயர்சிறுவர் களோடும் மாடுமேய்த்துக்கொண்டு, பழங்கள் அழகாக மிகுதியாய்ப்பழுத்து வாசனைவீசிக்கொண்டிருந்த ஒரு பனங்காட்டை யடைந்து அப்பனம் பழங்களை விரும்பி யுதிர்த்துக் கொண்டுவருகையில், அவ்வனத்துக்குத்தலைவனும் கம்சனது பரிவாரத்தி லொருவனுமாகிய கழுதைவடிவங்கொண்ட தேநுகாசுரன் கோபமூண்டு ஓடிவந்து எதிர்த்துப் போர்செய்ய, உடனே கண்ணன் அதிலாவகமாய்ப் பின்னங்காலிரண்டையும் பற்றி அவ்வசுரக்கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படி பனைமரத்தின்மேலெறிந்து அழித்தன னென்பதாம்.

கூனிமருங்கு உண்டையோட்டின வரலாறு:-
ஸ்ரீகிருஷ்ணன், கம்சனால் அக்குரூரரைக்கொண்டு அழைக்கப்பட்டுப் பலராமனுடனே மதுராபுரியின்
இராசவீதியில் எழுந்தருளுகையில் சந்தனக்கிண்ணத்தைக் கையிலேந்தி வருகிற மங்கைப்பருவமுடைய ஒருகூனியைக் கண்டு, ‘நீலோற்பலம் போன்ற கண்ணுடையவளே! யாருக்கு நீ இந்தப்பூச்சுக்கொண்டுபோகிறாய்?’ என்று விலாசத்தொடு கேட்டருள, அந்தக்கூனி, இவ்வாறு காதலுடையவன் போலக் கண்ணன் அருளிச்செய்தது கேட்டு அவனது திருக் கண்களினாலே மனமிழுக்கப்பட்டவளாய், அவன்மேற் காதலுற்று ‘ஓ அழகனே! நான் நைகவக்கிரை யென்பவ ளென்றும், கம்சனாலே சந்தனாதிப் பூச்சுக்கள் சித்தஞ்செய்யும் வேலையில் வைக்கப்பட்டவளென்றும் நீ அறியாயோ?’ என்று விண்ணப்பஞ்செய்ய, கண்ணன் “எங்கள் திருமேனிக்கு ஏற்ற வெகுநேர்த்தியான இந்தப்பூச்சை எங்கட்குக் கொடுக்கவேண்டும்’ என்று சொன்னவுடனே அவள் ‘அப்படியே திருவுள்ளம் பற்றுங்கள்’ என்று மிக்க அன்போடு சமர்ப்பிக்க, அப்பூச்சைத் திருமேனியில் அணிந்து ஸ்ரீ கிருஷ்ணன் அவளிடத்து மிகவும் பிரசன்னனாய், நடுவிரலும் அதன் முன்விரலுங்கொண்ட நுனிக்கையினாலே அவளை மோவாய்க்கட்டையைப்பிடித்துத் தன் திருவடிகளினால் அவள்கால்களை அமுக்கி இழுத்துத் தூக்கிக் கோணல் நிமிர்த்து அவளை மகளிரிற் சிறந்தவுருவின ளாக்கியருளின னென்பது, இங்குக்குறித்த கதை. இனி, இராமாவதாரத்தில் மந்தரையென்னுங் கூனியின் முதுகின்புறத்திலே வில்லினால் மண்ணுண்டையைச் செலுத்தியவன் என்றும் உரைக்கலாம்;இராமன் சிறுவனாயிருந்தகாலத்தில் ஒருநாள் கையிற் சிறுவில்லும் மண்ணுண்டையுங் கொண்டு விளையாடிவருகையில், ஒருகால் விற்கொண்டு எய்த உண்டை கைகேயியின் வேலைக்காரியான மந்தரையின் முதுகின்புறத்தே தற்செயலாய்த் தெறிக்க, அவள் தனதுகூனுடைமையை இராமன் இங்ஙனம்பரிகசித்தன னென்று தவறாகக்கருதி மனம்வருந்தி அவன்மேற் சினங்கொண்டு அரசன்மைந்தனாதலின் ஒன்றுஞ்செய்ய இயலாமற் சென்று தனக்கு வாய்க்குந்தருணம் நோக்கிக் கறுக்கொண்டிருந்து பின்பு கைகேயிக்குக் கலகஞ்செய்து இராமபட்டாபிஷேகத்தைத் தவிர்த்து அப்பெருமானை வனம்புகுத்தின ளென வரலாறு அறிக.

மாதர் புடைவைகளைக் கொடுத்த வரலாறு:-
திருவாய்ப்பாடியிலுள்ள கோபஸ்திரீகள் கண்ணபிரானிடங் கொண்ட வேட்கைமிகுதியால் அவன் தம்மிடம் காதல்விஞ்சுமாறு நோன்புநோற்று அந்நோன்பின் முடிவில் யமுனாநதியிலே நீராட, அப்பொழுது அவர்கள் கரையில் அவிழ்த்துவைத்து விட்டுப்போன ஆடைகளையெல்லாம் கண்ணன் வந்து எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மரத்தின்மே லேறியிருந்துசிறிது பொழுது அவர்களை அலைக்கழித்துப் பின்பு அவர்கள் கைகூப்பிவணங்கி மிகவும் பிரார்த்தித்ததனால் அவர்கட்கு அத்துகில்களை அளித்தருளின னென்பதாம்.

ஏறுசெற்ற விவரம்:-
கண்ணன் நப்பின்னைப்பிராட்டியைத் திருமணஞ் செய்துகொள்ளுதற்காக, அவள்தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி, யாவர்க்கும் அடங்காத அசுராவிஷ்டமான ஏழுஎருதுகளையும் ஏழுதிருவுருக் கொண்டு சென்று வலியடக்கித் தழுவின னென்பதாம். கண்ணனைக்கொல் லும்படி கம்சனால் ஏவப்பட்ட அசுரர்களில் அரிஷ்டனென்பவன் எருதுவடி வங்கொண்டு பசுக்களையெல்லாம் முட்டி இடைச்சேரியைப் பயன்படுத்திக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணனது திருவயிற்றின்மேற் கண்வைத்துக் கொம்பு களைநீட்டிப் பாய்ந்துவர, கண்ணபிரான் அவனைக் கொம்புகளிற் பிடித்து அசையவொட்டாமற்செய்து தன்காலினால் அவன்வயிற்றில் ஓரிடியிடித்து அவன்கழுத்தைப் பிடித்துக் கசக்கி அவனுடையகொம்புகளில் ஒன்றைப் பறித்து அதனாலேயே அவனை அடித்துக் கொன்றன னெனினுமாம்.

மருதிடைத்தவழ்ந்த கதை:-
கண்ணன் குழந்தையாயிருக்குங் காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல திருவிளையாடல்களைச் செய்யக் கண்டு கோபித்த நத்தகோபன்மனைவியான யசோதை, ஒருநாள் கிருஷ்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற்கட்டி ஓருரலிலே பிணித்துவிட, கண்ணன் அவ்வுரலையிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவிலே யெழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய்நின்று இழுக்கப் பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்துவிழுந்தவளவிலே, முன் நாரதர்சாபத்தால் அம்மரங்களாய்க்கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன் என்னும் குபேரபுத்திரர் இருவரும் சாபந்தீர்ந்து சென்றனர் என்பதாம். அந்தக் குபேரபுத்திரர்கள் முன்பு ஒருகாலத்தில் பலதெய்வமகளிருடனே ஆடையில்லாமல் ஜலக்கிரீடை செய்துகொண்டிருக்கையில், நாரதமகா முனிவர் அங்கு எழுந்தருள, மங்கையரனைவரும் நாணங்கொண்டு ஆடையெடுத்து உடுத்து நீங்க, இந்த மைந்தர் மாத்திரம் மதுபாநமயக்கத்தால் வஸ்திரமில்லாமலே யிருக்க, நாரதர் கண்டு கோபங்கொண்டு ‘மரங்கள் போலிருக்கிற நீங்கள் மரங்களாவீர்’ என்று சபித்து, உடனே அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு இரங்கி, ‘நெடுங்காலஞ் சென்றபின்பு திருமால் உங்களையடையுஞ்சமயத்தில் இவ்வடிவமொழிந்து முன்னையவடிவம்பெற்று மீள்வீர்’ என்று சாபவிடை கூறிப் போயினர் என அறிக.

கன்றால் விளவெறிந்த கதை:-
கம்சனா லேவப்பட்ட அசுரர்களிற் கபித்தாசுரன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன்கீழ்வரும்பொழுது மேல்விழுந்துகொல்வதாக எண்ணி வந்துநிற்க, அதனையறிந்து, கிருஷ்ண பகவான் அவ்வாறே தன்னைமுட்டிக்கொல்லும்பொருட்டுக் கன்றின்வடி வங்கொண்டுவந்த வத்ஸாசுரனைப் பின்னிரண்டுகால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின்மேல் ஏறிய இருவரும் சிதைந்து தமதுஅசுரவடி வத்துடனே விழுந்து இறந்தன ரென்பதாம்.

பகாசுரனைக் கொன்ற வரலாறு:-
பகனென்னும் அசுரன் கொக்கு வடிவங்கொண்டு கண்ணபிரானைக்கொல்வதாக நெருங்கிவர, அப்பொழுது கண்ணன் அப்பறவையின் வாயலகுகளை இருகையாலும் பிடித்துக் கிழித்து அதனை யழித்தன னென்பதாம்.

பரிவாய் பிளந்த கதை:-
கம்சனா லேவப்பட்ட அசுரர்களிற் கேசி யென்பவன் குதிரையினுருவத்தோடு ஆயர்கள் அஞ்சிநடுங்கும்படி கனைத்துத் துரத்திக்கொண்டு கண்ணபிரான்மேற் பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன்வாயிற் கொடுத்துத் தாக்கிப் பற்களையுதிர்த்து உதட்டைப்பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளின னென்பதாம்.

பிரமதேவன் கண்ணன்திருவிளையாடலைக் கண்டு வியந்த வரலாறு:-
கண்ணன் ஆயர்சிறுவர்களுடன் பசுவின் கன்றுகளைமேய்த்துவரும் நாட்களில் ஒருநாள், பிரமதேவன் எம்பெருமானது திருவிளையாட்டைக் காணவேண்டு மென்று கருதிக் கன்றுகளையுஞ் சிறார்களையுந் தன்மாயையினால் வானத்தே மறைத்துவைக்க, அச்சுதன் அஃதுணர்ந்து வண்ணமும் வனப்பும் தோற்றமும் வடிவும் தொழிலும் குணமும் பூணும் துகிலும் தாரும் குழலும் சிறிதும் வேற்றுமையில்லாமல் தானே சிறாருங் கன்றுமாகித் தத்தம்மனைகட்குப் போய்வந்துகொண்டிருக்க, இங்ஙனமே ஓராண்டுசெல்ல, நான்முகன் அது கண்டு நாணமுற்றுச் சிறார்களையுங் கன்றுகளையுங் கொணர்ந்து சமர்ப்பித்துக் கண்ணனைப் பிரதக்ஷிணஞ்செய்து வணங்கிப் பலவாறு தான்செய்த பிழையைப் பொறுத்தருளும்படி வேண்டிக்கொண்டன னென்பதாம்.

கண்ணன் காட்டுத்தீயை விழுங்கிய கதை:-
பிருந்தாவனத்தில் முஞ்சாரணியத்திற்பிரவேசித்தபோது தைவிகமாகத்தோன்றித் தங்களைச்சூழ்ந்த பெருங்காட்டுத்தீயில் அகப்பட்டுக்கொண்டு கோபாலர்களும் கோக்களும் முறையிட்டுப் பலவாறு துதிக்கக் கேட்டு, ஸ்ரீகிருஷ்ணன் ‘நீங்கள்யாவரும் பயப்படாமல் உங்கள் நேத்திரங்களை மூடிக்கொள்ளுங்கள்’ என்று நியமித்தருளி, தனதுவிராட்ஸ்வரூபத்தை வகித்து அவ்வக்கினியைச்சுவாலையோடும் பானஞ்செய்து, அவ்வாயர்களையும் ஆநிரையையும் பாண்டீர மென்னப்பட்ட ஆலமரத்தினடியில் தனது மாயையினாற் கொண்டுவந்துசேர்த்துக் காத்தருளினன் என்பதாம்.

‘வரைக்குடையாய்’ என்ற விவரம்:-
திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாருங் கூடி மழையின் பொருட்டாக இந்திரனை ஆராதித்தற்கென்று வழக்கப்படிசமைத்த சோற்றைக் கண்ணபிரான் ஒருகால் அவனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தனமலைக்கு இடச்சொல்லித் தானே ஒருதேவதாரூபங் கொண்டு அமுதுசெய்தருள, அவ்விந்திரன் கோபத்தோடு புஷ்கலாவர்த்தம்முதலிய பலமேகங்களை யேவி, கண்ணன்விரும்பிமேய்க்கிற கன்றுகளுக்கும் பசுக்களுக்கும் கண்ணனுக்குஇஷ்டரான இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்குதரும்படி கல்மழையை ஏழுநாள் இடைவிடாது பெய்வித்தபொழுது, கண்ணன் கோவர்த்தனமென்னும்மலையை யெடுத்துக் குடையாகப்பிடித்து மழையைத்தடுத்து எல்லாவுயிர்களையும் காத்தருளின னென்பதாம்.

ஆயரெல்லாம் பரமபதத்திற் சென்று மீண்ட வரலாறு:-
யமுனையில் தீர்த்தமாடுகின்ற சமயத்தில் ஓரசுரனால் வருணலோகத்திற் கொண்டுபோ யொளிக்கப்பட்ட நந்தகோபரை ஸ்ரீகிருஷ்ணன் அங்குஎழுந்தருளி மீட்டு வந்தபொழுது தன்னைப் பூஜித்து உத்தமகதியையடைய விரும்பிய சகல கோபாலர்களுக்கும் ஞானக்கண்ணைக் கொடுத்து, தனது திவ்வியதேஜோ மயமான ஸ்வரூபத்தையும், பரமபதம் முதலிய ஸர்வபுண்ணியலோகங்களையுங் காணும்படி யருளினன் என்பதாம்.

கண்ணன் பாரிஜாததருவைக் கொணர்ந்த வரலாறு:-
கண்ணன் நரகா சுரனையழித்தபின்பு அவனால் முன்புகவரப்பட்ட (இந்திரன் தாயான அதிதி தேவியின்) குண்டலங்களை அவ்வதிதிதேவிக்குக் கொடுக்கும்பொருட்டுச் சத்தியபாமையுடனே கருடன்தோள்மேலேறித்தேவலோகத்துக்குச்செல்ல அங்கு இந்திராணி சத்தியபாமைக்குச் சகல உபசாரங்களைச் செய்தும் தேவர்க்கேயுரிய பாரிஜாதபுஷ்பம் மானுடப்பெண்ணாகிய இவளுக்குத் தகாதென்று சமர்ப்பிக்கவில்லை யாதலின், அவள் அதனைக் கண்டு விருப்புற்றவளாய்ச் சுவாமியைப்பார்த்து “பிராணநாயகனே! இந்தப்பாரிஜாததருவைத் துவாரகைக்குக் கொண்டுபோகவேண்டும்’ என்றதைக் கண்ணன் திருச்செவிசார்த்தி உடனே அந்தவிருக்ஷத்தை வேரோடு பெயர்த்துக் கருடன் தோளின்மேல் வைத்தருளி, அப்பொழுது இந்திராணி தூண்டிவிட்டதனால் வந்துமறித்துப்போர்செய்த இந்திரனைச் சகலதேவ சைனியங்களுடன் சங்க நாதத்தினாலே பங்கப்படுத்தி, பின்பு பாரிஜாதமரத்தைத் துவாரகைக்குக் கொண்டுவந்து சத்தியபாமைவீட்டுப் புறங்கடைத் தோட்டத்தில் நாட்டியருளின னென்பதாம்.

கண்ணன் குமாரர்களை மீட்டுக் கொடுத்த வரலாறு:-
கண்ணன் சாந்தீபிநி யென்னும் பிராமணோத்தமர்பக்கல் கைலசாஸ்திரங்களையும் அத்தியயநம் பண்ணின அநந்தரம் குருதக்ஷிணை கொடுக்கத் தேடுகின்ற வளவிலே, அவ்வாசாரியரும் இவனுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களை அறிந்தவ ராகையாலே, “பன்னிரண்டு வருஷத்துக்கு முன்பு பிரபாஸதீர்த்தகட்டத்திற் கடலில் முழுகி யிறந்துபோன என்புத்திரனைக் கொண்டுவந்து தரவேண்டும்’ என்று அபேக்ஷிக்க, கண்ணன் ‘அப்படியேசெய்கிறோம்’ என்று, அப்புத்திரனைக் கொண்டுபோன, சங்கின்ரூபந்தரித்துச் சமுத்திரஜலத்தில் வாசஞ்செய்கின்ற பஞ்சஜநன் என்கிற அசுரனைக்கொன்று, யமபட்டணத்துக்கு எழுந்தருளி, அங்கு யாதனையிற் கிடந்த அக்குமாரனைப் பூர்வதேகத்தில் ஒன்றும் விசேஷமறக் கொண்டுவந்து கொடுத்தருளினா னென்பதும்;

தேவகிதேவி கம்ஸனாற்சங்கரிக்கப்பட்ட தன்னுடைய புத்திரர்கள் அறுவரையுங் காணுமாறு அபேக்ஷித்தபொழுது, கிருஷ்ணபகவான் மாதாவின் வார்த்தைக்கிசைந்து பாதாளலோகஞ்சேர்ந்து பலிசக்கரவர்த்தியினுடைய சபைக்குச்சென்று, அங்குஇராநின்ற மரீசிப்பிரஜாபதியினுடைய புத்திரர்களும், பிரமசாபத்தால் இரணியகசிபுவின்குமாரர்களாய்ப் பிறந்தவர்களும், தனக்குமுன்பு தேவகியின்கர்ப்பத்திற் சேர்க்கப்பட்டவருமாகிய அவ்வறுவரையும் அதிசீக்கிரத்திற் கொண்டுவந்து கொடுத்தருளின னென்பதும்;

ஒருபிராமணனுக்கு முறையே பிறந்த மூன்று பிள்ளைகள் பிறந்த அப்பொழுதே பெற்றவளுமுட்பட முகத்தில் விழிக்கப்பெறாதபடி இன்னவிடத்திலே போயிற்றென்று தெரியாமல் காணவொண்ணாது போய்விடு கையாலே, நாலாம் பிள்ளையை ஸ்திரீ பிரசவிக்கப்போகின்ற வளவிலே அந்த அந்தணன் கண்ணபிரான்பக்கலிலே வந்து ‘இந்த ஒரு பிள்ளையை யாயினும் தேவரீர் ரக்ஷித்துத் தந்தருளல்வேண்டும்’ என்று அபேக்ஷிக்க, கிருஷ்ணன் ‘அப்படியே செய்கிறோம்’ என்று அநுமதி செய்த பின்பு ஒரு யாகத்தில் தீக்ஷிதனானதனால் தான் எழுந்தருளக் கூடவில்லை யென்று அருச்சுனனுடன் சொல்ல, அருச்சுனன் ‘நான் போய் ரக்ஷிக்கிறேன்’ என்று பிரதிஜ்ஞைசெய்து, பிராமணனையுங் கூட்டிக்கொண்டுபோய்ச்
சூதிகாகிருகத்தைச் சுற்றும் காற்று முட்படப் பிரவேசிக்க வொண்ணாதபடி சரக்கூடமாகக் கட்டிக் காத்துக்கொண்டு நிற்கையிலே, பிறந்த பிள்ளையும் பிறந்தவளவிலே பழையபடியே காணவொண்ணாது போய்விடவே, பிராமணன் வந்து அருச்சுனனை மறித்து, “க்ஷத்திரியாதமா! உன்னாலேயன்றோ என்பிள்ளை போம்படி யாயிற்று; கிருஷ்ணன் எழுந்தருளிக் காப்பதை நீ யன்றோ கெடுத்தாய்’ என்று நிந்தித்துக் கிருஷ்ணன்பக்கலிலே தள்ளிக் கொண்டுவர, கண்ணபிரான் கண்டு புன்னகைகொண்டு ‘அவனை விடு; உனக்குப் பிள்ளையை நான் கொண்டுவந்து தருகிறேன்’ என்று அருளிச் செய்து பிராமணனையும் அருச்சுனனையும் கூடத் தேரிலேகொண்டு ஏறி அருச்சுனனைத் தேரை நடத்தச் சொல்லி அத்தேர்க்கும் இவர்கட்கும் திவ்விய சக்தியைத் தனது சங்கற்பத்தாற் கற்பித்து இவ்வண்டத்துக்குவெளியே நெடுந்தூரமளவும் கொண்டுபோய் அங்கே ஓரிடத்தில் தேருடனே இவர்களை நிறுத்தித் தோஜோரூபமான பரமபதத்திலே தன்னிலமாகையாலே தானேபோய்ப் புக்கு, அங்கு நாய்ச்சிமார் தங்கள் ஸ்வாதந்திரியங் காட்டு கைக்காகவும் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியினது திவ்வியசௌந்தரியத்தைக் கண்டு களிக்கைக்காகவும் அழைப்பித்துவைத்த அந்தப்பிள்ளைகள் நால்வரையும் அங்குநின்றும் பூர்வரூபத்தில் ஒன்றும் குலையாமற் கொண்டுவந்து கொடுத்தருளினன் என்பதுமாம்.

குருந்தமொசித்த கதை:-
கிருஷ்ணனைக் கொல்லும்பொருட்டுக் கம்சனால் ஏவப்பட்ட பல அசுரர்களில் ஒருவன் அக்கண்ணபிரான் மலர்கொய்தற்பொருட்டு விரும்பி யேறும் பூத்த குருந்தமரமொன்றிற் பிரவேசித்து அப்பெருமான்வந்து தன்மீது ஏறும்போது தான் முறிந்துவீழ்ந்து அவனை வீழ்த்திக்கொல்லக் கருதியிருந்தபோது, மாயவனான கண்ணபிரான் அம்மரத்தைப் பிடித்துத் தன்வலிமைகொண்டு முறித்துஅழித்தனனென்பதாம்.

நாரதமுனிவர் குடும்பத்திடும்பையனுபவித்த வரலாறு:- ஒருகாலத்தில் நாரதமுனிவர் திருமாலைத்தரிசிக்கையில் தாம் பிரமவிருடியென்றும் தத்துவ ஞானங்கைவந்தவரென்றும் செருக்குக்கொண்டு சிலவார்த்தைகூற, எம்பெருமான் தமதுமாயை எவராலுங் கடத்தற்கரிய தென்பதைப் புலப்படுத்த வேண்டு மென்று திருவுளங்கொண்டு, அங்கு அருகிலுள்ளதொரு தடாகத்தில் ஸ்நாநஞ்செய்யுமாறு முனிவர்க்குக் கட்டளையிட்டனர்; உடனே இருடி தமதுவீணையைக் கரையில்வைத்துவிட்டுக் குளத்தில் மூழ்கினமாத்திரத்தில் திவ்வியமான பெண்ணுருவ மடைந்தனர். விஷ்ணுவோ இவரது யாழைக் கைக்கொண்டு மறைந்துவிட்டார். பிறகு, தமது முன்னைய நிலைமையை மறந்த நாரதியென்னும் இப்பெண்ணைக் கண்ட ஓரரசன் தனது அரண்மனைக்கு அழைத்துச்சென்று அவளை மணந்து அவளிடம் பலபுதல்வரைப் பெற்றான். இவ்வாறு இம்மாது பலபுத்திரர்களைப்பெற்றுச் சம்சாரக்கவலை கொண்டு அலைவதைத் (இந்தமக்களை, பிரபவன் முதலிய அறுபதுபிள்ளைக ளென்றுங் கூறுவர்.) திருமால் கண்டு இவர்க்கு முன்னையநிலையைக் கொடுத்து இவரதுகவலையை நீக்கத் திருவுளங்கொண்டு ஒரு கிழவடிவங் கொண்டு சென்று அம்முனிமாதை அருகிலுள்ளதொரு பொய்கையில் முழுகிவரும் படி நியமிக்க, இவர் அவ்வாறே சென்று அமிழ்ந்து முழுகியமாத்திரத்திற் பழையபடியே முனிவடிவமடைந்து கரையேறினர். அப்பொழுது திருமால் தான் முன்பு கொண்டுசென்ற யாழைக்கொடுத்து நடந்த வரலாற்றைக் கூறி இவரதுமனத்தைத் தெளிவித்து அழைத்துச்சென்றன ரென்பதாம்.

யானையை மருப்பொசித்த கதை:-
வில்விழாவென்கிற வியாஜம்வைத்துக் கம்சனால் வரவழைக்கப்பட்டு ஸ்ரீகிருஷ்ணபலராமர்கள் கம்சன ரண்மனையை நோக்கிச் செல்லுகையில், அவனது அரண்மனைவாயில் வழியில் தம்மைக்கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயாபீடமென்னும் மதயானை கோபித்துவர, அத்யாதவவீரர் அதனை யெதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு அவற்றால் அடித்து அவ்யானையை உயிர்தொலைத்துவிட்டு உள்ளேபோயின ரென்பதாம்.

கண்ணன் உக்கிரசேனராசனுக்குப் பட்டாபிஷேகஞ்செய்த வரலாறு:-
கண்ணன் கம்ஸவதஞ்செய்த பின்பு, மகனிழந்தவனும் தன்மாதாமகனுமாகிய உக்கிரசேனமகாராஜனைத் தளையினின்றும் விடுவித்து வடமதுரையிற் பட்டாபிஷேகஞ் செய்தவுடனே வாயுவை நினைக்க, அவனும் உடனே ஸ்வாமிஸந்நிதிக்கு வந்துநிற்க, அவனை நோக்கி “ஓ வாயுவே! ஸுதர்மை யென்கிற தேவசபையானது நம்முடைய உக்கிரசேன மகாராஜாவுக்கே ஏற்றது; அதில் யதுவமிசத்தார் வீற்றிருக்கத் தகுந்திருக்கின்றது: ஆதலால், ஒப்பற்ற அந்தச்சபையை மகாராஜாவுக்கு அனுப்பிவிடு என்று இந்திரனுக்கு என்கட்டளையைத் தெரிவித்துச் சபையைக்கொண்டுவா’ என்று நியமித்த வுடனே, அதை வாயு சிரசில் வகித்துப்போய்ப் புரந்தரனுக்குத் தெரிவிக்க, அவனும் அச்சபையைச் சமீரணன் கையிற் கொடுத்துவிட, உடனே வாயு அதைக் கொண்டுவந்து சுவாமிசந்நிதியிற் சமர்ப்பிக்க, அதனைச் சுவாமி உக்கிரசேனனுக்குப் பிரசாதித்தருள, அச்சபையிலே யாதவர்யாவரும் வீற் றிருந்தார்க ளென்பதாம்.

கண்டாகர்ணனுக்கு முத்தியளித்த விவரம்:-
கைலாசகிரியிற் சிவபிரானை யடுத்துத் தொண்டுபூண்ட பூதகணத்தலைவர்களில் ஒருவன், அச்சிவபக்தியுடன் விஷ்ணுவேஷமுங் கொண்டு, விஷ்ணுநாமத்தைப் பிறர்சொல்லக் கேட்டலுமாகாதென்று தன்காதுகளில் மணிகளைக்கட்டிக்கொண்டு அவற்றை ஒலிசெய்யுமாறு எப்பொழுதும் கருத்துடன் அசைத்துக் கொண்டிருந்ததனால், கண்டாகர்ண னென்று பெயர்பெற்றான். அவன் ஒருகாலத்திற் சிவபிரானைக்குறித்து அநேகவருடம் தவம்புரிந்து, ருஷபாரூடனாய்த் தரிசனந் தந்த அக்கடவுளை நோக்கி ‘எனக்கு நித்தியமான முத்தியை அளித்தருள்க’ என்று பிரார்த்திக்க, அப்பெருமான் “அதனையளித்தற்கு உரியவன் திருமாலே. மற்றைப்பிரபஞ்சவாழ்வில் எதுவேண்டினும் யான் தரக்கடவேன்’ என்றுகூறிச் சென்றனன். அதுகேட்டவுடனே கண்டாகர்ணன் காதிற்கட்டிய மணிகளைக் கழற்றியெறிந்து, சிவபிரானுக்குநண்பனான குபேரனிடஞ் சென்று நிகழ்ந்தசெய்தியைக் கூற, அவனும் ‘அழியாப் பதத்தை அரியே அருள்வன்’ என்றுசொல்லி அஷ்டாக்ஷரமந்திரத்தையும் துவாதசாக்ஷர மந்திரத்தையும் உபதேசித்து, அத்திருமால் கிருஷ்ணனாகத் திருவவதரித்துத் துவாரகையில்வசிக்கிற செய்தியையுஞ் சொல்லி, “எவ்வளவு தீவினை செய்தாலும் விஷ்ணுநாமத்தை உச்சரித்தமாத்திரத்திலே அவ்வினை யனைத்தும் தொலையும்’ என்றுஉணர்த்த, அவற்றையறிந்த கண்டாகர்ணன் தன்னைச்சார்ந்த பூதகணங்களுடனே புறப்பட்டு விஷ்ணுநாமங்களை வாயினாற் சொல்லிக்கொண்டே இடைவழியி லெல்லாம் பசுவதை பிராமணவதை முதலிய அளவிறந்த உயிர்க்கொலைகளைச் செய்துகொண்டு, கங்கா நதியுடன் யமுநாநதி சேருமிடமான பிரயாகையைச் சேர்ந்து அஷ்டாக்ஷரதுவாதசாக்ஷரமந்திரஜபத்துடன் நாராயணனைத் தியானித்து அப்பரமனை அகத்திற்கண்டதன்றி அங்குப் புறத்திலே கிருஷ்ணமூர்த்தியைக் கண்ணுற்றுக் களிகூர்ந்து அப்பெருமானது திருவடிகளிற் சரண்புகுந்து ‘எனக்கு அழியாப்பதத்தை அளித்தருள்க’ என்று பிரார்த்தித்தான். அதற்குக் கண்ணபிரான் ‘நீ ஆதியில் என்னிடத்திற் பகைமைகொண்டபோதிலும், இடை விடாது என்னை நினைப்பிற் கொண்டிருந்ததனாலும், பின்பு மிக்கநம்பிக்கையுடன் எனதுநாமங்கள் பலவற்றை உச்சரித்ததனாலும், பிறகு ஜபம் தியாநம் ஸ்தோத்ரம் முதலிய வழிபாடுகள் செய்ததனாலும், உனதுவினைகளெல்லாம் தொலைந்தன; இனிப் பரமபதம் அடைவாய்’ என்று அநுக்கிரகித்தான். பின்பு கண்டாகர்ணன் “அந்தஸ்ரீவைகுண்டத்தை என்தம்பியான தந்தகனுக்கும் அருள்க’ என்று வேண்ட, கண்ணன் ‘உன்னைப் போல உன்தம்பியும் என்பக்கல் அன்புடையனோ?’ என்ன, மணிகர்ணன் ‘இல்லை’ என்றான். “அஃதுஇல்லையாயினும், எனதுபக்தனான உன்னிடத்திலேனும் அன்புடையனோ? என்று வாசுதேவன் வினாவியதற்கு, ‘அதுவு மில்லை; பரதேவதையான உன்னிடத்திலும், தமையனான என்னிடத்திலும் பகைமையுடையன் அவன்’ என்ற கண்டாகர்ணனை நோக்கி ஸ்ரீகிருஷ்ணன் ‘ஆயின், என்ன இயைபுகொண்டு அவனுக்கு உயர்கதியளிப்பேன்?’ என்றான். கண்டாகர்ணன் ‘அவனுக்கு என்னிடம் அன்பில்லை யாயினும், எனக்கு அவன்மேல் அன்பு உண்டு’ என்று சொல்ல, கண்ணபிரான் அதுகேட்டு மனமகிழ்ந்து ‘ஆனால் அவனுக்கும் முத்திதந்தேன்: எனது அன்பர் எவர்பக்கல் அருள் புரிகின்றனரோ, அவரும் பேறுபெறுதற்கு உரியரே; இனி நீயும் உன்தம்பியும் விமானமேறி வீடுபெறுவீர்’ என்றுசொல்லி விடையளித்துச்செல்ல அங்ஙனமே அவ்விருவரும் பரமபதம்புக்கன ரென்பதாம்.

வாணனையழித்த கதை:-
பலிசக்கரவர்த்தியின்சந்ததியிற் பிறந்தவனான பாணாசுரன் ஒருகாலத்துச் சிவபிரானது நடநத்தைத் தரிசித்து அதற்குத் தனது இரண்டுகைகளால் மத்தளந்தட்ட, சிவபெருமான் அருள்கூர்ந்து அவனுக்கு ஆயிரங்கைகளையும் நெருப்புமதிலையும் அளவிறந்தவலிமையையும் மிக்க செல்வத்தையும் தான் தனது பரிவாரங்களோடு அவன்மாளிகை வாயிலிற் காவல்செய்திருத்தல் முதலிய வரங்களையும் தந்தருளினன்; அந்தப்பாணாசுரனுடைய பெண்ணாகிய உஷையென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியதாகக் கனாக்கண்டு, முன் பார்வதி அருளியிருந்தபடி அவனிடத்தில் மிக்கஆசை பற்றியவளாய், தனது உயிர்த்தோழியான சித்திரலேகைக்கு அச்செய்தியைத்தெரிவித்து, அவள்மூலமாய் அந்தப்புருஷன் கிருஷ்ணனுடைய பௌத்திரனும் பிரத்யும்நனதுபுத்திரனுமாகிய அநிருத்த னென்று அறிந்துகொண்டு, “அவனைப்பெறுதற்கு ‘உபாயஞ்செய்யவேண்டும்’என்று அத்தோழியையே வேண்ட, அவள் தன் யோகவித்தைமகிமையினால் துவாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டுவந்து அந்தப்புரத்திலே விட, உஷை அவனோடு போகங்களை அநுபவித்துவர, இச்செய்தியைக் காவலாளராலறிந்த அந்தப்பாணன் தன்சேனையுடன் அநிருத்தனை யெதிர்த்து மாயையினாற் பொருது நாகாஸ்திரத்தினாற் கட்டிப்போட்டிருக்க, துவாரகையிலே அநிருத்தனைக் காணாமல் யாதவர்களெல்லாரும் கலங்கியிருந்தபோது, நாரதமகாமுனிவனால் நடந்தவரலாறு சொல்லப்பெற்ற ஸ்ரீகிருஷ்ணபகவான், பெரியதிருவடியை நினைத்தருளி, உடனே வந்து நின்ற அக்கருடாழ்வானது தோளின்மேல் ஏறிக்கொண்டு பலராமன்முதலானாரோடுகூடப் பாணபுரமாகிய சோணிதபுரத்துக்கு எழுந்தருளும் போதே, அப்பட்டணத்தின் சமீபத்திற் காவல்செய்துகொண்டிருந்த சிவபிரானது பிரமதகணங்கள் எதிர்த்துவர, அவர்களையெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானாலேவப்பட்டதொரு ஜ்வரதேவதை மூன்றுகால்களும் மூன்றுதலைகளுமுள்ளதாய் வந்து பாணனைக்காப்பாற்றும்பொருட்டுத்தன்னோடு யுத்தஞ்செய்ய,தானும்ஒருஜ்வரத்தையுண்டாக்கி இதன்சக்தியினாலே அதனைத் துரத்திவிட்டபின்பு, சிவபிரானது அநுசரராகையாற் பாணாசுரனது கோட்டையைச் சூழ்ந்துகொண்டு காத்திருந்த அக்கினிதேவரைவரும் தன்னோடு எதிர்த்துவர, அவர்களையும் நாசஞ்செய்து, பாணாசுரனோடு போர் செய்யத் தொடங்க, அவனுக்குப் பக்கபலமாகச் சிவபெருமானும் சுப்பிரமணியன் முதலான பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப் போரிட, கண்ணன் தான் ஜ்ரும்பணாஸ்திரத்தைப் பிரயோகித்துச் சிவனை ஒன்றுஞ் செய்யாமற் கொட்டாவி விட்டுக்கொண்டு சோர்வடைந்துபோம்படி செய்து, சுப்பிரமணியனையும் கணபதியையும் உங்காரங்களால் ஒறுத்து ஓட்டி, பின்னர், அநேகமாயிரஞ்சூரியர்க்குச் சமமான சுதரிசநமென்கிற தனதுசக்கரத்தை யெடுத்துப்பிரயோகித்து, அப்பாணனது ஆயிரந்தோள்களையும் தாரைதாரை யாய் உதிரமொழுக அறுத்து அவனுயிரையுஞ் சிதைப்பதாக விருக்கையில், பரமசிவன் அருகில்வந்து வணங்கிப் பலவாறுபிரார்த்தித்தனால் அவ்வாணனை நான்குகைகளோடும் உயிரோடும் விட்டருளி, பின்பு அவன் தன்னைத் தொழுது அநிருத்தனுக்கு உஷையைச் சிறப்பாக மணம்புரிவிக்க, அதன் பின் மீண்டுவந்தன னென்பதாம்.

சிசுபாலனைக்கொன்றவரலாறு:-
சிசுபாலன், பிறந்தபொழுது, நான்கு கைகளையும் மூன்று கண்களையு முடையனாயிருந்தான்; அப்பொழுது அனைவரும் இதுஎன்னவென்று வியக்கும்போது ஆகாயவாணி ‘யார் இவனைத் தொடுகையில் இவனதுகைகளிரண்டும் மூன்றாம்விழியும் மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம்’ என்றுகூறிற்று; அவ்வாறே பலரும் தொடுகையில் மறைபடாத கைகளும் கண்ணும் கண்ணபிரான் தொட்டவளவிலே மறைபட்டன; அதனால் “இவனைக்கொல்பவன் கண்ணனே’ என்று அறிந்த இவன்தாய்’யாதுசெய்யினும் என்மகனைக் கொல்லலாகாது’ என்று கண்ணனை வேண்ட, அந்தஅத்தையின் நன்மொழிக்கு ஒருசார் இணங்கிய கண்ணன் “இவன் எனக்கு நூறுபிழைசெய்யுமளவும் இவன்பிழையை நான் பொறுப்பேன்’ என்றுகூறியருளினன்: பின்பு, சிசுபாலன், தனக்குக் கண்ணன் சத்துருவென்பதை இளமையிலேயேயறிந்து அதனாலும் முந்தினசன் மங்களின் தொடர்ச்சியாலும் வளர்ந்த மிக்கபகைமையைப் பாராட்டி, எப்பொழுதும் அப்பெருமானுடைய திவ்வியகுணங்களையும் திவ்வியச்செயல் களையும் நிந்திப்பதே தொழிலாக இருந்தான்; இவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று நிச்சயித்திருந்த ருக்குமிணியைக் கண்ணன் வலியக்கவர்ந்து மணஞ்செய்ததுமுதல் இவன் கண்ணனிடத்து மிக்கவைரங்கொண்டனன்; பின்பு இந்திரப்பிரத்தநகரத்தில் நடந்த ராஜசூயயாகத்தில் தருமபுத்திரனாற் கண்ணபிரானுக்கு முதற்பூஜை செய்யப்பட்டதைக் கண்டு சிசுபாலன் மிக்க கோபங்கொண்டு அளவிறந்த வசைச்சொற்களைப் பிதற்றி அதுபற்றிக் கண்ணனது சக்கராயுதத்தால் தலைதுணிக்கப்பட்டு இறந்து தோஜோமயமான திவ்விய சரீரம்பெற்று எம்பெருமானது திருவடியை யடைந்தன னென்பதாம்.

திரௌபதிக்குத் துகிலீந்த கதை:-
துரியோதனன்சொன்னபடி துச்சாதனன் திரொளபதியைச் சபையிற்கொணர்ந்து துகிலுரியத்தொடங்கியபோது அவள் கைகளால் தன்ஆடையை இறுகப்பற்றிக்கொண்டே கண்ணபிரானைக் கூவியழைக்க, அப்பெருமான் அருள்செய்யாது தாழ்த்துநின்று, பின்பு துச்சாதனன் வலியஇழுக்கையில் ஆடையினின்று கைந்நெகிழ அவள் இருகைகளையும் தலைமேல்வைத்துக் கூப்பிவணங்கித் துதித்தவுடனே ஸ்ரீகிருஷ்ணன் அவளுடைய ஆடைமேன்மேல் வளருமாறு அருள் செய்து மானங்காத்தன னென்பதாம்.

மல்லரைக்கொன்ற கதை:-
கம்சனால் வலியஅழைக்கப்பட்டுக் கிருஷ்ண பலராமர்கள் அவனதுசபையிற் செல்லுகையில், அவர்களையெதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்சனால் ஏவப்பட்ட சாணூரன் முஷ்டிகன் முதலிய பெரு மல்லர்கள் சிலர் வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர்செய்ய, அவர்களையெல்லாம் அவ்யாதவவீரரிருவரும் மற்போரினாலேயே கொன்று வென்றிட்டனர் என்பதாம். அன்றி, கண்ணன் பாண்டவதூதனாய்த் துரியோதனனிடஞ் சென்ற பொழுது, துரியோதனன் இரகசியமாகத் தனதுசபா மண்டபத்தில் மிகப்பெரிய நிலவறையொன்றைத் தோண்டுவித்து அதில் அநேகமல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்கவைத்து அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலேமூடி அதன்மேற் சிறந்த இரத்தினாசனமொன்றை யமைத்து அவ்வாசனத்திற் கண்ணனை வீற்றிருக்கச்சொல்ல, அங்ஙனமே ஸ்ரீகிருஷ்ணன் அதன்மேல் ஏறினமாத்திரத்திலே மூங்கிற்பிளப்புக்கள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில், அப்பெருமான் மிகப்பெரிதாக விசுவரூபமெடுத்துப் பலகைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்க்கவே, அப் பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தன ரென்ற கதையையுங் கொள்ளலாம்.

சூரியனை மறைத்த கதை:-
மகாபாரதயுத்தத்திற் பதின்மூன்றாநாளிலே அருச்சுனகுமாரனான அபிமந்யுவைத் துரியோதனனது உடன்பிறந்தவள் கணவனான சைந்தவன் கொன்றுவிட, அங்ஙனம் தன்மகனைக்கொன்ற ஜயத்ரதனை மற்றைநாட்சூரியாஸ்தமத்திற்குள் தான்கொல்லாவிடின் தீக்குதித்து உயிர்விடுவதாக அருச்சுனன் சபதஞ்செய்ய, அதனையறிந்த பகைவர்கள் பதினான்காநாட் பகல்முழுவதும் சயத்திரதனை வெளிப்படுத்தாமற் சேனையின்நடுவே நிலவறையில் மறைத்துவைத்திருக்க, அருச்சுனனதுசபதம் பொய்த்துவிடுமேயென்று சிந்தித்துக் கண்ணன் சூரியனை அஸ்தமித்தற்குச் சிலநாழிகைக்கு முன்னமே தன்சக்கராயுதத்தால் மறைத்துவிட, அப்பொழுது எங்கும் இருளடைந்ததனால், அருச்சுனன் அக்கினிப்பிரவேசஞ் செய்தலைக் களிப்போடுகாணுதற்குத் துரியோதனாதியருடனே சயத்திரதன் வந்து எதிர்நிற்க, அச்சமயத்திற் கண்ணன் திரு வாழியை வாங்கிவிடவே, பகலாயிருந்ததனால், உடனே அருச்சுனன் சயத்திரதனைத் தலைதுணித்தன னென்பதாம்.

அசுவத்தாமன் பாண்டவர் வம்சத்தைக்கருவறுத்த விவரம்:-
அசுவத்தாமன் துரியோதனன் வேண்டுகோளின்படி பாண்டவர்வம்சத்தைக் கருவறுப்பதொரு பாணத்தைப் பிரயோகிக்கையில், அது சென்று அபிமந்யுவின் மனைவியும் கர்ப்பவதியுமான உத்தரையின் வயிற்றி லுள்ள சிசுவைக் கருகச்செய்து வெளிப்படுத்தியபோது, ‘நித்தியபிரமசாரியாயிருப்பானொருவன் பரிசித்தால் இக்கரிக்கட்டை குழந்தையாய்விடும்’ என்று கண்ணன் ஒருநிபந்தனை ஏற்படுத்தி அதற்குரியவர் ஒருவரும் இலராகவே, அப்பெருமான், ‘யானே’ நித்தியபிரமசாரி’ என்று திருவடியால் தொட்டமாத்திரத்தில் அக்கரிக்கட்டை உயிர்பெற்று எழுந்தது என்பதாம்.

கண்ணன் அறுபுரஞ் செற்ற கதை:-
முன்ஒருகால் பரமசிவன் திரிபுரசங்காரஞ்செய்தபொழுது அங்கு எரிக்கப்படாமல் மிச்சமாய்நின்ற அறுபதினாயிரம் அசுரர்கள், தங்கள்பந்துக்களது வதத்தால் மிக்க தாப மடைந்தவர்களாய் ஜம்பூ மார்க்கமென்னும் புண்ணியக்ஷேத்திரத்தைச் சேர்ந்து பிரமனைக்குறித்துப் பலநாள் தவஞ்செய்து அப்பிரமனருளாற் பூதலத்திலே அழித்தற்கரிய ஆறுபட்டணங்களைப் பெற்று மிக்க குதூகலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கையில், வசுதேவரது நண்பரும் யாஜ்ஞவல்கியரது சிஷ்யருமாகிய பிரமதத்தரென்னும் முனிவரர் மகா புண்ணிய ஸ்தலமாகிய அவ்வறுபுரத்தை யடைந்து அங்கு ஆவர்த்தை யென்னும் நதியின் தீரத்தில் அசுவமேதயாகஞ் செய்ய, அப்பொழுது வியாசாதி ருஷிகணங்களும் வசுதேவாதி ராஜ சமூகமும் அங்குச் சேர்ந்து நிற்க, நிகும்பன் முதலிய அவ்வறுபுரத்து அசுரரனைவரும் அங்கு வந்து ‘எங்களுக்கு யஜ்ஞபாகமும், உமது கன்னிகைகளும், சகல ரத்நாதி திரவியங்களுங் கொடுக்கப்பட்டாலன்றி, இங்கு வேள்விசெய்யவொண்ணாது’ என்று மறுக்க, பிரமதத்தர், அதற்கு இசைந்திலராதலின், அவர்கள் யாவரும் மற்றுமுள்ள அசுரராஜர்க ளநேகருடன் வந்து யாகசாலையைச் சூழ்ந்து நின்று கன்னிகைகளைக் கவர்ந்துகொண்டு பலவாறு இடையூறு செய்ய, வசுதேவரது விருப்பத்தின்படியே, ஸ்ரீகிருஷ்ணன், பலராமாதி யாதவசேனையோடும் வேறுபல ராஜசேனைகளோடும் புறப்பட்டுச்சென்று, எதிர்த்து வந்த அவ்வசுரர்களுடன் பொருது, தனது திருவாழியால் நிகும்பன் முதலிய அவர்களெல்லாரையுஞ் சங்கரித்து, அவர்களால் அபகரித்துக்கொண்டு போகப்பட்ட கன்னிகைகளை மீட்டுவந்து, யாகத்தை நிர்விக்கினமாக நிறைவேறச் செய்தருளின னென்பதாம்.

பாரதயுத்தத்தில் இறந்த அரசர்களைத் திருதராஷ்டிரனுக்குக் காட்டிய வரலாறு:-
துரியோதனாதியர் சைனியத்தோடும் பாரத யுத்தத்தில் மாண்ட பின்பு, புத்திரசோகவானான திருதராட்டிரன், மனைவியாகிய காந்தாரியோடும், குந்தியோடும் பாண்டவர்களோடும், மற்றும் அந்த யுத்தத்திலிறந்த அரசர்களுடைய பத்தினிகளோடும், வனத்தை யடைந்து ஆச்சிரமத்தில் வாசஞ்செய்திருந்தபொழுது, ஒருநாள், ஸ்ரீ வேதவியாசபகவான்வேறு சில மகாரிஷிகளோடும் அங்கு எழுந்தருள, யுதிஷ்டிரர் அவருக்கு வந்தனை வழிபாடுக ளியற்றிய பின்பு, திருதராட்டிரனும், காந்தாரிமுதலி யோரும், தத்தம் பந்து மித்திர புத்திர பௌத்திராதிகள் யுத்தத்தில் இறந்து போனதற்காகப் பலவாறு சோகித்து, அவர்களை ஒருமுறை பார்க்கும் படி காட்டியருளவேண்டு மென்று வியாசமுனிவரைப் பிரார்த்திக்க, அவர் அங்ஙனமே அன்று அஸ்தமனமானபின்பு யுத்தத்தி லிறந்த அரசரனைவரையும் அவரவர் சைனியங்களுடன் கங்காஜலத்தினின்றும் எழுந்துவரக் காண்பித்தருள, அன்றிரவு முழுவதும் அவரவர்கள் தத்தம் பந்து மித்திர புத்திர பௌத்திராதிகளோடு கூடியிருந்து மகிழ்ந்த பின்பு அவர்கள் யாவரும் அந் நதியில் முழுகிமறைந்துபோயின ரென்பதாம்.

ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்த வரலாறு:-
பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்தவரும், வைஷ்ணவ சம்பிரதாயத்திற் பிரசித்திபெற்ற ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவருமாகிய பெரியாழ்வார் ஒருநாள் தமது பூந்தோட்டத்தில் திருத்துழாய்ப்பாத்தியமைத்தற் பொருட்டு நிலத்தைக் கொத்துகையில், அங்கு ஸ்ரீதேவிபூதேவிகளின் அம்சமான ஒருமகள் தோன்றினாள்; அவளை அந்தஆழ்வார் தமது மகளாகக் கொண்டு கோதையென்று நாமகரணஞ்செய்து வளர்த்துவந்தார்; அம்மங்கை இளமைதொடங்கி எம்பெருமானிடத்திலே பக்திப்பெருங்காதல் கொண்டு அப்பெருமானையே தான் மணஞ்செய்துகொள்ளக் கருதி, தனது தந்தையார் அவ்வில்லிபுத்தூரில்வாழும் எம்பெருமானுக்குச் சாத்தும்பொருட்டுக் கட்டிவைத்த திருமாலையை அவரில்லாதசமயம்பார்த்து எடுத்துத் தான் கூந்தலில் தரித்துக்கொண்டு, ‘அப்பெருமானுக்கு நான் நேரொத்திருக்கின்றேனோ, இல்லையோ?’ என்று தன் செயற்கையழகைக் கண்ணாடியிலேகண்டு, தந்தையார் வருதற்குமுன் அம்மலர்மாலையைக் களைந்து, முன் போலவே நலங்காமல் வைத்துவந்தாள்; இச்செய்தியையுணராமல் ஆழ்வார் அம்மாலையைக் கொண்டுபோய்ச் சுவாமிக்குச் சாத்திவர, பெருமானும்பிரீதியோடு ஏற்றருளினான்; இங்ஙனம் பலநாள் கழிந்தபின் ஒருநாள், வெளியிற்சென்ற ஆழ்வார் விரைவில்மீண்டுவந்தபொழுது, பூமாலையைத் தமது மகள் சூடியிருப்பதைப் பார்த்து, கோபித்து அவளைக் கண்டித்துப் புத்தி சொல்லிவிட்டு அன்று எம்பெருமானுக்கு மாலைசாத்தாமல் நின்றார். அன்றையிரவில் திருமால் ஆழ்வாரது கனவில் தோன்றி ‘உமது மகள் சூடிக் கொடுத்தமாலையே நமதுஉள்ளத்திற்கு மிகவும் உகப்பாவது’ என்று அருளிச் செய்ய, அதனால், ஆழ்வார் தம்மகளைத் திருமகளென்றேகருதி, யாவர்க்குந் தலைவி யென்ற காரணத்தால் ‘ஆண்டாள்’ என்றும், மலர்மாலையைத் தான் சூடிக்கொண்டபின்பு பெருமானுக்குக் கொடுத்ததனால் ‘சூடிக்கொடுத்தாள்’ என்றும் பெயரிட்டு வளர்த்துவந்தனர்: பின்பு அம்மங்கை ‘திருப்பாவை,’ ‘நாச்சியார்திருமொழி’ என்ற திவ்வியப்பிரந்தங்களைப் பாடி வாழ்ந்து, தந்தையாருடன் ஸ்ரீரங்கத்திற்குச் சென்று நம்பெருமாளது திருமேனியில் ஐக்கியமாயினள் என்பதாம். ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை விட்டு வேறுதிருமாலையை யமைத்துப் பெரியாழ்வார் எம்பெருமானுக்குச்சமர்ப்பிக்க அதனைப் பெருமான் ‘இந்தமாலை கோதைமணம்பெறவில்லை’ என்று வெறுத்தருளின னென வரலாறுகூறுதலும் உண்டு.

இராவணன் வெள்ளிமலைபறித்த கதை:-
இராவணன் அளகாபுரிக்குச் சென்று குபேரனை வென்று அவனது புஷ்பகவிமானத்தைப்பறித்து அதன் மேலேறிக்கொண்டு கைலாசமலைக்குமேலாக ஆகாயமார்க்கத்திலே விரைந்து மீண்டுவருகையில், அம்மலையின் மகிமையால் விமானம் தடைப்பட்டு நிற்க, அதற்குக் காரண மின்னதென்று அறியாது திகைக்கும்போது நந்திகேசுவரர் எதிரில்வந்து ‘சிவபிரானெழுந்தருளியிருக்குமிடமான திருக்கைலாசத்தின் பெருமை யிது’ என்றுசொல்லவும், கேளாமல் அந்தத் தசமுகன், ‘எனது பிரயாணத்திற்குத் தடையாகிய இம்மலையை இப்பொழுதே வேரோடுபறித்து எடுத்து அப்பாலெறிந்துவிட்டுத் தடையின்றி மேற்செல்வேன்’ என்றுகூறி விமானத்தினின்று இறங்கித் தனது இருபதுகைகளையும், அம்மலையின்கீழ்க் கொடுத்து அதனைப்பெயர்த்தன னென்பதாம்.

சிவபிரான் திரிபுரமெரித்த கதை:-
தாரகாசுரனது புத்திரர்களாகிய வித்யுந்மாலி தாராகாக்ஷன் கமலாக்ஷன் என்னும் மூவரும் மிக்கதவஞ்செய்து மயனென்பவனாற் சுவர்க்க மத்திய பாதாளமென்னும் மூன்றிடத்திலும் முறையே பசும்பொன் வெண்பொன் கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு ஆகாயமார்க்கத்திற் சஞ்சரிக்குந் தன்மையையுடைய மூன்று பட்டணங்களைப் பெற்று மற்றும்பல அசுரர்களோடும் அந்நகரங்களுடனே தாம்நினைத்த விடங்களிற் பறந்துசென்று பலவிடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால் சிவபெருமான் பூமியைத் தேராகவும் சந்திரசூரியர்களைத் தேர்ச்சக்கரங்களாகவும், நான்குவேதங்களைக் குதிரைகளாகவும், பிரமனைச் சாரதியாகவும், மகாமேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும், விஷ்ணுவை வாயுவாகிய சிறகமைந்து அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும், மற்றைத்தேவர்களைப் பிறபோர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு யுத்தசந்நத்தனாகிச் சென்று போர்செய்ய யத்தனிக்கையில், தேவர்கள் தத்தமது வல்லமையை நினைந்து அகங்கரித்ததனை உணர்ந்து சினந்து அவர்களுதவியைச் சிறிதும் ஏற்றுக்கொள்ளாமல், தானே புன்சிரிப்புச்செய்து அசுரரனைவரையும் பட்டணங்களோடு எரித்தருளின னென்பதாம்.

சிவபிரான் பிறைசூடிய கதை:-
சந்திரன் தக்ஷமுனிவனதுபுத்திரிகளாகிய அசுவினி முதலிய இருபத்தேழு நட்சத்திரங்களையும் மணஞ்செய்துகொண்டு அவர்களுள் உரோகிணியென்பவளிடத்து மிகவுங்காதல்கூர்ந்து அவளுடனே எப்பொழுதுங் கூடிவாழ்ந்திருக்க, மற்றைமகளிரின்வருத்தத்தை நோக்கி முனிவன் அவனை ‘க்ஷயமடைவாயாக’ என்று சபிக்க, அச்சாபத்தாற் சந்திரன் பதினைந்துகலைகளுங் குறைந்து மற்றைக்கலையொன்றையும் இழப்பதற்குமுன்னம் சிவபிரானைச் சரணமடைய, அப்பெருமான் அருள்புரிந்து அவ்வொற்றைக்கலையைத் தன்தலையிலணிந்து மீண்டுங் கலைகள்வளர்ந்துவரும்படி அநுக்கிரகித்தன னென்பதாம். திருப்பாற்கடல் கடைகையில் அதனினின்று தோன்றிய பிறைச்சந்திரனைச் சிவபெருமான் சிரமேற்கொண்டன னென்றும் வரலாறு கூறப்படும்.
சிவபிரான் கங்கைதரித்த வரலாறு:- திருமால் உலகமளந்தகாலத்தில் மேலே சத்தியலோகத்துச் சென்ற அப்பிரானது திருவடியைப் பிரமன் தன்கைக் கமண்டலதீர்த்தத்தாற் கழுவிவிளக்க, அந்தஸ்ரீபாததீர்த்தமாகப்பெருகிய கங்காநதி தேவலோகத்தி லிருக்க, சூரியகுலத்துப் பகீரதசக்கரவர்த்தி, கபிலமுனிவனதுகண்ணின்கோபத்தீக்கு இலக்காய் உடலெரிந்து சாம்பலாய் நற்கதியிழந்த தனதுமூதாதையரான சகரபுத்திரர் அறுபதினாயிரவரை நற்கதிபெறுவிக்கும் பொருட்டு நெடுங்காலம் தவஞ்செய்து அக்கங்காநதியை மேலுலகத்திலிருந்து கீழுலகத்துக்குக் கொணர்கையில், அதனது வெகுவிசையாகப்பெருகிவரும் வெள்ளப்பெருக்கைத் தாங்கும் வல்லமை பூமிக்கு இல்லாமைபற்றிச் சிவபிரானைப் பிரார்த்திக்க, அப்பகீரதனதுவேண்டுகோளின்படி பரமசிவன் அந்நதியைத் தனது முடியி லேற்றுச் சிறிதுசிறிதாகப் பூமியில் விட்டருளின னென்பதாம்.

அரவம் பூண்ட கதை:-
ஒருகாலத்திற் சிவபிரான் தன்னைமதியாத தாருக வனத்து முனிவர்களுடைய கருவத்தைப் பங்கஞ்செய்யவும் அவர்களின் மனைவிமார்களது கற்புநிலையைப் பரிசோதிக்கவுங் கருதித் தான் ஒருவிடவடிவங்கொண்டு அவரில்லந்தோறுஞ் சென்று பிக்ஷாடநஞ்சென்று தன்னைநோக்கிக் காதல்கொண்ட அம்முனிபத்தினியரது கற்புநிலையைக் கெடச்செய்ய, அதுகண்டு பொறாமற் கோபம்மூண்ட அம்முனிவர்கள் அபிசாரயாகமொன்றுசெய்து அவ்வோமத்தீயினின்று எழுந்த நாகங்கள், பூதங்கள், மான், புலி, முயலகன், வெண்டலை முதலியவற்றைச் சிவனைக் கொன்றுவரும்படி யேவ, சிவபெருமான் தன்மேற்பொங்கி வந்த நாகங்களை ஆபரணங்களாகவும் பூதங்களைத் தனது கணங்காளாகவுங் கொண்டு, மானைக் கையிலேந்திய புலியைத் தோலையுரித்து உடுத்து முயலகனை முதுகிற் காலால் ஊன்றி வெண்டலையைக் கையாற்பற்றிச் சிரமேல் அணிந்து இங்ஙனமே அவற்றையெல்லாம் பயனிலவாகச் செய்துவிட்டன னென்பதாம்.

சிவபிரான் இரத்தலைத் திருமால் ஒழித்த கதை:-
ஒரு காலத்திலே, பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்துதலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு இடமாயிருக்கின்ற தென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்டிக்கொள்ளுதலும், அவன் “இதற்கு என்செய்வது?’ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும் “இப்பாவந்தொலையப் பிச்சையெடுக்கவேண்டும்: என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்’ என்றுஉரைக்க. சிவபெருமான் பலகாலம் பலதலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக, பின்பு ஒருநாள் பதரிகாச்சிரமத்தை யடைந்து அங்குஎழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது, அப்பெருமான் “அக்ஷயம்’ என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையை விட்டுஅகன்றது என்பதாம். திருமால் தனது திருமார்பின் வேர்வைநீரைக் கொண்டு அக்கபாலத்தை நிறைத்து ஒழித்ததாகவும் வரலாறு உண்டு.

அஷ்டபிரபந்தத்திலடங்கிய புராண கதைகள் முற்றும்.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: