ஸ்ரீ திருவிருத்தம் — ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன்

ஸ்ரீப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆழ்வார்கள்.
இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்யப் ப்ரபந்தங்கள்.
* பிறந்திறந்து பேரிடர்ச் சுழி * என்று சொல்லப்படுவது ஸம்ஸார ஸாகரமாகும்.
* ஸம்ஸார ஸாகரம் கோரம் அநந்தக்லேஶ பாஜனம் * என்று சொல்லப்படுவது இந்த * இருள் தருமாஞாலம் * ஆகும்.
தாண்ட முடியாததாய், மிகுந்த துன்பங்களுக்குப் பிறப்பிடமாய் இருப்பது இந்தப் ப்ரக்ருதி ஸம்பந்தமாகும்.
அப்படிப்பட்ட ஸம்ஸார ஸாகரத்தினைக் கடப்பதற்குரிய அருமருந்தன்ன ஸ்ரீஸூக்திகளை அருளிச் செய்தவர்கள் ஆழ்வார்கள்.

ஸ்ரீ பெரிய பிராட்டியார் கேள்வனான ஸ்ரீமந் நாராயணன் அருளிய ஜ்ஞானத்தாலே இவர்கள்
* தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள் * அருளியவர்கள்.
இது தன்னை * தத்வம் திவ்ய ப்ரபந்தானாம் ஸாரம் ஸம்ஸாரவைரிணாம் * (பூர்வ தினசர்யா – 27)
என்றருளினார் ஸ்வாமி ஸ்ரீ எறும்பியப்பா.
திவ்யப்ரபந்தங்கள் சரீர ஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் போக்கடிப்பன என்கின்றது

* மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் அழுந்தார்
பிறப்பாம் பொல்லாவருவினை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே * (திருவிருத்தம்-100),

* செயிரில் சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால் வயிரம் சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே * (திருவாய் 4-8-11)

* நோய்கள் அறுக்கும் மருந்தே *

* அணைவிக்கும் முடித்தே * முதலிய பாசுரங்களினால் விளங்கும்.

இப்படிப்பட்ட மிக்க க்ருபாளுக்களான ஆழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார்.
ஏனைய ஆழ்வார்கள் இவ்வாழ்வாரின் அவயவங்களாகவே போற்றப்படுகின்றனர்.
ஸம்ப்ரதாயத்தில் * ஆழ்வார் * என்றாலே நம்மாழ்வாரைத் தான் குறிக்கும்.
இவ்வாழ்வார் தாமும் நான்கு வேத ஸார ரூபமாக நான்கு திவ்யப்ரபந்தங்கள் அருளிச் செய்துள்ளார்.
இவற்றுள் ப்ரதம (முதல்) திவ்யப்ரபந்தம் திருவிருத்தமாகும்.
இது ருக்வேதஸாரமாய், 100 பாசுரங்கள் கொண்டதாய் இருக்கிறது.
இதில் ஸ்வாபதேச அர்த்தங்களும், அகப்பொருள்களும் நிறைந்து உள்ளன.

——

திருவிருத்ததிற்கு ஏற்பட்ட வ்யாக்யானங்கள்
நம்பிள்ளை அருளிய ஈடு வ்யாக்யானம்
பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளிய வ்யாக்யானம்
அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமி அருளிய ஸ்வாபதேச வ்யாக்யானம்
பெரிய பரகால ஜீயர் ஸ்வாமி அருளிய வ்யாக்யானம்
அப்பிள்ளை ஸ்வாமி ஸ்வாமி அருளிய அரும்பதம்

———–

இந்த திவ்யப்ரபந்தம் ஆழ்வார் பராங்குச நாயகியின் நிலையினை அடைந்து,
ஸர்வேஶ்வரனை நாயகனாகக் கொண்டு அருளப்பெற்றதாகும்.
ஜீவாத்மாக்களுடைய இயல்பான நிலைமை பெண்ணிலைமையே ஆகும்.
* கந்தல் கிழிந்தால் ஸர்வர்க்கும் நாரீணாமுத்தமையினுடைய அவஸ்தை வரக்கடவதாயிருக்கும் * என்கிறது
ஸ்ரீவசன பூஷண திவ்ய ஸ்ரீஸூக்தி.

இதில் நடந்த கதைகளைச் சொல்லுகிறபடியால் திருவிருத்தம் (ஆழ்வாருடைய விருத்தம்) என்று திருநாமம் ஆயிற்று.
ஆழ்வார் தமக்குத் தாமே * மணிவல்லி * என்று இந்த திவ்யப்ரபந்தத்தில் திருநாமம் சாற்றியுள்ளார்.
எனவே இத்திருநாமத்தை நமது ஆசார்யர்கள் மிகவும் ஆதரித்து வந்துள்ளனர்!
* அடியேன் செய்யும் விண்ணப்பம் * என்று தொடங்கி
* மாறன் விண்ணப்பம் செய்த * என்று முடிக்கையாலே,
திருவிருத்தம் முழுமையும் ஆழ்வாருடைய வ்ருத்தத்தினைத் தெரிவிப்பதாக அமைந்தது என்றபடி.

———

ஸ்வாபதேஶார்த்தங்கள்-

இத் திவ்ய ப்ரபந்தத்தில் ஸ்வாபதேஶார்த்தங்கள் நிறைந்துள்ளன.
எம்பெருமானே ரக்ஷிப்பன் என்கின்ற அத்யவஸாய ஜ்ஞாநத்தைத் தாய் என்றும்,
பாகவதர்களை ஸகிகளென்றும்,
கடகனான ஆசார்யனை (சேர்த்து வைப்பவரான ஆசார்யனை) தூதென்றும்,
ஜ்ஞாந வைலக்ஷண்யத்தைக் கண்ணழகென்றும்,
அஜ்ஞாநத்தை இருளென்றும்,
பாதக பதார்த்தங்களை வாடை, தென்றல், அன்றில் என்றும் ஸ்வாபதேஶார்த்தங்கள் அருளப்பட்டுள்ளன.

* மயில் பிறை வில் அம்பு முத்துப் பவளம் செப்பு மின் தேர் அன்னம் தெய்வ உரு விகாஸ சுத்தி தாந்தி
ஞான ஆனந்த அனுராக பக்த்ய அணுத்வ போக்யதா கதிகளை உடைய அக மேனியின் வகுப்பு * என்கிற
ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையில் (137)
ஆழ்வார் ஸ்த்ரீ நிலைமை யெய்தி
ஸ்த்ரீகளின் அவயவங்களாகச் அருளுகின்றவைகளின் ஸ்வாபதேஶார்த்தம் அருளப்பட்டுள்ளது.

———

திருவிருத்தமும் – அகத் துறையும்

திருவிருத்தத்தின் முதல் பாசுரம் எம்பெருமானை நோக்கி விண்ணப்பம் செய்வதாகவும்,
இறுதிப் பாசுரம் பல ச்ருதியாகவும் அமைந்துள்ளது.
மற்றைய 98 பாசுரங்களும் அகப்பொருள் துறையில் அந்தாதித் தொடையில் அமைந்தவை.

“காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்” (தொல் -பொருள்-நூ.83)
நூற்பாவில் காமக் குறிப்பை வைத்து இலக்கியம் பாடுகின்ற பொழுது தேவரிடத்தும் மக்களிடத்தும் வரையார் என்று
உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர்.
எனவே கடவுளைத் தலைவனாகக் கொண்டு அகத்துறையில் பாசுரங்கள் பாடுவது தமிழர் மரபு என்பது தேறும்.
உதாரணமாக சில பாசுரங்களைப் பார்க்கலாம்.

ஏழாம் பாசுரம் காலமயக்கு துறையில் அமைந்ததாகும்.
மழைக்காலம் வந்தவுடன் தான் திரும்பிவிடுவதாக வாக்களித்த தலைவன், மழைக்காலம் வந்தும் திரும்பி வராததால்
கவலையுற்ற தலைவியைக் குறித்துத் தோழியானவள் அவளைத் தேற்றும் விதமாக
இது மழைக்காலமா – அல்லது இரண்டு நீல எருதுகள் வானில் சண்டையிடுகின்றன.
அவற்றின் திமிலிலிருந்து மதநீர் பெருகுகின்றனவா என்று தெரியவில்லை என்று கூறுவதாக அமைந்துள்ளது இப்பாசுரம்.

ஞாலம் பனிப்பச் செறுத்து நன்னீரிட்டுக்கால்சிதைந்து
நீலவல்லேறுபொராநின்றவானமிது, திருமால்
கோலஞ்சுமந்து பிரிந்தார்கொடுமை குழறுதண்பூங்
காலங்கொலோவறியேன், வினையாட்டியேன்காண்கின்றவே. (7)

கால மயக்குத் துறையிலே அமைந்த இன்னுமொரு பாசுரம் பதினெட்டாம் பாசுரமாகும்.

கடல்கொண்டெழுந்ததுவானம், அவ்வானத்தை யன்றிச்சென்று
கடல்கொண்டொழிந்தவதனாலிது, கண்ணன்மண்ணும்விண்ணுங்
கடல்கொண்டெழுந்தவக் காலங்கொலோ புயற்காலங்கொலோ
கடல்கொண்டகண்ணீர், அருவிசெய்யாநிற்குங்காரிகையே (18)

ஸமுத்ரத்தைத் தோற்பித்த கண்களில் இருந்து ஜலத்தைப் பெருக்கிக் கொண்டு நிற்கும் பெண்ணே!
ஆகாசமானது ஸமுத்ரத்தை விழுங்கி மேலே கிளம்பிற்று; ஸமுத்ரமானது அந்த ஆகாசத்தை கோபித்துக் கொண்டு,
பின் தொடர்ந்து சென்று, ஆகாசம் கொண்டுபோன ஜலத்தை வாங்கிக் கொண்டு –
அப்போது அதில் தங்கிப்போன ஜலத்தினால் இந்த மழைத்துளி விழுகிறது.
ஸ்ரீக்ருஷ்ணனுடைய பூலோகத்தையும் விண்ணுலகத்தையும் ஸமுத்ரம் கபளீகரித்து
வ்ருத்தியடைந்த ப்ரளயகாலந்தானோ?
மழைக்காலந்தானோ? நிச்சயிக்க மாட்டுகிறிலேன் – என்று
கால மயக்குத் துறையில் அமைந்துள்ளது இப்பாசுரம்.

இங்கு ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யான ஸ்ரீஸூக்திகள் –
” திருமங்கையாழ்வார்க்குச் சரணம் புக வேண்டுமா போலே இவர்க்கும் பலகாலும் கால மயக்கு வேண்டியிருக்கிறபடி ”
(எப்படித் திருமங்கை ஆழ்வார் அடிக்கடி சரணாகதி செய்வாரோ
அது போல நம்மாழ்வார் அடிக்கடி காலமயக்கு அனுபவத்தில் ஈடுபடுவார்)

அகத்துறையில் வெறிவிலக்கு என்றால் தலைவிக்குக் காமத்தாலுண்டான நோயை
வேறு காரணத்தாலுண்டானதாகக் கொண்டு அந்நோயைத் தணிக்கவேண்டிச் செய்யும்
வெறியாட்டைத் தடுத்து நிற்றலைக் கூறுதல்.
இத்துறையில் அமைந்துள்ள பாசுரம் இருபதாம் பாசுரமாகும்

சின்மொழிநோயோ கழிபெருந்தெய்வம், இந்நோயினதென்
றின்மொழிகேட்கு மிளந்தெய்வமன்றிது, வேலநில்நீ
என்மொழிகேண்மி னென்னம்மனைமீருலகேழுமுண்டான்
சொன்மொழி, மாலையந்தண்ணத்துழாய்கொண்டுசூட்டுமினே (20)

தலைவியானவள் சோகித்துக் கிடக்கும் தசையினைக் கண்ட திருத்தாயார் முன்னே தேவதாந்த்ர ஸ்பர்சமுடையார்
புகுந்து நிற்க/சிலவற்றைச் செய்யத் தொடங்க;
தோழி தலைமகளது ப்ரபாவத்தினைத் தெரிந்தவளாகையாலே திருத்தாயாரை நோக்கி
இவளுக்கு நோய் தீர்க்கிறோம் என்று விநாசத்தை விளைக்க வேண்டா என்று
கூறுவதாக அமைந்துள்ளது இப்பாசுரமாகும்.

நலம் பாராட்டல் துறையில் அமைந்தது 55வது பாசுரம்.
தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டுவது அகப் பொருளில் நலம் பாராட்டல் என்பர்.
கொளு இதனை,அழிபடர் எவ்வம் கூர ஆயிழை
பழிதீர் நன்னலம் பாராட் டின்று என்று விளக்குகிறது.

இங்கு,
திருமாலை நாயகனாகப் பாவித்த ஆழ்வார்
நாயகியாகத் தம்மைப் பாவித்து நலம் பாராட்டுகிறார்.

வண்டுகளோ! வம்மின்! நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண்பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்ஏனம் ஒன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டு கள்வாரும் மலர் உளவோ நும்வியல் இடத்தே? (55)

——–

திருவிருத்தத்தில் ஆழ்வாரின் ப்ரபாவங்கள்

ஆழ்வாருடைய ப்ரபாவங்களைச் சொல்வதாக இத் திரு விருத்தத்தில் சில பாசுரங்கள் அமைந்துள்ளன.
எப்படித் திருவாய்மொழியில் * துவளில் மாமணிமாடமோங்கு * பதிகமோ அதே போன்றதாகும்.
சில பாசுரங்களைக் காணலாம்

ஈர்வனவேலுமஞ்சேலுமுயிர்மேன்மிளிர்ந்து, இவையோ
பேர்வனவோவல்லதெய்வநல்வேள்கணைப் பேரொளியே
சோர்வனநீலச்சுடர்விடுமேனியம்மான் விசும்பூர்
தேர்வன, தெய்வமந்நீரகண்ணோவிச்செழுங்கயலே (14)

இப்பாசுரத்தில் நாயகியின் (பராங்குச நாயகியின்) கண்ணழகில் ஈடுபட்ட நாயகன்,
அவற்றின் அழகைச் சொல்லிப் புகழ்வதாக அமைந்தது இப்பாசுரம்.
கண்ணழகு ஞானமாகச் சொல்லப்பட்டது காண்க.
ஆழ்வாருடைய ஜ்ஞாநத்தின் ஏற்றத்தைக் கண்டுரைத்த பாகவதர்கள் பாசுரத்தைச் சொல்லுவதாக அமைந்துள்ளது இப்பாசுரம்.
இந்த ஜ்ஞாநத்தின் தன்னேற்றம் எப்படிப்பட்டது எனில் நித்யஸூரிகளும் பரமபதநாதனின் அநுபவத்தினையும்
விட்டுவிட்டு ஆழ்வாரைத் தேடிக் கொண்டு வருவதாக அமைந்துள்ளது.

கயலோநுமகண்களென்றுகளிறுவினவிநிற்றீர்,
அயலோரறியிலுமீதென்னவார்த்தை, கடல்கவர்ந்த
புயலோடுலாங்கொண்டல்வண்ணன் புனவேங்கடத்தெம்மோடும்
பயலோவிலீர், கொல்லைகாக்கின்றநாளும் பலபலவே (15)

யானை (இங்குவரக் கண்டதுண்டோ? என்று) கேட்கத் தொடங்கி,
“உங்கள் கண்கள் கயல்மீன்களோ?”என்று (எங்கள் கண்களைக் கொண்டாடி) நின்றீர்;
அயலார் அறிந்தாலும் இது என்ன பொருந்தாத வார்த்தை;
கடல்நீரை முழுதும் கொள்ளை கொண்டதும் மழையோடு மந்தமாகச் சஞ்சரிப்பதுமான காளமேகம் போன்ற
திருநிறத்தையுடையனனான எம்பெருமானது (பல) கொல்லைகளையுடைய திருவேங்கட மலையிலே (நாங்கள்)
கொல்லை காத்து வருகிற மிகப்பல நாள்களிலொன்றிலும் எங்களோடு (நீர்) பாகமுடையீரல்லீர் – என்பது இப்பாசுரத்தின் அர்த்தம்.

இப்பாசுரத்திலும் ஆழ்வாருடைய பகவத் விஷயாவகாஹநத்தில் உண்டான வைலக்ஷண்யத்தினைக் கண்ட
பாகவதர்கள் இவருடைய ஜ்ஞாநாதி குணங்களிலீடுபட்டு இருப்பதாக இருப்பது இப்பாசுரமாகும்.

கொடுங்கால்சிலையர்நிரைகோளுழவர்கொலையில்வெய்ய
கடுங்காலிளைஞர்துடிபடுங்கவ்வைத்து அருவினையேன்
நெடுங்காலமும் கண்ணன் நீண்மலர்ப்பாதம்பரவிப்பெற்ற
தொடுங்காலொசியுமிடை இளமான்சென்றசூழ்கடமே (37)

இப்பாசுரத்தில், ஆழ்வார்க்குப் பிறந்த ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைக் கண்டு, இவர்க்கு
இந்த ஸம்ஸாரத்தில் இருப்பு மிகவும் கொடிதாயிருக்குமென திருத்தாயார் கருதுவதாக அமைந்தது இப்பாசுரம்.

உலாகின்ற கெண்டை ஒளியம்பு, எம்ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத்தீர் – குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம் மானடியார்
நிலாகின்ற வைகுந்தமோ, வையமோ? நும்நிலையிடமே. (75)

ஆழ்வாரினுடைய திருக்கண்களின் அழகைப் பேசுவதாக அமைந்தது இப்பாசுரம்.
* வெஞ்சிலை வாண் முகத்தீர்* – ஆழ்வாரது ஸ்வரூபத்தைக் கண்டு ஈடுபட்ட பாகவதர்கள் அவரை நோக்கி
‘நுமது இடம் அந்த நித்யவிபூதியோ? என்று வியந்துரைத்தலாம்.
பரந்த குளிர்ந்த நுண்ணிய விளக்கமுடைய உமது ஞானத்தை எமது நெஞ்சிலே பதியும்படி செலுத்தும்
முகமலர்ச்சியுடையவரே! என அழைத்தபடி.
எம்பெருமானுடைய நித்யமுக்தர் வஸிக்கும் நித்ய விபூதியோ இந்த லீலாவிபூதியோ உமது இருப்பிடம்?
ஆழ்வார், ஞானம் முதலியவற்றின் மஹிமையால் முக்தரென்று சொல்லும்படியும்,
அங்கு நின்று இங்கு வந்தவர் ஒருவர் என்று சொல்லும்படியும் உள்ள தன்மை இப்படி வினவுதற்குக் காரணம்.

———–

மேலும் இத்திவ்யப்ரபந்தத்தில் தத்வார்த்தங்கள் பொதிந்துள்ளன.
ஆழ்வார் தாமும் தொடங்கியருளும் பொழுதே
* பொய்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் * என்று தான் தொடங்கியருளுகிறார்.
ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை மிகவும் வியந்து கொண்டாடி இங்கு வ்யாக்யானமிட்டருளுகிறார்!
மஹாபாரதம் தொடங்கி க்ரந்தங்கள் விரிவாக இருந்தும் தெளிவாகச் சொல்ல இயலாத ஜீவாத்மாக்களின் நிலையை
ஆழ்வார் ஒரே சந்தையில் அருளிச்செய்கிறார் என்று.
* மஹாபாரதமெல்லாம், கூளமும் பலாப்பிசினும் போலே ப்ரக்ருதி புருஷ விவேகம் பண்ணமாட்டிற்றில்லை;
இவர் மயர்வறமதிநலம் அருளப் பெற்றவராகையாலே, மூன்று பதத்தாலே ப்ரக்ருதி புருஷ விவேகம் பண்ணியருளினார் *.

இன்னமும் முதல் பாசுரத்திலுள்ள அர்த்தங்களைச் சுருக்கி ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் தாமும்
* இமையோரதிபதி அடியேன்மனனே பொய்மயர்வு பிறந்தருளினன் விண்ணப்பம் தொழுதெழென்ற பஞ்சகத்தோடே,
அவித்யாதிஸ்வரூப ஸ்வாபாவ, ஆத்மேச்வரபந்த, ரக்ஷணக்ரம, குண, விக்ரஹ, விபூதியோக, ததீயாபிமாந,
உபதேசவிஷய, அந்யாபதேச ஹேத்வாதிகளும் ஸங்க்ருஹீதம் * (212) என்கிற சூர்ணிகையிலே ஆசார்ய ஹ்ருதயத்தில்
சுருக்கியருளினார்.

அதாவது (1) * இமையோர் தலைவா * என்று பரஸ்வரூபத்தினையும்,
(2) * அடியேன் செய்யும் * என்று ஸ்வஸ்வரூபத்தையும்,
(3) *பொய்ந்நின்ற ஜ்ஞாநமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும் * என்று விரோதி ஸ்வரூபத்தையும்,
(4) *என் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் * என்று உபாய ஸ்வரூபத்தையும்
(5) * செய்யும் விண்ணப்பம் * என்கையாலே புருஷார்த்த ஸ்வரூபத்தையும்
ஆகிற அர்த்த பஞ்சகத்தையும் முதல் பாசுரத்திலேயே காட்டியருளியுள்ளார்.

(குறிப்பு – திருவிருத்த விஷயமான கட்டுரையாகையாலே திருவாய்மொழி எடுக்கப்படவில்லை.
மாமுனிகள் வ்யாக்யானத்திலே கண்டு கொள்வது)

திருவிருத்தமே, திருவாய்மொழியாக விரிந்துள்ளது என்பதினை ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
தம்முடைய ஆசார்ய ஹ்ருதயத்தில்
* ருக்கு ஸாமத்தாலே ஸரஸமாய் ஸ்தோபத்தாலே பரம்புமாபோலே
சொல்லார் தொடையல் இசை கூட்ட அமர்சுவை ஆயிரமாயிற்று * என்று காட்டியருளினார்.

கருவிருத்தக்குழி நீத்தபின் காமக்கடுங்குழிவீழ்ந்து,
ஒருவிருத்தம்புக்குழலுறுவீர், உயிரின்பொருட்கட்கு
ஒருவிருத்தம்புகுதாமல்குருகையர்கோனுரைத்த
திருவிருத்தத்து ஓரடிகற்றிரீர் திருநாட்டகத்தே

கர்ப்ப, ஜன்ம, பால்ய, யௌவன, ஜரா, மரண நரகங்களாகிற அவஸ்த்தைகளிலே சிக்கி ஸம்ஸாரத்திலே
உழல்கின்ற ஜீவர்களைப் பார்த்து, ஆழ்வார் அருளிச்செய்த திருவிருத்தத்தின் ஓரடி கற்கையே உங்களை
இந்த ஸம்ஸாரச் சுழலில் நின்றும் விடுபட ஹேதுவாக இருக்கும் – என்று
திருவிருதத்தின் பெருமையைப் பகர்வதாக அமைந்துள்ளது இத் தனியன்.

முடிவுரை

இவ்வாறு திருவிருத்தத்தின் உரைகளில் காட்டப்பட்ட சில பல விசேஷமான அர்த்தங்களை இங்கே அனுபவித்தோம்.

அடியேன் ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன்

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: