ஸ்ரீ ராகவாசாரியர் இயற்றிய ஸ்ரீ திருமால் வெண்பா–

ஸ்ரீ திருமகள் துதி

செந்தாமரை யுறையுஞ் சேயிழையை மூவுலகும்
தந்தா தரிக்கும் தனி முதலை – நந்தாது
மாயன் மறு மார்பின் மன்னு மணி விளக்கை
ஆயு மனமே யடை.

காப்பு

திருமாறன் வெண்பாவைச் செப்புதற்கு நெஞ்சே
வருமாறன் றான்மலரை வாழ்த்து.

நூல்

தாமரையாள் மேவுந் தட மார்பா! தண்டமிழால்
மா மறையைச் செய்த மகிழ் மாறன் – நா மருவப்
போற்றிப் புகழ்ந்துரைக்கும் புண்ணியா! வென்னிடரை
மாற்றிப் பணிந்தருள வா. 1

காதலித்த நற்பொருளுங் கைகூட்டும் வெவ்வினையின்
தீதவித்து நற்கதியிற் சேர்க்குமால் – மாதவத்தர்
நச்சிப் புகழ்ந்தேத்தி நாண்மலரை யிட்டிறைஞ்சும்
அச்சுதன் றன் பொன் னடி. 2

உலகத் திருணீக்கி யுத்தமரைத் தன்பால்
நிலவ வருள்புரிந்து நிற்றல் – நலமிகுந்த
பூவிந்தை மேவிப் பொலி மார்பன் பொன்னாடைக்
கோவிந்தன் கொண்ட குணம். 3

வண் குமுத வாயார் வனப்பில் மிக வாழ்ந்து
பண்கனிந்த வாய் மொழியைப் பாராது – வண் செவியே
வாசவனும் நான்முகனும் வார் சடைய னுங் காணாக்
கேசவன்றன் மெய்ச் சரிதங் கேள். 4

தொழுவார் துயரொழித்துத் தொல்லறிவை யாக்கி
வழுவாது வீடளிக்க வற்றாம் – மழுவாளும்
அஞ்சக் கரத்தா னலரா னறியாத
அஞ்சக் கரத்தா னடி. 5

கண்டக்கா லுள்ளங் கரையாதோ காதலித்த
தொண்டர்க் கருளுந் துணையானைப் – பண்டை
யருமறையுங் காணாத வப்பனை யொப்பில்
தருமனையென் னெஞ்சத்துட் டந்து. 6

புகழ்கின்ற நான்மறையும் புத்தேளிர் தாமும்
இகல் வென்ற மாமுனிவர் யாரும் – அகன் மதியால்
தேடுகின்ற பாதச் செழும் பொருளே யின்றெனது
கோடுகின்ற நெஞ்சகத்தைக் கொள். 7

நறவார் துளவணியு நாரா யணனை
மறவா திருக்கின் மனனே – பிறவாத
பேரின்ப நன்னிலையைப் பெற்றாய் நீ யற்றிடுவாய்
பாரின்பப் பாழ் வலையின் பற்று. 8

வழுத்துவார் நன் மனத்து வாழும் பரமன்
எழுத்தினால் காண யியையான் – சுழுத்தி தன்னில்
சாக்கிரத்தை யுற்றோர் தனிக் காண்ப ரல்லாதா
ராக்கிரகத் தாலறியா ராங்கு. 9

மை திகழு மேனி மணி வண்ணன் மாறொழிக்கும்
கை திகழு மாழிக் கருங்கொண்டல் – பொய் திகழும்
சிந்தை யுடையேனைச் சேவடிக்கே சேர்த்தருளும்
எந்தத் துயர் வருமா லின்று. 10

சொல்லரிய நான்மறையுஞ் சோர்ந்துணர மாட்டாது
மெல்லத் திரும்பி மெலிந்தே – எல்லைக்
கடங்காப் பெரு வெளியா யன்ப ரகத்தே
யொடுங்காது நின்ற வொன்றை யுற்று. 11

சங்கந் தனிக் கரத்துச் சாரு நெடுமாலே!
மங்கை யுறையு மணி மார்பா! – துங்கவிடைச்
செஞ்சடையான் போற்றுந் திருவடியாய் வெந்துயரம்
நெஞ்சடையா வண்ணம் நினை. 12

கேசவனை நாரணனைக் கேளா ரொடுங்கிடமுன்
வாசவனைக் காத்த வலியோனைப் – பாச
வினை யொழிய நன் மனமே வேண்டுதியேல் ஞாலத்
துனை யொப்பா ருண்டோ வுரை. 13

சூளா மணியாய்த் தொடரு மகத்திருளைக்
கேளா தொழித்துக் கிளரறிவால் – மீளாப்
பதமளிக்கும் பண்பினதாம் பாற்கடலில் மேவி
இதமளிப்பான் றாளி னிணை. 14

நீலநிறக் காலன் நிமிர் பாச மென் செய்யும்?
மேலை வினை யென் செய்யும்? மெய்யுணரின் – கோலத்
திருவருவ மென்னெஞ்சிற் றீகழுங்கா லன்றைக்
கொருதுயரும் யானடையே னுற்று. 15

சுரும் புறையு மென் கூந்தற் றோகா யிவட்குக்
கரும் பிறையால் நேர்ந்த கவலை – இரும் பவ்வம்
முன் கடைந்தான் முன் மொழிந்து மொய் துளவத்தார் வேண்டல்
உன் கடமை யன்றோ வுரை. 16

மறை யறியா வொன்றை மலரான றியான்
பிறை யணியும் பெம்மானோ பேசான் – நறை யொழுகுங்
கற்பகத்துப் பொன்னுலகோர் காணார் முன் கண்டதே
வெற்பு நிகர் வேழம் விரைந்து. 17

நெய்தற் கரியானை நீள் கமலை நாயகனை
எய்தற் கரியானை யெம்மானைத் – துய்ய
அறிவாளர் போற்று மமலனையே நெஞ்சத்
துறவாள னாக வுணர். 18

ஏதக் கடனீங்க வெந்தா யுனதடியாம்
போதத்தை நல்கப் புரிவாயோ – சீதச்
செழுந் தாமரை விரும்பு சேயிழையாள் மார்பா!
தொழுந் தாமரை யடியாய்! சொல். 19

பித்த மயக்கிற் பிணிப்புண் டுழல்வேனைச்
சித்தந் தெளியுந் திறமடையப் – பத்தி
நிலையு மடியார்க்கு நீடுயரம் போக்கும்
அலையுட் கிடந்தா யருள். 20

வம்பணிந்த கூந்தன் மடவார் படு வலையுள்
நம்பிக் கிடந்துழலும் நாணிலிக்கும் – உம்பர்
அடையா நிலை பெற் றடைய வருமோ
படி யேழு முண்டாய் பகர். 21

நறவார் துளவணிந்த நாரணன்றன் பாதம்
மறவாது நெஞ்சே வழுத்தின் – பிறவாத
மெய்ப் பதவி யெய்தும் விறற் காலன் வெம் பாசம்
எய்ப்பதனுள் வாரா திசைந்து. 22

சொல்லற் கரிதாஞ் சுகப் பொருளைத் தீ வினையோர்
புல்லற் கரிய புகழ்ப் பொருளை – மல்லற்
றொடை மாறன் போற்றுந் துணையிலியை நெஞ்சத்
திடர்மாற மென் கிளியே யேத்து. 23

ஆலத் திலையி லறி துயில்கொ ளம்மானை
ஞாலத்தை முன்னளந்த நாயகனைச் – சீலத்து
நன் முனிவ ரேத்து நறுங்கமலை கேள்வனையே
கன்மனமே யேத்தக் கருது. 24

சங்க முறலாற் றளிர்க்கொடியுந் தோன்றுதலால்
பொங்கு மணியும் பொலிந்திடலால் – செங்கண்
நெடுமாலே நின்னை நிகர்க்குமா லாழி
வடுமாற்ற மன்று வழக்கு. 25

எங்கள் பெருமானை யேந்திழையாள் நாயகனை
அங்கங் கரிய வழகானைப் – பொங்கும்
சுடராழிக் கையானைத் தொல்லமரர் கோனை
இடராழி நீங்க விறைஞ்சு. 26

அன்னந் துறந்தா ளணி துறந்தா ளந் தளிர்க்கை
வன்னங் குலவு வளை துறந்தாள் – இன்னும்
உயிர் துறக்கு முன்னே யுதவாயோ வாயர்
தயிரிறக்கும் வாயுடையாய் தந்து. 27

கரமொன்றி லாழி கரமொன்றிற் சங்கம்
உரமொன்றில் மா மணிதா னொன்றும் – சிரமொன்றில்
தாரொன்று மா முடியே தாமரை யுமுந்தி தனில்
காரொன்று மேனியன்பாற் காண். 28

பொங்கெரியி னின்று புலனைந்துந் தாமடக்கிப்
பங்கமிலா நற்றவங்கள் பாரித்தும் – எங்கும்
கரந்துறையுங் கார் முகிலைக் காணாதார் காணார்
நிரந்தரமா நல்லின்பம் நேர்ந்து. 29

நந்தமரு முன்கை நறு நுதலாள் மார்பிருக்க
அந்தமிலா வன்பா லழுங்கினேன் – வந்தென்
அருகிருக்குந் தோழீ யவன்மார் பணைந்து
பருகிடநீ செய்வாய் பரிந்து. 30

நறுந்துளவஞ் சூடி நறு நுதலாள் நெஞ்சம்
வெறுந் துகளாச் செய்தல் விறலோ? – உறுங்கவலை
நீக்கி யடியாரை நெஞ்ச மிக மகிழ
வாக்குந் தனிப் பொருளே யன்று. 31

நின்னைப் பிரிந்து நிலை யிலா விவ் வுலகில்
துன்னும் வினையிற் சுழல்வேனைப் – பொன்னிற்
பொலிகின்ற வாழிப் பொரு படையோ யென்றன்
வலி துன்று வெந் நோயை வாட்டு. 32

செம் பொருளை யென் மனத்துச் சேர வருளுங்கொல்
வெம் பிறவி சேர வெருட்டுங்கொல் – உம்பர்க்
கமுதளிக்க முன்னொருகா லாரணங்காய்த் தோன்றி
எமதகத்து நிற்கு மிறை. 33

பகருங்கால் மாயன் பதமன்றி நாளும்
புகலும் பிறிதுண்டோ போக – இகல் கடந்த
ஆயன் மணி வண்ணன் அன்ப ரகத் துறையும்
நேயனை நீ நெஞ்சே நினை. 34

நினைக்கும் விழுந்தரற்றும் நின்மலா வென்னும்
எனைக் காக்க வாராயோ வென்னும் – வினைக்கு
விழு மருந்தே யென்றன் விளங்கிழையா ளுய்யத்
தொழுதலல்லா லென்செய்வேன் சொல். 35

அறையு மறையு மருநூலும் யாவும்
கறையுண் மனத்தர் கருதார் – குறை வில்லா
நற் குணத்தி னார்க்கே நலந்தருமால் நல் விளக்கு
எக் குணமோ கண்ணிலற்கு மிங்கு. 36

இங்கொன் றறியா வெளியேன் மட நெஞ்சம்
தங்கும் வினையுள் தளராது – பங்கயக்கண்
மாயா வுனதடியை வாழ்த்திக் கரை சேர
ஓயா தருளா யுவந்து. 37

பன்னிருவர் பாடும் பெருமான் பதமலரைத்
துன்ன ஒருநாள் துணியாயோ – கன்னல்
சிலை வளைக்கும் சேயிழையார் செய்ய வுருவாம்
வலை யலைக்கும் நெஞ்சே வழுத்து. 38

பவளக் கொடி தாங்கிப் பன் மணியு மேந்திக்
குவளைக் கரு நிறமுங் கொண்டு – தவளத்
திரு முறுவல் வில் வீசுந் தெய்வக் கடலென்
மருவிதய மேவு மகிழ்ந்து. 39

நீலத் திருமேனி நெஞ்சங் கவர்ந்திடுமக்
கோலத்தை யென்னென்று கூறுவேன் – ஞாலத்துப்
பொங்கோத நீரிற் பொலிதா மரையன்ன
மங்காத வாய் கண் கை வாய்ந்து. 40

வாழ்த்துவார் வார் கழலை வண் முடியின் மீதணியப்
பாழ்த்த பெரும் பிறவி பாறிடுமால் – வீழ்த்த
நறை கமழு மென்றுளவ நாரணனா மெங்கள்
இறை யடியை யெப்பொழுது மேற்று. 41

ஏறுகந்த செஞ்சடையான் ஏற்ற நறு மலரான்
கூறுகந்த செங்கண்ணா! கோவிந்தா! – மாறொருவ
ரில்லா வுரத்தானே யின்புறவே நின்னடியைப்
புல்லா நினைத்தேமைப் போற்று. 42

பூ மகளும் நா மகளும் போற்றிப் பொறி யரவின்
மாமகரப் பாற் கடலின் மன்னிய வெங் – கோமகன்றன்
பொன்னடியை நன் மனமே போற்றிப் புகழ்ந்திடுவாய்
வெந்நரகஞ் சேரா விரைந்து. 43

விரைந்து தொழில் கேட்பர் விண்ணுலகி னுள்ளார்
கரைந்த மனத்தினராய்க் காரின் – புரைந்த
திரு மேனி மாயன் றிருவடியை நெஞ்சிற்
றருமேலோர்க் கிவ்வுலகிற் றாழ்ந்து. 44

தாழுங் குழல் மடவார் தம் வலையிற் சிக்காது
வாழு மட நெஞ்சே வாழ்த்துவாய் – ஊழின்
களங்கறுத்தான் கஞ்சத்தான் காண வறி யாத
களங்கறுத்த மேனியனைக் கண்டு. 45

கண்டுந் தெளியாது காசினியீர் காழ் பிறவி
மண்டும் வினை யுண் மயங்குவீர் – தண்டுளவன்
பேரோத நீங்காப் பெருந்துயரம் நீங்குமால்
காரோத வண்ணன் கழல். 46

அருட்கடலா யாயிருரா யன்பனா யென்னுள்
மருட்கை தனையொழித்த மாயன் – திருக்கழலைப்
பற்றார் நெடுங்காலன் பாசக் கடுவலையு
ளுற்றார் பிழையா ருழன்று. 47

தெய்வந்தா னெங்குந் திகழ்ந்துளதா லென்றுரைத்துப்
பொய்வந் தனையும் புரியாமல் – ஐயோ
நெடுநரகில் வீழாது நெஞ்சே நீ மாயன்
கடிமலர் சேர் பொன்னடியைக் காண். 48

எல்லாப் பொருள்கடொறு மெங்கு நிறைந்துறையும்
மல்லார் தடந்தோள் மணிக் குன்றைக் – கல்லார்
இருவினையு ளாழ்ந்திட் டிடருறுவர் நெஞ்சே
கருதரிய நாரணனைக் காண். 49

ஆனந்த மாகி யறிவாகி நின்றெங்குந்
தானந்த மில்லாத் தனி யுருவாய் – மோனந்
தனையடைந்தா ருண்டருளுந் தண்ணமிர்தாம் நெஞ்சின்
மனையடைந்த செங்கணெடு மால். 50

பற்றற் றொளிரும் பரம் பொருளைப் பாருலகிற்
கற்று மறியாக் கயவர்காள்! – சற்றே
நினைந்துய்ம்மின் நீண் மறையின் சார மிதுவே
புனைந்துரையு மன்று பொருள். 51

இருளா மயக்கொழிய வெஞ்ஞான்று நெஞ்சின்
மருளா வகை நிரம்பு மாயன் – அருளாம்
பொழியமுத முண்ணுமா போற்றுவேற் குண்டோ?
பழ வினையின் பற்றகலாப் பண்பு. 52

இன்பம் பெருகு மெழினலமுந் தான் பெருகும்
துன்பம் குறையுந் துணிவுண்டாம் – அன்பான்
மனமொழிக ளுக்கெட்டா மாய னடியைத்
தினநினைவார்க் கிவ்வுலகிற் றேர்ந்து. 53

பைந்துளவத் தாமன் பதம் பணிய வெவ் வினைகள்
நைந்து மனமே நலமுறுவாய் – செந்துவர்வாய்
மாதரார் வெவ்வலையின் மன்னி மயங்காது
போதராய் நெஞ்சே புகுந்து. 54

கை விளங்கு மாழிக் கரு முகிலை நெஞ்சத்து
மெய் விளங்க வேத்த விரையாதார் – நெய் விளக்கு
சூலத்தான் வெம்பகட்டிற் றோன்றுங்கா லென் செய்வார்
ஆலத் திலையா னரண். 55

செங்கமல வாண் முகமுஞ் செய்ய திருக் கண்ணும்
பைங் குமுத வாயும் பகர் செவியும் – மங்கை
உறைகின்ற பொன் மார்பு மோங்கென் மனத்தே
நிறைகின்ற வேறென் நினைப்பு. 56

நெஞ்சத்து ணிற்கு நிமல னடி யிணையை
வஞ்சத் திருக்கவிழ வாழ்த்துங்கால் – கஞ்சத்துப்
பெண்ணருளு முண்டாம் பெரும் பிறவி நீங்குமால்
நண்ணரிய முத்தியுமாம் நாடு. 57

நெஞ்சங் கடந்த நிமலா விரு வினையின்
வஞ்சங் கடக்க வழி யருளாய் – நஞ்சக்
கறைக் கண்டன் றுன்பொழித்த கார் முகிலே! வண்டார்
நறைக் கண்டத் தண்டுளவோய் நன்கு. 58

நாடுங்கா னன்னெஞ்சம் நாரணனைத் தானாடும்
பாடுங்கா லன்னான் பதம்பாடும் – நீடு புகழ்த்
தெய்வத் திருக் கழலைச் சென்னி புனைந்திடுமால்
உய்யத் தடையோ வுரை. 59

இன்ப மயமா யிருப்பதே யல்லாமல்
துன்பமய மாயிருக்கத் தோன்றுமோ – அன்பன்
தனதடியை நன்மலரால் தாழ்ந்திறைஞ்ச நாளும்
வினை கழல வெம் பிறவி விட்டு. 60

பாதம் பணிந்த பயனென்கொல் பங்கயத்து
நாதன் வணங்குகின்ற நாரணா – வேதந்
தொழுகின்ற பாதத் துணையா யடியேற்
கழுகின்ற நோயழியா தால். 61

நெஞ்சங் கலங்கி நிறை யழிந்து நிற்கின்றாள்
தஞ்ச மிவட்குண்டோ சாற்றுவாய் – கஞ்சத்
திருக் கையாய் கண்ணாய் திரு மார்பா நெஞ்சத்
திருக் கையாய் காண வினி. 62

நாண் மலர் சேர் பொய்கைக் கண் ணால்வாய் மதகரிமுன்
கோண்முதலை கௌவக் குலைகுலைந்து – நீண்மறையின்
மாமுதலே யென்றழைப்ப மற்றொன்றும் நோக்காமல்
ஆமுறையாற் காத்தா னரண். 63

புருவச் சிலையும் பொழிய முதச் சொல்லும்
உருவக் கருநிறமு மோங்கிப் – பருவத்
தெழுந்ததோர் மா முகிலே யென் மனத்து வெம்மை
விழுந்ததே யென்னோ? வியப்பு. 64

வஞ்சப் புலனடக்கி வள்ளா லுனதடியென்
நெஞ்சத் திருத்த நினையாயோ – கஞ்சக்
கருவிழியாள் கல்லுதிக்கக் கண்டாய் கவலும்
இருவினையி லாழு மெனக்கு. 65

கோசிகன்றன் வேள்வி குறையறமுன் காத்துகந்
தேசிகனை நெஞ்சத்துத் தேராது – பாச
மனைமக்கள் வாழ்வுகந்து மாநரகஞ் சேரும்
வினைமருவும் வெய்யேனை வேண்டு. 66

இன்றென் னிடர்தீர வெம்மா னிரங்குதியால்
கன்றும் வினையிற் கலங்காது – துன்றும்
செழுங்கொன்றைச் செஞ்சடையான் செல்ல லொழித்தாய்
அழுங்கும் வினையேனை யாள். 67

வாள் விழியார் மாய வலையில் வருந்தாதுன்
றாள்வழியே நெஞ்சந் தனித்தொழுக – நீள் விழியால்
பாராயோ ஐயா பரமா பெருமானே!
தீராயோ வென் கவலை தேர்ந்து. 68

கங்கை யுறையுங் கழலானைச் செஞ்சடைமேல்
மங்கை யுறையு மழுவானைத் – துங்க
விடையானை முன்னம் விடை தொலைத்த வாழிப்
படையானை நெஞ்சே பகர். 69

பண்ணுறுஞ் செவ்வாய்ப் பசுங்குழவி மெல்லுருவம்
கண்ணாரக் கண்டு களியேனோ! – புண்ணாறும்
பொய்யைச் சுமந்து புலை நரகில் வீழாமல்
உய்யும் வழியை யுணர்ந்து. 70

கண்டுங் கருமக் கடலுட் கவிழ்ந் துழன்று
மண்டும் பிணியின் மயங்காது – திண்டிறல்சேர்
வேதச் சிரங்காணா மெய்ப் பொருளி னற்றுளவப்
பாதத் துணை மனமே பற்று. 71

பற்றற் றொளிரும் பரம் பொருளை யல்லாது
மற்றொன் றறியா மனத்தினர் காண் – எற்றும்
பவத் திரையை நீக்கிப் பணிந்தோரைக் காக்குந்
தவத்தினரா நெஞ்சே தரி. 72

இன்றென் னிடரொழிக்க வெம்மா னெழின்மார்வந்
துன்று நறுந்தார் துருவுமினே – மன்றற்
கொடிசே ரிடையீர் குளிர் முத்துஞ் சந்தும்
கடியாவே யென்றுயரைக் கண்டு. 73

நாகத் தணையில் நலங்கிளர வின்றுயில்கொள்
மேகத் துருவை விறலோனைக் – காகத்
தொரு நயனம் போக்கு முரவோனை நெஞ்சே
யிருநயனங் காண வியை. 74

தாக்கு துயரந் தவிர்த்துச் சுகவருளைத்
தேக்கு பரமன் திருவடியை – நீக்கமற
நெஞ்சே நினைகுதியே னின்மலமா மென்னிலையை
எஞ்சா தடைவே னியைந்து. 75

ஐம்புலனிற் செல்லு மறிவை யொழித்துதறிச்
செம்பொருளிற் சேர்க்குந் திறங்கேட்கின் – அம்பரமாம்
போக்குவர வற்றிருக்கும் பூரணத்தை யெஞ்ஞான்றும்
நீக்கமற நெஞ்சே நினை. 76

மதவா ரணங்கொன்ற மாதவனை யென்கண்
உதவாது வேறெதனை யோர்வீர் – இதமார்ந்த
மென்மொழியீ ரென்றன் மிகுவே தனைதீரப்
பன்மொழியா லுண்டோ பயன். 77

செங்கமலச் செல்வி செறிந்தினிது வீற்றிருக்கும்
பொங்கு மணி மார்பப் புனிதன் பால் – சங்கை யறச்
சென்றுரைமின் செங்காற் சிறையனமே! வல் வினையேன்
கன்று துயரங் கரைந்து. 78

திரைத்துக் கரைபொரூஉந் தெண்டிரையே! மாயன்
வரைத் தடந்தோள் சேர வழியென் – உரைத்தும்
உணர்வரிய மெஞ்ஞான வுத்தமனை நின்பால்
நிணமுலவு நேமியனை நேர்ந்து. 79

உணர்வரிதாய் நெஞ்சத் துறுவதா யென்றும்
புணர்வரிதாய் நின்ற பொருடான் – குணங்குறிசேர்
புல்லறிவு கொண்டு புகலற் கெளிதேயோ
சொல்லரிய நெஞ்சேநீ சொல். 80

தாமரையைக் கண்டு தருக்கிச் செருப்புரியும்
காமருவு கண்ணுங் கனியிதழும் – மாமறைகள்
தேடுந் திருவடியும் தெய்வத் திருமார்பும்,
நீடுறையு மென்னெஞ்சி னேர்ந்து. 81

எந்தக் கரந்தா னெழிற்கமலை மெய் தழுவும்
அந்தக் கரத்தா லணைத் தருள்வாய் – சந்தம்
அமரு நெடுங் கூந்த லாயிழையா ளுய்ய
இமிர் சங்க மேந்தினா யின்று. 82

இன்றென் மடமா னிரு விழிகள் நின்னுருவம்
குன்றாது காணின் குளிருமால் – அன்றேல்
பிறை மதிக்குங் காமன் பெரு மலர்க்கு மாற்ற
நிறையிவட்கு முண்டோ நிலை. 83

கருத்தவிழக் கார் முகிலின் கங்கைக் கழலைத்
திருத்தமுற வேத்தத் தெரியின் – வருத்தமுறு
வெம்பவ நோய் நீங்கும் வியன் பதமு மெய்தலுறும்
கம்பமுறு நெஞ்சகமே காண். 84

வண்டுறங்குங் கோதை மடமானைத் திண்மார்பிற்
கொண்டு விளங்குங் குணக்குன்றைக் – கண்டு
தொழுதா ளுனை நினைந்து துன்புற்றா ளென்மின்
எழுதா வுருவுடையீ ரின்று. 85

பைஞ்சிறைய மென் கிளியே பங்கயக்கண் மாயன் பால்
நஞ்சனைய வாட்க ணறுநுதலாள் – கஞ்சமலர்க்
கண்டுயிலா ளன்னங் கருதா ளென மொழிந்து
வண்டுளவத் தாரினைநீ வாங்கு. 86

பெரும் பிறவி நீங்கிப் பிரிவிலா னந்த
அரும்பதவி யெய்த வவாவின் – சுரும்பு
மருவார் துளவணிந்த மாயன் பதத்தை
ஒருவாது நெஞ்சே யுரை. 87

மந்திரமும் வேண்டேன் மருந்தறியேன் மாணிக்கச்
செந்திருவி னாயகன்றன் சேவடியைச் – சிந்தித்துத்
தோத்திரிக்கப் பெற்றேன் துயரங்க ளென்செய்யும்
நாத்திரிக்கே னன்னெஞ்சே நான். 88

தந்தால் பிழைத்திடுவாள் தாராக்கால் நீ பிழைப்பாய்
செந் தாமரையாள் செறி மார்பா! – அந்தோ
மலர்க் கணைக்கும் மா மதிக்கும் வார் கடற்கு மேங்கும்
கொலைக் கண்ணாட் குன்றார் கொடு. 89

முன்னிகழ்ந்த நற் குறியால் மொய் குழலாள் வெண் மணன்மேல்
பொன்னெகிழ மேனி புலம்பெய்த – இன்னருளால்
நேரா தவளை நெருங்கா திருந்தனையே!
காராயா! வென்னோ? கருத்து. 90

கடிசேர் துழாய் முடியன் காமரு பூங் கோதைத்
துடி சேரிடையாள் துணைவன் – அடி சேர்ந்து
போற்றும் புகழுடைய புண்ணியரைத் தன்னுலகில்
ஏற்று மிறைவனை நீ யேத்து. 91

அமுதிற் பிறந்த வணி யிழையாள் கோனைக்
குமுதத் திரு மொழியீர் கொண்டு – நமதிந்தக்
காரிகையின் துன்பக் கடலைக் கடத்துவிரேல்
நேரிழையு முய்வாள் நினைந்து. 92

காண்டற் கரியானைக் கண்டக்கா னீங்கானை
வேண்டற் கெளியானை வேண்டினரின் – தாண்டற்கு
மேவானைத் தம்முள்ள மேவினர்க்கு நல்லமிர்த
மாவானை நெஞ்சே யடை. 93

தண்டுளவ நீண் முடியுந் தாமரையாள் சேர் மார்பும்
புண்டரிக வாள் விழியும் புன் முறுவல் – கொண்டிலகு
செவ்வாய் மலருஞ் செறிபுருவ வில்லிணையும்
எவ்வா றினிமறப்பேன் யான். 94

வண்டுளவந் தங்கு மணி முடியான் வாண் மதி போல்
விண்டு விளங்கும் வியன் வளையான் – தொண்டர்
துயரொழிக்கு நேமியினான் தொல் வினையைப் போக்கும்
மயலொழிக்க வென் மனத்து வந்து. 95

சிற்றவையின் சீற்றச் செருக்காற் சினங்கொண்டு
பெற்றவனை நோக்காப் பெரு வனத்தை – யுற்றோர்
அருந் தவத்தைச் செய்த அழகனை முன் காத்த
வருந் துவரை மன்னனை நீ வாழ்த்து. 96

நெஞ்சக் கொடுமை நெகிழப் புறம்புறையும்
வஞ்சக் கொடு வினைகள் வாட்டமுறக் – கஞ்சத்
திருவுந்தி மேவும் திருத்தன்றா ணாளு
மருவு மனனே மகிழ்ந்து. 97

ஆர்கலியை முன்கடைந்த வச்சுதா வம்புலிசேர்
வார்சடையன் காணாத வள்ளலே – கார்புரையும்
வண்ணத்தாய் வந்தென் மனம்புகுந்தாய் அன்பரகத்
தெண்ணத்தாய் என்னை யருள். 98

ஏனத் துருக்கொண்ட வெம்மானைக் கண்டு சொலா
மீனத் தடங்கண்ணாள் மெய்தளர்ந்தாள் – கூனற்
பிறைதொழலும் வேண்டாள் பிணைமலரும் வேண்டாள்
குறையவன்மால் தோழிநீ கூறு. 99

பால னுரையின் பயனறிய மாட்டாது
சாலக் கனன்றவனைச் சாதிக்கக் – கோலும்
கொடியானை மாய்த்துக் குழவியை முன்காத்த
நெடியானை நன்மனமே நேடு. 100

எப்பொருளுந் தந்தருளு மேந்திழையாள் நின்மார்பிற்
றப்பறவே நிற்கத் தரித்திரன்போல் – ஒப்பற்ற
மாவலிபால் செல்லும் வகையென்கொல் மாயவனே!
மூவடிமண் ணீயிரக்க முன். 101

வைய மளந்தானை வார்கடலின் மேயானைத்
துய்ய வரவிற் றுயில்வானைச் – செய்ய
மலருகந்த மானை மணந்தானை யன்பர்
நலமுகந்த நாதனையே நாடு. 102

பூசுரரை வாட்டும் புவி வேந்தர் மா முடிகள்
ஆசற முன்வீழ அவதரித்து – வீசும்
மழுவாயுதங் கொண்ட மாயவனே யன்றோ
தொழுவார் துயர்க்குத் துணை. 103

சங்கற்ப மற்றுத் தனியே சிறிதிருக்க
எங்கட் கருள விரங்காயோ – செங்கைச்
சிலைவளைத்த சேவகனே சேயிழைக்கா முன்ன
மலைவளைத்த வாரமுதே யன்று. 104

கழல் கொண்டு முன்னங் கடுங்கானஞ் சென்ற
நிழல்மணி வண்ணா நினையே – தழல் வண்ணன்
போற்றிப் புகழுரைப்பப் பொல்லா விரவொழித்தா
யாற்ற வடியேற் கருள். 105

இன்பம் பயக்கு மிருணீங்கு நம் மனத்துத்
துன்பந் தனையொழித்துத் தூய்தாக்கும் – வன் பரல் சேர்
கானந் தனைக் கடந்து காரரக்கர் போரழித்த
வானந்தா னந்த னடி. 106

தந்தை யுயிர் துறக்கத் தாய்மார் தளர்ந்தலற
நைந்து நகர நனிவருந்த – எந்தாய் முன்
மைப்படியு மேனி வருந்த நெடுங்கானம்
எப்படி நீ சென்றா யியம்பு. 107

செம்பொற் சிலை தரித்துச் சேயிழையும் பின்தொடரத்
தம்பிக் கரசளித்துத் தாயின் சொல் – நம்பி முன்
வெங்கானஞ் சென்ற விறலோன் பதமன்றி
எங்காம் புகன் மனமே யின்று. 108

பைம்பொன் முடி துறந்து பாரிழந்து தேவி யொடும்
வம்பு மலரடிகள் வாட்டமுற – நம்பா
கடுங்கானஞ் சென்ற கதையை நினைத்தால்
ஒடுங்காதோ வென்னெஞ்ச மோய்ந்து. 109

வனங்கடந்து வானவர்க்கா வாளரக்கர் மாய்த்த
கனங்கொண்ட மாமேனிக் கண்ணே! – முனங்கொண்ட
தீவினையேன் றுன்பம் சிதறக் கடைக்கணிப்பின்
மேவிடுவ லின்பம் விரைந்து. 110

வைய மிரங்க வனத்து நடையுகந்த
ஐய னடியை யடைந்தக்கால் – துய்ய
துரியநிலை மேவத் துணையாகு முய்ய
வரிய வழியா மது. 111

தம்பி மொழி தவிர்த்துத் தாரத்தின் மென் மொழியை
நம்பி வனத்தி னனியுழன்று – வெம்பிக்
கொடுந்துன்ப மேவிக் குவலயத்தைக் காத்த
அடுஞ்சிலையா யென்னி யளி. 112

நங்கைக் கிடரொழித்து நன் முனிவர் வெந்துயரைப்
பங்கப் பட வொழிக்கும் பண்பினதாம் – தங்கு புகழ்
வண்ணங் கரியன் வளையாழி யங்கையன்
தண்ணந் துளவன் சரண். 113

நின்னடியிற் சேர்ந்த நிமல விபீடணற்குப்
பொன் முடியைச் சூட்டும் புரவலனே! – என்னுடைய
வல் வினையைப் போக்கும் வகை யறியா யென்கொலிது
சொல்லரியாய்! காரணத்தைச் சொல்? 114

வேறு

நெடியானே நின்னை நினைந்துருகி நிற்குங்
கொடியாளை யென்னோ குலைத்தாய் – படி மேல்
துடி நேரிடை யாட்குத் துன்பமுன் செய்தாய்
அடி சார்ந்து வாழ்த லரிது. 115

வாரார்ந்த கொங்கை மடவா ளுவந்துறையும்
தாரார்ந்த மார்பன் றனிமுதலான் – போராரும்
தேரார்ந்த வாளரக்கன் றேயச் சரந்தொட்ட
காரார்ந்த மேனியனைக் காண். 116

வனகரிக்கு முன்னின்றான் வானவர்கள் போற்றுந்
தினகரனை முன்மறைத்த தேவன் – நினையின்
கனகனுரங் கீண்ட கையுகிரா னம்மான்
அனக னடியே யரண். 117

வேறு

விடந்தாங்கு வாளரவின் மேவிக் கிடக்கும்
கடந்தாழு மால்களிற்றைக் கண்டு – மடந்தாங்கு
நன்னெஞ்சே சேரற்கு நாடாது நாரியர்பா
லின்னஞ்செல் கின்றனையே யேன்? 118

காரரக்கர் சேனை களத்தவியக் கார் முகத்து
வார் கணைகள் தொட்ட வரை மார்பா – நேர் முகமாச்
சீறிவரு மிவ்விருளைக் கண்டு சிலைநுதலா
ளூறடையா வண்ண முரை. 119

தின்று கொழுத்துத் திரியுஞ் சிறியோர்பால்
சென்று மடநெஞ்சே சேராதே – குன்றின்
முழையுறைந்த வானரத்தை மொய்ம்புடனே காத்த
மழைமுகிலை நன்னெஞ்சே வாழ்த்து. 120

நாடு துறந்து நகர் துறந்து வானவர்க்காக்
காடு புகுந்த கருங்களிற்றை – வீடு புகல்
வேதங்கள் காணா விழுப்பொருளை நாடுவேற்
கேதங்க ளுண்டோ வினி. 121

செந்திருவி னாயகனைத் தேவர் பெருமானை
மைந்துடைய வில்லை வளைத்தானை – நொந்து
தனையடைந்த தொண்டர் தமையளிக்கு மின்பக்
கனவுருவை நெஞ்சே கருது. 122

மானருகில் நிற்க மறித்துமொரு மானுக்கா
வேனோ வுழன்றா யிறைவனே? – வானமுகில்
மாமழைதா னிற்க மதியாது கானனீர்
போமது போல் நெஞ்சிற் புரிந்து. 123

நெஞ்சங் கனன்று நிமிர்வில்லின் மொய்கணைக
ளஞ்சத் தொடுத்த வரக்கனைமுன் – கஞ்சப்
பிரமன் கணையால் பிரிந்துடலம் வீழ்த்தும்
பரமன் பதமெனக்குப் பற்று. 124

பைம்பொன் முடிசிதறப் பாய்பரியுஞ் சாய்ந்துவிழச்
செம்பொற் சிலைமுறியத் தேரொழிய – வும்பர்
மனமகிழ ராவணனை வாளமருள் வீழ்த்த
கனமுகிலை நெஞ்சே கருது. 125

வம்பவிழுங் கூந்தன் மடமா னுடனாக
வெம்புநெடுங் கான்புகுந்த வேழத்தை – நம்பிக்
கருத்திருந்து கின்றேன் கடுவினைக ளென்னைக்
கருந்திருத்த மாட்டா கறுத்து. 126

மான்பிடித்துத் தாவென்ற மாணிழையின் சொல்விரும்பிக்
கான்பிடித்துச் சென்றோர் கடுங்கணையால் – வான்பிடிக்க
மாரீ சனைக்கொன்ற வள்ளலே யென்மனத்து
ளோரீச னாவா னுவந்து. 127

கும்பமுனி தந்த கொடுமரத்தாற் கோளரக்க
ரும்ப ரடைய வொழித்தருளிச் – செம்பொன்
முடிகவித்து வீடணற்கு மொய்குழலை மீட்ட
வடிகளென் னெஞ்சத் தரண். 128

செங்கட் சிலைதரித்துச் சேண்விளங்கு மாமுகில்போல்
கங்கைக் கழனோவக் கானகத்து – மங்கைக்
கிடரொழிக்கச் சென்ற வியல்பை நினைந்தால்
தொடருமொ வெம்பிறவி சொல். 129

அன்ன மறியா ளணிமலருந் தானணியாள்
கன்னல் மொழியாள் கதியென்னே – முன்ன
மொரு கொடிக்கா வாழி யுயரணையைச் செய்தாய்
வருகொடிக்கு நல்காய் வரம். 130

சிறந்த பெரும்புகழ்சேர் தேவர்க்கா நீச
ரிறந்துபட நூறி யிலங்கை – யறந்திகழும்
வீடணற்குத் தந்த விறலோனே யென்னெஞ்சத்
தீடணைக ணீங்க விரங்கு. 131

முயன்றும் பயனறியேன் மொய்வினையை நீக்க
அயன்றன் விதியறிவா ராரோ? – வயந்தங்கு
நின்மாயை வல்லபத்தை நீக்க வெனக்காமோ
பொன்மானைக் கொன்றாய் புகல். 132

உவந்து மடநல்லா ளுன்புயத்தை மேவச்
சிவந்த விழிகொண்டு செற்றாய் – பவந்தன்னை
நீக்கு நெடியானே நின்னையுமென் னேரிழையாள்
காக்க நினைத்தல் கடன். 133

கடஞ்சென்று கானோவக் கார்முகிலே நங்கை
யிடஞ்சென்று மென்கனிக ளேன்று – தடம்புயத்து
வாலி வலியழித்த வன்றிறலே யென்மனத்தைக்
கோலி யெழுந்த குணம். 134

வெய்ய வனங்கடந்து வேத முதல்வன்சொற்
செய்ய விலங்கையினிற் சென்றருளித் – துய்ய
விளங்கிழையைக் கண்டு விதமுரைத்த தூதை
யுளங்குளிர நெஞ்சே வுரை. 135

என்றின் குலத்துதித்த எம்மா னிலங்கருவிக்
குன்றின் பதிவிருந்த கொற்றவனைத் – துன்று
மருங்கலைசேர் மாருதியா லன்புருக நட்டாய்
நெருங்கென் மனத்துறைய நேர். 136

மங்கைக் கிடர்கடிந்த மாய னடிக்கமலம்
தங்கத் தரியாத் தலையெதற்காம் – செங்கைச்
சிலைதரித்து வெங்கானஞ் சென்றரக்கர் மாளக்
குலவுபுகழ் மேவக் குறித்து. 137

சார்ந்துவந்து நல்லுருவந் தாய்போலத் தாங்கிக்
கூர்ந்த நடுவிரவிற் கோறற்கா – வாய்ந்த
கடுவிடத்தைப் பூசிக் கனதனத்தைத் தந்தாள்
மடிவடையச் செய்தானை வாழ்த்து. 138

உழல்மனமே யுத்தமனை யுன்னித் தொழுது
விழன்பிறவி நீக்க விரைவாய் – குழலூதி
ஆநிரையை மேய்த்த வடலாழி யண்ணலே
தீநிரய நீக்குந் தெளி. 139

ஓரா துழல்நெஞ்சே யுத்தமனை யெக்காலும்
நேராக நின்று நினைகுவாய் – சீராயன்
தன்னடியைப் போற்றுந் தகையினார்க் கன்றோத
னின்னுலகை யாக்கு மியைந்து. 140

பாழிப் பெரும்புயத்துப் பாண்டவர்க்கா வன்றமரி
லாழிப் படையெடுத்த வம்மானைத் – தாழிக்கு
வீடருளுந் தாளானை வெந்நரகஞ் சேராது
நீடருள நெஞ்சே நினை. 141

நெஞ்சி னிருணீங்கி நேயம் பெறநின்பொற்
கஞ்சத் திருவடியைக் காட்டுதற்குத் – துஞ்சும்
மழலைச் சிறுகுழவி மாமறையோற் கீந்த
குழலைத் தருவாயாய் கூறு. 142

சங்காழி யங்கைத் தனிமுதலே சார்ந்தவர்க்கு
மங்காத வின்ப மகிழ்ந்தீவாய் – பொங்காத
பாண்டவர்க்கு வாழ்வளித்த பைந்துளவ மாமுடியாய்
யீண்டெமக்கு நல்கா யியைந்து. 143

நெஞ்சிற் கறைகொண்ட நீசர்தங் கூட்டத்துக்
கொஞ்சிக் குலவிநீ கூடாதே – பஞ்சவர்க்குப்
பாரளித்த வையன் பதமலரை யெஞ்ஞான்றும்
நேரகத்து நிற்க நினை. 144

கஞ்சத் துறையுங் கனங்குழையா டன்னொடுமென்
நெஞ்சத் துறைய நெடுமாலே – வஞ்சச்
சகடுதைத்த தாண்மலரோய் தண்டுளவத் தாரோய்
பகடொழித்த பண்பாளா பார். 145

நினைப்பில்லா மாக்க ணினையகிலே னெஞ்சிற்
றினைப்பொழுது நீக்கேன் சிறியேன் – பனைத்தாள்
மதகரிக்கு முன்னின்ற மாயவனை யெங்க
ளிதகரனை யெப்பொழுது மேன்று. 146

அடியாற் படியளக்கு மாயிழைக்கா முன்னம்
விடையே ழடர்த்தருளும் வேய்த்தோள் – மடமானைத்
தண்டுளவ மார்பிற் றரிக்குங் கழனினைக்கும்
தொண்டர்தமை நீக்குந் துயர். 147

இனியுண்டோ நன்னெஞ்சே யெம்பெருமா னம்மைத்
துனிநீக்கிக் காக்குந் துணைவன் – கனவிளவின்
காயுதிர்த்துப் பேயின் கடுவிடத்தை யுண்டருளும்
சேயுதிக்கச் சென்மம் செறிந்து. 148

எந்தா யுனதடியை யேத்தித் தொழுவேனை
நந்தா தளிக்க நயவாயோ – பைந்தா
ரருச்சுனற்குத் தேரூர்ந்த வம்மானே நாகத்
தருச்செறியுங் கைத்தலத்தாய் தந்து. 149

தாட்கமலம் நெஞ்சிற் றரிக்கத் தமியேனை
யாட்கொள்ள வாராயோ வண்ணலே – பூட்கைப்
பொருமதத்து வேழத்தைப் போர்விசயன் றன்னால்
செருவொழித்த சேவகனே செப்பு. 150

பெய்வளையார் மாயப் பிணக்கிற பிணிப்புற்றே
யுய்வகையை யோரா துழல்நெஞ்சே – மைவண்ணத்
தாயர் கொழுந்தை யருமறையி னுட்பொருளைத்
தூய வமுதைத் தொழு. 151

பாதம் சிவப்பப் பழுதற்ற பாண்டவர்க்கா
வேத மறியா விழிப்பொருளே – தூதனாய்ச்
சென்ற திறத்தைச் சிறிது நினைத்தக்கால்
குன்றாதோ வெவ்வினையின் கோள். 152

தேர்த்தட்டின் முன்னின்று செம்பொருளை நீயுரைக்கப்
பார்த்தன் தெளிந்த பயனென்கொல் – பேர்த்தவனும்
பிள்ளை யுயிர்துறக்கப் பேதை கலங்குவதேன்
உள்ளற் கரியா யுரை. 153

வஞ்சினமுங் குன்ற வளையாழி கைக்கொண்டு
வெஞ்சினத்தால் வீடுமனை வீட்டுவான் – கஞ்சத்
திருவடிகள் நோவத் திருத்தேர் துறந்த
கருமணியை யென் கண்ணே காண். 154

பாம்பணையின் மேவிப் படுகடலுட் கண்டுயிலும்
தேம்புணர்ந்த தண்டுளவத் தேவர்பிரான் – வாம்பரிமாத்
தேர்நின்று பார்த்தன் தெளியத் தெரிந்துரைத்த
நேர்பொருளை நெஞ்சகமே நேடு. 155

அளியுறையு மென்கூந்த லாய்ச்சியர்முன் வெண்ணெய்க்
கிளிவரமுன் கூத்துகந்த வெந்தாய் – நளினமலர்
வாள்விழியா ளென்றன் மடமான் றுயரொழித்து
நீள்விழியால் காக்க நினை. 156

பின்னை திறத்துப் பெருவிடையேழ் செற்றுகந்த
மன்னை மறந்தக்கால் வாராதோ – கன்மப்
பெரும்பிறவி வீழ்ந்து பிணிபட் டுழலும்
நெருங்குதுயர் நெஞ்ச நிறைந்து. 157

பண்ணுலவு மென்மொழியும் பயங்கயத்து நீள்விழியும்
மண்ணுலவு வாயும் மணிவயிறும் – கண்ணிலவ
வாராயோ மாமுகிலே மாமறையோன் றுன்பொழித்த
காராயோ என்நின் கருத்து. 158

பிணிப்புண் டுரலிற் பிறழும் பெருமானை
மணிக்கொண்டல் மேனி மணியைத் – தணிப்புண்ட
நெஞ்சத்து மேவ நினைந்தக்கால் நீங்காதோ
வஞ்சக் கடுநோய் வறண்டு. 159

சுரிசங்கங் கைக்கொண்டு தொல்லரசர் மாளப்
பரிசுமந்த தேரேறிப் பார்த்தன் – வரிசிலையான்
வானுலகை மேவும் வகைபணித்த மாயன்றன்
தேனுலவு தாமரைத்தாள் சேர். 160

ஆயர் கலங்க வருங்கன் மழைதடுத்த
தூய வமுதைத் துரியத்தைத் – தீய
மனமுடையோர் காணா மணியை நினையின்
வினையொழிவை நெஞ்சே விரை. 161

விளவின் கனியுகுத்து வேய்புரையு மென்றோ
ளிளமயிலை யொக்கு மெழிலா – ருளமுருக
மென்றுகிலை முன்கவர்ந்த வேதப் பெரும்பொருளே
வன்றுயரை வாட்டு மருந்து. 162

சேராத கஞ்சன் றிறல்விளங்கு மென்குஞ்சி
யீரா வழித்தவனை யெம்மானைத் – தீராத
மெய்யன்பு கொண்டு விரைந்து வணங்குதியேல்
பொய்யொழியும் நெஞ்சே புகல். 163

பேச்சுக் கடங்காப் பெரும்புகழான் பெய்வளையா
ரேச்சுக்குகந்த வெளியன் காண் – நீச்சுக்
கடங்காத மாமடுவி லாரழனா கத்தின்
படங்காண வாடும் பரன். 164

அறியாத வாண னரும்புயங்கள் வீழக்
குறியாக வாழிதனைக் கொண்டான் – வெறியாரும்
தண்டுளவ மின்றித் தளிரியலு முய்யுமோ
வண்டுறையு மென்குழலீர் வாய்ந்து. 165

நெஞ்சந் துடிக்க நிலைதளரு மேந்திழையைக்
கஞ்சத் திருக்கரத்தால் காவாயோ – வஞ்ச
விளவுருவங் கொண்ட விறலோனை மாய்த்த
களவுருவா! வென்னோ? கருத்து. 166

நெஞ்ச மறியா நிமலப் பெரும்பதவி
எஞ்சா தடைய வினிவிரும்பின் – நெஞ்சே
உறிமருவும் வெண்ணெயினை யுண்டுகந்த வாயன்
வெறிமலர்ச்செஞ் சேவடியை வேண்டு. 167

கேள்விக் கரைகடந்த கேடில் விழுப்பொருளைக்
கோள்விக் கினமொழிக்கும் கோவலனை – வேள்விக்கு
நாயகனை நான்மறைகள் நாடுந் தனிமுதலைத்
தூயகமே நிற்கத் துணி. 168

பேசாத பேச்செல்லாம் பேசும் சிசுபாலன்
காசார் மணிமுடியைக் காசினியில் – கூசாது
வீழப் படைதொட்ட வேதியனை யேத்தாது
வாழப் படுமோ வழுத்து. 169

கொங்குறையு மென்கூந்தற் கோவியர்தம் வார்துகிலைப்
பங்கமுறக் கொண்டகன்ற பான்மையனே! – நங்கையிவள்
செங்கை வளையுந் திகழ்கின்ற வாழியையு
மங்ஙனநீ கொள்ள லழகு. 170

சேயிழையை மார்பிற் செறித்தானைச் செங்கரத்துப்
பாயொளிசே ராழி பரித்தானைத் – தாயுருவின்
வெங்கட் கடும்பேய் விடமுண்ட வித்தகனைக்
கங்கைக் கழலானைக் காண். 171

ஆயர் நெடுங்கயிற்றி னாப்புண்டு மாவுரலில்
தூய கரிபோலத் தோற்றுமால் – சேயுருவில்
நீற்றை யணிந்தானும் நீண்மலரின் மேலானும்
போற்றிப் புனைந்த பொருள். 172

படநாகப் பாயலான் பைந்துழாய் மாயன்
விடநாக வெங்கொடியோன் வீடக் – கடனாத்
தனஞ்சயற்குத் தேரூர்ந்த தாமோதரன் காண்
மனஞ்சயிக்க வல்ல மருந்து. 173

மருந்தின் பொருட்டா மணியாழி முன்னம்
திருந்தக் கடைந்த திறலோன் – விருந்தாக
வில்விதுரன் புன்குடிலில் மேவு மெளியன்காண்
வல்விரையு மென்மனத்து வந்து. 174

பண்தங்கு மின்சொற் பவளத் திருச்செவ்வாய்
மண்தங்கக் கண்டு மதிமயங்கப் – பெண்கொடிக்கு
நீளுலகந் தன்வாயிற் காட்டு நிமலோன்றன்
தாளுலவு மென்மனத்துத் தான். 175

வந்தெதிர்ந்த மல்லர் வலியழித்து வன்மருப்புச்
சிந்துரத்தை வானிற் செலுத்தினான் – சந்தக்
கழல்பணிந்து வாழ்த்திக் கருத்தில் நிறுத்த
அழல்வினையு நீங்கு மயர்ந்து. 176

உறிகமழும் வெண்ணெ யுவந்துண்ட வாயன்
வெறிமலர்த்தாள் மேவ விரைமின் – நெறியறியாக்
கன்மக் கடலிற் கவிழ்ந்துழலும் மாந்தர்காள்
சன்மக் கழிவுறுவீர் சார்ந்து. 177

நீலத் திருவுருவங் கொண்டு நிறைநெஞ்சில்
கோலத் துடனே குளிர்ந்திருக்க – மேலைக்
கொடுவினைநோய் நீங்கிக் குளிர வுடல
மடுகளிற்றா யம்மா னருள். 178

வஞ்சச் சகடுதைத்த வள்ளா லுனதடியென்
நெஞ்சத் திருத்த நினையாயோ – கஞ்சத்
திருப்புகந்த மான்சே ரெழின் மார்பா வென்னைக்
கருப்புகுதா வண்ணங் கணித்து. 179

நக்க னறியான் நளினத்தான் தானறியான்
புக்குழலு நெஞ்சர் புகலுவரோ – தொக்கமலர்
வம்பணியு மென்குழலார் வைத்ததயி ருண்டருளும்
செம்பவள வாயான் திறம். 180

மல்லர் மடிய மதமா மருப்பொடிய
வில்விழவு செய்த விறல்மாமன் – தொல்லைமுடி
போய்வீழ முன்னம் பொருதானை வெவ்வினையின்
நோய்நீங்க நெஞ்சே நுவல். 181

புன்முறுவல் கொண்டு பொருகயற்க ணாய்ச்சியரை
வின் மருவுங் கையால் விழைந்தணைந்தாய் – அன்மருவுங்
கூந்தன் மடமானைக் கூடுதற்கு மெல்லணையாப்
பாந்தண் மிசைக்கிடந்தாய் பார். 182

ஆயர் மகளி ரருந்துகிலை முன்கவர்ந்த
தூயன் மலரடியைத் துன்னாது – மாய
மடவார் வலையுள் மயங்கிக் கிடக்கும்
விடரின் பிறப்பன்றோ வீண். 183

பாந்தட் கொடியானைப் பாரதத்து முன்கொன்று
காந்தட் டிருக்கரத்துக் காரிகைக்குக் – கூந்தல்
முடித்தருளும் ஞான முதலே யடியேற்
கடித்துணையை நல்க வருள். 184

சொல்லற கரியானைத் தோமில் குணத்தானை
மல்லர்க் கரியான மாமணியைப் – புல்லற்குப்
போதுமோ சொல்லீர் புனையுழையீ ரல்லாக்கால்
சாதுமோ சொல்லீர் தளர்ந்து. 185

கொங்கைக் குவடு குழையத் தழீஇக்கொண்
டங்கங் குளிர வணையேனோ? – துங்க
விடையானும் நான்முகனும் மேவரிய மாயன்
நெடுமேனி யின்பம் நிறைந்து. 186

மனத்துறையு மாலை மதியாது தீயோ
ரினத்துறைய நெஞ்சே யெழாதே – தனத்துறையும்
மாவிடத்தை யுண்டு மருதிடைபோய் நின்றானை
நாவிடத்து நிற்க நவில். 187

செய்ய திருவடியென் சென்னிக் கணியேனே
லுய்ய வழிபிறிது முண்டுகொலோ – பைய
விடவரவ மேனடித்த வேத முதல்வ
னிடமுறைய வென்மனத்து ளின்று. 188

குடையா மலையெடுத்துக் கோநிரையைக் காத்த
வடலாயா! வுன்னை யடைந்தேன் – தடையாரு
மைம்புலனைச் செற்றிட் டறிவை யுனதடிக்கே
யின்புறநீ நிற்க விரங்கு. 189

ஆய ரிளங்கொழுந்தை யம்மானை யச்சுதனைத்
தூயர் மனத்துறையுந் தோன்றலை – மாயப்
பிறப்பொழிக்கும் பெம்மானைப் பேராழி யானை
மறப்பொழிய நெஞ்சே வழுத்து. 190

பைந்துளவத் தாரானைப் பாவையர்தம் மெய்தோயும்
மந்தரநேர் திண்புயத்து மாயோனைச் – செந்திருவின்
நாயகனை நான்மறையி னற்கனியை வெம்பிறவித்
தீயகல நெஞ்சகமே தேர். 191

வெய்ய படையொழித்து வேண்டாதார் மாண்டொழியத்
துய்ய வளைமுழக்குந் தூயோனே – நையும்
துடியிடையாள் சோர்வகற்றித் தொல்லருளாற் காக்கத்
தடையுண்டோ சொல்லாய்நீ சற்று. 192

தீர்த்தம் பலமூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும்
சீர்த்த மதியீர் சிறப்பில்லை – பார்த்தனுக்குக்
குற்றேவல் செய்து குருகுலத்தோர் வானேறப்
பொற்றேரி னின்றான் புகல். 193

விடையேழும் வென்ற விறலோய்! விளங்கு
குடையாகக் குன்றொன்றைக் கொண்டாய்! – கொடை
மாவலிபால் மூவடியா மண்ணுலகை முன்னளந்த
சேவடியென் சென்னிமிசைச் சேர். 194

அண்டர் துயர்நீக்கு மன்பரகத் தேநிற்கும்
பண்டகலி சாபம் பறிக்குமால் – கொண்டல்போல்
தெண்டிரையிற் கண்வளருந் தேவர்பிரான் செங்கமலத்
தண்டுளவத் திண்கழலே தான். 195

தண்டுளவத் தானைத் தனித்து வனங்கடந்த
புண்டரிக பாதப் புரவலனை – வண்டுவரை
மன்னவனைத் தன்னடியார் மாமனத்து ளார்வத்தாற்
சொன்னபடி செய்தவனைச் சொல். 196

கோலத் திருவுருவங் கொண்டு குரைகடல்சூழ்
ஞாலத்தை முன்னொருகால் நல்கினையே! – யேலக்
கருங்குழலாள் மெய்யணைந்து காவாயோ வேயி
னிருங்குழலா யெந்தா யியம்பு. 197

கழலாற் படியளந்த காகுத்தா! வேயின்
குழலாற் குளிர் நிரையைக் கொண்டா – யழலாரும்
வேற்கண்ணாள் வெந்துயரம் வீட்டாயோ பாம்பணையிற்
பாற்கடலிற் பள்ளிகொள்வாய் பார். 198

நாரா யணனே நமவென் றுனையடைந்தே
னாராயி னற்கதிநீ யாதலினாற் – றீராத
என்வினைதா னீங்க வெழிற்கமல மெல்லடியென்
சென்னிமிசை வைப்பாய் சிறந்து. 199

பொற்குன்றின் மீது பொலியும் கருமுகில்போல்
நற்கருடன் மேல்விளங்கும் நாரணா – யெற்கு
னெழிலுருவங் காண விரங்காயோ யெய்க்கும்
பொழுதினிலென் முன்னே புரிந்து. 200

திருமால் வெண்பா முற்றிற்று

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ராகவாசாரியர் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: