கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!
கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் (அவதரித்தவரும்) தோன்றியவரும்,
துறவிகளுக்குத் தலைவரான ஸ்ரீராமாநுஜரைத் தஞ்சம் புகுந்தவரும்,
தமது ஞான ஸார, ப்ரமேய ஸார நூல்களில் ஆசார்ய பெருமை பேசியவருமான
அருளாள மாமுனியைப் பற்றுகின்றேன்.
——–
ராமாநுஜார்ய ஸச் சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த் தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!
ராமாநுஜாச்சார்யருக்கு நல்ல சீடரும் வேதம் முதலிய அனைத்து சாஸ்த்ரங்களில் வல்லுநரும்,
நான்காவது நிலையான துறவறத்தை மேற்கொண்டவருமான அருளாள மாமுனியை வணங்குகிறேன்.
(ராமாநுஜார்ய ஸச் சிஷ்யம்)
யக்ஞ மூர்த்தி என்னும் பூர்வாசார பெயருடன் முன்னைய நிலையில்
எம்பெருமானாரோடு பதினெட்டு நாட்கள் நடத்திய வேதாந்த விசாரத்தில் தர்க்கம் செய்து
எம்பெருமானாரைச் சோர்வுறச் செய்கையில்,
பேரருளாளரான அத்திகிரி வரதராஜப் பெருமாள் கனவில் தோன்றி,
“எம்பெருமானாரே! நீர் சோர்வுற வேண்டா, உமக்குத் திறமையுடைய ஒரு நற்சீடனை உண்டாக்கிக் கொடுத்தோம்.
அவனை வெல்வீராக” என்று உரைத்த குருபரம்பரைத் தொடர்களை இங்கு நினைவு கூர்க.
(வேத சாஸ்திரார்த்த ஸம்பதம்) –
உடையவரோடு பதினெட்டு நாட்கள் தர்க்கம் பண்ணின திறமையாலும் ஞானஸார ப்ரமேயஸார நூல்களில்
வேதம் முதலிய சாஸ்திரங்களிலிருந்து சாரமான கருத்துக்களை அழகிய வெண் பாக்களினால்
எடுத்துரைத்தமையாலும், இவரது சாஸ்திர புலமை நன்கு விளங்கும்.
(தேவராஜ முனிம்) –
தேவராஜனான பேரருளாளனுடைய திருவருளால் எம்பெருமானாருக்கு சீடரான பெருமையும்,
ஞான, பக்தி, வைராக்யங்களில் ராமாநுஜ முனிக்கு நிகராக விளங்கிய சிறப்பும் பற்றி
“அருளாள முனி” என்று திருநாமம் பெற்றமையும் உணரப்படுகிறது.
————-
சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.
நான்கு வேதங்களிலிருந்து உட்பொதிந்த ஆழ் பொருள்களையும், திருமந்திரத்தின் மெய்ப் பொருள்களையும்
ஞான ஸார ப்ரமேய ஸாரம் என்னும் நூல்களைக் கொண்டு அறிவைப் புகட்டியவரும்,
ஞானச் சுடர் விளக்காய் விளங்குபவரும், அருளாள மாமுனி என்னும் திருநாமம் உடையவருமான ஆசார்யருடைய,
அழகியதும், அனைவருக்கும் அடையத் தகுந்ததுமான அவரது திருவடிகளை அடைந்த பிறகு,
ஊழ் வினைகள் அழிவதற்கான வழியை அறிந்து கொண்டேன்.
ஊழ் வினையால் அறிவில் மயக்கம் ஏற்படுகிறது. அவ்வறிவு மயக்கத்தால் பெண்வழிச் சேரலில் துவழ்ச்சி ஏற்படுகிறது.
அத் துவழ்ச்சிக் காரணமாக அவர்களது சுருண்ட கருங்கூந்தலிலும் வேல் போன்ற பார்வையிலும் மனம் நெகிழ்கிறது.
அருளாள மாமுனிகளின் திருவடிகளை அடைந்த பிறகு காமம் முதலிய
இக் குற்றங்களிலிருந்து நீங்குவதற்கு வழி அறிந்து கொண்டேன் என்பது கருத்து.
அருளாளப் பெருமாள் எம்பெருமானாராகிற ஆசார்யருடைய திருவடிகளைப் பற்றின பிறகு
அவர் அருளிச் செய்த ஞான ஸார ப்ரமேய ஸார ப்ரபந்தங்களால் அறிவுக்குத் தெளிவு பிறந்தது.
அதனால் பெண்களின் அழகிய கூந்தலிலும் வேல் போன்ற விழியிலும்
மனம் நெகிழும் தீய வினைகளை அழிக்கும் வழிகளை அறியப் பெற்றேன் என்று கருத்து.
பெண்ணாசையைச் சொன்ன இதில் மற்றும் உண்டான கோபம், உலோபம், மோகம், மதம், பொறாமை
முதலிய குற்றங்களும் அடங்கும்.
“காமம், வெகுளி, மயக்கம் இம் மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்” என்ற திருக்குறளின் சொல்படி
மனிதப் பண்பாட்டை அழிக்கும் குற்றங்கள் ஆசார்ய கடாக்ஷத்தால் தீரும் என்பது பாடலின் அருங்கிய கருத்து.
இதனால் இவ்வாசிரியருடைய பெருமை கூறப்பட்டது.
————
நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள் நிலத்தில்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்தளிக்கும்
பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுப் புளி மண்
ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே
பதவுரை
நீள்நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே
பாங்காக – பயனுடயதாக
நல்ல – ஆன்ம நலத்தைத் தரவல்ல
பிரமேசாரம் – திருமந்திரத்தின் சுருக்கத்தை
பரிந்து – அருள் கூர்ந்து
அளிக்கும் – அருளிச் செய்யும்
பூங்கா – அழகான பூஞ்சோலைகளும்
வளம் பொழில் – செழிப்பான தோப்புக்களும்
சூழ் புடை – நாற்புறமும் சூழ்ந்துள்ள
புதுப் புளி – புதுப் புளி என்னும் இடத்தில்
மன் – புலவர் (தலைவராக)
வாழும் – வாழ்ந்தவரும்
ஆங்காரமற்ற – செருக்குச் சிறிதும் இல்லாதவருமான
அருளாள மா முனி – அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் திருநாமமுடைய ஆசார்யரின்
அம்பதமே – அழகிய திருவடிகளையே
என்றும் – எப்பொழுதும்
நீங்காமல் – பிரியாமல்
நினைத்து – எண்ணிக் கொண்டு
தொழுமின்கள் – வணங்குவீராக
நீள்நிலத்தீர்! அருளாளமாமுனி அம்பதமே என்றும் தொழுமின்கள்! என்று கொண்டு கூட்டுக.
“என்றும்” என்ற சொல்லை
“நீங்காமல்” என்றும்
“நினைத்து” என்றும்
இரண்டு இடங்களிலும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.
அதாவது
“என்றும் நீங்காமல்” என்றும் என்றும் நினைத்து” என்றும் கூட்டுக.
பொருளை அறிவதற்கு அளவு கோலாயிருப்பது பிரமாணம் அதனால் அறியப்படும் பொருளுக்குப்
பிரமேயம் என்று பெயர்.
அதனுடைய சுருக்கு சாரம். அது பிரமேய சாரம் எனப்படும்.
பிரமாணம் – அளக்கும் கருவி
பிரமேயம் – அளக்கப்பட்ட பொருள்
ஸாரம் – சுருக்கம்
மானம், மேயம் – சாரம் என்பர்
அதாவது பிரமாணம் திரும்ந்திரம்.
அதனுடைய பொருள் பிரமேயம்.
அப்பொருளின் சுருக்கம் பிரமேய சாரம் என்பதாம்.
நல்ல மறை என்பது போல நல்ல பிரமேய சாரம்
அதாவது குறை சொல்ல முடியாத நூல் என்பதாம்.
பாங்காக:
கற்போர் மனம் கொள்ளும்படியாக அதாவது எளிமையாக என்று பொருள்.
ஆகவே இந் நூலில் பத்துப் பாடல்களால் திருமந்திரப் பொருளைச் சுருக்கமாகச் சொல்லப் படுகிறது.
அதனால் இதற்கு பிரமேய சாரம் என்று பெயர்.
பரிந்தளிக்கும்:
அனைத்து உயிர்களும் சேமத்தை அடைய வேண்டும் என்ற கருணையினால் அதனை நூலாக்கிக் கொடுக்கும்
ஓராண் வழியாக உபதேசித்து வந்ததை பாருலகில் ஆசையுடயோர்கெல்லாம் தெரியும் வண்ணம்
நூலாக்கிக் கொடுக்கும் என்பதாம்.
அருளாள மாமுனி: என்பதால்
அனைத்து உயிகளிடத்தைலும் அருளே கொண்டவர் என்றும்,
அது முனிவர்களுக்கு அல்லாது ஏனையோர்க்கு அமையாது.
ஆதலால் “மா முனி” என்றும் அம் முனிவருக்குரிய உயரிய பண்பு.
யான் எனது என்னும் செருக்கு அறுதலே என்பது “ஆங்காரம் அற்ற” என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கப்பட்டது.
அத்தகைய ஆசார்யருடைய திருவடிகளையே தொழுமின்கள்.வணங்குவீராக.
வணங்கும் பொழுது அத் திருவடியை மனதில் நினைத்துக் கொன்டே தொழுவீர்களாக.
அத்துடன் நிழலும் உருவும் போல் பிரியாமல் பணிவீர்.
(அம்பதம்) என்ற இடத்தில்
இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கு நின்றது.
ஐயும் கண்ணும் அல்லா பொருள் வையின் மெய் உருபு தொகா -இறுதியான என்ற
தொல்காப்பிய சொல் இலக்கணம் காண்க.
அம்பதத்தை: “அம்” என்றால் அழகு.
பதத்திற்கு அழகாவது தன்னடியில் பணியும் சீடர்களைக் கைவிடாதது.
“ஏ” பிரிநிலை”ஏ”காரம் அவரது திருவடியையே தொழுமின் என்றதால் அதுவே போதும்.
மற்ற இறைவன் திருவடி தொழ வேண்டா என்பதாம்.
இறைவனும் முனியும் ஒன்றானதால்.
புதுப் புளி: என்பது அவர் வாழ்ந்த தலம் இடம்.
மன்: வேத சாஸ்திர விற்பன்னர்கள் பலருக்குத் தலைமையாய் இருந்தவர் என்பது பொருள்.
புதுப் புளி என்ற அத்தலம் பூஞ்சோலைகளாலும் பல மரங்களும் அடர்ந்த தோப்புக்களாலும் சூழப்பட்ட
செழிப்பான இடம் என்றவாறு.
இதனால் அறிவு வளர்ச்சி ஒழுக்கநெறி முதலியவற்றிற்கு ஏற்புடயதான இடம் என்பது புலனாகிறது.
புடை: பக்கம். நாற்புறமும் என்று பொருள்.
பெரிய இவ்வுலகத்தில் வாழும் மக்களே! உயர் வீடு பேறு அடையத்தக்க திருமந்திரப் பொருளை
மிக்க கருணையோடு எளிய தமிழில் “பிரமேய சாரம்” என்னும் இந்நூலில் சுருங்க கூறியவரும்
பூஞ்சோலைகளும் தோப்புக்களும் நாற்புறமும் சூழ்ந்து அழகாயுள்ள புதுப் புளி என்னும் இடத்தில் வாழும்
அறிஞர்களுக்குத் தலைவரும் செருக்கு மில்லாதவருமான அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
திருவடியையே எப்பொழுதும் நெஞ்சில் நினைந்து வணங்குவீராக. என்ற கருத்து.
———-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply