ஸ்ரீ அனந்தனுக்கு ஆயிரம் திரு நாமங்கள்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்– 315-390-திரு நாமங்கள்–

(திருநாமங்கள் 315 முதல் 322 வரை – பரசுராமரின் பெருமைகள்)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)

(திருநாமங்கள் 334 முதல் 345 வரை –பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)

(திருநாமங்கள் 346 முதல் 351 வரை – வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)

(திருநாமங்கள் 362 முதல் 385 வரை – திருமகளின் கேள்வனாக இருக்கும் தன்மை)

(திருநாமங்கள் 386 முதல் 390 வரை – துருவனுக்கு அருள்புரிந்த திருமாலின் பெருமைகள்)

————

315. க்ரோதக்னே நமஹ (Krodhaghne namaha)

ஆயிரம் தோள்கள்கொண்ட அரசனான கார்த்தவீரியார்ஜுனன், மாகிஷ்மதி என்ற பகுதியை ஆண்டுவந்தான்.
அவன் ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடச் சென்ற வேளையில், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் உள்ள
காமதேனு பசுவைக் கண்டான். அது தன்னிடம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய கார்த்தவீரியார்ஜுனன்,
தனது ஆட்களை அனுப்பி, காமதேனுவைப் பலவந்தமாக இழுத்து வரச் செய்தான்.
காமதேனுவை அடித்துத் துன்புறுத்தி அரண்மனைக்கு இழுத்துச் சென்றார்கள் அரசனின் ஆட்கள்.

இதைக் கண்டு கோபம்கொண்டு எழுந்த பரசுராமர், கையில் கோடாரியை ஏந்தியபடி கார்த்தவீரியார்ஜுனனோடு போர்புரிந்து,
அவனது ஆயிரம் தோள்களையும் துண்டித்தார். அவரைப் பழிவாங்க நினைத்த கார்த்தவீரியார்ஜுனனின் மகன்கள்,
பரசுராமர் இல்லாத நேரத்தில் தியானத்தில் இருந்த ஜமதக்னி முனிவரைக் கொன்று,
அவரது தலையைக் கொய்து எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

வீடு வந்த பரசுராமர், நடந்தவற்றை அறிந்து, வெகுண்டு, அறவழி தவறி நடக்கும் அனைத்து அரசர்களையும்
அழிப்பது எனத் தீர்மானித்தார். கையில் கோடாரியை ஏந்தியபடி இருபத்தோரு தலைமுறை மன்னர்களை மொத்தமாக அழித்து விட்டார்.
உலகை ஆண்ட அனைத்து மன்னர்களையும் வென்றுவிட்டதற்கு அடையாளமாக,
பெரிய அசுவமேத வேள்வியை நடத்தினார் பரசுராமர். அந்த வேள்வியை நடத்தி வைப்பதற்குக் காசியபர்
உள்ளிட்ட பெரிய முனிவர்களை எல்லாம் வரவேற்றார். மிகச்சிறப்பான முறையிலும்
பிரம்மாண்டமாகவும் வேள்விக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தன.

அசுவமேத வேள்விக்குரிய குதிரையை உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் படி ஆட்களை அனுப்பினார் பரசுராமர்.
“அரசகுலத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் உலகில் மீதம் இருந்தால், இந்தக் குதிரையைக் கைப்பற்றி
என்னுடன் போர் புரிய வாருங்கள்! அல்லது, நீங்கள் இங்கு வந்து என்னிடம் சரண் அடைந்து,
உங்களது அரசை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள்!” என்று
எச்சரிக்கை விடுத்தார் பரசுராமர்.

எந்த அரசரும் பரசுராமரை எதிர்க்கத் துணியாத நிலையில், உலகம் அனைத்தும் பரசுராமரின்
கட்டுப்பாட்டுக்குள்ளே வந்து விட்டது. காசியபர் தலைமையில் முனிவர்கள் அனைவரும் நல்ல முறையில்
பரசுராமரின் அசுவமேத வேள்வியை நிறைவு செய்து கொடுத்தார்கள்.வேள்வி நிறைவடைந்தவாறே,
காசியபர், பரசுராமரைப் பார்த்து, “பரசுராமரே! இனியாவது உங்களது கோபம் தணிய வேண்டும்!
உலகுக்கு நன்மைகள் நடக்க நீங்கள் அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.

பரசுராமர், “காசியபரே! அரசகுலத்தை அழிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.
ஆனால் வேதம் வல்ல முனிவரான என் தந்தையைக் கார்த்தவீரியார்ஜுன மன்னனின் மகன்கள் கொன்றார்கள்.
அவர்கள் மட்டுமின்றி, பூமியை ஆண்டு வந்த மேலும் பல மன்னர்களும் முனிவர்களை அவமதித்தார்கள்.
அறநெறியை மறந்தார்கள். கொடுங்கோலாட்சி புரிந்தார்கள். அவர்களை எல்லாம் தண்டிக்க வேண்டும்
என்பதற்காகவே இத்தனை காலம் கையில் மழு ஏந்தி அந்த மன்னர்களுக்கு மரண தண்டனை கொடுத்தேன்.
இனி உலகில் அமைதி நிலவட்டும்!” என்று சொன்னார்.

அதன்பின், அசுவமேத வேள்வியை நடத்தித் தந்த காசியப முனிவரிடம் அனைத்து உலகின்
ராஜ்ஜியத்தைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார் பரசுராமர்.
“நீங்களும் மற்ற முனிவர்களும் சேர்ந்து பூமியில் சுபிட்சம் நிலவச் செய்யுங்கள்!” என்றார் பரசுராமர்.

“தங்கள் விருப்பப்படியே ஆகட்டும். தாங்களும் கோபம் தணிந்தவராய், சாந்தம் அடைய வேண்டும்!” என்று
காசியபர் பிரார்த்திக்கவே, தனது கோபத்தைத் தணித்துக்கொண்டார் பரசுராமர்.
‘க்ரோத:’ என்றால் கோபம் என்று பொருள். ‘க்ரோதஹா’ என்றால் கோபம் தணியப்பெற்றவர் என்று பொருள்.

காசியப முனிவரின் வேண்டுகோளை ஏற்றுக் கோபம் தணியப் பெற்றவராகப் பரசுராமர் திகழ்ந்தபடியால்,
‘க்ரோதஹா’ என்று அவர் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 315-வது திருநாமம்.

“க்ரோதக்னே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் கோபம் அனைத்தும் விரைவில் தணிந்து,
மனதில் சாந்தி நிலவும்படி திருமால் அருள்புரிவார்.

————-

316. க்ரோத க்ருதே நமஹ (Krodhakruthe namaha)

அரங்கத்தை அடைந்து அரங்கனைப் பணிந்தார் வேதாந்த தேசிகன் என்ற மகான்.
அப்போது தேசிகனின் மனத்திலே ஒரு காட்சியைக் காட்டினான் திருவரங்கன்.
திருவரங்கம் என்ற திருத்தலமே ஒரு நாடக அரங்கம். அந்த அரங்கத்தில் நடிக்கும் கதாநாயகன் அரங்கநாதப் பெருமாள்.
கதாநாயகி ஸ்ரீரங்கநாயகித் தாயார். அரங்கனும் ரங்கநாயகித் தாயாரும் பத்து விதமான கதாப்பாத்திரங்களை ஏற்று
அந்த அரங்கத்திலே நடித்துக் காட்டுகிறார்கள்.
அரங்கன் ஏற்று நடித்த அந்தப் பத்து கதாப்பாத்திரங்களே நாம் பிரசித்தமாகப் போற்றும் தசாவதாரங்கள் ஆகும்.

இக்காட்சியை மனக்கண்ணால் கண்ட தேசிகனுக்கு, அந்த அவதாரங்களை எல்லாம் துதிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது.
அதனால் ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒரு ஸ்லோகம் வீதம் பத்து ஸ்லோகங்கள் பாடி தசாவதாரத்தையும் துதித்தார் தேசிகன்.
தசாவதார ஸ்தோத்ரம் என்று அத்துதி அழைக்கப்படுகிறது. அதைக் கேட்டு மகிழ்ந்த அரங்கன்,
“வேதாந்த தேசிகரே! பத்துப் பாடல்களால் என் பத்து அவதாரங்களைத் துதித்தீர்கள்!
இப்போது அவற்றைத் தொகுத்து ஒரே பாடலில் என் பத்து அவதாரங்களையும் பாடுவீராக!” என்றான்.
அரங்கனின் ஆணையை ஏற்று அவனருளால் ஒரு ஸ்லோகத்தை இயற்றினார் வேதாந்த தேசிகன்:

“இச்சாமீன! விஹாரகச்சப! மஹா போத்ரின்! யத்ருச்சாஹரே!
ரக்ஷாவாமன! ரோஷராம! கருணாகாகுத்ஸ்த! ஹோலாஹலின்!
க்ரீடாவல்லவ! கல்கவாஹனதசாகல்கின்! இதி ப்ரத்யஹம்
ஜல்பந்த: புருஷா: புனந்தி புவனம் புண்யௌக பண்யாபணா:”
பத்து அவதாரங்களிலும் இறைவனிடம் எந்தெந்த குணங்கள் பிரதானமாக வெளிப்படுத்தப்பட்டனவோ,
அந்த குணங்களையே அந்தந்த அவதாரங்களுக்கு அடைமொழிகள் ஆக்கி இதில் தேசிகன் குறிப்பிட்டுள்ளார்.

இச்சா மீன – உன் விருப்பத்தால் மீனாய் அவதரித்த பிரானே!
விஹார தச்சப – விளையாடல் புரிவதற்காக ஆமை ஆனவனே!
மஹா போத்ரின் – மாபெரும் வடிவம் கொண்ட பன்றியாய்த் தோன்றியவனே!
யத்ருச்சா ஹரே – எதிர்பாராத நேரத்தில் சடக்கெனத் தோன்றிய நரசிம்மனே!
ரக்ஷா வாமன – உலகை எல்லாம் காப்பதற்காக வாமனமூர்த்தி ஆனவனே!
ரோஷ ராம – ரோஷம் எனப்படும் கோபம் கொப்பளிக்க, பரசுராமனாகக் கையில் மழுவுடன் தோன்றியவனே!
கருணா காகுத்ஸ்த – கருணையே வடிவெடுத்த ஸ்ரீராமனே!
ஹேலா ஹலின் – கலப்பையை வைத்து விளையாடிய பலராமனே!
க்ரீடா வல்லவ – லீலைகள் செய்வதற்
காகவே அவதரித்த கண்ணனே!
கல்கவாஹன தசா கல்கின் – வெண்குதிரை யில் ஏறி பவனி வரப்போகிற கல்கியே!

“இப்படிப் பத்து அவதாரங்களின் பெயர்களையும் தினந்தோறும் வாயாரச் சொல்லி, புண்ணியத்தைச்
சம்பாதித்துக் கொண்ட மனிதர்களாலே இந்த உலகம் தூய்மை அடைகிறது!” என்று ஸ்லோகத்தை முடித்தார் தேசிகன்.

அரங்கனும் மனம் மகிழ்ந்து தன் திருவருளைப் பொழிந்தான்.இத்துதியில் ஒவ்வொரு அவதாரத்திலும்
இறைவன் காட்டிய பிரதானமான குணங்களைப் பட்டியலிடும் தேசிகன்,
பரசுராம அவதாரத்தில் ரோஷம் எனும் கோபமே பிரதானமான குணமாக இருந்ததாகக் காட்டியுள்ளார்.

கோபம் என்பது தீய குணம் அல்லவா? அதைப் போய் முக்கியக் குணமாகக் கொண்டாடலாமா? என்ற கேள்வி எழலாம்.
அதற்கு விடை யாதெனில், தீய சக்திகள் மீது இறைவனுக்கு வரும் கோபம் தீய குணம் அல்ல.
அறநெறி தவறி, தீய வழியில் ஆட்சிபுரிந்த அரசர்களை அழித்துப் பூமியில் நன்னெறியை நிலைநாட்டும் பொருட்டுப்
பரசுராமர் கோபம்கொண்டதால், அக்கோபமும் கூடப் பூமிக்கு நன்மையையே செய்தது.‘க்ரோத’: என்றால் கோபம்.

‘க்ருத்’ என்றால் செயல் செய்பவர். நன்னெறி தவறிய மன்னர்கள் மீது கோபம் (க்ரோத) கொண்டு,
அவர்களை அழிப்பதாகிய செயலைப் புரிந்த (க்ருத்) பரசுராமர் ‘க்ரோதக்ருத்’ என்றழைக்கப்படுகிறார்.
‘க்ரோதக்ருத்’ என்றால் கோபத்தைக் காட்டியவர் அல்லது கோபத்துடன் செயல்புரிந்தவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 316-வது திருநாமம்.
“க்ரோதக்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்களின் வாழ்வில் வரும் துயரங்கள் மீது
திருமால் கோபம் கொண்டு, அவற்றைப் போக்கி அருள்வார்.

—————

317. கர்த்ரே நமஹ (Karthre namaha)
(திருநாமங்கள் 317 முதல் 322 வரை – பரசுராமரின் பெருமைகள்)

நர்மதா நதிக்கரையில் உள்ள மாகிஷ்மதி என்ற ஊரில் கூடாரம் அமைத்துச் சில நாட்கள் தங்கியிருந்தான் ராவணன்.
அப்போது திடீரென்று நர்மதை ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.
அது ராவணனின் கூடாரத்தையே மூழ்கடித்துவிட்டது. இவ்வளவு பெரிய வெள்ளம் எப்படி வந்தது என்று
திகைத்தபடி ராவணன் வெளியே வந்து பார்த்தான்.
அங்கே ஆயிரம் தோள் படைத்த ஒருவனும் சில பெண்களும் ராவணனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

ஆயிரம் தோள் படைத்த அந்த மனிதன்தான் கார்த்த வீரியார்ஜுனன்.
நர்மதையில் வெள்ளம் வரக் காரணமானவனும் அவனே. தனது மனைவிகளோடு நர்மதையில் நீராட வந்த அவன்,
தனது ஆயிரம் கைகளையும் நதியின் குறுக்கே விரித்தான். அதனால் நதியின் நீரோட்டம் தடைப்பட்டு விட்டது.
தன் மனைவிகளோடு ஆனந்தமாக நீராடி முடித்தபின், நீரோட்டத்தை அடைத்து வைத்திருந்த ஆயிரம் கைகளையும் அங்கிருந்து எடுத்தான்.
அடுத்த நொடியே மடைதிறந்த வெள்ளமாக ஆற்றுநீர் பெருகி வந்து கரையில் இருந்த ராவணனின் கூடாரத்தை அழித்துவிட்டது.

இதை உணர்ந்துகொண்ட ராவணன், மிகுந்த கோபத்துடன் கார்த்தவீரியார்ஜுனன் மீது பாய்ந்தான்.
இருவருக்கும் பெரும் சண்டை மூண்டது. சண்டையிலே ராவணனை எளிதில் வீழ்த்திய கார்த்த வீரியார்ஜுனன்,
அவனை ஒரு கயிற்றால் கட்டித் தன் நகருக்குள் அழைத்து வந்து, “மக்களே! இந்தப் பத்துத்தலைப் பூச்சியைப் பாருங்கள்!”
என்று ராவணனை ஏளனம் செய்தான். இதிலிருந்து கார்த்த வீரியார்ஜுனன் எவ்வளவு வலிமை மிக்கவன் என்பதை நாம் அறியலாம்.

ராவணனையே எளிதில் வெல்லக் கூடிய இத்தகைய பலம் பொருந்திய கார்த்த வீரியார்ஜுனன்,
ஒருமுறை காட்டில் வேட்டையாடிவிட்டு, பரசுராமரின் தந்தையான ஜமதக்னியின் ஆசிரமத்துக்கு வந்தான்.
அவனுக்கும் அவனது படை வீரர்களுக்கும் காமதேனு எனும் பசுவின் துணையோடு விருந்தளித்தார் ஜமதக்னி முனிவர்.
இதைக் கண்ட கார்த்த வீரியார்ஜுனனுக்கு அந்தக் காமதேனுவின் மீது ஆசை வந்து விட்டது.
அதை அபகரிக்கப் பார்த்தான். காமதேனுவின் திருமேனியில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள்
தோன்றிக் கார்த்தவீரியார்ஜுனனின் சேனையைத் துவம்சம் செய்தார்கள்.

ஆனால் கார்த்தவீரியார்ஜுனன், தன் வலிமையைப் பயன்படுத்திப் பலவந்தமாகக் காமதேனுவை அபகரித்துச் சென்றான்.
வனம் சென்றிருந்த பரசுராமர், ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, காமதேனுவைக் காணவில்லை.
நடந்தவற்றைத் தன் தந்தையிடம் கேட்டறிந்த பரசுராமர், கையில் மழு எனப்படும் கோடாரியை ஏந்திக்கொண்டு
ஆயிரம் தோள்படைத்த கார்த்த வீரியார்ஜுனனை எதிர்த்துப் போரிடச் சென்றார்.

பரசுராமர் தன்னைத் தாக்க வருவதை அறிந்துகொண்டான் கார்த்த வீரியார்ஜுனன்.
முனிவரை எதிர்த்துப் போரிடு வது மன்னனான தனக்கு இழுக்கு என்று கருதிய அவன்,
தனக்குக் கீழ் உள்ள சிற்றரசர்களைப் பரசுராமரை எதிர்த்துப் போர் புரியச் சொல்லி அனுப்பி வைத்தான்.
ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் துவம்சம் செய்தார் பரசுராமர்.தன்கீழ் உள்ள சிற்றரசர்களை எல்லாம் இழந்த
கார்த்தவீரியார்ஜுனன், கர்வத்தால் மார்தட்டிக்கொண்டு, பெருத்த ஆரவாரத்துடன், தானே நேரடியாகப் போர்க்களத்திற்கு
வந்து பரசுராமரைத் தாக்க முயன்றான். ஆனால் அவன் செலுத்திய பாணங்கள் பரசுராமரை ஒன்றும் செய்யவில்லை.

ஆனால் பரசுராமரோ, அவனது மலைபோன்ற ஆயிரம் கரங்களையும் பூவைக் கொய்வது போல வெட்டி வீழ்த்தி,
அவனை வதம் செய்தார். இதைத் திருமங்கை ஆழ்வார்,
“தெழித்திட்டு எழுந்தே எதிர்நின்ற மன்னன்
சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால் அழித்திட்டவன் காண்மின்!”என்று பாடுகிறார்.
அதன்பின் தனது காமதேனுவை மீண்டும் ஆசிரமத்துக்கு மீட்டு வந்தார்.
‘கர்த்தா’ என்றால் (இவ்விடத்தில்) வெட்டிச் சாய்ப்பவர் என்று பொருள்.
யாராலும் வெல்ல முடியாதவன் என்றுபுகழப்பட்டவனும், ஆயிரம் தோள்கள் கொண்டவனுமான
கார்த்த வீரியார்ஜுனனையே அனாயாசமாக வெட்டிச் சாய்த்தபடியால், பரசுராமர் ‘கர்த்தா’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 317-வது திருநாமம்.
“கர்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
வாழ்வில் ஏற்படும் தடங்கல்களை எல்லாம் திருமால் வெட்டிச் சாய்ப்பார்.

———————

318. விச்வபாஹவே நமஹ (Vishwabaahave namaha)

சீர்காழிக்கு அருகில் உள்ள மங்கை நாடு எனப்படும் குறுநிலத்துக்கு மன்னரான மங்கை மன்னர்,
திருவெள்ளக்குளம் என்ற ஊரில் குமுதவல்லி என்ற தேவலோகப் பெண்ணைக் கண்டார்.
அவள் அழகிலே மையல்கொண்டு, தன் விருப்பத்தை அவளிடம் தெரிவித்தார்.
குமுதவல்லியோ, “தோள்களில் சங்கு சக்கர முத்திரைகளைப் பொறித்திருக்கும் திருமால் அடியவரையே
நான் மணந்துகொள்வேன்! என்னை மணந்துகொள்ள விரும்பினால் நீங்களும்
அத்தகைய வைணவ அடையாளத்தோடு வாருங்கள்!” என்றாள்.

தோள்களில் சங்கு சக்கரப்பொறியை முறைப்படி குரு மூலமாகப் பெறவேண்டும்.
ஆனால் அப்போது இருந்த குருமார்கள் யாரும் மங்கை மன்னருக்கு இச்சடங்கைச் செய்ய முன்வரவில்லை.
வேறு புகலற்றவர்களுக்கு இறைவன்தானே புகலிடம்? அதனால், கும்பகோணத்துக்கு அருகிலுள்ள
நாச்சியார்கோவிலில் கோவில் கொண்டிருக்கும் நிவாசப் பெருமாளிடம் வந்தார் மங்கை மன்னர்.
“என் தோள்களில் சங்கு சக்கரப்பொறிகளை ஒத்தி அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.

அவரது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய நிவாசன், தன் கரங்களில் பிடித்திருக்கும் சங்கு சக்கரங்களை
அப்படியே மங்கை மன்னரின் தோள்களில் ஒத்தி, அவருக்குத் திருமால் அடியார் என்ற அங்கீகாரத்தைத் தந்தார்.
குமுதவல்லியின் நிபந்தனையை நிறைவேற்றியதால், அவளை வெற்றிகரமாக மணந்துகொண்டார் மங்கை மன்னர்.

அதன்பின், குமுதவல்லி இட்ட கட்டளைப்படி தினசரி ஆயிரம் திருமால் அடியார்களுக்கு அன்னதானம்
செய்து வந்த மங்கை மன்னர், திருமாலிடமே நேரடியாக எட்டெழுத்து மந்திர உபதேசம் பெற்று,
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான ‘திருமங்கை ஆழ்வா’ராக விளங்கினார் என்பது நாம் அறிந்த வரலாறாகும்.
திருமாலிடம் மந்திர உபதேசம் பெற்று ஆழ்வாராக ஆனபின், ஆடல்மா எனும் குதிரையில் குமுதவல்லியோடு
நாச்சியார்கோவில் திருத்தலத்துக்கு வந்தார் திருமங்கை ஆழ்வார்.
தனக்கு முதன்முதலில் வைணவ முத்திரைகளைத் தோளில் தந்த அந்தப் பெருமாளைப் பார்த்து,
அப்பெருமானின் பரசுராம அவதாரத்தை நினைவு கூர்ந்து,

“முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்னர் உடல்துணிய
தனிவாய் மழுவின் படை ஆண்ட தாரார் தோளான் வார்புறவில்
பனிசேர் முல்லை பல்லரும்பப் பானல் ஒருபால் கண்காட்ட
நனிசேர் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே!”என்ற பாடலைப் பாடினார்.
“பரசுராம முனிவராக அவதாரம் செய்து, கையில் மழு ஏந்தி, இருபத்தொரு தலைமுறை மன்னர்
களைத் தொலைத்தவன் நீயே!” என்று நாச்சியார்கோவில் நிவாசப்பெருமாளைப் பார்த்துச் சொன்னார் திருமங்கை ஆழ்வார்.
“திடீரெனப் பரசுராம அவதாரத்தைக் குறிப்பிடக் காரணம் யாதோ?” என வினவினார் ஸ்ரீநிவாசன்.

திருமங்கை ஆழ்வார், “பரசுராம அவதாரத்தில் நீ உன் கைகளால் எத்தனையோ மன்னர்களை அழித்தாய்.
ஆனால் உன் சுயநலத்துக்காக அதை நீ செய்யவில்லை. அறநெறி தவறி நடந்த அந்த மன்னர்களை அழித்து
உலகுக்கு நன்மையை உண்டாக்க வேண்டும் என்பதற்காக நீ அவர்களை அழித்தாய்.
எனவே அந்த அவதாரத்தில் உனது வலிமையான கைகளை நீ உனக்கென்று பயன்படுத்திக்கொள்ளவில்லை.

உலக நன்மைக்காகப் பயன்படுத்தினாய்.அதுபோலத் தான் இங்கே ஸ்ரீநிவாசனாகக் கோவில்கொண்ட நிலையிலும்,
உன் கரங்களில் உள்ள சங்கு சக்கரங்களாகிய ஆயுதங்களை எனது நன்மைக்காகப் பயன்படுத்தி,
என் தோள்களிலே சங்கு சக்கர முத்திரைகளைப் பொறித்து, என்னை ஒரு பக்தனாக ஆக்கிவிட்டாய்!இறைவா!
பரசுராம அவதாரத்தில் உன் கரங்களை உலகின் நன்மைக்குப் பயன்படுத்தியது போல்,
இங்கே உன் ஆயுதங்களை எனது நன்மைக்காகப் பயன்படுத்தினாய் அல்லவா?
அதனால்தான் பரசுராமனாகவே உன்னை அநுபவித்துப் பாடினேன்!” என்றார்.
புன்னகை பூத்து அதை ஆமோதித்தார் ஸ்ரீ நிவாசப் பெருமாள்.

‘விச்வம்’ என்றால் உலகம். ‘விச்வஸ்மை’ என்றால் உலகுக்காக. ‘பாஹு:’ என்றால் கரம்.
‘விச்வஸ்மை + பாஹு: = விச்வபாஹு:’. உலகின் நன்மைக்காகவே கரத்தை உடையவனுக்கு ‘விச்வபாஹு:’ என்று பெயர்.
பரசுராமர், தனது திருக்கரங்களை உலகின் நன்மைக்கென்றே அர்ப்பணித்துப் பயன்படுத்திய படியால், ‘விச்வபாஹு:’ –
‘உலகுக்காகவே கரங்களை வைத்திருப்பவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
‘விச்வபாஹு:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 318-வது திருநாமம்.
“விச்வபாஹவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அனைவரையும் திருமால் கைகொடுத்துக் காப்பாற்றுவார்.

——————

319. மஹீதராய நமஹ (Maheedharaaya namaha)

அடியேன் எம்.பி.பி.எஸ். மூன்றாம் ஆண்டு படித்து வந்த போது, எங்களின் கண்மருத்துவப் பேராசிரியர்
ஒருமுறை அடியேனிடம் ஒரு கேள்வி கேட்டார். “சுவிட்சர்லாண்டில் மத்திய ஐரோப்பிய அணு ஆராய்ச்சியின்
தலைமையகம் உள்ளது. அங்கே அணுத்துகள்களை ஒன்றோடு ஒன்று மோதச் செய்து, அவை
உருவாவதையும் அழிவதையும் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள். அணுத்துகள்கள் பற்றிய இந்த ஆராய்ச்சியின் மூலமாக
இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை அறிய முயல்கிறார்கள்.
இத்தகைய அணுத்துகள் ஆராய்ச்சியகத்தின் வாசலில் யாருடைய சிலை வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?” என்று அடியேனிடம் கேட்டார்.

“ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஓப்பன்ஹைமர், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளில் யாராவது ஒருவரின் சிலை வைக்கப்பட்டிருக்கலாம்!”
என்று அடியேன் சொன்னேன். ஆனால் பேராசிரியர், “இல்லை! இல்லை! அங்கே சிதம்பரம் நடராஜப் பெருமானின் சிலை
ஆறு அடி உயரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது!” என்றார். ஒரு நிமிடம் அசந்து போனேன்.
“நடராஜர் சிலைக்கும் அணுத்துகள் ஆராய்ச்சிக்கும் என்ன தொடர்பு?” என்று அடியேன் கேட்டேன்.

பேராசிரியர், “அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ரிட்ஜாஃப் கேப்ரா (Fritjof Capra) என்ற விஞ்ஞானி,
‘த டாவோ ஆஃப் ஃபிஸிக்ஸ்’ (The Tao of Physics) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதன் பதினொன்றாம் பக்கத்தில் சிதம்பரம் நடராஜருக்கும் அணுத்துகள் விஞ்ஞானத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கியுள்ளார்:

நடராஜரின் வலக்கையில் உடுக்கை இருப்பதைக் காணலாம். அந்த உடுக்கையில் இருந்து எழும் ஒலி
அணுத்துகள்களின் படைப்பைக் குறிக்கிறது. அவரது இடக்கையில் நெருப்பு இருப்பதைக் காணலாம்.
அது அணுத்துகள்களின் அழிவைக் குறிக்கிறது. சுவிட்சர்லாண்டு ஆராய்ச்சியின்படி, எவ்வளவு அணுத்துகள்கள் உருவாகின்றனவோ,
அதே சம அளவில்தான் அணுத்துகள்கள் அழிகின்றன என்று கண்டார்கள். அதை உணர்த்தும் விதமாகவே,
நடராஜரின் வலக்கையில் உள்ள உடுக்கையும், இடக்கையில் உள்ள நெருப்பும் சம அளவில் இருப்பதைக் காணலாம்.

இந்த அணுத்துகள்களின் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் நடுவே நடைபெறும் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமானது,
சீராக நடைபெறுகிறது அல்லவா? சீராக நடைபெறும் பிரபஞ்ச இயக்கத்தையே நடராஜரின் சீரான நடனமாக
வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்கள்.அணுத்துகள் விஞ்ஞானத்தைப் பாமரனும் புரிந்துகொள்வதற்கு
நமது முன்னோர்கள் தந்த வடிவமே நடராஜரின் உருவமாகும்!
சிதம்பரத்தில் நடராஜருக்கு எதிரே கோவிந்தராஜப் பெருமாள் சயனித்திருக்கிறார் அல்லவா?
அந்தத் திருமால் இந்த உலகைப் படைத்து, அதைச் சீராக நடத்திச் செல்லும் பாங்கை
அவருக்கு எதிரே நடனமாக ஆடிக் காட்டுகிறார் சிவபெருமான்!” என்று விளக்கினார்.

“ஆம்! நடனம் எப்படிச் சீராக இருக்குமோ, அவ்வாறே இந்த உலகின் இயக்கமும் சீராகவே உள்ளது.
ஒரு நாள் என்றால் இருபத்து நான்கு மணிநேரம், ஒரு வருடம் என்றால் முந்நூற்று அறுபத்து ஐந்தேகால் நாட்கள்
என அனைத்தும் ஒரு ‘ரிதமோடு’ (rhythm) இயங்குகிறது.
திருமால் இந்த உலகை ‘ரிதமோடு’ இயக்குவதைத்தான் ‘ரிதம்’ கொண்ட நடனமாக நடராஜர் ஆடுகிறாரோ?” என்று அடியேன் கூறினேன்.

இப்படி இந்த உலகத்தைச் சீராக நடத்திச் செல்லும் திருமால், உலகில் தருமத்துக்கு எப்போது ஆபத்து நேர்ந்தாலும்,
அப்போதெல்லாம் தானே வந்து பூமியிலே அவதரித்துத் தீயசக்திகளை அழித்து, தருமத்தை நிலைநாட்டி,
இவ்வுலகம் தொடர்ந்து அறவழியில் நிலைநிற்கும்படிச் செய்கிறார்.

அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட காலத்தில், கார்த்த வீரியார்ஜுனன் உள்ளிட்ட பற்பல மன்னர்கள்
அறநெறி தவறி உலகுக்குக் கேடு விளைவித்துக்கொண்டிருந்தார்கள்.
அதனால் பூமிதேவி அவர்களின் பாரம் தாங்க முடியாமல் திண்டாடினாள்.
அந்நிலையில், பரசுராமராக அவதரித்த திருமால், கையில் மழு ஏந்தி, அந்தத் தீய மன்னர்களை அழித்து,
பூமி தேவியின் பாரத்தைப் போக்கி, உலகை நன்னெறியில் நிலைநிறுத்தினார்.

‘மஹீ’ என்றால் பூமி. ‘தர:’ என்றால் நிலைநிறுத்துபவர் அல்லது தாங்குபவர்.
பூமிக்குப் பாரமாக இருக்கும் தீயவர்களைப் போக்கி, பூமியை நன்னெறியில் நிலைநிறுத்தித் தாங்கியபடியால்,
பரசுராமருக்கு ‘மஹீதர:’ என்று திருப்பெயர். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 319-வது திருநாமம்.
“மஹீதராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில்
நல்ல நிலைக்கு உயர்ந்து நிலைநிற்கத் திருமால் துணைபுரிவார்.

————-

320. அச்யுதாய நமஹ (Achyuthaaya namaha)

சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூர் என்னும் புண்ணியபூமியைப் பராந்தகன் என்ற குறுநில மன்னர் ஆண்டுவந்தார்.
அவரை வீழ்த்தித் திருநாங்கூர்ப் பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணி,
சோழனும் பாண்டியனும் இணைந்து படையெடுத்து வந்தார்கள்.
இருபெரும் மன்னர்களை எதிர்த்துப் போர் புரியும் அளவுக்குப் பராந்தகனிடம் படைபலம் இல்லை.
என்ன செய்வதென்று மன்னர் சிந்தித்திருக்க, அவரது கனவில் திருநாங்கூரில் கோவில் கொண்டிருக்கும்
திருமணிக் கூடம் வரதராஜப் பெருமாள் தோன்றினார்.

“பராந்தகா! தில்லை மூவாயிரம் என்று சிதம்பரம் வாழ் அந்தணர்களைக் கொண்டாடுவது போல்,
நாங்கூர் நாலாயிரம் என்று நாங்கூர் வேதியர்களைக் கொண்டாடுவதுண்டு.
அந்த நாலாயிரம் வேதியர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி உனக்கு வெற்றியை ஈட்டித் தருவார்கள்!” என்றார்.
“வேதம் ஓதுவதாகிய தம் தொழிலை மறந்து அந்தணர்கள் போர்புரிவது பாபம் இல்லையா?” என்று
திருமாலிடம் கேட்டார் பராந்தக மன்னர். அதற்குத் திருமால், “ஆபத்துக் காலத்தில் பாபமில்லை.
முன்னொரு சமயம் உலகெங்கும் ஆட்சி செய்த மன்னர்கள் அறநெறியை மறந்து தீய ஒழுக்கத்துடன் வாழ்ந்து,
நல்லோர்களைத் துன்புறுத்தினார்கள்.
மக்கள் நலத்தைப் பேண வேண்டும் என்பதை மறந்து கொடுங்கோல் ஆட்சிபுரிந்தார்கள்.
அப்போது ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர், கையில் கோடாரி ஏந்தி இருபத்தொரு தலைமுறை
மன்னர்களை அழித்த வரலாற்றை நீ அறிவாய் அல்லவா? முனிவரின் மகனாக, அந்தணராக இருந்தபோதும்,
கையில் ஆயுதம் ஏந்திப் போர்புரிந்த பரசுராமருக்கு ஏன் எந்தவிதப் பாபமும் ஏற்படவில்லை?” என்று கேட்டார்.

அதற்கு மன்னர், “இறைவா! நீயே பரசுராமராக அவதாரம் செய்தாய். நீ பாப புண்ணியங்களுக்கு அப்பாற்பட்டவன்!
நீ தேவனாகவோ, மனிதனாகவோ எந்த அவதாரம் எடுத்தாலும், உன் மேன்மை குன்றாமல் திகழ்பவன் நீ!
எனவே உனது அவதாரமான பரசுராமருக்கு எந்தப் பாபமும் நேரவில்லை!” என்று விடையளித்தார்.
அப்போது திருமால், “பராந்தகா! பாப-புண்ணியங்கள் என்னைப் பாதிக்காது என்பது உண்மையே.
ஆனால் ராமனாகவோ, கண்ணனாகவோ நானே நேரடியாகப் பூமியில் வந்து அவதாரம் செய்தது போல் பரசுராம அவதாரம் செய்யவில்லை.

ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர் மேல் எனது சக்தியைச் செலுத்தி, குறிப்பிட்ட செயலைச் செய்யும்படி அவரை நான்
ஏவினேன். எனவே பரசுராம அவதாரம் முழு அவதாரம் இல்லை, ஆவேச அவதாரம் ஆகும். எனினும் எனது சக்தியின்
ஆவேசம் அவரிடம் இருந்ததால், இருபத்தொரு தலைமுறை மன்னர்களை அழித்தபோதும், பரசுராமருக்கு எந்தப் பாபமும் நேரவில்லை.

தன் நிலையிலிருந்து நழுவாமல், வீழாமல் அவர் திகழ்ந்தார். அதுபோல் இந்த நாங்கூரில் வாழும் வேதியர்களுக்குள்
என் சக்தியை நான் செலுத்துகிறேன். ஆபத்துக் காலத்தில் போர்புரிவதால் அவர்களுக்குப் பாபமும் நேராது!
அதே நேரத்தில் என் அருளால் அவர்கள் உனக்கு வெற்றியை ஈட்டித் தருவார்கள்!” என்று சொல்லி விட்டு மறைந்தார்.

திருமாலின் ஆணைப்படி நாலாயிரம் வேதியர்கள் திருநாங்கூர் மன்னருக்காகப் போரிட்டு, சோழ-பாண்டியர்களை
வீழ்த்திய வரலாற்றைத் திருமங்கை ஆழ்வார்,“ஒண்திறல் தென்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட
திண்திறலாளர் நாங்கூர்த் திருமணிக்கூடத் தானே”என்று பாடியுள்ளார்.

இதிலிருந்து நாம் அறிய வேண்டிய செய்தி என்ன என்றால், திருமால் கர்ம வினைகளுக்கு அப்பாற்பட்டவராக இருப்பதால்,
தன் நிலையில் இருந்து என்றும் வீழ்வதில்லை. இந்திரன் போன்ற தேவர்கள் கர்மவினைகளுக்கு வசப்பட்டவர்கள்.
எனவே அவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து வீழ்வதற்கு வாய்ப்புண்டு.
ஆனால் திருமால் பூமியில் வந்து அவதாரம் செய்தாலும் கூட,
மேன்மை குன்றாமல், தன்நிலையில் இருந்து நழுவி விழாதவராகவே திகழ்கிறார்.

அவர் நேரடியாகப் பரசுராமராக அவதாரம் செய்யாவிடிலும், ஜமதக்னி முனிவரின் மகன்மேல்
தனது சக்தியைச் செலுத்தியபடியால், அந்தப் பரசுராமரும் என்றுமே தன் நிலையிலிருந்து வீழாதவராகத் திகழ்ந்தார்.
‘ச்யவன’ என்றால் நழுவி விழுதல் என்று பொருள். ‘ச்யுத:’ என்றால் நழுவி விழுபவர் என்று பொருள்.
‘அச்யுத:’ என்றால் நழுவி விழாதவர் என்று பொருள். பரசுராமர் இருபத்தொரு தலைமுறை மன்னர்களை அழித்தார்.

ஆனாலும் அவருக்குள் திருமாலின் ஆவேசம் இருந்ததாலும், உலகின் நன்மையைக் கருதியே
அவர் இச்செயலைச் செய்ததாலும், இத்தனை உயிர்களை அழித்த பாபம் அவருக்கு வரவில்லை.
அவர் தன்நிலையிலிருந்து நழுவி விழாமல் திகழ்ந்தார்.
எனவே அவர் ‘அச்யுத:’ – ‘என்றும் நழுவி விழாதவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 320-வது திருநாமம்.
“அச்யுதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தங்கள் உயர்நிலையில் இருந்து
என்றுமே நழுவி விழாமல் இருக்கத் திருமால் அருள்புரிவார்.

—————-

321. ப்ரதிதாய நமஹ (Prathithaaya namaha)

அறவழி தவறிய மன்னர்கள் அதிக அளவில் பூமியை ஆண்டு வந்த நிலையில், அவர்களை அழித்து
நல்லறம் செழிக்கும்படிச் செய்ய வேண்டும் என்று விரும்பினார் திருமால்.
அதனால், ஜமதக்னியின் மகனான பரசுராமருக்குள் தனது சக்தியைச் செலுத்தினார்.
பரசுராமர் மூலமாகப் பல தீய மன்னர்களை அழித்தார்.

எனவே தான் பரசுராம அவதாரத்தை ஆவேச அவதாரம் என்று சொல்வார்கள். அதாவது,
ராமன், கண்ணன் போன்ற அவதாரங்களில் வைகுண்டத்திலிருந்து நேரே இறைவன் பூமிக்கு இறங்கி வருவது போன்றதல்ல பரசுராம அவதாரம்.
திருமால் ஒரு ஜீவாத்மாவைத் தேர்ந்தெடுத்து அவர்மீது தனது சக்தியைச் செலுத்தியதே பரசுராம அவதாரம் ஆகும்.

அந்தப் பரசுராமர், தீய சக்திகளை அழிப்பதற்காகத் தனக்கு ஒரு சிறப்பான ஆயுதம் வேண்டும் என்று கருதினார்.
சிவபெருமானிடம் இருந்தே ஒரு நல்ல ஆயுதத்தை நாம் பெற்றுக் கொள்வோம் என்று எண்ணிய பரசுராமர்,
சிவனைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தார்.
மழை, வெயில், பனி, காற்று என எதையுமே பொருட்படுத்தாமல், பல ஆண்டுகள் உணவு, உறக்கம் இன்றித் தவம் புரிந்த
பரசுராமரின் உறுதியைக் கண்டு வியந்தார் சிவபெருமான்.
அப்போது பார்வதி தேவி சிவனிடம், “மிகச் சிறந்த ஆயுதத்தை வேண்டியே பரசுராமன் தவம் புரிந்து வருகிறான்.
நாம் இருவரும் மழு கோடாரி எனும் ஆயுதம் ஏந்தி இருக்கிறோமே! அதைப் போலவே ஒரு மழுவை இவனுக்கும் தந்து விடலாமே!” என்றாள்.
அதை ஏற்ற சிவபெருமான், பரசுராமருக்குக் காட்சி தந்து, மழு எனும் ஆயுதத்தை அவரது தவத்துக்குப் பரிசாக அளித்தார்.

வடமொழியில் மழுவுக்குப் பரசு என்று பெயர். பரசுவைக் கையில் ஏந்தியிருப்பதால், அவர் பரசுராமர் என்ற பெயரைப் பெற்றார்.
சிவபெருமானே பரசுராமருக்குக் குருவாக இருந்து அந்த மழுவைப் பயன்படுத்துவது எப்படி என்பதை உபதேசித்தார்.
அதன்பின், பரசுராமர் சிவபெருமானைப் பார்த்து, “குருவே! தாங்களே கருணை கூர்ந்து எனக்கு இந்த ஆயுதப் பயிற்சி
வழங்கியமைக்குத் தலையல்லால் கைம்மாறிலேன். தாங்கள் எனக்கு மற்றொரு அருளும் புரிய வேண்டும்!” என்றார்.
என்னவென்று சிவன் கேட்க, “என் வலிமையையும் திறமையையும் சோதித்துப் பார்க்கும் விதமாகத்
தாங்களே என்னுடன் போரிட வேண்டும்!” என்று கோரினார் பரசுராமர். சிவனும் அதை ஏற்றார்.

அதைத் தொடர்ந்து பரசுராமருக்கும் சிவனுக்கும் நடந்த போரிலே, பரசுராமர் சிறப்பாகப் போர் புரிந்தார்.
தனது மழுவால் சிவனின் நெற்றியிலே தாக்கி விட்டார்.
ஆனால் அதற்காகக் கோபம் கொள்ளாமல், தனது சீடன் சிறப்பாகப் போர் புரிந்ததை எண்ணிப் பூரித்தார் சிவன்.
அப்போது வானில் தோன்றிய திருமால், “பரசுராமா! உன்னை யாராலும் வெல்ல முடியாது!
சிவபெருமானே உனக்குப் பயிற்சி அளித்திருப்பதால் உன்னை வெல்ல யாருமில்லை!” என்று பரசுராமரை வாழ்த்தினார்.
பரசுராமரும் கையில் மழுவேந்தித் தீய சக்திகளான மன்னர்களை அழித்தார்.

பல நூறாண்டுகள் கழித்து, ராமனாக அவதரித்த திருமால், சீதையை மணம் புரிந்து கொண்டு
மிதிலையில் இருந்து அயோத்தி நோக்கித் திரும்புகையில், அவரை வழிமறித்த பரசுராமர், தனது வில்லைக் காட்டி,
அதில் ராமனால் நாண் ஏற்ற முடியுமா என்று சவால் விட்டார். ஆனால் அனாயாசமாக அந்த வில்லை வாங்கிய ராமன்,
அதில் நாண் ஏற்றிக் காட்டிப் பரசுராமரை வீழ்த்தி விட்டான்.

ராமன் திருமாலின் அவதாரமே என அப்போது உணர்ந்துகொண்ட பரசுராமர், “திருமாலே! முன்பு சிவனை நான் போரில்
வென்ற போது என்னை யாராலும் வெல்ல முடியாது என்றீர்கள்!
இப்போது நீங்கள் என்னை வென்றுவிட்டீர்களே!” என்று கேட்டார். அப்போது அருகிலிருந்த வசிஷ்டர்,
“பரசுராமரே! நீங்கள் திருமாலின் ஆவேச அவதாரம். ராமபிரான் திருமாலின் முழு அவதாரம்.
முழு அவதாரத்தின் எதிரே ஆவேச அவதாரம் எடுபடாது.
உங்களை உள்ளிருந்து இயக்குபவனையே நீங்கள் வெல்ல வேண்டும் என்றால், அது சாத்தியமில்லை.
அது உங்களை நீங்களே வீழ்த்திக் கொள்வதற்குச் சமம்.
மற்றபடி உலகில் உள்ள யாராலும் உங்களை வெல்லவே முடியாது என்பது உண்மையே.

திருமால் ஏற்கனவே சொன்னபடி, வெல்ல முடியாதவர் என்ற புகழோடு தான் நீங்கள் திகழ்வீர்கள்!” என்றார்.
‘ப்ரதித:’ என்றால் புகழ்பெற்றவர் என்று பொருள்.
இதற்கு முந்தைய திருநாமமான அச்யுத: (320) என்பதற்குத் தன்நிலையில் இருந்து வீழாதவர் என்று பொருள்.
அச்யுதன் (வீழாதவர்) என்று உலகெங்கிலும் புகழ்பெற்றவராகப் பரசுராமர் திகழ்வதால்
(இன்றளவும் பரசுராமர் சிரஞ்சீவியாக இருந்து வருகிறார்)
அவர் ‘ப்ரதித:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 321-வது திருநாமம்.
‘அச்யுத:’ (320-வீழாதவர்) ப்ரதித: (321-புகழ்பெற்றவர்) என அடுத்தடுத்துத் திருநாமங்கள் வருவதாலே,
அவற்றை இணைத்து வீழாதவர் எனப் புகழ்பெற்றவர் என்று உரையாசிரியர்கள் விளக்கியுள்ளார்கள்.

“ப்ரதிதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் திக்கு நிறை
புகழாளர்களாகத் திகழும்படித் திருமால் அருள் புரிவார்.

——————-

322. ப்ராணாய நமஹ: (Praanaaya namaha)
(திருநாமங்கள் 315 முதல் 322 வரை – பரசுராமரின் பெருமைகள்)
நாம் கடந்த சில திருநாமங்களின் விளக்கத்தில் பார்த்து வந்தது போல், அறநெறி தவறி ஆட்சிபுரிந்து வந்த மன்னர்களை
அழிப்பதற்காகத் தோன்றிய பரசுராமர், இருபத்தொரு தலைமுறை மன்னர்களை அழித்தார்.
அதன்பின், கச்யபர் உள்ளிட்ட முனிவர்களை வரவழைத்துப் பெரும் வேள்வியைச் செய்த பரசுராமர்,
மன்னர்களை வீழ்த்தித் தான் பெற்ற அனைத்து நிலங்களையும் அந்த முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்து விட்டார்.

“இனி நீங்கள் எங்கே செல்வீர்கள்?” என்று முனிவர்கள் கேட்க,
“நான் எனக்கென்று புதிய நிலத்தை உருவாக்கப் போகிறேன்!” என்று சொன்னார் பரசுராமர்.
பாரத தேசத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்குச் சென்ற பரசுராமர், தன் கையில் ஏந்திய மழு எனும் ஆயுதத்தைக் கடலின் மீது வீசினார்.
உடனே, கடல் பல மைல் தூரம் பின் வாங்கிக் கொண்டு பெரும் நிலத்தைப் பரசுராமருக்கு வழங்கியது.

கடல் பின்வாங்கித் தனக்குச் சமர்ப்பித்த அப்பகுதியைப் பரசுராம க்ஷேத்திரம் என்று நிர்மாணித்தார் பரசுராமர்.
இன்றைய பாரத தேசத்தின் மேற்குக் கடற்கரை ஓரத்தில் உள்ள கோவா மாநிலத்திலிருந்து
கேரள மாநிலம் வரை பரசுராமரின் க்ஷேத்திரம் என்று சொல்லப்படுகிறது.
“கலியுகத்தின் முடிவில் திருமால் கல்கியாக அவதாரம் எடுத்து வந்து தீய சக்திகளை அழிப்பார்!
அவர் அவதரித்து வரும் வரை நான் காத்திருந்து, அவரது செயல்பாடுகளில் அவருக்கு உறுதுணையாக இருப்பேன்!” என்று
முனிவர்களிடம் சொல்லி விட்டு அந்தப் பரசுராம க்ஷேத்திரத்தில் தங்கினார் பரசுராமர்.

தினமும் பொழுது விடியும் போது அங்கிருந்து புறப்பட்டு இமய மலைக்குச் செல்வார் பரசுராமர்.
பகல் முழுதும் இமய மலையில் தவம் புரிந்து விட்டு, சூரியன் அஸ்தமிக்கும் முன் மீண்டும் பரசுராம க்ஷேத்திரத்தை வந்து அடைவார்.
இவ்வாறு பரசுராமர் அங்கே எழுந்தருளியிருந்த நிலையில், ஒரு சமயம் மேற்குக் கடலில் ஆழிப் பேரலையும் புயலும் உண்டானது.
பரசுராம க்ஷேத்திரத்தில் வாழும் மக்கள் எல்லோரும் கடல் சீற்றத்தால் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் பரசுராமரை அடி பணிந்து, கடல் சீற்றத்திலிருந்து தங்களைக் காத்தருளுமாறு பிரார்த்தித்தார்கள்.
“என்னையே நம்பி என் பகுதியில் வாழும் உங்களை வாழ வைக்க வேண்டியது என் கடமை!
நீங்கள் அஞ்சாமல் சென்று வாருங்கள்!” என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் பரசுராமர்.
கடல் அலைகள் பொங்கி நிலத்தை ஆக்கிரமித்த நிலையில், தனது மழுவைக் கடல்மீது ஏவினார் பரசுராமர்.
அந்த மழுவுக்குக் கட்டுப்பட்டுக் கடல் மீண்டும் தனது பழைய எல்லைக்குள் சென்று அடங்கியது.
ஆனால் உப்பு கலந்த கடல்நீர் ஊருக்குள் வந்தபடியால், அந்த நிலத்தில் பயிர்கள் ஏதும் விளையவில்லை.

மீண்டும் பரசுராமரின் உதவியை மக்கள் நாடினார்கள். நிலத்தில் உள்ள உப்பை நீக்கி விட்டால், விளைச்சல் நன்றாக ஏற்படும்
என்று கூறிய பரசுராமர், நாக லோகத்தில் வாழும் பாம்புகளை அழைத்தார்.
பரசுராம க்ஷேத்திரம் முழுவதும் உள்ள உப்பினை நீக்குமாறு அப்பாம்புகளை ஏவினார்.
பாம்புகள் தங்கள் விஷத்தினாலே நிலத்திலுள்ள உப்பைச் சராசரி அளவுக்குச் சமன் செய்தன.
அதன்பின் அந்த மண்ணில் நல்ல விளைச்சலும் உண்டானது.

பரசுராம க்ஷேத்திரத்தின் மக்கள் பரசுராமருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தார்கள்.
“கடல் சீற்றத்திலிருந்தும் எங்களைக் காத்து, இங்கே பயிர்விளைச்சல் ஏற்படுவதற்கும் உதவிய உங்களுக்கு
எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எங்களுக்கு வாழ்வு அளித்தவரே நீங்கள்தான்!” என்று பரசுராமரைத் துதித்தார்கள்.

அப்போது பரசுராமர், “எனது பகுதியில் என்னை நம்பி வாழும் ஒவ்வொருவரையும் காக்க வேண்டியது என் கடமை!
நீங்கள் என்றுமே அஞ்ச வேண்டாம்!” என்று அவர்களுக்கு அபயம் தந்து அனுப்பி வைத்தார்.
‘ப்ராணன்’ என்று உயிர்வாயுவுக்குப் (oxygen) பெயர்.
உயிர்வாயு எப்படி நம் சுவாசத்துக்குப் பயன்பட்டு நம்மை வாழ வைக்கிறதோ, அதுபோல் தன்னை அண்டி வரும் மக்கள்
அனைவரையும் வாழ்விப்பவராகப் பரசுராமர் திகழ்வதால், அவர் ‘ப்ராண:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ப்ராண:’ என்றால் மூச்சுக்காற்று போல் இருந்து வாழ்விப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 322-வது திருநாமம்.

சுவாசம், மூச்சுக்குழாய் தொடர்பான உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் மருந்து உட்கொள்ளும் வேளையில்
“ப்ராணாய நமஹ:” என்று இத்திருநாமத்தைச் சொல்லி வந்தால், மருந்து விரைவில் வேலை செய்து,
நோய் குணமடைவதற்குத் திருமால் அருள்புரிவார்.

—————–

323. ப்ராணதாய நமஹ: (Praanaadhaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)

சாந்தோக்கிய உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தில் ஒரு கதை வருகிறது.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே பெரும் போர் நடந்தபோது, அசுரர்களின் கை ஓங்கத் தொடங்கியது.
தாங்கள் வெற்றிபெற நல்வழி காட்டுமாறு தேவர்கள் தங்கள் குருவான பிருகஸ்பதியிடம் வேண்டினார்கள்.
“ஓம்காரம் தான் நீங்கள் வெற்றி பெறுவதற்கான ஆயுதம். ஓம்காரமாகிய பிரணவத்தை உங்கள் உடலில் உள்ள
ஒவ்வொரு அங்கமாக எண்ணித் தியானம் செய்யுங்கள்!” என்று கூறினார் பிருகஸ்பதி.

முதலில் தேவர்கள் தங்கள் மூக்கையே ஓம்காரமாக எண்ணித் தியானித்தார்கள். அசுரர்கள் பாபத்தையே ஆயுதமாகப்
பயன்படுத்தி மூக்கைத் தாக்கி விட்டார்கள்.
அதன் விளைவாகவே இன்றளவும் நமது மூக்கு நல்ல வாசனை, துர்நாற்றம் ஆகிய இரண்டையுமே நுகர்ந்து வருகிறது.
அதன்பின் தங்கள் நாவை ஓம்காரமாக எண்ணித் தியானித்தார்கள் தேவர்கள்.
அதையும் பாபத்தால் அசுரர்கள் தாக்கவே, நம் நாவானது இன்றளவும் உண்மை, பொய் இரண்டையும் பேசிவருகிறது.

அதைத் தொடர்ந்து தங்கள் காதை ஓம்காரமாக எண்ணித் தேவர்கள் தியானித்தார்கள்.
அதையும் பாபத்தால் அசுரர்கள் தாக்கவே, அதன் விளைவாக நம் காது இன்றளவும் நல்ல செய்தி, தீயசெய்தி
இரண்டையுமே கேட்டுவருகிறது.அதன்பின் கண்ணை ஓம்காரமாக எண்ணித் தேவர்கள் தியானித்தார்கள்.
அதையும் அசுரர்கள் பாபத்தைக் கொண்டு தாக்கினார்கள்.
எனவே நமது கண்கள் இன்றளவும் காணத் தக்கவை, காணத் தகாதவை ஆகிய இரண்டையும் கண்டுவருகின்றன.

தங்கள் மனத்தையே ஓம்காரமாக எண்ணி தேவர்கள் தியானம் செய்தார்கள்.
அந்த மனத்தையும் அசுரர்கள் பாபத்தால் தாக்கி விட்டார்கள்.
அதனால் தான் நல்ல எண்ணம், தீய எண்ணம் இரண்டுமே மனத்தில் உருவாகின்றன.
இறுதியாகத் தங்கள் மூச்சுக் காற்றாகிய பிராணனையே பிரணவமாக எண்ணித் தேவர்கள் தியானித்தார்கள்.
அந்த மூச்சுக் காற்றை அசுரர்கள் தாக்க முற்பட்ட போது, அத்தனை அசுரர்களும் பாறைமேல் எறியப்பட்ட களிமண் போல்
தூள் தூளாகி அழிந்து போனார்கள்.

வெற்றி பெற்ற தேவர்கள் தங்கள் குருவான பிருகஸ்பதிக்கு நன்றி தெரிவித்து விட்டு,
“குருவே! மூக்கு, நாக்கு, காது, கண், மனம் போன்ற அங்கங்களாக ஓம்காரத்தைத் தியானித்த போது,
அசுரர்கள் எங்களைத் தாக்கி விட்டார்கள். ஆனால் மூச்சுக் காற்றை ஓம்காரமாக எண்ணித் தியானித்த போது
அவர்கள் அழிந்து போனார்களே! என்ன காரணம்?” என்று வினவினார்கள்.

அப்போது பிருகஸ்பதி, “தேவர்களே! மூச்சுக் காற்று என்பது வெறும் பிராண வாயு மட்டுமல்ல.
உயிர் அளிக்கும் இறைவனான திருமால் மூச்சுக் காற்றைத் தனக்கு உடலாகக் கொண்டு
அதை உள்ளிருந்து இயக்கி நம்மைச் சுவாசிக்க வைக்கிறார்.
திருமால்தான் அந்த உயிர்மூச்சின் வாயிலாக ஒவ்வொருவருக்கும் சுவாசத்தையும், உடல் வலிமையையும், சக்தியையும் கொடுத்து வருகிறார்.
இறைவன் தந்ததும், இறைவனுக்கு உடலாக இருப்பதுமான அந்த மூச்சுக் காற்றைத் தாக்கியவர்கள்
அழிவைச் சந்திப்பதில் வியப்பில்லையே!” என்று பதில் அளித்தார்.

மேலும், “தேவர்களே! முன்பு நீங்கள் பாற்கடலைக் கடைந்தீர்களே! அதற்கான சக்தி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
துர்வாசரின் சாபத்தால் சக்தி இழந்து நின்ற உங்களுக்குச் சக்தி கொடுத்தவர் திருமால்.
பாற்கடல் கடைகையில் மந்தர மலையைத் தன் முதுகில் சுமந்த படி கூர்ம மூர்த்தியாக (ஆமை வடிவில்) தோன்றிய திருமால்,
உங்களுக்கு நல்ல மூச்சுக் காற்றையும், உடல் வலிமையையும் சக்தியையும் தந்து நீங்கள் பாற்கடல் கடைவதற்கு அருள்புரிந்தார்.
அதனால் தான் அந்தக் கூர்ம மூர்த்தியைக் குறித்த மந்திரத்தில் ‘அனந்த பல சக்தயே’
(எல்லை இல்லாத வலிமையும் சக்தியும் கொண்டவர்) என்று சொல்லி அப்பெருமானை வணங்குகிறார்கள்!” என்று விளக்கினார் பிருகஸ்பதி.

இவ்வாறு கூர்மாவதாரத்தில், தேவர்களுக்கு மூச்சுக்காற்றும், வலிமையும், சக்தியும் தந்து அருள்புரிந்தபடியால்,
கூர்ம மூர்த்திக்கு ‘ப்ராணத:’என்று திருநாமம். ‘ப்ராண:’ என்றால் மூச்சுக் காற்று. ‘த’என்றால் கொடுப்பவர்.
‘ப்ராணத:’என்றால் மூச்சுக்காற்றைக் கொடுப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 323-வது திருநாமம்.

காற்று மாசுபட்டு அசுத்தமாகி வரும் இச்சூழலில், சுவாசம் தொடர்பான நோய்களும் அதிகரித்து வரும் நிலையில்,
நாம் அனைவரும் இணைந்து “ப்ராணதாய நமஹ:” என்று சொல்லிக் கூர்ம மூர்த்தியை வழிபட்டால்,
நம் சுவாசத்துக்கு ஏற்ற நல்ல மூச்சுக் காற்றும், அதனடியாக நல்ல ஆரோக்கியமும் சக்தியும் நமக்குக் கிட்டும்படி அப்பெருமான் அருள்புரிவார்.

—————-

324. வாஸவாநுஜாய நமஹ: (Vaasavaanujaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
ஒருமுறை துர்வாச முனிவர் மகாலட்சுமியின் பிரசாதமான ஒரு மாலையை இந்திரனுக்குப் பரிசாக வழங்கினார்.
ஆனால் அந்த மாலையின் பெருமையை அறியாத இந்திரன், அதைத் தனது யானையான ஐராவதத்தின் தலையில் வைத்தான்.
அந்த யானை செய்வதறியாது, அம்மாலையைத் துதிக்கையால் எடுத்துக் காலடியில் போட்டு மிதித்து விட்டது.
இதனால் கோபம் அடைந்து துர்வாசர், “தேவேந்திரா! நீ உனது அனைத்துச் செல்வங்களையும் இழப்பாய்!” என்று சாபம் கொடுத்துவிட்டார்.

இந்தச் சாபத்தின் விளைவாக, அடுத்து நடந்த தேவ-அசுரப் போரில் தேவர்கள் அசுரர்களிடம் தோல்வி அடைந்தார்கள்.
மீண்டும் அசுரர்களை வீழ்த்தி, இழந்த தேவலோக சாம்ராஜ்ஜியத்தைப் பெற என்ன வழி என்று அறியாமல் தவித்த தேவர்கள்,
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலைச் சரண் அடைந்து அவரது உதவியை நாடினார்கள்.

திருமால் தேவர்களைப் பார்த்து, “நீங்கள் அசுரர்களை வெல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு முதலில் நல்ல வலிமை வேண்டும்.
எனவே பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து அமுதத்தை எடுத்து நீங்கள் பருகினால், நல்ல உடல் வலிமையும் நீண்ட ஆயுளும் பெறலாம்.
அதன்பின் நீங்கள் அசுரர்களை எதிர்த்துப் போர்புரிந்தால் வெற்றி உங்களுக்கே!” என்று கூறினார்.
“வலிமை இழந்து நிற்கும் எங்களால் எப்படிப் பாற்கடலைக் கடையமுடியும்?” என்று தேவர்கள் வினவியபோது,
“நீங்கள் அசுரர்களுக்கும் அமுதத்தில் பங்கு தருவ தாகச் சொல்லி அவர்களையும் கூட்டுச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

முடிவில் அமுதம் அவர்களுக்குக் கிடைக்காதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று ராஜ தந்திர ரீதியில் ஆலோசனை வழங்கினார் திருமால்.
அதன்படி தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடையத் தயாரானார்கள்.
அவ்வளவு பெரிய கடலைக் கடைவதற்குப் பெரிய மத்து வேண்டுமே என்று அனைவரும் சிந்தித்த நேரத்தில்,
கருட வாகனத்தில் மந்தரமலை எனும் மலையையே மத்தாகக் கொண்டு வந்து தந்தார் திருமால்.
அதில் கயிறாகச் சுற்ற வாசுகி என்னும் பாம்பைப் பயன்படுத்துமாறு திருமால் ஆலோசனை வழங்கினார்.

மந்திரத்தை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள்.
ஆனால் மந்தரமலை பாற்கடலுக்குள் அழுந்தத் தொடங்கியது. அதை யாராவது நிலைநிறுத்தினால் தான் மேற்கொண்டு கடைய இயலும்.
என்ன செய்வதென்று தெரியாமல், இந்திரன் தேவகுருவான பிருகஸ்பதியின் உதவியை நாடினான்.

“இந்த மலையைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்றால், பாற்கடலுக்கு அடியில் யாரேனும் ஒருவர் சென்று இந்த மலையைத் தாங்க வேண்டும்.
அது நம் போன்றவர்களுக்கு இயலாத காரியம். திருமால் ஒருவரால்தான் அதைச் செய்ய முடியும்!” என்றார் பிருகஸ்பதி.
“ஏற்கனவே பற்பல உதவிகளை அவர் செய்துவரும் நிலையில், மலையைத் தாங்க வேண்டும் என்றும்
அவரிடமே போய்க் கேட்பது முறையா?” என்று இந்திரன் கேட்டான்.

அதற்குப் பிருகஸ்பதி, “திருமாலிடம் ஒரு பண்பு உண்டு. நீயே கதி என்று அவரது திருவடிகளை ஒருவன் பிடித்துக் கொண்டு விட்டால்,
அந்த பக்தனுக்காக எதையும் செய்வார் திருமால். அவரைச் சரண் அடை! அவர் காப்பார்!” என்றார் பிருகஸ்பதி.
இந்திரனும் திருமாலைச் சரண் அடையவே, ஆமை வடிவில் கூர்மாவதாரம் செய்தார் திருமால்.

ஆமை வடிவில் வந்த திருமால் இந்திரனைப் பார்த்து, “இந்திரா! நீ மேலே இருந்து பாற்கடலைக் கடைவாயாக!
நான் உனது தம்பியின் ஸ்தானத்தில், பாற்கடலின் அடிக்குச் சென்று என் ஓட்டில் மலையைத் தாங்கிக் கொள்கிறேன்!”
என்று சொல்லி விட்டுப் பாற்கடலின் அடியாழத்துக்குச் சென்று, தன் முதுகில் மந்தரமலையைத் தாங்கிப் பிடித்தார்.
பாற்கடல் கடைந்து முடிக்கும் வரையில் மலையைத் தாங்கிக் கொண்டே இருந்தார்.
பின் அமுதைப் பெற்று தேவர்களும் அசுரர்களை வீழ்த்தினார்கள் என்பது வரலாறு.

இந்த வரலாற்றை உற்று நோக்குகையில், இந்திரன் தன்னிடம் அடைக்கலம் புகுந்தான் என்ற ஒரே காரணத்துக்காக,
அவனைத் தனக்கு அண்ணனாக ஆக்கி, தான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி என்று தன்னைச் சொல்லிக் கொண்டு,
ஆமை வடிவுடன் பாற்கடலின் அடிக்கே சென்று, கடைந்து முடிக்கும் வரை மலையைத் தாங்கி
இவ்வளவு உதவிகளைத் திருமால் செய்திருக்கிறார் என்பதை உணரமுடிகிறதல்லவா?

இந்த குணத்தை விளக்குவது தான் ‘வாஸவாநுஜ:’ என்ற ஸஹஸ்ரநாமத்தின் 324-வது திருநாமம்.
‘வாஸவ:’ என்று இந்திரனுக்குப் பெயர்.
‘அநுஜ:’ என்றால் தம்பி. தன்னைச் சரணடைந்த இந்திரனைக் காப்பதற்காக அவனுக்குத் தம்பியாக,
கூர்ம மூர்த்தியாகத் திருமால் அவதரித்த படியால், அவர் ‘வாஸவாநுஜ:’ (வாஸவ: + அநுஜ:) என்றழைக்கப்படுகிறார்.
‘வாஸவாநுஜ:’ என்றால் இந்திரனின் தம்பி என்று பொருள்.

“வாஸவாநுஜாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் நேரும் அனைத்துத்
தடங்கல்களையும் திருமால் போக்கி, அவர்களுக்கு வேண்டியதை அருளிக் காப்பார்.

———-

325. அபாம் நிதயே நமஹ (Apaam Nidhaye namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
அறிவதற்கு அரிதான வேதாந்தக் கருத்துகளைப் பாமரனும் புரிந்து கொள்ளும் படி எளிய உலகியல் உதாரணங்கள் மூலம்
விளக்க வல்லவர் வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய சிம்மாசனம் டாக்டர் ஸ்ரீ உ வே கருணாகராச்சாரியார் சுவாமிகள்.
ஒருமுறை கருணாகராச்சாரியார் சுவாமிகளிடம் ஒரு சீடர், “சுவாமி! நமக்குள் இறைவன் இருக்கிறான் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
நம்மை இறைவன் தாங்குகிறான் என்றும் சொல்கிறீர்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது?” என்று கேட்டார்.

கருணாகராச்சாரியார் சுவாமிகள், “இதைப் புரிந்துகொள்வதில் உனக்கென்ன கஷ்டம்?” என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சீடர், “இல்லை சுவாமி! வெளியே இருக்கும் பொருள் தானே உள்ளே இருக்கும் பொருளைத் தாங்க முடியும்?
ஒரு பெட்டிக்குள் நகையை வைத்தால், பெட்டி தானே நகையைத் தாங்குகிறது?
ஒரு பைக்குள்ளே புத்தகத்தை வைத்தால், பைதானே புத்தகத்தைத் தாங்குகிறது?
நமக்குள் இறைவன் இருக்கிறான் என்றால், நாம் இறைவனைத் தாங்குகிறோம் என்றுதானே அர்த்தம்?
இறைவன் நம்மைத் தாங்குவதாக எப்படிக் கொள்ள முடியும்? அல்லது, இறைவன் தான் நம்மைத் தாங்குகிறான் என்றால்,
நமக்குள் இறைவன் இருக்கிறான் என்பது பொருந்தாதே!” என்று கேட்டார்.

தமக்கே உரிய புன்னகையோடு அதற்கு விடை அளிக்கத் தொடங்கினார் கருணாகராச்சாரியார் சுவாமிகள். சீடரைப் பார்த்து,
“உனக்கு மிதிவண்டி ஓட்டத் தெரியுமா?” என்று கேட்டார். “ஓட்டுவேனே!” என்றார் சீடர்.
“மிதிவண்டி ஓட்டும் போது, ஓட்டுநர் மிதிவண்டியைத் தாங்குகிறாரா
அல்லது மிதிவண்டி ஓட்டுநரைத் தாங்குகிறதா?” என்று கேட்டார் கருணாகராச்சாரியார் சுவாமிகள்.
“மிதிவண்டிதான் ஓட்டுநரைத் தாங்குகிறது!” என்று சொல்லப் போன சீடர் சற்றே யோசித்தார்.
“ஓட்டுநர் சமநிலையில் இல்லாவிட்டால் மிதிவண்டி விழுந்து விடுவதைப் பார்க்கிறோம்.
மிதிவண்டி எந்த நிலையில் இருந்தாலும், ஓட்டுநர் நினைத்தால் கால் ஊன்றி மிதிவண்டியைத் தாங்கிப் பிடித்து விடலாம்!” என
இவற்றை எல்லாம் சிந்தித்த சீடர், “ஓட்டுநர்தான் மிதிவண்டியைத் தாங்குகிறார்!” என்றார்.

அப்போது கருணாகராச்சாரியார் சுவாமிகள், “மேலோட்டமாகப் பார்க்கும் போது, ஓட்டுநர் மேலே இருப்பதாகவும்,
அவரைத் தாங்கும் ஆதாரமாக மிதிவண்டி கீழே இருப்பதாகவும் நமக்குத் தோன்றினாலும்,
உண்மையில் மேலே இருக்கும் ஓட்டுநர் தானே கீழே உள்ள மிதிவண்டியையும் சேர்த்துத் தாங்குகிறார்?
அது போலத் தான் நமக்குள்ளே இருக்கும் இறைவன் ஓட்டுநரைப் போல. நாம் மிதிவண்டியைப் போல.
மேலோட்டமாகப் பார்த்தால், மிதிவண்டியான நாம் ஓட்டுநரான இறைவனைத் தாங்குவது போலத் தோன்றும்.
உண்மையில், ஓட்டுநரான இறைவன்தான் மிதிவண்டியான நம்மைச் சமநிலையில் வைத்து அழைத்துச் செல்கிறான்.

இதற்குச் சிறந்த உதாரணம்தான் திருமால் எடுத்த கூர்மாவதாரம்.
ஆமை வடிவில் பாற்கடலின் உள்ளே இருந்துகொண்டு மந்தர மலையைத் திருமால் முதுகில் தாங்கினார் அல்லவா?
ஆமையான பெருமாளைக் கடல் தாங்கியதா? அல்லது அந்தப் பெருமாள் கடலைத் தாங்கினாரா?
பொதுவாக, கடலில் உள்ள ஆமைகளைக் கடல்தான் தாங்கி இருக்கும்.
ஆனால், இங்கோ அந்தக் கடலையே ஆமை வடிவில் உள்ள கூர்ம மூர்த்தி தான் தாங்கி நிலைநிறுத்தி வைத்திருந்தார்!” என்று விளக்கினார்.

தண்ணீருக்கு வடமொழியில் ‘அப்’ என்று பெயர்.
‘நிதி:’ என்றால் ஆதாரமாக இருந்து தாங்குபவர் என்று பொருள்.
தண்ணீர் நிறைந்த கடலை (திருப்பாற்கடலை) ஆமை வடிவில் உள்ளிருந்து தாங்கியபடியால், கூர்ம மூர்த்திக்கு ‘அபாம் நிதி:’ என்று பெயர்.
‘அபாம் நிதி:’ என்றால் கடலுக்கு ஆதாரமாக இருந்து தாங்கியவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 325-வது திருநாமம்.
“அபாம் நிதயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை என்றும்
திருமால் தாங்கிப்பிடித்துக் காப்பாற்றுவார் என்பதில் ஐயமில்லை.

————

326. அதிஷ்டானாய நமஹ (Adhishtaanaaya namaha)

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற வடமொழிக் கவிச்சக்கரவர்த்தி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள்,
தன் தந்தை வாங்கியிருந்த கடன்களை எல்லாம் அவரது ஒரே மகன் என்ற முறையில் தானே அடைத்துவிட்டார்.
அதன் விளைவாக, வீடு, நிலங்கள், சொத்து அனைத்தையும் விற்றுவிட்ட படியால், மிகுந்த வறுமையில் அவர் குடும்பம் வாடிவந்தது.
வேத பாடசாலையில் காவிய பாடம் போதிப்பது, சில சொற்பொழிவுகள் ஆற்றுவது என
இப்படி வரக்கூடிய சொற்ப வருமானத்தைக் கொண்டு பெரிய குடும்பத்தைப் பார்த்து வந்தார் அவர்.

இந்நிலையில் ஒருநாள் ஸ்ரீநிதி சுவாமிகள் தனது வேட்டியைத் துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது வேட்டி கிழிந்த நிலையில் இருப்பதைக் கண்டார். “புதிய வேட்டி வாங்குவதற்குப் பொருள் வேண்டுமே!
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் போன்ற அடிப்படைத் தேவைகளாவது நமக்குக் கிடைக்கும்படி
இறைவன் அருள்புரிய மாட்டானோ?” என்ற ஏக்கத்துடன் அப்படியே அமர்ந்தார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

அப்போது பக்கத்து வீட்டு வானொலியில் ஒரு செய்தி கேட்டது.
“இந்த ஆண்டு திருப்பதி உண்டியலில் அளவு கடந்த காணிக்கை குவிந்துள்ளது!” என்பதே அந்தச் செய்தி.
அதைக் கேட்ட ஸ்ரீநிதி சுவாமிகள், ஒருநொடி மனதால் திருமலையப்பனை நினைத்து,
“மலையப்பா! உன் உண்டியலில் செல்வம் நிறைந்து வழிகிறது. உன் பக்தன் நான் வேட்டிகூட கிடைக்காமல் வாடுகிறேனே!” என்று சொன்னார்.

அப்படி அவர் சொன்னதுதான் தாமதம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஸ்ரீநிதி சுவாமிகளுக்கு ஒரு கடிதம் வந்தது.
“பத்து நாட்கள் திருமலையில் வந்து நீங்கள் சொற்பொழிவு ஆற்ற வேண்டும்.
அதற்குச் சம்மானமாக நாங்கள் ரூ.600 உங்களுக்கு வழங்க உள்ளோம்!” என்று அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தது.
அதைப் படித்தவுடன் ஸ்ரீநிதி சுவாமிகள் திருமலையப்பனின் கருணையை எண்ணிக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினார்.
“இறைவா! உன் உண்டியலில் பணம் வழிகிறது, உன் பக்தன் துன்பப்படுகிறேன் என்று அவசரப்பட்டுச் சொல்லி விட்டேன்.

ஆனால் நீயோ எனக்கு எப்பேர்ப்பட்ட உதவியைச் செய்திருக்கிறாய்?” என்று பரவசத்துடன் கூறிய அவர்,
பத்து நாட்கள் திருப்பதிக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றினார். திருமலையில் பெருமாளைத் தரிசிக்கச் செல்லும் போது,
பொன்னால் ஆன ஆனந்த நிலைய விமானத்தில் திகழும் வேங்கடேசனைப் பார்த்தார்.
(இந்தப் பொன்மயமான விமான வேங்கடேசப் பெருமாளை நாமும் திருமலை பிரதக்ஷிணம் வரும்போது தரிசிக்கலாம்.)
அந்தப் பெருமாளைக் குறித்து ஒரு ஸ்லோகம் இயற்றினார்.

“கார்த்தஸ்வராஸ்தி ஜனதேதி தயாரஸார்த்ர:
த்ரஷ்டும் ததச்ச பரிரக்ஷிதும் ஏஷ நாத:
கார்த்தஸ்வராக்ருதி: உபேத்ய விமான பூமிம்
ஸ்ரீஸ்வாமி தீர்த்த திசி தத்த முகோ விபாதி”

“அன்று ஒரு குளக்கரையில், கஜேந்திரன் என்ற யானை ஆபத்து என்று உன்னை அழைத்தது.
அதன் அழுகுரலைக் கேட்டு உடனே ஓடிப் போய் நீ அதைக் காப்பாற்றினாய்.
அது போல் இங்குள்ள சுவாமி புஷ்கரிணி குளக்கரையில் யாரேனும் ஆபத்து என்று அழுகுரல் கொடுத்தால்,
உடனே ஓடிப்போய் அவர்களையும் காப்பாற்றத் தயாராகப் பொன்மயமான வடிவுடன் விமான வேங்கடேசனாகக் காட்சி தருகிறாய் போலும்!

எனது அழுகுரலையும் அதனால்தான் உடனே கேட்டு எனக்கு இத்தகைய அருளைப் புரிந்திருக்கிறாய்!”
பத்து நாள் சொற்பொழிவு முடிந்தவாறே, திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ரூ.600 சம்மானமும்,
புதிய வேஷ்டியும் ஸ்ரீநிதி சுவாமிகளுக்கு வழங்கப்பட்டது.
திருமலையப்பனின் கருணையை எண்ணி உருகி வீடு திரும்பினார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

வீடு திரும்பிய பின், தனது மனைவியிடம் நடந்தவற்றைச் சொன்ன ஸ்ரீநிதி சுவாமிகள்,
“நான் அடிக்கடி சொல்வேன் அல்லவா, ‘இது என் குடும்பம் அல்ல, ஸ்ரீமந்நாராயணனின் குடும்பம்!
அவன் குடும்ப பாரத்தை அவன் சுமப்பான்!’ என்று? இப்போது அவன் நிரூபித்துவிட்டான்!
கூர்மாவதாரம் செய்த போது, எப்படி தேவர்கள் சுமக்க வேண்டிய பாரமான மந்தரமலை என்னும் மத்தை அவன் சுமந்து,
தேவர்களுக்கு அமுதைப் பெற்றுக் கொடுத்தானோ, அதுபோல் பக்தர்களின் பாரத்தையும் அவன் சுமந்து கொண்டு
பக்தர்களுக்கு அருள் அமுதைச் சுரந்து காக்கிறான்!” என்று சொல்லி, திருமலையப்பன் அருளிய சம்மானத்தைக் காட்டினார்.

‘அதிஷ்டானம்’ என்றால் தாங்கி நிற்பவர் என்று பொருள்.
கூர்ம அவதாரத்தில் மந்தர மலையாகிய மத்தைத் தன் முதுகில் தாங்கி நின்றதால், கூர்ம மூர்த்திக்கு ‘அதிஷ்டானம்’ என்று பெயர்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 326-வது திருநாமம்.
“அதிஷ்டானாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பாரத்தைத் திருமால் சுமந்து
அவர்கள் பாரமின்றி மகிழ்ச்சியாக வாழ அருள்புரிவார்.

————-

327. அப்ரமத்தாய நமஹ (Apramathaaya namaha)

“என்ன இந்திரா! வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறாயா?” என்று ஒரு குரல்.
அசுரர்களை வென்ற மகிழ்ச்சியில் தேவர்களுடன் இணைந்து கொண்டாடிக் கொண்டிருந்த இந்திரன் திரும்பிப் பார்த்தான்.
தேவ லோகத்துக்கு வந்த அகஸ்திய முனிவரின் குரல் தான் அது என்று புரிந்து கொண்ட இந்திரன்,
“வாரும் அகஸ்தியரே! அமுதத்தைப் பருகியதால் நாங்கள் அசுரர்களை வீழ்த்தி விட்டோம்!” என்று பதில் சொன்னான்.
அதைக் கேட்ட அகஸ்தியர், “இந்திரா! எந்த அமுதத்தால் நீ வெற்றி பெற்றாய்?” என்று கேட்டார்.

“பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து எடுக்கப்பட்ட அமுதைப் பருகினோம். அதனால் வென்றோம்!” என்றான் இந்திரன்.
“இல்லை இந்திரா! பாற்கடலில் இருந்து எடுக்கப்பட்ட உப்புச்சாறான அமுதால் நீங்கள் வெல்லவில்லை!
பாற்கடலை உங்களுக்காக கடைந்து கொடுத்தாரே ஆராவமுதமான திருமால்!
அந்தத் திருமால் என்னும் ஆராவமுதால் தான் நீங்கள் வென்றீர்கள்!” என்றார்.
“எதை வைத்துச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் இந்திரன்.

“இந்திரா! நீங்கள் துர்வாசரின் சாபத்தால் அசுரர்களிடம் தோற்று வலிமையிழந்து நின்றீர்கள்.
நீங்கள் மீண்டும் வெற்றி பெற வேண்டுமென்றால், பாற்கடலைக் கடைய வேண்டும் என்று ஆலோசனை கொடுத்தவர் திருமால்.
அந்தப் பாற்கடலை நீங்கள் மட்டும் தனியாகக் கடைய முடியாது என்பதால் அசுரர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள்
என்று ராஜதந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தவர் திருமால்.
மந்தர மலையாகிய மத்தைக் கருட வாகனத்தில் கொண்டு வந்து பாற்கடலின் மத்தியில் நிலைநிறுத்தியவர் திருமால்.
அந்த மத்து அழுந்திய போது, ஆமை வடிவில் கூர்மாவதாரம் செய்து அதைத் தன் முதுகில் தாங்கிப் பிடித்து,
நீங்கள் பாற்கடல் கடைய உறுதுணையாக இருந்தவர் திருமால்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து களைப்படைந்து இருந்த நிலையில், உங்களுக்கெல்லாம் உள்ளிருந்து
சக்தியைக் கொடுத்துக் கடைய வைத்தவர் திருமால். சில காலம் கழித்து நீங்கள் கடைய முடியாமல் தவித்த போது,
பாற்கடலைக் கடைந்து கொடுத்தவர் அதே திருமால். பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வந்த போது,
அதைப் பரமசிவனிடம் வழங்கி உலகைக் காக்குமாறு ஆலோசனை தந்தவர் திருமால்.
தன்வந்தரியாக அவதாரம் செய்து அமுதக் கலசத்தைக் கையில் ஏந்தி வந்தவர் திருமால்.

அது அசுரர்களுக்குக் கிடைக்காதபடி மோகினி அவதாரம் செய்து அசுரர்களை மயக்கி, தேவர்களான உங்களுக்கு மட்டும்
அமுதைப் பெற்றுக் கொடுத்தவர் திருமால். நீங்கள் வெற்றி பெறுவதற்கு உங்களை நன்கு கடாட்சிக்கும்படித்
தன் திருமார்பில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமியிடம் சொன்னவர் திருமால்.

சற்று யோசித்துப் பாருங்கள்! உங்களைக் காக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் எப்படி எல்லாம் கவனத்துடன்
திருமால் செயல் பட்டிருக்கிறார்! ஆலோசனை, ராஜதந்திரம், மத்தைக் கொண்டு வருதல், மத்தைச் சுமத்தல், சக்தி கொடுத்தல்,
விஷத்தை முறித்தல், அமுதைக் கொணர்தல், அசுரர்களை மயக்குதல், வெற்றியை அருளுதல் என ஒவ்வொரு நிலையிலும்,
உங்களை விட அவர்தான் அதிகக் கவனம் செலுத்தி உங்களை இந்த நிலையில் இன்று வைத்திருக்கிறார்.
இப்படித் திருமகளோடு இணைந்து திருமால் புரிந்த அருளால் தான் நீங்கள் வென்றீர்கள்!” என்று சொல்லிச் சிரித்துவிட்டுச் சென்றார் அகஸ்தியர்.

“அடடா! நாம் அமுதைக் குடித்த மகிழ்ச்சியிலும், வெற்றி பெற்ற பெருமிதத்திலும், நம்மைக் கவனித்துக் கவனித்துக்
காத்த திருமாலை மறந்துவிட்டோமே!” என்று கருதிய தேவர்கள், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,
கும்பகோணம் ஸ்ரீசார்ங்க பாணிப் பெருமாள் திருக்கோவில் கருவறையை அடைந்து,
“த்ரிம்சத் த்ரிகோடி வஸு ருத்ர திவாகராதி
தேவாதி தேவகண ஸந்தத ஸேவ்யமானம்
அம்போஜ ஸம்பவ சதுர்முக கீயமானம்
வந்தே சயானம் இஹ போகினி சார்ங்கபாணிம்”
என்று சார்ங்கபாணிப் பெருமாளின் தியான ஸ்லோகம் சொல்வது போல், அந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் சூழ்ந்திருந்து
அப்பெருமாளை வழிபட்டு, அமுதைப் பெற்றுத் தந்த ஆராவமுதுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.
இப்படித் தேவர்களைக் காக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் கூர்ம மூர்த்தி எத்தனை எத்தனை முயற்சிகள் எடுத்து,
எவ்வளவு கவனமாகக் காத்திருக்கிறார் என்பதை இவ்வரலாற்றின் மூலம் அறிய முடிகிறதல்லவா?
‘ப்ரமத்த:’ என்றால் கவனம் இல்லாதவர் என்று பொருள்.
‘அப்ரமத்த:’ என்றால் கவனம் மிக்கவர் என்று பொருள்.
மிகவும் கவனத்துடன் அடியார்களைக் காப்பதால், கூர்ம மூர்த்திக்கு ‘அப்ரமத்த:’ என்று பெயர்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 327-வது திருநாமம்.

“அப்ரமத்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் கவனக் குறைவு நீங்கி, அவர்கள் தங்கள் தொழில்
களில் நல்ல கவனத்துடன் செயல்பட்டு வெற்றி பெறும்படித் திருமால் அருள் புரிவார்.

——————–

328. ப்ரதிஷ்டிதாய நமஹ (Prathishtithaaya namaha)

காஞ்சிப் பெரியவர் கும்பகோணம் காவிரிக் கரையில் உள்ள ஸ்ரீசங்கர மடத்தில் முகாம் இட்டிருந்த சமயம்.
காவிரிக்கு அக்கரையில் இருந்த ஒரு பக்தர் தினமும் பெரியவரின் பூஜைக்காகப் பூக்கள்கொண்டு வந்து சமர்ப்பிப்பது வழக்கம்.
ஆனால் பூ கொடுக்கும் பக்தர், “நாம் கொண்டு வந்து பூக்களைக் கொடுப்பதால் தான் இந்த மடத்தில் பூஜையே நடக்கிறது!”
என்று மனதில் எண்ணிக் கொண்டு அந்தக் கர்வத்தோடு பூ கொடுப்பதைக் கவனித்தார் காஞ்சி பெரியவர்.
மறுநாள் அந்த பக்தர் பூ கொண்டு வந்த போது அவரை அழைத்த பெரியவர்,
“நீ காவிரிக்கு அக்கரையில் இருந்துதானே பூ கொண்டு வருகிறாய்? வரும் வழியில் காவிரி நதியைக் கடந்து வருகிறாய் அல்லவா?
ஒரு புண்ணிய நதியைக் கடந்தால், அந்த நதியில் இறங்கி ஆசமனம் பண்ணிவிட்டுத் தான் கடக்க வேண்டும்.
அல்லது நதியில் ஒரு காசு போட வேண்டும். இவற்றில் எதையாவது நீ செய்தாயா?” என்று கேட்டார்.
அந்த பக்தர், “ஓ! எனக்குத் தெரியாத சாஸ்திரா? தினமும் நான் காவிரியில் ஆசமனம் செய்து விட்டுத்தான்
காவிரியைக் கடந்து வருகிறேன்!” என்று பதில் அளித்தார்.
பெரியவர், “அப்படியா? ரொம்ப சந்தோஷம்! ஆசமனம் செய்யும் போது, பூவைக் கையில் வைத்துக் கொண்டே செய்ய முடியாதே!
எச்சில் பட்டுவிடுமே! பூக்களை என்ன செய்வாய்?” என்று கேட்டார்.
“பூக்களைப் படித்துறையில் வைத்துவிட்டு ஆசமனம் செய்வேன்!” என்று சொன்னார் பக்தர்.

“மனிதர்களின் கால் படும் தரையில் இறைவனின் பூவை வைக்கலாமா?” என்று கேட்டார் பெரியவர்.
“நான் படியை ஊதிச் சுத்தம் செய்து விட்டு அதன்பின் தான் பூவை வைப்பேன்!” என்றார் பக்தர்.
“அப்படியானால் இது எச்சில் பூ! இதைப் பூஜைக்குப் பயன்படுத்த முடியாது என்று சொல்லி, பூக்களைத் திரும்பக் கொடுத்துவிட்டார்.

கர்வத்துடன் வந்த பக்தரின் முகம் வாடியதைக் கண்ட பெரியவர்,“இதோ பார்! காவிரி என்பது புண்ணிய நதி!
புண்ணிய நதியின் படித்துறை தூய்மையானது. எனவே அங்கு பூவை வைத்தாலும் தோஷம் இல்லை.
நீ வாயால் ஊதிப் படித்துறையைச் சுத்தம் செய்வதாக எண்ணுவது தான் தவறு!” என்று விளக்கம் அளித்தார்.
கர்வம் நீங்கிய அந்த பக்தர் வேறு பூக்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த அளவில், அதைப் பெற்றுக்கொண்ட காஞ்சி பெரியவர்,
அவரிடம் ஒரு கதை சொன்னார்.

“ஓர் ஊரில் ஒரு பாடகர் பெருமாள் கோவிலில் இனிய பாடல்கள் பாடி வந்தார். தன்னைப் போல் பாடுவதற்கு
உலகில் வேறு யாரும் இல்லை என்ற கர்வம் அவரிடம் இருந்தது. அவர் மெய்ம்மறந்து பெருமாளைப் பற்றிப் பாடும் போது,
சில நேரங்களில் பெருமாள் நாட்டியமே ஆடுவார். இந்நிலையில் ஒருநாள் அந்தப் பாடகர் பெருமாளிடம்,
‘எனக்கு முக்தி கொடு!’ என்று வேண்டினார்.
அதற்குப் பெருமாள், ‘நீ ஆணவத்தை விட்டுவிட்டு என்னிடம் சரணாகதி செய்தால் தான் முக்தி அளிப்பேன்.
இத்தனை ஆணவத்தோடு இருப்பவனுக்கு முக்தி தரமாட்டேன்!’ என்று சொல்லி விட்டார்.
‘நான் இத்தனை நாள் உனக்காகப் பாடினேனே!’ என்றார் பாடகர்.
‘அதற்குத்தான் நான் நடனம் ஆடிக் காட்டிவிட்டேனே! அந்தக் கணக்கும் இந்தக் கணக்கும் சரியாகிவிட்டது!’ என்று
பதில் சொல்லி விட்டார் பெருமாள்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன? நாம் புதிதாகப் பூக்கள் கொடுத்தோ, பாட்டு பாடியோ,
பூஜை செய்தோ இறைவனுக்குப் பெருமை உண்டாக வேண்டிய தேவையே இல்லை.
இறைவன் என்றென்றும் எல்லையில்லாத மேன்மையோடுதான் இருக்கிறார்.
பக்தர்களான நமது கடமை இறைவனுக்குத் தொண்டாற்றுதல் என்பதால் நாம் தொண்டுகள் புரிகிறோமே ஒழிய,
இவற்றால் அவருக்குப் புதிய பெருமைகள் வரப்போவதில்லை. இறைவனின் கூர்மாவதார வரலாற்றை நாம் எல்லோரும் அறிவோம்.

மந்தர மலையையே தன் முதுகில் கூர்ம மூர்த்தி தாங்கினாரே! அந்தக் கூர்ம மூர்த்தியை யார் தாங்கினார்கள்?
இன்னொருவர் அவரைத் தாங்க வேண்டிய தேவை இல்லாதபடி, தன்னில் தானே நிலைபெற்றிருக்கிறார் திருமால்! இதைப் புரிந்துகொள்!”
என்று அறிவுரை கூறி அந்த பக்தரை அனுப்பி வைத்தார்.
மந்தர மலையைத் தாங்கிய கூர்ம மூர்த்தி, தன்னைத் தாங்க இன்னொருவர் தேவைப்படாதபடி,
தன்னில் தானே நிலைபெற்றிருந்த படியால்,
‘ப்ரதிஷ்டித:’ என்றழைக்கப்படுகிறார்.

‘ப்ரதிஷ்டித:’ என்றால் நிலைநிற்பவர் என்று பொருள்.
இங்கே ‘ப்ரதிஷ்டித:’ என்பதற்குத் தன்நிறைவுடன் தன்னில் தானே நிலைநிற்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 328-வது திருநாமம்.
“ப்ரதிஷ்டிதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வாதாரம்
சிறந்து விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.

————-

329. ஸ்கந்தாய நமஹ (Skandhaaya namaha)
(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
பதின்மூன்றாம் நூற்றாண்டில் அந்நியப் படையெடுப்பு நடந்தபோது, திருவரங்கம் நம்பெருமாளுக்கும் அறநூல்களுக்கும்
பேராபத்து ஏற்பட்டது. அந்நிலையில், பிள்ளை லோகாச்சாரியார் என்னும் வைணவ குரு, திருவரங்கம் உற்சவர்
நம்பெருமாளைத் திருவரங்கத்தில் இருந்து பாதுகாத்து, வேறு பாதுகாப்பான இடத்துக்கு எழுந்தருளப் பண்ணிச் சென்றார்.

அதே சமயம், அந்தப் பெருமானின் பெருமைகளைக் கூறும் அறநூல்களையும் காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வேதாந்த தேசிகன் என்ற வைணவ குரு, ராமாநுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யத்துக்கு நடாதூர் அம்மாள் அருளிய
விளக்க உரைகளின் தொகுப்பான சுருதப் பிரகாசிகையைப் பாதுகாத்து எடுத்துக்கொண்டு
காவிரிக்கரை வழியாக மேற்கு நோக்கிப் பயணித்தார். இன்றைய கர்நாடக மாநிலத்தில் உள்ள
சத்தியா காலம் என்னும் ஊரை அடைந்தார்.

சத்தியா காலத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாரை வழிபட்டுக் கொண்டு அங்கேயே சில காலம் தங்கி இருந்தார் தேசிகன்.
தினந்தோறும் சத்தியாகாலத்தில் காவிரிக்கரையில் நின்றபடி பழைய நிலை திரும்பாதா என்று ஏங்கித் திருவரங்கம் நோக்கிப் பார்ப்பாராம் தேசிகன்.
அதன் அடையாளமாகவே இன்றும் சத்தியாகாலம் கோயிலில் வேதாந்த தேசிகன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
(மற்ற எல்லாக் கோயில்களிலும் தேசிகன் அமர்ந்த நிலையில் தான் இருப்பார்.)

இந்நிலையில், ஒருநாள் சத்தியா காலம் காவிரிக்கரையில் உள்ள ஞான அசுவத்தம் என்னும் அரச மரத்தடியில் அமர்ந்தார் தேசிகன்.
திருவரங்கத்தில் உள்ள பீதியெல்லாம் விலகி, சுபிட்சம் பெருக வேண்டும் என்று அரங்கனைப் பிரார்த்தித்து,
அபீதி ஸ்தவம் என்ற துதியை இயற்றினார் தேசிகன். அதில்,
“ஸகைடப தமோரவி: மதுபராக ஜஞ்ஜாமருத்
ஹிரண்யகிரி தாரண: த்ருடித காலநேமி த்ரும:
கிம் அத்ர பஹுனா பஜத் பவ பயோதி முஷ்டிந்தய:
த்ரிவிக்ரம பவத் க்ரம: க்ஷிபது மங்க்ஷு ரங்க த்விஷ:”

“கைடபன் என்ற அசுரன் உண்டாக்கிய இருளைச் சூரியனாய் வந்து போக்கினாய். பெருங்காற்றான ஹயக்ரீவனாக வந்து
மது என்ற அசுரனைத் தூசு போல் பறக்கச் செய்தாய். இரணியன் என்னும் மலையை நரசிங்கனாக வந்து இரண்டாகப் பிளந்தாய்.
காலநேமி என்ற அசுரனைச் செடியைக் கிள்ளி எறிவது போல் வீழ்த்தினாய். இவ்வளவு ஏன்?
பிறவிப் பெருங்கடலையே ஒரே மூச்சில் உறிஞ்சிக் குடிக்க வல்லவன் நீ! உலகளந்த உத்தமனே!
திருவரங்கத்தைப் பிடித்துள்ள தீய சக்திகளை நீதான் போக்கி, அபயம் தந்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் தேசிகன்.

அன்று இரவு தேசிகனுக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒருவர் தோன்றி,
“நான் உங்களுக்குத் தொண்டு செய்ய விரும்புகிறேன்!” என்று சொன்னார். ஆனால் தேசிகன் அக்கனவைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மறுநாள் காலை காவிரியில் இருந்து ஓர் ஆமை தேசிகனைத் துரத்திக் கொண்டே வந்தது. தேசிகன் அதைப் பொருட்படுத்தாமல் வந்துவிட்டார்.

அடுத்த நாள் இரவு அவரது கனவில் திருமால் தோன்றினார். தேசிகனைப் பார்த்து,
“உனக்குத் தொண்டு செய்ய ஒரு தொண்டனை நான்தான் ஆமை வடிவில் அனுப்பி வைத்தேன்.
அவனை அசனமாக்கி அந்தக் கூர்மாசனத்தின் மேல் நீ அமர்வாயாக! ஏன் ஆமை வடிவில் அவனை அனுப்பினேன் தெரியுமா?
முன்பு அசுரர்களிடம் தேவர்கள் தோற்று, அசுர ராஜ்ஜியம் தலைதூக்கிய நிலையில், நான் ஆமையாக அவதாரம் செய்து,
பாற்கடலைக் கடைய வைத்து தேவர்களுக்கு அமுதைக் கொடுத்து, அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தேன் அல்லவா?
அதுபோல் படையெடுத்து வந்த அந்நிய சக்திகளை விரட்டி, திருவரங்கத்தில் நல்ல நிலைமை திரும்புவதற்கும் நான் அருள்புரிவேன்!
அதன் நினைவாகவே ஆமை வடிவில் இத்தொண்டனை உன்னிடம் அனுப்பி வைத்துள்ளேன்!” என்று கூறினார்.

திருமாலின் கூற்றால் மனம் உவந்த தேசிகன், அடுத்த நாள் காலை காவிரிக் கரையில் உள்ள அரச மரத்தடிக்குச் சென்றார்.
அங்கே ஆமை வடிவில் ஒரு கல் பீடம் இருப்பதைக் கண்டார். அதை எடுத்து வந்த தேசிகன், தனது அநுஷ்டானங்களை
அதில் அமர்ந்தபடி செய்யத் தொடங்கினார்.
கூர்ம மூர்த்தியின் திருவருளால், திருவரங்கத்தில் இருந்த தீயசக்திகள் அனைத்தும் விலகி நல்ல நிலைமை திரும்பியது.
சத்தியா காலத்தில் இன்றளவும் தேசிகன் சந்நதியில் அந்தக் கூர்மாசனம் இருப்பதைக் காணலாம்.

‘ஸ்கந்தயதி’ என்ற சொல்லுக்கு வடமொழியில் வற்றச்செய்தல், காய்ந்துபோகும்படிச் செய்தல், அழித்தல் போன்ற பொருள்கள் சொல்வதுண்டு.
அதன் அடிப்படையில், இவ்விடத்தில் ‘ஸ்கந்த:’ என்பதற்கு அழிப்பவன் என்று பொருள்.
திருவரங்கத்தைத் தாக்கித் துன்புறுத்திவந்த படைகளைப் போக்கி, அடியார்களுக்கு நன்மை அளித்தாற்போல்,
அசுர சக்திகளை அழித்து நல்லோர்களுக்கு நன்மை அளிப்பதால் கூர்ம மூர்த்தி ‘ஸ்கந்த:’ என்று அழைக்கப் படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 329-வது திருநாமம்.

“ஸ்கந்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு
வாழ்வில் ஏற்படும் எல்லாத் தடங்கல்களும் அழியும் படிக் கூர்மமூர்த்தி அருள்புரிவார்.

—————————————-

330. ஸ்கந்ததராய நமஹ

(Skandhadharaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய மூன்று அசுரர்கள் தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தி வந்தார்கள்.
அவர்களுள் சூரபத்மன், சிவனின் புதல்வனைத் தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக்கூடாது என்று பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான்.
அவனால் மிகவும் துன்புற்ற தேவர்கள், சிவபெருமானிடம் வந்து முறையிட்டார்கள்.

தேவர்களைக் காக்க விழைந்த சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதில் இருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின.
அந்த ஆறு தீப்பொறி களையும் அக்னிதேவன் கொண்டு போய்க் கங்கையில் சேர்த்தார்.
கங்கையில் இருந்து சரவணப் பொய்கையைச் சென்றடைந்த அந்த ஆறு பொறிகளும் அங்கிருந்து ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன.
அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள். பின் பார்வதிதேவி அறுவரையும் ஆசையோடு தழுவ,
அவை இணைந்து ஒரே குழந்தையாக, ஆறுமுகனான முருகனாக உருவெடுத்தன.

அனைத்துத் தேவர்களும் முருகனிடம் வந்து சூரபத்மனை வதம் செய்து தருமாறு வேண்டினார்கள்.
அப்போது முருகன், “சூரபத்மனை வதைக்க வேண்டுமென்றால், அதற்குச் சிறப்பான ஆயுதம் ஒன்று நமக்குத் தேவை.
முன்பு தேவர்கள் அனைவரும் பாற்கடலைக் கடைந்தபோது, திருமால் தானே கூர்மாவதாரம் செய்து, நமக்கு உறுதுணையாக இருந்து,
அருள்புரிந்து, அமுதம் கிடைக்கும்படிச் செய்தார்! ஆகையால், இப்போது சூரபத்மனை வீழ்த்துவதற்குரிய
ஆயுதத்தைக் கூர்மாவதாரம் செய்த திருமாலிடமே கேட்டுப் பெறுகிறேன்!” என்றார் முருகன்.

இவ்வாறு சொல்லிவிட்டுத் திருவேங்கட மலையில் உள்ள குமாரதாரிகா என்ற பொய்கையின் கரையில் தவம் புரிந்தார் முருகன்.
அவருக்குத் திருமலையப்பன் காட்சி தந்து, சூரபத்மனை வெல்வதற்குரிய ஆயுதமான வேலை அளித்தார்.
இவ் வரலாறு வடமொழியில் உள்ள ஸ்கந்த புராணத்தின் இரண்டாம் கண்டம், முதல் அத்தியாயம்,
அறுபத்து ஐந்தாவது ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

“குமாரதாரிகா நாம ஸரஸீ லோக-பாவனீ யத்ர ஆஸ்தே பார்வதீஸூனு: கார்த்திகேய: அக்னி-ஸம்பவ:
தேவஸேனா-ஸமாயுக்த: ஸ்ரீநிவாஸ-அர்ச்சக: அமலே”
திருமால் கொடுத்த வேலைத் தன் தாயான பார்வதி தேவியின் கையில் கொடுத்து வாங்கிச் சென்று போரிட வேண்டும் என்று
கருதிய முருகப் பெருமான், தை மாதம் பூச நட்சத்திரத்தன்று பார்வதி தேவியிடம் வேலைக் கொடுத்து,
அவள் கையால் அதைப் பெற்றுக்கொண்டு, தேவர்களின் படைத்தளபதியாகப் பொறுப்பேற்று சூரபத்மனை வதம் செய்வதற்காகப் புறப்பட்டார்.

கடலுக்கு நடுவிலுள்ள சூரபத்மனின் இருப்பிடமான வீரமகேந்திரபுரத்தை அடைந்த முருகன், முதலில் தாரகாசுரனையும் சிங்கமுகனையும் அழித்தார்.
அதன்பின் சூரபத்மனுடன் ஆறு நாட்கள் போரிட்டார். மாமர வடிவம் கொண்டு சூரபத்மன் தப்பிக்கப் பார்த்த நிலையில்,
தனது வேலால் அம்மரத்தை இரண்டாகப் பிளந்தார் முருகன். அதில் ஒரு பாதியைத் தன் வாகனமான மயிலாகவும்,
மற்றொரு பாதியைத் தன் கொடிச்சின்னமான சேவலாகவும் ஆக்கினார்.
இவ்வாறு முருகன் சூரபத்மனை வதைத்த நாளையே கந்த சஷ்டி என்று முருக பக்தர்கள்
வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடுகிறார்கள்.

முருகன் சூரபத்மனை வீழ்த்துவதற்கு உறுதுணையாக இருந்த வேலைத் தந்து, தேவர்களின் படைத்தளபதியாகத் திகழ்ந்து
அவர் வெற்றி பெறுவதற்கு அருள்புரிந்ததால் திருமால் ‘ஸ்கந்ததர:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஸ்கந்த:’ என்பது முருகனைக் குறிக்கும். ‘தர:’ என்றால் ஆதாரமாக இருந்து தாங்குபவர் என்று பொருள்.
முருகனின் தாய்மாமனான திருமால், கூர்ம மூர்த்தியாக இருந்து அகில உலகையும் தாங்குவதோடு மட்டும் இல்லாமல்,
தன் மருமகனான முருகனுக்குச் சக்தி கொடுத்து அவரை ஆசையோடு தாங்குகிறார் என்பதை இது காட்டுகிறது.
(திருமாலைப் பார்வதியின் சகோதரராகக் குறிப்பிடுவதால், முருகனுக்குத் தாய்மாமன் ஆகிறார்.)

பகவத் கீதை பத்தாம் அத்தியாயம் இருபத்து நான்காம் ஸ்லோகத்தில் கண்ணனே இதைத் தெரிவிக்கிறான் –
ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த: – “தேவர்களின் படைத்தளபதியான ஸ்கந்தனை நான் உள்ளிருந்து தாங்குகிறேன்!” என்பது இதன் பொருள்.
ஆகவே ‘ஸ்கந்ததர:’ என்றால் தன் மருமகனான முருகனை ஆசையோடு உள்ளிருந்து தாங்குபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 330-வது திருநாமம். வடமொழி விளக்க வுரையில் பராசர பட்டரும் –
ஷடானன விதாரணாத் – ஆறுமுகனைத் தாங்குபவர் என்றே இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
“ஸ்கந்ததராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் வெற்றி உண்டாகும்படித் திருமால் அருள்புரிவார்.

—————

331. துர்யாய நமஹ (Dhuryaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
பதினெட்டாம் நூற்றாண்டின் பின் பகுதி. ஆர்க்காடு பகுதியை நோக்கிப் படையெடுத்துச் சென்ற ஆங்கிலேயப் படைத்தளபதி
ராபர்ட் கிளைவ், குதிரைகளோடும் படைவீரர்களோடும் ஆயுதங்களோடும் காஞ்சிபுரத்தை வந்து அடைந்தார்.
அன்று இரவு அத்தனை பேரும் தங்குவதற்குக் காஞ்சிபுரத்தில் இடம் கிடைக்குமா என்று பார்த்தார்கள்.

காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயிலைக் கண்ட ராபர்ட் கிளைவ்,
“இன்று இரவு இந்தப் பெரிய கட்டிடத்தில் எல்லோரும் தங்கிக் கொள்ளலாம்!” என்று கூறினார்.
அப்போது கோயிலில் கைங்கரியம் செய்து வந்தவர்கள், “இது இறைவனுடைய கோயில்! இங்கே இப்படிப் போர்புரிய வந்த
சேனைகளைத் தங்க வைப்பது முறையல்ல! மேலும் புனிதமான இந்த இடத்தில் மலஜலங்களைக் கழிப்பது போன்றவை செய்யக்கூடாது!”
என்று பணிவுடன் ராபர்ட் கிளைவிடம் கேட்டுக் கொண்டார்கள்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அத்தனை சேனையையும் அங்கேயே தங்க வைத்தார் ராபர்ட் கிளைவ்.

ஆனால் அடுத்த நாள் காலை அந்தச் சேனையிலிருந்த வீரர்களாலும், குதிரைகளாலும் மலமோ ஜலமோ கழிக்க முடியவில்லை.
ராபர்ட் கிளைவ் உட்பட அத்தனை பேரும் வயிற்று வலியால் துடிக்கத் தொடங்கினார்கள்.
அப்போது தனது தவறை உணர்ந்த ராபர்ட் கிளைவ், அத்தி வரதப்பெருமான் முன்னே நின்று,
“உன் பெருமை தெரியாமல் இப்படிச் செய்து விட்டேன்! என்னை மன்னித்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்துவிட்டு,
தனது சேனைகளைக் கோயிலுக்கு வெளியே கொண்டு சென்றார்.

அதன்பின் ஆர்க்காட்டுக்குச் சென்று போர்புரிந்த ராபர்ட் கிளைவ் பெரும் வெற்றியைப் பெற்றார்.
அந்த வெற்றி ராபர்ட் கிளைவின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் அத்தி வரதர் செய்த அருளே தனது வெற்றிக்குக் காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.
மீண்டும் அத்தி வரதரைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்பி, காஞ்சிபுரத்துக்கு வந்தார் ராபர்ட் கிளைவ்.
அன்று வைகாசி விசாகம். வரதராஜப் பெருமாளுக்குக் கருட சேவை வைபவம் நிகழ்ந்துகொண்டிருந்தது.
அப்போது ராபர்ட் கிளைவின் மனத்திரையில் விசேஷ காட்சியைக் காட்டினார் வரதராஜப் பெருமாள்.

அக்காட்சியைக் கண்ட ராபர்ட் கிளைவ், “ஆஹா! என்ன விந்தை? இறைவா! கருடன் வாகனமாக இருந்து உன்னைத் தாங்கினாலும்,
அவருக்குள்ளும் நீயே இருந்து உன்னைத் தாங்கும் சக்தியைத் தந்திருக்கிறாய்! ஸ்ரீபாதம் தாங்கிகள் கருட வாகனத்தைச் சுமந்து நின்றாலும்,
உண்மையில் அவர்களையும் நீயே உள்ளிருந்து தாங்குகிறாய்! ஏன்? ஆமை வடிவுடன் கூர்ம மூர்த்தியாக இருந்துகொண்டு,
மொத்த உலகங்களையும் உன் முதுகில் நீயே தாங்குகிறாய்!
இப்போது நீ காட்டிய காட்சியால் இந்த உண்மையை நான் கண்டு கொண்டேன்!” என்று கூறினார்.

மேலும், “வரதா! நான் இவ்வூருக்கு வரும் முன் நானே பெரிய தலைவன் என்ற கருவத்துடன் வந்தேன்.
ஆனால் இப்போது திரும்பச் செல்லும் போது நீயே எல்லோருக்கும் தலைவன் என்ற புரிதலுடன் செல்கிறேன்.
தலைவன் என்ற பெயரில் எனக்குக் கீழே உள்ளவர்களை நான் என் சுயநலத்துக்காகப் பயன்படுத்திவந்தேன்.
ஆனால் உண்மையான தலைவனான நீயோ உனக்குக் கீழ்ப்பட்டவர்களைத் தாங்கிப் பிடித்துக் காக்கிறாய்.
ஆர்க்காட்டில் இருந்து நாங்கள் கொண்டு வந்த பல ஆபரணங்களுள் முக்கியமானதான இந்த மகர கண்டியை உனக்குச் சமர்ப்பிக்கிறேன்!”
என்று கூறிச் சமர்ப்பித்தார் ராபர்ட் கிளைவ். அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் காஞ்சிபுரம் கருட சேவையின் போது
இந்த மகர கண்டியை அணிந்தபடி வரதராஜப் பெருமாள் காட்சி தருகிறார்.

அப்போது வரதராஜனுக்குப் பூஜை செய்யும் அர்ச்சகர் ராபர்ட் கிளைவைப் பார்த்து,
“ஓர் உண்மையான தலைவனின் இலக்கணம் என்னவென்றால், தனது தொண்டர்களைத் தாங்கிப் பிடித்துக் காப்பதே ஆகும்!
அந்த வகையில் இந்த உலகுக்கெல்லாம் தலைவராய்த் திகழும் பெருமாள், பூமிக்குக் கீழே ஆமை வடிவுடன் கூர்ம மூர்த்தியாக
இருந்துகொண்டு அனைவரையும் தன் முதுகில் தாங்கி வருகிறார்!
அதை உமக்கு உணர்த்தவே இப்படி ஒரு லீலையைப் பெருமாள் புரிந்துள்ளார்!” என்று கூறினார்.

‘துர்ய:’ என்றால் தாங்கிப் பிடித்துக் காக்கும் தலைவர் என்று பொருள்.
உலகங்கள் அனைத்தையும் ஆதிசேஷன் பாதாளத்தில் இருந்து காப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.
ஆனால் அந்த ஆதிசேஷனுக்கும் கீழே இருந்துகொண்டு, ஆதிசேஷனோடு சேர்த்து அனைத்து உலகங்களையும்
கூர்ம மூர்த்திதான் தாங்கிவருகிறார். இதன் அடையாளமாகவே அனைத்துத் திருக்கோயில்களிலும் உள்ள சேஷ வாகனத்தின் கீழே
கூர்மமூர்த்தி இருப்பதைக் காணலாம்.
இப்படி அனைத்து உலகங்களையும் கூர்மமூர்த்தி தன் முதுகில் தாங்கிப் பிடித்துக் காப்பதால் அவருக்கு ‘துர்ய:’ என்று திருநாமம்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 331-வது திருநாமம்.
“துர்யாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றுவார் என்பதில் ஐயமில்லை.

—————

332. வரதாய நமஹ (Varadhaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை – ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)“
இறைவன் இருக்கிறான் என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று ஒருவர் வேதாந்த தேசிகனிடம் கேட்டார்.
அதற்கு தேசிகன், “வேதம்தான் ஆதாரம். வேதங்களைக் கொண்டுதான் இறைவனை அறிய முடியும்!
ஆனால் நீ அந்த வேதங்களை ஏற்கும் அளவு பக்குவம் பெறவில்லை! உனக்குப் புரியும் படி ஆதாரம் சொல்லட்டுமா?” என்று கேட்டார்.
“ம்ம் சொல்லுங்கள்!” என்றார் அந்த நபர்.

தேசிகன், “பூமி, கடல், சூரியன் ஆகிய மூன்றும் இறைவன் இருக்கிறான் என்பதற்கு ஆதாரங்களாகத் திகழ்கின்றன!” என்று கூறினார்.
“இவை எப்படி இறைவன் இருப்பதற்கு ஆதாரமாகும்?” என்று கேட்டார் அந்த நபர்.
அதற்கு, “பூமி சூரியனைச் சுற்றிச் சுழன்று வருகிறதே! அது எப்படிச் சரியாக முந்நூற்று அறுபத்து ஐந்தேகால் நாட்களில்
ஒரு சுழற்சியை நிறைவு செய்கிறது? அந்த எண்ணிக்கை என்றுமே மாறுவதில்லையே! அதற்கு என்ன காரணம்?
இந்தச் சுழற்சி சீராக இயங்குகின்றது என்றாலே, அதைச் சீராக நடத்திச்செல்லும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று தானே பொருள்?
பூமியில் விதை போட்டால் முளைக்கிறதே, அதை முளைக்கச் செய்வது யார்? உள்ளிருந்து இயக்கும் இறைவன்தானே?

அடுத்து கடலுக்கு வருவோம். கடல் அலைகள் கரையில் வந்து வந்து மோதினாலும் மீண்டும் கடலுக்குள்ளேயே செல்கின்றனவே!
அவற்றைச் சீராக இயக்குவது யார்? ஆழிப்பேரலை உள்ளிட்ட அசாதாரண சூழல் வந்தாலே ஒழிய கடல்நீர் நிலத்துக்குள் வராமல் இருக்கிறதே!
அதைச் சீராக இயக்கும் இறைவன் ஒருவன் இல்லாவிட்டால் இது சாத்தியமா?
சூரியன் ஒவ்வொரு நாளும் காலையில் கிழக்கே உதித்து மேற்கே அஸ்தமிக்கிறதே! அதை இயக்குவது யார்?
எனவே சீராக இயங்குகின்ற பூமி, கடல், சூரியன் இவற்றைக்கொண்டே இறைவன் உள்ளான் என்பது ஒருவாறு யூகிக்கலாமே!” என்றார் தேசிகன்.

“இறைவன் இவற்றை எப்படி இயக்குகிறார்?” என்று அந்த நபர் கேட்டார்.
அதற்கு தேசிகன், “இவற்றுக்கெல்லாம் அதிபதிகளாக இந்திரன், வருணன், வாயு, சூரியதேவன், சந்திரன், ருத்ரன் போன்ற
தேவர்களைத் திருமால் நியமித்திருக்கிறார். அவர்களுக்குத் திருமாலே உள்ளிருந்து சக்தியைக் கொடுத்து
அந்தந்த பொருள்களை அவர்கள் இயக்கும்படிச் செய்கிறார்.

அதனால்தான் இறைவனைக் காண விளக்கேற்றிய பொய்கையாழ்வார்,
“வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக”
என்று பூமியை அகலாக்கி, கடல்நீரை நெய்யாக்கி, சூரியனைத் தீபமாக்கினார்.
பூமி, கடல், சூரியன் ஆகியவை இறைவன் உள்ளான் என்று காட்டும் விளக்காக உள்ளன.

அது மட்டுமில்லை, இவற்றை இயக்கும் தேவர்கள் எப்போது திருமாலிடம் வரம் வேண்டி வந்தாலும்,
அப்போதெல்லாம் அவர்களுக்கு அந்தந்த வரங்களை அருளி, வலிமையையும் தந்து, அந்த தேவர்கள் மூலம் உலகின் இயக்கம்
சீராக நடக்கும்படிச் செய்கிறார்.ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்தால், தேவர்கள் வலிமை இழந்து நின்ற போது,
திருமால் ஆமை வடிவுடன் கூர்மாவதாரம் எடுத்து, மந்தரமலையை முதுகில் சுமந்து, பாற்கடலைக் கடைய வைத்து,
தேவர்களுக்கு அமுதத்தைப் பெற்றுக் கொடுத்து, அதன்மூலம் அவர்கள் வலிமை பெறும்படிச் செய்தார்!” என்று விளக்கினார்.

கேள்வி கேட்டவருக்கு மெல்ல மெல்ல இறைவனிடமும் வேதங்களிடமும் நம்பிக்கை பிறக்கத் தொடங்கிற்று.
வேதங்கள் மற்றும் குருவின் துணையோடு இறைவனை நோக்கி அவர் பயணிக்கத் தொடங்கினார்.
‘வர:’ என்பது வரங்களைக் குறிக்கிறது. ‘த:’ என்றால் அருள்பவர்.
தேவர்கள் வரம் வேண்டும் என்று பிரார்த்திக்கும் போதெல்லாம் அவர்கள் வேண்டும் அந்தந்த வரங்களைத் தந்தருள்வதால்,
கூர்ம மூர்த்தி ‘வரத:’ (வர: + த: = வரத:) என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 332-வது திருநாமம்.
“வரதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பும் நல்ல வரங்களைத் திருமால் தந்தருள்வார்.

———–

——–

341. சூராய நமஹ: (Shooraaya namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை –பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)

ஆயர்ப்பாடியில் வாழ்ந்து வந்த ஒரு கணவனும் மனைவியும் கண்ணன் மீது பொறாமை கொண்டிருந்தார்கள்.
“இந்த யசோதையின் மகனின் அட்டூழியங்கள் எல்லை மீறிப் போகின்றன!
அவன் வீடு வீடாகச் சென்று விஷமம் செய்வதும், வெண்ணெய்ப் பானைகளையும் தயிர்ப் பானைகளையும் உடைப்பதும்,
ஆட்டம் போடுவதும் கொஞ்சம் கூட நன்றாக இல்லை!” என்று கண்ணனைக் குறை சொல்லி
ஏசுவதையே தங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் அத் தம்பதியர்.

ஒருநாள் மாலை, அந்தக் கணவர் சந்தை வரை செல்ல வேண்டி இருந்தது.
அதனால் தன் மனைவியை அழைத்து, “இப்போது நான் சந்தை வரை செல்லப் போகிறேன்.
பொழுது இருட்டி விட்டதால், அந்த யசோதையின் மகன் கண்ணன் வீடு வீடாகப் புகுந்து விஷமம் செய்யப் புறப்பட்டு விடுவான்.
அதனால் கதவை நன்றாகத் தாழ் இட்டுக்கொள். யாராவது கதவைத் தட்டினால் திறந்து விடாதே!
நான் வந்து தட்டினால் மட்டும் தான் நீ கதவைத் திறக்க வேண்டும்!” என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.
மனைவியும் கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.

அரை மணிநேரம் கழித்து யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டது.
“யார் அது?” என்று உள்ளிருந்து இந்தப் பெண் கேட்க, “நான் தான் வந்திருக்கிறேன்!” என்று
அவளது கணவரின் குரலில் பதில் வந்தது.
“ஆஹா! நம் கணவர் தான் திரும்ப வந்துவிட்டார்!” என்று எண்ணி அந்தப் பெண் கதவைத் திறந்தவாறே,
அவளது கணவர் வெளியே நின்று கொண்டிருந்தார்.
“சீக்கிரம் உள்ளே போய்க் கதவைத் தாளிட்டு விடுவோம்! கண்ணன் வரும் நேரம்!” என்று சொல்லிக் கொண்டே
வேகமாக உள்ளே வந்து கதவைத் தாழிட்டுவிட்டார் அவளது கணவர்.

அதன்பின் கணவனும் மனைவியும் இணைந்து வீட்டினுள்ளே ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டது. “யார் அது?” என்று அப்பெண் கேட்க,
“நான்தான் வந்திருக்கிறேன்!” என்று மீண்டும் அவளது கணவரின் குரலிலேயே பதில் வந்தது.
அவள் ஆச்சரியத்துடன் தன்னுடன் ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் தன் கணவனைப் பார்த்தாள்.
ஊஞ்சலில் இருந்த கணவர், “இது கண்ணனின் வேலையாக இருக்கும்!
கதவைத் திறக்க வைப்பதற்காக என் குரலிலேயே பேசுகிறான்!” என்றார்.

“இப்போது என்ன செய்வது?” என்று மனைவி கேட்க, அருகிலிருந்து ஒரு முறத்தை எடுத்துக் கொடுத்த கணவர்,
“நீ கதவைத் திறந்து விட்டு வெளியே நிற்கும் கண்ணனை இந்த முறத்தால் அடித்துத் துரத்திவிடு!” என்றார்.
அவளும் கையில் முறத்தோடு போய்க் கதவைத் திறந்தாள்.
வெளியே அவளது கணவனைப் போன்ற உருவத்தோடேயே ஒருவர் நிற்பதைக் கண்டாள்.
கண்ணன் தான் மாறுவேடத்தில் வந்திருக்கிறான் என எண்ணி, வெளியே நிற்பவரை முறத்தால் அடித்தாள்.
வெளியே நின்றவரோ, “உன் கணவனான என்னை ஏன் அம்மா அடிக்கிறாய்?” என்று கதறினார்.
அவளோ, “நீ மாறு வேடத்தில் வந்தவன் என்று எனக்குத் தெரியும்!” என்று சொல்லி மேலும் அடித்தாள்.

“இங்கே பார்!” என்றொரு குரல் வீட்டின் உள்ளிருந்து கேட்டது. திரும்பிப் பார்த்தாள் அப்பெண்.
ஊஞ்சலிலே கையில் சங்கு சக்கரங் களைத் தாங்கியபடி கண்ணன் அமர்ந்திருந்தான்.
“அப்படியானால் ஏற்கனவே உள்ளே வந்தவன் தான் கண்ணனா?
என்னிடம் அடி வாங்கியவர் உண்மையிலேயே என் கணவரா!” என்று உணர்ந்து திகைத்துப் போனாள் அப்பெண்.

அப்போது கண்ணன், “உங்கள் இருவருக்கும் அருள்புரியத் தான் இத்தகைய லீலையைச் செய்தேன்!” என்று சொல்லி,
இருவரையும் அழைத்து, அவர்களுக்கு இம்மை மறுமை அனைத்துக்குமான நலன்களையும் அருளினான்.
அன்று முதல் அந்தத் தம்பதியர் தீவிர கிருஷ்ண பக்தர்களாக மாறி விட்டார்கள்.
இப்படித் தன்னை வெறுக்கும் மனிதர்களிடம் தனது அழகு, குணங்கள், லீலைகள் ஆகியவற்றைக் காட்டி,
அவர்களையும் பக்தர்களாக மாற்றி, வென்று எடுப்பவராகத் திருமால் திகழ்வதால்
அவர் ‘சூர:’ என்று அழைக்கப்படுகிறார்.

“கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா”என்று இவ்வாற்றலை ஆண்டாளும் பாடி இருக்கிறாள்.
நமது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்,
“ஒருவரை வீழ்த்துவது சுலபம், வெல்வதே கடினம்!” என்று கூறுவார்.
அதாவது,
தன்னை வெறுப்பவரைப் போரில் வீழ்த்துவது மிக எளிது,
ஆனால் அந்த எதிரிகளின் மனங்களைக் கவர்ந்து அவர்களைப் பக்தர்களாக்கி வென்றெடுப்பதே அரிது.
ஆனால் திருமாலோ அனாயாசமாக எல்லோரையும் வென்றெடுத்து விடுவதால் ‘சூர:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘சூர:’ என்றால் அனைவரையும் வெல்வதற்குரிய சாமர்த்தியம் கொண்டவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 341-வது திருநாமம்.
“சூராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு
அனைவரின் மனங்களையும் வெல்லும் ஆற்றலைத் திருமால் அருள்வார்.

————

342. சௌரயே நமஹ: (Shouraye namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை -பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)
பற்பல லீலைகள் புரிந்து அடியார்களுக்கு அருள் புரிவதற்காகவும்,
பூமிக்குப் பாரமாக உள்ள தீயவர்களை அழிப்பதற்காகவும்,
நல்லறத்தைப் பூமியில் நிலைநாட்டுவதற்காகவும் கண்ணனாகப் பூமியில் அவதரிக்கத் தீர்மானித்தார் திருமால்.
அப்போது மகாலட்சுமி திருமாலிடம், “கடந்த ராமாவதாரத்தில் தசரதரைத் தந்தையாகத் தேர்வு செய்தீர்கள்.
இந்த அவதாரத்தில் யாரைத் தந்தையாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்?” என்று கேட்டாள்.

அப்போது திருமால், “சூரர் எனப்படும் வசுதேவரை இந்த அவதாரத்தில் எனக்குத் தந்தையாகத் தேர்வு செய்துள்ளேன்!” என்றார்.
“என்ன காரணத்துக்காக அவரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்?” என்று கேட்டாள் மகாலட்சுமி.
அதற்குத் திருமால், “இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் வசுதேவர் யது குலத்தைச் சேர்ந்தவர்,
அதாவது யது மகாராஜாவின் வம்சத்தில் தோன்றியவர்.
அக்காலத்தில் யது மகாராஜா மிகச்சிறந்த தானப் பிரபுவாகத் திகழ்ந்தார் என்பதை நீ அறிவாய் அல்லவா?” என்றார் திருமால்.

அதற்கு மகாலட்சுமி, “ஆம் சுவாமி! தினந்தோறும் யதுவிடம் தானம் வாங்குவதற்குக் கூட்டம் கூட்டமாக
மக்கள் வந்து அவரது மாளிகை வாசலில் நின்றிருப்பார்கள்.
அந்தக் கூட்டத்தில் நிற்கும் மக்களுள் முதல் மனிதருக்குரியது தானம் செய்தாலே,
அந்த தானம் பெற்ற நபர் மீதமுள்ள அத்தனை பேருக்கும் தானம் செய்யும் அளவுக்குப் பணக்காரராக ஆகிவிடுவார்.
யதுவிடம் தானம் பெற்ற ஒருவன், அதன்பின் தானம் வேண்டும் என்று இன்னொருவரை
நாடிச் செல்ல வேண்டிய நிலையே இருக்காது.
அந்த அளவுக்குக் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் யது!” என்றாள்.

திருமால், “ஆம். சரியாகச் சொன்னாய். முன்பு ராமாவதாரத்தில் நான் ரகு குலத்தில் ஏன் அவதாரம் செய்தேன்?
ரகு மகாராஜா மிகச்சிறந்த தானப்பிரபுவாக இருந்தார், வறியவருக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுத்தார் என்பதனால்
தானே ரகுகுலத்தைச் சேர்ந்த தசரதனின் மகனாகத் தோன்றினேன்?
அதே போல் இம்முறை யதுவின் தானத்தைக் கௌரவிக்கும் விதமாக அவரது குலத்தில் தோன்றிய
வசுதேவரின் மகனாக அவதரிக்கப் போகிறேன்!” என்று கூறினார்.

“தானம் செய்பவர்கள் உங்கள் விசேஷ அருளுக்குப் பாத்திரம் ஆவார்கள் என்பதை மீண்டும் நிரூபிக்க உள்ளீர்கள் போலும்!”
என்று சொல்லி புன்னகைத்த மகாலட்சுமி, “இரண்டாவது காரணம் என்ன?” என்று கேட்டாள்.
அதற்குத் திருமால், “முன்னொரு சமயம் சுதபஸ்-பிருச்னி என்ற தம்பதியர் என்னைக் குறித்துத்
தவம் செய்த வரலாற்றை நீ அறிவாய் அல்லவா?” என்று மகாலட்சுமியிடம் கேட்டார்.
“ஆம் சுவாமி, அறிவேனே! அவர்களின் தவத்துக்கு உகந்து அவர்களுக்குக் காட்சி அளித்த நீங்கள்,
மூன்று முறை அவர்களின் மகனாகப் பிறக்கப் போவதாக அவ்விருவருக்கும் வரம் அளித்திருந்தீர்களே!” என்று சொன்னாள் மகாலட்சுமி.

“ஆம் தேவி! முதலில் சுதபஸ்-பிருச்னிக்கு மகனாக பிருச்னிகர்ப்பன் என்ற பெயரோடு நான் அவதாரம் செய்தேன்.
அடுத்த பிறவியில் அவர்களே கச்யப முனிவராகவும், அதிதி தேவியாகவும் பிறந்தார்கள்.
அப்போது அவர்களின் மகனான வாமன மூர்த்தியாக நான் அவதாரம் செய்தேன்.
இப்போது அந்த சுதபஸ் தான் சூரர் என்று பெயர்பெற்ற வசுதேவராகவும், பிருச்னி தான் தேவகியாகவும் பூமியில் பிறந்துள்ளார்கள்.

எனவே இப்போது அவர்களின் மகனாக, மூன்றாவது முறையாக, நான் அவதாரம் செய்து அவர்களுக்குக் கொடுத்த வரத்தை
முழுமையாக நிறைவேற்றப் போகிறேன்!” என்று கூறினார்.
உடனே மகாலட்சுமி, “சுவாமி! நீங்கள் அவதரிக்கும் போதெல்லாம் நானும் உடன் வருவது வழக்கம் அல்லவா?
நீங்கள் பிருச்னிகர்ப்பராகவும், வாமன மூர்த்தியாகவும் அவதரித்த சமயத்தில், உங்கள் திருமார்பிலேயே நான் இருந்தேன்.
இப்போது நீங்கள் மதுராவில் வசுதேவர் மகனாக அவதாரம் செய்ய உள்ளீர்கள்.
நான் விதர்ப்ப நாட்டில் பீஷ்மகன் மகள் ருக்மிணியாகப் பிறக்கிறேன். பூமியில் சந்திப்போம்!” என்று
சொல்லித் திருமாலை வழியனுப்பி வைத்தாள்.

இவ்வாறு வசுதேவரின் குலமுன்னோரான யதுவைக் கௌரவிக்கும் விதமாகவும்,
வசுதேவர்-தேவகி செய்த தவத்துக்கு முழுமையான பலன் அளிப்பதற்காகவும் வசுதேவர் மகன் கண்ணனாகத் திருமால் அவதரித்தார்.
வசுதேவருக்கு ‘சூர:’ என்று பெயர். சூரரின் மகனாக அவதரித்ததால், திருமால் ‘சௌரி:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘சௌரி:’ என்றால் சூரரின் மகன். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 342-வது திருநாமம்.
“சௌரயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களுக்கு நல்ல சந்ததி உண்டாகும்படித் திருமால் அருள்புரிவார்.

——————-

343. ஜனேச்வராய நமஹ:
(Janeshwaraaya namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை -பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)
பதினெட்டாம் நூற்றாண்டில் கும்பகோணத்தில் கோபாலார்ய மகா தேசிகன் என்ற மகான் வாழ்ந்து வந்தார்.
வேதாந்த தேசிகரின் மறு அவதாரமாகவே போற்றப்பட்ட அவரைத் ‘திருக்குடந்தை தேசிகன்’ என்று அன்பர்கள் அழைப்பது வழக்கம்.
இல்லறத்தில் வாழ்ந்த திருக் குடந்தை தேசிகனை மூன்று சந்நியாசிகள் அடி பணிந்து அவருக்குச் சீடர்களாய் ஆனார்கள்.

இத்தகைய பெருமைகள் இருந்த போதும், துளியும் கர்வமோ அகங்காரமோ இல்லாமல், பணிவே வடிவெடுத்தவராய்த் திகழ்ந்தார்.
இதைக் கண்ட சில பண்டிதர்கள் திருக்குடந்தை தேசிகனிடம்,
“சுவாமி! பொதுவாக இல்லறத்தில் இருப்பவர்கள் துறவியரை வணங்கிப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் மூன்று துறவிகள் உங்களை வந்து அடிபணிந்து உங்களுக்குச் சீடர்களாய் ஆகி இருப்பது வியப்பைத் தருகிறது.
அதைக் காட்டிலும் அதிக வியப்பைத் தரும் விஷயம் என்னவென்றால், மூன்று துறவிகள் உமக்குச் சீடராக இருக்கும் நிலையிலும்,
நீங்கள் மிகுந்த பணிவோடு, அகங்காரமே இல்லாமல் இருக்கிறீர்களே! அதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்குத் திருக்குடந்தை தேசிகன், “அடியேனுக்கு எப்போதெல்லாம் ஆணவம் வருவது போலத் தோன்றினாலும்,
குடந்தையில் கோவில் கொண்டுள்ள சார்ங்கபாணிப் பெருமாளின் கிரீடத்தை நினைத்துக் கொள்வேன்.
உடனே எனது ஆணவம் எல்லாம் பறந்துபோய், மனத்திலே பணிவு குடிகொண்டுவிடும்!” என்று பதில் அளித்தார்.
அது எப்படி என்று பண்டிதர்கள் கேட்க, திருக்குடந்தை தேசிகன்,

“நானா ரத்ன ப்ரதித மஹிமா ஸ்ரீ மதாபீட நத்த:
ஸர்வேசத்வ ப்ரகடன சணோ நிர்மித: அதுல்ய ஹேம்னா
மால்யோந்நீத ஸ்திர பரிமளோ வைதிகாக்யே விமானே
வாஸ ஸ்தானே ஹ்ருதி லஸது மே சார்ங்கிண: தத் கிரீட:”-என்ற ஸ்லோகத்தால் அதற்கு விடை சொன்னார்.

“நம் குடந்தை ஆராவமுதப் பெருமானின் கிரீடம் எப்படிப்பட்டது தெரியுமா?
நானா ரத்ன ப்ரதித மஹிமா – வைரம், வைடூரியம், முத்து, பவழம், மரகதம் போன்ற
ரத்தினங்கள் பதிக்கப் பெற்றது.

ஸ்ரீ மத் ஆபீட நத்த: – அழகிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது.
நிர்மித: அதுல்ய ஹேம்னா – ஒப்பற்ற தங்கத்தாலே செய்யப்பட்டது.
மால்யோந்நீத ஸ்திர பரிமள: – பூ வைத்தாலும் வைக்காமல் போனாலும், எப்போதும் மணம் கமழக் கூடியது.
வைதிகாக்யே விமானே வாஸ ஸ்தானே ஹ்ருதி லஸது மே சார்ங்கிண: தத் கிரீட: – வைதிக விமானத்தின் கீழே
கோவில் கொண்டிருக்கும் அப் பெருமானின் கிரீடம் என் மனத்திலும் இருக்கிறது.

ஸர்வேசத்வ ப்ரகடன சண: – அந்த இறைவனின் ஒப்பற்ற ஆளுமைக்கு அடையாளமே அந்தக் கிரீடம்.
சாதாரணமாகத் தொப்பி அணிந்திருக்கும் ஒருவர், சயனிக்கச் சென்றால் தொப்பியைக் கழற்றி வைப்பது வழக்கம் அல்லவா?
ஆனால் இங்கே குடந்தையில் ஆராவமுதப் பெருமாள், சயனிக்கும் போது கூட கிரீடத்தை அகற்றாமல் சயனித்துள்ளாரே!
இது எதை உணர்த்துகிறது?

அவரே மிகவும் உயர்ந்தவர்! கிரீடத்தை அகற்றி இன்னொருவருக்கு வணக்கம் செலுத்த வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை!
அதனால்தான் சயனிக்கும் வேளையிலும் கிரீடத்தைத் தலையில் அவர் அணிந்துகொண்டே இருக்கிறார்!
இவ்வாறு அவரது ஆளுமைக்கு அடையாளமாக இருக்கும் அந்தக் கிரீடத்தை நினைத்த மாத்திரத்தில்,
அவர் எவ்வளவு உயர்ந்தவர், நாம் எவ்வளவு தாழ்ந்தவர் என்பது மனதில் நன்கு பதிந்து விடும்.
அதை நினைக்க நினைக்க மனதில் அகங்காரமே எழாது!” என்பதே திருக்குடந்தை தேசிகன் தந்த விளக்கம்.

இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தும் தத்துவம் என்னவென்றால், எப்போதும் ஒளிர்கின்ற ஆளுமையோடு கூடியவர் திருமால்,
அதன் அடையாளமாகத் தலையில் கிரீடத்துடன் திகழ்கிறார். உலகில் பொதுவாக நாம் ஆளுமை என்று சொல்லும்
நபர்களின் ஆளுமைகளை எல்லாம் திருமாலின் ஆளுமை மூழ்கடித்துவிடுகிறது.

‘ஐச்வர்யம்’ என்றால் ஆளுமை. ‘ஈச்வர:’ என்றால் ஆளுமை மிக்கவர், அல்லது ஆள்பவர்.
‘ஜன’ என்பது உலகிலுள்ள அனைத்து மக்களையும் குறிக்கும்.
உலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் விஞ்சி நிற்கும் ஒப்பற்ற ஆளுமை கொண்டவராகத் திருமால் திகழ்வதால்,
அவர் ‘ஜனேச்வர:’ என்றழைக்கப்படுகிறார். ‘ஜனேச்வர:’ என்றால் அனைவரையும் ஆள்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 343-வது திருநாமம்.
“ஜனேச்வராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தங்கள் வாழ்வில்
நல்ல நிர்வாகத் திறனும் ஆளுமையும் பணிவும் ஒருங்கே பெற்றுத் திகழத் திருமால் அருள் புரிவார்.

—————-

344. அநுகூலாய நமஹ:(Anukoolaaya namaha)
(திருநாமங்கள் 334 முதல் 345 வரை -பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)

ஆயர்ப்பாடியில் வளர்ந்த கண்ணன் தளர்நடை நடக்கத் தொடங்கிய பின்,
திடீரென வீட்டில் இருந்து மாயமாகி விடுவது அவன் வழக்கம். யசோதை எங்கு தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியாது.
சிறிது நேரம் கழித்து, உடலெல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டு எங்கிருந்தோ வருவான்.

மேலும், ஒரு நொடிப்பொழுது கூட ஓர் இடத்தில் நிற்க மாட்டான் கண்ணன்.
திடீரென மாட்டுத் தொழுவத்தில் புகுந்து தொந்தரவு செய்வான். அங்கே போய் அவனைப் பிடிக்க முயன்றால்,
கன்றுக் குட்டிகள் கட்டப்பட்ட தொழுவத்துக்கு ஓடி விடுவான்.
அப்புறம் எப்படியோ அவனைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்து வந்தால் மீண்டும் மாயமாகிவிடுவான்.

பசு மற்றும் கன்றுகளின் வாலைப் பிடித்து இழுத்து விளையாடுவான்.
இப்படித் துருதுரு என்று விளையாடும் கண்ணனை யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை.
கண்ணனிடம், “நான் உன்னைப் பார்ப்பதா? வீட்டு வேலையைப் பார்ப்பதா? சிறிது நேரம் கூட ஓரிடத்தில் இருக்க மாட்டாயா?”
என்றெல்லாம் அறிவுறுத்திப் பார்த்தாள் யசோதை. ஆனாலும் கண்ணன் அதை எல்லாம் காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை.

ஒருநாள் கண்ணன் அதிகமாக விஷமம் செய்யவே, யசோதை பிரம்பினால் அவனை அடிக்கப் போனாள்.
ஆனால் பிரம்பால் அடித்தால் குழந்தைக்கு வலிக்குமோ என்று அஞ்சிய யசோதை, பிரம்பைத் தூக்கிப் போட்டுவிட்டு,
தாம்புக் கயிற்றை எடுத்து அடிக்கப் போனாள். ஆனால் கண்ணனோ, பயந்தவன் போல் நடிக்கத் தொடங்கினான்.
அவன் உண்ட வெண்ணெய் தோய்ந்த கைகளால் யசோதையைத் தொழுதான்.
மை தீட்டிய கண்களில் இருந்து மை கரைந்து வரும்படி கண்ணீர் விட்டு அழுதான்.
அச்சத்துடன் யசோதையை நோக்கி ஒரு பார்வை பார்த்தான். பயத்தில் குழந்தை கண்ணனின் உதடுகள் துடித்தன.
மேனி நடுங்கியது.
பார்த்த யசோதை, “குழந்தாய்! உன்னைப் போய் அடிப்பேனா?” என்று சொல்லி அவனைத் தழுவிக்கொண்டாள்.

அடுத்த நொடியே, அங்கிருந்து மாயமான கண்ணன், மேலும் லீலைகள் புரியச் சென்று விட்டான்.
இவனை ஓரிடமாகக் கட்டிப்போட வேண்டும் என்று கருதிய யசோதை, இரண்டு கயிறுகளை எடுத்தாள்.
ஒரு கயிற்றை ஓர் உரலைச் சுற்றி மூன்று சுற்றுகள் சுற்றி, அதை ஒரு முடிச்சு போட்டுக்கொண்டாள்.
மறுபுறம் இன்னொரு கயிற்றைக் கண்ணனின் இடுப்பைச் சுற்றி மூன்று சுற்று சுற்றி அதையும் ஒரு முடிச்சு போட்டுக்கொண்டாள்.
இரண்டு கயிறுகளையும் இழுத்துப் பார்த்த போது அவற்றுக்கு இடையே இரண்டு அங்குலம் இடைவெளி இருந்தது.

வேறு சில கயிறுகளைக் கொண்டு வந்து இவற்றோடு சேர்த்துக் கட்டிவிட்டுப் பார்த்தாள் யசோதை.
உரலும் நகரவில்லை, கண்ணனும் நகரவில்லை, ஆனாலும் இரண்டு அங்குலம் இடைவெளி மட்டும் அப்படியே இருக்கிறது.
வியர்த்து விறுவிறுத்துப் போன யசோதை, “கண்ணா! உன் தாயான எனக்கு உன்னைக் கட்டும் உரிமைகூட இல்லையா?” என்று கேட்டாள்.
அவளது அன்புக்கு மனம் இரங்கினான் கண்ணன்.
அதனால் அடுத்த கயிற்றை அவள் கொண்டு வந்த சேர்த்து முடிச்சு போட்ட போது, இரண்டு கயிறுகளும் இணைந்துவிட்டன.

கண்ணனை உரலோடு கட்டிவிட்டாள் யசோதை.
இப்படிக் கண்ணனைக் கட்டிய யசோதை, அவனைப் பார்த்து,
“யதி சக்னோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டித!” (விஷ்ணு புராணம் 5-6-15)

“ஓரிடத்தில் நிற்க மாட்டேன் என்று விஷமம் செய்தாயே! முடிந்தால் இதிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்!” என்று
சொல்லி விட்டுத் தன் வேலையைக் கவனிக்கச் சென்றாள். தாயின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அப்படியே உரலோடு கட்டுண்டு கிடந்தான் கண்ணன்.
இறைவனுக்கு எத்தனையோ மேன்மைகள் இருந்தாலும், அவன் தன் பக்தர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு, அவர்களிடத்தில் எளியவனாக இருக்கிறான்.

“பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே”–என்று இப் பண்பை நம்மாழ்வார் பாடுகிறார்.
ஆக, மிகவும் உயர்ந்தவராக இருக்கும் திருமால், அத்தன்மைகளை மறைத்துக் கொண்டு,
தன் பக்தர்களிடத்தில் இனியவராக, எளியவராக, அவர்களுக்குக் கட்டுப்பட்டவராக இருப்பதால்,
அவர் ‘அநுகூல:’ என்று அழைக்கப்படுகிறார். ‘அநுகூல:’ என்றால் இனியவர், எளியவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 344-வது திருநாமம்.“அநுகூலாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
அனைவரிடத்திலும் திருமால் இனியவராக, எளியவராக இருந்து அருள் புரிவார்.

————-

345. சதாவர்த்தாய நமஹ (Shatha-Aavarthaaya namaha)

(திருநாமங்கள் 334 முதல் 345 வரை – பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி?
அதை நம்மாழ்வார் திருவாய்மொழியின் மூன்றாம் பத்து பத்தாம் திருமொழியின் எட்டாவது பாசுரத்தில் தெரிவிக்கிறார்:
“அல்லலில் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும்
செய்எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே!”

திருமாலின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டால், துக்கமே இல்லாத ஆனந்தம் உண்டாகும் என்பதே இப் பாடலின் சாரமாகும்.
அல்லல் இல் இன்பம் அளவிறந்து –
துக்கம் என்பது சிறிதும் இல்லாத எல்லையற்ற ஆனந்தத்துடன் வைகுண்டத்தில் திகழ்கிறார் திருமால்.
அவரது ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை, அதில் துக்கத்தின் கலப்பும் இல்லை.

எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் –
அவரது திருமேனியின் ஒவ்வொரு அங்கத்தையும் தனியாகப் பார்த்தாலும் அழகு நன்கு வெளிப்படுகிறது,
திருமேனியை மொத்தமாகப் பார்த்தாலும் அழகு திகழ்கிறது. அந்த அழகின் ஒளியானது வைகுண்ட லோகம் முழுவதும்
பரவி வெள்ளம் போலே பெருக்கெடுத்து ஓடுகிறது.

அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் –
தாமரை மலரின் வாசனையே ஒரு வடிவம் கொண்டது போல் திகழ்கின்ற மகாலட்சுமியுடன் ஆனந்தமாக இணைந்து
களித்து மேலும் மகிழ்பவர். அதாவது, தனக்கே உரித்தான இயற்கையான பரமானந்தம் அளவிறந்து இருக்க,
அதற்கும் மேலான பரமானந்தமாக மகாலட்சுமியுடன் சிருங்காரக் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்கிறார் திருமால்.

எல்லையில் ஞானத்தன் –
மகாலட்சுமியோடு இப்படி உறவாடுவதற்குத் தேவையான பேரறிவைக் கொண்டவர் திருமால்.
அவரது ஞானத்துக்கு எல்லையே இல்லை.

ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் –
அந்த ஞானத்தைக் கொண்டே அனைத்துச் செயல்களையும் செய்ய வல்லவர் திருமால். அதாவது,
மனிதர்களான நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றால் நம் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தியே செய்ய முடியும்.
ஆனால் இந்த உலகை இயக்குதல் உட்பட அனைத்தையும் திருமால் தனது எண்ணத்தாலேயே செய்து முடித்து விடுகிறார்.

எல்லையில் மாயனை –
எல்லையில்லாத வியக்கத்தக்க செய்கைகளைக் கொண்டவர் திருமால்.

கண்ணனை –
அந்த லீலைகளை நமக்குச் செய்து காட்டும் பொருட்டுக் கண்ணனாக வந்து அவர் எளிமையுடன் அவதரித்தார்.

தாள் பற்றி –
அந்தப் பெருமானின் திருவடிகளை வணங்கியதால்

யான் ஓர் துக்கம் இலனே – எனக்கு வாழ்வில் ஒரு சிறிய துக்கம் கூட இல்லை, நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.

இறைவனின் ஆனந்தம், அழகு, சிருங்கார ரசம், அனைத்தும் அறியும் தன்மை, சக்தி, லீலைகள், எளிமை
உள்ளிட்ட குணங்களை நாம் சிந்திக்கச் சிந்திக்க, நமது துக்கமெல்லாம் நீங்கிவிடும் என்று
இப்பாடலின் மூலம் உணர்த்துகிறார் நம்மாழ்வார்.
இவ்வாறு நமது துக்கங்களை எல்லாம் போக்கி மகிழ்விக்க வல்ல எண்ணற்ற மேன்மைகளைத் திருமால் தன்னகத்தே கொண்டிருக்கிறார்.
பெரிய வெள்ளத்தை அணை போட்டுத் தடுத்து வைத்தால், அதில் அலைகள் சுழித்துச் சுழித்துப் பெருகும் அல்லவா?
அதுபோலத் தான் திருமாலின் எல்லையற்ற மேன்மைகளும் பெரு வெள்ளத்தில் எழும் அலைகள் போல் சுழித்துச் சுழித்துப் பெருகுகின்றன.

‘ஆவர்த்த:’ என்றால் சுழல் என்று பொருள். ‘சத’ என்றால் நூறு.
நூற்றுக் கணக்கான சுழல்களாய்ச் சுழித்துச் சுழித்துப் பெருகும் மேன்மைகளை உடையவராகத் திருமால் திகழ்வதால்,
அவர் ‘சதாவர்த்த:’ (சத + ஆவர்த்த: = சதாவர்த்த:) என்றழைக்கப்படுகிறார்.
‘சதாவர்த்த:’ என்றால் நூற்றுக்கணக்கான சுழற்சிகளை உடையவர், அதாவது
சுழித்துப் பெருகும் நூற்றுக்கணக்கான மேன்மைகளைக் கொண்டவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 345-வது திருநாமம்.
“ஸதாவர்த்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வில் இன்பச் சுழல்கள் பெருகும்படித் திருமால் அருள்புரிவார்.

—————–

346. பத்மினே நமஹ (Padhmine namaha)
(திருநாமங்கள் 346 முதல் 351 வரை – வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)
தமிழகத்தில் வாழ்ந்த ஒரு கணவனும் மனைவியும் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றார்கள்.
சுற்றுலா வந்த இடத்தில் மனைவிக்குக் குருவாயூரப்பனைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
தன் விருப்பத்தைக் கணவனிடம் தெரிவித்தாள் அப்பெண்.
ஆனால் கணவனோ, “ஆனந்தமாகச் சுற்றுலா வந்த வேளையில், கோவில், பூஜை, வழிபாடு
இவற்றைச் செய்ய எனக்கு மனமில்லை!” என்று மறுத்தார். ஆனாலும் மனைவி கட்டாயப் படுத்தியதால்
குருவாயூர் கோவிலுக்கு வந்தார்.

கோவிலுக்கு வந்த போதும், “சுற்றுலாவுக்காக ஆசையாக வந்த என்னை இப்படிக் கோவிலில் கொண்டு வந்து
வரிசையில் நிறுத்தி விட்டாயே!” என்று மனைவியைப் பார்த்துப் புலம்பிக் கொண்டே இருந்தார்.
மனைவியோ, “கண்கண்ட தெய்வமாய் இருக்கும் குருவாயூரப்பனைத் தரிசிப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்?
அதை உணராமல் இப்படிப் பேசுகிறாரே!” என்று மனதுக்குள் வருந்தினாள்.
“குருவாயூரப்பா! நீயே நல்வழி காட்டு!” என்று வேண்டிக் கொண்டே குருவாயூரப்பன் சந்நிதியை நோக்கிச் சென்றாள்.

வரிசை மெல்ல மெல்ல நகர்ந்தவாறே, குருவாயூரப்பனுக்கு முன்னே வந்து அந்த தம்பதியர் நின்றார்கள்.
இறைபக்தி நிறைந்த அப்பெண் குருவாயூரப்பனின் அழகில் ஈடுபட்டு வணங்கியதில் ஆச்சரியமில்லை.
ஆனால் கோவிலுக்கு வருவதற்கே விருப்பம் இல்லாமல் இருந்த அவளது கணவர் குருவாயூரப்பனின்
வடிவழகைக் கண்ட மாத்திரத்தில், மனதுக்குள் இனம் புரியாத ஓர் ஆனந்தத்தை அநுபவித்தார்.

காயாம்பூவைப் போன்ற அழகிய ஓர் ஒளி. அதன் நடுவிலே ஒரு குழந்தையின் வடிவம்.
அதில் பேரின்பத்தின் சுவை ததும்புகிறது. சுருண்ட தலைமுடி பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியில் விழ,
இரு விழிகளும் அருட்கடலாய்ப் பொங்கி வந்து மனதைக் குளிர்விக்க,
இரு கன்னங்களும் இந்திர நீலக் கல்லால் ஆன கண்ணாடி போல ஒளிவீச,
மெல்லிய புன்னகை சிவந்த உதடுகளுக்கு மேலும் அழகூட்டக் கண்கண்ட தெய்வமாய்க் காட்சி தரும்
குருவாயூரப்பனின் அழகு அந்த நபரின் மனதை முழுமையாகக் கொள்ளை கொண்டு விட்டது.

உடனே, “இறைவா! நான் விருப்பமே இல்லாமல் தான் இந்தக் கோவிலுக்கு வந்தேன்.
ஆனால் இப்போது உன்னைத் தரிசித்தவாறே எனது எண்ணம் மாறி விட்டது. உன்னைத் தரிசித்ததால் தான்
நான் பிறவிப் பயனையே பெற்றவன் ஆனேன். உன்னைக் காணாத கண் கண் அல்ல!” என்று மனம் விட்டுக் கூறினார்.
சந்நிதியில் இருந்து வெளியே வந்ததும் அந்தப் பெண் தன் கணவரிடம், “பார்த்தீர்களா? அது தான் குருவாயூரப்பனின் மகிமை.
விருப்பமே இல்லாமல் கோவிலுக்கு வந்த உங்கள் மனதையும் ஈர்த்து விட்டான் பாருங்கள்!” என்றாள்.
“ஆமாம்! இனி ஒவ்வொரு வருடமும் ஒருமுறையாவது இந்தக் கோவிலுக்கு வந்து குருவாயூரப்பனைத் தரிசித்தே தீருவேன்!”
என்று அங்கேயே உறுதி பூண்டார் அவளது கணவர்.

பக்தியே இல்லாமல் கோவிலுக்கு வந்தவர் குருவாயூரப்பனைத் தரிசித்தவுடன் பெரும் பக்தராகி விட்டாரே!
அது எப்படிச் சாத்தியம்? வேறொன்றுமில்லை. குருவாயூரப்பன் தன் அழகினால் அவரது மனதை நன்கு கட்டிப் போட்டு விட்டான்.
இறைவனின் அழகு, குணங்கள் ஆகியவற்றை நாம் நன்றாக அநுபவிக்கத் தொடங்கி விட்டால்,
நம் மனம் மற்ற அற்ப விஷயங்களில் இருந்து விலகி, முழுமையாக இறை விஷயத்தில் ஈடுபடத் தொடங்கி விடுகிறது. அதுதான் இங்கே நடந்தது.

இக்கருத்தை ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் குருவாயூரப்பனைக் குறித்து எழுதிய
மணிமங்கல ஸ்தவத்தில் அழகாகப் பாடியுள்ளார்:
“நாலஸ்ய மூலம் சரணாங்குலிப்யாம் பத்மம் ப்ரஸூனம் கர பங்கஜேன க்ருண்ஹன்
க்ருஹீதம் ஹ்ருதயாம்புஜம் நு மதீயம் ஆவேதயஸீதி மன்யே”
“குருவாயூரப்பா! உன் வலது கீழ்க் கரத்தில் நீ ஏன் தாமரை ஏந்தி இருக்கிறாய் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
உன்னிடம் வரும் அடியார்களின் உள்ளமாகிய தாமரையை உன் கரத்தால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விடுகிறாய்.
நீ பிடித்துக் கொண்டவாறே அவர்களின் உள்ளத் தாமரை உன்னிடமேயே நிலைபெற்று விடுகிறது.
அதன் பின் அவர்களின் மனம் மற்ற விஷயங்களை நாடுவதில்லை.

அடியார்களின் உள்ளத் தாமரையை நீ கெட்டியாகப் பிடித்துக் கொள்வதை உணர்த்தவே
கையில் தாமரையை ஏந்தியபடி நீ காட்சி தருகிறாய்!” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

‘பத்மம்’ என்றால் தாமரை. ‘பத்மீ’ என்றால் தாமரையை ஏந்தி இருப்பவன்.
அடியார்களின் உள்ளங்களாகிய தாமரையைக் கவர்பவன் என்பதற்கு அடையாளமாகத்
தாமரையைத் திருக்கையில் ஏந்தி இருப்பதால், திருமால் ‘பத்மீ’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 346-வது திருநாமம்.
“பத்மினே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களைத் திருமால் கவர்ந்து செல்வார்.

————-

347. பத்ம நிபேக்ஷணாய நமஹ (Padhma Nibhekshanaaya namaha)

(திருநாமங்கள் 346 முதல் 351 வரை – வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)

திருவஹீந்திரபுரத்தில் கோவில் கொண்டிருக்கும் தெய்வநாயகப் பெருமாளைக் குறித்து
ஐம்பது ஸ்லோகங்கள் அடங்கிய தேவநாயக பஞ்சாசத் என்ற துதியை இயற்றினார் வேதாந்த தேசிகன்.
அதில் 16-வது ஸ்லோகம் முதல் 45-வது ஸ்லோகம் வரை உள்ள முப்பது ஸ்லோகங்களாலே
தெய்வநாயகப் பெருமாளின் திருமுடியிலிருந்து திருவடி வரை உள்ள ஒவ்வொரு அவயவத்தையும்
ஆழ்ந்து அநுபவித்து வர்ணித்துள்ளார் தேசிகன்.
அதில் 24 மற்றும் 25-வது ஸ்லோகங்களில் தெய்வநாயகப் பெருமாளின் கண்ணழகை
இரண்டு உவமைகளைக் கொண்டு வர்ணிக்கிறார் தேசிகன்.

“ஆலக்ஷ்ய ஸத்த்வம் அதிவேல தயோத்தரங்கம்
அப்யர்த்தினாம் அபிமத ப்ரதிபாதனார்ஹம்
ஸ்நிக்தாயதம் ப்ரதிம சாலி ஸுபர்வ நாத
துக்தாம்புதே: அநுகரோதி விலோசனம் தே” என்ற 24-வது ஸ்லோகத்தில்,
பாற்கடலோடு திருமாலின் கண்களை ஒப்பிடுகிறார் தேசிகன்.

திருப்பாற்கடல் தெய்வநாயகனின் திருக்கண்கள் எப்போதும் அலைகள் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றன
கருணை அலை அலையாகக் கரை புரண்டு ஓடி வருகின்றது
ஐராவதம், காமதேனு, சந்திரன், அமுதம் என அவரவர் விரும்பிய பொருட்களை எல்லாம் தந்தது
அடியார்கள் விரும்பும் அனைத்துப் பொருட்களையும் அக்கண்கள் அருளி விடுகிறது அகன்று இருக்கிறது
அடியார்களுக்கு நிறைய அருள்புரிய வேண்டுமென்ற ஆர்வத்தினாலே அகன்று விரிந்து காதுவரை நீண்டுள்ளது
பார்ப்பதற்கு அழகாக உள்ளதுபார்ப்பதற்கு அழகாக உள்ளது கடல்பிராணிகளுக்கு (சத்த்வம்) இருப்பிடமாகிறது
சத்துவ குணத்துக்கு (சத்த்வம்) இருப்பிடமாக உள்ளது அடுத்தபடியாக,

“விச்வ அபிரக்ஷண விஹார க்ருத க்ஷணை: தே
வைமானிக அதிப விடம்பித முக்த பத்மை:
ஆமோத வாஹிபி: அநாமய வாக்ய கர்ப்பை:
ஆர்த்ரீ பவாமி அம்ருத வர்ஷ நிபை: அபாங்கை:”–என்ற 25-வது ஸ்லோகத்தில்,
உலகைக் காக்க வல்ல திருமாலின் அருட்பார்வை மலர்கின்ற தாமரைப் பூவை ஒத்திருக்கின்றது என்று ஒப்பிடுகிறார் தேசிகன்.

மலரும் தாமரை தெய்வநாயகனின் அருட் பார்வை.ஆமோதம் (நறுமணம்) நிறைந்திருக்கிறது
ஆமோதம் (மகிழ்ச்சி) நிறைந்திருக்கிறது.
நம்மிடம் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் நம்மைப் பார்த்து நலமா என்று விசாரித்து,
நம்முடன் அக்கண்கள் பேசுகின்றன.தேனைப் பொழிகிறது அமுத மயமான அருளைப் பொழிகிறது.
அதில் நனைந்தால் வெப்பம் தணிந்து உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படுகிறது
அதில் நனைந்தால், பிறவிப் பிணியிலுள்ள வெப்பங்கள் விலகி, ஆத்மாவுக்குக் குளிர்ச்சி உண்டாகிறது.

‘பத்ம’ என்றால் தாமரை. ‘நிப’ என்றால் போன்ற. ‘ஈக்ஷண’ என்றால் பார்வை.
‘பத்மநிபேக்ஷண:’ என்றால் தாமரை மலர்வது போன்ற பார்வையை உடையவர் என்று பொருள்.
தாமரை மொட்டு எப்படி அழகாக, நளினமாக, மென்மையாக, குளிர்ச்சியோடு மகிழ்ச்சியும் அளித்தபடி மலருமோ,
அதுபோல் இறைவன் கண்ணை மூடித் திறப்பது என்பதும் அழகாக, நளினமாக, மென்மையாக இருக்கும்;
நமது துயரங்களை எல்லாம் போக்கி மிகுந்த ஆனந்தத்தைத் தரும்.

அதனால் தான் திருமால் ‘பத்மநிபேக்ஷண: –
தாமரை மலர்வது போன்ற திருக்கண் பார்வையை உடையவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 347-வது திருநாமம்.
“பத்மநிபேக்ஷணாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால்
தன் திருக்கண்களால் கடாட்சித்துக் குளிர்விப்பார்.

—————-

348. பத்மநாபாய நமஹ (Padhmanaabhaaya namaha)
(திருநாமங்கள் 346 முதல் 351 வரை – வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)

திருமங்கை ஆழ்வாருக்குத் திருமாலிடம் இருக்கும் காதல் உச்சத்தைத் தொட்ட அளவிலே,
பரகால நாயகி என்னும் பெண் தன்மையை அடைந்தார் திருமங்கை ஆழ்வார்.
அந்தப் பரகால நாயகி அவ்வப்போது தலைவனாகிய திருமாலைச் சந்தித்து அவனோடு உறவாடுகிறாள்.
இக் காதலைப் பற்றிக் கேள்விப்படுகிறாள் நாயகியின் தாய். “பெண்ணே! இது நம் குடும்ப மானத்துக்கு ஏற்ற செயல் அல்ல!
நீ இப்படி ரகசியமாகக் காதல் கொள்வது நம் கௌரவத்துக்கே இழுக்கு!” என்று சொல்லித்
தலைவனைச் சந்திக்க விடாமல் பரகால நாயகியைத் தடுத்து விடுகிறாள் தாய்.

பரகால நாயகி தன்னைச் சந்திக்க வராதபடியால், அவளுக்கு என்ன ஆயிற்று என்று
அறிய விரும்புகிறார் தலைவனாகிய திருமால். பரகால நாயகி ஊருக்கு வெளியே உள்ள பூந்தோப்பில்
பூக்கொய்யச் சென்றிருக்கிறாள் என்ற செய்தியைத் திருமால் கேள்விப் படுகிறார்.
வேட்டைக்காரனாக வடிவம் பூண்டு, இடக் கையில் வில்லும் வலக் கையில் அம்பும் முதுகிலே அம்பறாத் தூணியும்
தாங்கியபடி அந்தப் பூந்தோப்புக்குள் நுழைகிறார்.

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். ஆனந்தமாக இருக்கிறார்கள்.
அதன்பின் தலைவனாகிய திருமால், “என் ஊரான திருவரங்கத்துக்குப் போகிறேன்!” என்று
சொல்லி விட்டுப் புறப்பட்டுச் சென்று விடுகிறார். அதன்பின் அவளது தோழி வந்து தலைவியைச் சந்தித்து,
“தலைவன் வந்தானா? அவன் எப்படி இருந்தான்? அவனைப் பற்றி எனக்குச் சொல்!” என்று கேட்கிறாள்.
அதற்குப் பரகால நாயகி விடையளிக்கிறாள்:

“மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ
மகரம் சேர்க் குழை இருபாடு இலங்கி ஆட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என்முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரை வாய்க்கமலம் போலும்
கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அவ்வண்ணத்து அவர்நிலைமை கண்டும் தோழீ
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே!”

“தோழியே! கரிய, வாசம் மிக்க, அலகலகாய் இருக்கும் குழல் கற்றைகள் பின்னே அலைந்திட,
இரு காதுகளிலும் மகரக் குண்டலங்கள் அசைந்திட, தெய்வத் தன்மை மனிதத் தன்மை இரண்டும் தோற்றிட,
கையில் வில் ஏந்திக் கொண்டு தலைவன் என் முன்னே வந்து நின்றார்.
அவரது திருமேனியின் ஒவ்வொரு அங்கமும் தாமரையை ஒத்திருக்கும்.
அவரது திருக்கரங்கள், திருவாய், திருக்கண்கள், திருவடிகள் அனைத்துமே தாமரை போன்றவை.

கைவண்ணம் தாமரை- முதலில் தாமரை போன்ற கரங்களால் என் கையைப் பிடித்துக் கொண்டார்.
வாய்க் கமலம் போலும் – தாமரை போன்ற திருவாயினாலே இன்மொழிகள் பேசினார்.
கண் இணையும் அரவிந்தம் – தாமரை போன்ற திருக்கண்களாலேயே பேசித் தனது காதலை என்னிடம் தெரிவித்தார்.
அடியும் அஃதே – அந்தக் கண்ணழகுக்குத் தோற்ற நான் அவரது தாமரை போன்ற திருவடிகளில் விழுந்து
அவற்றைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டேன்.

இத்தகைய இறைவன் என் முன்னே வந்து நின்று உறவாடியவாறே, அவரது பெருமையை எண்ணி அஞ்சி
நான் சற்றே விலகி நின்று விட்டேன்!” என்று நடந்தவற்றை எல்லாம் விவரித்தாள் பரகால நாயகி.
இத்தகைய அற்புதமான அகத்துறை பக்திப் பாசுரத்தில் வரும்
“கை வண்ணம் தாமரை, வாய்க்கமலம் போலும், கண்ணிணையும் அரவிந்தம், அடியும் அஃதே” என்ற தொடரில்,
தாமரை, கமலம், அரவிந்தம் அனைத்துமே தாமரை மலரைக் குறிக்கும் வார்த்தைகளே. அதாவது,
திருமாலின் ஒவ்வொரு அங்கமுமே தாமரை போலே இருக்கிறது என்பதே இதன் கருத்தாகும். தாமரையில் நாம் காணக்
கூடிய குளிர்ச்சி, அழகு, மென்மை, நறுமணம் போன்ற நற்பண்புகள் அனைத்தும் மேலும் சிறப்பாக இறைவனின் அங்கங்களில்
உள்ளன என்பது தாத்பரியம்.

அந்த வகையில், திருமாலின் உந்தியும் (கொப்பூழும்) தாமரை போலவே இருக்கிறது.
அதாவது தாமரைக்கே உரிய குளிர்ச்சி, அழகு, மென்மை, நறுமணம் ஆகிய அனைத்து நற்குணங்களும் நிரம்பப் பெற்றிருக்கிறது.
தாமரை போன்ற உந்தியை உடையவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘பத்மநாப:’ என்றழைக்கப்படுகிறார்.
‘பத்ம’ என்றால் தாமரை, ‘நாபீ’ என்றால் உந்தி, ‘பத்மநாப:’ என்றால் தாமரை போன்ற உந்தியை உடையவர்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 348-வது திருநாமம்.

(முக்கியக் குறிப்பு: 48-வது மற்றும் 198-வது திருநாமங்களாகவும் இதே ‘பத்மநாப:’ என்ற திருநாமம் வருகிறது.
அவ்விரு இடங்களிலும், உந்தித் தாமரையில் பிரம்மாவைப் படைத்தவர்,
உந்தியிலே தாமரையை உடையவர் என்ற ரீதியில் பொருள் உரைக்கப்பட்டது.
இங்கே 348-வது திருநாமமாக வரும் ‘பத்மநாப:’ என்பது பரவாசுதேவனைக் குறிப்பதால்,
அதற்குப் பொருத்தமாகத் தாமரை போன்ற உந்தியை உடையவர் என்று உரையாசிரியர்கள் பொருள் உரைத்துள்ளார்கள்)“
பத்மநாபாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் உடல் பருமன், அதிக உடல் எடை போன்றவை இல்லாமல்
அளவான, ஆரோக்கியமான உடல் அமைப்புடன் திகழத் திருமால் அருள் புரிவார்.

————–

366. ரோஹிதாய நமஹ (Rohithaaya manaha)

(திருநாமங்கள் 362 முதல் 385 வரை – திருமகளின் கேள்வனாக இருக்கும் தன்மை)

திருவிண்ணகரம் எனப்படும் உப்பிலியப்பன் கோவில் 108 வைணவ திவ்விய தேசங்களுள் ஒன்றாகும்.
அங்கே தவம் புரிந்த மார்க்கண்டேய முனிவருக்கு மகளாகப் பூமிதேவி அவதரித்தாள்.
திருமால் அந்தத் திருத்தலத்தில் வந்து அவதரித்துப் பூமிதேவியை மணந்து கொண்டார்.
அப்போது இளம்பெண்ணாக இருந்த பூமிதேவிக்கு உணவில் சரியான அளவு உப்பு போட்டுச் சமைக்கத் தெரியாது
என்று மார்க்கண்டேயர் சொன்னதால், “இனி இத்தலத்தில் உப்பில்லாத பண்டங்களையே நான் அமுது செய்வேன்!” என்று
சபதம் செய்தார் திருமால். அதனால் உப்பிலியப்பன் (உப்பில்லாத பண்டங்களை அமுது செய்யும் பெருமாள்) என்றே பெயர் பெற்றார்.

அந்த உப்பிலியப்பனுக்கு நிவாசன் என்று மற்றொரு பெயரும் உண்டு. திருமாலுக்கு ஸ்ரீ தேவி, பூதேவி என
இரு முக்கிய தேவிகள் உண்டு. அவர்களுள் பூதேவியைத் தானே உப்பிலியப்பன் மணந்து கொண்டிருக்கிறார்?
அப்படியானால் அவர் பூநிவாசன் என்று தானே அழைக்கப்பட வேண்டும்? ஏன் ஸ்ரீ நிவாசன் என்று அழைக்கப்படுகிறார்?
அதற்கு ஒரு சுவையான காரணம் உள்ளதாக ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள் ஸ்ரீ வசுமதி சதகம் என்ற நூலில் தெரிவிக்கிறார்.

சீதா கல்யாணத்தின் போது, சீதைக்கு அலங்காரம் செய்த பெண்கள் அத்தனை பேரும் சீதையின் அழகைக் கண்டு
மயங்கியதாகக் கம்பன் பாடுகிறான்.
இன்னொரு பெண்ணின் அழகு என்பது ஓரளவுக்கு உட்பட்டு இருந்தால் தான், மற்ற பெண்கள் பொறாமைப் பட வாய்ப்புண்டு.
ஆனால் உலகியலுக்கு அப்பாற்பட்ட மகாலட்சுமியின் அழகைப் பார்த்தவாறே, அந்த பெண்களுக்குப் பொறாமை வரவில்லையாம்.
மாறாக மயக்கம் தான் ஏற்பட்டதாம். இதோ கம்பனின் பாடல்:

“கஞ்சத்துக் களிக்கும் இன் தேன் சொல் கவர்ந்துணும் வண்டு போல
அஞ்சொற்கள் கிள்ளைக் கெல்லாம் அருளினாள் அழகை மாந்தி
தஞ்சொற்கள் குழறித் தந்தம் தகை தடுமாறி நின்றார்
மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனமென்பதொன்றே அன்றோ”

வண்டுகள் மலர்களில் இருந்து தேனைப் பருகுவது போல், அலங்காரம் செய்ய வந்த பெண்கள்
சீதை என்னும் மலரில் உள்ள அழகென்னும் தேனைப் பருகத் தொடங்கினார்கள்.
இப்படிப் பெண்களும் மயங்குவது சாத்தியமா என்றால், கம்பன் அதற்கும் பதில் சொல்கிறான்.
ஆணோ பெண்ணோ உடல்தான் வேறு, மனம் என்பது எல்லோர்க்கும் ஒன்று தானே!
இந்த அழகைப் பார்த்தால் எம்மனமும் மயங்கத்தான் செய்யும் என்கிறான்.
இது உயர்ந்த கலைக் கண்ணோட்டத்தோடு கண்டு ரசிக்க வேண்டிய கவிநயம் பொருந்திய பாடலாகும்.

அதுபோலத் தான் உப்பிலியப்பன் கோவிலில் அவதரித்த பூமிதேவியும் பேரழகியாகத் திகழ்கிறாள்.
அவளது அழகைக் கண்டு மகாலட்சுமியே மயங்கினாளாம்.
தனது சகோதரியான பூதேவியை ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ தேவி (மகாலட்சுமி) விரும்பினாள்.
அதற்கு என்ன வழி என்று சிந்தித்தாள் ஸ்ரீ தேவி. உப்பிலியப்பனின் திருமார்பில் ஸ்ரீ தேவி அமர்ந்து கொண்டால்,
உப்பிலியப்பன் எப்போது பூதேவியை அணைத்துக் கொண்டாலும், மார்பிலுள்ள ஸ்ரீ தேவியும் அப்படியே
அவரோடு சேர்ந்து பூதேவியை அணைத்துக் கொள்ளலாம் அல்லவா?
அதனால் ஸ்ரீ தேவி உப்பிலியப்பனின் திருமார்பில் அமர்ந்தாள்.
இப்படி ஸ்ரீ தேவியைத் திருமார்பில் கொண்டதால், ஸ்ரீ நிவாசன் என்று உப்பிலியப்பன் பெயர் பெற்றார்.
இக் கருத்தைச் சொல்லும் விதமாக வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள் அருளிய சிருங்கார ரசம் நிறைந்த ஸ்லோகம்:

“மாத: ந கேவலம் அஸௌ உரஸி த்வதீயே
பேஜே ரதிம் கடின பீட குசாபிராமே
ஏஷா ரமாபி ரமணோரஸி வாஸம் ஏதி
தத் தாத்ருச த்வத் உரஸ: பரிரம்பணேச்சு:”

(இறைவனுக்கும் இறைவிக்கும் நடக்கும் இந்த தெய்வீக சிருங்காரச் சுவையை நம் உலகியல் சிருங்காரத்தோடு
பொருத்திப் பார்ப்பது தவறாகும். நம் மனதைத் தூய்மையாக்கி, பக்தியை வளர்த்து,
உலகியல் பற்றுகளைப் போக்கவல்ல சிருங்காரம் இது.)
உப்பிலியப்பன் உற்சவ மூர்த்தியின் திருமார்பில் பொன்நிறம் கொண்ட ஸ்ரீ தேவி வந்து அமர்ந்த படியால்,
அவளது பொன்நிற ஒளியின் பிரதிபலிப்பு பட்டு, அதனால் பொன்போல் சிவந்தார் உற்சவர்.
பொதுவாகத் திருமால் கருநீல வண்ணம் கொண்டவர் தான். ஆனால் அன்னையின் ஒளியின் பிரதிபலிப்புப் பட்டுப்
பொன்போல் மிளிரத் தொடங்கினார்.
அதனால் தான் உப்பிலியப்பன் கோவில் உற்சவர் ‘பொன்னப்பன்’ என்றே பெயர் பெற்றார்.

நம்மாழ்வாரும்,

“பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்”–என்று பாடுகிறார்.

இவ்வாறு திருமார்பில் உள்ள மகாலட்சுமியின் பொன் நிற ஒளிபட்டு, பொன் போல் சிவந்து விளங்குவதால்,
‘ரோஹித:’ என்று திருமால் அழைக்கப் படுகிறார். ‘ரோஹித:’ என்றால் சிவந்திருப்பவர் என்று பொருள்.
இக்காலத்தில் ரோஹித் என்று சூட்டப்படும் பெயர்களெல்லாம் இதன் திரிபே ஆகும்.
‘ரோஹித:’ என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 366-வது திருநாமம்.
“ரோஹிதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பொன் போன்ற மனத்துடன்
பொன் மனச் செம்மல்களாக விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.

—————-

367. மார்காய நமஹ (Margaaya namaha)
1971-ம் வருடம். அடியேனின் குருவான டாக்டர் ஸ்ரீ உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமி பொறியியல் படிப்பு முடித்திருந்த சமயம்.
மத்திய அரசில் பொறியாளர் பதவிக்கான தேர்வு அப்போது நடைபெற்றது. அந்தத் தேர்வை எழுதிய ஸ்ரீ கருணாகராச்சாரியார்,
தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தார்.அப்போது பாரத தேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வந்து விட்டது.
அதனால் தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் மேலும் கால தாமதம் ஏற்பட்டது.
தேர்வு முடிவு வராமல் மத்திய அரசு வேலை கிடைப்பது தாமதம் ஆக,
குடும்பத்தின் வறுமைச் சூழல் மேலும் மோசமாகிக் கொண்டே போனது.

இன்றைய சட்டீஸ்கார் மாநிலத்தில் உள்ள பிலாயில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய
நேர்முகத் தேர்வுக்குச் சென்றார் ஸ்ரீ கருணாகராச்சாரியார். ஆனால் அவர் குடுமி வைத்துக் கொண்டு
திருமண் அணிந்திருப்பதைக் காரணம் காட்டிய அந்த நிறுவனத்தினர், அவற்றை அகற்றி விட்டு வந்தால்
பணியில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினர். பெரியோர்களின் வழக்கத்தை மீறிப் பணியில் சேர்வதை விரும்பாமல்
அங்கிருந்து புறப்பட்டார் ஸ்ரீ கருணாகராச்சாரியார்.

சென்னைக்குத் திரும்பும் வழியில் ஐதராபாத்துக்கு அருகில் உள்ள சிலுக்கூர் விஸா
ஸ்ரீ பாலாஜி கோவிலுக்குச் சென்றார் ஸ்ரீ கருணாகராச்சாரியார்.
அப்போது அங்கே ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
விஸா ஸ்ரீ பாலாஜி பெருமாளுக்கு முன்னே நின்ற ஸ்ரீ கருணாகராச்சாரியார்,
“இறைவா! எனது எதிர்காலமே கேள்விக் குறியாகி விட்டது! என் தந்தையின் ஆணைப்படி குடுமியும் திருமண்ணும் தரித்தால்
எனக்கு வேலை கிடைக்காதா? நீ தான் எனக்கு நல்வழி காட்ட வேண்டும்!” என்று வேண்டி,
கதறி அழுது அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார்.
அப்போது அவரைத் தேற்றிய அர்ச்சகர், “பெருமாளுக்கு ஒரு விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்.
எல்லாம் சரியாகி விடும்!” என்று சொல்லி, அப்போதே ஒரு விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனையைச் செய்தார்.
அதன்பின் கோவிலிலேயே அமர்ந்து ஸ்ரீ மத் பாகவத புராண பாராயணமும் செய்தார் ஸ்ரீ கருணாகராச்சாரியார் சுவாமிகள்.

பாராயணம் முடிந்தபின் அர்ச்சகர், “கருணாகரா! கவலைப் படாதே! அடியார்களால் பலவிதமான பலன்களுக்காகப்
பெருமாள் நாடப்படுகிறார். அந்தந்தப் பலன்களை அவரவர்க்குத் தரவும் செய்கிறார்.
திரௌபதி புடவை கேட்டாள், கண்ணன் கொடுத்தான். பாண்டவர்கள் ராஜ்ஜியம் கேட்டார்கள், கண்ணன் கொடுத்தான்.
விபீஷணன் கைங்கர்யத்தைக் கேட்டான், ராமன் கொடுத்தான். காகாசுரன் உயிர்பிச்சை கேட்டான், ராமன் கொடுத்தான்.
பிரகலாதன் பக்தியைக் கேட்டான், நரசிம்மன் கொடுத்தான். இந்திரன் தேவலோகப் பதவியைக் கேட்டான், வாமனன் கொடுத்தான்.
நீயும் நாடினால், உனக்குத் தேவையான வேலையை அவன் கொடுக்க மாட்டானா?” என்று சொல்லித் தேற்றினார்.

அதனால் மனவலிமை பெற்ற கருணாகராச்சாரியார் மறுநாள் காலை ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்
நடந்த ஒரு நேர்முகத் தேர்வுக்குச் சென்றார். விஸா ஸ்ரீ பாலாஜியின் அருளால் அங்கே அவருக்கு வேலை கிடைத்து விட்டது.
வேலை கிடைத்ததோடு மட்டுமின்றி, ஐதராபாத்திலேயே தங்கி, மாலை வேளைகளில் விஸா ஸ்ரீ பாலாஜி பெருமாளுக்குத்
தொண்டு செய்யும் பாக்கியத்தையும் அப்பெருமாள் அருளிவிட்டார்.

இவை மட்டுமா? விரைவில் போர் முடிந்தது. நிலுவையில் இருந்த மத்திய அரசுப் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்தன.
அதே ஐதராபாத்தில் ஜியோலஜிக்கல் ஸர்வே ஆஃப் இந்தியாவில் ஸ்ரீ கருணாகராச்சாரியார் சுவாமிகளுக்கு
மத்திய அரசுப் பொறியாளர் பணி கிடைத்தது. தொடர்ந்து பல ஆண்டுகள் ஐதராபாத்தில் தங்கி இருந்து
தனக்குப் பேரருள் புரிந்த விஸா ஸ்ரீ பாலாஜிக்குப் பல கைங்கர்யங்கள் செய்து வந்தார் ஸ்ரீ கருணாகராச்சாரியார்.

இப்படி அடியார்கள் என்ன வரத்தை வேண்டி வந்தாலும், அவற்றைக் குறைவில்லாமல் அருளி விடுகிறார் திருமால்.
தாங்கள் வேண்டும் வரங்களைப் பெறுவதற்காக அடியார்களால் நாடப்படுவதால் திருமால் ‘மார்க:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘மார்க:’ என்றால் நாடப்படுபவர். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 367-வது திருநாமம்.
“மார்காய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நாடிய பொருள்கள் கைகூடும்.

———————

368. ஹேதவே நமஹ (Hethave namaha)

காஞ்சீபுரத்தைச் சேர்ந்த யஜ்ஞமூர்த்தி என்ற பண்டிதர், ராமாநுஜரின் பெருமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டார்.
எப்படியாவது வாதம் செய்து ராமாநுஜரை வீழ்த்த வேண்டும் என்று அவர் எண்ணினார்.
காசியிலுள்ள நூலகத்தில் இருந்து பற்பல புத்தகங்களை வண்டியில் கட்டி எடுத்துக் கொண்டு
ராமாநுஜர் எழுந்தருளியிருந்த திருவரங்கத்துக்கு வந்தார்.
ராமாநுஜரைச் சந்தித்து, “நான் உங்களோடு வாதம் செய்ய விரும்புகிறேன். நான் தோற்றால் என் சித்தாந்தத்தை விட்டு விட்டு
உங்கள் சித்தாந்தத்தைத் தழுவி, உங்களுக்குச் சீடராகி,
உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன்!” என்றார் யஜ்ஞமூர்த்தி.
ராமாநுஜரோ, “எனக்கு வாதம் செய்வதில் ஆர்வம் இல்லை.
ஆனால் நீங்கள் ஆர்வத்தோடு வாதம் செய்ய அழைப்பதால் வாதத்துக்கு வருகிறேன்!” என்றார்.

“நீங்கள் தோற்றால் எனது சித்தாந்தத்துக்கு வந்து விடுவீர்களா?” என்று ராமாநுஜரிடம் கேட்டார் யஜ்ஞமூர்த்தி.
ராமாநுஜரோ, “நான் ஒருவன் தோற்றதால் என் சித்தாந்தம் பொய் என்று ஆகாது.
எங்கள் குருமார்கள் சொன்னது என்றுமே சரியாகத் தான் இருக்கும்.
நான் தோற்றால் நான் அவற்றைச் சரியாகப் படிக்கவில்லை என்று பொருள்.
எனவே நான் தோல்வி அடைந்தால், இனி சமய நூல்களைப் படிப்பதையும் போதிப்பதையும்
நிறுத்திக் கொள்வதே பொருத்தமாக இருக்கும்!” என்று விடையளித்தார்.

வாதம் தொடங்கியது. மகாபாரதப் போர் போல் நடைபெற்ற அந்தக் கடுமையான வாதம்
பதினேழு நாட்களுக்குச் சென்று கொண்டே இருந்தது. யார் வெல்வார் என்றே சொல்ல முடியாத அளவுக்கு
யஜ்ஞமூர்த்தியும் ராமாநுஜரும் போட்டி போட்டுக் கொண்டு வாதிட்டனர். பதினேழாம் நாள் வாதம் முடியும் சமயத்தில்,
யஜ்ஞமூர்த்தி ராமாநுஜரிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ராமாநுஜரால் உடனே பதிலளிக்க முடியவில்லை.
“நாளை பார்க்கலாம்!” என்று சொல்லிவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.

தான் வெற்றி பெற்று விட்டதாக எண்ணி, கர்வத்தோடு தனது இருப்பிடம் திரும்பினார் யஜ்ஞமூர்த்தி.
ராமாநுஜரோ மனமுடைந்த நிலையில் தமது மடத்தை அடைந்தார்.
மறுநாள் காலை வாதம் நடைபெறும் சபைக்கு ராமாநுஜர் வந்தார். அவர் வரும் தோரணையைப் பார்த்தவாறே,
யஜ்ஞமூர்த்தி நேராக ராமாநுஜரின் திருவடிகளில் போய் விழுந்தார்.
“சுவாமி! அடியேன் தோற்று விட்டேன்! நீங்கள் தான் வென்றீர்! உங்கள் முகத்தைப் பார்த்தவாறே எனது கேள்விகளுக்கு
எல்லாம் பதில் கிடைத்து விட்டது! இனி நான் உங்கள் சீடன்! உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன்!” என்றார்.

அப்போது ராமாநுஜர், “உம்மை என் சீடராக ஏற்கிறேன். ஆனால் அதற்கு முன் ஒரு விஷயத்தை நீங்கள் அறிய வேண்டி உள்ளது.
நேற்று மாலை மடத்துக்குச் சென்ற அடியேன், வரதராஜப் பெருமாளிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன்.
என் கனவில் தோன்றிய வரதராஜர், “உமக்கு நல்ல சீடர் ஒருவர் கிடைக்கவே இந்த யஜ்ஞமூர்த்தியை அனுப்பி வைத்துள்ளேன்.
ஆளவந்தார் அருளிய சித்தி திரயம், நாதமுனிகளின் மாயாவாதக் கண்டனம் ஆகிய நூல்களில் சொல்லப்பட்ட கருத்துகளின்
அடிப்படையில் நாளை வாதாடி அவரை வென்று வாரும்!” என்று கூறினார்.
அந்தப் பெருமாள் கொடுத்த தைரியத்தால் தான், நேற்று மனமுடைந்து போன அடியேன், இன்று கம்பீரமாகச் சபைக்கு வந்தேன்.
அந்தக் கோலத்தைப் பார்த்து நீங்களும் எனக்குச் சீடராகி விட்டீர். இந்த வெற்றிக்கு அடியேன் காரணம் அல்லன்.
காஞ்சி வரதராஜப் பெருமாளே காரணம். எனவே உங்கள் பெயரோடு என் பெயரைச் சேர்த்துக் கொள்வது உங்கள் விருப்பம்.
ஆனால் நிச்சயமாக வரதராஜப் பெருமாளின் திருநாமத்தைச் சேர்த்துக் கொள்க!” என்று கூறினார்.

தான் திருந்தி ராமாநுஜரின் சீடராக ஆனதற்கு வரதராஜனின் அருளே காரணம் என உணர்ந்த யஜ்ஞமூர்த்தி,
அருளாளப் பெருமாள் என்ற வரதராஜப் பெருமாளின் திருப்பெயரையும்,
எம்பெருமானார் என்ற ராமாநுஜரின் திருப்பெயரையும் இணைத்து,
‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்ற பெயருடன் ராமாநுஜரின் சீடராக ஆனார்.

அடியார்கள் விரும்பும் பலன்களைப் பெறுவதற்கும், வாழ்வில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கும் காரணமாக இருப்பவர் திருமால்.
ராமாநுஜர் வாதில் வென்றதற்கும் அவரே காரணம். ராமாநுஜரின் சீடராக ஆகும் பாக்கியம் யஜ்ஞமூர்த்திக்குக் கிடைத்ததற்கும் அவரே காரணம்.
அதனால் தான் திருமால் ‘ஹேது:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஹேது:’ என்றால் பக்தர்கள் விரும்பும் பலன்களைப் பெறக் காரணமாக இருப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 368-வது திருநாமம்.
“ஹேதவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பும் அனைத்துப் பலன்களையும்
குறைவறப் பெறுவதற்குத் திருமால் அருள் புரிவார்.

————-

369. தாமோதராய நமஹ (Dhaamodharaaya namaha)

ஸ்ரீ மத் அகோபில மடத்தின் 42-வது பீடாதிபதியான ஸ்ரீ மத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரிடம் வந்த ஒரு சீடர்,
“ஆழ்வார் ஏன் தவறாகப் பாடி விட்டார்?” என்று கேட்டார். “என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார் அழகிய சிங்கர்.
“ஆம்! நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியின் முதல் பத்து, மூன்றாம் பதிகத்தின் முதல் பாடல்,

“பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே?”

இப்பாடலில் கண்ணன் உரவிடை உரலோடு ஆப்புண்டான் என்று ஆழ்வார் பாடி இருக்கிறார்.
உரம் என்றால் மார்பு. யசோதை கண்ணனின் மார்பில் கயிற்றைச் சுற்றி உரலோடு கட்டிப் போட்டதாகத் தானே இதற்குப் பொருள் வரும்?
ஆனால் உண்மையில் யசோதை கண்ணனின் இடுப்பில் தானே கயிற்றைச் சுற்றினாள்? ஏன் ஆழ்வார் தவறாகப் பாடினார்?” என்று கேட்டார் சீடர்.

“தெரியவில்லை! பார்த்துத் தான் சொல்ல வேண்டும்!” என்று பதில் அளித்தார் அழகிய சிங்கர்.
அந்தச் சீடரும் மடத்திலிருந்து தன் வீடு நோக்கிப் புறப்பட்டார்.
அப்போது அந்தச் சீடரின் நண்பர் ஒருவர், “நீங்கள் குருவிடம் கேள்வி கேட்ட முறை சரியில்லை.

அதனால் தான் அவர் தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
ஆசாரியர்களிடம் நாம் ஐயங்களை விண்ணப்பிக்கும் போது பணிவோடு விண்ணப்பிக்க வேண்டும் அல்லவா?
திருமாலாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் எங்காவது தவறாகப் பாடுவாரா?
ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை என்பதாலேயே அதைத் தவறு எனலாமா?
நீங்கள் கேட்ட கேள்வியைச் சற்றே பணிவோடு குருவிடம் கேட்டுப் பாருங்களேன்!” என்றார்.

சீடர் மீண்டும் அழகிய சிங்கரிடம் வந்து, அவரை விழுந்து நமஸ்கரித்து,
“சுவாமி! அடியேனை மன்னித்தருள வேண்டும். உரவிடை ஆப்புண்டு என்று ஆழ்வார் பாடியதன் காரணம்
அடியேனின் சிற்றறிவுக்குப் புரியவில்லை. தேவரீர் கருணையோடு விளக்கம் கூறி அருள வேண்டும்!” என்று கோரினார்.
அப்போது இஞ்சிமேட்டு அழகிய சிங்கர், “யசோதை கண்ணனின் இடுப்பில் தான் கயிற்றைச் சுற்றி அவனை உரலோடு கட்டினாள்.
ஆனால் உரவிடை ஆப்புண்டு என்று ஆழ்வார் பாடியதற்கு இரு காரணங்கள் உண்டு.

1. உதரம் என்றால் வயிறு. உதரவிடை என்பது இடைக்குறையாக உரவிடை என்று பாடலின் அமைப்புக்காக மாறி இருக்கிறது.

2. உரம் என்றே வைத்துக் கொண்டால், மார்போடு கட்டுண்டான் என்று பொருள்படும். அதிலும் ஒரு ரகசியம் உள்ளது.
திருமால் பக்தர்களுக்குக் கட்டுப்படும் போது, தான் மட்டும் தனியாகக் கட்டுப்படுவதில்லை.
தன் மார்பில் உள்ள மகாலட்சுமியோடு சேர்ந்து கட்டுப் படுகிறான்.
கண்ணனின் திருமார்பில் எப்போதும் இருக்கிறாள் அல்லவா மகாலட்சுமி?
யசோதை கண்ணனைக் கட்டிய போது மகாலட்சுமி என்ன செய்து கொண்டிருந்தாள்?
அவளும் கண்ணனோடு சேர்ந்து அந்த உரலுடன் கட்டுண்டு கிடந்தாள்.

இப்படிப் பெருமாளும் தாயாரும் இணைந்து பக்தர்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பதை நமக்கு உணர்த்தவே,
உரவிடை ஆப்புண்டு – மார்புடன் கட்டுண்டான் – மார்பில் உள்ள மகாலட்சுமியோடு சேர்ந்து கட்டுண்டான் என்று
ஆழ்வார் பாடியுள்ளார்!” என விளக்கினார்.இந்த விளக்கத்தைக் கேட்டவாறே, பரவசம் அடைந்த அந்த சீடர்,
கண்ணனின் கருணையையும் குருவின் ஞானத்தையும் எண்ணி வியந்து, அழகிய சிங்கரின் திருவடிகளில் விழுந்து
ஆசி பெற்றுக் கொண்டு, அறிவுரை சொன்ன நண்பருக்கும் நன்றி தெரிவித்து விட்டு மடத்தில் இருந்து புறப்பட்டார்.

தாமம் என்றால் கயிறு, உதரம் என்றால் வயிறு.
வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்டதால் கண்ணன் ‘தாமோதரன்’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 369-வது திருநாமமாக அமைந்துள்ளது.
“தாமோதராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பக்திக்கும் கண்ணன் கட்டுப்படுவான்.

————

————-

378. ஸ்ரீ கர்ப்பாய நமஹ (Shreegarbhaaya namaha)

(திருநாமங்கள் 362 முதல் 385 வரை – திருமகளின் கேள்வனாக இருக்கும் தன்மை)
ராம பாணத்தால் தாக்கப்பட்டுக் கீழே விழுந்த வாலி, பாணத்தில் இருந்த ராம நாமத்தைக் கண்டு,
தன்னைத் தாக்கியவன் ராமன் என உணர்ந்தான்.
தன் எதிரே ராமனைக் கண்ட வாலி, பலவாறாக ராமனை ஏசினான்.
ராமனின் செய்கையைக் குறித்துப் பல கேள்விகளும் கேட்டான்.
அவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டே நின்ற ராமன், வாலியைப் பேச விட்டுவிட்டு,
பின் அத்தனை கேள்விகளுக்கும் விடையளித்து நியாயத்தை எடுத்துச் சொன்னான்.

ராமனை நிந்தித்த போது வாலியின் கூற்றாகக் கம்பர் ஒரு பாடல் அமைத்துள்ளார்:
“கோவியல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! உடைமை அன்றோ?
ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை!”
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! –

சித்திரத்தில் எழுத முடியாத பேரழகு மிக்க வடிவம் கொண்ட ராமா!
கோவியல் தருமம் – அரச நீதி என்பது
உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் – உங்கள் சூரிய குலத்தில் பிறந்த
எல்லோருக்கும் உடைமை அன்றோ? – பரம்பரை சொத்து அல்லவா?
அந்த தர்மத்தை நீ மறந்து என்னைத் தாக்கி இருக்கிறாய் என்றால், இது சீதையின் பிரிவினால்
நீ குழம்பிப் போய் செய்த காரியம் போல் தெரிகிறது.
ஆவியை – உயிரான சீதையைப் பிரிந்து வெற்று உடல் போல் நீ ஆகிவிட்டாய்.
சனகன் பெற்ற அன்னத்தை – தண்ணீர், பாலைப் பிரித்து அறியும் அன்னம் போன்ற சீதையை இழந்ததால்
தர்மம், அதர்மத்தைப் பிரித்து அறியத் தெரியாமல் என்னைத் தாக்கிவிட்டாய்.
அமிழ்தின் வந்த தேவியை – பாற்கடலில் அமுதத்தோடு தோன்றிய மகாலட்சுமி என்னும் அமுதை இழந்தபடியால், நீ நஞ்சாக மாறிவிட்டாய்.
பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை – அவளைப் பிரிந்த திகைப்பில் மனம் குழம்பி நீ செய்த செயல் இது.
சீதை உன்னோடு இருந்திருந்தால், இச்செயலை அனுமதித்திருக்க மாட்டாள்.

இவ்வாறு வாலி பேசவே, ராமன் தலை குனிந்தானாம். அவமானத்தாலா? நிச்சயமாக இல்லை!
ஆனால் ராமன் தலைகுனிந்து விட்டு மீண்டும் நிமிர்ந்தவாறே, வாலி தனது தவறை உணர்ந்து,
“ராமா! என்னை மன்னித்தருள வேண்டும்! நான் என் தம்பியின் மனைவியை அபகரித்தது என் தவறு!
அதற்கான தண்டனையை நீ எனக்குச் சரியாகத்தான் வழங்கி இருக்கிறாய்!” என்றான்.
அதெப்படி ராமன் குனிந்து நிமிர்ந்தவுடன் வாலியின் மனம் மாறும்?

ராமன் அவமானத்தால் தலைகுனியவில்லை.
“சீதையைப் பிரிந்ததால் குழம்பிப் போய் என்னைத் தாக்கினாய்!” என்று வாலி சொன்னான் அல்லவா?
“சீதை எங்கும் போகவில்லை! இதோ என் மார்பில் இருக்கிறாள் பார்!” என்று வாலிக்குக் காட்டவே
ராமன் தலை குனிந்து தனது திருமார்பைப் பார்த்தான். திருமகளும் திருமாலும் என்றும் பிரிவதே இல்லை.
சீதை ராமனைப் பிரிந்து இருப்பதெல்லாம் அவதாரத்தில் அவர்கள் செய்யும் நாடகமே என உணர்ந்தான் வாலி.

மேலும், திருமார்பில் திருமகள் இருக்கும் போது ராமன் தன்னைத் தாக்கி இருக்கிறான் என்றால்
அது நூற்றுக்கு நூறு சரியான செயலே என்றும் உணர்ந்தான் வாலி.
ஏனெனில் தவறான செயலைத் திருமால் செய்ய முற்பட்டால் திருமகள் தடுத்திருப்பாளே!
அதனால்தான் தன் தவறை உணர்ந்து ராமனிடம் மன்னிப்பும் கோரினான்.

இச்சம்பவத்தில் இருந்து, திருமகள் திருமாலை என்றுமே விட்டுப் பிரிவதில்லை என்று அறிய முடிகிறதல்லவா?
எப்போதும் மகாலட்சுமியைத் தனது திருமார்பில் கொண்டு, தனது செய்கைகளால் அவளை மகிழ்வித்துக் கொண்டே இருக்கிறார் திருமால்.
இப்படி மகாலட்சுமியைத் திருமார்பில் வைத்துக் காப்பதால் திருமால் ‘ ஸ்ரீ கர்ப்ப:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஸ்ரீ ’ என்றால் மகாலட்சுமி. ‘கர்ப்ப:’ என்றால் கருவிலுள்ள குழந்தை.
மகாலட்சுமியைத் திருமார்பில் தாங்கிக் கருவில் உள்ள குழந்தையைத் தாய் காப்பது போல் அவளைத் திருமால் காப்பதால்,
அவர் ‘ ஸ்ரீ கர்ப்ப:’ என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 378-வது திருநாமம்.

“ஸ்ரீ கர்ப்பாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் இல்லங்களில் என்றென்றும்
லட்சுமி கடாட்சம் நிறையும்படித் திருமாலும் திருமகளும் அருள் புரிவார்கள்.

—————-

379. பரமேச்வராய நமஹ (Parameshvaraaya namaha)
திருக்கோவில்களில் திருமால் ஊஞ்சல் உற்சவம் கண்டருள்வதை நாம் கண்டிருப்போம்.
அதன் தாத்பரியம் என்ன என்பதைத் திருவரங்கக் கலம்பகம் எனும் நூலில் பிள்ளைப் பெருமாள் சுவாமி தெரிவிக்கிறார்:

“உருமாறிப் பல பிறப்பும் பிறந்தும் செத்தும்
ஊசல் ஆடுவது அடியேன் ஒழியும் வண்ணம்
கரு மாயத்து என் நெஞ்சைப் பலகை ஆக்கிக்
கருணை எனும் ஊஞ்சலில் திருமாலுக்கு

அருகிலே திருமகள் வந்து அமர்கிறாளாம்.
திருமகளிடம் திருமால், “தேவி! நீதான் என்னை இப்போது வழி நடத்த வேண்டும்.
மனிதர்களின் மனமாகிய ஊஞ்சலில் அவர்களுக்கு அருள்புரியவே நாம் இப்போது அமர்ந்திருக்கிறோம்.
ஆனால் இவர்களின் தவறுகளைப் பார்த்துத் தண்டிப்பதா? அல்லது கருணையால் இவர்களை
மன்னித்து ஏற்பதா? என்ன செய்யலாம்?” என்று கேட்கிறார்.

அதற்குத் திருமகள், “சுவாமி! உலகில் தவறு செய்யாதவர் என்று எவருமே இலர்.
தவறு செய்யாதவர்க்கு மட்டுமே அருள்புரிவது என்று நீங்கள் முடிவெடுத்தால், யாருக்குமே அருள்புரிய முடியாது.
எல்லாரையும் தண்டிப்பது என்பதும் சரியான அணுகுமுறை ஆகாது!” என்கிறாள்.
திருமாலோ, “அப்படியானால் எல்லாரையும் மன்னித்து விட்டுவிட்டால் அது முறையாகுமோ?” என்று கேட்கிறார்.

திருமகள், “அப்படிச் செய்ய வேண்டாம்! எல்லோரும் தவறு செய்வார்கள்.
ஆனால் அவர்களுள் யாரெல்லாம் தவறை உணர்ந்து நீங்களே கதி என்று சரணாகதி செய்கிறார்களோ,
அவர்களிடம் கருணையைக் காட்டுங்கள். தண்டிக்காதீர்கள்.
மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்து வருபவர்களைத் தண்டித்துத் திருத்தி நல்வழிப்படுத்துங்கள்!” என்கிறாள்.
இதுவே சரியான யோசனை என்று சொல்லி, மனம் திருந்திச் சரணடையும் அடியார்களிடம் கருணையைக் காட்டுவது
என்று முடிவெடுக்கிறார் திருமால்.
நம் உள்ளங்களாகிய ஊஞ்சலில் இப்படி மகாலட்சுமியோடு சேர்ந்து அமர்ந்து நம்மைக் காத்தருள்கிறார்.

இதை ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் வசுமதி சதகத்தில்,
“ஸ்ரீ மான் தண்டதர: ஸ்வயம் ஜகத் இதம் ப்ராய அபராதை: யுதம்
சிக்ஷ்யம் வா அத நு ரக்ஷ்யம் இதி அதிதராம் ஆரூட டோலோ ஹரி:
அந்த்யம் ஸாது ததோ விசார்ய பவதீம் அஸ்மின் ஸ்தலே ஜாக்ரதீம்
அங்கீக்ருத்ய ததோசிதாம் ப்ரணயினீம் நித்யம் க்ஷமாம் க்ரீடதி”–என்று வர்ணிக்கிறார்.

உலகை எல்லாம் ஆளும் திருமாலின் காக்கும் தொழில், மகாலட்சுமியின் ஆலோசனையைப் பெறுவதால் தான்
முழுமை பெறுகிறது என்பதை இதன் மூலம் நம்மால் அறிய முடிகிறது அல்லவா?
திருமாலின் ஆளுமையும் திருமகளின் அருளும் இணைந்திருப்பதால்தான் உலக நிர்வாகம் சரியாக நடைபெறுகிறது.

முன்சொன்ன திருநாமத்தின் விளக்கப்படி, ஸ்ரீ கர்ப்பனாக மகாலட்சுமியுடன் கூடி இருந்து இவ்வுலகை ஆண்டு நிர்வகிப்பதால்,
திருமால் ‘பரமேச்வர:’ என்று அழைக்கப் படுகிறார். ‘பரமேச்வர:’ என்றால் உலகை ஆள்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 379-வது திருநாமம்.
“பரமேச்வராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைப் பிறவியெனும் ஊஞ்சலிலிருந்து திருமால் காத்தருள்வார்.

——————-

380. கரணாய நமஹ (Karanaaya namaha)

ராம தூதனாக இலங்கைக்குள் நுழைந்த அனுமன், அங்கே பற்பல இடங்களில் சீதையைத் தேடினார்.
சிறிய வடிவம் எடுத்துக் கொண்டு, அரக்கர்களின் வீடுகள் தோறும் சென்று சீதை இருக்கிறாளா என்று பார்த்தார்.
தேவலோகப் பெண்கள் போல் இனிமையாகப் பாடும் பல பெண்களைப் பார்த்தார்.
ராவணன் சேனையைச் சேர்ந்த பல ஏவலாட்கள் ராஜவீதியில் செல்வதைப் பார்த்தார்.

ஒற்றைக் கண்ணுடையோர், ஒற்றைக் காதுடையோர், கோணிய முகமுடையோர், வித்தியாசமான அவயவங்கள் உடையோர்,
பலவித நிறமுடையோர் இப்படிப் பலரையும் கண்டார். ராவணனின் யானைப் படை, குதிரைப் படை, தேர்ப்படை, காலாட்படை
உள்ளிட்டவற்றைக் கண்டார். எத்தனையோ பெண்களைப் பார்த்தபோதும், அனுமனால் சீதையை மட்டும் கண்டுபிடிக்க முடியவே இல்லை.

பிரகஸ்தன், கும்பகர்ணன், மகோதரன், விரூபாட்சன், வித்யுஜ்ஜிஹ்வன், வித்யுன்மாலி, வஜ்ரதம்ஷ்டிரன்,
சுகன், சாரணன், இந்திரஜித், ஜம்புமாலி, சுமாலி உள்ளிட்டோரின் மாளிகைகளுக்குள் எல்லாம் சென்று தேடிப் பார்த்தார் அனுமன்.
பின் ராவணனின் அரண்மனையை அடைந்து அங்கும் தேடினார்.
அங்கிருந்து புஷ்பக விமானத்தின் உள்ளே சென்று அந்த விமானம் முழுவதும் தேடிப் பார்த்தார்.

ராவணனது அந்தப்புரத்தில் பித்ரு தேவதைகளின் பெண்கள், தைத்திய வனிதைகள், கந்தருவ சுந்தரிகள்,
ராட்சச கன்னிகைகள் பலர் இருந்தார்கள். ஆனால் சீதை இருப்பதாகத் தெரியவில்லை.
அதன்பின், அங்கே மேலான மஞ்சத்தில் மிகவும் பேரழகி யான ஒரு பெண் துயில்கொண்டிருப்பதை அனுமன் கண்டார்.
அவள் ராவணனின் பட்டத்து அரசி மண்டோதரி.
அவளைச் சீதை என்றே எண்ணிய அனுமன் தோள்களைத் தட்டி வாலுக்கு முத்தமிட்டுக் கூத்தாடத் தொடங்கினார்.
ஆனால் வெகு விரைவிலேயே, “அடடா! என்னே என் மதி மயக்கம்! பெருமாளைப் பிரிந்த பிராட்டி
இப்படி நிம்மதியாகப் பஞ்சு மெத்தையில் உறங்குவாளோ? இவள் நிச்சயமாகச் சீதையாக இருக்கவே முடியாது!” என்று தீர்மானித்தார் அனுமன்.

இரவு முழுவதும் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சீதை கிடைக்காத நிலையில், அனுமன் சிந்திக்கத் தொடங்கினார்.
“ஒருவேளை ராவணன் கடத்தி வந்தபோது கடலில் அன்னை விழுந்துவிட்டாளோ?
அல்லது வழியில் வேறெங்காவது கீழே விழுந்தாளோ? ராவணன் வேறு ஊரில் அடைத்து வைத்துள்ளானோ?
ராவணன் அவளைக் கொன்று தின்றுவிட்டானோ? அல்லது அன்னையே தன் உயிரை மாய்த்துக்கொண்டாளோ?
சீதையைக் காணாமல் நான் எப்படி வானரர்களின் முகத்தில் போய் விழிப்பேன்?” என்று சிந்தித்தார் அனுமன்.

அப்போது தான் அவர் மனதில் ஓர் எண்ணம் ஸ்புரித்தது. “அடடா! நான் பெரும் தவறு செய்துவிட்டேன்.
சீதா தேவியை ‘நான் தேடுகிறேன், நான் கண்டுபிடிக்கப் போகிறேன்’ என்ற எண்ணத்துடன் இவ்வளவு நேரம் தேடினேன்.
அதனால்தான் அன்னையின் தரிசனம் கிட்டவில்லை.
சீதா ராமர்களே! நீங்கள் அருள்புரிந்து எனக்குத் தேவியின் தரிசனத்தை அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்து
இந்த ஸ்லோகத்தைச் சொன்னார்:

“நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய நமோஸ்து தேவ்யை ஜனகாத்மஜாயை
நமோஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்யோ நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய:”
(இந்த ஸ்லோகத்தைச் சொன்னால், காணாமல் போன பொருள் உடனே
கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.)

சீதா ராமர்களிடம் அனுமன் பிரார்த்தித்தவாறே, அவர் கண்ணெதிரே அசோகவனம் தெரிந்தது.
அதன் உள்ளே நுழைந்தார். அங்குள்ள ஒரு சிம்சுபா மரத்தின் மேலே அமர்ந்து நாற்புறமும் பார்த்தார்.
அதே அசோக வனத்தில், அரக்கிகளால் சூழப்பட்டு, மெலிந்த நிலையில், அழுக்கு படிந்த ஆடையோடு
எழுந்தருளியிருந்த சீதா தேவியைத் தரிசித்தார். தனது காரியத்தில் வெற்றி அடைந்தார் அனுமன்.

“வீடினது அன்று அறன் யானும் வீகலேன்
தேடினன் கண்டனன் தேவீயே எனா
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன் உவகைத் தேன் உண்டான்”00என்று கொண்டாடத் தொடங்கினார்.
தன் முயற்சியால் சீதையைத் தேடுவதாக அனுமன் எண்ணிய வரையில் அவரால் சீதையைக் காண முடியவில்லை.
“சீதா ராமர்களே! உங்கள் அருளால் காட்டுங்கள்!” என்று அனுமன் பிரார்த்தித்தவாறே உடனே சீதை கிடைத்து விட்டாள்.
இதிலிருந்து நாம் அறியும் செய்தி என்னவென்றால், இறைவனை அடைவதற்கு மற்ற விஷயங்கள் எதுவுமே சாதனமாகாது.
இறைவனை அடைய இறைவனே சாதனம் ஆவான். அதாவது, அவனது அருளால் மட்டுமே அவனை அடைய முடியும்.
அவன் அருளைத் தவிர அவனை அடைய வேறு வழி இல்லை.

‘கரணம்’ என்றால் சாதனம் என்று பொருள்.
தன்னை அடையத் தானே சாதனமாக இருக்கும் திருமால் ‘கரணம்’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 380-வது திருநாமம்.
“கரணாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மேற்கொள்ளும் முயற்சிகளில்
பெருவெற்றி பெறும்படித் திருமால் அருள்புரிவார்.

————–

381. காரணாய நமஹ (Kaaranaaya namaha)

விபீஷணன் வந்து ராமனிடம் சரணாகதி செய்த போது, அவனை அங்கீகரிக்கும் முகமாக ராமன் சொன்ன ஸ்லோகம்:

“ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம”
இதன் பொருள்: “ஒரே ஒரு முறை சரணம் என்று சொல்லிக் கொண்டு ஒருவன் என்னை வந்து பணிந்து விட்டால்,
அனைத்து உயிர்களிடம் இருந்தும் அவனைக் காப்பாற்றி அருள வேண்டும் என்பதை எனது விரதமாக நான் கொண்டிருக்கிறேன்!”
இந்த ஸ்லோகமே ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் என்று அழைக்கப்படுகிறது.
“ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்று கீதையில் வருவது ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் ஆகும்.
இந்த ஸ்ரீ ராம சரம ஸ்லோகத்தைக் குறிப்பிட்டு நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் அருளிய பாசுரம்:

“முல்லைப் பிராட்டி! நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய்! உன் அடைக்கலம்!
கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே!”

‘குமரனார் சொல்’ என்று ராமனின் சரம ஸ்லோகத்தை இங்கே குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.
அடியேனின் குருவான டாக்டர். ஸ்ரீ .உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமிகள் எங்களுக்கு
நாச்சியார் திருமொழி விளக்கவுரையில் இப்பாசுரத்தை உபதேசித்தார்.
அப்போது ஒரு மாணவர் குருவான கருணாகராச்சாரியார் சுவாமியிடம் ஓர் ஐயத்தை விண்ணப்பித்தார்.
“குமரனார் சொல் என்று ராமனின் சரம ஸ்லோகத்தை ஆண்டாள் குறிப்பிடுவதாகச் சொல்கிறோம்.
ஆனால் ‘கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்’ என்று இருக்கிறதே! அதற்கென்ன பொருள்?” என்பதே அந்த மாணவரின் ஐயம்.

அதற்குக் குருநாதர், “கொல்லை அரக்கி என்பவள் சூர்ப்பணகை.
அவளது மூக்கை அரிந்த குமரனார் என்று ராமனைக் குறிப்பிடுகிறாள் ஆண்டாள்!” என்று பொருளுரைத்தார்.

உடனே மற்றொரு மாணவர், “சுவாமி! லட்சுமணன்தானே சூர்ப்பணகையின் காதையும் மூக்கையும் அறுத்தான்?
அப்படியானால் கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் லட்சுமணன் தானே?” என்று கேட்டார்.
வேறொரு மாணவரோ, “அப்படிப் பொருள் கொண்டால் பாடலின் மொத்த பொருள் ஒட்டாமல் போய்விடுமே!
‘குமரனார் சொல்’ என்று அந்தக் குமரனார் ஒரு சரம ஸ்லோகம் சொன்னதாக ஆண்டாள் பாடி இருக்கிறாள்.
லட்சுமணன் அப்படி எந்த சரம ஸ்லோகமும் சொன்னதாகத் தெரியவில்லையே! அதனால் குமரனார் என்பது ராமன்தான்!” என்றார்.

அடுத்த மாணவர், “இல்லை! இல்லை! ராமன் எப்போது சூர்ப்பணகையின் மூக்கை அறுத்தார்?” என்று கேட்டார்.

அப்போது கருணாகராச்சாரியார் சுவாமி, “வால்மீகி பகவானே ராமாயணத்தில் தெளிவாக லட்சுமணனை
‘ராமஸ்ய தக்ஷிணோ பாஹு:’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
‘லட்சுமணன் ராமனின் வலக் கரமாக விளங்குகிறான்’ என்பது இதன் பொருள்.
ஒருவரின் வலக்கரம் ஒரு காரியத்தைச் செய்தால் அதை அவரே செய்ததாகத் தானே நாம் சொல்வோம்?
ஒருவர் வலக்கையால் கவிதை எழுதினால், வலக்கை கவிதை எழுதியது என்றா சொல்வோம்?
அவரே எழுதியதாகத் தானே சொல்கிறோம்?
அதுபோல் ராமனின் வலக்கையான லட்சுமணன் செய்த செயலை ராமனே செய்ததாக ஆண்டாள் பாடியிருக்கிறாள்.
அதனால் தானோ என்னவோ, இன்றளவும் நெருங்கிய தொண்டர்களாக இருப்ப வரை,
‘தலைவரின் வலக்கை’ (Right Hand) என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது!” என்று விடையளித்தார்.

மேலும், “இது லட்சுமணன் ஒருவனுக்கு மட்டுமில்லை. நாம் ஒவ்வொருவருமே நாராயணனுக்கு உடலாக இருக்கிறோம்.
நாம் செயல் செய்வதற்குரிய கருவிகளையும், அதற்குத் தேவையான சக்தியையும் ஞானத்தையும் தந்து
நாம் செயல்படக் காரணமாக இருப்பவன் நாராயணனே என்பதை நாம் உணரவேண்டும்!
அதனால் தான் எல்லாம் அவன் செயல் எனச் சொல்கிறோம்!” என்று விளக்கினார்.

‘காரணம்’ என்றால் காரணமாக இருப்பவர் என்று பொருள்.
நாம் செய்யும் செயல்களுக்குத் தேவையான கருவிகள், சக்தி, அறிவு அனைத்தையும் தந்து,
நாம் செயல்படுவதற்குக் காரணமாக இருக்கும் திருமால் ‘காரணம்’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 381-வது திருநாமம்.
“காரணாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை நல்ல வழியில்
திருமால் வழிநடத்திச் சென்று நல்ல வெற்றிகளை அருள்வார்.

———–

——–

386. வ்யவஸாயாய நமஹ (Vyavasaayaaya namaha)

(திருநாமங்கள் 386 முதல் 390 வரை – துருவனுக்கு அருள்புரிந்த திருமாலின் பெருமைகள்)
உத்தானபாதன் என்ற அரசனுக்கு இரு மனைவிகள். மூத்தவள் சுநீதி, இளையவள் சுருசி.
சுநீதியின் மகன் துருவன், சுருசியின் மகன் உத்தமன்.
உத்தானபாதன் தனது இரண்டாவது மனைவியான சுருசியிடமும் அவளது மகனான உத்தமனிடமுமே அதிக அன்பு செலுத்தி வந்தான்.
ஒருநாள் தந்தையின் மடியில் அமர விரும்பி, துருவன் சென்றபோது, மாற்றாந்தாயான சுருசி அவனைத் தடுத்தாள்.
“நீ காட்டுக்குப் போய் தவம் புரிந்து என் மகனாக வந்து பிறந்தாலே ஒழிய
இவர் மடியில் அமர உனக்குத் தகுதி கிடையாது!” என்று சொல்லி விட்டாள்.

அழுதுகொண்டே தனது தாய் சுநீதியிடம் வந்தான் துருவன். நடந்தவற்றை அறிந்துகொண்ட சுநீதி, நிதானமாக,
“மகனே வருந்தாதே! சித்தி நல்ல விஷயம் தான் கூறி இருக்கிறாள். நீ திருமாலைக் குறித்துத் தவம் புரி.
அதன்பின் இந்தத் தந்தையின் மடி என்ன? அதைவிடப் பெரிய ஸ்தானத்தையே உனக்குத் திருமால் அருள்வார்!” என்றாள்.
துருவனும் தவம்புரிவதற்காக வனம் சென்றான். நாரதரின் திருவருளால் திருமாலைத் தியானிக்கும் முறையையும்
அவரைக் குறித்த மந்திரத்தையும் அறிந்து கொண்டான். அதன்பின் கடுந்தவம்புரிந்து அதன் பலனாகத் திருமாலைத் தரிசித்தான் துருவன்.

அப்போது துருவனிடம் திருமால், “குழந்தாய்! உன் பக்திக்குப் பரிசாக முக்தி அளிக்க உள்ளேன்.
ஆனால் அதற்கு முன்பு நீ உனது நகரத்துக்குத் திரும்பச் சென்று முடிசூட்டிக் கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும்.
அதன்பின் வானில் உயர்ந்து நிற்கும் ஒரு பதவியை அடைவாய். உன்னை உலகமே அண்ணாந்து பார்த்துக் கொண்டாடும்.
அதன்பின் என்னை வந்தடைவாயாக!” என்றார்.

“அது என்ன பதவி?” என்று கேட்டான் துருவன். அப்போது திருமால், துருவனுக்குத் தான் வழங்க உள்ள பதவியின் சீர்மை பற்றி விளக்கினார்.
ஸ்ரீமத் பாகவத புராணத்தில் திருமால் துருவனிடம் சொல்வதாக வரும் ஸ்லோகங்கள் இவை:

“நான்யை: அதிஷ்டிதம் பத்ர யத் ப்ராஜிஷ்ணு: த்ருவ க்ஷிதி:
யத்ர க்ருஹ ருக்ஷ தாராணாம் ஜ்யோதிஷாம் சக்ரம் ஆஹிதம்”
“‘துருவ’ என்றால் நிலையானது என்று பொருள். நிலையான (துருவ) பதவியை உனக்கு அளிக்க உள்ளேன்.
இதுவரை யாரும் அந்தப் பதவியை அடைந்ததில்லை. நவகிரகங்கள், நட்சத்திரங்கள், கோள்கள்
அதனுடன் சேர்த்து உறுதியாகக் கட்டப் பட்டுள்ளன. நானே அந்த துருவப் பதவியில் ஆதார மையமாக இருந்து
கிரகங்கள், நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தையும் தாங்கி வருகிறேன். இப்போது அந்த ஸ்தானத்தை எனது பக்தனான உனக்கு அருள்கிறேன்.”

“மேட்யாம் கோ சக்ரவத் ஸ்தாஸ்னு: பரஸ்தாத் கல்ப வாஸினாம்
தர்மோக்னி: கச்யப: சுக்ரோ முனயோயே வனௌகஸ:
சரந்தி தக்ஷிணீ க்ருத்ய ப்ரமந்தோ யத் ஸதாரகா:”
“தூணில் கட்டப்பட்ட மாடுகளைப் போல், தர்ம தேவதையும், நட்சத்திரங்களும், அக்னி தேவனும்,
ஏழு பெரும் முனிவர்களும் அந்த துருவ ஸ்தானத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அத்தகைய ஆதார மையமான பதவியில் நீ இனி வீற்றிருப்பாயாக.”

திருமால் அருளியபடி நகருக்குத் திரும்பிய துருவன் முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் பூமியை ஆண்டு விட்டு,
அதன்பின் துருவ பதவியை அலங்கரித்து, இன்றளவும் உலகமே வியந்து அண்ணாந்து பார்க்கும் படி
ஓங்கி உயர்ந்து விளங்கிக்கொண்டிருக்கிறான். அனைத்துக் கிரகங்களும் நட்சத்திரங்களும் கோள்களும்
அந்த துருவ ஸ்தானத்தையே தமக்கு ஆதார மையமாகக் கொண்டு, அதனோடு கட்டப்பட்டு இயங்கி வருகின்றன.

இத்தகைய ஸ்தானத்தைத் தனது அருளால் துருவனுக்குத் திருமால் அருளினார்.
எனினும் இயற்கையில் அந்த துருவ ஸ்தானத்தில் துருவ மூர்த்தியாகத் திருமாலே இருக்கிறார்.
அவரிடம் தான் மொத்தப் பிரபஞ்சமும் கட்டப்பட்டு அவரது கட்டுப்பாட்டிலேயே இயங்கிவருகிறது.
அவரின் கருணையால் துருவன் என்ற சிறுவன் அப்பதவியைப் பெற்றான்.
ஆக, மொத்தப் பிரபஞ்சமும் தன்னிடம் கட்டப்பட்டிருக்கப் பெற்ற ஆதார மையமான திருமால் ‘வ்யவஸாய:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘வ்யவஸாய:’ என்றால் ஆதார மையம் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 386-வது திருநாமம்.
“வ்யவஸாயாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமாலே ஆதார மையமாக இருந்து
அவர்களை நல்வழியில் வழிநடத்திச் செல்வார்.

—————

387. வ்யவஸ்தானாய நமஹ (Vyavasthaanaaya namaha)
அசோக வனத்தில் அரக்கிகள் மத்தியில் ராமனைப் பிரிந்து துயருற்று இருக்கும் சீதையைக் கண்ட அநுமனின் நெஞ்சில்
அலைமோதிய எண்ணங்களை வால்மீகி பகவான் சுந்தர காண்டத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார்.

“மான்யா குருவிநீதஸ்ய லக்ஷ்மணஸ்ய குருப்ரியா
யதி ஸீதாபி துக்கார்த்தா காலோ ஹி துரதிக்ரம:”

“அன்னை மகாலட்சுமியின் வடிவமான இந்த சீதா தேவியே இப்படித் துயரப்படுகிறாள் என்றால்,
காலம் யாராலும் வெல்ல முடியாதது என்பது மெய்யாகிவிட்டதே. உலகையே காக்கும் ராமன், லக்ஷ்மணன் ஆகிய இருவரும்
உடன் இருந்த போதும், இவள் அபகரிக்கப்பட்டிருக்கிறாள் என்றால், நிச்சயமாக தெய்வத்தை விடக் காலத்துக்கு
வலிமை அதிகமாக இருக்குமோ!” என்று கருதி இவ்வாறு கூறுகிறார் அனுமன்.
(மனிதர்களுக்குத் தொடர்ச்சியான கஷ்டங்கள் வந்தால், ‘நேரம் சரியில்லை’, ‘இது நமக்குக் கஷ்ட காலம்’ என்று
காலத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லிப் புலம்புவதை நாம் பார்த்திருப்போம்.)

ஒன்பது வித இலக்கண நூல்களைக் கசடறக் கற்ற மகா பண்டிதரான அநுமன் தான் கூறிய இவ்வார்த்தையைப் பற்றி
மீண்டும் யோசித்துப் பார்த்தார். “திவ்ய தம்பதியான திருமாலும் திருமகளும் கூடக் காலத்தின் வசத்துக்கு உட்பட்டவர்கள்
என்று நாம் கருதி விட்டோமே! ஆனால் வேதாந்தங்களும் வேதாந்திகளும் தெளிவாக, இறைவனும் இறைவியும் காலத்துக்கு அப்பாற்
பட்டவர்கள் என்று கூறுகிறார்களே!” என்று யோசித்தார் அநுமன்.

மேலும், “வெறும் கால வேறுபாட்டாலேயே துன்பமோ இன்பமோ வந்துவிடும் என்றால், நாம் செய்யும் நற்செயல்களுக்குப்
பயனே இல்லாமல் போய்விடும். நமது முன்வினைகளுக்கு (பாப – புண்ணியங்களுக்கு) ஏற்றபடி தான்
காலம் துன்பமோ இன்பமோ ஏற்படுத்துமே ஒழிய, காலம் தானாகவே அவற்றை உண்டாக்காது!” என்றும் உணர்ந்தார் அநுமன்.
“முன் வினைகளால் துன்பம் நேர்கிறது என்றாலும், திருமாலும் திருமகளும் முன்வினைகளுக்கு (பாப புண்ணியங்களுக்கு)
அப்பாற்பட்டவர்களாகவே உள்ளார்கள். அப்படியிருக்க, சீதைக்கோ ராமனுக்கோ எப்படித் துயரம் ஏற்படும்?
உண்மையில் அவர்களுக்குத் துக்கம் என்பதே கிடையாது. உலகைக் காக்க மனித வடிவம் எடுத்து வரும்போது,
மற்றவர்களுக்கு அவர்கள் மனிதர்கள் அல்லர் என்ற எண்ணம் தோன்றாமல் இருப்பதற்காக,
துன்பத்தால் நலிவது போலவும், இன்பத்தால் மகிழ்வது போலவும் நாடக நடிகர்கள் போல் அபிநயம் செய்கிறார்கள்.

அந்த அபிநயத்தால் நானும் மயங்கி விட்டேன். அதனால் தான் சீதையின் துன்பத்தைக் கண்டு அதைக்
காலத்தின் கோலம் என்று கூறி விட்டேன். திருமாலும் திருமகளும் காலத்துக்கோ இன்ப-துன்பங்களுக்கோ உட்பட்டவர்கள் அல்லர்.
காலத்தைத் தங்கள் வசத்தில் அவர்கள் கொண்டிருக்கிறார்கள்!” என்று சமாதானம் சொல்லிக் கொண்டு தெளிந்தாராம்
அநுமன்.

எனவே அவதார நிலையில் காலத்துக்கு வசப்பட்டவன் போல் இறைவன் தன்னைக் காட்டிக் கொள்வது வெறும் நடிப்பேயாகும்.
உலகைப் படைத்தல், அழித்தல் உள்ளிட்ட செயல்களைக் குறிப்பிட்ட காலத்தின் அடிப்படையில் இறைவன் செய்வதால்,
அந்த விஷயத்தில் காலத்துக்குக் கட்டுப்படுகிறாரா இறைவன் என்ற கேள்வி எழலாம். இல்லை! நிச்சயமாக இல்லை!
உலகைப் படைக்க ஒரு காலத்தை எதிர்பார்ப்பதும், அழிக்க ஒரு காலத்தை எதிர்பார்ப்பதும் கூட
ஒரு விளையாட்டாகவே இறைவன் செய்கிறானே ஒழிய, இறைவன் என்றுமே காலத்தின் வசத்தில் இருப்பவன் அல்லன்.
காலம் தான் அவனது கட்டுப்பாட்டில் உள்ளது.

“யதாயத்தம் ஜகச்சக்ரம் காலசக்ரம் ச சாச்வதம்
பாது வ: தத் பரம் சக்ரம் சக்ர ரூபஸ்ய சக்ரிண:”

என்று தேசிகன் கூறுவதற்கேற்ப, காலச் சக்கரத்தைத் தனது கட்டுப்பாட்டில் திருமால் வைத்திருக்கிறார்.
நிமிடம், முகூர்த்தம், பகல், இரவு, வாரம், பட்சம், மாதம், ருது, அயனம், வருடம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கொண்ட
காலத் தத்துவத்துக்கு ஆதாரமாக இருப்பவர் திருமால்.காலத்துக்கு அப்பாற்பட்டவரான திருமாலின் அருளைப் பெற்றதால் தான்
துருவனின் புகழ் காலம் கடந்து இன்றளவும் உலகில் நிலைபெற்றிருக்கிறது.
துருவ நட்சத்திரமாக அவன் காலாகாலத்துக்கும் ஒளி வீசிக்கொண்டிருக்கிறான்.

காலத்துக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பதால், திருமால் ‘வ்யவஸ்தான:’ என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 387-வது திருநாமம்.
“வ்யவஸ்தானாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எந்நாளும் பொன்நாளாய் அமையத் திருமால் அருள்புரிவார்.

—————-

388. ஸம்ஸ்தானாய நமஹ (Samsthaanaaya namaha)

அடியேனுடைய குருவான டாக்டர் ஸ்ரீ.உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமிகள் மதுரையில் பிரபல பொறியியல் கல்லூரியில்
இயந்திரப் பொறியியல் பயின்று வந்த சமயத்தில், அவரது நண்பர் ஒருவர் அதே கல்லூரியில் கட்டடப் பொறியியல் பயின்று வந்தார்.
அவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் இது. தனியுரிமை கருதி அவருக்குத் திரு.ராமு என்று நாம் பெயர் வைத்துக் கொள்வோம்.
ராமு மிகச்சிறந்த அறிவாளி, உழைப்பாளி. 1960களில் பொறியியல் கல்லூரியில் இடம்பெறுவது என்பது சாமானியமான விஷயமே அல்ல.
ஆனால் ராமுவுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. “எனக்கு அறிவு இருக்கிறது, நான் உழைக்கிறேன், எனக்கு நல்லது நடக்கிறது.

இதற்குமேல் கடவுள் என்ற மூன்றாவது நபர் எதற்கு?” என்று அடிக்கடி அவர் கேட்பாராம்.
ஒருமுறை கருணாகராச்சாரியாரிடம் ராமு, “எத்தனையோ பேர் ஆபத்தில் தவிக்கிறார்கள்.
உங்கள் கடவுள் ஏன் வந்து காப்பதில்லை?” என்று கேட்டார்.

அதற்குக் கருணாகராச்சாரியார்,
“இறைவனின் நாமத்தை வாயாரச் சொல்லி அழைத்தால் நிச்சயம் இறைவன் வந்து காப்பான்.
ஒருவன் மரத்தில் இருந்து விழும் நிலையில் தொங்கிக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த திருமாலும் திருமகளும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
அவன் அம்மா என்று கத்திக்கொண்டு விழுந்தால் மகாலட்சுமி காக்க வேண்டும் என்றும்,
அப்பா என்று கத்திக் கொண்டு விழுந்தால் திருமால் காக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள்.
ஆனால் அவனோ ஐயோ என்று சொல்லிக் கொண்டு விழுந்தான். இப்படி நாம் இறைவனை அழைக்காமல் இருந்து விட்டு,
இறைவனைக் குறை சொல்லலாமா?” என்று கேட்டார்.

ஆனாலும் ராமு இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “உனக்கும் எனக்கும் ஆபத்து வரும் போது
இறைவன் காப்பாற்றுகிறாரா என்று பார்ப்போம்!” என்று சொல்லி விட்டார்.

ஆண்டுகள் பல கடந்தன. ஒருநாள் சென்னை ரயில் நிலையத்தில் கருணாகராச்சாரியார் சுவாமிகள் ராமுவைச் சந்திக்க நேர்ந்தது.
ராமு தலைக்கு மொட்டை அடித்திருந்தார். கருணாகராச்சாரியார் ராமுவிடம் சென்று விசாரித்த போது,
“கருணாகரா! நீ சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் எனக்குப் பின்னால் தான் புரிந்தது. நான் இப்போது மாறிவிட்டேன்!” என்றார்.
“என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார் கருணாகராச்சாரியார். அப்போது ராமு இடைப்பட்ட காலத்தில் தனக்கு நிகழ்ந்தவற்றைச் சொன்னார்.

“கருணாகரா! நான் கட்டடப் பொறியியல் கற்றுத் தேர்ந்த பின், பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டி வந்தேன்.
அவற்றுள் ஒரு கட்டடத்தின் பணிகள் நடைபெற்று வந்த வேளையில், மூன்றாவது மாடிக்கு மேல் நின்றுகொண்டு,
கட்டட மேற்பார்வையாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேசிக் கொண்டே பின்நோக்கிச் சில அடிகள் எடுத்து வைத்தேன்.
தவறி விழுந்து விட்டேன். அந்த ஒரு நொடியில் என் உயிரே போய் விட்டது என எண்ணிய நான்,
‘மதுரா!’ என்று உரத்த குரலில் அழைத்தேன். என் மனைவியின் பெயர் மதுரா. அதை எண்ணித் தான் அழைத்தேன்.

ஆனால் கருணாகரா! அப்போது மணல் லாரி ஒன்று அவ்வழியே வந்தது. சரியாக அந்த லாரியில் உள்ள மணல் மேல் விழுந்தேன்.
ஒரு காயம் கூட இல்லாமல் தப்பித்தேன். இதில் வியப்பு என்னவென்றால், அந்த லாரியின் முகப்பில் ‘மதுரா லாரி சர்வீஸ்’ என்று எழுதப்பட்டிருந்தது.
அந்த லாரி ஓட்டுநர் வட இந்தியர். அவரது பெயர் என்ன என்று பின்னர் விசாரித்த போது, ‘மதுராநாத்’ என்று சொன்னார்.

எங்கள் மதுரையில் கோவில் கொண்டுள்ள மதுரவல்லித் தாயாரான மகாலட்சுமியும்,
அந்த மதுரவல்லிக்கு நாதனான கூடல் அழகருமே வந்து காப்பாற்றினார்களோ என்று தான் எண்ணத் தோன்றியது.
ஐயோ என்று கத்தியபடி மரத்தில் இருந்து விழுந்தவன் பற்றி நீ சொன்ன கதை தான் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

நாம் எத்தனை தான் முயற்சிகள் எடுத்தாலும், எவ்வளவுதான் கவனமாகச் செயல்பட்டாலும், நமக்கும் அப்பாற்பட்டு
உலகில் பல விஷயங்கள் உள்ளன. அவை அனைத்தும் கைகூடி முழு வெற்றி பெறுவதற்கு
இறையருள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் தேவை என உணர்ந்தேன்.
அதனால்தான் நான் அடுத்து கட்டவுள்ள கட்டிடத்தின் பணிகள் நன்றாக நிறைவடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு
திருப்பதிக்குச் சென்று பெருமாளைத் தரிசித்து விட்டு மதுரைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன்!” என்று சொன்னார் ராமு.

கருணாகராச்சாரியார், “அடியேன் அப்போது சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன். அழைத்தால் நிச்சயம் வருவான் இறைவன்.
மேலும், எல்லோரும் இறைவனிடம் வந்து தான் தீர வேண்டும். அவன் தான் அனைவருக்கும் முடிவான புகலிடம்.
எந்த முயற்சிகளுமே செய்யாமல் சோம்பேறியாக இருக்க வேண்டும் என்று அடியேன் சொல்லவில்லை.
ஆனால், நம் முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் கைகூடி வருவதற்கு இறையருள் தேவை.
அலுவலகத்தில் எழுத்தரிடம் காரியம் ஆகவில்லை என்றால் உயர் அதிகாரியிடம் போகிறோம்.
அவரிடமும் ஆகவில்லை என்றால் மேலாளரிடம் போகிறோம். யாரிடமும் ஆகவில்லை என்றால் அனைவருக்கும்
மேல் அதிகாரியாக இருக்கின்ற இறைவனின் உதவியையே நாடியாக வேண்டும். அவன் அன்றி ஓரணுவும் அசையாது!” என்றார்.

மேலும், “பொறியாளர்கள் கூட்டம் போட்டால், அதற்குப் பொறியாளர்கள் தான் வருவார்கள்.
மருத்துவர்கள் கூட்டம் போட்டால், அதற்கு மருத்துவர்கள்தான் வருவார்கள்.
வக்கீல்கள் கூட்டம் போட்டால், அதற்கு வக்கீல்கள் தான் வருவார்கள்.
ஆனால் இறைவனைப் பற்றிப் பேசும் போது, அதைக் கேட்க இவர்கள் எல்லோரும் வருவார்கள்.
ஏனெனில் அவனே அனைவருக்கும் இறுதிப் புகலிடம்!” என்றும் கூறினார் கருணாகராச்சாரியார்.

சிறுவனான துருவன், தனக்கு வேறு புகலே இல்லாத நிலையில் திருமாலே தனக்குப் புகல் என உணர்ந்து
அவர் திருவடிகளைப் பற்றினான். இன்றளவும் துருவ பதவியில் நிலைத்திருக்கிறான் அல்லவா?
இப்படி எல்லோருக்கும் இறுதிப் புகலிடமாக இருப்பதால், திருமால் “ஸம்ஸ்தான:” என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 388-வது திருநாமம்.
நாமும் தினமும் “ஸம்ஸ்தானாய நம:” என்று சொல்லி வந்தால், திருமால் நமக்கு எல்லா விதங்களிலும் அடைக்கலம் தந்தருள்வார்.

—————-

389. ஸ்தானதாய நமஹ (Sthaanadhaaya namaha)

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியையும், அதன் அனைத்து விளக்கவுரைகளையும்
மனப்பாடமாக அறிந்து வைத்திருந்தார் மணவாள மாமுனிகள்.
திருவரங்கத்தில் சிறப்பான முறையில் அதைக் காலட்சேபமாகச் சீடர்களுக்கு உபதேசமும் செய்து வந்தார் அவர்.
‘விசதவாக் சிகாமணி’ என்று போற்றப்பட்டார்.உறவினர்கள் வீட்டில் நடக்கும் ஜனன மரணச் செய்திகளால் ஏற்படும் தீட்டு
அவரது காலட்சேபங்களுக்கு இடையூறாக இருந்ததால், அனைத்து உறவுகளையும் துறந்து துறவறம் மேற்கொண்ட மகான் அவர்.
திருவாய்மொழியை விளக்கும் கைங்கரியம் தொடர வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அனைத்தையும்
துறந்த துறவியாகிறார் என்றால் ஆழ்வார்களின் அமுதத் தமிழில் அவருக்கு எவ்வளவு ஈடுபாடு இருந்திருக்க வேண்டும்?

இந்நிலையில், அவரது வாக்கு சாதுரியத்தையும், திருவாய்மொழியில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஞானத்தையும் கண்டு வியந்த அரங்கன்,
மணவாள மாமுனிகளின் பெருமையை உலகுக்கு நன்றாக உணர்த்த வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார்.அதனால் அரங்கன்,
“நாளை முதல் பெரிய திருமண்டபத்தில் நான் கேட்டு மகிழும்படி மணவாள மாமுனிகள் வந்து திருவாய்மொழியின்
விளக்கவுரையான ஈடு முப்பத்தாறாயிரப்படி என்னும் நூலைக் காலட்சேபமாகக் கூற வேண்டும்!” என்று நியமித்து அருளினார்.

திருமாலின் ஆணையைச் சிரம் மேல் கொண்டு ஏற்றார் மணவாள மாமுனிகள்.
தனது அனைத்து உற்சவங்களையும் ஒத்தி வைத்தார் அரங்கன். தன்னுடைய ஆதிசேஷ சிம்மாசனத்தை மணவாள மாமுனிகளுக்கு அளித்தார்.
ஆசனத்தின் மேல் மாமுனிகளை அமர்த்தி, அதற்குக் கீழே சீடனாக அரங்கன் நின்று கொண்டார்.
ஒரு வருட காலத்துக்கு இப்படி மணவாள மாமுனிகள் திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களுக்கான விளக்கவுரையை முழுமையாக வழங்க,
“இது கங்கை வெள்ளமோ? கங்கையில் புனிதமாய காவிரி வெள்ளமோ?” என்று வியந்தபடி அடியார்கள் அதைக் கேட்க,
அரங்கனும் ஸ்ரீதேவி பூதேவியோடும், கருடன், ஆதிசேஷன், விஷ்வக்சேனர் உள்ளிட்ட பரிவாரங்களோடும் ஆனந்தமாக அதை அனுபவித்து அருளினார்.

ஆனி மாதம் மூல நட்சத்திரத்தன்று விளக்கவுரையை மாமுனிகள் நிறைவு செய்தார்.
அப்போது சிந்தித்த அரங்கன், “ராமனாகவும் கண்ணனாகவும் நான் அவதாரம் செய்தபோது கூட
வசிஷ்டர், சாந்தீபனி போன்ற குருமார்கள் கிடைத்தார்கள். ஆனால் அந்த முனிவர்கள் யாருக்குமே
இந்த மணவாள மாமுனிகளுக்கு இருக்கும் பெருமை இல்லை.
அதனால் இவருக்கு மிக உயர்ந்த ஒரு ஸ்தானத்தை வழங்க வேண்டும்!” என்று கருதினார்.

அதனால் அரங்கநாயகம் என்று பெயர் கொண்ட ஐந்து வயது அர்ச்சகச் சிறுவனாக அரங்கனே வடிவம் பூண்டு அவ்விடத்துக்கு வந்தார்.
மாமுனிகள் முன்னே அச்சிறுவன் கைகூப்பி நின்று,
“ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம்”
என்ற ஸ்லோகத்தை விண்ணப்பித்தார்.

அதுவே மாமுனிகளின் தனியனாக (வணக்கப் பாடலாக) ஆனது.இன்றளவும் மாமுனிகள் அரங்கனின் குரு என்றே போற்றப்படுகிறார்.
இன்றளவும் கோவில்களில் மணவாள மாமுனிகள் அரங்கன் அவருக்கு அளித்த ஆதிசேஷ சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
ஆக, தமிழ் வேதத்துக்குத் தொண்டாற்றிய மாமுனிகளுக்கு இத்தகைய உயர்ந்த ஸ்தானத்தை அருளினார் அரங்கன்.
அவ்வாறே இளம் வயதில் கடுந்தவம் புரிந்த துருவனுக்குத் துருவப் பதவி என்ற மிக உயர்ந்த ஸ்தானத்தை அருளினார் திருமால்.
அவரது திருவடிகளில் யார் சரணாகதி செய்தாலும், அவர்களுக்கு வைகுண்டப் பதவி என்ற உயர்ந்த ஸ்தானத்தையே அருளுகிறார்.

இதை,
“சரணம் ஆகும் தனதாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்”
என்று பாடுகிறார் நம்மாழ்வார்.

‘த:’ என்றால் கொடுப்பவர். ‘ஸ்தான-த:’ என்றால் ஸ்தானத்தைக் கொடுப்பவர்.
தன் அடியார்களுக்கு உயர்ந்த ஸ்தானங்களை அருளுவதால், திருமால் ‘ஸ்தானத:’என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 389வது திருநாமம்.
“ஸ்தானதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கும் உயர்ந்த ஸ்தானத்தைத் திருமால் அருள்வார்.

————–

390. த்ருவாய நமஹ: (Dhruvaaya namaha)

(திருநாமங்கள் 386 முதல் 390 வரை – துருவனுக்கு அருள்புரிந்த திருமாலின் பெருமைகள்)
ஓர் ஊரில் ஒரு வேதியர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரே மகன். அவன் அனைத்து நற்குணங்களும் நிரம்பப் பெற்றவனாகவும்,
திருமாலிடம் ஆழ்ந்த பக்தி பூண்டவனாகவும் திகழ்ந்தான். தன் தாய் தந்தையர்களுக்கும் சிறந்த முறையில் பணிவிடைகள் செய்து வந்தான்.
தனது கடமைகளையும் சிறப்பாக ஆற்றிவந்தான்.அவனுக்கு வாலிப வயது வந்த சமயம் அரச குமாரனோடு அவனுக்கு நட்பு ஏற்பட்டது.
அந்த அரச குமாரன் மிக்க அழகோடும் கட்டமைந்த உடலோடும் திகழ்ந்தான்.
அரசர்களுக்குரிய போகங்களை எல்லாம் நன்றாக அனுபவித்து வந்தான்.

அந்த அரச குமாரனின் செல்வங்களை எல்லாம் வேதியர் மகன் பார்த்தான்.
“அடுத்த பிறவியில் நாமும் ஓர் அரச குமாரனாகப் பிறந்தால், நமக்கும் இத்தகைய செல்வங்களை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்குமே!”
என்று நினைத்துத் திருமாலை வழிபட்டான்.அவன்தான் மறுபிறவியில் உத்தானபாதன் என்ற மன்னனின் மகனான துருவனாக வந்து பிறந்தான்.
இவ் வரலாறு விஷ்ணு புராணம் முதல் அம்சம் பன்னிரண்டாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அதனால் தான் துருவன் திருமாலைக் குறித்துத் தவம்புரிந்தபோது, அவனுக்குக் காட்சி தந்த திருமால் நேரடியாக
அவனுக்குத் துருவ பதவியோ முக்தியோ அளிக்காமல், முதலில் நகரத்துக்குத் திரும்பிச் சென்று
அரண்மனையில் வாழ்ந்து ஆட்சி செய்யும்படி நியமித்தார். முன்பிறவியில் அவன் விரும்பிய ராஜ போக வாழ்க்கையை முதலில் அவனுக்கு அருளிவிட்டார் திருமால்.முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் சீரரசு ஆண்டு செங்கோல் செலுத்திய துருவன்,
பின்னர் துருவ பதவியை அடைந்து அதன்பின் வைகுண்டமும் பெற்றான் என்கிறது பாகவத புராணம்.

பூமியை ஆட்சி செய்துவிட்டு, துருவ பதவிக்குப் புறப்படும் வேளையில் தனது மகனுக்கு முடிசூட்டி விட்டு,
பத்ரிநாத்துக்குச் சென்றான் துருவன். அங்கே புனித நீரில் நீராடி தியானத்தில் ஆழ்ந்தான்.
அப்போது ஆகாயத்தில் இருந்து ஒரு விமானம் கீழே இறங்கி வந்தது. நந்தன், சுனந்தன் என்ற இரண்டு விஷ்ணு தூதர்கள் வந்தார்கள்.
“மிக உயர்ந்த துருவ பதவிக்கு உங்களை அழைத்துச் செல்வதற்காக நாங்கள் வந்திருக்கிறோம்!” என்று
அவர்கள் துருவனை அடிபணிந்து கூறினார்கள். விமானத்தில் துருவன் ஏறப் போன நேரத்தில், யமன் எதிரே வந்து நின்று,
தன் தலையில் கால் வைத்து விமானத்தில் ஏறுமாறு கேட்டுக் கொண்டார்.
அவ்வாறே யமன் தலையில் கால் வைத்து விமானத்தில் ஏறி அமர்ந்தான் துருவன்.

விமானம் மேல்நோக்கிப் புறப்பட்டது. துருவன் பயணிக்கும் விமானத்துக்கு முன்பு மற்றொரு விமானம் மேல்நோக்கிப் பறந்து
கொண்டிருப்பதை நந்தனும் சுனந்தனும் துருவனுக்குக் காட்டினார்கள்.
“அதோ பாருங்கள்! அந்த விமானத்தில் உங்கள் தாய் சுநீதி துருவ பதவிக்குச் சென்று கொண்டிருக்கிறாள்!” என்றார்கள்.
துருவன் இவ்வளவு தூரம் திருமாலைக் குறித்துத் தவம்புரிந்தமைக்கு அவனது தாய் கொடுத்த ஊக்கமே காரணம் அல்லவா?
பக்திபுரிபவர்களை விட பக்தி புரிவதற்கு ஊக்குவிப்பவர்கள் இறையருளை விரைவில் பெற்றுவிடுவார் களாம்!
அதற்குச் சான்றாக, தவம் புரிந்த துருவனுக்கு முன், அவனைத் தவம் புரியத் தூண்டிய தாய் சுநீதி துருவ பதவிக்கு முதலில் சென்றாள்.

“இதி உத்தானபத: புத்ரோ த்ருவ:க்ருஷ்ணபராயண:
அபூத் த்ரயாணாம் லோகானாம் சூடாமணி: இவாமல:”–என்று பாகவத புராணத்தில் சுகமுனிவர் தெரிவிக்கிறார்.
மூவுலகங்களின் தலைக்கு மேல் உள்ள சிரோமணி போல் அந்த துருவ பதவியைத் துருவன் அலங்கரித்தான் என்பது இதன் பொருள்.
‘த்ருவ:’ என்றால் நிலையானது என்று பொருள். நிலையான பதவியைத் துருவனுக்கு அளித்த திருமால்,
எப்போதுமே நிலையானவராக, உலகியல் மாறுதல்களுக்கு அப்பாற்பட்டவராகத் திகழ்கிறார்.
மேலும், உலகெங்கும் வியாபித்து அனைத்து உலகங்களும் நிலைநிற்கும்படிச் செய்கிறார்.
அதனால் திருமாலுக்கு ‘த்ருவ:’ என்று திருநாமம்.
துருவராக நிலைமாறாமல் இருப்பவரால் தானே துருவ பதவியை அருள முடியும்?

‘த்ருவ:’ என்றால் நிலையாக நிற்பவர் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 390-வது திருநாமம்.
“த்ருவாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்கள் மிக உயர்ந்த பதவியில் நிலைத்து நிற்கும்படித் திருமால் அருள்புரிவார்.

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: