ஸ்ரீமத்வாச்சாரியார் / ஸ்ரீ ஆதி சங்கரர்/ஸ்ரீ ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஸ்ரீ மான் கந்தர்வன்

ஸ்ரீமத்வாச்சாரியார்

பிறப்பு 1238
பாஜகா, துளு நாடு, உடுப்பி, இந்தியா–
இறப்பு 1317
உடுப்பி
இயற்பெயர் வாசுதேவர்
தலைப்புகள்/விருதுகள் பூர்ணப் பிரஞ்ஞர் அல்லது ஆனந்த தீர்த்தர்
நிறுவனர் உடுப்பி கிருஷ்ண மடம்
குரு அச்சுத பிரகாச தீர்த்தர்
தத்துவம் துவைதம்
மத்துவர் அல்லது மத்வர் என்ற மத்வாச்சாரியார் (Madhvacharya, 1238 – 1317) இந்தியாவின் மூன்று மத தத்துவ போதகர்களில் ஒருவர்.
மற்ற இருவர் அத்வைதத்தை நிலைநாட்டிய ஆதி சங்கரரும் விசிஷ்டாத்வைதத்தை பரப்பிய இராமானுஜரும் ஆவர்.
இம்மூவருடைய தத்துவநூல்களின் அடிப்படையில் பல்வேறு மதக்கோட்பாடுகள் இந்து சமயத்தவர் சிலரிடையே
இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்வர், துவைதம் என்ற சித்தாந்த தத்துவ இயலை நிலைநாட்டினார்.

வாழ்க்கை
மத்வரின் இயற்பெயர், வாசுதேவர். கர்னாடகா மாகாணத்தில் உடுப்பிக்கருகில் உள்ள பாஜகசேத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தார்.
8வது வயதிலேயே துறவியானார். துறவியானதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர் பூர்ணப் பிரக்ஞர்.
மெத்தப்படித்த துறவி என்பது மட்டும் அல்ல, அவர் உடல்பலத்திலும், மந்திர சக்தியிலும், சூட்சும செய்கைகளிலும்
கைதேர்ந்தவர் எனக் கருதப்படுகிறார்.
அநுமன், பீமன் இவர்களுக்கு பிறகு வாயு தேவனின் அவதாரமாக உதித்தவராக மத்வர் கருதப்படுகிறார்.
அதனால் அவருக்கு முக்கியப் பிராணன் என்றொரு பெயரும் உண்டு.
அவரது 37 நூல்களில் இவர் தன்னை ஆனந்ததீர்த்தர் என்றே அறியப்படுகிறார்.

நூல்கள்
மத்வர் முதலில் அத்வைத வேதாந்தம் படித்து அதில் மகிழ்ச்சி அடையாமல் தானே இந்துமத நூல்களுக்கு உரைகள் சொல்லலானார்.
தன்னுடைய முந்தைய பிறவிகளில் கற்றறிந்ததையே சொல்வதாகக் கூறினார்.
அவருடைய சொல்வன்மையும், பேச்சுத்திறனும், கருத்துக்களின் சுதந்திரமும் அவரை மாணவர் என்ற நிலையிலிருந்து
எங்கு படித்தாரோ அதே மடத்தின் தலைவராகும் அளவுக்கு உயர்த்தியது.
அவருடைய தத்துவக்கொள்கை ஏட்டுப்படிப்பை பின்னுக்குத்தள்ளி அன்றாட வாழ்க்கையை அடித்தளமாகக்கொண்டது.

அதையொட்டி பிரம்ம சூத்திரம், சில உபநிடதங்கள், பகவத் கீதை முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார்.
இவைகளை எழுதுவதற்கு முன்னால் 21 மாற்று சம்பிரதாயங்களின் நூல்களைக் கற்றறிந்தார் என்பர்.
ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து 1600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார்.
இவர்தான் முதன்முதலில் பாகவதத்தை தத்துவ நூல்களில் மேற்கோள்களாக எடுத்தாண்டார் என்று வழக்கிலிருக்கிறது.
இன்னும் மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் என்றொரு நூல், இவருடையது. 32 அத்தியாயங்கள் கொண்டது,
மகாபாரதத்தின் உட்கருத்துகளையெல்லாம் எடுத்துச்சொல்வது.
ருக்வேதத்திலிருந்து 32 நூற்பக்கங்களுக்கு பொருளுரை எழுதியுள்ளார்.
வேத மந்திரங்களுக்கு உரை எழுதுவதில், சாயனரிடமிருந்து மாறுபட்டு,
ஒரே கடவுள், பக்தியொன்றுதான் அவருக்கு நாம் செய்யவேண்டியது,
இதுதான் வேதங்களின் பொருள் என்று பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள், புராணங்கள் இவற்றிலிருந்தும்
மேற்கோள்களைக் கையாண்டு, துவைத சித்தாந்தம் செய்திருக்கிறார்.

துவைத வேதாந்தம்
துவைதம் என்றால் இரண்டு. முக்கியமாக பிரம்மத்தையும் ஆன்மாவையும் இரண்டு வேறு வேறு தத்துவங்களாகப்
பிரித்துச் சொல்வதால் மத்வருடைய தத்துவ கூற்றுகளுக்கு இந்தப் பெயர் நிலைத்தது.
உண்மையில் இந்த வேதாந்தத்தில் இன்னும் சில தத்துவங்கள் வேறுபடுத்திச் சொல்லப்படுகின்றன.
அதன்படி ஐந்து வேற்றுமைகள் நிரந்தரமானவை.
அவை:
1-பிரம்மமும் ஆன்மாக்களும்
2-ஆன்மாவும் ஆன்மாவும்
3-பிரம்மமும் உலகும்
4-ஆன்மாவும் உலகும் மற்றும்
5-உலகிலுள்ள பொருளும் பொருளும்.

இவ்வைந்து வேற்றுமைகளைத் தத்துவக் கண் கொண்டு ஆராய்ந்தால்,
பிரம்மம் என்று அழைக்கப்படும் நாராயணன் அல்லது கடவுள் தத்துவத்தில் இரண்டு அடிப்படை வேற்றுமைகளை இப்படியும் பாகுபடுத்தலாம்.
ஆன்மா கடவுளின் ஒரு அணுவளவு பாகமாதலால், இவர்களின் வேற்றுமையை
மரத்திற்கும் மரத்திலுள்ள ஒரு இலைக்கும் உள்ள வேற்றுமையாகச் சொல்லலாம்.
இதை வடமொழியில் ஸ்வகத பேதம் என்பர்.
அதாவது ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமை’. கடவுளுக்கும் உலகுக்கும் உள்ள வேற்றுமையோ
இரு பகுப்புகளுக்குள் (Categories) இருக்கும் வேற்றுமை. இவ்வேற்றுமையை விஜாதீய பேதம் என்பர்.
மரத்திற்கும் வேறு பகுப்பைச் சேர்ந்த மலைக்கும் உள்ள பகுப்பு வேற்றுமை போல.

இவ்விரண்டு அடிப்படை வேற்றுமைகளை முன் நிறுத்தியே மத்வரின் தத்துவ இயல் விரிவாக்கம் செயல்படுகிறது.
அதனாலும் அவருடைய தத்துவம் துவைத-தத்துவம் என்று பெயர் பெறுகிறது.
இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் இவ்வேற்றுமை விஷயத்தில் முதலில் சொன்ன ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமையை’ ஒப்புக்கொள்கிறது.
ஆனால் இரண்டாவது வேற்றுமையை ஒப்புக்கொள்கிறதில்லை.
ஆதி சங்கரரின் அத்வைதமோ இரண்டு வேற்றுமைகளையுமே ஒப்புக்கொள்வதில்லை.

மத்வருடைய வேதாந்தக்கொள்கையை ‘துவைதம்’ (இரண்டுள்ளது) என்று அழைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் உண்டு.
கடவுள் நாராயணன் ஒருவர் தான் சுதந்திரர். மற்ற எல்லா உலகப்பொருள்களும் அவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும்
சுதந்திரமில்லாமல் அவரால் ஆட்டிப் படைக்கப்படுகின்றன.
அதனால் சுதந்திரர் ஒரு பகுப்பாகவும் சுதந்திரமற்றதெல்லாம் ஒரு பகுப்பாகவும் இரண்டு பகுப்புகள் எக்காலமும் இருந்தே தீரும்.
இதனாலும் இக்கொள்கை ‘துவைதம்’ என்று கூறப்படுகிறது.

அற்புதங்கள் பல புரிந்த அற்புதன்
மத்வாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த (அல்லது, அவர் நடத்திய) பல அற்புதங்களைப் பற்றிய விவரங்கள்
அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய மத்வ விஜயம் என்ற நூலில் உள்ளன.
அவையெல்லாவற்றிலும் முக்கியமான ஒன்று சரித்திரப் பிரசித்தி பெற்றது.

ஒரு சமயம் உடுப்பிக்கருகில் கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தபோது புயலில் ஆபத்துக்குள்ளாகியது.
கடற்கரையில் நின்றுகொண்டிருந்த மத்வர் தன் மேல் துணியை காற்றில் வீசிக்காட்டி என்னமோ செய்தார்.
கப்பல் ஆபத்திலிருந்து தப்பி கரை சேர்ந்தது. கப்பலின் தலைவர் அவரை வணங்கி, அவரை தன்னிடமிருந்து
ஒரு பரிசு வாங்கிக்கொள்ளும்படி வற்புறுத்தினார்.
கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தில் ஒரு பாறை இருப்பதாகவும், அது தனக்கு வேண்டும் என்றும் கூறினார் மத்வர்.
இவ்விதம் ஓர் அற்பமான கற்பாறையைக் கேட்கிறாரே என்று வியந்தவாறே கப்பல் தலைவர் அதை எடுத்துக் கொடுத்தார்.
அதனுள் தன் கையை விட்டு சாளக்கிராமத்தினால் ஆன ஒரு அழகிய பாலகிருஷ்ண விக்கிரகத்தை வெளியே எடுத்தார் மத்வர்.
தானே அந்தப் பாரமான விக்கிரகத்தைத் தூக்கிக்கொண்டு சென்றார்.

அதுதான் இன்றும் உடுப்பி கோயிலில் மூலவிக்கிரகமாக உள்ளது.
அவ்விக்கிரகத்தைப்பற்றி அவர் வெளிப்படுத்திய தகவல் இன்னும் பெரிய விந்தை.
‘விஸ்வகர்மா என்ற தெய்வச் சிற்பியால் செய்யப்பட்டு, துவாரகையில் துவாபரயுகத்தில் ருக்மணியால் பூஜிக்கப்பட்டு,
பிற்பாடு துவாரகை மூழ்கிய போது கடலில் மூழ்கிய விக்கிரகம் அது’!
பஞ்சபாண்டவர்களின் வனவாச சமயம் அவர்களைக் காண அடிக்கடி தேடிச் சென்றதால்
அவர் வெளியே செல்லும் நாட்களில் பாதபூஜை செய்ய முடியாது
ருக்மிணி தேவி வருந்தியதால் தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து ருக்மிணி தேவி விரும்பி வேண்டிய வடிவான,
அன்னை யசோதையின் தயிர் கடையும் மத்தை பிடுங்கிக் கொண்டு ஓடும் தன் சிலா ரூபத்தை வடித்துத் தர
கிருஷ்ணர் இட்ட கட்டளையின்படி விஷ்வகர்மா செய்த திருவுருவே அது.
துவாரகையில் கிருஷ்ணர் இல்லாத போது துவாரகை வந்த மகான்கள், மக்கள் அனைவரும் வழிபட்ட உருவம் அது.
துவாரகை கடலில் மூழ்கிய போது ருக்மிணி தேவி வழிபட்ட அந்த விக்கிரகமும் கடலில் மூழ்கி
பல ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர் மத்வர் கையில் வெளிப்பட்டது

ஆதி சங்கரர்

சங்கரருடன் சீடர்கள், பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர்
இயற்பெயர் சங்கர
தலைப்புகள்/விருதுகள் அத்வைதம் நிறுவியவர்,இந்து மறுமலர்ச்சி, சண்மதம் (ஆறுமதங்கள்) நிறுவியவர்
குரு கோவிந்த பகவத் பாதர்
தத்துவம் அத்வைதம்
மேற்கோள் ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷம் (“வயிற்றை நிரப்ப இவ்வளவு வேஷம்” போடுகிறான் மனிதன்)
ஆதிசங்கரர் ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள “காலடி” எனப்படும் ஊரில்
ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர்.
இளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று
சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார்.

இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு
விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது
இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.
மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது.
சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம்,
உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

சங்கரர் நிறுவிய அத்வைத பீடங்களும் அவரது சீடர்களும்

சங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை,
வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி
தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார்.
காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார்.
தமது 32ஆம் அகவையில் கேதார்நாத்தில் சமாதி அடைந்த சங்கரர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார்.

காலம்
கி.பி நான்காம் நூற்றாண்டு என்பதும் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்பதும் இவர் வாழ்ந்து வந்த காலத்தினை
பற்றி இரு வாதங்கள் நிலவுகின்றன.

தத்துவம்
பொதுவாக ஆத்மாவைப் பற்றிக் கூறியது. அது பிரம்மம் என்றும் அடிப்படையான எதார்த்தமென்றும், ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது.
இயற்கைப் பொருட்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறது.
இவரது தத்துவம் அத்வைதம் என்று அழைக்கப்படுகிறது.
பிரம்மத்தின் கனவாக, நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது. இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரம்மை தான்.
நிலையான மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய அலைகள், குமிழிகள், நுரையாக உலகம் விளங்குகிறது.
நிரந்தர ஆன்மாவிற்கு மனித உடல் ஒரு புறவடிவமாகும். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கிறது.
நிரந்தரமான பிரம்மம் முன்னால் இருக்கிறது. பின்னால் இருக்கிறது, வலப்புறத்திலும், இடப்புறத்திலும் மேலும் கீழும் பரவியிருக்கிறது.
இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்றுதான். அதுவே சிறந்தது. பிரம்மத்தை தவிர வேறெந்த பொருளும் கிடையாது.

உலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம் தான். வேறு எதுவுமில்லை.
தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றியுள்ளன.
ஆகவே அவை அனைத்தும் பிரம்மம் தான். இதை புரிந்து கொள்ள வேண்டும்.
சாதாரண மக்களின் உடனடி பிரச்னைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது. அது தொலைவில் உள்ளது.
தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதை காண வேண்டும் என்று எழுதினார்.
ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும்.
நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது.
பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கரரின் அத்வைதம்.

துறவறம்
தமது எட்டாம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம்
அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

மனீஷா பஞ்சகம்
தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற போது
ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.
அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர்.
அப்போது அச்சண்டாளர் சங்கரரிடம் “என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா” எனக் கேட்க,
சங்கரர் அவன் காலில் விழுந்து பணிகிறார் என சங்கர விஜயம் கூறுகின்றது.
உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி
அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார்.
இதுவே சங்கரருக்கு ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த நிகழ்வு ஆகும்.
இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.
அவர் கருத்துப்படி, குமுகத்திற்கு (சமூகத்திற்கு) ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற
சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார்.

வாதங்கள்
கபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று.
இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.
கர்ம மீமாம்ஸா எனப் படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த
மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி சரஸவாணி முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர்.
மந்தன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர்.
சங்கரருடன் வாதத்தில் தோல்வி அடைந்த மந்தன மிஸ்ரர், துறவறம் ஏற்று சுரேஷ்வரர் என்ற பெயருடன், சங்கரரின் சீடரானார்.

ஆதி சங்கரர் நிறுவிய மடங்கள்
ஆதி சங்கரர் பாரத நாட்டின் நான்கு திசைகளில் நான்கு பீடங்களை நிறுவி, அதற்கு தனது தலைமைச் சீடர்களை பீடாதிபதிகளாக நியமித்தார்.
முதல் பீடாதிபதி திசை பீடம் மகாவாக்கியம் வேதம்
பத்மபாதர் கிழக்கு கோவர்தன மடம் பிரக்ஞானம் பிரம்மம் ரிக் வேதம்
சுரேஷ்வரர் தெற்கு சிருங்கேரி சாரதா மடம் அஹம் பிரம்மாஸ்மி யசுர் வேதம்
அஸ்தாமலகர் மேற்கு துவாரகை காளிகா மடம் தத்துவமசி சாம வேதம்
தோடகர் வடக்கு ஜோஷி மடம் அயமாத்மா பிரம்மம் அதர்வண வேதம்

நிர்வாணாஷ்டகம்
முதன்மைக் கட்டுரை: நிர்வாணாஷ்டகம்
நிர்வாணாஷ்டகம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும்.
இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம்ஆகியற்றை மறுத்து இறுதியில்
பிரம்மமே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார்.[
ஆறு பாடல்களையும் சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.

—————

ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி –
முன்னுரை
ஞாலம் வாழ் உயிர்களுக்கெல்லாம் தாய் போன்ற, கால வரையறையற்ற ஹிந்து சனாதன தருமத்தை
உலகிற்குத் தந்த பெருமை நம் பாரதப் புண்ணிய பூமியையே சேரும்.
கருணையே வடிவான ரிஷிகள் வகுத்துத் தந்த இம்மார்க்கத்தை, காலம் செல்லச் செல்ல, நம்மவர்கள் அறியாமையாலும்,
கவனமின்மையாலும், அற்ப ஆசைகளின் காரணமாகவும் கைவிட்டு, மனம் போன படி போக பலன்களை அனுபவிப்பதிலேயே மனம் செலுத்தி வந்தனர்.
பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் விளைந்த இந்த அவல நிலையை எதிர்த்து வந்த பௌத்த சமண மதங்களானவை
நடைமுறைக்கு ஒவ்வாத தீவிர அகிம்சா மார்க்கத்தைப் பறைசாற்றி வந்தமை அனைவரும் அறிந்த வரலாறு.

இத்தகைய ஒருதலையான, ஆபத்தான கொள்கை நாடெங்கும் தடையின்றிப் பரவியிருந்தால் அன்னியப் படையெடுப்புகள்
நம் கலாச்சாரத்தை வெகு சுலபமாகச் சீரழித்து, கொலைவெறி கொண்ட ஆக்கிரமிப்பு மதங்களையும் அறிவு வளர்ச்சிக்கு எதிரான
அபத்தக் கொள்கைகளையும் கண் இமைக்கும் நேரத்தில் பாரதமெங்கும் நட்டு வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
அத்துடன், முன்னுக்குப் பின் முரணான கொள்கைகளை நிலைநிறுத்திக் குழப்பத்தை உண்டுபடுத்தும் வேறு சில மதங்களும் ஓங்கி இருந்தன.
இத்தகைய விபரீதமான நிலையிலிருந்து வேதம், உபநிடதங்கள், பகவத் கீதை, ரிஷிகள் வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில்
வேதத்தை எதிர்த்து வந்த மதங்களைத் தர்க்க ரீதியில் தகர்த்தெரிந்து, அத்துடன் கர்ம-ஞான-பக்தி யோகங்கள் அடங்கிய
முழுமையான வேதாந்த மார்க்கத்தை நிலைநிறுத்தி நம் சனாதன தருமத்தை மீட்டுத் தந்த சமயப் பெரியோர்கள் பலராவர்.

வேதாந்த மார்க்கத்துக்குப் பெரும் வித்திட்ட அப்பெரியோர்களின் வரிசையில் மிக முக்கியமான இடத்தை வகிப்பவர்
அத்வைத சம்பிரதாயத்தின் ஸ்ரீமத் ஆச்சாரியராகிய ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஆவார்.
பகவத் கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், ஆகியவற்றிற்கு ஒப்பற்ற பாஷ்யங்கள் (விளக்கவுரைகள்) எழுதி
நம் மார்க்கத்துக்குத் தொண்டு புரிந்த அவரே,
பின்னாளில் ஓங்கி வளர்ந்து பாரதமெங்கும் பரவிய உயர்வு தாழ்வு பாரா எளிய பக்தி மார்க்கத்துக்கும் வித்திட்டார் என்பதில் ஐயமில்லை.
பெரும் மரியாதைக்குரிய இவ்வாச்சாரியார் வாழ்ந்த கால வரையறைகள் முதலிய வரலாற்றுத் தகவல்களை நடுநிலைநின்று
அரும்பாடுபட்டு அறிவியல்பூர்வமான ரீதியில் ஆராய்ந்து நிரூபித்து ஆவணப்படுத்துதல் இந்துக்களாகிய நாம்
அவருக்கும் இந்து தருமத்துக்கும் புரியும் தலையாய தொண்டாகும்.
இதெல்லாம் தவிர, மதச்சார்பற்ற ரீதியில் பார்த்தாலும் இத்தகைய ஆராய்ச்சியில் கற்றுக்கொள்ளவேண்டிய
பல ஆர்வமூட்டும் வரலாற்று உண்மைகள் வெளிப்படும்.

நிற்க. இப்பொழுது பல மேலை நாட்டவரும் ஜப்பானியர்கள் முதலானவரும் நம் நாட்டின் வரலாற்றாராய்ச்சியைச் செய்து வருகின்றனர்.
இவர்களில் உள்நோக்கம் ஏதும் இல்லாதவர்கள் கூட அவ்வப்போது நம் கலாச்சாரத்தின் அடிப்படை உண்மைகளைப் பற்றிப்
பரிச்சயம் இல்லாததால் சில தவறான புரிதல்களையும் பிழைகளையும் செய்து வருகின்றனர்.
நம் கலாச்சாரத்திலும் சம்பிரதாயத்திலும் பரிச்சயமுள்ளவர்கள் வரலாற்று ஆராய்ச்சியில் வெளிவருவனவற்றை நடுநிலை நின்று அலசிப்பார்த்து,
அவை நியாயமானதாக இருந்தால் பாராட்ட வேண்டும்.
இல்லையென்றால் அறிவு நேர்மையுடன் (academic honesty) அது பற்றித் தர்க்க ரீதியில் விவாதித்து,
ஒவ்வாத கருத்துக்களைத் தக்க ஆதாரம் கொண்டு சுட்டிக் காட்ட வேண்டும்.
“வரலாற்று ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்களோ சொல்லட்டும். நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்” போன்ற வாதங்கள்
நம் சனாதன தருமத்துக்கு நன்மை செய்யாது; மாறாக, இத்தகைய போக்கு இன்றைய இளைஞர்களிடம்
நம் மதம் மீதான நம்பிக்கையின்மையையும் பற்றின்மையையுமே உண்டுபடுத்தும்.

மேற்கூறியவற்றை மனதில் கொண்டு சங்கரர் காலத்தை நிர்ணயிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் சுருக்கமே இக்கட்டுரை.
இதில் வைக்கப்படும் ஆவணக் குறிப்புகள், கருத்துக்கள், ஆராய்ச்சி யுக்திகள் குறித்து மாற்றுக்கருத்து உள்ள நண்பர்கள்
விரும்பினால் மறுமொழியிட்டு நட்பு முறையில் விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.

சங்கரர் கால ஆராய்ச்சியில் பின்பற்றப்பட்ட யுக்தி

வரலாற்றில் ஒரு நபரின் காலத்தைக் கணிப்பதற்கு முன் “அவர் யார்” என்பதற்குத் தக்கதொரு இலக்கணம் கூற வேண்டும்.
அப்படிப் பார்த்தால், “பிரம்ம சூத்திரத்திற்கு ’யுஷ்மதஸ்மத் ப்ரத்யய கோசரயோ:’ என்று தொடங்கி,
’அனாவ்ருத்தி: சப்தாத் இதி ஸூத்ராப்யாஸ: சாஸ்த்ரபரிஸமாப்திம் த்யோதயதி’ என்று முடியும்
பிரபல பாஷ்ய உரை நூலை எழுதியவர்” என்று சொல்ல வேண்டும். இப்படிக் கொள்ளுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.
இந்த பாஷ்யம் அவர் எழுதியது தான் என்பதில் எந்த ஒரு விவாதமும் இல்லை.
தொன்றுதொட்டு பலர் சங்கரருடைய இந்த ஆக்கத்திற்கு அநு பாஷ்யங்களையும் டீகைகளையும்
(sub-commentaries and glosses) எழுதி வந்துள்ளனர். உதாரணமாக-

(1)சாக்ஷாத் அவருடைய சீடர் பத்மபாதர் “பஞ்சபாதிகா” என்ற நூலில் சங்கர பாஷ்யத்தின் முதல்
நான்கு சூத்திர பாஷ்யங்களை விரிவாக விளக்கியுள்ளார்.
இதை மேலும் விவரிக்க, ராமானுஜர் காலத்திற்கு முன்பே பிரகாசாத்ம யதிகள் “பஞ்சபாதிகா விவரணம்” என்ற அநு பாஷ்யம் செய்துள்ளார்.
“விவரண பிரஸ்தானம்” என்ற அத்வைத பாண்டித்ய உட்பிரிவை ஏற்படுத்தியவர் இவர்.
இவ்விவரண நூலை மேலும் விளக்க, “ருஜு விவரணம்”, “தத்வ தீபனம்” முதலிய பாஷ்ய நூல்கள் 13,14,15-ஆம் நூற்றாண்டுகளில்
வெளிவந்தமை பண்டிதர்கள் அனைவரும் அறிவர்.

(2) ஆனந்தகிரி அல்லது ஆனந்தஞானர் எனப்படும் அத்வைத ஆச்சாரியார் சங்கரருடைய
பிரம்ம சூத்திர பாஷ்யம், பத்து உபநிடத பாஷ்யங்கள், கீதா பாஷ்யம், உபதேச சாஹச்ரி கிரந்தம் ஆகியவற்றுக்கும்,
சங்கரருடைய பிரதான சீடராகிய சுரேஷ்வரருடைய பிருகதாரண்யக தைத்திரீய பாஷ்ய வார்த்திகங்களுக்கும், டீகைகளை இட்டுள்ளார்.

(3) மேலும், ஒன்பதாவது/பத்தாவது நூற்றாண்டில் வாழ்ந்தவராக அறியப்படும் வாசஸ்பதி மிச்ரா என்பவர்
சங்கர பாஷ்யத்தை விவரிக்கும் “பாமாதி” என்னும் நூலை எழுதியுள்ளார்.
இவர் “பாமாதி பிரஸ்தானம்” என்ற அத்வைத பாண்டித்ய உட்பிரிவை உண்டாக்கியவர்.
அதையும் மேலும் விவரித்து அமலானந்தர் என்னும் 13-ஆம் நூற்றாண்டு அத்வைதியர் “வேதாந்த கல்பதரு” என்ற ஒரு உரையையும் எழுதியுள்ளார்.

(4) இன்று சங்கர பிரம்ம சூத்திர பாஷ்யத்தை விளக்கும் “பிரகடார்த்த விவரணம்” என்ற நூல் பதிப்பில் உள்ளது.
இதில் பேதாபேத மதமாகிய பாஸ்கரமதம் கண்டிக்கப்படுகிறது. ஆனால் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்தில் இருந்து ஒரு குறிப்பும் இல்லை.
ஆகையால் இது இராமானுஜர் காலத்திற்கு முந்தையது என்று கொள்ள இடமிருக்கிறது.
பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக அறியப்படும் ஸ்ரீ ஆனந்தகிரியும் தம் சூத்திர பாஷ்யத்தில் “பிரகடார்த்த காரர்” என்று
இவ்வாசிரியரைக் குறிப்பிட்டு, இந்நூலிலிருந்து மேற்கோளும் எடுத்துள்ளார்.

இந் நூலாசிரியர்கள் அனைவரும் அத்வைத சூத்திர பாஷ்யகாரரை “பகவத்பாதர்”,”பகவத்”, “பகவான் பாஷ்யகாரர்”, “சங்கரர்” அடையாளம் கண்டுள்ளனர்.
அது தவிர விசிஷ்டாத்வைத-துவைத்த ஆசிரியர்கள் பலர் சங்கரருடைய பெயரைக் குறிப்பிடாமல்
அவருடைய பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் உள்ள கொள்கைகளை விமர்சித்துள்ளனர் என்பது நிர்விவாதம்.

அத்வைத பிரம்ம சூத்திர பாஷ்யகாரராகிய சங்கரர் எழுதிய வேறு நூல்கள் எவை எவை என்று பார்த்தால்,
சர்ச்சைக்கு இடமில்லாதபடி அவருடைய
(1) கீதா பாஷ்யம்,
(2) ஈசாவாஸ்ய-கேன (பத/வாக்ய பாஷ்யங்கள் இரண்டு)-கட-பிரஷ்ன-முண்டக-மாண்டூக்ய-ஐதரேய-தைத்திரீய-
பிருகதாரண்யக-சாந்தோக்ய ஆகிய பத்து உபநிடதங்களுக்கு அவரிட்ட பாஷ்யங்கள்,
(3) ‘உபதேச சாஹச்ரி’ என்ற கிரந்தம் ஆகியவற்றை சம்பிரதாயமும் வரலாற்று ஆராய்ச்சியும் ஒப்புக் கொள்கிறது.

இது தவிர விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் முதலிய நூல்கள் அவருடையதா என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் சர்ச்சை இருப்பதால்
இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தவில்லை.
எப்படி இருப்பினும், நாம் இப்பொழுது பட்டியலிட்டுள்ள நூல்களில் போதுமான அளவிற்குத் தகவல்கள் உள்ளன.
மேலும், மேற்கூறப்பட்ட நூல்கள் யாவும் சமஸ்கிருத மூலத்தில் இந்தியாவின் பல பதிப்பகங்களால் எந்த ஒரு பெரிய அளவிலான
பாட பேதமின்றி வெளியிடப்பட்டுள்ளன;
இந்திய அரசால் நடத்தப்படும் “டிஜிட்டல் லைப்ரரி ஆப் இந்தியா” (Digital Library of India, URL http://www.dli.ernet.in) என்ற
வலைத்தளத்தில் இந்தியாவின் பல பொது நூலகங்களில் உள்ள காப்புரிமை காலாவதியான புத்தகங்கள் (works with expired copyright)
மின்மயப்படுத்தி அத்தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்களை அங்கு இலவசமாகத் தேடிப் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
ஆகையால், அவற்றில் இடைச்செருகல் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்று கொள்வதே நியாயமாகும்.

இந்நூல்களைக் கொண்டு என்ன நிரூபிக்கப்போகிறோம் என்று கேட்டால், அதற்கான பதில் இங்கே:
வரலாற்று ஆராய்ச்சியில் “கால முன் வரையறை” (terminus post quem), “கால பின் வரையறை” (terminus ante quem) என்ற
இரண்டு வரையறைகளை நிர்ணயித்தல் அடிப்படையான ஒரு அங்கமாகும்.
இனி, பின்வரும் உதாரணத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்:

(1) வரலாற்றில் “நபர்-X” என்றொருவர் இருக்கிறார் என்றும் அவர் காலத்தை நிர்ணயிக்க முனைந்துள்ளோம் என்றும் வைத்துக் கொள்வோம்.

(2) “நபர்-A”, “நபர்-B” என்று இருவர் தம் தம் ஆக்கங்களில் தம் காலங்களை முறையே “வருடம் P”, “வருடம்-Q” என்று குறிப்பிட்டுள்ளார்.

(3) “நபர்-X” தம் ஆக்கங்களில் ஒன்றில் “நபர்-A” என்பவருடைய பெயரையும் அவர் எழுதியுள்ள வாக்கியத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

(4) “நபர்-B” தம் ஆக்கங்களில் ஒன்றில் “நபர்-X” என்பவரின் பெயரையும் அவர் வாக்கியத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட உதாரணத்தில், “நபர்-X” என்பவரின் காலத்தின் முன் வரையறை “வருடம்-P” என்றும், பின் வரையறை “வருடம்-Q” என்றும்
தெள்ளத் தெளிவாகக் கேள்விக்கிடமின்றி நிர்ணயிக்கப்படுகிறது.
இப்படித் தான் வரலார்ராராய்ச்சியில் terminus post quem மற்றும் terminus ante quem என்ற வரையறைகள் நிர்ணயிக்கப்படும்.
மேற்கூறிய வழியில் சங்கரர் காலத்தை நிர்ணயிக்க இடமிருக்கிறதா என்று கேட்டால், இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இனி அது குறித்த தகவல்களைக் காண்போம்.

ஆதி சங்கரர் கால பின் வரையறை

ஆதி சங்கரர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதில் பெரிய அளவிலான அபிப்பிராய பேதம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆகையால் அதை முதலில் எடுத்துக் கொள்வோம்.
ஸ்ரீ ராமானுஜர் காலம் கி.பி. 11 அல்லது 12-ஆம் நூற்றாண்டு என்பதும்,
அவர் ஆதி சங்கரர் கொள்கைகளைத் தம் ஸ்ரீபாஷ்யத்திலும் கீதா பாஷ்யத்திலும் விமர்சித்துள்ளமையால்
அவர் சங்கரர் காலத்திற்கு பின்பு வாழ்ந்தவர் என்பதும் திண்ணம்.
அத்துடன், ஸ்ரீ ராமானுஜரின் இளைய பருவத்தில் வயதில் முதிர்ந்தவராக இருந்த யாமுனாச்சாரியார் அல்லது ஆளவந்தார்,
தம் நூல்களான “சித்தி திரயம்” மற்றும் “ஆகம பிராமாண்யம்” எனும் நூல்களில்
சங்கரரின் சில கொள்கைகளைச் சுட்டிக் காட்டி அவைகளிலிருந்து மாறுபடுகிறார்.

இதற்கும் மேலாக, சங்கர பாஷ்யத்தை விளக்க எழுந்த பாமாதி என்ற நூலின் ஆசிரியராகிய வாசஸ்பதி மிச்ரர்
தம் “நியாய சூசி நிபந்தனம்” என்னும் நூலில் “வருடம் 898-இல் முடிக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறார்.
இந்திய வருடக்கணக்கில் சாக வருடம் விக்கிரம வருடம் என்று இரண்டு கணக்குகள் உண்டு.
சாக வருடம் என்று எடுத்துக் கொண்டால் வாசஸ்பதி மிச்ரர் கூறும் தேதி கி.பி. 976 என்று கொள்ள வேண்டி வரும்.
விக்கிரம வருடம் என்று எடுத்துக் கொண்டால் கி.பி. 841 என்று கொள்ள வேண்டி வரும்.
இவ்விரண்டில் “விக்கிரம வருடம் 898”, அதாவது ஆங்கில வருடம் கி.பி. 841 என்று கொள்வது தான் சரி என்று
வரலாற்று ஆராய்ச்சியாளர் Hajime Nakamura தமது “A History of Vedanta Philosophy, Vol. 1” என்ற நூலில் விளக்கியுள்ளார்.

இனி, வாசஸ்பதி மிஸ்ரர் தம்முடைய பாமாதி நூலின் இறுதி சுலோகங்களில் தாம் படைத்த நூல்களைக் கால வரிசையில்
பெயரிட்டுக் காட்டியுள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
இதில் மீமாம்சம், யோகம், நியாயம், சாங்கியம், முதலிய தர்சனங்களைப் பற்றி எழுதி விட்டுத்
தாம் சங்கரபாஷ்ய விளக்கமாகிய பாமாதியை எழுதியதாகக் குறிப்பிடுகிறார்.
இதை வைத்து Hajime Nakamura காலத்தைக் கணிக்க முயல்வது அவ்வளவு சரியன்று என்றே நினைக்கிறேன்.
“நியாய சூசி நிபந்தம்” (கி.பி. 841) எழுதி எத்தனை வருடம் கழித்து அவர் பாமாதியை எழுதினர் என்று அவரோ,
பாமாதிக்கு உரை எழுதிய அமலானந்த சரஸ்வதியோ குறிப்பிடவில்லை.
எந்த காரணமும் கொடுக்காமல் கி.பி. 850 என்ற வருடத்தை Hajime Nakamura பாமாதிக்குத் தருகிறார்.
மேலும், பாமாதியில் சங்கரர் சீடரான பத்மபாதருடைய பஞ்சபாதிகையில் உள்ள விளக்கங்களிலிருந்து வாசஸ்பதி மாறுபடுகிறார் என்பது தெளிவு.
அத்துடன் வாசஸ்பதி பாஸ்கரரின் பேதாபேத மதத்தையும் கண்டித்துள்ளார் –

மேலும், பத்மபாதரின் பஞ்சபாதிகத்தை பாஸ்கரர் கண்ணுற்றிருந்தார் என்று அவர் நூலை ஆய்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சங்கரர் கொள்கைகளைக் கண்டித்த பாஸ்கரர் சங்கரர் காலத்திற்குப் பிந்தியவர் என்பதில் ஐயமில்லை.
பஞ்சபாதிகா எழுதிய பத்மபாதர் தம்மைச் சங்கரர் சீடராகக் காட்டிக் கொள்கிறார். இதிலும் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இருக்க வாய்ப்பில்லை.
இதை வைத்து திரு Nakamura “ஆகையால், பத்மபாதர் காலம் சங்கரர் காலத்திற்கு 20 ஆண்டுகள் பிந்தியது என்றும்,
பாஸ்கரர் காலம் பத்மபாதர் காலத்துக்கும் ஒரு 30 ஆண்டுகள் பிந்தியது என்றும்,
வாசஸ்பதி காலம் பாஸ்கரர் காலத்துக்கும் ஒரு 20 ஆண்டுகளாவது பிந்தியது என்றும் கொள்ளவேண்டும்” என்று கூறியிருந்தால்
அதில் எனக்கு உடன்பாடு இருந்திருக்காது.
“ஒருவர் இன்னொருவருடைய நூலைப் பற்றி எழுதினால் அவர் அவ்வின்னோருவருடைய காலத்திற்கு 20 ஆண்டுகளாவது தள்ளி இருக்க வேண்டும்”
என்பது ஞானிகளாகிய அவர்களின் ஆற்றலையும் உழைப்பையும் குறைத்துக் கூறுவது போல உள்ளது.

ஆனால் Hajime Nakamura ஒரு முக்கியமான வேறொரு சான்றைக் காண்பிக்கிறார்.
ஸ்ரீ ராமானுஜர் காலத்துக்கு முன் வாழ்ந்த ஆளவந்தார் என்னும் யாமுனாச்சாரியார் தம் சித்தித்ரயத்தில்
“ஸ்ரீவத்சாங்கர் என்னும் வேதாந்தி சங்கரர் காலத்துக்கும் பாஸ்கரர் காலத்துக்கும் இடையே வாழ்ந்தார்” என்று குறிப்பிடுகிறார்.
இது சித்தி த்ரயம் ஐந்தாம் பாகம், முதல் அத்தியாயத்தில் உள்ளதென்றும் குறிப்பிடுகிறார்.
இதையும், வாசஸ்பதி மிச்ரர் கி.பி. 841-இல் நூற்கள் எழுதியிருப்பதையும் சேர்த்துப் பார்த்தால்,
சங்கரர் கால வரையறையைக் கண்டிப்பாகக் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்கு முன் வைக்க வேண்டும்.
இதிலிருந்து சிருங்கேரி மடம் கூறும் “கி.பி. 788-820” என்ற கணக்கு சற்று அடிபடுகிறது. ஓர் ஐம்பதாண்டுகளாவது தாமதமாக இருக்க வேண்டும்.

இதை மேலும் வலுப்படுத்தும் வண்ணம், இதுவரை கூறிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொள்ளாத வேறொரு சான்றும் உள்ளது.
சமண (ஜைன) மதத்தைச் சேர்ந்த வித்யானந்தர் தம் “அஷ்டசஹச்ரி” என்ற நூலில் சுரேஸ்வரருடைய
பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகத்திளிருந்து ஒரு மேற்கோளை எடுத்து “இது பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகத்தில் சொல்லப்பட்டது” என்று சுட்டி,
தம் சமண மதத்திற்கு விரோதமான வேதாந்த மதமாகிய அதில் உள்ள கருத்தை விமர்சிக்கிறார் .
இவ்வாக்கியங்கள் சங்கரரின் முதற் சீடராகிய சுரேஸ்வரரின் பிருகதாரண்யக வார்த்திகத்தின் முதல் பாகமான “சம்பந்த வார்த்திகத்தில்” காணப்படுபவை.
இதை முன்வைத்து திரு Nakamura வித்யானந்தரின் காலத்தை மேலும் ஆய்கிறார்.
ஜினசேனர் என்ற சமண பண்டிதர் “ஹரிவம்ச புராணம்”, “ஆதி புராணம்” என்று இரண்டு நூற்களையும்,
அந்நூற்களில் அவரே அவ்விரண்டும் முறையே சாக வருடக் கணக்கின்படி கி.பி. 783-இலும் கி.பி. 838-இலும் எழுதப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஆதி புராணத்தில்” வித்யானந்தரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகவல்களை எல்லாம் Hajime Nakamura வின் நூலில் காணலாம்.
ஆகையால், வித்யானந்தர் ஜினசேனர் காலத்திற்கு முந்தையவராகவோ சமகாலத்தவராகவோ கொள்வதே சரியாகும்.
அவருக்கும் முன், அதாவது கி.பி. 838-க்கும் முன் சுரேஸ்வரர் தம் பிருகதாரண்யக வார்த்திக நூலைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இதுவும், “சங்கரர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தையது” என்னும் கருத்துக்கு வலு சேர்க்கிறது.

ஆதி சங்கரர் கால முன் வரையறை

சான்று 1:

பௌத்த நியாய சாத்திரத்தின் (Buddhist logic) முன்னேற்றத்துக்குப் பெரும் வித்திட்ட “தர்மகீர்த்தி” என்னும் பௌத்த ஆசிரியர்
ஏழு பிரசித்தமான நூற்களை எழுதியுள்ளார். அவற்றுள் ஒன்று “பிரமாண வார்த்திக காரிகை” என்னும் நூல்.
தர்மகீர்த்தியின் பெயரையும் இட்டு இதில் உள்ள ஒரு வாக்கியத்தைச் சங்கரர் தொடக்கமாக அத்வைத ஆச்சாரியார்கள்
மேற்கோள் எடுத்துள்ளனர் என்பதைக் காட்டுவோம் இனி. இதனால், ஆதி சங்கரர் தர்மகீர்த்தியின் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பது தெளிவாகும்.

தற்போது பதிப்பில் உள்ள “உபதேச சாஹச்ரி” (Upadesa Sahasri) என்ற கிரந்தத்தை ஸ்ரீ சங்கர பகவத்பாதர் எழுதினர்
என்பதற்குப் பல சான்றுகள் கொடுக்கப்படுகின்றன.
அவர் சீடராகிய சுரேஷ்வரர் “நைஷ்கர்ம்ய சித்தி” என்ற தம் கிரந்தத்தில் உபதேச நூலிலிருந்து பல மேற்கோள்களை எடுத்துள்ளார்.
நைஷ்கர்ம்யசித்தி என்ற நூல் சுரேஸ்வரருடையதே என்பதில் ஐயத்திற்கு இடமில்லாதபடி
ஸ்ரீ சர்வஞாத்ம முனிகள் தம் நூலில் மேற்கோள்களை எடுத்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி தம் நூலில் நைஷ்கர்ம்யசித்தி நூற் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
நைஷ்கர்ம்யசித்திக்கு ஞாநோத்தமர் என்னும் பிராசீனரும்,
உபதேச கிரந்தத்திற்கு ஆனந்தகிரி, ராமதீர்த்தர் முதலிய பிராசீனர்களும் விளக்கவுரைகளை இட்டுள்ளனர்.

அதுதவிர, பேதாபேத வேதாந்த மதத்தைச் சார்ந்த பாஸ்கராச்சாரியார் தம் பகவத் கீதை உரையில்
சங்கரரின் உபதேச கிரந்தத்தில் உள்ள கருத்து ஒன்றை “உபதேச கிரந்தத்தில் இவ்வாறு கூறப்படுகிறது” என்று
நூற்பெயரைக் குறிப்பிட்டு அதிலிருந்து ஒரு மேற்கோளையும் காட்டி விமர்சித்துள்ளார்.
இந்தத் தகவல்களை, “Sengaku Mayeda” என்னும் ஜப்பானிய வரலாற்று அறிஞர் தமது “The authenticity of the Upadesa Sahasri” என்ற
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அங்கே கண்டுக்கொள்க. அத்தகவல்களை நான் நேராக மூல நூற்களை வைத்துச் சரிபார்த்துவிட்டேன்.

இந்த உபதேச சாஹச்ரி நூலில் பதினெட்டாம் அத்தியாயத்தில் பௌத்த மதக் கொள்கைகளை விமர்சிக்கிறார் சங்கரர்.
இதில் எதிர் தரப்பின் வாதத்திக் காட்டும் ஒரு சுலோகம் உள்ளது:

“அபின்னோ அபி புத்த்யாத்ம விபர்யாசித தர்சனை:
க்ராஹ்ய க்ராஹக சம்வ்ருத்தி பேதவான் இவ லக்ஷ்யதே”[ உபதேச ஸஹஸ்ரி, 18.142]

இப்பகுதி ஒரு சிறு மாற்றத்துடன் அப்படியே தர்மகீர்த்தியின் பிரமாண வார்த்திக காரிகை நூலில் உள்ளது.
தர்மகீர்த்தியின் நூலில் “அவிபாக” என்ற சொல்லுக்குப் பதிலாக “அபின்ன” என்ற சொல்லைச் சங்கரர் பயன்படுத்தியுள்ளார்.
இரண்டு சொற்களுக்குள் பொருள் வேறுபாடு சற்றும் கிடையாது:

“அவிபாகோ அபி புத்த்யாத்ம விபர்யாசித தர்சனை:
க்ராஹ்ய க்ராஹக சம்வ்ருத்தி பேதவான் இவ லக்ஷ்யதே”[ பிரமாண வார்த்திக காரிகை, 3.354]

இனி, “இவ்வாக்கியத்தை தர்மகீர்த்தி பழைய பௌத்த நூலிலிருந்து தம் நூலில் கூறியிருக்கிறார்”,
“உபதேச கிரந்தத்தையும் நைஷ்கர்ம்யசித்தி கிரந்தத்தையும் நாங்கள் ஆச்சாரியார்களுடைய உண்மையான படைப்புகளாக ஏற்கவில்லை.
ஆதலால் இச்சான்று செல்லாது” என்றெல்லாம் கூறுவதற்கு இடமில்லாத வண்ணம் இன்னும் சில சான்றுகளைப் பார்ப்போம்.

சான்று 2:

மேலேடுக்கப்பட்ட வாக்கியம் தர்மகீர்த்தியின் வாக்கியமே என்று வேறு பல பிராசீன தத்துவ மேதைகளும் தம் ஆக்கங்களில் இயற்றியுள்ளனர்.
இதை Nakamura அவர்கள் தம் நூலில் விளக்கியுள்ளார். அங்கே கண்டுகொள்க.

சான்று 3, சான்று 4:

சங்கரருடைய சீடரான “வார்த்திககாரர்” என்று அழைக்கப்படும் சுரேஷ்வரர்
“பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகம்”, “தைத்திரீய பாஷ்ய வார்த்திகம்” என்ற நூற்களை இயற்றினார் என்பதிலும்
இந்நூற்கள் இரண்டும் இன்று பதிப்பகங்களிலும் நூலகங்களிலும் கிடைக்கின்றன என்பதிலும் விவாதம் இல்லை.
இவர் மேலேடுக்கப்பட்ட தர்மகீர்த்தியின் “அபின்னோ அபி” அல்லது “அவிபாகோ அபி” என்று தொடங்கும் வாக்கியத்தை
பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகத்தில், 4.3.476 (இது பிருகதாரண்யக உபநிஷத்தின் “ஜ்யோதிஷ் பிராம்மணம்” என்ற பகுதிக்கான விளக்கமாகும்)
என்ற இடத்தில் எடுத்துள்ளார்.
இவ்விடத்திற்குட் டீகையிட்ட ஆனந்தகிரி, “(பௌத்த மதப் பிரிவான, யோகாசாரம் என்னும்) விஞான வாதிகளின் கருத்தைக்
கீர்த்தியின் வாக்கியம் வழியாக உதாஹரிக்கிறார்” என்று தெளிவாக தர்மகீர்த்தியையே “கீர்த்தி” என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
இதற்கும் மேலாக, சுரேஸ்வரரே இவ் வார்த்திகத்தின் அப்பகுதியிலேயே வேறொரு இடத்தில் “தர்மகீர்த்தி கூறுவது” என்று பெயரிட்டுக் கூறியுள்ளார்:

“த்ரிஷு ஏவ து அவினாபாவாத் இதி யத் தர்மகீர்த்தினா
ப்ரத்யஜ்ஞாயி ப்ரதிஜ்ஞேயம் ஹீயெதாஸௌ ந சம்ஷய:”[பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகம், 4.3.753]

சான்று 5:

இனி தர்மகீர்த்தியின் காலம் எது என்ற கேள்வி எழுகிறது. இதற்கு நேரிடையான, சுலபமான சான்று உள்ளது.
யீ ஜிங் (I Tsing, I Ching or Yijing) என்ற சீன தேசத்து யாத்திரி தமது யாத்திரை ஆவணத்தில்
“அண்மையில் வாழ்ந்த தர்மகீர்த்தி பௌத்த நியாய சாத்திரத்திற்குப் பல முன்னேற்றங்களைக் கொண்டுவந்தார்” என்று தெளிவாகக் கூறுகிறார்
யீ ஜிங்குடைய யாத்திரை ஆவணத்தை ஆங்கிலத்தில்
“A Record of the Buddhist Religion As Practised in India and the Malay Archipelago” என்று மொழிபெயர்த்து எழுதிய
நூலாசிரியர் பல பழைய சீன-ஜப்பானிய சுவடிகளின் துணை கொண்டு இந்நூலைத் தொகுத்துள்ளதாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளமையால்,
இதிலும் இடைச்செருகலோ பிழையோ இருப்பது சாத்தியமில்லை என்றே கொள்ள வேண்டும்.

இப்பகுதியில் வரும் படிமச் சுட்டிக்கள் இப்புத்தகத்தின் பக்கங்களே.
இந்த யீ ஜிங் தாம் கி. பி. 671-ஆம் ஆண்டு இந்தியப் பயணத்தைத் துவக்கியதாகத் தம் யாத்திரை ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிகிறது.
ஆம், “ஆங்கில வருடம் போ.பே. 671” என்று குறிப்பிடவில்லை தான்.
ஆனால், “ஜியான் ஹெங் (‘Hsian Heng’ or ‘Xianheng’) யுகத்தின் இரண்டாம் வருடம்” என்று
கி.பி. 670-674 வரையறையைக் கொண்ட சீன யுகப்பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் .
சீன தேசத்துப் பல்வேறு சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்திகள் தெளிவாக யுகப்பெயர்களையும் வருடங்களையும் உபயோகித்தமை
வரலாற்று ஆராய்ச்சியில் பிரசித்தம் என்று அறியப்படுகிறது
அதுவும் தவிர, யீ ஜிங் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் மற்றொரு புத்தகமும் தெளிவாக,
“அவர் தம் இந்திய யாத்திரையை செங்க்செங் (Zhengsheng) யுகம் முதல் ஆண்டில் முடித்துக் கொண்டார்” என்று
கி.பி. 695-ஆம் ஆண்டைக் குறிப்பிட்டுள்ளமை தெரிகிறது .

“ஆதி சங்கரர் கி.மு.500-இல் வாழ்ந்தார்” என்று கூறினால், “தர்மகீர்த்தி கி.மு. 500-க்கும் முன்பு வாழ்ந்தார்” என்று கூற நேரிடும்.
அப்படியானால், தம் காலத்திற்கு 1200 வருடங்கள் முன் இருந்த ஒருவரை “அண்மையில் வாழ்ந்தார்” என்று யீ ஜிங் குறிப்பிடுவது அபத்தமாகிவிடும்.
ஒரு வேளை யீ ஜிங் தவறான தகவலைக் குறிப்பிட்டுள்ளாரோ என்றால், அதற்கும் இடமில்லாதபடி ஒரு சான்று உள்ளது.
யீ ஜிங் தம்முடைய யாத்திரைக்கு முன்னோடியாக பா ஹியன் (Fa Hien), யுவாங் சுவாங் (Hsuan Tsang) ஆகியோர் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்
பா ஹியனும் யுவாங் சுவாங்கும் முறையே கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்
(யீ ஜிங்குக்கு முப்பது நாற்பது ஆண்டுகள் முன்பு) இந்தியப் பயணம் மேற்கொண்டதாக அறிகிறோம்.
பல பௌத்த நியாய சாத்திர நூற்களை சமஸ்கிருதத்திலிருந்து சீன மொழிக்கு மொழிபெயர்த்த யுவாங் சுவாங்
தர்மகீர்த்தியின் பெயரையோ அவரது ஏழு முக்கிய ஆக்கங்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை என்பதும்,
பா ஹியன் தர்மகீர்த்தியையோ அவர் சமகாலத்தில் இருந்த மற்ற பௌத்த ஆசிரியர்களையோ குறிப்பிடவில்லை என்பதும்,
“தர்மகீர்த்தியின் காலம் சுமார் கி.பி. 640-க்குப் பிறகு தான்” என்னும் தரப்புக்கு வலு சேர்க்கிறது.

இதையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கையில், ஆதி சங்கரர் காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னால்
இருக்க வாய்ப்பில்லை என்று தெரிய வருகிறது. குறிப்பாக, தர்மகீர்த்தியின் காலமாகிய கி.பி. 640 க்குப் பிறகு என்று பார்த்தால்,
ஆதி சங்கரர் அதிகபட்சம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் வாழ்ந்திருக்க முடியும் என்று விளங்குகிறது.

ஒரு ஆட்சேபமும் அதற்குச் சமாதானமும்

நிற்க. திரு சுப்ரமணியன் சுவாமி இந்திய வரலாற்று ஆராய்ச்சி பற்றிய ஒரு கருத்தை முன்வைக்கிறார்.
அவருடைய பேச்சிலிருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை இங்கே.
கிரேக்க மொழியில் அமைந்துள்ள மெகஸ்தனீசு எழுதிய “இண்டிகா” என்ற இந்திய யாத்திரை ஆவணத்தில் உள்ள
“ஸாண்ட்ரகூட்டஸ் (Sandracottus)” என்னும் பெயரை மௌர்ய சாம்ராஜ்யத்தின் சந்த்ரகுப்த மௌர்யருடன் இணைத்து,
அவர் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்படுகிறதாம்.
அதை வைத்துத் தான் புத்தர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்படுகிறதாம்.
ஆனால், “இந்த ஸாண்ட்ரகூட்டஸ் சந்த்ரகுப்த மௌர்யர் அல்ல, குப்தர் காலத்துச் சந்த்ரகுப்தரே” என்பதற்குச்
சில வாதங்களை சுப்பிரமணியம் சுவாமி முன்வைத்துள்ளார்.
“சந்த்ரகுப்த மௌர்யரை ஸாண்ட்ரகூட்டஸ்ஸுடன் தவறாக முடிச்சுப் போடுவதால் தவறான காலக்கணிப்புகள் நடத்தப்படுகின்றன.
ஆகையால், புத்தர் காலம் கி.மு. 15-ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையது” என்றும் கூறியுள்ளார்.
சுப்ரமணியம் சுவாமி கூறுவது உண்மையாகவே இருக்கட்டும்.
இது எந்த விதத்திலும் “சங்கரர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு” என்ற கருத்துக்கு ஆதாரமாகாது.
ஏனெனில், நாம் இக்கட்டுரையில் இதுவரையில் காட்டியுள்ள சான்றுகள் புத்தர் காலக் கணக்கையோ அல்லது
எந்த ஒரு இந்திய சக்கரவர்த்தியின் காலக் கணக்கையோ வைத்து நிர்மாணிக்கப்படவில்லை என்பது தெளிவு.
மேலும், சுப்பிரமணிய சுவாமியே அதே கட்டுரையில் பா ஹியனின் காலத்தைக் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்றே கூறியுள்ளார்.
அவருக்கும் பிற்பட்டவராகிய தர்மகீர்த்தி கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலோ அதற்கு முன்பாகவோ வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்பது மேலும் உறுதியாகிறது.

சான்று 6:

இது சற்று சிக்கலான சான்றாக இருப்பதால் “சங்கரர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார்” என்ற தரப்பிற்கு
இதை முக்கிய ஊன்றுகோலாக நாம் கொள்ளவில்லை. செய்தியை மாத்திரம் கூறி விடுகிறேன்;
அதற்கு மேல் நடுநிலையாளர்கள் நிர்ணயிக்கட்டும்.

குமரீல பட்டர் (Kumarila Bhatta) என்னும் மீமாம்ச்சகர் சுலோக வார்த்திகம், தந்திர வார்த்திகம் என்று இரண்டு நூற்களை இயற்றியுள்ளார்.
இவர் காளிதாசனுடைய ஒரு வாக்கியத்தைத் தம் தந்திர வார்த்திக நூலில் எடுத்துள்ளார். அந்த வாக்கியமானது,

அஸம்சயம் க்ஷத்ர-பரிக்ரஹ-க்ஷமா யத் ஆர்யம் அஸ்யாம் அபிலாஷி மே மன:
ஸதாம் ஹி ஸந்தேஹ-பதேஷு வஸ்துஷு ப்ரமாணம் அந்த:காரண ப்ரவருத்தய:[அபிஞான சகுந்தலம், 1.21, பார்க்க: படிமம் 2]

என்னும் காளிதாசனின் அபிஞான சாகுந்தலத்தில் காணப்படுகிறது.
குமரீலரோ தந்திர வார்த்திகத்தில், மீமாம்ச சாத்திரம் பற்றிய ஒரு கருத்தைப் பற்றி விசாரிக்கும்போது
“வித்வான்களால் கூறப்படுவதிலிருந்து அறியப்படும் இத் தகவல், பிரசித்தமாகக் கவிகளால் (கவிகளின் வாக்கியத்தால்) நிரூபிக்கப்படுகிறது”
என்று குறிப்பிட்டு, மேற்கண்ட அபிஞான சகுந்தல சுலோகத்தின் இரண்டாம் பகுதியை ஆதாரமாகக் காட்டுகிறார்

சங்கர விஜய நூற்களில் சங்கரர் குமரீல பட்டரைச் சந்தித்ததாக வருகிறது.
அவர் சீடராகிய மண்டனரை விவாதத்தில் வென்று, அவரைத் தம் சீடராக்கிக் கொண்டார் என்றும் வருகிறது.
ஆனால், இதை ஆதாரமாகக் கொண்டு நாம் “சங்கரர் காலத்துக்குக் குமரீல பட்டர் முந்தியவர்” என்று நிரூபிக்கத் தேவையில்லை.
கேள்விக்கு இடமில்லாதபடி வேறு விதமான ஆதாரமும் இருக்கிறது:
மண்டன மிச்ரர் என்பவர் எழுதிய “பிரம்மசித்தி” (Brahma siddhi) என்ற நூலில், தந்திர வார்த்திகத்தையும் சுலோக வார்த்திகத்தையும்
மேற்கோள் காட்டியிருப்பதை அந்நூலைப் பதிப்பித்த தொகுப்பாளர் குப்புசாமி சாஸ்திரி அவர்கள் தெளிவாகப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.

இந்த மண்டன மிச்ரர் சங்கரர் காலத்தவர் என்று மிகத் தெளிவாகக் கூற முடியும்.
ஏனெனின், பிரம்மசித்திக்கு உரை எழுதிய சங்கபாணி என்ற பிராசீனர் அந்நூலில் ஓரிடத்தில்
சங்கரர் கொள்கை கண்டிக்கப்பட்டுள்ளதைக் காட்டியுள்ளார்.

இதில் சங்கரருடைய கொள்கையை “பகவத்பாதீய மதம்” என்று சங்கபாணி குறித்துள்ளார்).
இங்கு மண்டனர் எதிர்க்கும் கொள்கையும் சங்கரருடைய சூத்ரபாஷ்யம் 3.3.32-இல் தெளிவாக உள்ளது.
இனி, “இந்த மண்டன மிச்ரர் சங்கரர் காலத்துக்கு வெகு காலம் கழித்து இதை எழுதியிருக்கலாமே” என்று கூற இடமில்லாதபடி,
சங்கரரின் முதல் சீடராகிய சுரேஸ்வரர் மண்டனருடைய சித்தாந்தத்தை பிருகதாரண்யக வார்த்திகத்தில் ஒரு இடத்தில் கண்டித்துள்ளார்.
இதை டீகை எழுதிய ஆனந்தஞானர் சுட்டியும் காட்டுகிறார்.
பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகம் 4.4.796 மற்றும் ஆனந்தஞானர் டீகை; ஆனந்தஞானரும் விவரம் தெரியாதவர் அல்லர்.
அவர் மெத்தப் படித்த பண்டிதர் என்பது அவர் பல்வேறு தத்துவ மேதைகளின் நூற்களிலிருந்து மேற்கோள் எடுப்பதை வைத்துக் கூற முடியும்.
அது தவிர, சுரேஸ்வரரின் நைஷ்கர்ம்யசித்தியிலும் மண்டனருடைய பிரம்மசித்தி விமர்சிக்கப்பட்டுள்ளது என்று குப்புசாமி சாஸ்திரி குறிப்பிடுகிறார்.
ஆகையால், மண்டனரையும் சங்கரரையும் சம காலத்தவராகத்தான் ஏற்க வேண்டும்.
ஆகையால் சங்கரர் காலத்திற்குச் சமகாலத்தவர் மண்டனர், மண்டனர் காலத்திற்கு முந்தியவர் குமரீலர்,
குமரீலர் காலத்திற்கு முந்தியவர் காளிதாசர் என்று தெரிய வருகிறது.

இனி, காளிதாசன் காலத்தை நிர்ணயிக்கும் பெரும் சிக்கலுக்கு வருகிறோம். இதில் பலருக்குப் பல அபிப்பிராயங்கள் நிலவி வருகின்றன.
வரலாற்று அறிஞர்கள் சிலர் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகின்றனர்.
இது நிரூபிக்கப்படுமானால், சங்கரர் காலத்தை 8-ஆம் நூற்றாண்டாக ஏற்க மேலும் ஒரு சான்று கிடைத்துவிட்டதாகிறது.
எப்படி இருப்பினும், இது வரை எவரும் “கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு முன் காளிதாசர் வாழ்ந்திருக்கிறார்” என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை.
அத்துடன் இந்தியாவிலும் பல காலமாக, விக்ரமாதித்யரின் அரசவையில் “நவரத்தினங்களுள்” ஒருவராகக் காளிதாசன் கருதப்படுகிறார்.
சுப்பிரமணிய சுவாமி கூறும் “சந்திரகுப்தர் சர்ச்சை” முடியும் வரை காளிதாசன் காலத்தை நடுநிலை நின்று
நிர்ணயிப்பது கடினமாகவே இருக்கும் என்பது என் கருத்து.
எனினும், மேற்கண்ட சுப்பிரமணிய சுவாமியின் வாதத்தோடு உடன்பட்டால் கூட விக்கிரமாதித்தர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு
முந்தையது என்று கருதுவதற்கு இடமிருப்பதாகத் தெரியவில்லை.
ஆகையால், காளிதாசர்-குமரீலர்-மண்டனர்-சுரேஸ்வரர் சான்று சங்கரர் காலத்தைத் துல்லியமாக நிரூபிக்கப் பயன்படாவிடினும்,
இச்சான்ரும் “சங்கரர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு” என்ற தரப்புக்குப் பெரும் பலவீனம் அளிக்கிறது என்றே கொள்ள வேண்டும்.

முடிவுரை: ஆய்வுக்கு எடுக்கப்பட்ட நூற்கள், சில கேள்விகள், எண்ணங்கள்

இந்த ஆய்வில்காட்டப்பட்ட சான்றுகள் முக்கியமாக Hajime Nakamura-வின் “A History of Vedanta Philosophy, Vol. 1 (1999)”-இலிருந்து எடுக்கப்பட்டவை.
அது தவிர, “Journal of Oriental Research, Madras (1929)”-இதழில் திரு தி.ஆர். சிந்தாமணி அவர்கள்
சங்கரர் காலம் பற்றியதொரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.
அதிலிருந்தும், குறிப்பாக வாசஸ்பதிமிச்ரர்-பாஸ்கரர்-பத்மபாதர் குறித்த சான்றுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரம்மசித்தி பற்றிய ஆராய்ச்சி Allen Wright Thrasher என்பவர் எழுதிய “The Advaita Vedanta of Brahma-siddhi (1993)” என்ற நூலில் காணப்படுபவை.
இந்நூற்கள் பயன்படுத்தப்பட்ட முறை குறித்து ஒரு முக்கியமான தகவல்:

நான் இந்நூல்களைத் துணையாகக் கொண்டு தான் சொந்த ஆராய்ச்சி செய்தேன்.
அவர்கள் கூறுவதை மூல நூலைப் பார்க்காமல் கிளிப்பிள்ளையைப் போல, “இவர் சொன்னார், அவர் சொன்னார்” என்று இங்கு திரும்பச் சொல்லவில்லை.
முடிந்த அளவு அவர்கள் கூறும் சான்றுகள் சரியாக உள்ளனவா என்று மூல நூற்களின் துணைகொண்டு பார்த்துவிட்டு,
சரியாக இருந்தால் பக்கங்களைப் படிம வடிவிலும் கட்டுரையிலேயே சுட்டியுள்ளேன்.
மூல நூல்களைப் பற்றிய மேற்கொண்ட தகவல்களை அச்சுட்டிகளின் துணைகொண்டு கண்டுகொள்க.

இது வரை நாம் பார்த்த சான்றுகளின்படி, ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர் காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதி காலத்திற்கும்
கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திற்கும் இடைப்பட்டது என்று நம்ப வலுவான சான்றுகள் உள்ளன.
சிலர் சங்கரர் காலத்தைக் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்று கொள்கின்றனர்.
சிலர், கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இருந்த ஒரு ‘அபிநவ சந்கரருடன்’ நாம் குழப்புவதாகக் கூறுகிறார்.
அப்படியானால், பத்மபாதரும் சுரேஸ்வரரும் ஆனந்தஞானரும் குழம்பியதாகக் கொள்ள வேண்டும்.
அல்லது, ‘அபிநவ சங்கரர்’ போல ஒரு ‘அபிநவ பத்மபாதர்’ இருந்ததாகவும், ‘அபிநவ சுரேஸ்வரர்’ இருந்ததாகவும்,
‘அபிநவ ஆனந்தஞானர்’ இருந்ததாகவும் புதிதாகக் கற்பிக்கவேண்டும்.
கி.மு. 5-ஆம் நூற்றாண்டு தரப்பில் உள்ளவர்களிடம் முறையான விவாதம் நடக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு இரண்டு கடமைகள் உண்டு:

(1) சங்கரர் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என்று நம்புவதற்கு கல்வெட்டின் உருவத்திலோ அல்லது ‘இடைச்செருகல்’ என்று
தள்ளுவதற்கு இடமில்லாத ஆவணத்தின் உருவத்திலோ வரலாற்றுச் சான்று ஏதேனும் உள்ளதா என்று
ஆதாரத்துடன் பொறுமையாக நாம் கட்டியது போல வரிசைப்படுத்திக் காட்ட வேண்டும்.

(2) அது மாத்திரம் போதாது. பின்வரும் கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டும்:

காளிதாசர் காலம் கி.மு 5-ஆம் நூற்றாண்டுக்கும் முன்னது என்று நம்புவதற்குச் சான்று உண்டா?
தர்மகீர்த்தியின் காலம் எது? யீ ஜிங் ஏன் தர்மகீர்த்தியைத் தம் காலத்திற்கு அருகாமையில் வாழ்ந்தவராகக் குறிப்பிடுகிறார்?
பா ஹியன், யுவாங் சுவாங், யீ ஜிங் ஆகியவர்களுடைய காலம் சீன தேசத்து சக்கரவர்த்திகள் காலத்தை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
மூவரின் காலம் முறையே கி.பி. 5-ஆம், கி.பி. 7-ஆம், கி.பி. 7-ஆம் நூற்றாண்டுகள் என்று அறியப்படுகிறது.
தர்மகீர்த்தி கி.மு. 6-ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தார் என்றால் ஏன் பா ஹியனும் யுவாங் சுவாங்கும் தர்மகீர்த்தியைக் குறிப்பிடவே இல்லை?
அத்துடன், பா ஹியன் தர்மகீர்த்திக்கு அண்மையிலும் சற்று முன்னும் வாழ்ந்த பல பௌத்த பண்டிதர்களைப் பற்றி ஒரு பேச்சு கூட எடுக்கவில்லையே?

இது வரை கி.மு. 5-ஆம் நூற்றாண்டு தரப்பிலிருந்து வரும் வாதங்கள், மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலின் உருவத்தில் வந்ததில்லை.
மாறாக, அபத்தமாகச் சிலர் (குறிப்பாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் Theosophical society-ஐச் சேர்ந்திருந்த Subba Row என்பவர்)
“சங்கரரின் காலம் புத்தர் நிர்வாணம் அடைந்து 52 ஆண்டுகளுக்குள்” என்றும்,
“சங்கரர் பரமகுருவாகிய கௌடபாதர் புத்தருக்கும் முன்பு வாழ்ந்தவர்” என்றும் கூறுகின்றனர்.
இப்படி இருக்கச் சற்றும் வாய்ப்பே இல்லை.

யீ ஜிங் “ஆதி காலத்தில் நாகார்ச்சுனர் முதலானோரும், மத்திய காலத்தில் வசுபந்து முதலானோரும்,
அண்மைக் காலத்தில் தர்மகீர்த்தி முதலானோரும் பௌத்த மதம் செழிக்கப் பல தொண்டுகளைப் புரிந்துள்ளனர்” என்று குறிப்பிடுகிறார்.
ஒரு 50 ஆண்டு காலத்தை “ஆதி காலம், மத்திய காலம், அண்மைக் காலம்” என்று மனநோயாளி கூட பிரிக்க மாட்டான்.
இத்தகைய நகைக்கத்தக்க விதண்டாவாதங்களை மாற்றுத்தரப்பில் உள்ளவர்கள் இனி தவிர்க்க வேண்டும்.

இன்னொரு ஆட்சேபத்தை ஒரு நண்பர் எழுப்பினார். அதாவது
“ஆதி சங்கரர் காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்குப் பின் என்று கூறிவிட்டால்
இந்து மதம் கிறித்தவ இசுலாமிய மதங்களுக்குப் பிறகே தோன்றின” என்று புனித தோமையாரைப் பின்பற்றும் சிலர் கூற இடமிருக்குமாம்.
சங்கரர் தம் பாஷ்ய நூல்களில் ஏகப்பட்ட சுருதி, ஸ்மிருதி, இதிகாச, புராண, பகவத் கீதா மேற்கோள்களையும்,
பல ரிஷி வாக்கியங்களையும், த்ரமிடர், டங்கர், பர்த்துரு பிரபஞ்சர், கௌடபாதர் முதலான ஆச்சாரியார்களையும் மேற்கோள் எடுத்துள்ளார்.
மேலும், கீதா பாஷ்ய முன்னுரையில் சங்கரர் கீதைக்கு தம் காலத்திற்கு முன் பல பேர் பாஷ்யம் செய்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார்.
இதிலிருந்து, வேதம், கீதை, உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்ட வேதாந்த மதம் என்பது வியாசர் காலம் தொடங்கி
ஒரு பெரும் தொடர்ச்சியான ஆறாக ஓடிக்கொண்டிருப்பது சிறுவர்களுக்கும் விளங்கும்.
அது ஆபிரகாமிய மத வெறியர்களுக்குப் புரியவில்லை என்றால் அவர்களைப் பார்த்து உலகம் சிரிக்கும் என்பதில் ஐயமில்லை.

“சங்கரர் கி.பி.550 தொடங்கி கி.பி. 838 என்ற கேள்விக்கிடமில்லாத வரையறைகளுக்குள் எழுந்தருளினார்” என்பது தவிர,
இன்னும் துல்லியமாகக் கணக்கிடுவது மேற்கொண்டு ஆராய்ச்சி செய்தாலொழிய அரிது என்றே தெரிகிறது.

துல்லியமாக பொ.பி 780 – 820 என்பதற்கு ஒரு உறுதியான அகச்சான்று உள்ளது.

இந்திய அரசும் இந்த வருங்களையே அதிகார பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் அடிப்படையிலேயே 1980ல் சங்கரரின் 1200வது பிறந்த நாள் கொண்டாடப் பட்டது.

———————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: