ஸ்ரீ பரகாலர் அந்தாதி –ஸ்ரீமான் கண்ணபிரான் முதலியார் —

சுவை யார்ந்த சொல் லுந்து கடீர் பொருளும் தொடை நடையும்
சவையார் மகிழ அமைத்த தோர் அந்தாதி சதுர்க் கவி மன்
செவையார் பரகால வித்தகற்கு ஓத என் சிந்தை நிற்பாய்
குவையார்ந்த கீர்த்தி ராமானுஜர் இது என் கோரிக்கையே –1-

ஆசு மதுர சித்ர விஸ்தார
செவை -செவ்வாய் -செம்மை –
குவை -கூட்டம்

வான் பிடிக்கும் பொருள் வையம் பிடித்து உய்ய வாச மிகும்
தேன் பிடிக்கும் பொழில் அம் குருகூர் என்னும் தெய்வப்பதி
தான் பிடிக்கும் சடகோபர் சரோருகத்தாள் பரவி
நான் பிடிக்கும் பரகாலர் அந்தாதியை நாட்டுவனே –2-

வான் -ஆகுபெயர் -நித்ய ஸூ ரிகள்
தேன் -வண்டு

வேங்கடம் கொண்டவரே அவர் உள்ளத்துக்கு விளங்கி யன்னோர்
தாம் கடங்கட்கு நலந்தேட நன்று அருள் தாயகனாம்
வேங்கடவா பரகாலன் அந்தாதி விளம்ப என் தன்
தீங்கட நா விருந்து ஆதரிப்பாய் சுவை தேங்கிடவே –3-

வேங்கடம் கொண்டவர் -வெவ்விய கடமாகிய தேகத்தைக் கொண்டவர்கள்
தாயகன் –கடவுள் -சர்வமும் தந்தவன் –
தீங்கு அட -தீங்குகள் நீங்க

நம் பொற் குல ஆரியர் கோன் எதிராசர் நயந்து அளித்த
அம் பொற் குமாரர் எம்மான் பெமான் சந்ததியாய்ப் பாடி வாழ்
எம் பொற் குல ஆரியர் வேங்கடாச்சாரியர் இன்னிசையார்
தம் பொற் கமல மலர்த்தாள் எனது தலைக் கொள்வேனே –4-

துப்பு ஆர -தெளிவு பெற -அறிவு விளங்க

ஒப்பார் இவர்க்கு இல்லை என்று ஓத ஓத உவர்க்கடல் சூழ்
இப்பாரில் எய்தி நம் மால் சமயத்துள்ள ஏற்றம் முற்றும்
துப்பார ஓதித் துணை புரிந்து என்னைத் துலங்க வைத்த
அப்பாரியர் தம் அரவிந்தத் தாள் எம் அக விளக்கே –5–

—————–

திருமங்கை நாதன் திருப்புகழ் நாளும் சிந்தித்து இருந்து
தரு மங்கை யாள்வீர் எனும் போதனை தனைச் சாற்று நல்ல
கரு மங்கை ஏந்து மிக்கோர் இனம் நம்மைக் கடைத்தேற்ற வந்த
திருமங்கை மன் பரகாலன் திருப்பதம் சேவிப்பமே –1-

திருமங்கை நாதன் -ஸ்ரீ யபதி -பகவான்
தருமம் கை ஆள்வீர் -ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி வாழும் சேதனரே
நல்ல கருமம் -ஸத் கார்யம்

சேவேறும் ஈசன் திருக்கைத் தலத்தினைச் சேர்ந்த அந்தப்
பூ வேறு மண்ண றலைத் துயர் போக்கிய புண்ணியன் தாள்
நா வேறு செஞ்சொல் பனுவல் தந்து ஏத்து நல் ஆடல் எனும்
மா வேறு நம் கலிகன்றிப் பிரான் காண் நமக்கு அரணே –2-

சே -ரிஷபம்
ஏறு -வாகனமாக ஊர்ந்து செல்லும்
அந்தப் பூ ஏறும் அண்ணல் -உந்தித் தாமரையின் நின்றும் போந்த நான்முகன்

நல் திருமங்கை மன் ஆலிக் குறையலூர் நல் பதியில்
பற்று கலி ஒரு முந்நூற்று எட்டில் பெரும் பாக்யம் சேர்
கற்ற நள வாண்டு கார்த்திகை மா மதிக் கார்த்திகையில்
உற்ற நல் சார்ங்க அம்சத்துக் குருவில் உலகு உய்யவே –3-

கற்ற -பழகிய -தெரிந்த
குருவின் -வியாழக் கிழமையில்

உலகில் பொருள் சேர் இறைவன் புகழே யுறு துணை மற்று
இலகும் துணை வேறு இல்லை இஃது உணராது இகல் புரியும்
கலகத்து இறங்கல் இழிவு என்றனன் பரகாலன் முந்தை
அலகின் மறையின் அறுதியைக் கண்டு உளத்து அன்பு கொண்டே –4-

இகல் -போர் வாதம்
அலகு இல் -கணக்கில்லாத பல
அறுதி -முடிவு

அன்பின் பரிசு அறிவிப்பான் புவிக்கண் அவதரித்த
இன்புருவாய குருகூர் எதீசர் இசை மறையாம்
என்பும் உருகும் அவ் வின் தமிழ்க்கு ஆறு அங்கமேய அருள்
அன்பால் எழிலாலி அண்ணல் அடியேனை ஆதரியே –5–

பரிசு -தன்மை
எதி ஈசர் -உலகப் பற்று முற்றும் துறந்த தலைவர்
ஏய -பொருந்த

ஆதரம் கூற அவரைக் கணமேனும் அமர்ந்து நின்னை
மாதரங்கள் சூழ் தராதலத்து எண்ணிலன் மாசுடையேன்
மாதர் அம் கண் வலைப்பட்டு உழல்வேன் எனை மன்னித்து அருள்
சீதரருக்கு ஏற்ற திருவுடையாய் மங்கைத் தேசிகனே –6-

மா தரங்கம் -பெரிய கடல்

தேவர்கள் போற்றும் திரு அரங்கேசர் திருத்தளிக்கு இங்கு
ஆவன வெல்லாம் அமைத்து இசை வாய்ந்த நின்னாள் வினை தான்
ஏவருக்கு உண்டென் இழுக்கு ஒழித்து ஆள் மங்கை ஏத்த வந்த
வேதனே நினையே நம்பினேன் அருள் செய் வள்ளலே–7-

தளி-கோயில்
இசை -கீர்த்தி
வாய்ந்த -கொண்ட
ஆள் வினை -முயற்சி
ஏவருக்கு -பிறர் எவருக்கு

வள்ளற்றமிழும் வளம் திகழ் பண்ணும் வளர் மறையும்
மள்ளற் புவியும் மகிழ் வான் தலமும் மணம் பெற்றன
விள்ளற்க்கு அரிய பெரும் புகழான் மங்கை வேந்து அருளும்
உள்ளற்கு இனிய மொழி ஆயிரம் இங்கு உதித்த பின்பே –8-

வள்ளல் -வளமை
மள்ளல்-வளமை -செழுமை
வான் தலம் -பரமபதம்

பின்னை மணாளனை வாள் வலி காட்டிப் பிறங்கு நலம்
தன்னை அடைந்த தயா நிதியே இத் தரா தலத்தில்
உன்னை நினைக்கும் உபாயம் உறா வகை ஒங்க நின்றே
என்னை வருத்தும் கொடும் பிணியைச் சீறித் தீர்த்து அருளே –9-

பிறங்கு -விளங்கும்
ஈர்த்து அருள் -ஒழித்து அருள்

ஈர் ஒளியே முன் இருந்தன மூன்றாய் இலகினவால்
வேர் ஒளிருஞ் சனனத் தரு வீழ்த்தி விளங்கின சீர்
கார் ஒளி செய் பொழில் மங்கை வரோதயன் கண்டு அளித்த
பேர் ஒளியாய பெரிய திருமொழி பேறு உற்றதே –10-

ஈர் ஒளி -இரு சுடர் -ஸூர்ய சந்த்ரர்கள்
வேர் ஒளிரும் -வேர் ஊன்றிய
சனனம் தரு -பிறவியாகிய மரம்

பேயிருக்கும் பெரு வெள்ளம் விண் மீது பெருகிய
போதாய் இருக்கும் விதம் ஆதரித்தானை விட்டு அந்நியர் பால்
போய் இருப்பீர் மங்கை நாதன் புகன்றதைப் போற்ற கில்லீர்
ஆய் இருக்க அங்கு ஆன் மணை வெந்நீராட்டுதல் தக்கதன்றே –11-

பே -நுரை
ஆய் -தாய்

தத்துவச் செம் பொருளாயும் தருமம் தனைக் கை யுற்றீர்
ஒத்த மெய் ஞானம் யுடையீருடனே யுலகுரைக்கும்
வித்தகன் ஆலிப்பதியான் குறையலூர் மேவிடுவீர்
சித்தம் களிக்கச் சிறந்திடுவீர் ஒரு தீது இன்றியே –12-

தீ வினையேனைத் திருத்தித் திருக்கறச் சிந்தை வந்து
மே வினையாயின் மிளிர்ந்திடுவேன் மெச்சும் வித்தகன் சேர்
காவினை ஏந்தும் திருவாலி உற்ற என் காவலவா
நீ விசை மா ஊர்ந்து வாராய் மனத்துயர் நீங்கிடவே –13–

திருக்கு குற்றம்

நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் நேர்ந்தவர் பால்
தார் மேவு நல்லதோரா வழக்கன்று இருத்தாளூதுவான்
ஊர் மேவு சாயை பிடிப்பான் உயர நின்றே தொங்குவான்
ஏர் மேவிய இந்த நால்வரைத் தோள் துணை ஏற்றனையே –14-

தோள் துணை -பக்க சகாயம்

ஏற்றமுறும் திரு நாதன் திருவடி எண்ணி வெறும்
மாற்ற முறும்பாகிய மதத் தும்பியின் மத்தகத்தை
வீற்றமுறப் பிளக்கும் சிங்கமாகும் உன் வீரம் தன்னில்
தேற்ற முற அருள் மாரியாம் தெய்வ செகாதிபனே –15-

வெறும் மாற்றம் -பயன் இல்லாத சொல்
தும்பி -ஆனை
வீற்றம் -விளக்கம்

செப்பும் குமுத வல்லி நங்கை மேவும் செழும் கரும்பே
தப்பும் வழி இன்றி வெந்துயர் வாரியில் தத்தளித்து இங்கு
அப்பும் விழிகள் பேர் ஆறாகப் பெருக அழுது அழுது
துப்பும் இழந்து அலைகின்றேன் துணை புரி தூ மணியே –16-

புரிகின்ற பால் வாய்ப் பிறைச் சேய் மருங்கில் பொருந்த வந்தி
வருகின்ற மேல் திசை மாதழும் வேளை நம் மங்கையர் கோன்
அரி யொன்று தொங்கற்கு அவா வுறுவார்கட்க்கு அமைந்த வெல்லாம்
தெரிப்பா னிதோர் பனி வாடை புகுந்து சிவண்கின்றதே –17-

பிறை சேய் -இளம் சந்திரன்
தெரிப்பான் -விளக்க
சிவண்கின்றது -சமீபிக்கின்றது

சிவணிய தீ வினை தீட்டிய நாளிவை சேர்ந்தெமை இப்
புவனியில் சன்மப் புழுதியினால் இட்டுப் போக்கிடுமோ
பவனியில் காழிப் பதியானை வென்ற நின் பைஞ் சொற்களாம்
அவனில் பெரிய திருமொழி சேர்ந்த பேர் அன்பரையே –18-

சிவணிய -அடைந்த நெருங்கிய
தீட்டிய -எழுதிய -தலைவிதி
சன்ம புழுதி -பிறவியாகிய வயல் நிலம்
காழி -சீர்காழி
பதியான் -சம்பந்தர்

அனலைப் பிளந்தோர் மதிக் கொழுந்தாக்கிய தன்றி அன்றில்
பனையைப் பிளவார் துனியைப் பிளக்கும் பைந்தார் பயவார்
இனலைத் தரு வெம் பவக் கிழியைப் பிளந்து இன்பு அளிக்கப்
புனலை யுடைய குறையலூர் போந்து அருள் புண்ணியரே –19-

அனல் -தீ –
மதி கொழுந்து -இளம் சந்திரன்
அன்றில் பனை -அன்றில் பட்சி வாழும் பனைமரம்
துனி -மன வேதனை
பயவார் -தர மாட்டார்
இன்னல் –துன்பம்
பவம் கிழி -பிறவியாகிய கட்டு

புலஞ்சேர் கழி முகப் பொன் மங்கையாளன் புகன்ற வின்ப
நலஞ்சேர் திருமொழியாய் திருமாலை நமது கரத்
தலஞ்சேர் கனி யிற்ற றரநா மவன்றா டலை வைத்திலம்
வலஞ்சேர்ந்து இனிது வணங்கில நன்றி மறந்தனமே –20-

புலம் -வயல்
கழி முகம் -நீர்க் கால்வாயை யுடைய
கரம் தலம் சேர் கனி இல் -உள்ளங்கை நெல்லிக் கனியைப் போல்

மறந்தும் புறம் பணியாத திரு மங்கை மன் குலத்தில்
பிறந்தும் வயிற்றுப் பிணிக்கே திரிந்து பிறருக்கு அடிமைத்
திறந் தும்பியில் விழைகின்றோம் எவ்வாறு இனிச் சீர் பயின்று
சிறந்தும் புகழில் இருந்தும் விளங்குவஞ் செப்புமினே –21-

தும்பியில்- வண்டைப் போல்
விழைதல் -விரும்புதல்

செப்பம் உணராத தீயர் பொருளைத் திரை கடல் நீர்
உப்பு என்று மா முகில் உண்டு நன்னீர் செய்து உயிர்களுக்கு இங்கு
எப்படி தந்து பயன் பெறும் அப்படியே அடைந்து
நற் படி நல்கிப் பயன் அளித்தான் மங்கை நாயகனே –22-

நாயகனாய் நின்று நந்தகோபன் தனகர் புரந்த
தாயகன் பொன்னடி யின்னே தழிஇச் சுகஞ்சாரும் என்றான்
தீ யக வேள்வி தினமும் வளர்க்கும் திருவாலி நாட்
டேயவன் தூயவன் வாள் கலிகன்றி எமது இறையே –23-

இன்னே -இப்பொழுதே
தீ அக வேள்வி -அக்னியைக் கொண்ட யாகம்
ஏயவன் -வந்தவர்

இறையின் நிலையும் உயிரின் நிலையும் இயறடையாம்
குறையின் நிலையும் நெறியின் நிலையும் குறி பயனாம்
நிறையின் நிலையும் பரகாலர் சொன்ன நெறியின் படி
மறையின் நிலை பொருள் ஏரி நமது மயல் அறுமே –24–

இயல் தடை -பொருந்திய மயக்கம் -அசித்து

மயிலின் குண முணர் காலம் பெறாத இம்மான் விழியாள்
செயல் பிறிது ஒன்றும் புரிகிலாள் ஆலித் திரு நகரான்
பெயரே இராப்பகல் பேசுகின்றாள் என் சொல் பேண கில்லாள்
நயனோ விது மங்கை வேந்தற்கு அனை நிகர் நங்கையரே –25-

மயல் -காம இச்சை
நயனோ -நியாயமோ

நறை சேர் பசும் துளபத் திரு மார்பர் நளின வடி
நிறை சேர் மனத்தில் இருத்திய மங்கை மன் நீள் அலங்கல்
பிறை சேர் நுதற்கு இன்று நல்கிலர் நைந்து உளம் பித்தாயினள்
கறை சேர் ஒளிர் வாள் பரகாலர்க்கு ஈது கழறுமினே –26-

நறை -தேன்
நளினம் -தாமரை
நிறை -கலங்கா நிலை
அலங்கல் -மாலை
கறை -இரத்தக் கறை

கரம் சிரம் சேர்த்துக் கடும் பூசலிட்டுக் கடல் உலகைத்
திரம் பெறு சொல்லால் உய்வித்ததும் பொய் என்று செப்புதுமோ
வரம் பெறு நல் குறையல் பதி போய் வசையாடுதுமோ
தரம் பெறாப் பைதலை நேரற வேட்டேற்றுத் தஞ்சனையே –27-

பைதலை -இளம் பெண்ணை
ஏடு ஏற்றல் -மடலூரச் செய்தல்
தஞ்சன் -சகாயன்

தகு மறை ஆயிரத்திற்கும் அலங்காரம் தண் தமிழுக்கு
நிகரறு பாயிர நூற்கெலாம் தாய் நிகழ் நாற் கவிக்குத்
திகழ் படிச் சந்தந் திசைக்கு யரும் தீபம் திரு மங்கை மன்
மகிழுறும் வண்ணம் திருவாய் மலர்ந்து அருள் வான் கவியே –28-

வாசக் குழலாள் குமுத வல்லிப் பெயர் மாதர் அதி
நேசத்துடன் நிழல் போல் வாழ்வது கண்டு நிற்கும் கொலோ
பாசத்தொடு மீளும் கொலோ பரகாலன் பற்றி விடும்
தேசுற்று ஒளிர் கொக்கின் பின் சென்ற நெஞ்சந் திடத்துடனே –29-

கொக்கு -குதிரை

திரு மடப்பள்ளி திரு நட மாளிகை திண் சிகரம்
பொருவறும் ஆலி நாடன் திரு மண்டபம் பொன் மதிள்கள்
தரு நிகரஞ்சு களஞ்சியம் கொட்டாரம் சார் பணிகள்
பெருமித மங்கை மன் செய்தான் அரங்கற்குப் பெட்புடனே -30-

பெட்பு–அன்பு

பெட்பின் இரு பூதலத்தில் பிறியாது இருந்து எனது
தெட் பமுறத் தொல் வினை வேர் அறுத்தாதி தே வினையே
நட்பில் பணிய வைத்தான் பரகாலன மன்றமர்கள்
கொட் பென்றனை யென் குயிற்ற முடியும் குவலயத்தே –31-

கொட்பு–சூழ்ச்சி
குயிற்றல் -செய்தல்

குறும்பு ஒரு மூன்றும் கெடுத்தனை மெய்த் தொண்டர் கூட்டத்திலே
நறும் புகழ் எய்த இணங்க வைத்தான் ஆலி நன்னகரான்
மறம் திகழ் வாள் கலிகன்றி அருள் மாறி மங்கையர் கோன்
அறம் குலவும் கழல் போது இரண்டும் என்னகத்தனவே -32-

அகத்தை வருத்தும் புற விருள் மாற்றி யருளின யல்ல
சுகத்தை அளித்த பிரான் மங்கை வேந்தன் துணைப் பதங்கள்
இகத்தும் பரத்தும் இத யாலயத்தில் இருத்தி ஐவர்
புகுத்தும் கொடும் செயலில் புகுதாமல் பொருந்துவனே -33-

பொற் பார் கதியடை வான் கானொடு கற் புணரியுமே
நற் பார் மதிக்கக் கொதிக்கத் தவம் செயு நாட்ட மற்றேன்
அற் பால் உலகை யாதரிப்பான் வந்த வாத்தன் மங்கை
சொற் பாவலர் பெருமான் எனக்கும் துணை யாயினனே –34–

ஆத்தன் -துணைவன் பர உபகாரி

நுனியார் இடும்பைகள் முந்தினும் இன்பம் துதைந்திடினும்
கனியார் உளம் கடல் மல்லை நின்றானைக் கழல் வணங்கும்
இனியானை நல் தமிழ் மாலை செய் நீலனை எண்ணலுற்றார்
வினையாயின அனைத்தும் கெடும் ஒண்மை விளையுறுமே –35–

துனி -வருத்தம்
துதைதல் -நெருங்கல்
கனியார் -மனத்தளர்வு அல்லது உற்சாகம் அடையார்
ஒண்மை -நேர்மை

விளைத்து எழும் கீர்த்தி விளங்க வியலிசை மேவ வின்ப
மளைந்த சதுர்க்கவி தந்த பிரான் அருள் மாரி என்னை
வளைந்த வினைத்தொகை யாவும் இனி வருத்தாத வண்ணம்
களைந்து அருள் செய்தான் அவன் கழல் நாளும் கழறுவேனே –36–

அளைந்த -சேர்ந்த கலந்த

கதிக்கு அந்த மார்க்கமோ இம்மார்க்கமோ என்று காசினியில்
விதிக்கும்ப நூல் கற்று உழன்றிடுவீர் மங்கை வேந்தன் இன்ப
முதிக்கும் படி யுரை நன் மொழி தேர்ந்து உம்பரும் பணிந்து
துதிக்கும் பதம் பெற்று நீங்கா மகிழ்க் கட றேயுமினே –37-

கதி -பரகதி -முக்தி
விதிக்கும் -உண்டாக்கிய
தோய்தல் -மூழ்குதல்

தோகையர் அன்னம் கிளி வண்டு எனக்குத் தூது இருந்தும்
வாகையுறோம் என்று என் நெஞ்சம் தனை நம்பி மங்கையர் கோன்
ஆகத்து அணி மாலைக்காக விடாதவனார் எழிலில்
சோகித்து எனையும் தனையும் மறந்து துயக்குற்றதே –38-

வாகை -வெற்றி
ஆக்கம் -மார்பு
விட அஃது -விட ஃது-என நின்றது –தூது விட அந்த நெஞ்சம்
துயக்கு -மயக்கு

துயக்கமில் ஞானத்தவரையும் நன்கு துயக்க வல்ல
மயக்குடை மாயன் மலரடி வாழ்த்தி மயல் அறுத்த
வியக்குறு நம் பரகாலன் விரை கமழ் வீரக்கழல்
நயக்குறும் அன்பருக்கு இலை பிறவித்துயர் நானிலத்தே –39–

வியக்குறும் -மெச்சும்
விரை கமழ் -வாசனை வீசுகின்ற
நயக்குறும் -விரும்பும்

நால் வகை வேத நவில் ஐந்து வேள்வி நயந்து செயும்
மேல் வகை வானவரின் மிக்க வேதியர் மேவி யுறை
சேல் வயலாலித் திரு நகர்ச் செல்வன் திருப் பதங்கள்
போல் வரு நந்தம் பிறவிப் பிணிக்குப் புகல் இல்லையே – 40-

புயல்காள் உரையீர் புனல் ஆலி நாடன் புனிதமுறும்
வியன் மேனி ஒத்திடும் யோகங்கள் நீங்கள் விழைந்து அடைந்த
செயல் தான் கைம்மாறுகவாது செழும் பார் திருத்தவன் போல்
இயன் மாரி பெய்து உலகத்தை வாழ்விக்க இசைந்ததுமே –41-

இசையார் சகத்திர மா முடி யங்கை இனிது அலர்த்தி
மிசையா யிரஞ்சிர நாகம் கவிப்ப விசும்பவிர் பங்
கசமாமென வாயிரம் கண் வளர அரங்கத்து எம்பிராற்கு
இசைவான் பணிகள் இழைத்தனன் மங்கைக்கு இறை இனிதே –42-

சகத்திரம் –ஆயிரம்
விசும்பு அவிழ் -ஆகாயத்தில் பூத்த

இந்திரற்கும் த்ரி யம்பகரற்கும் கஞ்ச வேந்தலுக்கும்
முந்திய வாழ்வில் இருந்து இன்ப வாரிதி மூழ்குவரால்
வெந்திறல் வாள் கலிகன்றி விருப்பின் விளம்பிய நற்
செந்தமிழ் வேதம் ஓர் ஆயிரமும் கற்ற சேதனரே –43–

திரியம்பகன் -சிவன்
கஞ்ச எந்தல்–பிரமன்
வாரிதி -கடல்

சேடேறு செண்பகம் செய்ய செருந்தி செழும் கமுகம்
ஏடேறு தாமரை நன் மணம் வீசும் எழில் பொழிலூ
டாடேறு மா வயலாலைப் புகை கமழ் ஆலி நகர்
ஈடேற வந்த பரகாலன் எங்கட்கு இயல் கதியே –44-

சேடு -இளமை

இயலும் இசையும் இயையக் கவிகள் ஈந்த எம்மோய்
குயில் நின்று ஒளிர் பொழில் சூழும் குறையற் குலபதி யோய்
வெயில் வாள் காலிகன்றி வேந்தே அடியேன் வினை அகற்றிச்
செயலும் குணமும் செவை யுறவே அருள் செய்குவையே –45-

எம் மோய் -எங்கட்க்குத் தாய் போன்றவரே
வெயில் -ஒளி
செயல் -செய்கை

சென்று சின விடை ஏழும் வலி கெடச் செற்று ப்பினர்
மன்றற் குழலி நப்பின்னை தடம் தோள் மருவும் எந்தை
வென்றித் திறனை விளக்கிய மங்கையர் வித்தகனே
என் தன் துயர் ஒழித்து இன்பம் அளிக்க இயைந்து அருளே –46-

மன்றல் -வாசனை
இயைந்து அருள் -இசைவாய்

இலை காய் அருந்தி இரும் கானம் எய்தி எழில் கதிக்கே
அலை சூழ் புவியை வலம் வந்து அனலிடையே அமர்ந்து
நிலை இன்றி ஓடித் திரிவீர் பரகாலன் நேச மிக்கான்
மலைவின்றி அன்னவன் தாள் அடைந்தால் சுகம் வாய்த்திடுமே –47-

அலை -கடல்
அனல் -அக்னி -பஞ்சாக்னி
மலைவு -மயக்கம்

வாயில் இரங்கி வயங்காரம் வீசி வளை சொரிந்து
பயலை யுந்தி யம்மாலை அடைந்து பகர் புவிக்கண்
ஏயனந்தல் விட்டு நின்றனை என் போல் எழில் கலியன்
நேய மிகுந்து வருந்தினை கொல்லோ நெடும் கடலே –48-

வயங்கு -பிரகாசிக்கும்
ஆரம் -முத்து
வளை -சங்கு
உந்தி -தள்ளி
அனந்தல் -நித்ரை

இது கடலுக்கும் நாயகிக்கும் சிலேடை
கடலைப் பார்த்து நாயகி யானவள் –
கடலே திரு மங்கை விஷயமாய் அன்பு மேலிட்டு என்னைப் போல் நீயும் வருந்தினை போலும்
நான் வாய் விட்டுப் புலம்பியது போல் நீயும் ஓ என்கிற கோஷம் இடுகிறாய்
நான் முத்து மாலையை அகற்றியது போல் நீயும் முத்துக்களை வெளியே எறிகிறாய்
நான் என் கை வளையை இழந்தது போலே நீயும் சங்கு இனங்களைச் சொரிகிறாய்
நான் பாயலை -படுக்கையை -நிராகரித்தது போல் -நீயும் -பாயலை -பாயும் அலைகளை -வீசுகிறாய்
நான் மாலை -மயக்கத்தை அடைந்தது போல் நீயும் மாலை -பகவானை -உன்னிடம் கொண்டு இருக்கிறாய்
நான் அனந்தல் -நித்ரையை -விட்டது போல் நீயும் இரவு பகல் ஓயாமல் நித்திரை இன்றிக் கத்துகிறாய் -என்பதாகும் –

கதியாம் கடவுளும் காத்த குருவும் களித்து அளித்த
துதி யாரந்த அன்னையும் அப்பனும் சூழ் தரு சுற்றமும் என்
நிதியாக வந்து எனை ஆளும் கலிகன்றி நீலன் அல்லால்
விதியார் விதிவினைக காணவரோ மெய்ம்மை வித்தகரே –49-

விதியார் -பிரமன்

விளங்கூசலூர் சகடு ஒண் வடம் என்ன என் மெய்யொடு உயிர்
உளங் கூசும் எள்குதல் கண்டும் பாராமுகம் உற்று இருத்தல்
துளங்கூக்கம் அருள் கருணைக்கு மாண்போ சுகம் விளைக்கும்
வளங்கூரு மங்கைக்கு அதிபா எனக்கு வழுத்துவையே –50-

ஊசல்-ஊஞ்சல்
எள்குதல் -வருந்துதல்

வழுத்தவிர் மெய்யடியார் மகிழ்ந்து உள் கொள்ளும் மா மதுரம்
பழுத்தவிர் முக்கனி சக்கரை கற்கண்டு பால் அமுதம்
முழுத்திய பைந்தமிழ் வேதம் உதவிய மூதறிஞன்
விழுத்தவன் மங்கையர் வேந்தன் என்னைக் கை விடான் இனியே –51-

அவிர் -விளங்கும்
விழு தவன் -மேலான தவத்தை யுடையவன்

விரவிய தேசும் வியன் பொறை யோடு விழுப் புகழும்
பரவிய ஞானமும் திண்மையும் வெற்றிப் படைக்கலமும்
திரவியமும் பெருகும் தாரணியைத் திருத்த வந்த
உரவியனார் திரு மங்கையர் கோன் துணை உற்றவர்க்கே –52-

உலகை வருத்தும் கொடும் கலி யாட்சிக்கு ஒடுங்கி நித்தம்
அலகை எனத் திரிந்து அல்லல் கடற்குள் அழுந்தும் என்னை
இலைகைக்கிய நின்னடியர் இனத்துள் எய்த அன்பர்
திலக திருமங்கை நாயக செய்ய அருள் ஈது ஒழித்தே –53-

அலகை -பேய்

தீதறச் சிந்தையில் தூய்மையும் வாயினில் செம் மொழியும்
ஆதரித்தே அறியேன் பாவியாகி அரும் துயரில்
வேதனை ஆர்ந்தனன் வேங்கட நாதனை மேவித் தொழும்
போத எழில் பரகால எனையும் புரந்து அருளே –54-

புதல்வரும் பூங்குழலாரும் புவியும் பொருளும் என்றே
நுதலி இளைக்கு நமக்கு நெஞ்சே கதி நோக்கின் எவர்
உதவுவர் இன்றே கலிகன்றி ஒண் கழல் உற்று இறைஞ்சின்
பதவி உண்டாம் உய்ய நன்கு அவன் கீர்த்தி பரவுவமே –55-

பற்றுக பற்றிலன் பற்றினை என்னும் பணியதனை
நற்றுணையாக நமக்கு விளக்கிய நான் மறையும்
கற்றவனால் இக்கடி நகரான் கலிகன்றி மலர்ப்
பொற் திருப்பாதம் இதய அம்புவத்தில் பொருத்துவமே –56–

பணி -கட்டளை
கடி -காவல்

பொற்புறு முத்தமிழும் மறை நான்கும் புகழ் அறத்தின்
வற் புறு மார்க்கம் கண் முற்றும் தெரிந்தவன் வாள் கலியன்
அற்புத நாற் கவியாளன் நன் நாமம் அறிந்து கல்லார்
நற் பதம் எய்தார் ஒருவார் பிறவி நடலையுமே –57-

ஒருவார் -நீங்கார்

நலனறு நீசச் சமயங்கள் ஒழிந்தன நாரணனை
வலனுறக் காட்டும் சுருதி மகிழ்ந்தது மங்கையர் கோன்
பொலனுறு செந்தமிழ் வேதம் பொலிவுறப் பூ வுலகில்
பலனுறு மெய்யடியார்கள் செழித்துப் பரவினரே –58-

பவக்கடன் நீந்திப் பராங்கதி பெற்று உயும் பாக்யமாம்
தவக்கடலில் இளைக்காமல் சகத்தில் சலனமுறும்
அவத் தொழில் மேல்கொண்டு அலையும் நெஞ்சே அருள் மாரி அம் பொன்
நிவக் கழல் என்னும் புணையை யடைய நினைகுவியே – 59-

நில உலகில் பிறக்கும் வேலை நீங்கில நீலன் என்னும்
நலன் அமர் ஆலி நன்னாடன் கலிகன்றி நாந்தகக் கைத்
தலன் அருள் ஒண் தமிழ் தங்கு மனமிலந் தாபம் இன்றி
வலனுற வாழ்வது எவ்வண்ணம் மனமே வகுத்துரையே –60-

வங்கக் கடலை மதித்த முதத்தை வரர்க்கு உகந்து
பங்கிட்டு அருளும் பரமற்கு இனிய பராங்குசற்குத்
துங்க விழாவொடு அவன் தரும் வேதம் துலங்க வைத்த
மங்கைக்கு அரசே அடியேன் மனப்புன் கண் மாற்றுவையே–61-

மதித்தல் -கடைதல்
துங்கம் -பரிசுத்தம்
புன் கண் -துன்பம்
மாற்றல் -நீக்கல்

மான் விழி மைக்குழல் வாணுதல் வேய் தோள் மதி வதனத்
தேன் மொழியார் மயலில் சிக்கி வீழ் பொருள் ஓடி அந்தோ
நோன்மை கெடப் பலர் ஏச நின்றேன் மங்கை நோற்க வந்த
கோன்மையனே அடையார் சீயமே நற் குண அம்புதியே -62-

குண நலம் கொண்டார் குறை கழல் நாடேன் குவலயத்தில்
பண நலம் கொண்டார்க்கு அடிமையாய் ஓர் நற் பயனும் உறா
வண நலம் குன்றி வருந்தி யுன் தாள் மலர் வந்து அடைந்தேன்
மண நலம் சேர் பொழில் மங்கை மன்னா நல் வழி அருளே–63-

வசுந்தரை மீது அடியேன் பால் வரவு நல் வார்த்தை சொல்லிப்
பசுத் திருப்பாதம் என் சென்னியில் சூட்டிக் கண் பார்த்து மனம்
கசிந்து உரை விண்ணப்பம் கேட்டு அருள் செய்யவும் காதலிப்பாய்
வசந்த முள்ளிச் செழுந்தார் வயங்கும் புய மாதவனே –64-

மா தவத்தால் பெற்ற என் மகள் நின் முள்ளி மா மலர்த் தார்க்
கே தவம் செய்து உடல் எய்துலாள் வேறு பெண் எங்கட்கிலை
நீ தயை கூர்ந்து அருள் செய்வாய் விரைந்து நெடும் புகழ் சேர்
ஏதமில் மங்கையர் வாள் கலிகன்றி எனும் துரையே –65-

எங்கள் அரங்கற்கு தொண்டர் அடிப் பொடி ஏந்தல் கொண்ட
துங்க மதிள் பணியின் குறை தீர்த்தவன் துய்து அருள் பெட்ரா
எங்கள் நெடும் புவிக்கு இன்னருள் செய்த யாரும் தவனே
மங்கையர் கோனே அருள் மாரியே உனை வாழ்த்துவனே –66-

வாய் வுன்னை அல்லால் வாழ்த்தாது உன் தாளே வணங்கும் தலை
ஆயும் உன் திருப் புகழே செவி கேட்கும் கண் ஆர்ந்து உனையே
நேயம் கொள்ளக் காணும் வண்டு அறை மா நீர் நெடிய மங்கைத்
தூயவ நால் நிகமத் தமிழ் தந்த சுபா கரனே –67–

சுபா கரன் -சுபத்தை யுடையவர்

சுகா நந்தமாய் நெடியோற்கே உயிர்கள் ஓழும்பு என்று உணர்
விகாத மில் ஞானம் தனால் ஐம் பொறி வாசல் வேய்ந்த வன் தாள்
மகாரினடைந்து இரு பற்று இன்றி இருத்தலே மா தவம் காண்
தகாது பிறிது என்றனன் மங்கை வேந்தன் தரா தலத்தே –68–

தொழும்பு -அடிமை
விகாதம் -வேற்றுமை
வேய்தல் -மூடல் -அடைத்தல்
மகாரின் -பிள்ளைகளை போலே

தனம் கொண்ட பான் மணம் வாய் நீங்கிற்றில்லை யத் தார் குழலோ
வனம் கொண்ட என் கரத்தின் அணையேயினும் வர்த்திப்பதும்
மினுங்குந்த மங்கை மன் கண்ட ஊர் எல்லாம் விலை கொளும் அக்
கனங்கொண்ட வாள் விழியாள் சென்றது எங்கன் கடுஞ்சுரமே –69–

தனம் -கொங்கை -முலை
குந்தம் -வேலை
சுரம் -பாலை வனம்

ககனத் திருவிடமோ வட வேங்கடக் கல்லிடமோ
புகனற் கமலத் தடவிடமோ பணிப் பெண்ணிடமோ
சுக மிக்குறு குறையற் பதியா மங்கைத் தோன்றல் வந்த
உகப்பார் இடமோ விடங்காவின் நின்ற ஒருவருக்கே –70-

பணி -பாம்பு
பணிப்பொன் இடம் -நாக லோகம்

ஒரு வழி நில்லாது உழலும் மனம் தனை ஓர்ந்து அடக்கிப்
பொரு வறு மங்கையர் கோன் பரகாலன் தன் பொற் பாதத்தை
மருவுறு வைப்பின் இகத்தும் பரத்தும் மகிழ் வுறலாம்
கரு வரு மார்க்கம் நமைத் தொடராது கடந்திடுமே –71–

கதி தரும் அஷ்டாக்ஷர மந்த்ரத்தைக் கண்டு கொண்டு
மதி தரும் தூய நலத்தை அடைந்து மயர்வு ஒழிந்து அத்
துதி யுறும் பேற்றை நமக்கு அறிவித்தான் சுகம் தழைத்து
வதி தர வாள் கலிகன்றி குறையலூர் மன்னவனே –72-

வதிதர -வாழ

மன்னிய வேம்பின் புழு வேம்பினை விட்டு மற்று அருந்தா
துன்னிய நாயேன் உனது தாள் அன்றி வேறு ஓன்று உகவேன்
துன்னிய வென் சோர்வு அற அருள்வாய் நற் சுடர் அறிவே
மின்னிய வேல் வலவா பரகால விசாதரனே –73-

விசாரதன் -ஞானவான்

விதித்த வுருவார் பிறவியில் இன்னும் வியன் உலகில்
உதித்து நெகிழ என்தனை எங்கு நீக்குதியோ என யான்
மதித்து வெருவி இரு பாடு எரி கொள்ளி வைகு எறும்பில்
பதைத்து உள் உருகா நின்றனன் பார் மங்கை பார்த்திபனே –74-

பாழ்த்த பிறவியில் இன்னம் எனை எங்கு பாரிடத்தே
வீழ்த்தி விடுவையோ என்று மருண்டு வியாளத்துடன்
காழ்த்த ஒரு கூரையின் கண் பயிலவே கட்டுணல் போல்
வாழ்த்து பரகால வாடுமென் வாட்டத்தை மாற்றுவையே–75-

வியாளம் -புலி

மாற்றமுள யாகிலும் சொல்லுவன் மக்கள் மா நிலத்தில்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று உளம் தொல்லை யுற்றே
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அடியன் நான் அஞ்சுகின்றேன்
தேற்றி அருள்வாய் அருள் மாரியாம் எங்கள் தேசிகனே –76-

தேற்றமுடைய திருவாலி மைந்த சிதா நந்தனே
சீற்றமுள வாகிலும் செப்புவன் மக்கடிண் புவியில்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று அஞ்சித் தொல் கடலில்
காற்றத்திடை சேர் கலவர் மனம் போல் கலங்குவனே –77-

சிதா நந்தன் -ஞானாநந்தன்
கலவர் -கப்பலோட்டிகள்

கள்ளர் மரபில் உதித்து மெய்ஞ்ஞானம் கடைப் பிடித்தோய்
கொள்ளக் குறையா இடும்பைக் குழியில் குமைய நெஞ்சம்
தள்ளிப் புகப் பெய்தி கொல் என்று அதற்கு அஞ்சித் தத்தளித்து
வெள்ளத்திடை சேர் நரியினம் போன்று விதிர்த்தனனே –78–

விடை ஏழ் தழுவும் விமலற்க்கு இனிய நல் வித்தகனே
மடை நின்று அலரும் வயலாலி மைந்த மா மங்கை யன்பா
இடையன் எறிந்த மரம் ஒத்து இராமல் என்னை அணுகி
அடைய அருள் புரிவாய் யுன் அருளானவிர் தரவே –79-

அவிர் தர –விளங்க

அவிரும் புரவியும் தேரொடு காலாள் அணி அமைந்த
சிவிகையும் சேனைத் தொகையும் உள பெரும் திண்ணியனே
அவியை நிகர்த்த இன் சங்கத்தமிழ் இன்றனன் அற்புதமார்
கவிகள் ஒரு நான்கு நல்கும் கலிகன்றி காத்தருளே –80–

அவிரும் -விளங்கும்

காத்தற்குத் தானே கருதாது இருப்பினும் காதல் மிகப்
பூத்து உன் தன்னையே நினைந்து நைவேற்கு ஒரு பூங்கணையான்
காத்திரம் கொண்டு வலி செய்ய எங்கன் கமித்திருப்பேன்
கோத்த முள்ளிக் கொழும் கண்ணி யம் மங்கையர் கோமகனே –81-

காத்திரம் -ஷத்திரம் வைராக்யம்
கமித்தல் -பொறுத்தல்

கோதற்ற பண்ணும் பரதமும் கல்வியும் கோக் கவியும்
ஓதற்கு அடியேன் உறும் போது எளிதில் உதவ அருள்
தாதுற்ற முள்ளி யம் தாராடு மார்ப தயா நிதியாய்
வாதற்று எழுதா மறையைத் தமிழ் செய்த வண்மையனே –82-

வண்ணப் புவியொடு வானும் புனலும் வளி கனலும்
எண்ணும் எழுத்தும் எக்காலத்தும் மாறாது இறைஞ்சும் அன்பர்
கண்ணும் கருத்தும் களிக்க வரும் பரகால அருள்
பண்ணும் செயலும் பழகும் குணமும் பயன் உறவே –83-

பண்ணின் மொழியார் பைய நடமின் பாடு அடைந்து
கண்ணும் சுழன்று இழி பீளையும் ஈளையும் கண்டீர் என்று
துண்ணென ஏசுமுன் துக்கச் சுழலை துணிப்பதற்கு
விண்ணும் பரவு நம் மங்கையர் வேந்து உரை மெய்க் கொண்மினே –84-

களை -கோழை
சுழலை -சூழ்ச்சி

மெய்மை இழந்து விரி குழலார் வலை மேவி என்றும்
பொய்மை புகன்று புரை பல செய்தி வண் புன்மை யுற்றேன்
நொய்மை கெடக் கடைக் கண் பார்த்து அருள் உண்மை நூல் பயன்றோ
ஐமை முகில் தங்கும் அம் பொழில் மங்கைக்கு அதிபதியே –85-

அன்னைக் கலமுத்தனையைக் குனி கோன் அணையைத் தரும்
அன்னைக்கும் அல்லவே மன்னனைக் கன்றி யடுத்து அளித்த
பின்னனைக்கும் உதவாப் புளால் எய்தினன் பீழை யந்தோ
துன்னிடர் தீர்த்து அருள் மங்கை வரோதய சோபிதனே –86-

முத்து அன்னை -கரும்பு
குனி -வளைக்கும்
கோன் -மன்மதன் -இவன் அன்னை -ஸ்ரீ லஷ்மி -அவள் அன்னை -கடல்
மன் அன்னை -ஸாஸ்வதமான தாய்
அடுத்து அளித்த பின் அனைக்கும்-அடுத்துக் காத்த பிற்பட்ட தாயான காகத்திற்கும்
இதற்கும் உதவாத பட்சி -குயில் -இந்தக் குயிலால்
பீழை -துன்பம்

சோதனை செய்வது நீதம் அன்று என் தன் உரி சொழிய
வாதரம் கூர் அன்னையில் புரந்தாள்வது அழகு கண்டாய்
பூதலத்தே அரண் புக்கவர் தம்மைப் புறக்கணித்தால்
சூது என் எவ்வாறு உய்குவேன் பரகால நீ சொல்லுவையே –87-

சொல்லிய மேம் பொருள் செல்ல விட்டு உண்மை துணிந்து உணர்ந்து
நல்லியலாம் பரி சோர்ந்து கொண்டு ஐம்புலன் நன்கு அடக்க
வல்லவர் போற்றும் பரகால இவ்வேளை வந்து எனது
புல்லறிவு வேக அருள்வாய் ஒரு வரம் புங்கவனே –88-

புகலும் திறம் கொண்டு நின் கழற்குத் தொண்டு புல்கி யற்றும்
பகரஞ் சிறிதும் இல்லாக் கொடியேன் எனைப் பார்ப்பவரார்
திகழும் கருணைக் கடலா நினை யன்றிச் சீர்மை என்றும்
மிகு நல் திரு மங்கை வேந்தே இணை யறு வித்தகனே –89-

பகரம் -விளக்கம்

விறல் சேர்ந்த சித் அசித்தோடு ஈசன் என்று விளம்புறுமம்
மிறல் சேர்ந்த தத்துவ மூன்றின் முடிபை விழைந்து உணர்ந்த
திறல் சேர்ந்த மெய்த் தொண்டர் சிந்தையின் ஆளும் திகழும் எங்கள்
அறல் சேர்ந்த நீர் மங்கை வேந்தே எனையும் நன்கு ஆண்டு அருளே –90-

அறல் -கரு மணல்

அம்பர மூடறுத்து ஓங்கி உலகை அளந்த பிரான்
செம்பத மா மலர் சென்னியில் ஏந்தும் திருத் தொண்டரே
பம்பரம் போல் சுழலும் பிறப்பின் பெரும் பற்று அறுப்பர்
நம்புமின் என்ற பரகாலன் நங்கட்க்கு ஞான வைப்பே –91-

ஞாலம் தனில் நங்கைமீர் நீவீர் பெண் பெற்று நல்கினீர் யான்
சீலம் பெறப்பெற்ற ஏழையை என் சொல்வன் சித்தம் ஒத்துக்
கோலம் பெறு திருவாளன் என்றும் வேல் என்றும் கோது அகன்ற
வாலம் பெறும் ஆடல் மா என்றும் வாய் விட்டு வாழ்த்துவனே –92-

வாலம் -வால்

வாழ்ந்தார்கள் எவர் கொல் முற்றும் வழு வின்றி வையகத்தில்
சூழ்ந்து ஆலி நாடன் தன் தொல் சீர் புகழ்ந்து அவன் தூ மலர்த்தாள்
தாழ்ந்து ஆவி யாகம் பொருள் தந்து நாளும் தனி அன்பினில்
ஆழ்ந்தார்கள் அன்றி அறைமின் அடு விழவாது அறிந்தே –93–

அறியாது பாலகனாய்ப் பல தீமைகள் ஆதரித்தேன்
நெறியாதும் இன்றிப் பெரியவனாய பின் நீண் நிலத்தில்
குறியாமலே பிறர்க்கே உழைத்து ஏழையாய்க் குன்றி நின்றேன்
வெறி யார்ந்த முள்ளி யம் தண்டார்ப் பரகால விண்ணவனே –94-

விண்ணார் சிகரத் திருவாலி நாட வினை வயத்தேன்
மண்ணாய் புனல் எரி காலொடு மஞ்சுலாம் வானகமாம்
புண்ணார் உடலில் புலம்பி நன்கு எய்த்துப் புலர்ந்து ஒழிந்தேன்
அண்ணா அளித்து அருள் நின்னை அடைந்தேன் அரண் எனவே –95–

அருள் அகத்தில் இல்லாத புல்லரைப் பாடி யலுத்து வந்த
தெருள் அறிவாளர் உளக் கொதிப்பில் கொதி செம்புலத்தை
மருள் விழி மானே கடந்து விட்டோம் இதோ வான் தழுவும்
பொருள் செறி நல் திருவாலி எனும் பதி போந்தனமே –96-

புலம் -பாலைவனம்

போதத் திரு மங்கை வேந்தே நினது புகழ்க் கடலில்
தீதற்று அடியேன் திளைத்து உய்யுமாறு திருவருள் செய்
வேதப் பொருளை வியன் தென் மொழியில் விரித்தவனே
காதல் குமுத வல்லிக்கு உகப்பாம் அரும் பேகனியே –97–

கலங்கா மனம் கொடு நின்னை எந்நாளும் கருத்து இருத்தி
நலம் காண நாயேற்கும் வாய்க்கும் ஒரு திரு நாளும் உண்டோ
துலங்காத தீ நெறியாளரைச் செற்று அருள் சுந்தரனே
வலம் காணும் வாள் படை மங்கை மன்னா எங்கள் வான் கதியே –98-

வார் இருளாய வையத்தை வயங்க வைக்கும் இரவி
ஓர் பொருளாகப் பரந்தது தான் பொதுவுற்றது போல்
தேர் அறிவாளன் எம் மங்கையர் கோன் அருள் சேர்ந்த பின்னோர்
ஏர் பரன் உண்டு என்று எலாச் சமயங்களும் இன்புற்றவே –99-

வார் -நீண்ட

இரும் தமிழ் ஆரணம் கீர் வாண வேதம் எழுத்து எட்டு எனும்
பெரும் திரு மந்திரம் ஐம்படை உம்பர் பிறங்கறவோர்
அரும் திரு நாதனோடு ஆழ்வார்கள் மண் விண் அருள் மாரியாய்
வரும் திரு மங்கை மன் வாழ்க என்றும் பெற்று வண் திருவே –100–

பிறங்கு -விளங்கும்படியான

————-

பரகாலன் பாசக் கயத்தார்ப் புணாகருள் பாரெனவம்
பரகால னாந்திரு மாலவ னெங்கட் படமையினிம்
பரகால னென்றி யவர்க்குரித் தாமுனைப்பற்றி னஞ்சீர்ப்
பரகால னான்மறை யாறங்க மோ துமெய்ப் பாவலனே.

பரகாலன்(யமன்), ஆர்ப்புணாது அருள் பார்(பாசக் கயிற்றால் கட்டுப் படாமல் இருக்க அருள்வாய்),
அம்பரக் காலனாம் திருமால்(ஆகாயத்தை அளந்தப் பாதத்தையுடையத் திருமால்),
இம்பர காலன் அன்றி அவர்க்கு உரித்தாம் உன்னை- இவ்வுலகில் அக்காலனுக்கு உரித்தாகாமல்
விஷ்ணுவிக்கே உரித் தானப் பரகாலனான உன்னைப் பற்றினேன், நான்மறை ஆரு அங்கம் ஓதும்

(நான்மறைக்குச் சமமான, திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி
ஆகியவற்றுக்கு 6 அங்கங்கள் போல் அமைந்த பெரிய திருமொழி, திருவெழுக்கூற்றிருக்கை, திருக்குறுந்தாண்டகம்,
திருநெடுந் தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய 6 நூல்களை அருளிச் செய்தப் பரகாலன்
என்ற திருமங்கையாழ்வாரைத் தாள் பணிந்துச் சேவிக்கிறேன், என்கிறார்.

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: