ஸ்ரீ திருவரங்கம் பெரியகோயில்

|”காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ்வாஸூ தேவோ ரங்கேச வேத ஸ்ருங்கம் பரமம் பதம்
விமாநம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக”|

இங்கு பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாள் வேத ஸ்வரூபன் என்னும் விமானத்தை
ப்ரணவாகார விமானம் என்றும்,
கலசங்களை வேத ஸ்ருங்கக்ளெனவும் அழைப்பர்.
காவிரியும் கொள்ளிடமும் ரங்கநாதனுக்கு மாலை போல் அமைந்துளளன.

காயத்ரி மண்டபத்தில் காணப்படும் 24 தூண்கள் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களைக் குறிப்பிடுகின்றன.

“ஸப்த ப்ராகார மத்யே ஸரஸி ஜமுகுளோத் பாஸமானே விமானே
காவேரி மத்ய தேஸே ம்ருதுதரபணிராட் போக பர்யங்க பாகே!
நித்ரா முத்ராபிராமம் கடிநிகிட ஸிர: பார்ஸ்வ வின்யஸ்த ஹஸ்தம்!
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம்!!”

காவிரிநதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்ட கோவிலில் வீற்றிருப்பவரே!
ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவரே! இடது கையை இடுப்பில் வைத்து யோக நித்திரையில் இருப்பவரே!
ஸ்ரீதேவி, பூதேவி தாயாரால் வணங்கப்படும் திருப்பாதம் கொண்டவரே!
ஸ்ரீரங்கநாதரே! உம்மை வணங்குகிறேன்.

” விபிஷனோபி தர்மாத்மா ஸஹ தைர் நைர்ருதைர்ஷபை
லப்தவா குலதனம் ராஜா லங்காம் ப்ராயாந்த மஹாயா”
(• வால்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 128 வது ஸர்க்கம், 87 வது சுலோகம்.)

——————–

ஸ்ரீ காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட , உலகின் மிகப் பெரிய ஸ்ரீஅரங்கநாதஸ்வாமி திருகோயிலின்
ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.
இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது.

இக்கோயிலானது ஏறத்தாழ 156 ஏக்கர் அதாவது 6,31,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக,
( சுமார் 6,31,000 சதுர மீட்டர் (6,790 சதுர அடி) பரப்பளவும் 4 கிமீ (10,710 அடி) சுற்றளவும் கொண்டது)
நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும்.
இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.
• மதில் சுற்றுகள் (ஏழு உலகங்கள்)
1.மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று( பூலோகம்)
2.திரிவிக்ரம சோழன் திருச்சுற்று (புவர்லோகம்)
3.அகளங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று (ஸுவர்லோகம்)
4.திருமங்கை மன்னன் திருச்சுற்று (மஹர்லோகம்)
5.குலசேகரன் திருச்சுற்று (ஜநோலோகம்)
6.ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று (தபோலோகம்)
7.தர்ம வர்ம சோழன் திருச்சுற்று (ஸத்யலோகம்)
ஏழு திருமதில்களை அடைவதற்கு முன்னால் 8வது திருச்சுற்று ஒன்று
தற்போது ஏழு மதில்களை உள்ளடக்கியதாய் அடைய வளையப்பட்டுள்ளது.

• இதற்கு ‘அடைய வளைந்தான் திருச்சுற்று’ என்று பெயர். சப்த பிரகாரங்கள்
எனப்படும் ஏழு பிரகாரங்களுக்குள் இது அடங்காது.
இந்த 8வது அடையவளைந்தான் திருச்சுற்றில் தற்போதுள்ள மிக உயர்ந்த ராயர்கோபுரமான தெற்கு கோபுரமே
இந்தச் திருச்சுற்றின் நுழைவாயிலாகும். இந்த ‘ராயர்கோபுரம்’ கிருஷ்ண தேவராயர் (கி.பி.1509–1529)
காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
வைணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு கொண்ட இவரால் ஒரே சமயத்தில் நாடெங்கும் ) 96 திருக்கோவில்களில் கோபுரம் கட்டும் பணியை
மேற்கொண்டார் என்று கூறுவர். தலைக்கோட்டை யுத்தத்தில் இவர் ஆட்சி முறியடிக்கப்பட்டதும்
பல கோபுரங்கள் பூர்த்தி அடையாமல் பாதியளவிலேயே நின்று விட்டன.
அச்சுதராயன் (கி.பி.1530-1542) எனும் மன்னனால் முயன்று முற்று பெறாத நிலையில் முதல் நிலையிலேயே நிறுத்தப்பட்டது
இந்த ஆலயத்தின் ராஜகோபுரமாகும். 1979ம் ஆண்டு வரை ஏறத்தாழ 430 ஆண்டுகளாக மொட்டை கோபுரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.

அடைய வளைந்தான் திருச்சுற்றில் பாதியளவில் நின்று போயிருந்த ராயர் கோபுரத்தில் திருஷ்டிப் பரிகாரத்திற்கென்று முனிக்கு அப்பனான
ஸ்ரீனிவாசனை எழுந்தருளச் செய்திருந்தனர். இந்த ஸ்ரீனிவாசனுக்கு நித்ய வழிபாடுகளும் நடைபெற்றன.
இந்தக் கோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல் என்றும் அழைத்தனர்.
இந்த ராயர் கோபுரந்தான் இன்றைய இந்தியாவின் பெருமைக்கு சிகரம்
வைத்தாற்போன்று ஆசியாவிலேயே பெரிய கோபுரமாகக் கட்டப்பட்டு
திருப்பொலிவோடு செம்மாந்து நிற்கிறது. இவ்வளவு உயரமான கோபுரம் வேறெந்த திவ்யதேசத்திலும் இல்லை.

அகோபில மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி 8 ஆண்டுகள்
தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
(இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.)
மொட்டை கோபுரம் என்று பெயரைத் தாங்கிய தெற்கு வாசல் இராஜகோபுரம் 13 நிலைகளுடன் கூடிய
ஒரு முழுமையான கோபுரமாக மாநில அரசின் உத்தரவின் பேரில் ஸ்ரீ அகோபில மடம் 44வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர்
ஸ்ரீ வண்சடகோப ஸ்ரீ வேதாந்த தேசிக யதீந்திர மகா தேசிகன் ஜீயர் சுவாமிகளால் அவருடைய நேரடி பார்வையில்
நன்கொடைகளைக் கொண்டே நிர்மாணித்தப் பெருமையைப் பெற்றோர்கள்.

இந்த மொட்டை கோபுர முதல் தள நிலையைக் கொண்ட கற்கட்டடமாக இருந்தது.
இதனை ஒழுங்குபடுத்தி திருப்பணி துவக்க விழா 20.05.1979 ல் ஆரம்பிக்கப்பட்டது.
இக்கோபுரத்தில் சுதைச்சிற்ப உருவங்கள் குறைவுதான்.
தற்சமயம் 13 நிலைகளுடன் 236 அடி (கலசங்கள் உள்பட) உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளது.
இதை கட்டி முடிக்க 7 வருடங்கள் 10 மாதங்கள் 8 நாட்கள் ஆகியது. இது தென் கிழக்கு ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் ஆகும்.
கோபுர உச்சியில் 13 செப்பு கலசங்கள் அலங்கரிக்கின்றன. கோபுர திருப்பணி நிறைவு பெற்று குடமுழுக்கு 25-03-1987ம் நாள்
இந்திய குடியரசு துணைத்தலைவர், மாநில ஆளுனர், மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் பிரமுகர்கள் மற்றும் பலர் முன்னிலையில் நடந்தது.
திருவரங்கம் அதற்கு இரண்டு தினங்களாக விழாக்கோலம் பூண்டதையாரும் மறக்க இயலாது.
இது பொழுது பல நிறுவனங்கள் பொது மக்களுக்கு அன்னதானம் செய்தது. பல ஆன்மிக சொற்பொழிவுகளும் நடந்தன.

இந்த ராஜ கோபுர திருப்பணியினால் ஸ்ரீமத் அகோபில மடம் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீரங்கம் ஆலய வரலாற்றில்
நீங்கா இடம் பெற்று விட்டார்கள் எனக் கூறினர். அதுதான் உண்மை. மன்னர்கள் செய்யாததை மட அதிபதி (முனிவர்)
நன்கொடையிலேயே சிறப்பான முறையில் செய்து விட்டார்கள்.
இராஜகோபுரம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள்:

1.7 கோடி செங்கற்கள்
20,000 டன் மணல்
1,000 டன் கருங்கல்
12 ஆயிரம் டன் சிமெண்ட்
130 டன் இரும்பு கம்பிகள்
8,000 டன் வர்ண பூச்சு
ராஜகோபுரத்தின் மொத்த எடை ஒரு இலட்சத்து 28 ஆயிரம் டன்கள்

கோபுரத்திற்கு அழகு சேர்க்கும் 13 கலசங்கள் பற்றி சிறிது அறியலாம்.
இவைகள் ஒவ்வொன்றும் தாமிர உலோகத்திலானது. 6 பகுதிகளைக் கொண்டு இணைக்கப்பட்டு. 10.5 அடி உயரம் கொண்டது
கலசங்கள்:- ஒவ்வொன்றின் உயரம் 10.5 அடி, விட்டம் 5 அடி. எடை 135kg,
இக்கலசங்களுக்குள்ளும் 1 அடி விட்டமும் 16 அடி உயரமும் உள்ள தேக்கு மர உருட்டுகள் நடப்பட்டு (இவை யோக தண்டு எனப்படும்)
இவைகளைச் சுற்றி கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன (இக்கலசங்கள் ஆறு பாகங்களைக் கொண்டது கழற்றி மாட்டி விடலாம்)
இடைவெளியில் மொத்தத்தில் சுமார் 100 மூட்டை வரகு தானியம் நிறப்பப்பட்டுள்ளன.
கோபுரத்தின் உச்சியில் மூன்று இடி தாங்கிகள் பொருத்தப்பட்டன. இக்கலசங்கள் வரை செல்ல படிகள் உள்ளன.
மொத்ததில் இந்த ராஜ கோபுரத்திருப்பணிக்கு செலவிடப்பட்ட நிதியின் மதிப்பு 1,46,36,000 ரூபாய் ஆகும்.
அதாவது ஒரு1 கோடியே 46 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்கள் என்று அறியப்படுகிறது. ஒரு பிரம்மாண்ட திருப்பணி நிறைவுற்றது.

————

ஏழாம் சுற்றான தெற்குச் சித்திரை வீதி புறமுள்ள கட்டைக் கோபுரம் வழியாக நுழைய
பூர்ணன்,புஷ்கரன் என்னும் துவாரபாலகர்கள் இருவரை வணங்கி உள்ளே செல்வோம் .
கோபுரத்தின் எதிர்புறமுள்ள நான்கு கால் மண்டபத்தில் வலப்புறக் கம்பத்தின் கீழ் பாதாள கிருஷ்ணன் சன்னிதி உள்ளது.

பாவனாச்சார்யர் திருமாளிகை, தாத்தாச்சாரியர் திருமாளிகை, ஆஞ்சநேயர் திருக்கோவில்,
ஸ்ரீஹயக்ரீவர் தேசிகர் சந்நதி,ஆயனார் திருமாளிகை,
கபிஸ்தலம் ஸ்வாமி திருமாளிகை,பகுகுடும்பி ஸ்வாமி திருமாளிகை,
திருவரங்கத்தமுதனார் திருமாளிகை, சித்திரைத்தேர் முட்டி, பெரியநம்பி திருமாளிகை,
கூரத்தாழ்வான் திருமாளிகை,முதலியாண்டான் திருமாளிகை
வானமாமலை மடம் ஆகியனவற்றை நான்கு சித்திரை வீதிகளைச் சுற்றி வந்து காணலாம்.

————

• மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம்
மூர்த்தி (இறைவன்), தலம் (ஊர்), தீர்த்தம் (புனித நீர்), விருட்சம் (கோயில் மரம்) ஆகிய நான்கும்
தலபுராணங்களில் சிறப்பாகக் கூறப்படும் பொருள்களாகும்.

திருவரங்கம் பெரியகோயிலின் புராண மரபுகளான ஸ்ரீரங்க மாஹாத்ம்யத்தை கருடபுராணத்தில் உள்ள
‘சதாத்யாயீ’ (108 அத்யாயம்) மற்றும் ப்ரம்மாண்ட புராணத்தில் அமைந்துள்ள ‘தசாத்யாயீ’ (10 அத்யாயம்) ஆகிய
இரு புராணங்கள் கொண்டு அறிய முடிகிறது.
மேற்க்கண்ட தசாத்யாயீயில் 11வது அத்யாயமாக ஸ்ரீரங்க விமான ப்ரதஷிணம் என்ற அத்யாயயமும் சேர்த்து
பாப்பாக்குறிச்சி கிருஷ்ணய்யங்கார் 1908-ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.
(பத்துஅத்தியாயம் போலே சிவன் நாரதருக்கு சொல்லுகிற க்ரமமாயிராமல்,
ப்ரம்மா ஸநத்குமாரருக்கு சொல்லுவதியிருப்பதால், இது 11ம் அத்யாயம் ஆகாது)

• ஸ்ரீரங்க ப்ரஹ்ம வித்யை ப்ரம்மாண்ட புராணத்தில் நாரதரால் பிரகலாதனுக்கு உபதேசிக்கப்பட்டது.
ஒரே அத்யாயம் கொண்டது இந்த ஸ்ரீரங்க ப்ரஹ்ம வித்யை ஆகும்.

• பாரமேஸ்வர ஸ்ரீரங்க மாஹாத்ம்யம்
ஸ்ரீரங்கம் கோயிலுக்காக ஏற்ப்பட்ட பௌஷ்கர ஸம்ஹிதையின் 10ம் அத்தியாயத்தில் 387 ஸ்லோகங்களில்
ஸ்ரீரங்க மாஹாத்ம்யம் சொல்லப்படுகிறது.

——————

• மூலவர்(மூர்த்தி)
ஸ்ரீரெங்கநாதன், பெரிய பெருமாள்
(ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டு தெற்கே திருமுகம் காட்டிய புஜங்க சயனம் )

• உற்சவர்
நம் பெருமாள்
அழகிய மணவாளன் என்னும் திருப்பெயரும் உண்டு

• தாயார்
ஸ்ரீரங்க நாச்சியார்

• தீர்த்தம்
(இங்கு மொத்தம் 9 தீர்த்தங்கள் உள்ளன)- நவ தீர்த்தம்

1.சந்திர புஷ்கரணி
2.வில்வ தீர்த்தம்
3.சம்பு தீர்த்தம்
4.பகுள தீர்த்தம்
5.பலாச தீர்த்தம்
6.அசுவ தீர்த்தம்
7.ஆம்ர தீர்த்தம்
8.கதம்ப தீர்த்தம்
9.புன்னாக தீர்த்தம்

• தலவிருட்சம்
புன்னை
• விமானம்
ப்ரணா வாக்ருதி விமானம்
• காட்சி கண்டவர்கள் (பிரத்யட்சம்)
வீடணன், தர்மவர்மன், கிள்ளிவளவன், சந்திரன். ஆழ்வார்,ஆச்சார்யர்கள்

————-

||திருவிக்கிரமன் திருவீதி||

• 6வது திருச்சுற்று
சக்கரம்,சங்கம் என்னும் துவார பாலகர்களை வணங்கி விட்டு ‘புவர்லோகம்’ என்று
அழைக்கப்படும் 6 வது திருச்சுற்றாகிய ‘திருவிக்கிரமன் திருவீதி’ என்று அழைக்கப்படும் ப்ராகாரத்தினுள் நுழைவோம்.
இந்த வீதியில் பெருமாள் திருவாகனங்கள் உலாப் போகும் காரணத்தால் இதற்கு
உள் திருவீதியென்றும் உத்திரவீதி என்றும் பெயர்.
திருக்கோயிலின் உள்துறை நிர்வாகிகள் தங்கும் வீதியாக ‘உள்துறை வீதி’ என்றும் கூறப்படுகிறது.

யானைகட்டும் மண்டபம்,உத்தராதிகள் (பாங்கூர்) சத்திரம், தைத்தேர் நிற்குமிடம், அர்ச்சகர்களின் திருமாளிகை,
ஸ்ரீஉத்தம நம்பி திருமாளிகை, மேலக்கட்டைகோபுரம்
(இதன் வழியாக வெளியே வந்தால், 7வது மேற்கு திருச்சுற்று மற்றும் தெப்பக்குளத்தை அடையலாம்),
ஸ்ரீபுத்தங்கோட்டம் ஸ்வாமி திருமாளிகை, ஸ்ரீஎம்பார் திருமாளிகை, வடக்கு கட்டை கோபுர வாசல்
( இவ்வழியே 7வது வடக்குச் சுற்று,
வடதிருக்காவேரி, திருமங்கை மன்னன் படித்துறை, தசாவதாரன் சந்நதி ஆகியவற்றை காணச் செல்லலாம்)
தாயார் சந்நதிக்கு செல்லும் வடபுறக்கோபுர வாசல், அதன் எதிரே ஸ்ரீராமானுஜர் தங்கியிருந்து
ஸ்ரீரங்கத்து நிர்வாகத்தைக் கவனித்த மடமாகிய ‘ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமி மடம்’ என்ற பெயரில்
தொன்று தொட்டு ஜீயர்கள் பரிபாலனத்திலேயே இருந்து வருகிற மடம்
அஹோபில மடம்,
ஆஞ்சநேயர் சந்நதி,(பெரிய பெருமாள் திருவடி இங்குள்ளது)

கீழக்கட்டை கோபுர வாசல் ( இதன் வழியே 7வது கிழக்கு திருச்சுற்று, காட்டழகிய சிங்கர் கோயில் ஆகியவற்றிற்கு செல்லலாம்.
அஞ்சாவது கிழக்கு திருச்சுற்றிலுள்ள ஆயிரம் கால் மண்டபம், சேஷராயர் மண்டபம் கண்டுகளிக்க வழியான வெள்ளைக்கோபுரம்
இந்த 6வது வீதியில் உள்ளது. அரையர்கள் திருமாளிகை, கோயில் கந்தாடைஅண்ணன் ஸ்வாமி திருமாளிகை,
மணவாள மாமுனிகள் மடம் போன்றனவும் இதில்தான் உள்ளது.
மணவாள மாமுனிகள் தமது அவதார ரகசியத்தை உத்தம நம்பி என்னும் தமது சீடருக்கு இங்குதான் காட்டியருளினார்.
இம்மடத்தின் தூண்களில் இந்நிகழ்ச்சி செதுக்கப்பட்டுள்ளது.
பெரியபெருமாளின் திருப்பார்வை படும் இடம் ‘மணவாளமாமுனிகள் மடம்’ ஆகும் என்பது ஐதீகம்.

மார்வாரி சத்திரம் ஆகியன உள்ளன. 5வதுதிருச்சுற்று நுழைவதற்கான நான்முகன் கோபுரம் (அ) ஸ்ரீரங்கா ரங்கா ரங்கா கோபுரமும்
இந்த (தெற்கு) உத்தர வீதியில் உள்ளது.

அகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்) திருவரங்கம் பெரியகோயிலில் நடக்கும்
‘பங்குனி உத்திரம்’ திருவிழா பற்றி குறிப்புள்ளது.

——————-

• திருவரங்கம் பெரியகோயிலில் வரலாற்று கால கல்வெட்டுகள்
சுமார் 800க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.
Archaeological survey of India; Annual epigraphic Volume XXIV -ல் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் South Indian Temple Inscription என்ற தொகுப்பு நூலிலும் காணலாம்.
செப்பேடுகளைப் பற்றிய செய்திகள் Epigraphia indica களில் வெளிவந்தன.

• கி.பி. 10ம் நூற்றாண்டு – இது சோழர்கள் தமிழ்நாட்டின் ஆட்சியுரிமையில் சிறந்திருந்த காலம்.
ஏறத்தாழ 181 சோழர் கல்வெட்டுகள் திருவரங்கம் பெரியகோயிலில் உள்ளது.

• முதலாம் ஆதித்த கரிகாலன் (கி.பி.871-907) காலத்திய கல்வெட்டுகள் இரண்டு (A.R.E.No.69 & 70 of 1892)
நான்காம் திருச்சுற்றான ஆலிநாடன் திருச்சுற்றில் அமைந்துள்ள கொட்டாரத்தின் தரைப்பகுதியில் உள்ளன.

• முதலாம் பராந்தகச்சோழன் (கி.பி. 907- 955) காலத்து எட்டு கல்வெட்டுகள்
(A.R.E.No. 71,72,73,95,345,415,417,418 of 1961-62) திருவரங்கம் பெரிய கோயிலில் உள்ளன.
கி.பி. 953 ல் முதலாம் பராந்தக சோழனின் 17ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று (A.R.E.No. 72 of 1892)
இம்மன்னன் இக்கோவிலுக்கு ஒரு வெள்ளி மற்றும் தங்கத்திலான குத்துவிளக்கு
அளித்ததையும் அதற்கு , பட்டுத்திரி, நூல், நெய்யோடு சேர்த்து எரிப்பதற்காக ‘பீமஸேனி கற்பூரம்’ வாங்குவது உட்பட அதன்
நிலையான செலவினங்கட்கு 71 கழஞ்சு பொற்காசுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது.

• இரண்டாம் பராந்தகன் எனும் சுந்தரச்சோழன் காலத்தைய (கி.பி. 957 -970) கல்வெட்டு(A.R.E.No.416 of 1961-62)
ஒன்று மட்டும் சந்தன மண்டபத்தின் இடது பக்கம் அமைந்துள்ளது.

• உத்தமசோழன் (கி.பி.973-985) காலத்திய கல்வெட்டு (A.R.E.No.65 of 1938-39) ஒன்று இரண்டாம் திருச்சுற்றிலுள்ள
சந்தன மண்டபத்தில் உள்ளது. அதில் ‘பீமஸேனி கற்பூரம்’ கலந்த நெய்யைக் கொண்டு திருவிளக்கு ஏற்றும் நடைமுறை கூறப்படுகிறது.
கோயில் விளக்குகளிலே சேர்க்கப்படும் நெய்யை கோயில் ஊழியர்கள் தங்களது சொந்த உபயோகத்திற்கு
பயன்படுத்தாதிருக்க பீமஸேனி கற்பூரம் நெய்யுடன் சேர்த்து எரிப்பது அக்கால வழக்கம் ஆகும்.

• முதலாம் ராஜராஜன்(கி.பி.985-1014) மற்றும் முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012-1043) காலத்திய
பத்து கல்வெட்டுகள் (A.R.E.No.19 of 1948-49 327,328,331,341,342,343,344,344a,370) உள்ளன.

• முதலாம் ராஜாதிராஜன்(கி.பி. 1018-1054) காலத்திய கல்வெட்டுகள் இரண்டு (A.R.E.No.333,334 of 1952-53)
சக்கரத்தாழ்வார் சந்நிதி முன் அமைந்துள்ள மண்டப தாழ்வாரத்தில் உள்ளது.

• இராசமகேந்திர சோழன் (கி.பி. 1058-1063) திருவரங்கம் பெரியகோயிலில் பல திருப்பணிகளைச் செய்துள்ளதை
‘கோயிலொழுகு’ (இராசமகேந்திர சோழன் கைங்கர்யம்) மூலம் அறியலாம். இங்குள்ள இரண்டாம்
பிரகாரத்தில் முதலாம் பிராகாத்திற்கான திருமதிலை கட்டினான்.
இரண்டாம் திருச்சுற்றினை திருப்பணி செய்தவன் இவனே. அதனால் ‘இராசமகேந்திரன் திருவீதி’
என்றே இன்றும் வழங்கப்படுகிறது.

• இராஜேந்திரச் சோழனின் மகன் வீர ராஜேந்திரன் அவன்மகன் அதிராஜேந்திரன் (கி.பி. 1068-71) காலத்திய
கல்வெட்டு ஒன்று மட்டும் நாழிகை கேட்டான் வாசலின் நுழைவு வாசல் பக்கச்சுவரில் உள்ளது.

• திருவரங்கம் பெரியகோயிலில் காணப்படும் சோழர்காலக் கல்வெட்டுகளில் முதலாம் குலோத்துங்கச்சோழனின் (கி.பி.1070-1122)
கல்வெட்டுகளே மிகுதியானவை ஆகும். ஸ்ரீரங்கம் கல்வெட்டு எண். 26 தொடங்கி 108 முடிய உள்ள
இவனது கல்வெட்டுகள் மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றில் அமைந்துள்ளன.

• ஸ்ரீஇராமானுஜர் (கி.பி.1020-1137) காலத்திலே நடந்த நிகழ்வுகள் ஸ்ரீரங்க வரலாற்றின் ‘பொற்காலம்’ என்றே கூறலாம்.
இவரின் அரிய சேவைகளை ‘கோயிலொழுகு’ என்னும் நூல் சிறப்பித்துப் பேசுகிறது.
அவற்றை சமய மரபில் விரிவாக காணலாம்.
முதலாம் குலோத்துங்க சோழன் இராமானுஜருக்குப் பல கொடுமைகள் விளைவித்ததாகவும் இதனால் ராமானுஜர் சிலகாலம்
(சுமார் 13 ஆண்டுகள்) ஒய்சாளப் பேரரசின் மைசூர்பகுதியில் உள்ள மேல்கோட்டை- திருநாராயணபுரத்தில் தங்கியிருந்தார்
எனவும் கோயிலொழுகின் மூலம் அறிய முடிகிறது.

• விக்ரமச்சோழன் (கி.பி.1118-1135) ஆட்சிகாலத்திய. கல்வெட்டுகளை (A.R.E.No27,28,31,33,37,38,39,112,115,127,438,340,339)
மூன்றாம் திருச்சுற்றுகளில் காணலாம்.

• இரண்டாம் குலோத்துங்கச்சோழன் ( கி.பி. 1133-1150) காலத்திய
இரு கல்வெட்டுகள் (A.R.E.No.55,56 of 1936-37) நான்காம் திருச்சுற்றுகளில் உள்ளன.

• இரண்டாம் இராஜராஜச்சோழன் ( கி.பி. 1133-1150) காலத்திய கல்வெட்டுகள் (A.R.E.No.68 of 1936-37
122 of 1947-48) நான்காம் திருச்சுற்றுகளில் உள்ளன.

• இரண்டாம் இராஜாதிராஜச்சோழன் ( கி.பி. 1163-1178) காலத்திய கல்வெட்டுகள் (A.R.E.No.63,73 of 1936-37
267,268,269 of 1930) நான்காம் திருச்சுற்றில் உடையவர்சந்நதி எதிரில் உள்ளன.

• மூன்றாம் குலோத்துங்க சோழன்(கி.பி.1178-1218) காலத்தில் இத்தலத்தின் நிர்வாகம் இவனது நேரடிக் கவனத்தின் கீழ் கொண்டுவரப்
பட்டது. காலத்திய கல்வெட்டுகள் (A.R.E.No.50,51 of 1948-49 61,75,76,89, of 1936-37 ; 17,18,119,120,113,148, of 1938-39
63,66,67,of 1892; 364 of 1953-54; 157,158, 335 of 1951-52;) நான்காம்,ஐந்தாம் திருச்சுற்றில் உள்ளன.
இவன் சைவ- வைணவ சமயப் பூசல்களைத் தீர்த்து வைத்ததாகவும் அறிய முடிகிறது.

• மூன்றாம் இராஜராஜன் (கி.பி.1216-1256) காலத்திய கல்வெட்டுகள்
(A.R.E.No.71,72 of 1936-37; 102,133,134,147 of 1938-39 156 of 1956-57;30,52 of 1948-49;
156,157,158 of 1951-52;363 of 1953-54; 30,35 of 1936 -37;) ஆகியன 3,4,5 திருச்சுற்றுகளில் உள்ளன.

• கி.பி.1223-1225 திருவரங்கம் கோவில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டது. கோவில் நிர்வாகம் சீர் குன்றியது.

• மூன்றாம் ராஜேந்திரன் (கி.பி. 1246-1279) காலத்தைய (A.R.E.No.148 of 1938-39;
64,65 of 1892; 317 of 1952-53; 368 of 1953-1954; கல்வெட்டுகள் 5,4,3 திருச்சுற்றுகளில் காணலாம்.
இவனது ஆட்சிக்குப்பிறகு காலத்தில் சோழநாடு பாண்டியர்களுடைய நாடாக மாற்றம் அடைந்தது.
நான்காம் திருமதிலைக் கட்டியவர் ‘திருமங்கை ஆழ்வார்’ என்கிறது கோயிலொழுகு.
ஏழாம் திருமதில் பிரகாரத்திலும், நான்காம் திருமதில் பிரகாரத்திலும் ஆண்டாளுக்கு எனத் தனிப்பட்ட சந்நிதிகள்
தென்மேற்கு மூலையில் ஏற்படுத்தியுள்ளனர் . இதில் ஏழாம் திருமதில் பிரகாரத்தில் உள்ள
வெளி ஆண்டாளின் திருச்சந்நிதி ‘பிற்காலப் பாண்டியர்கள்’ காலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது.
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டிற்குள் அது கட்டப்பட்டிருக்கும் என
அந்தச் சந்நிதி பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டிருப்பதில் இருந்து தெரிய வருகிறது.
இதைத் தவிர நான்காம் திருமதில் பிரகாரத்தில் இருக்கும் உள் ஆண்டாள் சந்நிதி கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம்.

திருவரங்கம் பெரிய கோயிலின் கல்வெட்டுகள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்து கிடைத்துள்ளது.

சோழமன்னர்கள் கல்வெட்டுக்களில் பழமையானதாகச் சொல்லப்படுவது முதலாம் பராந்தகனின் கல்வெட்டு ஆகும்.
இவனுக்கு அடுத்து மன்னன் இரண்டாம் ராஜேந்திரனின் மகன்களில் ஒருவனான ராஜமஹேந்திர சோழனின்
கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது கி.பி. 1060—1063 ஆம் ஆண்டில்
இங்குள்ள முதல் பிரகாரத்தின் திருமதிலைக் கட்டியதால் இது ‘ராஜமஹேந்திரன் திருவீதி’ என வழங்கப் படுகிறது.

சோழகுல மரபில் முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டும்,
‘ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம்’ சோழர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்து வந்ததைச் சொல்கிறது.
தமிழ்நாட்டின் அப்போதைய காலநிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
• திருவரங்கம் பெரியகோயிலில் சுந்தரபாண்டியனான மானாபரணன்(கி.பி. 1104-31) கல்வெட்டே
A.R.E.No. 117 of 1937-38) பாண்டியர்களின் திருவரங்கக் கல்வெட்டில் பழமையானது. அதற்கடுத்து
• பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அரசனான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216—1238) கல்வெட்டானது
(இரண்டாம் திருச்சுற்று கிழக்குப்பக்க சுவர் -A.R.E.No. 53 of 1982) குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இவனது 9வது ஆட்சியாண்டில் 28-03-1225 ஆம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் அவன் திருவரங்கத்தில் மேற்க்கொண்ட
நிர்வாஹ சீர்திருத்தத்தைப் பற்றிஅறிய முடிகிறது. இந்தக் கல்வெட்டில் தான், எம்பெருமானார் திருவடிகளை ஆச்ரயித்திருக்கும்
ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ற சொற்றொடர் முதனே முதலாக வருகிறது. கோயில் உள்துறை நிர்வாகத்தினர் ராஜமகேந்திரன்
திருச்சுற்று மேலைப்பகுதியில் கூடி இருந்து எடுத்த முடிவினை அக்கல்வெட்டு கூறுகிறது.
இக்கல்வெட்டில் 2000 எழுத்துக்கள் உள்ளதாக கல்வெட்டுக்குறிப்பே கூறுகிறது.
திருவரங்கத்திலிருந்து கிடைக்கும் வீரசோமேஸ்வரனின் கல்வெட்டு (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் – A.R.E.No. 362 of 1953-54 )
முதலாம் சடையவர்மன் விக்கிரமபாண்டியனின் (கி.பி. 1241-1254) நாலாவது ஆட்சியாண்டு 270ம் நாளில்
‘விக்கிரம சதுர்வேதிமங்கலம்’ என்ற ஊரை திருவரங்கம் பெரியகோயிலுக்கு தானமாக அளித்தது பற்றி கூறுகிறது.
முதலில் ஸ்வஸ்திஸ்ரீ போஜள வீர சோமேஸ்வர தேவர் என்று தொடங்கும்.
பின்பு 2வது வரியிலிருந்து ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடை பன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவிக்கிரம பாண்டியத்தேவர் என்று தொடரும்.
இதன் மூலம் பாண்டிய அரசு போஜள வீரசோமேஸ்வரனின் மேலாதிக்கத்தை ஏற்றிருந்ததை அறிய முடிகிறது.
வீரசோமேஸ்வரனது மற்றொரு கல்வெட்டு (மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் – A.R.E.No. 361 of 1953-54 ) இவனது
22வது ஆட்சியாண்டு(02-11-1252)நந்தவன தானம் பற்றிக் குறிக்கிறது.
வீரசோமேஸ்வரன் 6வது ஆட்சியாண்டில் பட்டத்து ராணி சோமலா தேவியார் தந்த தானம் பற்றிய மற்றொரு கல்வெட்டும்
(மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் – A.R.E.No. 68 of 1892) உள்ளது.

• கி.பி.1262 வரை ஆட்சி புரிந்த சோமேசுவரனுக்குப் பின்னர் வந்த ஹொய்சள மன்னன் இராமநாதர் என்பார்(கி.பி.1263—1297) வரை ஆட்சி புரிந்தார்.
இவர் படைத்தலைவர்களாகிய இரு சகோதரர்கள் கோயிலுக்குப் பல வகையான தானங்கள் வழங்கியுள்ளனர்
என்பதைக் கோயில் வரலாற்று நூல் கூறுவதாக அறிகிறோம்.
வீரராமநாதனது இரண்டாம் ஆட்சியாண்டு (04-02-1256)கல்வெட்டு
(மேட்டு அழகிய சிங்கர் சந்நதி கிழக்கு பக்கம் – A.R.E.No. 67 of 1892) அழகிய மணவாளருக்கு
திருமாலைகள் சமர்பித்திட நந்தவன கைங்கர்யத்திற்காக நிலதானம் தரப்பட்ட குறிப்பு உள்ளன.

வீரராமநாதனுடைய மூன்றாம் ஆட்சியாண்டில் (கி.பி.1257) இவன் தந்தருளின திருமுகப்படி
சிங்கண்ண தண்டநாயகரால் எடுத்த கை அழகியநாயனார் (மேட்டு அழகிய சிங்கர்) திருக்கோபுரத்திற்கு மேற்குப் பகுதியில்
“ஆரோக்ய சாலை” ஒன்றினை ஏற்படுத்திப் பராமரிப்பதற்காக ஸ்ரீபண்டாரத்தில் 1100 பொற்காசுகள் சேர்ப்பிக்கப்பட்டு
வைத்ததை ஒரு கல்வெட்டு (A.R.E.No. 80 of 1936-37) கூறுகிறது.
சந்திர புஷ்கரணியிலிருந்து ஐந்து குழி மூன்று வாசல் செல்லும் நடை பாதையில் இக்கல்வெட்டை இன்றும் காணலாம்.
தந்வந்தரிசந்நிதியை நெடுநாள் பராமரித்து வந்த ‘கருடவாகன பண்டிதர்’ இந்த ஆரோக்ய சாலையையும் நிர்வகித்து வருவார்
என்றும் கல்வெட்டு குறிக்கிறது. மேலும் இவனது காலத்திய கல்வெட்டுகளாக
(A.R.E.No.64,65,70,74, of 1936-37) (A.R.E.No.372,377 of 1953-54)
(A.R.E.No. 52 of 1892) ஆகியனவற்றை திருவரங்கம் கோயிலில் காணலாம். ஸ்ரீரங்கவிலாஸத்தின் மேற்குப் பகுதியில்
இவனது ஆட்சி காலத்தில் தான் மிகவும் அழகு வாய்ந்த ‘வேணுகோபால கிருஷ்ணர் சந்நிதி’ கட்டப் பட்டது.
இவனது 15வது ஆட்சிகாலக் கல்வெட்டு (A.R.E.No.74 of 1892)’திருக்குழல் ஊதும் பிள்ளை சந்நிதி’ என்று குறிக்கிறது

• முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் இந்த கல்வெட்டிற்குப் பிறகு இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
(கி.பி. 1238-1255) காலத்து கல்வெட்டு (A.R.E.No. 77 of 1936-37) ஒன்று
இவனது அமைச்சர்களான அய்யன் மழவராயன், சக்கரபாணி நல்லூர் பல்லவராயன் என்பவர்கள் வேண்டுகோளுக்கிணங்க
குதிரை வியாபாரியான குளமூக்கு நாவாயன் கொண்ட நம்பி என்பான் திருவரங்கம் கோயிலுக்கு தானமாக கொடுத்த
‘குமாரநம்பி நல்லூர்’ என்ற கிராமத்தை (கடமை ற்றும் அந்தராயம் ஆகிய) வரிகள் நீக்கிய கிராமமாக
கொள்வதற்கு மன்னன் பிறப்பித்த ஆணை பற்றி கூறுகிறது.

• போசள வீரசோமேஸ்வரனுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே இருந்த நட்பு அல்லது பகை வெகு நாட்கள் நீடிக்கவில்லை.
கி.பி. 1250-இல் முடிசூடிய ‘இரண்டாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன்’ போசள மன்னனுடன் பகைமை கொண்டான்.
‘கர்நாடக யானைக்கு சிங்கம் போன்றவன்’ (கர்நாடக கரிகல்ப கந்திரவ) என்று தன்னைக் கல்வெட்டுகளில் கூறிக்கொண்டான்.
அவனது தம்பியான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264- இல் வீரசோமேஸ்வரனைப் போரில் கொன்று,
பாண்டிய நாட்டில் இருந்த போசளர் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வந்தான்.

————-

திருவரங்கம் பெரியகோயிலின் பொற்காலம்:-

-|முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1251 – 1271) ஆட்சி|-

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த ‘பாண்டிய பேரரசன்’ ஆவான்.
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான்.

இவன் பல கட்டிடங்களை திருவரங்கம் பெரியகோயிலில் எழுப்பியுள்ளான் என்பதோடு
பல்வகையான அலங்காரங்களையும் செய்ததோடு தாராளமாக நன்கொடைகளையும் வழங்கினான்.
இதனால் அவன் புகழ் மிகவும் பெரிய அளவில் பேசப்படுகின்றது என்பதோடு அவன் காலத்துக் கல்வெட்டுக்களும்
(இரண்டாம் திருச்சுற்று வடக்குப் பக்கச்சுவர் – A.R.E.No. 45 of 1891),
(சந்தனமண்டபம் -A.R.E.No. 60 of 1892)
அவன் ஸ்ரீரங்கம் கோயிலைப் பொன்மயமாகச் செய்தான் என்று பாராட்டுகிறது.

• திருவரங்கநாதர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, விஷ்ணு நரசிம்மன் கோபுரம்,
மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவை இவனால் கட்டப்பட்டதாக அறிகிறோம்.
இந்தக் கட்டிடங்களும், இரண்டாம் பிரகாரமும் பொன்னால் வேயப்பட்டதாகவும் அறிகிறோம்.
இத்தோடு நில்லாமல் ஆதிசேடன் திருவுருவம், பொன்னாலாகிய பிரபை, பொன்னாலான பீடம், பொன் மகர தோரணம்,
பொன் கருட வாகனம் ஆகியனவும் பொன்னாலேயே அவனால் வழங்கப் பட்டிருக்கிறது.
ஒரிசா எனப்படும் கலிங்க நாட்டரசனைப் போரில் எதிர்கொண்டு வெற்றி பெற்று அவனுடைய கருவூலத்தில் இருந்து கைப்பற்றிய
பல பொருள்களைக் கொண்டு ஸ்ரீரங்கநாதருக்கு மரகத மாலை, பொன் கிரீடம், முத்தாரம், முத்து விதானம், பொன் பட்டாடை,
பொன் தேர், பொன்னால் நிவேதனப் பாத்திரங்கள், குவளைகள் போன்றவற்றை வழங்கியுள்ளான்.
விலையுயர்ந்த பட்டாடைகளாலும், ஆபரணங்களாலும் திருவரங்கத் திருமேனியை அலங்கரித்து மகிழ்ந்திருக்கிறான்.

• காவிரியில் இரு படகுகளை விட்டு தனது பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி அதன் முதுகில் மன்னன் அமர்ந்தான்.
மற்றொரு படகில் ஏராளமான ஆபரணங்களும், அணிமணிகளும், பொற்காசுகளும் அவனால் நிரப்பப்பட்டுக் குவிந்து கிடந்தன.
தன்னுடைய படகினது நீர்மட்டத்திற்கு மற்றொரு படகும் வரும் வரையில் அந்தப் படகில் பொன்னைச் சொரிந்து கொண்டே இருந்தான்.
பின்னர் அப்பொன்னையும், அணிமணிகளையும் இக்கோயில் கருவூலத்திற்குத் தானமாக வழங்கினான்.
தன்னுடைய எடை அளவிற்குத் தங்கத்தினாலே திருவரங்கநாதரின் விக்ரஹம் செய்து அதையும் தன் பெயரால் (ஹேமச்சந்தன ஹரி)
வழங்க வைத்துக் கோயிலுக்கு அளித்தான். இவ்வாறு அவன் செய்த பல திருப்பணிகளை ‘கோயில் ஒழுகு’ நூல் கூறுகின்றது.
‘பொன்வேய்ந்த பாண்டியன்’ என்று புகழப்பட்ட ‘ஹேமச்சந்தன ராஜா’வால் எடுப்பிக்கப்பெற்ற அரங்கனது தங்க விமானம்,
கருடன் சந்நிதி,தங்கமணி மயமான மண்டபம் ஆகிய விமானங்களும் திருவரங்கனுக்கே அணிவித்த கிரீடம் போல விளங்கின.

• இவனது ஆட்சிகாலத்தில் நடுவிற்கூற்றத்து துஞ்சலுடையான் வரந்தருவான் எடுத்தகை அழகியான் என்கிற பல்லவராயன் என்பான்
திருவிக்கிரமன் திருவீதியில் தன்னுடைய மன்னன் நலம் வேண்டி,
முக்கோல் பகவர்களான ஸ்ரீவைஷ்ணவ ஸந்நியாஸிகள் தங்கியிருப்பதற்காக ‘சுந்தரபாண்டியன் மடம்’ என்று
தன் மன்னனின் பெயரிலேயே மடம் ஒன்றைக் கட்டியுள்ளான்.
இரண்டு மீன்சின்னங்கள் பொறிக்கப்பட்டு சுதர்சன சக்கரத்தோடு காணப்படுகிற திருவாழிக்கல் கல்வெட்டு (A.R.E.No.99 of 1936-37)
விக்கிரமசோழன் திருவீதியாகிய தெற்கு உத்திர வீதியில் தென்கிழக்கு மூலையிலுள்ள சுந்தரபாண்டியன் மடமாகிய
ஸ்ரீமணவாளமாமுனிகள் சந்நிதி முன்பு இன்றும் காணலாம்.
மேலும் இவனதுஆட்சிகால கல்வெட்டு (A.R.E.No.81,82,83,84,89 of 1938-39)
கல்வெட்டு (A.R.E.No.43 of 1948-49)
கல்வெட்டு (A.R.E.No.338 of 1952-53) ஆகியன திருவரங்கம் சந்தன மண்டபத்தில் உள்ளன.

————–

சடையவர்மன் சுந்தர பாண்டியனின் கைங்கர்யங்கள்
(கோயிலொழுகு தரும் தகவல்)

திருவரங்கத்தில் பல ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் மற்றும் பல அரசர்களும் கைங்கர்யங்கள் செய்து உள்ளனர்.
இதில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (எ) சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்கு மட்டும் தனி சிறப்பு உண்டு.
‘சுந்தரபாண்டியம் பிடித்தேன்’ என்ற அருளப்பாடு உண்டு.
இரண்டு முறை “சுந்தரபாண்டியம் பிடித்தேன்” என்று அருளப்பாடு சாதிப்பதுண்டு.
பெருமாளுக்கு கண்ணாடி காட்டும் போது (வெள்ளி கண்ணாடி)
அர்க்யம்,பாத்யம் ஆசமணீயம் சேர்க்கும் படிக்கம் பிடிப்பதற்க்கும் உண்டு.

சுந்தரபாண்டியம் பிடித்தேன் அருளப்பாடு
இதனை அனைவரும் அனுபவிக்க வேண்டுமென்றால் நம்பெருமாள் வெளி மண்டபங்களில்
(பூச்சாற்று மண்டபம், வசந்த மண்டபம், பவித்ர மண்டபம், ஊஞ்சல் மண்டபம்) திருவாராதனம் நடைபெறும் போது காணலாம்.
‘சுந்தரபாண்டியம் பிடித்தேன்’ என்ற அருளப்பாடு 800 ஆண்டுகளுக்கு மேல் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இந்த அருளப்பாடுக்கு ஒரு காரணம் உள்ளது.
“ஒரு முறை அரசன் சுந்தரபாண்டியன் பெருமாள் திருவாராதனம் நடைபெறும் போது சேவித்து கொண்டு இருந்தான்.
அப்போது பெருமாள் கைங்கர்யபாரர் பெருமாளின் படிக்கம் (தீர்த்தம் சேர்க்கும் பாத்திரம்) கொண்டு வர மறந்து விட்டார்.
அரசன் சுந்தரபாண்டியன் தனது கிரீடத்தை எடுத்து பெருமாளின் தீர்த்தத்தை பிடித்தான்.
இந்த காரணத்தினால் இன்றளவும் தீர்த்தம் சேர்க்கும் படிக்கத்தின் வடிவம் அரசனின் மகுடம் தலைகீழாக வைத்தது போல் இருக்கும்.

சுந்தரபாண்டியன் திருவரங்கத்தில் எண்ணற்ற கைங்கர்யங்களைச் செயதார்.
அவற்றுள் தலைசிறந்தது பிரணவாகார விமானத்திற்கு பொன்வேய்ந்த கைங்கர்யம்.
சுந்தர பாண்டியன் தங்கத்தினால் பல கைங்கர்யங்கள் செய்ததனால்
“பொன்மேய்ந்த பெருமாள் சுந்தரபாண்டிய தேவர்” என்று சிறப்பு பெயர் பெற்றார்.
சுந்தர பாண்டிய அரசனின் மற்றொரு கைங்கரியம் நம்பெருமாள் பொதுவாக அணிந்து கொள்ளும் “பாண்டியன் கொண்டை”
வைகுண்ட ஏகாதசி அன்றும் உபயநாச்சியார்களோடு திருச்சி வகையில் எழுந்தருளும் போதும் இந்த பாண்டியன் கொண்டை சாற்றப்படும்.
இந்த பாண்டியன் கொண்டையை பெருமாள் இரண்டு விதமாக சாற்றி கொள்வார் .
(இந்த பாண்டியன் கொண்டையில் மூன்று பகுதிகள் இருக்கும் (தத்வ த்ரயம் நிலை)
1) அடி பகுதி
2) வட்ட வடிவம் கொண்ட நடு பகுதி
3) குமிழ் பகுதி)
இந்த பாண்டியன் கொண்டை 19ஆம் நூற்றாண்டு பழுதாகி “வேங்கடாத்ரி ஸ்வாமிகள்” என்ற அடியவர் புனர்நிர்மானம் செய்த செய்தியும் உண்டு.

• சுந்தர பாண்டிய அரசனின் மற்றொரு கைங்கரியம்
சுந்தர பாண்டியன் வடக்கே ஆந்திர மாநிலம் நெல்லூர் முதல் தமிழகத்தில் இருந்த சோழ ஹொய்சள மற்றும்
கேரளத்தை ஆண்ட சேர அரசர்களையும் வெற்றி கொண்டதனால் “எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள்” என்ற
சிறப்பு பெயருடன் விளங்கி வந்தார்.
தற்போது நம்பெருமாள் பவித்ர உற்சவம் கண்டருளும் மண்டபத்தின் பெயர் “சேரனை வென்றான்(சேனை வென்றான்) மண்டபம் ஆகும்.
இந்த மண்டபம் சுந்தரபாண்டியன் சேர அரசனை வென்றதன் நினைவாக கட்டியது.
(சேரனை வென்றான்) பவித்ர உற்சவம் மண்டபத்தில் நம்பெருமாள் துலா புருஷ மண்டபம் பெயர் காரணம்:

“திருமுகத்துறையிலே ஒரு நிறையாக இரண்டு ஓடம் கட்டி அதில் ஒரு ஓடத்தில் தச்சுமுழத்திலே ஏழு முழம் இருக்கிற
பட்டத்தானையின் மேலே தானும் தன்னுடைய ஆயுதங்கலோதேனிருந்து ஒரு ஓடத்திலே அந்த மட்டத்துக்சரியான
ச்வேர்ணம் முத்து முதலான நவரத்னங்கள் ஏற்றி யானை யானை துலாபுருஷந தூக்கி …..”
ஒரு தச்சு முழம் = 33 inch
தச்சுமுழத்திலே ஏழு முழம் இருக்கிற பட்டத்து யானை (33 × 7 = 231 inch)
19 அடி உயர யானையை ஒரு படகின் மேல் ஏற்றி அதற்கு மேல் அம்பாரியில் தானும் தனது ஆயுதங்களுடன் ஏறி அமர்ந்து கொள்வார்.
அதன் அருகில் மற்றொரு படகை நிறுத்தி தான் அமர்ந்த படகு எத்தனை ஆழம் இறங்குறதோ அதே அளவுக்கு இறங்க
அந்த படகில் தங்கம், முத்து, நவரத்தினம் ஆகிய தனங்களை ஏற்றி துலாபாரம் போல் சமநிலையாக இருக்க வைத்து
அந்த தனங்களை கொண்டு நான்கு கால் மண்டபம் கட்டியதால் இதற்கு துலா புருஷ மண்டபம் என்று பெயர்.

சுந்தரபாண்டியன் 24 நான்கு கால் மண்டபங்கள் கட்டினார்.இந்த நான்கு கால் மண்டபங்களுக்கு துலா புருஷ மண்டபம் என்று பெயர்.
இந்த மண்டபங்கள் இரண்டாம் திருசுற்று (ராஜ மகேந்திரன் திருவீதி) முதல் ஐந்தாம் திருசுற்று (அகனங்கன் திருவீதி) வரை
பல்வேறு இடங்களில் அமைய பெற்றுள்ளன.

பெருமாள் செல்வங்களை ஏற்க மறுத்தது:
“அந்த த்ரவ்யத்தை கைங்கர்யம் பண்ண உத்யோகிக்குமளவில் அந்தத்ரவ்யம் ஸபரிகரரான ஸ்வாமிக்குத் திருவுள்ளமாகாதபடியினாலே
இரண்டு வருஷம் மறிபட்டுக் கிடந்தது….”
அரசன் தான் சமர்ப்பிக்கும் தனம் என்று பெருமையுடன் கொடுத்தபோது பெருமாள் இந்த தனங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து
ஆரியப்படால் வாசலின் வெளியே இரண்டு ஆண்டுகள் கிடந்தன. தங்கம், வெள்ளி, வைரம், முத்து, பவளம் என செல்வங்கள்
பெருமாள் மறுத்த படியினாலே திருவரங்க வாசிகள் எவரும் தொடாமல் சீந்துவாரற்று கிடந்தது.

• பெருமாள் செல்வங்களை ஏற்றுக்கொண்டது:
“அநந்தரம் அவனுடைய ஆர்த்தியாலேயும் அனுஸரணத்தினாலேயும் ஸபரிகரரான பெருமாள் திருவுள்ளமானவந்தரம்
அந்த த்ரவயயத்தை கருவு கவத்திலே முதலிட்டு பண்ணின கைங்கர்யத்துக்கு…”
[விவரம் – கோயிலொழுகு]
இரண்டு ஆண்டுகள் பின்னர் சுந்தரபாண்டியன் இது பெருமாளின் சொத்துக்கள் என்றும் அவருடையதை அவரே
எடுத்துக்கொள்ள வேண்டியது. தான் இதில் ஏதும் செய்யவில்லை என்று சரண் அடைந்த பிறகு பெருமாள் மனமுவந்து ஏற்றார்.

• சரஸ்வதி பண்டார நூலகம்:
சுந்தர பாண்டியன் திருவரங்கம் கோவில் திருப்பணிகள் செய்ததோடு இல்லாமல் பழங்கால சுவடிகளையும் பாதுகாத்து வந்தார்.
கோவிலில் சரஸ்வதி பண்டார நூலகத்தில் பூர்வாசார்யர்கள் அருளிச்செய்த நூல்களின் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பாக வைத்து
அதற்கு பணியாளர்களை நியமித்து அனைவருக்கும் ஓலைச்சுவடிகள் கிடைக்க ஆவன செய்தார்.
இந்த சரஸ்வதி பண்டாரம் நூலகம் மூன்றாம் திருச்சுற்றில் இருந்தது.
சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவர் சன்னதிகள் அமைந்துள்ள பவித்ர மண்டபத்திற்கும் பூச்சாற்று உள்கோடை மண்டபத்திற்கும்
இடையில் அமைந்துள்ள நடைமாளிகையில் இடது புறத்தில் அமைத்திருந்தது.

—————

தெற்கே திருமோகூருக்கு அருகில் யானைமலை அடிவாரத்தில் ‘ஜ்யோதிஷ்குடி’ (யா. கொடிக்குளம்) என்ற கிராமத்தில்
பெருமாளையும் நாச்சிமார்களையும் ஒரு குகையில் மறைவாக எழுந்தருளச் செய்து திருவாராதனம் செய்து வந்தனர்.
அக்ஷய வருடம் (கி.பி.1323) ஆனிமாதம் ஜ்யேஷ்ட சுத்த துவாதசியில் 118வது (118 வயதில்) திருநக்ஷத்திரத்தில்
பிள்ளைலோகாச்சாரியார் பரமபத்திற்கு எழுந்தருளினார். அவரது சரமத் திருமேனியை (பூத உடலை) அலங்கரித்து
ஜ்யோதிஷ்குடியில்(யா. கொடிக்குளம்) மலையடிவாரத்தில் திருப்பள்ளிப்படுத்தி திருவரசும் கட்டிவைத்தார்கள்
என்கிற தகவலை கோயிலொழுகின் மூலம் அறிகிறோம்.

பிள்ளை லோகாச்சார்யரின் மறைவுக்குப்பிறகு,
பாதுகாப்பு கருதி’அழகிய மணவாளப்பெருமாள்’ மதுரை அழகர் திருமலையில் (திருமாலிருஞ்சோலை – அஞ்சினான் கோட்டை)
ஒரு வருடம் மலைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தார். அப்போது அழகர்மலை அழகாபுரிக்கோட்டையை ஆட்சி செய்தவன் ‘
கங்கைகொண்ட சூரியத்தேவன் வாணாதிராயன் காளிங்கராயன்’ எனும் பாணர்குலச் சிற்றரசன் ஆவான்.
அவனது பெரும் உதவியுடன் பிள்ளைலோகாச்சாரியார் சிஷ்யர்கள் அழகியமணவாளரின் திருமஞ்சனம் மற்றும்
திருவாராதனங்களுக்காக ‘அழகியமணவாளன் திருக்கிணறு’ ஒன்றையும் உருவாக்கினார்கள்.
(அழகர்மலையில் நூபுரகங்கைக்குச் செல்லும் வண்டிப்பாதையில் கோயிலின் மேற்கு மதில்சுவருக்கு அருகே இன்றும் அக்கிணறு உள்ளது.)

பிறகு கோழிக்கோடு(கேரளம்), தமிழ்நாடு-கர்நாடகம்-கேரளா மாநிலம் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும்
திருக்கணாம்பியில் சில காலம், பிறகு மேல்கோட்டை திருநாராயணபுரம் பிறகு திருவேங்கடமலைக் காடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தார்.
பின்பு யாதவராயனால் கி.பி.1360ல் திருமலைக் கோயிலில் கட்டப்பட்ட ரங்க மண்டபத்தில் அழகியமணவாளப்பெருமாள் எழுந்தருளியிருந்தார்.
கிபி. 1336 ஆம் ஆண்டில் ஹரிஹரர் மற்றும் புக்கர் எனும் யாதவ சகோதரர்கள் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தார்கள்.
குமார கம்பணன் புக்கரின் மகன் ஆவார். இவர் கிபி 1362 இல் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு
தொண்டை நாட்டை ஆண்ட இராஜநாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினார்.
பின்னர் மதுரை சுல்தானகம் மீது படையெடுத்து அங்கு சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்.
கி.பி. 1364 ஆம் ஆண்டளவில் மகமதியர்களின் ஆட்சி நிலை குலையத்தொடங்கி கி.பி. 1378 வரை போராட்டம் நடைபெற்றது.
குமார கம்பண்ணன் கோயில் அறநிலையங்களினைப் பாதுகாப்பதனையும் கடமையாகக் கொண்டு போர் புரிந்து
பல தலைவர்களை பாண்டிய நாட்டின் பொறுப்புகளில் அமர்த்தினான்.
[மதுரை படையெடுப்பின் போது உடனிருந்த இவரது மனைவி கங்கதேவி மதுரை முற்றுகையையும், வெற்றிகளையும்
‘மதுரா விஜயம்’ என்ற தனது சமஸ்கிருத நூலில் பதிவு செய்துள்ளார்]

• 1336 ஆம் ஆண்டு விஜயநகர் சாம்ராஜ்யம் இறைஅருளால் தென்னிந்தியாவில் ஏற்பட்டதைத் தொடர்ந்து,
‘அழகியமணவாளப் பெருமாள்’ திருமலையில் இருந்தபோது செஞ்சியை ஆண்டுகொண்டு இருந்த கோபண்ண உடையார்
திருமலையில் வருகை தந்து அரங்கநாதனை திரிசித்து விட்டு ஸ்ரீரங்கத்தில் திரும்பவும் அவரை எழுந்தருளப்பண்ண சித்தம் கொண்டார்.
அழகியமணவாளப்பெருமாளை செஞ்சிக்கு அருகேயுள்ள ‘சிங்கபுரம்’ என்கிற ஊரில் எழுந்தளுப்பண்ணி
பல காலம் ஆராதித்து வரும் காலத்து ஸ்ரீரங்கத்தில் இருந்து சிங்கபிரானுடைய குமாரர் திருமணத்தூண் நம்பி
(திருமணல்தூண் நம்பி என்றும சில குறிப்புகள் சொல்லுகின்றன) அன்றைய கோவில் அதிகாரியான உத்தம நம்பியை
செஞ்சிக்கு அனுப்பி கோபண்ண உடையாருக்கு கண்ணனூரில் உள்ள துலுக்கன் படை பற்றிய செய்திகளை சொல்லி அதனை வென்று,
கி.பி.1371 பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாள் அழகியமனவாளனையும் உபய நாச்சிமார்களையும்
ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பித்தான். இதற்கான கல்வெட்டு ஒன்று (A.R.E.No.55 of 1892)
ஸ்ரீரங்கம் கோவிலில் ராஜமகேந்திரன் திருச்சுற்று கிழக்குப்பகுதியில் காணப்படுகிறது.
(கி.பி.1324 முதல் 1370 வரை சுமார் 48வருடம் அழகியமணவாளர் வனவாசம் அல்லது உலா சென்றார்)

அழகியமணவாளப்பெருமாள் திருவரங்கத்திற்கு எழுந்தருளுவதற்கு முன்பு கொள்ளிடக்கரையின் வடகரையில்
‘அழகியமணவாளம்’ எனும் கிராமத்தில் தங்கியிருந்து, பிறகு கி.பி.1371 பரீதாபி வருஷம் வைகாசி மாசம் 17 ஆம் நாளில் திருவரங்கம் வந்தார்.
மூன்றாம் திருச்சுற்றில் சேரனை வென்றான் மண்டபத்தில் எழுந்தருள பண்ணப்பட்டனர். 48 வருடமாகியதால் இவர் தான்
அழகியமணவாளனா? என்று திருவரங்க மக்கள் சந்தேகமுற்றனர். ஈரங்கொல்லி எனப்படும் ஒரு வண்ணானால் உண்மை அறியப்பட்டது.
அந்த வண்ணானால் திருவரங்கம் அழகிய மணவாளப்பெருமாளுக்கு சூட்டப்பட்ட திருநாமமே “நம்பெருமாள்” என்பதாகும்.
கி.பி.1371 ம் ஆண்டு தொடங்கி அழகிய மணவாளனுக்கு நம்பெருமாள் என்ற திருநாமமே வழங்கப்பட்டு வருகிறது.

——————

விஜயநகரப் பேரரசு கி.பி.1336 ஆம் ஆண்டில் சங்கம மரபைச் சேர்ந்த முதலாம் ‘ஹரிஹரர்’ மற்றும் ‘முதலாம் புக்கராயர்’
ஆகியோரால் நிறுவப்பட்டது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது.
இந்திய வரலாற்றில் ‘விஜயநகர பேரரசு ஒரு முக்கிய இடம்’ கொண்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.
விஜயநகர பேரரசு உண்மையில் பார்த்தால் ஒரே மன்னர் வம்சம் கிடையாது,
அது 1336 – 1485 வரை சங்கம வம்சம், 1485-1491 வரை சாலுவ வம்சம், 1491-1542 வரை துளுவ வம்சம்
மற்றும் 1542 – 1646 வரை ஆரவிடு வம்சம் என 4 வம்சங்களால், சுமார் 310 வருடங்கள் விஜயநகரத்தை தலைநகரமாக கொண்டு ஆளப்பட்டது.
இப்பேரரசின் அழிபாடுகள் இன்றைய கர்நாடகத்தில் உள்ள ‘ஹம்பி’யைச் சுற்றிலும் காணப்படுகின்றன.

கிருஷ்ண தேவராயரின் ஆமுக்த மால்யதா, கங்காதேவி எழுதிய மதுராவிஜயம், அல்லசானி பெத்தண்ணாவின் மனுசரிதம்
போன்ற பல விஜயநகர சமகால இலக்கிய நூல்களில் இருந்து விஜயநகர பேரரசின் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.

ஸ்ரீரங்க அழகியமணவாளன் திருவேங்கடமலையில் ரங்கமண்டபத்தில் இருந்தபோது செஞ்சியை ஆண்டு கொண்டு இருந்த
கோபண்ண உடையார் திருமலைக்கு வருகை தந்து அழகியமணவாளனனை தரிசித்து விட்டு
திருவரங்கத்தில் திரும்பவும் அவரை எழுந்தருளப்பண்ணச் சித்தம் கொண்டு அவரது பெரு முயற்சியால்
அழகியமணவாளனையும் உபய நாச்சிமார்களையும் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பித்தான்
அப்போது (கி.பி. 1371 பரீதாபி ஆண்டு வைகாசி 17ஆம் நாள்) தற்போதைய பவித்ரோத்ஸவ மண்டபத்தில் தான்
அழகியமணவாளன் எழுந்தருளியிருந்தார்.
திருவரங்க மாளிகையாரும் அப்போது எழுந்தருளியிருந்ததால், யார் உண்மையான ‘அழகியமணவாளன்’ என்பதைத்
தெள்ளத் தெளிவாக அங்கு கூடியிருந்தோரால் அறுதியிட இயலவில்லை.
கி.பி.1323ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதால் 1371ஆம் ஆண்டில் 48 வருடத்திற்கு முன்
நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறுவார் யாருமில்லை. அப்போது வயது முதிர்ந்த கண்பார்வையற்ற ஈரங்கொல்லி
ஒருவன் (வண்ணான்) அழகிய மணவாளனின் திருமஞ்சனம் செய்த பிறகு அழகியமணவாளன் உடுத்தியிருந்த
கைலியைப் பிழிந்து பிரஸாதமாகக் கொடுக்கப்படும் புனிதநீரை
(ஈரவாடை தீர்த்தம்) சுவைத்து முன்பு எழுந்தருளியிருந்த அழகிய மணவாளனே “நம்பெருமாள்” ஆவார் என்று உறுதி செய்தார்.
அவன் இட்ட “நம்பெருமாள்” என்ற பெயரே இன்றுவரை வழங்குகிறது

நம்பெருமாள் (கி.பி.1371ல்) ஆஸ்தானம் எழுந்தருளிய போது மூலஸ்தானம் முழுதுமாக பாழ்பட்டு கிடந்தது.
வெயிலிலும் மழையிலும் மூலவர் ரங்கநாதர் காய்ந்தும் நினைந்தும் கிடந்திருக்கின்றார். ஆதிசேஷனின்
சேஷபடம் அவரது திருமுகத்தினை மட்டும் பாதுகாத்தபடியிருந்திருக்கின்றது.
சுந்தரபாண்டியனால் வேயப்பட்ட தங்கவிமானம், தங்கத்தினால் ஆனக் கொடிக்கம்பம், தங்கத்தினால்
செய்த சேரகுலவல்லி, அணிகலன்கள், சிம்மாசனங்கள் அனைத்தும் சுத்தமாக கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இந்த சமயத்தில் உத்தமநம்பி வம்சத்தரான ‘கிருஷ்ணராய உத்தமநம்பி’ செய்த கைங்கர்யங்கள் முக்யத்துவமானது. மகத்தானது.
இவர் வீரகம்பண்ண உடையாரையும், அவரது உறவினரான விருப்பண உடையாரையும் விஜயநகரம் சென்று
ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்துள்ளார். கம்பண்ணரும், விருப்பண்ண உடையாரும் திருவிடையாட்டமாக
பல கிராமங்களை கோவிலுக்கென்று அர்ப்பணித்து திருப்பணி வேலைகளை மேற்கொள்கின்றனர்.
கோவிலின் ஸ்தலத்தார்களும், உத்தமநம்பிகளும், கோவிலார்களும் வெகுவாக அரசர்களுடன் சேர்ந்து பாடுபட்டு
ஸ்ரீரங்கத்தினை புனர்நிர்மாணம் செய்கின்றனர்.

சித்திரையில் விருப்பண உடையார், கோவிலின் நிதிநிலைமையை சீர்செய்யும் பொருட்டும், கோவிலில் ஆராதனைகள் சீராக
நடைபெறுவதற்கு தானியங்களை பெருக்குவதற்கும் அருகிலுள்ள அனைத்து கிராம மக்களையும் அரவணைத்து அன்போடு அழைத்து,
அரங்கனுக்கு ஒரு தேரோட்டத்துடன் ‘பிரம்மோற்சவம்’ ஒன்றை கொண்டாடுகின்றார்.
கிராமத்து மக்கள் அனைவரும் தாங்கள் விளைநிலங்களில் விளைந்த தானியங்களை அரங்கனுக்குக் காணிக்கையாக்கி உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
அரங்கனது நித்யபடி பூஜைகளுக்குக் குறைவின்றி தானியங்கள் குவிந்தன.
அன்று தொடங்கிய இவ்விழா இன்றும் அன்று போன்றே குறைவற நடந்து வருகின்றது.
இந்த விழாவிற்கு ‘விருப்பண் திருநாள்” என்று பெயர்.
(விஜயநகர பேரரசின் சங்கமகுல மன்னன் இரண்டாம் ஹரிஹரன், அவருடைய புதல்வரான விருப்பண்ண உடையார்
பெயரில் கி.பி.1383ல் ஏற்படுத்தப்பட்டத் திருவிழா சித்திரை பிரம்மோத்ஸ்வம் ஆகும்.)

இதில் கோபண்ணவுடையாருடன் வந்த ‘குண்டு சாளுவயர்’ அணியரங்கன் திருமுற்றத்திலே பாண்டியன் கைங்கர்யமான
பொன்னாலான ‘திருக்கொடித்தட்டு’ (த்வஜஸ்தம்பம்-கொடிமரம்) துலுக்கனழித்ததால் வெண்கல வார்ப்பாகத்
திருக்கொடித்தட்டு பண்ணி நாட்டுவித்தார். (தற்போது அந்த வெண்கல கொடிமரத்திற்கு பொற்கவசம் பூட்டியுள்ளனர்).
அதன் அருகே கிழக்கே பெரிய கிருஷ்ணராய உத்தமநம்பி, ஹரிஹரராயரின் குமாரர் உத்தரவுப்படி துலாபுருஷ மண்டமும் கட்டி வைத்தனர்.
அந்த ராயர் குமாரர் விருப்பண்ண உடையாரும் வந்து, “துலாபுருஷங்கட்டி தாரைவார்க்கையில்,
பொன்னும், குட்டிக்கோயில் விமானமும் பொன் மேய்ந்து, இந்த ராயர் காணிக்கை இரண்டு பொற்குடம் உள்பட
ஒன்பது பொற்குடமும் வைப்பித்து, பெருமாள் பஹுநாளைக்காக எழுந்தருளினபடியாலே நாநாதேசத்திலும் வந்த,
பரிஜனங்களுக்கு ஸேவிக்கும்படி, விருப்பண்ண உடையார் பேரிலே சித்திரைத்திருநாள் த்வாஜாரோஹணத் திருநாள் நடத்துகையில்….”
என்று விருப்பண்ண உடையார் கைங்கர்யம் பற்றி கோயிலொழுகு விவரிக்கிறது.

கிருஷ்ணதேவராயர் (கி.பி.1509 – 1529) ஆட்சி:-
ஸ்ரீகிருஷ்ணதேவராயனின், தந்தை நரச நாயகன், உண்மையில் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாய் கொண்டவர் இல்லை,
கர்நாடகத்தில்(தற்போதைய கூர்க்) துளு என்ற மொழியை தாய்மொழியாய் கொண்டவர்,
அவர் தலைமை தளபதியாக வேலை பார்த்த கடைசி சாலுவ வம்ச மன்னனான நரசிம்ம ராயனுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் மன்னன் ஆனார்.
கிருஷ்ணதேவராயர் இந்து வீரர்களுடன், முஸ்லீம் படைவீரர்களையும் தனது படைதுறைகளில் சேர்த்து வளுவான படையணிகளை உருவாக்கினார்.
பத்தாண்டுகளில் தன் போர்த் திறமையால் வடக்கில் இருந்த தக்காணச் சுல்தான்களின் ஆக்கிரமிப்புகளை வென்றார்.
கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் விஜயநகரப் பேரரசு நாற்புறங்களிலும் விரிவாக்கப்பட்டு, புகழின் உச்சத்தில் இருந்தது.
தக்காண சுல்தான்களின் வடக்கு, கிழக்குப் பகுதிகளையும் மற்றும் கலிங்க நாட்டையும் கைப்பற்றி விஜயநகரப் பேரரசில் இணைத்தார்.
கி.பி.1520ல் நடைபெற்ற ராய்ச்சூர் போரில் கிருஷ்ணதேவராயர், பீஜாப்பூர் சுல்தானகத்தை வெற்றி கொண்டார்.
போரின் முடிவில் பிஜப்பூர் சுல்தான் கிருஷ்ண நதியின் அப்பாலுக்கு விரட்டியடிக்கப்பட்டார்.
ராயர் மிகுந்த இறை நம்பிக்கை உடையவராகவும் இருந்தார் .

இன்றைய ஆந்திராவில் உள்ள திருவேங்கடமலைக்கு (திருப்பதி ) சென்று, தங்கம் வைடுரியங்களால் ஆன பொருட்களை தானமாக வழங்கினான்.
மேலும் திருப்பதி கோயிலுக்கு பல தானங்கள் செய்து, கடைசியாக, தன் இரு பட்டத்து ராணிகளுடன் தன் சிலையையும்
(சென்னாதேவி, திருமலாதேவி) சேர்த்து மூன்று பேரும் அங்கு வேங்கடவனை நோக்கி வணங்குவது போல சிலைகளைச் செய்து வைத்தான்.
இன்றும் திருவேங்கடமலையில் சென்றால் இவர்கள் மூவரின் வெண்கல சிலைகனை பார்க்கலாம்.
கிருஷ்ணதேவராயர் தாம் வைணவராக இருந்தபோதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார்.
கலை இலக்கியப் புரவலராகவும் அவர் திகழ்ந்தார். எனவே ‘ஆந்திரபோஜர்’ என்று அவர் அழைக்கப்பட்டார்.

•அஷ்டதிக்கஜங்கள் என்ற எட்டு சிறந்த அறிஞர்கள் அவரது அவையை அலங்கரித்தனர்.
அவர்களின் முதன்மையானவர் அல்லசானி பெத்தண்ணா. ஆந்திரகவிதாபிதாமகர் என்று அவர் புகழப்பட்டார்.
அவரது முக்கிய படைப்புகள் மனுசரிதம் மற்றும் ஹரிகதாசாரம் என்பதாகும். பிங்கலி சூரண்ணா, தெனாலி ராமகிருஷ்ணா இருவரும்
சிறந்த அறிஞர்களாகத்திகழ்ந்தனர். ஆமுக்தமால்யதம் என்ற தெலுங்கு மொழி நூலையும், ஜாம்பவதி கல்யாணம், உஷாபரிணயம் என்ற வடமொழி நூல்களையும் கிருஷ்ண தேவராயர் இயற்றியுள்ளார்.
• ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் மீது மிகுந்த ஈடுபாடு உடைய ராயர் ஆண்டாளை மையக்கருவாகக் கொண்டு
“ஆமுக்த மால்யதா’ என்ற நுலை எழுதினார். இந்த நூல் தெலுங்கு இலக்கிய உலகில் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாக கருதப் படுகிறது.

•ஸ்ரீகிருஷ்ணதேவராயர் திருவரங்கம் பெரியகோயிலுக்கு சக ஆண்டு 1438 (கி.பி.16-02-1517) தாது வருஷம் மாசி மாதம் 11ம் நாள்
திங்கட்கிழமை வருகை தந்து, அன்றே பல விலையுயயர்ந்த ஆபரணங்களையும், நவரத்னங்களையும் திருக்கோயிலுக்கு நன்கொடையாகவும்,
சில கிராமங்களைத் தானமாகவும் தந்தது பற்றிய தெலுங்கு மொழிக் கல்வெட்டு
(A.R.E.No.341 of 1950-51 – இரண்டாம் திருச்சுற்று மேற்குப் பக்கச் சுவர் அடித்தளப்பகுதியில்) கூறுகிறது.
மேலும் இவரது பெயரால் மாசி மாதம் தேரோட்டத்துடன் கூடிய ‘மாசி பிரம்மோத்ஸவம்’ நடைபெற்றதாக இரு தமிழ் கல்வெட்டுக்களின்
(A.R.E.No.42 of 1938-39)(A.R.E.No.265 of 1930) மூலம் அறியமுடிகிறது.
தற்போது மாசி தெப்போத்ஸவம் மட்டுமே நடைபெறுகிறது

மாபெரும் விஜயநகரத்தை கட்டமைத்து ஒட்டுமொத்தத தென்னிந்தியாவையே ஆட்சி செய்த
ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் இடம் வரலாற்றில் சிறப்பானது மட்டும் அல்ல, தனித்துவமானதும் கூட!. திருவரங்கம் பெரியகோயிலில்
ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலத்தைய 34 கல்வெட்டுக்கள் உள்ளன. ஸ்ரீகிருஷ்ணதேவராயரால் இயற்றப்பட்ட ‘ஞானசிந்தாமணி’யைப்
பெரியபெருமாள் கேட்டுமகிழும் வண்ணம் அதைப் படிப்பதற்காக பண்டிதர்களை நியமித்து அதற்காக
ஸ்ரீபண்டாரத்தில் (கோயிற் கருவூலம்) 105 பொன் செலுத்தியது பற்றிய கல்வெட்டு
(இரண்டாம் திருச்சுற்று மேற்குத் தாழ்வரை பகுதி – A.R.E.No 295 of 1950-52) கூறுகிறது.

விஜயநகருக்கு கட்டுப்பட்டு செஞ்சி, காளஹஸ்தி, தஞ்சாவூர், மதுரை ஆகிய நகரங்களை தலைநகராக் கொண்டு
‘நாயக்கர் ஆட்சி’ தமிழகத்தில் ஏற்பட்டது.
• தஞ்சையில் கி.பி. 1532-இல் நாயக்கர் ஆட்சி தொடங்கியது;
• செஞ்சியில் கி.பி. 1526-இல் தொடங்கியது;
• மதுரையில் கி.பி. 1529-இல் தொடங்கியது.
• இதில் மதுரை நாயக்கர்களே நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள். 1529-ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1736-ஆம் ஆண்டு வரை
(மதுரையில் மட்டும் 207 ஆண்டுகள்) இவர்கள் ஆட்சி நிலவியது.

•• முதல் ஐந்து மதுரை நாயக்கர்களும் விஜயநகரப்பேரரசுக்கு விசுவாசமாக அதற்கு அடங்கியே இருந்தார்கள்.
ஆறாவதாக 1609 தொடக்கம் 1623 வரை மதுரையை ஆண்ட நாயக்கரான முத்துவீரப்ப நாயக்கர்,
அக்காலத்தில் வலுவிழந்திருந்த விஜயநகரத்துக்குத் திறை கொடுப்பதை நிறுத்திக்கொண்டார்.
இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர் காலம் “மதுரை நாயக்கர்களின் பொற்காலம்” எனலாம்.
திருமலை நாயக்கருக்குப் பின்னர் இவ்வம்சத்தைச் சேர்ந்த மேலும் அறுவர் ஆட்சி செய்தனர்.
இவர்களுள் ‘இராணி மங்கம்மாள்’ குறிப்பிடத்தக்கவர்.
இறுதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் இராணி மீனாட்சி. 1732 இல் நாயக்க மன்னர் ‘விஜயரங்க சொக்கநாத நாயக்கர்’
வாரிசு இல்லாமல் இறந்தபோது அவனது மனைவி மீனாட்சிக்கு ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது.
எனினும் அரசுரிமைப் போட்டியில் அவருக்கு உதவி செய்யும் சாக்கில் தலையிட்ட கர்நாடக நவாப்பின் மருமகனான
‘சந்தா சாகிப்’ அவரை சிறைப்பிடித்து மதுரை அரசையும் கைக்கொண்டார்.
இதன் மூலம் ‘மதுரை நாயக்கர் வம்சம்’ ஒரு முடிவுக்கு வந்தது

——————-

திருமலை நாயக்கர் ஆட்சி:- (கி.பி.1623-1659):-
மதுரை நாயக்க மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற திருமலை நாயக்கர்
முத்துக் கிருஷ்ணப்பருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் ஆவார்.
திருமலை நாயக்கரின் முழுப்பெயர் “திருமலை சவுரி நாயுனு அய்யுலுகாரு” என்பதாகும்.
• ஏழாவதாக பட்டத்துக்கு வந்த திருமலை நாயக்கருக்கு முன்னாலும் அறுவர்; பின்னாலும் அறுவர்
ஆட்சி செய்தபோதிலும் “நாயக்கர் வம்சம்” என்றாலே நமக்கு நினைவுக்கு வருகிறவர் திருமலை நாயக்கர் மட்டும் தான்

|| மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் பட்டியல் ||
• 1. விசுவநாத நாயக்கர்
(கி.பி.1529 – 1564)
• 2.முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564 – 1572)
• 3. வீரப்ப நாயக்கர் (கி.பி.1572 – 1595)
• 4. இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி1595 – 1601)
• 5.முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் [இரண்டாம்கிருஷ்ணப்ப நாயக்கரின் சகோதரர்
விசுவப்ப நாயக்கரின் மகன்] (கி.பி.1601 – 1609)
• 6. முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் [முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்த மகன்]
(கி.பி. 1609 – 1623)

• 7. திருமலை நாயக்கர் (கி.பி.1623 – 1659)
• 8. இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1659 )
• 9. சொக்கநாத நாயக்கர் [இராணிமங்கம்மாள் கணவர்] (கி.பி.1659 – 1682)
•10.அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி.1682 – 1689 )
•11.இராணி மங்கம்மாள் [சொக்கநாதரின்
மனைவி] (கி.பி.1689 – 1706)
•12.விஜயரங்க சொக்கநாத நாயக்கர் [சொக்கநாதரின் மகன்]
(கி.பி.1706 – 1732 )
•13.இராணி மீனாட்சி [விஜயரங்கநாதரின் மனைவி] (கி.பி.1732 – 1736 ) ஆகியோர்கள் ஆவார்கள்.

———

•மதுரை நாயக்க ஆட்சியில் ஏழாவது மன்னரான புகழ்பெற்ற திருமலைநாயக்க மன்னர் (கி.பி.1623-1659) ஆட்சியை
ஏற்றபோது அவருக்கு வயது 39 இருக்கும் என்பர்.
திருமலை நாயக்கரின் காலத்தில் மதுரைப் பெருநாடு, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி,
திருவனந்தபுரத்தில் ஒரு பகுதி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர்
ஆகிய பகுதிகளைக் கொண்ட பெரும் பரப்புடைய நாடாய் இருந்தது.
தன் ஒப்பற்ற கலை ஆர்வத்தால் மதுரை நகரைக் கலையழகு கொஞ்சும் நகரம் ஆக்கினார்.
நூற்றுக்கணக்கான கோயில்களை புதுப்பித்துக் கட்டி பெரும் கோபுரங்களை எழுப்பியிருக்கிறார்.
சரிந்த தொப்பையும் கூப்பிய கரங்களுமாக திருமலைநாயக்கர்
தன் இரு ராணிகளுடன் இவரது திருப்பணி பெற்ற திருக்கோயில்களில் நிற்கக் காணலாம்.

————–

திருமலை நாயக்கரின் கலைப் பணிகள்:-
திருமலை நாயக்கர் ஒரு தலைசிறந்த “கலாரசிகர்” ஆவார்.
மதுரையில் அவர் எழுப்பியுள்ள கட்டடங்கள் இன்றும் நின்று அவரை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
“திருமலை நாயக்கர் மஹால்” இவர் கட்டிய கட்டடங்களுள் புகழ்பெற்றதும், பெரியதுமாகும்.
“தென்னிந்தியாவின் தாஜ்மஹால்” என வரலாற்று ஆய்வாளர்களால் நாயக்கரின் மஹால் போற்றப்படுலது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இம்மஹாலில் உள்ள மிகப் பெரிய தூண்கள் காண்போர் கண்ணைப் பறிப்பனவாகும்.
ஒவ்வொரு தூணும் சுமார் 40 அடி உயரமும், மூவர் அல்லது நால்வர் சேர்ந்தணைத்தாலும் அணைக்க முடியாத அளவு
பருமனும் கொண்டு விளங்குவதை, அம்மஹாலின் முற்றத்தில் இன்றும் காணலாம்.
இந்து, இஸ்லாமிய கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த ‘இந்தோ சரசனிக் பாணி’ என அழைக்கப்படும்
கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த நாயக்கர் அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரமாண்டமான
பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன
இந்த அரண்மனை இரண்டு பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது.
ஒன்று ‘சொர்க்க விலாசம்’ என்றும், மற்றொன்று ‘ரங்க விலாசம்’ என்றும் அழைக்கப்பட்டது.
சொர்க்க விலாசத்தில், திருமலை நாயக்கரும், ரங்கவிலாசத்தில் அவரது தம்பி முத்தியாலு நாயக்கரும் வசித்து வந்துள்ளனர்.

அந்த ரங்க விலாசத்தின் தூண்கள் தான் தற்போதுள்ள ‘பத்துத் தூண்கள்’ ஆகும்.
ரங்க விலாசத்தின் மற்றைய பகுதிகள் மறைந்துவிட்டன.
[திருவரங்கம் பெரியகோயிலில் ‘ஸ்ரீரங்கவிலாசம்’ என்ற மண்டபம் முதலில் நம்மை வரவேற்கிறது.]

——————

திருமலை மன்னர் காலத்தில் ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்’
(அழகிய மணவாளதாசர் எனவும் ‘திவ்வியகவி’ என்ற பெயராலும் இவரை அழைத்தனர்) இயற்றிய
எட்டு நூல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் குறிப்பிடத்தக்க இலக்கியமாகும்..
(“அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன் ஆவான்” என்பது தமிழறிஞர்கள் கூறுவர்.)
திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த இவர் பின்னர்
இறைத்தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
அஷ்டபிரபந்தம் என எட்டு சிற்றிலக்கியங்களை இயற்றிய இவர் இருமொழி புலமைப் பெற்றவர்.
நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்குப் பிறகு வைணவ சமயச் சார்பாக எழுந்த இத்தொகுதியைத் “திவ்விய பிரந்த சாரம்” எனக் கூறுவர்.
சொல்லணிகளான யமகம், திரிபு, சிலேடை முதலியவை இதில் சிறந்து விளங்குகின்றன.
• அஷ்ட பிரபந்தங்கள்
1.திருவரங்கக் கலம்பகம்
2.திருவரங்கத்து மாலை
3.திருவரங்கத்து திருவந்தாதி
4.சீரங்கநாயகர் ஊசல்
5.திருவேங்கட மாலை
6.திருவேங்கடத்தந்தாதி
7.அழகர் அந்தாதி
8.நூற்றெட்டுத் திருபதி அந்தாதி.
இந்த எட்டுநூல்களும், ‘அஷ்டப்பிரபந்தம்’ எனவும், ‘ஐயங்கார் பிரபந்தம்’ எனவும் வழங்கப்பட்டன.

இதில் முதல் நான்கு நூல்கள் ‘திருவரங்கம் பெரியகோயில்’ புகழ் பாடும் நூல்களாகும்.
இவர் திருவேங்கடமாலை முதலிய நூல்க ளியற்றியதைக் குறித்து ஒருசாரார் வழங்குவதொரு கதை பின் வருமாறு:-
இவர் ஸ்ரீரங்கநாதனுக்கே தொண்டராகி அப்பெரியபெருமானையன்றிப் பிறிதொரு தெய்வத்தை மறந்துந் தொழாத மனவுறுதியுடையவராய்,
அப்பெரியபெருமாள் விஷயமாகவே அந்தாதியும் மாலையும் கலம்பகமும் ஊசலும் பாடியபொழுது,
திருவேங்கடமுடையான் இவர் வாயால் தாம் பிரபந்தம் பாடப்பெற விரும்பித் தமது உண்மை வடிவத்துடன் இவரது கனவில் தோன்றி
‘நம் வேங்கடத்தின் விஷயமாகச் சில பிரபந்தம் பாடுக!’ என்று கட்டளையிட,
இவர் அதற்கு இணங்காமல் “அரங்கனைப் பாடிய வாயாற் குரங்கனைப் பாடேன்!” என்றுகூறி மறுக்க,

திருவேங்கடமுடையான் எங்ஙனமாவது இவர்வாயாற் பாடல்பெற அவாக் கொண்டதுமன்றி,
எல்லாத் திருப்பதிகளிலும் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் ஒருவனே யென்று இவர்க்குத் தெரிவித்து
இவர் கொண்டுள்ள பேதபுத்தியை அகற்றவுங் கருதியதனால், இவர்க்கு உடனே கண்டமாலையென்னுங் கொடியநோய் உண்டாகும்படி செய்ய,
அந்த வியாதியால் மிகவருந்திய இவர் அதன் காரணத்தை உணர்ந்து கொண்டு அப்பெருமான் பக்கல் தாம் அபசாரப்பட்ட அபராதம் தீருமாறு
உடனே ‘திருவேங்கடமாலை’, ‘திருவேங்கடத்தந்தாதி’ என்னும் பிரபந்தங்களை இயற்றி அப்பெருமானைத் துதிக்க,

அது பற்றித் திருவுள்ளமுவந்த திருவேங்கடமுடையான் உடனே இவரெதிரில் எழுந்தருளிக் காட்சிதந்து அநுக்கிரகிக்க,
அதனால் இவர் அப்பொழுதே அந்நோய் நீங்கப் பெற்றவராகி,
பின்பு, அவ்வடமலைக்கு ஈடான தென்மலையின் விஷயமாக ‘அழகரந்தாதி’ பாடி,
அப்பால் தமது பேதபுத்தி யொழிந்தமை நன்கு விளங்க ‘நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி’ பாடினார் என்பர்.

• திருவேங்கடமுடையான் [ஸ்ரீநிவாசன்] ஐயங்கார்க்குச் சேவைசாதித்த இடம் –
திருவரங்கம் பெரியகோயிலில் சலவைக்கல் மண்டபப்பிராகாரமென்கிற உட்பிரகாரத்தில் தென்கிழக்குப்பக்கத்தில் என்பர்.
(அதாவது ராஜமகேந்திரன் திருச்சுற்றின் தென்கிழக்கு பகுதியில் தற்போது உள்ள திருவேங்கடமுடையான் சித்திரம் அருகாமையில் என்பர்.)

——————-

திருவரங்கம் ஸ்ரீவைஷ்ணவர்களிடையே 17ம் நூற்றாண்டில் தென்கலை வடகலை பிரிவுகளின் முரண்பட்ட சச்சரவுகள் நிகழ்ந்தன.
‘ஸ்ரீரங்கம் கோயில் தென்கலையாருக்கே உரிய கோயில்’ என்பதை நிலைநாட்ட போராடிய நிகழ்ச்சி
திருமலை நாயக்கர் திருச்சியில் இருந்த போது நடந்தது.
திருமலை சௌரி மன்னர் திருச்சியிலிருந்த போது தீவிரமான ஸ்ரீவைஷ்ணவ சமயத்தை பின்பற்றியவராக
‘பிரணதார்த்திஹர வாதூல தேசிகரான கோயிலண்ணர்’ எனும் ஆச்சார்யன் திருவடி சம்பந்தம் பெற்றிருந்தார்.
கி.பி. 1630 ஆம் ஆண்டு விஜயநகர அரசரான மூன்றாம் வேங்கவனுடைய (கி.பி 1630-42) குலகுருவான
‘ஏட்டூர் திருமலை குமார தாத்தாச்சார்யர்’ (அல்லது) கோடிகன்யாதானம் தாத்தாச்சார்யர், திருமலை வேங்கத்துறைவனை வழிபட்டு,
ஆனந்த நிலையம் விமானத்திற்கு பழுது பார்த்து பொன்வேய்ந்து திருப்பணி செய்து, காஞ்சி வரதராசரையும் வழிபட்டு
மேற்படி திருப்பணிகளையே செய்த பிறகு திருவரங்கம் நோக்கி வந்தார்.
விஜயநகர மன்னரான மூன்றாம் வேங்கடவன் திருவரங்கம் பெரியகோயிலுக்கு ‘கோடிகன்யாதானம் தாத்தாச்சார்யர்’ வருவதற்கு
முன்பே திருமலை மன்னருக்கு குருவின் வருகையை தூதனுப்பி தெரிவித்து விட்டார்.
அக்காலகட்டத்தில் திருவரங்கத்தில் பட்டர் திருமலாசார்யர்,உத்தம நம்பி, அண்ணங்கார் ஆகியோரிடையே நிலவி வந்த
பகைமை உணர்ச்சி வலுத்திருந்தது. இதற்கான காரணத்தை கோயிலொழுகு (முதற்பாகம்) இறுதியில் கூறுகிறது

“உத்தமநம்பிக்கும் பட்டர் திருமலாசார்யருக்கும் உண்டாற கலஹம்” எனும் பகுதியில் உள்ளது.
தனது குருவான அண்ணங்காரைச் சந்தித்த திருமலை சௌரி (கோயிலொழுகு நாயக்கரை அவ்வாறே கூறுகிறது)
விஜயநகர மன்னரின் விருப்பப்படி, திருவரங்கம் வருகை தரும் தாத்தாச்சார்யருக்கு தகுந்த மரியாதைகளை அளித்திடுமாறு வேண்டிக் கொண்டான்.
வடகலையாரான தாத்தாச்சாரியாருக்கு தென்கலையாருக்குரிய கோயில் மரியாதைகளை அளிப்பதற்கு அண்ணங்கார் உடன்படவில்லை.
சிஷ்யரான தன்னுடைய. இந்த வேண்டுகோளை ஏற்காவிட்டால் அண்ணங்கார் பல ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்
என்று அச்சுறுத்திய போதிலும், அவர் மன்னனுடைய விருப்பத்திற்கு இணங்கவில்லை.
திருவரங்த்தில் நிலவியிருந்த சூழ்நிலையை தாத்தாச்சார்யருக்கு தெரியப்படுத்தினான்.

இதனால் சினங்கொண்ட தாத்தாச்சார்யர் மன்னரிடம் ” காஞ்சிபுரத்தில் தென்கலையார்கள் ஒன்றுகூடி
இத்தகைய இடர்பாடுகளைச் செய்யமுனைந்தனர். அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை.நீ மன்னனாக இருக்க தகுதியற்றவன்.
இதுபற்றி நான் விஜயநகர பேரரசரிடம் தெரிவிக்கப்போகிறேன்” என்று கோபத்துடன் கூறினார்.
திட்டமிட்ட படி வந்த தாத்தாச்சார்யரை ஸ்தலத்தார்கள் யாரும் மரியாதை தரவில்லை.
திருவரங்கம் ப்ரணவாகார விமானத்திற்குப் பொன் வேய்வதற்காக கொண்டு வந்த தங்கத்தினை, ‘திருமாலிருஞ்சோலை’
சோமச்சந்த விமானத்திற்குப் பொன் வேய்ந்து விட்டு, தாத்தாச்சார்யர் வடநாட்டு யாத்திரையை மேற்க்கொண்டார்.
விஜயநகரபேரரசன் தன் குருவுக்கு நேர்ந்த அவமானத்தை அறிந்து, பின்னர் கிருஷ்ணராயர், விட்டலராயர் ஆகியோரை
திருவரங்கத்திற்கு அனுப்பி வைத்து நடந்த நிகழ்ச்சிகளை உள்ளபடி ஆராய்ந்து தேவைப்பட்டால்
திருமலை சௌரி நாயக்கனின் தலையைக் கொய்து தனக்கு அனுப்பி வைத்திடுமாறு பணித்தான்.

திருமலை சௌரி குற்றமற்றவர் என்பதை அவர்கள் தீரவிசாரித்து அறிந்து விஜயநகர பேரசனுக்கு தெரியப்படுத்தினர்.
திருமலை சௌரியும் விஜயநகர மன்னருக்குத் தங்கத்தாலான தனது தலையையும், பல்லாயிரம் பொற்காசுகளையும் காணிக்கையாக அனுப்பி வைத்தாராம்.
தனது கோரிக்கையை ஏற்காத ஸ்ரீரங்கத்து ஸ்தலத்தார்களில் ஒருவரான
தனது குரு ப்ரணதார்த்திஹர வாதூல தேசிகர் (அண்ணங்கார்) மீது வெறுப்பு மேலிட்டது.
இதன் விளைவாக அவருடன் ஏற்பட்டிருந்த ஆச்சார்ய சிஷ்ய உறவை அறுத்துக் கொண்டு
‘திருவானைக்காவல்’ ஸ்தலத்தில் இருந்த “அய்யங்காள் ஐயன்” என்ற சைவரிடம் தீட்சை பெற்றுக் கொண்டார்.
பிறகே தனது தலைநகரை மதுரைக்கு மாற்றினார் என்கிறவாறு கோயிலொழுகு கூறுகிறது.

———————-

• திருவரங்கம் பெரியகோயிலில் திருமலை நாயக்கர் காலத்தில்
திருமலை மன்னன் பெயரிலோ அல்லது விஜயநகரமன்னர் பெயரிலோ எந்தக் கல்வெட்டும் பொறிக்கப்படவில்லை.
மாறாக மண்டலாதிகாரிகள், சேனைத்தலைவர்கள், தனிகர்கள் ஆகியோருடைய பெயர்களில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

விஜயரங்க சொக்கநாத நாயக்கர்(கி.பி.1706-31)ஆட்சிக் காலம் :-
உரிய பருவம் அடைந்த பின் விஜயரங்கசொக்கநாத நாயக்கன் (கி.பி 1706ல்) மதுரை நாயக்க மன்னனாக முடிசூட்டிக்கொண்டான்.
இவனுடைய காலத்திலேயே மதுரை நாயக்கர் ஆட்சி சரிவை நோக்கிச் சென்றது.
அரசாள்வதில் நாட்டமில்லாத இந்த நாயக்க மன்னன் அரசாளும் பொறுப்பினை தன்னுடைய மந்திரிகளிடமும் விட்டு வைத்திருந்தான்.
இதனால் நாட்டில் பல முறைகேடுகள் தொடங்கின.
பல முறை பல தலங்களுக்கு தீர்த்தயாத்திரைகளும் சென்றான். இவன் ஸ்ரீரங்கம் கோயிலை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டான்.
இவனுடைய ஆட்சியில் கி.பி.1710 -1720 ம் ஆண்டுகளில் நாட்டில் பஞ்சம் நிலவியதால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாயினர்.
இயல்,இசை,நாடகம் ஆகிய மூன்று துறைகளிலும் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் புலமை பெற்றிருந்தார்.
இவர் தெலுங்கு மொழியில் “ஸ்ரீரங்க மாஹாத்ம்யம்” மற்றும் “துலாகாவேரி மாஹாத்ம்யம்” ஆகிய நூல்களைப் படைத்தார்.

•• இம்மன்னர் பற்றிய ஓர் கதை :- விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஓர் சமயம் கைசிக ஏகாதசி சமயம்
‘கற்பூரப்படியேற்றம்’ காண சற்று தாமதித்து வந்தார். இடையில் பெருமாள் மூலஸ்தானம் சென்றிருந்தார்.
அது கண்டு நாயக்க அரசர் மீண்டும் ‘கற்பூரப்படியேற்றம்’ காண விழைந்தார்.
நிர்வாகிகள் இனி அடுத்த வருடம் தான் கற்பூரப்படியேற்ற சேவை. பெருமாள் மூலஸ்தானம் சென்று விட்டால்,
பிறகு திரும்புவது கிடையாது, என்பதும் அரசருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனால் மனம் வருந்திய அரசர் அடுத்த வருடம் வரை திருவரங்கத்திலேயே தங்கியிருந்து
அக்கற்பூரப்படியேற்ற சேவையைக் கண்டு பேரானந்தமடைந்தார் என்று ஒரு கதை கூறுவர்.
இதனை நினைவூட்டும் வகையில் இரண்டாம் திருச்சுற்றான ராஜமகேந்திரன் திருச்சுற்று மேற்குப்பகுதியில்
நாயக்க அரசரும் அவர் குடும்பத்தாரும் தந்தத்தால் ஆன சிலாரூபமாக கருவூல மண்டபத்தில்
கண்ணாடி பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். அதற்கான அறிவிப்பு பலகையும் அருகில் உள்ளது.

விஜயரங்கநாத சொக்கநாத நாயக்கர் பற்றிய கோயிலொழுகு குறிப்புகள்:-
• விஜயரங்க சொக்கநாத மன்னர் கைசிக ஏகாதசியன்று நம்பெருமாளுக்குச் சாற்றுவதற்காக 360 பீதாம்பரங்களைச் சமர்பித்தார்.
ஸஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுவதற்காக ஆயிரம் செப்புக்குடங்களையும் இவர் காணிக்கையாக சமர்ப்பித்தார்.
திருவரங்கத்திலேயே பலநாட்கள் தங்கியிருந்து நாள், பக்ஷ, மாத, திருவிழாக்களை இவர் கண்டுகளித்து வந்ததாகக் கோயிலொழுகு தெரிவிக்கிறது.

• கி.பி.1707ம் ஆண்டு துரை ரங்காச்சார்யருடைய மகனான ஸ்ரீநிவாஸ தேசிகர் மன்னனுடைய பொருளுதவி கொண்டு
“திருவாராதன காலத்தில் உபயோகத்தில் கொள்ளும்படி தங்கத்தாலான வட்டில்கள், தங்கத்தட்டுகள், படிக்கம்,
காவிரி நீரினைச் சுமந்து வருவதற்கான தங்கத்தாலான குடம் மற்றும் பல பொருட்களோடு,
நம்பெருமாளும், உபயநாச்சிமார்களும், ஸ்ரீரங்கநாச்சியாரும் விசேஷ நாட்களில் அணிந்து கொள்ளும் பொருட்டு,
வைரமுடி, விலையுயயர்ந்த ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டன.
விஜயரங்கசொக்கநாதன் காலத்தில் தான் தற்போதைய ‘கண்ணாடி அறை’ நிர்மாணிக்கப்பட்டது.
சேரனை வென்றான் மண்டபத்திற்கு வடக்கு நோக்கி, துரை ரங்காச்சார்யர் மண்டபத்திற்குச் செல்லும் நடைபாதை சீரமைப்பு செய்யப்பட்டது.

நம்பெருமாளுடைய திருவடி நிலைகளுக்கு கீழே அமைந்துள்ள தங்கத்தகட்டில் விஜயரங்க சொக்க நாயக்கருடைய
உபயம் என்ற தெலுங்கு மொழி (A.R.No.353 of 1950-51)வாசகங்கள் உள்ளன.

• உமிழ் நீரை ஏந்தும் தங்கத்தாலான வட்டில்கள் மூன்றினில் இவை விஜயரங்க சொக்கநாத நாயக்கனால்
கஸ்தூரி ஸ்ரீரங்கநாதனுக்கு ஸமர்ப்பிக்கப்பட்டவை என்று (A.R.No.354 of 1950-51)தெலுங்கு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.

• தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளால் ஆன தங்கப்பபல்லக்கு இம்மன்னராலேயே நம்பெருமாளுக்கு (A.R.No.348 of 1952-53)
சமர்ப்பிக்கப்பட்டதாக தெலுங்கு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
(இப்பல்லக்கு 1813ல் ஜார்ஜ் பிரான்சிஸ் எனும் ஆங்கிலேய கலெக்டரால் பழுது பார்க்கப்பட்டது)

• பெருமாளுக்கு இரவில் பால் சமர்ப்பிக்கப்படும் தங்கக்கிண்ணம் இம்மன்னராலேயே தரப்பட்டதாக (A.R.No.353.1 of 1950-51)
அதிலுள்ள தெலுங்கு வாசகங்கள் மூலம் அறியமுடிகிறது.

நம்பெருமாள் புறப்பாட்டிற்கென தங்கக்குடை ஒன்றும் இம்மன்னரால் (A.R.No.348 of 1950-51) சமர்ப்பிக்கப்பட்டது.
தங்கக்குடையின் பிடியில் 02-04-1734 ஆம் நாளன்று பொறிக்கப்பட்ட வாசகங்கள் ” ஆனந்த வருஷம், சைத்ரமாதம்,
சுக்ல பக்ஷ தசமியன்று ஜிட்டு விசுவநாத நாயனி, விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் இந்தத் தங்கக்குடை சமர்ப்பிக்கப்பட்டது”
மேலும் இதன் பிடியில் இந்தக் குடை1927ம் ஆண்டு டிசம்பர் மாதம் பழுது பார்க்கப்பட்டதாகவும் பொறிக்கப்பட்டுள்ளது.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பத்மாவதித் தாயார் ஸமேத ஸ்ரீ வேங்கடேஸ்வரர் பூவார் கழல்களே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: