ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரா திவ்ய ஹார சுருக்க விளக்கம் /ஸ்ரீ குரு பரம்பரை தனியன்கள் / ஓராண் வழி ஆசார்ய பரம்பரையில் வாராத ஆசார்யர்கள் தனியன்கள் /ஸ்ரீ மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்கள் தனியன்கள்–/ஸ்ரீ வாழித் திருநாமப் பாசுரங்கள் —

நமது ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையானது
நவ ரத்ன ஹாரம் -எம்பெருமானார் நடுநாயகம் -முன்னும் பின்னும் நவ ஆச்சார்யர்கள் உண்டே

ஸ்ரீ பெரிய பெருமாள் , ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடங்கி ஸ்ரீ.ஸேனை முதலியார் முதற்கொண்டு
ஸ்வாமி ஸ்ரீ. மணவாள மாமுனிகள் ஈறாக முற்றுப் பெரும். அவர்கள் க்ரமப்படி :-

பெரிய பெருமாள்
பெரிய பிராட்டியார்
விஷ்வக்ஸேனர் / ஸேனை முதலியார்
நம்மாழ்வார்
நாதமுனிகள்
உய்யக்கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
பெரிய நம்பி
ராமாநுஜர்
எம்பார்
பட்டர்
நஞ்சீயர்
நம்பிள்ளை
வடக்குத் திருவீதிப் பிள்ளை
பிள்ளைலோகாச்சாரியார்
திருவாய்மொழிப் பிள்ளை
மணவாள மாமுனிகள்.

நவ கிரந்தங்கள் -உபநிஷத் ப்ரஹ்ம ஸூத்ரம் ஸம் ரக்ஷணம் -ஸ்ரீ பாஷ்ய காரர்
18 கிரந்தங்கள் -அருளிச் செயல்-ரஹஸ்ய கிரந்தங்கள் ஸம் ரக்ஷணம் -ஸ்ரீ மா முனிகள்
சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம் என்று மற்ற பூர்வர்கள் அருளுக்கு இலக்கு
இவருக்கு-மா முனிகளுக்கு சீர் அருள்
மன்னிய சீர் மாறன் காலை உணவாவாகப் பெற்றோம்
முன்னவராம் குரவர் மொழி உள்ளப்பெற்றோம்
முன்னவர் கிரந்தங்களை வாசித்தும் சொல்லியும் அர்த்த விசேஷங்களை எழுதியும் இருந்ததால்
இவரைக் கொண்டே ஈடு வியாக்யானம் கேட்டு அருளினான்
அம்புயர் கோன் தன் குருவின்-மா முலைகளின் – தாள் இணையில் அன்பு செய்யாமல்
தன்னிடம் செய்தாலும் விண்ணாடு அளிக்க மாட்டானே

—————————–

ஸ்ரீ நாத முனிகள் ( 824-924 AD )
உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937 AD )
ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
கூரத்தாழ்வான் (1009-1133AD)
உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (1017-1137 AD)
முதலி ஆண்டான் (1027-1132)
எம்பார் (1021-1140)
திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
அனந்தாழ்வான் ( 1055-1205 AD)
கிடாம்பி ஆச்சான் (1057-1157AD )
பராசர பட்டர் ( b 1074 AD )
எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD)
நஞ்சீயர் (1113-1208 AD)
நம்பிள்ளை (வரதாசார்யர்) (1147– 1252AD)
நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:) ( 1167-1264 AD )
பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD)
வேதாந்த தேசிகன் ( வேங்கடநாதன்) (1268 – 1369 AD)
திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
ஸ்வாமி மணவாள மாமுனிகள் (1370-1443 AD)

——

அகலகில்லேன் இறையுமென்ற”
ஆழ்ந்த பர தத்துவத்தை
இப்புவனம் உய்வதற்காய்
ஈந்திட்ட எம் குருக்காள்‚
உண்மை உறைப்பதற்காய்
ஊணுறக்கம் ஒழிந்திட்டீர்
எம்மையும் போன்றதொரு
ஏதிலனும் பயன்பெறவே
ஐயன்மீர் வந்துதித்தீர்‚
ஒழிவில் காலமெல்லாம்
ஓயாமல் உமதுபுகழ்
ஓதும் வண்ணமதாய்
அ‡(ஹ)ம் அருள்வீரே‚

நாதன் வகுத்தளித்தான்
நல்லாள் நங்கையிடம்
நங்கை ஈன்றாளே
நற்சேனை நாதனிடம்

நற்சேனை நாதனவன்
நம்மாழ்வார் திரமீந்தான்
நம்மாழ்வார் தாமீந்தார்
நாதமுனி கரங்களிலே‚

நாதமுனிசீடரதை உய்யக்கொண்டாரே
நாதமுனி பேரர் யாமுனராமவர்க்கு
நடுவில்வந்தவராம் மணற்கால்நம்பியும்தான்
நயமாயதைச் சேர்த்தார் ஆளவந்தாரவற்கே‚

ஆளவந்தாரதனை ‘ஆம்முதல்வனு”க்கீயும்படி
ஆளவந்தார் சீடர் பெரியநம்பிவசம்மீந்தார்
ஆளவந்தார் சீடர் அளித்த பொக்கிஷத்தை
ஆளவந்தாரவரே எம்பெருமானானாரே‚

எம்பெருமானாரின் இட்டவழக்காக
எம்பாரும் இயல்பாக இங்கேவந்துதித்தார்
எம்பாரின் சீடரிலே ஏற்றமிகு பட்டரவர்
எளிதில் வேதாந்தியை நஞ்ஜீயராக்கினரே‚

நஞ்ஜீயர் நம்மதத்தில் நன்கு கற்றறிந்த
நல்ல உரைகளெல்லாம் நம்பிள்ளைக்கீந்தாரே
நம்பிள்ளை நவின்றதனை நல்லோலை தனிலிட்டு
நமக்காயளித்தவரே வட திருவீதிப்பிள்ளை‚‚

இன்னம் வந்ததொரு
இணையில்லா குருக்களவர்
இன்னமுதத் திருவடிகள்
இறைஞ்சி இருமனமே‚

——-

உடையவருக்கு மடைப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த கிடாம்பி ஆச்சான் என்ற
ஆத்ரேய ராமாநுஜரின் வம்சத்தில் தோன்றிய கிடாம்பி அப்புள்ளாரின் மருகர் ஸ்வாமி தேசிகன்;
அவரிடமே பயின்றவர்.

ஸ்வாமி தேசிகனின் முதன்மைச் சீடர்கள் அவர்தம் திருக்குமாரரான வரதாசார்யரும், ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்;
குமார வரதாசார்யர் ( 1316-1401AD )
ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் ( 1286-1386 AD ) -பரகால மடம் இவரால் நிறுவப்பட்டது.

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கி
யானடைவே அவர்குருக்கள் நிரைவணங்கிப்
பின்னருளால் பெரும்பூதுர் வந்தவள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.- தேசிகப் பிரபந்தம்

——————–

ஸ்ரீ குரு பரம்பரை தனியன்கள் —

ஸ்ரீ பெரிய பெருமாள் (பங்குனி ரேவதி)
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும்,
ஸ்ரீ ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான
ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ,
செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ சேனை முதலியார் (ஐப்பசி பூராடம்)
ஸ்ரீ ரங்க சந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விச்வசித சிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி ச்ரியாம ||

ஸ்ரீ ரங்க சந்த்ரர்களாகிய ஸ்ரீ பெரியபெருமாள் ஸ்ரீ பெரிய பிராட்டியார் லீலைகளைச் செய்து போர,
ஸ்ரீ எம்பெருமான் அனுமதித்த தம் திருவிரல் அசைவினாலேயே உயிர் உள்ளன மற்றும் உயிர் அல்லன அனைத்தையும்
நடத்தும் ஸ்ரீ விஷ்வக்சேனர் திருவடிகளையே ஒரே புகலாகப் பற்றுகிறோம்.

ஸ்ரீ நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம்
எல்லாமும் ஆனவருமான ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீமந் நாதமுனிகள் (ஆனி அனுஷம்)
நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||

எப்போதும் பகவத் த்யானத்தில் ஆழ்ந்து பக்திக்கு கடலானவரும், அளப்பரிய ஞானம் நினைப்பரிய வைராக்யம்
ஆகியன பெற்றவருமான ஸ்ரீமந் நாதமுனிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ உய்யக் கொண்டார் (சித்திரை கார்த்திகை)
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே |
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே ||

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளில் தம் ஸர்வ பாரமும் விட்டுச் சரணடைந்த நம் குல நாதரான
ஸ்ரீ புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன்.

ஸ்ரீ மணக்கால் நம்பி (மாசி மகம்)
அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||

பட்டத்து இளவரசாகிய ஸ்ரீ யாமுனாசார்யரைத் தூதுவளை தந்து மிக எளிதாகத் திருத்திப் பணிகொண்ட
ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்.

ஸ்ரீ ஆளவந்தார் (ஆடி உத்தராடம்)
யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவைக் காட்டி, சத்தை தந்து எல்லா அஞ்ஞானங்களையும் த்வம்சம் செய்து
என்னை ஒரு பொருளாக உளவாக்கிய ஸ்ரீ யாமுனாசார்யரின் திருவடிகளை த்யாநிக்கிறேன்.

ஸ்ரீ பெரிய நம்பி (மார்கழி கேட்டை)
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா |
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந் நாராயணனின் கல்யாண குணக் கடலில் ஆழ்ந்துள்ள
நிறைவுள்ள ஸ்ரீ மஹா பூர்ணரை வணங்குகிறேன்.

ஸ்ரீ எம்பெருமானார் (சித்திரை திருவாதிரை)
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

ஸ்ரீ அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும்,
அடியேன் குருவும், கருணைக் கடலே போல் வடிவெடுத்தவரும் ஆகிய ஸ்ரீ பகவத் ராமானுசரை அடி பணிகிறேன்.

ஸ்ரீ எம்பார் (தை புனர்வஸு)
ராமானுஜ பதச் சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததா யத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விச்ரமஸ்தலீ ||

ஸ்ரீ ராமானுஜரின் திருவடித் தாமரை நிழல்போல் பிரியாதவரும், அடியேன் துயர்களை நீக்கி
இளைப்பாற்றும் நிழலுமான ஸ்ரீ கோவிந்தப் பெருமாளின் புகழ் ஓங்குக.

ஸ்ரீ பட்டர் (வைகாசி அனுஷம்)
ஸ்ரீ பராஸர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||

கைங்கர்ய ஸ்ரீ நிறைந்த புகழாளர், ஸ்ரீ ரங்கேசனின் புரோகிதர், ஸ்ரீவத்சாங்கர் ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருக்குமாரர்
ஸ்ரீ பராசர பட்டர் திருவருளால் அடியேனுக்கு சகல மங்களமும் ஆகுக.

ஸ்ரீ நஞ்சீயர் (பங்குனி உத்தரம்)
நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகாம்ருதாஸார பூரிதம் புவந த்ரயம்

மூவுலகுக்கும் மங்களம் சேர வேதாந்த சாரமான தம் அமுத வாக்குகளைப் பொழியும் வேதாந்தி
ஸ்ரீ நஞ்சீயரை வணங்குகிறேன்.

ஸ்ரீ நம்பிள்ளை (கார்த்திகை கார்த்திகை)
வேதாந்த வேத்ய அம்ருத வாரிராசேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரி தாஸம் ||

நீர் நிறைந்த மேகம் போல் வேதாந்த ஞானம் செறிந்த ஸ்ரீ நஞ்சீயர் திருவாக்குகளைத் தம் கருணையால்
வேத வேதாந்தப் பொருள்களைச் சுவைப்படக் கூறும் பெருங்கருணையாளரான
ஸ்ரீ கலிவைரி தாசர் திருவடிகளைப் பற்றுகிறேன்.

ஸ்ரீ வடக்குத் திருவீதி பிள்ளை (ஆனி ஸ்வாதி)
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம ||

ஸ்ரீ நம்பிள்ளையின் திருவடித் தாமரைகளில் அடியவரான ஸ்ரீ க்ருஷ்ணர் வடக்குத் திருவீதிப் பிள்ளை
திருவருளால் சகல ஸாரார்த்தமும் அறியப் பெறுகிறேன். இப்படிப்பட்ட ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளையின்
திருவடிகளை எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி திருவோணம்)
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: ||

ஸ்ரீ க்ருஷ்ணபாதர் ஆகிய ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை திருக்குமாரர், ஸம்ஸாரமாகிய பாம்புக் கடியிலிருந்து
ஜீவர்களுக்கு விடுதலை தரும் மருந்தான ஸ்ரீ பிள்ளை உலகாசிரியரை வணங்குகிறேன்.

ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை (வைகாசி விசாகம்)
நம ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஸாலிநே ||

ஸ்ரீ குந்தீ நகரில் அவதரித்தவர், ஆசார்ய கடாக்ஷத்தால் பரம ஸ்லாக்யமான கைங்கர்ய ஸ்ரீயை அடைந்தவரான
ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்கிற ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடியை வணங்குகிறேன்.

ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

ஸ்ரீ திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும், ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல் போல் நிரம்பியவரும்
ஸ்ரீ யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

——–

ஓராண் வழி ஆசார்ய பரம்பரையில் வாராத ஆசார்யர்களும் (மேலும் பலர் உள்ளனர்):

ஸ்ரீ காவலப்பன் (தை விசாகம்)
நாதமௌநி பதாஸக்தம் ஜ்ஞானயோகாதி ஸம்பதம் |
குருகாதிப யோகீந்த்ரம் நமாமி சிரஸா ஸதா ||

ஸ்ரீ நாதமுனிகள் திருவடித் தாமரைகளில் மிக்க பக்தி கொண்டவர், ஞான யோக பக்தி யோகங்களில் நிறை செல்வர்,
யோகிகளில் சிறந்தவரான ஸ்ரீ குருகைக் காவலப்பன் திருவடித் தாமரைகளில் எப்போதும் வணங்குகிறேன்

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் (வைகாசி கேட்டை)
ஸ்ரீராமமிச்ர பத பங்கஜ ஸஞ்சரீகம் ஸ்ரீயாமுனார்ய வர புத்ரம் அஹம் குணாப்யம் |
ஸ்ரீரங்கராஜ கருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||

ஸ்ரீ யாமுனாசார்யர் திருக்குமாரர், ஸாத்விக குணபூர்ணர், ஸ்ரீ மணக்கால் நம்பிகளின் திருவடித் தாமரைகளில்
வண்டு போன்றவர், ஸ்ரீ பாஷ்யகாரரைத் தம் சிஷ்யராகப் பெற்றவரான ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி (வைகாசி ரோஹிணி )
ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் |
ஸ்ரீமத்கோஷ்டீபுரீபூர்ணம் தேசிகேந்த்ரம் பஜாமஹே ||

ஸ்ரீ மஹாலக்ஷ்மி நாதன் நாராயணன் திருவடிகளில் ஞானாம்ருத பக்தி அம்ருதக் கடல் போன்றவர்,
ஆசார்யர்களில் சிரேஷ்டரான ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சரண் அடைகிறோம்.

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி (வைகாசி ஸ்வாதி)
பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத் ||

ஸ்ரீ திருமலை யப்பனாலேயே தன் தகப்பனாராகக் கொண்டாடப்பட்டவர், அதனால் அவன் மகனாகிய
சதுர்முக பிதாமஹனுக்கே பிதாமஹரானவர், ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்ரீமத் வாலமீகி ராமாயணம் உபதேசித்த
உத்தம தேசிகரான ஸ்ரீ திருமலை நம்பிகளை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

ஸ்ரீ திருமாலை ஆண்டான் (மாசி மகம்)
ராமாநுஜ முநீந்த்ராய த்ராமிடீ ஸம்ஹிதார்த்ததம் |
மாலாதர குரும் வந்தே வாவதூகம் விபஸ்சிதம் ||

த்ராவிட வேதமான ஸ்ரீ திருவாய்மொழியைத் தம் வாக்கு வன்மையால் ஸ்ரீ ராமானுஜ முனிவர்க்கு உபதேசித்தவரான
மஹா மேதாவி ஸ்ரீ திருமாலை ஆண்டான் எனும் ஸ்ரீமாலாதரரைப் பூசிக்கிறேன்.

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் (மாசி ம்ருகசீர்ஷம்)
தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

ஸ்ரீ தேவராஜனின் கருணைக்குப் பாத்ரபூதர், உத்தமரான ஸ்ரீ காஞ்சிபூர்ணர்,
ஸ்ரீ ராமானுசரால் மிகவும் போற்றப் பட்டவர்,
ஸ்ரீ வைஷ்ணவர்களால் சூழப்பட்ட திருக்கச்சி நம்பிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ மாறனேரி நம்பி (ஆனி ஆயில்யம்)
யாமுநாசார்ய ஸச்சிஷ்யம் ரங்கஸ்தலநிவாஸிநம் |
ஜ்ஞாநபக்த்யாதிஜலதிம் மாறனேரிகுரும் பஜே ||

ஸ்ரீ யாமுனாசார்யரின் ப்ரிய சிஷ்யர், ஸ்ரீரங்கம் பெரியகோயில் நித்ய வாசி,
ஞான பக்திக் கடல் ஆகிய ஸ்ரீ மாறனேரி நம்பியை பஜிக்கிறேன்.

ஸ்ரீ கூரத்தாழ்வான் (தை ஹஸ்தம்)
ஸ்ரீவத்ஸ சிந்ந மிச்ரேப்யோ நம உக்திம தீமஹே: |
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்: ||

ஸ்ரீ நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம் ஸ்தோத்ரங்களால்
காட்டி யருளிய ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.

ஸ்ரீ முதலியாண்டான் (சித்திரை புனர்வஸு )
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாஸரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம் ||

ஸ்ரீ தாசரதி என்று திருநாமம் உள்ளவர், ஸ்ரீ எம்பெருமானாரின் திருவடி நிலைகளாகப் போற்றப் பெறுபவர்,
ஸ்ரீ முதலியாண்டானின் திருவடிகளைத் தலையால் தாங்குகிறேன்.

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (கார்த்திகை பரணி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம் |
சதுர்த்தாச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே ||

ஸ்ரீ எம்பெருமானாரின் ப்ரிய ஸிஷ்யர், வேதங்கள் சாஸ்த்ரங்களை உட்பொருளுணர்ந்து கற்றவர்,
ஸந்யாஸாச்ரமம் மேற்கொண்டவர் ஆகிய ஸ்ரீ தேவராஜ முனிவர் எனும்
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை அடியேன் சரண் புகுகிறேன்.

ஸ்ரீ கோயில் கோமாண்டூர் இளையவில்லி ஆச்சான் (சித்திரை ஆயில்யம்)
ஸ்ரீ கௌசிகாந்வய மஹாம்புதி பூர்ணசந்த்ரம்
ஸ்ரீ பாஷ்யகார ஜநநீ ஸஹஜா தநுஜம் |
ஸ்ரீசைலபூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீபாலதந்வி குருவர்யம் அஹம் பஜாமி ||

கௌசிக குல சமுத்ரத்துப் பூர்ண சந்திரன் போன்றவர், ஸ்ரீ பாஷ்யகாரரின் திருத்தாயாரின் ஸஹோதரி குமாரர்,
ஸ்ரீ சைலபூர்ணரின் திருவடிகளில் ஆழ்ந்த பக்தர் ஆகிய பால தன்வி மஹா குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் (சித்திரை ஹஸ்தம்)
ராமானுஜ பதாம்போஜயுகளீ யஸ்ய தீமத: |
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

மஹாமேதாவி, தம் ஆசாரயர் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று உறுதியானவர்
ஆகிய ஸ்ரீ ப்ரணதார்த்திஹர குரு ஸ்ரீ கிடாம்பி ஆச்சானைத் தொழுகிறேன்.

ஸ்ரீ வடுக நம்பி (சித்திரை அஸ்வினி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம் |
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே ||

ஸ்ரீ ராமானுஜரின் சச்சிஷ்யர், சாளக்ராமத்தில் வசிப்பவர், ஆசார்ய நிஷ்டையாகிய பஞ்சமாபாயத்தில்
நிலை நின்றவர் ஆகிய ஸ்ரீ சாலக்ராமாசார்யர் ஸ்ரீ வடுக நம்பியைத் தொழுகிறேன்.

ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி
பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாச்ரிதம் |
வந்தே வங்கிபுராதீஸம் ஸம்பூர்ணாயம் க்ருபாநிதிம் ||

ஸ்ரீ பாரத்வாஜ குலத்திலகர், ஸ்ரீ எம்பெருமானார் திருவடியில் ஆச்ரயித்தவர்,
ஸ்ரீ வங்கிபுரத் தலைவர் க்ருபா நிதியாகிய ஸ்ரீ வங்கிபுரத்து நம்பியைத் தொழுகிறேன்.

ஸ்ரீ சோமாசியாண்டான் (சித்திரை திருவாதிரை)
நௌமி லக்ஷ்மண யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |
ஸ்ரீராமக்ரதுநாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் ||

ஸ்ரீ எம்பெருமானார்க்குக் குற்றேவல்கள் பெருங்களிப்போடு செய்தவர், ஸ்ரீபாஷ்ய அமுதக் கடல் என்னலாம்படி
அதைக் கற்றறிந்தவர், ஸ்ரீ ராமர் எனும் திரு நாமம் பூண்ட ஸ்ரீ சோமாசி ஆண்டானைத் தொழுகிறேன்.

ஸ்ரீ பிள்ளை உறங்கா வில்லி தாசர் (மாசி ஆயில்யம்)
ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம்
ராமானுஜஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் |
பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம்
ரங்கேசமங்களகரம் தநுர்தாஸம் அஹம் பஜே ||

எப்போதும் உறங்காத விழிப்புள்ள ஸ்ரீ உறங்காவில்லி தாசர், ஒருகையில் வில்லும் மற்றொன்றில் கத்தியும் ஏந்தி
ஸ்ரீ நம்பெருமாளைக் காப்பவர், ஸ்ரீ ராமாநுசர்க்கு ஸ்பர்சவேதி, ரஹஸ்ய புருஷார்த்தங்களைத் தம் வாழ்வில்
வெளிப்படுத்தியவர், இரு மருமகன்களை உடையவர், ஸ்ரீ எம்பெருமானார் மடத்தை நடத்தியவர், நித்தியமாக
ஸ்ரீ பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்தவருடைய திருவடிகளை புகலாக அடைகிறேன்.

ஸ்ரீ திருக்குருகைப் பிரான் பிள்ளான் (ஐப்பசி புனர்வஸு )
த்ராவிடாகம ஸாரக்யம் ராமாநுஜ பதாச்ரிதம் |
ஸுதியம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||

த்ராவிட வேதத்தின் உட்பொருள் நன்கு உணர்ந்தவர், ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகலில் சரணம் புக்கவர்,
மஹா மேதாவியான ஸ்ரீ குருகேசாசார்யரை தினமும் தொழுகிறேன்.

ஸ்ரீ எங்களாழ்வான் (சித்திரை ரோஹிணி)
ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண |
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||

ஸ்ரீ விஷ்ணு சித்தரை அடைந்திருக்க அடியேன் மனம் விரும்புகிறது. அவர் திருவடிகளைத் தவிர வேறு எது பயனுள்ளது?
அவர் திருவடிகளைச் சார்ந்திரேனாகில் அடியேன் எவ்வாறு ஸ்ரீ எம்பெருமானார் அருளிய திவ்யார்த்தங்களைக் கற்றிருக்க முடியும்?

ஸ்ரீ அநந்தாழ்வான் (சித்திரை சித்திரை)
அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

அனைத்துக் கல்யாண குணங்களின் இருப்பிடம், அஞ்ஞான இருளை ஒழிப்பவர்,
தம்மைச் சரண் புக்கோர்க்கு ஒப்பிலா அரண் ஆகிய ஸ்ரீ அநந்தாழ்வானை வணங்குகிறேன்.

ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் (பங்குனி ஹஸ்தம்)
ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம் |
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே ||

கைங்கார்யருக்குப் புதல்வராகப் பங்குனி ஹஸ்தத்தில் அவதரித்த, ஸ்ரீ ராமானுஜரின் திருவடி பக்தர்,
ஸ்ரீ ரங்கநாதர் எனும் திருநாமம் கொண்ட ஸ்ரீ திருவரங்கத்து அமுதத்தனாரிடம் புகல் அடைகிறேன்.

ஸ்ரீ நடாதூரம்மாள் (சித்திரை சித்திரை)
வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம் |
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி ||

அடியேனுக்கு ஸ்ரீ பாஷ்யத் தேன் அமுது ஊட்டிய ஸ்ரீவத்ஸ குல திலகர்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் எனும் ஸ்ரீ வரதாசார்யரை வணங்குகிறேன்.

ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர்(வைகாசி அனுஷம்)
பௌத்ரம் ஸ்ரீராமமிச்ரஸ்ய ஸ்ரீவத்ஸாங்கஸ்ய நந்தநம்
ராமஸூரிம் பஜே பட்டபராசரவராநுஜம்

ஸ்ரீ ராம மிச்ரர் (ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருத்தகப்பனார், கூரத்து ஆழ்வார்) திருப்பேரனாரும்,
ஸ்ரீ ஆழ்வானின் திருக்குமாரரும், ஸ்ரீ பராசர பட்டரின் இளைய சஹோதரருமான ஸ்ரீ ராமப் பிள்ளை எனும்
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டரை அடியேனுக்குப் புகலாக அடைகிறேன்.

ஸ்ரீ கூரநாராயண ஜீயர் (மார்கழி கேட்டை)
ஸ்ரீபராசரபட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கபாலகம்
நாராயணமுநிம் வந்தே ஜ்ஞாநாதிகுணஸாகரம்

ஸ்ரீ பராசர பட்டர் சிஷ்யரும், ஸ்ரீ ரங்கத்தின் பாது காவலரும் ஞான, பக்திக்கடலுமான
ஸ்ரீ நாராயண முனியைத் தொழுகிறேன்..

ஸ்ரீ ச்ருத ப்ரகாசிகா பட்டர்
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா: |
வரம் ஸுதர்சநார்யம் தம் வந்தே கூர குலாதிபம் ||

எவரது ஸ்ரீ ச்ருதப்ரகாசிகா வ்யாக்யானத்தில் ஸ்ரீ யதிராஜரின் ஸ்ரீ பாஷ்யம் நன்கு விளக்கப் பட்டுள்ளதோ,
அந்த ஸ்ரீ கூர குலத்தோன்றல், மஹா ஞானி ஸ்ரீ சுதர்சனாசார்யரை வணங்குகிறேன்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா ||

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

ஈயுண்ணி மாதவப் பெருமாள் (கார்த்திகை பரணி)
லோகாசார்ய பதாம்போஜ ஸம்ச்ரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே ||

ஸ்ரீ நம்பிள்ளை லோகாசார்யர் திருவடிகளில் சரண் புக்கவரும், கருணா சாகரரும் ஸம்ஸ்க்ருத த்ராவிட (உபய)
வேதாந்தங்களில் கரை கண்டவருமான ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாளை சரண் அடைகிறேன்.

ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் (ஸ்வாதி)
மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||

ஸ்ரீ மாதவாசார்யர் ஸத்புத்ரர், அவரது சிஷ்யர், வாத்சல்யாதி கல்யாண குணக் கடல் ஆகிய
ஸ்ரீ ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளை சரண் அடைகிறேன்.

நாலூர்ப் பிள்ளை (பூசம்)
சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட ப்ரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||

ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர் நாலூரான் வம்சத்தவர், ஸ்ரீ எம்பெருமானார் சிஷ்யரான ஸ்ரீ எச்சான் வம்சத் திலகர்,
திராவிட வேத பாரங்கதர் ஆகிய ஸ்ரீ வராஹர் எனும் ஸ்ரீ நாலூர்ப் பிள்ளையை வணங்குகிறேன்.

நாலூர் ஆச்சான் பிள்ளை (மார்கழி பரணி)
நமோஸ்து தேவராஜாய சதுர்க்ராம நிவாஸிநே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணசாலிநே ||

ஸ்ரீ நாலூர்ப் பிள்ளை எனும் ஸ்ரீ ராமாநுஜாசார்யர் குமாரர், சதுர்க்ராமம் எனும் நாளூரில் வசிப்பவர்
ஸ்ரீ தேவராஜ குரு ஆகிய மஹா குணசாலி ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளையைத் தொழுகிறேன்.

ஸ்ரீ நடுவில் திருவீதி பிள்ளை பட்டர் (ஐப்பசி அவிட்டம்)
லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம் |
ஸ்ரீவத்ஸசிஹ்நவம்சாப்திஸோமம் பட்டார்யமாச்ரயே ||

ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளில் ஆழ்ந்த பக்தர், ஸ்ரீரங்கம் நடுவில் திருவீதியில் வாழ்ந்தவர்,
ஸ்ரீ கூரத்தாழ்வானின் வம்சத்துக்கு முழு நிலவு போன்றவரான
ஸ்ரீ நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைச் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஐப்பசி சதயம்)
ஜ்ஞாந வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸுந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத் குரும் பஜே ||

திராவிட வேதமாகிய ஸ்ரீ திருவாய்மொழியை விளக்கியவர், ஞானமும் வைராக்யமும் மிக்கவரான
எனது ஆசார்யர் ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயரைத் தொழுகிறேன்.

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மார்கழி அவிட்டம்)
த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

குருபரம்பராகதமான த்ராவிடவேதம் ஸ்ரீ திருவாய்மொழியின் பொருளை நமக்கு நன்கு உரைத்தருளியவர்
ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ வடக்குத் திருவீதி பிள்ளையின் குமாரர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ச்ருத்யர்த்தஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜ ஸூநும்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||

ச்ருதிப் பொருளை அமுதமாய்ப் பொழிபவர், ஸ்ம்ருதிப் பொருளைத் தாமரையை அலர்த்தும்
கதிரவன் போல் விளங்கச் செய்பவர், ஸ்ரீ எம்பெருமானின் தாமரைத் திருவடிகளில் பழவடியார், ஞானப் பேரரசர்,
அபயப்ரத ராஜர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் திருக்குமாரரான என் ஆசார்யர் பரம காருணிகர்
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் (ஆனி ஸ்வாதி)
ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தாரபோதகம் ||

சம்சாரக் கடலில் மூழ்கும் மக்களுக்கு நல்ல படகாகும் ஸ்ரீ அழகிய மணவாள முனியின்
திருவடித் தாமரைகளை பணிகிறேன்.

ஸ்ரீ கூர குலோத்தம தாசர் (ஐப்பசி திருவாதிரை)
லோகாசார்ய க்ருபாபாத்ரம் கௌண்டிந்ய குல பூஷணம் |
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம் ||

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் பரிபூர்ண க்ருபைக்குப் பாத்ரர், கௌண்டிந்ய குலத்தின் அணிகலன்,
ஸகல குண ஸம்பன்னரான ஸ்ரீ கூர குலோத்தம தாஸரைத் தொழுகிறேன்.

ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை (ஐப்பசி உத்தரட்டாதி)
துலாஹிர்புத்ந்யஸம்பூதம் ஸ்ரீலோகார்ய பதாச்ரிதம் |
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே ||

ஐப்பசி உத்தரட்டாதியில் அவதரித்தவர், ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரைச் சரண் புக்கவர்,
ஸ்ரீவசன பூஷண சாரமான சப்த காதையை அருளிச் செய்தவரான
ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ வேதாந்தாசார்யர் (புரட்டாசி திருவோணம்)
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்க்கும் கவிகளுக்கும் தார்க்கிகர்க்கும் வெல்ல ஒண்ணாத சிங்கம், வேதாந்த ஞானக் கடலான
ஸ்ரீமான் வேங்கட நாதார்யரை எப்போதும் என் இதயத்தில் எழுந்தருளப் பண்ணுகிறேன்.

ஸ்ரீ திருநாராயண புரத்து ஆய் ஜநன்யாசார்யர் (ஐப்பசி பூராடம்)
ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்சிதா: |
ஸ்ரீஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாச்ரயே ||

ஸ்ரீசானு தாஸர் என்றும் தேவராஜர் என்றும் புகழ் மிக்கவர், களங்கமற்றவர், ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதய பொருளை
விரித்துரைத்தவர் ஸ்ரீ ஆய் ஜனந்யாசார்யர் திருவடிகளைப் புகலாய் அடைகிறேன்.

—————————-

ஸ்ரீ மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்கள்

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா |
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே ||

ஸ்ரீ மாமுனிகளை எப்போதும் ஆஸ்ச்ரயித்தவரும், அவர் திருவடி ரேகைகள் போன்றவரும்,
அவரையே தம் சத்தையாகக் கொண்டவருமான ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (கார்த்திகை புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ஸேவைக தாரகம் |
பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

ஸ்ரீ மாமுனிகள் திருவடித் தாமரைகளையே எப்போதும் புருஷார்த்தமாக உடையவர், சகல குணங்களும் நிறைந்தவர்,
வாத்சல்யம் மிக்கவரான ஸ்ரீ பட்டநாத முனிவரை வணங்குகிறேன்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் (புரட்டாசி பூரட்டாதி)
ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம் |
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே ||

சகல வேதாந்த தாத்பர்யங்களைக் கற்ற அறிவுக் கடல், புகழ் மிக்க வாதூல கோத்ரர், ஸ்ரீ மணவாள மாமுனிகளின்
திருவடிகளில் சரண் புக்கவரான ஸ்ரீ வரத நாராயண குரு எனும் ஸ்ரீ கோயில் அண்ணனை நான் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் (ஆடி பூசம்)
வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம் |
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் ||

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கடாக்ஷத்தால் விரிந்து விகஸித்த ஞானமுள்ளவர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் கருணைக்குப்
பூர்ண பாத்ரர் ஸ்ரீவத்ச குல விளக்கு, கல்யாண குணசாலியான ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனை பக்தியோடு பஜிக்கிறேன்.

ஸ்ரீ எறும்பி அப்பா (ஐப்பசி ரேவதி)
ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

ஸ்ரீ மாமுனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர், நம்மை ஞானம் தந்து காக்கும்
மங்கள ஸ்வபாவருமான ஸ்ரீ தேவராஜ குரு என்கிற ஸ்ரீ எறும்பி அப்பாவை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பிள்ளை
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
வத்ஸாந்வயபவம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்ற, ஸ்ரீவத்ச குல திலகர்
ஸ்ரீ ப்ரணதார்த்திஹர குரு என்கிற ஸ்ரீ அப்பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பிள்ளார்
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர ஸர்வ கைங்கர்யதூர்வஹம் |
ததேக தைவதம் ஸௌம்யம் ராமாநுஜ குரும் பஜே ||

ஸ்ரீ மாமுனிகள் ஒருவரையே தம் தேவனாகக் கருதி அவருக்கே எல்லாப் பணிவிடைகள் செய்த
ஸ்ரீ ராமானுஜ குரு என்கிற ஸ்ரீ அப்பிள்ளாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் (புரட்டாசி மகம்)
வரதகுரு சரணம் வரவரமுநிவர்ய கநக்ருபா பாத்ரம் |
ப்ரவரகுண ரத்ந ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் திருவடிகளையே பற்றினவரும், ஸ்ரீ மாமுனிகள் கருணையைப் பெற்றவரும்
குண ரத்நக் கடலுமான ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் என்கிற ஸ்ரீனிவாச குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீபெரும்புதூர் ஆதி யதிராஜ ஜீயர்(ஐப்பசிப்பூசம்)
ஸ்ரீமத் ராமாநுஜாங்க்ரி ப்ரவண வரமுநே: பாதுகம் ஜாதப்ருங்கம்
ஸ்ரீமத் வாநாத்ரி ராமாநுஜ கணகுரு ஸத்வைபவ ஸ்தோத்ர தீக்ஷம் |
வாதூல ஸ்ரீநிவாஸார்ய சரணசரணம் தத் க்ருபா லப்த பாஷ்யம்
வந்தே ப்ராஜ்ஞம் யதீந்த்ரம் வரவரதகுரோ: ப்ராப்த பக்தாம்ருதார்த்தம் ||

ஸ்ரீ மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரை போற்றிக் கொண்டே இருந்தவர்,
ஸ்ரீ வாதூல ஸ்ரீநிவாஸாசார்யரிடம் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவரான ஸ்ரீ பெரும்பூதூர் யதிராஜ ஜீயரை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா (ஆவணி ஹஸ்தம்)
ஸ்ரீமத் வாநமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |
வாதூல வரதாசார்யம் வந்தே வாத்ஸல்ய ஸாகரம் ||

ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் ப்ரியத்துக்குரியவர், வாத்சல்யக் கடல் போன்றவர்,
ஸ்ரீ வாதூல வரதாசார்யர் என்கிற ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணாவை வணங்குகிறேன்.

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் (சித்திரை திருவோணம்)
ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முநிம் பஜே ||

ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளில் வண்டு போன்றவர், ஸ்ரீ மாமுனிகளிடம் பரம பக்தர்,
ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் திவ்ய கிரந்தம் அருளிச் செய்தவர்,
ஸ்ரீ லோகார்ய முனி என்கிற ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயரை வணங்குகிறேன்..

ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பங்கார் (ஆனி அவிட்டம்)
ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம்
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம்

ஸ்ரீ வாதூல நரசிம்மச்சார்யர் குமாரர், அவரடி பணிந்தவர், அவர் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
அவரிடமும் ஸ்ரீ ரங்கராஜாசார்யரிடமும் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவர், ஸ்ரீ வாதூல வீரராகவர் என்றும்
ஸ்ரீ அண்ணா அப்பங்கார் என்றும் பிரசித்தி பெற்ற ரகுவராயரை வணங்குகிறேன்.
.
ஸ்ரீ அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே

ஸ்ரீ வாதூல குலாசார்யர்களில் நல்முத்துப் போன்றவர், ஸ்ரீ சேனை முதலியார் அம்சர்,
அண்டி வந்தோர் விரும்பியதைத் தந்தவர், திருவாதிரை உத்சவம் போன்றவற்றில்
கட்டிய கைங்கர்யம் போன்றவற்றை ஏற்படுத்தியவர், ஸ்ரீமத் வேங்கட லக்ஷ்மணார்ய யதி என்கிற
ஸ்ரீ எம்பார் ஜீயர் திருவடிகளை வணங்குகிறேன்.

——————

ஸ்ரீ பெரிய பெருமாள் :-

ப்ரம்ம லோகத்தில், ப்ரம்மாவால் ஆராதிக்கப்பட்டு பின் அவர் மூலமாக இக்ஷ்வாகு குலத்தினருக்கு வழங்கப்பட்டு,
அக்குலத்தில் தோன்றிய பலராலும் காலம் காலமாக ஆராதிக்கப்பட்டு வந்தார் பெரிய பெருமாள்.
அக் குலத்தில் உதித்த தசரத சக்ரவர்த்தியினாலும்,
பின் எம்பெருமான் தானே அவதரித்த ஸ்ரீ ராமரும் அவரை வழிபட்டுவந்தார்கள்.
இந் நிலையில் இலங்கையில் போர் முடிந்து ஸ்ரீ ராமரும் அயோத்திக்கு எழுந்தருளி பட்டாபிஷேகம் கண்டருளினார்.
பட்டாபிஷேக வைபவத்திற்கு வந்திருந்த விபீஷணன், அங்கு எழுந்து அருளப்பட்ட இருக்கும் பெரிய பெருமாளைப் பார்த்து,
மிக ஆனந்தித்து தன்னிடம் அவரைக் கொடுத்தருளும்படி ராமரிடம் வேண்டினான்.
ஸ்ரீ ராமரும் உகந்து பெரிய பெருமாளை அவருக்கு அளித்து, பெருமாளுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்வது பற்றி எடுத்துக் கூறினார்.

பெரிய பெருமாளுடன் அயோத்தியிலிருந்து புறப்பட்ட விபீஷணன் , இலங்கைக்குத் திரும்பும் வழியில் சாயரக்ஷை நேரத்தில்
மாலை சந்தியா வந்தனம் பண்ண வேண்டி, ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் பெருமாளை ஏழப் பண்ணினான்.
நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு மீண்டும் இலங்கைக்குக் கிளம்பும் வேளையில்,
அவனால் பெருமாளை அவ்விடத்திலிருந்து எழுந்தருளப் பண்ண முடியவில்லை.
எவ்வளவு முயற்சி செய்தும் முடியாத காரணத்தால் , எம்பெருமான் திருவுள்ளம் ஸ்ரீரங்கத்திலேயே இருக்க விரும்புகிறது
என்பதனை அறிந்து கொண்டு பெருமாளை அவ்விடத்திலேயே இருத்திவிட்டு அவன் இலங்கைக்கு சென்று விட்டான்.
அன்று முதல் பெரிய பெருமாள் யுகம் யுகங்களாக அங்கேயே பள்ளி கொண்டு,
பக்தர்களுக்கு பரவசமிக்க காட்சி கொடுத்துக் கொண்டும், அருள் பாலித்துக் கொண்டும் வருகிறார்.

பெரிய பெருமாள் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளின நாளன்று நக்ஷத்திரம் ரேவதி.

————

பெரிய பிராட்டியார் :-

சமுத்திர ராஜனுக்கும் , காவிரித்தாய்க்கும் மகளாகப் பங்குனி மாதம் உத்திரம் நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
பெரிய பெருமாளின் பத்தினியான பெரிய பிராட்டியாரான ஸ்ரீரங்க நாச்சியார்.
தன் தனிச் சன்னதி பிராகாரங்களை விட்டு வெளியில் வராத பத்தினித் தாயான இவர் மிகக் கருணை மிகுந்தவர்.
இவரின் கருணை சொல்லி மாளாது. ஸேவித்து அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் தாயாரின் கருணைத் தன்மை.
தன்னை நம்பி வரும் பக்தர்களைக் காப்பதில் இவருக்கு இணையில்லை.
தாயாரை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கும் ஒவ்வொரு சமயமும் உடலும் உள்ளமும் சிலிர்க்கும்.

————–

ஸேனை முதலியார் : –

விக்ஷ்வக்ஸேனர் என அழைக்கப்பெரும் ஸேனை முதலியார், ஐப்பசி மாதம் பூராட நக்ஷத்திரத்திலே அவதரித்தவர்.
எப்படி ஒரு அரசனுக்கு தளபதி என்று ஒருவர் இருப்பாரோ அதைப் போல பெருமாளுக்கு தளபதியாக இருப்பவர் இவர்.
கூர்ம புராணத்தில் இவர் பெருமாளின் ஒரு அம்சமே என்று கூறப்பட்டுள்ளது.
மஹாவிஷ்ணுவைப் போலவே நான்கு கைகளுடனும், சங்கு, சக்கரம், கதை, தாமரையுடன் காட்சியளிப்பார்.
இவரின் மறு அவதாரமாக நம்மாழ்வார் கருதப்படுகிறார். ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானின் வாயில் காப்பானாக இருக்கிறார்.

அர்ச்சாவதார ரூபியாக எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களின் ப்ரம்மோற்சவங்களின் போது
அங்குரார்ப்பணத்தன்று விக்ஷ்வக்ஸேனர் மாட வீதிகளில் புறப்பாடு கண்டருளி, நகர சோதனை செய்கிறார்.
இதன் மூலம் இவர் எம்பெருமான் தளபதியாக கருதப்படுவது நமக்கு புலப்படுகின்றது.

முற்காலங்களில் திருநக்ஷத்திர தொடக்கம் இவர் அவதரித்த பூராட நக்ஷத்திரத்தில் தொடங்கி ,
குருபரம்பரையின் ஈடாக இருக்கும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் அவதார நக்ஷத்திரமான மூலத்துடன்
முடிவடைவதாக முன்னோர் கூறுவர்.
பிறகு தான் இது மாறி அஸ்வினி நக்ஷத்திரத்தில் தொடங்கி
ரேவதி நக்ஷத்திரத்தில் முடிவு பெருவதாகவும்
அதுதான் இப்பொழுதைய வழக்கமாகவும் தொடருகிறது.

—————-

நம்மாழ்வார் : –

நம்மாழ்வார் , ஆழ்வார்களின் தலைவராகப் போற்றப் படுகின்றார்.
திருநகரி நகரத்தில் உடைய நங்கைக்கும் காரிமாறனுக்கும் புத்திரனாக வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்த இவர் ,
விக்ஷ்வக்ஸேனரின் மறு அவதாரம். இவரின் லக்னம் ஸ்ரீ ராமரின் ஜென்ம லக்னமான கடகம்.

நம்மாழ்வார் அவதரிப்பதற்கு முன்பு வரை திருநகரி என்று அழைக்கப்பட்ட இவ்வூர்,
ஆழ்வாரின் அவதாரத்திற்குப் பின் ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படுவது ஆழ்வாரின் மகிமையை பறைசாற்றுவதாக உள்ளது.
ஸ்வாமி நம்மாழ்வார் அவதரிப்பதற்கு முன்னமே திருநகரியில் புளிய மரமாக அனந்தாழ்வான் அவதரித்தார்.

நம்மாழ்வார் பிறந்த பொழுது அழவும் இன்றி, பால் பருகவும் இல்லாமல் அசைவற்று ஒரு பிண்டம் போல் இருந்தார்.
திருக்குருகூர் ஆதிப்பிரானிடம் இவர் பெற்றோர்கள் வேண்ட, ஸ்வாமி தானே மெள்ள தவழ்ந்து ஆதிப்பிரான் ஸன்னதியில் உள்ள ,
அனந்தாழ்வான் புளிய மரமாக அவதரித்த மரத்தின் அடியில் உள்ள ஒரு பொந்துக்குள், பத்மாஸனத்தில் அமர்ந்து கொண்டார்.
இவ்வாறாக சுமார் 16 ஆண்டுகள் இவ்விடத்திலே ஆழ்வார் வாசம் செய்தார்.

இவர் காலத்திலே வாழ்ந்த ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அவர்கள் வட தேஸத்திலே இருந்த பொழுது,
தெற்கிலிருந்து வானத்தில் ஒரு ஒளி வட்டம் தென்பட அதனைத் தொடர்ந்து அவர் தெற்கு நோக்கி வந்து,
திருநகரியிலே புளிய மரத்தடியில் இருக்கும் நம்மாழ்வாரைக் காண்கிறார். கண்கள் மூடிய நிலையில் இருந்த ஆழ்வாரைக் கண்டதும்,
அவர் பெரிய ஞானியாக இருப்பார் என்ற எண்ணத்துடன், ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து
நம்மாழ்வார் அருகில் “தொப்பென்று ” போடுகிறார்.
சப்தத்தை கேட்ட ஆழ்வார் சற்றே கண் திறந்து மதுரகவிகளைப் பார்க்கிறார்.
நம்மாழ்வாரின் கண்களிலே ஒரு தேஜஸுடன் ஒளி வீசுவதைக் கண்டு, மதுரகவிகள்,
ஆழ்வாரிடம் “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் , எத்தை தின்று எங்கே கிடக்கும்” என்று கேட்க,
ஸ்வாமி நம்மாழ்வாரும் முதன் முதலாக தன் திருவாயிலிருந்து அவர் கேட்ட கேள்விக்கு பதிலாக
” அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் ” என்று அருளுகிறார்.
மதுரகவி ஆழ்வாரும், தான் முன்னமே நினைத்தபடி நம்மாழ்வார் பெரிய ஞானியாக இருப்பதை உணர்ந்து ,
அவரிடம் தன்னை அவர்தம் சிஷ்யராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, ஆழ்வாரும் அதற்கு சம்மதிக்கிறார்.
அன்று முதல் மதுரகவி ஆழ்வார் தனக்கு நம்மாழ்வாரை தெய்வமாக வரிந்து அவரைத் தவிர ” தேவு மற்று அறியாதவராக ” இருந்தார்.

வட மொழியில் அமைந்த நான்கு வேதங்களையும் தமிழ் படுத்த வேண்டி, அவற்றைத் தான் சொல்லச் சொல்ல,
அதனை ஏடுபடுத்த மதுரகவி ஆழ்வாரை பணிக்கிறார். அதன்படி முதல் முதலாக நம்மாழ்வாரின் ஈரச் சொல்
வார்த்தையாக அருளப்பெற்ற முதல் பாசுரம் ” பொய் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும் ” என்று தொடங்கும்
திருவிருத்த பாசுரங்களாக நூறு பாசுரங்களை அருளிச் செய்தார்.
பின் ஆழ்வார் திருவாசிரியத்தின் ஏழு பாசுரங்களையும், என்பத்தேழு பாசுரங்களுடன் கூடிய பெரிய திருவந்தாதியையும்,
முற்றாக ஆயிரத்து நூற்று இரண்டு பாசுரங்களுடன் திருவாய் மொழியையும் அருளிச் செய்து
இவ்வுலகோர் உய்ய வழி அமைத்துக் கொடுத்தார்.

ஆழ்வாரின் கடைசி பாசுரமான ” அவா அறச் சூழ் * அரியை அயனை அரனை அலற்றி ” பாசுரத்தை முடிக்கும் பொழுது,
எம்பெருமான் அவருக்குக் காட்சி அருளி, தன்னுடன் வைகுண்டத்திற்குச் அழைத்துச் சென்றார்.

நம்மாழ்வார் தனது பாசுரங்களில் 36 திவ்ய தேஸ எம்பெருமான்களை மங்களா ஸாஸனம் செய்துள்ளார்.
இத் திவ்ய தேஸ எம்பெருமான்கள் அனைவரும் இவர் அமர்ந்திருந்த புளிய மரத்தடிக்கே வந்து
இவரிடம் தங்களைப் பற்றிய பாசுரங்களை பெற்றுச் சென்றனர்.

இப்படியாக உலகமும், உலகோர்களும் உய்ய வழிகாட்டிய ஆழ்வார்களின் தலைவரான இவருக்கு
ஒரு சிறிய வருத்தமும் உண்டு என்று பெரியோர் கூறுவர். அதாவது ஸ்வாமி நம்மாழ்வார் அவதரித்தது கலியுகம் பிறந்து
சரியாக 43 வது நாளன்று. இன்னும் சிறிது காலத்திற்கு முன்பே – 43 நாள்களுக்கு முன்பாவது – அவதரித்திருந்தால்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்து வாழ்ந்த யுகத்திலே தாமும் பிறந்திருக்கலாம் என்றும்,
ஆனால் அது முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் கண்ணன் பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட
அவருக்கு உண்டு என்று கூறுவர் பூருவாச்சாரியர்கள்.

நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் இன்று உலகோர்களால் ஸேவிக்கப் படுவதற்குக் காரணமும் இவரே.
ஆம். நாதமுனிகள் இவரிடம்” திருவாய்மொழி ” ப்ரபந்த பாசுரங்களை அருள வேண்டும் போது,
ஆழ்வார் நாதமுனிகளிடம் மற்ற ஆழ்வார்களும் அருளிச்செய்த திவ்யப் ப்ரபந்த பாசுரங்களையும் கொடுத்து அருளினார்.

————

நாதமுனிகள் :-

ஆனி மாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் இன்று காட்டுமன்னார் கோயில் என்று அழைக்கப் படும்
அன்றைய வீர நாராயணபுரத்திலே அவதரித்தார். நாதமுனிகளும் இவர் திருத் தகப்பனார் ஈஸ்வர பட்டரும்
வீரநாராயணபுரத்திலே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மன்னாருக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்துகொண்டு வந்தனர்.
சில ஆண்டுகள் கழித்து இவர்கள் குடும்பத்தாருடன் திவ்ய ஸ்தல யாத்திரையாக வட நாடு சென்றனர்.
அவ்வமயம் அவர்கள் வாரணாசி, பூரி, அஹோபிலம், திருமலை, திருக்கோவலூர், திருவரங்கம் முதலிய
திவ்ய ஸ்தலங்களையும் ஸேவித்துவிட்டு, வீரநாராயணபுரம் திரும்பினர்.

ஒரு நாள் ஸ்ரீ மன்னார் ஸன்னதியில், திருநாராயணபுரத்திலே இருந்து வந்திருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்
சிலர் கோஷ்டியாக ” ஆராவமுதே அடியேன் உடலம் நின் பால் அன்பாயே ” என்ற திருவாய்மொழி பாசுரங்களை
ஸேவித்துக் கொண்டிருப்பதை கண்டும் , கேட்டும் மகிழ்ந்தனர்.
பிறகு அக் கோஷ்டியார் அப் பாசுரங்களின் கடைசி பாசுரத்தை ஸேவிக்கும் பொழுது அதில் வரும்
” ஆயிரத்துள் இப்பத்தும் ” என்ற வரியைக் கேட்டு, மற்ற ஆயிரம் பாசுரங்களையும் ஸேவிக்கும்படி வேண்டினர்.
ஆனால் அக்கோஷ்டியார் தங்களுக்கு இந்தப் பதினோறு பாசுரங்கள் மட்டுமே தெரியும் என்று கூறி,
மேலும் தகவல்கள் வேண்டுமென்றால் ஸ்வாமி சடகோபன் அவதரித்த திருக்குறுகூரிலே சென்று அதுபற்றி விசாரிக்கக் கூறினர்.

நாதமுனிகளும் திருக்குறுகூர் சென்று அங்கு இருந்தவர்களை விசாரித்தபோது அவர்கள்,
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரின் சிஷ்ய வம்சத்திலே வந்த பராங்குசதாஸரை பார்க்கும்படி சொல்ல, நாதமுனிகளும் அவரைப் பார்த்தார்.
பராங்குசதாஸரிடம் , தான் மன்னார் ஸன்னதியில் கேட்ட பாசுரங்களைப் பற்றிக் கூறி,
ஆழ்வாரின் மேலும் ஆயிரம் பாசுரங்களைப் பற்றி வினவினார்.
பராங்குசதாஸரும், நாதமுனிகளுக்கு மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்த பாசுரங்களான ” கண்ணினுன் சிறுத்தாம்பு ”
பாசுரங்களைச் சொல்லி , ஸ்ரீ நம்மாழ்வார் வாசம் செய்த ஆதினாதன் ஸன்னதியிலே உள்ள
புளிய மரத்தடிக்கு சென்று அங்கே அவற்றை அனுஸந்திக்கச் சொன்னார்.

நாதமுனிகளும் நேராக புளியமரத்தடிக்கு வந்து, அங்கிருந்தபடியே ” கண்ணினுன் சிறுத்தாம்பு ” பதிகத்தின்
பதினோறு பாசுரங்களையும் மிகுந்த பக்தியுடன் பன்னிரண்டாயிரம் முறை ஸேவிக்க,
அப்பொழுது அவருக்கு ஸ்ரீ நம்மாழ்வாராகிய ஸ்ரீ சடகோபன் காட்சியளித்து, அவர் எதற்காக வந்திருக்கிறார் என்று கேட்க
நாதமுனிகளும் தான் வந்திருக்கும் காரணத்தைக் கூறி, ஆழ்வார் அருளிச் செய்துள்ள ஆயிரம் பாசுரங்களையும் கொடுத்தருள வேண்டினார்.
அப்பொழுது ஸ்ரீ நம்மாழ்வார் , தான் அருளிச்செய்த ப்ரபந்தங்களோடு, மற்றைய ஆழ்வார்கள் அனைவரும் அருளிச்செய்த
அனைத்துப் ப்ரபந்தங்களையும் பரிபூரணமாக அவரிடம் சொல்லி அருளினார்.

பின்னர் வீரநாராயணபுரம் திரும்பி, தான் அறிந்து கொண்ட ப்ரபந்தங்களை தம் மருமக்களான
கீழையகத்தாழ்வானையும், மேலயகத்தாழ்வானையும், திருக்கண்ணமங்கையாண்டானையும் அழைத்து அவர்களிடம்
இயல், இசையுடன் பாடி அருள அவர்களுடன் ஆழ்வார்களின் அனைத்து அருளிச் செயல்களும் பிரசித்தமாயின.
இன்றும் அரையர் ஸேவைகள் அபிநயத்துடன் திருவரங்கம் உட்பட சில திவ்யதேஸங்களில் ஸேவிக்கப்படுகின்றன.

ஒருநாள் அப்பிரதேஸத்து அரசன் வேட்டையாடிவிட்டு திரும்பும் பொழுது, நாதமுனிகளை ஸேவித்து ஆசி பெற்றுக் கொண்டு போனான்.
அங்கே சிறிது நேரத்தில் நாதமுனிகளின் திருமாளிகையிலிருந்து ஒரு பெண் வந்து, அவரிடம் தெண்டனிட்டு,
அவர் அகத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பு இரண்டு வில்லாளர்களும், ஒரு அழகிய ஸ்த்ரியும், ஒரு குரங்கும் வந்திருந்தனர் என்றும்,
அவர்கள் நாதமுனிகள் அகத்தில் எழுந்தருளியுள்ளாரா என்று வினவியதாகவும், பிறகு அவர் அங்கு இல்லை என்றவுடன் சென்றுவிட்டதாகவும்,
அவர்களை தேவரீர் வழியில் கண்டீர்களா என்று கேட்க, நாதமுனிகள் ஆச்சரியப்பட்டு அவ்வாறு வந்தவர்கள்
பெருமாளும் , பிராட்டியும், இளைய பெருமாளும் மற்றும் ஆஞ்சனேயரும்தான் என்று அறிந்து கொண்டு,
அவர்கள் சென்ற திசையிலேயே தாமும் சென்றார். வழியில் எதிரில் வந்தோரிடம் எல்லாம் அவர்களைப் பற்றி விசாரிக்க,
எல்லோரும் தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினர். இதனால் மனம் மிகவும் ஏங்கி வழியிலேயே விழுந்து மோகித்தார்.

—————–

உய்யக்கொண்டார் : –

புண்டரிகாக்ஷன் என்ற பெயர் கொண்ட உய்யக்கொண்டார், சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில்
திருவெள்ளரையிலே அவதரித்தவர். ஆண்டாள் என்ற நங்கையை மணந்து கொண்ட இவருக்கு
இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். நாதமுனிகளின் முக்கிய பத்து சிஷ்யர்களில் ப்ரதானமான இவர்,
திவ்யப் ப்ரபந்தம் முதலியவைகளை அவரிடம் கற்றார்.

ஒரு சமயம் நாதமுனிகள் இவரிடம் யோக ஸாஸ்த்திரத்தைக் கற்றுக் கொள்ளும்படி தெரிவித்தபொழுது,
ஆச்சாரியனின் க்ருபை உணர்ந்து ” பிணம் கிடக்க மணம் புணரலாமோ ” என்று வினவினார்.
அதாவது இப் பூவுலகிலே சம்ஸாரிகள் இறையுண்மை அறியாமல் உழன்று நடை பிணமாக தவிக்கும் போது,
தன்னுடைய நன்மைக்காக தான் மட்டும் எப்படி ” யோக ஸாஸ்திரம் ” கற்றுக் கொள்வது என்றும், அது தர்மமும் ஆகாது என்றும் கூறினார்.
உய்யக்கொண்டாரின் இந்த பதிலைக் கேட்ட நாதமுனிகள் மிகுந்த உவகை கொண்டு, உலகம் உய்யவும்,
லோக க்ஷேமத்திற்காகவும் வைணவ ஸாஸ்திரங்களை எங்கும் பரப்பவும் என்று கூறினார்.

சில காலம் கழித்து உய்யக்கொண்டாரின் திருமேனி தளர்வடைந்து, பின் திருநாட்டுக்கு எழுந்தருளும் நேரம் வந்தது.
அவர் தம் ஸிஷ்யரான மணக்கால் நம்பியையும் மற்ற ஸிஷ்யர்களையும் அழைத்து, மணக்கால் நம்பியே
நம் வைணவ தர்மத்தை உலகம் எங்கும் பரப்ப வழி செய்வார் என்று கூறி, நாதமுனிகள் முன்னம் தம்மிடம் அளித்திருந்த
பவிஷ்யதாசார்யர் விக்ரஹத்தை, அவரிடம் அளித்து ஒரு விவரத்தைக் கூறினார்.
பிற்காலத்தில் நாதமுனிகளின் புதல்வராகிய ஈஸ்வரமுனிக்கு ஒரு புதல்வன் பிறப்பார் என்றும்,
அவருக்கு ” யமுனைத்துறைவன் ” என்று பெயரிட்டு, அவர் மூலம் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும்,
தர்ஸன ஸாஸ்திரங்களையும் வளர்க்கவும் என்று கூறிவிட்டு, நாதமுனிகளின் திருவடிகளைத் த்யானித்துக் கொண்டே
திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

————

மணக்கால் நம்பி : –

மணக்கால் நம்பி மாசி மாதம், மக நக்ஷத்திரத்தில் , ஸ்ரீரங்கத்துகு அருகிலே அமைந்துள்ள மணக்கால் என்னும்
சிறிய கிராமத்திலே அவதரித்தவர். இவருடைய இயற் பெயர் ராம மிஸ்ரர்.

உய்யக் கொண்டாரின் முதன்மை சிஷ்யரான இவர், அவருக்குப் பின் ஆச்சார்ய ஸ்தானத்தை ஏற்று,
வைஷ்ணவதர்மத்தை பிரச்சாரம் பண்ணினார். இளமைக் காலத்திலேயே தர்ம பத்தினியை இழந்த இவர்,
தன் ஆச்சாரியரான உய்யக் கொண்டாரின் திருமாளிகையிலேயே இருந்து , திருமாளிகை கைங்கர்யங்களை செய்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் உய்யக் கொண்டாரின் இரு மகள்களும், நதியில் நீராடிவிட்டு திரும்புகையில், வழியில்
ஒரு குறுகலான வாய்க்காலில் சேறு படிந்துள்ளதைக் கண்ட அப் பெண்கள், வாய்க்காலைக் கடக்காமல் தயங்கி நின்றனர்.
அப்பொழுது மணக்கால் நம்பி சற்றென்று அவ் வாய்க்காலில் உள்ள சேற்றின் மீது குறுக்கே படுத்துக் கொண்டு,
தம் மீது அவர்களை நடந்து போக வேண்டினார். பின்னர் இதனை அறிந்த உய்யக் கொண்டார்
அவ்வாறு செய்யலாமா என்று கேட்க, ஆச்சாரியன் பணிவிடையே தனக்கு பாக்கியமும், போக்கியமும் என்று பதிலளித்து,
தன் ஆச்சாரிய அபிமானத்தை வெளிப்படுத்தினார்.

காலம் செல்லச் செல்ல இவரின் திருமேனியும் தளர்வடைந்து போக, நாதமுனிகள் இவருடைய ஸ்வப்னத்தில் தோன்றி,
தான் மணக்கால் நம்பியிடம் அளித்து, பின் இவரிடம் அளிக்கப் பெற்ற
” பவிஷ்யாதாசார்யரின் ” விக்ரஹத்தை ஆளவந்தாரிடம் ஒப்படைக்கச் சொன்னார்.
மேலும் அவரை ஸ்ரீ ராமாநுஜரின் அவதாரத்தை எதிர் நோக்கி, அவரை நேரில் கண்டு,
ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை அவர் மூலம் வளர்க்க ஏற்பாடு செய்யும்படியும் உரைத்தார்.

பின்னர் மணக்கால் நம்பி, ஆளவந்தாரிடம் தான் ஸ்வப்னத்தில் கேட்ட விஷயத்தை சொல்லி,
கோயிலை நன்றாக பேணிக் காத்து, தீர்க்காயுசுடன் இருப்பாய் என்று ஆசிர்வதித்து,
தம் ஆச்சார்யர் உய்யக் கொண்டார் அவர்களின் திருவடிகளை த்யானித்து பரமபதம் அடைந்தார்.

—————

ஸ்ரீ ஆளவந்தார் : –

நாதமுனிகளின் குமாரர் ஈசுவரமுனிகளின் திருப்புதல்வனாக ஆடி மாதம், உத்தராட நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
இச் சுபசெய்தியை மணக்கால் நம்பிக்கு தெரிவிக்க அவரும்,
வீரநாராயணபுரம் வந்து மிக்க மகிழ்ச்சியுடன் அக் குழந்தைக்கு ” யமுனைத்துறைவன் ” என்று பெயர் சூட்டினார்.

யமுனைத்துறைவன் அவருடைய ஆறாம் வயதில் குருகுல வாஸம் செய்து எல்லா ஸாஸ்திரங்களையும் கற்று
மிகச் சிறந்த வல்லுனராக விளங்கலானார். இச் சமயத்தில் அரச சபையில் ” ஆக்கியாழ்வான் ” என்ற
எல்லா ஸாஸ்திரங்களையும் நன்கு கற்ற ஒரு வித்வான் மிகுந்த கர்வத்துடனும், இறுமாப்புடனும் விளங்கினான்.
தன்னை வெல்ல ஒருவரும் இல்லை என்ற கர்வத்தில் இருந்த ஆக்கியாழ்வான், அரசனிடம் சொல்லி தன்னுடன்
வாதப் போர் செய்ய யாராவது வருகிறீர்களா என்று முறசறையச் சொன்னான். அரசரும் அவ்வாறே ஒப்புக்கொள்ள,
இதனைக் கேள்விப்பட்ட யுமுனைத்துறைவன் தான் அவனிடம் வாதம் செய்து அவனுடைய கர்வத்தை அடக்கத் தயார் என்று கூறினான்.
ஆச்சரியப்பட்ட அரசன் அவ்வாறு ஆக்கியாழ்வானை வாதப் போரில் வென்றால்
தன் நாட்டின் சரிபாதியை யமுனைதுறைவனுக்கு தருவதாக வாக்களித்தார்.

யமுனைத்துறைவனுக்கும், ஆக்கியாழ்வானுக்கும் தொடர்ந்து நடந்த வாதப் போரில் யமுனைத்துறைவன் வெற்றி பெற,
ஆக்கியாழ்வானும் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான். இதனால் மிகுந்த மகிழ்ச்சியுற்ற அரசனும்,
தான் வாக்களித்தபடியே தனது ராஜ்ஜியத்தின் பாதியை பகிர்ந்து யமுனைத்துறைவனுக்கு கொடுத்தார்.
ராஜ்ஜியத்தை ஆளவந்தவராகையால் , யமுனைத்துறைவன் அன்று முதல் ” ஆளவந்தார் ” என்று அழைக்கப்படலானார்.

ராஜ்ஜியத்தை ஆளவந்த ஆளவந்தாரும், ராஜ்ஜிய பரிபாலனத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க ,
வைஷ்ணவ ஸாஸ்திரங்களையும், அருளிச் செயல் அருமைகளையும் அவர் வளர்க்க வேண்டி இருப்பதை மறந்த நிலையில்
அதனை அவருக்கு உணர்த்த விரும்பினார் மணக்கால் நம்பி. ஆளவந்தாருக்கு தூதுவளை கீரை மிகவும் விருப்பமான ஒன்று.
எனவே ஆளவந்தாரின் உணவுக்காக தினசரி தூதுவளை கீரையை , மணக்கால் நம்பி அனுப்பி வரலானார்.
திடீரென்று சில காலத்திற்கு பிறகு அக் கீரையை அனுப்புவதை நிறுத்திவிட்டார்.
தான் அருந்தும் உணவில் தூதுவளை கீரை இல்லாததைக் கண்ட ஆளவந்தார், பரிசாகரிடம் அதுபற்றி வினவ,
அவரும் ஒரு வயோதிக வைஷ்ணவர் தான் தினமும் தூதுவளை கீரையை சமைக்க கொண்டுவருவார் என்றும்,
ஆனல் சில நாட்களாக அவர் வரவில்லை என்று கூறி, அதனால் தான் சமையலில் அக்கீரையை சேர்க்கவில்லை என்றும் கூறினார்.
தூதுவளை கீரை இல்லாத உணவினை உண்ண ஆளவந்தாருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
அதனால் பரிசாரகரை அழைத்து, அந்த வயோதிக வைஷ்ணவர் மீண்டும் வந்தால் தன்னிடம் அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.
சில நாட்களில் மீண்டும் தூதுவளை கீரையுடன் வந்த மணக்கால் நம்பி அவர்களை , ஆளவந்தாரிடம் அந்தப் பரிசாரகன் அழைத்துச் சென்றான்.

மணக்கால் நம்பியை கண்ட ஆளவந்தார் , அவரிடம் அவரின் திருநாமம் மற்றும் அவர் எங்கிருந்து வருவதாகக் கேட்க,
அவரும் தான் மணக்கால் என்ற ஊரில் பிறந்தவராகையால் தனக்கு மணக்கால் நம்பி என்ற பெயரும்,
தான் ஆளவந்தாரின் பாட்டனாரான நாதமுனிகள் சம்பாதித்த செல்வங்களை அவரிடம் ஒப்படைக்க வந்திருப்பதாகவும் கூறினார்.
ஆளவந்தாரும் அச் செல்வம் எப்பேற்பட்டது என்று வினவ , மணக்கால் நம்பியும் அச் செல்வமானது காலத்தால் அழியாதது ,
இரு நதிகளுக்கு இடையேயும் , ஏழு ப்ராகாரங்களுக்கு நடுவிலும், ஒரு பாம்பினால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று பதிலுரைத்தார்.
ஆளவந்தாரும் அச் செல்வத்தைப் பெற தனது படை பரிவாரங்களுடன் புறப்படத் தயாரானார்.
ஆனால் மணக்கால் நம்பி, அவரிடம், அவர் மட்டுமே தனியாக வர வேண்டும் என்று தெரிவிக்க,
ஆளவந்தாரும் அதற்கு உடன்பட்டு அவருடன் புறப்பட்டு திருவரங்கம் வந்தடைந்தார்.

திருவரங்கம் பெரிய கோவிலுனுள்ளே சென்ற ஆளவந்தார் அங்கு பாம்பணையிலே ஸயனித்திருக்கும் பெரிய பெருமாளைக் கண்டு,
மிக்க ஆனந்தித்து , அங்கேயே மணக்கால் நம்பியின் திருவடிகளிலே விழுந்து வணங்கி அவருடைய சிஷ்யரும் ஆனார்.
அதன் பின் மணக்கால் நம்பியின் உபதேசத்தின்படி, ஆளவந்தார் அரங்கனின் அந்தரங்கராகி,
திவ்யப் பிரபந்த ஸேவைகளையும், காலக்ஷேபங்களையும் செவ்வனே நடத்திக் கொண்டு,
நாதமுனிகள், மணக்கால் நம்பியின் மூலம் அளித்த ” பவிஷ்யதாச்சாரியர் ” விக்ரஹத்தையும் ஆராதித்து வரலானார்.

ஒரு சமயம் காஞ்சிபுரம் வந்த ஆளவந்தார், திருக்கச்சி நம்பிகளை நலம் விசாரித்து விட்டு , பேரருளாளனை ஸேவிக்க,
தேவப் பெருமாள் திருக் கோயிலுக்கு எழுந்தருளினார். அவ்வமயம் அங்கே யாதவப் பிரகாசர் தம்முடைய ஸிஷ்யர்களுடன் வந்திருந்தார்.
பெருமாளை ஸேவித்துவிட்டு, ப்ராகாரத்திலே வரும்பொழுது, அக் கோஷ்டியினரைக் கண்ட ஆளவந்தார்,
அக் கோஷ்டியிலே வருபவர்களில் இளையாழ்வார் யார் என்று திருக்கச்சி நம்பிகளிடம் கேட்க,
அவரும் சிவந்த முகத்துடனும், நெடியவராய், முழங்கால் அளவு நீண்ட கைகளை உடையவருமாக இருப்பவரே அவர் என்று கூற ,
அவரைப் பார்த்த மாத்திரத்திலே சந்தோஷத்துடன் தன் மனத்திற்குள்ளே ” ஆ முதல்வன் இவன் ” என்று கூறிக் கொண்டார்.
மனதிற்குள்ளேயே அவரை ஆசிர்வதித்தார்.

ஆளவந்தாருக்கு ஒரு சமயம் உடலிலே ” பிளவை ” நோய் ஏற்பட்டது.
அதன் காரணமாக அவரால் அரங்கனுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்ய முடியாமலும்,
தினமும் காலக்ஷேபங்கள் நடத்த முடியாமலும் மிகவும் கஷ்டப்பட்டார். பெருமாள் கைங்கர்யம் பண்ண முடியவில்லையே என்று கலங்க,
அப்பொழுது அசரீரியாக ஒரு குரல் ” உமது கோஷ்டியிலே யாரேனும் இந்த நோயை வாங்கிக் கொள்வார்களா என்று பாருமே” என்று சொன்னது.
ஆளவந்தாரும் மறுநாள் தனது காலக்ஷேப கோஷ்டியினரிடம் , யாரேனும் சில காலத்திற்கு
தன் பிளவை நோயை வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டார். ஆளவந்தாரின் காலக்ஷேப கோஷ்டியிலே
பல இனத்தவரும் இருந்தனர். அவ்வாறு இருந்தவர்களில் அக்காலங்களிலே தீண்டத்தகாத இனத்தவராகக் கருதப்பட்ட
இனத்தைச் சேர்ந்த ” மாறனேர் நம்பி ” என்பவரும் இருந்தார். மற்றையவர்கள் எல்லாம் ஆளவந்தார் கேட்டதற்கு
பதில் அளிக்க முடியாமல் திகைத்து தயங்கி நிற்க, அச் சமயம் மாறனேர் நம்பி சற்றும் தயங்காமல்
ஆளவந்தாரின் பிளவை நோயை, தான் பகவத் ப்ரஸாதமாக ஏற்றுக் கொள்வதாகக் கூறி,
உவந்து அந் நோயை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். பிறகு ஆளவந்தாரிடம், அவரின் நோயை பெற்றுக் கொள்வதால் ,
அவரின் உடல் உபாதைகள் நீங்கி, பகவத் கைங்கர்யங்களை செவ்வனே மேற்கொள்ள முடியுமென்பதால்,
அது தனக்கு பாக்கியமே என்றும் கூறினார்.
இப்படியாக தனக்கு ஒரு பாகவதன் இருக்கிறான் என்று கண்டு, உள்ளம் பூரிப்படைந்தார்.
மாறனேர் நம்பியின் ஆச்சார்ய பக்தியைக் கண்டு வியந்து கொண்டிருந்த தன் ஸிஷ்யரான பெரிய நம்பியிடம்,
ஆளவந்தார், தம்மைப் போலவே மாறனேர் நம்பியையும் நினைத்துக் கொண்டு,
அவருக்கு சகல சிறப்புகளையும் செய்யும் என்று கட்டளையிட்டார்.

பிளவை நோய் நீங்கிய ஆளவந்தார் முன்பு போலவே பகவானுக்கு கைங்கர்யங்கள் செய்து கொண்டும்,
காலக்ஷேபங்கள் நடத்திக் கொண்டுமிருந்தார். பின் சிறிது காலத்தில் அவரின் உடல் தளர்வுற்ற நிலையில்,
தான் தினமும் ஆராதித்து வந்த “பவிஷ்யாதாச்சார்யர் ” விக்ரஹத்தை திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் கொடுத்து,
இந்த மூர்த்திதான் அந்த இளையாழ்வார் என்று அருளினார். இதன் பின் பத்மாஸனம் இட்டுக் கொண்டு,
தம்முடைய ஆச்சார்யரான மணக்கால் நம்பியின் திருவடி அருகிலே அமர்ந்து கொண்டு,
கபாலம் விரிந்து வழிவிட , திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

——————–

பெரிய நம்பி :-

பெரிய நம்பி, மார்கழி மாதம் கேட்டை நக்ஷத்திரத்தில் , திருவரங்கத்திலே அவதரித்தவர் ஆவார்.
இவரது குமாரர் திருநாமம் புண்டரிகாக்ஷர், புதல்வி அத்துழாய். ஆளவந்தாரின் அடியார்களில்
பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்கப் பெருமாள் அரயர்,
திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பி ஆகிய ஆறு பேருமே மிகச் சிறந்தவர்கள்.
ஸ்வாமி எம்பெருமானாரின் உயர்வுக்கு முக்கிய காரணகர்த்தர்கள். இவர்களில் முதலாவதாக இருப்பவர் பெரிய நம்பி.

ஸ்வாமி இராமாநுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்தவர் பெரிய நம்பிகள். ஆளவந்தாரின் அரிய பெருமைகளை
இராமாநுஜருக்கு சொல்லியவர். ஆளவந்தார் உடல் நலம் குன்றியிருந்தபொழுது, அவரை தரிசிக்க இராமாநுஜரைக்
காஞ்சியிலிருந்து அழைத்து வந்து கொண்டிருக்கும் போதே ஆளவந்தார் பரமபதித்து விட்டார்.
இது தெரிந்தவுடன் பெரிய நம்பிகள் மிகுந்த துயரமும், ஏமாற்றமும் அடைந்தார்.

ஒரு நாள் அத்துழாய் , அதிகாலையில் தீர்த்தமாட நதிக்குச் செல்லும் போது, துணைக்கு தன்னுடன் வரும்படி தன் மாமியாரை அழைத்தார்.
ஆனால் அவரோ ” உன் சீதன வெள்ளாட்டியை துணைக்கு அழைத்துக் கொண்டு போ ” என்று சொல்ல,
அத்துழாய் பெரிய நம்பியிடம் சென்று மாமியார் சொன்னதை வருத்தத்துடன் கூற,
அவர் இதனை உடையவரிடம் கேட்குமாறு சொல்லியனுப்பினார். அத்துழாயும் உடையவரை சந்தித்து
தன் தந்தையிடம் சொன்னதையும் அதனை அவர் உடையவரிடம் சொல்லும்படி கூறியதையும் சொல்ல,
உடையவரும் , முதலியாண்டானை அழைத்து, அத்துழாய்க்கு துணையாக ” சீதன வெள்ளாட்டியாகச் ” செல்லுமாறு பணித்தார்.

பெரிய நம்பியின் காலத்திலே சோழ தேஸத்தை ஆண்டு கொண்டிருந்தவன், அதி தீவிர சைவனான கிருமி கண்ட சோழன்.
இவன் நாலூரான் என்பவனின் தூண்டுதலால், சைவ சமயத்தை சாராத பலரிடமும்,
சிவனுக்கு மேம்பட்ட தெய்வம் எதுவும் இல்லை என்று மிரட்டி, கையொப்பம் பெற்று வருமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டிருந்தான்.
அவ்வாறு கையொப்பம் பெற இராமாநுஜரையும் பணிக்க விரும்பினான்.இதனை அறிந்து கொண்ட கூரத்தாழ்வான்,
இராமானுஜருக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்துடன், தான் இராமாநுஜரைப் போல
காவி வஸ்திரம் அணிந்து கொண்டு, தன்னுடன் பெரிய நம்பியையும் அழைத்துக் கொண்டு, அரண்மனைக்குச் சென்றார்.
அரசனின் ஆணைக்கு இணங்கி, கையொப்பமிட மறுத்த கூரத்தாழ்வான், பெரிய நம்பி இருவரின் கண்களையும் பிடுங்க ஆணையிட,
ஆனால் கூரத்தாழ்வான் தம் கண்களை தாமே பிடுங்கிக் கொள்ள,
பெரிய நம்பியின் கண்கள் மட்டும் பிடுங்கப் பட்டன. வயது முதிர்ச்சியின் காரணமாக வேதனை தாளமாட்டாமல்
பெரிய நம்பிகள் கீழே சாய்ந்து அவ்விடத்திலிருந்தே திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

—————–

ஸ்வாமி இராமாநுஜர் :-

ஸ்ரீ பெரும்பூதூரைச் சேர்ந்த கேசவசோமாயாஜி என்பவருக்கும், பெரிய திருமலை நம்பியின் மூத்த சகோதரியுமான காந்திமதிக்கும் புத்திரனாக ,
சித்திரை மாதம், திருவாதிரை நக்ஷத்திரத்திலே அவதரித்தார். இளம் வயதிலேயே குருவிடம், குரு உபதேஸங்களையும்,
வேத சாஸ்திரங்களையும் ஐயம் திரிபுற கற்று, எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அவரின் 16 வது வயதிலே தஞ்சமாம்பாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

காஞ்சி ஸ்ரீ.தேவராஜ ஸ்வாமிக்கு நித்ய ஆலவட்ட கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகள்,
தினமும் பூவிருந்தவல்லியிலிருந்து, காஞ்சிபுரத்திற்கு, ஸ்ரீபெரும்பூதூர் வழியாகச் சென்று வந்து கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட இராமாநுஜருக்கு, திருக்கச்சிநம்பிகள் மீது மிகுந்த பற்றும்,
பக்தியும் ஏற்பட்டது. ஒரு நாள் திருக்கச்சி நம்பிகளை அடி பணிந்து, தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று,
அவரை நன்கு உபசரித்து அனுப்பினார். இவ்வாறாக தினமும் அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டு வந்தது.
இராமாநுஜரின் முகப் பொலிவு, அறிவு, ஆழ்ந்த ஞானம், அதீத பண்பு முதலியன திருக்கச்சி நம்பிகளை மிகவும் கவர்ந்து,
அவரிடம் இவருக்கு ஒரு தெய்வீகப் பற்று ஏற்பட்டது. மிகப் பல ஆன்மீக விஷயங்களை இருவரும் அளவளாவி வந்தனர்.

யாதவப் பிரகாசர் என்னும் வித்வானிடம், இராமாநுஜரும், அவர் சிற்றன்னையின் மகனுமான கோவிந்தனும்
அத்வைத வேதாந்த பாடங்களை கற்று வந்தனர். மிகவும் சிரத்தையுடன் பாடங்களைக் கற்று வந்த இராமாநுஜர் ,
தனக்குத் தோன்றும் பல விஷயங்கள் பற்றி யாதவப் பிரகாசரிடம் எதிர் கேள்விகள் கேட்க,
இதனைக் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டிய யாதவப் பிரகாசர், அதற்குப் பதிலாக அவரிடம் பகைமை எண்ணம் கொள்ளலானார்.
அதன் காரணமாக இராமாநுஜரை வஞ்சனையால் மாய்த்துவிட முடிவு செய்தார்.
இதனை முன்னிட்டு தன்னுடைய சீடர்கள் பலருடன் இராமாநுஜரையும் அழைத்துக் கொண்டு, காசி யாத்திரை புறப்பட்டார்.
அங்கு இராமாநுஜர் தனிமையில் இருக்கும் பொழுது அவரைக் கொல்ல சதி செய்தார். இதனை அறிந்து கொண்ட கோவிந்தர்,
இராமாநுஜரிடம் விவரமாக எடுத்துக் கூறி, அங்கிருந்து அவரைத் தப்பி ஓடும்படி வேண்டிக் கொண்டார்.
அங்கிருந்து தப்பி வெளியேறிய இராமாநுஜர், காஞ்சி பேரருளாளன் க்ருபையால், வழி காட்டப்பட்டு காஞ்சி நகரை வந்தடைந்தார்.
காஞ்சிபுரத்திலே இருந்து கொண்டு, அங்குள்ள சாலைக் கிணற்றில் தீர்த்தம் எடுத்து,
தேவப் பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டு வந்தார்.

பின் இவரை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஆளவந்தாரிடம் அழைத்துச் செல்வதற்காக காஞ்சி வந்திருந்த பெரிய நம்பியுடன்,
இவரும் ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டார். ஸ்ரீரங்கத்தை நெருங்கும் தருவாயில், ஆளவந்தார் பரமபதித்து விட்ட செய்தியினைக் கேள்விப் பட்டு,
ஆளவந்தாருடன் தனக்கு அளவளாவ கொடுத்து வைக்கவில்லையே என்று மிக்க துயரமுற்று கதறினார்.
ஓரளவிற்கு மனதை தேற்றிக் கொண்டு, அவரின் திருமேனியையாவது தரிசிக்கலாம் என்ற எண்ணத்துடன்
அவரின் பூத உடல் இருந்த இடம் வந்தடைந்தார். ஆளவந்தாரின் திருமேனியை காணும் போது,
அவரின் ஒரு கையில் மூன்று விரல்கள் மடக்கப்பட்டு இருந்த நிலையைக் கண்டு, அவரின் திருவுள்ளப் படி நிறைவேறாத
அவர் தம் மூன்று விருப்பங்களினால் தான் அவரின் மூன்று விரல்களும் மடங்கிய நிலையில் இருப்பதை உணர்ந்து கொண்டு,
அதனைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் வினவ அவர்களும் ஆளவந்தாரின் மூன்று விருப்பங்களையும் கூறினர். அவை :-

ஸம்பிரதாயத்திற்கு, வியாஸரும் , பராசர பட்டரும் ஆற்றியுள்ள கைங்கர்யத்திற்கு, உபகாரமாக அவர்களின் பெயர்களை
வருங்காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கு சூட்ட வேண்டும்.

ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செயலான திருவாய் மொழிக்கு நல்ல உரை எழுதப்பட வேண்டும்.

வியாசரின் ப்ரம்மஸூத்ரத்திற்கு ஒரு பாஷ்யம் இயற்றப் பட வேண்டும்.

ஆளவந்தாரின் மேற்படியான விருப்பங்களை தான் நிறைவேற்றி வைப்பதாக இராமாநுஜர் சபதமெடுக்க,
உடனேயே ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் விரிந்தன.

இராமாநுஜருக்கு ஆறு ஆச்சாரியர்கள். அவர்களில் பெரிய நம்பிகளிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டார்.
பெரிய திருமலை நம்பியிடம் ( அவரின் மாமாவும் ஆவார் ) இராமாயணம், திருக்கோஷ்டியுர் நம்பியிடம் திருமந்த்ரார்த்தம்,
திருமாலையாண்டானிடம் திருவாய் மொழி, திருவரங்கப் பெருமாள் அரையரிடம் ( இவர் ஆளவந்தாரின் பேரன் )
அருளிச் செயலின் மற்ற மூன்று ஆயிரங்கள், இயல், கலை,
திருக்கச்சி நம்பிகளிடம் தேவப் பெருமாளின் ஆறு வார்த்தை அர்த்தம் ஆகியவைகளை கற்றுக் கொண்டார்.

திருக்கச்சி நம்பிகளிடம் மிகுந்த ஈடுபாடும் அன்பும் கொண்ட இராமாநுஜர் ஒரு நாள்,
அவரை தன் அகத்திற்கு விருந்துண்ண அழைத்திருந்தார். அவர் புசித்த பின் பாகவத சேஷம் உண்ண வேண்டும் என்பது இவர் விருப்பம்.
திருக்கச்சி நம்பிகள் இல்லத்திற்கு வந்த சமயம் , இராமாநுஜர் வெளியில் சென்று இருந்தார்.
ஆனால் வேறு பகவத் விஷயம் காரணமாக, அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால்,
இராமநுஜர் வரும் வரை காத்திருக்காமல் தனக்கு, அமுது சாதிக்க தஞ்சமாம்பாளை வேண்ட,
அவரும், நம்பியை அமரச் செய்து அங்கு அவருக்கு உணவிட்டு, அவர் சென்ற பின் ,
மீதமிருந்த அன்னங்களை வெளியில் எறிந்துவிட்டு, இல்லம் முழுவதும் சுத்தி செய்து, கழுவி,
இராமாநுஜருக்காக மீண்டும் சமைத்துக் கொண்டிருந்தார்.

இல்லம் திரும்பிய இராமாநுஜர் நடந்தவைகளை கேள்விப்பட்டு, தம் மனையாள் நடந்து கொண்ட விதம் பற்றியும்,
தமக்கு பாகவத சேஷம் கிடைக்கவில்லையே என்றும் மிகுந்த வருத்தமுற்றார். பின் திருக்கச்சி நம்பிகளை சந்தித்து
அவர் பாதம் பணிந்து மன்னிக்க வேண்டினார். இது போலவே பிறிதொரு சமயம்,
பெரிய நம்பிகளின் மனிவியுடன் கிணற்றில் நீர் எடுக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டு, தம் குலத்தை விட
பெரிய நம்பியின் மனைவியின் குலம் தாழ்ந்தது என்று தஞ்சமாம்பாள் கூறினார்.
இதனால் மன உளைச்சலடைந்த பெரிய நம்பியின் மனைவி நடந்த சம்பவங்களை அவரிடம் தனிமையில் கூற,
பெரிய நம்பியும் இதனைக் கேள்விப்பட்டால் இராமாநுஜரின் மனம் மிகுந்த வருத்தமடையும் என்று எண்ணி
அவரிடம் சொல்லிக் கொள்ளாமல், மனைவியுடன் ஸ்ரீரங்கம் திரும்பி விட்டார். இவர்களை காணாது தவித்த
இராமநுஜர் பின் தம் மனைவியின் மூலம் நடந்தவைகளைக் கேள்வியுற்று, ஆச்சார்யருக்கு நேர்ந்த அபசாரத்தினால்
மிகுந்த மன வேதனை அடைந்து இல்லறத்தைத் துறந்து துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தார்.

தாம் துறவறம் மேற்கொள்ளப் போவதை திருக்கச்சி நம்பிகளிடம் சொல்லி, காஞ்சி தேவப் பெருமாள் கோயில்
திருக்குளத்திலே தீர்த்தமாடி, தேவப் பெருமாள் துணையுடன், ஆளவந்தாரை ஆச்சார்யராக மனதில் நினைத்துக் கொண்டு,
காஷாயம் தரித்தும், திரிதண்டத்தை கையில் பிடித்துக் கொண்டும் ஸன்யாஸத்தை ஏற்றுக் கொண்டார்.
அவருடன் எப்பொழுதும் அவரது சீடர்களாக அவரின் சகோதரி கமலாம்பாளின் புதல்வரான முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் இருந்தனர்.
இராமாநுஜரின் திரிதண்டமாக முதலியாண்டானையும், பவித்திரமாக கூரத்தாழ்வனையும் முன்னோர்கள் கூறுவர்.

ஆளவந்தாரின் மறைவிற்குப் பிறகு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் மூலத் தூணாகிய திருவரங்கத்தில் ,
சம்பிரதாயத்தை நிர்வகிக்கக் கூடியவர் இல்லாத காரணத்தினால், பெரிய நம்பிகளும், திருவரங்கப் பெருமாள் அரையர்
முதலானோர் இராமாநுஜரை திருவரங்கம் அழைத்து வர பெரு முயற்சிசெய்தனர். பெரிய நம்பிகள்,
பண் இசையில் திவ்யப் பிரபந்தத்தை இசைக்க வல்ல திருவரங்கப் பெருமாள் அரையரை காஞ்சிக்கு அனுப்பி
எப்பாடு பட்டாகிலும் இராமாநுஜரை திருவரங்கம் அழைத்துவர வேண்டினார்.
அரையரும் காஞ்சி தேவப் பெருமாள் ஸன்னதியில் பன்னுடன் திவ்யப் ப்ரபந்தத்தை இசைக்க ,
உள்ளம் மகிழ்வுற்ற காஞ்சி எம்பெருமான் அவருக்கு வரமளிக்க, அவ் வரத்தின் மூலம் பேரருளாளனின் ஒப்புதலுடன்
இராமாநுஜரை திருவரங்கத்திற்கு அழைத்து வந்தார்.
அவருடன் அவர் சீடர்களான முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் வந்தனர்.

திருவரங்கம் வந்து சேர்ந்த இராமாநுஜர் பெரிய பெருமாள் கோயில் கைங்கர்யத்தை ஏற்றுக் கொண்டு,
பல நிர்வாக சீர்திருத்தங்களை நடைமுறை படுத்தினார். இன் நடைமுறைகளே
ஸ்ரீரங்கம் திருக் கோயிலில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருக்கோஷ்டியூர் நம்பிகளிடத்திலே திருமந்திரத்தையும் அதன் விசேஷார்த்தங்களையும் அறிந்து வர வேண்டி,
இராமாநுஜர் பதினெட்டு தடவைகள் திருவரங்கத்திலே இருந்து திருக்கோஷ்டியூர் சென்று வந்தார்.
ஒவ்வொரு முறையும் மனம் தளராமல் சென்று, பதினெட்டாவது முறை சென்ற போது முற்றாக மந்த்ரார்த்தங்களை கற்றுக் கொண்டார் –
இவற்றை முதலியாண்டான், கூரத்தாழ்வான் தவிர வேறு எவரிடமும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்.

மந்த்ரார்த்த உபதேஸங்களை கற்றுக் கொண்டு திரும்பிய இராமாநுஜரின் மனம் வேறு விதமாக சிந்தித்தது.
தாம் பட்ட கஷ்டம் இனி யாருக்குமே வேண்டாம் என்றும், மறுபிறவி வேண்டாமென்று ஆச்சாரியனை அனுகும் மக்களுக்கும்,
தாம் கற்றுக் கொண்ட திருமந்திரத்தை மற்ற எளியவர்களுக்கும் கூறினால்
அதன் பயனாக எல்லா மக்களுக்கும் நல்வழி அருள் கிடைக்குமே என்று சிந்தித்தார்.
திருக்கோஷ்டியூர் மக்களுக்கெல்லாம் தம் எண்ணத்தை கூறி, ஆன்ம நலம் வேண்டுபவர் எல்லோரையும்
திருக்கோயிலுக்கு திரண்டு வரச் சொன்னார். அவர்களிடத்திலே திருமந்திரத்தையும், மந்த்ரார்த்தங்களையும் உபதேசித்தார்.

இந் நிகழ்வினைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, மிகுந்த கோபமுற்று, ஆச்சாரிய நிபந்தனையை மீறியவனுக்கு
நரகம் தான் கிடைக்குமென்று இராமாநுஜரிடம் கூற, அவரும் ஆச்சாரிய நிபந்தனைகளை மீறி எளிய மக்களுக்கு உபதேசித்ததின் மூலம்
அவர்களின் ஆன்மாக்கள் நலம் உய்ந்து, மிக்க பயனடைவார்கள் என்றும்,
இதன் காரணமாகவே, தான் அவர்களுக்கு உபதேஸம் அருளியதாகவும், இதனால் தான் நரகம் போக நேரிட்டாலும்
தனக்கு மகிழ்ச்சியே என்றும் பதிலுரைத்தார். இராமாநுஜரின் இந்த பதிலால் தனக்கு இப்படி ஒரு கருணை உள்ளம் உள்ள ஒருவர்
சீடனாக அமைந்தது கண்டு மகிழ்வுற்று, அவரை வாரி அனைத்து ஆசிர்வதித்தார்.

ஆளவந்தாருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி, கூரத்தாழ்வான் உதவியுடன் ஸ்ரீ பாஷ்யத்தை பட்டோலைப் படுத்தினார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு உரை எழுத திருக்குருகைப்பிரான் பிள்ளையைப் பணித்தார்.
ஸ்ரீரங்கனாதனின் அருளால் கூரத்தாழ்வானுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒருத்தருக்கு பராசர பட்டர் என்றும்,
மற்றொருவருக்கு வேத வியாஸ பட்டர் என்றும் திருநாமமிட்டு மூன்று வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார்.

இச் சமயத்திலே சோழ மன்னனான கிருமி கண்ட சோழன், சிவனுக்கு மேல் தெய்வமில்லை என்று இராமாநுஜரிடம்
கையொப்பம் பெற அவரை அரசபைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினார்.
ஆனால் கூரத்தாழ்வான், இராமாநுஜரைப் போல் காவி வஸ்திரம் தரித்துக் கொண்டு அரசவை செல்ல,
இராமாநுஜரோ , கூரத்தாழ்வானின் வெள்ளையுடையுடன் அங்கிருந்து தப்பி, மைசூர் சென்றடந்தார்.
அந் நாட்டை ஆண்டு கொண்டிருந்த பிட்டி தேவன் என்பவனின் மகளின் தீராத நோயைக் குணப்படுத்தி
அவனை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தொடர வைத்தார். பின்னர் தில்லி சுல்தானின்
மகளிடம் இருந்த திருநாராயணபுரத்து இராமப் பிரியனின் விக்ரஹத்தைப் பெற வேண்டி தில்லி சென்றார்.
சுல்தானால் களவாடப்பட்ட , பல விக்கிரஹங்களில் ஒன்றாக அங்கிருந்த
திருநாராயணபுரத்து இராமப் பிரயனும் அங்கிருந்தார். சுல்தானும் எந்த விரஹம் இராமப் பிரியன் என்று தெரியாது என்று கூறி,
உம்மால் முடிந்தால் அவ் விக்ரஹத்தை கண்டுபிடித்து எடுத்துச் செல்லலாம் என்றான். உடனே இராமாநுஜரும் அங்கிருந்தபடியே
” வாரும் செல்வப் பிள்ளாய் ” என்று அழைக்க, இராமப் பிரியனின் திரு விக்ரஹம் தானே நேராக இராமாநுஜரிடம் நகர்ந்து வர,
அவரையும் பெற்றுக் கொண்டு திருநாராயணபுரம் வந்தார். அன்று முதல்
இராமப் பிரியன் ” செல்வப் பிள்ளை ” என்றே அழைக்கப்படலானார்.
மைசூர் ராஜ்ஜியத்திலே தங்கியிருந்த பொழுது, தொண்டனூர் ஏரியைக் கட்டி நிர்மாணித்தார்.

இராமாநுஜருக்கு ஆயிரக் கணக்கில் சிஸ்யர்கள் குவிந்தனர். ஆங்காங்கேயுள்ள திவ்ய தேஸங்களின் நிர்வாகப் பொருப்பை
அங்குள்ள தம் சிஸ்யர்களிடம் அளித்து ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரயதாயம் தழைதோங்கச் செய்ய 74 ஸிம்மாசனாதியதிகளை நியமித்தார்.
இன்று நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரயதாயம் இவ்வளவு எழுச்சியுடன் இருப்பதற்கு ஸ்வாமி இராமாநுஜரே காரணமாவார்.

இவ்வாறாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டு, தம்முடைய 120 வயதில் வைகுந்த பதவியை அடைந்தார்.

ஸ்வாமி எம்பெருமானாரைப் பற்றி குறிப்பிடும்போது இங்கு
முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.
ஸ்வாமி எம்பெருமானார் ஸன்யாஸ்ரமத்தை ஏற்றுக் கொள்ளும் பொழுது அவர், முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும்
மட்டும் துறக்கவில்லை என்று கூறி ஸன்யாசத்தை ஏற்றுக் கொண்டார்.
குருபரம்பரை ப்ரபாவம் கூறுவதாவது- ஸ்வாமி எம்பெருமானார் முதலியாண்டானை த்ரிதண்டமாகவும்,
கூரத்தாழ்வானை பவித்திரமாகவும் கருதினார் என்பதாகும். அந்தளவிற்கு யதிராஜருடன் ஐக்கியமானவர்கள் இவ்விருவரும்.

————-

எம்பார் :-

தை மாதம் புனர்வசு நக்ஷத்திரத்தில், த்யுதிமதி அம்மையாருக்கும், கமல நயன பட்டருக்கும் திருக்குமாரராக
அவதரித்தவர் எம்பார் அவர்கள். இவர் ஸ்வாமி இராமானுஜரின் தாய் வழி சிற்றன்னையின் திருமகனாவார்.
இவருடைய மாமா பெரிய திருமலை நம்பி இவருக்கு ” கோவிந்த பட்டர் ” என்று திருநாமம் சூட்டினார்.
இவருடைய உபனயனமும், விவாஹமும் இவர் பிறந்த ஊரான மதுரமங்கலத்தில் நடைபெற்றது.
இராமாநுஜர் , யாதவப் பிரகாசரிடம் வேதங்களைக் கற்றுக் கொள்வதை கேள்விப்பட்ட கோவிந்த பட்டர் ,
தாமும் அவருடன் சேர்ந்து வேதம் கற்றுக் கொள்ளச் சென்றார். அது முதல் அவருடன் இணை பிரியாமல் இருந்தார்.

இராமாநுஜருக்கு, அவர் குருவான யாதவப் பிரகாசரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,
காசிக்குச் செல்லும் வழியில் அவரைக் கொல்ல சதி செய்த குருவின் சதிச் செயலை அறிந்து,
அவரிடமிருந்து இராமாநுஜரைக் காத்து, காஞ்ச்சிக்கு அனுப்பியதும் இவரே. ஒரு சம்யம் காசியில்,
கங்கை நதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது, இவர் கையில் ஒரு சிவலிங்கம் ஒட்டிக் கொண்டுவிட்டது.
இதனால் சிவ பக்தி ஏற்பட்டு அதன் காரணமாக காளஹஸ்தி சென்று அங்கு சிவனை வழிபடலானார்.
இவரை ” உள்ளங்கை குளிர்ந்த நாயானார் ” என்று பலர் அழைத்தனர்.

இராமாநுஜர் ஸன்னியாஸம் மேற்கொண்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி இருந்த பொழுது,
கோவிந்த பட்டர் சிவ பக்தரானதைக் கேள்விப் பட்டு , மிக வருந்தி, அவரை மீண்டும் வைஷ்ணவத்திற்கு
திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்குப் பொருத்தமானவர் தங்கள் இருவருக்கும் மாமாவாகிய
பெரிய திருமலை நம்பி தான் என்று முடிவு செய்து அவருடன் மேலும் சில வைஷ்ணவர்களையும் காளஹஸ்திக்கு அனுப்பினார்.
கோவிந்த பட்டரைத் திருத்துவதற்கு பெரும் முயற்சியினை மேற்கொண்டார் பெரிய திருமலை நம்பி.
இவ்வாறு இரு முறைகள் முயன்று தோல்வியுற்ற நம்பிகள் மூன்றாம் முறையாக நம்மாழ்வாரின் திருவாய் மொழி
இரண்டாம் பத்தின், இரண்டாம் திருமொழியான
“திண்ணன் வீடு ” திருமொழியின் ” தேவும் எப்பொருளும் படைக்க * பூவில் நான்முகனைப் படைத்த
* தேவன் எம்பெருமானுக்கல்லால் * பூவும் பூசனையும் தகுமே * என்ற நான்காம் பாசுரத்தினை மீண்டும், மீண்டும்
கோவிந்த பட்டரின் செவியில் விழும்படி சொல்லிக் கொண்டிருக்க, அவரும் ” தகாது , தகாது ” என்று கூறிக்கொண்டே
பெரிய திருமலை நம்பியின் திருவடியில் விழுந்தார். பிறகு பெரிய திருமலை நம்பியும் , கோவிந்த பட்டரை ஆசிர்வதித்து,
அவரை திருமலைக்கு அழைத்துச் சென்று, வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பற்றி பயிற்சி அளித்தார்.

பெரிய திருமலை நம்பியின் இராமாயண காலக்ஷேபத்தைக் கேட்க வந்திருந்த இராமாநுஜர்,
காலக்ஷேபம் முடிந்து புறப்படத் தயாரான பொழுது, அவருக்கு தாம் ஒன்றும் கொடுக்க வில்லையே என்று அவர் கூற,
அதற்கு இராமாநுஜர், தமக்கு கோவிந்த பட்டரை தந்தருள வேண்டும் என்று ப்ரார்திக்க,
அவர் விருப்பத்தை அப்படியே நிறைவேற்றினார் பெரிய திருமலை நம்பி அவர்கள்.

ஞான பக்தி, வைராக்கியத்துடன் இராமாநுஜரிடம் அதீத ஈடுபாடு கொண்ட, கோவிந்த பட்டர் சன்யாஸம் மேற்கொண்டு
எம்பார் என்ற திருநாமம் பெற்று, பின்னர் இராமாநுஜரின் அர்த்த விஷேஷங்களையும், தர்சனத்தையும் நிர்வகித்து
வாழ்ந்தருள வேண்டும் என்று மங்களா ஸாஸனம் செய்து பட்டர் திருக்கைகளில் காட்டிக் கொடுத்து,
இராமாநுஜரின் திருவடிகளை தியானித்துக் கொண்டு திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

——————-

பட்டர் :-

பெரிய பெருமாளின் அருள் பிரசாதமாக , கூரத்தாழ்வானுக்கும், ஆண்டாளுக்கும் திருமகனாக
வைகாசி மாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் பட்டர்.
இவர் பிறந்த பன்னிரண்டாம் நாள், குழந்தையைப் பார்ப்பதற்காக இராமாநுஜரும், எம்பாரும் வந்தனர்.
அச் சமயம் எம்பார், திருமந்திரத்தை சொல்லிக் கொண்டே, குழந்தையை எடுத்து இராமாநுஜரிடம் கொடுக்க,
அவரும் ” நீரே இக் குழந்தைக்கு ஆச்சாரியனாக இரும் ” என்று சொல்லி, ஆளவந்தாருக்கு வாக்கு கொடுத்தபடி,
குழந்தைக்கு “பராசர பட்டர் ” என்னும் திருநாமத்தை சூட்டினார்.
ஸ்ரீரங்கனாதன் ஸன்னதியில், திருமணத் தூண் அருகில் தொட்டிலிட்டு, பெருமாளும், பிராட்டியுமாக குழந்தையை வளர்த்தனர்.

பட்டர் அவரது ஐந்து வயதில், வீதியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது,
ஒரு பெரிய வித்வான் பல்லக்கில் வந்து கொண்டிருந்தார்.
கூட வந்த கட்டியக்காரன் “ஸர்வக்ஞர் ” ( எல்லாம் அறிந்தவர் என்று பொருள் ) வருகிறார் என்று
கட்டியம் கூறியதைக் கேட்ட பட்டர் , அவர் ஒரு பெரிய அஹங்காரராய் இருப்பார் என்று எண்ணி,
அவருடைய அகந்தையை அகற்ற எண்ணம் கொண்டார். தன் கையில் ஒரு கைப்பிடி மண்னை எடுத்துக் கொண்டு,
அந்த வித்வானிடம், தன் கையில் எவ்வளவு மண் இருக்கிறது என்று வினவ, பதில் சொல்ல முடியாமல் அந்த ஸர்வக்ஞன் முழித்தான்.
உடனே பட்டர் தன் கையில் இருப்பது ஒரு கைப்பிடி மண் என்று கூற, அந்த வித்வான் அஹங்காரம் அழிந்து தலை குனிந்து நின்றார்.

பட்டருக்கு உரிய பருவத்தில் உபநயனம் செய்துவைத்து, பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் அவர் பெற்றோர்.
கேட்ட மாத்திரத்திலேயே தான் கற்றதை மனதில் பதிய வைத்துக் கொள்ளூம் ஆற்றல்
அவருக்கு இருப்பதைக் கண்டு எல்லோரும் வியந்தனர். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய நூல்களையும்,
ஆழ்வார்களின் ஈரச் சொல் பாசுரங்களையும், இதிகாச புராணங்களையும், மற்றைய தத்துவ நூல்களையும் கற்றார்.

ஒரு கைசிக துவாதசி அன்று, பட்டர் மிக அழகாக கைசிக புராணம்
வாசித்த நேர்த்தியைக் கேட்டு மகிழ்ந்த பெரிய பெருமாள் இவரிடம்
” பட்டரே உமக்கு பரம பதம் தந்தோம் ” என்று அருளினார்.
பட்டரும் மிகுந்த ஆனந்தத்துடன் இல்லம் திரும்பி, தம் தாயாரை தெண்டம் ஸமர்ப்பிக்க,
அவரும் ” நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் ” என்று வாழ்த்த, பட்டரும் ” அம்மா, அடியேன் வேண்டியது ஈதே ” என்று கூறினார்.
பிறகு பட்டர் திருநெடுந்தாண்டகம் உபன்யாசம் செய்ய தொடங்கி, விளக்கியருளும் போது,
பெரியாழ்வார் திருமொழியின் ஐந்தாம் பத்தின் நான்காம் திருமொழியின்
ஒரு பாசுரமான ” பறவியேறு பரம புருடா * நீ என்னைக் கைக் கொண்ட பின் * பிறவி என்னும் கடலும் வற்றி * பெரும் பதமாகின்றதால் ”
பாசுரத்தை அனுஸந்தித்து, இரு கரம் கூப்பிக் கொண்டிருக்கும் போதே திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

————-

நஞ்சீயர் :-

திருநாராயணபுரத்தில் பங்குனி மாதம், உத்திர நக்ஷத்திரத்தில் அவதரித்த நஞ்சீயரின் இயற்பெயர் மாதவாச்சாரியார்.
வேதங்களில் கரைகண்டவரான வல்லவராக இருந்ததினால் இவர் வேதாந்தி என்றும் அழைக்கப்பட்டார்.

ஒரு அந்தணர் பெரும் வேதாந்தியாகத் திகழ்ந்த மாதவாச்சாரியாரை, பட்டரின் பெருமைகளை சொல்லி
அவரிடம் ஈடுபாடு கொள்ளும்படி வேண்ட, இவருக்கும் பட்டரை நேரில் காண ஆவல் எழுந்தது.
பட்டர் திருநாராயணபுரம் ஏள்ளியிருந்த பொழுது, பரிவாரங்களுடன் வேதாந்தி மணி பல்லக்கில் சென்று கொண்டிருந்தார்.
மற்ற பிற அந்தணர்கள் உணவு பறிமாறும் இடத்திற்குச் செல்ல, பட்டர் ஒரு எளிய அந்தனர் போல் ,
மாதவாச்சாரியார் இருந்த இடத்திற்கு வந்தார்.

இவரைக் கண்ட வேதாந்தி ” எதற்கு இங்கு வந்தீர் ” என்று வினவ,
” பிட்சைக்கு வந்தேன் ” என்று பட்டர் பதிலுரைக்க, அதற்கு வேதாந்தி ” உணவு பறிமாறும் இடத்திற்கு போவதுதானே ” என்று சொன்னார்.
ஆனால் பட்டரோ, தான் தர்க்க பிட்சைக்குத்தான் அங்கு வந்திருப்பதாகக் கூறினார்.
இவர் யாரென்று ஊகித்த வேதாந்தி, பட்டரிடம் ” நீர்தான் பட்டரோ ? ” என்று கேட்க, அவரும் ” ஆம் ” என்று சொல்ல,
இருவருக்கும் வாதம் நடந்தது. முடிவில் பட்டர் வேதாந்தியை வெற்றி கொள்ள, அவரும் ” விஷிஷ்டாத்வைத மதமே”
உயர்ந்தது என்பதனை ஒப்புக் கொண்டு, பட்டர் திருவடிகளில் சரணம் அடைந்தார்.
பட்டர் அவருக்கு ” பஞ்ச ஸமஸ்காரம் ” செய்து வைத்தார்.

பின்னாளில் வேதாந்தியாகிய , மாதவாச்சாரியார் துறவறம் பூண்டு, அத் துறவறக் கோலத்துடனே ஸ்ரீரங்கம் வந்து,
பட்டரின் திருவடியை சரணமடைந்தார்.
பட்டரும் , அவரை வாரி அணைத்துக் கொண்டு, அவருக்கு ” நஞ்சீயர் ” என்று திருநாமம் சூட்டினார்.
பட்டரிடம் அளவற்ற பக்தியும், பேரன்பும் கொண்டிருந்தார். ஸ்ரீரங்கத்திலே நூறு முறை திருவாய்மொழி காலக்ஷேபம் செய்துள்ளார்.
நஞ்சீயர் காலக்ஷேபங்களைக் கேட்ட, நம்பிள்ளை, பிற்காலத்தில், தாம் காலக்ஷேபம் செய்யும் போது,
நஞ்சீயரின் குண நல விஷேங்களை பூரிப்போடு கூறுவாராம்.

நஞ்சீயர் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர் மிகவும் விரும்பிய,
திருமங்கை ஆழ்வாரின் ” தூவிரிய மலருழக்கி ” பதிகத்தை அரையர் ஸேவிக்க,
அப்பாசுரத்தின் பொருளில் ஈடுபட்டு பரமபதம் அடைந்தார்.

————–

நம்பிள்ளை :-

திருமங்கை ஆழ்வாரின் அவதார மாதமும், நக்ஷத்திரமுமான, கார்த்திகை மாதம் , கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்
நம்பிள்ளை. இவரின் இயற்பெயர் வரதர். பட்டருடைய வியாக்யானங்களை தம் மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டிருந்தார்.
நஞ்சீயர் திருவாய்மொழிக்கு, உரை எழுதிக்கொண்டிருந்தார்.
அதனை ஏடு படுத்த அழகான கையெழுத்துடன் எழுதக் கூடியவரை தேடிக் கொண்டிருக்கும் போது,
அவருக்கு அப்பொழுது அறிமுகமானவர் வரதர். நஞ்சீயருக்கு,வரதரின் கையெழுத்து பிடித்துப் போக அவரைத் தம் சீடராக்கிக்
கொண்டார். திருவாய்மொழி உரையை, வரதருக்குக் கற்றுக் கொடுத்து, தான் எழுதி வைத்திருந்த
ஓலைச் சுவடிக் கட்டையையும் வரதரிடம் கொடுத்து அதனை அவரின் கைவண்ணத்தில் ஏடுபடுத்திக் கொண்டுவரும்படி சொல்லி அனுப்பினார்.

வரதர் சுவடிகள் அடங்கிய கட்டையை எடுத்துக் கொண்டு, காவிரி ஆற்றினைக் கடந்து அக்கரையை அடைய ஆற்றில் இறங்கினார்.
அப்பொழுது திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட, நன்கு நீந்த வல்லவரான வரதர்,
ஓலைக் கட்டையை தம் திருமுடியில் கட்டிக் கொண்டு நீந்தினார்.
ஆனால் வெள்ளப் பெருக்கின் ஓட்டத்தில் அவருடைய திருமுடியில் கட்டப்பட்டிருந்த அவ்வோலை கட்டைகள்,
ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மிக்க துயரமுற்ற வரதர், புலம்பியபடியே கரையை கடந்து மறு பக்கம் வந்தார்.
பிறகு தம் மனதைத் தேற்றிக் கொண்டு, ஆச்சாரியனிடம் தாம் கற்று, தம் மனதில் நிறுத்திக் கொண்டதை நினைவில் கொண்டு,
எம்பெருமானின் அருளினை வேண்டி, தாமே அவ்வுரைகளை எழுதி முடித்து அதனை நஞ்சீயரிடம் கொண்டு ஸேர்ப்பித்தார்.
இதனைப் படித்துப் பார்த்த நஞ்சீயர் தாம் கற்றுக் கொடுத்ததை விட மிகச் சிறப்பாக திருவாய்மொழி உரை இருப்பதைக் கண்டு,
மிகவும் பரவசப்பட்டு, மனம் குளிர்ந்து வரதரைப் பாராட்டினார். வரதரும் நடந்த சம்பவங்களை நஞ்சீயரிடம்
கூற, மிகப் பூரிப்புடன் ” நீர் நம்பிள்ளையோ ” என்று ஆரத் தழுவிக் கொண்டார்.

திருவரங்கத்தையே தனது இருப்பிடமாகக் கொண்டு, காலக்ஷேபங்கள் செய்து வந்த நம்பிள்ளை கோஷ்டியில் இடம் பெற்றிருந்த,
கூரத்தாழ்வானின் பேரனான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர், திருவாய்மொழிக்கு நம்பிள்ளையின் விளக்க உரை கேட்டதைக் கொண்டு,
அதனை சுவடி படுத்திக் கொண்டு, ஆச்சாரியனிடம் சென்று காட்டினார். ஆனால் நம்பிள்ளையோ, தம்மிடம் இசைவு பெறாததாலும்,
அவர் எழுதிய உரையானது மிகவும் விஸ்தாரமாக இருந்ததாலும், ஆழ்பொருளை சரியான முறையில் தெரிவிக்காததாலும்,
கோபம் கொண்டு அச் சுவடிகளை கரையானுக்கு இரையாக்கிவிடுகிறார்.

திருவரங்கத்தில், நம் பெருமாள் ஸன்னதியில் நடக்கும் இவரின் காலக்ஷேப பேருரைகளைக் கேட்க ,
பெருமளவில் அலை மோதும் பக்தர்கள் கூட்டத்தைக் கண்டு ” இது நம்பெருமாள் கோஷ்டியோ, நம்பிள்ளை கோஷ்டியோ ” என்று
அக்காலத்தில் மக்கள் வியப்பார்களாம்.
இவருக்கு உலகாச்சாரியர் என்ற பட்டப் பெயரும் உண்டு. 95 ஆண்டுகள் வாழ்ந்து பரமபதமடைந்தார் நம்பிள்ளை.

—————–

வடக்குத் திருவீதிப் பிள்ளை :-

வடக்குத் திருவீதிப் பிள்ளை , ஸ்ரீரங்கத்தில் ஆனி மாதம், சுவாதி நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
நம்பிள்ளையின் சிஷ்யர்களில் பிரபலமானவர்.

நம்பிள்ளையின் திருவாய்மொழி வியாக்யான காலக்ஷேப கோஷ்டியில் ஈடுபாடு கொண்டு,
அங்கு விவரிக்கப்பட்டவற்றை குறித்துக் கொள்ள விழைந்தார்.
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரின் பிரயத்தனத்தின் மேல் நம்பிள்ளைக்கு ஏற்பட்ட கோபத்தினை மனதில் இருத்திக் கொண்டு,
நம்பிள்ளையின் காலக்ஷேப வியாக்யானங்களை முழுவதுமாக குறிப்பெடுத்துக் கொள்வார்.
அவ்வாறு குறிப்பெடுத்துக் கொண்டதை ஓலைச் சுவடியில் எழுதி, தம் திருமாளிகையில் கோவிலாழ்வார் ஸன்னதியில்
சேர்த்து வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் நம்பிள்ளையை தமது திருமாளைகைக்கு அமுது செய்விக்க விரும்பி ப்ரார்த்தித்தார்.

அவரும் ஒப்புக் கொண்டு ஒருநாள் திருமாளைகைக்கு எழுந்தருளி, அங்கு அன்று தாமே பெருமாளுக்கு திருவாராதனம் செய்வதாகக் கூறி,
கோவிலாழ்வார் கதவுகளைத் திறந்தார். உள்ளே இருந்த சுவடிகளைக் கண்டு அவற்றை எடுத்து வாசித்துப் பார்த்தார்.
தம்முடைய வியாக்யானங்களே அவை என்றுணர்ந்து, அவை மிகச் சிறப்பாக குறிப்பெடுக்கப்பட்டதைக் கண்டு திருப்தியுற்று,
” பிள்ளாய் இது என்ன செயல்? ” என்று வினவ, வடக்குத் திருவீதிப் பிள்ளையும் தாம் மறக்காமல் இருப்பதற்காகத் தான்
இவற்றை ஏடு படுத்தி வைத்திருப்பதாகச் சொன்னார்.

அலங்காரம் செய்யப்பட்ட யானை மிக கம்பீரமாக நடப்பதைப் போல, இந்தக் குறிப்புகள் இருப்பதாகக் கூறி,
வடக்குத் திருவீதிப் பிள்ளையை நன்றாக கடாக்ஷித்தார்.அந்த ஏடுகளை தாமே வைத்துக் கொள்வதாகக் கூறி, தம்முடன் எடுத்துச் சென்றார்.
பின்னர் அந்த ஈட்டை ஈயுண்ணி மாதவர்க்குக் கொடுத்தார். அவர் பின் அதனை தம் மகனான பத்மனாபனிடம் கொடுத்தார்.
பத்மனாபன் அதனை நாலூர் பிள்ளைக்குக் கொடுக்க, அவர் தம் மகனான நாலூராச்சான் பிள்ளைக்கு கொடுக்க,
பின் அவர் தம் சிஷ்யர்களான திருவாய்மொழிப் பிள்ளை, திருநாராயணபுரம் ஆய் என்கிற ஜனனாச்சாரியர், இளம்பிலிசை பிள்ளை மூவருக்கும் கொடுத்தார்.
திருவாய்மொழிப் பிள்ளை அதனை மணவாள மாமுனிக்குக் கொடுக்க, அவர் அதனை நம்பெருமாள் முன்பு பிரகடனப்படுத்தினார்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை, நம்பிள்ளையின் காலஷேபங்களிலே மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தமையால், இல்லறத்திலே
நாட்டமில்லாதவராக இருந்தார். இதனால் பிள்ளையின் தாயார் அம்மி கவலையடைந்து, நம்பிள்ளையிடம் தெரிவிக்க,
அவரும் பிள்ளையை அழைத்து தக்க வகையில் உபதேசித்தார். ஆச்சார்ய உபதேசத்தைப் பெற்ற வடக்குத் திருவீதிப் பிள்ளை,
திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்க்கை நடத்தி, இரண்டு ஆண் புத்திரர்களைப் பெற்றார்.
தம் ஆச்சாரியரான நம்பிள்ளையின் பட்டப் பெயரான உலகாச்சாரியர் என்று தம் ஒரு மகனுக்கு பெயரிட்டார்.
அவர்தான் பிள்ளைலோகாச்சாரியர் ஆவர். துலுக்கர்களின் படை எடுப்பின் போது நம்பெருமாளைக் காக்க வேண்டி,
அவரை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு ஜ்யோதிஷ்குடிக்கு சென்றார்.
மற்றொரு புதல்வனுக்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்று திருநாமம் சூட்டினார்.
இவர் தான் ” ஆச்சார்ய ஹ்ருதயம் ” என்னும் மாபெரும் நூலை எழுதியவர்.
பிள்ளைலோகாச்சாரியர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்று இரு மாபெரும் புதல்வர்களை
ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரயதாயத்திற்கு அளித்த வடக்குத் திருவீதிப் பிள்ளை 106 ஆண்டுகள் வாழ்ந்து பின் பரமபதம் அடைந்தார்.

—————–

பிள்ளைலோகாச்சாரியார் :-

ஐப்பசி மாதம் திருவோணம் நக்ஷத்திரத்தில், வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கும், ஸ்ரீ ரங்க நாச்சியார் என்பருக்கும் புத்திரராக,
ஸ்ரீரங்கத்தில் அவதரித்தார். நம்பிள்ளையின் பட்டப் பெயரான ” லோகாச்சாரியன் ” என்கிற பெயரோடு,
” பிள்ளை ” என்கிற அடைமொழியையும் சேர்த்து இவருக்கு ” பிள்ளை லோகாச்சாரியன் ”
என்று பெயரிட்டு அழைத்தனர். இவர் தம் தகப்பனாரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டு, நைஷ்டிக பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.
தகப்பனாரிடம் திருவாய் மொழி மற்றும் இதர பிரபந்தங்கள், ஈடு முதலான வ்யாக்யானங்கள், ஸ்ரீ பாஷ்யம்
ஆகியவற்றைக் கற்றுக் கொண்டு, பரந்த ஞானம் பெற்றார். சம்பிரதாய ரஹஸ்யங்கள் பற்றி காலஷேபங்கள் செய்து வந்தார்.

பிள்ளைலோகாச்சாரியார் , தம் சிஷ்யர்களை அழைத்துக் கொண்டு, ஸ்ரீரங்கத்திலே உள்ள காட்டு அழகிய ஸிங்கர் திருக்கோயில்
ஸன்னதியில் ரஹஸ்யார்த்தங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். மணப்பாக்கத்து நம்பி என்று ஒருவர்.
இவர் ஸ்வப்னத்திலே, காஞ்சி தேவப் பெருமாள் தோன்றி, விஷேஷார்தங்களை அருளிச் செய்து,
மேலும் இவரை ஸ்ரீரங்கத்தில் காட்டழகிய ஸிங்கர் ஸன்னதிக்கு வரச் சொல்லி அங்கே மேற்கொண்டு
இவ்வர்த்தங்களை விரிவாகச் சொல்வதாகச் சொன்னார்.

மணப்பாக்கத்து நம்பியும் காட்டழகிய ஸிங்கர் ஸன்னதிக்கு வந்த பொழுது, அங்கே பிள்ளைலோகாச்சாய்யாரின்
விஷேஷார்த்த காலஷேபத்தில் கலந்து கொண்டார். பிள்ளைலோகாச்சாரியார் அருளிய அர்த்தங்கள்,
காஞ்சி பேரருளாளன் அருளிச் செய்த அர்த்தங்களாகவே இருந்ததைக் கண்டு இவர்,
பிள்ளைலோகாச்சாய்யரிடம் சென்று ” அவரோ நீர் ? ” என்று ஆச்சரியத்துடன் சொல்லி, அவர்தம் திருவடிகளை சரணடைந்தார்.
பின்னர் பிள்ளைலோகாச்சாரியார் அவரை தம் சிஷ்யராக்கிக் கொண்டார்.

பிள்ளைலோகாச்சாரியார் , நம்பெருமாளுக்கு ஆற்றிய ஸேவை அளப்பறியது.
ஒரு சமயம் தில்லி பாதுஷாவான அலாவுதீன் கில்ஜி என்பவன் தன் தளபதியான மாலிக்காபூர் என்பவனை அழைத்து,
தமிழகத்தின் மீது படையெடுத்து, இங்கு திருக்கோயில்களில் உள்ள பொன்னையும், பொருள்களயும், களவாடி வரும்படி ஆனையிட,
அதன் பொருட்டு, வழியில் உள்ள பல சைவ , வைணவ திருத்தலங்களில் கொள்ளையடித்துக் கொண்டு,
ஸ்ரீரங்கத்தை நோக்கி அவன் படை பரிவாரங்களுடன் புறப்பட்டான்.

இதனை அறிந்து கொண்ட பிள்ளைலோகாச்சாரியார் இவர்களிடமிருந்து அரங்கனைக் காக்க விழைந்தார்.
பெரிய பெருமாள் ஸயனித்திருக்கும் ஸன்னதியை கற்சுவர் கொண்டு மூடிவிட்டு, நம்பெருமாளையும் அவர்
திருவாபரணங்களையும் ஒரு பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு, பல ஸ்ரீவைஷ்ணவர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டார்.
திருமாலிருஞ்சோலை, திருமோகூர் திவ்ய தேஸங்களுக்கு அருகிலே உள்ள ஜ்யோதிஷ்குடி என்னும் ஊரில்,
ஒரு மலை அடிவாரத்திலே , பெருமாளை எழுந்தருளப் பண்ணி, அங்கிருந்தபடியே அவருக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்து கொண்டு வந்தார்.
வயோதிக்கத்தின் காரணமாக நோவு சாற்றி, உடல் தளர்ந்த நிலையில், நம்பெருமாளைக் காக்க தம் சிஷ்யர்களிடம் அறிவுறுத்தி,
தம் 105 ஆம் வயதில் நம்பெருமாளை தியானித்துக் கொண்டே ஆச்சாரியன் திருவடி சேர்ந்தார்.

—————–

திருவாய்மொழிப் பிள்ளை :-

திருமலை ஆழ்வார் என்னும் இயற்பெயருடைய திருவாய்மொழிப் பிள்ளை, நம்மாழ்வாரின் அவதார மாதமான வைகாசி மாதத்தில்,
அவரின் அவதார நஷத்திரமான விசாக நஷத்திரத்தில் அவதரித்தார். அவரின் இளம் வயதிலேயே பிள்ளைலோகாச்சாரியரின் சிஷ்யராகி,
அவரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டார். பாண்டிய மன்னனுக்கு ப்ரோஹிதராகவும் , பிரதான அமைச்சராகவும் இருந்து
அரசு பணி ஆற்றிக் கொண்டிருந்தார். எதிர்பாரா விதமாக பாண்டிய மன்னன் அகால மரணமடைய,
அரசனின் மகன் மிகவும் இளம் வயதினராக இருந்த காரணத்தால், ராணியார், திருமலை ஆழ்வாரை
ராஜப் பிரதிநிதியாக நியமித்தார். இவரும் மிக்க புகழுடனும், பாராட்டுகளும் பெற்று, ராஜ்யத்தை நல்லபடியாக பரிபாலனம் செய்து வந்தார்.

இந்த சமயத்தில் தான், பிள்ளைலோகாச்சாரியார், நம்பெருமாளை, துலுக்கர்களிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு,
அவருடன் ஜ்யோதிஷ்குடி எழுந்தருளியிருந்தார். அவர், தம் சிஷ்யர்களை அழைத்து, அவர்களை திருமலையாழ்வாருக்கு,
ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாய விஷயங்களை கற்பித்து, அவரை தர்ஸன ப்ரவர்த்தகராக ஆக்க வேண்டும் என்று பணித்தார்.
சிஷ்யர்களும் ஆச்சாரியன் ஆக்ஞைப்படி, திருமலை ஆழ்வாருக்கு, ஸத்விஷயங்களைக் கற்பித்து,
அவரை ஸம்பிரதாய விஷயங்களில் ஈடுபட வைத்தனர்.

நம்பெருமாளை பாதுகாப்பு கருதி, ஜ்யோதிஷ்குடியிலிருந்து மேலும் தெற்கு நோக்கி, மலையாள தேஸத்திலுள்ள கோழிக்கோடு
நகரத்திற்கு பிள்ளைலோகாச்சாரியரின் சிஷ்யர்கள் எழுந்தருளப் பண்ணியிருந்தனர். நம்பெருமாளைப் போலவே, பாதுகாப்புக் கருதி,
திருக்குருகூரிலிருந்து நம்மாழ்வாரையும் அங்கிருந்த பக்தர்கள்,
கோழிக்கோட்டிற்கு எழுந்தருளப் பண்ணியிருந்தனர். இவ்விருவரும் தேனைகிடம்பை என்ற ஊரிலே சிறிது காலம் எழுந்தருளியிருந்து,
பின் நம் பெருமாள், திருநாராயணபுரம் எழுந்தருள, நம்மாழ்வார், முந்திரிப்பு என்னும் ஊருக்கு எழுந்தருளப்பட்டார்.
அவ்வூரில் நிலவிய திருடர்கள் பயம் காரணமாக, ஆழ்வார் ஒரு பெட்டகத்தில் எழுந்தருளப்பட்டு,
அப்பெட்டகத்தை இரும்புச் சங்கிலியால் பிணைத்து , ஒரு மலைச்சரிவின் அடியில் பாதுகாக்கப்பட்டிருந்தார்.

துலுக்கர்கள் பயம் நீங்கிய நிலையில், நம்மாழ்வாரை மீண்டும் திருக்குறுகூருக்கு எழுந்தருளப் பண்ண விரும்பிய பக்தர்கள்,
மலைச் சரிவிலிருந்து, ஆழ்வாரை எழுந்தருளப்பண்ண உதவி வேண்டி, மதுரையில் ராஜப் பிரதிநிதியாக இருந்த
திருமலை ஆழ்வாரை, தோழப்பர் என்னும் அடியவர் மூலம் நாடினர். திருமலை ஆழ்வாரும் ,
கொச்சி அரசருக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டி ஒரு கடிதம் கொடுக்க, அதனை தோழப்பர் கொச்சி அரசரிடம் சென்று சமர்ப்பித்தார்.
பின் அவர் மூலம் உதவிகள் பெறப்பட்டு, நம்மாழ்வாரை மீண்டும் இரும்பு சங்கிலி கொண்டு மலை சரிவிலிருந்து மேலே கொண்டுவர முயன்றனர்.
அப்பொழுது தோழப்பர் இரும்புக் கம்பிகளுடன் மலைச் சரிவில் இறங்கி, நம்மாழ்வாரை மேலே எழுந்தருளப் பண்ணினார்.
மீண்டும் கீழே இறக்கப் பட்ட அதே இரும்புக் கம்பியை பற்றி மேலே வர,
தோழப்பர் முயற்சிக்கையில் கம்பி அறுந்து விழ , அங்கேயே அவர் உயிர் நீத்தார்.

திருமலை ஆழ்வார் ராஜ்ய பரிபாலனங்களை தகுதியானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஸம்பிரதாய விஷயங்களில் ஈடுபடலானார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி மீது அதீத ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்ததால்,
இவர் திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார். இவர் ஆழ்வார் திருநகரியில் இருந்த பொழுது,
திகழக்கிடந்தார் திருநாவீறுடைய தாஸரண்ணருக்கும், ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் பிறந்த குமாரரான
அழகிய மணவாளனை சிஷ்யராக்கிக் கொண்டார். அழகிய மணவாளனாகிய இவர் தான் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயம்,
இன்றும் தழைத்தோங்கி இருப்பதற்குக் காரணகர்த்தரான ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஆவார்.

திருவாய் மொழிப் பிள்ளை திருமேனி நோய் வாய்ப்பட்டு, சிரம திசையில் இருந்த பொழுது,
எம்பெருமானார் தர்ஸனத்தை காத்து, மென் மேலும் வளர்க்கப் போகிறவர் யார் என்று வினவ,
உடனே அழகிய மணவாளன் தாம் அதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
உடனே ஸமஸ்கிருத சாஸ்திரங்களிலே ஸ்ரீ பாஷ்யத்தைக் கேட்டும், திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களிலே
அநவரதம் ஈடுபடுத்திக் கொண்டும், பூர்வர்களைப் போலே பெருமாளுக்கு,
மங்களா ஸாஸன கைங்கர்யபரராய் இருந்து கொண்டும், கோயிலிலே நித்ய வாசராய் எழுந்தருளியிரும் என்று
அழகிய மணவாளனை, திருவாய்மொழிப் பிள்ளை உபதேசித்து, ஆசிர்வதித்தார்.
பிறகு தம் சிஷ்யர்களை அழைத்து, அழகிய மணவாளன் ஒரு அவதார விஷேஷமானவன் என்று
ஆராதித்து வாருங்கள் என்று தெரிவித்து, தமது 120 வது வயதில் திருநாட்டிற்கு எழுந்தருளினார்.

————–

மணவாள மாமுனிகள் :-

ஐப்பசி மாதம் , மூல நக்ஷத்திரத்தில் ஆழ்வார் திருநகரியிலே,
திகழக்கிடந்தார் திருநாவீருடைய தாஸரண்ணருக்கும், ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் திருமகனாக அவதரித்தார் மணவாள மாமுனிகள்.
இவர் தம் இயற் பெயர் அழகிய மணவாளப் பெருமாள் என்பதாகும்.

சிறுவயதிலேயே சௌளம், உபநயனம் நடந்தேறியது. தம் திருத்தகப்பானாரிடத்திலே, அருளிச் செயல்களையும்,
வேத சாஸ்திரங்களையும் கற்றுக் கொண்டார். திருவாய்மொழிப் பிள்ளை தமக்குப் பின் எம்பெருமானார் தர்ஸனத்தை காத்து,
வளர்க்கப் போகிறவர் யாரென்று வினவ, அழகிய மணவாளப் பெருமாள்” அடியேன் அதற்குத் தயார் ” என்று கூறினார்.
திருவாய்மொழிப் பிள்ளையும் இவருக்கு அருளிச் செயல்களையும் மேலும் தத்துவார்த்தங்களையும் கற்பித்தார்.
திருவாய்மொழிப் பிள்ளை, இவரின் அருமை, பெருமைகளை தம் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டு இவரை
ஸ்ரீரங்கம் சென்று அங்கு அழகிய மணவாளனுக்கு கைங்கர்யம் செய்யப் பணித்தார்.
ஸ்வாமி இராமாநுஜரின் மறு அவதாரமே, அழகிய மணவாளப் பெருமாள் எனபதனையும் உணர்ந்து,
அவரின் அவதார மகிமையை போற்றிக் காத்து, அவருக்கு துணை நிற்கவும் தம் எல்லா சிஷ்யர்களையும் பணித்தார்.

அழகிய மணவாளப் பெருமாளை உடையவர் ஸன்னதி கைங்கர்யத்தில் ஈடுபடுத்தினார் திருவாய்மொழிப் பிள்ளை.
உடையவர் பெயரில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டதால் இவருக்கு” யதீந்த்ரப்ரவனர் ” என்றும் திருநாமமிட்டார்.
எம்பெருமானார், பிள்ளைலோகாச்சார்யார் இவர்களின் வைபவங்களை நினைத்துக் கொண்டும்,
அவர்கள் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு ஆற்றிய அளப்பரிய செயல்களை வியந்து கொண்டும்,
அவர்கள் எழுந்தருளியிருந்த இடங்களைக் கண்டும் பரம திருப்தி அடைந்தார்.

பிள்ளைலோகாச்சாரியாரின் திருமாளிகை வாசலில் கீழே விழுந்து வணங்கி,மண் புழுதியிலே புரண்டு “இது ரகசியம் விளைவித்த மண்”
என்று பெருமையுடன் மனம் மகிழ்வார். சிதிலம் அடைந்த ஓலைச் சுவடிகளை மீண்டும் ஏடுபடுத்தினார்.
இவருக்கு பிறந்த மகனுக்கு” ராமாநுஜப் பிள்ளை ” என்று ஆச்சாரியரின் ஆக்ஞைப்படி பெயரிட்டார்.
பின்னர் இவர் இல்லற வாழ்க்கையை விடுத்து, துறவற வாழ்க்கையான சன்யாசத்தை மேற்கொண்டார்.
பெரிய மங்களா ஸாஸனம் செய்து, பல்லவராயன் மடத்திற்கு எழுந்தருளினார். அதுவே அவருடைய ஆஸ்தான மணபம் ஆயிற்று.
அது முதற் கொண்டு அழகிய மணவாளப் பெருமாள், மணவாள மாமுனிகள் என்று அழைக்கப்படலானார்.

மாமுனிகளின் பெருமையும் அவரின் வளர்ச்சியையும் பிடிக்காத சிலர், அவர் எழுந்தருளியிருந்த மடத்திற்கு
நடு நிசியில் தீ வைத்து, மடத்தை எரித்தனர். மாமுனிகள் ” திருவநந்தாழ்வான் ” வடிவம் கொண்டு,
திருமால் அடியார்களின் பக்கம் வந்து சேர்ந்தார். தீயிட்டுக் கொளுத்தியவர்களுக்கு, அரசன் தண்டனை அளித்த போது,
மாமுனிகள் கருணை உள்ளத்துடன் மனமுவந்து அவர்களை மன்னித்து அருளினார்.

காஞ்சிபுரம், திருப்புட்குழி, திருக்கடிகை, எறும்பி, எம்பெருமான்களை ஸேவித்துக் கொண்டு
திருப்பதி, திருமலை எம்பெருமான்களை மங்களா ஸாஸனம் செய்தார்.
அங்கு அரசனின் உத்தரவு பெற்று ஒரு ஜீயரை நியமித்தார்.
அவரே எம்பெருமானார் ஜீயர் என்றும் சின்ன ஜீயர் என்றும் அழைக்கபடுபவர் ஆவார்.

திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரப் படிக்கு மேற்கோள்களின் திரட்டு, உபதேஸ ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி,
யதிராஜ விம்ஸதி, ஆர்த்தி ப்ரபந்தம், தேவராஜ மங்களம், கோபால விம்சதி உட்பட பன்னிரண்டு நூல்கள் இயற்றினார்.
மேலும் ஸ்ரீவசனபூஷணம், மும்முஷூப்படி, ஆசார்ய ஹ்ருதயம் உட்பட எட்டு ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு வ்யாக்யானங்கள் அருளினார்.
இவை தவிர மேலும் பல நூலகளையும், உரைகளையும் அருளிச்செய்தார்.

தென்னாட்டு திவ்ய தேஸங்கள் அனைத்தையும் ஸேவித்துக் கொண்ட ஸ்வாமி மணவாள மாமுனிகளுக்கு,
வட நாட்டு திவய தேஸங்களை ஸேவிக்க இயலவில்லையே என்று வருந்தினார்.
அப்பொழுது ராமாநுஜ தாஸர் என்பவர், தாம் வடநாட்டு திவ்ய தேஸங்களுக்கு சென்று, அங்கு மாமுனிகளின் திருநாமத்தை ஓதி,
எம்பெருமான்களையும் ஸேவித்து, திருத்துழாய் பிரசாதத்தை அவரிடம் ஸமர்ப்பிப்பதாகக் கூறி, அவரின் சம்மதத்தைப் பெற்றார்.
ராமாநுஜரும் அவ்வண்ணமே பத்ரி, பிருந்தாவனம், அயோத்தி, ஹரித்வார், புஷ்கரம் உட்பட பல திவ்ய தேஸங்களையும் ஸேவித்துக் கொண்டு,
கங்கை, யமுனை, சரயு நதிகளில் தீர்த்தமாடி, அபய ஹஸ்தம், திருத்துழாய் பிரசாதங்களுடன் திரும்பி வந்து மாமுனிகளிடம் ஸமர்ப்பித்தார்.
மணவாள மாமுனிகளும் அப்பிரஸாதங்களைப் பெற்றுக் கொண்டு வட நாட்டு திவ்ய தேஸங்களை ஸேவித்த உணர்வை அடைந்தார்.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை பரப்பவும், அருளிச் செயல்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கவும் ,
மிகவும் ப்ரஸித்தி பெற்ற வேத விற்பன்னர்களைக் கொண்டு , அஷ்டதிக்கஜங்களை நியமித்தார்.
அவர்கள் வானமாமலை ஜீயர், பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ராமாநுஜ ஜீயர், கோவிலண்ணன்,
பிரதிவாதி பயங்கரம் அண்ணா, எறும்பியப்பா, அப்பிள்ளை மற்றும் அப்பிள்ளார் ஆவர்.

கால வெள்ளத்தில் திருமேனியில் நோவு கண்டு, அரங்கனுக்கு நேரில் சென்று கைங்கர்யங்கள் செய்ய முடியவில்லையே என்றும்,
மேலும் பெருமாளையும் நேரில் ஸேவிக்க இயலவில்லையே என்றும் வருத்தமுற்றார்.
ஒரு நாள் அரங்கன் வீதி உலா வரும் பொழுது நேரில் கண்ணாரக் கண்டு ,சேவித்து மிகுந்த ஆனந்தமடைந்தார்.
74 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து எம்பெருமானார் தர்ஸனத்தை நிலைநிறுத்தி, கைங்கர்யங்கள் சிறப்பாக நடைபெற
ஏற்பாடுகள் செய்வித்து, ஆழ்வார், ஆச்சார்யர்களின் அருளிச் செயல்களை மக்களிடையே பரப்பினார்.

இப்படியாக ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தலைமேற் கொண்டு செவ்வனே நியமனப்படுத்திய ஸ்வாமி மணவாள மாமுனிகள்,
மாசி மாதம், க்ருஷ்ணபக்ஷ துவாதசியன்று, எம்பெருமானார், பிள்ளைலோகாச்சாரியார், திருவாய்மொழிப் பிள்ளை, இவர்களின்
திருவடிகளை நினைத்து கொண்டே திருநாட்டிற்கு எழுந்தருளினார்.

இன்றும், என்றும் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் தழைத்தோங்கி
வளரச் செய்த நம் ஸ்வாமியை ” மணவாள மாமுனியே இன்னும் ஒரு நூற்றாண்டிரும் ” என்று வேண்டிக் கொள்கிறோமே —

—————

ஸ்ரீ வாழித் திருநாமப் பாசுரங்கள் —

ஸ்ரீ பெரிய பெருமாள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரேவதி (சித்திரை மாதம்)

திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே
அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரானடிகள் வாழியே

ஸ்ரீ பெரிய பிராட்டியார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: உத்திரம் (பங்குனி மாதம்)

பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்திரநாள் பார்உதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலதமென வந்தசெல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்கள் எழில் சேனைமன்னர்க்கு இதம்உரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சுட்பொருள் மால்இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்கநாயகியார் திருவடிகள் வாழியே

ஸ்ரீ சேனை முதலியார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: பூராடம் (ஐப்பசி)
ஓங்குதுலாப் பூராடத்து உதித்தசெல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்திரவதி உறைமார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கு இதமுரைத்தான் வாழியே
எழிற்பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்து மூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

ஸ்ரீ நம்மாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: விசாகம் (வைகாசி)

ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே
ஆசிரியம் ஏழுபாட்டும் அளித்தபிரான் வாழியே
ஈனமற அந்தாதி எண்பத்துஏழு ஈந்தான் வாழியே
இலகு திருவாய்மொழி ஆயிரத்தொரு நூற்றிரண்டு உரைத்தான் வாழியே
வானணியும் மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: சித்திரை (சித்திரை)

சித்திரையில் சித்திரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
திருக்கோளூர் அவதரித்த செல்வனார் வாழியே
உத்தர கங்காதீரத் துயர் தவத்தோன் வாழியே
ஒளிகதிரோன் தெற்குஉதிக்க உகந்து வந்தோன் வாழியே
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரன்என்று பற்றினான் வாழியே
மத்திமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே

ஸ்ரீ பொய்கையாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: திருவோணம் (ஐப்பசி)

செய்யதுலாவோணத்தில் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கை முனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே

ஸ்ரீ பூதத்தாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: அவிட்டம் (ஐப்பசி)

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்ல திருக்கடல்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரி யிட்டபிரான் வாழியே
எழில் ஞானச் சுடர்விளக்கை ஏற்றினான் வாழியே
பொன்புரையும் திருவரங்கர் புகழ்உரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே

ஸ்ரீ பேயாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: சதயம் (ஐப்பசி)

திருக்கண்டேன்என நூறும் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் சனித்தவள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்க்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருக்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில்வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: மகம் (தை)

அன்புடன் அந்தாதி தொண்ணுற்றாறு உரைத்தான் வாழியே
அழகாரும் திருமழிசை அமர்ந்த பிரான் வாழியே
இன்பமிகு தையில் மகத்து இங்குஉதித்தான் வாழியே
எழிற் சந்தவிருத்தம் நூற்றிருபது ஈந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவர்கோன் வாழியே
முழுப்பொன்னிப் பெருக்கெதிர் செல்முதிர் கவியோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்து எழுநூறிருந்தான் வாழியே
நங்கள் பத்திசாரர் இருநற்பதங்கள் வாழியே

ஸ்ரீ குலசேராழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: புனர்பூசம் (மாசி)

அஞ்சனமா மலைப்பிறவி ஆதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணை அடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரம் தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதன்னில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப்பாம்பில் அங்கையிடடான் வாழியே
அநவரதம் ராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

ஸ்ரீ பெரியாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (ஆனி)

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்று பத்தொன்றும் நமக்கு உரைத்தான் வாழியே
சொல்லரிய வானிதனில் சோதி வந்தான் வாழியே
தொடை சூடிக்கொடுத்தவள் தன் தொழும்அப்பன் வாழியே
செல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியே
சென்று கிழியறுத்து மால் தெய்வம்என்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே

ஸ்ரீ ஆண்டாள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: பூரம் (ஆடி)

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவைநகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே

ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: கேட்டை (மார்கழி)

மண்டங்குடியதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்துதித்தோன் வாழியே
தெண்டிரைசூழ் அரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலை ஒன்பதஞ்சும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சி பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப்பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே

ஸ்ரீ திருப்பாணாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரோகிணி (கார்த்திகை)

உம்பர் தொழும் மெய்ஞானத்து உறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வந்தபிரான் வாழியே
மலர்க்கண்ணை வேறொன்றில் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கர் அகம்புகுந்தான் வாழியே
அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே
செம்பொனடி முடியளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: கார்த்திகை (கார்த்திகை)

கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியில் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழ் ஆயிரத்தெண்பத்து நாலுரைத்தான் வாழியே
நாலைந்தும் ஆறைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே
இலங்கெழு கூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்துஏழிந்தான் வாழியே
வலந்திகழும் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே

சித்திரையில் கார்த்திகை – ஸ்ரீ உய்யக்கொண்டாரின் திரு அவதார திருநக்ஷத்ரம்

ஸ்ரீ புண்டரீகாக்ஷர் என்னும் ஸ்ரீ உய்யக்கொண்டார் -திருக்குருகூர்

ஸ்ரீ உய்யக்கொண்டாரின் வாழித்திருநாமம்–
“வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழு‌ம் மலர்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால்அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே”

ஸ்ரீ எம்பெருமானார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: திருவாதிரை (சித்திரை மாதம்)

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறு பெற்றோன் வாழியே
புத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திடடான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறன்அடி தொழுதுஉய்ந்தோன் வாழியே
தொல் பெரியநம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்கவந்தோன் வாழியே
சீர்பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் ணிளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வர்க்குஎண்ணான்கு உரைத்தான் வாழியே
பண்டைமறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ்நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரைசூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே

ஸ்ரீ கூரத்தாழ்வான் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஹஸ்தம் (தை மாதம் )

சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேருமவன் வாழியே
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே
ஏராரும் தையில் அத்தத்து இங்கு வந்தான் வாழியே
எழில் கூரத்தாழ்வான்தன் இணையடிகள் வாழியே

ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஹஸ்தம் (பங்குனி)

எந்தாதை கூரேசர் இணையடியோன் வாழியே
எழில் மூங்கில் குடிவிளங்க இங்குவந்தோன் வாழியே
நந்தாமல் எதிராசர் நலம்புகழ்வோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
பைந்தாம அரங்கர்பதம் பற்றினான் வாழியே
பங்குனியில் அத்தநாள் பாருதித்தோன் வாழியே
அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே
அணியரங்கத் தமுதனார் அடியிணைகள் வாழியே
ஸ்ரீ வடுகநம்பி வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: அஸ்வினி (சித்திரை மாதம்)

ஏராரும் சித்திரையில் அசுவதீ வந்தான் வாழியே
எழில் சாளக்கிராம நகரத்தில் அவதரித்தான் வாழியே
சரம பர்வ நிஷ்டையில் ஊன்றினான் வாழியே
எம்பெருமானாரே தெய்வம் என்று அனுஷ்டித்தான் வாழியே
அனவரதம் ஆசார்ய கைங்கர்யமே பொழுது போக்கும் என்றான் வாழியே
ஆசார்யனை அல்லாது வேறு தெய்வம் அறியான் வாழியே
ஸ்வாசார்யர் அஷ்டோத்தர சத நாமங்களை அருளினான் வாழியே
ஸ்ரீராமானுஜர் வைபவமே நிரந்தரம் அநுஸந்தித்தான் வாழியே
ஆசார்ய பாத தீர்த்தமே பரம போக்யம் என்று எண்ணினான் வாழியே
ஸ்ரீ வடுஹ நம்பி திருவடிகள் வாழி வாழி வாழியே

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரோகிணி (ஆவணி)

தண்மை சிங்கம் ரோகிணிநாள் தழைக்க வந்தோன் வாழியே
தாரணியில் சங்கநல்லூர் தானுடையோன் வாழியே
புன்மை தவிர் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதூர் எதிராசர் தாள் புகழுமவன் வாழியே
மண்புகழ் சேர் சடகோபர் வளமுரைப்போன் வாழியே
மறைநாலின் பொருள் தன்னைப் பகுத்து உரைப்போன் வாழியே
அன்புடன் உலகாரியர்தம் அடியிணையோன் வாழியே
அபயப்ரதராசர் தாள் அனவரதம் வாழியே

ஸ்ரீ பெரியதிருமலை நம்பி வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (வைகாசி)

வைகாசிச் சோதிநாள் வந்துதித்தான் வாழியே
வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே
அய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே
அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே
மெய்யன் இராமானுசாரியன் விரும்புமவன் வாழியே
மிக்க திருமலையார்க்கெல்லாம் மேலாவான் வாழியே
செய்யதமிழ் வேதத்தின் சிறப்புஅறிந்தோன் வாழியே
திருமலை நம்பிகள் உபயதிருவடிகள் வாழியே

ஸ்ரீ வடக்குத்திருவீதிப்பிள்ளை வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (ஆனி மாதம்)

ஆனிதனில் சோதிநாள் அவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைத்தோன் வாழியே
தான்உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்ல உலகாரியனை நமக்குஅளித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

ஸ்ரீ கூர குலோத்தம தாஸர் வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம் : திருவாதிரை (ஐப்பசி)

சந்தமும் ஆழ்வார்கள் தமிழ் வளர்த்தோன் வாழியே
தாரணியில் சிறுநல்லூர் தானுடையோன் வாழியே
எந்தை உலகாரியனை இறைஞ்சுமவன் வாழியே
உலகுதுலா வாதிரையில் இங்கு உதித்தான் வாழியே
இந்த உலகத்தோர்க்கு இதமுறைத்தோன் வாழியே
எழில்வசன பூடணத்துக்கு இனிமை செய்தான் வாழியே
குந்திநகர்ச் சிந்தை கொண்ட செல்வனார் வாழியே
கூரகுலோத்தம தாசர் குரைகழல் வாழியே

ஸ்ரீ மணவாளமாமுனிகள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: திருமூலம் (ஐப்பசி)
இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்து அவதரித்தான் வாழியே
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன்என்றும் வாழியே
இப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்த வந்தோன் வாழியே
ஏராரும் எதிராசர் எனஉதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடம் முக்கோல் தரித்தான் வாழியே
மூதரிய மணவாள மாமுனிவன் வாழியே

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸமேத ஸ்ரீ பெரிய பெருமாள் பொது நின்ற பொன்னம் கழலே சரணம்
ஸ்ரீ பத்மாவதித் தாயார் ஸமேத ஸ்ரீ வேங்கடேஸ்வரர் பூவார் கழல்களே சரணம்
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் ஸமேத ஸ்ரீ பேர் அருளாளன் துயர் அறு சுடர் அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: