(ஸ்ரீ திருப்பாற் கடல் வர்ணனை )
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன்
மன்னிய நாகத்தணை மேல் ஓர் மா மலை போல்
சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்றுத்
திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலகக்
கடலோதம் கால் அலைப்பக்
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போல்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக் கொண்டு
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி
இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்தக்
கொத்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம் கொண்டு அமரர் தொழப்
பக்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் சித்தர்களும் தொழுது இறைஞ்ச
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து
(திரு அவதார காரணம் )
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்யப்
பாரேறு பெரும் பாரம் தீரத்
துவரிக் கனி வாய் நில மங்கை துயர் தீர
மண்ணின் பாரம் நீக்குவதற்கே வேண்டித் தேவர் இரக்கச்
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்றும் வார்த்தை எய்துவிக்கத் தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்த தாயைக் குடல் விளக்கம் செய்யக்
(திரு அவதாரம் )
கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்து
மல்லை மூதூர் வட மதுரையில்
மந்தக் களிற்று வீசு தேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிக் கஞ்சன் வலை வைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து
எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவன் எனக்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரனாய்த் தெய்வ நான்கை யசோதைக்குப்
போத்தந்த பேதைக் குழவியாய்ப்
பலதேவர்க்கு ஓர் கீழ்க் கன்றாய்
(ஆயர்கள் நாயகனாய் )
ஆயர் பாடிக்கு ஓர் அணி விளக்காய்க்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தாய்க்
காண்டல் இன்றிக் கொண்டு வளர்க்கக்
குழவியாய்த் தான் வளர்ந்து
(திரு ஆயர்பாடியில் மங்களம் )
எண்னம் சுண்ணம் எதிர் எதிர் தூவிடப்
பாடுவார்களும் பல் பறை கொட்ட
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாட அயலிடத்துப் பேர்ந்து
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
பேணிச் சீருடைப் பிள்ளை ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
(பூதனை வதம்)
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
பெண்மை மிகு வடிவு கொண்டு
வன் பேய்ச்சி தன் மகனாகத் தான் முலை யுண்ணக் கொடுக்க
முலை யுண்பான் போலே முனிந்து உண்டு
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கி
சூர் உருவின் பேய் அளவு கண்டு
(சகட பங்கம் )
மாணிக்கம் சுட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்
உறங்குவான் போல் கிடந்து
நாள்கள் ஓர் நால் ஐந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து உருளும் சகடம் உதைத்து
(திரு நாம கரணம் )
ஆய்ப்பாடி ஆயர் பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திறமும் சய மரம் கோடித்துக்
கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னை
வேதம் வல்லார்களைக் கொண்டு
கார் முகிலே என் கண்ணா
செங்கண் நெடுமால் சிரீ தரா என்று அழைத்து
நாவினால் நவிற்று இன்பம் எய்த
(பால லீலைகள் )
மாயக் கூத்தன்
தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன் முகக் கிண் கிணி ஆர்ப்பப் புழுதி அளைந்து
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள
வெள்ளி முளைப் போல் சிறு பல் இலகக்
கண கண சிரித்து வந்து முன் வந்து
நின்று முத்தம் தந்து
ஆயர்கள் போர் ஏறாய்ச் செங்கீரை யாடி
எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழ கண்டு செய்து
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிப்
பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப
மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்து
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றா திளம் சொல்லால்
வனிலா அம்புலீ சந்திரா வா என்று அம்புலி விளித்து
(பிள்ளை வாயுள் ஏழு உலகம் )
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்கு ஆந்திட வாயுள் வையம் ஏழும் காண
ஆடி யாடி யசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி
(உரலில் கட்டுப்படுதல் )
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைக்க
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயைத்
தாயர் மனங்கள் தடிப்ப உள்ளம் குளிர அமுது செய்து
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு
ஒளியா வெண்ணெய் உண்டான் என்றும் உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுது
பொத்த விரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கி
சீரல் அசோதை அன்புற்று நோக்கி
அடித்தும் பிடித்தும் அனைவருக்கும் காட்ட
ஊரார்கள் எல்லாம் காணக்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டு
பெரு மா யுரலில் பணிப்புண்டு இருந்து
விண்ணெல்லாம் கேட்க அழுது
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கி
(மருத மரங்களை முறித்தது )
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும்
ஒருங்கு ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினொடும் உந்தி
எண் திசையோரும் வணங்க
இணை மருதூடு நடந்து
(மாடு கன்றுகளை மேய்த்தல் )
அழகிய பைம்பொன்னின் கோல் அம்கையில் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
பழ கன்றினங்கள் மறித்துத் திரிந்து
புகழ்ப் பலதேவன் என்னும் நம்பியோடப் பின் கூடச் சென்று
தன்னே ராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை விட்டு அதன் ஓசை கேட்டு
அசல் அகத்தார் பரிபவம் பேச
இல்லம் புகுந்து அவர் மகளைக் கூவிக்
கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொள்ளையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்டு
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாடி
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல்
வனமாலை மினுங்க நின்று விளையாடி
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதிக்
கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழையக்
குழல்களும் கீதமுமாகி
முற்றத்தூடு புகுந்து தன் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகளுடன்
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடிதயிறும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியாமே
ஆயிரம் தாழி வெண்ணெய் பாகந்தான் வையாதுண்டு
(வத்ஸாஸூர பகாஸூர வதம் )
கானக வல் விளவின் காய் உதிரக் கருதி கொன்றது கொண்டு எறிந்து
பள்ளத்தில் மேயும் பறவை உருக்கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய்க்கீண்டிட்டு
(தேனுகாஸூர வதம் )
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்த்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மெல் நிமிர்ந்த தோன் இல்லையாக்கி
(காளிய மர்த்தனம் )
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப் பூத்த நீள் கடம்பேறித்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப்
படும் படு பைந்தலை மேல் ஏழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்து
வெயின் குழலூதி வித்தகனாய் நின்று
நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
(பிலம்ப வதம் )
பாண்டி வடத்தில் பிளம்பர் தன்னைப்
பண்ணழியப் பலதேவன் வெல்ல
(காட்டுத்தீயை விழுங்கல் )
நின்ற செந்தீ மொண்டு குறை நீள் விசும்பூடு எரியக்
காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்று தான் விழுங்கி உய்யக் கண்டு
(வேணு கானம் செய்தல் )
வல்லி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோளரோடு
கானம் பாடி உலாவி உலாவிச்
சிறு விரல்கள் தடவிப் பரிமாறிச்
செங்கண் கோடச் செவ்வாய் கொப்பளிப்பக்
குறு வியர்ப்புருவம் கூடலிப்பக்
கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப
மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறுப்பப்
பறைவவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்க
மருண்ட மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா
எழுது சித்ரங்கள் போல் நிற்க
மரங்கள் நின்று மது தாரைகள் பாய
மலர்கள் வீழ வளர் கொம்புகள் தாழக்
கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முடிஞ்சு களினூடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பக் கோவலனாய்க் குழலூதி யூதி
(கோபியர் வஸ்திர அபஹரணம் )
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்த
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
ஆயர் மட மக்களைப் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துயில் வாரிக் கொண்டிட்டு
அச்சேரி இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்து
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாடி
(வேள்வி மங்கையர் வேண்டடிசில் அளித்தது )
பக்த விலோசனத்தில்
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வந்து அடிசில் உண்டு
(கோவர்த்தன கிரி பிடித்தது )
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
இமயப் பெரு மலை போல்
அமைத்த சோறு அது எல்லாம்
போயிருந்து அங்கோர் பூத வடிவு கொண்டு
முற்ற வாரி வளைத்து உண்ண
மேலை அமரர் பதி மிக்க வெகுண்டு வரக்
காள நன் மேகவை கல்லொடு கால் பொழிய
வண்ண மால் வரையே குடையாகச்
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்து
கல் எடுத்துக் கல் மாரி காத்து
(கண்ணன் கோபியரோடு விளையாடுதல் )
மங்கல நல் வனமாலை மார்பில் இலங்க
மயில் தழைப் பீலி சூடிப்
பொங்கிள ஆடை அரையில் சாத்திப்
பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழலூதிக்
கொல்லாமை செய்து குரவை பிணைந்து சுழலக்
குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டாடி
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்து
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து
முற்றா இளையார் விளையாட்டொடு
காதல் வெள்ளம் விளைவித்து
(கேசி வதம் )
மா வாயின் அங்கம் மதியாது கீறி
(மதுராபுரிக்கு விஜயம் )
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி
கூனி கூன் நிமிர்ந்தது
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறி யவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனை உள்ளொடுக்க அன்று ஏற உருவி
(குவலயா பீட வதம் )
விற் பிடித்து இறுத்து
வளவெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
வெண் மருப்பு ஓன்று பறித்து
(மல்லர் வதம் )
இரு மலை போல் எதிர்த்த இரு மல்லர்
வலிய முடி இடிய வாங்கி
(கம்ஸ வதம் )
செம் பொன் இலங்கு வலங்கை வாளி
திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழி யொடு
கேடயம் ஒண் மலர் பற்றித்
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்
கறுத்திட்டு எதிர் நின்ற
கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்று
அரையனை எழப் பாய்ந்து உதைத்துக்
குஞ்சி பிடித்து அடித்து உண்டு
அவன் மாளக் கண்டு
(ஸ்ரீ சாந்தீபனியின் புத்ரனை மீண்டது )
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையாய் உருவுருவே கொடுத்து
(ஸ்ரீ ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் )
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்து
ருக்மிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதையத் தலையைச் சிரைத்து
அன்று அங்கு அமர் வென்று நங்கை அணி நெடும் தோள் புணர்ந்து
ரடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்து அருளித்
திருவுக்கும் திருவாகிய செல்வனாய் பெண் அமுது உண்டு
(ஸ்ரீ நப்பின்னை திருக் கல்யாணம் )
துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒரு கால்
தூய கருங்குழல் நல் தோகை மயில் அனைய
நப்பின்னை தன் திறமாக நல் விடை ஏழு அவிய
வீயப் பொருது வியர்த்து நின்று
(நரகாஸூர வதம் )
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்து
(துவாரகை அமைத்தல் )
பதினாறாம் ஆயிரவர பணி செய்யத்
துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்து
(பாரிஜாத அபஹரணம் )
என்னதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வல் நாதப் புள்ளால் வலியப் பறித்துக்
கற்பக காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்து
(வாணாஸூர வதம் )
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகன் இருந்த
காவலைக் கட்டழித்துப் பிரிவின்றி
வாணனைக் காத்து என்று
அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் பெற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிப்
பொரு கடலை அரண் கடந்து புக்கு
மாயப் பொரு படை வாணனை
ஆயிரம் தோளும் பொழி குருதியாய ஆழி சுழற்றி
(பவ்ண்ட்ரக வாஸூ தேவன் பங்கம் )
புகரார் உருவாகி முனிந்தவனைப்
புகழ் வீட முனிந்து உயிருண்டு
அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்து
காய் சின காசி மன்னன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்து
(சிஸூபால வதம் )
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைய பெரும் துன்பம் வேர் அற நீக்கித்
தன் தாளிணைக் கீழ் சேர்த்துப்
தந்தவக்கரனை முடித்தல்
(பொங்கரவ வக்கரணைக் கொன்று )
(திரௌபதி சரணாகதி )
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்
அணியிழையைச் சென்று
எம் தமக்கு உரிமை செய் -எனத் தரியாது
எம்பெருமான் அருள் என்னப்
(கண்ணன் விஸ்வரூபம் காட்டியது )
பங்கயக் கண்ணன் ஒன்றே உரைப்பான்
ஒரு சொல்லே சொல்லுவான்
துன்னு முடியன் துரியோதனன் பக்கல் சென்று
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டு
அரவு நீள் கொடியோன் அவையுள்
ஆசனத்தை அஞ்சிடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுறவப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்து
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாப் பெரும் போரில்
(தேரோட்டியாய்த் திகழ்ந்தது )
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்று
தீர்த்தான் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி
அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிய
(கீதோபதேசம் )
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்து
நீர்மையில் நூற்றுவர் வீய
ஐவருக்கு அருள் செய்து நின்ற
(ஜயத்திரதனை முடித்தது )
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச்
சயத்திரதன் தலையைப் பாழில் உருளப் படை பொருது
(பரீக்ஷித்தை உயிர் மீட்டது )
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்து
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்து
சந்தம் அல் குழலாளை அலக் கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி
( வைதிகன் மக்களை மீட்டது )
வேத வாய் மொழி அந்தணன் ஒருவன்
எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடிய தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழுதில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்திபனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகம் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்து
(ஆதி யஞ்சோதி யுருச் சேர்தல்)
துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிதப் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து
தன் தெய்வ நிலை யுலகில் புகை உய்த்துக்
கதையின் திரு மொழியாய் நின்று
நல் குரவும் செல்வமும் நரகமும் ஸ்வர்க்கமுமாய்ப்
பல்வகையும் பரந்து வைகுந்தம் புகுதலும்
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மலையால் பரவி ஓவாது எப்போதும்
மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்து
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி
ரதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமொடு இசை திசை கெழுமிக்
கீதங்கள் பாடி மயங்கித் திருவடி தொழ
பாடு நல் வேதவொலி பரவைத் திரை போல் முழங்க
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
உவந்த உள்ளத்தனாய்
அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்
நீதியான பண்டமாம் பரம சோதியாய்
ஆடரவு அமளியில் அறி துயில் அமர
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய்க்
கிடந்தும் எழுந்தும் இருந்தும் கீதங்கள் பல பல பாடி
நடந்தும் பரந்தும் ஒளித்தும் நாடகம் செய்கின்றனவே
தோட்டலர் பைந்தார் சுடர் முடியானை
தொழுது நல் மொழியால் தொகுத்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவொடு மிகுமே
பொலிக பொலிக பொலிக
—————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply