ஸ்ரீ திருவரங்க சிலேடை மாலை –ஸ்ரீ அபி நவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் —

நூறு வெண்பா பாடல்கள் –
முதல் இரண்டு வரிகளால் திருவரங்க சிறப்பையும்
பின் இரண்டு வரிகளால் திரு அரங்க நாதனின் சிறப்பையும் சொல்லும்

ஐந்து பாடல்களுக்கு ஒரு முறை 20 பாடல்களில் மூன்று சிலேடைகளும்
பத்து பாடல்களுக்கு ஒரு முறை பத்துப் பாடல்களில் நான்கு சிலேடைகளும்
நூறாவது வெண்பாவில் மா மணி மகுடம் போல் ஐந்து சிலேடைகளும் கொண்ட திவ்ய பிரபந்தம்

ஸ்ரீ ஸ்வாதி திருநாள் அரச கவிஞரான ஸ்ரீ தென் திருப்பேரை வாசி யான ஸ்ரீ குழைக்காத ஐயங்காரின்
திருப்புதல்வரான கவி ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ ஐயங்காருக்கும்
அவரது அருமைத் தேவியாரான ஸ்ரீ குழைக்காத நாய்ச்சியாருக்கும் -1869-திரு அவதரித்த ஸ்வாமி இவர் –
ஸ்ரீ அனந்த கிருஷ்ண ஐயங்கார் -இயல் பெயர் -இவருக்கு
ஸ்ரீ வானமா மலை -25 பட்ட ஜீயர் இவருக்கு அபிநவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்ற
பட்டப்பெயர் சூட்டி அபிமானித்து அருளினார்

ஸ்ரீ பத்ம நாப ஸ்வாமி சந்திரகலா மாலை
ஸ்ரீ திருப்பேரைக் கலம்பகம்
ஸ்ரீ தனிப்பா மஞ்சரி போன்ற பல நூல்களையும் இயற்றி உள்ளார்

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் குலத்தரான இவரை கருவிலே திருவுடையவர் என்றும்
ஸ்ரீ மதுரகவி என்றே புகழ வேண்டும் என்பர்

———-

அணி அரங்க மாலை அடி பணிந்து அம் நல் தாளுக்கு
அணி அரங்க மாலை அணிந்தான் -தணிவில்
அனந்த வளத்து தென் பேரையான் றலவ காரன்
அநந்த க்ருஷ்ண பேர்க் கவிஞன் ஆய்ந்து –ஸ்ரீ உ வே சுவாமிநாத ஐயர் –1900-

ஆலை யுறு வான் தாட்க்கு அரங்கச் சிலேடை வெண்பா
மாலை யன்பாய்ச் சூட்டி இசை மன்னினான் -ஆலையுடன்
தென்ன நந்த மாவருக்கை சேரும் திருப்பேரை
மன்னன் அநந்த கிருஷ்ண கவி மான் –இராம நாத புரம் ஸமஸ்தான வித்வான் ப்ரஹ்ம ஸ்ரீ பிச்சு ஐயர் அவர்கள் -1904-

————-

திருவரங்க மாலுக்குச் சிலேடைத் தார் சாத்திப்
பெரு வரங்கள் நாளும் பெறவே –வரு கவிகள்
கொம்பேறித் தாவும் குருகூர் மகிழ் மாறன்
அம்போ ருகத்தாள் அரண் –1-காப்பு வெண்பா

சிலேடைத் தார்-சிலேடை மாலை
கவிகள் -குரங்குகள்
குருகூர் -ஆழ்வார் திரு நகரி
மகிழ் -மகிழம்பூ மாலையை யுடைய
மாறன் -நம்மாழ்வார்
அம்போருகம்–தாமரை
அரண் -காப்பு –

அம்போ ருகத்தாள் –தாமரையில் வீற்று இருப்பவள் –திருமகள் -கலைமகள் இருவருக்கும் பொருந்தும்
அரண் -நம்மாழ்வார் -திரு மக்கள் காலை மக்கள் மூவருமே காப்பாவார்கள்
குருகூர் மகிழ் மாறன் -மால் -தன் -அம்போ ருகத்தாள் -ஆழ்வார் திருநகரியை உகந்து கொண்டு அருளிய
ஸ்ரீ ஆதி நாதராது பாதார விந்தம் என்றுமாம் –

——————

மன்னும் இதயத்தில் வைத்தேன் சிலேடை யதாய்
உன்னு பதங்கள் உதிக்கவே –மின்னும்
மதிள் மருவு தண் அரங்க மாலின் அருள் வாய்ந்த
பதின்மர் அரும் பூம் பதம் –2-பதின்மர் வெண்பா

பதங்கள் -சொற்கள்
பதம் -திருவடி
பதின்மர் பதங்களையும் இதயத்தில் வைத்தலால் –
உன்னிய பதங்கள் எல்லாம் -பல பொருள் தரும் சிலேடையாய் உதிக்கும் என்கிற நயம் காண்க
பதின்மர் -ஆழ்வார் மதுரகவியார் நீங்கலாக உள்ள ஆழ்வார்கள்

———-

நாடியே நான் பணிந்தேன் நன்கு அருள்வாய் மல்லி வள
நாடியே கோதாய் நறுங்குழல் நீ -சூடிய நன்
மாலை அணி அரங்க மா மணவாளற்கு உவந்து
மாலை சொல நின் தாள் மலர் –3-ஆண்டாள்

மல்லி வள நாடி–மல்லி வள நாட்டுக்கு உரியவள் -வில்லி எனும் வேடனது தாயான மல்லி என்பவள்
ஆண்ட நாடு மல்லி நாடு எனப் பெயர் பெற்றது
ஆண்டாள் நீ சூடிய மாலையை ஏற்றவன் ஆதலின் நின் தாள் மலர் பணியும் நான் உவந்து சூடும்
இப் பா மாலையை ஏற்றுக் கொள்வான் என்று ஆசிரியர் கூறும் பொருள் நயம் காண்க –

————-

இக் கோன் பிதாவாம் எழில் அரங்கர் அண்டர் இறைஞ்ச சு
இக் கோன் அடி புனையும் இம் மாலை -தக்கோர்
மதுர கவி என்றே மதிப்பான் அமைத்தேன்
மதுர கவியாரை மனத்து –4-மதுர கவி யாழ்வார்

இக் கோன் பிதா-இக்கு -கரும்பு -வில்லை யுடைய மன்மதனுக்குப் பிதா -சாஷாத் மன்மத மன்மதன்
இக்கோன் -இந்தப்பெருமான்
அண்டர்-தேவர் என்றும் இடையர் என்றும்
அண்டர் இறைஞ்சு இக் கோன் –ஆயர் வணங்கும் இவ்வாயர் தலைவன்
மதுர கவி என்றே மதிதித்து தக்கோர் எல்லாம் பாராட்ட மதுர கவி ஆழ்வாரை மனத்து அமைத்தேன்-என்கிறார்

———

சீர் அங்கம் ஒன்றும் தெரியா மட நெஞ்சே
சீர் அரங்கற்கு இம் மாலை செப்ப எணில் -தூர
மதித் தலைவன் தாழை வளர்ந்து ஓங்கும் பூதூர்
எதித் தலைவன் தாளை இறைஞ்சு –5–உடையவர்

சீர் அங்கம் -சிறப்பு வாய்ந்த ஆறு அங்கங்கள் –சீர் முதலிய யாப்பின் உறுப்புக்கள் என்றுமாம் –
தூரமதித் தலைவன் தாழை வளர்ந்து ஓங்கும் பூதூர் -வெகு தூரத்தில் உள்ள சந்திரனிடம் பொருந்துமாறு
தாழை வளர்ந்து ஓங்கும் ஸ்ரீ பெரும்பூதூர்
எதித் தலைவன் தாளை இறைஞ்சு –எதிராஜர் உடையவர் இணை அடிகளையே ஸ்துதித்துப் போ

————-

அல்லும் பகலும் அனுதினமும் என்னெஞ்சே
சொல்லரிய பேர் இன்பம் தோய்வதற்கா -நல்ல
குணவாள மாந்தர் குழாம் ஏத்தும் எந்தை
மணவாள மா முனியை வாழ்த்து –6- மா முனிகள்

————-

சென்னிக்கு அணி மலராம் சிந்தை அளிக்கு அம்புயமாம்
மன்னு பவக் கடற்கோர் வங்கமதாம் –தன்னின்
பதியோடு அலர் மங்கை பற்று வர மங்கைப்
பதி வாழ் எதியின் பதம் –7- ஆச்சார்ய ஸ்துதி

அம்புயமாம் –தாமரை மலராம்
வங்கமதாம் –மரக்கலமாம்
அலர் மங்கை தன் இன் பதியோடு பற்று வர மங்கைப் பதி -மிதுனமாய் உகந்து வீற்று இருந்து அருளும்
ஸ்ரீ வரமங்கை பதி -ஸ்ரீ நான்கு நேரி –
வாழ் எதியின் பதம் –எதி ஸ்ரீ வானமா மலை ஆதீன கர்த்தரும் இந்நூல் ஆசிரியரின் ஞான ஆச்சார்யரான
ஸ்ரீ ராமானுஜ ஸ்வாமிகள் -அஷ்ட திக் கஜங்களில் முதல்வர்

எதியின் பதம் சிரத்தில் சூடும் மலராகவும்
மனமாகிய வண்டுக்கு ஏற்ற தாமரையாகவும்
பாவமாகிய கடலைக் கடத்தற்கு ஏற்ற மரக்கலமாகவும் -விளங்கு கின்றது -என்கை –

———-

நூல் அருமை சற்றும் நுகராத புன் மதியேன்
கோலச் சிலேடை வெண்பாக் கூறுவது –பாலகர் தாம்
பாண்டி வரைந்து பரவையை வட்டாடும் கால்
தாண்டுவது போலாம் தலத்து –8- அவை அடக்கம் –

பாண்டி வரைந்து வட்டாடுதல் -பாண்டி ஒரு வித விளையாட்டு –
அவ்விளையாட்டுக்கு உரிய அரங்கினை வகுத்து -அதில் கண்ட வாய் -சமுத்திரம் -காடு எனப்பெயர் இட்டு வட்டு ஆடுதல்
அரங்கு இன்றி வட்டாடி அற்றே -திருக்குறள்
அல்ப மதியையுடைய நான் அழகிய சிலேடை வெண்பாக்களைக் கூறி விடுவேன் என்பது
பாலகர் பாண்டி வரைந்து விளையாடுகையில் சமுத்திரம் தாண்டினேன் என்று கூறுதலை ஒக்கும் -என்று அடக்கத்தை அறிவிக்கிறார் –

————-

திங்கள் நுதல் ஆயிழையார் தேங்கூந்தல் கொங்கை நடை
அங்கனமே நேரும் அரங்கமே –துங்க வகிச்
சக்கரத்தான் அனத்தான் தனி வாரி சக்கரத்தான்
சக்கரத்தான் அனத்தான் தலம் –1-மூன்று சிலேடைகள்

திங்கள் நுதல் ஆயிழையார் -சந்திரனை ஒத்த நெற்றியை யுடைய பெண்கள் உடைய
தேங்கூந்தல் அங்கனமே நேரும் -அம் கனமே நேரும் – -அழகிய கூந்தலானது ஜலத்தை யுடைய மேகத்தை ஒக்கும்
கொங்கை அங்கனமே நேரும்–அழகிய பாரத்தைப் பொருந்தும்
நடை அங்கனமே நேரும்–அங்கு அனமே நேரும் -அனம்-அன்னம் – -நடையோ அன்னத்தை நிகர்க்கும்
துங்கம் -உயர்வு
வகிச் சக்கரத்தான் அனத்தான்-அகி சேஷம் -சக்கரம் -மலை –சேஷாசலத்தை இருப்பிடமாகக் கொண்டு அருளுகிறவன்
தனி வாரிசக் கரத்தான் –ஒப்பற்ற -வாரிசாம் -தாமரை போன்ற திருக்கரங்கள் யுடையவன்
சக்கரத்தான் நத்தான் –சக்ராயுதமும் சங்கும் ஏந்தியவன் –
தலம் –இடம்

—————-

செம் பொன் மதிள் புறத்தும் தேர் வீரர் தூணியிலும்
அம்பு அகழி சேரும் அரங்கமே -பைம் பொழில் வாய்
செல் நகரான் குன்றான் திருக் குருகையான் குடந்தைப்
பொன்னகரான் குன்றான் புரம் –2-

செம் பொன் மதிள் புறத்தும் அம்பு அகழி சேரும்-நீர் நிறைந்த அகழி
தேர் வீரர் தூணியிலும் அம் பகழி சேரும்-அழகிய பாணங்கள் சேரும்
அரங்கமே –
பைம் பொழில் வாய் செல் நகரான் குன்றான் -சோலையின் இடத்து மேகம் சஞ்சரிக்கும் ரிஷப கிரியை யுடையவன்
திருக் குருகையான்
குடந்தை பொன்னகரான் குன்றான் -திருக்குடந்தைப் பதி குறையாதவன்
புரம் –பட்டணம்

——————

கொங்கு ஏய் தடத்துக் குமுத மலர் ஒண் புரிசை
அம் கேழ் மருவும் அரங்கமே -மங்கா
இருக்கு அந்தரத்தார் எழில் கந்த ரத்தார்
உருக் கந்தரத்தார் உவப்பு –3–

கொங்கு ஏய் தடத்துக் -வாசனை பொருந்திய தடாகம்
குமுத மலர்
ஒண் புரிசை -அழகிய மதிள்
அம் கேழ் மருவும் -அழகிய நிறத்தைப் பொருந்தும்
அரங்கமே –
இருக்கு அந்தரத்தார் -இருக்கு -வேதம்
எழில் கந்த ரத்தார் –காந்தாரம் -கழுத்து
உருக் கந்தரத்தார் -திரு மேனி மேகத்தை ஒத்தவர் -கந்தரம் -மேகம்

————–

செம்மைத் தெருவினிலும் சேயிழையார் கைகளிலும்
அம்மனைகள் காணும் அரங்கமே -இம்மகியில்
வில்லாண்டு வந்தார் விமலன் புதுவையர் கோன்
பல்லாண்டு உவந்தார் பதி–4–

தெருவினிலும் அம்மனைகள் காணும்–தெருவினில் அழகிய வீடுகள் காணப் பெறும்
சேயிழையார் கைகளிலும் அம்மனைகள் காணும்–கைகளில் அம்மனைக் காய்கள் காணப் பெறும்

————

சித்திர நற் கோபுரங்கள் செல் வரிலம் மாதரிடை
அத்தம் திகழும் அரங்கமே -பத்தர் உளம்
தங்க விமானத்தார் தனிச் சீர்ப் ப்ரணவமாம்
தங்க விமானத்தார் தலம்–5- மூன்று சிலேடைகள்

கோபுரங்கள் அத்தம் திகழும்-ஹஸ்த நக்ஷத்ரத்தை அளாவி நிற்கும்
செல்வர் இல்லம் அத்தம் திகழும்-பொருள் செல்வத்தால் பிரகாசிக்கும்
மாதரிடை அ தந்து இகழும் –மென்மையினால்-நுட்பத்தால் – பஞ்சு நூலையும் பழிக்கும்
பத்தர் உளம் தங்கு அவிமானத்தார்-அபிமானத்தை யுடையவர்
ப்ரணவமாம் தங்க விமானத்தார் –தங்க மயமான ப்ரணவகார விமானத்தை யுடையவர்

————

மங்காத பொன்னறையில் மா மணி மின் மாட மதில்
அங்கே தனம் சேர் அரங்கமே –இங்கு ஏழு
திண்ண விடை முன் பொறுத்தார் சிற்றனையால் வற் கலையை
வண்ண விடை முன் பொறுத்தார் வாழ்வு –6-

மங்காத-குறையாத
பொன்னறை–பொக்கிஷம்
பொன்னறையில் அம் கேதனம் சேர் மின் மாட மதில் –மின்னுகிற மாடங்களிலும் மதில்களிலும் கொடி சேர்ந்து -கேதனம் -கொடி
ஏழு திண் அம் விடை முன் பொறுத்தார் -நப்பின்னைப் பிராட்டிக்காக ஆன் ஏறு ஏழு வென்றான்
முன்பு ஓறுத்தார் –வலிமை அழித்தார்
வற் கலை-மரவுரி
சிற்றனை-கைகேயி
வண்ணம் இடை முன் பொறுத்தார் -அழகிய இடுப்பிலே தரித்து அருளினார்

————-

கஞ்ச மலர் சேர் கழனியிலும் வேள் இடத்தும்
அஞ்சம் படுக்கும் அரங்கமே –வஞ்சகர்கள்
வந்திக்கத் தாமதியார் மா நிலத்தில் அன்பரிடம்
சந்திக்கத் தாம் மதியார் சார்பு –7–

கஞ்சம் -தாமரை
கழனி-வயல்
வேள் -மன்மதன்
கழனியிலும் அஞ்சம்-அன்னம் -படுக்கும்
வேள் இடத்தும் அஞ்சு அம்பு அடுக்கும் -பஞ்ச பாணங்கள்
வந்திக்க–வணங்க -தாம் மதியார்
தாமதியார் -தாமஸிக்க மாட்டார் -விரைந்து எழுந்து அருள்வார்

————

அங்க மறை யோது முதிர் அந்தணரும் ஆடவரும்
அங்கயனை மானும் அரங்கமே –பொங்கும்
அரங்கிலே சங்கெடுத்தான் ஐவருக்க நேகந்
தரங்கிலே சங்கெடுத்தான் சார்பு –8–

அங்க மறை யோது-ஆறு அங்கங்களையும் வேதங்களையும் யோதும்
முதிர் அந்தணரும் -அறிவால் முதிர்ந்த வேதியர்
அந்தணரும் அங்கயனை மானும் -பிரம தேவனை ஒக்கும்
ஆடவரும் அங்கயனை மானும் -ஆடவரும் அங்கசனை -மன்மதனை ஒக்கும்
அரங்கமே –யுத்த அரங்கம் -போர்க் களம்
சங்கெடுத்தான்-பாஞ்ச ஜன்யத்தை முழங்கியவன்
ஐவர் -பாண்டவர் ஐவர்
அநேகம் தரம் கிலேசம் கெடுத்தான்-பல தடவைகள் துயரங்கள் தீர்த்து அருளிய பஞ்ச பாண்டவ ஸஹாயன்

——————

ஊனமிலா முல்லையரும் ஒண் செல் வருமன்பால்
ஆனை வளர்க்கும் அரங்கமே –தானவரை
கொன்றவிரும் செங்கதையான் கோ மகனா வந்து வனம்
சென்ற இரும் செங்கதையான் சோர்வு –9-

ஊனமிலா -குற்றம் இல்லாத
முல்லையரும் –முல்லை நிலத்திற்கு உரிய ஆயர்
மன்பால் ஆனை வளர்க்கும் –மிகுதியான பாலைத் தரும் பசுவை வளர்க்கும்
ஒண் செல்வரும் அன்பால் ஆனை வளர்க்கும் – அழகிய செல்வந்தர்களும் யானையை வளர்க்கும்
அரங்கமே —
தானவரை –அஸுரரை
கொன்று அவிரும் செங்கதையான் –ஸம்ஹரித்து விளங்கா நிற்கும் இரத்தம் தோய்ந்த சிவந்த கதை ஆயுதத்தை யுடையவன்
கோ மகனா வந்து -சக்கரவர்த்தி திருமகனாய் திரு அவதரித்து அருளி
வனம் சென்ற இரும் செங்கதையான் –தண்டகாரண்யம் சென்ற பெரிய அழகிய வரலாறு -ஸ்ரீ ராமாயணம்-

——————

மங்கையர் தம் மார்பு கரம் வாழ் உயிர் மேலோர் ஆயுள்
அங்கம் சுகம் கொள் அரங்கமே –இங்கு இணையில்
மா சுபத்திரைக்கு அணனார் வண் தாமரைக் கணனார்
மாசு பத்திரைக் கணனார் வாழ்வு –10- நான்கு சிலேடைகள்

மார்பு அம் கஞ்சுகம்-கச்சு கொள்ளும்
கரம் அங்கு அஞ்சுகம் -கிளியைக் -கொள்ளும்
வாழ் உயிர் –ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய வாசம் செய்யும் நாள் பேறு பெற்ற பிராணிகள் -அங்கம் சுகம் கொள்ளும் -தேக ஆரோக்யத்தைப் பொருந்தும்
மேலோர் ஆயுள் -ஞானிகளின் பிராயம் -அங்கம் சுகம் கொள் -அங்கு அஞ்சு யுகம் கொள்ளும்
இணை -உவமை
மா -அழகு -சுபத்திரைக்கு அண்ணனார்
வண் தாமரைக் கண்ணனார்
மா சுபம் திரைக் கண்ணனார் -பெரிய மங்களகரமான ஷீராப்தியை யுடைய கண்ண பிரான்
கண்ணனார் -கடல் இடமாகக் கொண்டவர்

———-

பொன்னார் புரிசைகளும் பூம் பொழிலும் நீரகழும்
அன்னாக மேவும் அரங்கமே -ஒன்னாருக்கு
அஞ்சாம கானத்தான் அன்று அடைந்த கானத்தான்
அஞ்சாம கானத்தான் ஆர்வு –11–மூன்று சிலேடைகள்

புரிசைகளும் அன்னரக மேவும்-அம் நரக மேவும் -மதிள்கள் வானத்தை அளாவும்–புரிசைகள் மலையை ஒக்கும் எனவுமாம்
பொழிலும் அன்னாக-அந் நாகம் – மேவும்-சோலைகளும் அழகிய புன்னை மரங்களைப் பெற்று இருக்கும்
நீர் அகழும் அன்னரக-அ நாக – மேவும்-மதில்களைச் சூழ்ந்த கிடங்கும் -பாம்பு -சர்ப்ப லோகமாகிய பாதாளம் ஆகும்
ஒன்னார் -பகைவர்
அஞ்சாம கானத்தான்-அஞ்சா மகான் நத்தான் -மகான் -பெரியோன் -நத்தான் -சங்கை ஏந்தினவன் -நந்து -சங்கு -வலித்தல் விகாரம் பெற்றது
அன்று அடைந்த கானத்தான்-காட்டை யுடையவன்
அஞ்சாம கானத்தான்-அழகிய சாம வேத கீதத்தை யுடையவன்

————

பண்டை வயலில் பயிரிடு முன்னும் பின்னும்
அண்ட சங்கள் வைகும் அரங்கமே –கண்ட கர்க்குத்
தாங்கைச் சரச மன்னார் தண் புதுவை மான் கமலத்
தேங்கைச் சரச மன்னார் சேர்வு–12–

பயிரிடு முன்னும் அண்டு அசங்கள் வைகும் -நெருங்கிய ஆடுகள் தங்கும்-
வயலில் உரத்துக்காக ஆட்டுக் கிடைகள் வைத்தல் வழக்கம்
பயிரிடு பின்னும் அண்டசங்கள்-பறவைகள் – வைகும்
கண்டகர்க்குத்-அசுரர்களுக்கு – தாம் கைச்ச -கைத்த -ரசம் அன்னார்
புதுவை மான்-ஆண்டாள் – கமலம் தேம் கை சரச மன்னார் –ரெங்க மன்னார்

————-

சிங்கார நல் வணிகர் செல்வர் துயில் இடங்கள்
அங்காடி மேவும் அரங்கமே -வெங்கானில்
சேர்ந்த விரதத்தினார் திண் விசயன் சாரதியா
ஊர்ந்த விரதத்தினார் ஊர் –13-

வணிகர் அங்காடி-கடைவீதி -மேவும்
துயில் இடங்கள் அங்கு ஆடி-நிலைக் கண்ணாடி – மேவும்
வெங்கானில் சேர்ந்த விரதத்தினார் -ஸ்ரீ ராம அவதாரம்
விசயன் சாரதியா ஊர்ந்த ரதத்தினார்-ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்

————

வாசமுறு யோகியரும் வாழ்த்து மறை ஒலியும்
ஆசை யகலும் அரங்கமே -வாச யுரங்
கூடு திருப்பாவை யினான் கோதை எனும் சோழியப் பெண்
பாடு திருப்பாவை யினான் பற்று –14-

வாசமுறு யோகியரும் ஆசை யகலும்-ஆசை மூவாசைகள் நீங்கும்
வாழ்த்து மறை ஒலியும் ஆசை யகலும்–வேத கோஷமும் திக்குகளை வியாபிக்கும்
வாச யுரங் கூடு திருப்பாவை யினான் -உரம் வாசம் கூடும் -துளவ சந்தனாதி மணம் பொருந்திய உரத்தில் கூடு
திரு மார்பின் கண் வசித்தலைப் பொருந்திய திரு மகள் ஆகிய அழகிய பெண்ணை யுடையவன்
கோதை எனும் சோழியப் பெண்-ஆண்டாள் -சோழியர் குலத்தில் உதித்த பெண்
பாடு திருப்பாவை யினான் பற்று -பாடிய திருப்பாவை எனும் திவ்ய பிரபந்தத்தை யுடையவன் விரும்பும் இடம்

————-

வாழு மடவார் கரம் தேர் வண்கா விரி நதி பொன்
ஆழி மருவும் அரங்கமே -பாழி மிகும்
தானவரை முன் பரித்தார் தண்ட டத்தில் அன்று அழைத்த
தானவரை முன் பரித்தார் சார்பு –15–மூன்று சிலேடைகள்

மடவார் கரம் பொன் ஆழி-தங்க மோதிரம் – மருவும்
தேர் பொன் ஆழி -அழகிய சக்கரங்கள் – மருவும்
நதி பொன் ஆழி-திரு மகள் பிறந்த கடலை – மருவும்
பாழி-வலிமை
தானவரை முன் பரித்தார் -முன்பு அரித்தார் -அசுரரை வலி அழித்தார் -முற்காலத்தில் ஸம்ஹரித்தார்
தண் தடத்தில் அன்று அழைத்த தான வரை-ஸ்ரீ கஜேந்திராழ்வானை-
தானம் வரை -மத ஜலத்தை சொரிகின்ற மலையாகிய யானை
முன் பரித்தார் -அந்நாளில் காத்து அருளினார் –

————-

மங்குல் தவழ் சோலையிலும் மாளிகை சார் பஞ்சரத்தும்
அங்கிளைகள் மேவும் அரங்கமே -பொங்கும்
பயமா மலைக்குடையான் பண்டாய ரேத்து
நயமா மலைக்குடையான் நாடு –16–

மங்குல் -மேகம்
சோலையிலும் அங்கிளைகள்-கோப்புகள் – மேவும்
பஞ்சரத்தும் -பஞ்சரம் கூடு கிளிக்கூண்டு -அங்கிளைகள் -அழகிய கிளிகள் -மேவும்
பயமாம் அலைக்குடையான்–பயம் பால் -அலை கடல் –திருப்பாற் கடலுக்கு உரிமை யுடையவன்
ஆயர் -இடையர்
நயம் மா மலை குடையான் -அழகான கோவர்த்தன மலையைக் குடையாக யுடையவன் –

———–

வஞ்சியர் தம் கண்ணிணையும் மாடமுறு மந்திரமும்
அஞ்சனங்கள் ஆரும் அரங்கமே -தஞ்சிகையில்
தோய்ந்த கலா பத்தார் துகள் மாதுலனான் முன்
வாய்ந்த கலா பத்தார் மனை –17–

வஞ்சியர் -வஞ்சிக் கொடி போன்ற மகளிர்
மந்திரம்-மாளிகை
கண்ணிணையும்–அஞ்சனங்கள்-மை – ஆரும்-பொருந்தும்
மந்திரமும் அஞ்சனங்கள்-அம் ஜனங்கள் – ஆரும் -நிறையும்
சிகை -குஞ்சி
தோய்ந்த கலா பத்தார் -அணியப்பெற்ற மயில் இறகை யுடையவர்
மாதுலனால் -கம்சனால்
முன் வாய்ந்து அகல் ஆபத்தார்–முதலில் ஏற்பட்டுப் பின் எளிதில் நீங்கிய ஆபத்துக்களை யுடையவர் –

———-

தங்க நெடும் கேதனமும் சாரும் பல தருவும்
அங்கனி யோடேயும் அரங்கமே -துங்க
அருவரை முன் அங்கு எடுத்தார் அன்று மல்லரான
இருவரை முன்னம் கெடுத்தார் இல் –18-

கேதனம்–துகில் கொடி
கேதனமும்-அங்கனி யோடே-கன்யா ராசியோடு —
தருவும் அங் கனி யோடே-அழகிய பழங்களுடன்
துங்கம் -உயர்வு
வரை -கோவர்த்தன கிரி -முன் அங்கு எடுத்தார் -குடையாகப் பிடித்தவர்
மல்லர் இருவர் -சாணூர முஷ்டிகர் -இருவரை முன்னம் கெடுத்தார்-ஸம்ஹரித்தார்

————

பேரா விலங்கையர் கோன் பீமன் நளன் நேர் மடையர்
ஆரா தனம் செய் அரங்கமே -சீர் ஆயர்
வின் மந்திர முடையார் வெண்ணெய் யுண்டார் எஞ்ஞான்றும்
தன் மந்திரமுடையார் சார்பு –19–

பேரா -அழியாத
விலங்கையர் கோன் –விபீஷணன் -ஆரா தனம் செய் அரங்கமே
பீமன் நளன் நேர் மடையர்-மடைப்பள்ளிக் காரர்
பீமன் நளன் இருவரும் பாக ஸாஸ்த்ர விற்பன்னர்
ஆராதனம் -திரு அமுது வகைகள்
வில் -ஒளி
மந்திரம் –வீடு
முடை நாற்றம் ஆர் வெண்ணெய் யுண்டார்
தன்மம் -தர்மம்
திரம் யுடையார் -ஸ்திரமாக யுடையார்

————–

ஓங்கு பெரும் செல்வர் ஒண் மஞ்சம் காவிரி நெல்
ஆங்கு திரை மேவும் அரங்கமே –பூங்கமல
வாசமா தங்கத்தான் வந்தருள் மா தங்கத்தான்
வாசமா தங்கத்தான் வாழ்வு –20—நான்கு சிலேடைகள்

செல்வர்-ஆம் குதிரை மேவும்
ஒண் மஞ்சம் -ஆங்கு திரை-திரைச்சீலை – மேவும்
காவிரி ஆங்கு திரை -அலை -மேவும்
நெல் ஆம் குதிர் ஐ மேவும்-குதிர் -நெல்லைச் சேமித்து வைக்கும் குலுக்கை
பூங்கமல வாசம் மாது அங்கத்தான்
வந்தருள் மா தங்கத்தான் –இரங்கிக் காத்து அருளப் பெற்ற கஜேந்திரனை யுடையவன்
வாசம் -வஸ்திரம் -மா தங்கத்தான் -அழகிய பீதாம்பரத்தை யுடையவன் –

—————

மச்சமுறும் பண்ணை மத வாரணம் இரதம்
அச்சங்கள் தரும் அரங்கமே –இச்சை கொளும்
அம் பவள வாயினான் அம் புதியில் மீனுருவா
அம் பவள வாயினான் அயர்வு –21-

பண்ணை அச்சங்கள் தரும்- அச் சங்கு அடரும் -நெருங்கும்
மத வாரணம் -மத யானை -அச்சங்கள் தரும்
இரதம் அச்சங்கள் தரும் –அச்சு அங்கு அடரும் –
அம் பவள வாயினான்
அம் புதியில் மீனுருவா -கடலில் மத்ஸ்ய அவதாரம்
அம் பவள வாயினான் -அம்பு அ அளவு ஆயினான் -தண்ணீரின் அளவாய் வளர்ந்தவன் –

—————

வாம் பரி செல் வீதி வணிகரும் நூல் ஆய்வோரும்
ஆம் பொருளை எண்ணும் அரங்கமே -சாம்பன் கைக்
காவனவின் முன்பு ஓசித்தான் அன்று அமுது மா விதுரன்
பாவனவின் முன்பு ஓசித்தான் பற்று –22–

வாம் பரி செல் வீதி -தாவுகின்ற குதிரைகள் செல்லுகின்ற வீதிகளில்
வீதிகளில் வணிகரும் ஆம் பொருளை எண்ணும்-தேடும் பொருள்களை ஓன்று இரண்டு என்று என்னும் வீதிகளில்
நூல் ஆய்வோரும் ஆம் பொருளை எண்ணும் -நூலில் பொருந்திய விழுமிய கருத்துக்களை சிந்திக்கின்ற
சாம்பன் -சிவன்
கைக்கு ஆ வன வில் முன்பு ஓசித்தான் –வனம் அழகு -ஒசித்தல் -முறித்தல் -சிவ தனுஸ்ஸை முறித்தவன்
ஆம் பொருளை எண்ணும் அரங்கமே -சாம்பன் கைக்
மா விதுரன் பாவன இல் முன் அன்று அமுது பொசித்தான் -புசித்தவன் –
பற்று –

————–

ஊரிலுறும் பொன்னளியும் ஊடு மட வாரணியும்
ஆர மதில் மின்னும் அரங்கமே -சேரன்
விருத்தங்களுள்ளான் மெல்லடி போற்றாதார்
வருத்தங்களுள்ளான் மனை –23–

பொன்னளியும் -அழகிய வண்டுகளும்
ஆர மதில் மின்னும்-ஆடவரும் மகளிரும் அணிந்த பூ மாலைகளிலே விளங்கும்
மட வார் அணியும் ஆர மதில் மின்னும் -மிகுதியாக மதிள்களிலே பிரகாசிக்கும்
சேரன் விருத்தங்களுள்ளான் -குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த பெருமாள் திருமொழி விருத்தப் பாக்களின் கண் எழுந்து அருளி உள்ளவன்
மெல்லடி போற்றாதார் வருத்தங்கள் உள்ளான் -நினையாதவன்

———-

செம்பொன் நெடும் கோட்டைகளும் கிண் தனுக்கை வேட்டுவரும்
அம்புலியை நாடும் அரங்கமே -உம்பர்
உரக மட மானார் ஒருங்கே யுவப்ப
வரக மட மானார் மனை –24-

கோட்டைகளும் அம்புலியை நாடும் -சந்திரனை அளாவும்
வேட்டுவரும் அம் புலியை நாடும்-தேடித் திரியும்
உரக மட மானார்-நாக கன்னியர்
உம்பரும் மானாரும் ஒருங்கே யுவப்ப
வர கமடம் ஆனார் -மேன்மை வாய்ந்த கூர்மாவதாரம் எடுத்து அருளினார் -கமடம் -ஆமை

————-

தம்புரத்தில் ஆசை யற்றோர் சார்ந்த கொடி கோபுரங்கள்
அம்பர மேனாடும் அரங்கமே -வம்பு மலர்க்
காமனைக் கண் முன்னட்டான் கையேற் பொழித்தான் விண்
காமனைக் கண் முன்னட்டான் காப்பு –25- மூன்று சிலேடைகள்

தம்புரத்தில் -தம் சரீரத்தில்
ஆசை யற்றோர் -தவ முனிவர்
அம்பர மேனாடும்-அம் பரம் மேல் நாடும் -அழகிய பரலோகத்தின் மேல் விருப்பத்தைச் செலுத்தும்
கொடி -அம்பரம் துணி மேல் நாடும்
கோபுரங்கள் அம்பரம் -ஆகாயம் – மேல் நாடும்
வம்பு -வாசனை
காமனைக் கண் முன் அட்டான் -மன்மதனை நெற்றிக்கண்ணால் சுட்டு எரித்த சிவன்
கையேற்பு -கையினால் யாசித்தால்
விண் கா -பாரிஜாத விருக்ஷம்
மனை கண் முன்னட்டான் -ஸ்ரீ சத்யபாமா தேவி திரு க்ரஹத்தின் முன் நட்டு அருளினவன் –

———-

ஏறு இரதப் பொன் நேமி ஏர் விரசைக் காவிரியாம்
ஆறு அச்சு உழி மேவு அரங்கமே -பேறு மிகும்
தேசு அங்கம் மழிசையார் சீரப்பாவார் வேய் தனில் வாய்
வாசம் கமழ் இசையார் வாழ்வு –26-

ஏறு இரதப் பொன் நேமி -உருளை -ஆறு அச்சு உழி மேவு -வழிகளில் அச்சின் கண் மேவு
ஏர் விரசைக் காவிரியாம் ஆறு அச்சு உழி மேவு -அ சுழி மேவு
தேசு அங்கம் மழிசையார் –திருமழிசை ஆழ்வார்
வேய் -மூங்கில்
வாய் வாசம் கமழ் இசையார் -வேணு கானத்தை யுடையவர்

———-

சாலத் திகழ் மணத்துத் தையலர் கையும் பொழிலும்
ஆலத்தி காணும் அரங்கமே –பாலத்
துருவனை முன்னம் களித்தார் தொல் வீடணனைச்
செருவனை முன்னம் களித்தார் சேர்வு –27–

சால-மிகுதியாக
தையலர் கையும் ஆலத்தி-நீராஞ்சனம் – காணும்
பொழிலும் ஆலத்தி -ஆல் அத்தி -ஆல் அத்தி மரவகைகள் – காணும்
பாலத் துருவனை முன்னம் களித்தார்
தொல் வீடணனைச் -செருவனை முன்னம் -போர் புரிவதன் முன்னம் -களித்தார்-அபயம் அளித்து ரஷித்தார் –

—————-

காரண முன்னூலினரும் கா முகரும் என்றும் சீர்
ஆரணம் கைக் கொள்ளும் அரங்கமே -பார் அளந்து
பீன வடிவானார் பிரமற்குக் காட்டினார்
ஏன வடிவானவர் இடம் –28-

முன்னூலினரும் -பழைய ஸாஸ்த்ரங்களை உணர்ந்த பெரியோர்
நூலினரும் என்றும் சீர் ஆரணம் -வேதம் -கைக் கொள்ளும்
கா முகரும் என்றும் சீர் ஆரணங்கைக்-அழகிய மகளிரைக் கொள்ளும்
பீன அடி வான் ஆர் பிரமற்குக் காட்டினார் -பெரிதான தம் திருவடியை ஸத்ய லோகத்தில் பொருந்திய பிரம தேவனுக்குக் காட்டி அருளியவர்
ஏன வடிவானவர் –ஸ்ரீ வராஹ வடிவானவர்

—————–

வந்தனமே செய்ய வரும் மன்னவரும் வீணைகளும்
அந்தந்தி மேவும் அரங்கமே -சிந்து பதி
மாண்டவன் வானாக வத்தான் வாழக் கதிர் மறைத்தான்
தாண்டவன் வானாக வைத்தான் சார்பு –29–

மன்னவரும் அம் தந்தி-யானை – மேவும்
வீணைகளும் அந்தந்தி-நரம்பு – மேவும்
சிந்து பதி –ஜயத்திரதன்
மாண்டு அவன் வானாக–இறக்க –
அத்தான்-அத்தையின் புத்திரனான அர்ஜுனன்
வாழக் கதிர் மறைத்தான் –சக்கரத்தால் ஸூர்யனை மறைத்து அருளியவன்
தாண்டவன் –சிவன்
வான் ஆகவம் -பெரிய யுத்தம்-பாணாசூர யுத்தம்
ஆக வத்தான் –யுத்தத்தை யுடையவன்

—————

பொங்கேரி யிக்கு வனம் பூந்தண்டலை வீதி
அங்கே கயம் சேர் அரங்கமே -செங்கீதை
ஓர் விசயன் பாற் பணித்தார் உற்றானும் தாம் என்றே
ஓர் விசை அன்பால் பணித்தார் ஊர் –30- நான்கு சிலேடைகள்

பொங்கு ஏரி அங்கே கயம்-ஆழம் – சேர்
யிக்கு வனம் -அங்கே கயம் -யானை – சேர்
பூந்தண்டலை-பூஞ்சோலையில் – அம் கேகயம்-மயில் – சேர்
வீதி அங்கு ஏகு அயம்-குதிரை – சேர்
செங்கீதை -சிறந்த ஸ்ரீ பகவத் கீதை
ஓர் விசயன் -ஒப்பற்ற விஜயனுக்கு
பணித் தார் உற்றான் -நாக ஆபரணங்களை யுடைய ருத்ரன்
அன்பால் -ருத்ராணாம் சங்கர ச அஸ்மி -என்று கீதையில் உபதேசம் பண்ணி அருளினவன்
ஓர் விசை –ஒரு தடவை

———–

பம்பு வரி நெல் பருந்தரளம் காவேரி
அம்பணை வாய் மேவும் அரங்கமே -நம்பியே
பண்டு அழைத்த வாரணத்தார் பாணி தனில் வாரணத்தார்
பண்டு அழைத்த வாரணத்தார் பற்று –31–மூன்று சிலேடைகள் –

நெல் அம்பணை -வயல் -வாய் மேவும்
தரளம் -முத்து -அம்பணை-மூங்கில் – வாய்-கணை – மேவும்
காவேரி அம்பு-நீர் – அணை வாய் -அணைக்கட்டுகளிலே -மேவும்
அம்பணை வாய் மேவும்
பண்டு அழைத்த வாரணம் -ஸ்ரீ கஜேந்திராழ்வான்
பாணி -திருக்கரம்
வாரணம் -மூங்கில் -புல்லாங்குழல்
பண் தழைத்த ஆரணம் -சாம வேதம்

———

வார் அணிந்த கொங்கை மடவார் விழி சாயல்
ஆரு மயின் மானும் அரங்கமே -நேரில்
அரு கமல யுந்தியினான் அன்று அயனை ஈன்ற
ஒரு கமல யுந்தியினான் ஊர் –32-

மடவார் விழி–ஆரும் அயில் -வேல் -மானும்
மடவார் சாயல் -ஆரும் மயில் மானும்
நேரில் -நிகரற்ற
அருகு அமல யுந்தியினான்-சமீபத்தில் -இரு பாலும்-பரிசுத்த நதியை யுடையவன் -உந்தி- நதி
ஒரு கமல யுந்தியினான்-ஒப்பற்ற நாபி கமலத்தை யுடையவன் –

—————

தும்பை புனை யரசர் தூணிகள் மின்னார் அளகம்
அம்பதிக நேரும் அரங்கமே -வம்பு மலர்த்
தாது திரு மாலையார் தாசரடித் தூள் ஆழ்வார்
ஒது திருமாலையார் ஊர் –33–

தும்பை -போருக்குச் செல்லுவோர் அணியும் மாலை
தூணிகள்—அம்பு புட்டில் –அம்பு அதிகம் நேரும்-பொருந்தும்
மின்னார் அளகம்–பெண்கள் கூந்தல்
அம்பதிக நேரும்
புனை யரசர் தூணிகள் மின்னார் அளகம்
அம் -அழகிய -பதிகம் -சைவலம் -நீர்ப்பாசி — நேரும் -ஒக்கும்
வம்பு -வாசனை
தாது உதிரும் மாலையார்-மகரந்தம் சிந்துகின்ற துளப மாலையை யுடையவர்
தாசரடித் தூள் ஆழ்வார் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
ஒது திருமாலையார்–திருமாலை பிரபந்தம் அருளிச் செய்தவர்

————-

தூய மறையாளர் சொல்லின்ப நாவலர் சீ
ராய மகம் செய் அரங்கமே -பேயினது
கொங்கை அங்கம் சுவைத்தார் கொற்றம் பெறு படைகள்
செங்கை அங்கு அஞ்சு வைத்தார் சேர்வு –34–

மறையாளர் சீராய மகம் -யாகம் -செய்
நாவலர் சீரா யமகம்–ஒரு விதச் சொல்லணி – செய்
கொங்கை அங்கம்–ஸ்தானமாகிய உறுப்பை – சுவைத்தார்
கொற்றம் -வெற்றி
செங்கை அங்கு –படைகள் அஞ்சு வைத்தார்

————-

மங்கல நற் பாலிகைகள் மாந்தர் இரும் புரவி
அங்குரங்கள் மேவும் அரங்கமே –செங்கமல
மாது வசம் அன்புள்ளார் வானவரும் கண்டு தொழு
மாது வசம் அன்புள்ளார் வாழ்வு –35–மூன்று சிலேடைகள்

பாலிகைகள்–முளைப் பாலிகைகள் – அங்குரங்கள்-முளைகளை – மேவும்
மாந்தர் -அங்கு உரம் -வலிமை -கண் மேவும்
புரவி -அம் குரங்கள் -குரம் -குளம்பு -மேவும்
செங்கமல மாது வசம் அன்புள்ளார்
மா துவசம்–அழகிய கொடியாக – மன் புள்ளார் -பக்ஷி ராஜனாகிய கருடனை யுடையவர்

————-

சீரார் பொன் கொள்வோரும் தேர் புலவரும் கலையே
ஆராய்ந்து உரை செய் அரங்கமே –வாரார்
முரசு அங்கன் தூதினான் மோது ஆகவத்தால்
வர சங்கு அன்று ஊதினான் வாழ்வு –36–

பொன் கொள்வோரும் கலையே -கல்லையே -உரை கல்லையே -ஆராய்ந்து உரை செய்-உரைத்துப் பார்க்கின்ற
தேர் புலவரும் கலையே -ஸாஸ்திரங்களையே -ஆராய்ந்து உரை செய் -ஸம்பாஷிக்கின்ற
முரசு அங்கன் தூதினான்–முரசு அடையாளக் கொடியை யுடைய தருமனுக்காக கௌரவர் இடம் தூது சென்றவன்
மோது ஆகவத்தால் -ஆகவும் போர் -வர சங்கு-மேன்மையான பாஞ்ச ஜன்யம் அன்று ஊதினான்

—————

சாலை தனில் தீம் பலவைச் சாடு குரங்கும் கரும்பும்
ஆலை மருவும் அரங்கமே –வாலி தனைத்
துஞ்சக் கரந்து அரித்தான் தொண்டரையே காப்பதற்காச்
செஞ்சக்கரம் தரித்தான் சேர்வு –37–

தீம் பலவை–தித்திப்பான பலா மரத்தை
குரங்கும் -ஆலை -மரத்தை -மருவும்
கரும்பும் ஆலை இயந்திரத்தை – மருவும்
வாலி தனைத் துஞ்சக்–சாகக் – கரந்து -மறைந்து -அரித்தான்-அழித்தவன்
தொண்டரையே காப்பதற்காச் செஞ்சக்கரம்-செம் சக்கரம் – தரித்தான் -தாங்கியவன் –

————-

ஊக முற்ற வேதியரும் உள் ததி சேர் தாழியும் மோர்
ஆகமத்தைக் கொள்ளும் அரங்கமே –மா கரிக்கு
மோக்கந் தரத்தான் முனம் வந்து இடங்கர் உயிர்
போக்கந் தரத்தான் புரம் –38–

ஊகம் -யூகம்-ஞானம்
வேதியரும் ஓர் ஆகமத்தைக் கொள்ளும்
உள் ததி-தயிர் – சேர் தாழியும் மோரக மத்தைக் கொள்ளும்
மா கரி-கஜேந்திரன் -மா கரிக்கு மோக்கந் தரத்-மோக்ஷம் தர -தான் முனம்-முன்னே – வந்து
இடங்கர்–முதலை – உயிர் போக்கு அந்தரத்தான் –ஆகாய மார்க்கத்தை யுடையவன்

————-

கொம்பார் தருக்களிலும் கூடு திரை வாவியிலும்
அம் பார்ப்பு மேவும் அரங்கமே -நம் பாணர்
பாட்டினை முன் கேட்டார் பகை யரசர் பாலைவர்
நாட்டினை முன் கேட்டார் நகர் –39–

கொம்பார்-கிளை ஆர்ந்த – தருக்களிலும்
அம் பார்ப்பு -அழகிய பறவைக் குஞ்சு -மேவும்
திரை -அலை -கூடு வாவியிலும் -தடாகத்திலும்
அம்பு ஆர்ப்பு -ஜலத்தின் ஆரவாரம் -மேவும்
பாணர் -திருப்பாண் ஆழ்வார்
பாட்டினை முன் -முற் காலத்திலே -கேட்டார் -திருச்செவியின் மாந்தினவர்
பகை யரசர் -கௌரவர் -பால் ஐவர் -பாண்டவர் -நாட்டினை முன் -முன் நின்று கேட்டார் -இரந்தவர்

———–

அங்கனையார் மார்பு கயம் அந்தணர் கை நூல் உணர்வோர்
அங்குசத்தைக் கொள்ளும் அரங்கமே -வெங்கபடர்
பாலார் கலி யுடையார் பைம்பொன் கலி யுடையார்
பாலார் கலி யுடையார் பற்று –40–நான்கு சிலேடைகள் —

அங்கனையார் –பெண்கள்
மார்பு- அங்குசத்தைக் -குசம் -ஸ்தானம் -கொள்ளும்
கயம்-யானை அங்குசத்தைக்-அடக்கும் கருவியைக் – கொள்ளும்
அந்தணர் –அங்குசத்தைக் -தர்ப்பையைக் -கொள்ளும்
நூல் உணர்வோர் –அங்குசத்தைக்–அங்கு சத்தைக் சாரத்தைக் – கொள்ளும்
வெங்கபடர் பால் –வஞ்சகர் பால்
ஆர் -நிறைந்த -கலி-பாவத்தை – யுடையார் -தகரார்
பைம்பொன் கலி–வஸ்திரம் பீதாம்பரம் – யுடையார் -தரித்தவர்
பாலார் கலி யுடையார்-பால் ஆர் கலி -கடல் -உடையார்

———–

பூ மேவு கான் மதகு பூங்குழலார் ஆகம் உளம்
ஆ மோதஞ் சாரும் அரங்கமே –சீ மூத
வண்ணத்தான் ஆகத்தான் மாயத்தா னேயத்தான்
வண்ணத்தான் ஆகத்தான் வாழ்வு –41–மூன்று சிலேடைகள் –

பூ மேவு கான்-கால் -ஆற்றுக்கால் – மதகு -ஆ மோதஞ்-ஆம் ஓதம் -நீரின் ஒலி – சாரும்
பூங்குழலார் ஆகம் ஆமோதஞ்–பரிமளம் – சாரும்
உளம் ஆ மோதஞ்–ஸந்தோஷம் – சாரும்
சீ மூத வண்ணத்தான் –மேக வண்ணத்தான்
நாகத்தான் -பரம பதத்தை யுடையவன்
வண்ணத்தான்–வண் அழகிய நத்தான்-சங்கை ஏந்தியவன்
நாகத்தான் –ஆதி சேஷனை யுடையவன்

———–

கும்பு பொறி வண்டு மணிக் குண்டலங்கள் மாதரார்
அம்புயத்து மின்னும் அரங்கமே -கொம்பனையார்
அற் பரதத்துக் கினியான் ஆசை கொளா தாட் கொள்வான்
நற் பரதத்துக் கினியான் நாடு –42–

கும்பு -கும்பல்
பொறி வண்டு மாதர் -அழகு -ஆர் அம்புயத்து-தாமரையினிடத்து – மின்னும்
மணிக் குண்டலங்கள்-மாதரார் -பெண்களின் -அம் புயத்து–தோள்களிலே மின்னும்
கொம்பனையார் -மகளிர்
அற்ப ரதத்துக்கு -சிற்றின்பத்துக்கு -இனி யான் ஆசை கொளாது ஆட் கொள்வான்
நற் பரதத்துக்கு -பரத நாட்டியதுக்கு – இனியான் -இனிமை யுடையவன்

————

மங்காத வெப்பொருளும் மா மணம் செய்வோர் அகமும்
அங்கா வணம் சேர் அரங்கமே -இங்கார்ந்தோர்
வாச மருந் தூணினார் வந்து தொழ வார்த்து வந்த
தேச மருந் தூணினார் சேர்வு –43–

எப்பொருளும் அங்கு ஆவணம்-கடை வீதி சேர்
மா மணம் செய்வோர் அகமும் -அம் காவணம் -பந்தர் -சேர்
வாச மருந்து ஊணினார்-மணம் பொருந்திய அம்ருதத்தை உண்ட தேவர்
ஆர்த்து வந்தது -ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரத்தில்
தேச மருந் தூணினார்-தேசு அமரும் ஒளி பொருந்திய மணித்தூணை யுடையவர்

—————

தாண்டு வராற் பண்ணைகளும் சன்ம வுயிர் யாவும் சீர்
ஆண்டு முத்திக் கேயும் அரங்கமே -பாண்டவர் பால்
கட்டுப்பட்டா விளைத்தான் கா வெனத் துரோபதைக்குப்
பட்டுப் பட்டா விளைத்தான் பற்று –44–

பண்ணைகளும் –வயல்களும்
ஆண்டு சீர் முத்து இக்கு ஏயும் -அவ்விடத்து அழகிய முத்துக்களை சொரியும் கரும்புகளைப் பொருந்தும்
சன்ம வுயிர் யாவும்-இகத்தில் – சீர் ஆண்டு -சிறப்புக்களை அனுபவித்துப் பின் முத்திக்கு -மோக்ஷத்துக்கு -ஏயும் -பக்குவத்தை அடையும்
பாண்டவன் -சகாதேவன் -கட்டுப்பட்டு ஆ -உயிர் – இளைத்தான்–மெலிவுற்றான்
கா வென –காப்பாற்றுவாய் என்று அரற்ற
பட்டுப் பட்டா விளைத்தான் -பட்டுப் புடவையை ஒன்றன் பின் ஒன்றாக விளைந்து கொண்டே இருக்கும் படி அருள் செய்தான்

————–

சேறுமதற் கம்பு மலர் தேங்குழலார் கஞ்ச மிறை
ஆரு மஞ்சஞ்சாரும் அரங்கமே -வீர விற் பூ
அம்புருவ நோக்கினான் அன்று ஏழ் மரம் துளைத்தவ்
வம்புருவ நோக்கினான் வாழ்வு –45–மூன்று சிலேடைகள்

மதற்கு -மன்மதனுக்கு
அம்பு மலர் -புஷ்ப பாணம்
இறை ஆரும் அஞ்ச அஞ்ச ஆரும் -கடவுளர் எவரும் அஞ்சத்தக்க அஞ்சு பாணம் பொருந்தும்
தேங்குழலார் -மகளிர் -இறை-கணவன் – ஆரும் மஞ்சம் -சப்ரமஞ்சம் -சாரும்
கொஞ்சம் -தாமரை -இறை -சிறகு -ஆரும் அஞ்சம் -அன்னம் -சாரும்
வீர விற் –வீரம் பொருந்திய வில்லும்
பூ -தாமரைப் பூவையும்
முறையே உவமையாகக் கொண்ட
அம்புருவம் நோக்கினான் -அழகிய புருவங்களை கண்களையும் யுடையவன்
அன்று -ஸ்ரீ ராமாவதார காலத்தில்
ஏழ் மரம் துளைத்து அவ் வம்பு உருவ -ஊடுருவச் செல்ல -நோக்கினான் –

———–

கங்குலிலே காமுகர்கள் காவலர்பால் நா வலர்கள்
அங்கணிகை மேவும் அரங்கமே -பொங்கமரில்
நாணுதலின் மான்மதத்தார் நால் வாயின் கோடி டந்தார்
வாணுதலின் மான்மதத்தார் வாழ்வு –46–

காமுகர்கள் அங்கணிகை-வேசிகை – மேவும்
நா வலர்கள் அங்கு காவலர்பால்-அணிகை -ஆபரணங்களை -மேவும் அடையும்
நாணுதல் இல் மால் மதத்து ஆர் நால் வாயின்-குவலயா பீடம் என்னும் யானையின் – கோடு இடந்தார் -தந்தத்தை முறித்து அருளியவர்
வாணுதலின்-நெற்றியில் மான்மதத்தார்-கஸ்தூரி திலகத்தை யுடையவர் -மான்மதம் -கஸ்தூரி

————-

தேசு மணி மாடம் சீர் மாரன் பாணி மலர்
ஆசுகம் கண் நீங்கா அரங்கமே -காசிபனில்
வாய்ந்த வட பத்திரத்தான் மாவா மனனானான்
ஏய்ந்த வட பத்திரத்தான் இல் –47-

மலர் ஆசுகம்–பூங்காற்று – கண் நீங்கா
மாரன்-மன்மதன் – பாணி-கை -மலர் ஆசுகங்கள் -புஷ்ப்ப பானங்கள் நீங்கா
காசிபன் இல்-மனைவியாக வாய்ந்தவள் -அதிதி – தபம் திரத்தால் -வலிமையால் மா வாமனன் -வாமநவதாரம் ஆனான்
ஏய்ந்த வட பத்திரத்தான் –ஆலிலைப் பள்ளி யுடையவன் –

————

மாறன் அடியாராம் வைணவர் நாமம் பொன்னி
ஆறு இரண்டாக் காணுமே அரங்கமே -தேறி யணை
ஆய் மா தரங்கத்தார் ஆனந்த மாத் துயில
வாய் மா தரங்கத்தார் வாழ்வு –48-

மாறன்–மால் தன் அடியாராம் வைணவர் இடும் – நாமம்-திருமண் காப்பு –
ஆறு இரண்டாக்-பன்னிரண்டாக –
பொன்னி–காவேரி – ஆறு இரண்டாக்–கொள்ளிடம் காவேரி என்று இரண்டு கிளையாக -காணுமே
யணை ஆய் மாதர் -கோபிகா ஸ்த்ரீகள் -அங்கத்தார்–சரீரத்தை யுடையவர்
ஆனந்த மாத் துயில வாய் – பொருந்திய -மா தரங்கத்தார் –திருப்பாற் கடலை யுடையவர் –

————-

தற் பரனை எண்ணித் தவம் புரிவோர் நூல் உணர்வோர்
அற் பகலை ஓரா அரங்கமே –பொற் பணிகள்
பூண்டவியப் பண்ணினார் பூ பார மன்னவரை
மாண்டவியப் பண்ணினார் வாழ்வு –49-

தற் பரனை -ஸர்வேஸ்வரனை
எண்ணித்
தவம் புரிவோர் -அற் பகலை-அல் பகலை -இரவு பகல் என்று ஓரா -உணராத
நூல் உணர்வோர் அற்ப -சொற்பமான -கலை-சாஸ்திரங்களை ஓரா -ஆராய்ச்சி செய்யார்
பொற் பணிகள் பூண்ட வியப்பு அண்ணினார் -பொருந்தியவர்
பூ பார மன்னவரை -பூமிக்குப் பாரமாகப் பொருந்திய அரசரை
மாண்டவியப் பண்ணினார் -பாரத யுத்தத்தில் இறந்து ஒழியப் பண்ணினவர்

————

எப்புறத்தும் மா மரத்தும் ஏரியிலும் பாடிடத்தும்
அப்பணிலம் சேரும் அரங்கமே -இப்புவியோர்
உண்ணும் பலத்தார் உடன் பலத்தார் முன் சவரி
உண்ணும் பலத்தார் உவப்பு –50- நான்கு சிலேடைகள்

எப்புறத்தும் -அப்பணிலம் -அப்பு அண் நிலம் -நீர் வளம் பொருந்திய நன்செய்கள் -சேரும்
மா மரத்தும் -அப்பணிலம் சேரும் -அப்பு அணிலம் -பற்றுகின்ற அணில்கள் -சேரும்
ஏரியிலும் அப்பணிலம்-அ பணிலம் -சங்குகள் – சேரும்
பாடிடத்தும் அப்பணிலம்–அ பண்ணில் அம் அழகு சேரும்
உண்ணும் பலத்தார் -உள் நம்பு அலத்தார் -அலம்-கலப்பை -ஏந்தியவர் -பல ராமர்
உடன் பலத்தார் -சகோதர பலமாக யுடையவர்
முன் சவரி உண்ணும்–உண் அம் – பலத்தார் -பழத்தை யுடையவர் –

————-

கொண்டல் நிகர் பூங்குழலார் கொங்கை யிதழ் நற்றொரு பொன்
அண்டு வரை யொப்பாம் அரங்கமே -பண்டு
படுகள முன் சேதித்தார்ப் பார்த்திபன் முத்தாரம்
படுகள முன் சேதித்தார்ப் பற்று –51–மூன்று சிலேடைகள்

கொண்டல் நிகர் –மேகத்தை ஒத்த -பூங்குழலார் கொங்கை -பொன் அண்டு வரை -மேரு மலைக்கு -யொப்பாம்
யிதழ் -பொன் அம் துவரை -அழகு வாய்ந்த பவளத்தை -யொப்பாம்
நல் தெரு பொன் அம் துவரை –ஸ்ரீ லஷ்மீகரம் பொருந்திய ஸ்ரீ மத் த்வாரகா புரியை –யொப்பாம்
படு கள முன் -ரண களத்தில்
சேதித்தார்ப் பார்த்திபன்-சிஸூ பாலன் உடைய
முத்தாரம் படு களம் -முத்து மாலை அணிந்த கழுத்தை – முன் சேதித்தார்–அறுத்து அருளியவர்

————–

சுத்த மணி மேடையில் நூல் சொல்வோர் தின மணியால்
அத்த மன மோரும் அரங்கமே -பத்தன்
தரும வலை யுண்ணே ரார் தண் கரத்தார் என்னைக்
கரும வலை யுண்ணே ரார் காப்பு –52–

சுத்த மணி -குற்றமற்ற ரத்னம்
மேடையில் தின மணியால் -ஸூர்யனால் -கடிகாரத்தால் –
அத்த மனம் -அஸ்தமனம்
ஓரும்
நூல் சொல்வோர்-தினம் அணியால்–அலங்கார ஸாஸ்த்ரத்தால்
அத்தம் -பொருள் நூல் கருத்துக்களை -மனம் ஓரும்
அரங்கமே –
பத்தன் -குசேலர்
தரும் அவலை யுண் ணேர் -அழகு ஆர் தண் கரத்தார்
என்னைக் கரும வலை யுள் நேரார் –பொருந்தச் செய்யாதவர் –

—————

வீசு திரைக் காவிரியும் மின்னாரும் தம் கொழுநர்க்கு
ஆசை முத்த நல்கும் அரங்கமே –வாச மலர்க்
கையில் கலப்பை யுளான் காதல் இளையோன் போற்றார்
மெய்யில் கலப்பை யுளான் வீடு –53-

காவிரியும் ஆசை -திக்குகள் எல்லாம் -முத்த–முத்துக்களை – நல்கும்
மின்னாரும்-மகளிரும் – தம் கொழுநர்க்கு ஆசை முத்தம் -அன்பு கனிந்த முத்தங்கள் – நல்கும்
கையில் கலப்பை யுள்ளான் -பலராமன் -காதல் இளையோன்
போற்றார் மெய்யில்-சரீரத்தில் – கலப்பை -சேர்ந்து இருத்தலை -யுள்ளான்–விரும்பாதவன்

————

பூண்ட புகழ் மன்னவரும் புத்தேளிரும் வலமா
ஆண்டு வரு நல் அரங்கமே -வேண்டும்
விர காலன் பாவார் மிளிரு முனை வேற் கைப்
பரகாலன் பாவார் பதி –54–

பூண்ட புகழ் மன்னவரும் வலமா -வெற்றியாக
ஆண்டு வரும் -அரசாட்சி செய்யும்
புத்தேளிரும்-கடவுளரும் ஆண்டு வலமா –பிரதக்ஷிணமாக -வரும்
நல் அரங்கமே –
வேண்டும் விர கால் –பிரார்திக்கின்ற உபாயத்தினாலே அன்பு ஆவார்
மிளிரும் முனை –கூர்மை -வேற் கைப் பரகாலன்-திருமங்கை ஆழ்வார் பாவார் -திருப்பாசுரங்களை யுடையவர்

—————

மஞ்சு தவழ் மாடம் மக வான் இகல் வீரர்
அஞ்சசி யோடேயும் அரங்கமே -வஞ்சகர் பால்
மெய்யான அன்பிலான் மேதினி நூறு எண் பதிக்குள்
மெய்யான வன்பிலான் வீடு –55–மூன்று சிலேடைகள்

மஞ்சு தவழ் மாடம் -அஞ்சசி யோடேயும்-அம் சசியோடே -சந்திரனோடு -ஏயும்
மக வான் இந்திரன் -அஞ்சசி யோடேயும்-இந்திராணியோடே ஏயும்
இகல் -வலிமை வீரர் -அஞ்சசி யோடேயும்-அஞ்சு அசியோடே -வாளோடு -ஏயும்
மெய்-சரீரம் -யான அன்பிலான்
மேதினி -பூமி
நூறு எண் பதிக்குள் -108 திவ்ய தேசங்கள்
மெய்யான-அழிவில்லாத – வன்பிலான் -அன்பில் திவ்ய தேசத்தை யுடையவன் – —

————

நம் பாரில்லறத்தை நாடினரும் குஞ்சரமும்
அம்பாரி மேவும் அரங்கமே -வெம் பாந்தள்
ஏந்த லமளியார் எண்ணார்க்கு வைகுந்தந்
தாந்த லமளியார் சார்பு –56–

நாடினரும்-விரும்பியவர் -அம்பாரி-அழகிய பத்தினி – மேவும்
குஞ்சரமும் -யானையும் -அம்பாரி மேவும்
பாந்தள் -பாம்பு -ஏந்தல்-ஆதி சேஷன்
அமளி-படுக்கை -யார் எண்ணார்க்குத் தாம் வைகுந்தம் தலம் அளியார்

————–

கொங்கு மலர்ப் பூங்குழலார் கொங்கையிலும் வீதியிலும்
அங்கள பஞ்சாரும் அரங்கமே -எங்குமவன்
தன் திருப்பேரையான் சாற்றிடினும் இன்னருள் செய்
தென் திருப்பேரையான் சேர்வு –57–

கொங்கையிலும் -அங்கள பம் -கலவைச் சந்தானம் -சாரும்
வீதியிலும் அங்களயம் -யானைக்குட்டி -சாரும்
எங்குமவன் தன் திருப்பேரை -திரு நாமத்தைச் -சாற்றிடினும் இன்னருள் செய் தென் திருப்பேரையான்

ஆசரியரது ஜென்ம தேசமும் அதுவே

————

நந்தாப் பெரும் செல்வர் நன் மனையும் நா வலரும்
அந்தாதி காணும் அரங்கமே -வந்தார் கை
நங்கோ வியர் கொண்ணார் நாயகர் தம் மேர் எழுத
இங்கோ வியர் கொண்ணார் இல் –58–

நன் மனையும் -அழகிய மாளிகைகளும் -அம் தாதி -பணிப்பெண்டிர் காணும்
நா வலரும் அந்தாதி-ஒருவகை பிரபந்தம் – காணும்
நந்து -சங்கு வளை -ஆர் கை நம் கோவியர்க்கு -கோபிகா ஸ்திரீகளுக்கு – ஓண்-ப்ரகாசகமான -நார்-அன்பு நாயகர்
தம் ஏர் எழுத இங்கு ஓவியர்க்கு -சித்ர காரருக்கு – ஓண்ணார்-இயலாதவர் –
ஓவியத்து எழுத ஒண்ணாத உருவத்தார் என்கை –

————-

வாதமிடு பண்டிதரும் மா மயிலும் என்று மதி
யாதரவைக் கோரும் அரங்கமே –காதவுணர்
ஊனின் மணவாளர் ஓங்கு வளப்புதுவை
மானின் மணவாளர் வாழ்வு –59-

வாதமிடு பண்டிதரும் என்று மதி-மதிக்கத்தக்க -ஆதரவை -துணியை – கோரும்-விரும்பும்
கற்றோரைக் கற்றாரே காமுறுவர்
மா மயிலும் என்று மதியாது -அரவைக்-பாம்பைக் – கோரும் -அழகிலே கோத்திக் கோர்த்துத் திரியும்
அரங்கமே —
காது -மோதுகின்ற -அவுணர்-அசுரர் – ஊனின் மணம் வாளர் –தசை நாற்றம் பொருந்திய நாந்தகம் என்னும் வாளை ஏந்தியவர்
ஓங்கு வளப்புதுவை மானின்-ஆண்டாளின் -மணவாளர் -கணவர் –

————-

சங்க மடு மா மறுகு சான்றோர் தம்முள்ள மிடை
அங்கலைகள் ஆரும் அரங்கமே -மங்கை நல்லார்
அந்தப்புரத்தார் அநந்த புரத்தார் திரு வாழ்
அந்தப்புரத்தார் அகம் –60- நான்கு சிலேடைகள்

சங்க மடு அங்கு அலைகள் ஆரும்
மா மறுகு அம் கலைகள்-மான்கள் – ஆரும்
சான்றோர் தம்முள்ளம் அம் கலைகள்-ஸாஸ்த்ரங்கள் – ஆரும்
இடை -அவர்கள் இடுப்பு -அம் கலைகள்-வஸ்த்ரங்கள் – மங்கை நல்லார் அந்தப்புரத்தார் -ராஜ ஸ்த்ரீகள் வாழும் இடம்
அநந்த புரத்தார்
திரு வாழ் -ஸ்ரீ மஹா லஷ்மி தாயார் நித்யவாஸம் செய்து அருளும் அந்தப்புரத்தார் -அழகிய சரீரத்தை யுடையவர்

————–

வம்பு மலர்த் தண்டலையும் மா நதியும் கெண்டைகளும்
அம் புளின மேவும் அரங்கமே –நம்பும்
அரிய மா மண்டலத்தா ராராலும் எண்ணற்க்கு
அரிய மா மண்டலத்தார் ஆர்வு –61- மூன்று சிலேடைகள்

வம்பு-வாசனை – மலர்த் தண்டலையும்-சோலையும் – அம் புளின மேவும் -புள் இனம் மேவும்
மா நதியும் அம் புளின மேவும் -புளினம் -மணல் மேடுகள் -மேவும்
கெண்டைகளும் அம் புளின மேவும் -அம்புள் நீரில் இனம் -கூட்டமாக -மேவும்
அரிய மா -ஸூரியன் -மண்டலத்தார்–ஸூர்ய மண்டலா மத்ய வர்த்தி
மண் -பெரிய பூமியின் இடத்து – எண்ணற்க்கு அரிய தலத்தார் -பல ஸ்தலங்களை யுடையவர் –

———-

மா சீடர் தம்மிடத்தும் மன்றுளும் நூலாரியர் முன்
ஆசீர்வாதம் செய் அரங்கமே -மா சீற்ற
வாசித் திருந்தார் மனம் கொதிப்ப வீடணனை
நேசித் திருந்தார் நிலம் –62–

நூலாரியர்–மா சீடர் தம்மிடத்தும் முன் ஆசீர்வாதம் செய்
நூலாரியர்–மன்றுளும்-சபைகளின் இடத்தும் – முன்னா -சிந்தித்து – சீர்-சிறப்பான -வாதம் செய்
மா சீற்ற வாசித் -குதிரைப்படையை யுடைய -திருந்தார்-பகைவர் – மனம் கொதிப்ப
வீடணனை நேசித்து இருந்தார் –

————–

காம்பு மலர்களிலும் கந்தரம் சேர் சோலையிலும்
ஆம் பிரம்பரம் சேர் அரங்கமே -வாம் பிறை நீர்
வாசம் செய்யச் சடையான் மா வரம் கொள் தானவரை
நாசம் செய்யச் சடையான் நாடு –63-

மலர்களிலும்-ஆம் பிரம்பரம்-வண்டு -சேர்
கந்தரம்-மேகம் சேர் சோலையிலும் -ஆம்பிர மரம் -தேமா மரம் -சேர்
வாம் பிறை நீர் வாசம் செய் யச் சடையான்–சடா பாரத்தை யுடைய சிவன்
மா வரம் கொள் தானவரை நாசம் செய்யச் சடையான்–சலிப்பு அடையான் –

—————-

சங்கு ஆரும் கையார் தனங்களிலும் வேதியிலும்
அங்கார மேவும் அரங்கமே –சிங்காரப்
பூவின் மகிழ் மாறன் போற்று திருவாய் மொழியாம்
பாவின் மகிழ் மாறன் பற்று –64-

சங்கு -வளையல்கள் -ஆரும் கையார் தனங்களிலும் -அங்கார மேவும்-அங்கு ஆறாம் மேவும்
வேதியிலும் -யாக மேடையிலும் -ஓம குண்டங்களிலும் -அங்காரம் -தீக்கனல் மேவும்
சிங்காரப் பூவின் மகிழ் மாறன்-வகுளாபரணர் – போற்று திருவாய் மொழியாம்
பாவில் – மகிழ் -மாறன்-மால் தன் பற்று –

————-

செப்பார்ந்த மென் முலையார் சீர் விழி சொல் காவேரி
அப்பால் நலம் காட்டு அரங்கமே –இப்பாரில்
அங்கதனைப் பெற்றான் அமர் களத்திலே துதிக்க
அங்கதனைப் பெற்றான் அகம் –65–மூன்று சிலேடைகள் —

செப்பார்ந்த மென் முலையார் சீர் விழி -அப்பால் நலம் காட்டு-அப் பானல் -நீலோற் பல மலர் -அம் -அழகு -காட்டு –
சொல் -பால் நலம் காட்டு
காவேரி அப்பால்-தன் தீர்த்த மஹிமையால் -மூழ்குவோர்க்கு – நலம்-மோக்ஷம் – காட்டு
இப்பாரில் அங்கதனைப் பெற்றான் -வாலி அமர் களத்திலே துதிக்க
அங்கு அதனைப்-தான் விரும்பிய மோக்ஷத்தை – பெற்றான் –அடையச் செய்தவன் –

————–

சீர் மருவு சாதகமும் திண்ணியவா விக்கரையும்
ஆர் மழைக்கு அங்காக்கும் அரங்கமே –ஓர் மருங்கில்
தங்க நக வில்லான் தனை வைத்தான் அன்பரக
அங்க நக வில்லான் அகம் –66–

சீர் மருவு சாதகமும் –சாதகப் பட்சியும் –ஆர் மழைக்கு அங்காக்கும்-அண்ணாந்து இருக்கும் –
திண்ணிய வாவிக் கரையும் ஆர் மழைக்கு அங்காக்கும் –ஆர் மழை கம் -ஜலம் -காக்கும்
அரங்கமே —
ஓர் மருங்கில்-பாகத்தில்
தங்க நகம் -பொன் மலை -மேரு மலை – வில்லான்–சிவன் –சிவனை ஒரு பாகத்தில் வைத்தவன்
அன்பர் அகம் அங்கு அநகம் இல்லான்
அநக இல் தோஷம் அற்ற வீடு
அம் கநக இல்லான் -அழகிய பொன்மயமான வீட்டை யுடையவன் என்னவுமாம் –

————-

நல்ல கதிரினையே நாற் புறத்துப் பண்ணைகளும்
அல் இறைவனும் காட்டு அரங்கமே -கல்லினை முன்
நாரி வடி வாக்கினான் நன்னயமா மின்னமுத
வாரி வடி வாங்கினான் வாழ்வு –67–

நாற் புறத்துப் பண்ணைகளும் -வயல்களும் -நல்ல கதிரினையே-நெற் கதிர்களையே -காட்டு
நாரி -பெண் -அகலிகை —
நாரி வடிவு ஆக்கினான்
இன்னமுத வாரி-கடல் – வடி வாக்கினான் —

————-

மங்குல் எனும் கூந்தல் மடவார் களம் இரு கண்
அங்கம்பு மானும் அரங்கமே -பொங்கும்
பய வேலையை மதித்தான் பார்த்தன் தேரோட்டும்
நய வேலையை மதித்தான் நாடு –68–

மடவார் களம்–கழுத்து – அங்கம்பு-சங்கு – மானும்
மடவார் இரு கண் அங்கு அம்பு மானும்
பய வேலையை மதித்தான்-பாற் கடலைக் கடைந்தான்
பார்த்தன் தேரோட்டும்
நய வேலையை மதித்தான் –அழகிய தொழிலைப் பெரிதாகக் கொண்டான்

————–

மிக்கார் திரு மொழியும் மேவும் அரன் கந்தரமும்
அக்கார நேரும் அரங்கமே –தக்கார்
திரு நாட்டிருப்பினார் செத்தவனை யாசற்
கொரு நாட்டிருப்பனார் ஊர் –69–

மிக்கார் -அழகு மிக்க மகளிர் திரு மொழியும்
மிக்கார் திரு மொழியும்–ஆழ்வார்களது அருளிச் செயல்கள் -அக்கார-வெல்லப்பாகு – நேரும்-ஒக்கும்
அரன் கந்தரமும் -கழுத்தும் -அக்கு ஆரம் -ருத்ராட்ச மாலைகளைப் பொருந்தும்
தக்கார் திரு நாட்டு இருப்பினார் -முக்தர்கள் வாழும் பரமபதத்தில் எழுந்து அருளியவர்
ஆசான் -சாந்தீபினி
செத்தவனை -அவன் குமாரனை
ஓரு நாள் –ஒரு காலத்தில்
திருப்பினார் -உயிருடன் மீளச் செய்தவர் –

———–

செம்மை விழியார் வேந்தர் சீரியர் நூல் மா மாடம்
அம்மணிகள் மேவும் அரங்கமே -தம் மனையை
ஆகத் திருத்தினான் அச் சாந்தக் கூனியை நேர்
ஆகத் நிறுத்தினான் ஆர்வு –70–நான்கு சிலேடைகள் –

செம்மை விழியார் -அழகிய கண்களை யுடைய மகளிர் -அம் அணிகள்–ஆபரணங்கள் – மேவும்
வேந்தர் -அம் அணிகள்-படைகள்
சீரியர் நூல் —அம் அணிகள்-அலங்காரங்கள் -மேவும்
மா மாடம் –அம்மணிகள்–நவ ரத்தினங்கள் -கடிகாரங்கள் – மேவும்
அரங்கமே –
தம் மனையை -ஸ்ரீ லஷ்மீ தேவியை -ஆகத்து -திரு மார்பில் – இருத்தினான்
கூனியை நேர் ஆகத் திருத்தினான் -கூன் நிமிர்ந்து நேராம்படி திருந்தச் செய்தவன் –

———–

ஈகையரும் பாடகரும் ஏத்தவரும் ஐங்கரனும்
ஆகு மிசை யாரும் அரங்கமே –சாகரமா ப்
பா வருணனைக் கடுத்தார் பைந்தமிழ் பராங்குசனார்
பா வருணனைக் கடுத்தார் பற்று –71-மூன்று சிலேடைகள்

ஈகையரும் -கொடையாளிகளும் –ஆகும் இசை -புகழ் –யாரும் –
பாடகரும் -ஆகும் -இராகம் – யாரும்
ஐங்கரனும் -விநாயகனும் –ஆகு–பெருச்சாளி – மிசை யாரும்
சாகரமாப் பா வருணனைக் –கடல் வடிவாய் பரவியுள்ள வருண தேவனை -கடுத்தார்-கோபித்தார்
பைந்தமிழ் பராங்குசனார் பா வருணனைக்கு அடுத்தார் –

—————

தப்பித மில்லார் இடத்தும் சந்திரப் பேர் வாவியிலும்
அப்பு நிதம் நீங்கா அரங்கமே –இப்புவியில்
போர் காது வணத்தார் பூம் பொழில் தென் பேரையில் வாழ்
வார் காது வணத்தார் வாழ்வு –72-

தப்பித மில்லார் இடத்தும்-அப் புநிதம்-பரி சுத்தம் – நீங்கா
சந்திரப் பேர் வாவியிலும்-சந்த்ர புஷ்கரணியிலும் அப்பு நிதம் நீங்கா
அரங்கமே —
இப்புவியில் போர் காது- மோது -உவணத்தார்-கருட வாகனத்தை யுடையவர்
பூம் பொழில் தென் பேரையில் வாழ்வார் காது வண்ணத்தார் -மகர நெடும் குழைக்காதர் –

———

மஞ்சார் பொழில் தனிலும் மன்னர் மருங்கினிலும்
அஞ்சா மரை சேர் அரங்கமே –துஞ்சாச் சீர்
பொய்கையார் பாற் கவியார் போத நல்லார் தாம் பழிக்கும்
செய்கையார் பாற் கவியார் சேர்வு –73–

மஞ்சார் பொழில் தனிலும் அஞ்சா மரை-ஒரு வகை மான் – சேர்
மன்னர் மருங்கினிலும் அஞ் சாமரை -அம் சாமரம் -சேர் அரங்கமே —
துஞ்சாச் சீர் பொய்கையார் பாற் கவியார் -பால் போல் இனிய கவியை யுடையவர்
போத நல்லார் தாம் பழிக்கும் செய்கையார் பாற் கவியார் -மனம் கவியாதவர் –

—————-

கொம்பு வளர் மா மரத்தும் கோதில் தெருக்களிலும்
அம்பலங்கள் காணும் அரங்கமே -கும்ப முனி
ஆச்சிரமத்து ஒன்றினான் அம்புதியை முன் கடைந்த
மாச்சிரமத்து ஒன்றினான் வாழ்வு –74–

கொம்பு வளர் மா மரத்தும் –அம்பலங்கள் –கனிகள் -காணும்
கோதில் தெருக்களிலும் அம்பலங்கள்-மன்றங்கள் – காணும்
அரங்கமே –
கும்ப முனி -அகத்தியன் -ஆச்சிரமத்து-பர்ணசாலையிலே – -ஸ்ரீ ராமனாக ஒன்றினான்
அம்புதியை-கடலை – முன் கடைந்த மா சிர மத்து ஒன்றினான் -பெரிய சிகரங்களை யுடைய மந்த்ர மலையாகிய மத்து ஒன்றை உடையவன் –

————–

ஏற்றின் இனம் புள்ளின் இனம் ஏரார் வராலின் இனம்
ஆற்றலை மன்னும் அரங்கமே –போற்ற மரர்க்கு
இட்ட மருந்தா ரத்தர் ஏடு பொரும் தாரத்தர்
இட்ட மருந்தாரத்தர் இல் –75–மூன்று சிலேடைகள் —

ஏற்றின் இனம் –ஆற்றலை-வலிமையை மன்னும் –
புள்ளின் இனம் -ஆற்றலை-ஆல் தலை -ஆலமரத்தில் – மன்னும்
ஏரார் வராலின் இனம் -ஆற்றலை-ஆற்று அலை – மன்னும்
அரங்கமே –போற்ற
அமரர்க்கு இட்ட மருந்து -அமிர்தம் -ஆர் அத்தர்–திருக்கரத்தை யுடையவர் –
ஏடு பொருந்து ஆரத்தர் –பூ இதழ்கள் பொருந்திய மாலையை யுடையவர்
இட்ட-இஷ்ட – அரும் தாரத்தர் –அரிய பிரிய நாயகியை யுடையவர் –

————

பாரில் விளையாடும் பாலரும் பார்ப்பாரு மணல்
ஆரிடத்தை நாடும் அரங்கமே –போரைத்
தொடுத்த விராவணனார் தொல் இளையோன் போற்றப்
படுத்த விராவணனார் பற்று –76–

பாரில் விளையாடும் பாலரும் மணல் ஆரிடத்தை நாடும்
பார்ப்பாரும் அண்ணல் ஆரிடத்தை-ஆர்ஷம் -வேதம் – நாடும்
அரங்கமே —
போரைத் தொடுத்த விராவணனார் தொல் இளையோன் -விபீஷணன் -போற்றப்
படுத்த -ஸ்ரீ ரெங்கத்திலே பள்ளி கொண்டு அருளும்
விரா வண்ணனார்-இரவு போலும் கறுமை நிறத்தை யுடையாரைப் பற்று —

————-

பூ மாட்டுச் சந்தைகளில் பூரண கும்பங்களில் சீர்
ஆ மா விலை கொள் அரங்கமே –தே மாலை
அக்கனுடன் முன் பிசைந்தார் அம்புயம் உற்றார் அமர்க்கு
நக்கனுடன் முன் பிசைந்தார் நாடு –77-

பூ மாட்டுச் சந்தைகளில் சீர்-அழகிய -ஆ-பசு – மா விலை கொள் –
பூரண கும்பங்களில் சீர் -ஆ மாவிலை கொள் –
அரங்கமே —
தே மாலை அக்கனுடன்-அஷன் -இராவண குமரன் முன்பு இசைந்தார் -ஹனுமான்
அம்புயம் உற்றார் அமர்க்கு -பாணாசூர யுத்தத்தில் -நக்கனுடன் முன்பு இசைந்தார் —

———-

தண் தட நற் கோயிலையும் தாழித் ததியினையும்
அண்டர் மதிக்கும் அரங்கமே -அண்டினிமை
ஓங்குதிரைக் கந்தரத்தார் ஒண் புவியில் பின்புதிக்கும்
வாங்குதிரைக் கந்தரத்தார் வாழ்வு –78–

தண் தட நற் கோயிலையும் -அண்டர் மதிக்கும் -தேவர் போற்றுகின்ற
தாழித் ததியினையும் அண்டர் மதிக்கும் -இடையர் கடைகின்ற
இனிமை ஓங்கு திரைக்கு-திருப்பாற் கடலுக்கு – அந்தரத்தார்
பின்பு -இனி வரும் காலத்தில்
வாம் குதிரைக் -தாவும் குதிரை -கந்தரத்தார்-கழுத்தை யுடையவர் – —
கல்கி திரு அவதாரம் -ஹயக்ரீவர் திரு அவதாரம் -வாசித்தலை மருவும் மால் இவர்களே –
தனிப்பா மஞ்சரி –இதே ஆசிரியர் திரு வாக்கு –

———

கோங்கு அமையும் சோலையிலும் கோதில் நரர் இடத்தும்
ஆங்கு தரு மஞ்சார் அரங்கமே -ஓங்கு இசையால்
பேறாக்கு வித்தான் பெரும் காலயவனனை
நீறாக்கு வித்தான் நிலம் –79–

கோங்கு அமையும் சோலையிலும் -ஆங்கு தரு -தருவில் -மஞ்சார்
கோதில் நரர் இடத்தும் ஆங்கு தருமம் சார்
தரு மஞ்சு -மழையைத் தரும் மேகம் என்னவுமாம்
அரங்கமே –
ஓங்கு இசையால் பேறு ஆக்–பசுக்கூட்டம் – குவித்தான்
பெரும் காலயவனனை நீறாக்கு வித்தான் நிலம் –முசுகுந்தனைக் கொண்டு காலயவனைக் கொன்று ஒழித்தான்

——————-

தேங்குழலார் மெய்யுமிலும் செய்களிலும் பொன்னியிலும்
ஆங்கலங்கள் மேவும் அரங்கமே -தூங்குமிடம்
அந்தரங்கம் ஓதுவார் அம்புதியார் பூ மகளார்க்கு
அந்தரங்கம் ஓதுவார் ஆர்வு –80-நான்கு சிலேடைகள் — 80-

தேங்குழலார் -மகளிர் -மெய்யும் -ஆங்கலங்கள்- ஆபரணங்கள் – மேவும்
இல்லும் ஆம் கலங்கள்-பாத்திரங்கள் – மேவும்
செய்களிலும் ஆங்கு அலங்கள்-கலப்பைகள் – மேவும்
பொன்னியிலும் ஆம் கலங்கள்-தோணிகள் – மேவும்
அம் தரங்கம்-அலை -மோதுவார் அம்புதியார்–கடல்
பூ மகளார்க்கு -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவி -இருவருக்கும் அந்தரங்கம் ஓதுவார் ஆர்வு —

———-

மை யணி கண்ணார் கை மருங்கு மருத்துவர்கள்
ஐயம் கொடுக்கும் அரங்கமே -வெய்ய விடக்
கண்டத்தான் அம்புயத்தான் காண்பரியான் இப்பரத
கண்டத்தான் அம்புயத்தான் காப்பு –81–

மை யணி கண்ணார் கை ஐயம் -பிச்சை -கொடுக்கும்
மருங்கு-இடை – ஐயம்-சந்தேகம் – கொடுக்கும்-உண்டோ இல்லையோ என்னும்படி நுட்பமாய் இருக்கும்
மருத்துவர்கள்- ஐ கபம் அங்கு ஓடுக்கும்
அரங்கமே –
வெய்ய விடக் கண்டத்தான்-விக்ஷம் தங்கிய கழுத்தை யுடைய சிவன் – அம்புயத்தான் -பிரமன் -காண்பரியான்
இப்பரத கண்டத்தான் -ஏழு உலகுக்கும் அதிபதி என்றாலும் விசேஷித்து இப் பரத கண்டத்துக்கு தலைவன்
அம் புயத்தான்-அழகிய திருத்தோள்கள் ஸூந்தர பாஹு -யுடையவன் – காப்பு —

————-

ஒப்பு மடைப் பள்ளியிலும் ஊசல் அமளியிலும்
அப்பம் சமைக்கும் அரங்கமே -இப்புவனம்
உண்ட திரு நாவாயார் உற்ற குகன் நாவாயார்
வந்த திரு நாவாயார் வாழ்வு –82–

ஒப்பு மடைப் பள்ளியிலும் அப்பம் சமைக்கும்
ஊசல் அமளியிலும்-படுக்கையிலும் – அ பஞ்சு அமைக்கும்
அரங்கமே –
இப்புவனம் -பூமி -உண்ட திரு-அழகிய – நாவாயார் -நாவுடன் கூடிய திரு வாயை யுடையவர்
உற்ற குகனது நாவாயார் -தோணியை யுடையவர்
வண்டு அதிரும் -சங்கு முழங்கும் -திரு நாவாயார் –திவ்ய தேசத்தை யுடையவர் –

————

மங்காப் புற நகரில் வாசி வரு வீதிகளில்
அங்கா விலகும் அரங்கமே -சிங்காரப்
பூதத்தார் மா கவியார் பொற் கலை முகத்து நட்ட
சீதத்தார் மா கவியார் சேர்வு –83-

மங்காப் புற நகரில்-அங் கா -சோலை -இலகும்
வாசி-குதிரை – வரு வீதிகளில்- அங்கு ஆ விலகும்
சிங்காரப் பூதத்தார் மா கவியார்
பொற் கலை முகத்து -ருசியா முக பர்வதத்திலே
நட்ட -ஸ்நேஹித்த
சீத தார் மா கவியார் –பெருமை வாய்ந்த ஸூக்ரீவன் என்னும் வானர வேந்தை யுடையவன் –

———–

பேதமுறு எந்தப் பிராணிகளும் இல்லு மதி
யாதிரையை நாடும் அரங்கமே -கோதை
மணவாளாராக் கொண்டார் வாய்ந்தவனார் தூங்கப்
பணவாளராகக் கொண்டார் பற்று –84-

பேதமுறு எந்தப் பிராணிகளும் மதி யாது இரையை நாடும்
இல்லும் -மாளிகைகளும் – மதி -சந்திரன் –யாதிரையை -திருவாதிரை நக்ஷத்ரம் நாடும்
அரங்கமே –
கோதை மணவாளார் ஆக்கு ஒண் தார் வாய்ந்த அன்னார் -ஆண்டாள் தன் நாயகனாகச்
செய்வித்தற்காக சூடுகின்ற மண மாலையை யுடைய அப்பெருமான்
தூங்கப் பணம் படம் வாள் அரா-பாம்பு – கொண்டார் —

————

கூடு பெரும் செல்வர் இலம் கோதில் கடை காணம்
ஆடக மாடம் சேர் அரங்கமே -நாடி யுமை
சாரங்க வத்தத்தான் தாமரையான் போற்று விறல்
சாரங்க வத்தத்தான் சார்பு –85—மூன்று சிலேடைகள்

கூடு பெரும் செல்வர் –காணம் ஆடக மாடம் சேர் –காண் அம் ஆடக -பொன் மாளிகை சேர்
இலம்-இல்லம் – காணம் ஆடக மாடம் –காண் அம் ஆடு -மேஷ ராசி -அக மாடம் -சேர்
கோதில் கடை காணம் -கொள்ளு ஆடகம் துவரை – மாடம்-உளுந்து – சேர் –
அரங்கமே -நாடி
யுமை சாரங்க வத்தத்தான் -சார் அங்க அத்தத்தான் -உமா தேவி பொருத்தப்பெற்ற பாதி உடலை உடையவன்
தாமரையான் -நான்முகன்
போற்று விறல் சாரங்க வத்தத்தான் -சார்ங்கம் என்னும் வில்லை ஏந்திய கையை யுடையவன்
சார்பு —

————–

பக்கமொடு பாமாலை பார்ப்போரும் மன்னவரும்
அக்கரம்பி ரிக்கும் அரங்கமே –மிக்க புகழ்
மன் பேயார் தீம் கவயார் வாய்ந்து தமைப் பணியும்
அன்பேயார் தீம் கவியார் ஆர்வு –86–

பக்கம் -பக்ஷம் –
பாமாலை பார்ப்போரும் -அக்கரம்பி ரிக்கும்-அக்ஷரம் பிரிக்கும்
மன்னவரும் அக்கரம்பி ரிக்கும் -அ கரம் -தீர்வை -பிரிக்கும்
அரங்கமே –மிக்க
புகழ் மன்–நிலை பெற்ற
பேயார் தீம் கவயார் வாய்ந்து தமைப் பணியும்
அன்பேயார் -அன்பு ஏயார் -பொருந்தாத கசடர் -தீம் கவியார் -தீங்கு அவியார் –

——–

போற்ற வருவோர் புகைச் சகட்டால் தோணிகளால்
ஆற்றைக் கடக்கும் அரங்கமே -சீற்ற மிகும்
துட்டக் கரனார் தொலையச் சரம் தொட்ட
எட்டக் கரனார் இடம் –87–

போற்ற வருவோர் புகைச் சகட்டால் -ரயிலாலும் -ஆற்றைக் –வழியைக் -கடக்கும்
அவர்கள்
தோணிகளாலும் -காவேரி – ஆற்றைக் கடக்கும்
அரங்கமே –
சீற்ற மிகும் துட்டக் கரனார் –துஷ்ட கரன் என்னும் அரக்கன் ன்-
தொலையச் சரம் -பாணம் -தொட்ட எட்டக் கரனார்-அஷ்டாக்ஷர த்தை யுடையவர் இடம் —-

—————

நம்பும் எழில் ஆடவர் எந்நாளும் இரவும் பகலும்
அம்பரி அங்கம் சார் அரங்கமே –தம்ப மதில்
பேர் அரவம் காட்டினார் பீதி தரு மை மடுவில்
ஓர் அரவம் காட்டினார் ஊர் –88–

நம்பும் எழில் ஆடவர் எந்நாளும் –
இரவும் -அம் பரியங்கம்-காட்டில் சார்
பகலும் அம் பரி-குதிரை – அங்கம் சார்–சவாரி செய்கின்ற – அரங்கமே —
தம்பம் -தூண் மதில் பேர் அரவம்-பெருத்த ஆரவாரம் – காட்டினார் -ஸ்ரீ நரஸிம்ஹ திரு அவதாரத்தில்
பீதி-அச்சம் – தரு மை மடுவில் -விஷம் பொருந்திய குளம் –
ஓர் அரவம்–காளியன் -அங்கு ஆட்டினார் ஊர் —

——————-

நேர்ந்த விரும்பதரை நெற் பகர்வோரும் புகையே
ஆர்ந்த சகடும் போக்கரங்கமே –சார்ந்த கலை
இந்து வரையார் எழில் வேங்கட வரையார்
நந்து வரையார் நகர் –89–

நெற் பகர்வோரும் இரும் பதரை போக்கு
புகையே ஆர்ந்த சகடும்–ரயிலும் -இரும்பு அதரை -இருப்புப் பாதையிலே போக்கு
போக்கரங்கமே –சார்ந்த கலை
இந்து வரை -சந்த்ர மண்டலம் வரை -ஆர் –பொருந்திய எழில் வேங்கட வரையார்
நம் துவரையார்-துவாரகா பூரி —

—————–

மிஞ்சு மதன் மன்னவர்கள் வேற்றூரார் பண்ணவர்கள்
அஞ்சத் திரமே அரங்கமே -கஞ்சன் என்போன்
ஆரப் புரந்து வைத்தான் அவ்வீடணனை யரசு
ஆரப் புரந்து வைத்தான் ஆர்வு –90-நான்கு சிலேடைகள்

மிஞ்சு மதன் –அஞ்சத் திரமே-அஞ்சு அஸ்திரம் -மேவு
மன்னவர்கள் -அஞ்சத் திரமே-அம் சத்திரம் -குடை -மேவு
வேற்றூரார் -அஞ்சத் திரமே-அம் சத்திரம் -தங்கும் இடம் -மேவு
பண்ணவர்கள்-தேவர்கள் -அஞ்சத் திரமே-அம் சத்திரம் -யாகம் -மேவு
கஞ்சன் என்போன் ஆரப் புரந்து வைத்தான் –ஆர் அ புரம் -சரீரம் துவைத்தான் -நசுக்கி அழித்தவன்
அவ்வீடணனை யரசு ஆரப் புரந்து -காப்பாற்றி வைத்தான் -சிரஞ்சீவியாக வைத்தான் –

—————–

தாமப் பொதுவரிலம் தண் வாவி கோபுரம் சீர்
ஆமை மருவும் அரங்கமே -தாமமெனு
மாவா ரண வரையார் வண் கையில் ஆழிக்கு அஞ்ச
மாவா ரண வரையார் வாழ்வு –91–மூன்று சிலேடைகள்

தாமப் பொதுவரிலம் -இடையர் மனை -சீர் ஆமை –அழகிய பசுக்களும் ஆடுகளும் -மருவும்
தண் வாவி -குளம் -சீர் ஆமை-கமடம் – மருவும்
கோபுரம் சீரா மை -மேகம் -மருவும்
தாமமெனும் -இருப்பிடமாகிய
ஆவா ரண வரையார் -ஹஸ்தி கிரியார்
வண் கையில் ஆழி வரை -சக்கர ரேகை – கஞ்ச வரை -பத்ம ரேகை –
மா வாரண வரை–சங்க ரேகை -யுடையார் வாழ்வு —

————-

பொங்கு மத கரிகள் புள்ளிக் கலை யினங்கள்
அங்கரிணி மேனாடு அரங்கமே –தங்கு ததி
தொட்டுண்ட கையினார் தூயவனை தாம்பு அதனால்
கட்டுண்ட கையினார் காப்பு –92–

மத கரிகள்-யானைகள் -அங்கரிணி -பெண் யானைகள் -மேல் நாடும்
புள்ளிக் கலை யினங்கள் -புள்ளி மான் கூட்டங்கள் -அங்கரிணி-பெண் மான் -மேல் நாடு
தத்தி -தயிர்
தூய அன்னை யசோதை
கட்டுண் தகையினார் -கட்டுண்ட பெருமையுடைய தாமோதனார்

————

வாணுதலார் சேர்ந்து இலகு மஞ்சமதில் மாலைகளும்
ஆண் அழகரும் தூங்கு அரங்கமே -வாணன்
கரக்கப் பரிந்தார் கனி மா வலி பால்
இரக்கப் பரிந்தார் இடம் — 93–

மஞ்சமதில் மாலைகளும் தூங்கு -தொங்குகின்ற
மஞ்சமதில் ஆண் அழகரும் தூங்கு -கண் வளர்ந்து அருளுகின்ற
வாணன்-பாணாசுரன் – கரம் கப்பு -கைக்கூட்டம் – அரிந்தார் -அறுத்து அருளியவர்
மா வலி பால் இரக்கப்–யாசிக்கப் – பரிந்தார்–மனம் உவந்தவர் – இடம் —

————

தாண்டு வடவைகளும் தண் பொழில் வாய் மஞ்ஜைகளும்
ஆண்டுரகம் தேடும் அரங்கமே -காண்டவனம்
அங்கிக் களித்தார் அடவியில் நீர்த்தோர் இடத்துத்
தங்கிக் களித்தார் தலம் –94–

தாண்டு வடவைகளும்–பெண் குதிரைகளும் -ஆண்டுரகம் –ஆண் துரகம் -குதிரை தேடும் –
தண் பொழில் வாய் மஞ்ஜைகளும்-ஆண்டுரகம்–ஆண்டு உறக்கம் -பாம்பு – தேடும்
காண்டவனம் அங்கிக் களித்தார் -அங்கி -அக்னி பகவான் -அங்கிக்கு அளித்தார்
அடவியில் -காட்டில் -நீத்தோர் –ரிஷிகள்- இடத்து-ஸ்ரீ ராமனாகத் தங்கிக் களித்தார் –

—————-

தக்க புராணம் படிப்போர் தார் வேந்தர் வேதியர் கை
அக்கதைகள் மேவும் அரங்கமே –மிக்க வருள்
செய்ய கலம்பகத்தான் சீர்த்தரசன் அன்றுரைத்த
செய்ய கலம்பகத்தான் சேர்வு –95–மூன்று சிலேடைகள்

தக்க புராணம் படிப்போர் –அக்கதைகள்-சரித்திரங்கள் – மேவும்–
தார் வேந்தர் –அக்கதைகள்–கதாயுதம் – மேவும்–
வேதியர் கை அக்கதைகள்-அக்ஷதைகள் – மேவும்
அரங்கமே —
மிக்க வருள் செய் யகல் அம்பகத்தான் -அம்பகம் -கண் –
சீர்த் தாசன் –ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -என்ற ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
அன்றுரைத்த
செய்ய கலம்பகத்தான் –ஸ்ரீ திருவரங்க அலம்பகம் -என்ற அழகிய ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தை யுடையவன் –

————

வம்பு மலர் வாவி மாட முறு மடவார்
அம்பினலை வாரும் அரங்கமே –பம்பு மணச்
சாந்தப் புரத்தார் தரணியில் எப்போர் தனிலும்
தாந்தப் புரத்தார் தலம் –96–

வம்பு -வாசனை மலர்
வாவி –அம்பின் அலைவு ஆரும்-
மாட முறு மடவார் -அம் பின்னலை வாரும்
அரங்கமே —
பம்பு -நிறைந்த -மணச் சாந்து அப்பு உரத்தார் -திரு மார்பை யுடையவர்
தரணியில்-பூமியில் எப்போர் தனிலும் -தாம் தப்பு உரத்தார் -வலிமையை யுடையவர் —

—————-

கண்டு மொழி யார் நடனம் காண்போர் வருவி புதர்
அன்டுறக்கம் விட்ட அரங்கமே -கண்டு தொழா
மான வருடம் பெய்தார் மாதர் நிரை யுவப்பக்
கான வருடம் பெய்தார் காப்பு –97–

கண்டு மொழி யார் -கற்கண்டு போலும் இனிய சொல்லை யுடைய மகளிர்
நடனம் காண்போர் –அன்டுறக்கம் விட்ட-
வரு விபுதர் -தேவர் -அன்டுறக்கம் விட்ட –அண்-பொருந்திய -துறக்கம் -சுவர்க்கம் -விட்ட
அரங்கமே –
கண்டு தொழா மான வருடம் பெய்தார் -மானவர் -மானிடர் உடம்பு எய்தார்
மாதர் நிரை –மாதரும் ஆ நிரையும்
யுவப்பக் கான வருடம்-வேணு கானம் ஆகிய மழை – பெய்தார் –

————–

சீர் அணுகு வேதியர்கள் தேரோடு நல் வீதி
ஆரவாரம் மோதரங்கமே -ஏரிறகு
வாய்த்த விருந்தா வனத்தார் வந்து தொழா வானிரை முன்
மேய்த்த விருந்தா வனத்தார் வீடு –98-

ஆர -மிகுதியாக வாரம் ஒது
வீதி ஆரவாரம் மோது
வாரம் -வேதம் ஓதும் ஒரு முறை
ஏரிறகு வாய்த்து அவிரும் தாவு அனத்தார் -பிரமன்
ஆன் நிரை -பசுக்கூட்டம்
மேய்த்த விருந்தா வனத்தார் –பிருந்தாவனத்தை யுடையவர் வீடு –

————

மண்டலத்து மானிடரும் வண் புட் குழாமும் சீர்
அண்டத் துதிக்கும் அரங்கமே –அண்டர் இலம்
சென்று உயரம் தாங்கு உறி ஆர் தீம் ததி யுண்டார் நினையார்
வன்று உயரம் தாங்கு உறி ஆர் வாழ்வு –99–

மானிடரும் சீர் அண்ட- துதிக்கும்
வண் புட் குழாமும் சீர் அண்டத்து உதிக்கும்
சென்று உயரம் தாங்கு உறி ஆர்
நினையார் வன் துயரம் தாம் குறியார் -கருதார் –

———

நம் மானிட வீரர் நாலு புறம் சூழி குயில்
அம்மா வின் மேவும் அரங்கமே –வெம்மான் எய்
வைய மருங்கோலத்தர் மண்ணிடந்த கோலத்தர்
வைய மருங்கோலத்தர் வாழ்வு –100–ஐந்து சிலேடைகள் —

நம் மானிட வீரர் –அம்மா வின் -அம் மா வில் -மேவும்
நாலு புறம் -அம்மா வின்–அம் மா இல் – மேவும்
சூழி -அம்மா வின் -அம் மாவில்- யானையில் -மேவும்
குயில் அம்மா வின் மேவும்-அம் மாவில் -மா மரத்தில் -மேவும்
அம்மா வின் -அம மா திரு மகள் இல் -மேவும்
அரங்கமே —
வெம்மான் –மாரீசன் -எய் வை–கூர்மை -யமரும் -கோல் -பாணம் -அத்தர்–திருக்கரத்தை யுடையவர்
மண்ணிடந்த கோலத்தர் -ஸ்ரீ வராஹ ரூபத்தை யுடையவர்
வையம் அருமை கோலத்தர்–அரிய ஸுந்தர்யத்தை யுடையவர் –
வாழ்வு —

——————————-

ஆனைக்கும் கோபுரத்துக்கும் சிலேடை வெண்பா

கும்பம் மருவிடலால் கோவை அணுகிடலால்
இம்பர் ஏறும்படி இருக்கையால் –வம்பு மலர்த்
தேன் அனைய இன் சொல் திரு வேங்கடத்தானே
ஆனை நிகர் கோபுரமே யாம்

கும்பம் மருவிடலால் –யானை மத்தகத்தைப் பொருந்தி இருப்பதாலும் கோபுரங்கள் ஸ்தூபிகளைப் பொருந்தி இருப்பதாலும்
கோவை அணுகிடலால் -யானை அரசரைச் சேர்ந்து இருப்பதாலும் கோபுரங்கள் ஆகாயத்தை அளாவி இருப்பதாலும்
இம்பர் ஏறும்படி இருக்கையால் –இவ்வுலகோர் யானை மேல் ஏறிச் செல்லும்படி இருப்பதாலும் -ஏறுமாறு படிந்து கொடுப்பதாலும்
கோபுரங்கள் மனிதர்கள் ஏறும்படி படிக்கட்டுகள் உடன் பொருந்தி இருப்பதாலும்
வம்பு மலர்த் தேன் அனைய இன் சொல் திரு வேங்கடத்தானே ஆனை நிகர் கோபுரமே யாம்

———–

நம்மாழ்வாருக்கும் திருத்தேருக்கும் சிலேடை வெண்பா

எட்டு எழுத்தினைத் தேர் இரண்டின் மகிமை தேர்
மட்டில் சரம கவி மான்மியந்தீர் -சிட்ட்ரைத் தேர்
ஏர் மாறன் மா மதம் தேர் என்று முழக்கம் காட்டும்
சீர் மாறன் ஏறி வரும் தேர்

தேர் -தெளியுங்கோள் என்னும் பொருளில்
இரண்டு த்வயம்
சரம கவி மான்மியம் -சரம ஸ்லோக மஹிமை
ஏர் மாறன் மால் தன் மா மதம்-ஸ்ரீ வைஷ்ணவ மதம்
மாறன் ஏறி வரும் தேர் தேர் என முழக்கம் காட்டும்

————-

ஸ்ரீ ரெங்கநாதன் பேரில் நீரோட்டக வெண்பா

அரங்கத் தகி யிணையில் அண்டியே யண்டர்
தரங்கக் கடற்றார் அணியார் –சிரங்களினால்
ஏத்திட நன்னித்திரை செய் எந்தாய் அடியேனை
காத்திடலே நின் தன் கடன்

அகி அணை -ஸ்ரீ சேஷ சயனம்
அரங்கம் -ஸ்ரீ ரெங்க விமானம்
உதடு ஒன்றோடு ஓன்று ஒட்டாமலும் குவியா மலும் உள்ள எழுத்துக்கள் ஆகிய
உ ஊ ஓ ஒ ஒவ் –மேற்படி -உயிர் மெய் எழுத்துக்கள் -ம ப வ -எழுத்துக்கள்
வராமல் பாடுவது நீரோட்டகம் ஆகும் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அபி நவ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: