ஸ்ரீ ராமரும் ஸ்ரீ ராமானுஜரும் —

1–திரு அவதார ஒற்றுமை

சித்திரை ராமன், ராமானுஜர் இருவருமே
சூரியன் உச்சநிலையில் பிரகாசிக்கும்
சித்திரை மாதத்திலே அவதரித்தவர்கள்.
சைத்ர மாஸே ஸிதே பக்ஷே நவம் யாஞ்ச புனர்வஸு என்பது இராமர் அவதாரத்தைக் குறிக்கும் சுலோகம்.
(அதாவது சித்திரைநவமியில் புனர்பூசத்தில் அவதரித்தார்.)

ராமானுஜ அவதாரம் மேஷார்த்ரா ஸம்பவம் விஷ்ணோர் தர்ஸன ஸ்தாபனநோத் சுகம் என்று
மேஷ மாதமான சித்திரையில் நிகழ்ந்ததாக சுலோகம் குறிக்கிறது.
ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்,
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் – ஏழ்பாரும்
உய்ய எதிராசர் உதித்தருளும் “சித்திரையில்
செய்ய திருவாதிரை” – என்று மாமுனிகள் இயற்றிய உபதேச இரத்தின மாலை,
இராமானுஜர் அவதாரத்தை இன்னும் சிறப்பாக கூறும்.

இருவருமே கடக லக்னத்தில் இத் தரணி வாழ அவதரித்தவர்கள்.

———–

ஸ்ரீ மான்கள்

நட்சத்திரம் ராமன் அவதரித்தது புனர்பூசம்
ஆயினும் பொதுவான பெருமாள் நட்சத்திரம் திருவோணம்.
ராமரின் மூல சொரூபமான பெருமாளின் நட்சத்திரம் திருவோணம்.
வைணவத்தில் திரு என்கிற அடைமொழியோடு இருக்கக்கூடிய இரட்டை நட்சத்திரங்களில்
ஒன்றில் எம்பெருமான் அவதரித்தான். அது திருவோணம்.
இரண்டாவது திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் எம்பெருமானார். அதாவது ராமானுஜன்.

—————-

3-புத்திர காமேஷ்டி யாகம்-

ராமனுடைய அவதாரத்திற்காக, (அதாவது ராமனைப் பிள்ளையாகப் பெறுவதற்காக)
தசரதன், வசிஷ்டரின் ஆலோசனையின் பேரில், புத்திர காமேஷ்டி யாகம் செய்தார்.
அதனால் சாட்சாத் மகாவிஷ்ணுவே தசரதனுடைய பிள்ளையாக இம்மண்ணுலகில் அவதாரம் செய்தார்.

அதைப் போலவே,
ராமானுஜர் பெற்றோர்களான கேசவ சோமையாஜி காந்திமதி அம்மையாருக்கு,
பலகாலம் பிள்ளை இல்லாமல் இருந்து, அந்த புத்திரசோகம் தீர, திருக்கச்சி நம்பிகளின் ஆலோசனையின் பேரில்,
திருவல்லிக்கேணியில் புத்திரகாமேஷ்டி யாகம் இயற்றி, அதன் வழியாக ராமானுஜர்
இப்பூவுலகில் அவதரித்தார்.

————–

4-வைகுண்டம் பெற…

இந்த உலகம் வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டும். எல்லோரும் வைகுண்டத்தை அடையும் பேற்றினைத் தர வேண்டும்
என்பதற்காகவே, மேலே இருந்து கீழே இறங்கி (அவதாரம்) வந்தான்,
ராமன்.
புற்பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்குள் உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே

அதைப் போலவே இந்த உலகத்தில் இருக்கக் கூடிய ஒவ்வொரு ஆன்மாவும் கடைத்தேற வேண்டும் என்பதற்காகவே
ராமானுஜனுடைய அவதாரம்.
அதனால் அவரை அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச மாமுனிவர் என்று கொண்டாடுகின்றோம்

—————

5-அழகு –

ராமா என்கிற பெயருக்குப் பிரமிக்கச் செய்பவன். பார்ப்பவர் விரும்பும் அழகு உடையவன்.
ஆடவர்கள் பெண்மையை விரும்பும் தன்மை உடையவன் என்று பொருள். இதைக் கம்பன்.

தோள்கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரை ஒத்தார்- என்று வர்ணிக்கிறார்.
பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம் –
கண்டவர் தம் மனம் வழங்கும் அழகன் –

ராமானுஜர் வடிவழகும் அப்படிப்பட்டதே என்பதை கீழே இருக்கக் கூடிய
எம்பார் அருளிய பாசுரம் காட்டுகின்றது.
பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கணநற் சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக் கெதிர் இல்லை எனக்கெதிரே

——————-

6-வேதங்களையும்,
தர்மங்களையும்
காப்பாற்றுவதற்காக–திரு அவதாரங்கள்

வேதம் தான் ராமாயணமாக அவதரித்தது.
வேத நாயகன் தான் ராமனாக அவதரித்தான்.

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித், தாங்கரும் தவ மேற்கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப், புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழிரண்டு ஆண்டில் வா – என்ற ஆணைக்கேற்ப,
காடு ஆளச் சென்றது, அங்கே இருக்கக்கூடிய துறவிகளைக் காப்பாற்றுவதற்காக என்பதை,
ராமாயணம் நமக்கு நன்றாகத் தெரிவிக்கிறது.

‘‘செருமுகத்துக் காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” என்று கேட்கிறார் விஸ்வாமித்திரர்.
விசுவாமித்திரர் அழைக்க அவருடன் ராமன் சென்றதுகூட விசுவாமித்திரர் செய்கின்ற யாகத்தைக் காப்பாற்றுவதற்காக.

ஆரண்ய காண்டம் சர்க்கம் 17ல் ரிஷிகள் ராமனிடம் முறையிடுகிறார்கள்.
“ராமா! நாங்கள் அக்னி ஹோத்திரங்களையும், பருவ காலங்களில் இஷ்டிகளையும் செய்யும்போது,
ராட்சர்கள் ஓடிவந்து கெடுக்கிறார்கள். ராமா நீ யக்ஞ மூர்த்தி.
யாகங்களைக் கெடுக்கிறவர்கள் உனக்கே அபராதம் செய்தவர்கள் அல்லவா!
எனவே, நீயே அபயப் பிரதானம் தந்து வேத தர்மத்தைக் காக்க வேண்டும்.”

இப்போது ராமன் அவர்களிடம் சொல்கின்றான்.

‘‘ரிஷிகளே! நான் உங்களுக்கு சத்தியம் செய்கின்றேன். என் செல்வம், என் மனைவி, ஏன்… என் அன்புக்குரிய தம்பி,
எல்லோரையும் இழந்தாலும், நான் உங்களுக்கு தந்த வாக்குறுதிப்படி நடப்பேன்.
இதற்காகவே ராட்சஸர்களை பகைத்துக் கொண்டு சீதையைப் பிரிந்தார்.
யாகத்தைக் காப்பாற்றுவதன் மூலமாக, யாக மந்திரங்களாகிய வேதங்களைக் காப்பாற்றுகிறார்.
எனவே, ராமாவதாரத்தில் முக்கிய நோக்கமே சாதுக்களையும் வேதங்களையும் காப்பாற்றுவது.

ராமானுஜனுடைய அவதார நோக்கத்தையும் இதிலே பொருத்திப் பார்த்தால்,
அவரும் வேதங்களையும், வேதங்களின் தர்மங்களையும் காப்பாற்றுவதற்காகவே அவதரித்தார்.
வேதத்தின் உபநிடத வாக்கிய சூத்திரங்களான பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் செய்ததன் மூலம், அவர் வேத சம்ரட்சணம் செய்தார்.
தமிழ் வேதமான திருவாய்மொழியை நாடெங்கும் பரப்பி, அதன் மூலமாகவும், உபய வேதங்களையும் அவர் காத்தார் என்பது
ராமானுஜருக்கு கூடுதல் ஏற்றம்.
வேதத்தையும், வேத தர்மத்தையும் காப்பதற்காக, 74 சிம்மாசனாதிபதிகளையும் அவர் நியமித்தார்.

வேத தர்மத்தை ரட்சிப் பதற்காக சுவாமி ராமானுஜரும் மனைவியை பிரியும் சூழல் ஏற்பட்டது.
சீதையை பிரிந்து வேத தர்மத்தை காப்பாற்றுவேன் என்றான் ராமன்.
தன் மனைவியை பிரிந்து வேத தர்மத்தை இரட்சித்தார் ராமானுஜன்.
அதனால் தான் வேதம் தழைத்தது என்று திருவரங்கத்து அமுதனார் பாடுகிறார்.

பண் தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய்-
விண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம் மெய்ம்மை-
கொண்ட நல் வேதக் கொழுந்தண்டமேந்திக் குவலயத்தே-
மண்டி வந்தேன்றது* வாதியர்காள்! உங்கள் வாழ்வற்றதே.

———-

7-வெற்றி -வில்லாலும் சொல்லாலும்

ராமனைப் பொறுத்த வரையிலே
வெற்றியைத் தவிர வேறு அறியாதவர். அவர் பெற்ற வெற்றி வில் அம்புகளால் பெற்ற வெற்றி.
அதைப் போலவே ராமானுஜர் பற்பல வாதப் பிரதிவாதங்களை நடத்தினார்.
அதன் மூலமாக யாதவப் பிரகாசர் தொடங்கி, யஞ்ஜமூர்த்தி வரையில் வென்று, தம்முடைய சமய மரபுக்கு கொண்டு வந்தார்.
அவர் எந்த சாஸ்திர தர்க்க வாதங்களிலும் தோற்றது கிடையாது.

ராமனின் வில் அம்பும், ராமானுஜரின் சொல் அம்பும் தோற்றதேயில்லை.
ராமன் தனி ஆளாக பன்னீராயிரம் போர்வீரர்களை கர தூஷண வதத்திலே வென்றார்.
ராமானுஜர் மேல்கோட்டையில் தம்முடன் எதிர்த்து வாதிட்ட பன்னீராயிரம் சமணர்களை தனி ஒருவராக தர்க்க வாதத்தில் வென்றார்.

ராமரின் வில் அம்பும் ராமானுஜரின் சொல் அம்பும் அமோகம் –

———-

8-ஆசார்யர்களாக இருந்து பெருமை பெற்றனர்  

வசிஷ்டர் விசுவாமித்திரர் போன்றவர்கள் ராமனுக்கு ஆசார்யர்களாக இருந்து,
ராமனால் பெருமை பெற்றனர்.

ராமானுஜரின் வாழ்வில் பெரிய நம்பிகள், திருக்கோட்டியூர் நம்பிகள் உள்ளிட்ட ஆசாரியர்கள்
ராமானுஜரால் பெருமை பெற்றனர்.

———–

9-எல்லோரையும் அரவணைத்து…

குகன் தொடங்கி சுக்ரீவன், வீடணன் வரை எல்லோரையும் அரவணைத்து தம்முடைய உறவுகளாக
தம்பிகளாக ஏற்றுக் கொண்டான் ராமன்.
ராமானுஜரும் தாம் வாதில் வென்றவருக்கு மடாதிபதி பட்டம் சூட்டி தன்னுடைய பெயரையே கொடுத்து எம்பெருமானார் ஆக்கினார்.
அவருக்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்கிற பெயரையே சூட்டினார்.
அதைப்போலவே தன்னுடைய சகோதரி பையனான கோவிந்தனை திருத்திப் பணி கொண்டு
அவருக்கும் எம்பார் என்கிற பெயரை வழங்கினார்.

ராமன் வேடுவர் குல குகன் போன்றவர்களையும் தமது உசாத் துணையாகக் கொண்டு கைங்கரியம் பெற்றது போல,
ராமானுஜரும் வடுக நம்பி, பிள்ளை உறங்காவில்லிதாசர் போன்ற வேடர் குலத்தைச் சேர்ந்தவர்களையும்
தம்முடைய துணைவராக வைத்துக் கொண்டு, நட்பு பாராட்டி, அவர்கள் பெருமையை உலகறியச் செய்தார்.

—————

10-சரணாகதி சாஸ்திரம்

சரணாகதி சாஸ்திரத்தைக் காட்டிக் கொடுத்தார் ராமன்.
அபயம் என்று அடைந்துவிட்டால் அவர்களை காப்பாற்றாமல் ஓய மாட்டேன்.
அதுவே என்னுடைய வாழ்நாளில் நோக்கம் என்பதையே வீடண சரணாகதி படலத்தில்,
தனது கடற்கரை வார்த்தையாக, (சரம ஸ்லோகமாக ) ராமபிரான் சாதித்தார்.

(ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம-யுத்த -18-33-)

(இதன் பொருள்: ஒரு தரமே என்னை பிரபத்தி பண்ணினவன் பொருட்டும், இனி நான் உனக்கு அடியேனாய் ஆகிறேன்
என்று யாசிக்கிறவன் பொருட்டும், எல்லா பிராணிகள் இடத்தும் நான் அபயம் அளிக்கிறேன். இது எனக்கு விட முடியாத சங்கல்பம்)

வீடணன் வந்து சேர்ந்தபோது ராமன், அவனைச் சேர்த்துக்கொள்வது குறித்து அபிப்பிராயம் கேட்கிறார்.
பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அனேகமாக அனுமனைத் தவிர,
யாருமே வீடணனைச் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.
அனுமன் கூட அவன் நல்லவன் என்பதால் சேர்த்துக் கொள்ளலாம் என்று தன்னுடைய கருத்தை வெளியிட்டார்.
அப்போது நிறைவாக ராமன் வெளியிட்ட கருத்து.

“அவன் கெட்டவனாகவே இருந்தாலும் கூட, என்னுடைய திருவடியில் சரணடைந்து விட்டால்,
அவனைக் காப்பாற்றுவதே என்னுடைய வாழ்வின் நோக்கம் என்று சொல்லிச் சேர்த்துக் கொண்டார்.

சரணாகதியின் உச்ச நிலை இது. அதனால்தான் போர்க்களத்திலே கூட, தன்னோடு எதிர் அம்பு கோத்த ராவணனே எதிர் நின்ற போதும்,
அவன் ஆயுதங்களை இழந்து தவித்தபோதும், இன்றுபோய் நாளை வா என்று சொன்னார்.
கச்சாநுஜாநாமி ரணார்திதஸ்த்வம் ப்ரவிஸ்ய ராத்ரிசரராஜ லங்காம் ஆஸ்வாஸ்ய நிர்யாஹி ரதீசதன்வீ
ததாபலம் த்ரக்ஷ்யஸி மே ரதஸ்த என்பது வான்மீகி சுலோகம்.

“இன்று உன்னிடம் ஆயுதம் இல்லை.ரதம் இல்லை. தவிர சோர்வாக இருக்கிறாய்.இன்று திரும்பிப் போ.
நாளை வா. என் போர் வீரம் காண்பாய்.” இதையே கம்பன் பாடுவது இன்னும் அற்புதம்.

‘ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா’ என நல்கினன்- நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

இப்படி எதிரிக்கும் அபய பிரதானம் தந்தவன் ராமன்.

ராமானுஜரும் ஒரு பங்குனி உத்திரத் திருநாளில், பிராட்டியும் பெருமாளும் சேர்த்தியாக இருக்கக்கூடிய நேரத்தில்,
“இந்த உலக மக்களெல்லாம் உன்னிடத்திலே சரண் அடைவார்களோ, சரணடைய மாட்டார்களோ தெரியாது;
ஆனால், அவர்களுக்காக, இன்று உங்கள் இருவர் திருவடிகளிலே நான் சரணம் அடைகிறேன்” என்று சொல்லி
அதற்காகவே கத்யத்ரயம் என்கின்ற மூன்று நூல்களை இயற்றினார். அந்த மூன்று நூல்களின் ஒன்றுதான் சரணாகதி கத்யம்.

————

11-சரணாகத ரக்ஷணம்.

பெண்ணுக்கு சாப விமோசனம் தன் திருவடி பலத்தால் அகலிகைக்கு சாப விமோசனம் தந்தான் ராமன்.
காஞ்சி மன்னனின் மகளுக்கு ப்ரம்ம ராட்ஷஸ் பிடித்து அவள் புத்தி ஸ்வாதீனமில்லாமல் இருந்தபோது ராமானுஜர்
தம் திருவடியை அவள் சிரசின் மீது வைத்து குணமாக்கி சாப விமோசனம் தந்தார்.

ராமன் ஜடாயு என்கிற பறவைக்கு தன் சங்கல்பத்தினால் மோட்சம் அளித்தார்.
ராமானுஜரும் ஒரு தயிர் விற்கும் பெண்மணிக்கு ஓலை கொடுத்து மோட்சம் கொடுத்தார்.

—————

12-திருவரங்கனிடத்திலே ஈடுபாடு

வைணவத்தில் கோயில் என்று சொன்னால் அது திருவரங்கத்தைக் குறிக்கும்.
திருவரங்கப் பெருமானை பெரிய பெருமாள் என்பர்.
அப்படிச் சொல்வதற்குக் காரணம், பெருமாளாகிய ராமபிரான் தன்னுடைய குல தெய்வமாக வழிபட்ட பெருமாள் அரங்கநாதர்.
அரங்கனுக்குக் கைங்கரியம் செய்து கொண்டு பூஜித்தவர் ராமபிரான்.

ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங் கோயில்
சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்க மெனத் திகழுங் கோயில் தானே!

அதே அரங்கனுக்குக் கைங்கரியம் செய்து கொண்டு திருவரங்க செல்வம் முற்றும் திருத்தி வைத்து
திருவரங்க கோயிலின் ஏற்றத்தை திக்கெல்லாம் பரப்பியவர் ராமானுஜர்.
ராமனுக்கும் ராமானுஜருக்கும் அரங்கனிடத்திலே அதிக ஈடுபாடு என்பது அவர்கள் இருவருக்குமான ஒற்றுமை.

—————-

13-திருநாமச் சிறப்பு

“ராம” என்னும் நாமம் சொல்லும் பொழுது, பகவானுடைய நாமத்தை மட்டும் தான் உச்சரிக்கிறோம்.
ஆனால் “ராமானுஜ” என்கிற நாமத்தை உச்சரிக்கின்ற போது,
பரம ஆச்சார்யனின் திருநாமத்தையும் சேர்த்து உச்சரிக்கிறோம் என்பது சிறப்பு அல்லவா.
இப்படித் தொட்ட தொட்ட இடமெல்லாம் ராமருக்கும் ராமானுஜருக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டு வியக்கலாம்.

—————–

14-பஞ்ச சம்ஸ்காரம் ராமர் சந்நிதியில் மதுராந்தகம்

ஆசார்யர்களோடும் தொடர்பு பெற்று விளங்குகிறது இந்தத் தலம்.
ஆதியில் வகுளாரண்யம் என்று பெயர் பெற்ற மகிழ மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாகத் திகழ்ந்தது.
கிளியாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது மதுராந்தகச் சோழரின் நினைவாக இப்பெயர் பெற்றதாகக் கூறுவர்.
மதுரமான (இனிமையான) பல புண்யதீர்த்தங்களையுடைய இடம் என்றும் பொருள் கொள்ளலாம்.
கல்வெட்டுக்களில் மதுராந்தக சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூர்
சோழ மன்னனால் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மான்யமாக அளிக்கப்பட்டது.
ப்ரஹ்ம வைர்த்தம், பார்க்கவம் போன்ற புராணங்களில் இந்தத் தல மஹாத்மியம் கூறப்பட்டுள்ளது.

விபண்டக மஹர்ஷி கிளியாற்றின் கரையில் தவம் புரிந்தபோது ராமபிரான் வனவாசம் முடித்துத் திரும்பி
அயோத்தி செல்லும் போது புஷ்பக விமானம் இத்தலத்தைக் கடக்க முடியாமல் நின்றது.
ஸீதாபிராட்டியின் கையைப் பற்றி விமானத்திலிருந்து இறங்கி முனிவருக்கு ராமபிரான் காட்சி அளித்த இடமே இத்திருத்தலம்.
5 நிலை கோபுரங்களுடன் கூடிய ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது இந்தத் தலம்.
சுகர் என்ற மஹர்ஷியும் தவம் செய்த இடம் இதே மதுராந்தகம் தான்.

கோவிலில் நின்றதிருக்கோலத்தில் மூலவராகக் கோதண்டராமர் கல்யாண கோலத்தில்
ஸீதை, லக்ஷ்மணருடன் காட்சி தருகிறார்.
உற்சவ மூர்த்தியான கோதண்ட ராமர் சற்றுப் பெரிய வடிவினராக ஸீதை லக்ஷ்மணருடன் ஸேவை ஸாதிக்கிறார்.
மூலவர் விபாண்டக மஹர்ஷிக்கு ஸேவை தந்த கோலத்தில் பாணிக்கிரகண பாணியில் ஸீதையின் கையைப் பற்றிக் கொண்டுள்ளார்.
விபாண்டக மஹர்ஷியும் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

சற்றே சிறய அளவில் உள்ள மற்றொரு உற்சவமூர்த்தியே கருணாகரப் பெருமாள்.
அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உள்ளார்.
இவரையே ராமபிரானாக விபாண்டக மஹர்ஷி ஆராதித்துத் தனக்குக் காட்சி அளிக்கும்படி வேண்டினாராம்.
கருணாகரப் பெருமாளின் நாச்சியாரே ஜனகவல்லித் தாயார்.
இவர் தனி ஸந்நிதியில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளார்.
எல்லா உற்சவங்களும் கருணாகரப் பெருமாளுக்கே.
ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் மட்டும் கோதண்ட ராமருக்கு. உற்சவ மூர்த்தி கண்ணன இவர் ஸந்நிதியில் உள்ளார்.

மற்றும் பிற ஸந்நிதிகளில் ஆண்டாள், விஷ்வக்ஸேனர், ராமானுஜர், பெரியநம்பிகள்,
நிகமாந்த மஹாதேசிகன், மணவாள மாமுனிகள் உளளனர்.
ஆஞ்சனேயர் ராமபிரான் கோவிலுக்கு எதிரில் தனி ஸந்நிதி கொண்டு விளங்குகிறார்.
லக்ஷ்மி ந்ருஸிம்ஹர், உற்சவரான ப்ரஹ்லாதவரதர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் உள்ளார்.
சக்கரத்தாழ்வாரும், ந்ருஸிம்ஹரும் சேர்ந்து ஒரு ஸந்நிதியில் உள்ளனர்.
சக்கரத்தாழ்வாரின் உற்சவ மூர்த்தியும் அங்கேயே உள்ளது.

இந்தக் கோவில் புஷ்கரிணியை ராமச்சந்திர புஷ்கரிணி என்றழைக்கின்றனர்.
சரித்திரப்புகழ் பெற்ற ஏரியைக் காணக்கோவில் அருகில் உள்ள பாதை வழியே படிகள் உள்ளன.
ஏரிக்கும் இந்தப் படிகள் உள்ள நடைபாதைக்கும் நடுவில் வண்டிகள் செல்லும் பாதை உள்ளது.
இங்கு அஹோபில மடத்தினரால் நடத்தப்படும் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியும், ஓரியண்டல் பள்ளியும் உள்ளன.

ஒரு காலம். 1825ஆம்ஆண்டு ஏரி மழையில் நிறைந்து ததும்புகிறது. தண்ணீரின் வேகத்திற்கு கரைகள் ஈடுகொடுக்கவில்லை.
எத்தனை முறை அடைத்தாலும் கரைஒருபக்கம் உடைந்துகொண்டே இருக்கிறது.
அப்போது கிழக்கிந்திய அதிகாரி லயனல் பிளேஸ் பொறுப்பில் இருக்கிறார்.
கரை உடைபடுவதை தடுக்க வழி தேடி அவர் தவித்தபோது, ஒருவர் சொல்கிறார்.
இங்குள்ள கோதண்டராமர் மிகவும் சக்தி வாய்ந்தவர், பாழ்பட்டு இருக்கும் ஜனகவல்லி தாயார் சன்னதியை சரிசெய்து
கொடுப்பதாக வேண்டிக்கொள்ளுங்கள் என்கிறார்.
அவரை எள்ளி நகையாடி அனுப்பிவிட்டாலும் லயனல் பிளேசுக்கு உள்ளூர ஒரு நப்பாசை. வேண்டிக்கொள்கிறார்.

வேண்டிக்கொண்ட நாளில் இடி, மின்னல், மழை..மனம் பதைக்கிறது. ஏரி உடைந்தால் மதுராந்தகம் மட்டுமின்றி
சுற்றுவட்டார கிராமங்களும் மூழ்கிவிடும். எத்தனை உயிர் போகுமோ? நினைக்கவே பதறியது. குதிரையில் ஏறி கிளம்புகிறார்.
மழை கொஞ்சம் கூட விடுவதாக இல்லை. பதற்றத்தோடு கரையை நெருங்குகிறார்.
தூரத்தில் கரையோரம் இரண்டு பேர் நின்றிருக்கிறார்கள்.
நல்ல உயரம்.. கருநிற வைரமாய் ஜொலிக்கும் ஒருவரின் கைகளில் வில் ஏந்தி நிற்கிறார்,
பக்கத்தில் அவருக்கு ஈடு கொடுத்து மற்றொருவரும் வில்லேந்தி நிற்கிறார். இருவரும் கரையோரம் நடக்கிறார்கள்.
லயனல் பிளேசுக்கு பதற்றம் உண்டாகிறது. எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றிருக்கும் கரை மேல் நிற்கிறார்களே.
அருகில் போக நினைக்கிறார். போக முடியவில்லை. ஒரு ஒளிப்பிழம்பாக அவர்கள் இருவரும் கரையில் நடந்தபடியே இருக்கிறார்கள்.
விடிகிறது. அத்தனை மழைக்கும் கரை உடையவில்லை. லயனல் பிளேஸ் ஆச்சரியத்தில் உறைகிறார்.
வந்தது இதோ இந்த ஏரி காத்த ராமரும் லட்சுமணரும் தான் என்று உணர்ந்து மெய் சிலிர்த்து போகிறார்.
பிறகு வேண்டியபடி அவர் ஜனகவல்லித் தாயார் சன்னதியை சீரமைத்து தருகிறார். அதற்கான ஆதாரங்கள் கோவிலில் இன்றும் இருக்கின்றன.

ஆனி மாத ப்ரஹ்மோத்சவமும், பங்குனி மாதத் திருக்கல்யாண உத்சவமும், மார்கழி மாத அத்யயன உத்சவமும் இங்கு புகழ் பெற்றவை

வைணவ சித்தாந்தத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய ஸ்ரீ ராமானுஜருக்கு வைஷ்ணவ
தீக்ஷை யாகிய பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்டது இத்தலத்தில் உள்ள மகிழ மரத்தடியில் தான்.
மகிழ மரமே இந்தத் தல வ்ருக்ஷம்.
இங்கே ஆவணி சுக்ல பக்ஷ பஞ்சமியில் சுவாமி ராமானுஜருக்கு
ஸ்ரீ பெரிய நம்பியால் த்வய மந்திரம் உபதேசிக்கப்பட்டு பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்கப்பட்டது.
அதனால் மதுராந்தகத்தை ”த்வயம் விளைந்த திருப்பதி” என ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்வார்கள்.

ராமானுஜருக்கு,பெரிய நம்பிகள் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்த தாமிரத்தால் ஆன,
சங்கு, சக்கரம்,பெரிய நம்பிகளின் திருவாராதனைப் பெருமாளான ஶ்ரீ நவநீத கிருஷ்ணர்,
தாமிரத்தால் ஆன திருவாராதனை வட்டில்கள் ஆகியவை இன்றும் உள்ளன.
அவற்றுக்கும் பூஜை நடைபெற்று வருகிறது. 1937 ல் தான் இவை கண்டு பிடிக்கப்பட்டன.
சேத் மகன்லால் பங்கூர் என்பவர் 1937 ல் கோவில் திருப்பணி செய்தார்.
அப்பொழுது கோவில் திருச்சுற்றில் ஒரு குகை இருந்ததைப் பார்த்தார்கள்.
அதைத் தோண்டிப் பார்த்த போது 20 அடிக்குக் கீழே ஒரு சிறிய மண்டபமும்,
அதனுள் மேற்குறிப்பிட்ட திருச்சின்னங்களும் இருந்தன.

பரதாழ்வானுக்கு அடி சூடும் அரசு அளித்தது போலவே
பெரிய நம்பியும் தம்மை ஆளவந்தார் திருவடி ஸ்தானமாகவே கொண்டு பஞ்ச ஸம்ஸ்காரம் பண்ணி அருளி
குரு பரம்பரை பூர்வகமாக ரஹஸ்ய த்ரயங்களையும் உபதேசித்து அருளுகிறார்

ஸ்ரீ ராமாநுஜரே , இதையெல்லாம் நான் உமக்கு செய்வித்தேன்.
எப்படி ஸ்ரீ ராமன் தனது பாதுகைகளை, பரதாழ்வானிடம் அளித்து, இனி நீ நாடாளவேண்டும் என்று கூறி காடு ஏகினாரோ,
அவ்வாறு ஸ்வாமி ஆளவந்தார் தனது பாதுகைகளை (நிர்வாக பொறுப்பை) உம்மிடம் அளித்து
இனி நீவிர் தரிசன நிர்வாகம் செலுத்தவேண்டும் என கூறிவிட்டு ஸ்ரீ வைகுண்டம் சென்றுவிட்டார்.
அடியேன் சுவாமி ஆளவந்தாரின் கட்டளையை நிறைவேற்றினேன்.
இனி தாங்கள் பொறுப்பேற்று அவர் விருப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் ” என்கிறார் பெரிய நம்பி.

லட்சுமிநாதன் ஒரு பெரிய கருணை நிறைந்த கார்மேகம்,
அதிலிருந்து ஞானம் என்கிற ஜலம் பெருகி அதை நம்மாழ்வார் எடுத்து நாதமுனி என்ற மலை சிகரத்தில் பொழியச் செய்து,
அந்த ஜலதாரை அகண்டமாக பெருகி இரு நீர் வீழ்ச்சிகளாகியது.
அந்த ரெண்டு நீர்வீழ்ச்சிகள் தான் உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி ஆகியோர்.
நீர்வீழ்ச்சிகளின் ஜலம் பிரவாகமாக ஓடி ஒரு ஆறாகியது. அந்த ஆறு தான் ஆளவந்தார்.
அந்த ஆறு அப்புறம் ஐந்து ‘பெரிய” கால்வாய்களாக பிரிந்து ஓடும் என்று ‘ நம்பி’ னார்கள்.
அவையே ஸ்ரீ பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்க பெருமாள் அரையர்,
திருமாலை ஆண்டான் ஆகியோர்.
அதோடு மட்டும் இல்லை. ஆற்றின் நீர் ஒரு பெரிய ஏரியாக உருமாறியது. அதுவே ஸ்ரீ ராமானுஜர்.
அந்த பெரிய ஏரிக்கு 74 கணவாய்கள், கண்மாய்கள், அவர்கள் தான் சிம்ஹாசனாதிபதிகள்.
ஸ்ரீ வைணவம் பெருகி இவர்கள் மூலம் எங்கும் பரவியது.

————-

15-இராமாயண காலஷேபம் பிதாமஹருக்கும் பிதா மஹாரான திருமலை நம்பி இடம்

பிரமாணம் ப்ரமேய பிரமாதா
இருப்பிடம் வைகுண்டம் வேங்கடம் -ப்ரமேயம் பிரமாதா எம்பெருமான் மனதுக்குள் வந்தார்
பிரமாணம் -படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் தானே இவர் திரு உள்ளம்
பிரமாதாவான ஆச்சார்யர் திருவடிகளை பற்றவே -ஒன்றைப் பற்றவே -பிரமாணமும் ப்ரமேயமும் கை புகுமே
உன்னுடைய கருணையை விட வேறே உபாயம் இல்லை -மா முனிகளும் அருளிச் செய்கிறார் அன்றோ –

————

16-அனைத்திலும் விஞ்சி –

கருணையால் மிக்கு
அழகால் மிக்கு
சத்ருக்கனன் படி
ராமானுஜ திவ்ய ஆஜ்ஜா -திருவரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே

ராமர் கோஷ்ட்டி ராமானுஜர் கோஷ்ட்டி வாசி அறிந்து விஸ்வஸித்து இரும் பிள்ளை உறங்கா வல்லி தாசர்
மிதுனத்தில் சரணாகதி -கத்ய த்ரயம்

ஸ்ரீ ரெங்க நாயகியாரே ஸ்ரீ சீதா பிராட்டி
திருத்திப் பணி கொள்ளும் பொழுது
தமது அந்தரங்க கிங்கர்களையே கொண்டு
பரிகரங்களை மாற்ற வேண்டாம் -ஸ்ரீ சீதா குணம்

லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி
திருவடியை மறுதலித்து ராக்ஷஸிகளை ரக்ஷித்து அருளி –
பரிகரங்கள் தவறே இழைத்தாலும் மாற்ற வேண்டாம்
நம்பெருமாள் தானே ராமனாகவே சொல்லிக் கொண்டார்
ராமோ த்விர் ந பாஷயே
ஏலாப்பொய்கள் பேசும் கண்ணன் அல்ல -என்றாரே –

ராமானுஜன் -ராமன் செய்தவற்றை விஞ்சி செய்தலால் இவரே அண்ணன் ஸ்தானம்

——————————————-

நான்காவது ராமரும், நான்காவது லக்ஷ்மணரும்-

மாசி மகம் மகத்தான, மாசில்லாத, மணக்கால் நம்பி ஸ்வாமி திருநட்சித்திரம்.

ஸ்வாமியின் தனியன்:

“அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||”

“பட்டத்து இளவரசாகிய யாமுனாசார் யரைத் தூதுவளை தந்து,மிக எளிதாகத் திருத்திப் பணிகொண்ட
ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்.”

இவருக்கும் ஸ்ரீ ராமானுஜருக்கும் உள்ள ஒற்றுமை ஆய்ந்து பார்ப்போம்.

ஶ்ரீரங்கத்துக்கு அருகில் உள்ள அன்பில் என்னும் ஊரின் கிராமப் பகுதியான மணக்கால் என்னுமிடத்தில் அவதரித்தார்
‘ராம மிஸ்ரர்.’ நாம் நாளும் ஸ்தோத்திரம் செய்யும் குருபரம்பரை ஸ்லோகத்தில் உள்ள ராம மிஸ்ரர் இவரே.
இவரை நம் சம்பிரதாயத்தில் நான்காவது ராமராக பரசு ராமர்,சீதா ராமர்,பல ராமருக்குப் பின் கொண்டாடுகிறார்கள்.

ஸ்ரீதேசிகன் ஸ்வாமி “யதிராஜ சப்ததி”–7 ஆவது ஸ்லோகத்தில்,
“அனுஜ்ஜித ஷமாயோகம்,
(பரசுராமர் பொறாமையால்,
ராமபிரானிடமே சண்டையிட்டார்.கோபத்தால் சத்திரிய குலத்தையே அழித்தார்.
ஆனால் மணக்கால் நம்பிகளிடம் இந்தக் குணங்கள் துளியும் இல்லை)

அபுண்ய ஜனபாடகம்,
(ராமர் புண்ய ஜனங்கள் என்று அழைக்கப் பட்ட ராட்சசர்களை அழித்தார்.
நம்பி யாரையும் அழிக்கவில்லை.புண்ய ஜனங்களுக்கு உபதேசித்தார்/உதவினார்)

அஷ்புருஷ்த மத ராகம்,
(பலராமர் லெளகீகச் செயல்களில் அதிக ஈடுபாடு/ருசி வைத்தார்;
நம்பி எதன் மேலும் பற்று/அக்கறை இல்லாமல் பகவத்/பாகவத/ஆசார்ய கைங்கர்யமே பிரதானமாக இருந்தார்)

தும் ராமம் துரியம் உபாஸ்மகே”
(குறை/குற்றம் ஒன்றில்லாத நான்காவது ராமரான ராம மிஸ்ரரை உபாசிப்போம்)
என்று மணக்கால் நம்பியைக் கொண்டாடுகிறார்.

அந்த வகையில் ஆதிசேஷனின் அவதாரங்களான இளைய பெருமாள்
(லட்சுமணர்),பல ராமர், லட்சுமணரின் அம்சமான ஆழ்வார் திருநகரி உறங்காப் புளிய மரம் ஆகியோருக்குப் பின்
நான்காவது லட்சுமணர் நம் லட்சுமண முனி ராமானுஜர் ஆவார்.

2.மண்ணில் மார்புற, விழுந்த மஹநீயர்கள்

மணக்கால் நம்பியின் ஆசார்யர் ஶ்ரீ உய்யக்கொண்டாரின் தேவியர், இளமையிலேயே பரம பதம் அடைந்து விட்டதால்,
அவருடைய குடும்ப காரியங்களையும்,இரு திருக் குமாரத்திகளையும் கவனித்துக் கொண்டார் உத்தம சீடர் நம்பி.
ஒரு நாள் காலையில்,பெண்குழந்தைகள் இருவரையும் ஆற்றில் நீராடவைத்துக் கூட்டி வரும்போது வழியில் ஓரிடத்தில்
சேறும்,சகதியுமாக இருந்தது.அவர்கள் அந்த இடத்தைத் தாண்ட முடிய வில்லை.நம்பிகள் அந்த சேற்றின் மீது குப்புறப் படுத்தார்.
அவர் முதுகின் மீது ஏறிச் சென்று குழந்தைகள அந்த இடத்தைக் கடந்தனர் !
அதனாலேயே அவர் மணல்(க்) கால் நம்பி ஆனார் என்றும்,
அவர் இருந்த கிராமமும் மணக்கால் என்றழைக்கப்பட்டது என்றும் ஒரு கூற்று உண்டு.!!

ஒரு சமயம்,ஶ்ரீரங்கத்தில் ராமாநுஜருக்கு உணவில் விஷம் கலந்து விட்டனர்.(உஞ்சவிருத்தியின் போது).
அந்த சூழ்நிலையில் அவர் பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க நேரிட்டது.
இதைச் செவியுற்ற ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பி,அருந்தவச் சீடரைப் பார்க்க விரைந்து வந்தார்.
தம் ஆசார்யர் வருகிறார் என்றறிந்து,(திருமேனி மிகத் தளர்ந்த நிலையிலும்)
அவரை எதிர்கொண்டு அழைக்க ராமானுஜர் திருக்காவேரிக்குச் சென்றார்.
ஆசார்யரைக் கண்டவுடன், அந்த மத்யான வெயிலில்,காவிரியின் சுடுமணலில் விழுந்து தண்டம் சமர்ப்பித்தார்.
யாராவது தண்டம் சமர்ப்பித்தால்,ஆசி கூறி உடனே எழச்சொல்லி விடுவார்கள் பெரியவர்கள்.
ஆனால் ஆசார்யர் ஒன்றும் சொல்லாமல் சுற்று முற்றும் பார்த்தார்.
சிறிதுநேரம்,உடையவர் சுடு மணலில் கிடந்தார்.அங்கு சுற்றி நின்றிருந்தவர்களும் ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தனர்.

அப்போது கிடாம்பி ஆச்சான் என்பவர் ஓடி வந்து நம்பியைப் பார்த்து
”இது,என்ன ஆசார்ய, சிஷ்ய நிஷ்டை”என்று கூறிவிட்டு,ராமானுஜரை அள்ளி எடுத்துக் கொண்டார்.
உடனே நம்பிகள் ”உம் போன்ற ஒருவர் வர மாட்டாரா, என்று தான்காத்திருந்தேன்,”
என்று அவரைத் தழுவிக் கொண்டு,
“இனிமேல் நீரே உடையவரை நன்றாகப் பார்த்துக்கொள்ளும்.அவருக்குத் தளிகை செய்வது, திருமேனியைக்
கவனிப்பது போன்றவற்றைக் குறைவின்றி நடத்தி வாரும்”என்று நியமித்தார்.

3.)தூது விடுத்து,வைணவம் வளர்த்த, தூய் மனத்துப் பெரியோர் !!

நம் சம்பிரதாயத்தில் தூதுக்கு ஒரு தனி வலிமை உண்டு.
ஶ்ரீராமாயணத்தில் ஆஞ்சநேயர் தூது,
மஹாபாரதத்தில் பகவான் கிருஷ்ணரின் தூது என்று.
அந்த வகையில் இந்த நான்காவது ராமர்,சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு மன்னராக விளங்கிய ஆளவந்தாருக்கு
“தூதுவளைக் கீரையையே” தூது அனுப்பினார்.
மன்னரை ஒரு சாமான்யர் எளிதில் சந்திக்க முடியாததால், அவருக்குப் பிடித்தமான தூதுவளைக் கீரையை
அரண்மனைக்குத் தினமும் கொடுத்து வந்தார் ராம மிஸ்ரர்.
திடீரென்று ஒருநாள் நிறுத்தி விட்டார்.
இதனால் ஆளவந்தாருக்கு ஆர்வத்தைத் தூண்டி,இவரை அழைத்து வரச்செய்து சந்திக்கும், சூழ்நிலையை உண்டாக்கி விட்டார்.
அந்த முதல் சந்திப்பையும், அதனால் ஏற்பட்ட மற்ற சந்திப்புகளை யும், பயன்படுத்தி அரசருக்கு,
ஶ்ரீவைஷ்ணவத்தைப் பற்றி எடுத்துரைத்து, ஶ்ரீரங்கத்துக்கு அழைத்து வந்து,பெரிய பெருமாள் முன்னர் நிறுத்தி விட்டார்.
அன்று வந்தவர் அங்கேயே இருந்து விட்டார்.அரசர் ஆளவந்தார், “பரமாசார்யர்” ஆளவந்தாராகி விட்டார்.

ராமானுஜர் தம் உத்தமசீடர் முக்குறும்பு அறுத்த கூரத்தாழ்வானை பெரிய கோயில் நம்பியிடம்,
தூது அனுப்பிஅவரிடம் இருந்த கோயில் பொறுப்பையும்,சாவியையும் வாங்கினார்.
சாவி மட்டுமா கிடைத்தது? அரசர் ஆளவந்தார் ஆசார்யராக மலர்ந்ததைப் போல்,
பெரிய கோயில் நம்பி,”திருவரங்கத்து அமுதனார்” ஆக மலர்ந்தார்..
நாம் நாளும் சேவித்து இன்புறுவதற்கு “இராமானுச நூற்றந்தாதி” என்னும் பிரபன்ன காயத்ரியைப் பாடிக் கொடுத்தார்.

4.பகவத் கீதைக்கு பாஷ்யம் சொன்ன, ஞானாசார்யர்கள்:

தூதுவளை கொடுத்து அரண்மனைக்குள் சென்ற மணக்கால் நம்பி
ஆளவந்தாருக்கு பகவத் கீதையின் 18 அத்யாயங்களையும் ஒவ்வொரு முறையும் வரிசையாக விளக்கி உரைத்து
அவரைத் திருத்திப்பணி கொண்டார்.

நம் போன்றோரைத் திருத்திப் பணி கொள்ள நவரத்தினங்களை வழங்கிய எம்பெருமானார் அருமையான
“கீதா பாஷ்யம்” அருளிச் செய்தார்.

5.பெண் குழந்தைகளைப் பேணிக் காத்த பேராளர்கள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண் குழந்தைகளை மணக்கால் நம்பி எப்படிப் போற்றினார் என்று (குறிப்பு 2)பார்த்தோம்.

உடையவரின் ஆசார்யர் பெரியநம்பி ஸ்வாமியின் திருக் குமாரத்தி,
அத்துழாய்க்குப் புகுந்த வீட்டார் பல பிரச்னை களை ஏற்படுத்தினர்.
அந்தக் காலத்து வழக்கப்படி,பெண் வீட்டுச் சீர் வரிசையுடன் “சீதனவெள்ளாட்டி” என்று ஒருவரை,
வேலக்காரர்(காரி) ஆகவும் அனுப்ப வேண்டும்.பெரிய நம்பிகளுக்கு அவ்வாறு அனுப்பும் அளவு வசதி யில்லை.
ஆனால் புகுந்தவீட்டார் அத்துழாயிடம் அடிக்கடி சொல்லிக் காட்டினர்.எனவே அவர் தம் தந்தை யாரிடம் முறையிட்டார்.
அவர் ‘என்னிடம் சொல்லி என்ன பயன்?உன் அண்ணன் ராமானுஜரிடம்சொல்’என்றார்.
ராமனுஜர் உடனே அதற்கு ஏற்பாடு செய்தார். அதுவும் எத்துனையோ பேர் இருக்க,தமக்கு மிக வேண்டியவரும்,
துறவியாகி அனைத்து ஆசைகளயும் விட்டாலும் முதலியாண்டானை விட முடியாது என்று சொல்லும்
அளவுக்கு,உயர்ந்த ஆசார்யர் முதலியாண்டானை அனுப்பி வைத்தார்.

மேலும் உடையவர் காலத்தில் பல பெண்களுக்கு–கூரத்து ஆண்டாள்,
பொன்னாச்சியார்,அம்மங்கி அம்மாள்,
திரிபுரா தேவியார்,கொங்கில் பிராட்டியார்-சம்பிரதாய விஷ்யங்களில் முக்கியத்துவம் கொடுத்தார்.

மணக்கால் நம்பிகள் வாழி பாசுரம்:

“நேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியே !
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே !
தாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் வாழியே !
தமிழ் நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே !
நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே !
நீணிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே !
மாசி மகந்தனில் விளங்க வந்துதித்தான் வாழியே !
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியவே!!!”

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மணக்கால் நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: