ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —5–4–சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய்–

பர
வ்யூஹ
விபவ
அந்தர்யாமி
அர்ச்சாவதாரங்களான
இடங்களிலே எழுந்து அருளி நிற்கிறது
சேதனரைத் திருத்துகைக்கும்
திருந்தின சேதனரை அடிமை கொள்ளுகைக்கும் ஆய்த்து

அவை எல்லாவற்றிலும்
அவை மிக்கு இருப்பது திருமலையிலே நிற்கிற நிலை இறே

திருமால் இருஞ்சோலை மலை என்றேன் –இத்யாதி
வெற்பு என்று இருஞ்சோலை –இத்யாதி
வெற்பு என்று வேங்கடம் பாடும் –இத்யாதிகளிலே காணலாம்

ஆகையால் ஈஸ்வரன் ஆழ்வார்களுக்கு
பிரதம காலத்திலே
மயர்வற மதி நலம் அருளி விநியோகம் கொள்ளும்
அவர்கள் பின்பு இருக்கிறது பகவத் இச்சையாலே யாய்த்து

நமக்கு எல்லாம்
சரீர அவசானத்திலே இவற்றைப் பிறப்பித்துக் கார்யம் செய்யும்

ஊரவர் இத்யாதி –
பாகவத அங்கீ காரமாகிற எருவை இட்டு
ஆச்சார்ய உபதேச ஞானம் ஆகிற நீரைப் பாய்ச்சி
சங்கம் ஆகிற நெல்லை வித்தி இறே கிருஷி பண்ணுவது

இப்படி திருந்தின இவரைக் கண்டு அவன் உகக்க
அவன் உகப்பைக் கண்டு இவர் உகக்க
இவ்வுகப்புக்கு மேல் இனி வேறே ஒரு பேறும் இல்லை -என்று இவர் இருக்க

இவர் காரியத்தில் நாம் முதல் அடி இட்டிலோம் -என்று
அவன் பதறுகிற பதற்றத்தைக் கண்டு

விரோதிகள் அடையப் போய்த்தாகில்
அபேக்ஷிதங்களைப் பெற வேண்டும் அம்சம் அடையப் பெற்றதாகில்
இனி தேவர் பதறுகிறது என் -என்று
அவன் பதற்றத்தை அமைக்கிறார் –

———–

திருமலையிலே கல்யாண குண பூர்ணனாய்க் கொண்டு ஸந்நிஹிதனாய்
என்னை விஷயீ கரித்து உன் கிருபையை எனக்கு அவலம்பமாம் படி பண்ணினாய்
இனி மேல் தேவர்க்குத் திரு உள்ளம் ஏது என்கிறார் –

சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 – –

பதவுரை

சென்னி ஓங்கு–கொடு முடியானது (ஆகாசத்தளவும்) உயர்ந்திருக்கப் பெற்ற
தண்–குளிர்ந்த
திருவேங்கடம்–திருவேங்கட மலையை
உடையாய்–(இருப்பிடமாக) உடையவனே!
உலகு தன்னை–உலகத்தவர்களை
வாழ–வாழ்விப்பதற்காக
நின்ற–எழுந்தருளி யிராநின்ற
நம்பீ–(கல்யாண குணங்களால்) நிறைந்தவனே!
தாமோதரா–தாமோதரனே!
சதிரா–(அடியாருடைய குற்றத்தைக் கண்ணெடுத்துப் பாராத) சதிரை யுடையவனே!
என்னையும்–எனது ஆத்துமாவுக்கும்
என் உடைமையையும்–என் உடைமையான சரீரத்திற்கும்
உன்–உன்னுடைய
சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு–ஸுதர்சனாழ்வானுடைய திரு விலச்சினையை இடுவித்து
நின்–உன்னுடைய
அருளே–கருணையே
புரிந்திருந்தேன்–(ஸ்வயம் பிரயோஜநமாக) விரும்பி யிரா நின்றேன்;
இனி–இப்படியான பின்பு
திருக் குறிப்பு–திரு வுள்ளக் கருத்து
என்–எதுவாயிருக்கின்றது?–

சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய்
உயர்ந்த கொடி முடியை யுடைத்தாய்
ஸ்ரம ஹரமான திருமலையை உனக்கு இருப்பிடமாக உடையவனே
உபய விபூதிக்கும் முகம் காட்டுகைக்கு நிற்கும் இடம் இறே த்ருதீய விபூதி இறே திருமலை –

உலகு தன்னை வாழ நின்ற நம்பீ
வை ஷம்யம் அற எல்லாரும் உன்னைக்கிட்டி வாழும்படி
நிலையார நின்ற கல்யாண குண பூர்ணனே
கானமும் வானரமும் ஆனவற்றுக்கும் முகம் கொடுக்கும் படி யாய்த்து நீர்மையில் பூர்த்தி
வாத்சல்யத்தி குண பூர்ணனே

தாமோதரா
அந்தப் பூர்த்தியை அனுஷ்டான பர்யந்தம் ஆக்கின படி
வெண்ணெயைக் களவு கண்டான் என்று கொண்டி யோடே பிடித்து
யசோதைப்பிராட்டி கட்டக் கட்டுண்டு
அத்தால் வந்த தழும்பை நிரூபகமாக யுடையவனே

இத்தால்
ஆஸ்ரித பவ்யதை சொல்லுகிறது

சதிரா
ஆஸ்ரித தோஷம் காணாத விரகு

என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
ஆத்மாவையும் ஆத்மீயங்களையும்
திருவாழியாலே முத்திரை இட்டு
ஆத்மாவுக்கு சேஷத்வ ஞானத்தை உண்டாக்குகை
ஆத்மீயங்களான தேஹாதிகளுக்குத் திரு இலச்சினை சாத்துகை

நின்னருளே புரிந்து இருந்தேன்
உன்னுடைய நிர்ஹேதுக கிருபையை நிரபேஷ உபாயமாக அபேக்ஷித்து
நிர்பரனாய் இருந்தேன்

இனி என் திருக் குறிப்பே
ஞான லாபத்தையும் பண்ணித் தந்து
விரோதி நிவ்ருத்த பூர்வமாக
அபேக்ஷிதங்களையும் தந்து அருளிற்றாகில்
இனித் திரு வுள்ளத்தில் நினைவு ஏது –

———-

கீழ் அவன் அருளாலே பேற்றுக்கு ஹேது என்றார்
இதில் அவன் அருளாலே தாம் பெற்ற பேறு சொல்லுகிறார் –

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –

பதவுரை

பறவை ஏறு–பெரிய திருவடி மேல் ஏ றுமவனான
பரம் புருடா–புருஷோத்தமனே!
நீ–(ஸர்வ ரக்ஷகனான) நீ
என்னை–(வேறு கதி யற்ற) என்னை
கைக் கொண்ட பின்–ஆட் படுத்திக் கொண்ட பிறகு
பிறவி என்னும் கடலும்–ஸம்ஸாரமாகிற ஸமுத்ரமும்
வற்றி–வறண்டு போய் (அதனால்)
பெரும் பதம் ஆகின்றது–பெரிய தரம் பெற்றதாகிறது;
இறவு செய்யும்–(இவ் வாத்துமாவை) முடிக்கிற
பாவக்காடு–பாப ஸமூஹமானது
தீக் கொளீஇ–நெருப்புப் பட்டு
வேகின்றது–வெந்திட்டது;
அறிவை என்னும்–ஞானமாகிற
அமுதம் ஆறு–அம்ருத நதியானது
தலைப் பற்றி வாய்க் கொண்டது–மேன் மேலும் பெருகிச் செல்லா நின்றது–
கிரமம் -இராதே ராஜ குமாரன் என்று அறிந்த பின்பே கிரீடம் தலையிலே ஏறி
பின்பு தானே சிறை வெட்டி விடுவார்

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பெரிய திருவடியை வாகனமாக யுடைய பரம புருஷனே
சங்க ஸ்வ பாவனான நீ
உன்னால் அல்லது செல்லாத என்னை
அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட பின்பு

பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
ஸம்ஸாரம் ஆகிற பெரும் கடலும் சுவறிப்
பெரிய தரமும் உண்டாகா நின்றது
மேல் சாத்தும் பர்யட்டமும் வாரா நின்றது
பரம சாம்யா பத்தி உண்டாகா நின்றது

இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்
இவ் வாத்மாவை முடிக்கிற கர்ம ஆரண்யம்
சீறா எரியும் திரு நேமியினுடைய ஜ்வாலாக்நி
கொழுந்தி தக்தமாகா நின்றது

அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே
ஞானம் ஆகிற அம்ருத ப்ரவாஹினியான நதி பெருகி
வாயளவாயத் தலைக்கு மேலே போகா நின்றது

அதனில் பெரிய அவா -என்கிறபடியே
இனி என் திருக்குறிப்பு -என்று கீழோடே அந்வயம் –

———-

பாப நிவ்ருத்தி என் அளவிலே அன்றிக்கே
நான் இருந்த தேசத்தில் உள்ள பாபங்களும் நசித்துப் போன பின்பு
நான் பெற்ற பேறு பெற்றார் உண்டோ என்கிறார் –

எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 –

பதவுரை

எம் மனா–எமக்குத் தலைவனே!-தாய் -மன்னன் –
என் குல தெய்வமே–என் குடிக்குப் பரதேவதை யானவனே!
என்னுடைய நாயகனே–எனக்கு நாதனானவனே!
நின்னுளேன் ஆய்–உன் அபிமாநத்தில் ஒதுங்கினவனாய்
நாட்டில் உள்ள எல்லாப் பாவங்களும்–உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும்
நாடு சாஸ்திரம் என்றுமாம்
சும்மெனாதே–மூச்சு விடவும் மாட்டாமல்
பெற்ற நன்மை–பெற்ற நன்மையை
இ உலகினில்–இந்த உலகத்திலுள்ள
ஆர் பெறுவார்–மற்று யார் தான் பெறுவர்?
நம்மன் போல–பூத ப்ரேத பிசாசங்களைப் போல் (உருத் தெரியாமல் ஒளிந்து வந்து)
வீழ்ந்து அமுக்கும்–கீழே தள்ளி மேலே அமுக்கா நின்றுள்ள
கை விட்டு–ஸவாஸநமாக விட்டிட்டு
ஓடி–ஓடிப் போய்
தூறுகள்–புதர்களில்
பாய்ந்தன–ஒளிந்து கொண்டன–

எம்மனா
எம்மன்னா -என்று வலித்து
எனக்குத் தாய் போலே பரிவன் ஆனவனே

அன்றிக்கே
மன்னா -என்று ராஜாவாய்
ஈரரசு தவிர்த்தவன் என்னவுமாம்
என் ஸ்வா தந்தர்யத்தைக் குலைத்தவனே

என் குல தெய்வமே
என் குலத்துக்குப் பர தேவதையானவனே
என் குல நாதனே

என்னுடை நாயகனே
என் குலத்தில் உள்ளாருக்கு ஸ்வாமி யானதும் என்னாலே என்னும்படி
எனக்கு நாதன் ஆனவனே
(அர்வாஞ்சோ இத்யாதி –திருமுடி சம்பந்தத்தால் ஏற்றம் )

இம் மூன்று பதத்தாலும்
ஸ்வரூப
சாதன
ப்ராப்ய விரோதிகளைப் போக்கி
ஆகார த்ரய பிரதி சம்பந்தி யானவன் என்னுமாம்

நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை
உன் அபிமானத்தில் அந்தர் பூதனாய்ப் பெற்ற பிரயோஜனம்

இவ்வுலகினில் யார் பெறுவார்
இஸ் ஸம்ஸாரத்தில் யாருக்கு லபிக்கும்
இது எனக்கு அலாப்ய லாபம் அன்றோ
இப்படி பேறு பெற்றார் உண்டோ

நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
யம படரைப் போலே விழவிட்டு அமுக்கும் படியான
என் நாட்டில் உள்ள பாபங்கள் எல்லாம்

சும்மேனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே
மூச்சு விடாதே போய்
முன்பு இருந்த இடத்தைக் கை விட்டு
துடர்ந்து பிடிக்க வருகிறார்களோ என்று புரிந்து பார்த்து ஓடிக்
காட்டிலே விழுந்து போயிற்றன

கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் (பெரிய திருவந்தாதி )-என்னக் கடவது இறே

ஸம்ஸார மருகாந்தரத்திலே போய்ப் புகுந்தன -என்கை –

———–

தாம் பகவத் விஷயத்திலே அவஹாகிக்கையாலே
தம்முடைய ஆஜ்ஜை நடக்கும் இடம் எல்லாம்
யம வஸ்யதை புகுரப் பெறாது என்கிறார்

கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல்
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே -5 -4-4 –

பதவுரை

தட வரை–பெரிய மலை போன்ற
தோள்–தோள்களை யுடையவனும்
சக்கரபாணீ–திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுடையனுமானவனே!
சார்ங்கம் வில்–சார்ங்கத்தை வில்லாகக் கொண்ட
சேவகனே–வீரனே!
கடல்–திருப் பாற் கடலை
கடைந்து–(மந்தர மலையாகிற மத்தினால்) கடைந்து
அமுதம் கொண்டு–(அக் கடலினின்றும்) அம்ருதத்தை யெடுத்து
கலசத்தை–கலசத்தில்
நிறைந்த ஆ போல்–(நீ) நிறைந்தது போல
(அடியேன்)
உடல் உருகி–உடல் உருகப் பெற்ற
வாய் திறந்து–வாயைத் திறந்து கொண்டு
உன்னை–(ஆராவமுதாகிய) உன்னை
மடுத்து நிறைந்துக் கொண்டேன்–உட் கொண்டு தேக்கிக் கொண்டேன்;
(இனி)
கொடுமை செய்யும்–கொடிய தண்டங்களை நடத்துமவனான
கூற்றமும்–யமனும்
என் கோல் ஆடி–எனது செங்கோல் செல்லுமிடங்களில்
குறுகப் பெரு–அணுக வல்லவனல்லன்–

கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல்
கடலைக் கடைந்து
அம்ருதத்தை வாங்கி
கலசத்தை நிறைத்தால் போலே

உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
ஸரீரமானது அபி நிவேச அதிசயத்தாலே உருகி
ப்ரீதி ப்ரேரிக்க
வாய் திறந்து
இரண்டு கையையும் மடுத்து -என்னுமா போலே
மண்டிக் கொண்டு நிரதிசய போக்யனான உன்னைப் பூர்ணமாக அனுபவித்தேன்
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -என்னுமா போலே

கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
பாபம் பண்ணினவர்களைக் கண்ணற்று நலிகிற மிருத்யுவும்
என் ஆஜ்ஜை நடக்கிற இடத்திலும் கிட்டப் பெறாது

தடவரைத் தோள் சக்கரபாணீ சாரங்க வில் சேவகனே
மலை போலே பெரிய தோள்களை யுடையையாய்
பெரிய மலை என்னுமாம்

திருவாழியாலே அலங்க்ருதமான திருக்கைகளை யுடையையாய்
ஸ்ரீ சார்ங்கமாகிற வில்லை யுடைய ஸூரனே
உன்னை அண்டை கொண்ட பலம் இறே யமாதிகள் அஞ்சுகிறது –

———-

ஸ்லாக்யனான யுன்னை நாவால் ஹிருதயத்திலே வைத்துக் கொண்ட எனக்கு
வேறே அபேக்ஷிதம் உண்டோ என்கிறார் –

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே
உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 -5-

பதவுரை

என் அப்பா–எனக்குத் தந்தையானவனே!
என் இருடீகேசா–எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே!
என் உயிர்–என் ஆத்மாவை
காவலனே–(அந்ய சேஷமாகாதபடி) காக்க வல்லவனே!
பொன்னை–ஸுவர்ணத்தை
நிறம் ஏழ–நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக)
உரைகல் மீது கொண்டு–உரைக் கல்லில் இட்டு
உரைத்தால் போல்–உரைப்பது போல
உன்னை–(பரம போக்யனான) உன்னை
என் நா அகம் பால் கொண்டு–என் நாவினுட்கொண்டு
மாற்று இன்றி–மாற்று அழியும்படி
உரைத்துக் கொண்டேன்–உரைத்துக் கொண்டேன்.-பேசிக்கொண்டு நின்றேன்
உன்னை–(யோகி கட்கும் அரியனான) உன்னை
என்னுள்–என் நெஞ்சினுள்
கொண்டு வைத்தேன்–அமைத்தேன்;
என்னையும்–(நீசனான) அடியேனையும்
உன்னில் இட்டேன்–உனக்குச் சேஷப் படுத்தினேன்–
மேலைத்தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
அனுபவம் சரணாகதியை பண்ணத் தள்ளும் -கையாலாகாத் தனம்

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே
பொன்னை உரை கல்லிலே நிறம் பிறக்கும் படி உரைக்குமா போலே

உன்னைக் கொண்டு என் நாவகம் பால்
பொன்னிவர் -என்னும் உன்னை
என் நாவாகிற உரை கல்லிலே
வேதங்களாலும் அளவிட ஒண்ணாத யுன்னை

மாற்றின்றி
மாற்று அற
ஸத்ருசம் அற

உரைத்துக் கொண்டேன்
வஸ்துவை உள்ளபடி வ்யஹரிக்க வல்ல வாசகமாக யுரைக்கப் பெற்றேன்

உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
ஸ்ப்ருஹணீயமான உன்னுடைய அங்கீகாரத்தைக் கொண்டு
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட -என்னும்படி
என்னுடைய அனுபவத்துக்கு விஷயம் ஆக்கினேன்

என்னையும் உன்னில் இட்டேன்
நீ இப்படி மேல்விழுந்து ஆதரிக்கைக்கு யோக்யனான என்னையும்
உனக்கு போக்யம் ஆக்கினேன்
நம இத்யேவ வாதீந -என்னுமா போலே

என்னப்பா
எனக்கு ஜனகன் ஆனவனே

என் இருடீகேசா
எனக்கு சர்வ இந்திரியங்களுக்கு விஷயம் ஆனவனே

என் உயிர்க் காவலனே
என் ஆத்மாவுக்கு ரக்ஷகன் ஆனவனே
நான் இனிப் பெறாதது உண்டோ என்கை –

—————

நீ என்னுடைய ஹிருதயத்திலே ஞான விஷயமாகக் கொண்டு ஸந்நிஹிதனான பின்பு
என்னை விட்டு இனி உனக்கு ஒரு போக்கிடம் உண்டோ என்கிறார் –

உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ
என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6 –

பதவுரை

மன்–(துஷ்ட) க்ஷத்திரியர்கள்
அடங்க–அழியும்படி
மழு–மழு என்னும் ஆயுதத்தை
வலம் கை கொண்ட–வலக் கையில் ஏந்தி யிரா நின்றுள்ள
இராமன்–பரசு ராமனாய்த் திரு வவதரித்த
விராம நம்பீ–குண பூர்த்தியை யுடையவனே
உன்னுடைய–உன்னுடைய
விக்கிரமம்–வீரச் செயல்களில்
ஒன்று ஒழியாமல்–ஒன்று தப்பாமல்
எல்லாம்–எல்லாவற்றையும்
என்னுடைய–என்னுடைய
நெஞ்சகம் பால்–நெஞ்சினுள்ளே
சுவர் வழி எழுதிக் கொண்டேன்–சுவரில் சித்திர மெழுதுவது போல எழுதிக் கொண்டேன்;
பிரகாசிக்கும் படி கொண்டேன்
எம் பெருமான்–எமக்குத் தலைவனே!எனக்கு உபகாரகன் ஆனவனே
கோபமும் உத்தேச்யம் -நமது விரோதி பாஹுள்யத்தைப் போக்கி அருளியதால்
என்னிடை வந்து–என் பக்கலில் எழுந்தருளி
இனி–இனி மேல்
போகின்றது–போவதானது
எங்கு–வேறு எவ்விடத்தைக் குறித்து?–

உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
உன்னுடைய திவ்ய அபதானங்கள் ஓன்று ஒழியாமல் எல்லாவற்றையும்

என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
சுவரிலே சித்ரம் எழுதினால் கண்ணுக்குத் தோற்றுமா போலே
என்னுடைய நெஞ்சிலே இவற்றையும் பிரகாசிக்கும் படி பண்ணிக் கொண்டேன்
ரிஷிகளுக்கும் பிரகாசியாத அர்த்தங்களும் எனக்குப் பிரகாசித்து அனுசந்திக்கப் பெற்றேன்

மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ
ஆஸூர ப்ரக்ருதிகளான ராஜாக்கள் முடியும்படியாக
மழு என்கிற திவ்ய ஆயுதத்தை வலக்கையில் தரித்து
ஞான சக்த்யாதிகளாலே பூர்ணனான
ஸ்ரீ பரஸூ ராமாவதாரத்தைப் பண்ணினவனே

என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே
என் சேஷத்வத்தையும்
உன் சேஷித்வத்தையும்
எனக்குப் பிரகாசித்து என்னைக் கைக் கொண்ட பின்பு
இனி உனக்கு ஒரு போக்கிடம் உண்டோ
போகிலும் கூடப் போம் அத்தனை –

————

என்னை உனக்கே அநந்யார்ஹம் ஆம் படி
நிர்ஹேதுகமாகக் கைக் கொண்டு வைத்து
இனிப் பொகட்டுப் போகலாமோ -என்கிறார் –

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7 –

பதவுரை

பருப்பதத்து–மகா மேரு பர்வதத்தில்
கயல்–(தனது) மகர த்வஜத்தை
பொறித்த–நாட்டின்
பாண்டியர் குல பதி போல்–பாண்டிய வம்சத்து அரசனைப் போல்,
திருப் பொலிந்து–அழகு விளங்கா நின்றுள்ள
சே அடி–செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை
என் சென்னியின் மேல்–என் தலையின் மீது
பொறித்தாய் என்று–(அடையாளமாக) வாட்டி யருளினவனே! என்றும்,
மருப்பு ஒசித்தாய் என்று–(குவலயாபீடத்தின்) கொம்பை முறித்தவனே என்றும்,
மல்–மல்லரை
அடர்ந்தாய் என்று–நிரஸித்தவனே! என்றும்
(இவ்வாறான)
உன் வாசகமே–உனது செயல்களுக்கு வாசகமான திரு நாமத்தின் அநு ஸந்தாநத்தினாலேயே
உருப் பொலிந்த நாவினேனை–தழும்பேறின நாக்கை யுடைய அடியேனை.
உனக்கு–உனக்கு
உரித்து ஆக்கினையே–அநந்யார்ஹ சேஷனாக ஆக்கிக் கொண்டாயே–

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
பாண்டிய வம்சத்துக்கு நிர்வாஹனாய் இருப்பான் ஒரு ராஜா தன் தேசத்தின் நின்றும்
மஹா மேரு அளவும்
வழியில் உள்ள வன்னியம் அறுத்து ஜெயித்துக் கொடு சென்று
மஹா மேருவிலே தன் வெற்றி எல்லாம் தோற்றும்படி
தன் அடையாளமான கயலை இட்டுப் போந்தால் போலே

பரம பதம் கலவிருக்கையான ஈஸ்வரனான நீ
அங்கு நின்றும் என் பக்கலிலே வரும் அளவும் உண்டான
பாவக் காட்டைச் சீய்த்து
என்னுடைய ப்ராதிகூல்ய ரூப வன்னியம் அறுத்து
என்னிடத்தில் பாத இலச்சினை வைத்தாய்
உன் அடையாளம் இட்டுக் கொண்டாய்

திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல்
பொறித்தாய்
அழகு விஞ்சி இருப்பதாய்
ருஜுவான திருவடிகள்
ஆர்ஜவ ஸ்வ பாவமானது என்கை

அதவா
ஐஸ்வர்ய சிஹ்னங்களை யுடைத்தான திருவடிகள் என்றுமாம்
கதா புந–இத்யாதி
அமரர் சென்னிப் பூவான ப்ராப்யத்தை லபிக்கப் பெற்றேன்

மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே உருப் பொலிந்த நாவினேனை
ப்ராப்ய விரோதிகளை
குவலயா பீடத்தையும் சாணூர முஷ்டிகரையும் நிரசித்தால் போலே நிரசித்துப் பொகட்டு
அவ்வபதானங்களுக்குத் தோற்று நான் ஏத்தும் படி பண்ணினவனே –

யுனக்கு உரித்து ஆக்கினையே
இதுவே யாத்ரையாய் இருக்கும்படி இருக்கிற என்னை
உன்னை ஒழியப் புறம்பு ஆளாகாத படி பண்ணின பின்பு
இனி எங்குப் போவது –

——–

அநந்த கருடாதிகளிலும் காட்டில் என் பக்கலிலே அதி வ்யாமோஹத்தைப் பண்ணி
நீ என்னோடே ஸம்ஸ்லேஷிக்க
நானும் அத்தை அனுசந்தித்து விஸ்ராந்தனான பின்பு
இனி உனக்குப் போக்கிடம் உண்டோ என்கிறார் –

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-

பதவுரை

நேமி–திருவாழி யாழ்வானை யுடைய
நெடியவனே–ஸர்வாதிகனே!
எம் பிரான்–எனக்குப் பரமோபகராகனானவனே!
அனந்தன் பாலும்–திருவனந்தாழ்வானிடத்திலும்
கருடன் பாலும்–பெரிய திருவடியினிடத்திலும்
ஐதுநொய்தாக வைத்து–(அன்பை) மிகவும் அற்பமாக வைத்து
என் மனம் தன் உள்ளே–எனது ஹருதயத்தினுள்ளே
வந்து வைகி–வந்து பொருந்தி
வாழச் செய்தாய்–(என்னை) வாழ்வித்தருளினாய்;
(இப்படி வாழ்வித்த உன்னை.)
என் உள்ளே–என் நெஞ்சில்
நினைந்து நின்று–அநுஸந்தித்துக் கொண்டு
நெக்கு–(அதனால்) நெஞ்சு சிதிலமாகப் பெற்று
கண்கள் அகம்பு ஒழுக–கண்களினின்றும் நீர் பெருகும்படி
நினைத்து இருந்தே–(நீ செய்த நன்றிகளை) அநுஸந்தித்துக் கொண்டே
சிரமம் தீர்த்தேன்–இளைப்பாறப் பெற்றேன்–

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து
பிராட்டிமாரோ பாதி
தனக்கு போக்யரான திருவனந்த ஆழ்வான் பெரிய திருவடி இவர்கள் பக்கல்
தனக்கு உண்டான ஸ்நேஹம் அத்யல்பம் என்னும்படி
என் பக்கலிலே அதி வ்யாமோஹத்தைப் பண்ணி

என் மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
தான் மயர்வற மதி நலம் அருள
அத்தாலே
நெஞ்சு நாடு என்னும்படி திருந்தின என் ஹிருதயத்துக்கு உள்ளே
அஹேதுகமாக வந்து வர்த்தித்து
நான் அனுபவித்து ஸூகிக்கும் படி பண்ணின என் உபகாரகனனே

என்னாயன் செய்த உபகாரம் தான் என் என்ன
த்ரிபாத் விபூதியில் உள்ள எல்லோரோடும் பரிமாறும் பரிமாற்றத்தை எல்லாம்
இவர் ஒருவரோடும் பரிமாறும் உபகாரம்

நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
உன் வியாமோஹாதி கல்யாண குணங்களையும்
வடிவு அழகையும் என்னிலே நினைத்து
அத்தாலே வந்த ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே
ஸ்தப்த்தனாய்ப் பின்னை
சிதில அந்தக் கரணனாய்
அந்த ஸைதில்யம் கண்ண நீராகப் ப்ரவஹிக்க

உள் உருகுகின்றது
புற வெள்ளம் விட்டபடி

நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன்
நீ பண்ணின யுபகார பரம்பரைகளை அனுசந்தித்து
இளைப்பாறி இருந்து
உன்னைப் பெறாமையாலே வந்த ஸ்ரமம் எல்லாம் ஆறப் பெற்றேன்

நேமி நெடியவனே
திருக் கையும் திருவாழியுமான அழகுக்கு எல்லை இல்லாதவனே
ஆழ்வார் பக்கல் ப்ரேமத்துக்கு முடிவு இல்லாதவன் என்னவுமாம் –

———–

போக ஸ்தானங்களான ஷீராப்தி யாதிகளையும் உபேக்ஷித்து
என் நெஞ்சையே போக ஸ்தானமாகக் கொண்டான் என்கிறார்

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

பதவுரை

பனி–குளிர்ந்த
கடலில்–திருப்பாற் கடலில்
பள்ளி கோளை–பள்ளி கொள்ளுதலை
பழக விட்டு–பழகியதாக விட்டு (மறந்து விட்டு)
பிறிவு உளவு என்று அன்றோ ஸூ கம் உள்ளது
சேர்ந்தே இருந்தால் மறதிக்கு இடம் இருக்குமே -குகன் இடம் பெருமாள்
ஓடி வந்து–(அங்கு நின்றும்) ஓடி வந்து
என்–என்னுடைய
மனம் கடலில்–ஹ்ருதயமாகிற கடலில்
வாழ வல்ல–வாழ வல்லவனும்
மாயம் ஆச்சரிய சக்தியை யுடையவனும்
மணாள–(பெரிய பிராட்டியார்க்குக்) கணவனும்
நம்பீ–குண பூர்ணனுமான எம்பெருமானே!
தனி கடல் என்று–ஒப்பற்ற திருப்பாற் கடல் என்றும்
தனி சுடர் என்று–ஒப்பற்ற ஆதித்ய மண்டலமென்றும்
தனி உலகு என்று–ஒப்பற்ற பரம பதமென்றும் (சொல்லப்படுகிற இவை)
உனக்கு இடம் ஆய் இருக்க–உனக்கு (ஏற்ற) வாஸஸ் ஸ்தாநமாயிருக்கச் செய்தேயும் (அவற்றை உபேக்ஷித்து விட்டு)
என்னை–(மிகவும் நீசனான) அடியேனை
உனக்கு–உனக்கு
உரித்து ஆக்கினையே–உரிய வாஸஸ் ஸ்தாநமாக அமைத்துக் கொண்டருளினையே! (இஃது என்ன ஸௌசீல்யம்!)–

பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு
திருமேனியில் ஸுகுமார்யத்துக்குப் போரும் படி ஸ்ரமஹரமாம் படி
குளிர்ந்த திருப் பாற் கடலிலே இறே பள்ளி கொண்டு அருளுவது –

அத்தைப் பழக விட்டு –
மறந்து விட்டு
அத்தை மறப்பித்தது இறே இவர் திரு உள்ளத்தில் குளிர்த்தி

ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல
கடுக நடையிட்டு வந்து
(காதக்குதிரை இட்டு –குதிரை போல் தானே நடை இட்டு )
என் உடைய நெஞ்சாகிற கடலிலே புக்கு
அபிமத லாபத்தாலே வந்த ஐஸ்வர்யத்தாலே குறைவற்று ஸூகிக்க வல்ல

மாய மணாளா நம்பீ
ஆச்சர்யமான வடிவு அழகாலும்
குணங்களாலும்
பூர்ணனானவனே

இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பு இறே
குணங்களும்
திருமேனியில் செவ்வியும்
பூர்த்தி பெற்றது

தனிக் கடலே
அத்விதீயமான கடல் போலே அபரிச்சேதயனானவனே

தனிச் சுடரே
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு -என்கிறபடியே
வந்து திரு அவதரித்து ப்ரகாசகனான அத்வதீயனே
ஸ்வயம் பிரகாச ஸ்வரூப ஸ்வபாவன் என்னுமாம்
(விளக்கு தான் தன்னையும் விளக்கி மற்ற அனைத்தையும் விளக்கும்
அவனையும் விளக்கும் குத்து விளக்கு அன்றோ பிராட்டி )

தனி உலகே
அத்விதீயமான ப்ராப்யம்
ஒரு விபூதிக்காக ஒருவனுமே இறே ப்ராப்யம்
அந் நினைவிலே இறே விபூதியாக நடக்கிறது

என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே
இப்படிப்பட்ட திரு நாமங்களை மாறாதே ரஸ்யதையாலே சொல்லும்படி பண்ணி
உனக்கு ஷீராப்தியாதி தேசங்கள் அநேகங்கள் எல்லாம் உண்டாய் இருக்க
அவற்றை உபேக்ஷித்து
அவை எல்லாம் என்னுடைய ஹிருதயமாகவே விரும்புகையாலே
அவாப்த ஸமஸ்த காமனான யுனக்கு
சேஷ பூதனான என்னை
அநந்யார்ஹன் ஆக்கினாய் —

———

பரமபதம் முதலான தேசங்கள் எல்லாத்தையும் விட்டு
என் நெஞ்சில் புகுந்த பின்பு நீ உஜ்ஜவலன் ஆனாய் என்கிறார் –
(கீழே அவற்றை விட்டு ஓடி வந்தவர் உஜ்ஜவலமாக இருப்பதை இங்கு அருளிச் செய்கிறார் )

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

பதவுரை

தடவரை வாய்–பெரிய பர்வதத்தில்
மிளிர்ந்து மின்னும்–மிகவும் விளங்கா நின்றுள்ள
தவளம் நெடு கொடி போல்–பரிசுத்தமான பெரியதொரு கொடி போல,
சுடர் ஒளி ஆய்–மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய்
என் நெஞ்சின் உள்ளே–எனது ஹ்ருதயத்தினுள்
தோன்றும்–விளங்கா நின்றுள்ள
சோதி நம்பீ–ஒளியினால் நிரம்பியவனே!
வட தடமும்–வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும்
வைகுந்தமும்–ஸ்ரீவைகுண்டமும்
மதிள்–மதில்களை யுடைய
துவராபதியும்–த்வாரகையும் (ஆகிற)
இட வகைகளை–இடங்களை யெல்லாம்
இகழ்ந்திட்டு–உபேஷித்து விட்டு,
என் பால்–என்னிடத்தில்
இடவகை கொண்டனையே–வாஸ்தக புத்தியைப் பண்ணி யருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!)–

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
பரப்பை உடைத்தான மலையிடத்திலே பிரகாசகமுமாய்
தேஜஸ்ஸாலே விளங்கா நிற்பதாய்
பரி ஸூத்தமான பெரிய கொடி போலே

தடவரை -பெரிய பர்வதம் என்றபடி
மிளிருகை -ஒளி விடுகை –
தவழுகை என்றுமாம்

சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
நிரவதிக தேஜஸ்ஸாய்
நெஞ்சுக்குள்ளே தோன்றுகிற தேஜஸ்ஸாலே பூர்ணன் ஆனவனே

சுடர் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
ஒளி -திவ்ய மங்கள விக்ரஹம் -என்னவுமாம்
சோதி -குணங்கள் என்னவுமாம்
நம்பி -இவற்றால் குறைவற்று இருக்கும் படி
என் -இவற்றை எல்லாம் தமக்குப் பிரகாசிப்பித்த படி
இவர் திரு உள்ளத்தே புகுந்த பின்பு
திருமேனியும் புகர் பெற்று
பூர்த்தியும் உண்டாய்த்து

வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு
சனகாதிகளுக்கு முகம் கொடுக்கிற திருப்பாற் கடலும்
நித்ய ஸூரிகளுக்கு முகம் கொடுக்கிற பரம பதமும்
பிரணயி நிகளுக்கு முகம் கொடுக்கிற ஸ்ரீ மத் த்வாரகையும்
அரணையும் உடைத்த தேசம் என்கை

இவை முதலான திவ்ய தேசங்கள் எல்லாத்தையும் அநாதரித்து
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி
முன் அணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலும் கொள்ளுமா போலே
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல்லென்று ஒழிந்தன -என்னக் கடவது இறே

என் பால் இடவகை கொண்டனையே
இவற்றில் பண்ணும் ஆதரத்தை என் பக்கலிலே பண்ணினாய்

இப்படி ஆதரித்தது உன்னுடைய பிரயோஜனம் என்னும் இடம்
உன் திருமேனியிலே காணலாம்படி இருந்தாய்
இது என்ன வ்யாமோஹம் தான் -என்கிறார் –

———-

நிகமத்தில்
இத் திருமொழியை அப்யஸித்தாருக்குப் பலம் தம்மைப் போலே
எம்பெருமானுக்கு அநந்யார்ஹர் ஆகை என்கிறார் –

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 –

பதவுரை

வேயர் தங்கள்–வேயர் வைதிகர்களுடைய
குலத்து–வம்சத்து-வைதிகர் குலம்
உதித்த–அவதரித்த
விட்டு சித்தன்–பெரியாழ்வாருடைய
மனத்து–ஹ்ருதயத்தில்
கோயில் கொண்ட–திருக் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கிற
கோவலனை–கோபாலனும்
கொழு குளிர் முகில் வண்ணனை–கொழுமையும் குளிர்ச்சியும் பொருந்தி மேகம் போன்ற நிறத்தை யுடையனும்.
ஆயரேற்றை–இடையர்களுக்குத் தலைவனும்
அமரர் கோவை–நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹனும்
அந்தணர்–சனகர் முதலிய ப்ரஹ்ம மஹரிஷிகளுக்கு
அமுதத்தினை–அம்ருதம் போல் இனியதுமான எம்பெருமானை
பாட வல்லார் தாம்–(இத் திருமொழியினால்) பாட வல்லவர்கள்
சாயைப் போல–நிழல் போல
அணுக்கர்களே–(எம்பெருமானை எப்போதும்) அணுகி இருக்கப் பெறுவர்கள்–
பாத ரேகா சாயை போல் அணுக்கர்

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக்
ஜகத்துக்கு ஆதித்யன் உதித்து அந்தகாரத்தைப் போக்குமா போலே
வேயர் கோத்ரத்திலே இவர் வந்து அவதரித்து
ஜகத்தில் உண்டான அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கின படி

இப்படிப்பட்ட ஆழ்வாருடைய ஹிருதய கமலத்தையே தனக்கு
அசாதாரணமான கோயிலாக அங்கீ கரித்த கிருஷ்ணனை யாய்த்து
இப்பிரபந்தத்தாலே ப்ரதிபாதித்தது –

விட்டு சித்தன்
ஸர்வேஸ்வரனுக்கு ஹ்ருத்யரான ஆழ்வார்
இவர் திரு உள்ளத்திலே
பர வ்யூஹாதி ஸ்தலங்களான ஸ்ரீ வைகுண்டாதிகளை எல்லாம் உபேக்ஷித்து
ஆழ்வார் திரு உள்ளத்தையே அவை எல்லாமுமாகக் கொண்டான்

கோவலன்
நிமக்நரை உத்தரிப்பிக்கைக்காக தாழ்ந்த குலத்தில் வந்து அவதரித்தவனை

கொழும் குளிர் முகில் வண்ணனை
அழகியதாய் ஸ்ரம ஹரமான மேகம் போன்ற திரு மேனியை யுடையவனை
இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பாய்த்து
குளிர்ந்து செவ்வி யுண்டாய்த்
தன் நிறம் பெற்றது திரு மேனி

முகில் வண்ணன் -என்று
இவன் அவருக்குப் பண்ணின ஒவ்தார்யத்துக்கு த்ருஷ்டாந்தம் ஆகவுமாம்

ஆயர் ஏற்றை
இடையரோடே கலந்து பரிமாறுகையாலே மேனாணித்துச் செருக்கி இருக்கிறவனை

அமரர் கோவை
அனுபவம் மாறில் முடியும்படியான ஸ்வ பாவத்தை யுடைய நித்ய ஸூரிகளுக்கு ஸ்வாமியானவனை

அந்தணர் தம் அமுதத்தினை
இவ் விபூதியில் முமுஷுக்களாய்
நிரதிசய பக்திமான்களான ப்ராஹ்மணருக்கு நிரதிசய போக்யமான அம்ருதம் போலே ப்ராப்யனானவனை
அவர்களை விண்ணுளாரிலும் சீரியர் என்னக் கடவது இறே
இங்கேயே அவர்களை போலவே இவ் வமுருதத்தைப் பாநம் பண்ணுகையாலே

சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -–
பாட வல்லார் தாமும் சாயை போலே அணுக்கர்களே என்று எம்பார் யோஜனை

பாடுகையாவது
உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று
ப்ரீதி பிரேரிதராய்க் கொண்டு
ரஷ்ய ரக்ஷக பாவத்தை மாறாடி மங்களா ஸாஸனம் பண்ணுகை

சாயை போலே என்றது
புருஷனுடைய சாயை அவன் புக்க இடத்தே புக்கும் புறப்பட்ட இடத்தே புறப்பட்டு
அதன் பிரவிருத்தி நிவ்ருத்திகள் அடைய புருஷன் இட்ட வழக்கமாம் போலே

இத் திருமொழி கற்றாருக்கும் தங்களுக்கு என்று ஒரு ப்ரவ்ருத்தியாதிகள் இன்றிக்கே
ஈஸ்வரன் இட்ட வழக்காய் அவனுக்கு அந்தரங்கராகப் பெறுவார்கள் –

சாயா வா ஸத்வம் அநு கச்சேத் -என்றும்
நிழலும் அடி தாறும் ஆனோம் (பெரிய திருவந்தாதி )-என்று சொல்லக் கடவது இறே

அதவா
சாயை போலேப் பாட வல்லார்
சாயை என்று நிழலாய்
குளிரப்பாட வல்லார் என்றுமாம்
தங்கள் அந்தரங்கர்கள் ஆவார்கள் என்கை

ஆக
பத்துப் பட்டாலும்
தாம் பெற்ற பேற்றை அருளிச் செய்து
இது கற்றாருக்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்

ஆக
திருப் பல்லாண்டில் தொடங்கின மங்களா சாஸனமே யாத்திரையாகக் கொண்டு போந்து
நிகமிக்கிற இடத்திலும்
சாயை போலே பாட வல்லார் -என்றது
திருப் பல்லாண்டு பாட வல்லார் என்று
மங்களா ஸாசனத்தோடே தலைக் கட்டுகையாலே
இவருக்கு மங்களா சாஸனமே எவ் வஸ்தையிலும் யாத்ரை -என்றதாயிற்று –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: