ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —5–3–துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை-

கீழில் திருமொழியில்
திருமால் இருஞ்சோலை மலையிலும்
சூழ் விசும்பு அணி முகிலிலும் சொன்ன அர்த்தங்கள் சொல்லிற்று

இதில்
முனியே நான் முகனில் ஒன்பது பட்டாலும் சொன்ன அர்த்தத்தைச் சொல்லுகிறது

பத்தாம் பாட்டில் அர்த்தம்
மேலில் திரு மொழியிலே சொல்லுகிறது

அன்றிக்கே
கீழில் திருமொழியில்
அநிஷ்ட நிவ்ருத்தியைச் சொல்லி

இத் திருமொழியிலே
இஷ்ட ப்ராப்திக்கு
திருவாணை இட்டுத் தடுக்கிறார் -என்னவுமாம் –

—————————————–

அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக
உன்னைக் காணப் பெற்ற நான்
இனிப் போக விடுவேனோ என்கிறார் –

துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 1-

பதவுரை

மக்கள் அறுவரை–உனக்கு முன்பிருந்த (ஆறு பிள்ளைகளையும்
கல் இடை மோத–(கம்ஸனானவன்) கல்லில் மோதி முடிக்க, (அதனால்)
இழந்தவள் தன்–(அம் மக்கள் அறுவரையும்) இழந்தவனான தேவகியினுடைய
வயிற்றில்–திரு வயிற்றில்
சிக்கென வந்து–சடக்கென வந்து
பிறந்து நின்றாய்–திருவவதரித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்–(எல்லார்க்கும் எளியவனும்படி) திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே!
புக்கினில் புக்கு–(நீ) புகுந்தவிடங்களில் எல்லாம் (நானும்) புகுந்து
உன்னை
கண்டுகொண்டு–ஸேவித்து
துக்கம் சுழலையை சூழ்ந்து கிடந்த–துக்கங்களாகிற சுழலாற்றைச் சுற்று மதிளாகக் கொண்டிருக்கிற
வலையை–வலை போன்ற சரீரத்தில் நசையை
அற–அறும்படி
பறித்தேன்–போக்கிக் கொண்ட அடியேன்
இனி–(உன்னைப்) பிரயாணப்பட்டுப் பெற்ற பின்பும்
போக விடுவது உண்டே–(வேறிடத்திற்குப்) போகும்படி விடுவது முண்டோ?

துக்கச் சுழலையை
சுழல் ஆறு போலே வளைய வருகிற துக்கத்தை விளைப்பதாய் இருக்கை
கர்ப்ப வாஸம் போலே இவனைச் சுற்றிக் கிடக்கிற துக்கங்களை என்றுமாம் –

சூழ்ந்து கிடந்த வலையை
தப்ப ஒண்ணாத படி வீசின சரீரமாகிய வலையை
ஆத்மாவைச் சுற்றிக் கொண்டு கிடக்கிற அவித்யா கர்மாதிகள் -என்னுமாம்

அறப் பறித்து
ருசி வாசனைகளோடே போம்படி பண்ணி

புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன்
புக்க இடம் எல்லாம் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன்
பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதார அளவாகச் சொல்லுகை
எல்லா இடத்தலும் உன்னை ஸாஷாத் கரிக்கப் பெற்றேன்

இனிப் போக விடுவது உண்டே
கைப்பட்ட உன்னை நான் போக ஸம்மதிப்பேனோ
போகிலும் கூடப் போகும் அத்தனை
உன்னாலே பெற்ற நான் உன்னைப் போக விடுவேனோ

நான் உன்னைப் போக விடுவேனாய் இருந்தேனோ -என்று
அவனையே கிடக்கிறார் ஆகவுமாம்

மக்கள் அறுவரைக் கல்லிடை மோத விழுந்தவடன் வயிற்றில்
தேவகியார் இழவு தீர்ந்தால் போல்
என் இழவையும் தீர்த்து அருள வேணும் என்கிறார் –

கால நேமியோடே சம்பந்தம் உடையராய் ப்ரஹ்ம சாபத்தாலே பாதாளத்திலே வர்த்திப்பார்
ஆறு அஸூரர்களை யோக நித்ரையாலே தேவகி கர்ப்பத்தில் பிரவேசிப்பிக்க
அந்த அஸூரர்களை ஜனிக்க ஜனிக்க
கம்சன் கல்லோடே அடித்துப் பொகட்டான்

ஏழாம் கர்ப்பமான நம்பி மூத்த பிரானை ரோஹிணியார் திரு வயிற்றிலே அவதரிப்பித்து
தான் அஷ்டம கர்ப்பமாக விறே திரு அவதரித்தது
இப்படி ஆறு புத்ரர்களைக் கல்லோடே மோத
இழந்த தேவகியார் திரு வயிற்றிலே

சிக்கனே வந்து பிறந்து நின்றாய்
அந்த கம்சனால் நலிவு பண்ணாதபடி வலியையாய்
அவன் தனக்கே பாதகனாய்க் கொண்டு
வந்து திரு அவதரித்தாய்

திரு மால் இரும் சோலை எந்தாய்
அந்த அவதாரத்தில் உதவப் பெறாத எனக்காகவே
திருமலையில் ஸந்நிஹிதனாய்
கிருஷியைப் பண்ணி
பல வேளையில்
பொகட்டுப் போகலாமோ –

————-

அவனுக்குப் போக ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் (பேரில் )ஆணை இடுகிறார்

வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உன் தன் இந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்றுத்
தெளித்து வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 2-

பதவுரை

நாடும்–நாட்டிலுள்ளாரும்-அவிசேஷஞ்ஞார்
நகரமும்–நகரத்திலுள்ளாரும்-விசேஷஞ்ஞார்
எங்கும்–மற்றெங்குமுள்ளவர்களும்
அளித்து–நெருங்கி
தம்முடைய–தங்கள் தங்களுடைய
தீ வினை–துஷ்ட கர்மங்களை
தீர்க்கல் உற்று–ஒழிப்பத்தில் விருப்புற்று
தெளித்து–ஆரவாரித்துக் கொண்டு
வலம் செய்யும்–பிரதக்ஷிணம் செய்யப் பெற்ற-பலத்தைக் கொடுக்கும் என்றுமாம்
தீர்த்தம் உடை –தீர்த்தம் விசேஷங்களையுடைய
திருமாலிருஞ்சோலை–திருமாலிருஞ்சோலையில்
(எழுந்தருளியிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
வளைத்து வைத்தேன்–(உன்னைச்) சூழ்ந்து கொண்டேன்
இனி–இனி மேல்
போகல் ஒட்டேன்–(நீ வேறிடந் தேடிப்) போவதை (நான்) ஸம்மதிக்க மாட்டேன்.
உன் தன்–உனக்கு உள்ள
இந்திர ஞாலங்களால்–மாயச் செய்கையினால்- வல்லமையினால்
ஒளித்திடில்–(உன்னை நீ) ஒளித்துக் கொண்டால்
நின் திரு –நின் திரு உனக்கு சேஷ பூதை -–
திரு ஆணை-உனது பிராட்டியின் மேலாணை.
(அப்படி ஒளிக்கலாகாது)
நீ–நீ
ஒருவர்க்கும்–ஒருவரிடத்திலும்
மெய்யன் அல்லை–உண்மையான உக்தி அனுஷ்டானங்களை யுடையவனல்லை–

வளைத்து வைத்தேன்
ஸ்ரீ பரதாழ்வான் பெருமாளை வளைத்து
போக ஒண்ணாது -என் கார்யம் செய்து அல்லது -என்றால் போலே
இவரும் ஈஸ்வரனை வளைக்கிறார்
தம் செல்லாமை இறே வளைக்கிறது

இனி போகல் ஒட்டேன்
உன் சுவடு அறிந்த நான் இனிப் போக விடுவேனோ

உன் தன் இந்திர ஞாலங்களால் ஒளித்திடில்
உன்னுடைய ஐந்திர ஜாலங்களை இட்டு என்னை மறைத்து
நீ மறைய நிற்கில்
இங்கே இருத்தி ஒரு குண ஆவிஷ்காரத்தைப் பண்ணி மறப்பித்துத் தான் மறைய நிற்கை

அன்றிக்கே
மம மாயா துரத்தயா -என்கிற
பிரக்ருதியை இட்டு மறைக்கை என்னுமாம்

நின் திருவாணை கண்டாய்
உனக்கு அநன்யார்ஹமாய்
நிரதிசய போக்ய பூதையுமான
பெரிய பிராட்டியார் ஆணை கிடாய்

அவள் பக்கல் முகம் பெற வேண்டி இருந்தாய் யாகில்
அவள் பரிகரமான என் அபேக்ஷிதம் செய்து அல்லது
உனக்குத் தரம் சொல்ல ஒண்ணாது

இங்கனே நம்மை நிர்பந்திக்கைக்கு நாம் உமக்கு தப்பினது உண்டோ என்ன
நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
கரு மலர்க்கூந்தல் –இத்யாதி
ஒரு பேதைக்குப் பொய் குறித்து -என்கிறபடியே
நீ யாருடனே நிலை நிற்க ஸம்ஸ்லேஷித்தாய்

அளித்து எங்கும் நாடும் நகரமும்
அஞ்ஞரோடே
சர்வஞ்ஞரோடே
வாசியற
அவி சேஷஞ்ஞரோடு
வி சேஷஞ்ஞரோடு
வாசியற–என்கை
இப்படி எங்கும் ரஷித்து

தம்முடை தீவினை தீர்க்கலுற்றுத்து அளித்து வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய்
தம் தாமாலே பண்ணப்பட்ட துஷ்கர்மங்களைப் போக்குகையிலே ஒருப்பட்டு இருக்கும்
அவர்களாலே
தீர்த்தங்களை ப்ரோக்ஷித்துக் கொண்டு ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ணப் படும்
தீர்த்தங்களை யுடையதான திரு மலையிலே
நின்று அருளின என் ஸ்வாமியே

அளித்து இத்யாதி
அழகருக்கு விசேஷணம் ஆகவுமாம் –

(நூபுர கங்கை திருமலை அழகர் -மூன்றுக்கும் விசேஷணமாகக் கொண்டு மூன்று நிர்வாகம் )

—————-

முதல் பாட்டில்
உன் ஸ்வரூப சித்திக்காக என் கார்யம் செய் என்றார்
இரண்டாம் பாட்டில்
உன் பிரணயித்வத்துக்காக என் கார்யம் செய் என்றார்
இப்பாட்டில்
உனக்கு தேஜோ ஹானி வராமல் இருக்க வேண்டில் என் கார்யம் செய் என்கிறார்

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத் தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர் புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3-3- –

பதவுரை

இனம் குறவர்–திரள் திரளாய்ச் சேர்ந்துள்ள குறவர்கள்
புனம்–புனத்திலுண்டான
தினை–தினைகளை
கிள்ளி–பறித்து
புது அவி காட்டி–(அதை எம்பெருமானுக்குப்) புதிய ஹவிஸ்ஸாக அமுது செய்யப் பண்ணி
(அதற்காகப் பிரயோஜ நாந்தரத்தை விரும்பாமல்)
உன் பொன் அடி வாழ்க என்று–“உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்று
(மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு)
புதியது–புதியதாகிய அத் தினையை
உண்ணும்–உண்ணுதற்கு இடமான
எழில்–அழகு பொருந்திய
மாலிருஞ் சோலை–திருமாலிருஞ் சோலை மலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
உனக்கு–(சேஷியாகிய) உனக்கு
பணி செய்து இருக்கும் தவம் உடையேன்–கைங்கரியம் பண்ணிக் கொண்டிருக்கையாகிற (உனது) அநுக்ரஹத்தைப் பெற்றுள்ள அடியேன்
இனி–இனி மேல்
போய்–புறம்பே போய்
ஒருவன் தனக்கு பணிந்து–ஒரு க்ஷுத்ர புருஷனைப் பற்றி
கடைத்தலை–(அவனுடைய) வீட்டு வாசலில்
நிற்கை–(கதிதேடி) நிற்பதானது
நின் சாயை அழிவு கண்டாய்–உன்னுடைய மேன்மைக்குக் குறை யன்றோ?–

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்
வகுத்த விஷயமான உனக்கு
முற்பட சேஷத்வ ஞானம் பிறந்த பின்பு
சேஷ விருத்தியிலே ஆசை பிறந்து
கைங்கர்யமே யாத்ரையாய்
அது இல்லாத போது சத்தை குலையும் படியாய்
இப்படி கைங்கர்யம் பண்ணி அதுவே யாத்ரையாய் இருக்கும் படியான தபஸ்ஸை யுடையேன்

இவருக்குத் தபஸ்ஸூ அவன் பிரசாதம் ஆயிற்று

இனிப் போய்
இப்படி கைங்கர்யமே யாத்ரையான பின்பும்
இவற்றை விட்டுப் புறம்பே போய்
அந்நிய விஷய ஸா பேஷனாய்

ஒருவன் தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை
ஷூத்ரனாய் இருப்பான் ஒரு சம்சாரி சேதனன் காலில் விழுந்து
அவன் வாசலைப் பற்றி நிற்கை

நின் சாயை அழிவு கண்டாய்
உனக்குத் தேஜோ ஹானி கிடாய்
உன் ஸ்வரூப ஹானிக்காய்த்து நான் கிலேசிக்கிறது

புனத் தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்றினக் குறவர் புதியது உண்ணும்
புனத்தினிலே புதுத் தினைக்கதிரை முறித்து
அக்னியிலே பக்வமாக்கி
அழகருடைய ஸ்ப்ருஹ ணீயமான திருவடிகளை சொல்லி
மங்களா ஸாஸனம் பண்ணி
உன் திவ்ய ஐஸ்வர்யம் ஸம்ருத்தமாக வேணும் -என்று திருப்பல்லாண்டு பாடி
திருமலையில் திருக் குறவர்
தங்களுடைய புத்ர தாரங்களோடும்
நவ போஜனம் பண்ணா நிற்பர்கள்

எழில் மால் இரும் சோலை எந்தாய்
அழகிய திருமலையிலே வர்த்திக்கிற ஸ்வாமியே
அந் நிலையிலே உன் ஸ்வாமித்வத்தை எனக்குப் பிரகாசிப்பித்தவனே –

————-

உன் திருவடிகளை ஒழிய புறம்பு போக்கிடம் இல்லாத என் கார்யம்
செய்து அருள வேணும் என்கிறார் –

காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீரும் இல்லை உன்
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று
பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய் திருமால் இரும் சோலை எந்தாய் – 5-3- 4- –

பதவுரை

குரு-குரு வம்சத்திற் பிறந்த
பாண்டவர்க்காய்–பாண்டவர்களுக்காக
ஓர் பொய் சுற்றம் பேசி சென்று–ஒரு பொய் யுறவைப் பாராட்டிக் கொண்டு
அங்கு–துரியோதனாதியரிடத்து
தூது சென்றாய்–தூது போய்
பேதம் செய்து–ஆஸ்ரிதர் அநாஸ்ரிதர் -இரண்டு வகுப்பினர்க்கும் கலஹத்தை மூட்டி
(பின்பு பாரத யுத்தங் கோடித்து அந்த யுத்தத்தில்)
இல்லை–கண்டதில்லை
உன் பாதம் நிழல் அல்லால்–உனது திருவடி நிழலொழிய
எங்கும்–துரியோதனாதியரில் ஒருவர் தப்பாமல்
பிணம் படுத்தாய்–பிணமாக்கி யொழித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்!
காதம் பலவும்–பலகாத தூரமளவும்
திரிந்து உழன்றேற்கு–திரிந்து அலைந்த எனக்கு
அங்கு–அவ் விடங்களில்
ஓர் நிழல் இல்லை–(ஒதுங்குகைக்கு) ஒரு நிழலுங் கண்டதில்லை;
(அன்றியும்)
நீர்–(தாபமாற்றக் கடவதான) தண்ணீரும்
மற்று ஓர்–மற்றொரு
இல்லை–கண்டதில்லை
ஆராய்ந்து பார்த்தவிடத்தில்
உன் பாதம் நிழல் அல்லால்–உனது திருவடி நிழலொழிய
உயிர்ப்பு இடம்–மூச்சு விட இடம் -ஆச்வாஸ ஹேதுவான இடத்தை
நான் எங்கும் காண்கின்றிலேன்–நான் ஓரிடத்தும் காண்கிறேனில்லை–

காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீரும் இல்லை
நெஞ்சுக்கும் கண்ணுக்கும் எட்டின இடம் எல்லாம்
அலர்மந்து திரிந்த இடத்தில்
அவ்விடங்களில் ஒரு நிழலாதல் நீராதல் கண்டிலேன்-

கண்டது ஸம்ஸார விஷ விருஷத்தின் நிழலும்
மாரீசிகா ஜலமும் இறே
வாஸூ தேவ தருச்சாயையும்
அவன் திரு உள்ளத்தில் நீர்மையையும் இறே
நிழலும் நீரும் ஆவது

உன் பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
அவனடி நிழல் தடம் -என்னக் கடவது இறே
இது ஒழிந்து மூச்சு விடுகைக்கு ஓர் இடமும் அநந்ய கதியான நான் காண்கிறிலேன்

அந் நிழலில் ஒதுங்கினார் உண்டோ என்ன
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய்
குரு குலத்தில் பிறந்த பாண்டு புத்ரர்களுக்காகக் கழுத்திலே ஓலை கட்டி தூது போய்த்து இல்லையோ
அவர்கள் அநந்ய கதித்வம் கண்டு அன்றோ நீ அது செய்தது

அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய்
அந்த துர்யோதனர்கள் பக்கல்
உங்களோடு அவர்களோடு வாசி என்
நீங்களும் எனக்கு பந்துக்கள் அன்றோ என்று
அஹ்ருதயமாக உறவு சொல்லிக் கொண்டு சென்று
ஸம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே
ஆஸ்ரித அநாஸ்ரித விபாகத்தைப் பண்ணி
பூ பாரமானவர்களை நிரஸித்துப் பொகட்டிலையோ

திருமால் இரும் சோலை எந்தாய்
அவ் வவதாரத்தில் உதவாத எனக்காகவேத் திருமலையிலே நின்று அருளினவனே —

————–

பக்தியாலே பரவசனான என் கார்யம் செய்து அருள வேணும் என்கிறார் –

காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல்
மேலும் எழா மயிர்க் கூச்சமறா வென தோள்களும் வீழ் ஒழியா
மாலுகளா நிற்கும் என் மனமே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 5-

பதவுரை

சேல்–மீன்களானவை
உகளா நிற்கும்–துள்ளி விளையாடுதற்கு இடமான
நீள் சுனை சூழ்–பெரிய தடாகங்களாலே சூழப் பெற்ற
என–என்னுடைய
காலும்–கால்களும்
எழா–(வைத்து விடத்தை விட்டுப்) போகின்றனவில்லை;
கண்ண நீரும்–கண்ணீரும்
நில்லா–உள்ளே தங்குகின்றனவில்லை.
உடல்–சரீரமானது
சோர்ந்து நடுங்கி–கட்டுக் குலைந்து நடுங்கியதனால்
குரலும்–குரலும்
மேல் எழா–கிளம்புகின்றதில்லை;
மயிர் கூச்சும் அறா–மயிர்க் கூச்செறிதலும் ஒழிகின்றதில்லை;
திருமாலிருஞ்சோலை–திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எந்தாய்–எம்பெருமானே!
(எனக்கு உன்னிடத்துள்ள அன்பு மிகுதியினால்)
தோள்களும்–தோள்களும்
வீழ்வு ஒழியா–விழுந்து போவதில் நின்றும் ஒழிந்தனவில்லை
( ஒரு வியாபாரமும் செய்ய முடியாமல் விழுந்தொழிந்தன);
என் மனம்–எனது நெஞ்சானது
மால் உகளா நிற்கும்–வியாமோஹத்தை அடைந்திரா நின்றது;
(இப்படிகளால்)
வாழ–வாழ்வுறும்படி
உன்னை–உன்னை
தலைப் பெய்திட்டேன்–சேர்ந்து விட்டேன்–

காலும் எழா
காலும் எழா –என்கிறபடியே
கால் நடை தாரா

கண்ண நீரும் நில்லா
கண்கள் நீர் மாறாது

உடல் சோர்ந்து நடுங்கி
ஸரீரமானது பரவசமாய்த் தடுமாறி

குரல் மேலும் எழா
வார்த்தை சொல்ல பலமில்லை

மயிர்க் கூச்சமறா
ரோமங்கள் புளகிதமாய் மாறுகிறது இல்லை

என தோள்களும் வீழ் ஒழியா
என் கைகளும் அஞ்சலி மாறா

மாலுகளா நிற்கும் என் மனமே
என் மனஸ்ஸானது மேல் மேல் என பித்தேறா நின்றது

உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
உன்னை அனுபவித்து வாழ வேணும் என்று தலைப்பட்டேன்

சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மால் இரும் சோலை எந்தாய்
சேல்களாகிற மத்ஸ்யங்கள் உகளிக்கும் படி பரப்பை யுடைத்தான தடாகங்கள் சூழப்பட்டு இருக்கிற
திருமலையிலே ஸந்நிஹிதனாய் எனக்கு இந்த பக்தியை விளைத்தவனே

இத்தால்
ஜலத்தைப் பிரிந்து தரிக்க மாட்டாத
மத்ஸ்யம் போலே உன்னைப் பிரிந்து ஆற்ற மாட்டேன் -என்கிறார் –

—————

நீர் மற்ற ஓர் இடம் இல்லை என்பான் என்
ப்ரஹ்ம ருத்ராதிகள் இல்லையோ -என்ன
அவர்கள் அஸக்தர் -என்கிறார் –

எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமால் இரும் சோலை எந்தாய் 5-3- 6-

பதவுரை

திருமாலிருஞ்சோலை எந்தாய்!
எருதுக் கொடி உடையானும்–வ்ருஷப த்வஜனான ருத்திரனும்
பிரமனும்–(அவனுக்குத் தந்தையான) ப்ரஹ்மாவும்
இந்திரனும்–தேவேந்திரனும்
மற்றும் ஒருத்தரும்–மற்றுள்ள எந்தத் தேவரும்
இப் பிறவி என்னும் நோய்க்கு–இந்த ஸம்ஸாரமாகிற வியாதிக்கு
மருந்து அறிவார் இல்லை–மருந்து அறிய வல்லவரல்லர்;
மருத்துவன் ஆய் நின்ற–(இப் பிறவி நோய்க்கு) மருந்தை அறியுமவனான-ஆச்சார்யராய்
மா மணி வண்ணா–நீல மணி போன்ற வடிவை யுடையவனே!
மறு பிறவி தவிர–(எனக்கு) ஜந்மாந்தரம் நேராத படி
திருத்தி–(அடியேனை) சிக்ஷித்து
உன் கோயில் கடை புக பெய்–உன் கோயில் வாசலில் வாழும்படி அருள் புரிய வேணும்–

எருத்துக் கொடி உடையானும்
அறிவு கேட்டுக்கு எல்லை யான விருஷபத்தை த்வஜமாக யுடைய ருத்ரனும்
இத்தால் அவனுடைய தமஸ் ஸூ பிராஸுர்யம் சொல்லிற்று

பிரமனும்
அவனுக்கு ஜனகனாய்
தேவர்களுக்கு ஞான பிரதானம் பண்ணினவன் என்னும்படி
ஞாதாவான ப்ரஹ்மாவும்
ஸ்ருஷ்ட்டி கர்த்தா வாகையாலே ராஜஸோத்தரன் என்று தோற்றுகிறது

இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
த்ரை லோக்ய அதிபதியான இந்திரனோடே கூட மற்றும் உண்டான தேவ ஜாதியும்
ஒருவரும் இஜ் ஜன்மம் ஆகிற வியாதிக்கு ஒவ்ஷதம் அறிவார் இல்லை –
ஸம்ஸார பீஜமாம் அத்தனை

சர்வேஸ்வரன் ஸம்ஸார நிவர்த்தகன் என்று அறியார்கள் –
ஈஸ்வரோஹம் என்று இருக்குமவர்கள் ஆகையாலே
கடிக் கமலம் இத்யாதி
கார் செறிந்த இத்யாதி
நீறாடி —

மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா
மருந்தாகும் அது அன்றிக்கே
மருந்து அறிவதும் செய்யும்
இது தான் மலை மேல் மருந்து

நீல ரத்னம் போன்ற வடிவை யுடையவனே
இவருடைய மருந்து இவனுடைய வடிவு அழகு ஆய்த்து
நச்சு மா மருந்து இறே
மருந்தும் -இத்யாதி

மறு பிறவி தவிரத் திருத்தி
புனர் ஜென்மம் இல்லாத படி
ஜன்மாந்தர ஹேதுவான ப்ரக்ருதி சம்பந்தம் அறும் படி திருத்தி

உன் கோயில் கடை புக பெய்
உன் கோயிலில் திரு வாசலைப் பற்றி இருந்து வாழும்படி பண்ணி

திருமால் இரும் சோலை எந்தாய்
என் ஜென்மத்தை அறுக்கைக்கு அன்றோ
நீ திருமலையிலே ஸந்நிஹிதனாயிற்று
மா மாயையை மங்க ஓட்டுமவன் அன்றோ –

————–

உன் நிர்ஹேதுக கிருபையாலே விஷயீ க்ருதனான என்னை
அஞ்சாதே கொள் என்று
சோக நிவ்ருத்தியைப் பண்ணி அருளாய் என்கிறார் –

அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்
இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை அஞ்சேல் என்று கை கவியாய்
சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையோடும்
செக்கர் நிறத்து சிவப்புடையாய் திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 7-

பதவுரை

சக்கரமும்–திருவாழியாழ்வானும்
தட கைகளும்–பெரிய திருக்கைகளும்
கண்களும்–திருக்கண்களும்
பீதக ஆடை யொடும்–திருப் பீதாம்பரமும்
செக்கர் நிறத்து சிவப்பு உடையாய்–செவ் வானத்தின் நிறம் போன்ற நிறத்தை உடையவையாய் இருக்கப் பெற்றவனே!
அக்கரை என்னும்–ஸம்ஸாரம் என்கிற
அநர்த்த கடலுள்–அநர்த்த ஸமுத்திரத்தின் உள்ளே
அழுந்தி–(நெடுநாள்) அழுந்திக் கிடந்து
இளைத்திருந்து–(அதில்) வருத்ப்பட்டுக் கொண்டிருந்தது
(பின்பு)
உன் பேர் அருளால்–உனது பரம கிருகையினால்
இக் கரை ஏறினேனை–இக் கரையேறிய அடியேனைக் குறித்து
அஞ்சேல் என்று கை கவியாய்–அபய ப்ரதாக முத்ரையைக் காட்டி யருள வேணும்–

அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்தி
பகவத் விஷயத்துக்கு அவ்வருகாய்
ஆத்ம வஸ்துவுக்கு ஹானியை விளைப்பதான ஸம்ஸார சமுத்ரத்திலே அவகாஹித்து

உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை
உன்னுடைய நிர்ஹேதுக கிருபையினாலே
துயர் அறு சுடர் அடியான திருவடிகள் ஆகிற
இக்கரையை ஏறிப்
பின்னையும் ஞான லாபம் ஒழிய பிராப்தி இல்லாமையாலே
தளர்ந்து பதஸ் பந்தம் பண்ண மாட்டாதே இருக்கிற என்னை
ப்ராப்ய ருசியாலே த்வரித்து கிலேசிக்கிற என்னை

அஞ்சேல் என்று கை கவியாய்
பிராப்தியைப் பண்ணித் தந்து -மாஸூச -என்னாய்

ப்ராப்ய வேஷம் சொல்லுகிறது மேல்

சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையோடும் செக்கர் நிறத்து சிவப்புடையாய்
திருக் கைகளுக்கு அழகை உண்டாக்கும் திருவாழியும்
வெறும் புறத்தே ஆலத்தி வழிக்க வேண்டும் அழகை யுடைய திருக் கைகளும்
அவ் வாழ்வார்கள் அளவும் அலை எறிகிற திருக் கண்களும்
பும்ஸத்வ அவஹமாய் ஸ்ப்ருஹணீயமான திருப் பீதாம்பரத்தோடே கூட
ஸந்த்யா ராகம் போலே சிவந்த நிறத்தை யுடையையாய்

திரு மால் இரும் சோலை எந்தாய்
இவ் வடிவு அழகைத் திருமலையிலே எனக்குப் பிரகாசிப்பித்தவனே

ஸந்த்யா ராக ரஞ்சிதமான ஆகாசம் போலே யாய்த்துத் திருமேனியும்
திவ்ய அவயவங்களும்
திவ்ய ஆயுதங்களும்
திருப்பீதாம்பரமுமான
சேர்த்தி அழகு இருப்பது –

—————

அநாதி காலம் இழந்தது போராதோ
நீ கடாஷித்த பின்பும் போக ஸஹிப்பேனோ -என்கிறார்

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே
யித்தனை காலமும் போய்க் கிறிப் பட்டேன் இனி உன்னைப் போகல் ஒட்டேன்
மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய் -5- 3-8 –

பதவுரை

மைத்துனன் மார்களை–உனது அத்தை பிள்ளைகளான பாண்டவர்களை
வாழ்வித்து–வாழச் செய்து
மாற்றவர் நூற்றுவரை–(அவர்களுக்குச்) சத்துருக்களாகிய துரியோதநாதியர் நூறு பேரையும்
கெடுத்தாய்–ஒழித்தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்!
இன்றொடு நாளை என்றே–இன்றைக்கு, நாளைக்கு என்று சொல்லிக் கொண்டே
(கழித்த காலம்)
எத்தனை காலமும் எத்தனை ஊழியும்–எத்தனை காலமும் எத்தனை கல்பங்களும் உண்டோ,
இத்தனை காலமும்–இத்தனை காலம் முழுவதும்
போய் கிறிப்பட்டேன்–(ஸம்ஸாரமாகிற) யந்திரத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தேன்;
இனி–(அதில் நின்றும் விடு பட்டு ஞானம் பெற்ற) இன்று முதலாக
போக விடுவது உண்டே–(ஸர்வ ரக்ஷகனான உன்னை) வேறிடத்திற்குப் போக ஸம்மதிக்க (என்னால்) முடியுமோ?
சித்தம்–(எனது) நெஞ்சானது
நின் பாலது–உன் திறத்தில் ஈடுபட்டுள்ளமையை
அறிதி அன்றே–அறிகின்றா யன்றோ?–

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே யித்தனை காலமும் போய்க்
இன்று நாளை நேற்று என்று தொடங்கி
அநேக கல்பங்களான இந்தக் காலம் எல்லாம்
இப்படி அநாதி காலம் எல்லாம் வியர்தமாகவே போயிற்றே

கிறிப் பட்டேன்
இதுக்கு அடியாய் இருபத்தொரு விரகிலே அகப்பட்டேன்
அதாவது
பிரம ஹேதுவான ப்ரக்ருதி சம்பந்தம்

அதவா
கீழே அநாதி காலம் பழுதே போம்படி இழந்த நான்
கிறிப்பட்டேன்
நல்ல விரகிலே அகப்பட்டேன்
பெரும் கிறியார் (திரு விருத்தம் )-என்கிற விரகிலே அகப்பட்டேன் என்னவுமாம் –

இனி உன்னைப் போகல் ஒட்டேன்
உன்னாலே நிர்ஹேதுகமாக விஷயீ க்ருதனாய்
உன்னால் அல்லது செல்லாமை பிறந்த பின்பு இனிப் போக ஒட்டுவேனோ

நீர் இங்கனே நிர்பந்திக்கக் கடவீரோ விரோதி கிடைக்க என்ன
பாண்டவர்கள் விரோதியிலும் காட்டில் பிரபலமோ என் விரோதி என்கிறார்

மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்
பிரகிருதி சம்பந்த மாத்ரமான பாண்டவர்களை ராஜ்ய ஸ்ரீ யாலே ஸூகிக்கும் படி பண்ணி
அவர்களுக்கு விரோதியான துர்யோத நாதிகளை நரக ப்ராப்தராம் படி நசிப்பித்தாய்

அவர்களுக்கு நாம் அல்லது இல்லை ஆகையால் செய்தோம் என்ன
சித்த நின் பாலது அறிதி அன்றே திரு மால் இரும் சோலை எந்தாய்
அவர்களை போலியோ நான்
உன் பக்கல் ப்ரவணமான நெஞ்சை உடையேன் என்னும் இடம்
அதுக்கு வாய்த்தலையான நீயே அறிவுதியே

என் நெஞ்சை நீ வஸீ கரித்து
திருமலையில் நின்ற நிலையைக் காட்டி அன்றோ (இவற்றைச் செய்து அருளினாய் )

—————-

ஜாயமான கால கடாக்ஷமே பிடித்துக் கைங்கர்ய அபேக்ஷை யுடையனாய்
பிரதி சம்பந்தியான உன்னைக் காணப் பெற்று இனிப் போக விடுவேனோ
என் விரோதியைப் போக்கி பிராப்தியைப் பண்ணி அருள வேணும் என்கிறார் –

அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திரு சக்கரம் அதனால்
சென்றித் திசை திசை வீழச் செற்றாய் திரு மால் இரும் சோலை எந்தாய் -5 -3-9 –

பதவுரை

அங்கு–சோணித புரத்திற்கு
சென்று–எழுந்தருளி
வாணனை–பாணாஸுரனுடைய
ஆயிரம் தோளும்–ஆயிரந் தோள்களும்
திசை திசை–திக்குகள் தோறும்
தென்றி வீழ–சிதறி விழும்படி
திருச் சக்கரம் அதனால்–சக்ராயுதத்தினால்
செற்றாய்–நெருக்கி யருளினவனே!
திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!
வயிற்றில் கிடந்திருந்து அன்றே–கர்ப்ப வாஸம் பண்ணுகையாகிற அன்று முதற் கொண்டே
அடிமை செய்யல்–(உனக்குக்) கைங்கரியம் பண்ணுவதில்
உற்றிருப்பன்–அபிநிவேசங் கொண்டிருந்த நான்
இன்று–இப்போது
இங்கு வந்து–இத் திருமாலிருஞ்சோலை மலையில் வந்து
உன்னை–(அனைவருக்கும் எளியனான) உன்னை
கண்டு கொண்டேன்–ஸேவித்துக் கொண்டேன்;
இனி போக விடுவது உண்டே:.–

அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன்
கர்ப்பத்தில் கிடக்கிற காலத்திலேயே
அடிமை செய்கையே புருஷார்த்தம் என்று துணிந்து இருப்பன்

இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
அன்று நான் பிரார்த்தித்த படியே
இப்போது உன்னைக் கிட்டி இங்கே காணப் பெற்றேன்
ப்ராப்ய தேசமான திருமலையில் காணப் பெற்றேன்
இப்படி ஸூ லபனான உன்னைக் கண்ட பின்பு போக விடுவேனோ

விரோதி கனத்து இருந்ததே என்ன
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திரு சக்கரம் அதனால் சென்றித் திசை திசை வீழச் செற்றாய்
வாணனுடைய பஹு வனத்திலும் கனத்து இருந்ததோ என்னுடைய விரோதி என்கிறார்

ஸ்ரீ துவாரகையின் நின்றும் சோணித புரத்திலே எடுத்து விட்டுச் சென்று
பாணனுடைய புஜ வனத்தைத் திக்குகள் தோறும் தெறித்து விழும்படி
திருவாழியாலே அறுத்துப் பொகட்டு
உஷா அநிருத்த கடகன் ஆனவனே

திரு மால் இரும் சோலை எந்தாய்
அந்த கிருஷ்ண அவதாரத்துக்கு பிற்பாடானான எனக்காகவே அன்றோ
திருமலையில் ஸந்நிஹதன் ஆய்த்து-

————–

நிகமத்தில் இத்திருமொழியை அப்யசித்தவர்களுக்கு பலம் அருளிச் செய்கிறார் –

சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே– 5-3- 10- –

பதவுரை

உலகம்–உலகத்தாரெல்லாரும்
சென்று–(தங்கள் தங்கள் இருப்பிடித்தில் நின்றும்) போய்
குடைந்து–அவகாஹித்து
ஆடும்–நீராடா நிற்கப் பெற்ற
சுனை–தீர்த்தங்களை யுடைய
திருமாலிருஞ்சோலை தன்னுள்–திருமாலிருஞ்சோலை மலையில்
நின்ற பிரான்–எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானடைய
அடி மேல்–திருவடிகள் மேல்
அடிமைத் திறம்–கைங்கரிய விஷயமாக
பொன் திகழ்–ஸ்வர்ண மயமாய் விளங்கா நின்ற
மாடம்–மாடங்களினால்
பொலிந்து தோன்றும்–நிறைந்து விளங்கா நின்ற
புதுவை–ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு
கோன்–தலைவரான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
நேர்பட–பொருந்தும்படி
விண்ணப்பம் செய்–அருளிச் செய்த
ஒன்றினோடு ஒன்பதும்–இப் பத்துப் பாசுரங்களையும்
பாட வல்லார்–பாட வல்லவர்கள்
உலகம் அளந்தான் தமர்–திரிவிக்கிரமாவதாரம் செய்தருளின எம்பெருமானுக்குச் சேஷ பூதர்களாகப் பெறுவர்–

சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள் நின்ற பிரான் அடி மேல்
அஞ்ஞரோடு விசேஷஞ்ஞரோடு வாசியற தம்தாம் அபிமதங்கள் பெறுகைக்காகச் சென்று
ஆழ இழிந்து அவகாஹிக்கும் தலை அருவி தொடக்கமான தீர்த்தங்களை யுடைய
திருமலையில் ஸந்நிதி பண்ணி நிற்கிற உபகாரகன் திருவடிகளில்

அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
அடிமை விஷயமாக
கைங்கர்ய பிராப்தி பண்ண வேணும் என்று திரு உள்ளத்திலே படும்படி விண்ணப்பம் செய்த

பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஸ்ப்ருஹ ணீயமாய் உஜ்ஜவலமான மாடங்களாலே நிறையப்பட்டு
ப்ரத்யக்ஷமாய் இருக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
ஆப்திக்கு உறுப்பாகத் சொல்லுகிறார்

ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார்
நின் திருவாணை கண்டாய் -என்ற ஒரு பாட்டோடு
அது பெறா ஆணை அல்லவாக்கின ஒன்பது பாட்டையும்

அன்றிக்கே
ப்ராப்ய துவரையை விண்ணப்பம் செய்த ஒன்பது பாட்டோடு
பலம் சொன்ன ஒரு பாட்டையும் கூட்டி
ப்ரீதி பிரேரிதராய் பாட வல்லார் என்றுமாம்

உலகம் அளந்தான் தமரே–
இவ்வாத்மாவினுடைய அந்நிய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்த்ரங்களைப் போக்கின
செயலை யுடைய திரிவிக்ரமனுக்கு அநந்யார்ஹராகப் பெறுவர்

பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார்
உலகம் அளந்தான் தமரே–
என்று அந்வயம்

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: