தாம் அயோக்யதையை அனுசந்தித்து அகலச் செய்தேயும்
தம் கரணங்கள் மேல் விழுகிற படியைக் கண்டு க்ஷமை கொண்டார் கீழ்
நீர் தோஷம் பார்த்து நம்மை க்ஷமை கொள்ள வேண்டுவது
நாம் கடக்க இருக்கில் அன்றோ -என்று
தன் ஸுசீல்யத்தாலே மேல் விழுந்து வந்து
புகுந்த படியைக் காட்டிக் கொடுக்கக் கண்டு பேசுகிறார்
இத்திரு மொழியில்
(ஏற்கவே வந்து புகுந்து கிடந்தாலும் மறந்து இருக்க
பிரகாசப்படுத்தி -ஞானம் பெற்ற தசையை அருளிச் செய்கிறார்
யோகம் தியானிக்க தியானிக்க இருப்பதை உணர்கிறோம் )
இப்படி அவன் வந்து புகுர
அவித்யையும்
கர்மமும்
வியாதியும்
இந்திரியங்களையும்
யம படரையும் பார்த்து
நீங்கள் பண்டை தேஹமும் ஆத்மாவும் என்று இருக்க வேண்டா
அவன் திவ்ய தேசங்களில் பண்ணும் ஆதாரத்தை எல்லாம்
என் தேஹத்திலும் ஆத்மாவிலும் பண்ணிக் கொண்டு புகுந்தான்
இனி நீங்கள் ஜீவிக்க வேண்டி இருந்தீ கோளாகில்
இங்கு நின்றும் போகப் பாருங்கோள் -என்கிறார் –
—————-
நோய்களைப் பார்த்து நீங்கள் சடக்கெனப் போங்கோள் என்கிறார் –
நெய்க் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின்
மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்
பைக் கொண்ட பாம்பணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே – 5-2-1-
பதவுரை
நெய்க் குடத்தை–நெய் வைத்திருக்கும் குடத்தை
பற்றி–பற்றிக் கொண்டு
ஏறும்–(அக் குடத்தின் மேல்) ஏறுகின்ற
எறும்புகள் போல்–எறும்புகளைப் போல்
நிரந்து எங்கும்–என்னுடைய உடம்பு முழுவதும் பரவி
கைக் கொண்டு–(என்னை) வசப்படுத்தி
நிற்கின்ற (என்னையே இருப்பிடமாகக் கொண்டு) நிலைத்து நிற்கிற
நோய்காள்–வியாதிகளே!
காலம்பெற–விரைவாக
உய்ய –(நீங்கள்) பிழைக்க வேண்டி
போமின்–(என்னை விட்டு வேறிடத்தைத் தேடிப்) போய் விடுங்கள்
வேதம் பிரானார்–(பிரமனுக்கு) வேதத்தை உபகரித்தருளின் எம்பெருமான்.
பைக் கொண்ட–பரம்பினை படங்களை யுடைய
பாம்பு அணையோடும்–திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடுங்கூட
வந்து புகுந்து — எழுந்தருளி
மெய்–(எனது) சரீரத்தை
கொண்டு–(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி
கிடந்தார்–(என் சரீரத்தை கொண்டு–(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி
(என் சரீரத்தினுள்ளே) பள்ளி கொண்டிரா நின்றார், ஆதலால்
பட்டினம்–(அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று–பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு (அவனால்) காக்கப் பெற்றது–
நெய்க் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல்
ஸூத்தமாய் போக்யமான ஆஜ்யமாய் இருக்கிற கடத்தைப் பற்றிக் கொண்டு ஏறுகிற
ஷூத்ரமான பீபிலிகைகள் போலே
நிரந்து எங்கும் கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்
பரந்து இடைவிடாதே தர்ம பூத ஞானம் உள்ள இடம் எங்கும்
ஆக்ரமித்துப் போக்கு வரத்து இன்றிக்கே
அவஸர ப்ரதிக்ஷமாய் நிற்கிற வ்யாதிகாள்
காலம் பெற உய்யப் போமின்
நீங்கள் ஜீவிக்க வேண்டில் இப்போதே உடனே போங்கோள் –
எங்களுக்குப் போக வேண்டுகிறது என் என்ன
மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார் பைக் கொண்ட பாம்பணையோடும்
என்னுடைய தேஹத்தை போக்யமாகக் கொண்டு நான் இருக்கிற இடத்திலே தான் வந்து
என் ஹிருதயத்துக்கு உள்ளே புகுந்து
வேதைக ஸமதி கம்யனானவன்
தன்னை நமக்கு உபகரித்துக் கொண்டு பள்ளி கொண்டு அருளினான்
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகஸிதமான பணங்களை யுடைய திருவனந்த ஆழ்வானோடே யாய்த்துப்
பள்ளி கொண்டு அருளிற்று
பண்டு அன்று
பழைய தேஹமும்
நானும் அன்று
பட்டினம் காப்பே
பட்டினம் -பத்த நம் -ராஜ தானி
நிதி கிடக்கும் இடம்
நிதி யாவது -ஆத்மா விறே
அவன் இவரை ஆள் இட்டுக் காவாதே தானே காத்துக் கொண்டு கிடக்கிறான் இறே
அவன் இவரைக் காத்துக் கொண்டு கிடக்குமா போலே
இவரும் வைத்த மா நிதியான அவரைக் காக்கிற படி —
——–
யம படர் தாங்களே அஞ்சி ஒளித்தார்கள் என்கிறார் –
சித்தர குத்தன் எழுத்தால் தென் புலக் கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார்
முத்து திரை கடல் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே –5- 2-2 –
பதவுரை
சித்திர குத்தன்–சித்ரகுப்தனென்கிற (யமலோகத்துக்) கணக்குப் பிள்ளையானவன்
தென் புலம் கோன்–தெற்குத் திசைக்குத் தலைவனான யமனுடைய
பொறி ஒற்றி–மேலெழுத்தை இடுவித்து
எழுத்தால் வைத்த–(தான்) எழுதி வைத்த
இலச்சினை–குறிப்புச் சீட்டை
தூதுவர்–யம கிங்கரர்கள்
மாற்றி–கிழித்துப் போட்டு விட்டு
ஓடி ஒளிந்தார்–கண்ணுக்குத் தெரியாத இடந்தேடி) ஓடி ஒளிந்துக் கொண்டார்கள்;
முத்து–முத்துக்களை (க்கொண்டு வீசுகிற)
திரை–அலைகளை யுடைய
கடல்–கடலில்
சேர்ப்பன–கண் வளர்ந்தருளுமவனும்,
மூது அறிவு ஆளர்–முதிர்ந்த அறிவை யுடைய நித்ய ஸூரிகளுக்கு
முதல்வன்–தலைவனும்,
பத்தர்க்கு–அடியார்களுக்கு
அமுதன்–அம்ருதம் போல் இனியனுமான எம்பெருமானுக்கு
அடியேன் (யான்) தாஸனாயினேன்;
பண்டு அன்று பட்டினம் காப்பு–
சித்தர குத்தன் எழுத்தால்
ஸர்வ ஆத்மாக்கள் பண்ணும் புண்ய பாபங்களைப் பதினாலு பேர் ஸாக்ஷியாக
யமனுடைய கணக்கன் சித்ர குப்தன் பட்டோலை கொள்ளும்
தென் புலக் கோன் பொறி ஒற்றி
தெற்குத் திக்கான யம புரத்துக்கு ஸ்வாமியான யமன் மேல் எழுத்து இடா நிற்கும்
வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார்
இட்ட இலச்சினையை அழித்துக் கணக்கைச் சுட்டுப் பொகட்டு
யம படர் பகவத் தூதர்களுக்கு அஞ்சி ஓடி ஒளித்தார்கள்
முத்து திரை கடல் சேர்ப்பன்
திரையானவை முத்துக்களைக் கரையிலே கொடு வந்து சேரா நின்றுள்ள கடலிலே
கண் வளர்ந்து அருளுகிறவன்
மூதறிவாளர் முதல்வன்
அநாதியாக ஸர்வஞ்ஞரான நித்ய ஸூரிகளுக்கு சத்தா ஹேது வானவன்
பத்தர்க்கு அமுதன்
தன்னால் அல்லது செல்லாத ஆஸ்ரிதற்கு நிரதிசய போக்யமானவன்
அடியேன்
நான் அவன் போக்யதையிலே தோற்று அவனுக்குப் பரியுமவன்
பண்டு அன்று
முன் போல் அன்று
பட்டினம் காப்பே
ஆத்மாவுக்குக் காவல் உண்டாய்த்து –
(தாம் இப்படிப்பட்ட அமுதத்தில் ஈடுபட்டு பாட
நாம் அறிந்து
பட்டர் பிரானுக்கு அமுதனாக முன்பு இருந்தவன்
இவர் பாசுரம் பிறந்த பின்பே பக்தருக்கு அமுதன் ஆகிறான் )
—————
என்னுடைய தேஹ அவஸ்யதையைத் தவிர்த்து
ஞான அனுஷ்டானங்களையும் உண்டாக்கினான் என்கிறார் –
வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புல சேவை அதக்கி
கயிற்றும் அக்கும் ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை யிராப் பகலா ஓதுவித்து என்னை
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5- 2-3 –
பதவுரை
(வராஹ ரூபியாய் திருவதரித்த போது.)
எயிற்றிடை–(தனது) கோரப் பல் மேல்
மண்–பூமியை
கொண்ட–தாங்கி யருள
எந்தை–எம்பெருமான் (அடியேனுக்கு)
வயிற்றில் தொழுவை–வயிற்றினுள் விலங்கிட்டுக் கொண்டிருக்கை யாகிற கர்ப்ப வாசத்தை
பிரித்து–கழித்தருளியும்
புலம்–இந்திரியங்களால்
வல் சேவை–கடுமையான ரிஷபங்களை
அதக்கி-(பட்டி மேய்ந்து திரிய வொட்டாமல்) அடக்கியும்
கயிற்றும்–நரம்புகளும்
அக்கு–எலும்புகளுமேயா யிருக்கின்ற
ஆணி–சரீரத்தில் (ஆசையை)
கழித்து–ஒழித்தருளியும்
பாசம்–(யம தூதர்களுடைய) பாசங்களை
காலிடை கழற்றி–காலிலே கட்டி இழுக்க வொண்ணாதபடி பண்ணியும்,
இரா பகல்–இரவும் பகலும்
ஓதுவித்து–நல்லறிவைப் போதித்து
பயிற்றி–(கற்பித்தவற்றை) அனுஷ்டிக்கச் செய்து அருளியும்
பணி செய்ய–நித்திய கைங்கர்யம் பண்ணும்படி
என்னை கொண்டான்–அடியேனைக் கைக் கொண்டருளினான்;
பண்டு அன்று பட்டினம் காப்பு–
வயிற்றில் தொழுவைப் பிரித்து
கர்ப்ப வாசமாகிற சிறைக் கூடத்தைக் கழற்றி
தொழு –
விலங்கு விசேஷம்
வன் புல சேவை அதக்கி
இந்த்ரியங்களான வலிய சேக்களை அதக்கி -நெருக்கி –
கயிறும் அக்கும் ஆணி கழித்து
நரம்பு எலும்புமான சரீரத்தில் நசை அறும்படி பண்ணி
அக்கு -எலும்பு
காலிடை பாசம் கழற்றி
யம படர் கையில் பாசத்தாலே காலிலே துவக்கி இழுப்பர்கள்
அத்தைத் தவிர்த்து
அன்றியே
கால் என்று காற்றாய்
பாசம் என்று ஆத்மாவை வரிந்து கொண்டு இருக்கிற ஸூஷ்ம ஸரீரம்
ஆக
உபய சரீர சம்பந்தத்தையும் அறுத்து என்றுமாம்
காலிடைப் பாசம்
கால் கட்டான தேஹ ஸம்பந்தம் என்னவுமாம்
கால் கட்டான விஷயாந்தர (சம்பந்தத்தைப் ) ஸங்கத்தைப் போக்கி என்றுமாம் –
எயிற்றிடை மண் கொண்ட எந்தை
பிரளய ஆர்ணவத்திலே அகப்பட்ட பூமியை எடுத்தாப் போலே
ஸம்ஸார பிரளயத்தின் நின்றும் என்னை எடுத்த என் ஸ்வாமி
யிராப் பகலா ஓதுவித்து
திவா ராத்ரி விபாகம் அற என்னை ஸிஷிப்பித்துக்
கீழ் உக்தமான த்யாஜ்யஉபா தேயங்களை யடைய அறிவிக்கை
என்னை பயிற்றிப் பணி செய்யக் கொண்டான்
பயிற்றி –
அனுஷ்டான பர்யந்தமாம் படி வாஸனை பண்ணுவித்து
பணி செய்யக் கொண்டான்
மங்களா ஸாஸன ரூப நித்ய கைங்கர்யம் கொண்டு அருளினான்
பண்டன்று
இந்திரியங்களுக்கு சேஷமான பண்டு போலே அன்று
பட்டினம் காப்பே
பத்தனம் காவல் உண்டாய்த்து
அவன் இத் தலையை நோக்க
நாம் அத்தலையை நோக்குகையாலே
காவல் உற்றது என்கை –
————-
நோய்களைப் பார்த்து நீங்கள் ஹிரண்யன் பட்டது படாதே போகப் பாருங்கோள் -என்கிறார் –
மங்கிய வல் வினை நோய்காள் உமக்கும் ஓர் வல் வினை கண்டீர்
இங்குப் புகேல்மின் புகேல்மின் எளிதன்று கண்டீர் புகேல்மின்
சிங்கப் பிரான் அவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர்
பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே 5-2- 4- –
பதவுரை
மங்கிய–(ஆத்துமா உருத் தெரியாதபடி) மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான
வல் வினை–வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த
நோய்காள்–வியாதிகளே
உமக்கும்–உங்களுக்கும் கூட
ஓர் வல் வினை–ஒரு கடினமான தீமை நேர்ந்தபடியே-மிருத்யுவுக்கும் மிருத்யு போல்
கண்டீர்–(இன்று) பாருஙக்ள்
இங்கு–இவ்விடத்தும்
புகேன்மின் புகேன் மின்– வர வேண்டா, வர வேண்டா
(இனி நீங்கள் என்னைக் கிட்டுகை)
எளிது அன்று சுலபமான கரியமன்று;
புகேன்மின்–ஆகையால் இனி இங்கு வர வேண்டா
(என் ஆத்துமா)
எம்மான் அவன்–எமக்குத் தலைவனுமான எம்பெருமான்
சிங்கப் பிரான் -நரஸிம்ஹமாய் -எனக்கு உபகாரம் செய்து அருளினவன்
சேரும்–எழுந்தருளி யிருப்பதற்கிடமான
திரு கோவில் கண்டீர்‘–திருக் கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள்
பங்கப்படாத–பரிபவப் படாமல்
உய்யப் போமின்–பிழைத்துப் போங்கள்.
பண்டு அன்று பட்டினம் காப்பு–
மங்கிய வல் வினை நோய்காள்
நான் உரு மாயும்படி பண்ணக் கடவ பிரபல பாப பலமான வியாதிகாள்
விபஜிக்க ஒண்ணாத படி கிடக்கிற பாபங்கள் என்னவுமாம் –
நீங்கள் இங்குப் புகுராதே கொள்ளுங்கோள்
வீப்சையாலே தனித் தனியே நியமிக்கிறமை தோற்றுகிறது
உமக்கும் ஓர் வல் வினை கண்டீர்
உங்களுக்கும் வலிய விரோதி கிடி கோள்
மிருத்யுவுக்கும் மிருத்யு கிடி கோள்
இங்குப் புகேல்மின் புகேல்மின்
இவற்றின் நெஞ்சில் படுகைக்காகப் பலகாலும் சொல்லுகிறார்
இங்கு என்று
திருப் பல்லாண்டில் அந்வயம் யுடையாரையும் கூட்டுகிறார் என்று பட்டர்
எளிதன்று
உங்களுக்கு இவ்விடம் ஸூலபம் அன்று
அது என் என்ன
கண்டீர்
ஹிரண்யன் பட்டபடி கண்டி கோளே
புகேல்மின்
ஆன பின்பு புகுராதே கொள்ளுங்கோள்
சிங்கப் பிரான் அவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர்
ஸிம்ஹம் கிடக்கிற முழஞ்சிலே புகுவார் உண்டோ
ஸ்ரீ நரஸிம்ஹ ரூபியாய் ஆஸ்ரிதற்கு உதவினால் போல்
எனக்கும் உதவி என்னை அடிமை கொண்டவன்
நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ விமானம் கிடி கோள்
பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே
பரிபவப் படாதே பிழைத்துப் போகப் பாருங்கோள்
பண்டு போல் உங்களுக்கு எளிது அன்று
பட்டினம் காவலுடைத்து –
————-
தேவ கார்யம் செய்தால் போல்
என் காரியமும் செய்வதாக வந்து புகுந்தான் –
சுக்ராதிகள் பட்டது படாதே போங்கோள் என்று
இந்த்ரியங்களுக்குச் சொல்லுகிறார் –
மாணிக் குறள் உருவாய மாயனை என் மனத்துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி
மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்களுள்ளீர்
பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே – 5-2- 5-
பதவுரை
மாணி–பிரமசாரி வேஷத்தை யுடைய
குறள் உரு–வாமனாய் அவதரித்தவனும்
மாணிக்கப் பண்டாரம்–மாணிக்க நிதி போல் இனியவனும்
மாயனை–ஆச்சரிய பூதனுமான எம்பெருமானை
பேணி–ஆசைப் பட்டு
கொணர்ந்து–எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து
என் மனத்துள்ளே–என் நெஞ்சினுள்ளே
புகுத–புகுந்திருக்கும்படி
பிறிது இன்றி–வேற்றுமை யில்லாமல்
வைத்துக் கொண்டேன்–அமைத்துக் கொண்டேன்.
வலி வல் குறும்பர்கள் உள்ளீர்–மிகவும் கொடிய குறும்புகளைச் செய்கிற இந்திரியங்களே!
நடமின்–(வேறிடந்தேடி) ஓடுங்கள்;
பாணிக்க வேண்டா–தாமதிக்க வேண்டியதில்லை,
பண்டு அன்று பட்டினம் காப்பு–
மாணிக் குறள் உருவாய மாயனை
இரப்பிலே தகண் ஏறி
நிரதிசய போக்யனுமாய்
தன் குண சேஷ்டிதங்களில் ஆச்சர்யத்தாலே அவனை வஸீ கரித்தவன்
மாணி -அழகு என்னவுமாம்
குறள் -சேர்ப்பால் போலே
உருவாய மாயன் -மாயம் தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை –
என் மனத்துள்ளே பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி
என் நெஞ்சுக்கு உள்ளே ஸ்நேஹத்தோடே வைத்துக் கொண்டேன்
பேணுதல் -ஆசைப்படுத்தல்
ஆதரம் ஆகவுமாம்
பிறிதின்றி-
இரண்டு இன்றி
வேறு இன்றி என்றபடி
மாணிக்கப் பண்டாரம் கண்டீர்
உலகு அளந்த மாணிக்கம் (திரு விருத்தம் )என்கிறபடியே
நீல ரத்ன பண்டாரம் கிடி கோள்
வலி வன் குறும்பர்களுள்ளீர்
மிகவும் வலியராய் மூலையடியே நடந்து திரிகிற இந்திரியங்கள்
ஆகிற குறும்பராய் உள்ளீர்
வலி -பலம்
வன்மை -தொன்மை கேடு
குறும்பர் -கள்ளர்
ஏஷ இந்திரிய தஸ் யூநம்
கோவாய் இத்யாதி
பாணிக்க வேண்டா நடமின் விளம்பிக்க வேண்டா
கால் வாங்கிப் போங்கோள்
அது என் என்ன
பண்டன்று பட்டினம் காப்பே
பண்டு போலே இது அராஜகம் அன்று
ஸ ராஜகமாய்த்து என்கிறார் –
————-
பசுக்களை நோக்கினால் போலே என்னையும் நோக்குவதாக
கிருஷ்ணன் வந்து என் ஹிருதயத்திலே புகுந்தான்
நீங்கள் நலிவு படாதே போங்கோள் என்று
நோய்களைப் பார்த்துச் சொல்லுகிறார் –
உற்ற உறு பிணி நோய்காள் உமக்கு ஓன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றம் கண் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர்
அற்றம் உரைகின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே – 5-2- 6-
பதவுரை
உற்ற–நெடு நாளாக இருக்கிற
உறு பிணி–மிக்க வருத்தத்தைச் செய்கிற
நோய்காள்–நோய்களே!
உற்ற நோய்கள்–உறு பிணிகாள் -இரண்டும் மிக்க கொடுமையால்
உமக்கு–உங்களுக்கு
ஒன்று–ஒரு வார்த்தை
சொல்லுகேன்–சொல்லுகிறேன்:
கேண்மின்–கேளுங்கள்;
(நீங்கள் இப்போது குடியிருக்கிற எனது இவ்வுடலானது)
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும்–பசுக்களை மேய்த்தருளிய கண்ணபிரான் விரும்பி எழுந்தருளி யிருக்கைக்கு இடமான
திருக் கோயில்–திருக் கோயிலாயிற்று;
கண்டீர்–முன்புள்ள நிலைமையிற் காட்டில் இன்றுள்ள நிலைமையின் வாசியைப் பாருங்கள்;
ஆழ்–(ஸம்ஸார ஸமுத்திரத்தில் என்னை) ஆழங்காற்படுத்தின
வினை காள்–ஓ கொடுமைகளே!
இன்னம்–மறுபடியும்
அற்றம் உரைக்கின்றேன்–அறுதியாகச் சொல்லுகிறேன்;
உமக்கு–உங்களுக்கு
இங்கு–இவ்விடத்தில்
ஓர் பற்று இல்லை–ஒருவகை அவலம்பமும் கிடையாது;
நடமின்–(இனி இவ்விடத்தை விட்டு) நடவுங்கள்.
பண்டு அன்று பட்டினம் காப்பே–
உற்ற உறு பிணி நோய்காள்
அநாதி காலமே பிடித்து என்னை விடாதே வலி செய்கிற
துக்க ஹேதுவான நோய்காள்
பிணி -துக்கம்
நோய் -வியாதி
உமக்கு ஓன்று சொல்லுகேன் கேண்மின்
உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன்
புத்தி பண்ணிக் கேளுங்கோள்
அது ஏது என்ன
பெற்றம் கண் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர்
பசுக்களை மேய்க்குமவனாய்
ஆஸ்ரிதர் விஷயத்தில் உபகாரத்தையே தனக்கு நிரூபகமாய் யுடையனான
கிருஷ்ணன் ஆதரித்து வர்த்திக்கிற திவ்ய விமானம் கிடி கோள்
அற்றம் உரைகின்றேன் இன்னம்
இன்னம் உங்களுக்கு அறுதி சொல்லுகிறேன்
ஆழ் வினைகாள்
நான் தரைப்படும் படி கொண்டு மூழ்த்துகிற நோய்காள்
உமக்கு இங்கு ஓர் பற்றில்லை கண்டீர் நடமின்
உங்களுக்கு இங்கு ஒரு அவலம்பம் இல்லை கிடி கோள்
நீங்கள் போக அமையும்
பண்டன்று பட்டினம் காப்பே
அவன் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -மாஸூச என்ற இன்று
பண்டு போல் அன்று
இது காவல் உடைத்து –
———-
என்னுடைய விஷய ப்ராவண்யத்துக்கு அடியான
பாபத்தைப் போக்கி ரக்ஷித்தான் -என்கிறார்
கொங்கை சிறுவரை என்றும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்தி கிடந்து உழல்வேனை
வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல்வினை யாயின மாற்றி
பங்கப் படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே -5 -2-7 –
பதவுரை
சிறு வரை–சிறிய மலை போன்ற
கொங்கை என்னும்–முலைகளாகிற
கொங்கை என்றும் சிறிய இடை என்றுமாம்
பொதும்பினில்–பொந்தில்
வழுக்கி வீழ்ந்து–வழுக்கி விழுந்து
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு–(நரகமென்கிற) பர லோகமாகிய ஒரு குஹையினுள் புகுந்து
அழுந்திக் கிடந்த–(அங்குநின்றும் கால் பேர்க்க வொட்டாமல் அங்கேயே) அழுந்தியிருந்து
உழல்வேனை–(திரியப் போகிற என்னுடைய)
வல் வினை ஆயின–தீவினைகளா யிருப்பவைகளை
வங்கம் கடல் வண்ணன் அம்மாள்–கப்பல்களை யுடைய கடல் போன்ற திருநிறத்தனான எம்பெருமான்
மாற்றி–போக்கி யருளி
பங்கப்படா வண்ணம்–பரிபவப் படாதபடி
செய்தான்–செய்தருளினான்;
பண்டு அல்லது பட்டினம் காப்பு–
கொங்கை சிறுவரை என்றும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
முலையாகிய சிறு வரை
சிறிதான மலைகள் என்கிற குழியிலே வழுக்கி விழுந்து
சிறு வரை -தாழ்வரை என்னவுமாம்
அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்தி கிடந்து உழல்வேனை
அம்மலை அருகே யுண்டானதொரு பாழியிலே பிரவேசித்துக்
கால் வாங்க மாட்டாதே தடுமாறுகிற என்னை
வங்கக் கடல் வண்ணன் அம்மான்
மரக்கலங்களை யுடைத்தான கடல் போலே
ஸ்ரமஹரமாய் அழகியதான வடிவு அழகாலே என்னை அடிமை கொண்ட என் ஸ்வாமி
வல்வினை யாயின மாற்றி
விஷய ப்ராவண்யத்துக்கு அடியான பாபங்களை போக்கி
பங்கப் படா வண்ணம் செய்தான்
என்னைப் பரிபவப்படாத படி பண்ணினான்
பண்டன்று பட்டினம் காப்பே
முன்பு போலே அன்று
இது காவல் உடைத்து –
—————–
ஆச்சார்யனாய் நின்று
அஞ்ஞாத ஞாபகன் ஆனான் என்கிறார் –
(அறியாதன அறிவித்த அத்தா )
ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 –
பதவுரை
பீதக ஆடை பிரானர்–திருப் பீதாம்பரத்தை யுடையவனான எம்பெருமான்
பிரமகுரு ஆகிவந்து–ப்ரஹ்மோபதேசம் பண்ணக் கடவனான ஆசாரியனாய் எழுந்தருளி
போது இல்–அறிவுக்கு இருப்பிடானதும்
வல்–அந்தர்யாமியையும் அறிய வொட்டாத) வன்மையை யுடையதுமான
நெஞ்சம் கமலம்–ஹ்ருதய கமலத்தினுள்
1-1புகுந்து–பிரவேசித்து
என் னுள்ளே–எனது (அந்த) ஹிருதயத்தில்
ஏதங்கள் ஆயின எல்லாம்–தோஷங்களாக இருப்பவற்றை யெல்லாம்.
இறங்க விடுவித்து–நீக்கி
என்–என்னுடைய
சென்னித் திடரில்–தலையினிது
பாத விலச்சினை–ஸ்ரீபாத முத்திரையை
வைத்தார்–ஏறி யருளப் பண்ணினான்
பண்டு அன்று பட்டினம் காப்பு-
ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து
ஏதம் -குற்றம்
குற்றங்கள் ஆனவை எல்லாம் -அவை யாவன
1-தேஹாத்ம அபிமானம்
2-அந்நிய சேஷத்வம்
3-ஸ்வ ஸ்வா தந்த்ரம்
4-ஸ்வ ரக்ஷண ப்ரவ்ருத்தி
5-ஸ்வ பிரயோஜனம்
இவை எல்லாவற்றையும் வாஸனையோடே நசித்துப் போம்படி பண்ணி
என்னுள்ளே
இப்படி நிர்தோஷமான என் நெஞ்சுக்கு உள்ளே
பீதக வாடைப் பிரானார்
பொற்கென்ற திருப் பீதாம்பரத்தை யுடைய உபகாரகர்
பிரம குருவாகி வந்து
ப்ரஹ்ம உபதேஷடாவான ஆச்சார்யராக வந்து
ஆச்சார்யனான விக்ரஹத்தைப் பரிக்ரஹித்துக் கொண்டு வந்தாய்த்து திருத்துவது
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும்
ஹ்ருதய கமலமாகிற புஷ்பத்திலே என்னுதல்
ஹ்ருதய கமலத்தில் ஞானத்துக்கு இருப்பிடமான வலிய நெஞ்சு என்னுதல்
வன்மை
பகவத் வைமுக்யத்தால் வந்த வன்மை
தாமே ஆபி முக்யத்தை விளைத்துக் கொடு வந்து புகுந்து
என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைத்தார்
என் தலை யாகிய நீர் ஏறா மேட்டிலே தம் திருவடிகளாகிற
கால் ஏறிப் பாயும் படி திருவடி நிலைகளை வைத்தார்
கதா புந –இத்யாதி
பண்டு அன்று பட்டினம் காப்பே
முன்பு போல் அன்றிக்கே
இப்போது ஆச்சார்ய அபிமானத்தாலே ரக்ஷையை யுடைத்து
நீங்கள் போங்கோள் என்கிறார் –
———-
கீழ் தமக்கு அவன் காவலான படி சொன்னார்
தாம் அவனுக்கு காவலான படி சொல்கிறார் இதில்
உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே
அறவெறி நாந்தக வாளே யழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை அரையா உறகல் பள்ளி யறை குறிக் கொள்மின் -5 -2-9 –
பதவுரை
ஒண் சுடர்–அழகிய தேஜஸ்ஸை யுடைய
ஆழியே–திருவாழி யாழ்வானே!
எறி–(எம்பெருமானால்) வீசப் படுகின்ற
நாந்தக வாளே!–நந்தகமென்கிற திருக் குற்றுடை வாளே!
அழகிய சார்ங்கமே–அழகு பொருந்திய சார்ங்கமே–சார்ங்கமென்கிற தநுஸ்ஸே!
தண்டே–(கௌமோதகி என்கிற) கதையே!
இருந்த–(எம்பெருமானுடைய நியமனத்திற்கு ஆட்பட்டு) இரா நின்ற
எண்மர் உலோக பாலீர்காள்–அஷ்ட திக்குப் பாலகர்களே!-இவர்கள் லீலா விபூதியில் உள்ளவர்கள்
இறவு படாமல்–தப்பிப் போகாமல்
சங்கே–ஸ்ரீபஞ்சஜந்யாழ்வானே!
அற–(ஆச்ரித விரோதிகளின் உடல்) அறும்படி
உறகல் உறகல் உறகல்–உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள்–
உறகல் உறகல்
உறங்காதே கொள்ளுங்கோள் -என்று பலகாலும் சொல்லுகிறார் இறே
அநவதாநம் (கவனக்குறைவு) வாராமைக்காக
யாரைத் தான் இப்படி உணர்த்துகிறது என்னில்
அ நிமிஷரான நித்ய ஸூரிகளை யாய்த்து
அவர்களையும் உறங்காதே கொள்ளுங்கோள் என்று நியமிக்கும் படி யாயிற்று
இவருடைய பரிவின் மிகுதி
ஒண் சுடர் ஆழியே
அழகிய பிரபையை யுடைய திருவாழி
சங்கே
வேறே ஒரு விசேஷணம் இட்டுச் சொல்ல ஒண்ணாத அழகை யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்
அறவெறி நாந்தக வாளே
சத்ரு சரீரங்கள் அறும் படியாக எறியப்படுவதாய் நாந்தகம் என்னும்
திரு நாமத்தை யுடைய வாளாகிற திவ்ய ஆயுதம்
யழகிய சார்ங்கமே
அழகை யுடைய ஸ்ரீ சார்ங்கம்
தண்டே
அப்படிப்பட்ட கதை
ஆக
திவ்ய ஆயுதங்களையும் காவலாக அடைத்து
அதுக்கும் மேலே
திக் பாலர்களையும் காவலாக அடைக்கிறார்
இறவு படாமல் இருந்த எண்மர் உலோகபாலீர்காள்
லோகங்களுக்கு அழிவு வராதபடி சர்வேஸ்வரனாலே திக் பாலநத்திலே நியோகிக்கப் பட்டு
பாலனத்தையே நிரூபகமாக யுடைய இந்த்ராதிகள் எட்டுப் போரையும் சொல்லுகிறது
இவர்களும் போராது என்று பெரிய திருவடியைத் தனிக்காவலாக அடைக்கிறார்
பறவை அரையா
பறவைக்கு அரசே -நீ -உறங்காதே கொள்
உறகல் பள்ளியறை குறிக் கொள்மின்
திருப்பள்ளி அறையைக் குறிக் கொண்டு நோக்கிக் கொள்
பள்ளி அறை என்கிறது
திருமேனியை இறே
—————-
தம்முடைய திருமேனி திருப்பள்ளி அறையான படி சொல்லுகிறார் –
அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5- 2-10 –
பதவுரை
அரவத்து அமளியினோடும்–திருவனந்தாழ்வனாகிற படுக்கையோடும்
அரவம் அத்து சரிகை
அழகிய பால் கடலோடும்–அழகு பொருந்திய திருப் பாற் கடலோடுங் கூட
அரவிந்தப் பாவையும் தானும்–செந்தாமரை மகளாகிய பெரிய பிராட்டியாரும் தானும்
வந்து– எழுந்து அருளி
அகம்படி–(எனது) உடம்பாகிற ஸ்தானத்தில்
புகுந்து–பிரவேசித்து,
பரவை–(அந்தத்) திருப்பாற்கடலினுடைய
பல திரை–பல அலைகள்
மோத–தளும்ப
பள்ளி கொள்கின்ற–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
பிரானை–உபகாரகனான எம்பெருமானை
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
பட்டினம் காவல் பொருட்டே- ஆத்ம ரக்ஷண நிமித்தமாக
பரவுகின்றான்–போற்றுகின்றார்–
அரவத்து அமளியினோடும்
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையோடும்
அழகிய பாற் கடலோடும்திருப்பாற் கடலோடும்
சர்வேஸ்வரன் பள்ளி கொண்டு அருளுகையாலே வந்த அழகு என்கை
அரவிந்த பாவையும் தானும்
தாமரைப்பூவை பிறப்பிடமாக யுடையவள் ஆகையாலே
நிரதிசய போக்யையாய்
நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை யுடைய
பெரிய பிராட்டியாரும்
தானும்
அவளுக்குத் தகுதியான
தானும்
அகம்படி வந்து புகுந்து
அடியார் குழாங்களுடனே வந்தாய்த்து புகுந்தது
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
இப்படிப் புகுந்து
கடலிலே அலை கேட்க்கும் படி பள்ளி கொள்ளுகிற உபகாரகனை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே
உபகார ஸ்ம்ருதியாலே அக்ரமமாக ஏத்த
அது தானே பிரபந்தமாய்த் தலைக் கட்டின இத்தனை
திருப்பல்லாண்டில் தொடங்கின
மங்களா ஸாஸனத்தை
இங்கே நிகமிக்கிறார் –
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply