அவதாரிகை –
கீழில் திரு மொழியில் –
சொல்லலாம் போதே உன்னாமம் எல்லாம் சொல்லினேன் -என்று
திரு நாமத்தின் போக்யதையை அனுபவித்தார் –
இத்தை அநாதி காலம் இழைக்கைக்கு அடி என் -என்று பார்த்தவாறே –
அதுக்கு ஹேது
இதர விஷயங்களிலே ப்ராவண்யமாகையாலே யாயிருந்தது -என்று வெறுத்து
இப்படி அயோக்யனான நான் இவ்விஷயத்திலே இழிந்து
அத்தை தூஷித்தது என் -என்றும்
அத்தைப் பொறுத்து அருள வேணும் என்றும்
க்ஷமை கொள்ளா நின்று கொண்டு
அவன் போக்யதையிலே தம்முடைய கரணங்கள் மேல் விழுகிறபடியை அருளிச் செய்கிறார் –
————
நான் அஸூத்தன் என்று அகலா நிற்க
என்னுடைய ஜிஹ்வை உன் பக்கலிலே மேல் விழா நின்றது என்கிறார் –
வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும் என் நாவி னுக்காற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -5-1- 1-
பதவுரை
மாதவா–ஸ்ரீ ய: பதியானவனே!
நாரணா–(உலகங்கட்கெல்லாம்) ஆதி காரணமானவனே!
கருளன்–பெரிய திருவடியை
கொடியானே–த்வஜமாக வுடையவனே!
வாக்கு–(என்னுடைய) வாய் மொழிக்கு
தூய்மை இலாமையினாலே–பரி சுத்தி இல்லாமையால்
உன்னை–(ஹேய ப்ரதிபடனான) உன்னை
வாய் கொள்ள மாட்டேன்–வாய் கொண்டு துதிக்க யோக்யதை அறற்வனா யிரா நின்றேன்
(வெறுமனே கிடப்போமென்று பார்த்தாலும்)
நாக்கு–(ரஸமறிந்த எனது) நாக்கானது
நின்னை அல்லால்–உன்னை யொழிய மற்றொருவரை
அறியாது–(வாய்க் கொள்ள) அறியாது;
அது–அசுத்தமான நாக்கு இங்ஙனே உன் பக்கம் ஈடுபடா நின்றதைக் குறித்து
நான் அஞ்சுவன்–நான் அஞ்சுகின்றேன்;
(அது) அந்த நாக்கானது
என் வசம் அன்று–எனக்கு வசப்பட்டு நிற்பதன்று;
இவன் மூர்க்கு பேசுகின்றான் என்று–“இவன் மூடர் பேசும் பேச்சைப் பேசா நின்றான்” என்று திருவுள்ளம் பற்றி
முனிவாயேலும்–நீ சீறி யருளினாலும்
என் நாவினுக்கு ஆற்றேன்–என்னுடைய நாக்கின் பதற்றத்தை நான் ஸஹகிக்க வல்வேனல்லேன்;
காக்கை வாயிலும்–காக்கையினுடைய வாயிலுண்டான சொல்லையும்
கட்டுரை–நற் சொல்லாக
கொள்வர்–(அறிவுடையார்) கொள்ளுவார்கள்–
வாக்குத் தூய்மை யிலாமையினாலே –
உன்னை அனுசந்திக்கைக்கு கரணமான வாக்குக்கு ஸூத்தி இல்லாமையாலே
வாக்குக்கு அஸூத்தியாவது
1-பகவத் ஸந்நிதியில் அஸத்யம் சொல்லுகையும்
2-பர ஸ்தோத்ரம் பண்ணுகையும்
3-ப்ரயோஜனத்துக்காக பகவத் ஸ்தோத்ரம் பண்ணுகையும்
வாக்கு -சொலவு
மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்
ஸ்ரீ யபதியான உன்னை என் வாக்குக்கு விஷயம் ஆக்க விளையா )இளையா) நின்றேன்
ஆனால் தவருகிறீர் என்ன
நாக்கு நின்னை அல்லால் அறியாது
ரஸந இந்த்ரியமானது
ஸர்வ ரஸமான உன்னை அல்லது அறியாது –
அது விஷயாதீனமாய்ப் புறம்பு ஒன்றும் அறிகிறதில்லை
ஆனால் நீரும் அத்தோடே கூடினாலோ என்ன
நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
நான் ஸ்வ தோஷத்தை அனுசந்தித்து அஞ்சா நின்றேன்
அது ரஸநை யாகையாலே மேல் விழா நின்றது
என் வசத்தில் வருகிறது இல்லை
இங்கன் சொல்லப் பெறுமோ என்ன
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் ஏலும்
என் பாசுரத்தைப் பார்க்கில்
மூர்க்கர் சொல்லும் பாசுரம் போலே தோற்றி
நீ சீறினாயே யாகிலும்
என் நாவி னுக்காற்றேன்
உன் முனிவுக்கு ஆற்றலாம்
என் நாவுக்கு ஆற்றப் போகாது
என்னால் தகையைப் போகிறது இல்லை
ஆனால் அது நமக்கு அவத்யம் ஆகாதோ என்னில்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்
பெரியவர்கள் குற்றமாகக் கொள்ளாத அளவன்றிக்கே -குணமாகக் கொள்வார்கள்
காகமானது தனக்கு வேண்டியபடி கூப்பிடவற்றை
அறிவுடையார் தங்களுக்கு நன்மைக்கு ஹேது என்று கொள்வார்கள்
கட்டுரை
நற் சொல்லு
அப்படியே நான் வேண்டிற்றுச் சொன்னவற்றையும் குணமாகக் கொள்ள வேணும்
நமக்கு அப்படி செய்ய வேண்டுகிறது என் என்ன
காரணா கருளக் கொடியானே
உடையவன் ஆகையாலே எல்லாம் பொறுக்க வேணும்
இதுக்கு உத்பாதகன் அவன் அல்லையோ
1-இல்லாதவற்றை அடைய உண்டாக்குகைக்கும்
2-அபராத ஷாமணத்துவத்துக்கும்
3-ரக்ஷகத்துவத்துக்கும் கொடி கட்டி இருக்குமவன் அல்லையோ –
————
உனக்கு அடிமையான நான்
அயோக்கியமான நாவாலே சொன்ன இத்தைப் பொறுத்து அருள வேணும் என்கிறார் –
சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையனே
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே -5- 1-2 –
பதவுரை
சங்கு சக்கரம் ஏந்து கையானே!
ஊழி–பிரளயக் காலத்தில்
ஏழ் உலகு–எல்லா வுலகங்களையும்
உண்டு–திரு வயிற்றில் வைத்துக் கொண்டு (பின்பு பிரளயம் கழிந்தவாறே)
உமிழ்ந்தானே (அவற்றை) வெளிப்படுத்தினவனே!
சழக்கு நாக்கொடு–பொல்லாத நாக்கினால்
புன் கவி–அற்பமான பாசுரங்களை
சொன்னேன்–நான் சொன்னேன்;
பிழைப்பர் ஆகிலும் (தாஸ பூதர்கள்) பிழை செய்தவர்களே யாகிலும்
தம் அடியார்–தமக்கு அடிமைப்பட்ட அவர்களுடைய
செயல்–சொல்லை.
பொறுப்பது–பொறுத்தருளுகை
பெரியோர் கடன் ஆனதே–பெருந்தன்மை யுடையவர்களுக்கு கடமை யன்றோ
நின் கண் அல்லால் மற்று விழிக்கும் கண் இலேன்–உன்னுடைய கடாஷம் அல்லால்
வேறு ஒருவருடைய கடாஷத்தை (ரஷகமாக) உடையேனல்லேன்;
(அன்றியும்)
வேறு ஒருவரோடு–மற்று ஒருவர் பக்கலிலும்
என் மனம்–என் நெஞ்சானது
பற்றாது–பொருந்த மாட்டாது
உழைக்கு–புள்ளிமானுக்கு
ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய்–ஒரு புள்ளி (ஏறுவது) குற்றமதன்றோ?
சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன்
பிறரை முன்பு ஸ்துதித்துப் போருகையாலே
அஸூத்த மான நாவைக் கொண்டு
புல்லிதான கவிதைகளை சொன்னேன்
(காலத்தாலும் இடத்தாலும் முன்பு
அவனுக்கு முன்பே என்றுமாம் )
சழக்கு –பொல்லாங்கு
புன்கவி -உனக்கு அநர்ஹமாய் இருக்கை
சொன்னேன் –
நெஞ்சிலே நினைக்கவும் கூட அவத்யமாய் இருக்க
அதுக்கும் மேலே
சொல்லுவதும் செய்தேன்
சங்கு சக்கரம் ஏந்து கையானே
கையும் ஆழ்வார்களுமான அழகைப் பேச நான் அர்ஹனோ –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டிய கையில்
பூ ஏந்தினால் போலே
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திரு வாழியையும் தரித்தவனே
இப்படி அறிந்து வைத்தும் சொல்லிற்று என் கொண்டு என்ன
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் என்றே
தப்பச் செய்தார்களே யாகிலும்
அநந்யார்ஹ சேஷ பூதர் செய்தவற்றைப் பெரியோருக்குப் பொறுக்கை உசிதம்
என்று நினைத்துச் சொன்னேன்
இங்கனம் செய்ய வேண்டுகிறது என்
உமக்குப் புறம்பு விஷயம் இல்லையோ என்ன
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால்
உன்னுடைய குளிர்ந்த கடாக்ஷம் ஒழிய
வேறு குளிர நோக்குவாரை உடையேன் அல்லேன்
வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
நீ குளிர நோக்காது ஒழிந்தாலும்
வகுத்த உன்னை ஒழிய
என் மனஸ்ஸூ புறம்பு பற்றாது
ஆனால் உம்மைக் கைக்கொள்ளுகை நமக்கு அவத்யம் அன்றோ என்ன
உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே
அது நமக்கு அவத்யமாகாது
அபராத சஹன் -என்றதுவே உனக்கு நிரூபகமாம் என்கிறார்
புள்ளிமானுக்கு ஒரு புள்ளி ஏறி என் குறைந்தால் என்
சர்வாத்மாக்களுடையவும் அபராதங்களைப் பொறுக்கிற உனக்கு
என்னுடைய அபராத ஷாமணம் அவத்யமாகப் புகுகிறதோ
அதவா
இது உமக்கு அவத்யம் அன்றோ நாம் பொறுத்தாலும் என்ன
உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய்
புள்ளிமானுக்கு ஒரு புள்ளி ஏறி ஏறி என் குறைந்தால் என்
முன்பே சாபராதி
அத்தோடு இதுவும் கூட தேவரீர் க்ஷமைக்கு விஷயம் ஆகிறது என்றுமாம்
(தாரை -பெருமாளை அப்ரமேயஸ்ய -ச -ஜிதேந்த்ரிரஸ்ய ச –உத்தம தார்மிக –ஷிதி ஷாமாவான்
-ச -என்று சொல்லாமல்
பொறுப்பவன் இதற்கும் பொறுப்பானே
அதே போல் இங்கும் )
நாம் அப்படி அங்கீகரித்தது உண்டோ என்ன
ஊழி ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே
சம்சாரிகளில் உனக்கு அபராதம் பண்ணாது இருப்பார் உண்டோ
அத்தைப் பாராதே யன்றோ
அவர்களை வயிற்றிலே வைத்துப் புறப்பட விட்டு ரஷித்தது
அப்படியே இதுவும் செய்து அருள வேணும் —
—————
உம்முடைய அடிமைக்கு அடி ஏது என்ன
உன் கோயிலில் வாழும் வைஷ்ணவன் என்னும் வன்மை என்கிறார் –
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5- 1-3 –
பதவுரை
திருமாலே–ஸ்ரீய: பதியானவனே!
நாரணா என்னும் இத்தனை அல்லால்–‘நாராயணா!’ என்று கூப்பிடுகையாகிற இவ்வளவொழிய
நன்மை தீமைகள் ஒன்றும்–(வேறு) நன்மை தீமை ஒன்றையும்
அறியேன்–அறிகிறேனில்லை.
புன்மையால்–(எனக்கு இயற்கையாக உள்ள-ப்ரயோஜனாந்தர நசையாலே ) அற்பத் தனத்தினால்
உன்னை–உன்னைக் குறித்து
புள்ளுவம் பேசி–வஞ்சகமான சொற்களைச் சொல்லி
புகழ்வான் அன்று கண்டாய்–புகழுவனல்லன் (அடியேன்)
உன்னை–உன்னை
உன்னும் ஆறு–இடைவிடாது ஸ்மரித்துக் கொண்டிருக்கத் தக்க வழிகளில்
ஒன்றும்–ஒரு வழியையும்
அறியேன்–அறிந்தேனில்லை;
ஓவாறே–(ஒரு நொடிப் பொழுதும்) ஒழிவின்றி (இடைவிடாமல்)
நமோ நாராயணா என்பன–நமோ நாராணாய என்னா நின்றேன்
வன்மை ஆனது–அடியேனுக்கு மிடுக்காவது
உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும்–உன்னுடைய கோயிலில் வாழுகின்றவன் வைஷ்ணவன் என்கிற மிடுக்கோடு
இங்கு ஸ்ரீ ரெங்கம் இல்லை பகவத் சன்னிதானம் என்றவாறு
கண்டாய்–முன்னிலை யசைச் சொல்-
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்
நான் திரு நாமத்தைச் சொல்லுகை அத்தலைக்கு நன்மையாய்த் தலைக்கட்டு கிறதோ
தீமையாய்த் தலைக்கட்டு கிறதோ
அறிகிறிலேன்
நாரணா என்னும் இத்தனை அல்லால்
நல்கத்தான் ஆகாதோ நாரணனை-என்று சொல்லுகிறபடியே
இந் நாராயண பதத்துக்கு அபராத ஸஹத்வம் அர்த்தமாகிறது
அபராதங்களைப் பொறுக்கைக்குத் திரு நாமமாக உடையவனே என்னுமது ஒழிய
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய்
தண்மையாலே சர்வாதிகனான யுன்னைக் கிருத்ரிமம் சொல்லிப் புகழுமவன் அல்லேன்
திருமாலே
பிராட்டி முன்னாக இழிந்த எனக்கு
அபராததுக்கு அஞ்ச வேணுமோ
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன்
ஸாஸ்த்ர யுக்தமான க்ரமத்திலே உன்னை அனவரத பாவனை பண்ண அறிகிறிலேன்
ஓவாதே நமோ நாரணா என்பன்
அநந்ய ப்ரயோஜநன் ஆகையால்
ஒரு காலும் இடைவிடாதே திரு மந்த்ரத்தை அர்த்த ஸஹிதமாக அனுசந்திப்பேன்
வன்மை யாவது
எனக்குப் பலமாக உள்ளது
உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் –
உன் எல்லைக்கு உள்ளே வர்த்திக்கிறோம் என்னும் பலம் இறே எனக்கு உள்ளது
பவத் விஷய வாஸிந -என்னக் கடவது இறே
பகவத் அபிமானம் உள்ள தேசத்திலே
வர்த்திக்கை இறே
இவ்வாத்மாவுக்குத் தஞ்சம் –
———-
அத்தேச வாசத்தாலே தமக்கு உண்டான
அநந்ய ப்ரயோஜனத்வத்தை அருளிச் செய்கிறார்
நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனை
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவது இல்லை
அடிமை என்னும் அக் கோயின்மையாலே அங்கு அங்கே அவை போதரும் கண்டாய்
கொடுமை கஞ்சனை கொன்று நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே -5 -1-4 –
பதவுரை
நெடுமையால்–(குறிய மாணுருவை மாற்றி) நெடுக வளர்ந்ததனால்
உலகு எழும்–எல்லா வுலகங்களையும்
அளந்தாய்–அளந்தருளினவனே!
நின்மலா–பரிசுத்தமானவனே!
நெடியாய்–(அனைவர்க்கும்) தலைவனானவனே!
கொடுமை கஞ்சனை–கொடிய கம்ஸனை
கொன்று–உயிர்க் கொலை செய்து,
நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே–உனது தந்தையாகிய வஸுதேவருடைய காலில்
பூட்டப்பட்டிருந்த வலிய விலங்கின் பூட்டை தறித்துப் பொகட்டவனே!
அடியேனை–(உனக்கு) அடிமைப்பட்டுள்ள என்னை
குடிமை கொள்வதற்கு–கிங்கரனாகக் கொள்வதற்கு
ஐயுறு வேண்டா–ஸந்தேகிக்க வேண்டியதில்லை;
கூறை சோறு இல்லை–இக் கூறையையும் சோற்றையும்
வேண்டுவது இல்லை–(நான் உன்னிடத்து) விரும்புகிறேனில்லை;
அடிமை என்னும்–அடிமை யென்ற
அ கோயின்மையாலே–அந்த ராஜகுல மாஹாத்மியத்தினால்
அடிமையை அரசனாக இருப்பதே ஸ்வரூபம்
அவை–அக்கூறை சோறுகள்
அங்கு அங்கு–அவ்வவ் விடங்களில்
போதரும்–(தாமாகவே) கிடைக்கும்
(கண்டாய்- முன்னிலை யசைச் சொல்.)
நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய்
ஏக ரூபமான வடிவை அபரிச்சேதயமாக்கி வியாபித்து
ஸர்வ லோகங்களையும் அளந்து கொண்டவனே
நின்மலா
ஸ்வ ப்ரயோஜன ராஹித்யத்தால் வந்த நைர்மல்யம் –
நெடியாய்
அநாஸ்ரிதற்குக் கிட்ட ஒண்ணாமையால் வந்த அபரிச்சேதயத்தைச் சொல்லுகிறது
அடியேனை குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா
உனக்கு அநந்யார்ஹன் ஆகையாலே
அநந்ய ப்ரயோஜனான என்னை
ஸ்வரூப அனுரூபமான விருத்தியைக் கொண்டு அருளுகைக்கு சந்நே ஹிக்க வேண்டா
நான் அநந்ய பிரயோஜனன் என்ன
அது எங்கனே கூடும்படி
தேஹ யாத்ரை உமக்கு வேண்டாவோ என்ன
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை
நான் அன்ன பாநாதிகளால் தரிக்குமவன் அல்லேன்
கைங்கர்ய ஏக தாரகன் நான்
சேஷ பூதனுக்கு சேஷ பூத விருத்தியே தாரகாதிகள் இருக்கும் இறை
தேஹாதி விலக்ஷணன் ஆகையாலே சப்தாதிகள் தாரகங்கள் ஆகாது
பரதந்த்ரன் ஆகையாலே ஸ்வ அனுபவமும் அன்று
ஸ்வரூபம் நித்யமாகையாலே ஸ்வரூப விச்சேதமும் நித்ய ஞானாதி குண கத்வாத் குண வி நாஸமும் அன்று
புருஷார்த்தம் அன்று என்றதாய்த்து
ஆனால்
நாம் உமக்கு செய்ய வேண்டுவது என் –
அடிமை என்னும் அக் கோயின்மையாலே அங்கு அங்கே அவை போதரும் கண்டாய்
உனக்கு சேஷ பூதன் என்கிற ராஜ குலத்தாலே
அந்த அந்தக் கைங்கர்யங்களே எனக்கு தாரகாதி ஸகல புருஷார்த் தங்களும் ஆகையால்
நின்னையே தான் வேண்டி -இத்யாதி
கொடுமை கஞ்சனை கொன்று நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே
அக் கைங்கர்ய விரோதிகளான இதர புருஷார்த்தங்களில் சங்கங்களையும்
அதுக்கு அடியான கர்மங்களையும்
க்ரூரனான கம்சனை நிரஸித்து
உனக்குப் பிதாவான ஸ்ரீ வாஸூ தேவர் காலில் வலிய விலங்கை வெட்டி விட்டால் போலே
போக்கி அருள வேணும் என்கிறார் –
————
எனக்கு கிருஹ ஷேத்ராதிகளான ஸர்வ ஐஸ்வர்யங்களும்
உன் திருவடிகளே என்கிறார் –
தோட்டம் இல்லவள் ஆ தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம்
வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பு வகுத்து கொண்டு இருந்தேன்
நாட்டு மானிடத்தோடு எனக்கரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே- 5-1- 5- –
பதவுரை
கேழல் ஒன்று ஆகி–ஒப்பற்ற வராஹ ரூபியாய்க் கொண்டு
கோடு–(தனது) கோரப் பல் நுனியில்
மண் கொண்ட–பூமியைத் தாங்குகையாகிற
கொள்கையினாளே–கால பாவத்ந யுடையவனே
குஞ்சரம்–(குவலயாபீடமென்ற) யானையானது
வீழ–முடியும்படி
கொம்பு–(அதன்) தந்தத்தை
ஓசித்தானே–முறித்தெறிந்தவனே!
தோட்டம்–தோட்டமும்
இல்லவள்–மனைவியும்
ஆ–பசுக்களும்
தொழு–மாட்டுத் தொழுவமும்
ஓடை-குளமும்
துடவையும்–விளை நிலமும்
கிணறும் இவை எல்லாம்–கிணறுமாகிற இவை யெல்லா வற்றையும்
வாட்டம் இன்றி–குறைவில்லாமல்
அடியேன்
உன் பொன் அடி கீழே–உனது அழகிய திருவடியிலே
வளைப்ப வகுத்துக் கொண்டிருந்தேன்–திரள வகுத்துக் கொண்டிரா நின்றேன்
எனக்கு–(எல்லாம் உன் திருவடியே என்றிருக்கிற) எனக்கு
நாடு மானிடத்தோடு–நாட்டிலுள்ள மநுஷ்யரோடு
அரிது–(ஸஹ வாஸம் செய்வது) அஸஹ்யம்;
பலர்–பல பேர்
நச்சுவார்–(இந்த ஸஹவாஸத்தை) விரும்புவர்கள்-
தோட்டம்
ஸஸ்யங்களுக்கு கிருஷி பண்ணும் இடம்
இல்லவள்
க்ரஹணி
ஆ
பசு
தொழு
பசு நிற்கும் பிரதேசம்
ஓடை
குளம்
துடவையும்
விளை நிலம்
கிணறும்
துரவு
இவை எல்லாம் வாட்டம் இன்றி
இவை ஒன்றும் குறையாமல்
உன் பொன்னடிக் கீழே வளைப்ப அகம் வகுத்து கொண்டு இருந்தேன்
இனி உமக்கு ஒரு குறை இல்லையே என்ன
ஒரு குறை உண்டு
அது ஏது என்ன
நாட்டு மானித்தொடு எனக்கரிது
உன்னை ஒழியப் புறம்பே தாரக போஷக போக்யங்களாய் இருப்பாரோட்டை ஸஹவாசம்
எனக்கு துஸ் ஸகம்
நச்சுவார் பலர்
இத்தை ஆசைப்படுவார் பலர் உண்டாய் இருந்தது
கேழல் ஒன்றாகி கோட்டு மண் கொண்ட கொள்கையினானே
ஸர்வ லோகங்களும் பிரளயத்திலே அகப்படக் கொம்பிலே கோத்து எடுத்து
யதா ஸ்தானத்திலே வைத்து ரஷிக்கையை ஸ்வ பாவமாக யுடையவனே
குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே
குவலயா பீடத்தை விழ விட்டு அதன் கொம்பை முறித்தவனே
அப்படியே என்னுடைய சம்சார சம்பந்தத்தை அறுத்து
உன் திருவடிகளைத் தந்து அருள வேணும்
————
ப்ரக்ருதி சம்பந்தம் கிடக்க
தாரகாதிகள் எல்லாம் அன்ன பாநாதிகளாக வேண்டாவோ என்ன
அவற்றில் தமக்கு அபேக்ஷை இல்லாமையை அருளிச் செய்கிறார்
கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாராயணா என்று
எண்ணா நாளும் இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு உனபாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – 5-1-6-
பதவுரை
காரணா–(லோக ஸருஷ்டிக்குக் காரணமானவனே!)
நான்முகனை–பிரமனை
படைத்தானே–(உந்தி மேல்) படைத்தருளினவளே!
கண்ணா–ஸர்வ ஸூ லபனான கண்ணபிரானே!
கரியாய்–காள மேகம்போல்) கறுத்த நிறத்தை யுடையவனே!
அடியேன் நான் (உனக்கு) அநந்யார்ஹ சேக்ஷபூதனான நான்
உண்ணா நாள்–உண்ணா தொழிந்த போது
பசி ஆவதொன்றுமில்லை–பசி என்பது மறந்து முண்டாவதில்லை.
ஓயாதே–இடைவிடாமல்
நமோ நாராயணா என்று–‘நமோ நாராயணாய’ என்று
எண்ணா நாளும்–அநுஸந்திக்கப் பெறாத நாளும்
இருக்கு எசுச் சாமவேதம்–ருக், யஜுர், ஸாமம் என்கிற வேதங்களை (ச்சொல்லிக் கொண்டும்)
நாண் மலர் கொண்டு–அப்போதலர்ந்த (புதிய) பூக்களை எடுத்துக் கொண்டும் (வந்து)
உன் பாதம்–உன் திருவடிகளை
நண்ணா நான்–கிட்டப் பெறாத நாள்களும்
அவை–(எனக்கு) அந்த உண்ணாதொழிந்த நாள்களாம்;
அவை–அந்த வேதாசந்தநமும் புஷ்ப ஸமர்ப்பணமும்
தத்துவம் ஆகில்–தட்டுப்படுமாகில்
அன்று–அந்த நாளானது
எனக்கு–எனக்கு
பட்டினி நாள்–உண்ணாதொழிந்த நாளாகும்–
கண்ணா
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஸூலபனானவனே –
நான்முகனைப் படைத்தானே
ப்ரஹ்மாவை திரு நாபியிலே ஸ்ருஷ்டித்தவன் கிடீர்
இப்படி ஸூலபனானான் என்கை
காரணா
ப்ரஹ்மாவுக்கு முன் உண்டான
ப்ராக்ருத ஸ்ருஷ்ட்டியைச் சொல்லுகிறது
கரியாய்
காரணத்வ நிபந்தனமான உபகாரம் இல்லை யாகிலும்
விட ஒண்ணாத படியான திருமேனி என்கை
காரணா -நான்முகனைப் படைத்தானே -கண்ணா -கரியானே -என்ற அந்வயம்
அத்தலை இருந்தபடி இது
அடியேன் நான் உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை
உனக்கு அநந்யார்ஹ சேஷ பூதனான நான்
வந்தேறியான தேஹம் கிடந்ததே யாகிலும்
அன்ன பாநாதிகள் ஜீவியாத போது ஷூதாதிகள் உண்டாகாது –
ஆனால் உனக்கு எதில் அபேக்ஷை என்ன
ஓவாதே நமோ நாராயணா என்று எண்ணா நாளும்
இருக்கு யசுர் சாமவதம் நாள் மலர் கொண்டு உனபாதம் நண்ணா நாள் அவை
மாறாதே அஹங்கார நிவ்ருத்தி பூர்வகமான
ஸ்வரூப சாதன புருஷார்த்தங்களுக்கு வாசகமான திரு நாமத்தை
ப்ராப்ய புத்த்யா ப்ரீதி பிரேரிதனாய் அநுஸந்தியாத போதும்
அதின் விவரணமான ருக்யாதி வேத த்ரயங்கள் யாகிற செவ்விப் பூக்களைக் கொண்டு
உன் திருவடிகளைக் கிட்டி நின்று அனுபவியாத நான்
தத்துறுமாகில்
அப்படிப்பட்ட திவசங்கள் கூடுமாகில்
ஆகில் என்கையாலே
அது கூடாது என்கை
அன்று எனக்கு அவை பட்டினி நாளே
அது இறே சேஷ பூதனான எனக்கு உபவாஸ திவஸம்
அப்போது ஸ்வரூப ஹானி பிறக்கும் என்கை –
———–
கீழில் பாட்டிலே தமக்கு அவனே ப்ராப்யம் என்றார்
அந்தப் பிராப்யத்தை அப்போதே கிட்டப் பெறாமையாலே நோவு படுகிறார் இதில் –
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல்
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாம் கொல் என் ஆசையினாலே
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி வுரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சோரத் துயில் அணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே -5 -1-7 –
பதவுரை
வெள்ளை–பால் மயமான
வெள்ளத்தின் மேல்–பெருக்கிலே
ஒரு பாம்பை–ஒப்பற்ற திருவனந்தாழ்வானை
மெத்தை ஆக விரித்து–படுக்கையாக விரித்து
அதன் மேலே–அப் படுக்கையின் மீது
கள்ளம் நித்திரை கொள்கின்ற மார்க்கம்–(நீ) யோக நித்ரை செய்தருளும்படியை
காணலாம் கொல் என் ஆசையினாலே–காணக் கூடுமோ என்கிற விருப்பத்தினால்,
உள்ளம் சோர–நெஞ்சு அழிய
உகந்து எதிர் விம்மி–மகிழ்ச்சியின் மிகுதியால் (வார்த்தை சொல்ல வொண்ணாதபடி) மாறாகக் கலங்கி
உரோம கூபங்கள் ஆய்–(உடம்பு முழுவதும்) மயிர்க் குழி யெறியப் பெற்று
கண்ண நீர்கள்–கண்ணீர்
அணை–படுக்கையில்
துயில் கொள்ளேன்–உறங்கப் பெறுகிறேனில்லை;
யான்–(இப்படிப்பட்ட) அடியேன்
உன்னை–உன்னை
தத்துறும் ஆறு–கிட்டும் வழியை
சொல்லாய்–அருளிச் செய்ய வேணும்–
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து
நிர்மலமான ஜலத்தின் மேலே வெளுத்த நிறத்தை யுடைத்தான வெள்ளத்தின் மேலே
நாற்றம் குளிர்த்தி மென்மை தொடக்கமான குணங்களைப் ப்ரக்ருதியாக யுடையனாய்
கைங்கர்யத்துக்கு அத்விதீயனான திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக நிருத்தாத படி விரித்து
அதன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற
அப் படுக்கையின் மேலே படுக்கை வாய்ப்பாலே உறங்குகிறான் என்னும் படியாய்
ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணிக் கொண்டு பள்ளி கொள்ளுகிற பிரகாரம்
மார்க்கம்
வழி
நீ ரக்ஷண சிந்தை பண்ணுகிற வழி என்றபடி
காணலாம் கொல் என் ஆசையினாலே
காண வேணும் என்னும் ஸ்நேஹத்தாலே
உள்ளம் சோர
நெஞ்சம் அழிய
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும்–என்கிறபடியே
உகந்து எதிர் விம்மி
ப்ரீதி அதிசயத்தாலே வார்த்தை சொல்ல ஒண்ணாத படி
எதிர் விம்மிப் பொருமி
வுரோம கூபங்களாய்
உடம்பு எல்லாம் மயிர் கூச்சு எறிந்து
இவ்வநுஸந்தானம் ப்ரத்யக்ஷம் போலே பிரகாசித்து
பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பண்ணி
அது கிடையாமையாலே
கண்ண நீர்கள் துள்ளம் சோரத்
உள் அழிந்து கண்ண நீர் பாய
துயில் அணை கொள்ளேன்
படுக்கை சேர்த்தியை அனுசந்தித்த எனக்குப்
படுக்கை பொருந்துகிறது இல்லை
சொல்லாய் உன்னைத் தத்துறுமாறே
நான் உன்னைக் கிட்டும் வழி சொல்லாய்
எல்லாத் தசையிலும் அவனையே கேட்க்குமவர் இறே இவர்–
————-
கிட்டும் தனையும் உன்னை மாறாமல் ஏத்தும் படி பண்ணி அருள வேணும் என்கிறார்
(கிட்டிய பின்பு உன்னை மாறாமல் ஏத்த சொல்ல வேண்டாமே )
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே
எண்ணுவர் இடரைக் களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே அருள் செய் எம் பிரானே -5-1-8 –
பதவுரை
காரணா–(உலகங்கட்குக்) காரணமானவனே!
என்ணுவார் இடரை களைவானே–(எப்போதும் உன்னையே தியானிப்பவர்களுடைய துன்பங்களைப் போக்குமவனே!
மது ஸூதா–மதுவைக் கொன்றவனே!
கரி கோள் விடுத்தானே–கஜேந்திராழ்வானுடைய துக்கத்தை நீக்கினனனே!
கண்ணனே!
வண்ணம்–அழகிய
மால்–பெரிய
வரை–கோவர்த்தன மலை
குடை ஆக–குடையாக (அமைய)
மாரி–மழையினின்றும்
காத்தவனே–(பசுக்களையும் இடைகரையும்) காத்தருளினவனே!
களிறு–(குவலயாபீடமென்னும்) யானையை
அட்ட–முடித்த
பிரானே–உபகாரகனே!
ஏத்த அரும் பெரு கீர்த்தியினானே–ஸ்துதிக்க முடியாத அளவற்ற கீர்த்தியை யுடையவனே!
எம்பிரானே–எமக்குத் தலைவனே!
நான்–அடியேன்
உன்னை–உன்னை
நாள் தொறும்–தினந்தோறும்
நண்ணி–ஆஸ்ரயித்து
ஏத்தும் நன்மை–ஸ்துதிக்கையாகிற நன்மையை
அருள் செய்–அருள் செய்ய வேணும்–
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே
நாநா வர்ணமான தாதுக்களை யுடைத்தான பெரிய மலையைக் குடையாகக் கல் வர்ஷத்தைக் காத்தவனே
மதுசூதா
முதல் களையாகிற மெதுவான அசூரனை நிரசித்தவனே
கண்ணனே
ஸர்வ ஸூலபனான கிருஷ்ணனே
கரி கோள் விடுத்தானே
ஸ்ரீ கஜேந்த்ரனுடைய ஆபத்தைப் போக்கினவனே
காரணா
ஜகத் காரண பூதனே
களிறட்ட பிரானே
குவலயா பீடத்தை நிரசித்த உபகாரகனே
எண்ணுவர் இடரைக் களைவானே
உன்னை அனுபவிப்பாருடைய விரோதியைப் போக்குமவனே
ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
அபரிச்சேதயமாய் போக்யதை அளவிரந்த குணங்களை யுடையவனே
நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே அருளு செய்யும் பிரானே
ஏத்தி அல்லது தரிக்க மாட்டாத நான் உன்னைக் கிட்டி
நாள்தோறும் ஏத்தும்படிக்கு ஈடான நன்மையை அருள வேணும்
ஸ்ரேயஸ்ஸை உண்டாக்கி அருள வேணும்
எம்பிரானே
அநந்ய ரானவர்களுக்கு உபகாரகன் ஆனவனே
காரணா
எண்ணுவர் இடரைக் களைவானே
மதுசூதா
கரி கோள் விடுத்தானே
கண்ணனே
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே
களிறட்ட பிரானே
ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே அருள் செய்
எம் பிரானே
என்று அந்வயம்
ஆக
ஸர்வ ஸூ லபத்வமும்
ப்ராப்யத்வமும்
சொல்லிற்று –
———-
ரக்ஷகனுமாய்
ப்ராப்யனுமான
நீயே என் பிராப்தி விரோதியைப் போக்கி அருள வேணும் என்கிறார் –
நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை ஆளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே – 5-1 -9-
பதவுரை
நம்பனே–(ரக்ஷகன் என்று) நம்பத் தகுந்தவனே!
நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே–(ஸ்தோத்திரங்களை) வாயாரச் சொல்லிப் புகழ வல்லவர்களுக்கு ரக்ஷகனே!
நரசிங்கம் அது ஆனாய்–நரசிங்க அவதராம் செய்தருளினவனே!
உம்பர்-நித்ய ஸூரிகளுக்கு
கோன்–தலைவனே!
உலகு ஏழும்–எல்லா வுலகங்களையும்
அளந்தாய்–(திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்து கொண்டவனே!
ஊழி ஆயினாய்–காலம் முதலிய பதார்த்தங்களுக்கெல்லாம் நிர்வாஹகனானவனே!
முன்–முன்னே
ஆழி–திருவாழி யாழ்வானை
ஏத்தி–(திருக் கையில்) ஏந்திக் கொண்டு
(எழுந்தருளி)
மா கம்பம்–மிக்க நடுக்கத்தை அடைந்த-கம்பம் -கம்பநம் -நடுக்கம்
கரி–கஜேந்திர ஆழ்வானுடைய
கோள்–சிறையை
விடுத்தானே–விடுத்தருளினவனே!
காரணா–ஜகத் காரண பூதனே!
கடலை–(திருப்பாற்) கடலை
கடைந்தானே–(தேவர் களுக்காகக்) கடைந்தருளினவனே!
எம்பிரான்–எம்பிரானே!
என்னை–அடியேனை
ஆளுடை–ஆட்படுத்திக் கொண்டவனும்
தேனே–தேன் போல் இனியனுமானவனே!
ஏழையேன்–(உன் திருநாமங்களில்) சாபல்யமுடைய என்னுடைய
இடரை–துன்பத்தை
களையாய்–களைந்தருள வேணும்.
நம்பனே
என்னை உன் கையிலே பொகடலாம் படி விஸ்வச நீயனானவனே
நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே
ஸ்நேஹ பூர்வகமாக பரிந்து ஏத்த வல்லார்களுக்கு ஸ்வாமி யானவனே
நரசிங்கமதானாய்
திரு நாமம் சொல்லப் பெறாத ஹிரண்யனை
அச் செய்கைக்காக
அவன் வரத்தில் அகப்படாத நரஸிம்ஹம் ஆனவவனே
அது என்று
அழகைச் சொல்லுகிறது
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய்
தேவர்களை மெய் காட்டிக் கொண்டு போருகிற இந்திரனுக்காக
ஸப்த லோகங்களையும் அளந்தவனே
(கீழ் எல்லாம் ஒன்றாக்கி -மேல் ஆறும் -ஆக ஏழும் )
அன்றிக்கே
அயர்வரும் அமரர்கள் அதிபதியாய் வைத்து
அங்கு நின்றும் போந்து அவதரித்து
உலகு ஏழையும் அளந்தான்
என்னவுமாம்
ஊழி யாயினாய்
ஊழிக் காலம் -கால உப லஷித ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகன் ஆனவனே
ஆழி முன்னேந்தி கம்ப மா கரி கோள் விடுத்தானே
ஏற்கவே திருவாழியைத் தரித்துக் கொண்டு இருந்து
முதலையின் கையில் அகப்பட்டு நடுங்குகிற யானையினுடைய பேய் சிறையை வெட்டி விட்டவனே
வடிவில் பெருமை யாகவுமாம்
கோள் முதலை முஞ்ச குறித்து எறிந்த சக்கரம் -என்னக் கடவது இறே
காரணா
ஜகத் காரண பூதனானவனே
காரணமாய் உத்பாதித்தவனே
ரக்ஷகன் என்கை
கடலைக் கடைந்தானே
இந்திராதி தேவர்களுக்காக மஹோ ததியைக் கடைந்தவனே
(உததி-கடல் –மஹா உததி -பெரும் கடல் )
எம்பிரான்
அச் செயலாலே என்னை எழுதிக் கொண்டவனே
அவற்றை எனக்கு அறிவித்த உபகாரகன் -என்னவுமாம்
என்னை ஆளுடைத் தேனே
உன் போக்யதையைக் காட்டி என்னை அடிமை கொண்டவனே
ஏழையேன் இடரைக் களைவாயே
உன் போக்யதையில் சபலனான நான்
என்னுடைய மங்களா ஸாஸன விரோதியை
வாஸனையோடே போக்கி அருள வேணும் –
——–
நிகமத்தில் இப்பத்தை அப்யசித்தவர்கள்
இதன் பாசுர மாத்ரத்தாலே சடக்கெனப் பரமபத்தைப் பிராபிப்பர்கள்-என்கிறார் –
காமர் தாதை கருதலர் சிங்கம் காண இனிய கரும் குழல் குட்டன்
வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதன் தன்னை
சேம நன்கமரும் புதுவையோர் கோன் விட்டு சித்தன் வியம் தமிழ் பத்தும்
நாமம் என்று நவின்று உரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணர் உலகே – 5-1- 10-
பதவுரை
காமர் தாதை–மன்மதனுக்குத் தந்தையும்
கருதலர் சிங்கம்–(தன்னை) விரோதிப்பவராகிய யானைகட்கு சிங்கம் போன்றவனும்
காண–ஸேவிப்பதற்கு
இனிய–அழகாயிருக்கிற
கரும் குழல் குட்டன்–கறுத்த குழலையுடைய சிறுக்கனானவனும்
வாமனன்–வாமாநாவதாரம் செய்தருளியவனும்
என்–எனக்குத் தலைவனும்
மரகத வண்ணன்–மரகதப் பச்சை போன்ற வடியை யுடையவனும்
மாதவன்–பிராட்டிக்குக் கணவனும்-ஸ்ரீ யபதி
மதுசூதனன் தன்னை–மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானைக் குறித்தருளிச்செய்த
சேமம்–க்ஷேமமானது
நன்கு–நன்றாக (குறைவின்றி)
அமரும்–அமைந்திருக்கப் பெற்ற
புதுவையர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூரிள்ளார்க்குத் தலைவனான
விட்டு சித்தன்–பெரியாழ்வாரது
வியன் தமிழ் பத்தும்–பெருமையுள்ள (இத்) தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
நாமம் என்று–(எம்பெருமானது) திருநாமங்களாக பிரதிபத்தி பண்ணி
நவின்று–அன்பு கொண்டு
உரைப்பார்கள்–ஓதுமவவர்கள்
ஒல்லை–விரைவாக
நாரணன் உலகு–ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவார்–கிட்டப் பெறுவர்கள்–
காமர் தாதை
தன வடிவு அழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற மன்மதனுக்கு ஜனகன் ஆனவனே
அவனுக்கு அவ் வைலக்ஷண்யத்துக்கு அடி இவன் என்கை
கருதலர் சிங்கம்
இவ்வடிவு அழகு காண வேண்டாதவர்களை ஸிம்ஹம் போலே
கிட்ட அரியனாய் இருக்குமவன்
காண இனிய கரும் குழல் குட்டன்
அனுகூலர் கண்ணுக்கு இனியனாய்
கறுத்த நிறத்தை யுடைய திருக்குழலை யுடைய பிள்ளை
காண இனிய கரும் குழல்-என்று
குழலுக்கு விசேஷணம் ஆகவுமாம்
வாமனன்
இவர்களை பெருகைக்குத் தான் அர்த்தி யாமவன்
அவ்வடிவு அழகைச் சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி
வாமனன் ஆனவன் என்னவுமாம்
என் மரகத வண்ணன்
மரகதம் போல் பசுத்துக் குளிர்ந்த திரு மேனியைக் காட்டி
என்னை வஸீ கரித்தவன்
மாதவன்
இவ்வடிவு அழகைப் பிராட்டிக்கு முற்றூட்டாகக் கொடுக்குமவன்
அவள் புருஷகாரமாகக் கிடீர்
அவ்வடிவு அழகை எனக்கு உபகரித்தவன் என்னவுமாம்
மது ஸூதன் தன்னை
அவ் வனுபவ விரோதிகளை மதுவைப் போக்கினால் போல் போக்குமவன்
சேம நன்கமரும் புதுவையோர் கோன் விட்டு சித்தன் வியம் தமிழ் பத்தும்
வஸ்துவுக்குத் தானே ரக்ஷகமாகப் போரும்படியான ஸ்ரீ வில்லி புத்தூருக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த அழகிய தமிழான பத்துப் பாட்டும்
ரக்ஷை பொருந்தின ஊர்
மங்களா ஸாஸன பரரை உடைத்தது என்கை
(வியம் தமிழ் -வியப்பாக சொன்ன தமிழ் என்று சொன்ன அத்யாஹாரம் கொள்ள வேண்டும்
வியத்தல் -கொடுத்தல் -கடைக்குறையாக வியந் தமிழ் )
நாமம் என்று நவின்று உரைப்பார்கள்
ப்ராப்ய வாசகம் என்று
ஸ்நேஹத்தோடு அனுசந்திக்க வல்லார்
நண்ணுவார் ஒல்லை நாரணர் உலகே
பரம பதத்தை சடக்கென கிட்டப் பெறுவார்கள்
நாரணர் உலகே
உபய விபூதி நாதனுடைய தேசம் என்கை
அவன் இறே முக்த ப்ராப்யன் –
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply