கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!
ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!
சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.
———
திருமகள் மணாளனான இறைவன் தன்னுடைய பக்தர்களுக்கு மிகத் துன்பங்களை கொடுத்தாலும்
அத் துன்பங்கள் அவர்களிடம் தான் கொண்ட அன்பினால் ஆகும் என்பது
உதாரணத்துடன் விளக்கப்படுகிறது இப் பாடலில்.
ஆரப் பெருந்துயரே செய்திடினும் அன்பர்கள் பால்
வேரிச் சரோருகை கோன் மெய் நலமாம் –தேரில்
பொறுத்தர்கரிது எனினும் மைந்தன் உடல் புண்ணை
அறுத்தற்கு இசை தாதை யற்று –21-
பதவுரை:
வேரிச் சரோருகை கோன் -நறுமணம் நிறைந்த தாமரைப் பூவை இருப்பிடமாக கொண்ட பெரிய பிராட்டியாருக்கு மணவாளன்
அன்பர்கள் பால் -பக்தி உடையவார்களிடத்தில்
ஆரப் பெருந்துயர் -மிக்க பெரும் துன்பத்தை
செய்திடினும் -தந்த போதிலும்
தேரில் -இதை ஆராய்கையில்
மெய்ந் நலமாம் -உண்மையான அன்பிலே யாகும்
பொறுத்தற்கு அரிது எனினும் -தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும்
அப்படித் தருவது
மைந்தன் -பிள்ளையினுடைய
உடற் புண்ணை -உடலில் உண்டான புண்ணை
அறுத்தற்கு -அறுவை சிகிச்சைக்கு
இசைதாதையற்று – அனுமதிக்கும் தந்தை போலவாம்
ஆரப்பெருந்துயரே –
துயர் – துன்பம், பெருந்துயர் – பெருந்துன்பர். ஆரப் பெருந்துயர் – மிக்க பெருந்துன்பம் என்றவாறாம்.
துயரே என்கிற ஏகாரத்தால்
நடுவில் ஒரு இன்பம் கலவாத துன்பம் என்று புலனாகிறது.
செய்திடினும் – கொடுத்தாலும் என்று பொருள்.
ஆன்மாக்களுடைய முன் வினைப் பயனால் துன்பங்கள் வந்தனவானாலும் அவற்றை நடத்துபவன்
இறைவனாகையாலே “போயபிழை” எனப்பட்ட பழவினைகளும்
‘புகுதருவான்’ எனப்பட்ட வரும் வினைகளும்
தற்பொழுது உடலுடன் கொண்டு வந்த வினைகளும் ஆகிய
மூன்று வினைகளையும் கழிக்கின்றவன் இறைவனாதலால்
அவனுக்கு மேற்சொன்ன மிக்க பெருந்துன்பங்களைக் கழிக்க முடியாதவையல்ல. அவர் எண்ணினால் அகற்ற முடியும்.
ஆயினும் தன் பக்தர்களின் தன்மைக்காக அப் பெரும் துன்பங்களைப் பக்தர்கள் துய்க்கும்படி செய்கிறான்.
அதனால் பக்தர்கள் துன்பம் துய்க்கும்படி ஆகிறது. ஏனெனில் பக்தர்கள் உலகப் பற்றிலிருந்து விடுபடவேண்டுமல்லவா?
இக்கருத்து ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்ற பழமொழியால் கூறப்பட்டது.
‘இயல்பாகவும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடமை
மயலாகம் மற்றும் பெயர்த்து’–என்ற குறளுக்கு
எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை மட்டும் விடாது போனால் அதைத் தொடர்ந்து விட்டனவெல்லாம்
மீண்டு வந்து தவத்திற்கு இடையூறாய் மனக்கலக்கம் செய்யும் என்ற பரிமேலழகர் உரையைக் காண்க.
வேரிச் சரோருகை கோன் – வேரி – நறுமணம், சரோருகம் – தாமரை
வேரிச் சரோருகம் – நறுமணமே வடிவாகவுடைய தாமரை
வேரிச் சரோருகை – அத் தகைய தாமரையை இருப்பிடமாக உடையவள் இலக்குமி.
சரோருகை கோன் :- அவளுக்குக் கணவனான திருமால் ‘கோன்’ என்ற சொல்லுக்கு
‘வேரிச்சரோருகை’ என்பது கருத்து அடையாக வந்தது.
அதாவது
பக்தர்களுக்குத் துன்பத்தை விளைப்பதற்காகப் பகவானோடு பிராட்டியும் துணை நிற்கிறாள் என்று தெரிகிறது.
காரணம் பக்தனுக்குப் பகவான் துன்பம் தருவது, அவனுடைய நன்மைக்காகவே என்று சொல்லுகையாலே
அந்நன்மைக்கு அவளும் துணை நிற்பது தவறல்லவே என்பதாம்.
மெய்ந்நலமாம் – உண்மையான அன்பின் அதாவது உண்மையான சினேகம் என்பதாம்.
தேரில் – ஆராயில், தேறுதல் – ஆராய்தல்
வேரிச் சரோருகைகோன், அன்பர்கள் பால் ஆரப்பெருந்துயரே செய்திடினும் தேரில் மெய்ந்நலமாம் என்று கொண்டு கூட்டுக.
இதற்கு எடுத்துக் காட்டாக கட்டுரைக்கப்படுகிறது மேல்தொடரில்.
பொறுத்தார்க்கு அரிதெனினும் மைந்தன் உடல் புண்ணை அறுத்தற்கு இசைதாதையற்று –
தன் புதல்வனுக்குத் தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும் அவன் உடலில் எழும்பிய கட்டியை
அறுவை மருத்துவத்திற்கு நல்லெண்ணத்துடன் ஏற்கும் தகப்பனைப் போல என்று பொருள்.
அதாவது
மகனுக்குத் தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும் அவனுடைய நன்மைக்காக அவனுடைய உடம்பில் எழும்பிய கட்டியை
அறுத்து எறிவதற்கு நல் எண்ணத்தாலே ஏற்றுக் கொள்ளும் பிதாவைப் போல,
பகவானும் தன் பக்தர்கள் வினைப்பயனைத் தீர்ப்பதற்கு மிக்க பெரும் துன்பங்களைக் கொடுத்து
அவ்வினையிலிருந்து அவர்களை மீட்பதற்காகவாம். இது பக்தனிடம் தான் கொண்ட உண்மையான நேசத்தாலே யாகும்.
இந் நற்செயலுக்கு இரக்கமே வடிவான பெரிய பிராட்டியாரும் துணை நிற்க இறைவன் செய்யும் செயலாகும் என்று பொருள்.
————
வினைப் பயன்களை அனுபவித்தே கழிக்க வேண்டும். அனுபவிக்காமல் யாரும் தப்ப முடியாது. ‘
உரற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா’ என்றது நீதி நூல்.
அதாவது
வந்து கூடுகின்ற தீ வினைகளைத் தடுப்பது தேவர்களுக்கும் முடியாவாம்.
அதுபோல பெறக் கூடிய நல் வினைகளையும் தடுக்க முடியாவாம்.
மழை வறண்டால் அதனை யாரும் தரமுடியாது. அதிக மழை பெய்தால் அதைக் குறைக்க வல்லவருமில்லை.
இதனால் வினைப் பயன்களைத் துய்த்தே ஆக வேண்டும் என்பது இறைவனால் இடப்பட்ட நியதி.
முற்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பில் நுகரப்படுவதாலும் இப்பிறப்பில் செய்த வினை வரும் பிறப்பில் நுகரப்படுதலுமாகிய
சுழல் போல் மாறி மாறி வந்து கொண்டிருக்கும்.
இவ்வாறு பிறவிச் சுழலில் சுழன்று வரும் ஆன்மாவுக்கு அதிலிருந்து தப்ப முடியுமா? என்று வினா எழுந்த பொழுது
அதற்கு பதில் கூறுகிறது இப்பாடல்.
பிறவிக்குக் காரணமான பழவினைகள் கழிதலால், பின் ஒரு பிறவி பிறந்து நுகரவிருக்கும் வினையும் இருக்குமோ? இராது.
ஆகவே வினைகளெல்லாம் ஆன்ம ஞானத்தால் தீயினில் பட்ட பஞ்சு போல் கருகி விடும்.
‘தீயினில் தூசாகும்’ என்பது தமிழ் வேதம். ஆகவே, பிறவித் தொடர் என்ற துயரமில்லை என்பதாம்-
உடைமை நான் என்று உடையான் உயிரை
வடமதுரை வந்து உதித்தான் என்றும் -திடமாக
அறிந்தவன் தன் தாளில் அடைந்தவர்க்கும் உண்டோ
பிறந்து படு நீள் துயரம் பின் –22-
பதவுரை:
நான் -நான் என்கிற ஆன்மா
உடைமை -இறைவனுடைய உடைமைப் பொருள் என்றும்
உயிரை உடையான் -இவ்வாத்மாவை சொத்தாக உடையவன்
வடமதுரை வந்துதித்தான் என்றும் -பிறந்தான் என்றும்
திடமாக அறிந்து -உறுதியாக அறிந்து
அவன்தன் தாளில் -இறைவனான அவன் திருவடிகளில்
அடைந்தவர்க்கும் -அடைக்கலம் புகுந்தவர்க்கும்
பின் பிறந்து படும் -இனி மேலும் ஒரு பிறப்பெடுத்து நுகரத்தக்க பழவினைகள்
நீள் துயரம் -பழ வினைகள்
உண்டோ -இருக்குமோ? இல்லை என்றவாறு –
உடைமை நானென்றும் –
நான் இறைவனுடைய உடைமைப் பொருள் என்றும்,
அதாவது
வேதம் முதலிய சாஸ்திரங்களில் ஆன்மாக்கள் இறைவனுடைய உடைமைகள் என்று
சொல்லப்பட்டதறிந்து அதன்படி இருத்தல்.
உடையான் உயிரை வடமதுரை வந்து உதித்தான் என்றும் –
நான் என்று சொல்லப்படுகிற இவ்வாத்மாவை உடைமையாகக் கொண்டவன்
வடமதுரையில் கண்ணனாக வந்து பிறந்தவன் என்றும்,
பகவத் கீதையில் தானே பரம்பொருள் என்றும், உலகமெல்லாம் என் உடைமைகள் என்றும்,
பிறவிப் பெருங்கடல் சுழலும் ஆன்மாக்களில் யாவர் என் பாதத்தையே அடைக்கலம் புகுகிறார்களோ
அவர்களை நான் பிறவியிலிருந்து கரையேற்றுவேன் என்றும் சொன்ன கண்ணபிரானுடைய தலைமையை.
திடமாக அறிந்து –
உறுதியாக அறிந்து
அதாவது
உண்மையை சாஸ்திரங்களால் ஆராய்ந்தால் ஆன்மாவுக்கு உடைமைத் தன்மையும்
இறைவனுக்கு உடையவனாம் தன்மையும் வகுக்கப்பட்டுள்ளது தெரியவரும்.
அதனால் உடைமை – உடையான் என்று இங்கு இரு பொருளில்,
உடைமை என்று உயிர்களுக்கும், உடையான் என்று இறைவனுக்கும் வகுத்துக் கூறப்பட்ட பெயராகும்.
ஆகையால் உடைமையான ஆன்மா இருக்குமிடத்திற்கு வருவானும்,
அதனைத் தன்னுடனே சேர்த்துக் கொள்வானும் அவனே.
இதனால் ஆன்மாவை வந்து அடைபவனும், அடைவதற்கு வழியாயிருப்பவனும் ,
அடைந்து மகிழ்வானும் அவனே என்று சொல்லப்பட்டது.
திடமாக அறிகையாவது
இறைவனுக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள உடைமை உடையான் என்னும் அநாதியான இவ்வுறவை ஐயம் திரிவற அறிதல்.
இவ்வாறு இருவருக்குமுள்ள உறவு முறையை அறிந்து.
அவன் தன் தாளில் அடைந்தவர்க்கும் –
ஆன்மாவுக்கு உடையவனான இறைவன் திருவடிகளில் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு
அடைக்கலம் புகுந்தவர்களுக்கும் என்று பொருள்.
அதாவது
த்வய மந்திரத்தில் முன் பாதியில் சொன்னபடி சரணாகதி செய்தவர்களுக்கும் என்று கருத்து.
உண்டோ பிறந்து படு நீள்துயரம் பின் –
நீள் துயரம் என்றது பழவினையை,
பிறப்புக்குக் காரணமாகிற பழைய வினைகள் சரணாகதி செய்த பிறகு இருக்குமோ?
சரணாகதி செய்த உடன் உயிரைப் பற்றி நின்ற வினையெல்லாம்.
“வானோ மறிகடலோ, மாருதமோ, தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் – ஆனின்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதித்தார் தாள் பணிந்தோம்
வன்துயரை அவா மருங்கு”–(பெரிய திருவந்தாதி – 54)
என்று நம்மாழ்வார் அருளியபடி வினை போனயிடம் தெரியாமல் போய்விடும்.
ஆகவே சரணாகதி செய்த பின்பு ஒருபிறவி பிறந்து நுகரத்தக்க பழைய வினையும் கழியாமல் இருக்குமோ?.
உடனடியாக வீடு பெற வேணும் என்னும் வேகத்துடன் அப்பொழுதே வீடுபேறு அடைவதும்
உடல் வீழ்ந்த பிறகு வீடு பேறு கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு
உடல் கழிந்த பிறகு வீடு பேறு கிடைப்பதும் உறுதியாக உண்டு.
இதனால் சரணாகதி செய்தவர்களுக்கு மறுபிறப்பின் தொடர்ச்சி இல்லை. “உறுதியாக இல்லை.”
————-
முன் செய்த வினைகளை எண்ணி, “அவ்வினை நம்மைப் பற்றிக் கொண்டு துன்புறுத்துமே” என்று
வருந்துகிற மனதுக்கு ஆறுதல் கூறுகிற பாடல் இது.
இறைவன் திருவடிகளில் சரணாகதியடைந்த பின்பு முன் வினைகளின் பயனான துன்ப நுகர்ச்சி இல்லை
என்னும் உண்மையை அனைவரும் அறிய இதில் உணர்த்தப்படுகிறது.
ஊழி வினைக் குறும்பர் ஓட்டருவர் என்று அஞ்சி
ஏழை மனமே யினித் தளரேல் -ஆழி வண்ணன்
தன்னடிக் கீழ் வீழ்ந்து சரண் என்று இரந்து ஒரு கால்
சொன்னதர் பின் உண்டோ துயர் –23-
பதவுரை:
ஊழிவினை -பழையதாக செய்யப்பட்ட வினைகளாகிற
குறும்பர் -கயவர்கள்
ஓட்டருவர் -ஓடிவந்து துன்புறுத்துவர் என்று
அஞ்சி -பயந்து
ஏழை மனமே -அறிவிலாத நெஞ்சமே
இனித்தளரேல் -இனிமேல் வருந்த வேண்டாம் ஏனெனில்?
ஆழிவண்ணன்தன் -கடல்போன்ற நிறமுடைய இறைவனது
அடிக்கீழ் -திருவடிகளில்
வீழ்ந்து -விழுந்து (சேவித்து)
சரண் என்று -நீயே தஞ்சமாக வேணும் என்று
இரந்து -வேண்டிக்கொண்டு
ஒருக்கால் -ஒரு தடவை
சொன்னதற்பின் -அடைக்கல வார்த்தை சொன்ன பின்பு
துயர் உண்டோ -வினைப்பயனால் வரும் துன்பம் உண்டாகுமோ உண்டாகாது என்பதாம்.
ஊழி வினைக்குறும்பர் –
பல பிறப்புகளிலும் சேர்க்கப்பட்ட வினைகளாகிற கயவர்.
ஊழ் என்பது பழமையை.
ஊழ்வினை என்பது பழைய வினை என்றவாறு. இதனால் முன் செய்த வினை கூறப்படுகிறது.
வினைகளைக் குறும்பர் என்று சொல்வது அவற்றின் கொடுமைத் தன்மைப் பற்றி
“அழுக்காறு என ஒரு பாவி” என்று சொல்வது போலக் கூறப்பட்டது.
“கயமை என்னும் பண்புச் சொல்’. பொருள் கொடுமை பற்றிக் கயவர் என்று உயர்திணையில் கூறப்பட்டது.
கயவர்கள் தங்கள் மறத்தால் (வலிமையால்) நாட்டைத் தன் வயமாக்கித் தாம் நினைத்தபடி நடத்துவது போல
வினைகளும் ஆன்மாவைத் தம் வழியே இழுத்துத் தான் விரும்பிய படி நடத்துவதால் குறும்பர் என்று கூறப்பட்டது.
‘கங்குல் குறும்பர்’ என்ற இடத்தில் இரவைக் குறும்பராகவும்,
ஐம்புலன்களை ‘ஐவர்’ என்றும் கூறும் வழக்குப் பற்றி இங்கு வினையைக் குறும்பர் என்று கூறப்பட்டது.
ஓட்டருவர் என்று அஞ்சி –
ஓடி வருவார் என்று பயப்பட்டு
குறும்பராகையாலே ஓடிவருவார் என்று சொல்லப்பட்டது.
கீழ்க் கூறிய வினைகள் விரைவாக வந்து துன்புறுத்ததலுக்கு பயப்பட்டு.
ஏழை மனமே –
அறிவிலியான நெஞ்சே!
அதாவது
அடைக்கலம் புகுந்தவரை ‘அஞ்சேல்’ என்ற கைவிளித்துக் காக்கும் இயல்புடைய இறைவன் பெருமையும்
(வீடு பேற்றுக்குச் சொல்லப்பட்ட பல நெறிகளிலும்) அடைக்கல நெறியின் சிறப்பும்,
அடைக்கலம் அடைந்தவன் பெறும் பயனும் அறிவதற்குத் தக்க ஞானமில்லாத நெஞ்சே! என்று
நெஞ்சின் அறியாமையைக் கூறியவாறு.
இத்தகைய நெஞ்சுக்கு மேல் தொடரால் ஆறுதல் கூறப்படுகிறது.
இனித்தளரேல் –
சரணாகதி செய்வதற்கு முன்பு தளர்ச்சி அடைந்தாலும் அது செய்த பிறகு தளர வேண்டாம்.
சரணாகதியின் பெருமை அத்தகையது என்பது இதனால் உள்ளத்தை நோக்கி
கவலைப்படாதே’ என்று ஆறுதல் கூறுகிறார் ஆசிரியர்.
இது கண்ணன் தேர்த்தட்டில் இருந்து கொண்டு அர்ஜுனனைப் பார்த்து ‘கவலைப்படாதே. அஞ்சற்க’ என்று சொன்னது போன்றது.
இனி என்று சொன்னதின் கருத்து
மேல் வெளிப்படையாகக் கூறப்படுகிறது.
ஆழி வண்ணன் –
கடல் போன்ற ஆழமான இயல்புடையவன்
அல்லது
கடல் போன்று துயர் தீர்க்கும் நீல நிற உருவை உடையவன் என்று பொருள்.
தன்னடிக்கீழ் வீழ்ந்து –
அவன் திருவடிகளின் கீழ் விழுந்து “ஆழி வண்ணன் நின்னடியினை அடைந்தேன்” என்று
திருமங்கை ஆழ்வார் கூறியது போல விழுந்து
சரண் என்று இரந்து –
நீயே எனக்குப் புகலாயிருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு
ஒருக்கால் சொன்னதற்பின் இவ்வாறு ஒரு தரம் வேண்டிக் கொண்ட பிறகு.
அதாவது
இறைவன் அடிகீழ் வீழ்ந்து வேண்டுதலுக்குப் பிரபத்தி அல்லது சரணாகதி என்று பெயர்.
இது ஒரு தடவையே செய்ய வேண்டியது. ஒரு தடவைக்கு மேல் செய்யத் தேவையில்லை.
அதனால் ஒருக்கால் சொன்னதற்பின் என்று கூறப்பட்டது.
உண்டோ –
இவ்வாறு சரணாகதி செய்த பிறகு முன்வினைகள் காரணமாக வருகின்ற – துன்பங்கள் உண்டாகுமோ? உண்டாகாது.
இறைவன் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த போதே முன் வினைகளும் வரு வினைகளும் எல்லாம் அழிந்து விடும்
என்று சாஸ்திரம் கூறுகின்ற வார்த்தைகளை நினைத்து
‘துயர் உண்டோ’ (போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்) என்று சொல்லப்படுகிறது.
ஆகவே இறைவன் திருவடிகளில் முறைப்படி அடைக்கலம் புகுந்தவனுக்கு
அனைத்து வினைகளும் அழிந்து விடுகின்றன என்பதும்.
அவற்றால் வரும் துன்பங்களும் வரமாட்டா என்பதும் இதனால் சொல்லப்பட்டன.
———–
ஊழ்வினை பற்றி சாஸ்திரம் கூறுகையில் முன்னை வினைகள், வரும் வினைகள், எடுத்த வினைகள் என்றும்
மூன்று வகையாகக் கூறுகின்றன. அவற்றுள் முன்னைய வினைப்பற்றி சென்ற பாடலில் கூறினார்.
எதிர் வருகின்ற வினைகளை நினைத்துத் தளர்கின்ற மனதை நோக்கி தேற்றுகிறது போன்று கூறுகிற பாடல் இது.
தன்னை அடைக்கலம் புகுந்த பக்தனிடம், அவனறியாமல் செய்யும் குற்றங்களில் இறைவன் கண் வைக்க மாட்டான் என்கிறது.
அதாவது
பார்த்தும் பாராமல் இருப்பான் என்று கருத்து.
(இது) அனைவரும் அறியக் கூறப்பட்டது.
வண்டு படி துளப மார்பன் இடைச் செய்த பிழை
உண்டு பல வென்று உளம் தளரேல் -தொண்டர் செய்யும்
பல்லாயிரம் பிழைகள் பார்த்து இருந்தும் காணும் கண்
இல்லாதான் காண் இறை –24-
பதவுரை:
வண்டுபடி -தேனைப் பருகுவதற்காக வண்டுகள் வந்து மொய்க்கின்ற
துளப மார்பனிடை -திருத்துழாயாலே அழகு செய்யப்பட்ட திருமார்பை உடைய பகவானிடத்தில்
செய்த பிழை -இழைத்த குற்றங்கள்
பல உண்டு என்று -அனேகங்கள் இருக்கின்றன என்று
உளம் -ஏ மனமே
தளரேல் -வருந்தாதே
இறை -(அடைக்கலம் புகுந்தாரை அஞ்சேல் என்று அருளும்) நம் தலைவர்
தொண்டர் செய்யும் -தன்னுடைய பக்தர்கள் செய்கின்ற
பல்லாயிரம் பிழைகள் -அனேகமாயிரம் குற்றங்களை
பார்த்திருந்தும் -தன்னுடைய ஞானத்தால் எல்லாவற்றையும் கண்டு கொண்டிருந்தும்
காணும் -பக்தர்களது பிழைகளைப் பார்க்கும் விஷயத்தில்
கண் இல்லாதவன் -கண் பார்த்தும் பாராதவனாகவே இருக்கிறான்
வண்டு படி துளப மார்பனிடைச் செய்த பிழை –
தேன் பருகுவதற்காக வண்டுகள் படிந்துள்ள திருத்துழாய் மாலையை மார்பில் அணிந்திருக்கும் இறைவனிடம்
செய்த குற்றங்கள் என்று பொருள்.
இப்பொழுது மார்பின் அழகை அடைமொழி கொடுத்துச் சொன்னதின் கருத்து
தன் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த பக்தர்களைத் தன் அழகின் இன்பத்தை நுகர்விப்பதற்காக
எப்பொழுதும் தன்னை அழகு படக் காட்டிக் கொண்டிருப்பவன்
புகுந்த பிறகு குற்றம் எதையும் செய்யமாட்டார்கள்.
அவர்களையும் அறியாமல் ஏதேனும் குற்றம் செய்ய நேர்ந்துவிட்டால் அத்தகைய குற்றங்களைப் பாராமலேயே இருந்து விடுவான்.
இக்கருத்தை உணர்த்துவதற்காகவே
திருத்துழாய் மாலையை அணிந்து கொண்டு அவ்வழகைக் காட்டிக் கொண்டிருக்கிறான்
என்று குறிப்பாக உணர்த்தப்படுகிறது.
உண்டு பல வென்று –
சரணாகதி பண்ணி யிருந்தாலும் ஐம்பொறிகள் அடங்கிய உடலோடு இருக்கையில்
அவ் வுடல் தீய காரியங்களைச் செய்வதற்கு ஏதுவாகயிருக்கும்.
“உரன் என்னும் தோட்டியால் ஓர் ஐந்தும் காப்பான்” என்ற திருக்குறளில்
ஐம்பொறிகளையும் யானையாகவும்
மனதை அவற்றை அடங்கும் அங்குசமாகவும் கூறியிருப்பதால்
ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்வது மிகவும் அரிது என்று தோன்றுகிறது.
மேலும் “ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்” என்றும்
‘உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி’ என்னும் சொல்லப்பட்ட ஆழ்வார்கள் பாடலாலும் உணரலாம்.
ஆக
அடக்கரும் புலன்கள் ஐந்து அடக்கி, வாழ்வது அரிதலால்
குற்றங்கள் பலவும் புகுகின்ற குற்றங்களை நினைத்து உள்ளம் தளர்கின்ற பொழுது.
உளம் தளரேல் –
அவ்வுள்ளத்தை நோக்கி ‘ஏ நெஞ்சே தளர வேண்டாம்’ என்று தேற்றுவதாயிருக்கிறது.
உளம் – உள்ளம். இங்கு மகர ஈறு விளி வேற்றுமையில் வந்தது. ‘உள்ளமே’ என்றவாறு.
தளராமல் இருப்பதற்கான காரணம் கூறப்படுகிறது மேல் தொடரால்.
தொண்டர் செய்யும் –
தன்னுடைய பக்தர்கள் செய்யும் தொண்டர் என்றதற்கு (சபலர்) உழல்பவர் என்று பொருள் கொண்டு
தன்னிடம் உழல்பவரான பக்தர்கள் என்று பொருள் காட்டப்பட்டுள்ளது.
அல்லது
தனக்கு அடிமைப்பட்டவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
ஆக,
தனக்கு அடிமைப்பட்டவரான தன்னுடைய பக்தர்கள் செய்யும்’ என்று இதற்குப் பொருளாகிறது.
பல்லாயிரம் பிழைகள் –
முக்குண வயப்பட்ட உடல் காரணமாக மதி மயங்கி மனம், மொழி, மெய் என்பவனற்றால்,
தன்னை அறியாமல் நாள் தோறும் செய்யும் பாபங்கள் அளவு கடந்திருக்கின்றனவாதலால்
“அநேகமாயிரம் பிழைகள்” என்று கூறப்படுகிறது.
பிழை – குற்றம் (பாவம்)
ஒரு ஜீவன் அரைக்கணத்தில் செய்யும் பாப பலன்களை பல்லாயிரம் நான்முகக் கடவுள்கள் ஆட்சி செய்யும் காலம்
துய்த்தாலும் கழியாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
அத்தகைய குற்றங்களாவன:-
சாஸ்திரம் விலக்கியவற்றை செய்தல்,
அதாவது
பிறரைத் துன்புறுத்துதல், பிறர் புகழ்பாடல், பிறர் மனையாளை விரும்புதல், பிறர் பொருள் வவ்வல்,
பொய் கூறல், உண்ணக் கூடாதனவற்றை உண்ணுதல் முதலியன ஆகும்.
சாஸ்திரம் விதித்தனவற்றைச் செய்யாமை என்பது பகவானிடம் பிழை செய்தல்.
அதாவது
உயர்ந்த தெய்வத்தை அற்பமான தேவர்களோடு ஒப்பிடுகை. அவனுடைய அவதாரங்களில் குற்றம் சாடுகை,
அர்ச்சா உருவத்தை எடை போட்டுச் சோதித்து ஆராய்ச்சி செய்தல், பூஜை குறைபாடுகள்,
பூஜைக்குரிய பொருள்களை மறைவாகவோ வெளிப்படையாகவோ களவு செய்தல்,
தான் நேரில் களவு செய்யாமல் போனாலும், களவு செய்பவருக்கு உடந்தையாதல்,
அத்தகைய களவுப் பொருட்களை இரந்தோ உரிமையாலோ பெறுதல் முதலான பாபங்கள் தெய்வக் குற்றங்கள் எனப்படும்.
பொருள் இன்பம் முதலியவைகளுக்காக அடியார்களிடம் பகை கொள்ளுதல்
இவ்வாறான பாவங்களும் ‘பிழைபல’ என்றதில் அடங்கும்.
இறை பார்த்திருந்தும் –
எல்லாப் பொருள்களுக்கும் உள்ளிருந்தும் அவற்றின் செயல்களை எப்பொழுதும் கண்டு கொண்டிருப்பவன் இறைவன்.
அத்தகையவன் தொண்டர்கள் செய்யும் பிழைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தாலும்
காணும் கண் இல்லாதவன் போல அவர்களது குற்றங்களைப் பார்த்தும் பார்க்காதது போல் இருப்பான் என்பதாம்.
இங்கு ‘கண்’ என்றது ஞானத்தை.
கண் இல்லாதவன் – என்பதால் ஞானமில்லாதவன் என்று பொருளாகும்.
இதனால் தன் அடியார் செய்யும் குற்றங்களை அறியாதவனாயிருப்பான் என்று பொருளாயிற்று.
இறை என்பதற்குச் சிறிது என்று பொருள் கொண்டு
அடியார்கள் செய்யும் பிழையைச் சிறிதளவு கூட அறிய மாட்டான் என்று கூறலாம்.
இக் கருத்து விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் அறியாதவன் என்ற பொருளில்
“அவிஜ்ஞாதா” என்று கூறப்படுவதைக் காணலாம்.
ஆக,
இறைவன் அடைக்கலம் புகுந்த பிறகு பாபங்களைப் பற்றி அஞ்ச வேண்டியதில்லை.
“இறைவன் தொண்டர்கள் செய்யும் பிழைகள் அறியாமல் இருந்து விடுவான்”.
இக் கருத்துக்கு நூல்கள் கூறுவதே சான்றாகும் என்பதாம்.
—————-
“அடைக்கலம் புகுந்தார் அறியாமல் செய்யும் பிழைகள் அறிய மாட்டான்” என்று
மனதுக்கு ஆறுதல் கூறப்பட்டது கீழ்ப்பாடலில்.
பழைய வினைகளில் ஏதேனும் ஒன்றை எவரேனும் நிரூபித்துக் காட்டினாலும் அதனை இன்பமாகக் கொள்வானேயன்றி
அது குறித்து அடியார்களை இகழ மாட்டான்.
காரணம் அவனுக்கு வத்சலன் என்று பெயர் உள்ளதால் குற்றத்தையும் குணமாகக் கொள்வதே அக்குணமாம்.
அக்குணத்திற்குத் தக்கபடி அடியார்களின் பழைய குற்றங்களையும் குணமாகக் கொள்வதனால்
பழவினகளைப் பற்றியும் கவலை வேண்டாம் என்று உதாரணத்துடன் எடுத்துரைக்கிறது இப்பாடல்.
அற்றம் உரைக்கில் அடைந்தவர் பால் அம்புயை கோன்
குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ -எற்றே தன்
கன்றின் உடம்பின் வழுவன்றோ காதலிப்பது
அன்று அதனை ஈன்று உகந்த வா –25-
பதவுரை:
அற்றம் உரைக்கில்–முடிவாகச் சொல்லில்
அம்புயை கோன் -தாமரை மணாளன்
அடைந்தவர்பால் -தன்னிடம் அடைக்கலம் அடைந்தவரது
குற்றம் -பாபங்களை
உணர்ந்து–அறிந்து (கண்டு கொண்டு)
இகழும் கொள்கையனோ –அவை காரணமாக வெறுக்கும் இயல்புடையவனோ வெறுக்கமாட்டான்
எற்றே –என்ன வியப்பு
ஆ –பசுவானது
தன் கன்றின் –தன் கன்றினுடைய
உடம்பின் –உடம்பிலுள்ள
வழுவன்றோ –கருப்பப்பையின் அழுக்கை
அதனை ஈன்று உகந்து –கன்றை ஈன்று மகிழ்ந்த
அன்று –அப்பொழுது
காதலிப்பது–ஆசையுடன் நாவால் சுவைப்பது
அற்றம் உரைக்கில் –
அற்றம் – முடிவு – முடிவாகச் சொல்லில்.
அதாவது
முடிவான பொருள் இது என்று சொன்னால் (அது இதுவேயாகும்).
அடைந்தவர் பால் –
தன்னை அடைக்கலமாக அடைந்த தொண்டர்கள் இடத்தில்,
அம்புயை கோன் –
திருவின் நாயகன் இலக்குவனுக்கு அண்ணன் என்று இராம பிரானைக் கூறுவது போல,
பால் – ஏழம் வேற்றுமை இடப்பொருள்.
இங்கு ‘அம்புயை கோன்’ என்று
பிராட்டியை முன்னிட்டு இறைவனடியாரை ஏற்றுக் கொள்பவன் என்ற குறிப்புப் புலனாகிறது.
இவ்வாறு பிராட்டிக்காக ஏற்றுக் கொண்டால் பின்பு
என்றைக்கும் அவ்வடியாரிடம் குற்றங்களைக் காணாதவனாகவே இருப்பான் என்று பொருள்.
இவ்வாறு தன் சிபாரிசு பண்ணின அடியவர்களை இறைவன் ஏற்றுக் கொண்டதன் உறுதிப்பாட்டை அறிவதற்காக
பிராட்டி தானே தன் அடியார்களின் குற்றங்களைக் கூறினாலும் இறைவன்
‘என் அடியார் அது செய்யார். செய்தாரேல் நன்று செய்தார்’ என்று கூறுவான்.
இதனால் பிராட்டி சிபாரிசுக்காக அடியரை இறைவன் ஏற்றுக் கொண்டது உறுதியாயிற்று.
பிராட்டியே தன் அடியாரது குற்றத்தைச் சொன்னாலும் அதை ஏற்க மறுத்து
‘என் அடியார்கள் குற்றங்களே செய்ய மாட்டார்கள்’ அப்படிச் செய்ததாகச் சொன்னாலும் அதை நான் குற்றமாக ஏற்க மாட்டேன்.
அதை நல்லாதாகவே நான் ஏற்றுக் கொள்வேன் என்று பகவானுக்கும் பிராட்டிக்கும் நடக்கும் உரையாடலைக் கொண்டு
இவ் வுண்மையை அறியலாம். பெரியாழ்வார் பாடலில் இக்கருத்து இங்கு ஒப்பு நோக்கற்குரியது (தன்னடியார் திறத்தகத்து).
குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ –
அடியவரின் குற்றங்களைக் குறித்து அது காரணமாக அவர்களை வெறுக்கும் இயல்பை உடையவனோ
அத்தகையவன் இல்லை என்பதாம்.
கொள்கை – இயல்பு (சுபாவம்) என்பதாம்.
பிராட்டி சிபாரிசு பண்ண அதனால் அத் தொண்டரை ஏற்றுக் கொள்பவன் என்பது கருத்து.
பகவான் அடியாரின் குற்றங்களைப் பற்றி அறியவே மாட்டான்.
ஒருகால் குற்றத்தை பிராட்டியே உணர்த்தினாலும் அடியாரது குற்றத்தை இன்பமாக ஏற்பானேயொழிய
அதைக் குறியிட்டு அவர்களை ஒருபோதும் வெறுக்க மாட்டான். இதுவே அவனுடைய இயல்பு என்பதாம்.
இவ்வாறான இயல்புக்கே வாத்சல்ய குணம் என்று பெயர்.
இக்குணத்தைக் குறித்து ‘வாத்சலன்’ என்று இறைவன் சொல்லப்படலானான்.
அடியாரது குற்றத்தையும் குணமாகக் கொள்பவன் என்று இதற்குப் பொருள்.
‘வத்ஸலம்’ என்றால் அப்பொழுது ஈன்ற கன்று அதனிடத்தில் தாய்ப் பசுவுக்குண்டான அன்பு வாத்ஸல்யம்,
அதையுடைய வத்ஸலன். குற்றத்தையும் குணமாகக் கொள்ளும் இயல்பு எங்கேனும் கண்டதுண்டோ என்று வினவினால்
அதற்கு உதாரணத்துடன் பதில் கூறப்படுகிறது மேல் தொடரால்.
எற்றே தன் கன்றினுடம்பின் வழுவன்றோ காதலிப்பது அன்று அதனையீன்று உகந்த ஆ:-
எற்றே – என்னே! வியப்பைக் குறிக்கும் இடைச்சொல்.
இறைவனுடைய வாத்சல்ய குணத்தின் பொருளை அறியாதாரன்றோ! ‘குற்றம் கண்டு இகழ்வான்’ என்று நினைப்பார்.
இப்படியும் நினைப்பார் உண்டோ என்று வருந்தி ஐயோ! (எற்றே) என்று ஆசிரியர் இரங்குகிறார்.
இதற்கு ஒரு உதாரணமும் மேல் தொடரால் காட்டப்படுகிறது.
(சுவடுபட்ட தரையில்) கால் மிதிபட்ட தரையில் புல் கவ்வாத பசு தன் கர்ப்ப பையிலிருந்து பூமியில் விழுந்த
தன் கன்றினுடைய உடம்பின் வழுவழுப்பை அல்லவா சுவைத்து பூசிக்கிறது.
‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்’ என்பது போல,
அப்பொழுது அதைப் பெற்ற அன்பினால் அதனிடம் நேசத்தைக் காட்டுகிறதல்லவா அப்பசு.
இது போன்று தன்னிடம் அடைக்கலம் புகுந்தவனது குற்றத்தையும் குணமாகக் கொண்டு அவனை ஏற்றுக் கொள்வான்.
பகவான் ஒரு போதும் வெறுக்க மாட்டான் என்று கருத்து உணர வேண்டும்.
இறைவனுடைய ‘வாத்ஸல்யம்’ என்னும் குணத்தை விளக்குகையில், இவ்வுதாரணத்தையே உரையாசிரியர்கள்
அனைவரும் எடுத்துரைக்கிறார்கள். வத்ஸம் – கன்று. கன்றினிடத்தில் தாய் பசு கொண்டுள்ள நேசம் (அன்பு) வாத்ஸல்யம் எனப்படும்.
அதை உடையவர் வத்ஸலர். இத்தகைய அன்பு இறைவன் ஒருவனிடமே காணத் தக்கதன்றி உலகில் காண இயலாது.
ஆகவே, இப்பண்பு தெய்வீகமானது என்று உணரலாகும்.
இப் பண்பின் சிறப்பை நோக்கி ‘எற்றே’ என்று வியந்து கூறப்பட்டதாம்.
——–
சரணாகதி என்பது இறைவனாலே சொல்லப்பட்ட நெறியாகும்.
திருவள்ளுவர், ‘பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி’ என்று கூறினார்.
இங்கு ‘ஐந்தவித்தானாகிற இறைவனால் சொல்லப்பட்ட உண்மையான ஒழுக்க நெறி’ என்று பொருள் கூறப்பட்டது.
இதையே ‘பற்றற்றான் பற்றினை என்ற திருக்குறளிலும் இறைவன் ஓதிய வீட்டு நெறி’ என்று கூறப்பட்டது.
அதுவே இங்கு சரணாகதி (அடைக்கலம் புகுதல்) என்று கூறப்படுகிறது.
இறைவனுடைய திருவடிகளில் அடைக்கலம் புகுவதான சரணாகதி என்பது குருவின் துணை கொண்டு செய்ய வேண்டிய ஒன்றாகும்.
சரணாகதியின் ஆழ் பொருள்களை எல்லாம் குருவினிடமிருந்து அறிந்து கொண்ட பின் அதில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள்,
‘வீட்டு உலகத்தில் சென்று அங்கு இறைத் தொண்டிலே ஊன்றி இருப்பார்கள்’ என்ற கருத்து இப் பாடலில் சொல்லப் படுகிறது.
தப்பில் குருவருளால் தாமரையாள் நாயகன் தன்
ஒப்பில் அடிகள் நமக்கு உள்ளது -வைப்பு என்று
தேறி இருப்பார்கள் தேசு பொலி வைகுந்தத்து
ஏறி இருப்பார் பணிகட்கு ஏய்ந்து–26-
பதவுரை:-
தப்பு இல்–அறிவு ஒழுக்கங்களில் ஒரு குறைதலுமில்லாத
குரு -குருவினுடைய
அருளால்–நல்லருளால்
தாமரையாள் நாயகன் –தன் திருவின் மணாளனான இறைவனுடைய
ஒப்பில் –உவமை யில்லாத
அடிகள் –திருவடிகள்
நமக்கு –அறிவு ஆற்றலில்லாத நமக்கு
உள்ளத்து இதயத்தில் இருக்கும்
‘வைப்பு’ என்று சேமநிதி என்று
தேறியிருப்பார்கள்–நம்பியிருக்குமவர்கள்
தேசுபொலி–ஒளிமிக்குயிருக்கிற
வைகுந்தத்து–வீட்டுலகத்தில்
ஏறி–அதற்கான வழியிலே சென்றடைந்து
பணிகட்கு–அங்கு செய்யும் இறைத் தொண்டுகளுக்கு
ஏய்ந்திருப்பார் –பொருத்தமுடைய அடியராயிருப்பார்
தப்பில் குருவருளால் –
தவறு இழைக்காத குருவினுடைய அருளாலே.
அதாவது,
கற்க – அதற்குத் தக நிற்க’ என்று கூறியவாறு
அறிவு ஒழுக்கங்களினுடைய அருளால் என்றவாறு.
தாமரையாள் நாயகன் தன் –
திருவின் மணாளனுடைய என்று பொருள்.
இதனால், “த்வய மந்திரத்தின்” முற்கூற்றில் சொல்லப்பட்ட ஸ்ரீமன் என்ற சொல்லிலும்
நாராயண என்ற சொல்லிலும் கூறப்பட்ட பொருள்கள் இங்கு உணர்த்தப்படுகின்றன.
தாமரையாள் நாயகன் என்ற தொடரில் பிராட்டியோடு சேர்ந்துள்ள பிரியா உடன் உறைதலைக் குறிக்கிறது.
இது ‘ஸ்ரீமன்’ என்றதன் பொருளும்
‘நாயகன் தன்’ என்கிறதில் நாராயண பதத்தின் பொருளும் அடங்கி உள்ளன.
அவை அடியவரை ஆதரிக்கும் பண்புகளாம்.
அவையாவன.
அடைக்கலம் புகவருகின்ற அடியார்களுக்கு உதவியாக இருப்பனவான
வாத்சல்யம், ஸ்வாமித்வம், சௌசீல்யம், சௌலப்யம் என்று சொல்லப்படும் நான்கு குணங்களும்,
அடைக்கலம் புகுந்த பிறகு அவர்கள் காரியம் செய்வதற்கு ஏற்றதான
ஞானமும், சக்தி (அறிவும், ஆற்றலும்) ஆகிய இரண்டு குணங்களும் மற்றும் ப்ராப்தி, பூர்த்தி என்பனவும் அடங்கும்.
நாயகன் தன் என்ற இதில்
‘ நாராயண’ என்ற சொல்லில் கூறப்படும் பொருள்கள் குறிப்பாகக் கூறப்பட்டுள்ளன.
ஒப்பிலடிகள் –
ஒப்பற்ற திருவடிகள்.
இதனால்
த்வய மந்திரத்தில் சொல்லப்பட்ட ‘சரணௌ’ என்ற சொல்லின் பொருள் சொல்லப்படுகிறது.
திருவடிகளுக்கு ஒப்பற்ற தன்மையாவது அடியவர்க்கு அருள் செய்யும் போது
எந்த உதவியையும் அவரிடம் எதிர்பாராமல் செய்யும் தனி ஆற்றலைக் குறிக்கிறது.
நமக்கு உள்ளத்து வைப்பென்று –
அடியவர்களான நமக்கு. பகவானுடைய அருள் பெறுவதற்கு எந்த ஆன்மாவுக்கும் வேறு புகலுமில்லை.
வேறு வழியுமில்லை என்பது சாஸ்திர உண்மை.
உண்மை உணர்வுடைய நமக்கு. இதயத்தில் இருக்கும் திருவடிகளே வைப்பு நிதி (சேமநிதி) ஆகும் என்று பொருள்.
இதனால் த்வய மந்திரத்திலுள்ள ‘சரணௌ’ என்ற சொல்லிலும்,
‘ப்ரபத்தி’ யே என்ற சொல்லிலும் சொல்லப்பட்ட பொருள்கள் கூறப்படுகின்றன. எவ்வாறு எனில் ?
ஒருவரிடம் வைப்பு நிதி இருந்தால் அதைக்கொண்டு எல்லாக் காரியங்களையும் சாதித்துக் கொள்ளலாம்.
அதுபோல இறைவனது திருவடிகளை, “அதுவே நமக்கு தஞ்சம்” என்று பற்றிக்கொண்டு
இதயத்தில் தியானித்தால் எதையும் சாதிக்கலாம்.
ஆகவே திருவடிகளை சேமநிதியாகக் கூறுவதில் எவ்விதக் குறையுமில்லை.
இறைவன் திருவடிகளைப் பற்றுவது மனதினால் ஆகையால் இதற்கு மானச சுவீகாரம் என்று பெயர்.
அதாவது
மனதினால் பற்றுதல் என்று பொருள்.
இவ்வாறு மனதில் எண்ணி
தேறியிருப்பார்கள் –
உறுதியாய் நம்பி இருப்பவர்கள் என்றவாறு.
திருவடியே தஞ்சம் என்று அத்திருவடியை உள்ளத்தில் வைத்து தியானத்தாலும் நம்பிக்கை வருவது அரிதாகும்.
ஆகவே, “அத்திருவடிகளையே தஞ்சமாக நம்பியிருப்பவர்கள் என்று பெயர்.
சரணாகதி பண்ணினவனுக்கு இறுதிவரை இந்த நம்பிக்கையே கைம்முதலாக இருக்க வேண்டியதொன்று.
நம்பிக்கை குலைந்தால் வீடு பேறு இல்லையாகி விடும்.
நம்பிக்கை குலையாதவர்களைத் ‘தேறியிருப்பார்கள்’ என்று இங்கு சொல்லப்படுகிறது.
அத்தகையவர்களுக்குக் கிடைக்கும் பயன் சொல்லப்படுகிறது மேல்.
தேசு பொலி வைகுந்தத்து ஏறி –
அதாவது
‘அந்தமில் பேரின்பத்து அழிவில் வீடு’ என்று
சொல்லப்படுகிற ஒளி மிகுந்த ஸ்ரீவைகுண்டத்தில் போய் என்று இதற்குப் பொருள்.
ஸ்ரீவைகுண்டமாகிற அத்திருநாடு பேரின்பத்தை நுகர்வதற்கும்
இறைவன் உகந்த தொண்டுகள் செய்வதற்கும் ஏற்ற இடமாகும் என்பதாம்.
இருப்பார் பணிகட்கேய்ந்து –
அங்கு போய்ப் பணிகளுக்கு ஏய்ந்திருப்பார். இறைத் தொண்டுகளுக்குத் தகுந்திருப்பார் என்று பொருள்.
‘பணிகள்’ என்றது இறைவனுக்குச் செய்யும் தொண்டுகளாகும்.
அதற்கு ஏய்ந்து இருக்கையாவது தகுதியுடைய அடியார்களாய் இருக்கை.
இருப்பார் என்றது இருப்பார்கள் என்றிவ்வாறு சொற்பொருள் காணலாம்.
இவ்வாறன்றி ‘பணி என்று
ஆதிசேஷனான திருவனந்தாழ்வானுக்குப் பெயராகக் கொண்டு
திருவனந்தாழ்வானுக்கு ஒப்பாய் இருப்பார் என்றும் பொருள் காணலாம்.
அதாவது
திருவனந்தாழ்வான் பரமபதநாதனாக பகவானுக்கு,
‘சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம், நீள் கடலுள்
என்றும் புனையாம் மணி விளக்காம், பூம் பட்டாம், புல்கும் அணையாம் திருமாற்கு அரவு’ என்று
சொல்லியபடி எல்லாத் தொண்டுகளிலும் தேர்ந்து இருக்குமாப் போல
இவர்களும் எல்லாத் தொண்டுகளிலும் செயல்படுபவர்களாய் இருப்பர் என்று பொருள்.
————–
ஆன்ம நலனுக்கு வழி அறியாதவரும் ஆன்ம நலனை உபதேசிக்கும் குருவைச் சேராதவரும்
கண்ணபிரான் சொன்ன கீதைப் பேருரையில் சொன்ன ‘சரணாகதி’ நெறியில் நம்பிக்கையில்லாதவர்களும்
வீடு பேற்றை அடைய மாட்டார்கள்.
பிறவிப் பெருங்கடலாகிற துன்பக்கடலுள் அழுந்தினராய்
பல பிறப்புக்களையும் எடுத்து உழன்று வருவார்கள் என்று கூறுகிறது இப்பாடல்.
நெறி அறியா தாரும் அறிந்தவர் பால் சென்று
செறிதல் செய்யாத் தீ மனத்தர் தாமும் -இறை யுரையைத்
தேறாதவரும் திரு மடந்தை கோன் உலகத்
தேறார் இடர் அழுந்துவார் –27-
பதவுரை:-
நெறி -உபாயம்
அறியாதாரும்–அறிந்து கொள்ளாதவரும்
அறிந்தவர்பால் சென்று–வழி அறிந்தவர்களான குருவிடம் சென்று
செறிதல் செய்யா பணிவுடையவராய் –வணங்கித் தொழுது குருவை மகிழ்விக்காத
தீமனத்தர் தாமும் –தீ மனம் உடையவர்களும்
திருமடந்தை கோன் உலகத்து–இலக்குமி நாதனுக்குச் சொந்தமான ஸ்ரீவைகுந்தத்தை
ஏறார்–அடைய மாட்டார்கள்
இடர்–பிறவிப் பெருங்கடலாகிற துன்பத்தில்
அழுந்துவார்–முழுகித் தவிப்பார்கள்
நெறியறியாதாரும் –
“மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” சுழன்று வரும் பிறவிச் சுழற்சியிலிருந்து தப்பிக்கும் வழி தெரியாதவரும்.
நெறி – வழி. இது தப்பிவிக்கும் உபாயத்தை காட்டுகிறது.
அது தெரியாதவர்.
அறிந்தவர் பால் சென்று செறிதல் செய்யாத் தீ மனத்தர் தாமும் –
பிறவிப் பெருங்கடலைக் கடத்தி விடும் வழி அறிந்த ஆசார்யர்களிடம் சென்று சேராதவர்கள் மேலும்
தங்களுக்கு அவ்வழியை உபதேசிக்க ஏதுவாக
அவர்கள் மனம் இரங்கும் வண்ணம் பணிதல்,
அடி வீழ்தல் வழியைச் சொல்லும்படி வினாவுதல்
மற்றும் அவர்கள் சொல்லும் பணியைச் செய்தல் முதலியன செய்து நெருங்கிப் பழகாமல்,
அப் பெரியோர்களை நம்மைப் போன்ற மனிதர்களாகக் குறைவாக எண்ணி
அவர்களிடம் குற்றங்களைக் கண்டு கொண்டிருக்கும் தீயமனம் உடையவர்களும்.
இறை உரையைத் தேறாதவரும் –
எல்லா உயிர்களையும் உள்ளிருந்து நடத்துபவனும் கீதையாகிற உபநிஷத்தை
ஆசார்யனாய் நின்று உபதேசித்தவனும்
அதாவது
எல்லா ஆன்மாக்களும் வீடு பேற்றை அடைவதற்கு உபயோகமாக அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு
அருளிச் செய்த கீதையின் 18ம் அத்தியாயத்தில் கடைசியாகச் சொல்லப்பட்ட
“சரணாகதி நெறியில்” நம்பிக்கை இல்லாதவர்களும்.
திருமடந்தை கோன் உலகத்து ஏறார் –
திருமால் வைகுந்தம் என்று சொன்னபடி திருமகள் நாயகனுடைய உலகமான ஸ்ரீவைகுண்டத்திற்குச் செல்லமாட்டார்கள்.
இடர் அழுந்துவார் –
பிறவிப் பெருங்கடலில் பிறவியாகிற துன்பத்தில் முழுகித் தவிப்பார்கள் என்பதாம்.
—————–
கீழே சொன்ன “தப்பில் குருவருளால்” என்ற பாடலில் வீட்டுலகத்தை அடைபவர்
ஆசார்யன் காட்டிக் கொடுத்த சரணாகதியின் பொருளை உள்ளத்திலே இருத்தி
அவ்வழியில் வீடு பேறு அடைவர் என்றும்
“நெறி அறியாதார்” என்ற அடுத்த பாடலில் சரணாகதியை குரு முகமாக அறியாதவரும்
கீதையில் சொன்ன கண்ணன் வார்த்தையில் நம்பிக்கை இல்லாதவரும் வீடு பேறு அடையமாட்டார்கள்,
பிறவிப்பிணியில் அழுந்தி துன்புறுவர் என்றும்
இவ்விரண்டு பாடல்களினால் வீடு செல்வாரது நிலையம் வீடு செல்லமாட்டாதார் நிலையம் உரைக்கபட்டன.
இனி இப்பாடலில் வீடு பேறு அடைவார்க்குச் சொல்லப்பட்ட நல்வழியான சரணாகதியின் உண்மைகள் கூறப்படுகின்றன.
“சரணாகதி” என்பது பிராட்டியோடு கூடிய பகவானுடைய திருவடிகளில்
“உன் திருவடிகளே சரணம் எனக்கு தஞ்சம் வேறு புகல் இல்லை” என்று அடி வீழ்ந்து வேண்டுவது.
“ஊழி வினைக்குறும்பர்” என்ற 23 ஆம் பாடலில் சரணாகதி பற்றிச் சொல்லப்பட்டது (அதை இங்கு நினைவு கூர்க).
இவ்வாறு பகவான் திருவடிகளே தஞ்சம் என்று அடைந்த பிறகு இப் பற்றுதல் நம் சேமத்திற்கு
போதுமோ போதாதோ என்று மனதில் சஞ்சலம் பிறந்து உறுதி நிலை ஏற்படாமல்
தன் முயற்சியில் வேறு வேறு புண்ணியங்களையும் செய்வானே யானால் பகவான்
இவன் செய்த சரணாகதியை மதிக்கமாட்டான், கை விட்டு விடுவான்,
நெறி இவனை கை விட்டு விடும் என்கிற சரணாகதியின் சிறப்பு தக்க உதாரணத்துடன் இதில் எடுத்துறைக்கபடுகிறது.
சரணாகதி மற்றோர் சாதனத்தைப் பற்றில்
அரணாகாது அஞ்சனை தன் சேயை -முரண் அழியக்
கட்டியது வேறோர் கயிறு கொண்டு ஆர்ப்பதன் முன்
விட்ட படை போல் விடும் –28-
பதவுரை:
சரணாகதி–பகவான் திருவடிகளில் நம்பிக்கையுடன் செய்யும் அடைக்கலம்
மற்றோர் சாதனத்தை–அடைக்கலத்தில் நம்பிக்கை குறைந்து தன்னால் செய்யப்படும் வேறு வேறு முயற்சிகளை
பற்றில் –தனக்கு பலன் கொடுக்கும் புண்ணியமாகக் கருதினால்
அரணாகாது–முதலில் செய்கிற அடைகலமாகிற சரணாகதி இவனைக்காவாது விட்டு விடும்
அஞ்சனை தன் சேயை –அஞ்சனை தேவியின் மகனான அனுமனை
முரண் அழிய –அவனது பலம் தொலையும்படி
கட்டியது –இந்திரஜித்தாகிற அரக்கனாலே கட்டப்பட்ட பிரம்மாஸ்திரமான ஆயுதம்
வேறோர் கயிறு கொண்டு –பிரம்மாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் வேறு வேறு சணல் கயிறு முதலிய கயிறுகளை (முயற்சிகளைக்) கொண்டு
ஆர்ப்பதன் முன் –கட்டும் பொழுதே
விட்ட படைபோல் –அனுமனை கட்டிலிருந்து விட்ட பிரம்மாஸ்திரம் போல
விடும் –சரணாகதி இவனைக்காவாது கை விட்டு விடும்
பகவானை அடைவதற்கு சாஸ்திரங்கள் பல புண்ணியங்களைச் சொல்லியிருகின்றன.
அவற்றுள் “சரணாகதி” என்ற ஒரே புண்ணியம் தான் பகவானை அடைவதற்கு சரியான புண்ணியமாகும்.
வேறு வேறு புண்ணியங்கள் எல்லாம் ஒருவரால் செய்யப்படும்போது உண்டாகிறது.
செய்யாதபோது அவைகள் இருப்பதில்லை.
சரணாகதி என்ற புண்ணியம் மற்ற புண்ணியங்கள் போல் ஒரு காலத்தில் உண்டாவதோ
ஒரு காலத்தில் இல்லாமல் போவதோ இல்லை. எப்பொழுதும் தயாராக இருந்து கொண்டிருகிறது.
மேலும் பகவனாகிய புண்ணியம் அறிவு ஆற்றல் முதலிய சிறப்புகளைக் கொண்டது.
இத்தன்மை மற்ற புண்ணியங்களுக்கு இல்லை.
அனைத்து புண்ணியங்களின் உருவமாய் இருப்பதால் சாஸ்திரம் ஆகுமென்றும் சொல்லப்பட்டுள்ளது.
அதாவது
தன்னையே நம்பித் தன் திருவடிகளைப் பற்றுவார்களுக்கு தானே புண்ணியமாக இருந்து அருள் செய்கிறான் என்று கருத்து.
இத்தகைய பகவானாகிற புண்ணியத்தை நீயே எனக்கு வேறில்லை என்று சொல்லி
அவன் திருவடிகளில் தலை சாய்ப்பதே சரணாகதி என்று சொல்லப்படுகிறது.
இதுவே “அடைக்கலம்” எனப்படும் இதற்க்கு நம்பிக்கை என்பது மிகவும் அவசியமாகும்.
இந்த நம்பிக்கையை “மகா விசுவாசம்” என்றும் “அத்யாவசாயம்” என்றும் சாஸ்திரம் கூறும்.
மகா விசுவாசமாகிற நம்பிக்கை குறைந்தால் பகவானாகிற புண்ணியம் பலன் அளிக்காது.
மேலும் இதனைச் செய்பவன் “யான்” “எனது” என்னும் செருக்குகளை அறவே விட்டவனாகவும் இருக்க வேண்டும்.
தன்னை வறியவனாகவும் துணை அற்றவனாகவும் உணர வேண்டும்.
இவற்றை உடையவனே சரணகதி செய்து கொள்வதற்கு தகுதி உடையவனாவான்.
இதையே “புகலொன்றில்லா அடியேன்” என்று கூறினார் ஆழ்வார்.
இம்மை வாழ்வில் வேதனைப்பட்டு உடனடியாக இறைவனை அடையவேண்டும் என்ற நோக்குடன்
இறைவன் அடி வீழ்ந்தால் அப்பொழுதே அவனுக்கு வீடு பேறு கிடைக்குமென்றும் கீழே கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு நுல்கள் சரணாகதி பற்றி விளக்கி உள்ளன.
மற்றோர் சாதனத்தைப் பற்றில்:
சரணாகதியின் சிறப்பை அறிந்து இதுவே நமக்கு தஞ்சமென்று நம்பிக்கைக் கொண்டு அடைக்கலம் புகுந்தபின்
இறுதிவரை இக்குறிகோளில் இல்லாமல் “இதுக்குத் துணையாக நாமும் சில செய்வோம்” என்று
தன் முயற்சியால் செய்யப்படும் எதாவது ஒன்றைச் செய்தால் அது அரணாகாது.
இவன் செய்த சரணாகதி இவனுக்கு துணை நில்லாமல் இவனை கை விட்டுப் போய்விடும்.
ஆகவே பகவானிடம் சரணகதி செய்தவன் ஒரே நம்பிக்கையில் இருக்க வேண்டுமேயொழிய
சரணாகதியில் அவநம்பிக்கை கொண்டு வேறு வேறு புண்ணியங்கள் செய்யக் கூடாது.
ஏதாவது செய்தால் சரணாகதி பலிக்காது என்று கருத்து.
இதற்க்கு உதாரணமாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
அஞ்சனை தன் சேயை:
அஞ்சனாதேவியின் புதல்வனான அனுமனை
முரண் அழியக்கட்டியது:
முரண்: பலம்; அது அழியும்படி கட்டின பிரம்மாஸ்திரம்
வேறோர் கயிறு கொண்டார்பதன்முன்:
அதனிடம் அவநம்பிக்கை வைத்து வேறு ஒரு சணல் கயிற்றைக்கொண்டு
கட்டுவதற்குத் தொடங்கும் பொழுதே (ஆர்த்தல் – கட்டுதல்)
விட்ட படைபோல் விடும்:
விட்டுப் போன பிரம்மாஸ்திரம் போல சரணாகதி இவனை விட்டு விடும் என்பதாம்
இராமாயணத்தில் அனுமன் இராம தூதனாக இலங்கை சென்ற போது அசோகவனத்தை முறித்து பாழ் படுத்தினான்.
இராவணன் புதல்வனான இந்திரஜித் அனுமனோடு போர் புரிந்து பிரம்மாச்திரதினால் அவனைக் கட்டினான்.
அனுமன் செய்த வீரச் செயல்களும் அரக்கர்கள் பலர் அவனால் அழிக்கப்பட்டதையும் கண்டு பயந்து,
“இவனைக் கட்டுவதற்கு ப்ரஹ்மாச்த்ரதுக்கு வலி போதுமோ?” என்று
பிரம்மாஸ்திரத்தை குறித்து அவநம்பிக்கை கொண்டான். அதனால், சணல் கயிறுகளைக் கொண்டு வந்து கட்டினான்.
கட்டும் போது பிரம்மாஸ்திரம் அனுமனை விட்டு விட்டது. இது போல பகவானிடம் சரணாகதி பண்ணின பிறகு
சரணாகதியில் அவநம்பிக்கை வைத்து வேறு வேறு புண்ணியங்களையும் முயன்று செய்வானே யானால்
முன்னம் பண்ணிய சரணாகதி பலனை அளிகாது அவனை விட்டு விடும் கை விட்டு விடும் என்பதாகும்.
சரணாகதிக்கு பிரம்மாஸ்திரமும் வேறு புண்ணியங்களுக்கு சணல் கயிறும் இங்கு எடுதுக்காட்டாகும்.
———–
எட்டெழுத்து மந்திரமான திருமந்திரத்திலும்
அம் மந்திரத்தை உபதேசித்த குருவினிடத்திலும்
மந்திரத்திற்கு பொருளான பகவானிடத்திலும்
ஆக இம்மூன்றினுடையவும் அருளுக்கு எப்பொழுதும் இலக்காயிருப்பவர்கள்
பிறவித் துன்பத்திலிருந்து விரைவில் விடுபடுவர் என்கிறது இப் பாடல்
மந்த்ரமும் ஈந்த குருவும் அம் மந்திரத்தால்
சிந்தனை செய்கின்ற திருமாலும் -நந்தலிலா
தென்று மருள் புரிவர் யாவரவரிடரை
வென்று கடிதடைவர் வீடு –29-
பதவுரை:
மந்திரமும்–திருமந்திரமும்
ஈந்த குருவும்–அம் மந்திரத்தை உபதேசித்த ஆச்சர்யரும்
அம் மந்திரத்தால் –அத் திருமந்திரதால்
சிந்தனை செய்கின்ற–மனனம் செய்கின்ற
திருமாலும்–ஸ்ரீமன் நாராயணனும்
நந்தலிலாது–(இடைவிடாமல்) – கேடில்லாமல்
என்றும் –எப்பொழுதும் (செய்யும்)
அருள் புரிவர்–அருளுக்கு இலக்காவார்
யாவர்–யாவரோ
அவர்–அவர்களே
இடரை வென்று–பிறவித் துன்பத்தை வெற்றி கண்டு
கடிது–விரைவில்
வீடு அடைவர்–வீடு பேற்றை அடைவார்கள்
மந்திரமும்:
தன்னை உருச்சொல்பவரைக் காப்பாற்றுவது மந்திரமாகும்.
உருவாவது திரும்பத் திரும்பச் சொல்லுவது.
ஆர்வத்துடன் சொல்லுவதும் ஆகும்.
இங்கு “மந்திரம்” என்று சொன்னது எட்டுழுத்தைக் கொண்ட திருமந்திரமாகும்.
“எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்லார் வானம் அளவே” என்பர் திருமழிசைப்பிரான்.
ஈந்த குருவும்:
அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனும்
அம் மந்திரத்தால் சிந்தனை செய்கின்ற திருமாலும்:
அம் மந்திரத்திற்குப் பொருளாய் மனனம் செய்யப்படுகின்ற ஸ்ரீமன் நாராயணன் ஆகிய மூவரும்.
நந்தலிலாது:
நந்துதல் – கேடு
அது இல்லை என்றது. தடையில்லாமல் என்று பொருள்.
என்றும் அருள் புரிவர் யாவர்:
எல்லாக் காலத்திலும் அருள் செய்யும் போது அதற்கு இலக்காய் இருப்பார் யாவர் சிலரோ
அவர் இடரை வென்று கடிதடைவர் வீடு:
அம்மூவரது அருளுக்கும் இலக்காயிருப்பவர் பிறவித்துன்பத்தை வென்று
விரைவில் அந்தமில் பேரின்பத்து அழிவில் விட்டுலகத்தை அடைவார்கள்.
இக்கருத்தை முமூக்ஷுபடியில்
“மந்திரத்திலும் மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்திரப்ரதனான ஆசார்யன் பக்கலிலும்
ப்ரேமம் கணக்க உண்டானால் கார்ய கரமாவது” என்று கூறியதை ஒப்பு நோக்குக.
—————–
தனக்குத் தேவையான அதாவது இம்மை மறுமைகளுக்கான பொருட்கள் எல்லாம்
‘திருவட்டாட்சர மந்திரத்தை (எட்டெழுத்து மந்திரத்தை) உபதேசித்த ஆசார்யனே என்று
குறிக்கோள் இல்லாதவர்களோடு கொண்டுள்ள உறவை அறவே விடுகை
சாஸ்திரக் கட்டளையாகும் என்கிறது இப்பாடல்.
மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் செம் நெறியும் –பீடுடைய
எட்டு எழுத்தும் தந்தவனே என்று இராதார் உறவை
விட்டிடுகை கண்டீர் விதி –30-
பதவுரை :
மாடும்–பாலைக்கொடுக்கும் பசுக்களும்
மனையும்–இன்ப நுகர்ச்சிக்கு இடமான வீடும்
கிளையும்–உறவினர்களும்
மறை முனிவர் தேடும்–வேதம் பயின்ற முனிவர்கள் நாடுகின்ற
உயர் வீடும்–மேலான வீட்டுலகமும்
சென்னெறியும்–அவ் வீட்டுலகத்தை அடைவிக்கும் அர்ச்சிராதி வழியும் எல்லாம்
பீடுடைய –பெருமையுடைய
எட்டெழுத்தும்–பெரிய திருமந்திரத்தை (அஷ்டாக்ஷர) மகா மந்திரத்தை
தந்தவனே–உபதேசித்த ஆசார்யனே
என்று இராதார்–என்று குறிக்கோள் இலாதாரின்
உறவை –தொடர்பை
விட்டிடுகை–சேராதபடி விட்டிடுகை
விதி–சாஸ்திரக் கட்டளையாகும்
கண்டீர் –காணுங்கோள் (நன்றாக அறிவீர்களாக)
மாடும்:
தனக்குச் சுவையான பால், தயிர் முதலிய சத்துணவுகளை கொடுப்பவை என்றதால்
பேணப்படும் கறவைகளும் (செல்வமும்)
மனையும்:
இன்ப நுகர்ச்சிக்கு (ஏதுவான) அடிப்படையான வீடும் கிளையும்:
கூடியிருந்து குளிர்தலே ஆனந்தம் என்றிருக்கும் உறவினர்களும்
இங்குச் சொன்ன இவை
மற்றும் இம்மை சுகத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களுக்கும் குறிப்பாகும்.
மறை முனிவர்:
வேத விற்பன்னர்களான பெரியோர்கள்
அதாவது
எப்பொழுதும் பகவானை மனதிலே எண்ணிக் கொண்டிருப்பவர்கள்
தேடும் உயர் வீடும்:
இதுவே நமக்கு அடையத் தகுந்தது என்று விரும்பி நாடி நிற்கும்.
இங்கு உயர் வீடு என்றதால் தாழ்வான வீடு ஒன்றுண்டு என்று குறிக்கப்படுகிறது.
அது கைவல்யம் எனப்படும்.
அது தன்னை தானே அனுபவித்தலாகும். அது தாழ்வான மோக்ஷம் என்று அறிவாளிகள் கூறுவர்.
அதனால் அதை கழித்து உயர்வீடி என்று “வைகுந்த வான் போகம் ” இங்கு கூறப்படுகிறது.
சிறப்பாக கூறப்படும் வைகுந்தத்தை அடைதலாகிற மோக்ஷமும் சென்நெறியும்
அந்த மோட்ஷத்தை அடைவதற்கு வழியாக சொல்லப்படும் அர்ச்சிராதி வழிகளும் அல்லது
மோட்ஷத்தை அடைவதற்கு காரணமான சாதனங்களும் புண்ணியங்களும் என்று சொல்லலாம்.
பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதார் உறவை:
கீழ்ச் சொன்னவை எல்லாம் பிறவித் துன்பத்தை வளர்ப்பனவாய் அற்பங்களுமாய் இருப்பன.என்றும்
பெரிய திருமந்திரம் மற்ற மந்திரங்கள் போலில்லாமல் பிறவிக் கடலைத் தண்டிவிப்பதற்கு உரியதான
ஏற்றத்தை உடையதாய் இருப்பதால் அம்மந்திரத்தை உபதேசித்தருளின ஆசார்யனே எல்லாம்
என்ற குறிக்கோள் இல்லாதவர்களோடு ஏற்படும் உறவுகளை
விட்டிடுகை:
அறவே விட வேண்டியது
விதி:
இது சாஸ்திரக் கட்டளையாகும்.
கண்டீர்:
காண்பீர்களாக., அறிவீர்களாக.
இதனால் திருமந்திரோபதேசம் செய்த ஆச்சர்ய சம்பந்தம் இல்லாதவரோடு உறவு கொள்ளலாகாது.
அவர்களை அவசியம் விட்டு விட வேண்டும் என்று கூறப்படுகிறது.
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply