ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ ஞான சாரம்–தனியன்கள்-/பாசுரங்கள் 1-10—ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் விரிவுரை — –

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!

கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் (அவதரித்தவரும்) தோன்றியவரும்,
துறவிகளுக்குத் தலைவரான ஸ்ரீராமாநுஜரைத் தஞ்சம் புகுந்தவரும்,
தமது ஞானஸார, ப்ரமேயஸார நூல்களில் ஆசார்ய பெருமை பேசியவருமான
அருளாள மாமுனியைப் பற்றுகின்றேன்.

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!

ராமாநுஜாச்சார்யருக்கு நல்ல சீடரும் வேதம் முதலிய அனைத்து சாஸ்த்ரங்களில் வல்லுநரும்,
நான்காவது நிலையான துறவறத்தை மேற்கொண்டவருமான அருளாள மாமுனியை வணங்குகிறேன்.

(ராமாநுஜார்ய ஸச் சிஷ்யம்)
யக்ஞ மூர்த்தி என்னும் பூர்வாசார பெயருடன் முன்னைய நிலையில்
எம்பெருமானாரோடு பதினெட்டு நாட்கள் நடத்திய வேதாந்த விசாரத்தில் தர்க்கம் செய்து
எம்பெருமானாரைச் சோர்வுறச் செய்கையில்,
பேரருளாளரான அத்திகிரி வரதராஜப் பெருமாள் கனவில் தோன்றி,
“எம்பெருமானாரே! நீர் சோர்வுற வேண்டா, உமக்குத் திறமையுடைய ஒரு நற்சீடனை உண்டாக்கிக் கொடுத்தோம்.
அவனை வெல்வீராக” என்று உரைத்த குருபரம்பரைத் தொடர்களை இங்கு நினைவு கூர்க.

(வேத சாஸ்திரார்த்த ஸம்பதம்) –
உடையவரோடு பதினெட்டு நாட்கள் தர்க்கம் பண்ணின திறமையாலும் ஞானஸார ப்ரமேயஸார நூல்களில்
வேதம் முதலிய சாஸ்திரங்களிலிருந்து சாரமான கருத்துக்களை அழகிய வெண் பாக்களினால்
எடுத்துரைத்தமையாலும், இவரது சாஸ்திர புலமை நன்கு விளங்கும்.

(தேவராஜ முனிம்) –
தேவராஜனான பேரருளாளனுடைய திருவருளால் எம்பெருமானாருக்கு சீடரான பெருமையும்,
ஞான, பக்தி, வைராக்யங்களில் ராமாநுஜ முனிக்கு நிகராக விளங்கிய சிறப்பும் பற்றி
“அருளாள முனி” என்று திருநாமம் பெற்றமையும் உணரப்படுகிறது.

————-

சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.

நான்கு வேதங்களிலிருந்து உட்பொதிந்த ஆழ் பொருள்களையும், திருமந்திரத்தின் மெய்ப்பொருள்களையும்
ஞானஸார ப்ரமேயஸாரம் என்னும் நூல்களைக் கொண்டு அறிவைப் புகட்டியவரும்,
ஞானச் சுடர் விளக்காய் விளங்குபவரும், அருளாள மாமுனி என்னும் திருநாமம் உடையவருமான ஆசார்யருடைய,
அழகியதும், அனைவருக்கும் அடையத் தகுந்ததுமான அவரது திருவடிகளை அடைந்த பிறகு,
ஊழ் வினைகள் அழிவதற்கான வழியை அறிந்து கொண்டேன்.
ஊழ் வினையால் அறிவில் மயக்கம் ஏற்படுகிறது. அவ்வறிவு மயக்கத்தால் பெண்வழிச் சேரலில் துவழ்ச்சி ஏற்படுகிறது.
அத் துவழ்ச்சிக் காரணமாக அவர்களது சுருண்ட கருங்கூந்தலிலும் வேல் போன்ற பார்வையிலும் மனம் நெகிழ்கிறது.
அருளாள மாமுனிகளின் திருவடிகளை அடைந்த பிறகு காமம் முதலிய
இக் குற்றங்களிலிருந்து நீங்குவதற்கு வழி அறிந்து கொண்டேன் என்பது கருத்து.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாராகிற ஆசார்யருடைய திருவடிகளைப் பற்றின பிறகு
அவர் அருளிச் செய்த ஞான ஸார ப்ரமேய ஸார ப்ரபந்தங்களால் அறிவுக்குத் தெளிவு பிறந்தது.
அதனால் பெண்களின் அழகிய கூந்தலிலும் வேல் போன்ற விழியிலும்
மனம் நெகிழும் தீய வினைகளை அழிக்கும் வழிகளை அறியப் பெற்றேன் என்று கருத்து.

பெண்ணாசையைச் சொன்ன இதில் மற்றும் உண்டான கோபம், உலோபம், மோகம், மதம், பொறாமை
முதலிய குற்றங்களும் அடங்கும்.
“காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்” என்ற திருக்குறளின் சொல்படி
மனிதப் பண்பாட்டை அழிக்கும் குற்றங்கள் ஆசார்ய கடாக்ஷத்தால் தீரும் என்பது பாடலின் அருங்கிய கருத்து.
இதனால் இவ்வாசிரியருடைய பெருமை கூறப்பட்டது.

————

முதல் பாட்டின் முகவுரை

ஆன்மாவுக்குப் பேரின்பம் கொடுப்பது வீடுபேறு ஆகும்.
அதை அடைவதற்கு (1) திருமந்திரம் (2) த்வயம் (3) சரம ச்லோகம் என்று மூன்று மந்திரங்களின்
உண்மைப் பொருளை குருவின் மூலம் தெரிந்து கொள்ள வேணும்.
இம்மூன்று மந்திரங்களுக்கும் “இரகசியம்” என்று பெயர்.
இதைத் தெரிந்து கொள்ள வேணும் என்ற அவாவுடையோர்க்கு அன்றி ஏனையோர்க்குச் சொல்லலாகாது என்று மரபு உண்டு.
இவ்வாறு மறைத்து வைப்பதால் இதற்கு இரகசியம் என்று பெயர் இடப்பட்டது.
இம்மூன்று மந்திரங்களும் அனைத்து வேதாந்தக் கருத்துக்களின் முடிவாய்த் திகழ்வன.
மேலும் இம்மூன்றும் பரம்பொருளின் உண்மை, பரம்பொருளை அடைவதற்கு வழி, பரம்பொருளை அனுபவித்து நுகரும் பேரின்பம்
ஆகிய இவற்றின் உண்மைகளை உள்ளது உள்ளபடி சொல்லக்கூடியன.
இம்மூன்று மந்திரங்களும் பிறவிப் பெருங்கடலில் உழலும் ஆன்மாக்கள் கரைசேர்வதற்காக
(துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக) பகவானால் சொல்லப்பட்டவை ஆகும்.

“திருமந்திரம்” பதரிகாச்ரமத்தில் பகவான் தானே நாராயணனான ஆசார்யனாயும் நரனாகிற சீடனுமாயுமிருந்து வெளிப்படுத்தியது.
“துவய மந்திரம்” ஸ்ரீவைகுண்டத்தில் பெரிய பிராட்டியாருக்கு பகவானால் உபதேசிக்கப்பட்டது.
“சரம சுலோகம்” மஹாபாரத யுத்தத்தில் அர்ஜுனனுடைய தேர்த்தட்டிலிருந்து கொண்டு அவனைக் குறித்து சொன்ன
பகவத் கீதையின் இறுதியில் கண்ணபிரானால் சொல்லப்பட்டது.
இம்மூன்று மந்திரங்களும் குருபரம்பரை வழிவழியாக உபதேசத்தாலே சொல்லப்பட்டு வருவன.
செம்பொருள் கண்டவர்களில் முன்னோடிகளும் நம்முடைய முன்னோர்களுமான ஆசார்யர்களுக்கு இவையே மேலான
செல்வமாய் விளங்குவன மற்றும் அவர்களுக்கு நாடோறும் மனனம் செய்வதற்கு உரியனவாயும் இருப்பன.

இத்தகைய பெருமையுடையனவாய் விளங்குவன இம்மூன்று மந்திரங்களும்.
இவற்றுள் முதல் மந்திரமாய் விளங்குவது திருமந்திரம். இதற்கு “முதல் ரகசியம்” என்று பெயர்.
இது மூன்று பதங்களைக் கொண்டது. அவை “ஒம்” என்றும் “நம:” என்றும் “நாராயணாய” என்றும் சொல்லப்படும்.
இந்த மூன்று பதங்களில் முதல் பதமான “ஒம்” என்ற ப்ரணவத்தின் கருத்தை நடுப்பதமான “நம:” என்ற பதமும்
“நாராயணாய” என்ற பதமும் தெளிவு படுத்துவனவாகும்.
அதாவது “ஒம்” என்பது சுருக்கமாகப் பொருளைச் சொல்வது
“நம:” என்பதும் “நாராயணாய” என்பதும் அதனை விளக்கமாகச் சொல்வனவாகும்.

இங்ஙனம் திருமந்திரத்திலுள்ள நடுப்பதமான “நம:” பதத்தின் கருத்தையும் “நாராயணாய” என்ற கடைசி பதத்தின் கருத்தையும்
த்வய மந்திரத்தில் முறையே முதற்பகுதியும், பிற்பகுதியும் விளக்குவனவாகும்.
முதற்பகுதி, பிற்பகுதி என்ற இத்தகைய இரண்டு பகுதிகளைக் கொண்ட த்வய மந்திரம் மந்திரங்களுக்குள் சிறந்ததான
“மந்திர ரத்தினம்” என்று போற்றப்படும். அதன் முதற்பகுதியில் பகவானை அடைக்கலம் புகும் முறைகள் சொல்லப்படுகின்றன.
அதாவது பகவானுடைய திருவடிகளில் அடைக்கலம் புகும் போது எல்லா பற்றுதல்களையும்
தடம் தெரியாமல் விட்டே பற்றவேண்டும் என்றும், அவ்வாறு பகவானுடைய திருவடிகளைப் பற்றுதலையும்
ஒரு பற்றுக் கோடாகக் கருதாமல் அவன் பாதமே தஞ்சமென்ற உறுதிப்பாட்டில் இருக்கவேண்டும் என்றும் குறிக்கிறது.
பிற்பகுதியில் மேற்கூறியவாறு உறுதி பூண்டுள்ள அடியவர்க்குப் பயன் பிராட்டியும் பெருமாளும் கூடின
இருவருமான சேர்த்தியில் தொண்டு செய்வதேயாகும் என்பதாம்.

இது இராமாயணத்தில் சீதையும் இராமனுமான இருவருடைய சேர்த்தியில் இளைய பெருமாள்
தொண்டு செய்து வாழ்ந்தது போன்றதாகும்.
இத்தகைய (பேறு) ஊழ்வினையினால் வரும் அனைத்துத் தடைகளும் (பாபங்களும்) தடம் தெரியாமல் நீங்கிய பிறகே கை கூடுவதாகும்.
இவ்வாறான த்வய மந்திரத்தின் முதற்பகுதியும், பிற்பகுதியும் ஆகிய இரண்டு பகுதிகளின் கருத்துக்களையும்
“சரம சுலோகம்” எனப்படும் மூன்றாவதான மந்திரம் விளக்கமாக எடுத்துரைக்கிறது.
ஆகவே மூன்றாவதான சரம சுலோக மந்திரம் த்வய மந்திரத்திற்குச் சார்புடையதாய் நிற்கிறது.
ஆக இம்மூன்று மந்திரங்களிலும் த்வய மந்திரமே முக்கியமாக நம்முடைய முன்னோர்களான ஆசார்யர்களால் எண்ணப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க த்வய மந்திரத்தின் முதற்பகுதியால் சொல்லப்படுவது என்ன?
பகவானுடைய திருவடிகளில் அடைக்கலம் புகுவது. அது இரண்டு வகையாகும்.
“இப்பொழுதே வீடு பேறு அடைய வேண்டும்” என்னும் வேகத்தில் அடைக்கலம் புகுவது ஒன்று.
மற்றொன்று “உன் திருவடிகளில் அடைக்கலம் புகுகின்றேன். நீ எப்பொழுது வீடு பேறு அளிக்கிறாயோ
அப்பொழுது கொடுப்பாயாக” என்று அடைக்கலம் புகுவது.
இவ்விரண்டினுள் மிக விரைவில் வீடு பேறு அடைய வேண்டும் என்ற நோக்குடன் செய்யும் அடைக்கலமே சிறப்புற்றதாகவும்
மற்றது சிறப்பற்றதாகவும் கருதப்படும்.

இங்குக் கூறிய மிக விரைவுடன் செய்யும் அடைக்கலத்தின் இலக்கணங்கள்
ஞானசாரமாகிற இந்நூலில் முதல் பாடலான “ஊன உடற் சிறை” என்னும் பாடலில் சொல்லப்படுகின்றன.

“ஊன உடல் சிறை நீத்து ஒண் கமலை கேள்வனடித்
தேன் நுகரும் ஆசைமிகு சிந்தையராய்த் – தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்றற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு”

பதவுரை :-

ஊன – மாமிச மயமான
உடல் – சரீரமாகிற
சிறை – சிறைச் சாலையை
நீத்து – துறந்து (விட்டு நீங்கி)
ஒண் கமலை கேள்வன் – அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாகவுடைய லக்ஷ்மீ தேவியின் மணாளனான பகவானுடைய
அடித் தேன– திருவடிகளின் இனிமையை
நுகரும் – துய்க்கும் (அனுபவிக்கும்)
ஆசை மிகு சிந்தையராய் – ஆசை மிகுந்த மனதை உடையவராய்
பழுத்தால் – பழுத்துக் கனிந்தால்
தானே விழும் – தானே விழுகின்ற
கனி போல் – பழம் போல்
பற்றற்று – ஒட்டுதல் அற்று
வீழும் – சரணாகதி செய்யும்
விழுக்காடு தானே– அச்சரணாகதியே
வீடு அருளும்– வீடு பேற்றைக் கொடுக்கும்

உடல், மாமிசமயமானது. அது சதை, நரம்பு, எலும்பு, மஜ்ஜை, விஷ்டை, மூத்திரம் முதலிய
உட் குற்றங்கள் பலவும் நிரம்பியதொன்று. இதை “புண்ணாராக்கை” என்று கூறுவர்.
ஈயின் சிறகளவு தோல் உரித்தாலும் ஈ, எறும்பு, காகம் முதலிய ஜந்துக்கள் மொய்த்துக் கொள்ளும்.
(நாலடியார் துறவறவியல் – தூய்தன்மை – முதல் பாடல்).
உடல் உட்புறத்தை வெளிப்புறமாக்கினால் காக்கையை விரட்டுவதே காலமெல்லாம் பணியாக யிருக்கும்.

இவ்வாறு மிகவும் அருவருக்கத் தக்கதாயுள்ள இச்சரீரத்தின் குற்றங்களை உணர்பவர்களுக்கு
“நான்” என்று சொல்லப்படும் ஆன்மாவாகிற தான் இதனுள் இருக்கும் இருப்பு
(அதாவது உண்டு, உடுத்து வாழ்ந்து வருவது) சிறையில் அடைபட்டவன் போன்று கருதப்படுவதாகும்.

சட்டிக்குள் வைக்கப்பட்ட மாணிக்கத்தின் ஒளி உள்ளேயே அடங்கியிருப்பது போல
உடலுக்குள் அகப்பட்ட ஆத்மாவின் ஞான குணங்கள் அதற்குள்ளேயே சுருங்கிக் கிடக்கின்றன.
அதாவது ஆன்மா, உடலில் மறைந்து இருக்கிறது.
இதுவே ஆன்மாவுக்கு இறைவன் கொடுத்த சிறை தண்டனை என்று உணரலாம்.
இதனை சிறையாக உணராமல் இன்பமாக உணர்வது மூடர் செயலாகும்.
ஆகவே உடலின் உண்மைத் தன்மையை உணரும் அறிவுடையார் (ஞானிகள்) உலக வாழ்வை அருவருத்து
அதிலிருந்து விடுபடுவதற்கு முயலுவர்.
அவ்வாறு உடற்சிறையிலிருந்து விடுபடுவதற்கு முயலும் அறிவுடையார் (ஞானிகள்)
இறைவனிடம் சரணாகதி செய்வது தவிர வேறு வழியைக் காணமாட்டார்கள்.
இச்சிறையிலிருந்து ஆன்மாவை விடுவிப்பதும் இறைவனே என்ற உண்மையை கீதையில் பகவான் அருளிச் செய்துள்ளான்.
ஆன்மாவுக்குச் சரீரம் எற்பட்டது ஆன்மா செய்த வினைப்பயனால் ஆகும்.
அவ்வினையைச் சரணாகதி நெறியினாலன்றி வேறொன்றினால் கடக்க முடியாது.
“என் காலைக்கட்டி சரணாகதி பண்ணினால் நான் அச்சிறையிலிருந்து (ஆன்மாவை) விடுவிக்கிறேன்” என்று பகவான் கூறியுள்ளான்.

ஒரு குருவி பிணைத்த கூட்டை நம்மால் பிரிக்க முடிவதில்லை.
வினைப்பயனால் சர்வ சக்தியுடைய இறைவன் பிணைத்து வைத்த இவ்வுடலாகிற கூட்டை
நம்மால் பிரிக்க முடியுமா? என்று கூறியுள்ளார்.
சிறையில் அடைபட்ட செல்வந்தனுக்கு வெளியில் வந்து சுக போகங்களை அனுபவிப்பதைக் காட்டிலும்
சிறையிலிருந்து விடுபடுவதே முக்கியமாகும்.
அதுபோல ஆன்மா, சரீரச் சிறையிலிருந்து விடுபடுவதே அவசியமானது. சிறை என்பது மிகவும் இழிந்ததல்லவா?
ஆகவே உடல் சிறையிலிருந்து தப்புவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும்.

அவ்வாறு சரணாகதி செய்யும் போது த்வய மந்திரத்தில் சொல்லியபடி பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு
பகவான் திருவடிகளில் சரணாகதி பண்ணவேண்டும்.
அவன் திருவடிகளில் சரணாகதி பண்ணுவது தேனைச் சுவைப்பது போன்று மிக இனிமையாக இருக்கும்.
அவ்வினிமையை அனுபவித்தவர்களின் மனம், மிக்க விருப்புடன் அதிலேயே தோய்ந்திருக்கும்.
குழந்தை தாய்ப்பாலை சுவைப்பதற்கு எப்படி ஆர்வமுடன் இருக்குமோ,
அது போல சரணாகதி செய்பவன் இறைவன் திருவடித் தேனை நுகருவதில் ஆர்வமோடு இருப்பான்.
அவ்வார்வத்தினால் அவன் திருவடியைப் பற்றும் போது தான் முன்பு பற்றிக் கொண்டிருந்த உலகப் பற்றுக்களை அறவே விட்டு விடுவான்.
அப்பற்றுதல்களும் தாமே இவனை விட்டு விலகி விடும் என்பது இப்பாடலின் கருத்து.
இது எது போன்றது என்றால் மரத்தில் கனிந்த பழம் காம்பை விட்டுத் தானே கீழே விழுவது போன்றாய்
எல்லாப் பற்றுதல்களும் தானே விட்டுப் போகும்படி பகவான் திருவடிகளில் வீழ்வது சரணாகதியாகும்.
இச்சரணாகதி மிகவும் விரைவுடன் செய்யப்பட்டால் உடனே பகவானுக்கு இரக்கம் எற்பட்டு அவனுக்கு வீடுபேறு அளிப்பான்.
அவசரமில்லாமல் சரணாகதி செய்தாலும், இச்சரீரம் கழிந்தவுடன் வீடு பேறு அளிப்பான்.

ஆகவே, சரீர வாழ்வை சிறை என்று உணர்ந்து அதிலிருந்து தப்ப விரும்புபவன் பகவான் திருவடியை அனுபவிக்கும்
ஆசையுடையவனாய் பிராட்டி பரிந்துரையுடன் வெளிவுலகப் பற்றுக்களை அறவே விட்டு இறைவன் திருவடிகளில்
சரணாகதி பண்ணினால் அச்சரணாகதிக்கு இரங்கி இறைவன் உடனே வீடளிப்பான்.
ஆகவே, பரபரப்புடன் பண்ணும் சரணாகதி உடனே மோட்சம் தரும் என்பது இப்பாட்டின் கருத்து.

வீடு பேறு என்பது பிறவிக்கடலை கடந்து பகவானாகிற கரையை அடைதலாகும்.
“அக்கரையென்னும் அணர்த்தக் கடலுள் அழுந்தி இக்கரையேறி இளைத்திருந்தேன்”
(பெரியாழ்வார் திருமொழி – 5ம் பத்து – 3ம் திருமொழி – 7ம் பாசுரம்) என்றார் பெரியாழ்வார்.

இவ்விடத்தில் ஒரு வேதாந்த விசாரம் செய்யப்படுகிறது.
சரணாகதியே மோட்சம் தரும் என்ற கருத்தைச் சொன்னால் பகவானே மோட்சம் தருபவன் என்ற சித்தாந்தத்தோடு முரண்படாதா?
மேலும், சரணாகதி என்ற ஞானமில்லாத செயலுக்கு, மோட்சம் தரும் ஆற்றலுண்டு என்று சொல்வதும் உண்மைக்கு மாறாகாதா?
என்ற வினாக்கள் எழுகின்றன. இதன் பதில் வருமாறு:-

பக்தன் செய்யும் சரணாகதியோ, பக்தியோ தவமோ நோன்புகளோ எதுவாகயிருந்தாலும்
அவை அவனை மோட்சத்திற்குத் தகுதியுடையவனாக மட்டும் ஆக்கும் அவையே தவிர, மோட்சத்தைத் தரமாட்டா.
இத்தகைய சரணாகதிக்கு இரங்கி பகவான் தான் மோட்சம் தருவான் என்பது உண்மை.
இதை, சாஸ்திரம் “அதிகாரி விசேஷணம்” என்று கூறும்.

இதற்கு உதாரணம் – மேடான இடத்தை ஆழப்படுத்தி ஏரி கட்டுகிறார்கள்.
மழை பெய்யும் போது ஏரியில் தண்ணீர் நிரம்புகிறது. ஏரி கட்டுவது மழை பெய்வதற்குக் காரணமாகாது.
ஆனால், மழை பெய்யும் போது ஏரி இருந்தால்தான் மழை நீர் தேங்கும்.
அது போல ஆன்மாக்களிடத்திலுள்ள சரணாகதி முதலிய எந்த புண்ணியமும் பகவான் அருள் செய்வதற்குக் காரணமாகமாட்டா.
பகவானுடைய அருள் எந்த காரணத்தையும் எதிர்பாராமல் இயற்கையாக தானே வருவது.
அந்த அருள் தானாக வரும் போது அதை எற்றுக் கொள்ள ஆத்மாக்கள் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும்.
அந்தத் தகுதியுடைமையே “சரணாகதி” என்றும் “பக்தி” என்றும் நோன்பு புண்ணியங்கள் என்றும் சொல்லப்படுகின்றன.
இப்படித் தகுதியுடைமையைக் காரணம் என்று சொல்ல முடியாது.

“வனத்திடரை எரி ஆம் வண்ணம் இயற்றும் இதுவல்லால் மாரி யார் பெய்கிற்பார்? மற்று என்று
பூதத்தாழ்வார் இதைத் தெளிவுபடுத்தினார்.
ஆகவே, “இவை சரணாகதி பெறுவதற்குரிய தகுதியைத்தான் உண்டு பண்ணும்; பகவான் தானே வீடு தருவான்”
என்ற உண்மைகள் இங்கு கிடைக்கின்றன.
மாம்சமயமான சரீரத்தில் வாழ்வதைச் சிறையில் இருப்பதாகக் கருதி விடுதலையடைய மனம் துடிதுடிக்க வேணும்.
லக்ஷ்மீ நாயகனான பகவான் திருவடிகளின் சுவையை அனுபவிக்க ஆசைப்பட்டு அவன் திருவடிகளில் விழுவதே சரணாகதி ஆகும்.
அது கனிந்த பழம் காம்பிலிருந்து விழுவது போல சகல பற்றுதல்களையும் விட்டுச் செய்யப்படுவதாகும்.

மோட்சத்தை அடைவதற்கு சரீரம் விரோதியாகும்.
அவ்விரோதியை அழிப்பதற்கு பகவான் திருவடிகளில் பண்ணும் சரணாகதியே ஆயுதமாகும்.
இதற்கு விளக்கமாக ராமாயணத்தில் பரதனும் , விபீஷணனும் இராமன் திருவடிகளில் சரணாகதி செய்த கதையைக் காணலாம்.
பரதன் தன் தாயினால் துன்பம் அடைந்தவன். விபீஷணன் தன் அண்ணனால் துன்பம் அடைந்தவன்.
இருவரும் தங்கள் துன்ப நிலையைத் தாங்க மாட்டாதவர்களாய் உள்ளனர்.

“தொழுது உயர் கையினன், துவண்ட மேனியன்,
அழுது அழி கண்ணினன், ‘அவலம் ஈது’ என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான்
‘பரதனும் தொழுது தோன்றினான்’ மலரடி வந்து வீழ்ந்தனன்”–(கம்பராமாயணம் – அயோத்திய காண்டம் – திருவடி சூட்டு படலம் – 49)

இது பரதனின் சரணாகதி இதுவே “அதிகாரி விசேஷணம்” எனப்படும்.
இதுவே பகவான் அருளுவதற்கு உரிய தகுதியாகும்.

“கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர் மணி முடியன், கல்லும்
மரங்களும் உருக நோக்கும் காதலன், கருணை வள்ளல்
இரங்கினன் நோக்கும் தோலும், இருநிலத்து இறைஞ்சுகின்றான்
வரங்களின் வாரி அன்னதாள் இணை வந்து வீழ்ந்தான்”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – விபீஷணன் அடைக்கலப் படலம் – 137)

இதுவே விபீஷணன் நிலை.

இவை இரண்டு நிலைகளும் ஆன்மா உடற்சிறை வேதனையிலிருந்து விடுபடுவதால்
பகவான் திருவடிகளில் சரணாகதி பண்ணுவதற்கு ஒப்பாகும்.
பரதனுக்கு கைகேயியினால் வந்த துன்பம், விபீஷணனுக்கு இராவணனால் வந்த துன்பம்,
ஆன்மாவுக்கு உடற்சிறையினால் வந்த துன்பம்
எத்துன்பமாக இருந்தாலும் துன்பம் தீருவதற்கு வழி பகவான் திருவடிகளில் பண்ணும் சரணாகதியே.
மேலே சொன்ன பரதனும், விபீஷணனும் துன்பத்தை உடனடியாகத் தீர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் சரணாகதி செய்துள்ளார்கள்.
அவ்வாறே இவ்வான்மாவும் உடனடியாக உடற்சிறைத் துன்பத்திலிருந்து விடுபடத் துடிதுடிப்புடன் சரணாகதி செய்கிறான்.
“உண்டு கொல் உயிர்? ” என ஒடுங்கினான் உருக் கண்டனன்,
நின்றனன் – கண்ணன் கண் எனும் புண்டரீகம் பொழி புனல் –
அவன் சடாமண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே.

“அயாவுயிர்த்து, அழுகணீர் அருவி மார்பிடை
உயர்வுற, திருவுளம் உருக, புல்லினான்
நியாயம் அத்தனைக்கும் ஒர் நிலை ஆயினன்
தயா முதல் அறத்தினைத் தழீ இயது என்னவே”–(கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம் – திருவடி சூட்டு படலம் – 55)

இது பரதனிடம் ராமன் காட்டிய இரக்கம்.

இனி விபீடணனிடம் காட்டிய இரக்கம் காணலாம்..!

“குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம், எம் முழை அன்பு வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனோம்
புகல் அருங்கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் – நுந்தை”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – 143)

“திருவடி முடியின் சூடி, செங்கதிர் உச்சி சேர்ந்த
அருவரை என்ன, நின்ற அரக்கர்தம் அரசை நோக்கி
இருவரும் உவகை கூர்ந்தார், யாவரும் இன்பம் உற்றார்,
பொரு அரும் அமரர் வாழ்த்தி, பூமழை பொழிவதானார்”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – 145)

“தேடுவார் தேடநின்ற சேவடி, தானும் தேடி
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீ இய நல்நீர்
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி, மேல் அமரர் ஆவார்,
சூடுவார் எய்தும் தம்மை சொல்வார் யாவர்? சொல்லீர்”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – 150)

இவ்வாறே வேதனையுடன் “சரணாகதி பண்ணும் ஆன்மாக்களிடம் பகவான் இரங்கி அருள் செய்வான்” என்பது கருத்து.
இதை “இரக்கம் உபாயம், இனிமை உபேயம்” என்று சுருங்கச் சொன்னார்கள் ஆசார்யர்கள்.

மேலே கூறின பரத, விபீஷண சரணாகதிகளில் விபீஷண சரணாகதி பலித்ததாகவும்
பரத சரணாகதி பலிக்காததாகவும் தெரிகிறது.
“பரதனுக்கு நன்மைதானே தீமையாயிற்று” என்ற வாக்கியமும் காணலாம்.
ஆகவே தான் சரணாகதி முதலிய சாதனங்கள் எல்லாம் அதிகாரி விசேஷணமாகச் சொல்லப்படுவதன்றி
சாதனமாகச் சொல்லப்படுவதில்லை.
சரணாகதி வீடு தரும் என்றது கால தாமதமின்றி வீடு அளிக்கும் என்பதைப்பற்றிச் சொன்னது.
அதற்கு வீடு அளிக்கும் சக்தி கிடையாது.
இவ்வாறு சரணாகதியைப் பற்றிய பல உண்மைகளை இப்பாடல் உரையில்
மணவாள மாமுனிகள் விளக்கி யிருக்கிறார் என்பதை இங்கு உணர வேணும்.

————-

நரகும் சுவர்க்கமும் நாண்மலரள் கோனைப்
பிரிவும் பிரியாமையுமாய்த் – துரிசற்றுச்
சாதகம்போல் நாதன் தனதருளே பார்த்திருத்தல்
கோதிலடியார் குணம்–2-

நாண் மலராள் கோனை – திருவின் மணாளனை (திருமாலை)
பிரிவு – பிரிந்திருப்பது
நரகம் – துன்பமுமாய்
பிரியாமை – கூடி யிருப்பது
சுவர்க்கமுமாய் – இன்பமுமாய்
துரிசற்று – குற்றமற்று
சாதகம் போல் – சாதகப் பறவை போல (மழையையே எதிர்பார்த்திருக்கும்)
நாதன் தனது – பகவானுடைய
அருள் – கருணையையே
பார்த்திருத்தல் – எதிர்பார்த்திருத்தல்
கோதிலடியார் – குற்றமற்ற அடியார்களது
குணம் – இயல்பாகும்

நரகும் சுவர்க்கமும் என்ற சொற்கள் துன்பத்தையும் இன்பத்தையும் குறிக்கின்றன.
“துன்பமும் இன்பமும்” என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தில்
“இன்பமில் வெந்நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்” என்ற இடத்திற்கு உணரச் செய்கையில்
“சுக துக்கங்கள்” என்று உணர சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகவே நரகு என்றால் துன்பம் என்றும் சுவர்க்கம் என்றால் இன்பம் என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

பரபக்தியுடையவர்களுக்கு எது துக்கம்? எது சுகம்? என்பதை மேல் தொடர் விவரிக்கிறது.
நாண்மலராள் கோன் (பெரிய பிராட்டியாருக்குத் தலைவன்) அவனைப் பிரிதல் துன்பம் என்றும்
பிரியாமை (அவனோடு கூடியிருத்தல்) இன்பம் என்றும் சொல்வர்.

பரபக்தி என்றால் பிரிவில் ஆற்றமாட்டாமை, கூடிடில் ஆற்றாயிருத்தல். இதற்கு உதாரணம் பின்வருமாறு.

ஸ்ரீராமாயணத்தில் பெருமாள் (இராமன்) காட்டிற்கு எழுந்தருளும்போது பிராட்டி நானும் கூட வருவேன் என்று சொல்ல
அதற்குப் பெருமாள் நகர வாசத்திற்கும் வன வாசத்திற்குமுண்டான வேறுபாடுகளை எடுத்துரைத்து
அதனால் காட்டிற்கு உடன் வருவது துன்பம் என்றும், அரண்மனையில் இருப்பது இன்பம் என்றும் அருளிச் செய்தார்.

அதைக் கேட்ட பிராட்டி, “இன்ப துன்பங்கள் நீர் சொல்வது போல் அல்ல;
ஒவ்வொருவருக்கும் வேறு வேறாய் இருக்கும் உம்மோடு கூடியிருப்பது எதுவோ அதுவே சுகம்;
உம்மைப் பிரிந்து அரண்மனையில் இருப்பது துன்பமாகும்;
இந்த உண்மை உமக்குத் தெரியாமல் போனாலும் என்னிடம் கேட்டு அறிவீராக;
தமக்குத் தெரியாததைப் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்ள வேணும்; அது தவறில்லையே;
உம்மைப் போலே நாம் அளந்து அன்பு செய்யவில்லை. நான் உம்மிடம் கொண்டுள்ள அன்பு அளவு கடந்ததாகும்” என்று சொன்னாள்.

இதற்கு இராமன் “நம்மைக் காட்டிலும் உனக்கு அன்பு மலை போல் இருப்பதாய்ச் சொன்னாயே.
இதற்கு நம்மை என்ன செய்யச் சொல்கிறாய்?” என்றான்.
அதற்கு பிராட்டி “நான் முன்னே போகின்றேன். நீர் எனக்குப் பின்னாலே வரப்பாரும்” என்று கூறினாள்.
இது பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்.

இங்கு ஒரு வேதாந்த விசாரம்.
சீதை, இராமனைப் பார்த்து உம்முடன் கூடியிருந்தால் சுகம் என்றும்
உம்மைவிட்டுப் பிரிந்தால் துக்கம் என்றும் கூறினாள்.
இது அவள் அளவுக்குப் பொருத்தமாகயிருக்கும்.
இதே வார்த்தையை ஜீவாத்மா பரமாத்மாவைப் பார்த்துச் சொல்வது முறையற்றது.
பிராட்டி பகவானையே இன்பமாகக் கொண்டிருப்பவள்.
ஜீவாத்மாக்களோ பகவானையும் பிராட்டியையும் சேர்த்து இன்பமாகக் கொண்டிருப்பவர்கள்.

அதனால் பிராட்டிக்கு “ஏகாயணை” என்றும்,
ஜீவாத்மாக்கள் “மிதுனாயர்கள்” என்றும் சொல்லப் பட்டிருக்கிறார்கள்.
ஏகாயணை பகவானொருவனையே இன்பமாகக் கொண்டிருப்பவள்.
ஜீவாத்மாக்கள் மிதுனாயனர் என்று சொல்லப்படுவதால் பகவானையும் பிராட்டியையும் சேர்த்து
இருவரையும் இன்பமாகக் கொண்டிருப்பவர்கள்.
பிராட்டிக்கும் ஜீவாத்மாக்களுக்கும் உண்டான வேறுபாட்டை இவ்வாறு பிரித்து அறிய வேணும்.

“நாண் மலராள் கோனைப் பிரிவும் பிரியாமையுமாய்” –
பிராட்டியோடு கூடிய பகவானைப் பிரிதலும், பிராட்டியோடு கூடின பகவானைப் பிரியாமையும்
துன்பமும் இன்பமும் என்று சொல்லப்படுகிறது.
இளையபெருமாள் ராமனைப் பார்த்து “சீதை எப்படி உன்னைப் பிரிந்தால் வாழ மாட்டாளோ
அது போல நானும் உன்னைப் பிரிந்தால் வாழமாட்டேன்” என்று தன்னைப் பிராட்டிக்குச் சமமாகக் கூறிக் கொண்டுள்ளார்.
இங்கு பிரிவுத் துயர் பொறுக்க மாட்டாமைக்கு மட்டும் இருவரும் சமம் என்று கருத்தாகும்.

அவ்வாறன்றி ராமனை மட்டும் பற்றி நிற்கும் சீதையைப் போல் என்று பொருள் கொள்ளலாகாது.
இளைய பெருமாளுக்குப் பிராட்டியும் பெருமாளும் சேர்ந்திருக்கும் நிலையே இன்பமாகக் கொள்ள வேணும்.
ஆகவே தான் காட்டுக்குப் புறப்படும் பொழுது
“நீயும் சீதையும் மலை தாழ்வரைகளில் உலாவும் பொழுதும், உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும்
உங்கள் இருவருக்கும் நான் எல்லா அடிமைகளும் செய்ய வேணும். அதற்காகவே என்னை அழைத்துச் செல்லவேணும்” என்று
இலக்குவன் கூறியுள்ளதால் பகவான், பிராட்டி இருவருக்கும் சேர்த்து செய்யும் அடிமையே ஆன்மாக்கள் எல்லோருக்கும் உரிமையாகும்.

துரிசற்று – துரிசு – குற்றம். அற்று – அது இல்லாமல் அதாவது
பகவானையும் பிராட்டியையும் பிரிந்தால் துன்புற்றும் அவர்களைக் கூடினால் இன்புற்றும் அமைந்த பக்தி உண்டானால்
அதை (தகுதியுடைமையாக) அதிகாரி விசேஷணமாகக் கொள்ள வேணும்.
அதாவது
சாப்பிடுவதற்கு பசி எப்படி அவசியமோ அது போல பகவானை அனுபவிப்பதற்கு பக்தி வேணும்.
இந்த பக்தி சாதனமாக ஆகாது. பக்தியை உபாசகர்கள் சாதனமாகக் கொள்ளுகிறார்கள்.
சரணாகதர்கள் சாதனமாகக் கொள்ளமாட்டார்கள். சாதனமாகக் கொண்டால் அது குற்றமாகும்.
இங்கு துரிசற்று என்பதால் பக்தியை சாதனமாகக் கொள்ளும் குற்றம் இல்லாதவர்கள் என்று பொருள்.

“சாதகம் போல் நாதன் தனதருளே பார்த்திருப்பர்” – அதாவது
மழை நீரை யல்லது பருகாத சாதகப் பறவை விடாயினால் நாக்கு ஒட்டினாலும் மழை நீரையே பார்த்திருக்கும்.
அது போல இவ்வாத்மாவுக்கு வகுக்கப்பட்ட பகவானுடைய அருளையே அவனை அடைவதற்குச் சாதனமாக அறுதி யிட்டு
அவ் வருளையே பார்த்திருத்தல் குற்றமற்ற அடியார் குணம் “துணியேனினி நின்னருளல்லது நின்னருளே புரிந்திருந்தேன்” என்ற
ஆழ்வார் பாசுரங்களாலும் இக்கருத்தைக் காணலாம்.

“கோதிலடியார்குணம்” – அடியார் என்பதற்கு
வேறுவேறு பயன்களிலும், வேறுவேறு சாதனங்களிலும் தொடர்பு கொண்டிருக்கும் குற்றமில்லாதவர் என்று பொருள்.
தங்களுடைய அடிமை இலக்கணத்திற்கேற்ப பகவானையே ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்போனும் அவனே.
அடைய வேண்டியவன் ப்ராப்தா அடைய வழியாய் இருப்பவன் ப்ராபகன்.
அடைந்த பிறகு இவ்வாத்மாவுக்கு பகவானே வகுக்கப்பட்ட தலைவன் என்பது உண்மை.

ஆகையால் இப் பாட்டில் முன்னடியால் “பயன் பகவானே” என்ற கருத்தும்
பின்னடியால் “சாதனமும் பகவான்” என்ற கருத்தும் தோன்றச் சொல்லப் பட்டுள்ளது.
இப்படியிருப்பதே கோதிலடியார் குணம் என்று உணர வேண்டும்.

————

இதில் பரபக்தியின் பழுத்த நிலையான பரமபக்தி பேசப்படுகிறது.
அதாவது பிரிந்தால் ஆற்றமாட்டாமல் உயிர் பிரிதல் அளவுக்கு மீறிய பக்தி மிஞ்சி போகுதல்.
இதை உதாரணத்துடன் கூறுகிறார்.

“ஆனை யிடர் கடிந்த ஆழி அங்கை அம்புயத்தாள்
கோனை விடில் நீரில் குதித்தெழுந்த மீன் எனவே
ஆக்கை முடியும்படி பிறத்தல் அன்னவன்தாள்
நீக்க மில்லா அன்பர் நிலை”–3-

பதவுரை:

ஆனை கஜேந்திராழ்வானுடைய
இடர் முதலையினால் உண்டான துன்பத்தை
கடிந்த போக்கின
ஆழி அங்கை சுதர்சனம் என்னும் சக்கரத்தை அழகிய கையிலேந்திய
அம்புயத்தாள் கோனை லக்ஷ்மீ நாயகனை
விடில் பிரியில்
நீரில் தண்ணீரிலிருந்து
குதித்தெழுந்த துள்ளிக் குதித்துப் பிரிந்த
மீனெனவே மீன் போல
ஆக்கை முடியும்படி பிறத்தல் உடல் அழியும்படி நிலை உண்டாதல்
அன்னவன்தாள் அத் திருவின் மணாளனது திருவடிகளை
நீக்கமில்லா பிரிய மாட்டாதது
அன்பர் நிலை அன்புடையார் நிலையாகும்.
கீழ்ச்சொன்னதில் “பிரிவில் ஆற்றாமை, கூடில் ஆற்றுதல்” என்ற பர பக்தியின் நிலை பேசப்பட்டது.

புராணங்களிலும் ஆழ்வார் பாசுரங்களிலும் அடிக்கடி பேசப்படுவது கஜேந்திராழ்வான் சரிதம்.
கஜேந்திரனாகிற யானை பகவான் திருவடிகளில் தாமரைப் பூவை சமர்ப்பிப்பதற்காகத் தாமரைக் குளத்தில் இறங்கி
பூவைப் பறித்துக் கரையேறியது. அப்பொழுது நெடுநாளாக தன் சாபத்தைப் போக்கும் யானையை எதிர்பார்த்திருந்த
முதலை யானையின் காலைக் கவ்வியது. யானை கரைக்கு இழுக்க முதலை நீருக்கு இழுக்க தேவ வருஷத்தில் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன.
முதலைக்கு நீர் தன்னிடமாதலாலும் பலமானதாலும் தனது விருப்பம் நிறைவேறியதால் பலம் வளர்கையாலும்
யானையை நீருக்குள்ளே இழுத்தது. யானைக்கு நீர் நிலை வேற்றிடமாகையாலும் விருப்பம் நிறைவேறாததாலும்
பலம் சிறிது சிறிதாகக் குறைந்து துதிக்கை முழுகும்படியான நிலை ஏற்பட்டதாலும்,
இனி இதுக்கு மேல் துன்பம் இல்லை என்னும்படியான ஆபத்தை அடைந்த நிலையில்

“பக்தர்களின் விரோதியை அழிக்கும் இயல்புடைய இறைவனே (சர்வேஸ்வரனே) நமக்கு “ரட்சகன்” என்று எண்ணி
“நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய் வாராய் என் ஆனிடரை நீக்காய்” என்று கூப்பிட்ட உடனே
பகவான் ஒடோடி வந்து கஜேந்திராழ்வானுடைய துக்கத்தைப் போக்கினான்.
யானைக்கு துக்கமாவது முதலையின் வாயிலே அகப்படுகையாலே தன் சரீரம் அழிகிறது என்றல்ல.
கையில் எடுத்த பூவை அதன் அழகு அழியாமல் பகவான் திருவடிகளிலே சமர்ப்பிக்க முடியவில்லையே என்பதுவே துக்கம்.
அத்தகைய துக்கத்தை கஜேந்திரன் நோவுபடுகிற சமயத்திலே சென்று அவனுக்கு முகம் காட்டி
அவன் துக்கத்தைப் போக்கினான் என்பது புராணக் கதை. இது இங்கு “யானையிடர் கடிந்த” என்ற தொடரால் கூறப்பட்டது.

ஆழியங்கை – “திருவாழியை அழகிய கையிலேயுடைய” என்று பொருள்.
கஜேந்திரனைக் காக்கச் சென்ற போது அவன் விரோதியான முதலையின் தலை துணிப்பதற்கு
கையிலே திருவாழியை ஏந்திக் கொண்டு அப்பொழுது சென்றான் என்பது குறிப்பு.

“மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்த்
தொழுங் காதற் களிறளிப்பான் புள்ளுர்ந்து தோன்றினையே” என்று நம்மாழ்வாரும் இதைக் குறிப்பிட்டார்.

யானை இடர்கடிய சக்கரத்துடன் சென்றது – தெளிவு.
கஜேந்திரனைக் காக்க வருகின்ற வேகத்தில் கையில் இருக்கும் திருவாழியைக் கூடி அறியவில்லை போலும்,
அறிந்திருந்தால் இருந்த இடத்திலேயிருந்த சக்கரத்தை ஏவிக் காரியம் கொள்ளலாம் அல்லவா? என்று ஒரு பொருள்.
கையில் திருவாழியை அறிந்திருந்தே அப்படிச் செய்யாமல் ஒடோடி வந்து முதலையின் தலையைத் துணித்தான் என்பது மற்றொரு பொருள்.
காரணம், கஜேந்திரன் பக்தியுடன் அவனை அழைத்துத் தொழும் காதற் களிறு என்று இதனை ஆழ்வார் அருளினார்.
அதனால் கஜேந்திரன் பகவானுடைய கையும் திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டிருக்கிறவன் கையில்
பறித்த தாமரைப் பூவை பகவான் திருவடிகளில் சமர்ப்பிக்க ஆசைப்பட்டிருக்கிறவன்.
ஆகையால் அவன் இருக்கும் இடம் சென்று அவன் துக்கத்தைத் தீர்க்க வேண்டிய அவசியத்தினால்,
இருந்த இடத்திலேயே காரியம் கொள்ளாமல் தாமரை குளத்திற்குச் சென்றான்.
இதனால் “தன்னைக் காண ஆசைப்படும் பக்தர்களுக்கு ஆசைப்பட்டபடி முகம் காட்டுவான்” என்பது உட்கருத்து.
இக்கருத்து பேயார் “குட்டத்துக் கோன் முதலை துஞ்சக் குறித் தெறிந்த சக்கரத்தான்” என்றார்.

அம்புயத்தாள் கோனை:-
தாமரையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெரிய பிராட்டியாருக்கு நாயகனானவனை என்று இதன் பொருள்.
இதுவும் கருத்துடை தொடர். பாற்கடலில் பெருமாள் பள்ளி கொண்டிருக்க மண்மகளும், ஆய்மகளும் திருவடிகள் பிடிக்க,
திருமகளைத் திருமார்பிலே அணைத்துக் கொண்டு பள்ளி கொண்டருளா நிற்க,
அப்பொழுது கஜேந்திரன் கூப்பிட்ட அக்கூப்பீடு பகவான் திருச் செவிப்பட்டது.
அப்போது திருவடி பிடித்தவர்களின் கைகளிலிருந்து திருவடிகளை மெதுவாக இழுத்துக் கொண்டு படுக்கையிலிருந்தும்
சடக்கென எழுந்திருந்து திருக்கண்களையும் மலர விழித்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு திருமகளை அணைத்துக் கொண்டிருந்த
திருமார்பை அவ்விடத்திலிருந்து பக்குவமாக வாங்கி அதன் பிறகே அனைவரும் வியக்கும்படி,
கருடவாகனத்தில் ஏறி மிக வேகத்தோடே எழுந்தருளி ஸ்ரீகஜேந்திராழ்வான் துன்பத்தைப் போக்கினான் என்று புராணம் கூறுகிறது.

அதைப்பற்ற “அம்புயத்தாள் கோன்” என்ற கருத்து கூறப்பட்டது.
மேலும், அரசன் தன் மக்களை நல்லமுறையில் காப்பானானால் அதைக் கண்டு மகிழும் தாயைப் போல,
இறைவன் பக்தர்களை இடுக்கண் களைந்து காத்தால் அதைக் கண்டு களிப்பவள் பிராட்டியான தாயல்லவா?
அதனாலும் “அம்புயத்தாள் கோன்” என்று கூறப்பட்டது.

இதனால் “தன்னை அடைக்கலம் புகுந்தவருடைய ஆபத்து காலங்களில் அவர் இருப்பிடம் சென்று அவருக்கு உதவி காக்குமவன்” என்றும்,
அவர்களைக் காப்பது அவர்களுக்கு செய்த செயலாகக் கருதாமல் தனக்குச் செய்து கொண்ட காரியமாகக் கருதுவான் என்றும்
அத் தகையவன் பெரிய பிராட்டியாருக்குக் கணவனாவான் என்றும் பகவானுடைய இயல்புகள் கூறப்பட்டன.

விடில்:-
தன் பக்தரிடம் இப்படி அன்புடையவனாக இருக்கிறவனைப் பிரிய நேரிட்டால்;

நீரில் குதித்தெழுந்த மீனெனவே:-
நீரிலிருந்து குதித்துக் கிளர்ந்து அந்நீரைப் பிரிந்த மீன்போல;

ஆக்கை முடியும்படி பிறத்தல்:-
சரீரம் அழியும்படியான நிலை உண்டாகும்.
கலவியில் இன்பமும், பிரிவில் துயரமும் பரபக்தியின் இலக்கணம்.
அதைக் காட்டிலும் சிறப்பு பரபக்திக்கு உண்டு.
அதாவது பிரிந்தால் உயிர் போய்விடும் நிலை. இதுவே இதுக்குச் சிறப்பு.
இதை நீரை விட்டுப் பிரிந்த மீன் போல என்று உதாரணத்தோடு கூறினாராயிற்று.

அன்னவன்:-
கீழ் “அம்புயத்தாள் கோன்” என்று சொல்லப்பட்ட இறைவனை ‘அன்னவன்’ என்ற சொல்லால் இங்கே குறிப்பிடுகிறார்.
இங்கு ‘அன்னவன்’ என்றது
அப்படிப்பட்டவன் என்று பொருள்.
அல்லது
மீனுக்கு நீர்போல இவ்வான்மாவுக்கு தாரகனாயிருப்பவன் என்னவுமாம்.

தாள் நீக்க மில்லா அன்பர் நிலை –
அவன் திருவடிகளைப் பிரியப் பொறுக்கமாட்டாத அன்பு.
இப்படியிருந்துள்ள அளவு கடந்த அன்புடையவர்களது இயல்பு
அவனைப் பிரியில் நீரிலிருந்து பிரிந்த மீன் போல உயிர் போகும் நிலை உண்டாகும்.
இது பரம பக்தியின் நிலை என்பதை இப்பாடல் விளக்குகிறது.

————–

கீழ்ச்சொன்ன மூன்று பாடல்களிலும் சொல்லப்பட்ட சுருக்கமான கருத்து.
ஊன உடல் முதல் பாட்டில் –
துவய மந்திரத்தில் முதற்பகுதியில் சரணாகதியினுடைய சிறப்புத்தன்மை சொல்லப்பட்டது.
சரணாகதி செய்வதற்குக் காரணம் பிறவித் துன்பம் தாங்கமாட்டாமை.

அத்துன்பம் தாங்க மாட்டாத நிலை பரபக்தியின் அடிப்படையில் உண்டாகும் என்ற கருத்தை
“நரகும் சுவர்க்கமும்” என்ற இரண்டாம் பாட்டிலும்,

அதையும் காட்டிலும் பிரிவில் உயிரே போகும் நிலையான பரமபக்தியின் நிலை “ஆனையிடர் கடிந்த” 3வது பாட்டிலும் கூறப்பட்டன.

இனி த்வய மந்திரத்தின் பிற்பகுதியால் கூறப்படுகிற லட்சியத்தின் எல்லையான கைங்கர்யத்தின் சீர்மையை அறிந்து
வேறு பயன்களின் (தொடர்புகளை) ஆசாபாசங்களை அறவே விட்டு
ஆன்மாவின் அடிமை இலக்கணத்திற்கு ஏற்புடைய தொண்டுகளில் உறுதி பூண்டவர்களுடைய
சிறப்புத் தன்மை
இந்த நான்காம் பாடலில் கூறப்படுகிறது.

“மற்றொன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆட்செயலே
உற்றது இது என்று உளம் தெளிந்து – பெற்ற
பெரும் பேற்றின் மேலுளதோ பேர் என்று இருப்பார்
அரும் பேறு வானத்தவர்க்கு”–4–

பதவுரை:

மற்றொன்றை -செல்வம் முதலிய வேறு வேறு பயன்களை
எண்ணாதே -லட்சியமாகக் கருதாமல்
மாதவனுக்கு -திருமாலுக்கு
ஆட்செயலே -அடிமை செய்வதில்
இது உற்றது -இதுவே அடிமைக்கு ஏற்றது
என்று -என்று முடிவு செய்து
உளம் தெளிந்து -இதயம் தெளிவுற்று
பெற்ற பெரும் பேற்றின் மேல் -அடையப் பெற்ற இப் பெரும் பயனுக்கு மேல்
பேர் உளதோ -வேறு ஒரு பயன் உண்டோ
என்றிருப்பார் -என்று உறுதி கொண்டிருப்பார்
வானத்தவர்க்கு -வைகுந்தத்தில் இருக்கும் நித்ய முக்தர்களுக்கு
அரும் பேறு -பெறுதர்கரிய பயனாவார்

மற்றொன்றை எண்ணாதே:-
அதாவது கைங்கர்யம் என்பது பகவான் திருவுள்ளத்திற்கு உகப்பானது செய்தல்.
இதுவே ஒருவன் அடைய வேண்டிய லட்சியத்தின் எல்லை. இதுக்கு மேல் எதுவுமில்லை.
அத்தகைய கைங்கர்யத்திற்குப் புறம்பானது ஒன்றை லட்சியமாகக் கருதாமல் என்பது இதன் பொருள்.
புறம்பான லட்சியமாவது,
இவ்வுலக இன்பமும் சொர்க்கமும் முதலிய பரலோக இன்பமும் ஆன்மானுபவமாகிற கைவல்ய மோட்ச அனுபவமும்,
இம்மூன்றும் கைங்கர்யத்திற்குப் புறம்பானவை.

“ஆன்மானுபவம்” என்பது தன்னைத் தானே அனுபவித்தல் ஆகும். அதாவது ஆன்மா உடல் தொடர்பின்றியிருத்தலாம்.
ஆன்மாவின் தன்மை இயல்பாக இன்ப வடிவாயிருப்பது. ஆகவே எந்த உடல் தொடர்பும் இல்லாமல் இருந்தால்
அது தன் தன்மையான இன்பமே வடிவாயிருக்கும். அதுவே மோட்சம் என்று சிலர் கூறுவர்.
அது பகவத் கைங்கர்யத்தை பயனாகக் கொள்ளும் கொள்கைக்கு வேறுபட்டதாகையால் “மற்றொன்று” என்று கூறப்பட்டது.

இவற்றின் பெயர் சொல்வதும் விரும்பாமையால் மற்றொன்று என்று மறைத்துச் சொல்லப்பட்டது.
“விரும்பாதே” என்று கூறாமல் “எண்ணாதே” என்று கூறியது.
நினைத்தால் அன்றோ விரும்புவது. அவ்வாறே ஒரு பொருளாக நினையாததால் “எண்ணாதே” என்று சொல்லப்பட்டது.
இவ்வாறன்றி இவ்வுலக இன்பத்தையும் பரலோக இன்பத்தையும் ஆன்மா அனுபவத்தையும் விரும்புபவர்கள்
பகவத் கைங்கர்யத்தின் சுவையறியாதவர்களாக ஆவர்.
பகவத் கைங்கர்யத்தின் சுவையை அறிந்தவர்களுக்கு மற்றையவை உப்பு நீரைக் குடிப்பது போல்
சுவையற்றதாயும் கீழ்த்தரமாயு மன்றோ யிருப்பவை.

மாதவனுக்கு ஆட்செயல்:- என்பதாலே
அவர்கள் இருவருக்கும் செய்யும் அடிமையே ஒருவரால் பெற வேண்டியது என்ற இலட்சியத்தின் எல்லை என்று சொல்லப்படுகிறது.
இக்கருத்து த்வய மந்திரத்தின் பிற்கூற்றில் முதல் பதமான “ஸ்ரீமதே” என்ற பதத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
திருமந்திரத்தில் (ஒம் நமோ நாராயணாய) மூன்றாவது பதமான நாராயணாய என்ற பதத்திலும்
அடியார் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்பவர் பிராட்டியும் பெருமாளுமான இருவரும் என்பது மறைத்துச் சொல்லப்பட்டது.

மறைத்துச் சொன்ன அதைத் த்வய மந்திரம் விளக்குகிறது.
“இதிலே திருமந்திரத்தில் சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அநுஸந்தித்திருக்கிறது” என்று
பிள்ளை லோகாச்சாரியார் அருளிச் செய்ததை இங்கு மேற்கோளாகக் காணலாம்.
“பகவத் கைங்கர்யமே ஒருவன் பெற வேண்டிய லட்சியம்” என்பது திருமந்திரத்திலும்
த்வய மந்திரத்திலும் சொல்லப்படுகையாலே தெளிவாகும்.

“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்று கூறினார் அன்றோ ஆழ்வார்.

உளம் தெளிந்து:-
மேற்கூறிய ஆன்மா பெறும் பயனாக கைங்கர்யத்தில் மனம் தெளிவடைந்து
அதாவது
வேறு வேறு பயன்களை விரும்புவதற்குக் காரணமான “யான்” “எனது” என்ற இரண்டு குற்றங்களைக் களைய வேண்டும்.
செய்யும் தொண்டுகள் அவன் உகப்புக்காகவே அமைய வேண்டும்.
இக்கருத்துக்களை ‘தனக்கே ஆக எனைக் கொள்ளுமீதே’ என்று நம்மாழ்வாரும்
‘உமக்கே நாம் ஆட்செய்வோம்’ என்று ஸ்ரீஆண்டாளும் அருளிச் செய்த பாசுரங்கள் கூறுகின்றன.
கைங்கர்யமே ஆத்மாவிற்கு மேலான பயன் என்று சொல்வதற்குத் தக்கபடி இதயம் தெளிவடைந்து செய்ய வேண்டும்.
இதனால் த்வய மந்திரத்தின் பின் கூற்றில் இறுதிப்பதமான நமப் பதத்தின் பொருள் சொல்லப்பட்டது.

பெற்ற பெரும் பேற்றின் மேலுளதோ பேரென்றிருப்பார் –
அதாவது
இக் கைங்கர்யமாகிற பெரும் பயன் கிடைத்தால் ‘இதைக் காட்டிலும் மேலான ஒரு பயன் இல்லை என்று
கைங்கர்ய்மாகிற பயனையே மேலான பயனாக எண்ணியிருக்குமவர்கள் என்கை.
“பரமபதம்” என்கிற இடம் என்றைக்கும் அழியாமல் ஒரே மாதிரியாக இருப்பது. சுத்த சத்வமயமானது.
ஞான ஆனந்தங்களுக்கு உற்பத்தி நிலம். அதனால் கைங்கர்யமாகிற பயன் தடையில்லாமல் செய்வதற்கு ஏற்றது.
இக்காரணங்களால் அதை ஞானிகள் விரும்புகிறார்கள்.
ஆகையால் கைங்கர்யத்திற்கு மேல் வேறு பயன் உண்டோ என்று சொல்வதில் எவ்வித தடையுமில்லை.
இத்தகைய உயர்ந்த கைங்கர்யத்தில் உறுதியாகயிருக்கும் ‘அவர்கள்’ என்று பொருள்.

அரும்பேறு வானத்தவர்க்கு –
கீழ்ச்சொன்ன அடியவர்கள் இயல்பாகவே தங்களை இறைவனுக்கு அடியவராக எண்ணியிருப்பவர்.
பகவத் கைங்கர்யத்திலேயே எப்பொழுதும் ஊன்றியிருப்பவர். பகவானையே பேரின்பமாகக் கொண்டிருப்பவர்.
இத்தகையவர் இவ்வுலகத்தில் காண அரியராக இருப்பார்.
இவர்கள் பரமபதம் சென்றால் அங்குள்ள நித்ய ஸூரிகள் முதலானார்களுக்கும் கிடைத்தற்கரிய
பொருளாகக் கொண்டாடுவதற்கு உரியவர்கள் ஆவார்.
இதனால் எப்பொழுதும் ஆரா அமுதமான பகவானையே அனுபவித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு
அப் பகவத் விஷயத்தை அனுபவிப்பதைக் காட்டிலும் இவர்களுடைய அனுபவம் பெறாப் பேறாக நினைத்து
அனுபவிக்கப்படுவார்கள் என்பது கருத்து.

—————-

த்வய மந்திரத்தில் முதற்கூற்றினால் சொல்லப்படுகிற அர்த்தம் பகவானுடைய திருவடிகளையே பற்றுவதாகும்.
இதற்கு ‘ஸித்தோபாய வரணம்’ என்று பெயர்.
‘ஸித்தோபாயம்’ என்றால் எப்பொழுதும் தயாராக இருக்கும் உபாயம் என்று பொருள்.
பகவான் எப்பொழுதும் தயாராக இருப்பதால் அவனுக்கு ஸித்தோபாயம் என்று பொருள்.
இத்தகைய எம்பெருமானை “நீயே உபாயமாக இருக்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்கிற போது
வேறு எந்த உபாயத்திலும் தொடர்பு கொள்ளலாகாது.
ஏதாவது உபாயங்களில் தொடர்புகள் இருந்தால் அத்தொடர்புகளை முற்றிலும் விட்டு விட்டே பற்ற வேணும்.
இதனால் எம்பெருமானை உபாயமாகப் பற்றுமவனுக்கு மற்ற உபாயங்களை
அறவே விட்டு விட்டுப் பற்ற வேண்டும் என்கிற நியதி ஏற்படுகிறது.

அதனால் மற்ற உபாயங்களை விடுவது முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது.
இவ்விஷயங்கள் கீதையின் சரமஸ்லோகத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
சரமஸ்லோகத்தை நன்றாக அறிந்து எம்பெருமான் திருவடிகளைப் பற்றும் போது
வேறு எந்த உபாயங்களிலும் ஈடுபாடு வராது.
தன்னுடைய அடிமைத் தன்மைக்கேற்ப தன்னுடைய எல்லாப் பொறுப்புக்களையும் அவனிடத்திலேயே ஒப்படைத்து
நிம்மதியாயிருப்பார்.
“நம்முடைய சகல க்ஷேமங்களுக்கும் எம்பெருமானே பொறுப்பாய் இருப்பவன்.
அதில் நமக்கு எவ்விதத் தொடர்புமில்லை” என்ற உண்மையை எண்ணிக் கொண்டு நிம்மதியாய் இருக்கும்
அவர்கள் நிலையை எண்ணித் தாமும் அவர்களில் ஒருவராகத் தம்மை நினைத்துத்
தம் நிலையைத் தாமே கூறுகிறார் இந்தப் பாடலில்.

தீர்த்த முயன்றாடுவதும் செய்தவங்கள் செய்வனவும்
பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் – சீர்த்துவரை
மன்னன் அடியோ மென்னும் வாழ்வு நமக்கீந்ததற்பின்
என்ன குறை வேண்டு மினி”–5-

பதவுரை:

முன் – மாபாரதப் போரில் (பார்த்தனை) மனம் கலங்கின அர்ஜுனனை
காத்தபிரான் – கீதோபதேசத்தால் மனம் தெளிவித்து காத்தருளி உதவி செய்த கண்ணபிரான்
பார்ப்பதன் முன் – திருக் கண்களால் நோக்குவதற்கு முன்பு
தீர்த்தம் – புண்ணிய நதிகளான கங்கை முதலிய தீர்த்தங்களில் (பாபம் கழிவதற்காக)
முயன்று – முயற்சிகள் செய்து
ஆடுவதும் – முழுகிக் குளிப்பதுவும்
செய்தவங்கள் – உடல் வருந்தச் செய்யும் நோன்புகளும்
செய்வனவும் – மற்றும் செய்யும் புண்ணியங்களும்
சீர்த்துவரை – சீர்மை மிகுந்த துவராபதிக்கு மன்னன் இறைவனான கண்ணன்
நமக்கு – அவனுடைய அடியவர்களான நமக்கு
அடியோம் என்னும் வாழ்வு – அடிமைத் தன்மையாகிற நற்செல்வத்தை
ஈந்ததற்பின் – அருளின பின்பு
இனி – இனி வரும் காலமெல்லாம்
வேண்டும் குறை என்ன – சாதனங்கள் பற்றியும் பலன்கள் பற்றியும் குறைபட வேணுமோ?
(எதைப் பற்றியும் குறைபட வேண்டாம் என்பதாம்)

தீர்த்தம் முயன்று ஆடுவதும் –
கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான புண்ணிய தீர்த்தங்களிலே பாபத்தைக் கழிப்பதற்காகப்
பெரிய முயற்சியோடே குடைந்து நீராடுவதும் அதாவது உடம்பு முழுவதும் நனையும்படி
நீரில் முழுகுதல் (தீர்த்தங்கள் புண்ணிய ஜலங்கள்)

செய்தவங்கள் செய்வனவும் – ஊன்வாட உண்ணாது…
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நின்றும் வீழ்கனியும், ஊழ் இலையும் என்னும்
இவையே நுகர்ந்து உடலம் தான் வருந்தி என்பது முதலான ஆழ்வார்கள் பாசுரங்களில் சொல்லுகிறபடி
உடலை வருந்துவதற்காகச் செய்யப்படும் நோன்புகள் பலவற்றைச் செய்வனவும்.
இங்குச் சொல்கிற தவங்கள் என்னும் பன்மையினால் தானம், யாகம் முதலிய புண்ணியங்களும் அடங்கும்.

பார்த்தனை முன் காத்தபிரான் பார்ப்பதன் முன் –
அதாவது
அர்ஜுனனுக்கு கண்ணபிரான் பகவத் கீதயில் கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் முதலான
வேறு வேறு உபாயங்களையெல்லாம் உபதேசித்தான்.
அவற்றை எல்லாம் கேட்ட அர்ஜுனன் அவற்றை செயலாற்றுவதில் உண்டாகும் அருமையையும்
எம்பெருமானுக்கு ஆன்மா அடிமையாய் இருத்தலால் அடிமையாய் இருப்பவன் ஒரு உபாயத்தைச் செய்வதற்கு
உரிமையில்லாதவனாக இருப்பதையும் எண்ணிப் பார்த்து, கண்ணன் சொன்ன கர்ம, ஞான, பக்தியாகிற
இவ் வுபாயங்களை நாம் எப்படிக் கடைப்பிடிப்பது என்று எண்ணி துன்பப்பட்ட அர்ஜுனனைப் பார்த்து கண்ணன் இவ்வாறு சொன்னான்.

“அர்ஜுனா, கீழே நான் உபதேசித்த கர்மயோக, ஞானயோக, பக்தியோகமாகிற உபாயங்கள் ஒன்றையும் நீ செய்ய வேண்டாம்.
நான் சொன்ன அவற்றை அறவே விட்டுவிடு. அவற்றை நெஞ்சாலும் நினையாதே. நான் நற்குணக் கடலாயிருப்பவன்.
அடியவர்க்கு எளியவன். அடியவர் பிழை பாராதவன் பிழை பொறுப்பவன். நுண்ணறிவுடையவன்.
மிக்க ஆற்றல் உடையவன். பலம் உடையவன். இவ்வாறான குணங்கள் பலவுமுடைய என்னையே நீ உபாயமாகப் பற்றுவாயாக.
என்னைப் பற்றும் போது “கண்ணன் நம்மிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான். அவனுக்கு எதையும் கொடுக்க வேண்டாம்,
என்று என்னைப் பரிபூர்ணனாக நினைத்துப் பற்றவேண்டும்.”

இவ்வாறு என்னைப் பற்றினால் அறிவு, ஆற்றல் முதலிய குணங்களையுடைய முழுமுதற் கடவுளாகிற நான்
உன்னுடைய அறியாமை, சோர்வு, திறலின்மை முதலிய குணங்களை எண்ணுவேன்.
என்னிடத்தில் உன்னுடைய அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்த நிலையும் எண்ணுவேன்.
“இந்த நிலையில் இருக்கும் உன்னை ஒருபொழுதும் நான் கைவிட மாட்டேன்.”
என்னை அடைவதற்குத் தடையாக என்னென்ன பாபங்கள் உன்னிடத்தில் இருக்கின்றனவோ
அந்தந்த பாவங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிப்பேன். ஆகையினால் நீ கவலைப்பட வேண்டாம்” என்று
அர்ஜுனனுக்கு உபதேசித்து அவனுடைய சோகத்தைத் தீர்த்து அவனைக் காத்தருளினான்.

இத்தகைய பேருபகாரம் செய்த பகவானுடைய அருள் கண் நோக்கம் பெறுவதற்கு முன்பு என்று
(இவ்வாறு கூறிய அதனால் கண்ணன் சொன்ன வார்த்தையின் அர்த்தம் நெஞ்சில் படுவதற்கு முன்பு என்றவாறு).

சீர்த்துவரை மன்னன் –
“பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரையென்னுமதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்” என்கிறபடி
வேறு ஒருவர்க்கு அன்றி தனக்கே உரியராய்த் தன்னை அன்றி வேறு உபாயத்திலோ
வேறு பலன்களிலோ தொடர்பு இல்லாதவராய் இருக்கும் தன் மனைவியர்க்கு
மணாளனாய்க் கொண்டு ஸ்ரீமத் துவாரகாபுரிக்கு தலைவனாயிருக்கிறவன்” என்று பொருள்.

அடியோம் என்னும் வாழ்வு –
மேற்படி அவனுக்கு நாம் அடிமைப்பட்டவர் என்றறிந்து ‘தன்னைக் காத்துக் கொள்வதற்காகத் தன் முயற்சியில்
ஈடுபடாமலிருக்கும் அதாவது அவனையே எதிர்நோக்கி இருக்கும் நற்செல்வத்தை நமக்குக் கொடுத்துவிட்ட பிறகு என்பது இதன் பொருள்.

இத்தொடரில் அடியோம் என்று கூறியதால்
ஆன்மா ஞான ஆனந்த குணங்களுக்கு இருப்பிடமாயிருந்தாலும் அவற்றைக் காட்டிலும் அடிமைத் தன்மையே
அதற்கு உண்மை இலக்கணமாகத் தெரிய வருகிறது. ஆன்மாவுக்கு இதுவே முக்கிய அடையாளமாகும்.

‘வாழ்வு’ என்பதால்
இவ்வடிமைத் தன்மையை அறியும்போது தன் முயற்சி ஒழிதல், தன் நலம் ஒழிதல் முதலிய நற்பண்புகள் உண்டாகின்றன.
இவையே ஆன்மாவுக்குரிய செல்வமான வாழ்வு என்பதாம்.

நமக்கு ஈந்ததற்பின் –
எப்பொழுதும் இவ்வடிமைத் தன்மை ஆன்மாவுக்கு இருந்தாலும் அதை இழந்திருந்த என்று பொருள்.
ஈந்ததற்பின் என்றது –
இவ்வுண்மை அறிவு உண்டானதும் அவனருளாலே என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு அவன் நமக்கு அடிமைச் செல்வமாகிற இந்நல்வாழ்வைக் கொடுத்து விட்ட பிறகு.

என்ன குறைவேண்டுமினி –
அதாவது,
இனிமேல் வரும் காலங்களில் உபாயத்தைப் பற்றியோ எந்தக் குறையும் படவேண்டியதில்லை.
இதனால் பகவான் ‘கவலைப்படாதே’ என்று அர்ஜுனனைப் பார்த்துச் சொன்னதில் நாமும் நம் காரியங்களில்
எந்த பிரச்சினைகளும் இல்லாமல் பொறுப்பு ஏதுமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று பொருள் சொல்லப்பட்டது.

————-

பகவானை அடைவதற்கு வழியாகக் கர்ம யோக, ஞான யோக, பக்தி யோகாதிகள் சாஸ்திரங்களிலே
சொல்லப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் நடைமுறையில் செயல்படுத்த முடியாதவை என்றும்,
ஆத்மாவின் அடிமை இலக்கணத்திற்கு முரணானவை என்றும்,
குற்றங்களைச் சொல்லிப் பல ஆதாரங்களைக் கொண்டு புறக்கணிக்கப்பட்டதால் இனி அவை தொடர வாய்ப்பில்லை ஆகிவிட்டது.
ஆத்மாவின் க்ஷேமத்திற்கு மேலே சொன்ன குற்றங்கள் அற்றுப் போன நிலையே பெரும் பேறாகும்.
ஆயினும் நீண்ட காலம் (பல பிறப்புக்களில்) ஐம்புலன் அனுபவங்களில் பழகிப்போந்த ஆத்மாவுக்கு,
சாஸ்திரங்கள் குற்றம் என்று கடிந்து பேசின செல்வத்தைக் கண்டால், அதன்மேல் ஆசை செல்லாதிருக்குமோ?
செல்வத்தின் கவர்ச்சி நெஞ்சை கலங்கப் பண்ணாதோ? என்னும் சாதாரண மானிடருடைய நிலையில்
இத்தகைய கேள்வி எழுந்தால் அதற்குத் தக்க பதில் இப்பாடல் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.

அதாவது, பகவானுக்குத் தொண்டு செய்து அதன் சுவையை அறிந்தவர்கள்,
செல்வத்துக்கு எல்லையான ப்ரம்மபதம் கிடைத்தாலும் அதை ஒரு பொருளாக விரும்பார்;
அற்பப் பொருளால் நெஞ்சு கலங்கமாட்டார்கள் என்று விடையளிக்கிறார்.
இதற்கு உதாரணம் ஸ்ரீராமாயணத்தில் சரபங்க முனிவரது வரலாற்றைக் காணலாம்.

ஸ்ரீராமபிரான் தண்டக வனத்தில் சரபங்க முனிவரது தவக்குடிலுக்குச் சென்றான்.
அப்பொழுது இந்திரன், முனிவரோடு உரையாடிக் கொண்டிருந்தான்.
அவன் சென்ற பிறகு ராமபிரான் முனிவரை அணுகி வந்தனை புரிந்து நிற்கையில் முனிவன் கூறினான்.
தமது ஞானக்கண்ணால் ஸ்ரீராமபிரானைப் பார்த்து ‘ஆழியில் அரிதுயிலவன்’ என மகிழ்ந்து
“இந்திரன் அருளினன் இறுதி செய் பகலா வந்தனன். மருவுதி மலர் அயன் உலகம் தந்தனென்”
“என் உரவோய்! அந்தமில் உயர்பதம் அடைதலை முயல்வேன்” என்று கூறினான்.

அதாவது, ப்ரம்மதேவன் முனிவனைத் தன் உலகத்திற்கு இந்திரனை அனுப்பி அழைத்துவரச்
சொன்னதாகவும் சரபங்க முனிவன், அவ்வுலகத்திற்கு நான் வரமாட்டேன் என்று சொன்னதாகவும்,
“நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன். இனி ஒரு வினை இலை:- விறலோய்!” என்று கூறி
இராமனைப் பார்த்துக் கொண்டே அந்தமில் உயர் பதமான பரம பதத்தை அடைந்தான் என்னும் வரலாறு கூறப்படுகிறது.

இத்தகைய சரபங்க முனிவன் பிரம்மபதத்தை ஒரு பொருளாக மதிக்காமல் இறை இன்பத்தையே கூறுவதால்,
உண்மையை உணர்ந்த ஞானிகளைச் செல்வம் கலங்கப் பண்ணாது என்பது கண்கூடு.
இப்பாடல் மூலம் இவ்வுண்மை உணர்த்தப்படுகிறது.

“புண்டரிகை கேள்வன் அடியார் அப் பூமிசையோன்
அண்டமொரு பொருள் ஆதரியார் – மண்டி
மலங்க ஒரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக்
கலங்கிடுமோ முந்நீர்க் கடல்”–6-

பதவுரை:-

புண்டரிகை -தாமரையில் பிறந்த லக்ஷ்மீ தேவிக்கு
கேள்வன் -மணவாளனான ஸ்ரீ ய::பதியின்
அடியார்-தொண்டராயிருப்பவர்கள்
அப்பூமிசையோன் -தாமரை மலரில் பகவானுடைய அழகிய கொப்பூழ் பிறந்த பிரமனின்
அண்டம் பதினான்கு =உலகங்கள் கூடின அண்டத்தை
ஒரு பொருளா -ஒரு சரக்காக
ஆதரியார் -மதிக்க மாட்டார்கள்
ஒரு மீன் =ஒரு மீனானது
மண்டி -தன் ஆற்றல் எல்லாவற்றோடும் நெருங்கி
மலங்க –நிலை குலைந்து கலங்கும்படி
புரண்ட மாத்திரத்தால் =இடப்புறமாக வலப்புறமாக புரளுவதால்
முந்நீர்க்கடல் -மூன்று வகையான நீர் சேர்ந்த கடலானது
ஆர்த்து =நிலை குலைந்து பேர் ஒலி செய்து
கலங்கிடுமோ -கலக்கத்தை அடையுமோ? அடையாது

“பண்டை நாளாலே நின்றிருவருளும் பங்கயத்தாள் திருவருளுங் கொண்டு” என்று நம்மாழ்வார் கூறினார்.
பகவான் பிராட்டி இவ்விருவருடையவும் சிறப்பான அருள் நோக்கினால், பண்டை வினைகளிலிருந்து திருந்தி
அதாவது
“யானே என்னை அறியகிலாதே, யானே எனதனதே என்றிருந்தேன், யானே நீ என் உடைமையும் நீயே” என்று பேசும்படி ஆனார்.
இத்தகையவர்கள் பகவானுக்கு அடிமையாய் இருக்கும் தன்மையையே தங்களுக்குச் சின்னமாகக் (முத்திரையாகக்) கொண்டு
அவனுகந்த பணியைச் செய்வது ஒன்றிலேயே திளைத்திருப்பார்கள்.

(அப்பூமிசையோன் அண்டம் ஒரு பொருளா ஆதரியார்). செல்வத்துக்குக் கடைசி எல்லையாக நூல்களில் சொல்லப்படுவது
பிரமபதம் நான்முகக் கடவுளுக்கிருக்கை. அப்பிரமன் திருமாலின் கொப்பூழ்த்தாமரையில் பிறந்தவன்
அவனுடைய மகிழ்ச்சிக்கு காரணமாயும் பதினான்கு அடுக்குகள் கொண்டதுமான
இப்பிரமாண்டத்தை அடியார்கள் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்கள் என்பதாம்.

உடலுக்கும் உயிருக்கும் வேறுபாடு காணாமல் உடலையே உயிராக எண்ணும் அறிவிலிகளுக்கும்
இவ்வான்மா பகவானுக்கு அடிமையாய் இருக்கும் என்பது அறியாமல்,
தான் என்றும், தனது என்றும் தன்னை சுதந்திரமாக நினைத்திருக்கும் மூடர்களுக்குமே செல்வம் இன்பகரமாய்
அடைய வேண்டிய குறிக்கோளாயிருக்கும்.

பகவானுக்கு அடிமையாயிருக்கும் சுவையை அறிந்தவர்களுக்குச் செல்வம் சுவையற்றதாய் அருவருக்கத் தக்கதாய் இருக்கும்.
ஆகையால் அச்செல்வத்தை இறைவன் அடியார்கள் ஆதரிப்பார்களோ? ஆதரிக்க மாட்டார்கள் என்றவாறு.

இவ்வாறு சொல்லலாமா? செல்வத்தினுடைய கவர்ச்சி மிகு எழுச்சி, தன்னை ஆசைப்படும்படி
எத்தகையவராக இருந்தாலும் அவர்கள் நெஞ்சை கலங்கப் பண்ணாதோ? என்ற இவ்வினாவிற்கு

“மண்டி மலங்க ஒரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக் கலங்கிடுமோ முந்நீர்க்கடல்” என்று பதில் சொல்கிறார்.
இதன் பொருள் –
ஒரு மீனானது தன் வலிமை எல்லாவற்றோடும் கூடித் தள்ளிக் கொண்டு நிலை குலைத்துக் கலங்கும்படி
இடம் – வலமாகப் புரண்ட மாத்திரத்தால் கடல் கலங்குமோ? என்பதாம்.

கடலுக்கு “முந்நீர்” என்று பெயர்.
ஆற்று நீர், ஊற்று நீர், மழைநீர் என்ற இம்மூன்றும் சேர்வதால் கடலுக்கு முந்நீர் என்று பெயர்.
மீனுடைய புரட்சியால் கடல் கலங்கினாலன்றோ
செல்வத்தின் எழுச்சி கண்டால் இறை அன்பர்களின் பற்றற்ற மனம் கலங்குவதாகும்.
ஆகவே, எத்தகைய பெருஞ்செல்வத்திற்கும் இறைவனடியார்கள் மனம் கலங்கமாட்டார்கள் என்பது பொருள்.

————-

அடிமைச் சுவை அறிந்தவர்கள் செல்வத்துக்கு எல்லையான பிரம்ம பதத்தையும் விரும்பார்கள் என்று கீழ்ச் சொல்லப்பட்டது.
இதில் இறைவனது அழகிலே தோற்ற அவனுக்கு அடிமையானவர்கள் வேறு விஷயங்களை ஆதரிக்க மாட்டார்களென்று கூறப்படுகிறது.

“தோளார் சுடர்த்திகிரி சங்குடைய சுந்தரனுக்
காளானார் மற்றொன்றில் அன்புசெய்யார் – மீளாப்
பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு
நரகன்றோ இந்திரன் தன் நாடு”–7-

பதவுரை:

தோளார் -திருத்தோள்களோடே சேர்ந்துள்ள
சுடர்த்திகிரி-ஒளியுடைய சக்கரத்தையும்
சங்குடைய சுந்தரனுக்கு-சங்கையும் அழகையும் உடையவனுக்கு
ஆளானார்-அடிமையானவர்கள்
மற்றொன்றில் -அவனைத் தவிர வேறு ஒரு பொருளில்
அன்பு செய்யார் -பற்றுச் செய்ய மாட்டார்கள்
மீளா -திரும்பவும் வராததும்
பொருவரிய -உவமை இல்லாததுமான
விண்ணாட்டில் -மாக வைகுந்தம் என்று சொல்லப்படும் வைகுந்தத்தில்
போகம் –பேரின்பத்தை
நுகர்வார்க்கு –துய்ப்பவர்க்கு
இந்திரன் தன் நாடு -இந்திரனுக்குரிய சுவர்க்கமும்
நரகன்றோ =துன்பமயமாகும் அன்றோ

“தோளார் சுடர்த்திகிரி சங்குடைய சுந்தரனுக்கு”
திருத்தோள்களோடு சேர்ந்திருந்துள்ள ஒளிமயமான திருவாழியையும் அழகிய சங்கத்தையும் ஏந்தியிருப்பதாலே
உண்டான அழகனுக்கு என்று பொருள்.
“மனைப்பாற் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதாரத் தோள்” என்ற பூதத்தார்

பாடலில் இறைவனின் தோள்களைக் கண்களால் ஆரத் தொழுபவர்கள்,
இவ்வுலகில் அனுபவிக்கும் சிற்றின்பத்தையெல்லாம் துறந்து விடுவார்கள் என்று கூறினார்.

ஸ்ரீராமாயணத்தில், இராமபிரானது தோள் அழகைக் கண்டவர்கள் வேறு எதையும் காணவில்லை (காண விரும்பவில்லை)
“தோள் கண்டார் தோளே கண்டார்” என்றும்,
“ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்” என்றும் விசுவாமித்திரர் வாயிலாகவும் கம்பர் கூறுகிறார்.

நம்மாழ்வாரும் ‘தோளுமோர் நான்குடைக் காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம்’ என்றார்.

திருமாலின் திருவழகுக்கு கண் எச்சில் வராமல் ஆரத்தி எடுக்க வேணும்.
அத்தகைய அழகைக் கண்டவர்களின் உலகப் பற்றுதல்கள் அனைத்தையும் அறுக்க வல்லதான திருத்தோள்கள் என்றும்
“அணியார் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்” என்றார் ஆழ்வார்.
திருவாழியும் ஏந்து கையால் வந்த அழகு கூடினால் அழகு இரட்டித்திருக்கும் என்று
சங்கு சக்கரம் ஏந்தின தோள் அழகை வருணித்தார்.

ஆளானார் –
இவ்வாறு இருந்துள்ள அழகை உடையவனுக்கு அவ்வழகுக்குத் தோற்று அடிமையானவர்கள் என்று பொருள்.
இறைவனுக்கு அடிமையாயிருத்தல் இரண்டு வகையாகச் சொல்லப்படுகிறது.
ஒன்று அவனுடைய தலைமைக்கு அடிமையாதல்
மற்றொன்று அவன் குணத்துக்கு அடிமையாதல்.

புண்டரீக கேள்வனடியார் – என்றவிடத்து
தலைமைக்கு அடிமை என்று சொல்லப்பட்டது.
‘சுந்தரனுக்கு ஆளானார்’ என்ற இவ்விடத்தில்
அழகாகிற குணத்திற்கு அடிமையாதல் சொல்லப்படுகிறது.
ஆகவே, இரண்டு வகையான வழிகளாலும் அடியவர்களைத் தோற்கடித்து ‘அடியேன்’ என்று எழுதிக் கொடுக்கும்படி
செய்யும் பகவானின் அழகிய பெருமை இருப்பதால்
இங்கு இப்பொழுது அழகுக்குத் தோற்று அடிமையானவர்களைச் சொல்கிறது.

மற்றொன்றில் அன்பு செய்யார் –
அதாவது
“ஆன்மாவின் இயல்புக்கும் பகவானின் குணங்களுக்கும் அடிமையானவர்கள், அவற்றிற்கு வேறாயிருக்கும்
இவ்வுலக விஷயங்கள் ஒன்றிலும் பற்றுக் கொள்ள மாட்டார்கள்.”
பரமபதமாகிற திருநாடு சுத்த சத்வ குணமயமானவை.
அதனால் இவை ப்ராக்ருதம் என்றும் அவை அப்ராக்ருதம் என்றும் சொல்லப்படும்.
இங்குள்ள பொருள்களெல்லாம் கணந்தோறும் மாறுபட்டுக் கொண்டிருக்கும்
அங்குள்ள பொருள்கள் என்றைக்கும் ஒரு படியாகவே இருக்கும்.
மற்றும் அங்குள்ள பொருள்கள் மனதைக் கவருவதாக இருக்கும்.
இவ்வாறாக, இவ்வுலகப் பொருள்களின் தாழ்வுகளையும் அவ்வுலகப் பொருள்களின் உயர்வுகளையும் ஆராய்ந்து அறிந்து
அந்தமில் இன்பத்து அழிவில் வீடு என்று கூறப்படுகிற அப்பரமபதமாகிற அப்பேரின்பத்திற்குத் தோற்றிருக்கும் அவர்கள்
இவ்வுலகப் பொருள்களை விரும்புவார்களோ? மாட்டார்கள்.
காரணம், இவ்வுலகப் பொருள்கள் மேலுக்குக் கவரிச்சியாயிருந்து உள்ளுக்குக் குற்றமுடையதாயிருக்கும்,
அருவருக்கத் தகுந்ததாயும் இருக்கும். ஆகவே இதை விரும்பமாட்டார்கள் என்றவாறு.

இவ்வுலக விஷயங்கள் குற்றமுடையதாயும் அருவரூக்கத் தகுந்ததாயும் இருந்தாலும்
சுவர்க்கம் முதலிய ஏனைய மேலுலகங்களிலுள்ள உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பொருள்களும் சிறப்பாகப் பேசப்படுகின்றனவே
அவற்றைக் கண்டால் அந்த சுவர்க்கம் முதலிய இடங்களில் பற்றுச் செய்யாதோ என்று கேள்வி எழுந்தால்
அதற்குத் தகுந்த பதில் சொல்லப்படுகிறது மேல் தொடரால்.

“மீளாப் பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு” என்று தொடங்கி
அதாவது
வீடுபேறு என்பது “அழிவில் வீடு” என்று கூறப்படுகிறது.
மறுபிறவி இல்லாதது முக்குணங்களுக்கு அப்பாற்பட்டுத் தூய சத்வ மயமானது. அளவு கடந்த ஒளிமயமானது.
தனக்கு உவமையில்லாதது. மேலான வானம் என்று புனைந்து பாராட்டப் பெற்றது.
இத்தகைய திருநாட்டில் இன்பத்தை நுகர வேண்டும் என்று அவா உடையவர்களுக்கு என்று பொருள்.

நரகன்றோ இந்திரன்தன் நாடு –
அதாவது
கீழே சொல்லப்பட்ட சுவர்க்கம் முதலிய உலகங்கள் புண்ணியத்தால் அடையப்படுவது.
புண்ணியம் கழிந்தவாறே அங்கிருந்து தலைகீழாக இம்மண்ணுலகில் விழும்படி இருப்பது.
சுவர்க்கத்திற்கு ஒப்பான மற்றும் பலபல லோகங்களையும் உடையதாய் வினைவயப்பட்ட இந்திரன் முதலிய
தேவர்களின் அனுபவங்களுக்கு இடமாய் உள்ளன.
இத்தகைய சுவர்க்கம் முதலிய உலகங்கள் நரகத்திற்கு ஒப்பாகும் அல்லவா?
ஆகவே அடுக்கடுக்காக உள்ள பதினான்கு உலகங்கள் கூடிய இவ்வண்டம்
பரமபதத்தில் வாழ்வாருக்கு துன்பத்திற்கிடமான நரகமேயாகும் என்பதாம்.

———–

வேறு பயன் ஒன்றையும் விரும்பாமல் பகவத் அனுபவ கைங்கர்யத்தையே பெரும் பயனாகக் கொண்டு
பகவானிடம் மிக்க அன்புடையவர்கள் அடிமை செய்யும் போது முறை தவறிச் செய்தாலும்
அதைப் பகவான் மிகவும் களிப்புடன் தலையால் தாங்குவான் என்று சொல்லப்படுகிறது.
கீதையில் தன் பக்தன் பக்தியோடு கொடுக்கும் இலை, பூ, பழம், நீர் ஆகிய அனைத்தையும்
நான் அன்போடு அருந்துகிறேன் என்று கூறுகிறான். இதில் இலை, பூ சேர்க்கப்பட்டுள்ளன.
பக்தன் அன்பினால் கொடுப்பதால் அது எதுவாயினும் அதை அருந்துவதாகச் சொல்வதால்
கொடுக்கிற பொருளைப் பார்க்காமல் அவன் நெஞ்சில் அன்பையே பார்த்து ஏற்கிறான் என்பதை உணரலாம்.
இக்கருத்து இப்பாடலில் கூறப்படுகிறது.

“முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில் வண்ணன்
கற்றைத் துழாய் சேர் கழலன்றி – மற்றொன்றை
இச்சியா அன்பர் தனக்கு எங்ஙனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து”–8-

பதவுரை:

புவனமெல்லாம் -எல்லா உலகங்களையும்
முற்ற உண்ட -ஒன்று விடாமல் அனைத்தையும் விழுங்கித் தன் வயிற்றில் வைத்துக் கொண்ட
முகில் வண்ணன் -மேகம் போன்ற திருமேனியை உடைய இறைவனின்
கற்றைத் துழாய்சேர் -தழைக்கின்ற திருத்துழாய் சேர்ந்துள்ள
கழலன்றி -திருவடிகளைத் தவிர
மற்றொன்றை -வேறு ஒரு பயனையும்
இச்சியா அன்பர் -விரும்பாத பக்தர்கள்
தனக்கு –இறைவனான தனக்கு
எங்ஙனே செய்திடினும் -அடிமைகளை எப்படிச் செய்தாலும்
உகந்து -மிகவும் மகிழ்ந்து
உச்சியால் ஏற்கும் -தலையால் ஏற்றுக் கொள்வான்

“முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில்வண்ணன்” –
அழிவு காலத்தில் அழிபடாமல் அனைத்து உலகங்களையும் ஒன்று விடாமல் தனது வயிற்றிலே வைத்துக் காக்கிறவன்
என்று கதை சொல்லப்படுகிறது.
இவ்வாறு உலகங்களைக் காத்தது பிறர்க்குச் செய்ததாக இல்லாமல் தன் பயனாகச் செய்பவன் என்ற கருத்தை
அவனது நீருண்ட காளமேகம் போன்ற வடிவின் நிறத்தைப் பார்த்தாலே தெரியும்.
மேகமும் பிறர்க்காகவேயிருப்பது.
பகவானும் பக்தர்களுக்காகவே இருக்கிறவன் என்ற குறிப்புப் பொருள் இங்குப் புலனாகிறது.

இப்போது இதைச் சொல்கிறது.
‘தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்’ என்ற பாசுரத்தில் சொன்னபடி
ஆபத்து காலத்தில் உலகங்களையும் அவையறியாதிருக்க, தானறிந்த உறவையே காரணமாகக் கொண்டு
தன் வயிற்றிலே வைத்து ரட்சித்தது தனக்கு லாபம் என்னும் கருத்தை தன் வடிவிலே தெரியும்படி இருந்தான்
என்று விளக்கம் சொல்லப்படுகிறது.
இதனால் வேறு பயன் ஒன்றையும் விரும்பாமல் தன்னிடம் மிக அன்புடையவர்கள் தன்னிடத்தில் செய்யும்
தொண்டுகளை ஆதரவுடன் ஏற்றுக் கொள்வான் என்னும் கருத்து குறிப்பால் உணரப்படுகிறது.

கற்றைத் துழாய் சேர் கழலன்றி –
இதில் பகவானுடைய திருவடிகளின் இனிமை சொல்லப்படுகிறது.
‘பூமியில் வளரும் திருத்துழாயைக் காட்டிலும் அவன் திருமேனியில் சாத்தப்பட்ட திருத்துழாய்
திருமேனியின் தொடர்பினால் தழை விடுகிறது. அத்தகைய தழைத்திருந்துள்ள திருத்துழாயோடே சேர்ந்திருந்துள்ள
திருவடிகளைத் தவிர என்பது பொருள்.
இக்கூற்றால் அவன் திருவடிகளில் உள்ள அலங்காரத்திற்கும் அழகுக்கும் சிறப்பு அறியப்படுகிறது

மற்றொன்றை இச்சியா அன்பர் –
இப்படியான மிக இனிமை பொருந்திய அவன் திருவடிகளை யொழிய
வேறு ஒரு பயனையும் விரும்பாத மிக்க அன்புடையவர்கள் என்பது இதன் பொருள்.

உலகில் பெரும்பாலும் பகவானை விரும்பாமல் அவனிடம் வேறு வேறு பயன்களைப் பெறுவதற்காக
அவனுக்கு ஏதோ உபசாரம் செய்வது போல செய்வார்கள். இது உலக இயல்பு.

இவ்வாறு இல்லாமல் ஸ்ரீஆண்டாள் அருளியபடி
“உனக்கு உகந்த நூறு தடா அக்கார வடிசலும் நூறு தடாவில் வெண்ணையும் சமர்ப்பிக்கிறேன்.
இதை நீ ஏற்றுக் கொண்டால் நூறை ஆயிரமாகப் பெருக்கிக் கொடுப்பதோடு நானும் உனக்கு ஆட்செய்வேன்” என்றாள்.
இது அவன் ஏற்றுக் கொண்டதற்குப் பலனாக சொல்லப்பட்டது.
அது போல பக்தர்கள் செய்யும் தொண்டினை அவன் ஏற்றுக் கொண்டால் மேலும் ஒன்றுக்கு மேல் பலவாகத்
தொண்டுகளே செய்வது பகவத் பக்தர்களின் இயல்பு.
இத் தகையவர்களுக்குப் பயன் கருதாமல் செய்யும் பண்புடையாளார் என்று பெயர்.

தனக்கு எங்ஙனே செய்திடினும் –
மேற்கூறிய அடியார்கள் தனக்கு அடிமை செய்யும் போது
அன்பில் வயப்பட்டு
முறையாகவோ
முறை தவறியோ
தொண்டுகளை எப்படிச் செய்தாலும்.

உச்சியால் ஏற்கும் உகந்து –
மிகவும் மகிழ்ச்சியுடன் தலையாலே ஏற்பான் என்பது பொருள்.

எங்ஙனே செய்திடினும் – உச்சியால் ஏற்கும் என்பதன் பொருள்.
பக்தன் காலாலே தூக்கி எறிந்ததையும் அவன் தலையாலே ஏற்பான் என்பதாம்.
உதாரணம் பெரியாழ்வார். (கண்ணனுக்காக) பெருமாளுக்காகத் தொகுத்து வைத்த மாலையை
ஸ்ரீஆண்டாள் தன் தலையில் சூட்டி அழகு பார்த்தாள்.
அம்மாலையில் ஸ்ரீஆண்டாள் தலையில் சிக்கிய கேசம் பின்னியிருப்பதைப் பார்த்த ஆழ்வார்
வெளியில் தூக்கி எறிந்து வேறு மாலையைக் கட்டிக் கொண்டு சென்றார்.
பெருமாள், ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்து எறியப்பட்ட அம்மாலைதான் தனக்கு வேணும் என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.
இன்றும் ஸ்ரீஆண்டாள் சூடின மாலையைப் பெருமாள் தலையால் சுமப்பதைக் காணலாம்.
இவ்வாறான பல உதாரணங்கள் காணலாம்.

—————–

பகவானிடம் வேறு பயன் எதையும் விரும்பாமல் அடிமை செய்தலையே விரும்பியிருக்கும்
அடியாரிடத்தில் அவனுக்குண்டான ஈடுபாட்டைக் கீழ்ப் பாடலில் கூறினார்.

இதில் கீழ்ச் சொன்ன ஈடுபாட்டைக் காட்டிலும் இன்னமும் அதிகமான ஈடுபாட்டைச் சொல்கிறார்.
இதில் பகவான்தான் பக்தர்களின் நெஞ்சைச் சோதனை செய்து அதைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்கிறான்.

அவ்வாறு நெஞ்சில் சோதனை செய்தாவது,
“இந்த நெஞ்சு நம்மை மட்டுமே நினைக்கிறதா?
நம்மிடம் ஏதாவது வேறு பயனை விரும்பி நம்மை நினைக்கிறதா?
எந்தப் பயனையும் நினைக்காமல் நம்மையே நினைக்கிறதா?” என்று ஆராய்ந்து பார்த்து
வேறு பயன் எதையும் விரும்பாமல் அவனை நினைப்பதுவே பயனாக எந்த நெஞ்சம் இருக்கிறதோ
அந்த நெஞ்சமே அவன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இடமாகும் என்ற கருத்து இங்கு சொல்லப்படுகிறது.

“ஆசில் அருளால் அனைத்து உலகும் காத்தளிக்கும்
வாச மலராள் மணவாளன் – தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறொன்றை
யெண்ணாதார் நெஞ்சத் திருப்பு”–9-

பதவுரை:

ஆசில் -குற்றமில்லாத
அருளால் -கருணையினால்
அனைத்து உலகும் -எல்லா உலகத்தையும்
காத்து -இரட்சித்து
அளிக்கும் –விருப்பங்களைக் கொடுக்கும்
வாச மலராள் மணவாளன் -தாமரையில் பிறந்த பிராட்டிக்கு நாயகனான பகவான்
தேசு பொலி -ஒளி மயமான
விண்ணாட்டில் -ஸ்ரீவைகுண்டத்தைக் காட்டிலும்
வேறு ஒன்றை எண்ணாதார் -தன்னையொழிய வேறு எதையும் நினைக்காதவர்களுடைய
நெஞ்சத்து -இதயத்தில்
இருப்பு -குடியிருப்பை
சால -மிகவும்
விரும்பும் -ஆதரிக்கும்

அருளுக்குக் குற்றமாவது என் எனில்?
ஒரு காரணத்தைப் பற்றி அருள் செய்தால் அவ்வருள் குற்றமாகும்.
அருளுக்கு இலக்கணம் கூற வந்த பரிமேலழகர்,
அருளாவது – தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை என்று கூறினார்.
இது துறவறத்திற்கு அடிப்படைப் பண்பாகக் கூறப்பட்டது.

அருளைப் பற்றி இவ்வாறு அறியும்போது இதோடு தொடர்புடைய அன்பைப் பற்றியும் அறிய வேண்டியதொன்றாகும்.
அதாவது மனைவி, மக்கள் முதலிய தொடர்புடையாரிடத்தில் செலுத்தும் அன்பு காதல் என்று விளக்கப்பட்டுள்ளது.
ஆகவே அதற்கு அருள் வேறுபட்டது.
தொடர்பு முதலிய எவ்விதக் காரணமும் இல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் கருணை தான்
பகவானுக்கும் பகவத் பக்தர்களுக்குமே உள்ள பண்பு என்று உணர வேணும்.

அனைத்துலகும் –
எல்லா உலகத்தையும்
பூமிக்கு மேலே ஏழு உலகங்களும் பூமிக்கு கீழே ஏழு உலகங்களுமாக மொத்தம் பதினான்கு உலகங்கள் என்று சொல்லப்பட்டுள்ளன.
இந்த பதினான்கிற்கும் சேர்த்து அண்டம் என்று பெயர்.
பூமிக்கு மேல் உள்ள ஏழு உலகங்களாவன:-
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனேலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்பன.
பூமிக்கு கீழ் உள்ள உலகங்களாவன:-
அதலம், விதலம், சுதலம், ரசாதலம், தலாதலம், மகாதலம், பாதாளம் என்பன.
ஆகவே இவை அனைத்துலகும் எனப்பட்டன.

ஒரு காரணத்தைப் பற்றி அருள் செய்வதானால் அவ்வருளில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும்.
பகவானுடைய அருள் எந்தக் காரணத்தைப் பற்றியும் நல்லவர் தீயவர் என்று பாகுபாடு பண்ணாமல்
எல்லோருக்கும் பொதுவாக இருப்பதால் ஆசிலருள் எனப்பட்டது.

இங்குச் சொல்லப்பட்ட உலகு என்ற சொல்
மக்களைக் குறிக்கும்.

காத்தளிக்கும் –
பக்தர்களுக்கு வேண்டாதவற்றைப் போக்கியும் வேண்டின விருப்பத்தைக் கொடுப்பதும் காத்தல் எனப்படும்.
இவ்விரண்டுமே இறைவனுடைய காக்கும் செயலாகும்.
வ்யாதி தீர்த்தல் ஒரு நன்மை.
அதுபோல வேண்டாததைக் கழித்தும் விரும்பியதைக் கொடுத்தலும் காத்தல் ஆகும்.
“காத்து” “அளிக்கும்” என்ற இரண்டு சொல்லும் ஒரே கருத்தைக் கூறுவதால் இவ்வாறு கூறப்பட்டது.

வாசமலராள் மணவாளன் –
“வேரி மாறாத பூமேலிருப்பாள்” என்று நம்மாழ்வார் அருளிச் செய்தபடி
தாமரையின் அழகு மாறாமையால் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கும் பெருமை உடையதும்
நறுமணம் அலை வீசுகின்றதுமான தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியார் என்று பொருள்.

அவளுக்குக் கணவனாகயிருப்பவன் என்று
வாசமலராள் மணவாளன் என்று எம்பெருமான் சிறப்பிக்கப்பட்டான்.

பெரிய பிராட்டியாருக்கு மணவாளன், “காத்தளிக்கும்” என்று கூறுவதால்
இறைவன் உலகங்களைக் காப்பதற்குப் பிராட்டியோடு கூடியிருந்து காக்கின்றான் என்றும்,
காக்கும் தொழிலில் பிராட்டிக்கும் முக்கிய பங்கு உண்டு என்றும் சொல்லும் வேதாந்தக் கருத்து இங்கு உணர்த்தப்படுகிறது.

மேலும் காத்தலுக்கு அடிப்படையான கருணை குணத்தைப் பிராட்டி
பகவானிடத்தில் தூண்டுகிறாள் என்றும்
அவ்வாறு இறைவன் உலக மக்களிடம் கருணை காட்டிக் காப்பதைக் கண்டு
மகிழ்தலும் பிராட்டியுடைய காரியமாகும் என்றும் அறியவேணும்.

இவ்வாறு பிராட்டியோடு கூடி நின்று ஆன்மாக்களைக் காப்பதில் பகவான் பண்ணின முயற்சி பயன் தரும்போது
அதாவது
இறைவனுடைய முயற்சிக்கு இலக்காகும் ஆன்மா சீர் திருந்தி (பண்டை வினைகளைப் பற்றோடு அறுத்து)
இறைவனைத் தவிர வேறு பயன்களை விரும்பாதவர்களாய்த் தூயனராகின்றார்கள்.
அத்தகைய தூய இதயத்தில் இறைவன் பண்ணும் அரவணைப்பின் சிறப்பு மேல் தொடரால் கூறப்படுகிறது.

தேசுபொலி விண்ணாட்டில் –
தேசுபொலி விண்ணாடு – பரமபதம், வைகுண்டம் என்று அழைக்கப்படுகிற அந்தமில் பேரின்பத்து அழிவில் வீடு என்பதாம்.
இது பெரிய பிராட்டியாரோடும் நித்ய சூரிகளோடும் பகவான் பேரின்பமாக எழுந்தருளியிருக்கிற இடம்.
இத்தகைய இன்பமிகு இடத்தைக் காட்டிலும்,

சால விரும்புமே –
மிகவும் உகந்திருக்கும் என்றவாறு.
ஏகாரம் ஈற்றசை இவ்வளவு ஆதரித்து நிற்கின்ற இடம் எது என்றால்
அது கூறப்படுகிறது மேல் தொடரால்.

வேறு ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்திருப்பு –
உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் என்று ஆழ்வார் இருந்தார்.
அவருக்குக் கண்ணனைத் தவிர வேறு பயன் எதுவும் தேவையில்லை.
அது போல, எல்லாப் பயன்களும் பகவானே என்று நினைத்து
வேறுபயன் எதையும் உள்ளத்தால் உள்ளலும் செய்யாமல் யார் இருக்கிறார்களோ
அவர்களுடைய இதயத்தில் இருக்கும் இருப்பு பரமபதத்தைக் காட்டிலும் மிக இன்பமாக இருக்கும் என்பது கருத்து.

—————

பகவானைத் தவிர வேறு பயன் எதையும் விரும்பாதார் உள்ளத்தில் இருந்தாலும்
அவ்விருப்பு அவனுக்குத் துன்பத்தைத் தருவதால் வெறுப்பாயிருக்கும் என்பதை இதில் அருளிச் செய்கிறார்.

பரமபதத்தைக் காட்டில் மிகவும் ஆதரவோடு இருப்பான் என்று கீழே சொன்னதற்கு மாறாக
இப்பாட்டில் வேறு வேறு பயன்களை விரும்புவாரது இதயங்களில் இருந்தாலும் அவ்விருப்பு
பகவானுக்கு துன்பத்தைத் தருவதால் பொறுக்க மாட்டாமல் இருக்கும் என்ற கருத்து இதில் கூறப்படுகிறது.

“நாளும் உலகை நலிகின்ற வாளரக்கன்
தோளும் முடியும் துணித்தவன்தன் – தாளில்
பொருந்தாதார் உள்ளத்துப் பூமடந்தை கேள்வன்
இருந்தாலும் முள் மேல் இருப்பு”–10-

பதவுரை:

நாளும் -நாள்தோறும்
உலகை -உலகத்தை எல்லாம்
நலிகின்ற -துன்புறுத்துகின்ற
வாளரக்கன் -வாளைத் தனக்குப் பக்கபலமாகக் கொண்ட இராவணனுடைய
தோளும் -இருபது தோள்களும்
முடியும் -பத்துத் தலைகளையும்
துணித்தவன் -அறுத்துத் தள்ளினவனான
பூ மடந்தை கேள்வன் தன் -திருமகள் நாயகனான இராமபிரானுடைய
தாளில் -திருவடிகளில்
பொருந்தாதார் -பற்றாதவர்களுடைய
உள்ளத்தில் -இதயத்தில்
இருந்தாலும் -கொள்கை அளவில் இருந்தாலும் அவ்விருப்பு
முள்மேலிருப்பு -முள் நுனியில் இருப்பது போன்றதாகும்

நாளும் உலகை நலிகின்ற –
ஏதோ ஒரு நாளில் அல்லாமல் தினந்தோறும் துன்புறுத்துகின்ற
அதிலும்
யாரோ ஒருவர் இருவர் என்றில்லாமல் உலகத்தார் அனைவரையும் துன்புறுத்துகின்ற,
துன்புறுத்துவதிலும்
சற்றும் இடையீடில்லாமல் ஒயாமல் துன்புறுத்துகின்ற என்று பொருள்.

வாளரக்கன் –
வாள் ஆயுதத்தையுடைய அரக்கன் இராவணன்.
சிவனை வழிபட்டு அவனிடம் பெற்றுக் கொண்ட வாளாயுதம்.
அதைத் தனக்குப் படைபலமாக பிடித்துக் கொண்டிருக்கும் அரக்கனான இராவணன் கூற்றாக
“சங்கரன் கொடுத்த வாளும்” என்ற கம்பன் கூறியது எண்ணற்குரியது.

தோளும் முடியும் துணித்தவன் –
இருபது தோள்களையும் பத்துத் தலைகளையும் அறுத்தவன்.
“நீள்கடல் சூழிலங்கைக்கோன் தோள்கள் தலை துணி செய்தான். தாள்கள் தலையில் வணங்கி,
நாள் கடலைக் கழிமினே” என்றார் நம்மாழ்வார்.
இதன் பொருளாவது: அவனைக் கொல்லும் போது “அகப்பட்டவன் அகப்பட்டான்”
தப்பி ஒடிப் போகாமல் கொன்றுவிடுவோம்” என்று எண்ணாமல் முதலில் அவனது இருபது தோள்களையும் அறுத்துத் தள்ளி.

“தான் போலு மென்றெழுந்தான் தரணியாளன்
அது கண்டு தரித்திருப்பானரக்கர் தங்கள்
கோன் போலும் என்றெழுந்தான் குன்ற மன்ன
இருபது தோளுடன் துணிந்த வொருவன் கண்டீர்”–(பெரிய திருமொழி-4-4-6)

“தலைகள் பத்தையும் வெட்டித் தள்ளி பொழுது போக
விளையாடினாற் போல கொன்றவன்
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னன்
சிரங்கள் பத்தறுத்து திர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்”–(திருச்சந்தவிருத்தம் – 802)

பூ மடந்தை கேள்வன் –
தாமரை மலரில் வசிப்பவளாயும்
மாருத யௌவனத்தை உடையவருமான பெரிய பிராட்டியாருக்குக் கணவனானவன்.

கீழ்ச்சொன்ன இராவணனை அழித்தற்குக் காரணம் நாட்டை நலிந்தது மட்டுமன்றி
பிராட்டியைப் பெருமாளிடமிருந்து பிரித்த செயலுமே முக்கிய காரணமாகும் –

“சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடு விசையரக்கன்
எரிவிழித்திலங்க மணிமுடி பொடி செய்து இலங்கை பாழ்படுப்பதற் கெண்ணி”–(பெரிய திருமொழி-5-5-7)

என்ற பாசுரத்தில் இராவணன் அழிவதற்கு முக்கிய காரணம் பெருமாளிடத்திலிருந்து பிராட்டியைப் பிரித்தது தான் காரணம்
என்று திருமங்கை ஆழ்வாரும் அருளிச் செய்திருக்கிறார்.
இவ்வாறு பிராட்டியும் தானுமாக இன்பமிக்க எழுந்தருளியிருக்குமவன்.

தன் தாளில் பொருந்தாதார் உள்ளத்தில் –
தன் திருவடிகளைப் பற்றி நிற்கும் போதே வேறு பயன்களில் மனதைப் பறிகொடுத்து தன் திருவடிகளில்
பொருத்தமற்றிருக்கும் பொய்யர்களுடைய உள்ளத்தில்.

‘பொருந்தாதார்’ என்ற சொல்,
தன் திருவடிகளைப் பற்றி நிற்கும் போதே என்ற பொருளைக் குறிப்பாக உணர்த்துகிறது.
வேறு பயன்களில் மனதைப் பறிகொடுத்தவர்கள் மனம் திருவடியில் பொருந்தி இருக்க முடியாதல்லவா!

இருந்தாலும் – என்ற சொல்லால்
வேறு பயன்களை விரும்புவார் மனதில் இருக்க மாட்டான் என்ற பொருள் குறிப்பாக உரைக்கிடக்கிறது.
தன்னிடம் வேறு பயனைக் கருதித் தன்னை வழிபடும் போலி பக்தருடைய வற்புறுத்தலுக்காக
அவர்கள் மனதில் இருந்தாலும் என்று பொருள்.

முள்மேல் இருப்பு –
முள் நுனியில் இருப்பது போன்றது.
அதாவது
பகவானுக்குத் துன்பம் தரக் கூடியதாகும் என்பதாம்.

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: