ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -91-100 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

கீழ்ப்பாட்டில் நரஸிம்ஹாவதார ப்ரஸ்தாவத்தினால் அவ்வவதாரத்திற்கு முந்தின வராஹாவதாரம்
ஸ்மரிக்கப் பட்டதாகி அதனைப் பேசி யநுபவிக்கிறார்.

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-

பதவுரை

ஊனக் குரம்பையின்–மாம்ஸத்தினாலாகிய (சரீரமாகிற) குடிசையிலே
உள் புக்கு–உள்ளே பிரவேசித்து [அதாவது- சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற் படியும்படி அதை நன்றாக ஆராய்ந்து]
இருள் நீக்கி–(நினைக்கிற அஜ்ஞாநமாகிற) இருட்டைப் போக்கி
ஞானம்–தத்வ ஜ்ஞாநமாகிற
சுdடர்–விளக்கை
கொளீஇ–ஏற்றி
ஏனத்து உரு ஆய்–வராஹ ரூபியாகி
உலகு இடந்த–(பிரளயங்கொண்ட) பூமியைக் குத்தி யெடுத்துக் கொணர்ந்த ஊழியான் -எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
நாள் தோறும்–எப்போதும்
மருவாதார்க்கு–ஸேவியாதவர்களுக்கு
வான் உண்டாமோ–பரம பதம் கிடைக்குமோ?[கிடைக்க மாட்டாது.]

“ஊனக்குரம்பையினுள்புக்கு” என்றது-
“தீண்டா வழும்புஞ் செந்நீருஞ் சீயு நரம்புஞ் செறிதசையும், வேண்டா நாற்றமிகு முடல்” என்று
பரம ஹேயமாகச் சொல்லப்பட்டும் காணப்பட்டும் இருக்கின்ற சரீரத்தின் தோஷங்களை யெல்லாம் செவ்வையாக ஆராய்ந்து என்றபடி.
இருள் நீக்கி-சரீரமே போக்யமென்று நினைக்கிற அஜ்ஞாநத்தை இங்கு இருளென்றார்;
சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற்படியவே இந்த அஜ்ஞாநம் நீங்குமென்க.
அஜ்ஞாநவிருள் நீங்கிற்றென்றால் ஞானச்சுடர் தன்னடையே கொழுந்துவிட்டோங்குமாதலால் அதனை இரண்டாமடியிலருளிச்செய்தார்.
ஆக, சரீரத்தைப்பற்றின அஜ்ஞாநம் தொலைந்து ஆத்மாவைப் பற்றின ஸத்ஜ்ஞாநம் திகழ்ந்து
ஞானப் பிரானது திருவடிகளை யடைந்தது வாழுமவர்கட்கே வானுலகம் எய்தலாகும்;
மற்றையோர்க்கு அஃதில்லை என்றதாயிற்று. சுடர் கொளீ இ-சுடர் கொளுவி; சொல்லிசையளபெடை.
உலகமெல்லா மழிந்த யுகாந்த காலத்திலும் தான் இவற்றை ஸத்தை யழியாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தவன்
என்னுங் காரணத்தினால் எம்பெருமானுக்க்கு ஊழியானென்று பெயராயிற்று.

————–

உலகமுண்ட பெருவாயனான யுனக்கு ஓரிடைச்சி கடைந்து வைத்திருந்த வெண்ணெயை வாரி விழுங்கி யுண்டவளவால்
பசி தீர்ந்ததாகுமோ? என்றவிதன் கருத்து யாதெனில்;
அவாப்த ஸமஸ்த காமனானவுனக்குப் பசி என்பதில்லை; வெண்ணெய் முதலியவற்றைக் களவு செய்து உண்டதெல்லாம்
பசி நீங்கி வயிறு நிறைவதற்காக வன்று; ஆச்ரிதருடைய ஹஸ்த ஸ்பர்சம் பெற்ற வஸ்துவை உட்கொண்டாலன்றித்
தரிக்க முடியாமையினால் உண்டாயத்தனை என வெளியிட்டபடியாம்.

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-

“வானாகி… மாருதமாய்” என்று இங்கே நான்கு பூதங்களைச் சொன்னது ஐந்தாவது பூதத்துக்கும் உபலக்ஷணம்;
இத்தால், பஞ்ச பூதங்களாற் சமைந்த இவ்வண்டத்திற்குள்ளிருக்கும் பதார்த்தங்கட்கு நிர்வாஹகனானவனே! என்றதாயிற்று.

தேனாகிப் பாலாந்திருமாலே! என்றது-பரமபோக்யனான உன்னை ஞனிகள் உட்கொள்ளக் கருதா நிற்க
நீ வேறொரு வஸ்துவை போக்யமாக நினைத்து உட்கொள்ளுவது என்னோ? என்ற குறிப்பு.

———–

புஷ்பத்தைக் காட்டிலும் மிகவும் ஸுகுமாரமான திருக்கையினால் முரட்டுடம்பனான இரணியனைத்தொட்டுப் பிடித்திழுத்து
ஆச்ரிதர்கட்கு ப்ராப்யமான திருவடிகளின் மேலே போட்டுக்கொண்டு மார்வைப் பிளந்தொழித்த பின்பும் பிரானே!
நீ உனது பற்கள் வெளித்தெரியும்படி நாவை மடித்துக்கொண்டிருந்தது ஏதுக்காக?
ஆச்ரித விரோதி முடிந்துபோன பின்பும் வெகு நாழிகை வரையில் சீற்றம் மாறாதேயிருந்தது ஏன்! என்று
கேட்கிறவிதன் கருத்து யாதெனில்;
எம்பெருமான் ஆச்ரித விரோதிகளின் மீது கொள்ளும் கோபமே சாணகதர்க்குத் தஞ்சமாவது என்ற அர்த்தத்தை காட்டினபடியாம்.

திருமங்கையாழ்வாரும் “கொடியவாய் விலங்கினுயிர் மலங்கக் கொண்ட சீற்றமொன்றுண்டுளதறிந்து
உன்னடியனேனும் வந்தடியிணையடைந்தேனணி பொழில் திருவரங்கத் தம்மானே!” என்றருளிச்செய்தது காண்க:

அவ்விடத்து வியாக்யானத்திலே “தரித்ரனானவன் தநிகனையடையுமாபோலே ‘ சீற்றமுண்டு’ என்றாய்த்து இவர் பற்றுகிறது–
விரோதி நிரசநத்துக்குப் பரிகரமிறே சீற்றம்” என்று பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செய்துள்ளதும் குறிக்கொள்ளத்தக்கது.

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக  வாய் மடுத்த தென் நீ பொறி யுகிரால்
பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா நின்
சேவடிமே லீடழியச் செற்று ——–93-

பதவுரை

பூ வடிவை ஈடு அழித்த–புஷ்பத்தின் ஸுகுமாரத் தன்மையை அடியோடு போக்கிய [ மிகவும் ஸுகுமாரமான]
பொன் ஆழி கையா–அழகிய திருவாழியைக் கொண்ட திருக் கையை யுடையவனே!
வயிறு அழல–(என்ன தீங்கு நேருமோ வென்று அநுகூலர்) வயிறெரியும்படி
வாள் உருவி வந்தானை–வாளை உருவிக்கொண்டு வந்தவனான ஹிரண்யனை
அஞ்ச–(அவன் உன் வடிவத்தைக் கண்டு) நடுங்கும்படி
நின் சேவடி மேல்–உனது திருவடிகளின் மேலே
(போட்டுக்கொண்டு)
பொறி உகிரால்–நாநா வர்ணமான நகங்களினால்
ஈடழிய செற்று–கட்டுக் குலைந்து போம்படி கொன்று
(பின்னையும் சீற்றம் மாறாமையால்)
எயிறு இலக–பற்கள் வெளித்தெரியும்படி
நீ வாய் மடித்தது–நீ வாயை மடித்துக் கொண்டிருந்தது
என்–ஏதுக்காக?.

எயிறிலகவாய்மடித்ததென்? என்ற இக்கேள்விக்கு வாய்த்த உத்தரம்:-
ஆச்ரித விரோதி விஷயதிலுண்டான இப்படிப்பட்ட அளவு கடந்த சீற்றமே உலகட்கெல்லாம் தஞ்சமென்று
மற்றும் பல பக்தர்களுக்குக் காட்டுதற்காகவாம் என்பது.

“பொன்னாழிக் கையால்” என்றும் பாடமாம்.

————-

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா -94-

பதவுரை

எழுந்து–(அநியாயம் மேலிட்டபடியால் லெளகிக பதார்த்தங்களை யெல்லாம் அடியோடு அழிக்கப் பெருமுயற்சியோடு) கிளம்பி
தீ விழித்து–(உள்ளே கொண்ட கோபம் வெளிக்குத் தெரியும்படி) நெருப்பெழ விழித்துப் பார்த்து
இந்த ஏழ் உலகும்–இவ் வுலகங்களை யெல்லாம்
செற்று–அழித்து
மற்று–பின்பு
இவை–“பிரளயத்தில் அழித்த இப் பதார்த்தங்கள்
சென்ற–(என்னிடத்து) அடங்கிக் கிடக்கின்றன “ (என்று சொல்லி)
ஆ என்று வாய் அங்காந்து–ஆ வென்று வாயைத் திறந்து
முற்றும்–ஸகல ஜகத்தையும்
மறையவற்கு–வைதிகனான மார்க்கண்டேய மஹர்ஷிக்கு
காட்டிய–(முன் போலவே யிருப்பதைக்) காட்டி யருளிய
மாயவனை அல்லால்–ஆச்சர்ய சக்தியுக்தனான எம்பெருமானைத் தவிர்த்து
(வேறொருவனை)
என் நா–எனது நாவானது
இறையேனும்–சிறிது
ஏத்தாது–துதிக்க மாட்டாது

கால கதியைக் கடந்து என்றும் பதினாறாக நீடூழி வாழும்படி நீண்ட ஆயுள்பெற்ற மார்கண்டேய முனிவன்
பத்திர நதிக்கரையில் தவம்புரிந்து நரநாராயணரது ஸேவையைப் பெற்று
‘யான் பிரளயக் காட்சியைக் காணுமாறு அருள்புரிய வேண்டும்’ என்று பிரார்த்திக்க,
அவ்வாறே அவர்கள் அநுக்ரஹித்துச் சென்ற பின்பு, மாயவன் மாயையால் மஹாப்ரளயந் தோன்ற,
அப்பிரளயப் பெருங்கடலிற் பலவாறு அலைப்புண்டு வருந்திய மார்க்கண்டேயன் அவ்வெள்ளத்தில்
ஆலிலையின் மீது ஒரு குழந்தை வடிவமாய் அறிதுயிலமர்கிற ஸ்ரீமந் நாராயணனைக் கண்டு
அப்பெருமானது திருவயிற்றினுட்புகுந்து அங்கிருந்த உலகங்களையும் ஸகல சராசரங்களையும் கண்டு
பெருவியப்புக்கொண்டனன் என்ற இதிஹாசம் அறியத்தக்கது.

பிள்ளைப்பெருமாளையங்கார் திருவரங்கத்தந்தாதியுலும் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியிலும் “
எய்த்த மார்க்கண்டன் கண்டிடவமலைக்கு முலகழியாதுள்ளிருந்த தென்னே” என்றும்
“ஆலத்திலை சேர்ந்தழியுலகை யுட்புகுந்த காலத்திலெவ்வகை நீ காட்டினாய்… வேதியற்கு மீண்டு” என்றும் பேசினவை காண்க

யுகந்த காலத்திலே உலகத்திலே அக்ரமம் விஞ்சி அதனால் எம்பெருமான் உக்கிரங்கொண்டு இவ்வுலகங்களை யெல்லாம்
அழித்துத் தன்னிடத்திலே யடக்கிக் கொள்வனென்னும் நூற்கொள்கை காட்டப்பட்டது முதலடியில்,
சென்ற- சென்றன என்றபடி; அன்சாரியை பெறாத வினைமுற்று.

————–

இவ்வுலகில் எல்லாருமே நற்கதி பெறுதற்கு யாதொரு தடையுமில்லை;
எளிதில் அநுஸந்திக்கக்கூடிய திருவஷ்டாக்ஷரம் ஸித்தமாயிருக்கின்றது;
அதைச் சொல்லுவதற்குக் கருவியான நாவும் கடவுளால் படைக்கப்பட்டிருக்கின்றது;
இப்படி இம்பெருமானை ஏத்துகைக்கென்று ஏற்பட்ட நாவைக் கொண்டு எம்பெருமானை ஏத்துகைக்கென்று ஏற்பட்ட நானக் கொண்டு
எம்பெருமானை ஏத்தாதே உபயோகமற்ற விஷயங்களைச் சொல்லுகைக்கு இதை கருவியாகக்கொண்டு
உலகத்தார் அநர்த்தப்படுகின்றார்களே! இஃது என்ன ஆச்சரியம்! என்று ஆழ்வார் வியக்கின்றார்.
“நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த்திநீ, ததாபி நரகே கோரே பத்ந்தீதி கிமத்புதம்,” என்ற
புராண ச்லோகத்தின் பொருளை இப்பாட்டால் அநுஸந்தித்தாராயிற்று

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் -95-

பதவுரை

நா–(ஸ்தோத்ரம் பண்ணுவதற்குக் கருவியான) நாக்கானது
(ச்ரமப்பட்டுத் தேடவேண்டாதபடி )
வாயில் உண்டே–ஒவ்வொருவருடைய வாயிலும் படைக்கப்பட்டிருக்கின்றதே;
ஓவாது–(ஸஹஸ்ராக்ஷரீமாலா மந்த்ரம்போலே இடையிடையே) விட்டு விட்டுச் சொல்லாமல்
உரைக்கும்–( எளிதாக ஒரு மூச்சிலே) சொல்லக்கூடிய
நமோ நாரணாய என்று உரை–திருவஷ்டாக்ஷர மந்த்ரம்
உண்டே–ஸித்தமாயிருக்கின்றதே;
மூவாத–கிழத்தன்மையற்ற [திரும்பிவருதலில்லாத]
மா கதிக்கண்–பரமப்ராப்யமான மோக்ஷத்திலே
செல்லும் வகையுண்டே–சென்று சேர்வதற்கேற்ற உபாயம் உண்டே;
(இப்படியிருக்கவும் உஜ்ஜீவிக்காமல்)
தீக்கதிக்கண்–விநாசத்துக்குக் காரணமான கெட்ட வழிகளிலே சிலர்
செல்லும் திறம் என்–போய் விழுகிறபடி என்னோ!.

முதலடியில் “நமோ நாரணா வென்று “ என்றே பெரும்பான்மையான நவீந பாடம் வழங்கிவரக் காண்கிறது;
இப்பாடத்தில் வெண்டளை பிறழ்தலால் “நமோ நாரணாய வென்று” என்ற ப்ராசீன பாடமே கொள்ளத்தகும்.
இனி நவீந பாடத்தையும் பொருந்தவிடலாம்; ‘நாரணா வென்றோவாதுரைக்கும்’ என்று ஸந்தியாக்காமல்
‘ந்மோநாரணாவென்று ஓவாது ’ என்று ஸந்தியாக்குக: குற்றியலுகரத்துக்கு முன் உடம்படுமெய் வந்த்தாகக் கொள்க.

ஓவாது உரைக்கும் உரை- ஸஹஸ்ரரக்ஷரீமாலா மந்த்ரத்தைச் சொல்லவேணுமானால் இடையில் மூச்சுவிடவும் முடியாதே;
நெடுமுயற்சிகொண்டும் ஓய்ந்து ஓய்ந்து சொல்லவேண்டிய அருமை யுண்டு; திருவஷ்டாக்ஷரம் அப்படியன்று;
இடையில் ஓய்வை அபேக்ஷியாமல் ஒரு காலே சொல்லி இளைப்பாறலாம் படியான மந்த்ரமிது.
இவ்வளவு ஸுலபமான மந்த்ரம் கைப்பட்டிருக்கவும் அந்தோ! சிலர் இழக்கிறார்களே! என்ன கொடுமை!

—————–

அந்தோ! சிலர் அநியாயமாக நரகவழி நோக்குகின்றனரே! என்று கீழ்ப்பாட்டில் உலகத்தாரைப் பற்றிக் கவலையுற்ற ஆழ்வார்,
இப்பாட்டில், அவர்கள் எங்ஙனே கெட்டொழிந்தாலும் ஒழிக;
நெஞ்சே! நீ மாத்திரம் ஸர்வநிர்வாஹகன் அப்பெருமானொருவனே யென்று நான் சொல்லுவதில் ஒரு போதும்
விப்ரதிபத்தி கொள்ளாமல் இதுவே பரமார்த்த மென்று உறுதிகொண்டிரு-என்று திருவுள்ளத்தை நோக்கி உபதேசிக்கின்றனர்.

திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்  புறம் தான் இம்
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய்  கடைக்கட் பிடி –96–

பதவுரை

என் நெஞ்சமே–எனது மனமே!
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான்–புண்யம் பாபம் எனப்படுகின்ற இருவகைக் கருமங்களுக்கும் நிர்வாஹகன்
செம் கண் மால் கண்டாய்–புண்டரீகாக்ஷனான எம்பெருமானே யாவன்;
இம்மண் தான்–இந்தப்பூமியும்
மறி கடல் தான்–அலையெறிகிற கடலும்
மாருதம் தான்–வாயுவும்
வான்–ஆகாசமும்
புறம் தான்–இவை தவிரவுள்ள மஹாந்முதலிய தத்துவங்களும்
(ஆகிய எல்லாவற்றுக்கும் நிர்வாஹகன்)
தானே கண்டாய்–அந்தத் திருமாலேயாவன்;
கடைக்கண்–முடிவாக ஆராய்ந்து பார்க்குமளவில்
(இதுவே உண்மையென்பதை)
திறம்பாது–தவறாமல்
பிடி–உறுதியாகக்கொள்.

————–

கீழ்ப்பாட்டில் “ அறம்பாவ மென்றிரண்டு மாவான்” என்றருளிச் செய்ததற்கு விவரணம் போலும் இப்பாட்டு.
புண்யமும் பாபமும் அவனிட்ட வழக்காயிருக்குமென்றிறே கீழ்ப்பாட்டிற்சொல்லிற்று; அப்படி எங்கே கண்டோமென்ன,
இரண்டுக்கும் இரண்டு வ்ருத்தாந்தங்கள் காட்டுகிறாரிதில்;

பிடி சேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை  மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –97–

பதவுரை

பிடிசேர் களிறு–பேடையோடு சேர்ந்து விஷய போக பரனான (கஜேந்த்ராழ்வானாகிற) ஆண் யானையை
அளித்த–காத்தருளின
பேராளா–மஹாநுபாவனே!
பொடி சேர்–(தான் பண்னின பாபத்துக்கு ப்ராயச்சித்தமாக) பஸ்மத்திலே சாயுமவனாகி
அனற்கு அம் கை ஏற்றான்–அக்நிக்கு(த் தனது) அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய
அவிர் சடைமேல்–ஒளிபொருந்திய ஜடையின் மேலே
பாய்ந்த–(அவனுடைய சுத்தியின் பொருட்டு) வந்து குதித்த
புனல்–ஜலமயமான
கங்கை என்னும் பேர்–கங்கையென்னும் பெயர் பூண்டுள்ள
பொன்–சிறந்த பெண்
உன்தன் அடிசேர்ந்து–உன்னுடைய திருவடிகளைக்கிட்டி
அருள் பெற்றாள் அன்றே–(பாபிகளைப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளைப் பெற்றாளன்றோ

ஸ்ரீ கஜேந்திராழ்வானை முதலை வாயினின்றும் விடுவித்துக் காத்தருளினமை ப்ரஸித்தம்.
அக்களிறு பூர்வஜந்மவாஸநையினால் பகவத்பக்தி மாறாதிருக்கப் பெற்றாலும் மற்றுள்ள காட்டானைகள் போலே
விஷயப்ரவணமுமாய்த் திரிந்துக்கொண்டிருந்தமை பற்றிப் பிடிசேர்களிறு என்றார். [பிடி- யானையின்பேடை.]
சாபத்தின் பலனாகப் பாபயோநியிற் பிறவிபெற்ற அவ்யானைக்கும் அருள் செய்யக் காண்கையாலே
பாபம் அவனிட்ட வழகாயிருக்குமென்பது பெறப்பட்டது.

பாபிஷ்டர்களையும் பரிசுத்தராக்குந் தன்மை கங்கைக்கு எம்பெருமானருளாலே வந்த தென்கையாலே
புண்யம் அவனிட்ட வழக்காயிருக்குமென்பது பெறப்பட்டது.
“ஆனின் மேயவைந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ” [ சுத்தியை விளைக்கக்கூடிய பதார்த்தங்களுள்
முதன்மையாகக் கூறப்படுகிற ’பஞ்சகவ்யமும் பரிசுத்தியும் உனது ஸங்கல்பத்தினாலாயது] என்றார் திருமழிசைப்பிரான்;
‘பஞ்சகவ்யம் பரிசுத்திகரமாகக் கடவது’ என்று ஸங்கல்பித்தது போலே
‘ கங்கை பரிசுத்திகரமாகக் கடவது’ என்றும் ஸக்கல்பித்து வைத்திருக்கையாலே புண்யம் நீயிட்ட வழக்கென்கிறது

————

கீழ்ப்பாட்டில், எம்பெருமானது திருவடியில் தோன்றிய கங்கையைச் சடைமேலே தரித்துக் கொண்டதனாலே
ருத்ரன் பாதகம் நீங்கிப் பரிசுத்தனாயினானென்றது; இப்படி ஏன் சொல்லவேண்டும்?
இதனால் ருத்ரனுக்கொருகுறை சொல்லலாமோ? அவனும் ஒரு ஸம்ஹாரக் கடவுளென்று பேர்பேற்று ஈச்வரனென்று
நாட்டில் கெளரவிக்கப் படவில்லையா? என்றொரு கேள்வி பிறக்க,
அவனுடைய ஈச்வரத்வம் எம்பெருமானுக்கு சரீர பூதனாகையாலே வந்ததித்தனையொழிய
இயற்கையாக இல்லையென்பதை மூதலிக்கக் கருதி இப்பாட்டருளிச் செய்கிறார்.

பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத் தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் -98-

பதவுரை

பொன் திகழும் மேனி–பொன்போல விளங்குகின்ற உடலையும்
புரி சடை–பின்னின சடைமுடியை யுமுடையவனாய்
அம்–அழகிய,
புண்ணியனும்–(ஸாதநாநுஷ்டானமாகிற ) புண்ணியத்தை யுமுடையனான ருத்ரனும்
நின்று உலகம் தாய நெடு மாலும்–நின்று உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஸர்வேச்வரனும்
என்றும்–எக் காலத்திலும்
இருவர் அங்கத்தால் திரிவர் ஏலும்–இருவராகி வெவ்வெறு வடிவத்தைக் கொண்டு இருந்தார்களே யானாலும்
ஒருவன்–சடை புனைந்து ஸாதநாநுஷ்டானம் பண்ணு மொருவனாகிய சிவன்
ஒருவன் அங்கத்து–நெடுமாலான மற்றொருவனுடைய சரீரத்திலே
என்றும்–எப்போதும்
உளன்–ஸத்தை பெற்றிருப்பன்.

அரியும் அரனும் தனித்தனி இரண்டு சரீரங்களை யுடையவராய்த் திரியா நின்றாலும்
அரனானவன் அரியினது திருமேனியின் ஒருபுறத்திலே யொதுங்கி ஒரு வஸ்துவாக ஸத்தை பெறுகிறான் என்றதாயிற்று.
“ பரன் திறமன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே” என்றார் நம்மாழ்வாரும்.

“புரிசடையம்புண்ணியன்” என்ற தொடரில் இவனுடைய வேஷமே இவன் ஈச்வரனல்ல னென்பதைக் காட்டுமென்ற கருத்தும்,
“ நின்றுலகம் தாயநெடுமாலும் “ என்ற தொடரில், ருத்ரன் தலையோடு மற்றவர் தலையோடு வாசியற
எல்லார் தலையிலுமாகத் தனது தாளை நீட்டியவனென்பதால்
அவனே ஸர்வேச்வரனென்ற கருத்தும் ஸ்பஷ்டமாக விளங்குதல் காண்க

ஒருவன் ஒருவனங்கதென்றுமுளன் – “வலத்தனன் திரிபுரமெரித்தவன் “ என்ற திருவாய்மொழியுங் காண்க.
“ஒருவனங்கத்து” என்பதற்கு. –ஸ்ரீமந் நாராயணனாகிய ஒருவனுடைய சரீரத்தின் ஏகதேசத்திலே என்றும்,
சரீர பூதனாகி என்றும் பொருள் கொள்வர்.

———–

தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார். திருப்பாற்கடல் திருவேங்கடம் முதலிய இடங்கள் எம்பெருமானுக்கு
வாஸஸ்தலங்களாயினும் அவ்விடங்களில் எம்பெருமான் வஸிப்பதானது
ஸமயம் பார்த்து ஞானிகளின் மனத்திலே புகுவதற் காகவேயாம்.
ஸ்ரீவாநபூஷனத்தில்— “திருமாலிருஞ்சோலைமலையே என்கிறபடியே உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும்
பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீரைத் தேகத்திலே பன்ணும்; அங்குத்தை வாஸம் ஸாதாநம்; இங்குத்தை வாஸம் ஸாத்யம்;
‘கல்லுங் கனைகடலும்’ என்கிறபடியே இதுஸித்தித்தால் அவற்றிலாதரம் மட்டமாயிருக்கும்” என்ற ஸ்ரீஸூக்திகள் காண்க.

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்  என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-

பதவுரை

நல் நெஞ்சே–எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமான்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்;
என்றும் உளன் கண்டாய்–எக்காலத்திலும் ( நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்;
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன்–நித்யவாளம்
கண்டாய்–பண்ணுமவன் காண்;
வெள்ளத்தின் உள்ளானும்–திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருள்பவனும்
வேங்கடத்து மேயானும்–திருமலையிலே நிற்பவனும்
உள்ளத்தின் உள்ளான் என்று–இப்போது நம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து நித்யவாஸம் பண்ணுகிறானென்று
ஓர்–தெரிந்துகொள்.

நெஞ்சே! ஸர்வரக்ஷகனான ஸர்வேச்வரன் திருப்பாற்கடல் திருமலை முதலிய இடங்களில் வந்து தங்கினது
விலக்காதார் நெஞ்சில் வந்து புகுவதற்காகவேயாதலால் அவன் இப்போது நம்முடைய நெஞ்சில்
ஆதரவோடு நித்யவாஸம் பண்ணலானான், இதனை நீ அறிந்து உவந்திரு என்கிறார்.

இதோ, நன்னெஞ்சே! என்று நெஞ்சை விளித்து ‘உள்ளத்தினுள்ளா னென்றோர்’ என்றது எங்ஙனே பொருந்தும்?
நெஞ்சமும் உள்ளமும் ஒன்றுதானே; நெஞ்சுக்கும் ஒரு உள்ளமிருப்பதுபோலச் சொல்லியிருக்கிறதே, இஃது ஏன்? என்னில்;
இது மிகச் சிறிய கேள்வி; தம்மிற்காட்டில் நெஞ்சை வேறுபடுத்தி விளிப்பது
அதைத் தனிப்பட்ட வொரு வ்யக்தியாக ஆரோபணம் செய்துகொண்டேயாதலால் இதுவும் ஒரு ஆரோபணமேயாம்.
நெஞ்சு தவிர உசாத்துணையாவார் வேறொருவரு மில்லாமையால் நெஞ்சை விளித்துச் சொல்லுகிறதித்தனை.

————

எம்பெருமானுடைய திருவடிகளை நாம் ஸாக்ஷாத்கரிக்கப் பெறவேண்டில்
அதற்கு அவனையே உபாயமாகக் கொள்ள வேணுமென்கிறது.
“மாயவனையே மனத்து வை” என்றது எம்பெருமானொருவனையே உபாயமாகக் குறிக்கொள் என்றபடி.
அப்படி அவனையே உபாயமாகக் கொண்டால் அவனுடைய உபய பாதங்களையும் ஸேவிக்கப் பெறுகை நமக்கு எளிதாம் என்றாராயிற்று.

ஓரடியும் சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
ஓர் அடியின்–(தனது) ஒப்பற்ற அடி வைப்பினாலே
தாயவனை–லோகங்களையெல்லாம் அளந்து கொண்டவனும்
கேசவனை–கேசியென்னும் அஸுரனைக் கொன்றவனும்
தண் துழாய் மாலை சேர்–குளிர்ந்த திருத்துழாய் மாலையோடு சேர்ந்தவனுமான
மாயவனையே–எம்பெருமானையே
மனத்து வை–மனத்தில் உறுதியாக்க் கொள்வாயாக (இப்படி அவனே உபாயமென்று உறுதி கொண்டால்)
ஓர் அடியும்–உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஒரு திருவடியும்
சாடு உதைத்த ஒண்மலர் சேஅடியும்–சகடம் முறிந்து விழும்படி உதைத்த அழகிய பூப்போன்ற திருவடியும் ஆகிய
ஈர் அடியும் காணலாம்–இரண்டு திருவடிகளையும் ஸேவிக்கப் பெறலாங்காண்

இப்பாட்டின் முதலிலுள்ள ‘ஓரடியும்’என்பதற்கு ‘உலகளந்த ஒரு திருவடியும்’ என்று பொருளுரைத்தது-
மேலே “ஓரடியின் தாயவனை” என்பதற்கேற்ப. கீழும் மேலும் பரவி இரண்டு திருவடிகளுமே உலகளந்தன வாதலால்
அத்திருவடியிணையை யெடுத்துக்கூறாது சகடாஸுரனை யுதைத்துத் தள்ளின திருவடியைக் கூட்டிக்கொண்டதென் னென்னில்;
விரோதி நிரஸநஞ் செய்யும் வல்லமையுடைமை தோற்றுதற்காக வென்க.
உலகளந்த திருவடியானது எல்லார் தலையிலும் ஏறி வீற்றிருந்து இஷ்டப்ராப்தி செய்வித்தது;
சாடுதைத்த திருவடியானது சகடாஸுரனுடைய வஞ்சனையில் நின்றும் (கண்ணபிரானாகிய ) தன்னைத் தப்புவித்த முகத்தால்
அநிஷ்ட நிவ்ருத்தி செய்வித்தது;
ஆகவே இஷ்டத்தை நிறைவேற்றுவித்து அநிஷ்ட்த்தை ஒழித்திடவல்ல திருவடிகளையுடையன் எம்பெருமான் என்று காட்டினாராயிற்று.

எம்பெருமானுடைய அவதாரங்கள் பலவற்றினுள்ளும் த்ரிவிக்ரமாவதாரமும் க்ருஷ்ணாவதாரமுமே இவ்வாழ்வார் தாம்
மிகவும் ஈடுபட்ட துறைகள் என்பதை விளக்குதற்கே உலகளந்த திருவடியையும் சாடுதைத்த திருவடியையும் பேசிப்
பிரபந்த்த்தை முடித்தருளினாரென்று பெரியோர் நிர்வஹிக்கும்படி.
பின்னடியிலும் “தாயவனைக் கேசவனை” என்றது காண்க.

உபாயமும் உபேயமும் எம்பெருமானே;
சைதந்ய கார்யமான இந்த அத்யவஸாயமொன்றே நமக்கு வேண்டியது-என்று அருளிச்செய்து
தலைக்கட்டினாராயிற்று.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: