ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -81-90 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

ப்ரயோஜநாந்தர பரர்கட்குங்கூடத் தன் திருமேனி நோவக் கடல் கடைந்து அமுதத்தை யெடுத்துக் கொடுத்து
அத்தேவர்கட்கு அஸுரஜாதியால் யாதொரு தீங்கும் நேரிடாதபடி ரஷித்தருளு மெம்பெருமானுடைய
திருநாமமே ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் உத்தாரகம் என்கிறார்.

ஆளமர் வென்றி யடு களத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி  வரை நட்டு நீளவரைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை -81-

பதவுரை

ஆள் அமர்–யுத்த வீரர்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும்
வென்றி–ஜெயத்தை யுடையதுமான
அடு களத்துள்–(எதிர்த்தவரைக்) கொல்லுகின்ற யுத்த களத்திலே
அஞ்ஞான்று–(அசுரர்களைத் தேவர்கள் மேல் விழுந்து நலிந்த) அக் காலத்திலே
வாள் அமர் வேண்டி–(அநுகூலரான தேவர்கட்கு வெற்றி யுண்டாகும்படி) மதிப்புடைய யுத்தத்தை விரும்பி.
(அதற்கு ஏற்ப)
வரை நட்டு–(தண்ணீரில் அமிழக்கூடிய, மந்த்ர) பர்வதத்தை மத்தாக நாட்டி.
நீள் அரவை சுற்றி–உடல் நீண்ட வாசுகி நாகத்தைக் கடை கயிறாகச் சுற்றி
கடைந்தான்–அமுத முண்டாகும்படி திருப்பாற் கடலைக் கடைந்தவனுடைய
பெயர்–திரு நாமம் (எப்படிப்பட்ட தென்றால்)
பற்றி–(ஸம்ஸாரிகளை) வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போய்
தொல் நரகை–பழமையாயிருக்கிற (ஸம்ஸாரமென்னும்) நரகத்தை
கடத்தும்–தாண்டு விக்கின்ற
படை–ஸாதனம்.

கடல்கடையுங்காலம் தேவாஸுரர்கள் பரஸ்பரம் பெரிய போர் புரியுங்காலமா யிருந்ததனால்
“ஆளமர் வென்றியடு களத்துள்” எனப்பட்டது;
“ஆராத போரி லசுரர்களுந் தானுமாய்க், காரார் வரை நட்டு நாகங்கயிறாகப், பேராமல் தாங்கிக் கடைந்தான்” என்று
சிறிய திருமடலிலுமருளிச் செய்யப்பட்டுளது.

நரகு என்றது ஸம்ஸாரத்தை.

———–

பெண் பிறந்தாரும் அநாயாஸமாக ஆச்ரயிக்கும்படி எம்பெருமான் திருமலையிலே
நித்ய வாஸம் பண்ணுகிறபடியை அநுஸந்திக்கிறார்.

படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-

பதவுரை

மேல் ஒருநாள்–முன்னொரு காலத்திலே [ஸ்ரீராமாவதாரத்திலே]
மான்–மாரீசனாகிற மாய மான்
மாய–இறந்து விழும்படி
எய்தான்–அம்பு தொடுத்து விட்ட இராமபிரான் (நித்திய வாஸஞ்செய்கின்ற)
வரை–மலையாவது,
படை ஆரும் வாள் கண்ணார்–வேலாயுதம் போன்று ஒலி பொருந்திய கண்களையுடைய பெண்கள்
பாரசி நாள்–த்வாதசியன்று
பை பூ தொடையலோடு–பசிய (வாடாத) மலர்களைத் கொண்டு தொடுத்த மாலையோடு கூட
ஏந்திய–திருவேங்கட முடையானுக்கு ஸமர்ப்பிக்கும்படி) ஏந்தியுள்ள
தூபம்–தூபமானது
இடை இடையில் மீன்–(ஆகாசத்தில்) நடுவே நடுவெ தோன்றுகின்ற நக்ஷத்ரங்கள்
மாய–மறையும்படி
மாசூணும்–மாசு ஏறும்படி பண்ணா நிற்கிற
வேங்கடமே–திருமலையே யாகும்.

திருமலையில் நாள்தோறும் நானாவகை யடியவர்கள் வந்து ஆச்ரயியா நிற்க,
‘படையாரும் வாள் கண்ணார்’ என்று ஸ்த்ரீகளை மாத்திரமும்
‘பாரசிநாள்’ என்று த்வாதசீ தினத்தை மாத்திரமும் விசேஷித்து எடுத்துச் சொன்னதன் கருத்து யாதெனில்;
அறிவொன்று மில்லாத பெண்களுங்கூட வந்து பணியுமாறு ஸர்வ ஸமாச்ரயணீயனாக இருக்குமிருப்பு விளங்குதற்காகப்
படையாரும் வாள் கண்ணர்’ என்றார்;
சிற்றஞ் சிறுகாலையில் தானே பாரணை செய்யும்படி விடிவதற்கு முன்னே வைஷ்ணவர் யாவரும் தொழுவதற்கு ஏற்ற
நாளாதல் பற்றி ஸத்வோத்தரமான த்வாதசிநாளை யெடுத்தருளிச் செய்தனர்.

‘த்வாதசீ’ என்னும் வடசொல் பாரசியெனச் சிதைந்தது. தூபம் – வடசொல்.

திருவாராதந உபகரணமான தூபத்தின் கமழ்ச்சியே திருமலையெங்கும் பரவிக் கிடக்கின்றதென்பது மூன்றாமடியின் கருத்து

————

ஆழ்வார் எம்பெருமானது ஆச்ரித பாரதந்திரியத்திலீடுபட்டுப் பேசினரென்க.

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை யேழ்   செற்றவா  றேன்னே உரவுடைய
நீராழி யுள்  கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் –83-

பதவுரை

உரவு உடைய–மிடுக்கை யுடைத்தான
நீராழியுள்–நீரை யுடைய திருப்பாற் கடலிலே
கிடந்து–திருக்கண் வளர்ந்து,
நேர் ஆ(ன)–எதிரியாக வந்த
நிசாசரர் மேல்–மதுகைடபர் முதலிய ராக்ஷஸர்களின் மீது
(அவர்கள் நீறாகும்படி)
பேர் ஆழி–பெரிய சக்ராயுதத்தை
கொண்ட–கையிற் கொண்டிருக்கிற
பிரான்–உபகாரகனே!
(இப்படி கருதுமிடஞ் சென்று பொருது கை நிற்க வல்ல திருவாழி யாழ்வானிருக்கவும் அவனைக் கொண்டு காரியங்கொள்ளாமல்)
வரை குடை ஆக–(ஒருவராலும் அசைக்கவும் முடியாத கோவர்த்தன) மலையே குடையாகவும்.
தோள் காம்பு ஆக–தனது திருத்தோளே அந்தக் குடைக்குக் காம்பாகவும் ஆக்கி
ஆ நிரை காத்து–பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து,
(நப்பின்னைப் பிராட்டிக்காக)
ஆயர் நிரை விடை ஏழ்–இடையர்கள் வைத்திருந்த திரண்ட ரிஷபங்கலேழையும்
செற்றவா  றேன்னே –முடித்த விதம் எங்ஙனே?

எம்பெருமானே! ஆச்ரிதர்களை ரக்ஷிப்பதும் ஆச்ரித விரோதிகளை சிக்ஷிப்பதுமாகிய இரண்டு காரியங்கள் உனக்கு உண்டு;
ஆச்ரித விரோதிகளை சிக்ஷிப்பது தானே ஆச்ரித ரக்ஷணமாகத் தேறுமாதலால் விரோதிகளைத் தொலைப்ப தென்கிற
ஒரு காரியமே போதுமாயிருக்கின்றது; அக்காரியஞ் செய்ய உனக்கு முக்கியமான ஸாதநம் திருவாழி;
அத்திருவாழியைக் கொண்டே ஆச்ரித விரோதிகளைப் பொடிபடுத்துகின்றாய்;
மதுகைடபர் முதலிய துஷ்ட வர்க்கங்களைப் பொடிபடுத்தின அவ்வாயுதம் கையிலேயிருக்கவும்,
ஆநிரையைக் காக்க மலையை யெடுப்பதும் நப்பின்னையைக் காக்க விடையேழடர்ப்பதும் முதலியனவாக
உடம்பு நோவக் காரியஞ்செய்த்து என்னோ?
திருவாழியை ஏவினால் இந்திரனது தலை அறுபடுமே; கல்மழை ஓயுமே; ஆயர்களும் ஆநிரைகளும் இனிது வாழ்ந்து போமே;
மலையை யெடுத்துப் பரிச்ரமப் பட்டிருக்க வேண்டாவே;
இங்ஙனமே, நப்பின்னைப் பிராட்டியை மணம் புணர்வதற்கு விரோதியாயிருந்த எருதுகளின் மேலும்
திருவாழியைப் பிரயோகித்திருந்தால் உனக்கொரு சிரமமின்றியே காரியம் இனிது நிறைவேறி யிருக்குமே;
இப்படி அநாயாஸமாக ஆச்ரித விரோதிகளை நிரஸிக்கும் முகத்தாலேயே ஆச்ரித ரக்ஷணத்தை மிக எளிதாகச்
செய்யலாமாயிருக்கவும் நீ உடம்புநோவக் காரியஞ்செய்தது வெறுமனேயோ?
ஆச்ரித பாரதந்திரியத்தால் அவர்கள் காரியத்தைச் செய்வதைப் பெறாப்பேறாக நினைப்பதனாலன்றோ? – என்று
ஆழ்வார் எம்பெருமானது ஆச்ரித பாரதந்திரியத்திலீடுபட்டுப் பேசினரென்க.

மூன்றாமடியில் ‘நேரான’ என்றிருக்க வேண்டிய பெயரெச்சம் ‘நேரா’ என்றிருக்கிறது.

‘நிசாசரர்’- வடசொல்; இரவில் திரிகின்றவர்கள் என்று காரணக்குறி.

————

எம்பெருமானே ‘நீ பெரிய வடிவு கொண்டு உலகளந்த காலத்து மிக விசாலமான அத் திருவடிக்குப் பர்யாப்தமாயிருந்த
பூமியானது வராஹாவதார காலத்தில் எயிற்றின் ஏக தேசத்திலும் அடங்காதிருந்ததென்று
புராணம் வல்லார் வாய்க் கேள்விப்படுகின்றோம்; இப்படியிருத்தற்கு ஹேதுவான உனது பெருமை
ஸர்வஜ்ஞனான உன்னால் தான் அறியமுடியுமோ முடியாதோவென்று ஸந்தேஹிக்கும்படியா யிராநின்றதே யன்றி
உன்பெருமை ஒருவராலு மறியக்கூடியதா யில்லை காண் என்றாராயிற்று.
உன்னால் முயர்வற மதிநலமருளப் பெற்ற என் போல்வார் உன் பெருமையை ஒருகால் கண்டறியக் கூடுமல்லாமல்
ஸ்வ யத்நத்தாலுணர விரும்புவார்க்கு ஒருநாளும் காணமுடியாதென்று கூறுதலும் உள்ளுறையுமென்ப.

பிரானுன்  பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-

பதவுரை

பிரான்–உபகாரகனே!
உலகு–லோகத்தை
உராய் அளந்த நான்று–எங்கும் ஸஞ்சரித்து அளந்த காலத்தில்
எந்தை–எனது ஸ்வமியான வுன்னுடைய
அடிக்கு–திருவடிகட்கு
அளவு போந்த–அளப்பதற்குப் போந்திருந்த
படி–பூமியானது
வராகத்து–வராஹ ரூபியான உன்னுடைய
எயிறு–திரு வெயிற்றின்
அளவு–ஏக தேசத்தளவும்
போதா–போதாதாக இருந்த
ஆறு–விதம்
என் கொல்–எங்ஙனேயோ?
உன் பெருமை பிறர் ஆர் அறிவார்–உனது பெருமையை யறிவார் யாருமில்லை

இரண்டாமடியில், உராய்-உலாய் [உலாவி] என்றபடி;
ரகர லகரங்கட்கு அபேதங்கொள்ளும் மரபினால் இவ்வாறு பொருள் கூறுதல் பொருந்தும்.
சிறிதும் சிரமமின்றி என்று கருத்து. இது பட்டருடைய நிர்வாஹம்.
இனி, ‘உரையாய்’ என்னும் முன்னிலையே வலொருமை வினைமுற்று ‘உராய்’ எனத் திரிந்திருப்பதாகக் கொள்ளலாமென்றான் ஒரு தமிழன்; ‘
சொல்லு’ என்று ‘பொருளாம்; அது வேண்டா. உராய்- உரோசிக் கொண்டு; எல்லாரோடும் தீண்டிக் கொண்டு என்றுமாம்.

————

கீழ்ப்பாட்டில் “பிரானுன் பெருமை பிறராரறிவார்” என்று ஆழ்வார்ருளி செய்யவே,
அவரது நெஞ்சானது “பிறராரறிவாரென்று சொல்லுவானேன்? நானறிந்திருக்கிறேனே:” யென்று அபிப்ராயங்காட்ட;
நெஞ்சே! நீயும் இந்திரியங்களை வென்று ஆச்ரயணத்திலே இழிந்தாயத்தனை யல்லது இன்னமும் அவன் படிகளை
ஸாக்ஷாத்கரிக்கப் பெற்றாயில்லையே; அப்படி ஸாக்ஷாத் கரித்திருப்பாயேல்,
அப்பெருமான் பெரிய திருவடியாகிற த்வஜத்தை யெடுத்துப் பிடித்துக்கொண்டு ஆச்ரித ரக்ஷணார்த்தமாக
எழுந்தருளும்படியை ஸேவிக்கப் பெற்றாயோ? அன்றி,
அவன் திருவனந்தாழ்வா நநுபவிக்குபடி தனது திருமேனியைத் தந்த வண்ணமாக யோக நித்திரை
செய்தருளும்படியை ஸேவிக்கப்பெற்றாயோ? ஏதேனும் ஸேவிக்கப்பெற்ற துண்டாகில் சொல்லிக்காண் என்கிறார்.

இதனால், எம்பெருமான் கருடாரூடனாயும் சேஷசயனனாயும் ஸேவை ஸாதிக்கப் பெறுதலில்
தமக்கு ஆசை கரை புரண்டிருக்கும் படியை வெளியிட்டாராகிறார்.

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப்   போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ –85-

பதவுரை

பொறி ஐந்தும்–பஞ்சேந்திரியங்களையும்
(வெளியில் மேயவொட்டாதபடி)
வடிவில் உள் அடக்கி–சரீரத்திற்குள்ளே அடங்கி யிருக்கச் செய்து
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதன ஸாமக்ரியான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் தரித்துக் கொண்டு
நெறி–ஆச்ரயிக்கும் மார்க்கத்திலே
நின்ற–நிலைத்து நின்ற
நெஞ்சமே–மனமே!
நீ–நீ
பாம்பு அணையினான்–சேஷ ஷாயியான பெருமானுடைய
புள் கொடி–கருடப் பறவை யாகிற த்வஜத்தை
கண்டு–ஸேவித்து
அறிதியே–அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? (அன்றி)
படி–அவனது திருமேனியை
கண்டு அறிதியே–ஸேவித்து அநுபவித்து அறிந்திருக்கிறாயோ?
கூறாய்–சொல்லு

—————-

“பாவருந்தமிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநாலிரவின், மூவருநெருக்கி
மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநன்னாடு” என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார்கள் [பொய்கையார், பூதத்தார், பேயார்]
மூவரும் ஒருவரை யொருவர் சந்தித்து அந்தாதி பாடின தலம் திருக்கோவலூர் என்பது ப்ரஸித்தம்.
இவ்வரலாற்றுக்கு மூலமாயிருக்கும் இப்பாட்டு.

பிரானே! நானும் மற்றையாழ்வார்க ளிருவரும் ஓடித் திரியும் யோகிகளாய் க்ராமைக ராத்ரமாய் ஸஞ்சரித்துப் போருகையில்
உனது ஸங்கல்பத்தாலே திருக்கோவலூரில் நெருக்கமானதொரு இடைகழியிலே வந்து சேர,
அங்கே நீ திருமகளோடு வந்து புகுந்து நெருங்கினாயே இஃது என்ன திருவருள்! என்று ஈடுபடுகின்றார்.

திருக்கோவலிடைகழியில் நெருக்குண்ட முதலாழ்வார்கள் மூவரும் ஸ்ரீமந்நாராயணனுடைய நீலமேக ச்யாமலமான திருமேனியையும்
காளமேகத்தில் மின்னற்கொடி பரந்தாற்போன்ற திருமகளாரையும் நெஞ்சென்னு முட்கண்ணாலே கண்டு அநுபவித்தபடியை
இவ்வாழ்வார் இங்கு வெளியிட்டருளினராயிற்று. [இவ்வரலாற்றின் விரிவு இவரது சரித்திரத்திற் காணத்தக்கது]

கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தமது திருவுள்ளத்தைக் குறித்து ‘நீ அவனை சாக்ஷாத்கரித்து அநுபவிக்கப் பெற்றாயில்லை’ என்று
சொன்னது பொறுக்க மாட்டாமல்
இவரிருந்த விடத்திலே எம்பெருமான் பிராட்டியுந் தானுமாகவந்து நெருக்க,
அதைக் கண்டு அனுபவிக்கிறார் என்று இப்பாட்டுக்கு அவதாரிகை கூறுதல் பரம ரஸம்,
“ இவர் தம்முடைய திருவுள்ளத்தைக் குறித்து ‘ஸாக்ஷாத் கரித்திலையிறே’ என்னைத் தரியானிறே அவன்” என்ற
பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதையும் அநுபவிக்கத்தக்கது.
முன்னே நடந்த திருக்கோவலிடை கழி நெருக்கத்தை எம்பெருமான் மீண்டும் அநுபவிப்பித் தருளினன் போலும்.

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-

பதவுரை

குன்று–கோவர்த்தன மலையை
எடுத்து–வேரோடு பிடுங்கி யெடுத்து
பாயும் பனி மறுத்த–மேலே வந்து சொரிகிற மழையை மேலே விழாமல் தடுத்த
பண்பாளா–குண சாலியே!
காமர் பூ கோவல்–விரும்பத் தக்க அழகிய திருக் கோவலூரில்,
வாசல் கடை–திருவாசலுக்கு வெளியே.
கழியா–வெளிப் பட்டுப் போகாமலும்
உள் புகா–உள்ளே புகாமலும்
இடை கழியே–நடுக் கட்டான இடை கழி யிடத்தையே
(பொய்கை பூதம் பேய் என்ற நாங்கள் மூவரும் தங்கியிருந்ததனால்)
பற்றி–விரும்பிய இடமாகக் கொண்டு
நீயும் திருமகளும்–நீயும் பிராட்டியுமாக
இனி–இப்போது
நின்றாய்–நின்றருளினாய்;
ஆல்–ஆச்சரியம்!

குன்றெடுத்துப் பாயும்பனிமறுத்த பண்பாளா! = கல்மழை காக்கக் கோவர்த்தனமெடுத்து நின்ற வக்காலத்து
இடையரிடைச்சிகளோடும் பசுக் கூட்டங்களோடும் நெருக்குண்டு நின்றாற்போலே யன்றோ
எம்மோடு நெருக்குண்டிருந்தாயென்ற குறிப்பு. ‘பனி மறைத்த’ என்றும் சிலர் பாடமோதுவர்.

வடமொழியில் ‘தேஹளீ’ என்னப்பட்டும், உலக வழக்கில் ‘ரேழி’ என்னப் பட்டும் வருகிற ஸ்தானமே
இடை கழிக்கு வெளியிலே ஸம்ஸாரிகளும், உள்ளே உபாஸகனான ரிஷியுமா யிருக்கையாலே
அநந்ய ப்ரயோஜநரான இவ்வாழ்வார்கள் மூவரும் நின்றவிடமே எம்பெருமான் தான் உவந்து சாருமிடமாகப் பற்றினானென்ப.

———–

கீழ்ப்பாட்டில் ஆழ்வாருடைய திருவுள்ளம் ஆநந்த்த்தின் எல்லையிலே நின்றது;
திருக்கோவலூரிடை கழியிலே பெருமானோடும் பிராட்டியோடும் நெருக்குண்டிருக்கும் நிலைமையிலேயே
இருப்பதாகத் தம்மை யநுஸந்தித்தார்;
இனித் தாம் உலகத்தாரை யெல்லாம் உபதேசங்களாலே நன்கு திருத்திப் பணி கொள்ளலாமென நிச்சயித்தார்.
அப்படியே எல்லாரும் திருந்தி எம்பெருமான் திருவடிகட்கு ஆட்பட்டுவிட்ட்தாகவும் பாவநா ப்ரகர்ஷத்தாலே அநுஸந்தித்தார்;
இனி எல்லாரும் ஈடேறி விட்டதாகவும் நரகத்துக்குச் செல்ல ஆள் கிடையாதாகவுங்கருதி
“நமன் தமர்காள்! நீங்கள் நரகவாசலை யடைத்துவிட்டு ஓடிபோகலாம்; இனி உங்கள் நாட்டுக்கு அதிதிகளாக வருவாராருமில்லை;
உங்கட்கும் காரிய மொன்றுமில்லை; இங்ஙனே உண்மையை எடுதுரைக்கின்ற என்மேல் நீங்கள் கோபங் கொள்ளவேண்டா”
என்று யம பரர்களை நோக்கி அதி கம்பீரமாக அருளிச் செய்கிறார்.

ஆழ்வாரருளிச் செயல்கள் நடமாடும் இந்த ஜம்பூத்வீபமே நாடு; மற்ற இடம் காடு என்ற பொருள் இதில் தொனிக்கும்.

” பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கி யாதொன்றுமில்லை”
என்ற திருவாய்மொழிப் பாசுரம் இங்கு அநுஸந்திக்கத் தகும்.

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித் தாள் கோமின் கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–

பதவுரை

கனி சாய-விளாம்பழம் உதிர்ந்து விழும்படி
கன்று–வத்ஸாஸுரனை
எறிந்த–எறி தடியாக எடுதெறிந்து இரண்டசுரரையும் முடித்த
தோளான்–திருத் தோள்களை யுடையவனான ஸர்வேச்வரனுடைய
கனை கழலே–ஆபரண த்வநியை யுடைய திருவடிகளை
கண்பதற்கு–ஸேவிப்பதற்கு ஸாதநம் (அவன் உகந்து வாழ்கிற திருக்கோவலூர்க்கு ஸமீபமான இடத்தில் வஸிப்பதுதானென்று)
நன்கு–நன்றாக
அம் நாவல் சூழ் நாடு–அழகிய ‘ஜம்பூ’ என்று பேர் படைத்த பரந்த த்வீ பத்திலுள்ள பிராணிகள்
அறிந்த–அறிந்து விட்டன;
(இப்படியானபின்)
எழு நரகம் வாசல்–ஏழுவகைப்பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனி–இனிமேல்
புகுவார் ஆர்–பிரவேசிப்பவர் யாவர்?
(ஒருவருமில்லை)
(ஓ யமகிங்கரர்களே!)
முனியாது–(உங்கள் ஸ்தானத்துக்கு அழிவுண்டாவதாகச் சொல்லுகிற என் மேல்) கோபங்கொள்ளமல்
மூரி தாள் கோமின்–(இனி ஒருகாலும் திறக்கமுடியாதபடி) பெரிய தாழ்ப்பாளைப் போட்டுப் பூட்டுங்கோள்.

ஈற்றடியில், அறிந்த- அன்சாரியை பெறாத வினைமுற்று; அறிந்தன என்றபடி.
நாட்டிலுள்ளவர்கட்கெல்லாம் இனி விரைவில் பகவத் விஷய ஜ்ஞாநம் உண்டாகியே விடும் என்ற நம்பிக்கையினால்
எதிர்காலச் செய்தியை இறந்த காலச் செய்தியாகவே கூறிவிட்டாரென்க.

எழுநரகம்- நரகங்கள் பல பல கிடக்கின்றனவே; ஏழுதானோவுள்ளது என்னில்;
கொடிய நரக வகைகளைப்பற்றி எழுநரகமென்றது;
அவை “ பெருங்களிற்று வட்டம் பெருமணல் வட்டம், எரியின் வட்டம் பூகையின் வட்டம், இருளின் வட்டம் பெருங்கீழ் வட்டம்,
அரிபடை வட்டமென எழுவகை நரகம்” என ஓரிடத்திலும்,
“கூட சாலங் கும்பீ பாகம், அள்ளலதோகதி யார்வம்பூ, செந்துவென்றேழுந் தீநரகப்பெயர்” என வேறோரிடத்திலும்
இன்னும் வரிவகையாகவும் தமிழ் நூல்களிற் கூறப்பட்டுள்ளன.
இனி, ரெளரவம், மஹாரெளரவம், தமச், நித்ருந்தநம், அப்ரதிஷ்டம், அஸிபத்ரம், தப்தகும்பம் என்று கூறுவாரும்
வேறுவகையாகக் கூறுவாரு முலர்.
இனி, “எழுநரகம்” என்ற இத்தொடர்க்கு-
எழுகிற நரகம் = சம்ஸாரிக லடங்கலும் சென்று புகுகிற நரகம் என்றும்,
கிளர்த்தியையுடைய நரகமென்றும் பொருள் கூறுதலுமுண்டு.

முனியாது – நரக வாசலில் எப்போதும் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு தாங்கள் கை சலிக்க நலியுமாறு
எந்தப் பாவி வரப் போகிறானென்று எதிர்பார்த்த வண்ணமா யிருக்கின்ற யம படர்களை நோக்கி
“ மூரித்தாள் கோமின் = கதவுகளைக் கெட்டியாகப் பூட்டிக்கொண்டுஒழிந்து போங்கள்” என்றால்
அவர்களுக்குக் கோபம் உண்டாவதற்கு ப்ரஸக்தியுள்ளதனால் ’முனியாது’ என்கிறார்.
உண்மை யுரைப்பவன் மீது கோபங்கொள்ளலாகா தென்கை.
மூரித்தாள் — மிக்க வலிமையுள்ள தாழ்ப்பாள். கோமின் என்ற வினைமுற்றில், கோ- வினைப்பகுதி;- தொடுத்தல்.

நாவல் நாடு – ஜம்பூத்வீபம்; அதிலுள்ள பிராணிகட்கு இடவாகு பெயர்.

————–

கீழ்ப் பாட்டில் “இனியார் புகுவாரெழுநரக வாசல்“ என்று கம்பீரமாக அருளிச் செய்து விட்டாலும்,
உண்டியே உடையே உகந்தோடுமிம் மண்டலத்தவர்கள் திருந்தி உய்வதென்பது எளிதன்றே;
அநாதி துர் வாஸநையை அற்ப காலத்தில் அகற்றப்போமோ?

நரகத்துக்கு ஆளில்லாமற் போகும்படி எம்பெருமான் அருகேயுள்ள திருக்கோவலூரி லெழுந்தருளி யிருக்கவும்
அவனைப் பற்றாமல் நரகத்துக்கு ஆளாகும்படி ஸம்ஸாரிகள் சப்தாதி விஷயங்களிலேயே மண்டித் திரிகிறபடியைக் கண்டாராழ்வார்;
தாமும் அவர்களைப் போல ஆகாதபடி தமது மநோ வாக் காயமென்னும் த்ரிகரணங்களும் அவ்வெம்பெருமான் விஷயத்திலேயே
ஊன்றி இருக்குமாற்றை உவந்து நினைந்து
’நாட்டில் உள்ளார் இவனை பெற்றாலென்? பெறாவிடிலென்? நான் நல்லபடியே ஈடேறலானேனே!’ என்று சொல்லி
தம் நிலைமைக்கு தாம் மகிழ்கிறார்.

“ நாடிலும் நின்னடியே நாடுவன்” என்றதானால் மநோவ்ருத்தியும்,
“பாடிலும் நின் புகழே பாடுவன்” என்றதனால் வாக்வ்ருத்தியும்
“சூடிலும் பொன்னாலியேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு” என்றதனால் சரீர வ்ருத்தியும் சொல்லப்பட்டனவாதலால்,
தமது மன மொழி மெய்கள் மூன்றும் பகவத் விஷயத்திலேயே அவகாஹித்தபடியை அருளிச் செய்தாராயிற்று.

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும்  நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு –88-

பதவுரை

நாடிலும்–(மனத்தினால்) தேடும் போது
நின் அடியே–உனது திருவடிகளையே
நாடுவன்–தேடுவேன்;
நாள் தோறும்–எப்போதும்
பாடிலும்–வாய் விட்டு ஏதாவது சொல்லும் போதும்
நின் புகழே–உனது புகழ்களையே
பாடுவன்–பாடுவேன்;
சூடிலும்–ஏதாவதுதொன்றைத் தலையில் அணிவதாயிருந்தாலும்
பொன் ஆழி ஏந்தினான்–அழகிய திருவாழியைத் தரித்து கொண்டிருக்கின்ற உன்னுடைய
பொன் அடியே–அழகிய திருவடிகளையே
சூடுவேற்கு எனக்கு–சிரோ பூஷணமாகக் கொள்பவனான எனக்கு
என் ஆகில் என்–எது எப்படியானாலென்ன?

ஈற்றடியில் “என் ஆகில்” என்பதற்கு- எனது கரண த்ரயமும் எம்பெருமானைப் பற்றின பின்பு நான்
இங்கு இருந்தால்தான் என்ன? பரமபதத்திற்கு போனால்தா னென்ன?
எல்லாம் எனக்கு ஒன்றே-என்பதாகக் கருத்துரைதலுமாம்.

‘சூடுவேற்கு’ என்பதே சூடுகின்ற எனக்கு ‘ என்று பொருள்பட விருந்தாலும்
ஈற்றடியில் “எனக்கு’ என்று தனியே பிரயோகித்துள்ளதனால்
சூடுவேற்கென்பது விசேஷணமாக மாத்திரம் பொருள்பட்டு நிற்கக் கடவது: சூடுகின்ற என்று பொருள்.
இங்ஙனமே பலகவிகளும் பிரயோகிப்பதுண்டு.

———–

இப்பாட்டும் கீழ்ப்பாட்டிற்கு சேஷபூதம். கீழ்ப்பாட்டில் ஓடின மகிழ்ச்சிப் பெருக்கே இதனிலும் பொலியும்.
த்ரிகரணங்களும் எம்பெருமான் திறத்தி லீடுபட்டு அடிமைச் சுவையைப் பூர்ணமாக அறிந்த தமக்கு
ஒப்பாவார் ஒருவரும் இல்லை என்கிறார். தமக்குண்டான ஏற்றத்தைப் பின்னடிகளிற் பேசுகிறார்;-

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் –89-

பதவுரை

எனக்கு–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்திர பூதனான எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே–ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்?
[எவருமில்லை;]
எம்பெருமான்–அந்த ஸர்வேச்வரனும்
தானே தனக்கு ஆவான் அல்லால்–தானே தனக்கு ஒப்பாவானே யல்லாமல்
மற்று–அவன் தானும் எனக்கு ஒப்பாக வல்லனோ?
(இப்படி நீர் சொல்லும்படி உமக்கு வந்த ஏற்ற மென்ன? என்னில்)
புனம் காயா பூமேனி–தனக்கு உரிய நிலத்தில் தோன்றிய காயாம்பூவின் நிறமும்
காண பொதி அவிழும் பூவைப் பூ–காணக் காணக் கட்டவிழா நிற்கும் பூவைப் பூவின் நிறமும்
வரம்–சிறந்ததான
மா மேனி–(அவனது) கரிய திருமேனியை
காட்டும்–எனக்குக் காட்டா நிற்கும்.
[ஆகையாலே, போலியான பொருள்களைக் கண்டும் அவனைக் கண்டதாகவே நினைந்து மகிழ்கிற
எனக்கு ஒருவரும் ஒப்பாகார் என்றது.]

காயாம்பூ, பூவைப்பூ முதலியவற்றைக் கண்டால் ஸாமாந்ய ஜனங்கள்
‘இவை சிலகாட்டுபூக்கள்’ என்று எண்ணி யொழிகின்றனர்;
அப்புஷ்பங்களை நான் கண்டாலோ அப்படி எண்ணுவதில்லை;
‘ இவை ஸாக்ஷாத் எம்பெருமானது திருவுருவம்’ என்றே நினைக்கின்றேன்;
ஆகவே, இப்படி போலியான பொருள்களைக் கண்டவளவிலும் அப்பெருமானையே கண்டதாக நினைந்து களிக்கின்ற எனக்கு
இவ்விபூதியில் நிகராவார் ஆருமில்லையே;
எம்பெருமானும் தனக்கு தான் நிகரானவனேயன்றி எனக்கு நிகரல்லன் – என்றாராயிற்று.

இப்படி எம்பெருமானது அடிமையி லீடுபட்டு அதன் மூலமான செருக்கைக் கொல்லுதல் அடிக்கழஞ்சு பெறுதலால்தான்
“ எனக்கினியார் நிகர் நீணிலத்தே” என்றும்
“எனக்காரும் நிகரில்லையே என்றும் மற்றையோரு மருளிச்செய்வது.
இவ்வஹங்காரம் ஹேயமன்று ; உபாதேயமேயாம்.

“பூவையுங் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவிமலரென்றுங் காண்டோறும்,
பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவையெல்லாம் பிரானுருவே யென்று” என்ற
பெரிய திருவந்தாதிப் பாசுரம் இங்கு ஸ்மரிக்கத்தகும்

—————-

எம்பெருமான் தன்னளவிலே ஆஸுர ப்ரக்ருதிகள் எத்தனை அபசாரப் பட்டாலும் அதனால் சிறிதும் திருவுள்ளம் சீற மாட்டான்;
தன்னடியவர் பக்கல் அபசாரப் படுமளவில் அவ்வபராதிகளைப் பங்கப்படுத்தியே தீருவன் – என்கிற அர்த்தம்
இப்பாட்டிலருளிச் செய்யப் படுகிறது
“மாதவனே!, நீ இரணியனை ஊனிடந்ததானது (அவன்) நின் பாதம் சிரத்தால் வணங்கானா மென்றே?” என்ற வினாவினால் –
இரணியன் உன் பக்கலிலே விமுகனாய்க் கிடந்தானென்னுங் காரணத்தினால் அவனை நீ கொன்றொழித்தாயல்லை;
பரம பாகவதனான ப்ரஹ்லாதன் திறத்திலே அவன் பொறுகொணாக் கொடுமைகளைப் புரிந்தானென்பது பற்றியே
அவனை யொழித்தாய் என்ற ஸமாதாநம் வெளியிடப்பட்டதாகும்.

“ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமை யென்று ஜீயரருளிச் செய்வர்”
என்று ஸ்ரீவசநபூஷணத்திற் பாசுரம். அதாவது-
ஸங்கல்ப மாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்க வல்ல ஸர்வ சக்தியான ஸர்வேச்வரன்
தன்னை யழிய மாறி இதர ஸஜாதீயனா யவதரித்துக் கைதொடனாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரஸந ரூபமான
அதிமாநுஷ க்ருத்யங்களெல்லாம் ப்ரஹ்லாதன் மஹர்ஷிகள் முதலான பாகவதர் திறத்தில் அவ்வவர் பண்ணின
அபசாரம் ஸஹியாமையாலே என்று நஞ்சீயரருளிசெய்வராம். இவ்வர்த்தமே இப்பாட்டி லருளிச்செய்யப்படுகிறது.

எம்பெருமான் தன்னளவிலே தீரக்கழிய அபராதப் படுமவர்களைபற்றி ஒன்றும் கணிசியான்;
ஆச்ரிதர் விஷயத்தில் ஸ்வல்பாபராகம் பண்ணுவானுண்டாகிலும் அவனை அப்போதே தலையறுத்துப்
பொகடுவானென்பது இதிஹாஸ புராண ப்ரஸித்தம்

[”த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயாமம”] இராமபிரான் எழுந்தருளி நிற்கச்செய்தே
இராவணன் கோபுர சிகரத்திலே வந்து தோற்றினவாறே ‘ராஜத்ரோஹியான இப்பயல் பெருமாள் திருமுன்பே நிற்கையாவதென்? ‘
என்று ஸுக்ரீவ மஹாராஜர் அவன்மேலே பாய்ந்து வென்று வந்தபோது அவரை நோக்கிப் பெருமாள் இங்ஙனே அருளிச்செய்கிறார்;—
நீர் மஹாராஜரான தரம்குலைய [உம்மைத் திரஸ்கரித்து] அந்த ராக்ஷஸப்பயல் ஒருவார்த்தை சொன்னானாகிற் பிறகு
ஸீதைதானும் எனக்கு ஏதுக்கு?, என்றார்.
ஆச்ரித விஷயத்திலே; எம்பெருமானுடைய பக்ஷபாதம் இப்படியன்றோ இருப்பது.

தன் உயிர்நிலையான பாகவதர்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால், தனக்குத் தீங்குநேரும்போது பிறக்கும் சீற்றம்
அற்பமென்னும்படி சீற்றம் பெருகிச்செல்லும். தான் ஸமுத்ரராஜனை சரணம் புகச்செய்தேயும் அவன் முகங்காட்டிற்றில்லனாக,
“ கோபமாஹாரயத் தீவ்ரம்” என்னும்படி சீற்றத்தை வரவழைத்துக் கொண்டார் பெருமாள்;
பின்பு இராவணனாலே அனுமான் நோவுபட்டபோது
“ததோ ராமோ மஹாதேஜா: ராவனேநக்ருதவ்ரணம் – த்ருஷ்ட்வா ப்லவக சார்தூலம் கோபஸ்ய வசமேயிவாந்.” என்னும்படி
கோபமிட்ட வழக்கானார். இங்ஙனேயிறே பாகவத விஷயத்திலே எம்பெருமானுக்குள்ள பரிவின் மிகுதியிருப்பது-

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –90-

பதவுரை

மாதவ–திருமாலே!
ஈர் அரி ஆய்–(இரண்டு கூறாகக்) கிழித்துப் போட வேண்டிய சத்துருவாகி
நேர் வலியோன் ஆய்–எதிர்த்து நின்று போர் செய்யும் வலிவை யுடையனாகிய
இரணியனை–ஹிரண்யாஸுரனது
ஊன்–சரீரத்தை ,
ஓர் அரி ஆய்–ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாகி
உரத்தினால்–உனது மிடுக்கினாலே
நீ இடந்தது–நீ உன் நகங்களினால் குத்திக் கீண்டதானது,
வரத்தால்–(பிரமன் முதலானவர்கள் கொடுத்த) வரத்தினால் (தனக்கு உண்டான)
வலி–பலத்தை
நினைந்து–பெரிதாக மதித்து
நின் பாதம்–உனது திருவடிகளை
சிரத்தால்–தனது தலையினால்
வணங்கானாம் என்றே–வணங்காமலிருந்தானென்ற காரணத்தினாலோ?
(அன்று; பக்தனான ப்ரஹ்லாதனை நலிந்தானென்ற காரணத்தினாலே.)

இரணியன் எம்பெருமான் திறத்திலே நேராக அபசாரப்பட்டுத் திரிந்த நாள்கள் எண்ணிறந்தவை யுண்டு;
அந் நாட்களிலே எம்பெருமானுடைய திருவுள்ளம் அவ்வரக்கனளவிலே சிறிதும் விகாரப்படவில்லை;
பள்ளியிலோதி வந்த தன் சிறுவன் வாயிலோராயிர நாமம் ஒள்ளிய வாகிப் போத ஆங்கதனுக்கு ஒன்றுமோர்
பொறுப்பிலனாகிப் பிள்ளையைச் சீறிவெகுண்டு நலிந்தானென்று அறிந்தவாறே
“நம்மளவிலே எத்தனை தீம்பனயிருந்தாலும் பொறுத்திருப்போம்;
நம்முடையனான சிறுக்கனை நலிந்தபின்பும் பொறுத்திருக்கவோ” என்று ஆறியிருக்க மாட்டாதே
அப்போதே வந்துதோன்றிப் புடைத்தானாயிற்று .

இப் பாட்டில் வினா மாத்திரமே யுள்ளது; விடை யில்லை; அதனை வரதராஜஸ்தவத்தில் கூரத்தாழ்வான் வெளியிட்டருளினர்.
“யதபராதஸஹஸ்ரம்” என்ற அறுபதெட்டாம் ச்லோகம் இப் பாசுரத்திகே விவரணமாக அவரித்ததென்க.

”வரத்தால் வலி நினைந்து” என்ற தொடரில் –இரணியன் தனக்கு வரங்கிடைத்ததைப் பெரிதாக நினைத்தானே யல்லாமல்
வரங்கொடுதவர்களின் சக்தி ஸ்ரீமந்நாராயணனுடைய அதீநம் என்பதை நினைத்தானில்லை- என்ற கருத்துத் தோன்றும் .
ஈர் அரி-பெரிய சத்ரு என்றுமாம்.
ஓர் அரி-ஓர்தல்-தியானித்தல்;
(பக்தர்களால்) தியானிக்கப்படுகின்ற நரசிங்கம் என்னவுமாம்.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: