பகவத் விஷய வாஸநையே யறியாத நாட்டார்க்கு உபதேசித்தார் கீழ்ப் பாட்டில்;
அரஸிகர்களான உலகத்தவர்க்கு உபதேசிப்பதைவிட பகவத் விஷய ரஸமறிந்த நமது நெஞ்சுக்கு உபதேசிப்பது நன்று
என்று கொண்ட ஆழ்வார் இப்பாட்டில் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்.
பரமைஸ்வர்யமாயினும் கைவல்ய மோக்ஷமாயினும் அல்லது அவ்விரண்டுமே யாயினும் உனக்குக் கிடைப்பதாயிருந்தாலும்
அவற்றை நீ உதறித் தள்ளி விட்டு நம்முடைய விரோதிகளைப் போக்கி ந்ம்மைப் பாதுகாப்பதற்காகவே
எப்போதும் கையந்திருவாழி யுமாயிருக்கிற எம்பெருமானை மறவாமல் அவனிடத்தில் அன்பை உறுதியாகக்கொள் என்று
பால் குடிக்கக் கால் பிடிப்பாரைப்போலே தமது நெஞ்சை வேண்டுகின்றார்.
நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
நின்று நிலமுழுது மாண்டாலும் -என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —–71–
பதவுரை
ஆழி நெஞ்சமே–(எம்பெருமானிடத்தில்) ஆழ்ந்திருக்கிற நெஞ்சே!
பிணி–வியாதியையும்
மூப்பு–கிழத் தனத்தையும்
நன்று கை அகற்றி–நன்றாக [ அடியோடு தொலைந்தொழியும்படி] விட்டும் [கைவல்ய மோஷத்தைப் பெற்றாலும்]
நான்கு ஊழி–நான்கு யுகங்களிலும் [காலமுள்ள வரையுலும்]
நின்று–ஸ்திரமாக இருந்து
நிலம் முழுதும் ஆண்டாலும்–பூமி தொடங்கிப் பிரமலோகம் வரையுள்ள இந்த அண்டைஸ்வரியங்கள்
முழுவதையும் ஸ்வாதீனமாய் நிவகிக்கப் பெற்றாலும்
அடல் ஆழிகொண்டான் மாட்டு அன்பு–தீக்ஷ்ணமான திருவாழியைக் கையிலேந்திய பெருமானிடத்தில் ப்ரீதீயை
விடல்–விடாமலிரு;
வேண்டினேன்–உன்னைப் பிரார்த்திக்கின்றேன் காண்.
பிணி மூப்புக் கையகற்றி – பிணியையும் மூப்பையுஞ் சொன்னது மரணத்துக்கும் உபலஷணம்;
“ஜராமரண மோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே” என்று பகவத்கீதையில் சொல்லியிருப்பது காண்க.
பிறப்பதும் பிணிகளால் வருந்துவதும் கிழத்தனமடைவதும் இறப்பதுமாகிய ஸம்ஸார ஸ்வபாவங்கள்
கைவல்ய நிஷ்டனுக்குக் கழிந்து போகிற படியால் இப்பாட்டின் முதலடியில் கைவல்ய மோக்ஷம் விவக்ஷிதம்.
அந்த மோக்ஷம் உனக்குக் கிடைத்தாலும் அது பகவதநுபவ ஆநந்தத்தில் மிகச் சிறிதென்றுகொண்டு அதனை விட்டுத்தொலை என்றபடி.
பரமைச்வரியம் கிடைத்தாலும் அது அஸ்திரமென்று அதனையும் விட்டுதொலை என்கிறார் இரண்டாமடியில்.
இவ்விரண்டும் பகவானை மறப்பதற்குக் காரணமாதல்லால் அவற்றை வெறுக்கச்சொல்லுகிறாரென்க.
‘ ஆண்டாலும் ‘ என்ற உம்மையில், அவற்றில் தமக்கு விறுப்பமில்லை யென்பதும் தொனிக்கும்.
விடல் எதிர்மறை வினைமுற்று.
ஆழி நெஞ்சமே! = இந்தப் பிரார்த்தனையை உனக்கு நான் பண்ண வேண்டியதில்லை; நீயே பகவதநுபவத்தில் ஆழ்ந்தவன்;
ஆனாலும் ஏதோ சொல்லி வைத்தேன் என்பது கருத்து.
கண்டாய் – முன்னிலை யசைச்சொல்.
————
ஆசார்ய சிஷ்ய க்ரமம் மாறாடுகிறது இப்பாட்டில்.
கீழ்ப்பாட்டில் ‘நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்‘ என்று ஆழ்வார் தாம் நெஞ்சுக்கு ஆசார்யராய் நின்று உபதேசித்தார்.
இவர் உபதேசிப்பதற்கு முன்னமே இவருடைய ஸகல கரணங்களும் பகவத் விஷயத்தில் ஈடுபட்டிருந்தமையால்
அவை தாமே தனித்தனி ஆசார்யபதம் நிர்வஹிக்கக் கடவனவாய் இவர் தமக்கு உபதேசிக்க முற்பட்டபடியைப் பேசிகிறாரிதில்.
அன்பாழி யானை யணுகு என்னும் நா வவன் தன்
பண்பாழித் தோள் பரவி யேத்து என்னும் முன்பூழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ் ——–72-
பதவுரை
அன்பு—பகவத்பக்தியே வடிவெடுத்தது போன்றிருக்கிற எனது நெஞ்சானது
ஆழியானை–ஸர்வேச்வரனை
அணுகு என்னும்–கிட்டி அனுபவி’ என்று எனக்கு உபதேசிக்கின்றது
நா–வாக்கானது
அவன் தன் பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும்–அப்பெருமானது ஸெளந்தர்ய ஸாகரமான திருத் தோள்களைப் பேசித் துதி என்று உபதேசிக்கின்றது;
கண்–கண்களானவை;
முன்பு ஊழி காணானை காண் என்னும்–நாம் தன்னை வந்து ஆச்ரயிப்பதற்கு முன்பிருந்த காலத்திலுள்ள
விபரீத நிலைமையை நெஞ்சாலுமெண்ணாத பெருமானை ஸேவி என்று உபதேசிக்கின்றன;
செவி–காதுகள்
பூண் ஆரம் பூண்டான் புகழ் கேள் என்னும்–‘ ஆபரணமான ஹாரம் முதலியவற்றை அணிந்து கொண்டிருக்கிற
அப்பெருமானுயைய திருக் குணங்களைக் கேள்’ என்று தூண்டுகின்றன.
அன்பு ஆழியானையணுகென்னும் – இங்கு ‘அன்பு’ என்ற சொல்லால் நெஞ்சைக் குறித்தனர்;
அன்பு என்பது வேறொரு வஸ்துவாகவும் அதனையுடைய நெஞ்சு என்பது வேறொரு வஸ்துவாகவும் தோன்றாமல்
அன்பு தானே நெஞ்சாக வடிவெடுத்து வந்திருக்கின்றதென்னலாம்படி யிருத்தலால் நெஞ்சுக்கு ‘அன்பு’ என்றே வாசகமிடுகிறார்.
பண்பாழித்தோள் – பண்பு ஆழி என்றும், பண் பாழி என்றும் பிரிக்கலாம்.
பண்பு என்று அழகுக்குப் பெயர்; அழகுக்குக் கடல் போன்ற தோள் என்றும்,
பண் –அழகையும் பாழி- வலிமையையு முடைய, தோள் என்றும் உரைக்க.
முன்பூழிகாணானை –ஊழி என்று காலத்துக்குப்பெயர்: முன்புள்ள காலத்தைக் காணாதவனென்றால் என்ன தாற்பரியம்?
மஹாபராதியான ஒரு சேதநன் வந்து தன்ளை ஆச்ரயித்தால், நேற்று வரையில் அவன் எப்படியிருந்தான்,
என்னென்ன பாபங்கள் பண்ணினான் என்று முற்கால நிலைமைகளைச் சிறிதும் ஆராயாதவன் எம்பெருமான் என்று தாற்பரியம்.
————-
“சஞ்சலம் ஹி மந:கிருஷ்ண!” என்றும்
“நின்றவா ரில்லாநெஞ்சு” என்றுஞ்சொல்லுகிறபடியே நெஞ்சின் நிலைமை மாறி மாறி கொண்டே யிருக்குமென்பதை நினைத்த ஆழ்வார்,
‘நெஞ்சே! நீ எப்போதும் ஒரே நிலையாயிருந்து எம்பெருமானைப் புகழ்வதும் ஆதரிப்பதுமாயிருந்தாலும் சரி;
நிலைமாறிச் சிசுபாலாதிகளைப்போலே அவனைப் பழிப்பதும் அநாதரிப்பதுமாயிருந்தாலும் சரி;
நீ எது செய்தாலும் அவனுடைய பெரு மேன்மைக்குக் குறைவு நிறைவுகள் வாராது காண்’ என்று
தம்முடைய உறுதியைத் தெரிவிக்கிறார் பின்னடிகளில்,
புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழா யானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் ——-73-
பதவுரை
நெஞ்சே–(நல்லது கெட்டதுகளை ஆராயக்கூடிய ) மனமே!
நீ–நீ
பூந்துழாயானை–அழகிய திருத்துழாய் மாலை யணிந்த பெருமானை
புகழ்வாய்–ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு;
(அன்றியே)
பழிப்பாய்–நிந்திப்பதானாலும் நிந்தி;
(அன்றியே)
இகழ்வாய்–அநாதரித்தாலும் அநாதரி;
(அன்றியே).
கருதுவாய்–ஆதரித்தாலும் ஆதரி; (நீ உனக்கு இஷ்டமானபடி செய்;)
திகழ் நீர் கடலும்–விளங்குகின்ற ஜலபூர்த்தியையுடைய ஸமுத்ரமும்,
மலையும்–பர்வதங்களும்
இரு விசும்பும்–பரம்பிய ஆகாசமும்
காற்றும்–வாயுவும்
உடலும்–(தேவாதி) சரீரங்களும்
உயிரும்–(அந்தந்த சரீரங்களிலுள்ள) (பிராணிகளும் ஆகிய இவற்றையெல்லாம் )
ஏற்றான்–தரித்துக் கொண்டிருப்பவன் அவ் வெம்பெருமானே காண்.
எம்பெருமான் கார்ய காரண ரூபங்களான ஸகல பதார்த்தங்களையும் தரித்துக் கொண்டிருப்பவன் என்று அவனுடைய
ஸர்வ தாரகத்வத்தை சொன்னதானது நம்முடைய புகழ்வு மிகழ்வுமெல்லாம் அவனுக்கு அப்ரயோஜகம் என்கைக்காகவென்க.
ஏற்றான் – எல்லாம் தானென்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படி எல்லாவற்றையும் தனக்கு விசேஷணமாகக் கொண்டுள்ளான் என்றுரைப்பதுமுண்டு.
இரண்டாமடியில் “கருதுவாய் என் நெஞ்ச்சே!” என்றும் பாடமோதுவர்;தளைபிறழாது.
————-
எல்லாப் பதார்த்தங்களையும் தரிப்பவன் ஸ்ரீமந்நாராயண னென்றார் கீழ்ப்பாட்டில்:
ருத்ரனை அப்படிப்பட்டவனாகச் சிலர் சொல்லுகின்றார்களே! அஃது என்ன? என்று கேள்வி பிறக்க,
ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தையும் சிவனுடைய அபரத்வத்தையுஞ் சொல்லி,
சிவனும் எம்பெருமானுடைய ஆளுகையிலே அடங்கினவனே யென்றார்.
ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்றொரு பால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு —-74-
பதவுரை
ஏற்றான்–ரிஷபத்தை வாஹனமாக வுடையவனும்
எயில் எரித்தான்–த்ரிபுர ஸம்ஹாரம் பண்ணினவனும்
நீற்றான்–சாம்பலைப் பூசிக் கொண்டிருப்பவனும்
கூறு ஒருபால் மங்கையான்–தனது உடம்பின் ஒரு பக்கத்திலே பார்வதியைத் தரித்துகொண்டிருப்பவனும்
வார் சடையான்–நீண்ட ஜடையைத் தரித்துள்ளவனும்.
கங்கையான்–(அச்சடை முடியில்) கங்கையைத் தாங்கிக் கொண்டிருப்பவனுமான ருத்ரன்.
புள் ஊர்ந்தான்–கருடனை வாஹநமாக வுடையவனும்
மார்வு இடந்தான்–இரணியனது மார்வைப் பிளந்தொழித்தவனும்
நிழல் மணி வண்ணத்தான்–நீல ரத்நம் போலே குளிர்ந்த வடிவை யுடையவனும்
பூ மகளான்–பெரிய பிராட்டியைத்திவ்ய மஹிஷியாக வுடையவனும்
நீள் முடியான்–நீண்ட கிரீடத்தை அணிந்துள்ளவனும்
நீள் கழலான்–நீண்ட திருவடிகளை யுடையவனுமான சர்வேச்வரனுடைய
காப்பு–ரக்ஷணத்தில் அடங்கினவன்.
ஏற்றானாயும் எயிலெரித்தானாயும் நீற்றனாயும் கூற்றொருபால் மங்கையானாயும் வார்சடையானாயும்
கங்கையானாயு மிருக்கிறரு ருத்ரன் –
புள்ளூர்ந்தானாயும் பார்விடந்தானாயும் நிழல்மணி வண்ணத்தானாயும் பூமகளானாயும் நீண்முடியானாயும்
நீள்கழலானாயு மிருக்கிற எம்பெருமானுடைய, காப்பு என்று அந்வயிப்பது.
காப்பு- ரக்ஷ்ய வர்க்கத்திற் சேர்ந்தவன் என்றபடி.
சிவனுடைய விசேஷணங்களை வரிசையாக இட்டு, பிறகு எம்பெருமானுடைய, விசேஷணங்களை வரிசையாக இட்டு,
இன்னான் இன்னானுடைய காப்பு- என்று அடைவுபடச் சொல்லலாமாயிருக்க ,
அப்படிச் சொல்லாமல் விஷ்ணு ருத்ரர்களை மாறி மாறித் தொடுத்திருப்பது இருவர்க்குமுள்ள வாசி உடனுக்குடனே தெரிய வேணுமென்பதற்காக.
தமோ குணமே வடிவெடுத்ததாயும் மூடர்களுக்கு உவமையாக எடுக்கக்கூடியதாயு முள்ள ரிஷபத்தை வாஹநமாக வுடையவன் அவன்;
வேதஸ்வரூபியான பெரிய திருவடியை வாஹநமாகவுடையவன் இவன்;
தன்னை ஆச்ரயித்தவர்களின் குடியிருப்பான திரிபுரத்தைச் சுட்டெரித்தவன் அவன்;
ஆச்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு விரோதியான இரணியனது மார்வைப் பிளந்தொழித்தவனிவன்;
தான் ப்ராயச்சித்தியென்று தோற்றும்படி நீறுபூசின ஸர்வாங்கத்தையு முடையான் அவன்;
ச்ரம ஹரமான நீலரத்நம்போலே குளிர்ந்த வடிவை யுடையவன் இவன்.
தன் உடலின் பாதி பாகத்தை ஸ்த்ரீரூபமாக ஆக்கிக்கொண்டவன் அவன்;
உலகுக்கெல்லாம் ஈச்வரியான கமலச் செல்வியை திவ்ய மஹிஷியாகவுடையவன் இவன்;
தன் குறையைத் தீர்த்துக்கொள்ளும் வண்ணம் ஸாதநாநுஷ்டாநம் பண்ணுவது எல்லர்க்குந் தெரியும்படி சடை புனைந்தவன் அவன்;
ஸர்வேச்வரத்வ ஸூசகமான திருவபிஷேகத்தையுடையவன் இவன்;
தான் பரிசுத்தனாவதற்குக் கங்கையைத் தரிப்பவன் அவன்;
அந்தக் கங்கைக்கு உத்பத்தி ஸ்தாநமான திருவடியை யுடையவன் இவன் – என்று சொல்லுமழகு காண்மின்.
எயில் – மதிள்; த்ரிபுரத்துக்கு இலக்கணை.
—————–
திருமாலே! ஸர்வ ரக்ஷகனான வுன்னை அநுஸந்திப்பவர்களுக்கு எல்லாப் பிரதிபந்தகங்களும் நீங்கிப்
பிரகிருதி ஸம்பந்தமும் நீங்கி திவ்ய லோக ப்ராப்தியும் வாய்க்கு மென்கிறார்.
பகவத் ஸம்பந்தத்தை யுணர்ந்தவர்கள் கர்ம வச்யராகாரெபந்தை முன்னடிகளாலும்,
பரமசாம்யா புத்தியை அடைவார்களென்பதைப் பின்னடிகளாலும் அருளிச் செய்கிறார்.
காப்புன்னைக் யுன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து ஒழியும் மூப்புன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி ———–75-
பதவுரை
திருமாலே–லக்ஷ்மீ நாதனே!
உன்னை–(பரமபுருஷனான) உன்னை
உன்ன–ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில்
காப்பு–பிரதிபந்தகங்கள்
கழியும்–விட்டு நீங்கும்;
உன்னை உன்ன–உன்னை நினைக்கு மளவில்,
அருவினைகள் ஆப்பு–போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
அவிழ்ந்து ஒழியும்–அவிழ்ந்து போம்;
உன்னை சிந்திப்பார்க்கு–உன்னை த்யானிப்பவர்களுக்கு
மூப்பு இல்லை–கிழத்தனம் முதலிய ஷட்பாவ விகாரங்களும் இல்லையாம்;
நின் அடியை வந்திப் பார்–உன் திருவடிகளை ஆச்ரயிக்கு மவர்கள்
வழி–அர்ச்சிராதி மார்க்கத்தை
காண்பர்-கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள்.
முதலடியில், காப்பு என்பதற்குப் ‘பிரதிபந்தகம்’ என்று பொருள் கூறப்பட்டது; காவல் என்பதற்குத் ‘தடை’ என்று பொருலாதலால் .
அன்றியே, பாபஸாக்ஷியாக எம்பெருமானால் நியமிக்கப்பட்டுள்ள பதினால்வர் என்று கொள்ளவுமாம்.
அவராவார் – ஸூர்யன் சந்திரன் வாயு அக்நி த்யுலோகம் பூமி ஜலம் ஹ்ருதயம் யமன்
அஹஸ்ராத்ரி இரண்டு ஸந்த்யைகள் தர்மதேவதை என்ற இவராவர்.
*“ஆதித்ய சந்த்ராவநிலோநலச்ச த்யெளர்ப் பூமிராபோ ஹ்ருதயம் யமச்ச- அஹச்ச ராத்ரிச்ச உபேச ஸந்த்யே
தர்மச்ச ஜாநாதி நரஸ்ய வ்ருத்தம்.“ என்ற மஹாபாரத ச்லோகமுங் காண்க.
உன்னை யநுஸந்திப்பவர்கள் செய்யுங்கருமங்களை எம்பெருமானா லேற்படுத்தப்பட்டுள்ள கர்ம ஸாக்ஷிகளும் ஆராயக் கடவரல்லர் என்றவாறு.
வழி காண்பர்- நரகத்தை போலே பொல்லாததான வழியைக் காணுதலின்றியே நித்ய விபூதிக்கிப் போம் வழியைக் காண்பரென்றவாறு
——————–
எம்பெருமானோடு ஸம்பந்தமுடைய திருமலை தானே தன்னைப் பற்றினார்க்கு நற்கதியைத் தரும் வல்லமை யுடையதாயிருக்கையில்,
எம்பெருமானைத் தொழுமவர்கள் நற்கதி பெறுவாரென்று நாம் பெரிதாக எடுத்துச் சொல்லவேணுமோ? என்கிறார்.
கைமுதிக நியாயம் தோற்றப் பேசின பாசுரம் இது.
மண்ணளந்த சீரானுடைய திருவேங்கடமே பழுதொன்றும் வராத வண்ணம் விண் கொடுக்குமதாயிருக்க,
நின்னை வழிநின்று தொழுமவர்கள் வழுவாமொழி நின்ற மூர்த்தியராவரென்பது விசேஷித்துச் சொல்ல வேண்டிய விஷயமோ என்றவாறு.
எம்பார் இப்பாசுரத்தை நாடோறும் சிற்றஞ் சிறுகாலையில் அநுஸந்திப்பது வழக்கமாம்.
“எம்பார் விடிவோறே அநுஸந்திக்கும் பாட்டு” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான வருளிச்செயல்
வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் -76-
பதவுரை
வழி நின்று–பக்தி மார்க்கத்திலே நிலைத்து நின்று
நின்னை தொழுவார்–உன்னை ஆச்ரயிக்கு மவர்கள்
வழுவாமொழி நின்ற மூர்த்தியரே ஆவர்–உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற ஸ்வரூப, ஆலிர்ப்பாவத்தை உடையவராகவே ஆவார்கள்;
(இதைப் பற்றிச் சொல்ல வேணுமோ?)
மண் அளந்த சீரான் திருவேங்கடம்–உலகளந்த மஹாநுபாவன் எழுந்தருளி யிருக்கிற திருமலையே
பழுது ஒன்றும் வாராத வண்ணமே–ஒரு குறையு மில்லாதபடி
விண் கொடுக்கும்–(ஆச்ரிதர்களுக்கு) மோஷமளிக்கக் காண்கிறோமன்றோ.
———-
எம்பெருமான் ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் எழுந்தருளி யிருக்கிறபடிகளை நாம் அநுஸந்தித்தால்
நமது இடரெல்லாம் நீங்கிவிடுமென்கிறார்.
அவன் திருப்பதிகளில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் நடப்பதுமான படிகளை நாம் சொல்ல,
நாம் நின்றுமிருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாபங்களெல்லாம் தன்னடையே போகுமென்றபடி.
வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் ———77-
பதவுரை
வேங்கடமும்–திருமலையும்
விண்ணகரும்–வைகுந்த மா நகரும்
வெஃகாவும்–திரு வெஃகாவும்
அஃகாத பூ கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும்–பூ மாறாத நீர் நிலைகளை யுடைய சிறந்த திருக் கோவலூ ரென்கிற திவ்ய தேசமும்
(ஆகிய)
நான்கு இடத்தும்–நான்கு திருப்பதிகளிலும்
(வரிசைக் கிரமமாக)
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என்றால்–(எம்பெருமான்) நிற்பதும் வீற்றிருப்பதும் பள்ளி கொண்டிருப்பதும் நடப்பதுமா யிருக்கிறா ரென்று அநுஸந்தித்தால்
இடர்–துக்கங்களெல்லாம்
கெடும் ஆம்–விட்டோடிப் போய் விடும்
நூற்றெட்டுத் திருப்பதிகளுள் பரம பதமும் ஒன்றாதலால் இங்கு ‘விண்ணகரும்’ என்று அத்திருநாடு கூறப்பட்டது.
உப்பிலியப்பன் ஸந்நிதி யென்கிற திருவிண்ணகரைச் சொல்லுவதாகக் கொண்டால்
அங்கு வீற்றிருந்த திருக்கோலமில்லையாதலால் மிடிபடும்.
கச்சிமாநகரிலுள்ள பரமேச்சுர விண்ணகரைச் சொல்லுவதாகக் கொள்ளினும் குறையில்லை.
உலகளந்த திருக்கோலமாக ஸேவை ஸாதிக்குமிடத்தை நடந்த கோலத் திருப்பதியாக அநுஸந்திப்பதுண்டாதலால்
‘பூங்கோவல் நடந்தான்’ என்றார்.
———
எம்பெருமான் நமக்காகச் செய்த செயல்களை நாம் அநுஸந்திபோமாகில் அவனது திருவடிகளில் அடிமை செய்தே
நிற்க வேண்டியதாகுமே யன்றி ஒரு நொடிப் பொழுதும் வெறுமனிருக்க முடியாது;
நாம் அப்பெருமானை ஆச்ரயிக்கவே துக்கங்களெல்லாம் தொலைந்து போம்; துக்கப்படுகைக்கு ஆளில்லை;
ஒருகால் நமக்கு துக்கம் வந்தாலும் அது கஜேந்திராழ்வானைத் தொடர்ந்த முதலை பட்டது படும் என்றாராயிற்று.
இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு -78-
பதவுரை
நெஞ்சே–மனமே!
வேழம் தொடர்–கஜேந்திராழ்வானை (விழுங்குவதாகத்) தொடர்ந்து வந்த
வான்–பெரிய
கொடு–(நெஞ்சில் இரக்கமின்றியே) கொடுமை பூண்ட
முதலை–முதலையை
சூழ்ந்த–(தப்பிப் போகாதபடி) எண்ணி கொன்றவனும்
படம் உடைய பைநாகம் பள்ளியான்–படத்தையும் பசுமை நிறத்தையுமுடைய திருவனந்தாழ்வானைத் திருப்பள்ளி மெத்தையாக வுடையனுமான எம்பெருமானது
பாதம்–திருவடிகளை
கொய் நாகம் பூ போது கொண்டு–கொய்யப்பட்ட புன்னையின் அழகிய மலர்களைக் கொண்டு
கை தொழுதும்–தொழுவோம்;
எழு–எழுந்திரு;
(அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்)
இடர்–துக்கத்தை
படுவார் ஆர்–அநுபவிக்க யாரால் முடியும்? (என்னால் முடியாது.)
இரண்டாமடியில், சூழ்ந்த என்ற பெயரெச்சம் பள்ளியா நென்பதைக் கொண்டு முடியும்.
முதலையை முடித்து கஜேந்திரனைக் காத்த கதை ப்ரஸித்தம்.
ஈற்றடியில், நாகம் ‘ புந்நாகம்’ என்ற வடசொற்சிதைவு.
————-
எம்பெருமான் ஆச்ரித ரக்ஷணத்திற்காகத் தன் ஸ்வரூபத்தை மாறாடிக் கொண்டும் காரியம் செய்பவன்
என்பதை மூதலிக்க வேண்டி, மஹாபலியினிடத்தில் வாமநனாய்ச் சென்று மூவடி மண் வேண்டிப் பெற்றுத்
திரிவிக்கிரமனாகித் தன் விபூதியை அப்பெருமான் மீட்டுக் கொண்டதை உதாஹரணமாகக் காட்டி,
இப்படி ஆச்ரிதர்கள் பொருட்டாக அப்பரமன் அரும்பாடுபட்டும் அதனை யறியவல்லார் ஸம்ஸாரத்தில்
ஒருவருமில்லாத்து பற்றிக் கவலைப் படுகிறாரிப்பாட்டால்.
கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்
மண்டா வென விரந்து மாவலியை ஒண்டாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரங்கை தோய வடுத்து -79-
பதவுரை
மண் தா என மாவலியை இரந்து–(‘மூவடி) நிலத்தை எனக்குத் தா’ என்று மாவலியிடத்தில் யாசித்து
(அவனும் மறுக்க மாட்டாமல் அப்படியே உனக்குத் தந்தேனென்று தாரை வார்க்க)
ஒண் தாரை நீர்–அழகிய அந்த நீர்த் தாரை
அம் கை==(தனது) அழகிய திருக்கையிலே
தோய–வந்து விழுந்ததும்
நீள் விசும்பிலார்–பரம்பின மேலுலகத்தில் வாழ்கின்ற ப்ரஹ்மாதிகளுடைய
அம் கை–அழகிய கைகள்
தோய்–ஸ்பர்சித்துத் திருவடி விளக்கும்படி
அடுத்து நிமிர்ந்திலையே–கடுக ஓங்கி வளர வில்லையோ?
(இப்படி தன்னதான வஸ்துவைக் கொள்வதற்கும் தன்னை அழிய மாறிவந்து)
கொண்டானை–தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானைப்
அல்லால்–பழிக்கிறார்களே யன்றி
கொடுத்தாரை யார் பழிப்பார்–(தன்னதல்லாத்தைத் தன்னதாக அபிமானித்துக்) கொடுத்த
அந்த மாவலியைப் பழிப்பார்கள் யாருமில்லையே! (இஃது என்ன அநியாயம்!)
மாவலியானவன் தன்னதல்லாத்தைத் தன்னதென்று அபிமாநித்துக் கொண்டு செருக்குற்றிருந்ததற்காக இராவணனை போலவே
அவனையுங்கொல்ல வேண்டியிருந்தும் அவனிடத்தில் ஒளதாரியமென்ற ஒரு சிறந்தகுண மிருந்ததனால்
தன்னதான விபூதியை அவனது போலவே பாவித்துச் சென்று யாசித்து நீரேற்று வாங்கிக் கொண்ட மஹாகுணம் பொருந்தியவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட மஹாகுணத்தில் யாராவது ஈடுபடுவாருண்டோ?
வஞ்சனென்றும், ஸர்வஸ்வாபஹாரியென்றும், தனக்கு தானஞ்செய்தவனைப் பாதாளத்திலே தள்ளினவனென்றும்
சில பழிச்சொற்களைச் சொல்லி அப்பெருமானை உலக மடங்கலும் பழிக்கின்றதேயன்றி,
தன்னதல்லாததைத் தான் தந்ததாக நினைக்கிற மாவலியை பகவத் விபூதியைக் கொள்ளை கொண்டவனென்றும்
அஹங்காரியென்றும் ஆஸுரப்ரகிருதியென்றும் அவனுடைய குற்றங்களையிட்டுச் சொல்லுவார் இந்த ஸம்ஸாரத்தில் யாருமில்லையே!;
குற்றத்தைக் குணமாக்கியும், குணத்தைக் குற்றமாக்கியுஞ் சொல்லும்படியன்றோ ஸம்ஸாரிகளின் ஸ்வபாவமிருபதென்பது ‘
கொண்டானையல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்?’ என்பதன் கருத்து.
தோய- செயவெனெச்சம் உடனிகழ்ச்சிப் பொருளது.
நீர் கைதோய நீள்விசும்பிலார் அங்கை தோய அடுத்து நிமிர்ந்திலையே – மாவலி தாரைவார்த்த உதகமும்
ப்ரஹ்மாதிகள் திருவடிவிளக்கின உதகமும் ஏகோதகமென்னலாம்படி அத்தனை விரைவாக நீ வளரவில்லையோ? என்றபடி.
‘நீள்விசும்பிலார் அங்கை தோய” என்பதற்கு- விசும்பிலுள்ள தேவர்கள் (எனது) திருத்தோளிலே வந்து அணையும்படியாக என்றும்,
“ நீள்விசும்பில் ஆரம் கைதோய” என்றெடுத்து, பரந்த விசும்பிலே (உனது திருமார்பிலணிந்திருந்த
முக்தாஹாரமும் திருக்கையும் பொருந்தும்படி (ஓங்கி) என்றும் பொருள் கொள்ளலாம்.
———–
அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்றோடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத் தரவை
வல்லாளன் கை கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாது மாவரோ ஆள் -80-
———————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply