ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -61-70 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

கீழ்ப் பாட்டில், அவ்வெம்பெருமானைத் தவிர்த்து உயிர்களெல்லாம் தாமே தமக்கு வேண்டிய நன்மையைத்
தேடவறியாது என்றருளிச்செய்த ஆழ்வார், இப்பாட்டில் அவை தமக்குவேண்டிய நன்மையைத் தேட அறியாதிருக்கையிலும்
எம்பெருமானே நன்மையைத் தேடுகிறதற்குக் காரணம் இச்சராசரங்களை யெல்லாம் அப்பெருமான் பேரருள் கொண்டு
தன் ஸங்கல்பத்தினால் படைத்த ரக்த ஸம்பந்தமேயாகு மென்கிறார். பெற்றவனை யொழிய வளர்ப்பவரில்லை யென்றதாயிற்று.

சேதநங்கள் இறகொடிந்த பக்ஷிபோல மூலப்ரக்ருதியிலேயே லயித்துக் கிடவாமல் தன்னை யடைந்து உஜ்ஜீவிக்குமாறு
நிர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்தினால் அப்பரமன் கரசரணாதி அவயவங்களையும்,
தன்னை யுணருமாறு சாஸ்தரங்களையும் கொடுத்தருளின னென்பது நூற்கொள்கை.
இவையறியாத காலத்திலும் அவனே ஸ்ருஷ்டிக்கையாலே இப்போது உபாயமறிவானும் அவனே யென்று
கீழ்ப் பாட்டோடே சேர்த்துப் பொருள் பெறுத்திக் கொள்க.

உலகும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு ——-61-

பதவுரை

உலகும்–பூமி முதலிய லோகங்களும்
உலகு இறந்த ஊழியும்–இவ்வுலகம் யாவும் அழிந்து கிடக்கிற பிரளய காலமும்
ஒண் கேழ் விலகு–அழகிய நிறத்தோடு அலை யெறிகிற
கரு கடலும்–கரு நிறத்ததான ஸமுத்ரமும்
வெற்பும்–மலைகளும்.
உலகினில் செம் தீயும்–இவ்வுலகத்திலுள்ள செந்நிறமான் தேஜஸ் பதார்த்தங்களும்
மாருதமும்-காற்றும்
வானும்–ஆகாயமும்
(ஆகிய இவையாவும்)
திருமால் தன்–லக்ஷ்மீபதியான எம்பெருமானுடைய
புந்தியில்–ஸங்கல்ப ஞானத்திலால்
ஆய–படைக்கப்பட்ட
புணர்ப்பு–படைப்புக்களாம்.

————

கீழ்ப்பாட்டில், சராசரங்கள் யாவும் எம்பெருமானுடைய படைப்பு என்றார்,
இப்படி உலகங்களை யெல்லாம் உண்டாக்கின பின்பு தான் தூரஸ்தனாய் நின்று விடாமல் உலகுக்கு உண்டாகின்ற
களைகளைப் பிடுங்கிப் பாதுகாப்பதும் செய்கிறானென்பதை இப்பாட்டில் வெளியிடுகின்றார்.

புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மண மருவ மால் விடை யேழ்   செற்று கணம் வெருவ
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
சூழரவப் பொன் கணையான் தோள் ——-62-

பதவுரை

புணர் மருதின் ஊடு போய்–ஒன்றோடொன்று இணைந்திருந்த (இரட்டை) மருதமரத்தின் நடுவே தவழ்ந்து சென்று
[பின் பொருகாலத்தில்]
பூங்குருந்தம் சாய்த்து–(இலையும் கொம்புந் தெரியாதபடி) பூக்கள் நிரம்பியிருந்த குருந்த மரத்தை தள்ளிப் போட்டு
(மற்றுமொரு காலத்தில்)
மணம் மருவ–(நப்பின்னைப் பிராட்டியோடு) விவாஹம் நிறைவேறுதற்காக
மால் விடை ஏழ் செற்று–பெரிய வடிவையுடைய ஏழு ரிஷபங்களையும் முடித்து
(இன்னமொரு காலத்தில்)
கணம் வெருவ–எல்லாப் பிராணிகளும் நடுங்கும்படி
ஏழ் உலகும் தாயினவும்–மேலேழுலகங்களில் தாவிச் சென்றவையும்
எண் திசையும் போயினவும்–எட்டுத் திக்குக்களிலும் போய்ப் பரவியவையும்.
[எவையென்றால்]
சூழ் அரவம் பொங்கு அனையான் தோள்–(பரிமளம் குளிர்த்தி மென்மை என்னும் குணங்கள்) நிரம்பிய திருவனந்தாழ்வானை
சிறந்த படுக்கையாகவுடையனான ஸர்வேச்வரனது திருத்தோள்களேயாம்.

இதில் தோள் என்றது திருக்கைகளை இரட்டை மருதமரத்தினிடையே தவழ்ந்து சென்ற போது
கைகளைத் தரையிலே ஊன்றித் தவழ்ந்ததனால் மருதம் முறிந்ததைக் கைகளின் மே லேற்றிக் கூறினரென்க.
மருதினூடுபோய் என்றது மருதமரங்களை முறித்துத் தள்ளினமையைச் சொன்னபடி.
கூட்டமென்னும் பொருளதான வடசொல் கணமெனத் திரிந்தது:
அநுகூலர் பிரதிகூலர் என்கிற வேறுபாடின்றி எல்லாப் பிராணிகளும் என்கை.

“சூழரவப் பொங்கணையான் தோள்” என்ற சொல்லாற்றலால், பரிமளம் குளிர்த்தி முதலிய குணங்களுக்கெல்லாம்
எல்லை நிலமாயிருக்கிற திருவனந்தாழ்வானாகிற படுக்கையையும் பொறாத ஸெளகுமார்யத்தையுடைய
அப்பெருமான் அப்படுக்கையில் கண்வளரப் பெறாமல் இப்படி அல்லாடித் திரிவது பற்றி வயிறெரிகின்ற
இவ்வாழ்வாரது பொங்கும்பரிவு விளங்கும்.
பிரஜைகளைப் பாதுகாப்பதில் கருத்தூன்றியவர்கள் ஓரிடத்தில் தங்கியிருக்கப் பெறாமல் அலைந்து திரிவர்களன்றோ.
இப்பாட்டில் அநுஸந்திக்கப்பட்டுள்ள சரித்திரங்களெல்லாவற்றிலும் எம்பெருமானுடைய தோள் வலிமையே
தெற்றென விளங்குமென்றுகொண்டு தோளின் மேலேயே எல்லா செயலையும் ஏற்றிக் கூறினரென்க….

————

தம்முடைய எல்லா இந்திரியங்களும் எம்பெருமான் பக்கலிலேயே ஊன்ற பெற்ற படியை அருளிச்செய்கிறார்.

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்  ——-63-

பதவுரை

தோள்–(எனது) கைகளானவை
அவனை அல்லால் தொழா–(வேறு சிலரைத் தொழு என்று நான் சொன்னாலும்) அப்பெருமானை யல்லது வேறு எவரையும் வணங்க மாட்டா;
என்செவி இரண்டும்–எனது காதுகளிரண்டும்
கேள் அவனது–ஸகலவித பந்துவுமாகிய அப்பெருமான் விஷயமான
இன்மொழியே–இனிய பேச்சுக்களையே
கேட்டு இருக்கும்–கேட்டுக்கொண்டு (அதனாலே) ஸத்தை பெற்றிருக்கும்;
என் நா–என்னுடைய நாவானது
நாளும்–நாள்தோறும்
கோள் நாக அணையான்–மிடுக்கை யுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய அப்பெருமானது
குரை கழலே–ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடிகளையே
கூறுவது–சொல்லா நிற்கிறது
(இப்படியான பின்பு)
நயம்–சப்தாதி விஷயங்களை
நாணாமை நள்ளேன்–வெட்கப்படாமல் விரும்பு வாரைப் போலே நான் விரும்ப மாட்டேன்.

எம்பெருமானைத் தவிர்த்து வேறொருவரைத் தொழும்படி நான் சொன்னாலும் என் கைகள் தொழமாட்டோமென்கின்றன;
இதர சப்தங்களைக் கேட்போமென்று நான் பாரித்தாலும் எனது காதுகளானவை பகவத் கதைகளைத் தவிர்த்து
வேறு எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோமென்கின்றன!
நாவினால் விஷயாந்தரங்களைப் பேசுவோமென்று நாம் பார்த்தாலும் பகவத் பாதாரப்விந்தத்தையன்றி
மற்றும் எதையும் னச நா எழுகின்றதில்லை;
இப்படி எனது இந்திரியங்களெல்லாம் ஒரே உறுதியாயிருக்கவே, நானும் நாணங்கொண்டு
இதர விஷயங்களைக் காறியுமிழ்ந்தேன் என்றாராயிற்று.

இரண்டாமடியில், கேள்- உறவு;
“ சேலேய் கண்ணியரும் பெருஞ் செலவமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்கிறபடியே
ஸகலவித பந்துவுமான எம்பெருமானுடைய என்றபடி
இன்மொழி-கீர்த்தி நாகஅணை, ‘நாகவணை’ என வரவேண்டுவது நாகணை யென வந்தது தொகுத்தல் விகாரம்.
குரைகழல்—வினைத் தொகையன் மொழி என்னலாம்: நாணாமை – எதிர்மறை வினையெச்சம்.
நயம் – நயக்கப்படுவது நயம்; ஆசைப்படத் தக்க விஷயாந்தரங்கள்.
“நயந்தரு பேரின்பமெல்லாம்” என்ற இராமாநுச நூற்றந்தாதித் தனியன் பிரயோகமுங் காண்க.

————

கீழ்ப்பாட்டில், ஆழ்வார் தமக்கும் தம்முடைய இந்திரியங்கட்கும் விஷபாந்தரங்களைக் கண்ணெடுத்துப் பாராதபடி
எம்பெருமானிடத்தில் ஊற்றமுண்டானபடியை அருளிச் செய்யவே
விஷயாந்தரங்கள் துரவாஸநையால் வந்து மேல்விழுந்து உம்மை இழுத்து க்கொண்டு சென்றால் என்ன செய்வீர்?’
என்று ஒரு கேள்வி பிறக்க ,
எம்பெருமானுடைய அநுக்ரஹத்தைப் பூர்ணமாகப் பெற்றிருக்கிறேனாதலால் அப்படி நிகழ ஹேது வில்லை யென்கிறார்.

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உய்வேன் உயர்ந்தவரோடு  அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  —–64–

பதவுரை

பிறர் பொருளை–பரம புருஷனுடைய பொருளான ஆத்ம வஸ்துவை
நயவேன்–(என்னுடையதென்று) விரும்ப மாட்டேன்;
கீழாரோடு–ஸம்ஸாரிகளோடு
நள்ளேன்–ஸ்நேஹம் கொள்ள மாட்டேன்;
உயர்ந்தவரோடு அல்லால்–சிறந்த ஸ்ரீவைஷ்ணவர்களோடு தவிர (மற்றவர்களோடு)
உய்வேன்–காலக்ஷேபம் பண்ணமாட்டேன்.
திருமாலை அல்லது–எம்பெருமானை யன்றி (தேவதாந்தரங்களை)
தெய்வம் என்று ஏத்தேன்–தெய்வமாகக் கொண்டு துதிக்க மாட்டேன்;
வியவேன்-(இப்படியிருப்பதற்கு ஹேதுவான ஸத்வ குணம் எனக்குத் தானுள்ளதென்று அஹங்கரித்து என்னைப் பற்றி நானே) ஆச்சரியப்படவும் மாட்டேன்;
(இப்படியான அறிமாட்டார்கள். பின்பு)
என் மேல்–எம்பெருமானுடைய அநுக்ரஹத்திற்கு இலக்கான என் மேலே
வினை–அவனது நிக்ரஹ ரூபமான ) பாபம்
வரும் ஆறு என்–வரும் விதம் ஏது? [வரமாட்டாது]

பிறர் பொருளை= “உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேதி உதஹ்ருத:” என்னும் பிரமாணத்தை அடி யொற்றி
இங்கு எம்பெருமானை ‘பிறர்’ என்ற சொல்லால் குறித்தனர் சேதநாசேதநங்களிற்காட்டில் விலக்ஷணன் என்றபடி.
அவனுடைய பொருள் ஆத்ம வஸ்து
(கண்ணிநுண் சிறுத்தாம்பில் “ நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்” என்ற விடத்திற்கு வியாக்கியானமுங் காண்க.)
ஸர்வேச்வரனுக்குக் கெளஸ்துபஸ்தாநீயமாகி அப்பெருமான் ‘தன்னது’ என்று அபிமாநித்திருக்கும் இவ்வாத்ம வஸ்துவை
’என்னது’ என்று நினைத்தல் இராவணனது செயலோடொக்கு மாதலால் “நயவேன் பிறர்பொருளை” என்றார்.
இராவணனுடைய செய்கைக்குத் துணையாயிருந்த மாரீசன் போல்வாரோடு நட்புக் கொள்ள மாட்டேனென்பது ‘நள்ளேன் கீழாரோடு’ என்றதன் கருத்து.

”திருமாலையல்லது வியவேன் “ என்று கூட்டி – திருமாலைக் கண்டாலன்றி ( தேவதாந்தரங்களைக் கண்டால் அதனால்)
மநஸ்ஸில் சிறிதும் மகிழ்ச்சிகொள்ள மாட்டேன் என்பதாக உரைத்தலுமாம்.

வருமாறென் என்மேல் வினை? = “அவச்யமநுபோக்தவ்யம் க்ருதம் கர்மகபாசுபம்”
[ அவரவர்கள் செய்த நல்வினை தீவினைகளின் பலன்களை அவரவர் அநுபவித்தே தீரவேணும் ] என்கிற
சாஸ்த்ரம் பகவத் பக்தர்கள் விஷய்த்தில் விலைச்செல்ல மாட்டாதென்று காட்டுகிறபடி.

“வருமாறென் நம் மேல்வினை” என்ற பாடமுமுண்டு;
அப்போது, கீழெல்லாம் நயவேன், நள்ளேன், உயவேன், வியவேன். ஏத்தேன், என்று ஒருமையாகவந்து இங்கே
நம் என்று பன்மையாக வந்தது- ஒருமையிர் பன்மைவந்த வழுவமைதி யென்னவேண்டும் .
தம்மோடு ஸம்பந்தம் பெற்றவர்களையுங் கூட்டிக்கொண்டு நம் மேலென்கிறாரென்றலும் பொருந்தும்.

இரண்டாமடியில், உயவேன் என்றது உசாவேன் என்றப்டி:
உசாவுதலாவது ஒருவருக்கொருவர் வார்த்தையாடிப் போது போக்குதல்;
”உசாத் துணை” என்ற ஆன்றோர்களின் ஸ்ரீ ஸூக்தியுங்காண்க.

————–

வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கட்
கரியானைக் கை தொழுதக்கால்   ——-65–

பதவுரை

நினைதற்கு அரியானை–(ஸ்வ ப்ரயத்நத்தாலே) நினைப்பதற்குக் கூடாதவனும்
சேயானை–(நெஞ்சுக்கு விஷயமாகாதபடி) மிக்க தூரத்திலிருப்பவனும்
ஆயிரம் பேர்–ஆயிரம் திருநாமங்களை யுடையவனும்
செம் கண் கரியானை–சிவந்த திருக் கண்களையும் கறுத்த வடிவை யுமுடையனுமான பெருமானைக் குறித்து
கை தொழுதக்கால்–அஞ்சலி பண்ணினால்
(அப்படி அஞ்சலி பண்ணினவர்கள்)
வினையால்–நல் வினை தீ வினைகளால்
அடர்ப் படார்–நெருக்கு பட மாட்டார்கள்;
வெம் நரகில்–கொடிய சம்ஸாரமாகிற நரகத்தில்
சேரார்–(மீண்டும்) சென்று கிட்ட மாட்டார்கள்;
தினையேனும்–சிறிதளவும்
தீ கதிக்கண்–கெட்ட வழிகளில்
செல்லார்–போக மாட்டார்கள்.

கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தாம் ஒழுங்குபட நிற்கும் நிலைமையை யருளிச் செய்தார்.
இப்படிப்பட்ட நிலைமை மற்று எல்லார்க்கும் உண்டாகவில்லையே, அஃது ஏன்? என்று ஒரு கேள்வி பிறக்க;
இந்த நிலைமை எல்லார்க்கும் உண்டாகக் கூடியதே ;
எம்பெருமானைக் கைதொழுதால் இஃது எல்லார்க்கும் தன்னடையே உண்டாகும் என்கிறார் இப்பாட்டில்.

வினையால் அடர்ப்படார்= ‘வினை’ என்னும் பொதுச் சொல்லானது நல்வினை தீவினை என்ற இருவினைகளையும் இங்குக் குறிக்கும்;
உபநிஷத்தில் [முமுக்ஷு மோக்ஷத்துக்குப் போம் போது புண்யம் பாபம் என்ற இருவினைகளையும் உதறி விட்டுக்
கல்மஷமற்றவனாய்ப் பரமஸாம்யத்தை அடைகின்றான்] என்று ஓதி வைத்திருக்கையாலே
மோக்ஷமார்க்கத்திற்குப் பாபம் எப்படி இடையூறோ அப்படி புண்யமும் இடையூறென்பது நூற்கொள்கை.
பாபம் நரகத்திலே கொண்டு தள்ளும்; புண்யம் ஸ்வர்க்காதி லோகங்களில் கொண்டு தள்ளும்;
ஆகவே, பாபம் இரும்பு விலங்கு போன்றதென்றும் புண்யம் பொன்விலங்கு போன்ற தென்றும் சமத்காரமாகச் சொல்லுவதுமுண்டு.

இனி, “வினையாலடர்ப்படார்” என்றவிதற்கு- இங்கே யநுபவிக்க நேரும் பாப பலன்களினால் துன்பப்படமாட்டார்கள்
என்று பொருள்கொள்வதும் பொருந்தும்.

வெம் நரகில் சேரார்=[ எம்பெருமானோடு கூடி யிருத்தல் ஸ்வர்க்கம்; அவனை விட்டுப் பிரிந்திருத்தல் நரகம் ] என்று
ஸ்ரீராமயணத்திற் சொன்னபடியே எம்பெருமானைப் பிரிந்து வருந்துகையாகிற நரகாநுபவம் பண்ணமாட்டார்களென்கை.

———–

“உலகமென்பது உயர்ந்தோர் மாட்டே” [உலகம் என்னுஞ்சொல் மிகப்பெரிய மஹான்களைக் குறிக்கும் ] என்று
கூறியிருப்பதனால், இப்பாட்டின் முதலடியிலுள்ள உலகம் என்னுஞ்சொல் ‘ உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள்’ என்னும்
பொருளிலே பிரயோகிக்கப்பட்ட்து. அறிவு நிரம்பிய பெரியோர்கள் எம்பெருமானது திருவடிகளையும்
அவனது திருநாமங்களையுமே காண்பதுங் கேட்பதுமாயிருப்பர்களென்கிறார் இப் பாட்டில்.

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66-

பதவுரை

உலகம்–உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள்
காலை எழுந்து–(ஸத்வ குணம் வளரக் கூடிய ) விடியற் காலையில் துயில் விட்டெழிந்து
கற்பனவும்–அப்யஸிப்பனவும்,
கற்று உணர்ந்த மேலை தலைமறையோர்–படித்து அறிவு நிரம்பிய வைதி கோத்தமர்கள்
வேட்பனவும்–ஸாக்ஷாத்கரிக்க ஆசைப்படுவனவும்.
(எவையென்றால்)
வேலைக்கண் ஓர் ஆழியான்–திருப்பாற்கடலில் ஒப்பற்ற திருவாழியை யுடையனாய்ப் பள்ளி கொண்டிருக்கும் பெருமானுடைய
அடியே–திருவடிகளேயாம்;
ஓதுவதும்–மஹான்களால் ச்ரவணம் பண்ணப் பெறுவனவும்
ஓர்ப்பனவும்–மநநம் பண்ணப் பெறுவனவும்
(எவையென்றால்)
பேர் ஆழி கொண்டான்–பெரிய கடல் போன்ற திருமேனியைக் கொண்ட அப்பெருமானுடைய
பெயர்–திருநாமங்களேயாம்.

மேலைத் தலைமறையோர்- கீழ்வேதமென்றும் மேல்வேதமென்றும் வேதம் இருவகைப்படும்:
கீழ்வேதமென்பது கர்மகாண்டம்; மேல்வேதமென்பது ப்ரஹ்மகாண்டம் (உபநிஷத்பாகம்);
ஆகவே, மேலைத் தலைமறையோரென்றது வேதாந்திகளென்றபடி.

———–

ஞானமென்பது உலகிற் பலவிதம் ;
தர்க்க சாஸ்திரம் படித்து வாதங்கள் செய்யத் தேர்ச்சி பெற்றவனும் தன்னை ஞானியென நினைக்கிறான்;
ஆயுர்வேதம் ஜோதிடம் மந்த்ரம், தந்த்ரம் முதலியவற்றில் கைதேர்ந்தவனும் தன்னை ஞானியென நினைக்கிறான்;
இப்படி ஒவ்வொரு யோக்யதை பெற்றவனும் தன்னை ஞானியென நினைத்துக்கொண்டால் உண்மையான ஞானம் எது?
வாஸ்தவத்தில் ஞானியென்பான எவன்? என்கிற கேள்விக்கு சாஸ்த்ரங்கள் சொல்லும் உத்தரமாவது
எம்பெருமானை அறிகிற அறிவு ஒன்றுதான் ஞானமெனப்படும் என்பதே.

“ஒந்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்கிற வாக்கியமே இப்பாட்டின் முக்கிய விஷயம்.
மற்றவை த்ருஷ்டாந்த கோடியிலே அருளிச் செய்யப்பட்டவை.

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –67-

பதவுரை

ஆறு–ஆறுகளானவை
பெயரும் கரு கடலே நோக்கும்–பொங்கி கிளர்கின்ற மஹா ஸமுத்ரத்தையே நோக்கிச் செல்லும்;
ஒண் பூ–அழகிய தாமரைப் பூவானது
உயரும்–உயர்ந்த ஸ்தாநத்திலே [ஆகாசத்திலே] இருக்கிற
கதிரவனே–ஸூர்யனையே
நோக்கும்–கண்டு மலரும்;
உயிரும்–பிராணனும்
தருமனையே நோக்கும்–யம தர்ம ராஜனையே சென்று சேரும்;
[இவை போலவே]
உணர்வு–ஞானமானது
ஒண் தாமரையாள்–அழகிய தாமரைப் பூவிற்
கேள்வன்–பிறந்த பிராட்டிக்கு
ஒருவனையே–வல்லபனான பெருமானொருவனையே
நோக்கும்–சென்று பற்றும்

ஆறுகளானவை ஸமுத்ரத்தையே நோக்கிச் செல்வதும், – தாமரைப்பூ ஸூர்யனை நோக்கியே மலர்வதும்,
பிராணன்கள் யமதர்ம ராஜனையே சென்று கிட்டுவதும் எப்படிநியதமாக நிகழ்கின்றனவோ
அப்படியே ஜ்ஞாநமென்பதும் திருமாலைப்பற்றியல்லது வேறு விஷயங்களைப்பற்றி நில்லாது என்றது-
எம்பெருமானைத் தவிர்த்து இதர விஷயங்களைப் பற்றியுண்டாகும் அறிவு அறிவல்ல; அது அஜ்ஞாநபர்யாயமே என்றவாறு .

“தொக்கிலங்கியாறெல்லாம் பரந்தோடித்தொடு கடலே, புக்கன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்,
மிக்கிலங்குமிகில் நிறத்தாய் வித்துவக்கோட்டம்மா, உன்புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே!” என்ற
பெருமாள் திருமொழிபாசுரம் ஒருபுடை ஒப்பு நோக்கத்தக்கது.

பிள்ளைலோகாசர்யாருளிச்செய்த முமுக்ஷுப்படியில் திருமந்தரப்ரகரனத்தில் 73 “ இத்தால்-
*தாமரையாள் கேள்வ நொருவனையே நோக்கு முணர்வு என்றதாயிற்று” என்னும் ஸூத்ரத்திற்கு
மணவாளமாமுனிகளருளிச்செய்துள்ள வியாக்கியான சைலியை நோக்குங்கால்,
இப்பாட்டில் உணர்வு என்பது ஜ்ஞாநமயனான ஆத்மா என்று பொருள்படிகிறதென்று கொண்டு,
ஜ்ஞாநைக நிரூபணீயனான ஆத்மா திருமாலுக்கு அநந்யார்ஹ சேஷபூதனென்பதை
இப்பாட்டு உணர்த்துவதாகக் கருத்துக்கொள்ளவும் இடமேற்படுகின்றது; அதுவும் ஒரு நிர்வாஹமாகும்.

இப் பாட்டால் மூன்று வகையான சாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன்;
1. எம்பெருமானைப்பற்றி யுண்டாகிற ஞானமே ஞானம் .
2. ஆத்மா எம்பெருமானுக்கே உரியவன்.
3. ( தாமரையாள் கேள்வனென்று பிராட்டி ஸ்ம்பந்தம் தோற்றச் சொல்லியிருக்கையாலே) மிதுந சேஷத்வமே ஜீவாத்மலக்ஷணம் –
என்னு மிப்பொருள்கள் மூன்ருமாம்.

“உயிரும் தருமனையே நோக்கும் “ என்றவிடத்தில் ஒரு விசாரமுண்டு:
அவைஷ்ணவர்களுடைய பிராணன் யமதர்மராஜனுக்கு வசப்படுமேயன்றி
ஸ்ரீவைஷ்ணவர்களின் பிராணான் அப்படி யமனைசென்று கிட்டமாட்டாதே; அப்படியிருக்க,
“ உயிரும் தருமனையே நோக்கும்” என்றுபொதுவாக எப்படி அருளிச்செய்யலாம்? என்று.

இதற்கு அப்பிள்ளையுரையில் “ உயிரும்-பகவத் பரரல்லாத நாட்டிற் பிராணிகளடங்கலும்” என்றுரைத்திருக்கக் காண்கையாலே
இந்த சங்கை வேண்டா என்பர் சிலர்.
வைஷ்ணவர்களானாலும் சரி, அவைஷ்ணவர்களானாலும் சரி; எல்லாருடைய பிராணனும் பகவதாஜ்ஞையின் படி
யமதர்ம ராஜனிடத்திலேயே சென்று சேரும்;
ஸித்தாந்தத்தில் ஆத்மா’ வேறு, பிராணன் வேறு; வைஷ்ணவாத்மா எம்பெருமானைச் சென்று சேர்ந்தாலும்
அவனுடைய பிராணன் யமனைத்தான் சென்று சேரும் என்பர் சிலர்.
மற்றுஞ் சிலர் “ யமோவைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹருதி ஸ்தித” என்றும்
“ க்ருஷ்ணம் தர்ம்ம் ஸநாதநம்” என்றும் எம்பெருமானையே யமனாகவுஞ் சொல்லியிருக்கையாலே
“ உயிரும் ‘தருமனையே நோக்கு” மென்கிற விவ்விடத்திற்கும் அவ்வெம்பெருமானே பொருள் என்பர். நிற்க.

———————

திருமாலை யறிவதே அறிவு என்று கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார்,
அறிவுக்கு எல்லை நிலம் எம்பெருமானல்லது இல்லை என்னும்படி யிருந்தாலும்
அவன் தன்மை அறிவார் தான் இல்லை என்று இப்பாட்டிலருளிச் செய்கிறார்.
இவ்வாறிருப்பது வஸ்துவின்ஸ்வபாவமேயொழிய அறிவின் குறைவன்றென்பதும் அறியத்தக்கது.”உணர்வாரார்? ‘ என்ற வினாவினால்
ஸர்வஜ்ஞ்னான உன்னாலும் உன் தன்மை அறியமுடியாதென்பதும் ஸூசிப்பிக்கப்படும்
“ தனக்கும் தன் தன்மையறிவரியான்” என்றார் நம்மாழ்வாரும்.

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்  வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-

பதவுரை

விண்ணகத்தாய்–பரமபதத்திலெழுந்தருளி யிருப்பவனே!
மண்ணகத்தாய்–இந்த மண்ணுலகில் திருவவதரிப்பவனே!
வேங்கடத்தாய்–திருமலையில் நின்றருள் பவனே!
பண் நால் வேதம் அகத்தாய்–ஸ்வர ப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப் படுபவனே!
உன் பெருமை–(இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை
ஊழி தோறு ஊழி–காலமுள்ளதனையும்
(இருந்து ஆராய்ந்தாலும்)
உணர்வார் ஆர்–அறியக் கூடியவர் யாவர்?
உன் உருவம் தன்னை–உனது திவ்யாத்ம ஸ்வரூபத்தைத்தான்
உணர்வார் ஆர்–அறியக்கூடியவர் யாவர்?
நீ கிடந்த பால்–(ஆர்த்த ரக்ஷணத்துக்காக ) நீ பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திருப்பாற்கடலைத்தான்
உணர்வார் ஆர்–அறிய வல்லாரார்? [எவருமில்லை.]

———–

இப்பாட்டு ஒரு சமத்காரமான கேள்வியாயிருக்கிறது
மஹாப்ரளயத்திலே இந்த விபூதி அழியாதபடி திருவயிற்றிலே இதனை வைத்துக் கொண்டு அப்ராக்ருதமான உனது
திருமேனியைச் சிறுக்கி ஒரு சிறுகுழந்தை வடிவத்தைக் கொண்டவனாகி,
சயனிப்பதற்குச் சிறிதும் பற்றாத ஒரு ஆலந்தளிரில் நீ பிரளய காலத்தில் சயனித்தருளினாயென்று
பரம ஆப்தர்களான முனிவர் மொழிகின்றனர்; ‘ எத்திறம்!’ என்று நினைந்து நைந்து ஈடுபடும்படியான இச்செயலானது—
முன்பு கிருஷ்ணாவதாரத்தில் ஏழுபிராயத்தில் ஏழுநாள் ஒருசேரக் கோவர்த்தந மலையையெடுத்துக் குடையாகப் பிடித்த
அருஞ்செயலைக்காட்டிலும் அதிக ஆச்சரியமாயிருக்கின்றது;
நீ கண்வளர்ந்த அந்த ஆல் பிரளய ஸமுத்திரத்தில் தோன்றியதோ?
அன்றி, பிடிப்பொன்றுமில்லாத ஆகாசத்தில் தோன்றியதோ?
அன்றி, பிரளயத்தில் கரைந்துபோன மண்ணிலிருந்துதான் தோன்றியதோ?
இதன் வரலாற்றை விளங்கச் சொல்லவேணுமென்று கேட்கிறார்.
இவ்வதிசயம் ஸர்வஜ்ஞனான வுன்னாலும் கண்டுபிடித்துச்சொல்லமுடியாத தென்றும்
அகடிதகடநாஸாமர்த்தியத்தினால் நேரும் அதிமாநுஷ சேஷ்டிதங்களின் குதர்க்கங்கள் பண்ணுவது தகாதென்றும் வெளியிடுதலே
இப்பாட்டின் முக்கிய நோக்கமாகும்.

பாலன்  றனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பதவுரை

சோலை சூழ் குன்று எடுத்தாய்–சோலைகளால் சூழப்பட்ட கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்தவனே!
நீ பாலன் தனது உருஆய்–நீ சிறுகுழந்தை வடிவு கொண்டு
ஏழ் உலகு–எல்லா வுலகங்களையும்
உண்டு–திருவயிற்றிலே வைத்து
ஆல் இலையின் மேல்–ஓர் ஆலந்தலிரின் மேல்
அன்று–பிரளயகாலத்தில்
வளர்ந்த–கண் வளர்ந்த செயலை
மெய் என்பர்–(வைதிகர்கள் யாவரும்) ஸத்யமென்கிறார்கள்.
அன்று-(எல்லாம் அழிந்து கிடந்த) அக்காலத்தில்
ஆல்–அந்த ஆலானது
வேலை நீர் உள்ளதோ–வெள்ளங் கோத்துக்கிடக்கிற பிரளய ஸமுத்திரத்தின் ஜலத்திலுள்ளதோ?
(அல்லது)
விண்ணதோ–(நிராலம்பமான) ஆகாசதில்லுள்ளதோ?
மண்ணதோ–(பிரளய ஜலத்திலே கரைந்து போன) பூமியிலுள்ளதோ?
சொல்லு–இவ் வாச்சரியத்தை நீயே சொல்ல வேணும்.

———

எம்பெருமான் விசித்ரசக்தி வாய்ந்தவனென்பதைக் கீழ்ப்பாட்டில் தெரிவித்து இப்படிப்பட்ட பெருமானை
உலகத்திலுள்ளீ ரெல்லீரும் பணிந்து வாழுங்கோளென்று பரோபதேசத்தில் மூளுகிறாரிப்பாட்டில்.

சொல்லும் தனையும் தொழுமின் விழுமுடம்பு
செல்லும் தனையும் திருமாலை -நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று —–70-

பதவுரை

திருமாலை–பிராட்டியோடு கூடின பெருமானை
நல் இதழ் தாமத்தால்–அழகிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளாலும்
வேள்வியால்–யாகம் முதலிய ஸத் கரு மங்களாலும்
தந்திரத்தால்–(மந்த்ரமில்லாத) வெறும் க்ரியைகளாலும்
மந்திரத்தால்–(க்ரியா கலாபமில்லாத) வெறும் மந்திரங்களாலும்
விழும் உடம்பு செல்லும் தனையும்–அஸ்திரமான இந்த சரீரம் உள்ள வரையில்
தொழுமின்–தொழுங்கள்;
(இவற்றை செய்ய சக்தி யில்லா விட்டால்)
சொல்லும் தனையும்–(உங்களுக்குச்) சொல்லக் கூடிய சக்தியுள்ள வரையிலும்
நாமத்தால்–திருநாமங்களைக் கொண்டு
ஏத்துதிர் ஏல்–புகழ்ந்தீர்களாகில்
நன்று–அது மிகவும் நல்லது.

“ விழுமுடம்பு செல்லுந்தனையும் நல்லிதழ்த் தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் திருமாலைத் தொழுமின்;
சொல்லுந்தனையும் நாமத்தால் ஏத்துதிரேல் நன்று” என்று அந்வயிப்பது.
இந்த சரீரம் என்றைகாவ தொருநாள் சரிந்தே போகப் போகிறது;
“இதம் சரீரம் பரிணாம பேசலம் பதத்யவச்யம் சலதஸந்தி ஜர்ஜரம்” (முகுந்தமாலை) என்றபடியே
தவறாமல் நசித்தே போகக் கடவதான இவ்வுடல் உள்ளவரையில் சிறந்த புஷ்பங்களைக் கொண்டும்
யாகம் முதலிய வைதிக கருமங்களைக்கொண்டும் மந்தர தந்த்ரங்களைக் கொண்டும் எம்பெருமானைப் பணியுங்கள்;
சரீரத்தால் சிரமப்பட்டுச் செய்யக்கூடிய அக்காரியங்களில் கைவைப்பது கஷ்டமாயிருந்தால்,
வெறும் வாயினால் எவ்வளவு சொல்லக்கூடுமோ அவ்வளவு திருநாமங்களைச் சொல்லி ஏத்தினாலும் போதுமானது- என்றாராயிற்று.

தாமம், தந்திரம், மந்திரம், நாமம் – வடசொற்கள்.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: