ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -51-60 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

எம்பெருமானுடைய திருநாமங்களைப் பரம போக்யமாக நாம் வாயாரச் சொல்லவே,
அப்பெருமான் ப்ரஹ்லாதாழ்வானுடைய விரோதியைத் தொலைத்துத் தன்னைக் கொடுத்தாப் போலே
நமக்கும் விரோதியைப் போக்கித் தன்னைத் தந்தருள்வனென்கிறார்.

எளிதில் இரண்டடியும்   காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே கனியில்
பொருந்தாவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான்    திருநாமம் எண்——-51–

பதவுரை

என் உள்ளம்-எனது நெஞ்சே!(நீ)
தெளிய–கலக்கம் தீர்ந்து தெளிவு பெற்றால்
(அந்த எம்பெருமானும்)
செவ்வே தெளிந்தொழியும்–மிகவும் நன்றாக ப்ரஸந்நனாவன்;
(ஆகையினால்)
களியில்–அஹங்காரத்தாலே
பொருந்தாதவனை–அடி பணியாதிருந்த ஹிரண்யாசுரனோடு
பொரல் உற்று–போர் செய்யத் தொடங்கி
அரி ஆய் இருந்தான்–நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய
திரு நாமம்–திருநாமங்களை,
இரண்டு அடியும் எளிதில் காண்பதற்கு–(அவனுடைய) உபய பாதங்களையும் சுலப மாகக் காணும் பொருட்டு
எண்–சிந்திப்பாயாக.

என்னுள்ளம் என்றது அண்மைவிளி; என்னுள்ளமே! என்றபடி. நீ எம்பெருமானுடைய திருவடியிணையை ஸேவித்து
அநுபவிப்பதற்கித் தெளிவுகொண்டிருந்தால் அவன் ப்ரஸந்நனாய் அருள்புரிவன்;
நீ தெளிவுற்றிருக்கிறாயென்பது நன்குவிளங்குமாறு ஸ்ரீ நரசிம்ஹமூர்த்தியின் திருநாமங்களை எண்ணிக் கொண்டிரு.

————

அஹங்காரிகளான முப்பத்து மூவரமரர்களும் எம்பெருமானை யடி பணிந்தே சிறப்புற்றிருக்கின்றனரென்கிறார்.

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று —-52–

பதவுரை

எண்மர்–அஷ்ட வஸுக்களும்
பதினொருவர்–ஏகாதச ருத்ரர்களும்
ஈர் அறுவர்–த்வாதசாதித்யர்களும்
ஓர் இருவர்–இரட்டையரான அச்விநீ தேவதைகளும்
(ஆகிய முப்பத்து மூவரான தேவர்களும்)
வைகலும்–நாள் தோறும்
வண்ணம் மலர் ஏந்தி–நாநா வர்ணங்களை யுடைய புஷ்பங்களை யெடுத்துக் கொண்டு
நண்ணி–(எம்பெருமானைக்) கிட்டி
ஒரு மாலையால்–ஒப்பற்ற புருஷ ஸூக்தமாகிற சொல் மாலையைக் கொண்டு
ஓவாது–இடைவிடாமல்
எப்போதும்–எல்லா வேளைகளிலும்
பரவி–துதிசெய்து
திருமாலை சென்று–திருமகள் கொழுநனைக்கிட்டி
கை தொழுவர்–வணங்குவர்கள்

முதலடியில் முப்பத்து மூன்று தேவர்களை எடுத்துக் காட்டினது முப்பத்து முக்கோடி தேவர்களெனப்படுகிற
அனைவரையும் எடுத்துக்காட்டினமைக்குப் பர்யாய மென்க.
நம்மாழ்வாரும் பெரிய திருவந்தாதியில் “ இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர். எட்டோடொரு நால்வர் ஓரிருவர்” என்றருளிச்செய்தது காண்க.

—————-

திருவனந்தாழ்வானைப்போல எம்பெருமானுக்கு எல்லாக் காலங்களிலும் எல்லா விதமான அடிமைகளையும்
செய்யப்பெற வேணுமென்று திருவுள்ளங்கொண்ட ஆழ்வார்
அத்திருவனந்தாழ்வான் செய்யுமடிமைகளை யெடுத்தருளிச் செய்கிறார்.

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம்  திருமாற் கரவு  ——53-

பதவுரை

திரு மாற்கு–பிராட்டியோடு (எப்போதும்) கூடியிருக்கிற பெருமானுக்கு
அரவு–திருவனந்தாழ்வான்,
சென்றால் குடை ஆம்–(அப்பெருமான் )உலாவினால் (அப்போது மழை வெயில் படாதபடி) குடையாக உருவெடுப்பன்;
இருந்தால்–எழுந்தருளியிருந்தால்
(அப்போது)-
சிங்காசனம் ஆம்–ஸிம்ஹாஸாமாயிருப்பன்;
நின்றால்–நின்று கொண்டிருந்தால்
(அப்போது)
மரவடி ஆம்–பாதுகையாவன்;
நீள் கடலுள்–பாம்பிணை யுடலிலே
(சயனிக்கும்போது)
என்றும்–எப்போதும்
புணை ஆம்–திருப் பள்ளி மெத்தையாவன்;
அணி விளக்கு ஆம்–மங்கள தீபமாவன்;
பூம்பட்டு ஆம்–அழகிய திருப்பரி வட்டமாவன்;
புல்கும் அணை ஆம்–தழுவிக் கொள்வதற்கு உரிய அணையுமாவன்.

எம்பெருமான் உலாவியருளும் போது மழை வெயில் படாதபடி குடையாக வடிவெடுப்பன்;
எழுந்தருளீ யிருந்த காலத்தில் திவ்ய ஸிம்ஹாஸந ஸ்வரூபியாயிருப்பன்; நின்று கொண்டிருந்தால் பாதுகையாயிருப்பன்;
திருப்பாற்கடலில் திருக்கண்வளர்ந் தருளும்போது திருப்பள்ளி மெத்தையாயிருப்பன்;
ஏதேனு மொன்றை விளக்குக்கொண்டுகாண அவன் விரும்பினபோது திருவிளக்குமாவன்;
சாத்திக்கொள்ளும்படி திருப்பரிவட்டத்தை அவன் விரும்பினபோது அதுவுமாவன்;
சாயந்தருளும்போது தழுவிகொள்வதற்குரிய உபதாநமுமாவன்.

நீள்கடலுள் புணையாம் – திருப்பாற்கடலில் அழுந்தாதபடி தெப்பமாவன் என்று முரைக்கலாம் .
புல்கும் அணையாம் –எம்பெருமான் பிரணய கலஹத்தினால் பிராட்டிமாரைப் பிரிய நேர்ந்தால் அப்போது விரஹ துக்கம்
தோன்றாத படிக்குத் திருவனந்தாழ்வானைத் தழுவிக் கொள்வனாம்.

மூன்றாமடியில் “ மணி விளக்காம்” என்றும் பிரிக்கலாம்

—————-

ஆச்ரித விரோதிகளைப் போக்க வேண்டில், கீழ்ப்பாட்டிலருளிச் செய்தபடி தன் நினைவுக்குத் தகுதியாக
எல்லா வடிமைகளையுஞ் செய்கிற திருவனந்தாழ்வானாகிற படுக்கையுலும் பொருந்த மாட்டாமல் இந்த லீலாவிபூதியில்
வந்து பிறந்து களைபிடுங்கித் தன்விபூதியைப் பாது காப்பவன் என்று அவனது திருக்குணத்தை அநுஸந்தித்து
அதற்கேற்ற சில திவ்ய சேஷ்டிதங்களை யநுபவிகிறாரிப்பாட்டில்.

அரவம் அடல் வேழம் ஆன்குருந்தம்  புள்வாய்
குரவை குட முலை மற்  குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் ———–54–

பதவுரை

செம் கண் அவன்–செந்தாமரைக் கண்ணனாகிய அப்பெருமான்
கரவு இன்றி–மறைவு இல்லாமல் [ஸர்வலோக ப்ரஸித்தமாம்படி]
அரவம்–காளிய நாகத்தை
விட்டு–விட்டடித்தும்
அடல் வேழம்–பொருவதாக வந்த (குவலயாபீட மென்னும்) யானையை
இறுத்து–(தந்தத்தை) முறித்து உயிர் தொலைத்தும்
ஆன்–பசுக்களை
மேய்த்து–(வயிறு நிரம்ப) மேய்த்தும்
குருந்தம்–அஸுரா வேகமுடைய குருந்தமரத்தை
ஒசித்து–ஒடித்துப் பொகட்டும்
புள்வாய்–பகாசுரனுடைய வாயை
கீண்டு–கிழித்தும்
குரவை–ராஸக்ரீடையை
கோத்து–(இடைப் பெண்களோடு) கை கோத்து ஆடியும்
குடம்–குடங்களைக் கொண்டு
ஆடி–கூத்தாடியும்
முலை–பூதனையின் முலையை
உண்டு–(அவளுடைய உயிரோடு) உறிஞ்சி யுண்டும்
மல்–(கம்ஸனால் ஏவப்பட்ட) மல்லர்களை
அட்டு–கொன்றும்
குன்றம்–கோவர்த்தன மலையை
எடுத்த–(குடையாக) எடுத்துப் பிடித்த இச் செயல்கள்
(என்ன ஆச்சரியம்!..)

கண்ணபிரானது காளியமர்த்தநம் முதலிய அரிய செயல்களை அனுஸந்தித்த ஆழ்வார் அவற்றில் உள் குழைந்து ஈடுபட்டு
மேலொன்றும் சொல்ல மாட்டாமையால் ஒரு வினைமுற்றுச் சொல்லவும் மாட்டாது விட்டனர்;
ஆச்சர்ய கரமான விஷயங்களைக் கூறும்போது அவற்றுக்கு வினை முற்றுத் தந்து முடியாது நிறுத்துவதைப்
பல கவிகளின் வாக்குகளிலும் காணலாம்.

ஈற்றடியில் எடுத்த என்றது –’ அன்’ சாரியை பெறாத பலவின்பாற்பெயர்; சாரியை பெறின் ‘எடுத்தன’ என நிற்கும்.
இப்பாட்டில், அரவுமுதலிய பெயர்ச்சொற்கள் ‘விட்டு’ முதலிய வினைச்சொற்களை முறையே சென்று இயைதலால் முறை நிரனிறையாம்;
இதை வடமொழியில் ‘யதாஸங்க்யாலங்காரம்’ என்றும், தென்மொழியில்’ நிரனிறையணி’ என்றும் அலங்கார சாஸ்திரிகள் கூறுவர்.

காளியநாகத்தை வலியடக்கி உயிரோடு விட்டதும்,
குவலயா பீடமென்னும் கம்ஸனது யானையைக் கொம்புமுறித்து முடித்ததும் ,
தன் மேன்மையைப் பாராமல் தாழநின்று பசுக்களைமேய்த்ததும்,
அஸுரன் ஆவேசித்திருந்ததொரு குருந்தமரத்தை முறித்து வீழ்த்தியதும்,
பகாஸுரன் வாயைக் கீண்டொழித்ததும்,
இடைப்பெண்களோடே குரவைக் கூத்தாடியதும்,
குடங்களெடுத்தேற வெறிந்தாடியதும்,
தன்னைக் கொல்லுமாறு தாய்வடிவு கொண்டு வந்த பூதனையின் ஸ்தனங்களை உறிஞ்சியுண்டதும்,
மல்லர்களைக் கொன்றதும்,
கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்தேந்தி நின்றதுமாகிய
இச்செயல்கள் என்ன ஆச்சரியம்! என்று ஈடுபட்டுப் பேசினாராயிற்று.

————-

யமபடர்கள் பாகவதர் திறத்திலே அஞ்சி யிருக்கும் படியை அருளிச் செய்கிறார்.

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

பதவுரை

அரவு அணைமேல்–சேஷ சயனத்தின் மீது வாழ்கிற
பேர் ஆயற்கு–இடைத் தனத்தில் குறைவின்றிப் பூர்ணமாயிருக்கிற ஸ்ரீகிருஷ்ணனுக்கு
ஆட்பட்டார் பேர்–அடிமைப் பட்டவர்களின் திரு நாமத்தை வஹிக்குமவர்களும்
நமன் தமரால்–யம படர்களாலே
“அவன் தமர் எவ்வினையர் ஆகிலும்–“ அந்த சர்வேச்வரனுடைய பக்தர்கள் எவ்வகையான செயலை யுடையவராயிருந்தாலும்
எங்கோனவன் தமரே”–எம்பெருமானுடைய பக்தர்களன்றோ”
என்று–என்று கொண்டாடிக் சொல்லி
ஒழிவது அல்லால்–(தாங்கள்) விலகிப் போவது தவிர,
ஆராயப்பட்டு அறியார்–ஆராயப் பட்டிருநக்க அறிய மாட்டார்கள்

யமன் நாட்டிலுள்ளாருடைய பாவங்களையெல்லாம் ஆராய்வதற்கு அந்த ஸர்வேச்வரனால் நியகிக்கப்பட்டவனே;
ஆனாலும் தனக்கும் நியாமகனான அந்த ஸர்வேச்வரனுடைய பக்தர்கள் நற்காரியங்களைத் தவிர்ந்து
தீய காரியங்களையே செய்து வந்த போதிலும் அவர்களை யம கிங்கரர்கள் “நமது யஜமாநனான யமனையும் நியமிக்கும்
வல்லமை யுடையவர்களன்றோ இந்த பாகவதர்கள்” என்று கொண்டாடி வணங்கி அப்பால் போய்விடுவார்களே தவிர,
அவர்களுடைய குணா குணங்களை ஒருபோதும் ஆராய்ச்சி செய்யமாட்டார்கள்: ஏனெனில்;
அப்படிப்பட்டவர்களை ஸம்ரக்ஷிப்பதில் புருஷகார பூதையான பிராட்டியும் ஒருகால் ஏதேனும் குறை சொல்லிலும் அதையும் லக்ஷியஞ்செய்யாமல்

“ என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” என்று சொல்லிக் கொண்டு ஸர்வேச்வரன் பரிந்து ரக்ஷிப்பவனன்றோ?
இப்படிப் பெரிய பிராட்டியாராலும் குறை கூறக் கூடாதவர்கள் விஷயத்தில் நம்மால் அணுகவும் முடியுமோ? என்கிற பயத்தினாலென்க.
அன்றியும், யமன் தன்படர்களை நோக்கி ‘நீங்கள் வைஷணவர்கள் திறத்தில் அபசாரப்பட வேண்டா;
அவர்களைக் கண்டால் அநுவர்த்தித்திருங்கள்’ என்று கட்டளை யிட்டிருக்கின்றானென்பதை,

“ திறம்பேன்மின் கண்டீர், திருவடி தன் நாமம், மறந்தும் புறந்தொழா மாந்தர்- இறைஞ்சியும் சாதுவராய்ப்
போதுமின்களென்றான் நமனும் தன் , தூதுவரைக் கூவிச் செவிக்கு.” என்ற நான்முகந்துருவந்தாதிப் பாசுரத்தாலும்,
* ஸ்வபுருஷ மபிவீக்ஷ்ய பாசஹஸ்தம்வததி யம : கில தஸ்ய கர்ணமூலே – பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந்
ப்ரபுரஹமந்யந்ருணாம் . ந வைஷ்ணவாநாம்.” என்ற ஸ்ரீவிஷ்ணுபுராணவசநத்தாலும் அறிக.

“கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்ன, நாளுங் கொடுவினைசெயுங் கூற்றின் தமர்களுங் குறுககில்லார்” என்ற திருவாய்மொழியும்,
“வென்றி கொண்ட வீரனார், வேறு செய்து தம்முளென்னை வைத்திடாமையால் நமன், கூறுசெதுகொண்டு இறந்த குற்ற மெண்ணவல்லனே” என்ற
திருச்சந்தவிருத்தமும் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

இப்பாட்டில் “ பேராயற்கு ஆட்பட்டார்பேர்” என்ற ஈற்றடிக்கு வேறுவகையாகவும் பொருளுரைக்க இடமுண்டாயினும்,
அழகியமணவாளப்பெருமாள் நாயனாரருளிச்செய்த திருப்பாவை ஆறாயிரப்படி வியாக்கியானத்தில்
ஆழிமழைக்கண்ணா வென்னும் நாலாம் பாட்டின் அவதாரிகையில்,
“ அவன்தமரெவ்வினையராகிலும் இத்யாதி” என்று இப்பாசுரத்தையெடுத்து
[” அரவணைமேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் ஆராயப்பட்டு அறியார் கண்டீர்= ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது,
அவனையும் யமன் கோஷ்டியில் பட்டோலை பார்க்கப்பெறாது”] என்று வியாக்கியானித்தருளியிருக்கக் காண்கையாலே
‘பேராய்ற் காட்பட்டார்பேர்’ என்னுமளவை ஒருசொல்லாகக்கொண்டு (அன்மொழித் தொகையாகப் பாவித்து)
எம்பெருமானுக்கு ஆட்பட்டவர்களுடைய பேரை யுடையவர்கள் எனப் பொருள் கொள்ளூதல் சிறக்கும்

————-

பேரே வரப் பிதற்ற லல்லால் எம் பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ——56-

பதவுரை

[நாம் வாயினால் ஏதெனுமொன்றைச் சொன்னாலும், அது]
பேரே–எம்பெம்மானது திருநாமமாகவே
வர–வரும்படியாக
பிதற்றல் அல்லால்–பிதற்றுவதைத் தவிர
எம்பெம்மானை–[அந்த] எம்பெருமானை
ஆரே–ஆர் தான்
அறிவார்–(உள்ளபடி) அறிய வல்லவர்கள்?
அது நிற்க–அந்த விஷயம் இருக்கட்டும்;
அயன்–பிரமனானவன் .
கடி–பரிமளம் மிகுந்த
கமலத்துள்–(அவ்வெம் பெருமானது, நாபிகமலத்திலே (பிறந்து)
நேரே இருந்தும்–(அங்கே) நிரந்தர வாஸம் பண்ணிக் கொண்டிருந்தும்
கண்ணன் அடி கமலம் தன்னை–அந்த ஸர்வேச்வரனுடைய திருவடிகளை
காண்கிலான்–ஸேவிக்கப் பெற்றானில்லை.

எம்பெருமானுடைய பிரபாவம் ஆர்க்கும் அளவிட்டறிய முடியாதது; கடற்கரையில் குடிசை கட்டிக்கொண்டிருப்பவர்க்கும்
அந்தக் கடலினுடைய ஆழம் அறிய முடியாமற் போவதுபோலவே அவனுடைய திருநாபிக்கமலத்தில் தோன்றின
நான்முகக்கடவுள் எப்பொழுதும் அவ்விடத்தே வாஸஞ்செய்து கொண்டிருந்தும் அவனுக்கும் அப்பெருமானுடைய பெருமை
அளவிட்டறியக் கூடாததாயிராநின்ற தன்றோ; ஆகையினால் ‘எம்பெருமான் உணர்வதற்கு முடியாதவன் ’என்று
நாம் உணர்ந்து அவனது திருநாமங்களை வாயில் வந்தபடியெல்லாஞ் சொல்லிக் கூப்பிடுவது செய்யலாமத்தனையொழிய,
அவனது மஹிமையை உள்ளபடியறிந்து எவராலும் சொல்லப்போகாது என்றவாறு.

சாஸ்திரங்களில் பலபேர்களைக் குறித்து ‘ப்ரஹ்மஜ்ஞாநி’ என்று சொல்லியிருப்பதெல்லாம்-
பரப்ரஹ்மத்தை உள்ளபடி அளவிட்டறிந்தமையைச் சொன்னதன்று;
‘எம்பெருமான் அளவிட முடியாதவன்’ என்ற இவ்வுண்மையை அறிந்தவர்களே ப்ரஹ்ம வித்துக்களெனப்படுவார் என்றறிக.

கன்றுகுட்டியானது ஓரிடத்திலிருந்துகொண்டு தன் தாயைக்காணாமல் அம்மே! என்று கத்தினால் அக்கத்துதல்
தன் செவிப்பட்ட மாத்திரத்தில் தாய்ப்பசு இரங்கிக் கன்றின் பக்கத்தில் வந்து நிற்பதுபோலவே,
எம்பெருமானை உள்ளபடி அறியாவிட்டாலும் அவனது திருநாமத்தை வாய்வந்தபடி பிதற்றினால்
அவன் வந்து அருள்புரிவான் என்ற கருத்து முதலடியில் உய்த்துணரத்தக்கது.

பெம்மான் – ‘பெருமான்’ என்பதன் மரூஉ. நிற்க- வியங்கோள்முற்று.
இப்பாட்டில் “நேரே கடிக்கமலத்துள்ளிருந்தும் அயன் கண்ணனடிக் கமலந்தனைக் காண்கிலான்; (ஆதலால் )
எம்பெம்மானை ஆரேயறிவார்? என்று கைமுதிக நியாயம்படக் கூறியிருத்தலால் தொடர்நிலைச்செய்யுட் பொருட்பேறணியாம்.

———-

பலவகைக் கொடிய பாவங்கள் என்னிடத்தில் நெருங்கிக் கிடப்பதைக் கண்டு ‘இப்பாவங்கள் இன்னமும் முன்போலவே
மேல்விழுந்து நலிந்தால் நாம் என்ன செய்வது!’ என்று பயப்பட்டேன்;
‘எம்பெருமானது திருவடிகளிற் சென்று சேர்ந்துவிட்டால் பாவங்கள் அடியோடு நீங்கப்பெற்று நாம் உஜ்ஜீவிக்கப் பெறலாம்’
என்று துணிந்து, உன் திருவடிகளில் வந்து சேரும்விதம் யாது? என்று ஆராய்ந்து பார்த்தேன்;
நமது வாய் மொழிகளை உன் விஷயத்தில் உபயோகிப்பதே அதற்குச் சிறந்தவழி என்று நிச்சயித்து,
திருமந்திரத்தின் பொருளை விவரிப்பதான இப் பிரபந்தத்தைப் பாடினேன்;
இதனால், பாவங்களுக்கு அஞ்சின அச்சம் தீர்ந்து உஜ்ஜீவநமும் பெற்றேன் என்றாராயிற்று.

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது ——57-

பதவுரை

அயல் நின்ற–(என்) அருகிலேயே இருந்து கொண்டு (என்னை) இடைவிடாமல் ஹிம்ஸித்துக் கொண்டே யிருக்கிற
வல் வினையை–மிகக் கடினமான பாவங்களைக் குறித்து
அஞ்சினேன்–பயப்பட்டேன்;
அஞ்சி–(இப்படி) பயப்பட்டு
உய–(இந்தப் பாப ஸம்பந்தம் நீங்கி) உஜ்ஜீவிக்கும் பொருட்டு
நின்–உன்னுடைய
திரு அடியே–திருவடிகளில் தானே
சேர்வான்–வந்து கிட்டுகைக்காக
நயம் நின்ற–இன்பம் பொருந்திய
நல் மாலை கொண்டு–சிறந்த இந்தப் பிரபந்தத்தைக் கொண்டு
தொழுது–(உன்னை) ஆச்ரயித்து
நமோ நாரணா என்னும் சொல் மாலை–திருமந்திரத்தின் பொருளை
கற்றேன்–அப்யஸித்தேன்.

சேர்வான்= வான் விகுதி பெற்ற எதிர்கால வினையெச்சம்.
“நயம்நின்ற” என்பதற்கு- ‘திருமந்த்ரார்த்தத்தை நயப்பித்தலில் நோக்கமாயுள்ள’ என்று பொருள் கூறுதலும் பிரகரணத்திற்குப் பொருந்தும்,
எம்பெருமானுடைய ஸ்வரூபம், அவனை அடைதற்குரிய ஜீவாத்மாவின் ஸ்வரூபம், அடைவதற்கான உபாயம், அடைந்து பெற வேண்டிய பேறு,
அடைவதற்கு இடையூறாகவுள்ள விரோதிஸ்வரூபம் ஆகிய இவ்வைந்து விஷயங்களே திருமந்திரத்தின் அர்த்தமாதலாலும்,
இவையே இப்பிரபந்தத்திலும் விவரிக்கப்படுகின்றன வாதலாலும் இதுகூடும்.

———-

நெஞ்சே! நாம் பகவத் விஷயத்தை விட்டு ஒரு நொடிப்பொழுதும் ஆறியிருக்க வழியில்லை;
நாம் குருகுலவாஸம் பண்ணி மந்த்ரங்களை அப்யஸிப்பதெல்லாம் எம்பெருமானை அடிபணிவதற்கேயன்றி
வேறொரு பிரயோஜனத்திற்காக வன்றே; ஆனபின்பு, தூப தீப புஷ்பாதிகளான உபகரணங்களைக் கையிற்கொண்டு
அப்பெருமானை ஆராதிக்கச் செல்வோம். எழுந்திரு; இனிநாம் தாமஸித்திருப்பதற்கு அவகாசமேயில்லை – என்று
தம் திருவுள்ளத்தை த்வரைப் படுத்துகிறார்.

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை யடை——58-

பதவுரை

நெஞ்சே–மனமே!
மலர் கொண்டு–புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டும்
தூபம்–தூபத்தை
கை ஏந்தி–கையிலே ஏந்திக் கொண்டும்.
தொழுது–(எம்பெருமானை ) வணங்கி
எழுதும்–உஜ்ஜீவிப்போம்;
எழு–நீ புறப்படு;
வாழி–(உனக்கு இந்த ஸ்வபாவம்) நித்தியமாயிடுக:
[நான் இப்படிச் சொல்லவதற்குக் காரணமென்னவென்றால்]
மந்திரங்கள்–பகவந் மந்த்ரங்களை
பழுது இன்றி கற்பனவும்–முறைப்படியே நாம் அப்யஸிக்கின்றனவும்
மால் அடி கை தொழுவான் ஏ–ஸர்வேச்வரன் திருவடிகளைத் தொழுவதற்காகவேயாம்:
ஆனபின்பு]
அந்தரம் ஒன்று இல்லை–(நாம் ஆறியிருப்பதற்கு) அவகாசம் சிறிதுமில்லை;
அடை–(அப்பெருமானை) விரைவில் சென்றுகிட்டு.

“மலர் கொண்டு தூபம்கையேந்தி- தொழுது எழுதும் எழு” என்று ஆழ்வார் சொன்னவுடனே நெஞ்சு மிகவும்
அதற்கு அநுகூலப்பட்டிருக்கவே “வாழி நெஞ்சே” என்று உவப்பினால் மங்களாசாஸநம் செய்தாரென்க;
இந்த ஆநுகூல்யம் உனக்கு ஒருநாளும் மாறாதிருக்க வேணுமென்றவாறு.

பழுது இன்றி = குருகுலவாஸம் செய்யாமல் மந்த்ரங்களைக் கற்பது பழுது;
அப்படிப்பட்ட பழுது இல்லாமல் [குருகுலவாஸம் பண்ணி] என்றபடி.
அந்தரம் ஒன்று இல்லை –’பிறகு பார்த்துக்கொள்வோம்’ என்று ஆறியிருக்க அவகாசம் சிறிதுமில்லை.

————

நாம் நல்ல வழியிற் போதுபோக்க வேணுமானால் பகவானை ஆச்ரயிப்போம்;
அப்படி அவனை ஆச்ரயிக்குமிடத்து ஆச்ரயிக்க வொட்டாமல் இடையூறாக அருவினை அல்லல் நோய் பாவம்
முதலியவை குறுக்கே நிற்கின்றனவே! அவற்றைப் போக்கும்வழி யாது? என்று சங்கை பிறக்க,
நமது பிரதிபந்தநங்களை இரு துண்டமாக்குவதற்கு உபாயமாக ஸ்ரீராமபிரானைச் சரணம் புகுதல் நன்று என்கிறார்.

அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——-59-

பதவுரை

அடைந்த–அடியே பிடித்துப் பற்றிக் கிடக்கிற
அரு–போக்குவதற்கு அருமையான
வினையோடு–பழவினைகளும்
அல்லல்–(அந்தப் பழவினையின் பயனாக வருகின்ற) மனத் துன்பங்களும்
நோய்–சரீர வியாதிகளும்
பாவம்–இப்போது செய்கிற பாவங்களும்.
மிடந்தவை–[இப்படிப் பலவகையாக] ஆத்மாவைத் தெரியாத படி] மூடிக் கிடக்கின்றவை
மீண்டு ஒழிய வேண்டில்–வாஸனையோடு விட்டு நீங்க வேணுமானால்
முன்–முன்பொருகால்,
நுடங்கு இடையை–மெல்லிய இடையை யுடையளான பிராட்டியை
இலங்கை வைத்தான்–லங்காபுரியில் சிறை வைத்தவனான இராவணனுடைய
முரண் அழிய–மிடுக்கு அழியும்படி
முன் ஒரு நாள்–ஸ்ரீராமனாய்ப் பிறந்தவொரு காலத்து
தன் வில்–தன்னுடைய வில்லை
அம்கை–அழகிய திருக்கையிலே
வைத்தான்–எடுத்துப் பிடித்தவனான பெருமானே
சரண்–உபாயமாவான்.

இத்தால், எம்பெருமானுக்கு போக்யமாயிருந்துள்ள ஆத்மவஸ்துவை என்னுடைய தென்று செருக்குற்றிருக்குமவர்கள்
ராவணாதிகள் பட்டது படுவாரென்னுமிடமும், இவ்வாத்வைஸ்து அவனுடையது’ என்று அநுகூலித்திருக்குமவர்களுக்கு
வரும் விரோதகளை அப்பெருமான் பிராட்டியின் துயரத்தைப் பரிஹரித்தது போலே
பரிஹரித்தருள்வனென்னும்மிடமும் தெரிவிக்கப்பட்டனவாம்.

—————-

உலகத்தில் பொதுவாக ஒரு நியாயமுண்டு; எவன் பலனை அநுபவிக்கிறானோ அவன் அதற்கு உரிய உபாயத்தை
அநுஷ்டிக்க வேணுமென்று. அந்த நியாயத்தைக் கொண்டு பார்க்கும் போது, எம்பெருமானைப் பெறுதலாகிற பயனை அநுபவிப்பவன்
சேதநனாயிருக்க அதற்குரிய உபாயமும் இவனிடத்திலன்றோ இருக்க வேண்டும்;
‘எம்பெருமானே உபாயம்’ என்று, முறையிடுவது எங்ஙனே பொருந்தும்? என்று ஒருசங்கை தோன்ற,
அஜ்ஞனாய் அசக்தனான இவனால் செய்யக் கூடியதொன்று மில்லாமையினால்,
ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தனான அவனே உபாயமாயிருக்க வேண்டியது ஆவச்யகமாயிற்றென்கிறார்.

பலனை அநுபவிப்பவனும் எம்பெருமானே, அதற்கு உபமா நுஷ்டாநம் செய்பவனும் எம்பெருமானே என்கிற
ஸத்ஸம் ப்ரதாய ஸித்தாந்தம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

கைதவறி போன பொருளைத் தேடிபிடித்து அநுபவிப்பதும் அதனால் ஆநந்தமடைவதும்
ஸொத்தையுடைய ஸ்வாமியின் காரியமேயொழிய ஸொத்தின் காரியமல்லவே;
இதுபோல அப்பரம புருஷனுடைய ஸொத்தாகிய நாம் அவனை விட்டுத் தப்பித் தவறியிருக்கிறோமாயின்,
நம்மைத் தேடிப்பிடித்து ஆட்கொள்ளப் பெருதலும் பெற்று மகிழ்தலும் அவனுக்கே உரியனவாதலால்
பலனை அநுபவிக்குமவனான தானே உபாயாநுஷ்டாநம் செய்கிறானென்க.
ஸ்ரீபாஷ்யத்தில் முடிவான ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் “பரமபுருஷ: ஜ்ஞாநிநம் லப்த்வா” என்ற ஸ்வாரஸ்யமுணர்க.

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–

பதவுரை

சரண் ஆம் மறை–(எல்லார்க்கும்) ஹிதத்தை உரைக்குமதான வேதத்தை
பயந்த–(எம்பெருமானிடத்தில் தானடைந்து நாட்டிலுள்ளவர்கட்காக) வெளிப்படுத்தின
தாமரையானோடு–பிரமனோடு கூட
மரண் ஆய–மரணமடையுந் தன்மை யுடைய
மன் உயிர்கட்கு எல்லாம்–நித்யமான ஸ்வரூபத்தை யுடைய ஆத்மாக்களெல்லா வற்றுக்கும்
அரண் ஆய–ரக்ஷகமான விதங்களை
பேர் ஆழி கொண்டபிராண் அன்றி–பெரிய திருவாழி யாழ்வானைக் கையிற் கொண்ட எம்பெருமான் அறிவனே யல்லது
மற்று–அவனிலும் வேறான
ஓர் ஆழி சூழ்ந்த உலகு–கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலுள்ளார்.
அறியாது–அறியமாட்டார்கள்.

இப்பாட்டில் சொல்லுகிற அர்த்தம் வேதங்களில் ஸித்தமானது என்பதைத் தெரிவிக்கவே
“சரணாமறைபயந்த” என்ற விசேஷணம் தாமரையானுக்கு இடப்பட்டது.

அரணாய’ என்பதை பேராழி கொண்ட பிரானுக்கு விசேஷணமாகப் பலர் மயங்கி மொழிவர்;
அது விசேஷணமன்று; இரண்டாம் வேற்றுமைச்சொல்: ‘அரணானவற்றை’ எனப் பொருள் படுதலால் பயனிலை.
பிரமன் முதல் எறும்பு ஈறாகவுள்ள ஸகல ஜந்துக்களுக்கும் உபாயமானவற்றை எம்பெருமான் அறிவனே யல்லது
அற்பஞானிகளான உலகத்தவர்கள் அறிய மாட்டார்கள் என்றவாறு.

ஆழி சூழ்ந்த வுலகமானது மன்னுயிர்க்கெல்லாம் அரணாயிருக்கிற பேராழி கொண்ட பிரானை யன்றி
மற்றதொன்றையும் அறியாது – என்றும் பொருள் சொல்லலாமே என்று முற்காலத்தில் ஒருவர் சொன்னாராம்;
உலகமானது எம்பெருமானை மறந்து மற்றவற்றையே அறிந்திருப்பதால் ‘உலகானது பிரானையன்றி மற்றறியாது’ என்கிற
விப்பொருள் இணங்காது என்று கொண்டு நஞ்சீயர், “உலகமென்பது உயர்ந்தோர்மாட்டே” என்றிருப்பதால்
இவ்விடத்தில் உலகு என்பதற்கு ‘சிறந்த மாஞானிகள்‘ என்று பொருள் கொண்டால்,
‘மஹான்கள் பேராழிகொண்ட பிரானையன்றி மாற்றறியார்கள்’ என்னும் பொருள் இணங்கி விடலாம் என்று அபிப்ராயம் கொண்டாராம்;

இதை பட்டர் கேட்டருளி, “ இவ்விடத்தில் ‘ஓராழி சூழ்ந்தவுலகு’ என்றிருப்பதை நோக்க வேணும்;
‘ஆழிசூழ்ந்த’ என்கிற விசேஷணம் இல்லாதிருந்தால் நீர் சொல்லும் பொருள் ஏற்கும்;
’கடலால் சூழப்பட்ட மஹான்கள்’ என்று பொருள் சொல்லப்
போகாமையாலே, ‘கடல் சூழ்ந்த இவ்வுலகமானது தனக்கு அரணானவற்றை அறிய மாட்டாது,
பேராழிகொண்ட பிரானே அறிவான்’ என்றே பொருள் கொள்ள வேணும்” என்று உபபாதித்து உரைத்தருளினராம்.

இங்ஙனே நிர்வஹித்து பட்டரருளிச்செய்தபோது நஞ்சீயரும் நம்பிள்ளையும் கேட்டிருந்தார்கள்;
ஆனாலும் இதனை ஒருகால் நஞ்சீயர் மறந்திட, நம்பிள்ளை ஞாபகப்படுத்தினர் என்றும்
பெரிய வாச்சான்பிள்ளை யருளிச்செய்தனர்.

இப் பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அச்சுப் பிரதிகளில் சில பதங்களும் வாக்கியங்களும்
விடுபட்டிருப்பதை ஒலை ஸ்ரீகோசங்களைக்கொண்டு பரிஷ்கரித்துக்கொள்க.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: