ஸ்ரீ பெருமாள் திருமொழி -10–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

ஸ்ரீராம சரித்திரத்தை ஸ்ரீ வால்மீகிபகவான் பேசியநுபவித்தாற்போலத்
தாமும் பேசி அநுபவிக்கிறார் – இத்திருமொழியில்.
இத்திருமொழி ஸ்ரீராமாயண ஸங்க்ரஹ மெனப்படும்.

———-

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-

பதவுரை

அம் கண்–அழகிய இடத்தை யுடையதும்
நெடு மதிள்–உயர்ந்த மதிள்களினால்
புடை சூழ்–நாற்புறமும் சூழப்பட்டதும்
அயோத்தி என்னும்–அயோத்யா என்று ப்ரஸித்தமுமான
அணி நகரத்து–அழகிய நகரத்திலே
உலகு அனைத்தும்–ஸகல லோகங்களையும்
விளக்கும் சோதி–விளங்கச் செய்கிற தனது ஒளியின் அம்சத்தாலே
வெம் கதிரோன் குலத்துக்கு–ஸூர்ய வம்சத்துக்கு (விளக்க முண்டாம்படி)
ஓர் விளக்கு ஆய் தோன்றி–ஒப்பற்தொரு விளக்கு போல (அதில்) வந்து அவதரித்து
விண் முழுதும்–தேவர்களெல்லாரையும்
உயக் கொண்ட–துன்பந்தீர்ந்து வாழச்செய்த
வீரன் தன்னை–மஹாவீரனும்
செம் கண்–சிவந்த திருக்கண்களையுடைய
நெடு கரு முகிலை–பெரிய காளமேகம் போன்ற வடிவ முடையவனும்
இராமன் தன்னை–ஸ்ரீராமனென்னும் திருநாமமுடையவனும்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்–தில்லை நகரத்திலுள்ள திருச்சித்திர கூடத்தில் (எழுந்தருளியிருக்கிற)
எங்கள் தனி முதல்வனை–எமக்கு ஒப்பற்ற காரணமாகிறவனும்
எம் பெருமான் தன்னை–எமக்குத் தலைவனுமான பரமனை
கண் குளிர காணும் நாள்–கண்கள் குளிரும்படி ஸேவிக்கும் நாள்
என்று கொல் ஓ–எந்நாளோ!

———-

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

பதவுரை

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி–செருக்கிவந்து எதிரிட்ட தாடகையினுடைய மார்பைப் பிளந்து
வரு குருதி பொழிதர–ரத்தம் வெளிவந்து சொரியம் படி
வல் கணை ஒன்று ஏவி–வலிய ஒப்பற்றதோர் அம்பைச் செலுத்தி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து–எல்லா மந்திரங்களையும் தம்மிடத்திலே கொண்ட
வேதங்களின் வழியே விச்வாமித்ர மஹாமுநி செய்த யாகத்தைப் பாதுகாத்து
வல் அரக்கர்–(அந்த யாகத்துக்கு இடையூறு செய்த ஸுபாஹூ முதலிய) வலிய ராக்ஷஸர்களுடைய
உயிர் கண்ட–உயிரைக் கொள்ளை கொண்ட
மைந்தன்–மிடுக்கை யுடையவன் (யாரென்னில்)
செம் தளிர்வாய் மலர்–சிவந்த தளிர்களின் நடுவே மலர்ந்த புஷ்பங்களை யுடையதும்
நகை சேர்–(காண்பவர்) மகிழும்படியான அழகு பொருந்தினதும்
செழு–செழுமையை யுடையதுமான
தண்–குளிர்ந்த
சோலை–சோலைகளை யுடைய
தில்லை நகர் திருச்சித்ர கூடம் தன்னுள்;
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த–ப்ரர்மணர் மூவராயிரம் பேர் (திரண்டு துதிக்க)
அணி மணி ஆசனத்து இருந்த–அழகிய ரத்நஸிம்ஹாஸநத்திலே வீற்றிருந்த
அம்மான் தானே–ஸர்வேச்வரனே யாவன்;
காண்மின்–அறியுங்கள்.

விச்வாமித்ர முனிவன் தனது வேள்வியைக் காக்கும்பொருட்டு தசரத சக்கரவர்த்தியினிடம் அநுமதி பெற்று
இராமபிரானை இளையபெருமாளுடன் அழைத்துக்கொண்டு போனபொழுது அம்முனிவனாச்ரமத்திற்குச்
செல்லும் வழியிடையே மிக்க செருக்குடன் வந்து எதிர்த்த தாடகையை ஸ்ரீராமன் முனிவனது கட்டளைப்படி
பெண்ணென்று பாராமற் போர்செய்து கொன்றது மன்றி, பின்பு முனிவன் செய்த யாகத்தில் தீங்குவிளைக்க
வந்த ஸுபாஹூ முதலிய பல அரக்கர்களையுங் கொன்று மாரீசனை வாயவ்யாஸ்தரத்தினாற் கடலிலே தள்ளிவிட்டு
யாகத்தை நிறைவேற்றுவித்தனன் என வரலாறு அறிக.

(அந்தணர்கள் ஒரு மூவாயிரவர்.) நாங்கை நாலாயிரம் தில்லை மூவாயிரம் என்ற ப்ரஸித்தி காண்க.
மூவாயிர நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதித்,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லை திருச்சித்ரக்கூடஞ்சென்று சேர்மின்களே என்றார் திருமங்கையாழ்வாரும்.

———-

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-

பதவுரை

செவ்வரி நல் கரு நெடு கண்–(உத்தம லக்ஷ்ணமான) சிவந்த ரேகைகள் படர்ந்த அழகிய கருமையான நீண்ட கண்களை யுடைய
சீதைக்கு ஆக–வநிதையை மணம் புரிதற் பொருட்டு
சினம் விடையோன்–கோபத்தை யுடைய ரிஷபத்தை வாஹநமாக வுடையனான சிவபிரானுடைய
சிலை இறுத்து–வில்லை முறித்து (பின்பு மிதிலா புரியினின்று மீளும் வழியில்)
மழுவாள் ஏந்தி–கோடாலியாகிய ஆயுதத்தை ஏந்தியவனான பரசுராமனுடைய
வெவ் வரி நல் சிலை–பயங்கரமான கட்டமைந்த சிறந்த வில்லை
வாங்கி– கையிற்கொண்டு (வளைத்து)
வென்றி கொண்டு–(அவனை) வென்று
வேல் வேந்தர் பகை தடித்த–(தான் அவதரித்த ஜாதியிற்பிறந்த) வேற்படையை யுடைய க்ஷத்ரியர்களுக்குப் பகையைத் தீர்த்த
வீரன் தன்னை–மஹா வீரனான
தெவ்வர்–பகைவர்கள்
அஞ்சு–(கண்டமாத்திரத்திலே, கடக்க வொண்ணா தென்று) அஞ்சும் படியான
நெடு புரிசை–உயர்ந்த மதிளையும்
உயர்ந்த பாங்கர்–ஓங்கிய (அட்டாலை யென்னும்) மதிற்பக்கத் திடத்தையுமுடைய
தில்லை நகர் திருச்சித்ர கூடம் தன்னுள்
(எழுந்தருளியிருக்கிற)
எவ்வரு வெம் சிலை தடகை இராமன் தன்னை–(வேறொருவரால்) அடக்கியாளுதற்கு அரியதும் (பகைவர்க்குப்)
பயங்கரமுமான வில்லை ஏந்திய பெரிய கையையுடைய இராமபிரானை
இறைஞ்சுவார்–வணங்குகிற அடியார்களுடைய
இணை அடியே–இரண்டு திருவடிகளையே
இறைஞ்சினேன்–வணங்கினேன்.

நான்காமடிமில் எவ்வரி என்றே நாடெங்கும் ஓதுவர்.
அப்பாடத்துக்கு ஏவரி என்பது எவ்வரியென்று விகாரப் பட்டதெனக் கொண்டு
ஏ-அம்பு தொடுப்பதற்கு உரிய வரி – நீண்ட என்று கஷ்டப்பட்டு பொருள் கொள்ளலாமாயினும்,
வேறொருத்தரால் அடக்கியாள வொண்ணாதே காணவே ப்ரதிபக்ஷம் முடியும்படியான ஸ்ரீசார்ங்கம்.
என்ற வியாக்கியானத்திற்கு அப்பாடம் சேராது.
எவ்வரு என்றோதுவதே சிறக்கும்.
ஏவரு என்பது எதுகை நோக்கி எவ்வரு எனக்குறுக்கலும் விரித்தலுமாகிய விகாரங்களை யடைந்தது
ஏவு-ஏவுதல்,அடக்கியாளுதல்; (முதனிலைத் தொழிற்பெயர்) அரு-ஒண்ணாத; எனவே, அடக்கியாள முடியாத என்றதாயிற்று.
(இறைஞ்சுவா ரிணையடியே இறைஞ்சினேனே) இராமனுக்கு அடியவனான பரதனுக்கு அடிமை பூண்டொழுகின
சத்ருக்நன் போலப் பாகவத தாஸனாக வேண்டுமென அவாவுகின்றார்.

————–

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

பதவுரை

தொத்து அலர் பூ சுரி குழல்–கொத்துக் கொத்தாக மலர்ந்த புஷ்பங்களைச் சூடிய நுனி சுருண்ட கூந்தலை யுடைய
கைகேசி–கைகேயியினது
சொல்லால்–சொல்லின்படி
தொல் நகரம் துறந்து–தொன்று தொட்டுப் பரம்பரையாய் வருகிற ராஜ்யத்தைக் கை விட்டு
துறை கங்கை தன்னை–கங்கையின் துறையை
பத்தி உடை குகன் கடத்த–மஹா பக்தனான குஹப் பெருமான் புணை செலுத்தி யுதவ; (கடந்து)
வனம் போய் புக்கு–காட்டிற்போய்ச் சேர்ந்து
பரதனுக்கு–(அங்கு வந்த) பரதாழ்வானுக்கு
பாதுகமும் அரசும் ஈந்து–(தனது) மரவடியையும் ராஜ்யத்தையுங் கொடுத்து
சித்திர கூடத்து இருந்தான் தன்னை–சித்ரகூட பர்வதத்தி லெழுந்தருளி யிருந்த ஸ்ரீராமபிராணை
இன்று–இப்பொழுது (பிற்காலத்தில்)
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
கண் குளிர காண பெற்ற–கண் குளிரும்படி ஸேவிக்கப் பெற்ற
இரு நிலத்தார்க்கு–பெரிய (சிறந்த) பூலோகத்திலுள்ளவர்களுக்கு
இமையவர்–நித்யஸூரிகளும்
எத்தனையும் நேர் ஒவ்வார்–சிறிதும் ஸமமாக மாட்டார்கள்.
(தாம் ஏ–ஈற்றசைகள், தோற்றமுமாம்)

ஸ்ரீராமாவதாரத்திலே சித்ரகூட பர்வதத்தில் எழுந்தருளியிருந்த இருப்பைப் பிற்பட்டார் கேட்டு
அநுபவிக்கப் பெறுவதே யன்றித் தாம் கண்டு அநுபவிக்க பெறாமல் கண் விடாய்த்து நிற்கிற
குறைதீர எக்காலத்திலு முள்ளார் அநுபிவக்கைக்காக அங்ஙனமே தில்லைத் திருச்சித்திரக்கூடத்தில்
வீற்றிருக்கின்றனன் என்பது பின்னடிகளின் உட்கோள்.

————

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்து தரணி தானே —10-5–

பதவுரை

வலி வணக்கு–(எதிரிகளுடைய) வலிமையைத் தோற்பிக்கின்ற
வரை நெடு தோள்–மலை போன்ற பெரிய தோள்களை யுடைய
விராதை–விராதனென்னும் இராக்ஷஸனை
கொன்று–கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த–சிறந்த தமிழ்ப பாஷைக்கு உரியவரான அகஸ்திய முனிவர் கொடுத்த
வரி வில் வாங்கி–கட்டமைந்த வில்லை பெற்று
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி–மானின் பார்வையைத் தோற்பிக்கும் யடியான பார்வை யழகை
யுடையவளாய் வந்த சூர்ப்பணகை யென்னும் ராக்ஷஸியின் மூக்கை அறுத்து
கானோடு தூடணன் தன் உயிரை வாங்கி–கரன் தூஷணன் என்னும் அரக்கர்களின் உயிரை (அவர்களுடம்பினின்று) கவர்ந்து
மான்–மாரீசனாகிய மாயா ம்ருகமானது
மறிய–அழியும்படி
சிலை வணக்கி எய்தான் தன்னை–தனது வில்லை வளைத்து அம்புகளை எய்தவனான இராமபிரானை
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
தலை வணங்கி கை கூப்பி ஏத்த வல்லார்–தலை வணங்கி அஞ்ஜலி பண்ணித் துதிக்கவல்ல அடியார்கள்
திரிதலால்–(தன்மீது) ஸஞ்சரிக்கப் பெறுதலால்
தரணி–பூமியானது
தவம் உடைத்து–பாக்கியமுடையது
(தான், ஏ -ஈற்றசைகள், தேற்றமுமாம்)

இராமபிரான் பரசுராமனிடமிருந்து விஷ்ணு தநுஸ்ஸைப் பெற்று அவனை வென்ற போது அங்கு வந்து
தன்னைக் கொண்டாடிய தேவர்களுள் வருணனிடத்திலே அவ்வில்லை கொடுத்து
அதனை நன்றாகப் பாதுகாத்து வைத்திருந்து உரிய ஸமயத்தில் தன்னிடம் கொணர்ந்து கொடுக்குமாறு சொல்ல
அங்ஙனமே அதனை வாங்கிச்சென்று நன்கு பாதுகாத்து வைத்திருந்த வருணன் பின்பு
ஸ்ரீராமன் வநவாஸம்புக்குத் தண்டகாரணியத்தில் அகஸ்தியாச்ரமத்திற்கு எழுந்தருளின பொழுது
அதனை அம்பறாத்தூணியுடனும் வாளுடனும் அம்முனிவர் தர
பெருமாள் பெற்றுக் கொண்டனன் என்பது இங்கு அறியத்தக்கது.

சூர்ப்பணகையை அங்க பங்கஞ் செய்தது இளைய பெருமாளின் செய்கையாயினும்
அதனைப் பெருமாள் மேல் ஏற்றிச் சொன்னது, இராமனது கருத்துக்கு ஏற்ப அவன் கட்டளையிட்டபடி
இவன் செய்தனனாதலின் ப்ரயோஜ்ய கர்த்தாவின் வினையாதல்பற்றி யென்க.
அன்றியும் என்றபடி இராமபிரானுக்கு லக்ஷ்மணன் வலத்திருக்கை யெனப்படுதலால்
அங்ஙனம் கையாகிற லக்ஷ்மணனுடைய செயலை இராமன்மேல் ஒற்றுமை நயம்பற்றி ஏற்றிச் சொல்லுதல் தகுதியே.

சூர்ப்பணகை ராமலக்ஷ்மணர்களிடம் வரும்போது அழகிய வடிவமெடுத்து வந்தனளாதலால்
கலை வணக்கு நோக்கரக்கி என்றார். மானின் விழி பெற்ற மயில் வந்ததெனவந்தாள் என்றார் கம்பரும்.
இங்கே மூக்கு என்றது- மற்றும் அறுபட்ட அவயவங்களுக்கும் உபலக்ஷணம்.

————-

தன மருவு வைதேகி பிரியல் உற்று
தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு
வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
இனிது அமர்ந்த வம்மானை ராமன் தன்னை
ஏத்துவார் இணை அடியே யேத்தினேனே –10-6–

பதவுரை

தனம் மருவு–(தான் விரும்புஞ்) செல்வமாகப் பொருந்திய
வைதேகி பிரியல் உற்று–பிராட்டி பிரியப் பெற்று
தளர்வு எய்தி–(அதனால்) வருத்தமடைந்து
சடாயுவை–ஜடாயுவென்னும் கழுகரசை
வைகுந்தத்து ஏற்றி–பரமபதத்திற் செலுத்தி
வனம் மருவு–(வாலிக்கு அஞ்சிக்) காட்டில் மறைந்து வசிக்கிற
கவி அரசன்–வாநர ராஜனான சுக்ரீவனுடன்
காதல் கொண்டு–ஸ்நேஹஞ் செய்து கொண்டு
வாலியை கொன்று==(அவனது விருப்பத்தின்படி அவன் தமையனான) வாலியை வதைத்து
இலங்கை நகர்–இலங்காபுரியை
அரக்கர் கோமான் சினம் அடங்க–(அதற்குத் தலைவனாகிய) ராக்ஷஸராஜானான ராவணனுடைய செருக்கு ஒழியும்படி
மாருதியால் சுடுவித்தானை–அனுமானைக் கொண்டு எரிப்பித்தவனும்
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
இனிது அமர்ந்த–இனிமையாய் எழுந்தருளியிருக்கிற
அம்மானை–ஸர்வேச்வரனுமான
இராமன் தன்னை–இராமபிரானை
ஏத்துவார்–துதிக்கின்ற அடியார்களுடைய
இணை அடியே–உபய பாதத்தையே
எத்தினேன்–துதிக்குந் தன்மையேன் (யான்.)

“தனமருவு வைதேகி” என்றவிடத்து தனம் என்பதை வடசொல்லின் விகாரமாகக் கொண்டு
வேறுவகையாகவும் பொருள் கூறலாமாயினும் விஷொஸ்ரீ என்றபடி பெருமாளுக்கு மென்ற வடசொல் விகாரம்.

——————

குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-8-

பதவுரை

குரை கடலை–கோஷிக்கின்ற கடலை
அடல் அம்பால்–தீக்ஷ்ணமான அம்பைக் கொண்டு
மறுக எய்து–கலங்கும்படி எய்யத் தொடங்கி
குலை கட்டி–(அதில்) அணை கட்டி
அதனால்–அந்த அணை வழியாக
மறு கரையை ஏறி–(கடல் கடந்து) அக்கரை சேர்ந்து
எரி நெடு வேல் அரக்கரொடும்– (சத்துருக்களை) எரிக்கின்ற நீண்ட வேற்படையை யுடைய இராக்கதர்களும்
இலங்கை வேந்தன்–இலங்கைக்கு அரசனான இராவணனும் ஆகிய அனைவர்களுடைய
இன் உயிர் கொண்டு–இனிய உயிரைக் கவர்ந்து (கொன்று)
அவன் தம்பிக்கு–அவ்விராவணனது தம்பியான விபீஷணனுக்கு
அரசும் இந்து–ராஜ்யத்தைக் கொடுத்து
திருமகளோடு–லக்ஷ்மியின் அவதாரமான பிராட்டியுடனே
இனிது அமர்ந்த–இனிமையாகச் சேர்ந்த
செல்வன் தன்னை–எல்லா வகைச் செல்வங்களுமுடையவனும்
தில்லை நகர் திருச் சித்ரகூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான்–தனது மேன்மை தோன்ற எழுந்தருளி யிருப்பவனுமான
அடி சூடும்–இராமபிரானது திருவடிகளைத் தலைமேற் கொள்ளுதலாகிற
அரசை அல்லால்–அரசாட்சியைப் பெற விரும்புவேனே யன்றி
மற்று அரசு–அதற்கு மாறாக ஸ்வாதந்திரியம் பாராட்டுகிற அரசாட்சியை
அரசு ஆக எண்ணேன்–ஒரு பொருளாக மதிக்க மாட்டேன்.

இப்படி ஸாது பரித்ராணமும் துஷ்ட சிக்ஷணமும் செய்தருளி உலகத்தை உய்வித்தருளிய இராமபிரானது
திருவடிகளைச் சிரோபூஷணமாகக் கொள்வதே தமக்குப் பெருத்த ஸாம்ராஜ்யமென்பதை
இப்பாட்டால் வெளியிட்டார்.

————

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான்
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–

பதவுரை

அம் நெடு பொன் மணி மாடம்–அழகிய உயர்ந்த பொன்னையும் இரத்தினங்களையுங் கொண்டு
அமைக்கப்பட்ட உபரிகை வீடுகளையுடைய
அயோத்தி–அயோத்யா நகரத்துக்கு
எய்தி–மீண்டு வந்து
அரசு எய்தி–அரசாட்சியை அடைந்து
தான் முன் கொன்றான் தன்–தன்னால் முன்பு கொல்லப்பட்டவனான இராவணனுடைய
பெரு தொல் கதை–பெரிய பூர்வ வ்ருத்தாந்தங்களை யெல்லாம்
அகத்தியன் வாய் கேட்டு–அகஸ்திய மகாமுனிவன் வாயாற் சொல்லக் கேட்டு
மிதிலை செல்வி–மிதிலா நகரத்தில் தோன்றிய பிராட்டி
உலகு உய்ய–உலக முழுவதும் வாழும்படி
திரு வயிறு வாய்த்த–பெற்ற
மக்கள்–தன் பிள்ளைகளான குசலவர்களுடைய
செம் பவளம் திரள் வாய்–சிவந்த பவழத்துண்டு போன்ற வாயினால்
தன் சரிதை–தனது சரித்திரமான ஸ்ரீராமாயணத்தை
கேட்டான்–கேட்டருளினவனான
தில்லைநகர் திருச்சித்ரக்கூடம் தன்னுள்
(எழுந்தருளியிருக்கிற)
எம் பெருமான் தன்–எமது தலைவனுடைய
சரிதை–சரித்திரத்தை
செவியால் கண்ணால், பருகுவோம்–காதினாற்கேட்டு (அப்பெருமானைக்) கண்ணால் ஸேவிக்கப் பெறுவோம்யாம்
(அதுவேயன்றி)
இன் அமுதம்–இனிய தேவாம்ருதத்தையும்
மதியோம்–ஒரு பொருளாக நன்கு மதிக்க மாட்டோம்
அன்றே–அல்லவா! (ஈற்றசை, தோற்றமுமாம்)

ஆராவமுதமாகவுள்ள எம்பெருமானுடைய ஸேவையின் மிக்க இனிமைக்கும்,
அங்ஙனமேயுள்ள அப்பிரானுடைய சரித்திரத்தின் மிக்க இனிமைக்கும் தேவாம்ருதத்தின் இனிமை
சிறிதும் ஈடாகாதென்னுங் கருத்தால், இன்னமுதமதியோம் என்கிறார். இன்னமுதமதியோ மொன்றே என்றும் பாடமுண்டாம்:
அமுதம் – அமுதத்தை, ஒன்று – ஒரு பொருளாக மதியோம் என்றவாறு.

குசலவர் இராமாயண ப்ரவசநஞ்செய்து அதனால் உலகத்தை நன்னெறியில் உய்த்தலும்,
இராமபிரான் காலத்திற்குப்பின் அப்பெருமான் போலவே நீதிமுறை தவறாது உலகத்தை
இனிது ஆளுதலும் தோன்ற உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் என்றார்.

————

செறி தவ சம்புகன் தன்னை சென்று கொன்று
செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த
நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னை
தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட
திறல் விளங்கும் இலகுமனை பிரிந்தான் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
உறைவானை மறவாத வுள்ளம் தன்னை
வுடையோம் மற்று உறு துயர் அடையோம் அன்றே —10-9–

பதவுரை

செறி தவம்–மிக்க தபஸ்ஸை யுடையனான
சம்புகன் தன்னை–(சூத்ரசாதியனான) சம்புகனை
சென்று, கொன்று–(அவனிருக்கு மிடந்தேடிச்) சென்று தலையறுத்து
செழுமறை யோன் உயிர் மீட்டு–சிறந்த ப்ராஹ்மண குமாரனுடைய உயிரை மீட்டுக் கொடுத்து
தவத்தோன் ஈந்த–அகஸ்திய மா முனிவன் கொடுத்த
நிறைமணி பூண் அணியும் கொண்டு–பெருவிலையுள்ள ரத்நஹாரமான ஆபரணத்தையும் சாத்தியருளி
இலவணன் தன்னை–லவணாஸுரனை
தம்பியால்–சத்ருக்நனைக் கொண்டு
வான் ஏற்றி–வீர ஸ்வர்க்கத்திற் குடியேற்று வித்து
முனிவன் வேண்ட–துர்வாஸமுனிவனது சாபத்தால்
திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான் தன்னை–பலபராக்கிரமம் விளங்கப் பெற்ற லக்ஷ்மணனை துறந்தவனும்
தில்லைநகர் திருச்சித்ரகூடம் தன்னுள்
உறைவானை–நித்யவாஸம் பண்ணுகிறவனுமான இராமபிரானை
மறவாத உள்ளம் தன்னை உடையோம்–மறவாமல் எப்பொழுதும் தியானிக்கிற மனத்தையுடைய நாம்
மற்று உறு துயரம் அடையோம்–இனி (எம்பெருமானை அநுபவிக்கப் பெற்றிலோ மென்று வருந்துன்பத்தை அடையமாட்டோம்)
(அன்று, எ – ஈற்றசை)

தன்னை அக்காலத்திற் காணப்பெறாத குறைதீரப் பிற்காலத்தார் காணும்படி தில்லைத் திருச்சித்திரக்கூடத்தில்
அப்படிப்பட்ட திவ்விய மங்கள விக்ரஹத்தோடு நித்யவாஸம் செய்தருளாநின்ற எம்பெருமானை
இறையும் மறவாது எப்பொழுதும் தியானிப்போமாகில் அக்காலத்தில் எம்பெருமானை அநுபவிக்கப் பெற்றிலோமே!
என்று வரும் துன்பத்தை அடையமாட்டோம் என்றவாறு.

————

அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவ பகை ஏறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர் வர தான் தாமமேவி
சென்று இனிது வீற்று இருந்த அம்மான் தன்னை
தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும்
இறைஞ்சுமினோ எப் பொழுதும் தொண்டீர்! நீரே —10-10–

பதவுரை

அன்று–(தன்னடிச்சோதிக்கு எழுந்தருள்கிற) அந்நாளில்
சர அசரங்களை–(அயோத்யாபுரியிலுள்ள) ஜங்கமும் தாவரமுமான எல்லா வுயிர்களையும்
வைகுந்தத்து ஏற்றி–பரமபதத்துக்குப் போகச் செய்து
அடல் அரவம் பகை ஏறி–வலிமையை யுடைய பாம்புகளுக்குப் பகையான கருடன் மேல் ஏறிக் கொண்டு
அசுரர் தம்மை வென்று–அசுரர்களை ஜயித்து
இலங்கும் அணி நெடு தோள் நான்கும் தோன்ற–(அந்த ஜயலக்ஷ்மி) விளங்கப் பெற்ற அழகிய
நீண்ட (தனது) திருக்கைகள் நான்கும் விளங்க
விண் முழுதும்–பரமபதத்திலுள்ளாரெல்லாரும்
எதிர் வர–எதிர் கொண்டு உபசரிக்கும்படி
தன் தாமம் மேவி சென்று–தமது ஸ்தாநமான அப் பரம பதத்திலே போய்ப் புக்கு
இனிது வீற்றிருந்த-(தன் மேன்மை யெல்லாம் தோன்றும்படி) இனிமையாகத் (திவ்ய ஸிம்ஹாஸநத்தில்) எழுந்தருளியிருந்த
அம்மான் தன்னை தில்லை நகர் திரு சித்ரகூடம் தன்னுள் என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி–ஸர்வேச்வரனை
(அந்த இருப்பில் ஒன்றுங் குறையாமல் அவ்வாறே) தில்லைச் சித்ரக்கூடத்தில் எந்நாளும் (நமக்காக)
நித்யவாஸம் பண்ணுகிற அப்பெருமான் இவ்விராமபிரானே யென்றறிந்து துதித்து
தொண்டீர் நீர்–அவனுக்கு அடியவர்களான நீங்கள்
நாளும் எப்பொழுதும்–தினந்தோறும் எப்பொழுதும்
இறைஞ்சு மின்–வணங்கி உஜ்ஜீவியுங்கள்
(ஏ – இசைநிறை.)

இளையபெருமாளை விட்டு பிரிந்ததனால் தரிக்கமாட்டாமல் மிகவும் க்லேஸமடைந்த இராமபிரான்
ராஜ்யத்தை விட்டு எழுந்தருளத் தொடங்கியபோது அயோத்யா நகரத்து உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து
தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும் கூடவே அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்று பிரார்த்திக்க
ஸ்ரீராமன் அவர்களுடைய பக்திப்ரகர்ஷத்தைக் கண்டு அப்படியே ஆகட்டும் என்று அருளிச்செய்து,
அனைவரையும் தம்மைப் பின் தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பிரயாணப்பட்டனர்.
அப்பொழுது அந்நகரத்திருந்த மனிதர்களேயன்றி விலங்கு பறவை முதலிய அஃறிணை உயிர்களும்
அகமகிழ்ந்து பெருமாள் பின்சென்றன. இங்ஙனம் பலரும் புடைசூழ ஸ்ரீபகவான் ஸரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கு
எழுந்தருளும்போது தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத் துறந்த
எல்லாவுயிர்கட்கும் ப்ரஹ்மலோகத்துக்கு மேற்பட்டதாய் பரமபதம் போலவே
அபுநராவ்ருத்தியாகிற மேம்பாடுள்ள ஸாந்தாநிகமென்னும் உலகத்தை அளித்தனர்.

ஸ்ரீராமபிரான் பரமபதத்துக்கு சென்றபோழ்து சங்க சக்கரங்களிரண்டையும் தரிக்கிற மேற்பாற் கரமிரண்டுந்தோன்றப்
பெற்றமை விளங்க அசுரர் தம்மைவென்றிலங்கு மணிநெடுந்தோள் நான்குந்தோன்ற என்றார்.
இந்த அடைமொழியை வீற்றிருந்த என்பதனோடாவது சித்ரகூடந்தன்னுள் நின்றான் என்பதனோடாவது இயைத்தலும் ஏற்கும்.

அடலரவப் பகையேறி என்றது,
தன்தாமமேவி என்றதனோடும் அசுரர் தம்மை வென்று என்றதனோடும் இயைக்கத்தக்கது.

————

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

பதவுரை

தில்லைநகர் திரு சித்ரகூடம் தன்னுள்
திறல் விளங்கும்–பல பராக்கிரமம் விளங்கப் பெற்ற
மாருதியோடு–அனுமானுடனே
அமர்ந்தான் தன்னை–நித்யவாஸம் பண்ணுகிற எம் பெருமானைக் குறித்து
எல்லை இல்சீர் தயரதன் தன் மகன் ஆய் தோன்றிற்று அது முதல் ஆ தன் உலகம் புக்கது ஈறு ஆ–அழிவில்லாத
புகழையுடைய தசரதசக்ரவர்த்தியின் குமாரனாய் பிறந்தது முதல் பரமபதம் புக்கது இறுதியாக
(ஸ்ரீராமாயணத்தை முழுதையும் ஸங்க்ரஹமாக அமைத்து)
கொல் இயலும் படை தானை கொற்றம் ஒள்வாள் கோழியர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த–(பகைவர்களைக்) கொல்லுதல்
பொருந்திய ஆயுதங்களுடைய சேனையையும் வெற்றியையும் ஒளியையுமுடைய வாளாயுதத்தையுடைய வரும்
உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும் வெண் கொற்றக்குடையை யுடையவருமான குலசேகராழ்வார் அருளிச்செய்த
நல் இயல்–சிறந்த இயற்றமிழிலக் கணத்துக்கு இசைந்த
இன் தமிழ் மாலை பத்தும்–இனிய தமிழ்ப் பிரபந்த ரூபமான இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–கற்று வல்லவர்கள்
நலம் திகழ–பரமபதத்தில் விளங்குகிற
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
அடிகீழ் நண்ணுவார்–திருவடிகளிற் சேரப் பெறுவார்கள்.

தில்லைத் திருச்சித்ரக்கூடத் தெம்பெருமான் விஷயமாக ஸ்ரீகுலசேகராழ்வார் அருளிச்செய்த பரமபோக்யமான
இத்திருமொழியை ஒதவல்லவர்கள் எம்பெருமானருளாற் பரமபதமடைவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டினராயிற்று.
பால்யத்தில் ப்ரஹ்மா அளித்த வரத்தினால் சிரஞ்சீவினவரும், (அதிமாநுஷஸ்தவம்.)என்றபடி –
ஸ்ரீராமகதை உலகத்திலுள்ளவளவும் தாம் ஜீவித்திருக்குமாறு ஸ்ரீராமனிடம் வரம்வேண்டிப் பெற்றவருமான திருவடி,
இராமபிரான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளிய பொழுது அவனைவிட்டு பிரியமாட்டாது மனமிரங்க
அந்த உத்தம பக்த சிகாமணியை தானும் விடமாட்டாமல் ஸ்ரீராமன் அவருடனே சித்ரகூடத்தில் வந்து வீற்றிருக்கின்றனனாம்.

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: