ஸ்ரீ பெருமாள் திருமொழி -9–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

வன் தாள் இணை வணங்கி வள நகரம்
தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை
நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ!
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–

பதவுரை

எம் இராமாவோ–ஓ எமது இராமனே!
வளம் நகரம்–அழகிய அயோத்தி மாநகரத்துப் பிரஜைகள் அனைவரும்
வல் தாளின் இணை வணங்கி தொழுது ஏத்த–(சரணமடைந்தவர்களை எப்பொழுதும் விடாமற் பாதுகாக்கும்)
வலிமையையுடைய (உனது) இரண்டு திருவடிகளிலும் (விழுந்து) நமஸ்கரித்து (எழுந்து) கைகூப்பி நின்று துதிக்க
மன்னன் ஆவான் நின்றாயை–அரசனாகப் பட்டாபிஷேகஞ் செய்து கொள்ளுதற்கு ஸித்தனாய் நின்றவனும்
அரி அணை மேல் இருந்தாயை–சிங்காசனத்தின் மீது வீற்றிருக்க ஸித்தனாயிருந்தவனுமான உன்னை
நெடுங்கானம் படர போகு என்றாள்–பெரிய காட்டிற்கு செல்லுதற்கு (இந்நகர் விட்டு நீங்கிப்) போ என்று (கைகேயி) கூறினாள்
நல் மகனே–நல்ல குமாரனே!
நான்–நான்
உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு–உன்னைப் பெற்று வளர்த்த தாயான கைகேயியின் வார்த்தையைக் கேட்டு
நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன்–நன்றாக! உன்னை நிலவுலகத்தை ஆளும்படி செய்தேன்.

நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன் என்றது –
கல்லைக் கடிக்க நன்றாய் சமைத்தாய் என்பது போன்ற விபரீத லக்ஷணை.
இப்படி நான் உன் பக்கல் பெருந்தீங்கு செய்தவிடத்திலும் நீ சிறிதும் குணங்குறைந்தாயில்லை;
உன் குணம் மேன்மேல் மிக்கு விளங்கப்பெற்றாய் நானே குணக்கேடுடையனாய் நின்றேன் என்பான் நன்மகனே என்று விளித்தான்.
புத்ரலக்ஷணங்களைப் பூர்த்தியாகவுடையவன் என்றபடி தன் சொல் தவறாது நடக்குமவனான மகனென்க.
ஈற்றடி இரக்கத்தை நன்கு விளக்கும்.
போகு – என்றாள் = போகென்றாள் என்று புணரத்தக்கது,
சிறுபான்மை உயிர்வரக் குற்றியலுகரம் கெடாது பொது விதியால் வகரவுடம்படு மெய் ஏற்று,
போகுவென்றாள் என்று நின்றது. இவ்விடத்து இது செய்யுளோசை நோக்கியது.
இராமாவோ – ஒகாரம் மிக்கது, புலம்பல் விளியாகலின் புலம்பின் ஓவும் ஆகும் என்றார்.
நன்னூலாரும் உன்னை நானிலத்தை ஆள்வித்தேன். இரண்டு செயப்படு பொருள் வந்த வினை என்பர் வடநூலார்.

———–

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

பதவுரை

எம் இராமாவோ!
வெவ் வாயேன் வெவ் உரை கேட்டு–கொடிய வாயை யுடையேனை என்னுடைய கடுஞ்சொற்களைக் கேட்டு
இரு நிலத்தை வேண்டாதே–பெரிய நிலவுலகத்து அரசாட்சியை விரும்பாமலே விட்டிட்டு
விரைந்து–சீக்கிரமாக
வென்றி மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து–வெற்றியை விளைப்பதான
மைம் மலை போன்ற வடிவத்தையுடைய யானையும் தேரும் குதிரையுமாகிய வாஹநங்களை யொழிய விட்டு
வனமே மேவி–காட்டையே சேர்ந்து
நெய் வாய வேல் நெடு கண் நேரிழையும்–நெய்ப்பூசிய நுனியையுடைய வேலாயுதம் போன்ற
நீண்ட கண்களையும் தகுதியான ஆபணரங்களை யுமுடையளான பிராட்டியும்
இளங்கோவும்–இளைய பெருமாளும்
பின்பு போக–உடன் தொடர்ந்து வர
எவ்வாறு நடந்தனை–எங்ஙனம் நடந்து சென்றாயோ!
எம் பெருமான்–எமது ஐயனே!
என் செய்கேன்–நான் என் செய்வேன்!

எவ்வாறு நடந்தனை = கால்நடை நடக்க உரியனல்லாத நீ எங்ஙனம் நடந்து சென்றாயோ என்று பரிதபிக்கிறபடி
கைகேயி வார்த்தைகளுக்குக் குறுக்குச் சொல்ல முடியாமல் இவ்வாறு உன்னைப் பிரியவிட்டு
அகதிகனான எனக்கு இனி மரணமே கதியென்பான்
என் செய்கேன் என்றான் எம்பெருமான் அண்மை விளியாதலின் இயல்பு.

—————

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன்
குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன்
மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய்
இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
காகுத்தா! கரிய கோவே! —–9-3–

பதவுரை

கொல் அணை–கொலைத் தொழில் பொருந்தின
வேல்–வேலாயுதம் போன்ற
வரி நெடுங்கண்–செவ்வரி பரந்த நீண்ட கண்களையுடைய
கௌசலை தன்–கௌஸல்யையினது
குலம்–குலத்தில் தோன்றிய
மதலாய்–குமாரனே!
குனி வில் ஏந்தும்–வளைந்த வில்லைத் தரித்த
மல் அணைந்த வரை தோளா–வலிமை பொருந்திய மலைகள் போன்ற தோள்களை யுடையவனே!
வல் வினையேன்–மஹா பாபியான என்னுடைய
மனம் உருக்கும் வகையே கற்றாய்–மனதை உருகச் செய்வதற்கே வல்லவனே!
காகுத்தா–ககுத்ஸ்தனென்னும் அரசனது குலத்தில் தோன்றியவனே!
கரிய கோவே–கருநிறமுடைய ஐயனே!
மெல் அணை மேல் முன் துயின்றாய்–மென்மையான பஞ்சனை மெத்தையின் மேல் முன்பெல்லாம் படுத்து உறங்கிப் பழகினவனான நீ
இனி இன்று போய்–இனிமேற் புதிதாக இன்றைக்குச் சென்று
வியன் கானம் மரத்தின் நீழல்–பெரிய காட்டிலுள்ள மரத்தின் நிழலிலே
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ–கருங்கற் பாறைகளையே படுக்கையாகக் கொண்டு அதன் மேற்படுத்துத் துயிலப் பழகின்றாயோ

இன்றளவும் ராஜார்ஹமான ஸுகுமாரஸுயங்களிலே ஸுகமே கிடந்து கண் வளர்ந்த உனக்கு
இனி கொடுங்கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம்பரல்மேல் படுக்க நேர்ந்ததே!
இஃதென்ன கொடுமை! என்று வயிறெரிகிறபடி.

வல்வினையேன் என்றது குடையுஞ்செருப்புங் கொடாதே தாமோதரனை நான், உடையுங்கடியனவூன்று
வெம்பரற்களுடைக்கடிய வெங்கானிடைக் காலடிநோவக் கன்றின்பின் கொடியே னென்பிள்ளையைப் போக்கினேன்
எல்லே பாவமே என்றாற்போல் பெருமானுடைய திருமேனி ஸௌகுமார்யத்தை நோக்காமல்
வெவ்வியகாட்டில் அவனைப் போகவிட்ட கொடுமையையுடைய தன்னைத்தானே வெறுத்துக் கூறியது.

மனமுருக்கும் என்றவிடத்து மனம் முருக்கும் என்றும் பதம் பிரிக்கலாம்.
முருக்குதல் – அழித்தல். முருங்கு என்பதன் பிறவினை.
வியன் – உரிச்சொல். வியல் என்பதன் விகாரமுமாம். நீழல் – நிழல் என்பன் நீட்டல்

—————

வா போகு வா இன்னம் வந்து
ஒருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா
விடையோன் தன் வில்லை செற்றாய்!
மா போகு நெடும் கானம் வல் வினையேன்
மனம் உருக்கும் மகனே! இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப்
போகாதே நிற்க்குமாறே! —9-4–

பதவுரை

வா–(சற்று இங்கே) வா
போகு–இனிச் செல்வாய்
வா–மறுபடியும் இங்கு வா
இன்னம் வந்து ஒருகால் கண்டு போ–(போம்போது) பின்னையும் ஒரு தரம் வந்து என்னைப் பார்த்து விட்டுப் போ
மலர் ஆள் கூந்தல்–பூக்களை எப்பொழுதும் தரிக்கிற மயிர் முடியை யுடையவளும்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டு ஆ–மூங்கில் போன்ற அழகிய தோள்களை யுடையளுமான பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக
விடையோன் தன் வில்லை செற்றாய்–சிவனுடைய வில்லை முறித்தவனே!
வல் வினையேன் மனம் உருக்கும் மகனே–மஹா பாபியான எனது மனதை உருகச் செய்கிற மைந்தனே!
இன்று–இப்பொழுது
நீ–நீ
மா போகு நெடுங்கானம் போக–யானைகள் ஸஞ்சரிக்கிற பெரிய காட்டுக்குப் போக
என் நெஞ்சம்–எனது மனமானது
இரு பிளவு ஆய் போகாதே நிற்கும் ஆறே–இரண்டு பிளப்பாகப் பிளந்து போகாமலே வலியதாய் நிற்கும் தன்மை என்னோ?

தசரதன் ஸ்ரீராமனை க்ஷணகாலம் காணாவிட்டால் உடனே காண்கைக்காக ஸுமந்த்ரனையிட்டு வரும்படி அழைப்பிப்பன்;
பின்பு அவ்விராமனது பின்னழகையும் நடையழகையும் காண்கைக்காக போ என்பன்;
பின்னையும் கண்மறையப் போனவாறே ஆற்றாமையால் வா என்பன்;
மீண்டும் வந்தவாறே இன்னம் போம்போது ஒருகால் கண்டுபோ என்பன்.
இப்படி மகனிடத்து அன்பினாலும் அவனது பிரிவை ஆற்றமாட்டாமை யாலாகிய மனச்சுழற்சியாலும்
பலமுறை வா என்றும் போ என்றும் மாறிமாறிச் சொல்லி வந்தனனென்க.
(மாபோகு) மா என்ற விலங்கின் பொதுப்பெயர், சிறப்பாய் இங்கு யானையைக் குறித்தது.
வா போகு வா வின்னம் வந்தொருகால் கண்டுபோ என்பது தசரதன் அறிவுகெட்டுப் புலம்புகிற
சமயத்தில் வார்த்தையாதலால் அநந்விதமாய் நிற்கின்ற தென்ப.

———-

பொருந்தார் கை வேல் நுதி போல்
பரல் பாய மெல் அடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம்பசி நோய் கூர இன்று
பெரும் பாவியேன் மகனே! போகின்றாய்
கேகயர் கோன் மகளாய் பெற்ற
அரும் பாவி சொல் கேட்ட அரு வினையேன்
என் செய்கேன்? அந்தோ! யானே— 9-5–

பதவுரை

பொருந்தார் கை வேல் நுதி போல்–பகைவர்கள் கையிலேந்தும் கூர்மையான வேலாயுதத்தின் நுனி போன்ற
பரல்–பருக்கைக் கற்கள்
பாய–(காலில் தைத்து அழுத்தவும்)
மெல் அடிக்கள் குருதி சோர–மென்மையான (உனது) பாதங்களினின்று ரத்தம் பெருகவும்
வெயில் உறைப்ப–(மேலே) வெயிலுறைக்கவும்
வெம் பசி நோய் கூர–(வேண்டிய போது உணவு கிடையாமலே) வெவ்விய பசியாகிய நோய் மிகவும்
பெரும் பாவி யேன் மகனே–மஹா பாபியான எனது மைந்தனே!
இன்று–இப்பொழுது
விரும்பாத கான் விரும்பி போகின்றாய்–(எவரும்) விரும்பாத காட்டை
(நான் போகச் சொன்னேனென்பதனாலே) விரும்பி (அவ்விடத்துக்குச் செல்கிறாய்)
கேகயர்கோன் மகள் ஆய்பெற்ற அரும்பாவி–கேகயராஜன் பெற்ற மகளான கொடிய பாவியாகிய கைகேயியினுடைய
சொல் கேட்ட அரு வினையேன் யான்–வார்த்தையைக் கேட்ட கொடியேனாகிய நான்
அந்தோ! என் செய்கேன்–ஐயோ! என்ன செய்வேன்!

எப்படிப்பட்ட கல்நெஞ்சினரும் செய்யமாட்டாத ஒருமஹா பாபத்தைச் செய்பவளான ஒரு பாப
மூர்த்தியைக் கேகயராஜன் பெண்ணாய்ப் பெற்றான்.
அவள் வார்த்தையிலே அகப்பட்டுக் கொண்டு நான் பரிஹாரமில்லாததொரு செயலைச் செய்துவிட்டேன்.
இனி இதற்கு நான் செய்யக்கூடிய பரிஹாரம் ஒன்றுமில்லையே என்று பச்சாத்தாபத்தோடு கூறுகிறபடி.
மஹாபாபியான எனக்கு மகனாய் பிறந்தமையாலன்றோ ஸுகுமாரனான நீ இங்ஙனம்
மஹா வநத்துக்குச் செல்ல நேர்ந்தது என்பான். பெரும்பாவியேன் மகனே? என்றான்.
வெம்பசி நோய் கூர = கூர – மிகுதி யுணர்த்தும் கூர் என்ற உரிச்சொற் பகுதியினடியாய் பிறந்த செயவெனெச்சம்.
கேகயர் – கேகய தேசத்திலுள்ளவர்கள்.

————

அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல்
கேளாதே அணி சேர் மார்வம்
என் மார்வத் திடை அழுந்த தழுவாதே
முழுசாதே மோவாது உச்சி
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட
இழி தகையேன் இருகின்றேனே– 9-6–

பதவுரை

அம்மா என்று உகந்து அழைக்கும்–ஐயா! என்று மகிழ்ச்சி கொண்டு (என்னை) அழைக்கின்ற
ஆர்வம் சொல் கேளாதே–ப்ரீதி விளங்குஞ்சொல்லை (நான்) கேட்கப் பெறாமலும்
அணி சேர் மார்வம்–ஆபரணங்கள் பொருந்திய (என் மகனது) மார்பு
என் மார்வத்திடை அழுந்த–என் மார்பிலே அழுந்தும்படி
தழுவாதே–(நான் அவனை) இறுக அணைத்துக் கொள்ளாமலும்
முழுசாதே–(அந்த ஆலிங்கந போகக் கடலில்) முழுகாமலும்
உச்சி மோவாது–உச்சியை மோந்திடாமலும்
கைம்மாவின் நடை அன்ன மெல் நடையும்–யானையினது நடை போன்ற (கம்பீரமான அம்மகனது) மென்மையான நடையின் அழகையும்
கமலம் போல் முகமும் காணாது–தாமரை மலர்போன்ற (அவனது) முகப் பொலிவையும் காணமாலும்
எம்மானை என் மகனை இழந்திட்ட–எமது ஐயனான என் மகனைக் (காடேறப் போக்கி) இழந்து விட்ட
இழி தகையேன்–இழிவான செயலைச் செய்தவனான நான்
இருக்கின்றேனே–(இன்னமும் அழிந்திடாமல்) உயிர் வாழ்ந்திருக்கின்றேனே.

ப்ரீதிப்ரகர்ஷம் தோன்ற ஐயா! என்று அழைக்கும் மகனது இன்சொல்லைக் கேட்கப் பெறாமலும்
இயற்கையழகோடு செயற்கையழகு செய்யும் ஆபரணங்கள் அசைந்து விளங்குகின்ற
அவனது மார்பைத் தழுவிக் கொள்ளப் பெறாமலும், ஆநந்தஸாகரத்தில் அழுந்தப் பெறாமலும்
உச்சிமோரப் பெறாமலும் நடையழகு காணப்பெறாமலும் முகாரவிந்தத்தை அநுபவிக்கப் பெறாமலும்
என் கண்மணியைக் காட்டுக்குத் துரத்தின படுபாவியாகிய நான் அப்போதே சாவாமல் இன்னும்
பிழைத்திருக்கவும் வேணுமா என்று பரிதபிக்கிறபடி.

அம்மாவென்று = தந்தையை அம்மாவென்று அழைத்தல், உவப்புப் பற்றிய பால் வழுவமைதி:
“உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும், இழிப்பினும் பால்தினை இழுக்கினுமியல்பே.” என்பது நன்னூல்.

————–

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

பதவுரை

தூ மறையீர்–நித்ய நிர்த் தோஷமான வேதத்ததை ஓதி யிருக்கிற பிராமணர்களே!
சுமந்திரனே–(ராஜ தர்மத்தை நன் கறிந்து நடத்திப் போந்த ஸுமந்த்ரரே!)
வசிட்டனே–ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற) வஸிஷ்ட மஹர்ஷியே
(உங்களை ஒரு விஷயம் கேட்கிறேன்)
பூ மருவும் நறு குஞ்சி–புஷ்பம் மாறாதே யிருப்பதாய் மணம் கமழா நின்ற திருக் குழலை
புன் சடை ஆ புனைந்து–விகாரமான ஜடையாகத் திரித்து
பூ துகில் சேர் அல்குல்–நல்ல பட்டுப் பீதாம்பரங்கள் சாத்த வேண்டிய திருவரையிலே
காமர் எழில் விழல் உடுத்து–காண்கைக்கு ஆசைப்படத்தக்க அழகிய விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி
கலன் அணி யாது–திருவாபரணங்கள் அணியாமல்
அங்கங்கள் அழகு மாறி–இயற்கை யழகுக்கு மேல் திருவாபரணங்களால் உண்டாகக்கூடிய செயற்கை யழகின்றியிலே
ஏமரு தோள் என் புதல்வன் தான்–ஸுரக்ஷிதமான தோள்களை யுடையனான எனது குமாரனானவன்
யான் இன்று செல தக்க வனம் சேர்தல்–நான் இப்போது போகவேண்டிய காட்டுக்குத் தான் போவது
தகவோ–தகுதி தானோ!
நீரே சொல்லீர்–(தர்மஜ்ஞரான) நீங்களே (ஆராய்ந்து) சொல்லுங்கள்

நல்ல புஷ்பங்களைச் சூடிப் பரிமளம் விஞ்சக்கடவதான திருக்குழலைச் சடையாகத் திரித்தும்,
நான் அறுபதினாயிரமாண்டு அரசாண்டு ஸம்பாதித்து வைத்திருக்கம் பட்டுப் பீதாம்பரங்களில் நல்லவற்றைச்
சாத்தக் கடவதான திருவரையில் விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தியும்,
இயற்கையான அழகுக்கு மேலே செயற்கையழகுக்காக ஆபரணங்களைச் சாத்த வேண்டிய அவயங்களில்
அவற்றைச் சாத்திக் கொள்ளாமலும் அந்தோ! என் மைந்தன் காட்டுக்குச் சென்றனனே! ஐயோ!
இக்காடு இந்தவயதில் அவனுக்குச் செல்லகூடியதா? அறுபதினாயிரமாண்டு போகங்களை புஜீத்துப்
பல் விழுந்து தலைநரைத்து உடலிளைத்து உடை குலைப்பட்ட நான் இன்று போகக்கூடியதான காட்டிற்கு
எனது மைந்தன் செல்கிறானே இது என்ன அநியாயம். தர்மங்களை அறிந்தும் அநுஷ்டித்தும் உபதேசித்தும்
போருகிற மஹாநுபாவர்களே இது நியாயந்தானா நீங்கள் சற்று ஆராய்ந்து சொல்லுங்கள் என்கிறான்.

———-

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும்
தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என்
மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில்
இனிதாக இருக்கின்றாயே– 9-8-

பதவுரை

கைகேசீ–கைகேயியே
பொன் பெற்றார் எழில் வேதம் புதல்வனையும்–கல்விச் செல்வத்தைப் பெற்றவர்களான உபாத்தியாயரின்
கீழே யிருந்து அழகிய வேதங்களை ஓதியிருக்கிற மூத்த மகனான இராமனையும்
தம்பியையும்–(அவனது) தம்பியான லக்ஷ்மணனையும்
பூவை போலும்–(பேச்சின் இனிமையிற் கொஞ்சுகிற) கிளி போன்றவளும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல்என் மருகியையும்–மின்னலும் ஈடாகமாட்டாத நுண்ணிய இடையையும்
மென்மையான தன்மைனையு முடையவளுமான என் மருமகளாகிய ஸீதையையும்
வனத்தில் போக்கி –காட்டுக்குப் போகச்செய்து
நின் பற்று ஆம் நின் மகன் மேல் பழி விளைத்திட்டு–உனது அன்புக்கு இடமான உன் மகனான பரதன்
மேற் பழியுண்டாம்படி செய்து (இவ்வளவு செய்துவிட்டு நீ)
என்னையும் நீள் வானில் போக்க–(புத்ர விரஹத்தால்) என்னையும் தூரத்திலுள்ள மேலுலகத்திற்குச் செலுத்துதலினால்
என் பெற்றாய்–நீ என்ன பயனடைந்தாய்!
இரு நிலத்தில்–பெரிய இவ்வுலகத்தில்
இனிது ஆக–சுகமாக
இருக்கின்றாயே–வாழ்கின்றாயே

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு, மாடல்ல மற்றையவை” என்றபடி
கல்வி அழிவில்லாத சிறப்புடைய செல்வமாதலால் அக்கல்வியைப் பூர்ணமாகப் பெற்ற வஸிஷ்டர் முதலிய
உபாத்தியாயார்களைப் பொன் பெற்றார் என்றார்.
பரதன் அந்நாட்டில்லாமல் மாதாமஹனைக் காணும் பொருட்டு மாமனுடைய கேகய தேசத்துக்குச் சென்றிருக்கையில்
இங்குக் கைகேயி செய்த முயற்சி பரதனுக்குத் தெரியாததும் தெரிந்தவளவில் மிக்க வருத்தத்தை தருவதுமாயினும்
கைகேயி தன் மகனுக்காகச் செய்த முயற்சியில் அவள் மகனும் சம்பந்தபட்டவனென்று உலகத்தார் ஸந்தேஹித்து
நினைப்பதற்கு இடங்கொடுத்தலால் நின்பற்றா நின்மகன் மேல் பழி விளைத்திட்டு எனப்பட்டது.
உன் மகனுக்கு அநுகூலமாக நீ செய்த காரியம் அந்த உன் காதல்மகனுக்கே சாச்வதமான பெரும்பழியை
விளைத்துத் தீமையாய் முடிந்ததே என்று எடுத்துக்காட்டியபடி. தசரதன் இங்ஙனம் தனக்கும் தன் அருமை மகனான
இராமனுக்கும் பெருந்தீங்கு செய்த கைகேயியின் வயிற்றிற் பிறந்தவனென்ற காரணத்தாலே பரதனிடத்துக் கொண்ட
உபேக்ஷையினால் அவனை நின்மகன் என்றான்.

மருகி-மகன் மனைவி (இதன் ஆண்பால்-மருகன்) என் பெற்றாய் = இவ்வளவு கொடுமைகளை ஒருங்கே செய்தற்கு
நீ என்ன திறமைபெற்றாய் எனினுமாம்.
இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே. ஸம்ஸாரஸுகமாகிறது, புத்ரர்களோடு பார்த்தாவோடும் கூடி யிருக்கையாய்த்து
உனக்குப் புத்ரரான பெருமாளைக் காட்டிலோபோக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே போக்குகையாலே
ஸம்ஸாரஸுகம் அழகிதாக அனுபவிக்கக் கடவையிறே என்ற வியாக்கியானஸூக்தி காண்க.
ஸ்ரீராம விரஹத்தால் உலகமெல்லாம் வருந்திக் கிடக்கையில் நீ ஒருத்தி மாத்திரம் மனமகிழ்நதிருக்கின்றனையே,
இது என்ன அழகு! என்க.

————-

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின்
வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக
கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன்
ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —9-9-

பதவுரை

முன் ஒருநாள்–முன்பு ஒரு நாளிலே
மழு ஆளி சிலை வாங்கி–பரசுராமனிடத்திலிருந்து அவன் கை வில்லை வாங்கி
அவன் தவத்தை முற்றும் பெற்றாய்–அவனியற்றிய தபஸ்ஸின் பயனை முழுதும் (அம்புக்கு இலக்காக்கி) அழித்திட்டவனே!
உன்னையும் உன் அருமையையும்–உன்னுடைய மேன்மையையும் (நான் பெருந்தவஞ் செய்து) உன்னை அருமை மகனாகப் பெற்ற தன்மையையும்
உன் மோயின் வருத்தமும்–உனது பெற்ற தாயான கௌசல்யை (உன்னை பிரியில் தரியேன் என்று) உன் பின் தொடர்ந்த வருத்தத்தையும்
ஒன்று ஆக கொள்ளாது–ஒரு பொருளாகக் கொள்ளாமல்
என்னையும்–என்னையும்
என் மெய் உரையும்–எனது ஸத்ய வாக்கையும்
மெய் ஆக கொண்டு–பொருளாகக் கருதி
வனம் புக்க எந்தாய்–காடேறச் சென்ற எமது ஐயனே!
நெடுந்தோள் வேந்தே–பெரிய தோள்களை யுடைய அரசனே!
ஏழ் பிறப்பும்–இனி அனேக ஜன்மங்கள் பிறந்து பிறந்த ஜன்மந்தோறும்
நின்னையே மகன் ஆக பெற பெறுவேன்–நீ எனக்குப் பிள்ளையாய்ப் பிறக்கும்படி பேறு பெறக் கடவேன்.

மழு ஆளி – மழுவை (ஆயுதமாக) ஆள்பவன்; இ-கருத்தாப்பொருள் விகுதி.
அன்றியே, மழு வாளி – மழுவாகிய ஆயுதத்தை யுடையவன் இ-பெயர் விகுதி.
மழு வாள் – இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. மழு – கோடாலி

என் ஐயனே! உன் மீது நான் வைத்திருக்கும் அன்பின் தன்மையை மெய்யாக அறியாமல் என்னை
வெறுந்தந்தை யென்றே நினைத்து அப்பிதாவின் வாக்கியத்தைப் பரிபாலனம் பண்ணவேண்டுமென்றும்,
நெடுநாளாக ஸத்யமே சொல்லிவருகிற தந்தையை நாம் தோன்றி அஸத்யவாதியாக ஆக்க வொண்ணாதென்று
என் ஸத்யத்தை ஸத்யமாக்க வேணுமென்றும் நெஞ்சிலே கொண்டு வனத்திற்புகுந்த
என் அருமைமகனே! என்பது மூன்றாமடியின் கருத்து.
தந்தை, மகனை எந்தாய் என்றது, அன்புபற்றிய வழுவமைதி. செற்றாய் – செறு-பகுதி

————

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

பதவுரை

மனுகுலத்தார் தங்கள் கோவே–மநுகுலத்திற் பிறந்த அரசர்களிற் சிறந்தவனே!
தேன் நகு மா மலர் கூந்தல்–தேனைப் புறப்பட விடுகிற சிறந்த மலர்களைச் சூடிய கூந்தலையுடைய
கௌசலையும்–கௌஸல்யையும்
சுமித்திரையும்–ஸுமித்ரையும்
சிந்தை நோவ–மனம் வருந்த
கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன்சொல் கொண்டு–வக்ரமான வடிவம் போலவே
மனமுங் கோணலாகப் பெற்ற வேலைக்காரியான கூனியினது வார்த்தையைக் கேட்ட
கொடியவளான கைகேயியின் சொல்லை ஏற்றுக்கொண்டு
கானகமே மிக விரும்பி இன்று நீ துறந்த–காட்டையே மிகவும் விரும்பி இப்பொழுது நீ கைவிட்ட
வளம் நகரை–(உன் பட்டாபிஷேகத்தின் பொருட்டு) அலங்கரிக்கப் பட்டிருக்கிற இந்நகரத்தை
நானும் துறந்து–நானும் விட்டிட்டு
வானகமே மிக விரும்பி போகின்றேன்–மேலுலகத்தையே மிகவும் விரும்பி (அவ்விடத்திற்குச்) செல்கின்றேன்.

மூன்று தாய்மார்களில் இரண்டுபேர் வருந்தவும் ஒருத்தி மகிழவும் நீ அயோத்தியை துறந்து கானகஞ் சென்றாயாதலின்,
நானும் இவ்வயோத்தியை துறந்து மேலுலகை நோக்கிச் செல்லுகின்றே னென்கிறான்.
கூனுருவின் = இன் – ஐந்தனுருபு ஒப்புப்பொருள். கொடுமை- தீமையே யன்றி வளைவுமாதலை
கொடுங்கோல் கொடுமரம் என்ற இடங்களிலுங் காண்க.
தொழுத்தை தொழும்பன என்பதன் பெண்பால். மநு-ஸூர்யனது குமாரன்; வைவஸ்வதமநு.

———-

ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய்
வனம் புக்க வதனுக்கு ஆற்றா
தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான்
புலம்பிய அப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன்
குடை குலசேகரன் சொல் செய்த
சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார்
தீ நெறி கண் செல்லார் தாமே–9-11-

பதவுரை

ஏர் ஆர்ந்த–அழகு நிறைந்த
கரு–கரு நிறமுடைய
நெடுமால்–மஹா விஷ்ணு
இராமன் ஆய்–ஸ்ரீ ராமனாகத் திருவவதரித்து
வனம் புக்க–காட்டுக்குச் சென்றதான
அதனுக்கு–அச் செயலை
ஆற்றா–பொறுக்க மாட்டாமல்
தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் புலம்பிய–வெற்றி மாலை பொருந்திய பெரிய மாலை போன்ற
தோள்களை யுடைய தசரத சக்ரவர்த்தி கதறின
அப் புலம்பல் தன்னை–அக் கதறல்களை,
கூர் ஆர்ந்த–கூர்மை மிக்க
வேல் வலவன்–வேற்படையின் தொழிலில் வல்லவரும
கோழியர் கோன்–உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும்
குடை–கொற்றக்குடையை உடையவருமான
குலசேகரன்–குலசேகராழ்வார்
சொல் செய்த–அருளிச் செய்த
சீர் ஆர்ந்த–சிறப்பு மிக்க
தமிழ் மாலை இவை– தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–கற்க வல்லவர்கள்
தீ நெறிக்கண்–கொடிய வழி யொன்றிலும்
செல்லார்–சென்று சேர மாட்டார்கள்.
(தான், தாம்–அசைகள்)

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: