ஸ்ரீ பெருமாள் திருமொழி -7–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ
வேழ போதக மன்னவன் தாலோ
ஏலவார் குழல் என் மகன் தாலோ
என்று என்று உன்னை என் வாய் இடை நிறைய
தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத
தாயிற் கடை யாயின தாயே –7-1-

பதவுரை

ஆலை நீள் கரும்பு அன்னவன்–ஆலையிலிட்டு ஆடத் தகுந்த நீண்ட கரும்பு போன்ற கண்ணனே!
தாலோ –(உனக்குத்) தாலாட்டு
அம்புயம் தட கண்ணினன்–தாமரை போன்று விசாலமான திருக் கண்களை உடையவனே!
தாலோ – தாலேலோ;-
வேலை நீர் நிறத்து அன்னவன்–கடலின் நிறம் போன்ற நிறத்தை யுடையவனே!.
தாலோ -தாலேலோ
வேழம் போதகம் அன்னவள்–யானைக் குட்டி போன்றவனே!
தாலோ–தாலேலோ;
ஏலம் வார் குழல்–பரிமளம் மிக்கு நீண்ட திருக் குழலை யுடைய!
என் மகன்–என் மகனே!
தாலோ -தாலேலோ;
என்று என்று–இப்படி பலகாலுஞ்சொல்லி
என் வாயிடை நிறைய–என் வாய் திருப்தி யடையும்படி
உன்னை தால் ஒலித்திடும் திருவினை இல்லா தாயரில்–உன்னை தாலாட்டுகையாகிற ஸம்பத்து இல்லாத தாய்மார்களில்
கடை ஆயின தாய்–கடையான தாயாயிரா நின்றேன் நான் (என்கிறாள் தேவகி.)

பன்னிரெண்டு மாதம் உன்னை வயிற்றிற் சுமந்து பெற்ற நான் உடனே திருவாய்ப்படிக்குப் போக்கிவிட்டேனாதலால்,
உன்னைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் முதலிய ஆநந்தா நுபவங்களை யசோதை பெற்றாளேயன்றி
நான் பெறாதொழிந்தேன், பாவியே னிழந்தேன் பிள்ளையைப் பெற்று ஆநந்தாநுபவம் பண்ணப் பெறாத
துரத்ருஷ்டாலிநிகாளான தாய்மாரில் அந்தோ! நான் கடைகெட்ட தாயாகிவிட்டேனே! என்று
தேவகி தன் வயிற்றெரிச்சலைக் கண்ணப்பிரானை நோக்கிக் கூறுகின்றன ளென்க.

“ஆலை நீள் கரும்பன்னவன் “ என்று தொடங்கி
“ ஏலவார் குழலென்மகன்” என்றளவு முள்ள ஐந்து விளிகளும் அண்மை விளி.
குழந்தையைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டும் போது தாய்மார் முதலியோர் பாராட்டிச்சொல்லும் பாசுரம் இவை.
ஆலையிலிட்டு ஆடத்தகுந்த கரும்பு என்றது – நன்றாக முற்றி ரஸம் நிரம்பிய கரும்பு என்றவாறு;
அதுபோன்றவனே! என்றது – “ஸர்வ ரஸ ஸர்வ கந்த “ என்று உபநிஷத்தில் ஓதியுள்ளபடி –
இன்சுவையே உருவெடுத்து வந்தாற்போலுள்ளவனே! என்றபடி :
தாலோ – தால் – நாக்கு குழந்தைகளை உறங்கப் பண்ணுவதற்காகப் பெண்கள் நாவை அசைத்துச் சொல்லும் சொலவு.

—————-

வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும்
அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
கேசவா ! கெடுவேன் கெடுவேனே– 7-2-

பதவுரை

வடி கொள்–கூர்மையை யுடைத்தாய்
அஞ்சனம் எழுது–மையிடப் பெற்றதாய்
செம் மலர்–செந்தாமரை மலரை ஒத்ததான
கண்–கண்களாலே
மேல் ஒன்றினை–மேற்கட்டியிலே தொங்க விட்டிருக்கும் கிளி முதலியவற்றில் ஒரு வஸ்துவை
இனிது–இனிதாக
மருவி நோக்கி–பொருந்தப் பார்த்துக் கொண்டும்
கரு தாள்–கறுத்த புறந்தாளை யுடையதும்
மலர்–செந்தாமரை மலரை யொத்து
சிறு–சிறுத்த
சே அடி–சிவந்த அகவாயை உடையதுமான திருவடிகளை
முடக்கி–முடக்கிக் கொண்டும்
நீர் பொலியும்–(கழுத்தளவும் பருகின) நீர் விளங்கப் பெற்ற
முகில் குழவி போல–மேகக் குட்டிப் போல,
செம்சிறு விரல் அனைத்தும்–அழகிய சிறுத்த திரு விரல்களெல்லாவற்றையும்
அம் கையோடு–உள்ளங்கையிலே
அடக்கி ஆர–அடங்கும் படி
அணைந்து–முடக்கிப் பிடித்துக் கொண்டும்
ஆனையின் கிடந்த கிடக்கை–ஆனை கிடக்குமா போலே பள்ளி கொண்டருளுமழகை.
கண்டிட பெற்றிலேன்–கண்டு அநுபவிக்கப் பெறாத பாவியானேன்;
அந்தோ–ஐயோ!
கேசவா–கண்ண பிரானே!
கெடுவேன் கெடுவேன்–ஒன்று மநுபவிக்கப்பெறாத பெரும் பாவியானேன்.

தாயாயிருந்து தாலாட்டும் பாக்கியத்தை மாத்திரமேயோ நானிழந்ததது?
நீ தொட்டிலிற் சாய்ந்திருக்குமழகை ஊர்ப்பெண்களெல்லாரும் திரண்டு வந்து கண்டு களித்துப் போவர்களே;
அவர்களில் ஒருத்தியா யிருந்தாகிலும் நான் அவ்வழகைக் காணப்பெற்றேனோ? அக்கேடுமில்லையே! என்கிறாள்.

குழந்தைகள் தொட்டிலில் கிடக்கும்போது இருக்கக்கூடிய இயல்வைச் சொல்வன மூவடிகளும்.
குழந்தைகள் தொட்டிலில் அண்ணாந்து பார்த்துக்கொண்டு கிடக்குமாதலால் வேறு நினைவின்றி
மேலே உற்று நோக்குத்தற்காகத் தொட்டிலின் மீது கிளிச்சட்டம் தொங்கவிட்டு வைப்பர்கள்;
அதில் மிக அழகான ஒரு வஸ்துவை உற்றுநோக்கிக் கொண்டு களித்திருத்தல் குழந்தைகளின் இயல்பு;
அதனைக் கூறுவது முதலடி.
தொட்டிலில் கிடக்கும் விதம் சொல்லுகிறது மேல்.
மேல்புறம் கறுத்து உட்புறம் சிவந்துள்ள திருவடிகளை முடக்கிக் கொண்டும்,
கைவிரல்களை முடக்கிக் கொண்டும், ‘மேகக்குட்டி கிடக்கிறதோ! ஆனைக்குட்டி கிடக்கிறதோ!’ என்று
விகற்பிக்கலாம்படியாக நீ தொட்டிலில் சாய்ந்திருக்கும் போதை யழகை அநுபவிக்கப் பெறாது இழந்தேனே.

———

முந்தை நன் முறை அன்புடை மகளிர்
முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி
எந்தையே ! என் தன் குல பெரும் சுடரே !
எழு முகில் கணத்து எழில் கவரேறே!
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ்
விரலினும் கடை கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா
நாங்கள் கோன் வாசுதேவன் பெற்றிலனே– 7-3-

பதவுரை

அன்பு உடை–ப்ரீதியை யுடையவர்களான
முந்தை நல் முறை மகளிர்–பரம்பரையாக வருகிற நல்ல உறவு முறையை யுடைய பெண்கள்
தம் தம் குறங்கிடை–தங்கள் தங்கள் துடைகளிலே
முறை முறை–க்ரமம் க்ரமமாக
இருத்தி–வைத்துக் கொண்டு
எந்தையே–“என் அப்பனே!
என் தன் குலம் பெருசுடரே–எங்கள் குலத்துக்குப் பெருத்ததொரு விளக்கானவனே!
எழு முகில் கணத்து–(கடலில் நீரை முகந்து கொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய
எழில் கவர்–அழகைக் கவர்ந்து கொண்ட
ஏறே–“ காளை போன்றவனே!”
(என்றிப்படி பலவாறாகத் துதித்து)
உந்தையாவன் என்று உரைப்ப–உன் தகப்பனார் யார்? (காட்டு,) என்றவளவிலே
நின்–உன்னுடைய
செம் கேழ் விரலினும்–சிவந்து சிறந்த விரலினாலும்
கடை கண்ணினும்–கடைக் கண்ணாலும்
காட்ட–(இன்னார் என் தகப்பனார் என்று) காட்ட
(அந்தப் பாக்கியத்தை)
நந்தன் பெற்றனன்–நந்தகோபர் பெற்றார்;
நல் வினை இல்லா நங்கள் கோன்–பாக்யஹீநையான என்னுடைய பர்த்தாவான
வசுதேவன்–வஸுதேவர்
பெற்றிலன்–(நந்தகோபர் பெற்ற பாக்கியத்தைப்) பெறவில்லை.

ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறந்ததென்றால் உறவினரெல்லாரும் வரிசை வரிசையாக வந்து
குழந்தையை எடுத்துத் தம் தம் துடை மீது இட்டுக்கொண்டு,
‘என் நாயனே! என் குலவிளக்கே! என் கண்மணியே! என்றிப்படி பலவாறாகப் புகழ்ந்து கூறி
என் செல்வமே! உன் தகப்பனார் யார்? காட்டு பார்ப்போம்! என்று கேட்குமளவில்
குழந்தை தன் விரலாலும் தன் கடைக்கண்ணாலும் தன் தந்தையைக் காட்டுவது வழக்கம்;

அவ்வாறு ஸ்ரீ க்ருஷ்ணவை கேட்கும்போது பெற்ற தகப்பனாகிய வஸுதேவனைக் காட்ட வேண்டியது
ப்ராப்தாமாயிருக்கவும் பிறந்தது முதலாக நந்தகோபர் மாளிகையிலேயே வளர்ந்தது பற்றி
அந்த நந்நகோபரையன்றி வேறொருவரைத் தந்தையென்றறியாமையால்
அவரையே தனக்கு தந்தையாக காட்டினானாக வடுக்கும் என்றெண்ணிய தேவகி
அந்தோ! பரம பாக்யஸாலிநியான யசோதையைக் கைபிடித்த பாக்யத்தாலே! “இவன் என் தகப்பன்” என்று
விரலாலும் கண்ணாலும் காட்டும்படியான அத்ருஷ்டத்தை நந்தகோபாலன் பெற்றான்
பெரும் பாவியான என்னைக் கைபிடித்த கொடுமையாலே வஸுதேவன் இழந்தான். என்று சொல்லி வயிறெரிகிறாள்.

———-

களி நிலா எழில் மதி புரைமுகமும்
கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
தளி மலர் கரும் குழல் பிறை யதுவும்
தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால்
பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த
பாவியேன் எனது ஆவி நில்லாதே– 7-4-

பதவுரை

கண்ணனே களி நிலா–ஸ்ரீ கிருஷ்ணனே! ஆநந்தத்தை விளைவிக்கும் நிலாவை யுடைய
எழில் மதி புரை முகமும் திண் கை–பூர்ண சந்திரனை ஒத்த திருமுகமும் திண்ணிதான திருக் கைகளும்
மார்வும்–திரு மார்பும்
திண் தோளும்–வலிமை பொருந்திய திருத் தோள்களும்
தளிர் மலர் கரு குழல்–தளிரையும் மலரையும் முடைத்தாய்க் கறுத்த திருக் குழற்கற்றையும்
பிறை அதுவும் தடங்கொள்–அஷ்டமீ சந்திரன் போன்ற திருநெற்றியும் விசாலமான
தாமரை கண்களும்–தாமரை போன்ற திருக் கண்களும் (ஆகிய இவை)
பொலிந்த இளமை இன்பத்தை–அழகு பெற்று விளங்கும்படியான யௌவநாவஸ்தையின் போக்யதையை
இன்று–இப்போது
என் தன் கண்ணால்–என்னுடைய கண்ணாலே
பருகுவேற்கு–நான் அநுபவியா நின்றாலும்
இவள் தாய் என நினைந்த–(இவள் என்னுடைய) தாய் என்று நினைப்பதற்குத் தகுதியான
பிள்ளைமை–சைசவப் பருவத்திலுண்டான
அளவு இல் இன்பத்தை–அளவில்லாத ஆநந்தத்தை
இழந்த–அநுபவிக்கப் பெறாமல் இழந்த
பாவியேன் எனது–பாவியான என்னுடைய
ஆவி நில்லாது–உயிரானது தரித்து நிற்க வழி யில்லையே!.

கண்ணபிரானே! செறிந்த நிலாவையுடைய பூர்ண சந்திரன் போன்ற திருமுகமும்
திண்ணிதான திருக்கையும் திருமார்வும் திருத்தோளும் திருக்குழலும் திருநெற்றியும் திருக்கண்களுமாகிய
இவ்வயவங்களின் போபைகளால் விளாங்கா நின்றுள்ள உனது யௌவந பருவத்திலழகை
இப்போது நான் கண்ணாரக் கண்டநுபவியா நின்றேனாகிலும்,
தாயாரொருத்தியையே யன்றி வேறொருத்தரையு மறியாத இளம் பருவத்தை அநுபவிக்க பெறாமற் போனேனே!
என்கிற அநுதாபமே என் நெஞ்சைக் கொள்ளை கொண்டிருப்பதனால் புண்படுத்தா நின்ற தென்கிறாள்.

————

மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர
மணி வாய் இடை முத்தம்
தருதலும் உன் தன் தாதையை போலும்
வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர
விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து
வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –7-5-

பதவுரை

நின் திரு நெற்றியில் மருவும் சுட்டி அசை தர–உன்னுடைய திரு நெற்றியிலே பொருந்தியிருக்கிற சுட்டியானது அசையும்படி
மணிவாயிடை முத்தம் தருதலும் உன்தன் தாதையை போலும்–அழகிய வாயிலுண்டான
முத்தத்தை கொடுப்ப தென்ன உன்னுடைய தகப்பானரைப் போன்ற
வடிவு–(உன்) வடிவழகை
கண்டு கொண்டு–(நான்) பார்த்து
உள்ளம் டீள் குளிர–(கடலில் நீரை முகந்து கொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய
செம் சிறு வாயிடை–சிவந்த சிறிய திருவாயிலே
விரலை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அ உரையும்–விரல்களை வைத்துக் கொண்டு (நீ) சீற்றத்தோடே
சொல்லுகிற மழலைச் சொற்க ளென்ன (ஆகிய இவற்றிலே)
ஒன்றும் திரு இலேன் பெற்றிலேன் –ஒன்றையும் பாக்யமற்றவளான நான் அநுபவிக்கப்பெறவில்லை.
தெய்வ நங்கை எசோதை–‘தெய்வமாது’ என்று சொல்ல லாம்படியான யசோதைப் பிராட்டி
எல்லாம் பெற்றாளே–அந்த பால்யசேஷ்டிதங்கள் எல்லாவற்றையும் அநுபவிக்கப் பெற்றாளே!.

திருநெற்றிலே கூடப்பிறந்தாற்போல அமைந்து விளங்கும் சுட்டியானது அசையும்படி நீ முத்தங்கொடுப்பதையும் இழந்தேன்;
நம் குழந்தையின் முகம் தகப்பனாரின் முகம் போலவே இருக்கிறது! “ என்று சொல்லிக் கொண்டு
உனது முகத்தைச் சந்தோஷமாக பார்த்து நிற்கும் போது நீ விரல்களை வாயினுள்ளே வைத்துக்கொண்டு
பால்யோசிதமாக சீற்றம் தோற்றச்சொல்லும் மழலைச் சொற்களையும் நான் கேட்கப்பெறாமல் இழந்தேன்.
இழப்பதற்கு நானொருத்தி ஏற்பட்டாற்போலே அநுபவிப்பதற்கு யசோதைப் பிராட்டி யென்பாளொருத்தி ஏற்பட்டாள்,
உன் லீலா ரஸங்களெல்லாவற்றையும் அவளே பெற்றனள் என்கிறாள்.

“ முத்தம் தருதலும், உரைக்கு மவ்வுரையும் ஒன்றும் பெற்றிலேன் “ என்று அந்வயம்
வெகுளியாய் நின்று -சீறுபாறென்று பேசுதல் குழந்தைகளின் இயல்வாம்.
யசோதை ஒருவித நோன்பும் நோற்காதே யாத்ருச்சிகமாகவே கண்ணபிரானுடைய அதிமாநுஷ ஸீலவ்ருத்த
வேஷங்களைனைத்தயுங்காணப் பெற்றமை பற்றித் தெய்வ நங்கை எனப்பட்டாள்.

———–

தண் தாமரை கண்ணனே! கண்ணா !
தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன்
மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும்
வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன்
என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –7-6-

பதவுரை

தண் அம் தாமரை கண்ணனனே–குளிர்ந்த அழகிய தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனே
கண்ணா தவழ்ந்து எழுந்து–கண்ணபிரானே (நீ) தவழ்ந்து கொண்டுஎழுந்திருந்து
தளர்ந்தது ஓர் நடையால்–தட்டுத்தடுமாறி நடப்பதாகிற ஒரு நடையினால்
செம்மண் பொடியில்–சிவந்த புழதி மண்ணிலே
ஆடி வந்து–விளையாடி (அக்கோலத்தோடே) வந்து
என் தன் மார்வில்–என்னுடைய மார்விலே
மன்னிட பெற்றிலேன் அந்தோ–நீ அணையும் படியான பாக்கியத்தை பெற்றிலேன்; இஃது என்ன தெளர்ப்பாக்கியம்!
வண்ணம் செம்–அழகு பெற்றுச் சிவந்து
சிறு–சிறிதான
கை விரல் அனைத்தும்–கைவிரல்களெல்லா வற்றாலும்
வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சல் உண்ணப் பெற்றிலேன்–வாரிக் கொண்டு அமுது செய்த ப்ரஸாதத்தினுடைய
சேஷத்தை (நான்) உண்ணப் பெறவில்லை;
கொடுவினையேன்–(இவற்றை யெல்லாம் நான் இழக்கும் படியாக) மஹா பாபத்தைப் பண்ணினேன்;
ஓ எம்மோய் என்னை என் செய்ய பெற்றது–ஐயோ! என் தாயானவள் என்னை எதுக்காக பெற்றாளோ!

குளிர்ந்து அழகிய தாமரைப்பூப்போலே அலர்ந்த திருக்கண்களையுடைய கண்ணபிரானே!
நீ செம்மண்ணிலே புழுதியளைந்து விளையாடும்போது தவழ்ந்து செல்வதனாலும் தட்டுத்தடுமாறித்
தரையில் காலூன்றியு மூன்றாதும் நடப்பதனாலும் புழுதி மண்ணை அளைந்த அக்கோலத்தோடே வந்து
என் மார்விலே கட்டிக் கொண்டு கிடக்கப்பெற்றிலேனே!;
எல்லாத் திருவிரல்களாலும் ப்ரஸாதத்தை வாரி அமுது செய்யும் பொது வாயது கையதாக மிகுந்த
ப்ராஸதத்ரையு முண்ணப் பெற்றினலேனே!;
ஆட்டின் கழுத்தில் முலை (அதர்) போலே என்னை என் தாய் வீணாகவே யன்றோ பெற்றாளென்கிறாள்.

“ செம்மண் பொடியில் தவழ்ந்து ஆடி, எழுந்து தளர்ந்ததோர் நடையால் வந்து என்றன் மார்வில்
மன்னிடப் பெற்றிலேன்” என்று அந்வயித்துப்பொருள் கொள்ளுதல் சாலச்சிறக்கும்

இப் பாட்டின் முன்னடிகட்கு “ மக்கண் மெய்தீண்டலுடற்கின்பம் “ என்னுங் குறளையும்
பின்னடிகட்கு “அமிழ்தினு மாற்ற வினிதே தம் மக்கள் சிறுகை யளாவிய கூழ்” என்னுங் குறளையும் நினைக்க.

———————-

குழகனே !என் தன் கோமள பிள்ளாய்
கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி
ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல்
ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா
மழலை மென் நகை இடை இடை அருளா
வாயிலே முலை இருக்க வென் முகத்தே
எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம்
தன்னையும் இழந்தேன் இழந்தேனே– 7-7-

பதவுரை

குழகனே–எல்லாரோடும் கலக்கும் ஸ்வபாவமுடையவனே!
என் தன் கோமளம் பிள்ளாய்–என் வயிற்றிற் பிறந்த அழகிய குமாரனே!
கோவிந்தா–கோவிந்தனே!
என் குடங்கை யில் மன்னி ஓழுகு பேர்–என்னுடைய குடங்கையிலே பொருந்தியிருந்து வெள்ளமிடாநின்ற மிக்க
எழில் இள சிறு தளிர் போல்–அழகை யுடைத்தாயும் மிகவும் இளைசான தளிர் போன்றதுமான
ஒரு கையால் ஒரு முலை முகம்–ஒரு திருக் கையாலே (என்னுடைய) ஒரு முலைக் காம்பை
நெருடா–நெருடிக் கொண்டு
முலை வாயிலே இருக்க–மற்றொரு முலையானது (உன்) வாயில் இருக்க
இடை இடை–நடு நடுவே
என் முகத்தை மழலை மெல் நகை அருளா–என் முகத்தை நோக்கி புன் சிரிப்பைச் செய்து கொண்டு
எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம் தன்னையும்–அழகிய உன் இரண்டு கண்களாலும் பார்க்கிற பார்வையையும்
இழந்தேன் இழந்தேன்–ஐயோ! இழந்தேனே!

ஒரு முலையை வாய்மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இருமுலையும் முறை முறையா யேங்கி யிருந்துணாயே“ (பெரியாழ்வார் திருமொழி ) என்று
யசோதை கண்ணனை வேண்டிக்கொண்டு அவ்வாறே பெற்றனள் என்பதை அறிந்த தேவகி,
அப்பாக்கியம் தனக்கு நேராமற் போனது பற்றி வருந்துகின்றாள்.
நீ என் குடங்கையில் சாய்ந்துகொண்டு ஒருகையாலே (எனது) ஒரு முலைக் காம்பை நெருடிக் கொண்டும்
மற்றொரு முலையைத் திருப் பவளத்தில் வைத்துக் கொண்டும் நடுநடுவே என்னை இனிதாக நோக்கும்
நோக்கத்தை அநியாயமாய் இழந்தொழிந்தேனே! என்கிறாள்.

குழகன் – எல்லாரோடும் கலந்து பரிமாறுவதையே இயல்வாக வுடையவன்
கோமளம்-ஸுகுமாரம்.
குடங்கை என்பதற்கு “ உள்ளங்கை” என்று சிலர் பொருள் கூறுவர்;
அப்பொருள் உண்டாயினும் இவ்விடத்திற்கு அது பொருளல்ல;
பெண் பிள்ளைகள் குழந்தைகட்கு முலை கொடுக்கும் போது தமது முழங்கையிலே குழந்தையை வைத்துக் கொண்டு
முலை கொடுப்பது வழக்கமாதலால் இங்குக் குடங்கை என்பதற்கு “ முழங்கை” என்று பொருள் கொள்ளுவதற்கு தகுதி
“ எட்டுணைப்போது என் குடங்காலிருக்க கில்லாள்” இத்யாதி இடங்களில் குடங்கால் என்பதற்கு ‘முழங்கால்’ என்று
பொருள் கொள்ள வேண்டுமாற்றிக் “குடங்கையில் மண் கொண்டளந்து” இத்யாதி ஸ்தலங்களில் ‘உள்ளங்கை’ என்ற
பொருட்குப் பாதகமில்லை யென்க.
நெருடா, அருளா – ‘ செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; நெருடி, அருளி என்றபடி.

——–

முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
முகிழ் இளம் சிறு தாமரை கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-

பதவுரை

வெண்ணெய் முழுதும் அளைந்து–வெண்ணெய் குடத்திலுள்ளவளவும கையை விட்டு (அளைந்து)
தொட்டு உண்ணும்–எடுத்து உண்கிற
இள முகிழ் தாமரை சிறுகையும்–இளந்தளிரையும் தாமரையையும் போன்ற சிறிய திருக் கைகளும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு–அழகிய தாம்பாலே அடிக்க (அதற்கு)
எள்கு நிலையும்–அஞ்சி நிற்கும் நிலையும்
வெண் தயிர் தோய்ந்த செம் வாயும்–வெளுத்த தயிர் பூசிய சிவந்த வாயும்,
அழுகையும்–அழுவதும்,
அஞ்சி நோக்கும் அ நோக்கும்–பயந்து பார்க்கிற அப்பார்வையும்
அணி கொள் செம் சிறு வாய் நெளிப்பதுவும்–அழகிய சிவந்த சிறிய வாய் துடிப்பதும்
தொழுகையும்–அஞ்ஜலி பண்ணுகையும் (ஆகிற
இவை–இவற்றையெல்லாம்
கண்ட–நேரில் கண்ணாற்கண்டு அநுபவித்த
அசோதை–யசோதை யானவள்
தொல்லை இன்பத்து–பரமானந்தத்தினுடைய
இறுதி–எல்லையை
கண்டாள்-காணப் பெற்றாள்

“தாரார்தடந்தோள்க ளுள்ளளவுங் கைநீட்டி, ஆராத வெண்ணெய் விழுங்கி” திலே புகவிட்டு அளைவனாதலால்
“ஆழவமுக்கி முகக்கினு மாழ்கடல்நீர், நாழிமுகவாது நானாழி” என்கிற ஸாமாந்யமான செய்தியையும் அறியாதே
அவிவேகந் தோற்றச் செய்த காரியங்களைக் காணப் பெற்றிலேன், என்கிறாள் முதலடியில்.
“அடிப்பதற்கு” – அடிப்ப, அதற்கு எனப் பிரித்துரைத்தலுமாம்;

கண்ணன் தயிரைக் களவாடி உண்ணும்போது யசோதை கண்டு தடியும் தாம்பு மெடுத்தவாறே
“தாயெடுத்த சிறு கோலுக் குளைந்தோடித், தயிருண்டவாய் துடைத்த மைந்தன்” என்றபடி
அந்தத் தயிரை மறைப்பதாகத் துடைத்துக் கொள்ள ஆரம்பித்து வாய் நிறையச் சுற்றிலும் பூசிக் கொள்வன்;
பிறகு யசோதையால் அடிபட்டு அழுவன், அஞ்சினாற்போல் நோக்குவன், வாய் துடிக்கும்படி விக்கி விக்கி அழுவன்,
கடைசியாக அஞ்ஜலி பண்ணுவன்; ஆக இக்கோலங்களையெல்லாம் கண்டு ஆநந்தத்தின் எல்லையிலே நிற்கும்படியான
பாக்கியம் சோதைக்குக் கிடைத்ததேயன்றிச் சுமந்துபெற்ற எனக்குக் கிடைக்காமற் போயிற்றே! என்று வருந்துகின்றாள்.
(தொல்லையின்பத்திறுதி கண்டாளே.) தொல்லை யின்பம் என்று எம்பெருமானாகிய கண்ணனையே சொல்லிற்றாய்,
அபரிச்சிந்நனான அவனை யசோதை பரிச்சிந்நனாக்கி விட்டாள! என்றும் உரைப்பதுமொன்று.
அழுகையும் தொழுகையும் பரிச்சிந்நர்களுடைய க்ருத்யமிறே. (பரிச்சிந்நர்- ஓரளவு பட்டவர்.

—————

குன்றினால் குடை கவித்ததும் கோல
குரவை கோத்ததும் குடமாட்டும்
கன்றினால் விள வெறிந்ததும் காலால்
காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்
அங்கு என் உள்ளம் குளிர
ஒன்றும் கண்டிட பெற்றிலேன் அடியேன்
காணுமாறு இனி வுண்டேனில் அருளே— 7-9–

பதவுரை

குன்றினால் குடை கவித்ததும்–கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி நின்றதும்
கோலம் குரவை கோத்ததும்–அழகாக ராஸ க்ரீடை செய்ததும்
குடம் ஆட்டும்–குடக் கூத்தாடினதும்
கன்றினால் விள எறிந்ததும்–கன்றாய் வந்த ஒரு அசுரனைக் கொண்டு (அஸுராவேசமுடைய) விளங்காய்களை உதிர்த்ததும்
காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா–திருவடிகளாலே காளிய நாகத்தின் தலையை மர்த்தித்ததும் (ஆகிய இவை) முதலாகவுள்ள
வென்றி சேர்–வெற்றி பொருந்திய
நல் பிள்ளை விளையாட்டம் அனைத்திலும்–விலக்ஷணமான பால்ய சேஷ்டிதங்க ளெல்லா வற்றினுள்ளும்
ஒன்றும்–ஒரு சேஷ்டிதத்தையும்
என் உள்ளம் உள் குளிர–என் நெஞ்சு குளிரும்படி
அடியேன்–நான்
அங்கு கண்டிட பெற்றிலேன்–அச்சேஷ்டிதங்களை நீ செய்தவிடத்தில் கண்ணாரக் கண்டு களிக்க பெற்றிலேன்;-
இனி–இப்போது
காணும் ஆறு–(அவற்றை நான்) காணத் தக்க உபாயம்
உண்டு எனில்–இருக்குமாகில்
அருள்00கிருபை செய்தருள வேணும்.

உனது சேஷ்டைகளை யசோதைக்குக் காட்டினையே யன்றிப் பாவியேன் கண்ணுக்கு நீ ஒன்றையுங் காட்டவில்லை;
கீழ் நடந்தவற்றை யெல்லாம் எனக்காக மறுபடியும் ஒரு தடவை செய்து காட்டக் கூடுமோ என் அப்பனே! என்கிறாள்.

——–

வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி
வரண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க
நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ !
சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் !
கடைப் பட்டேன் வெறிதே முலை சுமந்து
தஞ்சம் மேல் ஒன்றி இலேன் உய்ந்து இருந்தேன்
தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே— 7-10-

பதவுரை

வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி–வஞ்சனை பொருந்திய நெஞ்சை யுடையளான பூதனை யானவள்
வரண்டு–உடம்பு சோஷித்து
எழ–(உள்ளுள்ள ரத்தமாம்ஸங்கள) வெளியிற் கொழிக்கும் படியாகவும்
நார் நரம்பு கரிந்து உக்க–நார் போன்ற நரம்புகள் கருகி உதிரும் படியாகவும (அவளுடைய)
நஞ்சம் ஆர் தரு சுழி முலை–விஷந்தீற்றிய கள்ள முலையை
நீ சுவைத்து–நீ ஆஸ்வாதநம் பண்ணியும்
அருள் செய்து–(என் மேல்) கிருபையினாலே
வளர்ந்தாய்–உயிருடன் வளரப் பெற்றாய்
அந்தோ–ஆச்சரியம்!
கஞ்சன் நாள் கவர்–கம்ஸனுடைய ஆயுஸ்ஸை அபஹரித்த
கரு முகில் எந்தாய்–காளமேகம் போன்ற நாயனே!
முலை வெறிதே சுமந்து–(நான்) முலையை வியர்த்தமாகச் சுமந்து
கடைப்பட்டேன்–கெட்டவரிலும் கடைகெட்டவளானேன்;
தஞ்சம் ஒன்று இலேன்–(உன்னையொழிய வேற) புகலற்றிராநின்றேன்;
உய்ந்திருந்தேன்–(என்றைக்காகிலு முன்னைக் கண்ணால் காண்போமென்று)பிராணனைப் பிடித்துக் கொண்டு ஜீவிக்கிறேன்;
தக்கது–உனக்குத் தகுதியான
நல்ல தாயை–நல்ல தாயாரை
பெற்றாய்–ஸம்பாதித்துக் கொண்டாய்.

(கடைப்பட்டேன் வெறிதே முலை சுமந்து)
முலை நெறித்த போது பாலுண்பதற்கு உன்னைப் பிள்ளையாகப் பெற்று வைத்தும் நீ வேறு முலையைத்
தேடி ஓடினமையால் என்முலை பயனற்றொழிகையாலே இம்முலை எனக்குப் புரைகுழல் போலே
வீணாண சுமையாயிற்றென்கிறாள்.

(தஞ்சமேல் இத்யாதி) நான் முன்னமே உயிர்துறந்திருக்க வேண்டுமாயினும் எப்போதாயினும்
உன்னைக் காணப்பெறவேணுமென்னுமாசையால் பிராணனை வலியப் பிடித்து
வைத்துக் கொண்டிருக்கிறேனென்று கருத்து.

(தக்கதே இத்யாதி) உனக்கு முலைப்பால் வேண்டும் போது என்னையும் விட்டு யசோதையையும் விட்டுப்
பூதனையைப் பற்றினாயே! இதுனோ தகுதி? என்றவாறு

—————

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை
வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-

பதவுரை

மல்லை மா நகர்க்கு–செல்வம் நிரம்பிய பெரிய நகரமாகிய வட மதுரைக்கு
இறையவன் தன்னை–தலைவனாயிருந்த கம்ஸனை
வான் செலுத்தி–வீர ஸ்வர்க்கத்திற்கு அனுப்பி
ஈங்கு வந்து அணை–(தேவகீ ஸமீபமாகிய) இங்கே வந்து சேர்ந்த
பிள்ளை–கண்ண பிரானுடைய
மாயத்து எல்லை இல் செய்வன–அற்புதத்தில் எல்லை யில்லாத சேஷடிதங்களை
காணா–(நடந்த போது) காணப் பெறாத
தெய்வத் தேவகி–தெய்வத் தன்மை பொருந்திய தேவகி யானவள்
புலம்பிய புலம்பல்–புலம்பிக் கொண்டு சொன்ன பாசுரங்களை
கொல்லி காவலன்–கொல்லி நகர்க்கு அரசராய்
மால் அடி முடி மேல் கோலம் ஆம்–ஸர்வேச்வரனுடைய திருவடிகளைத் தம் திருமுடிக்கு அலங்காரமாக வுடையரான
குலசேகரன்–குலசேகராழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
நல் இசை தமிழ் மாலை–நல்ல இசையையுடைய தமிழினாலாகிய சொல் மாலையை
வல்லார்கள்–ஓத வல்லவர்கள்
ஒல்லை–விரைவாக
நாரணன் உலகு–ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவார்–சேரப் பெறுவர்

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: