ஸ்ரீ பெருமாள் திருமொழி -8–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

ஸ்ரீ ராமாவதாரத்தில் கௌஸல்யை பெற்ற பேற்றைக் கருதி,
அவள் அவ்விராம பிரானைத் தொட்டில் இட்டுத் தாலாட்டுக் கூறின முகத்தால்
இத்திருமொழி அருளிச் செய்கிறார்.
இவ்வநுபவம் இவர்க்குத் திருக் கண்ணபுரத் தெம்பெருமான் விஷயத்திலே செல்லுகிறது.

—————————-

மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ— 8-1–

பதவுரை

மன்னு புகழ்–நிலை நின்ற புகழை யுடைய
கௌசலை தன்–கௌஸல்யையினுடைய்
மணி வயிறு–அழகிய வயிற்றிலே
வாய்த்தவனே–பிள்ளையாகத் திருவவதரித்தவனே!
தென் இலங்கை கோன்–தென்னிலங்கைக்கு இறைவனான ராவணனுடைய
முடிகள்–பத்துத் தலைகளையும்
சிந்துவித்தாய்–சிதறப் பண்ணினவனே!
செம் பொன் சேர்–செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய்
கன்னி–அழிவில்லாததாய்
நல்–விலக்ஷணமாய்
மா–பெரிதான
மதில்–திருமதிளாலே
புடை சூழ்–நாற் புறமும் சூழப்பட்ட
கணபுரத்து–திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே–நீல ரத்நம் போன்ற எம்பெருமானே!
என்னுடைய இன் அமுதே–எனக்கு போக்யமான அம்ருதமாயிருப்பவனே!
இராகவனே!–ஸ்ரீராமனே!
தாலேலோ–(உனக்குத்) தாலாட்டு

இதில், முதலடியால் அவதாரமும், இரண்டாமடியால் அவதார ப்ரயோஜநமும் சொல்லப்பட்டன வென்க.
கணபுரம் – கண்ணபுரம் என்பதன் தொகுத்தல்,
திருக்கண்ணபுரம் என்னும் இத்திவ்யதேசம் சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று.
இத்தலத்தில் சௌரிராஜப்பெருமாள் மிகவும் வரப்ரஸாதி என்பது ப்ரஸித்தம்.
நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வர் ஆகிய ஐவர்களால்
மங்களாசாஸநஞ் செய்யப் பெற்ற சிறந்த திவ்யதேசம் இது.

தாலேலோ – வளர்பிள்ளைத் தொட்டிலிலே வளர்த்திக் கண்வளரப் பண்ணுகைக்காகச் சீராட்டித் தாலாட்டுதல்;
தால் – நாக்கு; தமிழில் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய பிள்ளைத் தமிழில்
இத் தாலாட்டை எட்டாம் மாதத்திற் கூறுவது கவிமரபு.

—————

புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே!
திண் திற லாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரத்து என் கருமணியே !
எண் திசையும் ஆள் உடையாய்! ராகவனே! தாலேலோ –8-2–

பதவுரை

புண்டரிகம் மலர் அதன் மேல்–(திருநாபியில் அலர்ந்த) தாமரைப் பூவின் மேல் (பிரமனைத் தோற்றுவித்து அவன் முகமாக)
புவனி எல்லாம் படைத்தவனே–உலகங்கள் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தவனே!
திண் திறலாள் தாடகை தன்–த்ருடமான பலத்தை யுடையளான தாடகையினுடைய
உரம் உருவ–மார்வைத் துளைக்கும் படியாக
சிலை வளைத்தாய்–வில்லை வளைத்து அம்புகளை எய்தவனே!
கண்டவர்–ஸேவித்தவர்கள்
தம் மனம் வழங்கும்–தங்கள் மனத்தைத் தாங்களே இசைந்து கொடுப்பதற்குத் தகுந்த
கணபுரத்து என் கருமணியே;
எண் திசையும்–எட்டுத் திக்கிலுள்ளவர்களையும்
ஆள் உடையாய்–அடிமை கொண்டருளுபவனே!
இராகவனே! தாலேலோ–ஸ்ரீராமனே! (உனக்குத்) தாலாட்டு

———–

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—8-3–

பதவுரை

கொங்குமலி கரு குழலாள்–பரிமளம் மிகுந்த கறுத்த கூந்தலை யுடையளான
கௌசலை தன்–கௌஸல்யையினுடைய
குலம் மதலாய்– சிறந்த பிள்ளையானவனே!
தங்கு பெருபுகழ் சனகன்–பொருந்திய மஹா கீர்த்தியை யுடைய ஜநக மஹாராஜனுக்கு
திரு மருகா–மாப்பிள்ளை யானவனே!
தாசரதீ–சக்ரவர்த்தி திருமகனே!
கங்கையிலும்–கங்கா நதியிற் காட்டிலும்
மலி தீர்த்தம்–சிறப்பு மிக்க தீர்த்தங்களை யுடைய
கண புரத்து–திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
என் கரு மணியே
எங்கள் குலம்–எங்கள் ராஜ வம்சத்துக் கெல்லாம்
இன் அமுதே–போக்யமான அமுதம் போன்றவனே!
இராகவனே! தாலேலோ

எங்கள் குலத்து இன்னமுதே – ஸ்ரீராமன் ராஜவம்ஸத்திற் பிறந்தாற்போல
இக்குல சேகராழ்வாரும் ராஜவம்ஸத்திற் பிறந்தவராதலால் இங்ஙனமருளிச் செய்தாரென்க.

————–

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–

பதவுரை

தாமரை மேல்–(திருநாபிக்) கமலத்திலே
அயன் அவனை படைத்தவனே–பிரமனை உண்டாக்கினவனே!
தயரதன் தன் மாமதலாய்–தசரதனுடைய மூத்த குமாரனே!
மைதிலி தன் மணவாளா–பிராட்டிக்கு வல்லபனே!
வண்டு இனங்கள்–வண்டுகளின் கூட்டங்கள்
காமரங்கள் இசை பாடும்–காமரமென்னும் இசையைப் பாடப் பெற்ற
கண புரத்து–திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
என் கருமணியே
ஏ மருவும் சிலை வலவா–அம்புகள் பொருந்திய (ஸ்ரீசார்ங்கமென்னும்) வில்லை ஆள வல்லவனே
இராகவனே! தாலேலோ

“தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே!” என்று சொல்லி
“தயரதன்றன் மாமதலாய்!” என்று சொன்னவிது –
ஸகல விபூதிக்கும் பிதாவாகிய நீ இவ்விபூதியில் ஒரு பிபீலிகாப்ராயனான தசரதனைப் பிதாவாகக் கொண்டு
‘அவனுடைய பிள்ளை’ என்னும்படியாக பிறந்த அதிசயம் என்கொல் என வியந்தவாறாம்.

“ஏமருவுஞ்சிலை” = ஏ – எய்கையிலே, மருவும் – மூட்டாநின்ற, சிலை – வில் என்றும் பொருளாகலாம்.
ஆரேனும் பிடிக்கிலும் எய்கையிலே மூட்டும் வில் என்பது கருத்து.
வெகு சாதுரியமாய் அடக்கி ஆளத்தக்க வில் – என்றவாறு
இக்கருத்துத் தோன்றவே பெரியாழ்வாரும் சார்ங்கமென்னும் வில் ஆண்டான் றன்னை என்றருளிச் செய்தாரென்க.

———–

பாராளும் படர் செல்வம் பாரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே !
தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ—– 8-5-

பதவுரை

பார் ஆளும் படர் செல்வம்–பூமி முழுவதையும் ஆட்சி புரிகையாகிற பெரிய ராஜ்ய ஸம்பத்தை
பரதன் நம்பிக்கே–ஸ்ரீ பரதாழ்வானுக்கே
அருளி–நியமித்து விட்டு
ஆரா அன்பு இளையவனோடு–பரிபூர்ணமான பக்திப் பெருங்காதலை யுடைய இளைய பெருமாளுடன் கூட
அரு கானம் அடைந்தவனே–(புகுவதற்கு) அருமையான காட்டைக் குறித்து எழுந்தருளினவனே!
சீர் ஆளும் வரை மார்பா–வீர லெக்ஷ்மிக்கு இருப்பிடமாய் மலை போன்ற திரு மார்பை யுடையவனே!
திருக்கண்ணபுரத்து அரசே-
தார் ஆளும் நீள் முடி–மாலையோடு கூடின சிறந்த திரு முடியை யுடையவனே!
என் தாசரதீ! தாலேலோ

வநவாஸஞ் செல்லும்போது இராமபிரான் இளைய பெருமாளை நோக்கி இளையோய் நான் போகிறேன்.
நீ இங்கே யிருப்பாயாக என்ற போது, அவர் தமது கைங்கரிய ருசியையும் பிரியில் தரியாமையையும்
பரக்கப் பேசித் தம்மையுங்கூட்டிக் கொண்டு போகும்படி செய்தனராதலால் ஆராவன்பிளையவனோடு என்றார்.

(அருங்கானம்) கல் நிரைந்து தீந்து கழையுடைந்து கால்சுழன்று பின்னுந் திரைவயிற்றுப் பேயே
திரிந்துலவாக், கொன்னவிலும் வெங்கானம் (பெரிய திருமடல்) என்றார் கலியனும்.

————

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்க்கு அரு மருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ –8-6–

பதவுரை

சுற்றம் எல்லாம் பின் தொடர–எல்லா உறவினரும் பின்னே தொடர்ந்து வர
தொல் கானம் அடைந்தவனே–புராதநமான தண்டகாரண்யத்துக் கெழுந்தருளினவனே!
அற்றவர்கட்கு–உனக்கே அற்றுத் தீர்ந்த பரம பக்தர்களுக்கு
அரு மருந்தே–ஸம்ஸார ரோகத்தைத் (தணிக்க) அருமையான மருந்து போன்றவனே!
அயோத்தி நகர்க்கு அதிபதியே–அயோத்யா நகரத்திற்கு அரசனே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து–ஞானிகள் வாழ்தற்கு இடமான திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே–நீலமணி போலழகிய எம்பெருமானே!
சிற்றவை தன்–சிறிய தாயாராகிய கைகேயியினுடைய
சொல் கொண்ட சீராமா–சொல்லை ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமமே!
தாலேலோ –

இராமன் காட்டுக் கெழுந்தருளுகையில் பிரஜைகள் மாத்திரமே பின் தொடர்ந்ததாக ஸ்ரீராமாயணத்திற் கூறாநிற்க;
இங்கு சுற்றமெல்லாம் பின் தொடரத் தொல்கான மடைந்தவனே என்றருளிச்செய்தது சேர்வதெங்ஙனே? என்று
எம்பெருமானார் திருவோலக்கத்தில் ப்ரஸ்தாவம் நிகழ,
அதற்கு எம்பெருமானார் அருளிச் செய்தது –
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்று சொன்ன எல்லாவடிமையும் செய்யு மிளையபெருமாள் கூடப் போகையாலே
எல்லா பந்துக்களும் கூடப்பேனார்களாய்த்திறே என்றாம்.
இது ரஸோக்தியாக அருளிச் செய்தபடி.

அற்றவர்கள் என்று சரபங்காச்ரமத்தில் வந்து கதறின தண்டகாரண்ய வாஸிகளான முனிவரைச் சொல்லுகிறது.
அங்ஙனம் வந்து வேண்டிக் கொண்ட முனிவர்களை நோக்கி “அப்படியே நான் உங்கள் விரோதி வர்க்கங்களை
வேரறத் தொலைத்து விடுகிறேன், அஞ்சேல்மின்” என்று உறுதிமொழி கூறிய இராமபிரான்
அந்தப் பிரதிஜ்ஞையை நிறைவேற்றுதற் பொருட்டு தண்டகாரணியத்திற்குப் புறப்படுங்கால் பிராட்டி பெருமாளை நோக்கி
“ஆரியரே! தாபஸ வ்ருத்தியை அவலம்பித்து வந்து சேர்ந்தவிடத்தில் க்ஷத்ரிய வ்ருத்தியைப் பாராட்டக் கருதுவது உமக்குத் தகுதியல்ல;
உமது விஷயத்தில் ஒரு குற்றமுஞ் செய்யாத பிராணிகளை நீர் கொல்ல முயல்வது அநியாயமாகும்” என்று பலவாறாக உணர்த்த;
அது கேட்ட இராமபிரான் – “ஸீதே! நான் பிராணனை விட்டாலும் விடுவேன்; லக்ஷ்மணனையும் உன்னையும் விட்டாலும் விடுவேன்;
யாருக்காவது பிரதிஜ்ஞை செய்துகொடுத்து அதிலும் பிரமஞானிகளுக்குப் பிரதிஜ்ஞை செய்து கொடுத்து
அதை மாத்திரம் நிறைவேற்றாது விடவேமாட்டேன்; ரிஷிகள் தாம் என்னிடம் வந்து முறையிடாமற் போனலுங்கூட
அவர்களை ஸம்ரக்ஷிப்பது எனது கடமை; பிரதிஜ்ஞையும் பண்ணிக் கொடுத்துவிட்ட பின்னர் இனி நான் தவறக்கூடுமோ!” என்று
சரக்கற வார்த்தை சொல்லி அம்முனிவர்களைக் காத்தருளினவாறு கூறும் “அருமருந்தே!” என்னும் விளி.

————-

ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரை அலைக்கும் கண புரத்து என் கரு மணியே!
ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்தி மனே! தாலேலோ— 8-7–

பதவுரை

அன்று–முன்பு மஹாப்ரளயம் வந்த போது
ஆலின் இலை–ஓர் ஆலந்தளிரிலே
பாலகன் ஆய்–குழந்தை வடிவாய்க் கொண்டு
உலகம் உண்டவனே–லோகங்களை யெல்லாம் திருவயிற்றில் வைத்து நோக்கினவனே!
வாலியை கொன்று–வாலியைக் கொலை செய்து
இளைய வானரத்துக்கு–அவனது தம்பியான ஸுகரீவனுக்கு
அரசு அளித்தவனே–ராஜ்யத்தைக் கொடுத்தவனே!
காலில் மணி–கால்வாய்களிலுள்ள ரத்நங்களை
கரை அலைக்கும்–கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற
கண புரத்து–திருக் கண்ணபுரத்தில் எழுந்தளி யிருக்கிற
என் கருமணியே
ஆலி நகர்க்கு–திருவாலி திருநகரிக்கு
அதிபதியே–தலைவனே!
அயோத்திமனே–அயோத்தி நகர்க்கு அரசனே!
தாலேலோ

காலின்மணி கரையலைக்கும் = உள்ளுக்கிடக்கிற ரத்நங்களைக் காற்றாலே கரையிற்கொழிக்கு மென்னுதல்,
அன்றி,
கால் என்று கால்வாய்களைச் சொல்லிற்றாய், கால்வாய்களிலுள்ள மணிகளைக் கொண்டு வந்து கரையிலே ஏறிடுமென்னுதல்,

ஆலிநகர்க் கதிபதியே என்றவிடத்தில்
ஒரு வாலியைக் கொன்று ஒரு வாலி தன்னைத் துணையாகக் கொள்ளப் பெற்றதே என்று
சாடூக்தி அருளிச் செய்வர் பெரியவாச்சான் பிள்ளை.

———–

மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே!
அலை கடலை கடைந்து அமரர்க்கு அருளி செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிலை வலவா! சேவகனே! சீ ராமா! தாலேலோ– 8-8-

பதவுரை

மலை அதனால் அணை கட்டி–மலைகளைக் கொண்டு ஸேது பந்தனம் பண்ணி
மதிள் இலங்கை அழித்தவனே–அரணை யுடைத்தான லங்காபுரியைப் பாழ்படுத்தினவனே
அலை கடலை கடைந்து–அலை யெறிகின்ற திருப்பாற்கடலைக் கடைந்து
அமரர்க்கு–தேவர்களுக்கு
அமுது–அம்ருதத்தை
அருளிச் செய்தவனே–கொடுத்தருளினவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து–ஸகல சாஸ்த்ரங்களையும் அறிந்தவர்கள் வாழ்கிற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே
சிலைவலவா–(ஸ்ரீ சார்ங்கமென்னும்) வில்லைச் செலுத்த வல்லவனே!
சேவகனே–வீரனே!
சீராமா! தாலேலோ

சேவகனே = சேவகம் என்று பராக்கிரமத்துக்குப் பெயராதலால், மஹாவீரனே என்றபடி
சிலைவலவா! சேவகனே! என்ற சேர்த்தியால்,
சார்ங்கமும் மிகை என்னும் படியான வீரப்பாடுடையவன் என்பது போதரும்

————-

தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன் தன் குல முதலாய்!
வளைய வொரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கலரும் கண புரத்து என் கரு மணியே!
இளையவர்கட்க்கு அருள் உடையாய்! ராகவனே! தாலேலோ– 8-9-

பதவுரை

தளை அவிழும் நறு குஞ்சி-கட்டு அவிழும்படியான நறுநாற்றமுடைய மயிர்முடியை யுடையனான
தயரதன் தன்–தசரத சக்ரவாத்தியினுடைய
குலம் மதலாய்–சிறந்த திருக்குமாரனே!
ஒரு சிலை வளைய–ஒப்பற்ற வில்லானது வளைய
அதனால்–அந்த வில்லாலே
மதிள் இலங்கை அழித்தவனே
களை கழுநீர்–களையாகப் பறிக்கப்பட்ட செங்கழுநீர்கள்
மருங்கு அலரும் கணபுரத்து–சுற்றிலும் மலரப் பெற்ற திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற
என் கருமணியே
இளையவர்கட்கு–இளையவர்கள் விஷயத்திலே
அருள் உடையாய்–கருணை பொருந்தியவனே!
இராகவனே! தாலேலோ

இளையவர்கட்கு அருளுடையாய்! வாலியை வதைத்து இளையவனான ஸுக்ரீவனுக்கு அருள் புரிந்தான்;
இராவணனை வளைத்து இளையவனான விபீஷணனுக்கு அருள் புரிந்தான் என்றிறே
பெருமாளுக்கு ப்ரஸித்தி துர்ப்பலர்களாய் இளைத்திருப்பவர்கள் திறத்தில் அருள் செய்பவன் என்றுமாம்.

————–

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ— 8-10-

பதவுரை

தேவரையும்–தேவர்களையும்
அசுரரையும்–அஸுரர்களையும்
திசைகளையும்–திக்குக்களையும் (அதாவது எல்லா ப்ரதேசங்களையும்)
படைத்தவனே–ஸ்ருஷ்டித்தவனே
யாவரும் வந்து அடி வணங்க–ஸகல சேதநரும் வந்து திருவடிகளில் ஸேவிக்கும்படியாக
அரங்கம் நகர்–ஸ்ரீரங்கத்திலே
துயின்றவனே–பள்ளி கொண்டிருப்பவனே!
காவிரி நல் நதி–காவேரி யென்கிற சிறந்த நதி யானது
பாயும்–ப்ரவஹிக்கப் பெற்ற
கண புரத்து–திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளி யிருக்கிற
என் கரு மணியே
ஏ வரி வெம் சிலை வலவா–அம்புகள் தொடுக்கப்பெற்று அழகியதாய் (ச் சத்துருக்களுக்கு)க் கொடிதா யிருந்துள்ள வில்லை ஆள வல்லவனே
இராகவனே! தாலேலோ

————-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே— 8-11-

பதவுரை

என் காகுத்தன் தன் அடி மேல்–என் ஸ்வாமியான இராமபிரான் விஷயமாக
தாலேலோ என்று உரைத்த–(கௌஸல்யை) தாலாட்டிச் சொன்ன பாசுரங்களை (உட்கொண்டு)
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன்–கொலைத் தொழில் புரிகின்ற வேலாயுதத்தைச் செலுத்த
வல்லவரும் குடையை யுடையவருமான குலசேகராழ்வார்
கன்னி நல் மா மதிள் புடை சூழ் கண புரத்து–சாச்வதமான சிறந்த அழகிய மதிள்கள் நாற்புறமும் சூழப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே
சொன்ன–அருளிச் செய்த
பன்னிய நூல் தமிழ் மாலை பத்தும்–பரம்பியதாய் ஸலக்ஷணமாய்த் தமிழ்ப் பாமாலை ஆகிய இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–அதிகரிக்க வல்லவர்கள்
பாங்கு ஆய பத்தர்கள்==அமைந்த பக்திமான்களாகப் பெறுவர்

பாங்காய பக்தர்கள் = கௌஸல்யை திருத் தாயாராயிருந்து அநுபவித்தாற் போலவும்,
இவ் வாழ்வார் பக்தராயிருந்து அநுபவித்தாற் போலவும் பகவதநுபவத்தைப் பெறுவார்களென்க.

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: