ஸ்ரீ பெருமாள் திருமொழி -6–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர்
எனை பலர் உள்ள இவ் ஊரில் உன் தன்
மார்வு தழு வதற்கு ஆசை இன்மை அறிந்து அறிந்தே
உன் தன் பொய்யை கேட்டு
கூர் மழை போல் பனி கூதல் எய்தி
கூசி நடுங்கி யமுனை ஆற்றில்
வார் மணல் குன்றில் புலர நின்றேன்
வாசுதேவா ! வுன் தன வரவு பார்த்தே— 6-1-

பதவுரை

வாசுதேவா–கண்ணபிரானே!
ஏர் மலர் பூ குழல் ஆயர் மாதர்–அழகிய புஷ்பங்களை அணிந்த பரிமளம் மிக்க கூந்தலை யுடைய இடைப் பெண்கள்
எனை பலர் உள்ள–எத்தனையோ பேர்களிருக்கப் பெற்ற
இ ஊரில்–இந்தத் திருவாய்ப்பாடியில்
உன் தன் மார்வு தழுவுதற்கு–உன்னுடைய மார்வோடு அணைவதற்கு
ஆசை இன்மை அறிந்து அறிந்தே–ஆசை யில்லாமையை நன்றாக அறிந்து வைத்தும்
உன் தன்–உன்னுடைய
பொய்யை கேட்டு–பொய்யான வார்த்தைகளைக் கேட்டு
(அவற்றை மெய்யென மயங்கி)
கூர் மழை போல் பனிக்கு ஊதல் எய்தி== மிக்க மழை போல் பெய்கிற பனியாலுண்டான குளிரிலே அகப்பட்டு
கூசி–(யார் பார்த்து விடுகிறார்களோ வென்று) கூச்சமடைந்து
நடுங்கி–நடுங்கிக் கொண்டு
யமுனை ஆற்றில்–யமுநா நதியில்
வார் மணல் குன்றில்–பெரியதொரு மணற் குன்றிலே
உன் வரவு பார்த்து–உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு
புலர நின்றேன்–போது விடியுமளவும் (அங்கேயே) காத்து நின்றேன்.

கண்ணபிரான் ஒரு பெண் பிள்ளையை நோக்கி ‘நீ யமுனை யாற்றின் மணற்குன்றிலே போய் நில்லு,
நான் அங்கே வருகிறேன்’ என்று சொல்லி விட, அப்படியே அவள் அங்கே போய் விடியுமளவும் நின்று
அவன் வரக் காணாமல் வருத்தத்தொடு மீண்டு வந்து, மற்றொரு நாள் அவனைக் கண்ட போது
ப்ரணய ரோஷந் தோற்றச் சொல்லுகிற பாசுரமாயிருக்கிறது இப்பாட்டு.

அநியாயமாய் உன் பொய்யைக் கேட்டு மோசம் போனே னென்கிறான்
( வாசு தேவா !) கனவிலும் பொய் சொல்லியறியாத வஸுதேவர் வயிற்றிற் பிறந்த நீயும்
தந்தையை ஒத்திருப்பாயென்று நம்பிக் கேட்டேன் காண்! என்ற குறிப்பு –
புலர்தல் – பொழுது விடிதல்.

——–

கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி
கீழை அகத்து தயிர் கடைய
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று
கள்ள விழியை விழித்து புக்கு
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ
வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் கடைந்திட்ட வண்ணம்
தாமோதரா! மெய் அறிவன் நானே 6-2-

பதவுரை

தமோதரா–கண்ணபிரானே!
கீழை அகத்து–(என் வீட்டுக்குக்) கீழண்டை வீட்டில்
கெண்டை ஒண் கண்–கயல் போன்று அழகிய கண்களை யுடையளான
மடவாள் ஒருத்தி–ஒரு பெண்ணானவள்
தயிர் கடைய கண்டு–(தனியே) தயிர் கடையா நிற்பதைக் கண்டு
நானும்–நானும் (உன்னோடு கூட)
ஒல்லை கடைவன் என்று–சீக்கிரமாக (இத்தயிரைக்) கடைகிறேன்’ என்று (வாயாற் சொல்லி)
கள்ளம் விழியை விழித்து–திருட்டுப் பார்வை பார்த்து
புக்கு–(அவளருகே) சென்று சேர்ந்து
வண்டு அமர் பூ குழல்–வண்டுகள் படிந்த புஷ்பங்களை அணிந்த மயிர் முடியானது
தாழ்ந்து உலாவ–அவிழ்ந்து அசையும் படியாகவும்
வாள் முகம்–ஒளி பொருந்திய முகமானது
வேர்ப்ப–வேர்க்கும் படியாகவும்
செம் வாய் துடிப்ப–சிவந்த அதரமானது துடிக்கும் படியாகவும்
தண் தயிர்–குளிர்ந்த தயிரை
நீ கடைந்திட்ட வண்ணம்–நீ கடைந்த படியை
நான் மெய் அறிவன்–நான் மெய்யே அறிவேன்.

வேறொரு ஆய்ச்சியின் வார்த்தை இது.
என் அகத்திற்குக் கீழண்டை அகத்திலிருப்பாளொரு பெண் பிள்ளையானவள் தனியே யிருந்து
தயிர் கடையா நிற்கையில் அது கண்ட நீ அவளருகில் ஓடிச் சென்று புகுந்து
”அம்மா! நீ தனியாகத் தயிர் கடைந்தால் ஒரு காலும் வெண்ணெய் புறப்படமாட்டாது
நானும் ஒருதலைப் பற்றிக் கடைந்தால் தான் விரைவில் வெண்ணெய் காணும் ” என்று வாயாற் சொல்லி,
உள்ளே வேற்று நினைவு இருக்கும் படி தோன்றத் திருட்டு விழி விழித்து,
மயிர் முடி அவிழ்ந்து அலையும் படியாகவும், தாமரையிலே முத்துப் படிந்தாற் போலே ஒளி பொருந்திய முகம் வேர்க்கும் படியாகவும்,
அதரம் துடிக்கும் படியாகவும் அவளோடே கூடி நீ தயிர்கடைந்த வரலாறு எனக்குத் தெரியுமப்பா! என்கிறாள்.
‘இன்னமும் அங்கேயே தயிர் கடையப் போ; இங்கே உனக்கென்ன பணி!’ என்ற ஊடல் உள்ளுறை.

—————

கரு மலர் கூந்தல் ஒருத்தி தன்னை
கடை கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால்
மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்கு பொய் குறித்து
புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை
புணர்த்தி அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் ! உன் வளர்த்தி யோடே
வளர்கின்றதால் உன் தன் மாயை தானே –6-3–

பதவுரை

மலர் கரு கூந்தல்–புஷ்பங்களை அணிந்துள்ள கறுத்த மயிர் முடியை யுடையவளான
ஒருத்தி தன்னை–ஒரு பெண் பிள்ளையை
கடைக் கணித்து–கடைக் கண்ணால் பார்த்து விட்டு
ஆங்கே –அப்படியிருக்கச் செய்தே.
ஒருத்தி தன் பால் மனம் மருவி வைத்து–வேறொரு பெண் பிள்ளை யிடத்தில் மனதைப் பொருந்தச் செய்து,
(அவளையும் விட்டு)
மற்று ஒருத்திக்கு–வேறொரு பெண்ணிடத்தில்
உரைத்து–உனக்கு நான் அடியேன் என்று சொல்லி வைத்து
ஒரு பேதைக்கு–வேறொரு பெண்ணுக்கு
பொய் குறித்து–(ஸம்ச்லேஷத்துக்காகப்) பொய்யாகவே (ஒரு ஏகாந்தஸ்தலத்தைக்) குறிப்பிட்டு வைத்து,
ஆக இத்தனை பேரையும் ஏமாத்தி விட்டு)
புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை–கடை குழன்று சுருண்ட கூந்தலை யுடையவளான ஒரு இளம் பெண்ணோடு
புணர்தி–கலவி செய்யா நின்றாய்;
அவளுக்கும்–அந்தப் பெண்ணுக்கும்
மெய்யன் அல்லை–பொய்யனாயிரா நின்றாய்;
மருது இறுத்தாய்–இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளினவனே!
உன் வளர்த்தியோடே–நீ வளர்வதோடு கூடவே
உன் தன் மாயை–உன்னுடைய கள்ளங் கவடுகளும்
வளர்கின்றது–வளர்ந்து வாரா நின்றன;
ஆல்–அந்தோ!.

இங்கே “மருதிறுத்தாய்! ” என விளித்ததனால், நீ பருவம் நிரம்புவதற்கு முன்னமே
தீண்டினாரைக் கொன்றவனாதலால் உன்னைத் தீண்ட நான் அஞ்சா நின்றேன் காண்
என்று குறிப்பிட்டவாறு

———————

தாய் முலை பாலில் அமுது இருக்க
தவழ்ந்து தளர் நடை இட்டு சென்று
பேய் முலை வாய் வைத்து நஞ்சை வுண்டு
பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
ஆய மிகு காதலோடு யான் இருப்ப
யான் விட வந்த என் தூதி யோடே
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்
அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே– 6-4-

தாய் முலையில்–தாயாகிய யசோதைப் பிராட்டியினுடைய முலைகளில்
பால் அமுது இருக்க–போக்யமான பால் இருக்கச் செய்தேயும் (அதனை விரும்பாமல்)
தவழ்ந்து–தவழ்ந்து கொண்டு
தளர் நடை இட்டு சென்று–தட்டுத் தடுமாறி நடந்து சென்று
பேய் முலை வாய் வைத்து–பூதனையினுடைய முலையிலே வாயை வைத்து
நஞ்சை உண்டு–(அம்முலை மீது தடவிக் கிடந்த) விஷத்தை உறிஞ்சி அமுது செய்து
பித்தன் என்று–(இப்படி செய்தது காரணமாக) ‘பைத்தியக்காரன்’ என்று
பிறர் ஏச நின்றாய்–அயலாரெல்லாரும் பரிஹஸிக்கும்படி நின்ற பிரானே!
யான்–நான்
ஆய் மிகு காதலொடு இருப்ப நீ–மிகவும் அதிகமான ஆசையோடு எதிர்பார்த்திருக்கையில் , நீ
யான் விட வந்த என் தூதியோடே–என்னால் தூதனுப்பப்பட்டு (உன்னிடம்) வந்த என் வேலைக்காரியோடே
மிகு போகத்தை–நல்ல போக ரஸங்களை
நன்கு உகந்தாய்–நன்றாக அனுபவித்தாய்
அதுவும்–அந்தச் செய்கையும்
உன் கோரம்புக்கு–உனது தீம்புக்கு
ஏற்கும் அன்றே–தகுந்திருக்குமாய்த்து

————

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு
வீங்கு இருள் வாய் என் தன் வீதி யூடே
பொன் ஒத்த வாடைக்குக் கூடல் இட்டு
போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண் உற்றவளை நீ கண்ணால் இட்டு
கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?
இன்னம் அங்கே நட நம்பி ! நீயே— 6-5-

பதவுரை

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு–மின்னல் போன்று ஸூக்ஷ்மமான இடையையுடைய ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டு
வீங்கு இருள்வாய்–நிபிடமான (மிக்க) இருள் வேளையிலே
பொன் ஒத்த ஆடை–பீதாம்பரத்தாலே
குக்கூடல் இட்டு–முட்டாக்கிட்டுக் கொண்டு
என்தன் வீதி ஊடே–என் வீதி வழியே
போகின்ற போது–(அவளும் நீயுமாகப்) போகும் போது
நான் கண்டு நின்றேன்–நான் பார்த்துக் கொண்டிருந்தேன்:
(அன்றியும்:) நீ
கண்ணுற்றவளை–கண்ணில் தென்பட்ட (வேறொருத்தியை)
கண்ணால் இட்டு–(உனக்கே அற்றுத் தீரும்படி ) கடாக்ஷித்து
கை விளிக்கின்றதும்–(இன்னவிடத்தே வாவென்று) கையாலே அழைத்து ஸம்ஜ்ஞை பண்ணினதையும்
கண்டே நின்றேன்–பார்த்துக் கொண்டு தானிருந்தேன்;
அவளை விட்டு–அந்தப் பெண் மணியை விட்டு
இங்கு–என்னிடத்திற்கு
என்னுக்கு வந்தாய்–ஏதுக்காக வந்தாய்!
நம்பி–ஸ்வாமிந்!
இன்னம் அங்கே நட–இனி மேலும் நீ அவர்களிடத்திற்கே நடப்பாயாக.

வேறொருத்தியின் பாசுரம் இது. நள்ளிருளில் ஒருவர்க்குந் தெரியாமல் போக வேணுமென்று போகிறவன்
இருளன்ன மா மேனியைத் திறந்து கொண்டே போகலாம்;
அல்லது கறுத்ததோர் ஆடையைப் போர்த்துக் கொண்டு போகலாம்.
நீயோ இருளை அகற்றிப் பளபளவென்று ப்ராகாசிக்கும் படியான பீதாம்பரத்தை முட்டாக்கிட்டுக் கொண்டு போனாய்;
போவது தானும் வேறு வழியாயோ! நான் கண்டு வயிறெரிய வேணுமென்றே என் தெருவழியே போனாய்,
என்ற கருத்துக்களை விரித்துக் கொள்க ( குக்கூடல் – முட்டாக்கு )

———–

மற்பொரு தோள் உடை வாசுதேவா !
வல்வினையேன் துயில் கொண்டவாறே
இற்றை இரவிடை ஏமத்து என்னை
இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய்
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும்
அரிவையரோடும் அணைந்து வந்தாய்
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்?
எம்பெருமான்! நீ எழுந்து அருளே– 6-6–

பதவுரை

மல் பொரு தோள் உடை வாசுதேவா–மல்லரோடு போர் செய்த தோள்களை யுடைய, கண்ணபிரானே!
வல் வினையேன்–மஹாபாவியான நான்
துயில் கொண்டவாறே–தூங்குவதற்கு ஆரம்பித்தவுடனே
இற்றை இரவு இடை ஏமத்து–அன்றிரவு நடுச் சாமத்திலே
இன் அணைமேல்–இனிய படுக்கையிலே
என்னை இட்டு–என்னைப் படுக்க விட்டு
நீ அகன்று போய்–நீ விலகிப் போய்
அற்றை இரவும் (அகன்று போன)–அன்றிரவும்
ஓர் பிற்றை நாளும்–அதற்கு மறுநாளும்
அரிவையரோடும்–(எல்லாப் ) பெண்களோடும்
அணைந்து வந்தாய்–கலவி செய்து வந்தாய்;
நீ–இப்படிப்பட்ட நீ,
என் மருங்கில் எற்றுக்கு வந்தாய்–என்னருகில் ஏதுக்காக வந்தாய்!
எம்பெருமான்–என் நாயகனே!
நீ எழுந்தருள்–நீ (அவர்களிடமே) போகக் கடவை.

வேறொரு பெண்மணியின் பேச்சு இது. மல்லர்களோடு யுத்தஞ் செய்யக் கற்றாயே யன்றி
என்னோடு ச்ருங்கார ரஸாநுபவம் பண்ணக் கற்றிலை காண்! என்ற உபாலம்பம் தோன்ற
” மற்றொரு தோளுடை வாசுதேவா!” என விளிக்கின்றனள்.
வல்வினையேன் – நீ என்னை ஒருத்தியையே விரும்பி மற்றையோரைக் கண்ணெடுத்துப் பாராமலிருப்பதற் குறுப்பான
பாக்கியமற்ற நான், என்பது கருத்து.

இரண்டாமடியில், ” இற்றை யிரவிடை ” என்றே பாடம் நிகழினும்
” அற்றை யிரவிடை ” என்ற பாடமே வியாக்கியானத்திற்கும் பொருட் சேர்த்திக்கும் தகும் என்பர் பெரியோர்.

————

பைய அரவின் அணை பள்ளியினாய் !
பண்டேயோம் அல்லோம் நாம் நீ வுகக்கும்
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம்
வைகி எம் சேரி வர ஒழி நீ
செய்ய உடையும் திரு முகமும்
செங்கனி வாயும் குழலும் கண்டு
பொய் ஒரு நாள் பட்டதே அமையும்
புள்ளுவம் பேசாதே போகு நம்பி !—- 6-7–

பதவுரை

பை அரவு இன் அணை பள்ளியினாய்–பாடங்களையுடைய இனிய சேஷ சயனத்திலே பள்ளி கொள்பவனே!
நம்பி–பூர்ணனானவனே!
நாம்–நாங்கள்
பண்டையோம் அல்லோம்–உன் மாயைப் பேச்சு வலையில் அகப்படுகைக்கு பழைய படி ஏமாந்தவர்களல்ல
நீ உகக்கும்–நீ விரும்பத் தக்கவர்களாய்
மை–மையணிந்து
அரி ஒண்–மான் போலழகிய
கண்ணினாரும் அல்லோம்–கண் படைத்தவர்களான பெண்களுமல்லோம்;
வைகி–கால விளம்பஞ் செய்து
எம் சேரி–எமது அகத்துக்கு
வரவு ஒழி நீ–வருவதை இனி நீ விட்டிடு;
செய்ய உடையும்–அழகிய பீதாம்பரத்தையும்
திரு முகமும்–திரு முக மண்டலத்தையும்
செம் கனி வாயும்–சிவந்த கோவைக்கனி போன்ற அதரத்தையும்
குழலும்–கூந்தல் முடியையும்
கண்டு–பார்த்து (அவற்றில் ஈடுபட்டு)
பொய்–உன் பொய் வார்த்தைகளில்
ஒரு நாள் பட்டதே அமையும்–ஒரு நாள் பட்டபாடு போதுமே;
புள்ளுவம்–க்ருத்ரிமமான வார்த்தைகளை
பேசாதே–(மறுபடியும்) சொல்லாமல்
போகு–(உன் தேவிமார்களிடத்தே) போய்ச் சேர்.

வைகி என்றதன் கருத்து யாதெனில், ‘உங்களிருப்பிடத்திற்கு மற்றும் எத்தனையோ பேர் வருகிறாப்போலே
நானுமொருவன் வந்தாலென்ன? என்னையேன் போகச் சொல்லுகிறாய்? என்று கண்ணபிரான் கேட்க:
எல்லாரும் வரும் போதில் உன்னை நான் வர வேண்டாவென்று சொல்லவில்லை;
பிறர்க்கு அதிசங்கை உண்டாம்படி அகாலத்திலே வருவதைத் தான் மறுக்கிறேன்” என்கிறாள் என்க.

பிறகு கண்ணபிரான் ” நங்காய்! இதற்கு முன் சொல்லாத வார்த்தைகளை இன்று புதிதாகச் சொல்லுகிறாயே!
என்னை வேற்று மனிசனாக நினைத்து விட்டாயே!” என்ன,
உன் கள்ளச் செயல்களையும் க்ருத்ரிமபாஷணங்களையும் முன்பு நம்பிப் பட்டது போதும்;
இனி வேண்டா என்கிறாள்.
புள்ளுவம் – வஞ்சகம்.

————-

என்னை வருக என குறித்திட்டு
இன மலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளை புணர புக்கு
மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன் நிற ஆடையை கையில் தாங்கி
பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல்
என் சினம் தீர்வன் நானே– 6-8-

பதவுரை

என்னை–என்னை
வருக என–(இன்னவிடத்திற்கு) வாவென்று
குறித்திட்டு–ஸந்கேதம் பண்ணி வைத்து விட்டு
இனம் மலர் முல்லையின் பந்தர் நீழல்–நிறைந்த மலர்களை யுடைய முல்லைப் பந்தலின் நிழலிலே
மன்னியவளை–(வெகு காலமாய்ப்) பதுங்கி நின்ற ஒருத்தியை
புணர புக்கு–ஸம்ச்லேஷிக்கப் போய்
மற்று என்னை கண்டு-பிறகு என்னைப் பார்த்து
உழறா–கலங்கி
நெகிழ்ந்தாய்–அப்பாலே நழுவினாய்;
பொன் நிறம் ஆடையை–பீதாம்பரத்தை
கையில் தாங்கி–கையிலே தாங்கிக் கொண்டு
பொய்–பொய்யாக
அச்சம் காட்டி–நீ எனக்கு அஞ்சினமாக நான் பாவிக்கும்படி செய்து கொண்டு
நீ போதி ஏலும்–நீ (என் கைக்கு அகப்படாமல்) ஓடிப் போன போதிலும்
இன்னம்–இனி
ஈங்கு–இங்கே
என் கை அகத்து–என்னிடத்திற்கு
ஒரு நாள் வருதிஏல்–ஒரு நாளாகிலும் வருவாயாகில்
( அப்போது)
நான் என் சினம் தீர்வன்–நான் என் கோபத்தை தீர்த்துக் கொள்வேன்.

[என் சினம் தீர்வன் நானே] என்கிற விடத்தைக் கோயிலில் திருவத்யயநோத்ஸவதத்தில்
”உய்ந்த பிள்ளை” என்பாரொரு அரையர் அபிநயிக்கும்போது, கையாலே அடிப்பதும் காலாலே துவைப்பதுமாய் அபிநயித்தார்.
அதாவது, – மறுபடியும் நீ என் கையில் அகப்படும்போது உன்னை நான் கையாலடித்தும் காலால் துகைத்தும்
என் கோபத்தைத் தணித்துக் கொள்வேன் என்பதாகக் கருத்தை விரித்தார்.
அப்போது கோஷ்டியில் எழுந்தருளியிருந்த எம்பார் இங்ஙனே அரையர்காட்டிய அபிநயத்தைக் கடாக்ஷித்து
அரையர்க்கு ராஸிக்யம் போராதென்று திருவுள்ளம் பற்றி,
” கெடுவாய்! அப்படி அவள் செய்தாளாகில் என்றிருக்கிற கண்ணனுக்கு அது வருத்தமோ!
வேப்பிலையுருண்டையோ? இது அவனுக்கு அபிமத ஸித்தமாகுமே அன்றோ ஆகையால் அதுவன்று கருத்து;
முகங்கொடுக்காமல் முகத்தை மாறவைத்து என் கோபத்தைத் தணித்துக் கொள்வேன் என்னுங் கருத்துத் தோன்ற,
கையிட்டு முகத்தை மறைத்துத் திரியவைத் தருளிக் காட்ட வேணுமென்று தாம் அவ்வாறாக அபிநயித்துக் காட்டினார் என்று ப்ரஸித்தம்.

————

மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க
மயில் தழை பீலி சூடி
பொங்கிள வாடை அரையில் சாத்தி
பூம் கொத்து காதில் புணர பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு
குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத
உன் குழலின் இன் இசை போதராதே– 6-9-

பதவுரை

மங்கலம்–மங்களகரமாய்
நல்–விலகூஷணமான
வனமாலை–வனமாலையானது
மார்பில்–மார்விலே
இலங்க–பிரகாசிக்க
மயில் தழைப்பீலி–மயிலிறகுகளே
சூடி–சூடிக் கொண்டும்
பொங்கு இள ஆடை–பளபளவென்ற மெல்லிய ஆடையை
அரையில் சாத்தி–அரையிலே சாத்திக் கொண்டும்
பூ கொத்து–பூங்கொத்துக்களை
காதில்–காதிலே
புணரப் பெய்து–மிகவும் பொருந்த அணிந்து கொண்டும்
கொங்கு நறு குழலார்களோடு–தேன் மணம் கமழ்கின்ற கூந்தலை யுடைய பெண்களோடு
குழைந்து–ஸம்ச்லெஷித்து (அத்தாலுண்டான ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாக)
குழல்–புல்லாங் குழலை
இனிது ஊதி வந்தாய்–போக்யமாக ஊதிக் கொண்டு வந்தாய்;
ஒரு நாள்–ஒரு நாளாகிலும்
எங்களுக்கே–எங்களுக்காக
வந்து ஊத–வந்து ஊதும்படி
உன் குழலின் இசை–உனது குழலின் இசையானது
போதராது–வர மாட்டாது காண்.

————-

அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை
நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினில் ஏமத்தூடி
எள்கி வுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான்
குலசேகரன் இன் இசையில் மேவி
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே–6-10-

பதவுரை

இள ஆய்ச்சிமார்கள்–இளமை தங்கிய இடைப் பெண்கள்
அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து–தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்குக் கொழுநனான கண்ண பிரானை ஆசைப்பட்டு,
எல்லி ஏமப் பொழுதினில்–ராத்ரியின் நடுச் சாமத்திலே
ஊடி–ப்ரணய கலஹம் பண்ணி
எள்கி–ஈடுபட்டு
உரைத்த–சொன்ன
உரை அதனை–பாசுரங்களை (உட்கொண்டு)
கொல்லி நகர்க்கு இறை–கொல்லி என்னும் நகருக்குத் தலைவரும்
கூடல் கோமான்–மதுரைக்கு அரசருமான
குல சேகரன்–குலசேராழ்வார்
இன் இசையில் மேவி–இனிய பண்ணிலே பொருந்த
சொல்லிய–அருளிச் செய்த
இன் தமிழ்–பரம போக்யமான தமிழிலாகிய
மாலை–மாலாரூபமான
பத்தும்–இப் பத்துப் பாட்டையும்
சொல்ல வல்லார்க்கு-ஒத வல்லவர்களுக்கு
துன்பம் இல்லை–ஸம்ஸார துக்கம் அணுகாது.

அடிவரவு
ஏர் கெண்டை கரு தாய் மின் மற்பொரு பையரவின் என்னை மங்கல அல்லி ஆலை.

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: