ஸ்ரீமந் நாராயணனை யன்றித் தமக்கு வேறு சரணமில்லாமையை
அநேக த்ருஷ்டாந்த பூர்வகமாகத் திருவித்துவக் கோட்டம்மான் முன்னிலையில்
விண்ணப்பஞ் செய்கிறார்.
——–
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-
பதவுரை
விரை குழுவும்–பரிமளம் விஞ்சிய
மலர்–புஷ்பங்களை யுடைய
பொழில் சூழ்–சோலைகளாலே சூழப்பட்ட
வித்துவக்கோடு– திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கிற
அம்மானே–ஸ்வாமியே!
தரு துயரம்–(நீயே எனக்குத்) தந்த இத் துன்பத்தை
தடாய் ஏல்–நீயே களைந்திடா விட்டாலும்
உன் சரண் அல்லால் சரண் இல்லை–உனது திருவடிகளை யன்றி (எனக்கு) வேறு புகலில்லை;
ஈன்ற தாய்–பெற்ற தாயானவள்
அரி சினத்தால்–மிக்க கோபங்கொண்டு அதனால்
அகற்றிடினும்–(தனது குழந்தையை) வெறுத்துத் தள்ளினாலும்
மற்று–பின்பும்
அவள் தன் அருள் ஏ நினைந்து அழும்–அத்தாயினுடைய கருணையையே கருதி அழுகின்ற
குழவி யதுவே–இளங்குழந்தையையே
போன்று இருந்தேன்–ஒத்திரா நின்றேன்.
வித்துவக்கோடு என்பதற்கு – வித்வான்கள் கூடிய இடம் என்று காரணப் பொருள் கூறுவர்.
பிள்ளைப் பெருமாளையங்கார் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில்
“ திருவிற்றுவக்கோடு சேர்ந்தார் பிறவி கருவிற்றுவக் கோடுங்காண் “ என்றிருப்பதனால்,
வித்துவக் கோடு அல்ல; விற்றுவக்கோடு என்பர் சிலர்.
அவ்விடத்திலும் “ திருவித்துவக்கோடு “ என்றே பாடமென்பர் பெரியோர்:
இவ்வளவால் எதுகையின்பம் குன்றாது இத்திருமொழியின் ஈற்றுப் பாசுரத்திலும் இங்ஙனமே பாடமாம்.
இத்திவ்யதேசம் மலைநாட்டில் “ திருமிற்றக் கோடு “ என வழங்கப் படுகின்றது.
———
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2-
பதவுரை
விண் தோய் மதில்–ஆகாயத்தை அளாவிய மதில்கள்
புடை சூழ்–எப்புறத்தும் சூழப் பெற்ற
வித்துவக்கோடு அம்மா–திருவித்துவக் கோட்டில் எழுந்தருவியிருக்கிற ஸ்வாமிந்!
காதலன் தான்–கணவனானவன்
கண்டார் இதழ்வனவே செய்திடினும்–பார்ப்பவர்களனைவரும் இகழத் தக்க செயல்களையே செய்தாலும்
கொண்டானை அல்லால் அறியா–(தன்னை) மணஞ் செய்து கொண்டவனான அக் கணவனையே யன்றி
வேறொரு புருஷனை நினைப்பதுஞ் செய்யாத
குலம் மகள் போல்–உயர்நத குலத்துப் பிறந்த கற்புடைய மகள் போல்
நீ கொண்டு ஆளாய் ஆகிலும்–என்னை அடிமை கொண்டவனான நீ குறையும் தலைக் கட்டாமல் உபேக்ஷித்தாயாகிலும்
உன் குரை கழலே–ஒலிக்கின்ற வீரக்கழலை யுடைய உனது திருவடிகளையே
கூறுவன்–சரணமாகக் குறிக் கொள்வேன்
————–
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவ கோட்டு அம்மா ! என்
பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன்
தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே— 5-3-
பதவுரை
மீன் நோக்கும்–மீன்களெல்லாம் (தாம் வஸிப்பதற்கு மிகவும் தகுதியான இடமென்று)
ஆசையோடு பார்க்கிற (நீர் வளம் மிக்க)
நீள் வழல் சூழ்–விசாலமான கழனிகள் சூழ்ந்த
வித்துவக்கோடு–திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியுள்ள
அம்மா–பெருமானே!
என் பால்–அடியேன் மீது
நோக்காய் ஆகிலும்–நீ அருள் நோக்கம் செய்யாதிருந்தாலும்
உன் பற்று அல்லால் பற்று இலேன்–உன்னைச் சரணமாகப் பற்றுதலை விட்டு வேறொருவரைச் சரணம் புக மாட்டேன்;
தார் வேந்தன்–(குடிகளைக் காப்பதற்கென்று) மாலை யணிந்துள்ள அரசன்
தான் நோக்காது–(அதற்கு ஏற்றபடி) தான் கவனித்துப் பாதுகாவாமல்
எத் துயரம் செய்திடினும்–எப்படிப்பட்ட துன்பங்களைச் செய்தாலும்
கோல் நோக்கி வாழும்–அவனுடைய செங்கோலையே எதிர் பார்த்து வாழ்கிற
குடி போன்று இருந்தேன்–ஒத்திருக்கின்றேன்
————
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே— 5-4-
பதவுரை
வித்துவக்கோடு அம்மா!;
வாளால் அறுத்து –(வைத்தியன்) கத்தியைக் கொண்டு அறுத்தலும்,
(ஊசியைக் காய்ச்சிச்)
சுடினும்–சூடு போடுதலுஞ் செய்தாலும்
மருத்துவன் பால் மாளாத காதல்–அவ்வைத்தியனிடத்து நீங்காத அன்புடைய
நோயாளன் போல்–நோயாளியைப் போல
மாயத்தால்–(உன்) மாயையினால்
நீ மீளா துயர் தரினும்–நீ நீங்காத துன்பத்தை (எனக்கு) விளைத்தாலும்
அடியேன்–உனது அடியவனான நான்
ஆள் ஆக–அவ்வடிமை ஸித்திப்பதற்காக
உனது அருளே பார்ப்பன்–உன்னுடைய கருணையையே நோக்கி யிரா நின்றேன்
நீயே எனக்கு ஸர்வ வித ரக்ஷகன் என்று நான் துணிந்த பின்பு, நீ எனக்கு எவ்வளவு துன்பங்களை
இவ் விபூதியிலே தந்தருளினாலும் அவற்றையெல்லாம் நான் நன்மையாகவே கருதி
மிக்க நன்றி யறிவு பாராட்டி மேன்மேலும் அன்பு செய்து வருவேனே யன்றி உன்னைச் சிறிதும்
குறை கூற மாட்டேன் என்பதை உபமாநத்தால் விளக்கினார்.
————-
வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே— 5-5-
பதவுரை
வெம் கண்–பயங்கரமான கண்களை யுடைய
திண் களிறு–வலிய (குவலயாபீடமென்னும்) யானையை
அடர்த்தாய்–கொன்றவனே!
வித்துவக்கோடு அம்மானே!;
உன் இணை அடியே அடையல் அல்லால்–உனது உபய பாதங்களையே (நான்) சரணமடைவ தல்லாமல்
எங்கு போய் உய்கேன்–வேறு யாரிடத்திற் போய் உஜ்ஜிவிப்பேன்?
எறி–அலை யெறிகிற
கடல் வாய்–கடலினிடையிலே
எங்கும் போய் கரை காணாது–நான்கு திக்கிலும் போய்ப் பார்த்து எங்கும் கரையைக் காணாமல்
மீண்டு–திரும்பி வந்து
ஏயும்–(தான் முன்பு) பொருந்திய
வங்கத்தின்–மரக் கலத்தினுடைய
கூம்பு ஏறும்–பாய் மரத்தின் மீது சேர்கிற
மா பறவை போன்றேன்–பெரியதொரு பக்ஷியை ஒத்திரா நின்றேன்
———
செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டா விடினும் வித்து கோட்டு அம்மா ! உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே—5-6–
பதவுரை
வித்துவக்கோடு அம்மா!;
செம் தழலே வந்து–செந்நிறமுடைய நெருப்பு (தானாக) அருகில் வந்து
அழலை செய்திடினும்–வெப்பத்தைச் செய்தாலும்
செம் கமலம் அந்தரம் சேர் வெம்–செந்தாமரைகள் வானத்தில் தோன்றுகிற வெவ்விய
கதிரோற்கு அல்லால்–கிரணங்களை யுடைய ஸூர்யனுக்கு மலருமே யல்லது.
அலரா–(நெருப்புக்கு) மலர மாட்டா;
வெம் துயர்–அநுபவித்தே தீர வேண்டியவையான கொடிய (என்) பாவங்களை
வீட்டா விடினும்–தீர்த்தருளா தொழிந்தாலும்
உன் அந்தம் இல் சீர்க்கு அல்லால்–உனது எல்லையில்லாத உத்தம குணங்களுக்கே யல்லாமல்
அகம் குழைய மாட்டேன்–(வேறொன்றுக்கு நான்) நெஞ்சுருக மாட்டேன்.
————
எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே —5-7-
பதவுரை
வித்துவக்கோடு அம்மா!;
வான்–மேகமானது
எத்தனையும் வறந்த காலத்தும்–எவ்வளவு காலம் மழை பெய்யாமல் உபேக்ஷித்தாலும்
பைங் கூழ்கள்–பசுமை தங்கிய பயிர்கள்
மைத்து எழுந்த மாமுகிலே பார்த்து இருக்கும்–கருநிறங் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களையே எதிர்பார்த்திருக்கும்;
அவை போல்–அப் பயிர்கள் போல.
மெய் துயர் வீட்டா விடினும்–தவறாது அனுபவிக்கப்படுகிற என் துன்பங்களை நீ போக்காமல் உபேக்ஷித்தாலும்
அடியேன்–உனக்கு தாஸனாகிய நான்
என் சித்தம் உன் பாலே மிக வைப்பன்–என் மநஸ்ஸை உன்னிடத்திலேயே மிகவும் செலுத்துவேன்.
———–
தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவ கோட்டு அம்மா ! உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே ! —5-8-
பதவுரை
மிக்கு இலங்கு–மிகுதியாய் விளங்குகிற
முகில்–காளமேகம் போன்ற
நிறத்தாய்–கரிய திருநிற முடையவனே!
வித்துவக்கோடு அம்மா!
புண்ணியனே–புண்ய ஸ்வரூபியா யுள்ளவனே!
தொக்கு இலங்குயாறு எல்லாம்–(ஜல ப்ரவாஹம்) திரண்டு விளங்குகிற நதிகளெல்லாம்
பரந்து ஓடி–(கண்டவிடமெங்கும்) பரவியோடி (முடிவில்)
தொடு கடலே புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத–ஆழ்ந்த கடலிலே சென்று சேர்ந்தல்லது மற்றோரிடத்தே புகுந்து நிற்க மாட்டா;
அவை போல்–அவ்வாறுகள் போல,
புக்கு இலங்கு–(என் நெஞ்சினுள்ளே) புகுந்து விளங்குகிற
சீர் அல்லால்–(உனது) கல்யாண குணங்கள் தவிர (மற்றோரிடத்தில்)
புக்கிலன்–ஆழ்ந்திடேன்.
————–
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவ கோட்டு அம்மா !
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே–5-9-
பதவுரை
மின்னையே சேர் திகிரி==மிக்க ஒளியையே கொண்டுள்ள சக்கராயுதத்தை யுடைய
வித்துவக்கோடு அம்மா!-;
நின்னையே வேண்டி–உன்னையே விரும்பி
நீள் செல்வம் வேண்டா தான் தன்னையே–மிக்க ஸம்பத்தை விரும்பாதவனையே
தான் வேண்டும்–தானாகவே வந்து சேர விரும்புகிற
செல்வம் போல்–அந்த ஐச்வரியம் போல,
மாயத்தால்–(உன்) மாயையினால்
(நீ என்னை உபேக்ஷித்தாயாகிலும்)
அடியேன்–உனது அடியவனான நான்
நின்னையே வேண்டி நிற்பன்–உன்னையே அடைய விரும்பி நிற்பேன்.
யாவனொருவன் எம்பெருமானிடத்திலே அன்பைச் செலுத்தி அதனால் ஐச்வர்யத்தை உபேக்ஷிக்கிறானோ,
அவன் உபேக்ஷிக்க உபேக்ஷிக்க அவனது நல்வினைப் பயனால் அச்செல்வம் அவனை விடாது விரும்பி
வலியத் தொடர்ந்து சேர்தல் இயல்பு.
(அபேக்ஷிப்பவனுக்குக் கிடையாதொழிதலும், அபேக்ஷியாதவனுக்கு வலிவிலே கிடைத்தலும்
பகவத் ஸங்கல்ப மஹிமை யென்பது இங்கு அறியத்தக்கது).
அது போலவே, நீ உன் உடைமையாகிய என்னை உபேக்ஷிக்க உபேக்ஷிக்க நான் உன்னையே விடாது நிற்பேன் என்றவாறு.
அடியார்களுக்கு நேரும் துன்பங்களைப் போக்கி எங்களைக் காப்பதற்காகவே கையுந் திருவாழியுமாக
இங்கே வந்துள்ளாய் நீ என்பது மூன்றாமடியின் உட்கருத்து.
இப்பாட்டு விஷயத்தில் வேதாந்த தேசிகனுடைய கருத்து –
செல்வத்தை வெறுத்து எம்பெருமானையே வேண்டி நிற்பவனுக்கு அச்செல்வம் தானே வந்து சேர்தல் பொருந்தாதாதலால்,
இப்பாட்டில் அங்ஙனம் கூறியுள்ளதை, முன்பு நெடுங்காலம் ஐச்வர்யத்துக்காக உபாஸகை பண்ணி
அது பெறாமல் அதனை வெறுத்து எம்பெருமான் பக்கல் அன்பு பூண்ட
ஒரு அதிகாரி விஷயமாகக் கொள்ளுதல் நலம் என்பதாம்.
செல்வம் என்பதற்கு ”மோக்ஷலக்ஷ்மி ” என்றுரைப்பாரும் உளர்.
——————–
வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல் தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே– 5-10-
பதவுரை
‘வித்துவக்கோடு அம்மா!
நீ வேண்டாயே ஆயிடினும்–நீ (என்னை) உபேக்ஷித்தாயாகிலும்
மற்று ஆரும் பற்றிலேன் என்று–வேறு எவரையும் நான் சரணடைய மாட்டேன்’
என்று–என்று (அத்யவஸாயத்தை வெளியிட்டு)
அவனை தாள் நயந்து–அவ்வெம்பெருமானது திருவடிகளிலேயே ஆசை கொண்டு
கொற்றம் வேல் தானை குலசேகரன் சொன்ன–வெற்றியைத் தரும் வேலாயுதத்தையும்
சேனையையுமுடையவரான குலசேகரர் அருளிச் செய்த
நல் தமிழ் பத்தும்–நல்ல தமிழ்ப்பாடல்கள் பத்தையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
நரகம் நண்ணார்–(கொடிய பாவங்கள் செய்திருந்தாலும்) நரகத்திற் சேர மாட்டார்கள்.
——————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர் ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply