இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–
கேணியிலும்-கிணறுகளிலும்
பட்டத்திலும்-பெருக்குக் காலத்தில் நீர் ஏறிப் பாயும் பட்டக் கால்களிலும்
பைந் தடத்திலும் -பசுமையான தடாகங்களிலும்
ஓடைப் பழனத்திலும்-நீரோடை சூழ்ந்த வயல்களிலும்
குட்டத்திலும் -ஆழமான குட்டை களிலும்
கயல் பாய் -நீர் வளத்தால் கயல் மீன்கள் பாய்ந்து குதிக்கப் பெற்ற
குரு கூரர் குணங்களுக்கே. -நம்மாழ்வாருடைய கல்யாண குணங்களுக்காகவே
இருப்பின் கிட்டத்திலும் வலியாரும்-இரும்பு உருக்கிய உருக்குக் கிட்டத்தை விட வலிய கல் நெஞ்சு உடையவரும்
இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் உருகுவர் -தம் தம்முடைய மனம் புத்தி சித்தம் என்னும்
அகக் கரணங்களில் கரைவார்கள் –
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
இரும்பாகில் அக்னியாலே நிமிர்த்துக் கொள்ளலாம்
இது ஒருபடியாலும் திருத்த ஒண்ணாது என்கை
கடின ஸ்தலத்தில் வர்ஷித்தால் காடின்யம் அடங்க நெகிழிச்சிக்கு -உறுப்பு ஆமாப் போலே
விஷயாந்தரத்தாலே மனஸூ அதி கடினமானாலும் சிதிலமாம்படி வயிர உருக்காய் இறே
பகவத் ப்ரபாவம் இருப்பது –
ஆழ்வாரது திரு அருள் பெருக்கால் -இடையறாத நீர்ப்பெருக்கால் மேடு பள்ளம் வாசி இன்றி
எங்கும் ஒக்கக் கயல் பாய்தல் போலே
வலிய நெஞ்சினாரும் மெல் நெஞ்சினாரும் வாசி அற உருகுவார்களே –
———
குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–
பெருந் தண் வகுள மணம் வேண்டும் –மகிழ மலர்களின் வாசனை -அனைவராலும் விரும்பப்படுகிற
தண் தெரியல் பெருமான் செய்யுள் –ஆழ்வாரது திவ்ய பிரபங்தங்கள் ஆகிய
மா மணியின் கணம் வேண்டும் என்றறிவாரைக் -ரத்னக் கூட்டங்களை தமக்கு இன்றியமையாதவை என்று அறிந்து ஓதி உணர்பவர்களை
கண்டால் சென்று கைத் தொழுமே–நீங்கள் எங்கே கண்டாலும்-உடனே அருகில் சென்று கை கூப்பி வணங்குங்கோள்
தொழும் -பன்மை ஏவல்
குணம் வேண்டுமே -நல்ல குணங்கள் வேண்டுமோ
நற் குலம் வேண்டுமே -நல்ல குலங்களில் பிறக்க வேண்டுமோ
யக்குலத் தொழுக் காம் பிணம் வேண்டுமே -அதுக்குத் தக்க ஆசாரமாகிய பிணம் வேண்டுமோ
செல்வப் பேய் வேண்டுமே -செல்வப் பொருளாகிய பேய் வேண்டுமோ
ஒன்றுமே வேண்டாம் என்றவாறு
அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இப் பத்து அறிந்தார் தொண்டர் வாழ்வது சூழ் பொன் விசும்பே -என்றவாறு
———-
தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென்னாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே–83-
தொழும் பாக்கிய -உயிரைத் தனக்கு அடிமையாகச் செய்த
வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று -அநாதியான -பிறவிச் சூழல் நடுவில் இருந்து
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் –மீண்டு உய்யும் படியான அத்ருஷ்டத்தை யுடையதாம் படி செய்யவும்
தென்னிய லோடிசைந்து கெழும் பாக்–அழகிய இலக்கணங்களோடே கூடிய திவ்யப் ப்ரபந்தங்களிலே
கெழுமிய கீர்த்தியை -எம்பெருமானுடைய புகழை
நாளும் கிளத்தி யென் நாத் தழும்பாக் கவும் -நாளும் சொல்லிச் சொல்லி நாவில் தழும்பு ஏறும்படி செய்யவும்
வல்ல கோ சட கோபன் தயா பரனே-திறமை கொண்ட ஸ்வாமி -கருணையே வடிவானவர்
தயா பரன் -பரம தயாளு
முக்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரம் என்றாரே முன்னமே
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத்துற்று
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றி
—————-
நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்
பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே.–84-
நங்காய்
பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் –யாரேனும் தலைவனது ஊர்ப் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே
நின் மகள்
கண் பனிக்கும்-கண்ணீர் பெருக்குகின்றாள்
கரம் தலைக் கொள்ளும் -கைகளைக் கூப்பித் தொழுகிறாள்
உள்ளும் உருகும் -மனமும் கரைந்து நீராகுகிறாள்
கவியால் உலகைப் புரந்து –திவ்ய ப்ரபந்தங்களால் உலகை ரக்ஷித்து
அலைக்கும் வினை தீர்த்தான் -கருமங்களைப் போக்கி அருளும் தலைமகனது
புனை மகிழ் பூவுமன்றி– மகிழ மலர்களை சூடிக் கொள்ளுவது மட்டும் அல்லாமல்
மரந்தலைக் கொள்ளவும் போது -மகிழ மரத்தைச் சார்ந்து அத்தையும் தலை மேல் கொள்ளச் செல்கிறாள்
உன் மகள் கருத்தே.
தாராயினும் தழை யதாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
ஆழ்வார் சம்பந்தத்தை நேராகவோ அடியார்கள் மூலமாகவோ பெற ஆசை விஞ்சி உள்ளபடி
ஆழ்வார் அடியார்கள் வாழும் இடங்களையும் தலை மேல் கொள்ளுகிறார் என்றபடி –
—————
தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –
கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–
கருத்தில் கருணை வைத்து -திரு உள்ளத்தில் பேர் அன்பு கொண்டு
ஏகும் இவளோடு-இம்மங்கை யுடன் செல்லக் கடவீர்
இதுவும் -இவ்வாறு இவளைக் கைப் பற்றுவதும்
கலை மறையோர் திருத்திற்று ஒரு மணம் -ஸாஸ்த்ரம் வல்லவர் அமைத்த விவாஹங்களில் ஒரு வகை
அன்றியும்
தீரும் தின மயல் -நாள் தோறும் இருவருக்கும் உள்ள மயக்கமும் நீர் இவளைக் கொண்டு போக நீங்கி விடுமே
நீரின் நிறை-நீர் வளத்தால் நீர் அருகில் முளைத்து நிறைந்துள்ள
முருத்தின் செருந்து -வெண்மையாக அடிக் குருத்துக்கள் உடைய செருந்தி கோரைகள்
அயலே கரும்பின் குருத்தில் -அருகில் உள்ள கரும்பின் குருத்துக்களில்
முயல் பிரசம் வைக்கும் -முயல் கூடான சந்த்ர மண்டலம் போல் தேன் கூடு கட்டப் பெற்ற
குருகூர் சென்று கூடுமினே–இவளை அழைத்துக் கொண்டு போவீராக —
கரும்பினிடைத்தேறல் -கலியன்
சாஸ்திரம் அஷ்ட வித மணங்களைச் சொல்லும்
ப்ராமம் -பிரஜா பத்த்யம் -ஆர்ஷம் -தேவம் -காந்தர்வம் -ஆசுரம் ராஷாஸம் -பைசாஸம்
சேஷி பேற்றுக்கு உகப்பானும் அவனே -ஆகவே இவருடைய முயலும் தீருமே –
———-
கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–
கூட்டங்கள் தோறும் -தாம் கூடும் பொழுது எல்லாம்
குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்-ஆழ்வாருடைய திவ்ய குணங்களையே கூறும் அடியார்கள்
ஈட்டங்கள் தோறும் -கூட்டங்களில் எல்லாம்
இருக்கப் பெற்றேம் -கூடி இருக்கப் பெற்றோம்
இருந்து -இவ்வாறு அடியார் கூட்டங்களில் கூடி இருந்து
எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் -ஆனந்தக் கண்ணீர் பெருகப் பெற்றோம்
இனி மேல்-இவ்வாறு ஆன பின்பு
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே -பரமபதத்தில் எங்களை சார்ந்தவர்களுக்கு
பெரும் போகம் விளைகின்றதே–பேர் இன்பம் நலம் நிகழா நின்றது –
விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ –
————
பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப்புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்
விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே. 87–
கிளையாம் பிறவித்-மேலே மேலே தொடரும் பிறவி சூழலில்
தளை யாசழியத் -பந்தமாகிய குற்றம் போகும்படி
தடுத்துத் -போக்கி
தென் பாலை வழி தடுத்துக் – தெற்குத் திக்கில் -பாலை நில வழியையும் தவிர்த்து
களை ஆசறத் தடுத்து -களைகளை முற்றும் போக்கி
ஆண்டான் குருகையின் காப் புனமே.–ஆழ்வாருடைய திருக்குருகூரைச் சேர்ந்த தினை புலமே
தினையின் கிளையாக் கிளர விளைகின்றதால் -தினைப் பயிர்கள் மிகைத்து வளர்ந்து கதிர் முற்றிப் போகின்றதே
விளையா தொழிய மருந்தும் உண்டே -இப்படி முற்றாமல் கதிர் பரிந்தபடியே இருக்க ஏதேனும் மருந்து உண்டோ
நித்ய விபூதி அனுபவம் தந்து அருள வேண்டும் என்றவாறு –
————–
தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல்
புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–
வழுவா நரகத் தினம் பாழ் படுத்த –நரபலி அடியார்களுக்கு இல்லாத படி செய்து அருளும்
பிரான் சட கோபன் இன்னாக் கலியின் சினம் பாழ் படுத்த நின்றான்–உபகாரகர் -காளி கோலாகலம் அடக்கி அருளிய ஆழ்வார்
குன்று சூழ்கின்ற செந்தினையே.-பொதிகை மலை சார்ந்து விளைந்த சிவந்த தினையே
புனல் பாழ் படுத்துப் -கதிர் கொய்து விட்டதால் -கொல்லையைப் பாழாக்கி
புகழ் பாழ் படுத்தல்லால் -உனது கீர்த்தியையும் பாழாக்கி
அத்தோடு நில்லாமல்
புகுந்தென் மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே -எனது மனத்தையும் சார்ந்து பாழாக்கினாயே -வாழி
கம்பத்து அந்தரங்கம் சிவந்த தினை-
தூராத மனக்காதல் –பலவும் பாடி ஆறாத மனக்களிப்போடே -இருந்தமை
———-
பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–
தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் — தன்னை நிஷேதித்த கொடியவளான திருத்தாயார் உறங்கினாலும்
தன் வாய் அடங்கா வினை ஒன்றிய அன்றிலுக்கு –அன்றில் பறவைக்கு
இடம் காட்ட விரிதலைய பனை யன்றியும் உளதோ -தங்க இடம் கொடுத்த விரிந்த தலையை யுடைய பனை மரமும்
தமியேற்குப் -தலைவனைப் பிரிந்து தனித்து இருக்கும் எனக்கு
தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்-ஆழ்வாரின் மேல் உள்ள காதலால்
பழம் பகையே–வேறே பழைய பகை இல்லையே
———
பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–
பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து-காமம் கோபம் மயக்கம் மூன்றையும் அடியோடு ஒழித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி -இதன் மூலம் வரும் கர்மங்கள் பிறவிகளை இவற்றை தமக்கும் உலகோருக்கும் போக்கி அருளி
சஞ்சிதம் ப்ராரப்தம் ஆகாமியம்-என்று வகை வகையாக வருமே இவற்றின் அடியாகவே
இவ் வையமுய்யத் தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் –ஆழ்வாரது திரு நாமம் சொல்லவே
சூழ் பனியின் புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே.–அஞ்ஞானம் இருள் சவாசனமாகப் போகும் நாளும் என்று வருமோ
இருள் தரும் மா ஞாலத்தில் பிரிவாற்றாமையால் ஆற்றாமை விஞ்சி வாய் விட்டுக் கூறி அலற்றுகிறார் –
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply