ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-10–துப்புடையாரை அடைவது எல்லாம்—

கீழில் திரு மொழியிலே
புருஷகாரத்தால் அல்லது பகவத் ஸமாஸ்ரயணம் ஸித்தியாது என்னும் இடமும்

எல்லாத் தேஸத்திலும்
எல்லாக் காலத்திலும்
எல்லா அவஸ்தைகளிலும்
மங்களா சாஸனமே ஸ்வரூபத்தோடே சேர்ந்த நிலை நின்ற புருஷார்த்தம் என்று
அறுதி இட்டார் கீழ்

மங்களா ஸாஸனம் பண்ணாத போது க்ஷண காலமும் பொறுக்க மாட்டாத
தம்முடைய மார்த்தவத்தை அவன் திரு உள்ளத்திலே படும்படியாக விண்ணப்பம் செய்கிறார் –

இது அந்திம ஸ்ம்ருதி ஆனாலோ என்னில் –
அது கூடாது
ப்ரபன்னரான இவருக்கு அந்திம ஸ்ம்ருதி உபாய பூதனான ஈஸ்வரன் பக்கலிலே கிடக்கையாலே
அஹம் ஸ்மராமி –என்னக் கடவது இறே

ஆகையால் கரணங்கள் அவிதேயங்களான மரண காலத்திலும்
மங்களா ஸாஸனம் பண்ணாத போதும் தரிக்க மாட்டேன் –
இதுக்கு விச்சேதம் வராதபடி பரிஹரித்துத் தந்து அருள வேணும் என்று
பெரிய பெருமாளை அர்த்திக்கிறார் –

இம் மங்களா ஸாஸனம் ஸ்வரூபத்தோடே சேருமோ என்னில்
ரஷ்ய ரஷக பாவம் மாறாடும்படி
ப்ரேமம் தலை மண்டி இட்டு அதன் காரியமாய்க் கொண்டு வருகிற
பரிவாகையாலே சேரும் –

———–

சர்வ சக்தியான நீ அந்திம தசையிலே எனக்கு ரக்ஷகனாக வேணும் என்கிறார் –

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை யாவர் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே- 4-10-1-

பதவுரை

அரங்கத்து–திருவரங்கம் பெரிய கோயிலில்
அரவு அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல்
பள்ளியானே–பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
துப்பு உடையாரை அடைவது–(அடியாரைக் காப்பதில்) ஸாமர்த்தியமுடைய தேவரீரை ஆஸ்ரயிப்பது
உடையாரை–முன்னிலை படர்க்கை பிரயோகம்
எல்லாம் சோர்வு இடத்து–‘ஸர்வ இந்திரியங்களும் சிதிலமாய் விடுங்காலத்தில்
துணை ஆவர் என்றே–தேவரீர் துணையாயிருக்கும் என்கிற எண்ணத்தினாலன்றோ?

(அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் ப்ரபன்னர்களுக்கு அன்றோ என்று அவன் சொன்னதாகக் கொண்டு
சரணம் என்று வாய் வார்த்தையாக
புரிதல் இல்லாமல் செய்தேன் என்கிறார் )

ஒப்பு இலேன் ஆகிலும்–(இவ்வாறு துணை செய்வதற்கு உரிய அதிகாரிகள் இன்னாரென்னு தேவர்
திருவுள்ளத்திற் கொண்டிருக்கும் அவர்களோடு) அடியேன் ஒப்பற்றவனாயினும்,
நீ ஆனைக்கு அருள் செய்தமையால்–தேவர் கஜேந்திராழ்வானைக் காத்தருளியவராதலால்
(அவரைப் போல் அடியேனையுங் காத்தருள்வீரென்று)
நின் அடைந்தேன்–தேவரைச் சரணம் புகுந்தேன்

(அப்போது வந்து ரக்ஷிக்கிறேன் என்று சொன்னதாக )

எய்ப்பு–(வாத பித்த ச்லேஷ்மங்களினால் நெருக்குண்கையா லுண்டாகக் கடவதான) இளைப்பானது
என்னை–அடியேனை
வந்து நலியும் போது–கிட்டி வருந்துங்காலமாகிற
அங்கு–அந்த சரம தசையில்
நான்–அடியேன்
உன்னை–தேவரீரை
ஏதும்–க்ஷண காலமாயினும்
நினைக்க மாட்டேன்–நினைக்க முடியாதவனாவேன்
இப்போதே–(கரண களேபரங்கள் தெளிவு பெற்றிருக்கிற) இப்போதே
சொல்லி வைத்தேன்–(என்னுடைய பிரார்த்தனையை) விண்ணப்பஞ் செய்து கொண்டேன்

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை யாவர் என்றே
சக்திமான்களை ஆஸ்ரயிக்கிறது தானும் தன் கரணங்களும் தனக்கு உதவாத ஆபத் தசையிலலே
தனக்கு ரக்ஷகர்கள் ஆவார் என்று இறே
ஆன பின்பு ஸர்வ ஸக்தியான நீ உன் பக்கலிலே ஸர்வ பர ந்யாஸம் பண்ணி இருக்கிற என்
சரீர அவசான காலத்திலே என் ஆத்மீயங்கள் ஒன்றும் எனக்கு உதவ மாட்டாதே
அத் தசையில்
அஹம் ஸ்மராமி
நயாமி
என்று நீ அருளிச் செய்தபடி ரக்ஷகனான வேணும் –

ஒப்பிலேன் ஆகிலும்
உன்னை ஆஸ்ரயிக்கைக்கு யோக்யதை இல்லாத படி தோஷ யுக்தனாய் இருக்கும் இருப்பு
அஸத்ருசனாய் இருந்தேனே யாகிலும்
உன்னுடைய ஷமா வாத்சல்ய தயாதி குணங்களை அனுசந்தித்து உன்னை ஆஸ்ரயித்தேன்
இப்படி நம்மை ஆஸ்ரயித்தவர்களை நாம் ரக்ஷிக்க எங்கே கண்டீர் என்ன

நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
ஏன் -ஸ்ரீ கஜேந்திரனை ரஷித்தது இல்லையோ
ஆனையினுடைய துதிக்கை முழுத்தின ஆபத்தில் உன் கிருபையாலே ரக்ஷித்திலையோ

உமக்கு அப்படி ஆபத்து ஏது என்ன

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
தேஹ விமோசன காலத்திலே
த்ரிவித கரணங்களும் சோரும்படியான தசையிலே

அன்றிக்கே
அத் தசையிலே மங்களா ஸாஸன விச்சேதத்தால் வந்த
இளைப்பு நலியும் அளவில் -என்னவுமாம்

அப் போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே-
அத் தசையில் உன்னை ரக்ஷகனாக அனுசந்திக்க ஷமன் ஆகேன்
அதுக்காக அனுசந்தான ஷமனான இப்போதே விண்ணப்பம் செய்து வைத்தேன்

இந்த ரக்ஷகத்வத்தை பிரத்யஷப்பித்துக் கொண்டு
கோயிலிலே திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே
பிராட்டியோடே கூடப் பள்ளி சாய்ந்து (கொண்டு )அருளுகிறவனே
சொல்லி வைத்தேன் -என்று அந்வயம் –

————-

சரீர வியோக காலத்தில் யம படர் வந்து கிட்டாதபடி நோக்கி அருள வேணும் என்கிறார் –

சாமிடத்து என்னை குறிக்கொள் கண்டாய் சங்கோடு சக்கரம் ஏந்தினானே
நாமடித்து என்னை யனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
போமிடத் துன்றிறத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத்தே உன்னை சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே -4- 10-2 –

பதவுரை

சங்கொடு–ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும்
சக்கரம்–ஸ்ரீஸுதர்சனாழ்வானையும்
ஏந்தினானே–திருக் கையில் அணிந்து கொண்டுள்ளவனே
அரங்கத்து அரவு அணை பள்ளியானே!
அனேக தண்டம் செய்வதா நிற்பா–பல வகைகளால் தண்டிக்க நினையா நின்றவர்களாய்
போம் இடத்து–இழுத்துக் கொண்டு போம் போது
(என்னுடைய நெஞ்சானது)
உன் திறத்து–உன் விஷயத்தில்
எத்தனையும்–சிறிதாயினும்
புகா வண்ணம்–அவகாஹிக்க மாட்டாதபடி
நிற்பது ஓர் மாயை வல்லை–மறைந்து நிற்கையாகிற ஒப்பதொரு மாயையைச் செய்வதில் (நீ) வல்லவனாக யிரா நின்றாய்
நமன் தமர்கள்–யம படர்கள்
நா மடித்து–(மிக்க கோபத்தோடு) நாக்கை மடித்துக் கொண்டு
என்னை–(மஹா பாபியான) அடியேனை
(ஆதலால்)
ஆம் இடத்தே–ஸர்வேந்திரயங்களுடங் தெளிவு பெற்றிருக்கை யாகிற இக் காலத்திலேயே
சாம் இடத்து என்னை குறிக்கோள் கண்டாய் என்று–“சரீர வியோக ஸமயத்தில் (உன்னை நினைக்க மாட்டாத)
அடியேனைத் திருவுள்ளம் பற்றி யருள வேணும்”
உன்னை–உன்னைக் குறித்து
சொல்லி வைத்தேன்–விண்ணப்பஞ் செய்து கொண்டேன்–

சாமிடத்து என்னை குறிக்கொள் கண்டாய்
தேஹ விமோசநம் பிறக்கும் போது என் ப்ரக்ருதி அறிந்து
என்னைத் திரு உள்ளம் பற்றி அருள வேணும்
என் ஸ்வபாவம் கண்டாய் இறே

சங்கோடு சக்கரம் ஏந்தினானே
அழகுக்கும்
ஆண் பிள்ளைத் தனத்துக்கும்
உறுப்பாக ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடு திருவாழியையும் பூ ஏந்தினால் போல் தரித்தவனே
கையும் ஆழ்வார்களுமான அழகைக் கண்டால் பரியாது இருக்க மாட்டார் இறே –

நாமடித்து என்னை யனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
பூர்வ தோஷங்களை நினைத்து நாவை மடித்துப் பல் கறுவிக் கொண்டு
நாநாவான தண்டங்களைச் செய்யக் கடவதாக அவசர பிரதீஷராய் நிற்பர்களாய்த்து யம படர்

போமிடத் துன்றிறத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
அவர்கள் கொண்டு போம் இடத்து உன் விஷயத்தில் அத்யல்பமும் நினைவு உண்டாகாதபடி பண்ணும்
அத்விதீயமான ஆச்சர்ய சங்கல்பத்தை யுடைய

ஆமிடத்தே உன்னை சொல்லி வைத்தேன்
காரணங்கள் விதேயமான தசையில் -நீயே அத் தசையிலே ரக்ஷகனாக வேணும் -என்று
சொல்லி வைத்தேன்

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
எனக்கு விண்ணப்பம் செய்யலாம் படி அடுத்து அணித்தாக
பள்ளி கொண்டு அருளுகிறவனே –

————

அந்திம ஸ்ம்ருதி என் கையில் இல்லை
ரக்ஷணத்துக்குப் பரிகரமுடைய நீயே எனக்குத் துக்கங்கள் வராதபடி
ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன் தமர் பற்றும் போது
நில்லுமின் என்ன வுபாயம் இல்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே
சொல்லலாம் போதே உன்னாமம் எல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக் கொள் என்றும்
அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10- 3-

பதவுரை

நேமியும்–திருவாழியையும்
சங்கமும்–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
ஏந்தினானே–கையில் அணிந்து கொண்டுள்ளவனே
வாசல் குறுகச் சென்றால்–(யம புரத்துக்குப்) போம் பழியைக் கிட்டப் புகுந்தால்
நமன் தமர்–யம கிங்கரர்கள்
எற்றி–அடித்து
பற்றும் போது–பிடிக்குங் காலத்தில்
நில்லுமின் என்னும்–“கடக்க நில்லுங்கள்” என்ற (அவர்களைக் கிட்ட வர வொட்டாமல்) தடுக்கும் படியான
உபாயம் இல்லை–ஓரு உபாயமும் (என் கையில்) இல்லை;
சொல்லலாம் போதே–வாய் விட்டுச் சொல்லுகைக்கு உரிய இப்போதே
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!
எல்லையில்–(அடியேனுடைய வாழ் நாளின்) எல்லையாகிய சரம தசையில்
உன்–உன்னுடைய
நாமம் எல்லாம்–திரு நாமங்களை யெல்லாம்
சொல்லினேன்–சொன்னேன்;
என்னை–அடியேனை
குறிக் கொண்டு–திருவுள்ளத்திற் கொண்டு
என்றும்–எப்போதும்
அல்லல் படா வண்ணம்–அநர்த்தப் படாதபடி
காக்க வேண்டும்–ரக்ஷித்தருள வேணும்–

எல்லையில் வாசல் குறுகச் சென்றால்
ஆயுஸ்ஸூ னுடைய எல்லையிலே யாம்ய மார்க்கம் அத்யா சன்னமானால்
வாசல் -வழி

எற்றி நமன் தமர் பற்றும் போது
பிடரியிலே ப்ரஹரித்து யமபடர் பிடிக்கும் தசையிலே

நில்லுமின் என்ன வுபாயம் இல்லை
அவர்களை நிவாகரிக்கத் தக்கதொரு சாதகம் என் பக்கலில் இல்லை

நேமியும் சங்கமும் ஏந்தினானே
நிவாரண பரிகரமான திருவாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
இடைவிடாமல் தரித்துக் கொண்டு இருக்கிறவனே
உன் கையில் சாதநத்துக்கு என் பக்கலிலே ஜீவனமும் உண்டு என்கை
(குறைகளை போக்கியே திருவாழி போல்வாருக்கு ஜீவனம் )

சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன்
கரணங்கள் வச வர்த்தியான தசையிலே
உன்னுடைய ப்ராப்ய வாசகமான திரு நாமங்களை சொல்லி
மங்களா ஸாஸனம் பண்ணி அனுபவித்தேன்

என்னைக் குறிக் கொள் என்றும்
இவன் மங்களா சாசனத்தால் அல்லது தரியான் என்று திரு உள்ளம் பற்றி அருளி

அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும்
மரண தசை தொடங்கி மேல் உள்ள காலம் எல்லாம் மங்களா ஸாஸன விச்சேதத்தால் வரும்
கிலேசங்கள் வாராத படி ரக்ஷித்து அருள வேணும்

அரங்கத்து அரவணைப் பள்ளியானே-
என்னுடைய அல்லலைப் போக்குகைக்கு
அவசர ப்ரதீஷரராய்க் கோயிலிலே
கண் வளர்ந்து அருளுகிறவனே காக்க வேணும்
என்று அந்வயம் –

————–

மரண தசையில் மங்களா ஸாஸன விச்சேதத்தால் வந்த வியசனம்
யம பாதையோடு ஒக்கும் என்றார் கீழே
இப் பாட்டில் அந்த வியசனத்தை ப்ரணவ ப்ரதிபாத்யனான நீயே
ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –
(இத்தாலே பகவான் ப்ரகர்ஷேண ஸ்துதிக்கப்படுவதால்
அது பிரணவம் ஆகிறது -தாது அர்த்தம் )

ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை அறியாப் பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ
அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
வற்றைக்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே -4 -10-4 –

பதவுரை

ஒற்றை விடையனும்–ஒப்பற்ற ரிஷப வாஹநனானன ருத்ரனும்
நான்முகனும்–ப்ரஹ்மாவும்
உன்னை–உன்னை
அறியா–(உள்ளபடி) அறிய வொண்ணாமைக்கு உறுப்பான
பெருமை யோனே–பெருமை பொருந்தியவனே!
நமன் தமர்–யம கிங்கரர்கள்
இவற்கு வாழ் நாள் அற்றது என்று எண்ணி–இவனுக்கு ஆயுள் காலம் முடிந்தது என்று நினைத்து
முற்ற உலகு எல்லாம்-ஒன்றொழியாதபடி எல்லா உலகங்களும்
நீயே ஆகி–நீயே ஆய்
மூன்று எழுத்து ஆய–மூன்று அக்ஷரமான பிரணவ ஸ்வரூபியானவனும்
ஓ முதல்வனே–ஸர்வ காரண பூதனுமானவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!.
அஞ்ச–(பிடிக்கிற பிடியில்) அஞ்சும்படி
பற்றல் உற்ற அற்றைக்கு–பிடிக்கப் புகுகிது அன்றைக்கு
நீ என்னை காக்க வேண்டும்–

ஒற்றை விடையனும்
ருஷப வாஹனத்தைத் தனக்கு அசாதாரணமாக யுடையனான ருத்ரனும்

நான் முகனும்
அவனுக்கும் கூட ஜனகனாய்
நாலு வேதங்களையும் அதிகரிக்கைக்கு நாலு முகங்களை யுடையனாய் இருக்கிற ப்ரஹ்மாவும்

உன்னை அறியாப் பெருமையோனே
இவர்கள் ப்ரஹ்ம பாவனை தலை எடுத்து ஸ்வ யத்னத்தாலே உன்னை அறியப் பார்த்தால்
அவர்களுடைய ஞானத்துக்கு அபூமியான மஹாத்ம்யத்தை யுடையவனே
யஸ்ய மஹிமா ஆர்ணவ விப்ருஷஸ்தே (ஸ்தோத்ர ரத்னம் )-என்னக் கடவது இறே
வேதங்களால் அபரிச்சேதயனான வுன்னை கர்ம வஸ்யரான இவர்களால்
ஓவ்பாதிக ஞானம் கொண்டு அறியப் போமோ

(ஸ்வ பாவிக அநவததிக அதிசய ஈஸிக்ருத்யம் உன்னிடமே
மஹிமைக்கடல் நீ
அதன் சிறு துளி அவர்களுக்கு ஒக்குமோ )

முற்ற உலகு எல்லாம் நீயேயாகி
அவன் ப்ராதேசிகன் ஆகில் அன்றோ இவர்களுக்கு அறியலாவது
லோகம் அடங்கலும் ஓன்று ஒழியாமல்
நீ என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படி ஜகதாகாரனாய்

மூன்று எழுத்தாய முதல்வனேயோ
இவ்வர்த்த ப்ரதிபாதகமாய்
அக்ஷர த்ரயாத்மகமான ப்ரணவ ப்ரதிபாத்யனாய்
(தஸ்ய ப்ரக்ருதி லீ நஸ்ய )யஸ் பரமஸ் மஹேஸ்வர என்று
அத்தாலே
ஸர்வ ஸ்மாத் பரனாக ப்ரதிபாதிக்கப் பட்டவனே
ஜகத் காரண பூதன் என்றுமாம்

அற்றது வாழ் நாள் இவருக்கு என்று எண்ணி யஞ்ச நமன் தமர் பற்றலுற்ற வற்றைக்கு
இவர்களுக்கு ஜீவன ஹேதுவான ஆயஸ்ஸூ க்ஷயித்தது என்று மநோ ரதித்துத்
தங்கள் தர்சனத்தாலும் செயல்களாலும் இவர்கள் பயப்படும்படி
யமபடர் பற்றுகையிலே உத்யுக்தரான வந்த திவசத்திலே

நீ என்னை காக்க வேண்டும்
நமன் தமர் என் தாமரை வினவப் பெறுவாரலர்-என்னும் நீ
உன்னையே ரக்ஷகனாக அத்யவசித்த என்னை
ரக்ஷித்து அருள வேணும்

அரங்கத்து அரவணை பள்ளியானே
உன்னுடைய பிரணவ ப்ரதிபாத்யதையைப் பிரகாசிப்பித்துக் கொண்டு
கோயில் ஆழ்வாருக்கு உள்ளே பள்ளி கொண்டு அருளுகிறவனே

(பிரணவ ஆகார விமானம் அன்றோ –
ப்ரபத்யே பிரணவ ஆகாரம் பாஷ்யம் ரெங்க மந்த்ரம் பாஷ்யம் —
சேஷித்வம் ஸ்புடம்)

————-

ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணி
ரக்ஷணார்த்தமாகத் திருப்பாற் கடலிலே சாய்ந்து அருளி
அதிலும் ஸூலபனாய்க் கோயிலிலே பள்ளி கொண்டு அருளுகிற நீயே
ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

பைய அரவின் அணை பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி யுந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10-5-

பதவுரை

பால்கடலுள்–திருப் பாற் கடலில்
பை அரவ இன் அணை–(பரந்த) படங்களை யுடைய திருவனந்தாழ்வானகிய இனிய படுக்கையின் மீது
பள்ளி கொள்கின்ற–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
இன் -சாரியை என்றுமாம்
பரம மூர்த்தி–பரம சேஷியானவனே !
உய்ய–(எல்லா வுயிர்களும் தன்னை அடைந்து) உஜ்ஜிவிக்கும்படி
உலகு–லோகங்களை
படைக்க வேண்டி–ஸ்ருஷ்டிக்க விரும்பி
உந்தியில்–திரு நாபிக் கமலத்தில்
நான் முகனை–பிரமனை
தோற்றினாய்–தோற்று வித்தவனே!
வையம்–பூமியிலுள்ள
மனிசர்–மனுஷ்யர்கள்
பொய் என்று எண்ணி–பொய்யர் என்று எண்ணி (நமது கட்டளையாகிய சாஸ்த்தர மரியாதையில் நிற்கமாட்டாது) க்ருத்ரிமராய்
நடப்பவர்களென்று நினைத்து (அந்த விபரீதாசரணத்துக்கு தக்க தண்டம் நடத்துதற்காக)
காலனையும்–யமனையும்
உடனே–கூடவே
படைத்தாய்–ஸ்ருஷ்டித்தருளினவனே!
ஐய–பரம பந்துவானவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!
இவர் என்னை காக்க வேண்டும்–

பைய அரவின் அணை பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை யுடையவனாய்
மென்மை நாற்றம் குளிர்த்தி -இவைகளை பிரக்ருதியாக யுடையவனாய் இருக்கிற
திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாகக் கொண்டு
திருப்பாற் கடலிலே இவ்விபூதியில் உள்ளார்கட்க்கு கிட்டலாம் படி
அணித்தாகப் பள்ளி கொண்டு அருளுகிற பரம புருஷனே

அநந்த ஸாயித்வத்தாலே உன்னுடைய ஸர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
உபாய உபேயத்வங்களையும் பிரகாசித்தவன் என்கை

இத்தால்
வ்யூஹ குணங்களும் பெரிய பெருமாள் பக்கலிலே உண்டு என்கை –

(மூர்த்தி -இங்கு உபாய உபேய இவற்றை பிரகாசித்து அருளினவன் என்றவாறு
வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் இங்கு )

உய்ய உலகு படைக்க வேண்டி யுந்தியில் தோற்றினாய் நான்முகனை
லோகமாக ஆத்ம ஞானம் பிறந்து உஜ்ஜீவிக்கைக்கு உறுப்பாக சேதனர்க்கு
சரீர இந்த்ரியங்களைக் கொடுக்க வேணும் என்று
நினைத்து அந்த ஸ்ருஷ்டிக்கு உனக்கு உபகரண பூதனான சதுர்முகனை
திரு நாபி கமலத்திலே ஸ்ருஷ்டித்தாய் –

வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஜகத்தில் உண்டான மனுஷ்யரை அஸ்த்திரர் என்று நினைத்து
அவர்களுடைய நித்ய ஸம்ஹாரத்துக்கு
உனக்கு உபகரண பூதனான மிருத்யுவையும் கூடவே ஸ்ருஷ்ட்டித்தாய் –
(சதத பரிணாம பூமி தானே இது )

இத்தால்
உன்னாலே உண்டாக்கப் பட்டவற்றை நீயே போக்கும் இடத்தில்
உனக்கு அருமை இல்லை என்கை

ஐய
மாதா பிதா பிராதா (ஸூபால உபநிஷத் )-என்கிறபடியே
எனக்கு நிருபாதிக பந்து ஆனவனே

இனி என்னைக் காக்க வேண்டும்
நான் உன் அபிமானத்திலே ஒதுங்கின பின்பு
கைம்முதல் அற்ற என்னை
ரக்ஷித்து அருள வேணும்

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
திருப்பாற் கடலிலே வந்து கிட்ட மாட்டாத என் போல்வாருக்காக அன்றோ
நீ கோயிலிலே சாய்ந்து அருளிற்று –

————

சர்வ அந்தர்யாமியான நீ என்னை ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

தண்ணன இல்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
மண்ணோடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமுமாகி நின்றாய்
எண்ணலாம் போதே உன்னாமம் எல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்
அண்ணலே நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10 -6-

பதவுரை

மண்ணொடு–பூமியும்
நீரும்– ஜலமும்
எரியும்–தேஜஸ்ஸும்
காலும்–வாயுவும்
ஆகாசமும்–ஆகாசமும் (ஆகிய பஞ்ச பூதங்களும்)இவை காரணம்
மேல் கார்யம் -மற்றும் ஆகி நின்றாய்–மற்றுமுள்ள பதார்த்தங்களுமாய் நின்றவனே!
ஆகி நின்றாய்-பிரகார பிரகாரி நிபந்தமான சமாநாதி கரண்யம்
அண்ணலே–ஸர்வ ஸ்வாமி யானவனே!
அரக்கத்து அரவணைப் பள்ளியானே;
நமன் தமர்கள்–யம கிங்கரர்கள்
தண்ணென வில்லை–இரக்க மற்றவர்களாய்க் கொண்டு
சால–மிகவும்
கொடுமைகள்–கொடிய சிஷைகளை
செய்யா நிற்பர்–பண்ணுவர்கள்;
(அப்படிப்பட்ட சிஷைகளுக்கு ஆளாகா தொழியும்படி.)
எண்ணலாம் போதே–அநுஸந்கைக்கு உரிய காலத்திலேயே
உன் நாமம் எல்லாம்–உன்னுடைய திருநாமங்களை யெல்லாம்.
எண்ணினேன்–அநுஸந்தித்தேன் (ஆதலால்)
என்னை–அடியேனை
நீ–நீ
குறிக் கொண்டு–திருவுள்ளத்தில் கொண்டு
என்றும்–எப்போதும்
காக்க வேண்டும்–காத்தருள வேணும்-

தண்ணன இல்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
ஐயோ என்னும் இரக்கம் இல்லாத யமபடர் தண்டிக்கும் போது
ஆஸ்ரயங்கள் பொறுக்கும் அளவு அன்றிக்கே
மிகவும் க்ரூரங்களைப் பண்ணா நிற்பர்கள்
கிருபாவானான நீ இத்தைப் பரிஹரித்து அருள வேணும் -என்கை

மண்ணோடு நீரும் எரியும் காலும்
ஒன்றுக்கு ஓன்று காரணமாய் நின்ற பூத பஞ்சகங்களும்

மற்றும் ஆகாசமுமாகி நின்றாய்
தன் மாத்திரைகளும்
இந்திரியங்களும்
மஹத் அஹங்காரங்களும்
இவை எல்லாத்துக்கும் காரணமான மூல ப்ரக்ருதியும்
தத் கதரான ஜீவ சமஷ்டியும்
இவற்றையும் நினைக்கிறது
மற்றும் -என்று

ஆக
இவற்றையுடைய உன்னோடே சமாந அதிகரித்துச் சொல்லலாம் படி
இவற்றுக்குள் அந்தர் யாத்மாவாய் நின்றாய்

இத்தால்
அந்தர் யாமியும் பெரிய பெருமாளே என்கை –

எண்ணலாம் போதே உன்னாமம் எல்லாம் எண்ணினேன்
கரணங்கள் வச வர்த்திகளாய்
அனுசந்தானத்துக்கு சக்தி உள்ள போதே மங்களா ஸாஸன விஷய பூதனான
யுன்னுடைய ப்ராப்ய வாசகங்களாய்
மேன்மைக்கும் நீர்மைக்கும் வடிவு அழகுக்கும் வாசகங்களான திரு நாமங்களை
வாசகமாக்கி மங்களா ஸாஸனம் பண்ணினேன்

என்னைக் குறிக் கொண்டு என்றும் அண்ணலே நீ என்னை காக்க வேண்டும்
இப்படிப்பட்டவன் என்று என்னைத் திரு உள்ளம் பற்றி அருளி
எல்லாக் காலத்திலும்
இதினுடைய இழவு தன்னதாம் படி ஸ்வாமியான நீ
உன் கை பார்த்து இருக்கிற என்னை ரக்ஷித்து அருள வேணும்

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
அந்தர்யாமித்வத்தில் இழிய மாட்டாதவர்களுக்கு அன்றோ
நீ கோயிலிலே சாய்ந்து அருளிற்று –

———–

வேதைக சமைதி கம்யனாய் சர்வாதிகனான நீ
எனக்கு அபய பிரதானம் பண்ணி அருள வேணும் என்கிறார் –

செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சல் இல் என்னுடை இன்னமுதே ஏழ் உலகும் உடையாய் என்னப்பா
வஞ்ச வுருவில் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது
அஞ்சலம் என்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணை பள்ளியானே – 4-10- 7-

பதவுரை

செம் சொல்–ருஜுவான சொற்களை யுடைய
மறை–வேதத்துக்கு
பொருள் ஆகி நின்ற–அர்த்தமாயிருப்பவனும்
தேவர்கள்–நித்திய ஸூரிகளுக்கு
நாயகனே–தலைவனுமானவனே!
எம்மானே–எம்பெருமானே!
எஞ்சல் இல்–குறை வற்ற
இன்–பரம போக்யமான
என்னுடை அமுதே–எனக்கு (ரஸ்யமான) அம்ருதம் போன்றவனே!
ஏழு உலகும் உடையாய்–உலகங்களுக் கெல்லாம் ஸ்வாமி யானவனே!
என் அப்பா–எனக்கு உபகாரகனானவனே!
தேவர்கள் நாயகனே எம்மானே நித்ய விபூதி நாயகனாய் இருந்து எனக்கு உபகாரகன்
ஏழ் உலகும் உடையாய் என் அப்பா -லீலா விபூதி நாயகனாய் இருந்து எனக்கு உபகாரகன்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!;
வஞ்சம்–வஞ்சனை பொருந்திய
உருவின்–ரூபத்தை யுடையவரான
நமன் தமர்கள்–யம கிங்கரர்கள்
என்னை–அடியேனை
வலிந்து–பலாத்கரித்து
நலிந்து–ஹிம்ஸித்துக் கொண்டு
பற்றும் போது–பிடிக்கும் போது
அஞ்சல் என்று ‘அஞ்ச வேண்டா’ என்று என்னை காக்க வேண்டும்-

செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற
யதா பூத வாதியாய்
பாஹ்ய குத்ருஷ்டிகளான ஆஸூர ப்ரக்ருதிகளுக்கு ஸ்வார்த்தங்களைப் பிரகாஸியாத
வேதத்துக்குப் பிரதான அர்த்தமாய்
ஸர்வே வேதா யத்ரை கம்ப வந்தி
ஸர்வே வேதா யத்ரை பதம் ஆமநந்தி
வேதைஸ் ஸர்வைர் அஹ மேவ வேத்ய –என்னக் கடவது இறே

தேவர்கள் நாயகனே
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனே
ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகன் என்னவுமாம்

எம்மானே
உன்னுடைய வேதைக சமதி கம்யத் வத்தையும்
ஸர்வ நிர்வாஹகத்வத்தையும் காட்டி
என்னை அடிமை கொண்டவனே

எஞ்சல் இல் என்னுடை இன்னமுதே
நாஸ ரஹிதமாய்
போக்யமுமான அம்ருதம் போலே
எனக்கு நித்ய நிரதிஸய போக்யனாவனே

ஏழ் உலகும் உடையாய்
பதிம் விஸ்வஸ்ய -என்கிறபடியே
ஸர்வ லோக ஈஸ்வரேஸ்வரன் ஆனவனே

என்னப்பா
எனக்கு இவ் வர்த்தங்களையும்
ப்ரமாணங்களையும் உபகரித்தவனே
எனக்கு நிருபாதிக பந்து என்றுமாம்

வஞ்ச வுருவில் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது
வரவு தெரியாதபடி வருமவர்களாய்
எமனுக்குப் பரதந்த்ரராய் இருக்கிற படர் பலாத்கரித்து ப்ரஹரித்து என்னைப் பிடிக்கும் அளவிலே

அஞ்சலம் என்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து
அத்தசையில்
மாஸூச என்று ரஷித்து அருள வேணும்

அரவணை பள்ளியானே
எனக்கு அபய பிரதானம் பண்ணி அருளுகைக்காகவே
கோயிலிலே சாய்ந்து அருளினவனே –

———–

பரமபதத்தின் நின்றும் போந்து கிருஷ்ணனாய் அவதரித்த நீ
என்னை ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் –

நான் ஏதும் உன் மாயம் ஒன்றும் அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புக என்று மோதும் போது அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்கள் ஈசா மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10- 8-

பதவுரை

வான் ஏய்–பரம பதத்திற் பொருந்தி யிரா நின்ற
வானவர் தங்கள்–நித்ய முக்தர்களுக்கு
ஈசா–தலைவனே!
மதுரை–திரு வட மதுரையில்
பிறந்த–அவதரித்த
மா மாயனே–மிக்க ஆச்சரிய சக்தியை யுடையவனே!
என் ஆனாய்–(பாகனுக்கு வசப்பட்டொழுகுகின்ற) யானை போல் எனக்கு வசப்பட்டிருப்பவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!
நான்–அடியேன்
உன் மாயம்–உன் மாயைகளில்
ஏது ஒன்றும்–யாதொன்றையும்
அறியேன்–அறிய மாட்டேன்;
நமன் தமர்–யம கிங்கரர்கள்
பற்றி–(என்னைப்) பிடித்து
நலிந்திட்டு–(இந்தச் சரீரத்தோடே) பண்ண வேண்டிய ஹிம்ஸைகளை யெல்லாம் பண்ணி விட்டு, (பின்பு,)
இந்த ஊன் புகு என்று–‘இந்த யாதநா சரீரத்தினுள்ளே பிரவேசி’ என்று
மோதும் போது–அடிக்கும் போது
அங்கு–அவ் விடத்தில்
உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்;
நீ என்னை காக்க வேண்டும்–

நான் ஏதும் உன் மாயம் ஒன்றும் அறியேன்
உனக்குப் பரிந்து அல்லது நிற்க மாட்டாத நான்
உன்னுடைய ஆச்சர்யாவஹமான குணங்களை ஒன்றும் அறியேன்
உன்னுடைய சங்கல்பங்களை என்றுமாம்

நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புக என்று மோதும் போது
யமபடர் முற்பட இந்த ஸரீரத்தோடே பிடித்து
ஹிம்சித்து இத்தை விடுவித்து
யாதநா ஸரீரத்தை யுண்டாக்கி
அத்தைக் காட்டி
நீ இந்த ஸரீரத்திலே பிரவேசீ -என்று நிர்பந்திக்க
இவன் அதில் புக இசையாமையாலே கண்ணற்று ப்ரஹரிக்கிற ஸமயத்திலே

அங்கு உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்
ஆபத் விமோசகனான யுன்னை
ஒரு பிரகாரத்தாலும் ரக்ஷகனாக நினைக்க மாட்டேன் –

வானேய் வானவர் தங்கள் ஈசா
பரமபதத்தில் பொருந்தி வர்த்திக்கிற
நித்ய முக்தருக்கு நியாந்தா வானவனே

மதுரைப் பிறந்த மா மாயனே
அது உண்டது உருக் காட்டாமையாலே
முமுஷு ஸா பேஷனாய் ஸ்ரீ மத் மதுரையிலே வந்து திரு அவதரித்து
அத்ய ஆச்சார்யா வஹமான குண சேஷ்டிதங்களை பிரகாசிப்பித்தவனே

என் ஆனாய்
ஆனை தன் பலத்தை அறியாதே
பாகனுக்கு வச வர்த்தியாமாம் போலே
என் மங்களா ஸாஸன ஸூத்ர வ ஸீ க்ருதனானவனே

நீ என்னைக் காக்க வேண்டும்
ரஷ்ய ரக்ஷக பாவத்தை ப்ரேமத்தால் நான் மாறாடி பிரதிபத்தி பண்ணிலும்
நீயே ரக்ஷகனாக வேணும்

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
அந்த கிருஷ்ண அவதாரத்தில் உதவாதாருக்கும்
உதவுகைக்கு அன்றோ நீ கோயிலிலே சாய்ந்து அருளிற்று –

———–

அந்த கிருஷ்ண விருத்தாந்தம் பின்னாட்டி
(மதுரைப் பிறந்த மா மாயன் கீழே )
அந்த கிருஷ்ண குணங்களைப் பெரிய பெருமாள் பக்கலிலே மீளவும் அனுசந்திக்கிறார் –

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வந்து என்னைப் பற்றும் போது
அன்று அங்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவிணைப் பள்ளியானே -4-10-9 –

பதவுரை

குன்று–கோவர்த்தந மலையை
எடுத்து–(குடையாக) எடுத்து (ப்பிடித்து)
ஆநிரை–பசுக்களின் திரளை
காத்து–ரஷித்தருளின
ஆயா–ஆயனே (கோபாலானே!)
கோ நிரை–மாடுகளின் கூட்டத்தை
மேய்த்தவனே–மேய்த்தருளினவனே!
எம்மானே–எனக்கு ஸ்வாமி யானவனே
அரங்கத்து அரவணைப் பள்ளியானே
அன்று முதல்–(உமக்குப் பல்லாண்டு பாடுமவனாக்கக் கொண்ட) அந்நாள் தொடங்கி
இன்று அறுதி ஆக–இன்றளவாக
ஆகி–ஸர்வ காரண பூதனான உன்னுடைய
அம் சோதி–விலக்ஷண தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹகத்தை
மறந்து அறியேன்–(அடியேன்) மறந்ததில்லை
திவ்ய மங்கள விக்ரஹ அழகைக் காட்டியே ஆழ்வார்களை விஷயீ கரித்தான் அன்றோ –
நன்றும் கொடிய–மிக்க பொறுமை பொருந்திய
நமன் தமர்கள்–யம கிங்காரர்கள்
என்னை–என்னை
நலிந்து–ஹிம்ஸித்து
வலிந்து–பலாத்கரித்து
பற்றும் போது அன்று–பிடிக்கும் அத் தருணத்தில்
அங்கு–அவ் விடத்தில்
நீ என்னைக் காக்க வேண்டும்-

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா
இந்திரனால் பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை ரக்ஷகமாகச் சொன்ன
மலையை எடுத்துக் கவித்து ரஷித்த கிருஷ்ணனே

கோநிரை மேய்த்தவனே எம்மானே
தன்னுடைய ரக்ஷணத்து விலக்காமையை யுடைய பசுக்களை ரக்ஷித்து
அத்தாலே
உன்னுடைய ஸ்வாமித்வத்தை பிரகாசிப்பித்தவனே

அன்று முதல் இன்று அறுதியா
நீ மயர்வற மதி நலம் அருளின அன்று முதல் இன்று அளவாக என்னுதல்
கருவரங்கத்து உட் கிடந்து கை தொழுத அன்று முதல் என்னுதல்
ஞானம் பிறந்த பின்பு கீழும் ஒரு போகியாய்த் தோற்றுகையாலே
மயர்வற மதி நலம் அருளின அன்று முதல் என்னுதல்

ஆதியம் சோதி மறந்து அறியேன்
காரணமாய் வி லக்ஷணமான விக்ரஹம் என்னுதல்
காரணத்வ ரக்ஷகத்வங்கள் என்னுதல்
இவற்றில் எனக்கு விஸ்ம்ருதி இல்லை என்கை –

நன்றும் கொடிய நமன் தமர்கள்
நல்ல நெருப்பு என்னுமா போலே
நன்றும் கொடிய-என்று
க்ரூரத்தின் மிகுதி சொல்லுகிறது

நலிந்து வந்து என்னைப் பற்றும் போது
உனக்குப் பரிந்து அல்லது நிற்க மாட்டாத என்னை
அவர்கள் பலத்தாலே பாதித்துப் பிடிக்கும் போது

அன்று அங்கு நீ
அக்காலத்திலேயே
அவ்விடத்திலேயே
ரக்ஷகனான நீ
நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் (திருமங்கை )-என்ற நீ

என்னை காக்க வேண்டும்
மங்களா ஸாஸனம் விச்சேதம் வரும் என்று அஞ்சுகிற என்னை
ரக்ஷித்து அருள வேணும்

அரங்கத்து அரவிணைப் பள்ளியானே
மங்களா சாசன விரோதியைப் போக்கி
மங்களா ஸாஸனம் பண்ணுவித்துக் கொள்ளுகைக்காகக் கோயிலிலே
திருவனந்த ஆழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுகிறவனே

இது எல்லாம்
சரம சதுர்த்தியிலே
திரு மந்திரத்திலே காணலாம் இறே –

(நாராயணாயா -ஆய -பிரார்த்தனாயாம் சதுர்த்தி
அதுக்கு உண்டான விரோதிகளைப் போக்கியது நமஸ்சில் சொல்லிற்றே
கீழே லுப்த சதுர்த்தி தாத்தார்த்த சதுர்த்தி )

———–

நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 -10-

பதவுரை

மாயவனை–ஆச்சரிய சக்தி யுடையவனும்
மதுசூதனனை–மது என்ற அசுரனை ஒழித்தருளினவனும்
மாதவனை–பெரிய பிராட்டியார்க்கு வல்லபவனும்
மறையோர்கள்–வைதிகர்கள்
ஏத்தும்–துதிக்கப்படுமவனும்
ஆயர்கள் ஏற்றினை–இடையர்களுக்குத் தலைவனும்-ஏறு மேனாணிப்பு
அச்சுதனை–(அடியாரை ஒரு நாளும்) நழுவ விடாதவனும்
அரங்கத்து–கோயிலில்
அரவு அணை–சேஷ சயநத்தில்
பள்ளியானை–கண் வளர்த்தருள்பவனுமான எம்பெருமானை நோக்கி
வேயர்–தாம் திருவவதரித்த குடியிலுள்ள ரெல்லோராலும்
புகழ்–புகழப் பட்டவரும்
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
மன்- நிர்வாஹருமான
விட்டுசித்தன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை–சொல் மாலையான
பத்தும்–இப் பத்துப் பாசுரங்களையும்
தூய மனத்தனர் ஆகி–நிர்மலமான நெஞ்சை யுடையராய்க் கொண்டு
ப்ராப்யாந்தர ப்ராபகாந்த்ர விருப்பு இல்லாத தூய்மை
வல்லார் தாம்–ஓத வல்லார்கள்
தூய மணி–பழிப்பற்ற நீலமணி போன்ற வடிவை யுடைய எம்பெருமானுக்கு
ஆளர்–அடிமை செய்யப் பெறுவர். (ஏ அசை.)–

மாயவனை
ஆச்சர்ய சக்தி யுக்தனை

மதுசூதனனை
மங்களா ஸாஸன விரோதிகளை
மதுவாகிற அஸூரனை நிரஸித்தால் போலே நிரஸிக்குமவனை

மாதவனை
அதுக்க்கடியாக ஸ்ரீ யபதியானவனை

மறையோர்கள் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை
வேத தாத்பர்யம் கைப்பட்டு இருக்குமவர்களுடைய மங்களா ஸாஸனத்துக்கு
விஷய பூதனான கிருஷ்ணனை
கோப குலத்தின் நடுவே மேனாணித்து இருக்குமவனை-

அச்சுதனை
இப்படி மங்களா ஸாஸன பரரை ஒரு நாளும் நழுவ விடாதவனை

அரங்கத்து அரவணைப் பள்ளியானே
மங்களா ஸாஸனத்துக்கு விஷய பூதனாய்க் கொண்டு
கோயிலிலே தன் ஸுகுமார்யத்துக்குத் தகுதியாக
திரு வனந்த வாழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுகிறவனை

வேயர் புகழ்
வேயர்–குடிப் பெயர்
இந்த கோத்ரஜர் எல்லாரும் தங்கள் வம்சத்தில் இவர் வந்து அவதரிக்கப் பெறுகையாலே
க்ருதராத்ரயாய் புகழா நிற்பர்களாய்த்து –

விட்டு சித்தன் வில்லி புத்தூர் மன்
திருமாளிகைக்கு நிர்வாஹகராய்
பெரிய பெருமாளைத் தம் திரு உள்ளத்திலே வைத்து மங்களா சாசனம் பண்ணும் பெரியாழ்வார்

சொன்ன மாலை பத்தும்
மங்களா ஸாஸன விரோதி நிவ்ருத்தியை பிரார்த்தித்து அருளிச் செய்த
வாஸிகமான திரு மாலையை
அநந்ய ப்ரயோஜனராய்
அநந்ய ஸாதநராய்
மங்களா ஸாஸன பரராய்
அப்யஸிக்க வல்லார்

தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே
நிர்த்துஷ்டமான நீல மணி போலே இருக்கிற திருமேனியை யுடைய பெரிய பெருமாளுக்கு
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று
மங்களா ஸாஸன ரூப கைங்கர்யங்களைப் பண்ணப் பெறுவர்கள் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: