பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–
பொதியம் தரு -பொதிய மலையால் கொடுக்கப் பட்ட -அதிலிருந்து தோன்றும்
நதி யங் குருகூர் எந்தை -ஆழ்வாரது திவ்ய ஸூக்திகளை
பூசுரர்க்கே
பதியந் தமிழ் என்ன –மேலோட்டமாக பார்ப்பவர் தமிழ் பதிகங்கள் என்பர்கள்
நான்மறை என்ன –ஆழ்ந்து நோக்குபவர்கள் நான்கு வேதங்களே இவை என்பர்கள்
இப் பார் புரக்கும் மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன –ப்ரயோஜனாந்த பரர்கள் உலோகோரை
நல்வழிப்படுத்திப் பாதுகாக்கவும் வரம்பில்லா ஞானமாகிய ஒளியை வெளிப்படுத்தும் ஆரங்கள் என்று சொல்லும்படியாகவும்
மறை தமிழின் அதியம் தரும் கவி ஆயிரம் செய்து –வேதம் தமிழ் செய்த மாறன் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழிகளும்
பூ சுரருக்கு அளித் தானமுதம்-நிலத்தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -தொண்டர்க்கு அமுதமாய் அருளினான்
பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அருந்த நிறைப்பதற்கு அன்றோ அமுதமாய் அருளினான்
———
பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–
குருகூர் வந்த கற்பகமே.
பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் -ப்ரசன்ன புத்தர் மாயாவதி போன்ற மதஸ்தர் வாத வித்வான்களுக்கு பூட்டு போன்றும்
பொய்ச் சமயம் மித்யா வாதம் மாயா வாதம்
போக்கு வல்வாய் வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு -சமணர்களுக்கு மாறுபாட்டை போக்கும்
கூர் வாயை யுடைய வாட்சி-மரத்தைச் சீவும் – கருவியாகவும்
அது மரக் கோணலைத் தீர்ப்பது போல் இது மனக் கோணலைத் தீர்க்கும்
வாள் என்று கொண்டு சி பகுதிப் பொருள் விகுதி என்றுமாம்
மன் உயிர் கட்கு ஆட்சி கண்டீர் -உலகில் நிலை பெற்ற உயிர்களுக்கு அழிவற்ற பொருளாகவும்
ஜீவாத்மாக்கள் நித்யம் என்பதால் மன்னுயிர்
ஜீவ ராசிகளை ஆளுபவர் என்றுமாம்
தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் -அடியவர்களுக்குப் பேரின்பப் பெருக்காகவும்
அறிவைக் காட்சி கண்டீர் -அவர்கள் அறிவுக்கு காணத்தக்க பொருளாகவும்
ஞான ஸ்வரூபமான பர ப்ரஹ்மத்தை விசத தமமாக அறிந்தவர் என்றுமாம்
பரவும்
ஆகவே பரவும் -வணங்கி புகழ்ந்து வழி படுங்கோள் என்று உபதேசிக்கிறார்
———
கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–
எம்மை விற்றும் விலை கொள்ளவும் உரியான்-எங்களை விற்கவும் வாங்கவும் உரியவர் —
ஆழ்வாருக்கு அத்யந்த பரதந்த்ரராய்
விலை கொள்ளுதல் -விலைக்கு கொள்ளுதல்
மாறன் கவி வெள்ளத்தையே.–ஆழ்வாரது அருளிச் செயல் பிரவாஹத்தை
யாம் நிதம்–யாம் நாள் தோறும்
கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் -ஓதியும் பிறர் ஒதக் காதில் நன்றாகக் கேட்டும் குடித்து மகிழ்வோம்
உள்ளே முற்றும் உகப்பெய்தும் -அகத்திலே அவ்வெள்ளம் முழுவதும் விழும்படி ஊற்றிக் கொள்வோம்
மறந்து விடாமல் மனதிலே நிரம்பப் பதிந்து வைத்துக் கொள்ளுதல்
மூழ்கிக் குடைதும் -அவ்வெள்ளத்திலே அமிழ்ந்து நீராடுவோம்
முகந்து கொடு நிற்றும் நிலையுற -அப்பெருக்கை மொண்டு எடுத்துக் கொண்டு நிலை பெற நிற்போம்
அப்பொருளை பாராட்டி தாம் உபயோகிக்குமாறு தேக்கிக் கொள்ளுதல்
நீந்துதும் -அவ்வெள்ளத்தில் நீந்துவோம் -அவற்றில் ஈடுபடுதல்
———–
தலைவியின் கண் அழகு கண்டு வியந்த தலைவன் கூறுதல் –
வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–
இவை
வெள்ளம் பரந்தனவோ கமலத்து -செந்தாமரை மேல் பிரவாகம் பரவியதாமோ
அன்றி வெண் மதி மேல் முயல் நீக்கி கள்ளம் பரந்தனவோ -சந்திரனின் களங்கத்தை நீக்கி களவுத் தொழில் பரம்பியதாமோ
கருமை நிறத்தை களவு என்பது கவிகள் மரபு
கவிக் கரசன் தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் -பூம் கொம்பு போன்ற இந்த மங்கையுடைய
ஆழ்வார் திரு நா வீறு உடைய பிரான் என்பதால் கவிக்கு அரசன் என்கிறார்
செம் முகத்து எம் உள்ளம் பரந்தனவோ -சிவந்த திரு முகத்திலு திரு உள்ளம் பரவியது
கண்களோ -கண்களே தாமோ -உபமானங்கள் உபமேயத்து அளவு போதாமையாலே அவை தம்மையே சொல்லிற்று
ஒன்றும் ஓர்கிலமே.-ஒன்றையும் துணிவாக அறிகின்றிலோமே
ஐய உவமை அணி
திரு உள்ளம் காம மயக்கத்தால் இருந்து அன்றோ போனது
தலைவன் நெஞ்சோடு கூறிக்கொண்டது
நலம் பாராட்டு துறை
கண் அழகு -ஞான வைலக்ஷண்யம்
இவருக்கு பேர் அறிவு ஆழ்வாரது சங்கல்பத்தாலே
இதயக் கமலத்திலே எழுந்து பொங்கும் ஞான வெள்ளத்தை -வெள்ளம் பரந்தனவோ கமலத்து என்கிறார் –
இந்த தெளிந்த ஸூத்த ஞானம் பரமாத்மாவின் திரு உள்ளத்தையும் வசீகரிக்குமே -ஆகையால்
வெண் மதி மேல் முயல் நீக்கிக் கள்ளம் பரந்தனவோ -என்கிறார் –
—————-
ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–
ஓரும் தகைமைக்கு உரியாரும் -தத்வப் பொருளை ஆராயும் தன்மைக்கு உரியவர்களும்
ஓங்கிய ஞானியரும்-அங்கனம் ஆராய்ந்து தெளிந்து உயர்ந்த ஞானத்தைப் பெற்றவர்களும்
கேள்வி -ஞானம் அனுஷ்டானங்கள்
விமர்சம் -ப்ரமாணங்களைக் கொண்டு தெளிய ஆராய்தல்
இவை இரண்டையும் முதலில் சொல்லி அவர்களிலும் மேம்பட்ட ஓங்கிய ஞானியரை –
பாவனை -இடையறாமல் சிந்தித்தல் -உடையாரை அடுத்து சொன்னவாறு
சாரும் தனித் தலைவன் சட கோபன் -சரணம் அடையப்பெற்ற ஒப்பற்ற ஆழ்வார் திரு அவதார ஸ்தலமான
தடம் பதிக்கே வாரும் -வாருங்கோள்
அங்கே வருவீர்களானால்
உமக்கொரு உறுதி சொன்னேன் -கேட்டு உய்வீராக
மயக்கமெல்லாம் தீரும் -விபரீத ஞானம் எல்லாம் போகுமே
திருக்கு அறும் —செருக்கு வஞ்சகம் போன்ற மாறுபாடு நீங்குமே
சிந்தை செவ்வே நிற்கும் -மனம் கோணாமல் நல் வழியில் நிலை நிற்கும்
தீங்கு அறுமே-தீ வினைகள் எல்லாம் தொலையுமே –
திவ்ய தேச மஹிமையை அறிவித்தவாறு
———–
அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–
அறு வகையாய சமயமும் –ஆறு வகையான சமய நூல்களும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே-ஒருங்கே ஒழிவித்து -தம் தமக்குத் தோன்றியபடி
பொருள் விரிவு முழுவதையும் ஒரு சேர போக்கி
பெறு வகை ஆறெனச் செய்த –முக்தி பெரும்படியான வழி இது என்று திவ்ய பிரபந்தகள் அருளிச் செய்த
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய்
பிரான் குருகூர்ப் பிறந்த சிறு வகையார் அவரைத் தொழுதோம் -மூர்த்தி சிறுத்தும் கீர்த்தி பெருத்தும் –
சிறு மா மானிசராய்த் தோன்றி நம்மை ஆண்டு அருளிய ஆழ்வாரை வணங்கினோம்
ஐவகைத் தாம்புலனும் எம்மைத் தீண்டுகவே.–மெய் வாய் கண் மூக்கு செவி -ஐம் பொறிகளாலும் உண்டாகும்
ஸ்பர்ச ரஸ ரூபம் கந்தம் ஸப்தம் போன்ற ஐந்து வகைப் புலன்களும் எம்மைச் சார்வனவாக –
அவற்றைக் குறித்து அஞ்ச வேண்டாமே
சடகோபர் எம்மைத் தீண்டுகை என்று தலைமகள் பிரணய ரோஷம் அடைந்து
நீங்கப் பெற்றதாகவும் இதற்குப் பொருள் சொல்வர்
சிறு மா மானிடராய் ஆழ்வார் அடியார்களையும் சொன்னவாறு
வழுதி நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தேன்-என்றாரே –
————–
தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–
வினையேன் இவ் வெறும் பிறவி ஆண்டில் பிறந்த அக் காலத்திலே –பயன் அற்ற இந்தப் பிறவியாக
அவ்விடத்தில் பிறந்த அக்காலத்திலேயே
அன்பனாய் அணி நீர்ப் பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே–ஆழ்வாருக்கே பக்தனாகி
உருக் காட்டுதல் -ரூபத்தைத் தோன்றுவித்தல் -இச்சா வடிவம் எடுத்து ஆவிர்பவித்தல்
பாவகற்கே-பரிசுத்தராக்குபவர் -ஜ்யோதி ஸ்வரூபமான ஆழ்வாருக்கு
மதுர கவி ஆழ்வார் இந்த தேஜஸ்ஸூ பார்த்தே இவரை வந்து சேர்ந்தார் அன்றோ
ஆதலால் அவருக்கு பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே-என்பது பொருந்துமே
தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் -அடையப் பெற்றேன் அல்லேன்
பழுதே பல பகலும் போக்கினேன் -அஞ்சி அழுகிறார்
வேண்டிய அனைத்தையும் தர வல்லவர் ஆழ்வார் என்பதாலேயே –
சிந்தித்ததையே வேண்டிக் கொளப் பெற்றிலேன் -என்கிறார்
இங்கு சிந்தித்தது முக்தியையே இவருக்கு –
————–
பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–
பாவகத்தால் -தனது தோற்றத்தைக் கண்டு அதனால்
தனது தூய்மை செய்து அருளும் தன்மையால்-பாவனத்வத்தால் – என்றுமாம்
தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப் பூவகத்தார் அறியாத வண்ணம் –திருமாலது பதினொன்றாவதாகிய
திருவவதாரமே என்று அறிந்து கொள்ளாத படி
வங்கி புரத்து நம்பி -ஆழ்வார் ப்ரபாவத்தாலே எம்பெருமானே இவ்வாறு திரு அவதரித்தார் என்னலாம் படி என்று அருளிச் செய்வார்
தன்னையே புகழந்து நாவகத்தால் கவி ஆயிரம் பாடி -தன்னையே தான் ஸ்துதித்து -திருவாய் மொழி அருளிச் செயலை அருளிச் செய்து
தானே யான் என்பானாகத் தன்னைத் தன்காண் துதித்து
யானாய்த் தன்னைத் தான் பாடி
நாராயணா அடியேன் நாடும் தமிழ் வேத பாராயணா சடகோபா -பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
திருப்புளிய மரம் ஆதி சேஷன் அம்சம் தானே
அத்ரி ஜமதக்கினி -ப்ராஹ்மண -தத்தாத்ரேயர் -பரசுராமன் முதல் யுகத்தில்
சக்ரவர்த்தி திருமகன் க்ஷத்ரியர் அடுத்த யுகத்திலும்
வைஸ்ய யதுகுல கண்ணன் அடுத்தும்
கலியுகத்தில் ஆவேச அவதாரம் -வேத வியாசராய் வேதங்களை வெளியிட்டு அருளினால் போல் திவ்ய பிரபந்தங்களை
வெளியிட்டு அருளவே அன்றோ இவர் திரு அவதாரம் –
நடித்து -வேறான ஒருவரைப் போலவே தம்மைக் காட்டி அருளி
கும்பிடு நட்டமிட்டு ஆடி -அந்தக் கூத்தாடி என்றுமாம் –
அளித்த-திவ்ய பிரபந்தங்கள் மூலம் லோகத்தாரை ரஷித்து அருளி
கோவகத்தாற் கன்றி -திருமாலாகிய ஆழ்வாருக்கே குற்றேவல் செய்யாமல்
கோ அகம் -மேலான இடம் -ஸ்ரீ வைகுண்டம்
கோபகம் -ரக்ஷிப்பவர் என்றுமாம்
என் புறத்தார் செய் குற்றேவல்களே-அந்நியர்களுக்கு செய்யும் கிஞ்சித்காரம் ஒரு நல் பயனையும் அளிக்க மாட்டாவே –
தேவதாந்த்ர பஜனத்தால் என்ன பலன் என்றவாறு
————
குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே 79–
குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே-பண் அமைதியோடு கூடிய இயல் தமிழ் அருளிச் செயல்களினால்
பண்ணார் பாடல் இன் கவிகள் அன்றோ -குருகையர் கோன் யாழினிசை வேதத்தியல் அன்றோ –
யான்
மெய் கண்டு-தத்வார்த்தங்களும் உணர்ந்து
கை கொண்டு கும்பிட்டு -கைகளால் வணங்கி
குற்றேவலும் செய்தும் -கைங்கர்யமும் செய்து
அன்பு பெற்றேன் –ஆழ்வாரது கருணையையும் பெற்றேன்
என் போல் எவர் பேறு பெற்றார் -இப் பேறு என்னைப் போல் பெற்றார் யாருமே இல்லை என்னும் படி அன்றோ இப் பேறு
இது அன்றி
பின்னையே பிறந்து-ஆழ்வார் திரு அவதாரத்துக்குப் பின்பு பிறந்து
வெற்றேவலின் நின்ற -தேவதாந்த்ர கைங்கர்யங்கள் செய்து
பொய்யன்பர் தாங்களும் -திரிபு உணர்வுடைய தொண்டர்களும்
மெய் யுணர்ந்தார் எற்றே -ஆழ்வார் அருளிச் செயல்களால் தத்வ ஞானம் பெற்றார்கள் -அறிந்து கொண்டார்களே என்ன வியப்பு –
————
தலைமகளைத் தலைமகன் கண்ணுற்று இஃது ஒரு வியப்பு என்றால் –
ஒரு தலைக்காமம்-கைக்கிளைத் திணையின் முதலான காட்சி என்னும் துறை இது
இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–
இன்னிசையைப் புணர்த்து-இனிமையான பண் இசைகளை அமைத்து
இயலைத் தொடுத்து -இயல் தமிழ் பாசுரங்களைப் பாடி
எம்மை யிப் பிறவி மயலைத் துடைத்த –எமது இந்தப் பிறப்பு துன்பங்களைப் போக்கி அருளிய
பிரான் -உபகாரகராகிய நம்மாழ்வாருடைய
குருகூர் –திருக் குருகூரிலே
மதியைக் கொணர்ந்து-சந்த்ர மண்டலத்தைக் கொண்டு வந்து
முயலைத் துடைத்துத் -அதன் நடுவில் உள்ள முயல் என்னும் களங்கத்தைப்[போக்கி
தனுவைப் பதித்து -அதில் இரண்டு விற்களைப் பதிய வைத்து
வில் போலே வளைந்து ஆடவர் நெஞ்சு உறுதியைப் போக்கும் ஆற்றலுடைய புருவங்களின் சிறப்பைக் கூறியவாறு
முத்தங்குயிற்றிக்-முத்துக்களை பதித்து -வெண்மையான பற்களை சொன்னவாறு
கயலைக் கிடத்திக் கொள் -இரண்டு கயல் மீன்களையும் வைத்து –பிறழுகிற கண்களை சொன்னவாறு
சாளரத்தூடு கதவிட்டதே.-பலகணியுனுள்ளே-அச் சந்த்ர மண்டலத்தை நிறுத்தி -புறத்தே கதவு அமைக்கப் பட்டதோ
இத் தோற்றம் எனத் தோன்றா எழுவாய் வருவித்து முடித்துக் கொள்ள வேண்டும் –
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply