ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-8–மாதவத்தோன் புத்திரன் போய்–

கீழே
வடதிசை மதுரை என்றும்
சாளக்கிராமம் என்றும்
வைகுந்தம் என்றும்
(விபத்தையும் ) பரத்வத்தையும் அர்ச்சாவதாரத்தையும் சொல்லிற்று
அவை மூன்றும்
அஞ்சுக்கும் உப லக்ஷணம்

இவை இத்தனையும் சேர யுள்ளது பெரிய பெருமாள் பக்கலிலே
விண்ணோர் முதல் -என்றும்
கடல் இடம் கொண்ட -என்றும்
கட்கிலீ -என்றும்
காகுத்தா கண்ணனே -என்றும்
திருவரங்கத்தாய் -என்றும்

ஆராமம் சூழ்ந்த அரங்கம் -என்றும்
திருப்பதிகள் எல்லாம்
பெரிய பெருமாளுக்கு பகல் இருக்கை இறே

உபய விபூதியிலும் நடக்கும் செங்கோலும் தனி ஆணையும் பெரிய பெருமாளது இறே
பொங்கோதம்
ஏழு உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருக்கிறாரும் பெரிய பெருமாள் இறே

பை கொள் நாகத்தணையான் பயிலும் இடம் -என்று
கோயிலில் இறே திரு உள்ளம் பொருந்தி இருப்பது –

அரங்கம் ஆளி விண்ணாளி ( திருமங்கை )
ஆயிரம் சுடர் வாய் அரவு அணைத் துயின்றாரும் ( திருமங்கை ) பெரிய பெருமாள் இறே

துவரை யதனில் மணவாளராக வீற்று இருந்தாரும் இவரே

அயோத்தி எம் அரசே -என்று
திரு அயோத்யையிலே திருவாராதனம் கொண்டு அருளினாரும் பெரிய பெருமாளே இறே

அந்தணர் தம் சிந்தையாலும் அரங்கம் மேய அந்தணன் (திரு நெடும் தாண்டகம் )இறே

அன்போடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளுகிறதும்
வன் பெரு வானகம் முதலானவை எல்லாம் உஜ்ஜீவிக்கவே இறே

ஆகிலும் இரண்டு பிரதானம்
தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் -என்று
ஆஸ்ரிதர் யாம்ய மார்க்கத்தில் போகாமையும்
ஆஸ்ரிதனான விபீஷணனைக் கடாக்ஷித்தும் இறே

வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை
வதரி இட வகையாக வைகுந்தன் புகழாத் திருக் கண்டம் கடி நகரிலே
இருந்து அரசு ஆண்டாரும் பெரிய பெருமாளே இறே

எங்கும் பெரிய பெருமாளே யாகிலும்
திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடம் -என்கிறார் -(இதில் )

———

அவன் ஆச்சார்ய வரணம் செய்து ஓதின பிரகாரத்தை அனுசந்திக்கிறார்

மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா வுருவுருவே கொடுத்தானூர்
தோதவத்தி தூய் மறையோர் துறை படிய துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே – 4-8- 1-

பதவுரை

மறி–அலையெறியா நின்றுள்ள
கடல்வாய் போய்–கடலிற் புகுந்து
மாண்டானை–முதலை வாயி லகப்பட்டு உயிரொழிந்த
மாதவத்தோன் புத்திரன்–மஹா தபஸ்வியான ஸாந்தீபிநியினுடைய பிள்ளையை
ஒதுவித்த தக்கணையா–(ஸாந்தீபிநி தன்னை) அத்யயனம் பண்ணுவித்ததற்கு தக்ஷிணையாக
உரு உருவே–(அப் புத்திரன் மரணமடையும் போதுள்ள ரூபம் மாறாதபடி) யதா ரூபமாக
கொடுத்தான்–(கொணர்ந்து) கொத்தருனின எம்பெருமானுடைய
ஊர்–திருப்பதியாவது;
தோதவத்தி–பரிசுத்தமாகத் தோய்த்து உலர்த்தின வஸ்திரங்களை அணியா நிற்பவரும்
தூய் மறையோர்–நிர்த்தோஷ ப்ரமாணமான வேதத்தைத் தமக்கு நிரூபகமாக வுடையவருமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
துறை–காவேரித் துறைகளில்
படிய–அவகாஹிக்க (அதனால்)
எங்கும்–அக் காவேரி முழுதும்
துளும்பி–அலை மோதப் பெற்று (அதனால் தாமரை மலர்களின் நாளங்கள் அலைய)
போதில்–(அந்தப்) பூக்களில்
வைத்த–இரா நின்றுள்ள
தேன்–தேனானது
சொரியும்–பெருகப் பெற்ற
புனல்–நீரை யுடைய
அரங்கம் என்பது–திருவாங்கமென்னுந் திருப்பதியாம்–

மா தவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா
மஹா தபஸ்ஸைப் பண்ணின ஸாந்தீபனி புத்ரன்
மறி கடலிலே போய் முடிந்தவனை
மா தவத்தோன் ஓதுவித்ததுக்கு குரு தக்ஷிணையாக

வுருவுருவே கொடுத்தானூர்
பூர்வ மேவ யுண்டான அவயவம்
கால பரிணாமம் நடக்கிற தேசத்திலே அது இல்லாதபடி செய்த இது -என்ன ஆச்சார்யம் தான்

இப்படிக் கொடுத்தவன் நித்ய வாஸம் செய்கிற வூர்

தோதவத்தி
ஸ்நானமாடி தோய்த்து உலர்ந்தது
பட்டுப்படி -பருத்திப்படி -என்கிறவற்றிலும் காட்டில் இது இறே
ப்ராஹ்மணருக்கு யோக்யமாய் இறே இருப்பது

தூய் மறையோர்
வேதாந்தத்துக்கு வியாஸ பதம் செலுத்த வல்லவர்கள்

மறைக்குத் தூய்மையாவது
நித்ய
நிர்தோஷ
ஸ்வயம் ப்ரகாஸ
அபவ்ருஷேய
ஏகார்த்த நிர்ணாயகமாய்
அத்யந்த ரஹஸ்யமாய் இருக்கை

இதில்
பரஸ்பர தோஷ பரிஹாரம் செய்ய வல்லவருமாய்
தன் நிஷ்டருமாய் இருக்கும்
ஆழ்வான் போல்வார்
தூய மறையோர் ஆவார் –

துறை படிய துளும்பி எங்கும் போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே
எவ் வுலகத்து எவ் வவையிலும் ஓதுவார் ஓத்தான
அநந்த வேதங்களும் சொல்லுகிற
சின்னமும் திரு நாமமும் இவள் வாயனவாயத் திருந்தின பிரகாரம் அறிந்து
தொன்மையூர் அரங்கமே -என்னும் ஆசை யுடையார்
அங்கே நித்ய வாஸம் பண்ணி

கங்கையில் புனிதமான தெளிவிலாக் கலங்கல் திரு முகத் துறை படியத் துளும்பின ஜலம்
தாமரைத்தாள் முதலானவற்றை அலைக்க
பக்வமான பூக்கள் அவ் வலைச்சலாலே மலர்ந்து மது வெள்ளத்தை விட
பரந்த தேனே நிரூபகமான படியே
புனல் சூழ்ந்த திருவரங்கம் என்னும் ப்ரஸித்தியால்
பெரிய பெருமாளுக்கும் அபிமதமான ஏற்றத்தை யுடைத்தாய்
ரெங்கம் ரெங்கம் இதி ப்ரூயாத் -என்னும் படியே இறே
உரு வுருவே கொடுத்தானூர் இருப்பது –

இந் நேரை மிகவும் அறிந்த நம் ஆச்சார்யர்கள்
வணங்கும் பல துறை ஒரு துறையாக்கித்
தங்கள் அனுஷ்ட்டிக்க
இவர்களுடைய குணம் தேங்கி
எங்கும் பரந்து
ஸூ மநாக்களை
அஞ்ஞாத ஞாபன சா பேஷராக்கித்
தங்கள் பக்கலிலே அஞ்ஞாத ஞாபன சா பேஷ ப்ரார்தனையோடே வந்து
ப்ரஸ்னம் பண்ணும் படி இருப்பார்க்கு இறே
ஸம்ஸ்க்ருத திராவிட வேதங்களில்
நேர் கொடு நேர் பரஸ்பர விரோத பரிஹாரம் செய்ய வல்லராவது என்கிறது இத்தால் –

————

வைதிக புத்ர நயன ஆச்சர்யத்தை அருளிச் செய்கிறார்
கீழ்ச் சொன்ன ஆச்சர்யம் போல் அன்று இறே இது

பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப் படுத்த உறைப்பனூர்
மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்து இருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – 4-8-2 –

பதவுரை

பிறப்பு அகத்தே–ஸூதிகா க்ருஹத்திலேயே
மாண்டு ஒழிந்த–இறந்தொழிந்த
பிள்ளைகளை நால்வரயும்–புத்திரர்கள் நால்வரையும்
இறைப் பொழுதில்-ஒரு நொடிப் பொழுதில்
கொணர்ந்து–(ஸ்ரீவைகுண்டத்தினின்றும்) கொண்டு வந்து
கொடுத்து–மாதா பிதாக்கள் கையில் கொடுத்து
ஒருப்படுத்த–(இப் பிள்ளைகள் எம் பிள்ளைகள் தான் என்று) ஸம்மதி பண்ணுவித்த
உறைப்பன்–சத்தியந்தன் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்– திருப்பதியாவது:
மறை–வேதங்களிற் கூறப்பட்டுள்ள (வைதிகமான)
பெரும் தீ–சிறந்த (மூன்று) அக்நிகளையும்
வளர்த்து இருப்பவர்–(அலிச்சிந்தமாக) வளர்த்துக் கொண்டிருப்பவர்களும்
வரு–(தம்தம் திருமாளிகைக்கு) எழுந்தருளுகிற
விருந்தை–அதிதிகளான ஸ்ரீவைஷ்ணவர்களை
அளித்திருப்பவர்–ஆதரித்துப் வோருமவர்களும்
சிறப்பு உடைய–(இப்படிப்பட்ட) உத்கர்ஷங்களை யுடையவர்களுமான
மறையவர்–வைதிகர்கள்
வாழ்–வாழப்பெற்ற
திரு அரங்கம் என்பதுவே–

பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த
கிருஷ்ணனை ஆஸ்ரயித்த வைதிகன் என்று இருப்பான் ப்ராஹ்மணனுடைய ஸ்த்ரீ
ஸூதிகா க்ருஹத்திலே பிரசவிக்க பிரசவிக்க

நாய்ச்சியார்
பிராகிருத அப்ராக்ருத சக்தி பரிணாமம் காண வேணும் என்றும்
கிருஷ்ணன் விக்ரஹத்தை அங்கே காண வேணும் என்றும்
நசையாலே
ஸூதிகா க்ருஹத்திலே கிடவாதபடி
தங்கள் ஸங்கல்பத்தாலே பெறப் பெறக் கொண்டு போய் அங்கே இட்டு வைக்க

அது அறியாதே
அவளும் சோஹார்த்தையாய்ப்
பின்னையும் தன ப்ரஸவ காலத்திலே பர்த்தாவைப் பார்த்து
என் பிள்ளைகள் எல்லாரும் இங்கனே போவான் என் -என்று கிலேசித்துக் கேட்ட அளவிலே

அவனும் கிருஷ்ணன் இடம் சென்று இச் செய்திகளை அறிவித்து
என் ப்ராஹ்மணி ப்ரஸவிக்கக் காலமாய்த்து –
இனி யாகிலும் இப்பிள்ளையை ரஷித்துத் தர வேணும் என்ன

கிருஷ்ணனும் ஏகாஹ தீஷையிலே மாத்த்யாந்திக ஸ்வநத்திலே இருக்கிறவர் எழுந்து இராமல்
நான் போகிறேன் -என்று அர்ஜுனன் போய்
ஸூதிகா க்ருஹத்தைச் சூழச் சரக் கூட்டம் கட்டி நிற்க

அவள் பிரசவித்த பிள்ளை ஆகாசத்தில் கதறிக் கொண்டு போக
ப்ராஹ்மணன் அர்ஜுனனைப் பிடித்து -ஷத்ரிய அதமா -என்று
கிருஷ்ணன் பக்கலிலே இவனைக் கொண்டு போய் காட்டின அளவிலே

இவனை விடு
நான் உனது அபேக்ஷித்தத்தைச் செய்கிறேன் என்ன
அவன் இசையாத படியாலே -எல்லாரையும் கூடக் கொண்டு போய் விரஜைக்கு இக்கரையில் நிறுத்தி

அக்கரையில் போய் அங்கு திரு ஓலக்கம் குறையாமல் இருக்க
பிள்ளைகள் கிடந்த இடத்தே
இட்டு வைத்தவன் எடுத்துக் கொண்டு போகுமா போலே கொண்டு போந்து
ப்ராஹ்மணன் வாசலிலே
இவன் கண்ட வுருப்படியே காட்டிக் கொடுத்து நீக்கி விட்டான் இறே
மாதத் யந்தி னத்துக்கு முன்பே
அது தானும் மிகை இறே அத்யல்ப காலம் என்கையாலே
இத்தை
ஸத்வ தநு- என்னாதே –
ந அகாரணாத் -கேவலம் தர்ம த்ராணாய -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-51 )-என்றார்கள் இறே

உறைப்பனூர்
தேச கால அதிகாரி நியதி இன்றியிலே
நித்ய வாஸம் செய்கிற வூர்

மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார்
மறைத்தீ -பெரும் தீ
காம்ய யஜ்ஞமும் –
நித்ய யஜ்ஞமும்

காம்ய யஜ்ஞத்துக்கு
த்வீ பரார்த்த காலம் ப்ரஹ்மாவாய் இருந்து ஜீவிக்கை

நித்ய யஜ்ஞத்துக்கு வளர்த்தி யாவது
ஸங்கல்ப நிபந்தமான வர்ண பாரதந்தர்யத்தோடே
அகரணே ப்ரத்யவாய பரிஹாரம்
பிரயோஜனம் என்று இருக்கை

இவற்றுக்கு சாஷாத் பிரயோஜனம்
காம்ய தர்மத்தை விட்டு வர்ண தர்மத்தில் நிற்கையும்
வர்ண தர்மத்தை த்யஜித்து
வெண்ணெய் யுண்ட வாயனான இன்னமுதான பெரிய பெருமாளை உபாய நிரபேஷமாகப் பற்றி
மற்ற ஒன்றினைக் காணாது இருக்கையும் –

வரு விருந்தை அளித்து இருப்பார்
இப்படி ஸாஸ்த்ர ஜன்ய ஞானத்தாலே கரை ஏறினார்கள் உளர் ஆகில் -அவர்களுக்கும்
இந்த நிரதிசய புருஷார்த்தம் உபதேச கம்ய ஞானத்தாலே ஸித்தித்த பாகவதர்க்கும்
கைங்கர்ய பரராய் தம் தாம் திரு மாளிகையிலே எழுந்து அருளி வந்த ஸ்ரீ வைஷ்ணவர்களை
ஸ்வரூப அனுரூபமாக ஆதரித்து அமுது செய்யப் பண்ணியும்

இவர்கள் அமுது செய்வதற்கு முன்னே வேறே சில ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஸ்வரூப அனுரூபமாக அங்கே அமுது செய்யும் படி அருளிச் செய்ய வேணும் என்று பிரார்த்தித்தால்
தங்கள் இழவு பாராதே
பர ஸம்ருத்தியே பிரயோஜனம் என்று இருக்கையும்

இழவு தோன்றித்தாகில்
தாங்களும் அவர்களோடே சென்று அங்கே அமுது செய்கையும்
இங்குச் சமைந்த வற்றையும் அங்கு கொண்டு போய் அமுது செய்கையும்

வந்து மேயும் குருகினங்கள் போல் அன்றிக்கே
அபேக்ஷித்து அழைத்தால்
வரு விருந்தான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்வரூப அனுரூபமாக
நியதமான பதார்த்தங்களில் அவர்கள் அபிமதமான பதார்த்தங்கள் தமக்கு அரிதாய்த்தாகில்
வருந்தியும் தேடி அமுது செய்யப் பண்ணி இருப்பார் –

பாகவத் சேஷத்வ ஸீமை அன்றோ ஸ்வரூபம்
அப்போது அவர்கள் அபிமதத்தில் தமக்கு ஸக்யமானவையும் உபகரிக்க வேண்டாவோ
ரஹஸ்ய ரூபேணவும் என்னில்
இவர்கள் உபகரித்தாலும் அவர்கள் அங்கீ கரியாமையால் இவர்கள் உபகரிக்க விரகில்லை

பகவத் விஷயத்தில் பிரார்த்தனை போல் பிரார்த்தித்திக் கொடுத்தால் அவர்கள் அங்கீ கரியாமை என் என்னில்
பகவத் விஷயத்திலும் போக்ய பூர்வகமான போக்த்ருத்வம் இறே சேதனர்க்கு உள்ளது
போக்த்ருத்வம் முந்துமாகில் முகோலாஸ ப்ராப்யம் ஸித்தியாமையால் ஸ்வரூப நாஸமும் வரும் இறே
ஆகையால் இங்கும் அவர்கள் கொடுத்தாலும் அவர்கள் ஆதரியார்
( அஹம் அன்னம் முதலில் பின்பே அஹம் அந்நாத -படியாய் கிடந்தது பவள வாய் காண வேண்டுமே )

உபய அநு ராகமான மதீயத்வம் உண்டாகையாலே
இவ் வர்த்தத்தை அறிந்தவர்கள் உபகரிப்பதும் செய்யார்கள் –
உபகரிக்கில் உபய அநுராகம் இல்லாத பதார்த்தங்களை அவர்கள் விரும்பினார்களாகில் அவற்றை உபகரிக்கும் அத்தனை
இந் நேர் அறியாதார் செய்து போகிறதை அறிந்தவர் செய்யார் இறே

இவ்விடத்தில் நம்பிள்ளை அரக்கறைச் சூடிக்கு அருளிச் செய்த வார்த்தை
சந்மர்யாதா அதி வர்தநமோ என்னில்
அதுவும் லோக அபவாத பீதி பரிஹார அர்த்த மாகவும்
லோக ஸங்க்ரஹதயா கர்த்தவ்யமாகவும் அன்றிக்கே
மங்கள ரூபேண
ஷேத்ராணி மித்ராணி-இத்யாதி ஸர்வே பவந்தி பிரதிகூல ரூபா
இதில் உபய அநுராகம் இல்லை —
நல்ல புதல்வர் படியே (ஞான சாரம் -இவை அனைத்தும் அல்லல் )
இவ்வதிகாரிக்கு தேஹ தாரண ஸுவ்ஷ்ட்டவ மாத்ரமே பொறுப்பது –

சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பு -என்கிற
சிறப்பை யுடையவர்கள் என்னுதல்

இது தன்னைத் தங்கள் பக்கலிலே ஞான அனுஷ்டான ஸா பேஷராய்
நித்ய சேவை செய்து போரும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பக்கலிலே இவ்வர்த்தத்தை அனுசந்தித்து

உடையவர் திருக் குருகைப் பிரான் பிள்ளானையும்
அருளாளப் பெருமாள் எம்பெருமானாரையும் திரு உள்ளம் பற்றி இருக்குமா போலேயும்

பெரிய நம்பி முதலானோர் உடையவரைத் திரு உள்ளம் பற்றி இருக்குமா போலேயும்

நஞ்சீயர் நம்பிள்ளையைத் திரு உள்ளம் பற்றி இருக்குமா போலேயும்

பெரிய வடக்கில் திருவீதிப் பிள்ளை தம் திரு மகனான லோகாச்சார்யாரைத் திரு உள்ளம் பற்றி இருக்குமா போலேயும்

வளர்த்ததனால் பயன் பெற்றுச் சிறப்புடைய மறையவர் வாழ் என்னுதல்

இவை எல்லாமாகிலும்
சிறப்புடைய மறையவர் என்கிறது
கலியும் கெடும் என்கிற விஷயத்தைக் கண்டு கொண்டவர்களையே இறே

வாழ்
நல்லோர்கள் வாழ் நளிர் அரங்கம் -என்று இறே
கோயிலிலே வாழ்வு இருப்பது

திரு வரங்கம்
மண்ணில் பரிமளமாயும் இருக்கிற பிராட்டிமார்
நித்ய வாஸம் பண்ணுவதும் இங்கேயே இறே

என்பதுவே
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராண பிரசித்தமே அன்றிக்கே
ஆழ்வார்கள் எல்லாரும்
திரு மகளாரும்
ப்ராப்யமாக விரும்பி அருளிச் செய்த ப்ரஸித்தி இறே முக்யம்
(பதின்மர் பாடும் கோயில் என்பதே பிரதானம் )

தர்மஞ்ச ஸமய பிரமாணம் வேதாஸ் ஸ

திருவரங்கம் என்பதுவே உறைத்திட்ட வுறைப்பனூர் –

———–

மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உரு மகத்து வீழாமே குருமுகமாய்க் காத்தானூர்
திருமுகமாய் செங்கமலம் திருநிறமாய் கரும் குவளை
பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே – 4-8-3-

பதவுரை

மருமகன் தன்–மருமகனான அபிமன்யுவினுடைய
சந்ததியை–புத்திரனான பரிஷித்தை
உயிர் மீட்டு–மறுபடியும் உயிர் மீட்டு
மைத்துனன் மார்–மைத்துனன்னாரான பாண்டவர்களுடைய
உரு–சரீரமானது
மகத்து–(பாரத யுத்தமாகிற) நரமேதத்திலே-அஸ்வ மேதம் போல் இது நர மேத யாகம்
வீழாமே–விழுந்து அழிந்து போகாதபடி
குரு முகம் ஆய்–ஆசார்ய ரூபியாய்
(ஹித உபதேசங்களைப் பண்ணி)
காத்தான்–ரக்ஷித்தருளிய கண்ண பிரானுடைய
ஊர்–திருப்பதி யாவது:
செம் கமலம்–செந்தாமரை மலர்களானவை
திரு முகம் ஆய்–(பெரிய பெருமாளுடைய) திரு முகத்துக்குப் போலியாகவும்
கரு குவளை–நீலோத்பல புஷ்பங்கள்
திரு நிறம் ஆய்–திருமேனி நிறத்துக்குப் போலியாகவும்
பொரு முகம் ஆய் நின்று–(ஒன்றுக் கொன்று) எதிர் பொருகிற முகத்தை யுடைத்தாய் கொண்டு
அலரும்-நீர்வளத்தையுடைய
புனல்–நீர் வளத்தை யுடைய அரங்கம் என்பது–

மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு
உத்தரை தன் சிறுவனான மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு

தன் என்று
அவனுடைய விருப்பத்தைக் காட்டுகிறது

மைத்துனன் மார் உரு மகத்து வீழாமே
1-திரௌபதியினுடைய ஸஹ தர்ம பதி விரத அக்னியாலும்
2-சரணாகதை யுடைய பரிபவத்தில் லஜ்ஜை அசக்தி கண்டு இருந்த தந்தாமுடைய சக்தி லஜ்ஜா அபாவத்தாலும்
3-நியாய நிஷ்டூர (எதிரான )தர்மத்தை முக்கியமாக நினைத்து இருந்த பிரமத்தாலும்
4-ருணம் ப்ரவர்த்த மிவ -என்ற கிருஷ்ண அபிப்ராயத்தாலும்
கரிக் கட்டை போலே அழிந்து சரணாகதைக்காகக் கொடுத்த சரீரங்களைப்
பின்னையும் மகத்து என்கிற சப்தம்-
மகத்தாய்
மஹத்தான யுத்தத்தில்
மடிந்து போகாமல் என்னுதல்

மகம் என்று
யஜ்ஞமாய்
யுத்தம் நரமேத யஜ்ஞமாய்
அதிலே கொலை யுண்ணாமல் என்னுதல்

பிரகரண ஒவ்சித்யங்களாலே சப்தங்கள்
விரிந்தும்
சுருங்கியும் வரும் இறே

குருமுகமாய்க் காத்தானூர்
கீத உபநிஷத் ஆச்சார்யனாய்
அஞ்ஞாத ஞானம் செய்து கொண்டு போருவது
அதில் முதிர்ச்சி தோன்ற விபூதி அத்யாய விஸ்வரூபம் காட்டுவது
அதுவும் போராமல் -மாம் -அஹம் -என்று தன்னைக் காட்டுவது
வ்ரஜ -த்வா-மாஸூச -என்று தெளிவித்து
தவ வசனம் கரிஷ்யே -என்பித்து
ஈஸ்வரனான தான் இவர்களை சிஷ்ய வர்க்கமாக்கித்
தான் முகஸ்த்தனாய் (முன்னே நிற்பவனாய் )-குருவாய் ரஷித்தான் -என்னும் இடம்

அபாண்டவஸ்ய என்ன
ஏவுக்கும் இலக்குக்கும் (அம்புக்கும் கர்ப்பத்துக்கும் ) நடுவே-யாதவஸ்ய -என்பது
பாலப் பிராயத்தே அருள் செய்வது
என்னுடைய பஞ்ச வ்ருத்தி பிராணன் -என்றவை
முதலாக ரக்ஷித்தான் என்னும் இடம் பிரசித்தம் இறே

இப்படி இருக்கிறவன்
நித்ய வாஸம் செய்கிற வூர் –

திருமுகமாய் செங்கமலம் திருநிறமாய் கரும் குவளை
திரு முகத்துக்கு சத்ருசம் செங்கமலமாய்
திரு நிறத்துக்கு ஸத்ருசம் கருங்குவளையாய்

பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே
ஒன்றோடு ஓன்று பொருந்தி ப்ரபைகள் பிரதி பிம்பிக்கும் படி அலரா நின்ற புனலாலே
சூழப்பட்ட திருவரங்கம் என்பது –
காத்தானூர்

இத்தால்
கண்ணன் கோள் இழை வாண் முகத்தே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும்
உருவொத்தன நீலங்களே -என்று
சமுதாய சோபைக்குத் தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் காட்டுகிறது –
(நீல மேனி ஐயோ சமுதாய சோபை )

————

இவ்வளவேயோ -பித்ரு வசன பரிபாலனம் செய்த அருமை என்கிறார் –

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –

பதவுரை

கூன்–கூனைவுடைய
தொழுத்தை–அடியாட்டி -வேலைக்காரி யாகிய மந்தரை யானவள்
சிதகு–(ஸ்ரீராமபட்டாபிஷேக மஹோத்வசத்துக்கு விநாசகமான தீய சொற்களை
உரைப்ப–சொல்ல (அச் சொற்களை அங்கீகரித்துக் காட்டுக்கு எழுந்தருளச் சொன்ன)
கொடியவள்–மஹா க்ரூரையான கைகேயியினுடைய
வாய்–வாயிலுண்டான
கடிய சொல்லைக் கேட்டு–கடினமான சொல்லைக் கேட்டு
ராமன் திரு முகம் பார்த்த பின்பு இவள் பேசியதால் இது கூனியை விட கடிய சொல்
ஈன்று எடுத்து தாயாரையும்–(தன்னைப்) பெற்று வளர்த்த தாயான ஸ்ரீகௌஸலையாரையும்
இராச்சியமும்–ராஜ்யத்தையும்
ஆங்கு ஒழிய–கைவிட்டு
தொழத்தை–அடிமைப் பெண்
தாயார்–பூஜையிற்பன்மை
கண்டகர்–முள்ளைப் போன்றவர்
கான் தொடுத்த நெறி போகி–காடுகள் அடர்ந்திரா நின்றுள்ள வழியே (ஸ்ரீதண்டகாரணியத்திற்கு) எழுந்தருளி
கண்டகரை–(முனிவர்களுக்கு) முள் போலப் பாதகராயிருந்த (ஜநஸ்தாந வாசிகளான ராக்ஷஸரை
களைந்தான்–நிரஸித்தருளின எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதி யாவது
தேன் தொடுத்த மலர்–தேன் மாறாத மலர்களை யுடைய
சோலை–சோலைகளை யுடைத்தான
திரு அரங்கம் என்பது–

கூன் தொழுத்தை சிதகுரைப்ப –
அவள் சரீரம் கோணினால் போலே காணும்
தொழும்பியுடைய நெஞ்சில் கோணுதலும் தோன்றச் சிதகுரைத்த படி

சிதகாவது
அவள் குணாதிகையாய் வார்த்தை சொல்லி சம்பாவிக்க-
அவள் சம்பாவனையும் சிதறி
அவள் வார்த்தையும் சிதையும்படியான
துர் உக்திகளைச் சொல்லுகை இறே

கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
இவளுடைய கொடிய வார்த்தையை கேட்டவளுடைய கடிய சொற்களைக் கேட்டு

அவள் இவன் முகம் பாராது இறே துர் யுக்திகளை சொல்லிற்று –
இவள் ரமயதீதி ராம -என்கிறவருடைய முகத்தைப் பார்த்து இறே சொல்லிற்று
இவள் அவளிலும் கடியவள் இறே
அவளுக்கும் தாஸி இவள் இறே

ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
ஐயரைத் தேற்றிப் பொகிடீர் -என்ன

நான் அவரை சோக நிவ்ருத்தி பண்ணிக் கொள்கிறேன்
புத்தி பேதிக்கிலும் நீர்
இப்போதே போம் என்ற சொல்லைக் கேட்பதாம்

லோக ரக்ஷணார்த்தமாகவும்
தன்னுடைய ஸ்நேஹ கார்யமாகவும்
பெற்று எடுத்தவள் வார்த்தை கேளாமல் –
விஸ்லேஷ அஸஹ மாநத்தாலே வாடின சராசரங்களை ஒழியக்
கான்று ஓடுத்த நெறி போனதாம் –

கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
வாடின சராசரங்களை ஒழியக் கான்று ஓடுத்த நெறி போனதாம் –
இதுக்கு எல்லாம் அடி
கண்டகரை களைகை இறே

விரோதி நிரஸனம் ஒரு தலையானால்
தோஷா குணாகுணா தோஷா -என்கிறபடியே
தோஷ குணங்கள் மாற்றும்படியாய் இறே இருப்பது –
(மாதா சொல் மாறாத -சராசரங்களை விட்டுப் பிரிந்த தோஷமும்
குணமாகுமே இவர் கண்டகரைக் களைய போனதாலே )

கான் தொடுத்த
இடை வெளி அறச் செறிந்த காடு

கண்டகர்
ஆஸ்ரித விரோதிகள்

நெறி போகி களைந்தானூர்

ஏவம் பிரகார பூதனானவன்
நித்ய வாஸம் செய்கிற தேசம்

தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே
தேன் மாறாத மலர்களால் அலங்க்ருதமான சோலை என்னுதல்
வண்டுகள் மது பானம் செய்து களித்து வார்த்தைக்கும் சோலை என்னுதல்

கோல் தேன் பாய்ந்து ஒழுகும் -என்னுமா போலே கொம்பிலே தேன் என்னுதல்
சோலைத் திருவரங்கம் கண்டகரை களைந் தானூர்

இத்தால்
ஸர்வ ரஸ ஸர்வ கந்த என்கிற பெரிய பெருமாளுக்கு
ஸர்வ ரஸ ஸர்வ கந்த விகாஸ ஸூ மநாக்களாய் ஸூரிகளும்
செண்பகமாய் நிற்கும் முமுஷுக்களும்
ஸ்த்தாவர ரூபேண நின்று
அடிமை செய்வார்கள் என்று காட்டுகிறது –

(அணைய புணைய ஊர பெரியோரும் பெருமக்களும்
பிரார்த்தித்து பரிக்ரஹித்து வாழ்வார்கள் அன்றோ )

————-

பெருவரங்கள் அவை பற்றி பிழக்கு உடை இராவணனை
உருவரங்க பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தானூர்
குருவு அரும்ப கொங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே என் திரு மால் சேர்விடமே – 4-8 5- –

பதவுரை

குரவு–குரவ மரங்களானவை
அரும்ப–அரும்பு விடா நிற்க
கோங்கு–கோங்கு மரங்களானவை
அலரா–அலரா நிற்க.
குயில்–குயில்களானவை
கூவும்–(களித்துக்) கூவும் படியான
குளிர் பொழில் சூழ்–குளிர்ந்த சோலைகளாலே சூழப் பெற்ற
திரு அரங்கம் என்பது–திருவரங்கமென்னும் திருப்பதியானது;
பெரு–பெருமை பொருந்திய
அவை வரங்களை
பற்றி–பலமாகக் கொண்டு
பிழக்கு உடைய–(தேவர் முனிவர் முதலாயினோரிடத்துப்) பிழை செய்கையையே இயல்பாக வுடைய
இராவணனை–இராவணனுடைய
உரு–உடலானது
மங்க–சிந்ந பிந்நமாம்படி
பொருது அழித்து–போர் செய்து (அவனைத்) தொலைத்த
இ உலகினை–இந்த லோகத்தை
கண் பெறுத்தான்–காத்தருளினவனும்
என்–எனக்குத் தலைவனும்
திருமால்–ஸ்ரீய: பதியுமான எம்பெருமான்
சேர்வு இடம்–சேருமிடாகிய
ஊர்–திருப்பதியாம்-

பெரு வரங்கள் அவை பற்றி பிழக்கு உடை இராவணனை
ப்ரஹ்ம ஈஸா நாதிகளாலே பெற்ற வரங்களைத் தனக்குத் தஞ்சமாகப் பற்றி
இவ் வரங்கள் உள்ளதனையும் நமக்கு பிழை வாராது என்று
தான் தேவர் ரிஷிகளுக்கு எல்லாம் பிழைகளே செய்து வரும் ராவணனை

ரமயதீதி ராம -என்கிறவருக்குப் பிரதியான ராவணனை
(ராவணோ லோக ராவணா -என்கிறபடி )

பிழக்கு -பிழை

உருவரங்க பொருது அழித்து
அவனுக்கு ரூப ஹானியாக
அவன் புத்ர மித்ரர்களில் யுத்த உன்முகர் ஆனவர்களை எல்லாம் அழித்தவன்

ச சால சாபஞ்ச முமோச வீர -என்னும்படி
வெறும் கை வீரனாக்கி
இப்போதாகிலும் சொன்னது செய்தானாமோ என்னும் நசையாலே
போய் வா என்றது
ரூப ஹாநியாய்த்து போனால் போலே வாராமையாலே இறே

உருவரங்க
அரங்க -என்றது
கழிய என்றபடி

ஆனாலும் வரச் சொல்ல வந்தவனோடு பொருகையும்
கொல்லுகையும்
தவறுதல் உண்டானாலும்
கர்தவ்யமோ என்னில்

இவன் சேவகக் கோழை யாலே விஜய ஸா பேஷனாய் வர மாட்டான் –
பெருமாளுக்கும் இவனைக் கொல்லுகை குண பாவம் அன்று –
ஆனால் கூடின படி என் என்னில்

பெரிய கோபத்தோடே வந்து
கொன்று போ என்று சலிப்பித்துப் போக விட்டு
விஜயத்தோடே நிற்க
அவரைக் கால் கட்டின பின் உதறிப் போந்தது இறே உள்ளது

இவ்வுலகினை கண் பெறுத்தானூர்
அஞ்சினோம் என்று இவ் விலங்கையில் உள்ளாருக்கு
ஒரு ரக்ஷகனைக் கொடுத்தவன் என்னுதல்

எல்லா லோகத்துக்கு உண்டான விரோதியைப் போக்கித்
தன்னை உண்டாக்கிக்
கண் பெறுத்து வித்தானூர்

கண் இல்லை இறே தன்னைப் பாராதார்க்கு
யஸ் ச ராமம் ந பஸ்யேத்–தன்னைப் பாராதார்க்கு
கண்கள் வச வர்த்தி யாகாதாப் போலே
தன்னைப் பார்த்தார்க்கும் கண்கள் வச வர்த்தி ஆகாது இறே

பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹரிணாம்
இவ் விளைப்பாறி கண் வளருகிறவனூர்

குருவு அரும்ப கொங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ் திருவரங்கம் என்பதுவே
குரவு கோங்கு முதலான வ்ருக்ஷங்கள் புஷ்பிதங்களாகவும்
குயில் வண்டுகளை அழைத்துக் கூவும் படியாகவும்
வண்டுகள் முகத்தில் ஒழியப் பூ அலராது இறே

குளிர்த்தியை யுடைத்தான சோலையாலே சூழப்பட்ட திருவரங்கம் என்று
பரம பதத்திலும் –
வ்யூஹ -விபவங்களிலும் –
மற்றும் உகந்து அருளினை நிலங்களிலும் –
எல்லா ஸாஸ்திரங்களிலும் ப்ரஸித்தம் என்கையாலே –
என்பதுவே என்கிறார் –

என் திரு மால் சேர்விடமே
என் திருமால் என்று
வஸ்து நிர்தேஸித்தால் போலே
அவனுக்குச் சேர்விடம் ஆவதும் இதுவே
என்று நிர்தேஸிக்கிறார்

இவர் நிர்தேஸித்த இடத்தில் விரும்பி கண் வளருகையாலும்
என் திருமால் என்கிறார்

இவ்வுலகினைக் கண் பெறுத்தானான
என் திருமால் சேர்விடமான வூர்
திருவரங்கம் என்பதுவே

இத்தால்
முமுஷுக்களும்
ஸூரிகளும்
ஸ்த்தாவர ரூபிகளாய் நின்று -(குருவு அரும்ப கொங்கு அலற )
பெருமாளை ஸேவிக்கப் பெற்றோம் என்கிற ஸுமநஸ்யத்தை
மதுர பாஷிகளான நம் ஆச்சார்யர்கள் (குயில் கூவும்)
அக்கரை நோக்கின ஆர்த்த ப்ரபன்னரை அழைத்துக் காட்டி
இந்த ஸூ மனாக்களோடே சேர்த்து
திருப்தியை விழைப்பித்து (குளிர் பொழில் சூழ் திருவரங்கம் என்பதுவே )
தாங்களும் உகந்து
வர்த்திக்கும் தேஸம் என்று காட்டுகிறது –

———–

கீழ் உலகில் அசுரர்களை கிழங்கு இருந்து கிளராமே
ஆழி விடுத்தவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8- 6-

பதவுரை

கீழலகில்–பாதாள லோகத்திலுள்ள
அசுரர்களை–அஸுரர்களை
கிழக்க இருந்து–அடக்கிடந்து
கிளராமே–கிளம்ப வொட்டாதபடி
ஆழி விடுத்து திருவாழியாழ்வானை ஏவி
அவருடைய–அவ் வசுரர்களுடைய
கரு–கர்ப்பந்தமாக
அழித்த–அழித்தருளினதாலும்
அழிப்பன்–சத்ருக்களைத் தொலைத் தருளுவதையே இயல்பாக வுடையவனுமான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்–திருப்பதி யாவது:
யாழ்–(வீணையினுடைய ஓசை போன்ற)
இன் ஓசை–இனிய இசையையுடைய
வண்டு இனங்கள்–வண்டுகளின் திரள்களானவை
தாமழை மடலூடு–(மலரத் தொடங்குகிற) தாழை மடல் முன்னே
உறிஞ்சி–உடம்பை உரசிக் கொண்டு (புகுந்து)
தவள வண்ணப் பொடி–(அம்மடலிலுள்ள)வெளுத்த நிறத்தையுடைய வண்ணத்தை
அணிந்து–உடம்படங்கலும் அணிந்து கொண்டு
அந்தக் களிப்பிலே
ஆளம் வைக்கும்–தெனதென என்று ஆளத்தி வைத்து பணிமிடமான
அரங்கம்–திருவரங்கம்–

கீழ் உலகில் அசுரர்களை கிழங்கு இருந்து கிளராமே ஆழி விடுத்தவருடைய கருவழித்த வழிப்பனூர்
மேல் உலகில் தேவர்களுக்காக
கீழ் உலகில் வர்த்திக்கிற அஸூரர்களை நிரஸிக்க

அடிக் கெடாமல் வந்தபடியாலே
திருவாழி ஆழ்வானை ஏவி
அவர்களுடைய கருக்குலைய அறுத்துப் பொகட்டு அழித்த ஸர்வேஸ்வரன்
நித்ய வாஸம் செய்கிற தேசம்

தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ண பொடி அணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே
தாழை மடலுக்குள் நெருங்க முழுசி
அப் பூவில் உண்டான வெள்ளைச் சுண்ணம் அணிந்த உடம்போடு கர்வித்து
யாழ் நரம்பில் கிளம்பின த்வனியாலே வந்த இசை போலே
வண்டினங்களானவை ஆளத்தி வைக்கும்படி
தாழை முதலான சோலையை யுடைத்தான திருவரங்கம்
கருவழித்த வழிப்பனூர்

இத்தால்
தூரத் கந்திகளாய் -(தாழை – தூரமாக இருந்தாலும் மணம் கமழும் அன்றோ )
ஸூத்த ஸ்வபாவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய (தவள வண்ண பொடி )
ஸ்ரீ பாத ரேணுவை
ப்ரபன்னரானவர்கள் (வண்டினங்கள்)
சிரஸா வஹித்து
தர்ஸனத்தர் சீரை அறிந்து ஆனந்த நிர்பரர்கள் ஆவர்கள் என்று காட்டுகிறது –

————-

கொழுப்புடைய செழும் குருதி கொழித்து இழிந்து குமிழ் தெறிய
பிழக்கு உடைய வசுரர்களை பிணம் படுத்த பெருமானூர்
தழுப் பரிய சந்தனங்கள் தடவரை வாய் ஈர்த்து கொண்டு
தெழிப் படைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே – 4-8 -7-

பதவுரை

கொழுப்பு உடைய–கொழுப்பை யுடையதும்
செழு–செழுமை தங்கியதுமான
குருதி–ரத்தமானது
கொழித்து–ஊற்று மாறாமல் கிளர்ந்து
இழிந்து–நிலத்தில் பரவி
குமிழ்ந்து–குமிழி கிளம்பி
பிழக்கு உடைய–(பர ஹிம்சையாகிய) தீமைகளைச் செய்கிற
அசுரர்களை–அஸுரர்களை
பிணம் படுத்த–பிணமாக்கி யருளின
பெருமான்–எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதியானது:
தழுப்பு அரிய–(ஒருவரிருவரால்) தழுவ முடியாத
சந்தனங்கள்–சந்தந மரங்களை
தடவரைவாய்–பெரியமலைகளினின்று
ஈர்த்துக் கொண்டு–(வேரோடே பிடுங்கி) இழுத்துக் கொண்டு வந்து
(இவற்றைத் திருவுள்ளம் பற்ற வேணும் என்று எம்பெருமானைப் பிராரத்திக்கின்றதோ என்னலாம்படி)
தெழிப்பு உடைய–இரைச்சலை யுடைய
காவிரி-திருக்காவேரி நதியானது
அடி தொழும்–(எம்பெருமானது) திருவடிகளைத் தொழுகையாகிற
சீர்–சீர்மையைப் பெற்ற
அரங்கம்–திருவரங்க நகராம்–

கொழுப்புடைய செழும் குருதி கொழித்து இழிந்து குமிழ் தெறிய பிழக்கு உடைய வசுரர்களை
நிணம் (மாம்சம் )கொழுத்து செருக்கும் படியாக இறே ஊட்டி இட்டால் போலே
சரீரங்களை வர பல புஜ பலங்களாலே வளர்த்துப்
பிழை செய்து பொருகிற மலை போல் இருக்கிற அஸூரர்களுடைய சரீரங்களை
பிள எழ விட்ட கூட்டம் (பெரிய திருமொழி -11 -துவாதச நாம திரு மொழி ) -என்னும் படி
குத்திப் பிளக்க ஊற்று மாறாமல்
ரத்தம் கிளம்பி நிலத்திலே இழிந்து குமிழி எழக் குதித்து அலை எறியும்படி –

பிணம் படுத்த பெருமானூர்
பிணமாக்கின சர்வேஸ்வரன் நித்ய வாஸம் செய்கிற தேசம் –

தழுப் பரிய சந்தனங்கள் தடவரை வா ஈர்த்து கொண்டு
நால்வர் இருவர் தழுவினாலும் கைக்கு அடங்காத படி இடமுடைத்தான மலை மேலே நின்று வளர்ந்த
சந்தன மரங்களை வேர் பறிய வகழ்ந்து ஈர்த்துக் கொண்டு

தெழிப் படைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே
இது பெரிய பெருமாளுக்கு சாத்துப்படியாம் –என்று தெளிந்து காவேரியானது வந்து
திருவடிகளிலே சமர்ப்பித்துத் தொழா நிற்கும்படி சீரிதான திருவரங்கம் என்கிறார்

இத்தால்
அங்கு வர்த்திப்பார் எல்லாம் நல்ல பதார்த்தம் கண்டால்
பெரிய பெருமாள் திருவடிகளிலே நிருபாதிகமாக ஸமர்ப்பித்துத்
திருவடி தொழுவார்கள் என்கிறது –

————–

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-

பதவுரை

வல் எயிறு கேழலும் ஆய்–வலிவுள்ள பற்களையுடைய வராஹமாய்த் திருவவதரித்தும்,
வாள் எயிறு சீயமும் ஆய்–ஒளியை யுடைய பற்களை யுடைய நரஸிம்ஹமாயத் திருவவதரித்தும்
எல்லை இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான்–ஹிரண்யாஸுரனையும் கிண்டருளின எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதியாவது
இரு சிறை வண்டு–பெரிய சிறகுகளையுடைய வண்டுகளானவை
எல்லியம் போது–அந்திப் பொழுதிலே
எம்பெருமான் குணம் பாடி–பெரிய பெருமாளுடைய திருக் குணங்களைப் பாடிக் கொண்டு
மல்லிகை வெண் சங்கு ஊதும்–மாலைப்பூவான மல்லிகைப் பூவாகிற வெளுத்த சங்கை ஊதா நிற்கப் பெற்றதும்
மதிள்–திருமதிள்களை யுடையதுமான
அரங்கம் என்பது-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
வலிய எயிறுகளை யுடைய ஸ்ரீ வராஹமும் ஸ்ரீ நரஸிம்ஹமுமாய்

எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
முழுகி எல்லை காண ஓண்ணாமல் பாதாள கதையான பூமியையும்
பிராதி கூல்யத்துக்கு எல்லை காண ஒண்ணாத படியான பாகவத அபசாரத்தையும்
(தவத்துக்கு எல்லை இல்லை மா முனிகள் வியாக்யானம் )
விளைத்துக் கொண்ட ஹிரண்யனை
கொம்பாலும்
திரு உகிராலும்
இடந்தானூர்

எல்லியம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே
சந்த்யா காலமான ராத்ரியிலே முகிளி தமான மல்லிகைப் பூக்களின் மேல் இருந்து
மது பாநம் பண்ணும் பெரிய சிறகை யுடைத்தான வண்டுகளின் த்வனி
தூய்தாக வெளுத்த சங்கத்தை ஊதினாலே போலே இருப்பதான
கொடி படர்ந்த சோலைகளாலும் திரு மதிள்களாலும் சூழப்பட்ட
திருவரங்கம் அவுணனையும் இடத்தானூர்

பெரிய பெருமாளுடைய திவ்ய குணங்களைப் பாடி ஊதினால் போலே இறே
கர்வத்தாலே மேலே பறப்பது
பூவின் மேலே வண்டுகள் வருவதாய் இருப்பது

இத்தால்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கும்
ஆர்த்த ப்ரபன்னருக்கும் உண்டான சம்பந்த ப்ராதான்ய
ப்ரகாசத்தைக் காட்டுகிறது

அன்றிக்கே
ஷட் பத நிஷ்டராய் பகவத் குணங்களுக்குப் போக்கு விடுமவர்களுக்கும்
ஸூத்த ஸ்வபாவரான ஸூ மநாக்களுக்கும் உண்டான சேர்த்தி சொல்லுகிறது –

————-

அநேக த்ருஷ்டாந்தம் இட்டுச் சொல்ல வேண்டும்படியான
விக்ரஹ வை லக்ஷண்யத்தை யுடையனாய்
ஆஸ்ரித வ்யாமுக்தனானவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார் –
பரத்வாதிகளை உபமான த்வாரா கோயிலிலே அருளிச் செய்கிறார் –

(மேகம் -பரத்வம்
குவளை -அலர்வது உள்ளம் அந்தர்யாமி
கடல் வ்யூஹம்
மயில் -விபவம் )

குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல்
நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமாலூர்
குன்றாடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலை அணவி
மன்றூடு தென்றல் உலா மதிள் அரங்கம் என்பதுவே -4- 8-9 –

பதவுரை

குன்று ஆடு–மலையினுச்சியிற் சார்ந்த
கொழு முகில் போல்–நீர் நிறைந்த மேகம் போலவும்
குவளைகள் போல்–கரு நெய்தல் பூப்போலவும்
குரை–ஒலி செய்யா நின்ற
கடல்போல்–கடல் போலவும்
நின்று ஆடு–(களிப்பாலே) நின்று ஆடா நின்றுள்ள
மயில் கணம் போல்–மயில்களின் திரள் போலவும் (இரா நின்ற)
நிறம் உடைய–வடிவழகை யுடையவனான
நெடுமால்–எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
ஊர்–திருப்பதி யாவது
தென்றல்–தென்றல் காற்றானது
குன்று–(மலய) பர்வதத்திலுள்ள
பொழிலூடு–சோலைகளினிடையிலே
அழைத்து–அழைத்து
(அங்குள்ள பூத்களின் தாதுகளை அனைத்து பரிமளத்தைக் கொய்து கொண்டு)
கொடி இடையார்–கொடி போன்ற இடையை யுடையரான பெண்களினுடைய
முலை–(கலவைச் சாந்தணிந்த) முலைகளை
அணவி–வியாபித்து
(அந்தப் பரிமளத்துடனே)
மன்றூடு–நாற் சந்திகளினூடே
உலாம்–உலாவப் பெற்ற மதிள் அரங்கம் என்பது-

குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல்
பர்வத அக்ரத்திலே மிகவும் நீர் கொண்டு எழுந்து ஸஞ்சரிக்கிற மேகம் போலேயும்
அப்போது அலர்ந்த குவளைகள் போலவும்
மிக்க ஆரவாரத்தை யுடைத்தான கடல் போலவும்
வர்ஷாவில் ஸஞ்சரிக்கிற நின்று ஆடுகிற மயில் திரள் போலவும்

நிறமுடைய நெடுமாலூர்
திரு நிறத்தையும்
மிக்க வியாமோஹத்தையும்
உடைய பெரிய பெருமாள் நித்ய வாஸம் செய்கிற வூர்

குன்றாடு பொழில் நுழைந்து
மலய பர்வத்தில் பொழில்களூடே நுழைந்து
அங்குத்தைப் பரிமளத்தைக் கொடு போந்து

கொடி இடையார் முலை அணவி
வல்லி ஜாதக் கொடி போலே இருக்கிற இடையை யுடைய ஸ்த்ரீகளுடைய முலைகளில்
அங்கராக பரிமளத்தை அளைந்து கொண்டு போந்து

மன்றூடு தென்றல் உலா மதிள் அரங்கம் என்பதுவே
இளம் தென்றல் பசும் கொழுந்தானது உள் புகப் பெறாமல் மன்றிலே நின்று தடுமாறி உலவா நின்றது
இதன் வரவு பார்த்துப் படுக்கை படுப்பார் இல்லை இறே அவ்வூரிலே

பற்றிலார் பற்ற
அற்ற பற்றர் சுற்றி வாழுமூர் இறே

இது புறம்பே நின்று உலாவுமது ஒழியச் செய்யலாவது இல்லை இறே
பெரிய பெருமாள் ஆஜ்ஜை நடமாடுகிற வூரிலே காமன் ஆஜ்ஜை நடையாடாதே
இது புகுராமைக்கு இறே மங்களா ஸாஸன பரர் திரு மதிள் இட்டது
உள்ளிருப்பார் மங்களா ஸாஸன பரரே இறே
கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணா என்று இறே அவர்கள் இருப்பது –

———–

நிகமத்தில் இத் திரு மொழியைக் கொண்டு ஸ்ரீ பெரிய பெருமாளை ஏத்தும் அவர்கள்
விஷயத்தில் தமக்கு உண்டான சேஷத்வ பிரதிபத்தியை அருளிச் செய்கிறார்

பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல்
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு
இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 -8-10 –

பதவுரை

பருவரங்கள் அளை பற்றி–பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற பெரிய வரங்களைப் பலமாகக் கொண்டு
படை ஆலித்து எழுந்தானை–யுத்த விஷயமாகக் கோலாஹலஞ் செய்து வெளிப் புறப்பட்ட இராவணனை
செரு–யுத்தத்திலே
அரங்க–ஒழியும்படி
பொருது–போர் செய்து
அழித்த–ஒழித்தருளின
திருவாளன்–(வீர்யமாகிற) லக்ஷ்மியைத் தனக்கு நிருபகமாக உடையனான எம்பெருமானுடைய
திருப்பதி மேல்–(திருவரங்கமென்னும்) திருப்பதி விஷமாக
விட்டுசித்தன்–பெரியாழ்வார்
விரித்தன–அருளிச் செய்த
திரு அரங்கம் தமிழ் மாலை கொண்டு–(பாட்டுத் தோறு ம்) ‘திருவரங்கம்’ என்கிற திருநாமத்தையுடைய
தமிழ் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையுங்கொண்டு.
இருவர் அங்கம் மெரித்தானை–(மதுகைடபர்களாகிற) இருவருடைய உடலைத்
(திருவனந்தாழ்வானுடைய மூச்சு வெப்பத்தினால்) கொளுத்திப் போகட்ட எம்பெருமானை
ஏத்தவல்லார்–துதிக்க வல்லவர்களுக்கு
அடியோம்–அடிமை செய்யக்கடவோம்–

பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
ப்ரஹ்ம ஈஸா நாதிகள் பக்கல் மேல் எழச் சில வரங்களைப் பெற்று
அது தான் விசேஷண பர்யந்தம் என்று அறியாதே
அத்தாலே தானும் தன் பரிகரமும் பெரிய கர்வத்தோடே யுத்த உன்முகனாய் வந்தவனை

செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல்
யுத்த நியாயம் நடத்த மாட்டாத படி அவனைச் சலிப்பித்து போ வா என்று அழைத்த
வீர ஸ்ரீ யை யுடையவன் நித்ய வாஸம் செய்கிறவூர்

கண்டகரை களைந்தானூர்
நம் சேவகனார் மருவிய மதிள் திருவரங்கம் பெரிய கோயில் (திருமாலை -11) என்கிற திருப்பதி மேல்
பத்துப் பாட்டும் திருவரங்கம் வருகையாலே

திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு
விட்டு சித்தன் விரித்த–திருவரங்க தமிழ்மாலை-கொண்டு

இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே
விரோதி நிரசன சீலராய் இருக்கிற பெரிய பெருமாளை ஏத்த வல்லார்
இவர் தம்மைப் போலே மங்களா ஸாஸன பரராய்
இவர் அபிமானத்திலே ஒதுங்கி ஏத்த வல்லாருக்கு
அடியோமே என்கிறார்

இவருடைய பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -முதலாயன உள்ளது எல்லாம் இது இறே
நானும் உனக்குப் பழ அடியேன் -என்ற இடத்தில் பெறாத குறை தீர
எம் தம்மை விற்கவும் பெறுவார்களே -என்ற இடத்தில்
சேஷத்வம் தோன்றாதே பாரதந்தர்யத்தாலும்
ஸந்தோஷம் விளையாதே
பாகவத சேஷத்வம் தோன்ற ஏத்த வல்லாருக்கு அடியோமே -என்று
அருளிச் செய்தது இங்கே இறே

இருவரங்கம் எரித்தான் என்றது -மது கைடபர்களை
அது என்
அவர்கள் திரு அநந்தாழ்வானுடைய வெய்ய யுயிர்ப்பிலே அன்றோ எரிந்தது என்னில்
ராமஸ்ய தஷினோ பாஹு -என்றும்
தடித்த என் தாசாரதி – என்றும் உள்ள இடங்களில்
சாமானாதி கரண்யம் சேராமையால் ஸாயுஜ்ய பரர் (ஸமான யுக போகம் உடையவர் )
கருதும் இடம் பொருதது காண் என்று
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

அன்றிக்கே
சாணூர முஷ்டிகர் என்னுதல்
ஆனால் அவர்களை வெண் கலப்பை போலே நெருக்கித் தூக்கிப் பொகட்டான்
என்னா நின்றதீ என்னில்
அவர்கள்
தம் தம்முடைய அகங்கார அக்னியாலும்
மீட்சியில் கம்ஸ பய அக்னியாலும்
இவன் தன்னைக் கண்ட போதே குவலாய பீட நிரசன பய அக்னியால் எரிந்தார்கள் என்னலாம் –

வெறிய வவர் வயிறு அழல நின்ற பெருமான் (பெரிய திருமொழி -5-10-9 )-என்னக் கடவது இறே
ந ப்ரஹ்ம ந ஈஸா ந -என்கையாலே
அவர்களுக்கு முன்பு சொன்ன அக்னிகளும்
நிபந்தமான கால அக்னி அழியாத வ்யக்திகளிலும் தோன்றிச் சுடுகையாலே
சுடு தடி சுட்டால் போலே இருவரங்கம் எரித்தான் என்கிறார்

ஏத்த வல்லார் அடியோமே –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: