Archive for August, 2021

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ ஞான சாரம்–பாசுரங்கள்– 31-40—ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் விரிவுரை — –

August 31, 2021

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!

சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.

———

எல்லா வேதங்களுக்குள்ளும் மறைந்திருக்கும் உயர் பொருளும்
வேதப் பொருளைத் தெளிவு பட எடுத்துரைக்கும் மற்றைய சாஸ்திரங்கள் சொல்வதும்
ஆகிய சரணாகதி நன்னெறியைக் காட்டிக் கொடுத்த
ஆசார்யன் திருவடிகளே தஞ்சமாகும் என்று கூறும் கருத்தை இப் பாடலில் சொல்லப்படுகிறது.

வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-

பதவுரை:

தீதில்–குற்றமில்லாத
சரணாகதி–அடைக்கல நெறியை
தந்த–தனக்கு காட்டிக் கொடுத்த
தன்னிறைவன்–தனக்கு தெய்வமான ஆசார்யனுடய
தாளே–திருவடிகளே
அரணாகும்–தஞ்சமாகும்
என்னுமது–என்று சொல்லப்படும் அடைக்கல நெறியே
ஒரு நான்கு வேதம்–ஒப்பற்ற ரிக்கு, யஜுர், சாம, அதர்வணம் என்று சொல்லப்படும் நாலு வகை வேதங்களிலும்
உட்பொதிந்த–நிதி போல் உள்ளே மறைந்து கிடக்கும்
மெய்ப் பொருளும்–உண்மைப் பொருளும்
கோதில் –குற்றமற்ற
மனுமுதநூல்–மனு முதலான சாஸ்திரங்களும்
கூறுவதும்–உரைக்கும் கருத்துக்களும் (எல்லாம்)
அதுவே–ஆச்சார்யனை அடைக்கலம் புகும் நெறியே யாகும்

வேதம் ஒரு நான்கின் உட்பொதிந்த மெய்ப்பொருளும்:
இங்கு’ஒரு’ என்ற சொல் வேதத்தின் ஒப்பற்ற தன்மையைக் கூறுகிறது.
அதாவது
ஒரு மனிதனால் உருவாக்கபடாதது. எழுதா மறை என்றும் கூறப்படுவது.
ஐயம், திரிபு, மயக்கம் முதலிய குற்றங்கள் எதுவுமே இல்லாதது.
உள்ளதை உள்ளபடி கூறுவது முதலிய சிறப்புக்கள் பற்றி ஒப்பில்லாதது என்று பொருள்.

நான்கு:
“வேதம் ரிக்கு,யஜுர் , சாம ,அதர்வணம் என்று நான்கு வகையாகும்.
இத்தகைய வேதங்கள் தம்முள்ளே எட்டு புரி கொண்ட கயிற்றினால் ஒரு பொருளைக் கட்டி வைப்பது போல
எட்டு எழுத்துக் கொண்ட திருமந்திரத்தினுள் பரம்பொருளை மறைத்து வைத்துள்ளது.”
அதாவது
அஷ்டாக்ஷர மகா மந்திரம் எல்லா வேதத்தின் உள்ளேயும் நிதி போல் மறைந்து கிடக்கிறது என்பதாம்.
(எட்டினோடிரண்டெனும் கயிற்றினால் மனந்தனைக் கட்டி (திருச்சந்தவிருத்தம்,)

“வேதம்” அனைத்தையும் அளக்கும் கருவி என்ற சொல்லால்
இம்மந்திரப் பொருளைச் சொல்லும் மற்றைய எல்லா நூல்களிலும் சிறப்புடையது என்பதும்
“நான்கு” என்பதால்
அவ் வேதத்தில் எங்கேனும் ஒரு மூலையில் சொல்லப்படும் பொருளாயில்லாமல்
“அனேக கிளைகளாக விரிந்துள்ள வேதமனைத்துக்கும் உட்பொருள் இவ் வஷ்டாசார மந்திரப் பொருள்
மேல் நோக்கில் இல்லாமல் உள்ளே சேமித்து வைக்கப்பட்ட நிதி போன்றது என்பதும்
“மெய்ப் பொருள்” என்றதால்
அம் மறைப் பொருள் பொருளைக் கூறுகிறது என்பதும் அறியக் கிடக்கிறது.

கோதில் மனு முதனூல் கூறுவதும்:
கோது-குற்றம் .
அது இல்லாமையாவது குற்றமில்லை.
அதாவது
ஒன்றை வேரு ஒன்றாகத் திரித்துக் கூறும் குற்றமில்லாமை என்று பொருள்.

உதாரணமாக முத்துச் சிப்பியின் வெண்மையைப் பார்த்து வெள்ளி என்று வேறாகச் சொல்லாமல் முத்துச்சிப்பி என்றே சொல்வது.
இத்தகைய குற்றங்கள் எதுவும் இல்லாதது மனுதர்ம சாஸ்திரம்.

“கோதில்” என்ற அடைமொழி மனுவுக்குச் சொன்ன போது
மனு சொன்னது மருந்து என்று கூறப்பட்ட அதன் சிறப்பு உணரப்படும்.
அதில் எந்த ஆராய்ச்சியும் செய்ய வேண்டாம் என்ற கருத்து.

இவ் வடைமொழி ஏனைய வற்றிற்கு ஆன போது அந்தந்த நூல்களுடைய நம்பிக்கையை சொல்லுகிறது.
அதாவது
ஐயம் திரிபு அறஉள்ளதை உள்ளபடி சொல்லுதல் .
அவையாவன
சாத்வீக ஸ்ம்ரிதிகளும் ஸ்ரீ விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதம் முதலிய இதிகாசங்களும்,
பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்களுமாகிற சாஸ்திரங்களுமாம்.

இத்தகைய மனு முதலிய சாஸ்திரங்கள் எல்லாம் ஒரே குரலால் வேதத்தின் இதயமான
அஷ்டாக்ஷர மகா மந்திரத்தின் உள்ளே மறைவாக பொதிந்து கிடக்கும் சரணாகதிப் பொருளை
வெளிப்படையாக விளக்கமாக உரைப்பவை அன்றோ மனு முதலிய நூல்களுக்குப் பணி.
ஆகவே சரணாகதி தத்துவமே வேதம் முதலிய நூல்களாலும் சொல்லப்படும் நெறியாகும்
என்பது இதனால் உணர்த்தப்பட்டது.

தீதில் சரணாகதி தந்த:
எந்தக் குற்றமும் சொல்ல முடியாதது. சரணாகதி நெறியைக் காட்டிக் கொடுத்த அதே நூல்களில் சொல்லப்பட்ட
ஏனைய கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் முதலிய நெறிகளுக்கு
“இன்னார் செய்யக் கூடாது ” என்பன போன்ற கட்டுப்பட்டுக் குற்றமும்
அன்னெறிகளைக் கடைப்பிடிகையில் நூல்கள் சொன்னபடி செய்யமுடியாத நழுவுதல் குற்றமும் உள்ளன.

சரணாகதியாகிற எளிய வழி இருக்கையில் மேற்கூறிய அரிய வழியைப பின்பற்றுகை தேவையற்றது.
குற்றங்கள் எதுவும் சொல்ல முடியாதது. சரணாகதி ஆகிற நெறி நேரடியாக இறைவனைப் பற்றுவது. இதுவே தன சிறப்பு.
(ப்ரபத்தி) -ஈஸ்வர என்பது பகவத் விஷய வாக்கியம். சரணாகதி என்பதற்கு இறைவன் என்றே பொருள் சொல்லப்படுகிறது.
இத்தகைய சரணகதியாகிற நெறியை வறுமையுடவனுக்கு அளப்பரும் சீரிய நிதியைக் கொடுப்பது போல
காட்டிக் கொடுத்த என்றவாறு. இத்தகைய சரணாகதி நெறியை உபதேசித்த என்று பொருள்.

தன்னிறைவன்:
தன்னுடைய ஆசார்யனை “மாடும் மனையும்:” என்கிற பாடலில் எட்டெழுத்தும் தந்தவனே என்று கூறப்பட்டது.
இப் பாடலில் “சரணாகதி தந்தவன்: என்று கூறப்படுகிறது. இதிலிருந்து எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்ததற்கும்
சரணாகதி மந்திரத்தை உபதேசித்ததற்கும் நீண்ட வேறுபாடு இருப்பது புலனாகிறது.
அதாவது
இங்கு “சரணாகதி” என்ற சொல்லல் மறைத்துக் கூறப்பட்டது. அங்கு எட்டெழுத்து என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டது.
திருமந்திரம், த்வயம்,சரமச்லோகம் எனப்படும் மூன்று மந்திரங்களுள் முதல் இறுதி மந்திரங்களின் பொருளை மறைத்து
மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டு வருவது முன்னோர்களின் பழக்கமாகும்.

அவை போலன்றி சரணாகதியைக் கூறும் த்வயம் எனப்படும் மந்திரத்தின் பொருளை மறைப்பதோடு
இம்மந்திரத்தின் ஒலி வடிவையும் மறைத்து மனதுக்குள்ளேயே கூறி வரும் மரபு கூறப்படுகிறது.
இதனால் த்வய மந்திரத்தின் சிறப்பு அறியக் கிடக்கிறது.

இதைப்பற்றி நஞ்சீயர் என்னும் ஆசார்யன் கூறுகையில்
” த்வய மந்திரத்தில் பகவானுடைய அழகிய திருமேனி பற்றியும் அதன் குணங்களும் பரமாத்ம இலக்கணமும்
அவனது எண்ணில் பல குணங்களும் நித்யர்களும் முக்தர்களும் பேரின்பமாய் இருப்பது போல
இங்கு வீடு பேறு அடைவதில் ஆசையினால் சரணாகதி பண்ணின அடியார்க்கு
த்வய மந்திரத்தின் உருவமே பேரின்பமாயிருக்கும் என்று கூறியதாகச் சொல்லப்படும் வார்த்தையை ஈண்டு எண்ணிப் பார்க்கலாம்.

இத்தகைய மிகவும் சீரிய சரணாகதியைக் கூறும் மந்திரமான த்வய மந்திரத்தை அன்றோ சீடனாகிற
இவனுக்கு ஆசார்யன் உபதேசித்தது. தனக்கு த்வய மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனே “இறைவன்” என்பதாம்.
தன்னிறைவன் என்றதால் எல்லோரும் தெய்வமான பகவானைப் போல அல்லாமல்
தனக்கே தெய்வமாக விளங்குவது பற்றித் தன்னிறைவன் என்று கூறப்பட்டது.

தாளே:
அத்தகைய தனக்குத் தெய்வமாய் விளங்கும் ஆசார்யன் திருவடிகளே.
தாளே என்ற சொல்லை மட்டும் நோக்குகையில்
பகவானாகிற இறைவனைப் பற்றினவர்களுக்கும்
ஆசார்யனாகிற இறவனைப் பற்றினவர்களுக்கும் ஆகிய இருவருக்கும் திருவடிகளே தஞ்சம் என்ற பொருள் புலனாகிறது.

தாளே என்ற யிடத்திலுள்ள ஏகாரத்தால்
சீடனுக்குச் செய்யும் நன்மைகளைப் பிறர் உதவியின்றி தானே செய்யும் என்கிற சிறப்பும் உணரக் கிடக்கிறது.

அரணாகும் என்றுமது:
அரண் என்பது தஞ்சம்.
அதாவது
ஆசார்யன் திருவடிகளே தனக்குத் தஞ்சமாகும் என்று பொருள்.
இறைவன் என்ற சொல்லில் தலைமை, நெறி,பயன் என்ற மூன்று கருத்தும் பொதுவாகச் சொல்லப்படும்.
இம்மூன்றுமாய் இருப்பவன் இறைவன்.

தன்னிறைவன் என்றதில் தலைமையும்
‘அரணாகும்’ என்றதில் நெறியும் கூறப்பட்டன.
பயன் கூறாமல் போனாலும் அதையும் இங்கு கூட்டிக் கொள்ள வேணும்.
அதாவது
ஆசார்யன் திருவடிகளே தனக்குத் தலைமையாகவும்
தஞ்சமாகவும் (நெறி)
அடைய வேண்டிய பயனாகவும் இருக்கிற ஏற்றம் சொல்லப்படுகிறது

————

‘மாடும் மனையும் ‘ என்ற பாடலில் ;
பெரிய திருமந்திரம்’ என்று சொல்லப்படும் திருவஷ்டாசார மந்திரத்தை உபதேசம் பண்ணின ஆசார்யன் திருவடிகளே
எல்லாப் பயனுமாகும் என்றறிந்து கொள்ளாத அறிவிலிகளோடு ஏற்படும் உறவை அறவே விட்டிடுகை
சாஸ்திரக் கட்டளையாகும் என்று கூறப்பட்டது.

‘வேதம் ஒரு நான்கின் என்ற 31ம் பாடலில்
அனைத்து சாஸ்திரங்களும் கூறுவது ‘சரணாகதிப் பொருளை உள்ளடிக்கிய த்வய மந்திரத்தை உபதேசித்த
ஆசார்யன் திருவடிகளே தஞ்சமாகும் ‘ என்று கூறப்பட்டது.

இப்படி ஆசார்யனின் சிறப்பு விளக்கப்பட்டது.

இவ்வறு கீழ்ச் சொன்ன இரண்டு பாடல்களில் சிறப்பிக்கப்பட்ட ஆசார்யனை பகவானுடைய
(இராமன், கண்ணன் முதலிய அவதாரங்கள் ) போல ஓர் சிறப்பு அவதாரம் என்று ஈடு படவேண்டும்.

அவ்வாறு ஈடு படாமல் மனிதத் தோற்றமாகவே எண்ணும் மூடர்களுக்கு வரக்கூடிய கேடுகளையும் ,
பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திருக்கோயில்களில் அமையப் பெற்ற இறை உருவங்களை
எந்தப் பொருளால் உருவாக்கப்பட்டது போன்ற ஆராச்சிகள் பண்ணும் மூடனுக்கும்
வரக்கூடிய கேடுகளையும் இப் பாட்டு எடுத்துக் காட்டுகிறது.

மானிடவர் என்றும் குருவை மலர் மகள் கோன்
தான் உகந்த கோலம் உலோகம் என்றும் -ஈனமதா
வெண்ணுகின்ற நீசர் இருவருமே எக் காலும்
நண்ணிடுவர் கீழா நரகு –32-

பதவுரை:

குருவை –தனக்கு மந்திரத்தை உபதேசம் பண்ணின ஆச்சார்யனை
மானிடவன் என்றும்–சாதாரண மனிதர்களைப் போல் இவரும் ஒரு மனிதர் என்றும்
மலர் மகள் கோன் –தாமரையாள் நாயகனான ஸ்ரீமன் நாராயணன்
தானுகந்த கோலம்–தான் விரும்பி ஏற்றுக் கொண்டதான சிலை வடிவங்ககளை
உலோகம் என்றும்–பஞ்ச லோகம் முதலிய பொருட்கள் என்றும்
ஈனமதா –கீழ்த் தரமாக
எண்ணுகின்ற–நினைக்கின்ற
நீசர்–கீழ் மக்களான
இருவரும்–இவர்கள் இருவருமே
எக்காலும்–காலம் உள்ளவரையும்
நரகு–நரகத்தை
நண்ணிடுவர்–அடைவார்கள்

மானிடவன் என்றும் குருவை:
பிறவிப் பெருங்கடலில் உழலும் ஆன்மாக்களை அக் கடலிலிருந்து கரையேற்றுவிப்பதற்காக தெய்வம்
மனித உருவங்கொண்ட குரு வடிவத்தில் தோன்றி இருக்கிறான் என்ற நம்பிக்கை கொள்ள வேணும் .
நாராயணனாகிற தேவனே மனித வடிவம் கொண்டான் என்று நூல்கள் பகர்கின்றன.
இவ்வாறு தெய்வமாகக் கூறப்படும் குருவை மனிதன் என்று நினைக்கிறவனது எண்ணம் பொல்லாதது என்றும்
அவன் கற்ற கல்வி எல்லாம் பயனற்றது என்றும் சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

மலர்மகள் கோன் தானுகந்த கோலம் உலோகம் என்றும்:
திருமகள் நாயகனான பகவான் தான் விரும்பி ஏற்றுக் கொண்ட சிலை உருவத்தை பஞ்ச லோகங்கள் என்றும்
மற்றும் வேற வேறு பொருட்கள் என்றும் அதாவது மரம் முதலிய பொருட்கள் என்று
ஆராய்ச்சி செய்வது மிகவும் பாபகரமாகும்.

இந்த உருவங்களை “உமருகந்தவுருவம் நின்னுருவம்” (திருவாய்மொழி 8-1-4) என்ற பாடலில்
நம்மாழ்வார் விளக்கி இருக்கிறார்.
அதாவது
தன்னிடத்தில் அன்புடையவர்கள் எந்த உருவத்தில் தன்னை வழிபட என்று விரும்புகிறர்களோ அந்த உருவமாகத் தான் ஆகிறான்.
அவ்வுருவத்தில் தனக்கே உரித்தான தெய்வீகத் திருவுருவத்தில் தான் செய்யும் விருப்பத்தை இந்த சிலை உருவத்திலும் செய்கிறான்.
இந்த ‘உருவம்’ என்பது பக்தன் நிர்மாணித்த உருவம்.
அதனால் இதுவும் தெய்வீக உருவமாக ஆகிறது.

இப்படி ஒரு பக்தன் நிர்மாணித்த விக்ரஹத்தில் தனக்கே உரித்தான தெய்வீக உருவத்தில்
தான் செய்யும் விருப்பத்தைச் செய்வதால் அவனுடைய விருப்பத்தைப் பொறுத்து இதுவும் தெய்வீகமகி விடுகிறது.
அவ்வுருவத்திற்கு அணிவிக்கும் ஆபரணங்களும் மற்றும் அனைத்தும் உலகியலுக்கு மாறுபட்டு தெய்வீகமாக ஆகிறது.
இதை “அப்ராக்ருதம்” என்று சாஸ்திரம் கூறும்.

இந்த சாஸ்திர நுட்பத்தை அறியாதார் மேலெழத் தோன்றுகிற பஞ்சலோகம் முதலான உருவத்தையே பார்த்து
அதி அராய்ச்சி பண்ணுவது கொடிய பாபமாக சாஸ்திரம் கூறுகிறது.
இப்பாபம் எது போரது எனில்
‘பெற்ற தாயிடம் தான் பிறந்த இடத்தைக் குறித்து ஆராய்ந்து பார்ப்பது போலும்” என்று
சாஸ்திரம் மிகக் கொடூரமாக கூறியுள்ளது.

ஈனமதா:
தாழ்வாக –
மிகவும் தாழ்வாக எண்ணுகின்ற நீசர்கள்
அதாவது ‘குருவை மனிதன்’ என்றும் ;
தெய்வ உருவத்தைப் பஞ்சலோகம் முதலியன என்றும் எண்ணுகின்ற கீழ்த்தரமானவர்கள் என்பதாம்.

கீழ்த்தரம் என்றால் இவர்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்ற கருத்து.
அதாவது மந்திரோபதேசம் செய்த ஆசார்யனையும்,
வழிபாட்டிற்குரிய இறை உருவங்களையும் கீழ்க்கூறிய வண்ணம் தாழ்வாக நினைப்பவர்கள்
கர்ம சண்டாளர்கள் என்று சொல்லப்படும் பாபிகள் ஆவர் என்பதாம்.
அதாவது
எண்ணத்தால் தாழ்ந்தவராவர். ‘
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று கூறும் தமிழ் வழக்கு இங்கு காணத் தக்கதாகும்.
‘உயர்வை எண்ண வேண்டிஅய் உள்ளத்தில் தாழ்வை எண்ணுவது பாபமாகும்.

இருவருமே:
அதாவது கீழ்ச் சொன்ன குருவை மனிதனாக எண்ணுபவனும்
இறைவனது திருவுருவங்களை உலோகமாக எண்ணுபவனும்
ஆக இவ் விருவரும் ஓரி நிகரான பாபிகளாயிருப்பதால் மேல் கூறப் போகும் கேடு
இவ்விருவருக்குமே உரித்தாகும்.

(இருவருக்கும் வரும் கேடாவது)
எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு:
எல்லாக் காலத்திலும்
அதாவது, காலம் என்கிற தத்துவம் உள்ளதனையும் கீழான நரகத்தை அடைவர் என்று பொருள்.

கீழாம் நரகு என்றால்
இதுக்கு மேல் கீழான நரகம் என்று ஒரில்லை என்று சொல்லத்தகுந்த நரகம் என்பதாம்.
நரகம் என்பது இன்பம் கலவாது துன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் இடம் என்று பொருள்.

இத்தகைய ‘நரகத்தை எக்காலும் நண்ணிடுவர்’ என்றது.
நரகத்திலேயே பிறந்து நரகத்திலேயே வளர்ந்து நரகத்திலேயே முடிவதாம்.
கரையேறுவதற்கு அரிதான கரை காண முடியாத பிறவிப் பெருங்கடலில் மாறி மாறி பல பிறப்புகளிலும் பிறந்து
இங்கேயே உழன்று வரும் மூடர்கள் ஆவார்கள் என்றும் கூறலாம்.

ஆகவே மேற்கூறிய இரண்டு பாபிகளும் துன்பத்திலிருந்து விடுபடுதல் இல்லை என்றவாறாம் .
குருவை மானிடன் என்று கருதுவோரையும்
கடவுள் திருவுருவத்தை உலோகம் என்று கருதுவோரையும் உடன் கூறுவதால்
இது உடன் நவிற்சிப் பொருள் என்ற இலக்கணத்தின் பால் படும்.

————-

அருகில் இருக்கிற ஆசார்யனை மனிதன் என்று கைவிட்டு
நீண்ட தொலைவிலுள்ள (கட்புலனாகாத) இறைவனை
‘வேண்டின சமயத்தில் உதவுவான்’ என்று நினைத்து அவ் இறைவனை ஆவலுருகிறவன்
அறிவு கெட்டவன் ஆவான் என்னும் உண்மையைத் தக்க உதாரணத்துடன் இதில் எடுத்துரைக்கப்படுகிறது.

எட்டவிருந்த குருவை இறை அன்று என்று
விட்டு ஓர் பரனை விருப்புறுதல்-பொட்டெனத் தன்
கண் செம்பளித்திருந்து கைத்துருத்தி நீர் தூவி
அம்புதத்தைப் பார்த்து இருப்பானற்று –33-

பதவுரை:

எட்ட இருந்த–மிக அருகில் எட்டும் இடத்தில் இருக்கிற
குருவை –ஆசார்யனை
இறையன்று–தலைவன் இல்லை என்று
விட்டு–புறக்கணித்து
ஓர் பரனை–அணுக அரிதாயிருக்கும் கடவுளை
விருப்புறுதல்–அடைய வேணுமென்று அவாவுதல்
(எது போன்றது எனில்)
பொட்டன–சடக்கென்று
தன் கண்–தன்னுடைய கண்ணை
செம்பளித்திருந்து –மூடிக் கொண்டிருந்து(மேல் விளைவதை ஆராயாதிருந்து)
கைத்துருத்தி நீர் –விடாய் தணிக்க வைத்திருந்த துருத்தி நீரை
தூவி–தரையில் ஊற்றி விட்டு
அம்புதத்தை–மேகத்தின் நீரை
பார்த்திருப்பானற்று–எதிர் நோக்கி இருப்பவன் போல ஆகும்.

எட்ட இருந்த குருவை:
எட்டுதல்-கிட்டுதல் அருகில் என்று பொருள் .
அதாவது
கை அருகில் இருக்கும் ஆசார்யனை என்று பொருள்.

கட்புலனுக்கு இலக்காய் எப்பொழுதும் பார்த்துக்
கொண்டிருப்பதற்கு உரியவனாயும் தனக்குக் காப்பாளர் வேண்டியபோது
காப்பாளனகவும்,
இனியனாய் இருக்கையும்.
ஆத்ம நலனுக்கு உதவியாய் இருப்பவனும்
எப்பொழுதும் கலந்து பரிமாறுவதற்கு உரியனாய்த்
தனக்கு அருகில் இருப்பவனும் ஆனா ஆசார்யனை என்று பொருள்.

இறையன்று என்று விட்டு:
இவர் தலைவர் இல்லை என்று குருவை விட்டிட்டு
31ம் பாடலில் ‘சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகும்’ என்று
கூறியதற்கு மாறாக அவ் ஆசார்யனைத் தனக்குத் தலைவனாகக் கொள்ளாமல் ‘நம்மைப் போன்றவர்’ என்று
மனிதன் எண்ணத்தால் அவரைத் தலைமையாக மதிப்பதை விட்டு

ஓர் பரனை விருப்புறுதல்:
எல்லோருக்கும் மேலானவனாக விருக்கும் கடவுளை அவாவுறுதல் என்று பொருள்.
அதாவது
சாஸ்திரங்களினால் அறியத் தக்கவனாய் மிகத் தொலைவில் இருப்பவனைத்
தனுக்கு அணுக அரியனாய் இருக்கும் கடவுளைத் தன்னைக் காப்பவனாகவும் இன்யனாகவும் கருதி
அவனை அடைய வேணுமென்று ஆசைப்படுதலாம்.இது எது போன்றது என்றால்

பொட்டென:
சடக்கென்று பின்வரும் விளைவை ஆராயாமல் என்பதாம்.

தன் கண் செம்பளித்திருந்து:
தூங்குவாரைப் போல தன்னுடைய கண்களை மூடிக்கொண்டிருந்து
பின் வரும் விளைவை அறியாமல் என்ற கருத்து.

கைத்துருத்தி நீர் தூவி:
விடாய் பிறந்த போது விடாய் அகற்றிக் கொள்ளலாம் என்றெண்ணி துருத்தி (water can) யில் நிரப்பித்
தன் கைவசம் இருக்கிற குடிநீரைப்ப் பூமியில் வார்த்து விட்டு.

அம்புதத்தைப் பார்த்திருப்பான் அன்று:
மேகத்திலுள்ள நீரை விடாய் தணிப்பதற்கு உதவும் என்று நினைத்து
வானத்தில் உள்ளதும் மிக்கத் தொலைவில் இருப்பதுமான மழைத் தண்ணீரையே
எதிர் பார்த்திருப்பான் செயல் போன்றது என்று பொருள்.

அவனைப் போல் என்றது அவன் செயல் போல என்றவாறு.
பரனை விருப்புறுதல் தொழிலுக்கும்
அம்புதத்தைப் பார்த்திருப்பான் செயலுக்கும்
பொருத்தமாயிருப்பதால் இதற்குத் தொழில் உவமம் என்று பெயர்.

இப் பாடல் கருத்துக்கு “ஸ்ரீ வசனபூஷனத்தில்”
‘விடாய் பிறந்த போது கரச்தமான உதகத்தை உபேக்ஷித்து ஜீமுத ஜலத்தையும் சாகர ஜலத்தையும்
ஸரித் ஸவித்தையும் வாபீ கூப பயஸ்ஸுக்களையும் வாஞ்சிக்கக் கடவனல்லன்
என்ற வாக்கியத்தை மேற்கோளாகக் காண்க.

————–

மிகவும் எளியனாய்த் தனக்குக் கிடைத்திருக்கிற ஆசார்யனை மானிடத் தோற்றத்தாலே புறக்கணித்து
மிக அரியனாய் யோகங்கள்முதலிய அநேக முயற்சிகள் செய்து காண வேண்டிய இறைவனை
வேண்டிய சமயத்தில் நமக்கு உதவுவான் என்று நினைத்து அவனைப் பின்தொடர்தல் அறியாமை ஆகும்
என்னும் கருத்தை மேலும் ஒரு உதாரனத்தாலே இதி சொல்லப்படுகிறது.

பற்று குருவைப் பரன் அன்று என இகழ்ந்து
மற்றோர் பரனை வழிபடுதல் -எற்றே தன்
கைப் பொருள் விட்டு ஆரேனும் காசினியில் தாம் புதைத்த
அப்பொருள் தேடித் திரிவான் அற்று –34-

பதவுரை:

பற்று குருவை–தன்னாலே பற்றப்படுகிற ஆசார்யனை
பரன் அன்று என்று–இவன் இறைவன் இல்லை என்று
மற்றோர் பரனை –வேறு ஒரு கடவுளை
வழிப்படுதல்–தனக்குத் தஞ்சமாகக் கொள்ளுதல் எது போன்றது எனில்
தன் கைப்பொருள்–தன் கையில் இருக்கும் பணத்தை
விட்டு–அல்பம் என்ற நினைவால்
ஆரேனும்–எவராயினும்
தாம்–தாங்கள்
காசினியில்–பூமிக்குள்ளே
புதைத்த –புதைத்து வைத்த
அப்பொருள்–அந்தப் புதைப் பொருளை
தேடித்திரிவான்–தேடித்திரிபவன் செயல் போன்றதாகும்
எற்றே –என்ன மடமையோ?

பற்று குருவை:
தன்னாலே பற்றப் பட்டிருக்கிற ஆசார்யனை.
அதாவது
மிக எளியனாய்த் தனக்கு வேண்டும் போது தன்னைக் காக்கும் துணையாகவும்
பழகுவதற்கு இனியனாகவும் தன்னால் குருவாகப் பற்றப்பட்டிருக்கும் ஆசார்யனை என்று பொருள்.

பரன் அன்று என இகழ்ந்து:
ஆசார்யனை பகவானுடைய தோற்றமாகச் சொல்லி இருக்க, அதில் நம்பிக்கை கொள்ளாமல்
மானிடவன் என்று கருதும் தீய எண்ணத்தினால்
‘இவன் பகவானுடைய தோற்றமில்லை மனிதனே ‘ என்று சிறுமை செய்து அவனைப் புறக்கணித்து.

மற்றோர் பரனை வழிப்படுதல்:
வேறு ஒரு இறைவனை வழிபடுகை.
அதாவது
‘மிகவும் அரியனாய்த் தன் கட்புலனுக்குத் தோன்றாமல் யோகம் முதலிய அரிய முயற்சிகள் செய்து
மிக வருந்திக் காணத்தகும் இறைவனைத் தனக்குக் காவல் துணையாகவும் பழக இனியனாகவும் நினைத்து
அப்பரனை அடைவதற்காக அவனைப் பின் தொடர்க’ என்பதாகும்.

எற்றே:
என்னே! இரக்கப் பொருளில் வந்தது.
இவன் புறக்கணித்த ஆசார்யனுக்கும் பற்றிக் கொண்ட இறைவனுக்கும் உள்ள வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு
மன வேதனையுடன் என்னே! என்று மனம் நொந்து கூறும் கருத்தைக் காட்டுகிறது.
எற்றே– என்னே என்று இளி வரவில் வந்த இடைச் சொல்.
இது எது போன்றது எனில்.

தன் கைப்பொருள் விட்டு:
தன் கைப் பொருளை உதறி எறிந்து விட்டு, வேண்டின போது பயன் படுத்திக் கொள்ளும்படி
தன் முந்தானையில் கட்டி வைத்திருக்கும் பணத்தை அல்பம் என்று எண்ணி உதறி விட்டு

ஆரேனும் காசினியில் தாம் புதைத்த:
யாராவது பூமிக்குள் புதைத்து வைத்த
அதாவது
முன்பின் தெரியாத யாராவது பூமிக்கு மேல் இல்லாமல் பூமிக்கு உள்ளே அவர்கள் புதைத்து வைத்த

அப்பொருள் தேடித் திரிவான் அற்று:
அவன் புதைத்த பணத்தை தான் அடைவதற்காகப் பூமியைத் தோண்டித் தோண்டித் திரிபவன் செயல் போல என்று பொருள்
(திரிபவன் போல என்பதற்குத் திரிபவன் செயல் போல என்று பொருள் சொல்லப்பட்டது)
மற்றோர் பரனை வழிபடுதல் என்னும் செயலுக்கு உதாரணமாகச் சொல்லுவதால்
தேடித் திரிபவன் செயல் போல என்று கூறப்பட்டது.
இதுவும் தொழிலுவமம் ஆகும்.

ஆகவே அருகிலுருக்கும் குருவைப் புறக்கணித்து விட்டுக் காண முடியாது நெடுந்தொலைவிலிருக்கும் கடவுள் பின் செல்லுதல்
தன் கையிலுள்ள பொருளை அற்பம் என்று எண்ணி உதறிவிட்டு யாரேனும் பூமியில் பணத்தைப்
புதைத்து வைத்திருக்க மாட்டார்களா என்று பேராசையுடன் பூமியைத் தோண்டித் தோண்டித் திரிகின்ற
அறிவிலியின் செயல் போன்றது என்று மன நோவுடன் ஐயோ என்று இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

இப்பாடல் கருத்தை ஸ்ரீவசனபூஷணத்தில்
‘ கைப்பட்ட பொருளைக் கைவிட்டுப் புதைத்த பொருளை கணிசிக்கக் கடவனல்லன்’
என்று கூறியுள்ளது காண்க.

————-

அருகில் இருப்பவனாய் எளியவனுமான ஆசார்யனைப் புறக்கணித்துவிட்டு
மிகத் தொலைவில் இருப்பவனுமாய்க் கிட்டுதற்கு அரியவனுமான இறைவனை ஆசைப்படுவார்
அறிவிலிகளாவர் என்று இரண்டு உதாரணங்களால்
(எட்டவிருந்த, பற்றுகுருவை) என்ற 33, 34 பாடல்களால் காட்டப்பட்டது.

‘இவ்வாறு குருவினிடத்தில் அன்பு இல்லாதவனுக்குப் பகவான் ஒரு நாளும் அருள் பண்ண மாட்டான்.
தண்டித்தே தீருவான் என்பதை உதாரணத்துடன் உணர்த்துகிறது இப்பாடல்.

என்றும் அனைத்து உயிர்க்கும் ஈரம் செய் நாரணனும்
அன்றும் தன்னாரியன் பால் அன்பு ஒழியில்-நின்ற
புனல் பிரிந்த பங்கயத்தைப் பொங்கு சுடர் வெய்யோன்
அனல் உமிழ்ந்து தானுலர்த்தி யற்று –35-

பதவுரை:

நின்ற புனல்–தனக்கு ஆதாரமாய் இருக்கின்ற தண்ணீரை
பிரிந்த–விட்டு அகன்ற
பங்கயத்தை–தாமரைப் பூவை
பொங்கு சுடர்–கிளர்ந்து எழுகின்ற ஒளியுடைய
வெய்யோன்–உஷ்ண கிரணத்தை உடைய சூரியன்
தான்–முன்பு மலரப் பண்ணின அவன் தானே
அனலுமிழ்ந்து–பின் நெருப்பைக் கக்கி
உலர்த்தியற்று–உலர்த்துவது போன்றதாகும்.
என்றும் –எப்பொழுதும்—எக்காலத்திலும்,-
அதாவது கழிவு, நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்காலங்களிலும் என்று பொருள்.
அனைத்துயிர்க்கும்–எல்லா உயிர்களுக்கும்-எல்லா ஆன்மாக்களுக்கும்
ஈரஞ்செய்–கருணை காட்டும்
நாரணனும்–நாராயணனும்
தன்னாரியன்பால் –தனக்கு ஆதரமான குருவினிடத்தில்
அன்பு ஒழியில் –பக்தி அகன்று போனால்
அன்றும் –சீற்றத்தால் எரிப்பான்.

ஈரம் செய் நாரணனும்:
அருளே பண்ணிக் கொண்டிருக்கும் நாராயணனும்.
இங்கு நாராயணன் என்று கூறியது
உயிர்க்கும் இறைவனுக்கும் பிரிக்க முடியாத உறவைக் காட்டுகிறது.

அதாவது
‘நாரம் ‘ என்றால் அனைத்து உயிர்கள்
‘அயனம்’ என்றால் உயிர்களுக்கும் உயிராய் உள் நின்று அவற்றைத் தாங்கி நின்று இயக்குகின்றதோ
அது போன்று அனைத்து உயிர்களுக்கும் உயிராய் நின்று அனைத்தையும் நடத்துபவன் என்ற பொருளை
நாரம்+ அயனம் என்ற இரண்டு சொற்களும் கூடி நின்று நாராயணன் என்ற ஒரு சொல்லாகி
மேற் சொன்ன கருத்தைக் காட்டுகிறது.

இக்கருத்தை
‘உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது’ என்ற ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவையில் காண்க.
‘”நான் உன்னையன்றிலேன் நாரணனே நீ என்னை அன்றி இலை’” என்று திருமழிசை ஆழ்வாரும் கூறினார்.

இதனால்
அறிவுடைய ஆன்மாவாகிற பொருளும் அறிவில்லாத ஜடப் பொருளுமாகிய நாரங்கள்
அனைத்துக்கும் உயிராய் உள் நின்று பொருள் அனைத்தையும் இயக்குபவன், நாராயணன் என்று
நாராயண பதத்தினுடைய கருத்தைக் கூறியவாறாம்.

இதனால்
அனைத்து உயிர்கள் செய்யும் குற்றங்களையும் குணமாகக் கொள்ளுபவன். வத்சலன் என்ற
பகவானுடைய சிறப்புக் குணம் இங்கு தெளியப்படுகிறது.
இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் அருளே செய்யும் இயல்புடை யவனும்

அன்றும்: சீறுவான்
‘அன்றுதல்’ சீறுதல் தண்டனை செய்வான் என்று பொருள்.
‘அன்றிய வாணன்’ (பெரிய திருமொழி -1275) என்றவிடத்தில் அ
ன்றிய என்ற சொல் கோபித்த என்ற பொருளில் வழங்கியது போல இங்கும் அப்பொருளில் வந்தது.
எப்பொழுது இவ்வாறு அக்கருனைக் கடலான இறைவன் சீறி எழுவான் என்றால் அதைக் கூறுகிறது மேல் தொடர்.

தன்னாரியன்பால் அன்பு ஒழியில்:
தன் குருவினிடம் பக்தியில்லையானால் (சீறுவான்)
அதாவது
கீழே எட்டயிருந்த குருவை‘ பற்று குருவை’ என்ற இரண்டு பாடல்களிலும்
குருவின் மனிதத் தோற்றத்தைப் பார்த்து இவன் இறை அன்று என்றும்,
‘பரன் அன்று என்றும்’ நினைத்து விட்டு விடுதல் கூறப்பட்டது.
அவ்வாறு குருவினிடம் அன்பு அகன்றால் என்று பொருள்.
இதற்குத் தக்க உதாரணம் மேல் தொடரால் சொல்லப்படுகிறது.

நீன்ற புனல் பிரிந்த பங்கயத்தை:
மிக்க ஒளியுடையவனும் உஷ்ண கிரணங்களை உடையவனுமான சூரியன்.
அதாவது
‘செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால்’ என்று குலசேகராழ்வார் சொன்னதற்கிணங்க
அதாவது
தாமரை சூரிய ஒளிக்கல்லாமல் வேறு ஒளிக்கு மலராது என்பது இயல்பு.
நீரைப் பிரியாமல் இருக்கும் பொழுது எக்காலத்திலும் தன்னுடைய கிரணங்களால் அலற்த்திக் கொண்டு வரும் சூரியன்.

அனல் உமிழ்ந்து தான் உலர்தியற்று:
நெருப்பைக் கக்கி தானே அத்தாமரையை உலர்த்துவது போன்றது ஆகும்.
இதனால் நீரைப் பிரியாமல் இருக்கும்போது தாமரையை அலர்த்தி வந்த சூரியன்
நீரைப் பிரிந்த போது தனது உஷ்ண கிரணத்தைக் கக்கி அத்தாமரையை உலர்த்திவிடுவது போல.
ஆசார்யனிடம் அன்பு குறையாமல் தொடர்பு கொண்ட காலத்தில் எப்பொழுதும் இவனுக்கு அருள் செய்து வந்த பகவான்,
குருவினிடம் அன்பு குலைந்து அவனை விட்டுப் பிரிந்த போது அப்பகவானே இவனைக் கோபித்து அழித்து விடுவான் என்பதாம்.

இங்கு அருள் செய்வது என்றால் சீடனுடைய அறிவை விளங்க வைப்பன் என்றும்
கோபித்து அழித்து என்றால் இவனுடைய அறிவை மங்க வைத்து விடுவான் என்றும் அறியவேணும்

தனக்கு மந்திரோபதேசம் செய்த ஆசார்யனிடம் அன்பு அகன்றால்
எல்லா உயிர்களுக்கும் கருணை காட்டும் நாராயணனும் கூடச் சீறிவிடுவான் இது எது போன்றது எனில்
தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு நின்ற தாமரையை அத்தண்ணீரைப் பிரித்துக் கரையில் சேர்த்தால்
அத்தாமரை உஷ்ண கிரணங்களையுடைய சூரியன் அனலைக் கக்கி உலர்த்துவது போன்றதாம்.

அதாவது
சீடனுடைய உயிர் தத்துவத்தை விளங்க வைக்கும் இறைவனே குருபக்தி குலைந்ததும் தண்டித்து விடுவான்.
சீடனின் நல்லறிவை மறைத்து அறிவிலியாக்கி விடுவான்.
சீடன் அறிவுடையவனாக இருந்து அது இல்லாதவனாகிவிடுவான் என்ற கருத்து

‘ உளரெனினும் இல்லாரோடொப்பர்.’ என்று வள்ளுவர் கூறியது போல் குருபக்தி குலையக் கூடாது என்பதாம்.

இப்பாடலில் கூறிய கருத்தை ஸ்ரீவசனபூஷணத்தில்
“தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரித்தால் அத்தை உலர்த்துமாப் போலே
ஸ்வரூப விகாசத்தைப் பண்ணும் ஈஸ்வரன் தானே ஆசார்ய சம்பந்தங்குலைத்து வாடப் பண்ணும்” என்று கூறியுள்ளது காண்க.

————-

நற்சீடனாய் நல்லாசிரியனிடம் மிக்க அன்புடயவனாய் இருப்பவனுக்கு
அனைத்து திவ்ய தேசங்களும் தன் ஆசார்யனே யன்றி வேறில்லை என்று கூறப்படுகிறது.

வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36-

பதவுரை:

வில்லார் –ஒளி நிறைந்த
மணி –ரத்தினங்களை
கொழிக்கும்–குவித்துத் தள்ளும்
வில்லார் மணி கொழிக்கும் – வில்-ஒளி ஆர் -மிகுதி-ஒளி மிகுந்த ரத்தினங்களை
வேங்கடம்–அழகிய திருமலை முதலான
செல்லார்–மேகங்கள் வந்து படிகின்ற
பொழில் –சோலைகளாலே
சூழ்–சூழப்பட்ட
திருப்பதிகள் எல்லாம்–திவ்ய தேசங்கள் எல்லாம்
மருளாம் இருள்–அறியாமையாகிற இருளை
ஓட–விரைவில் அகலும்படி
மத்தகத்து–சீடன் தலைமேல்
தன்தாள் –தம்முடைய திருவடிகளை
அருளாலே–மிக்க கருணையினாலே
வைத்த –வைத்து அருளின
அவர் –ஆசார்யரான அவரே ஆவார்

” நன்மணி வண்ணனுர் ஆவியும் கோளரியும்
பொன்மணியும் முத்தமும் பூமரமும் – பன்மணி
நீரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம்.” –(நான்முகன் திருவந்தாதி – 48)என்ற திருமழிசைப்பிரான் பாடலில்
யாழிகளையும் சிங்கங்களையும் பொன், ரத்தினம்,முத்து முதலிய பொருட்களையும்
மற்றும் அனேக மணிகளையும் பூமரங்களையும் இழுத்துக்கொண்டு புரண்டு விழுகின்ற அருவிகளோடு
காடுகளையும் வானரங்களையும் வேடர்களையும் உடைய திருவேங்கடம் என்று உரைத்ததை இங்கு ஒப்பு நோக்குக.

வேங்கடப் பொற்குன்று முதல்:
இவ்வாறு சிறப்பிக்கப் படுகின்ற திருவேங்கடம் என்ற பெயர் கொண்டதாய்
எல்லா இயற்கைகளாலும் மிக அழகான திருமலை முதலான

செல்லார் பொழில் சூழ்:
உயர்ந்து நிற்பதால் மேகங்கள் வந்து படியும்படி இருக்கும் சோலைகளாலே சூழ்ந்த
(செல்-மேகம்-ஆர்த்த-படிதல்)

திருப்பதிகள் எல்லாம்:
பகவான் உகந்து எழுந்தருளியுள்ள திவ்ய தேசங்களெல்லாம்

மருளாம் இருளோட:
அறியாமையாகிற இருள் விரைவில் அகல

மத்தகத்துத்தன் தாள் அருளாலே வைத்த அவர்:
சீடனது முடியில் தன்னுடைய திருவடிகளைத் தம்முடைய கருணையினாலே வைத்தருளின குருவானவர்
அருளாலே வைத்தார் என்றதால் இதற்கு காரணம் எதுவுமில்லை என்பதாம்.
சீடனது பணிவிடை முதலியவற்றைக் காரணமாகச் சொல்லலாமல்லவா?
அப்படி எதையும் எதிர்பார்த்து அருளவில்லை என்பது கருத்து.

இங்கு திருமலை முதலான அர்ச்சா ஸ்தலங்களைக் குறிப்பிட்டது
ஏனைய பரமபதம், பாற்கடல் முதலிய இடங்களைக் கூட்டிகொள்ளவேணும் என்பது குறிப்பு.
ஆகவே பகவான் எழுந்தருளியுள்ள பரமபதம், திருப்பாற்கடல், இராமன், கண்ணன் முதலிய விபவ அவதாரங்கள்,
எல்லாப் பொருள் உள்ளும் மறைந்திருக்கும் அந்தர்யாமித்வம் ஆகிய ஐந்து நிலைகளும் அடங்கும்.
ஆக இவ்வைந்து நிலைகளும் தனக்கு ஆச்சார்யனே என்று இருக்க வேண்டும் என்பது கருத்து.
இக்கருத்தை சீடனிலக்கணம் சொல்லும் ஸ்ரீவசனபூஷணத்தில்
” பாட்டுக் கேட்குமிடமும் கூப்பீடு கேட்குமிடமும் குதித்த இடமும் வளைத்த இடமும் ஊட்டுமிடமும்
எல்லாம் வகுத்த இடமே என்றிருக்கக் கடவன்” என்று கூறப்பட்டுள்ளது ஒப்பு நோக்குக.

இதன் பொருள்,

பாட்டுக் கேட்குமிடம் – பரமபதம்
கூப்பீடு கேட்குமிடம் – திருப்பாற்கடல்
குதித்த இடம் – இராமன், கண்ணன் முதலிய விபவ அவதாரங்கள்
வளைத்த இடம் – அந்தர்யாமித்வம் (உள்ளும் புறமும் உளனாயிருத்தல்)
ஊட்டுமிடம் – விக்ரஹ வடிவில் எழுந்தருளி சேவை கொடுக்கும் திருக்கோயில்கள்
இவையெல்லாம் – இவ்வைந்து நிலைகளும் ஆச்சார்யனே என்று இருக்க வேண்டும்
வகுத்த இடம் – ஆச்சார்யன் என்பதாம்

108 திருத்தலங்களும் மற்றும் பகவான் எழுந்தருளியுள்ள அனைத்து இடங்களும் ஆச்சார்யனே என்று
இருப்பதுவே நற் சீடனிலக்கணமாகும் .
இதனால் அச்சர்யனை பகவான் எழுந்தருளி இருக்கும் இடங்களுக்கு ஒப்பாகக் கருத வேண்டும் என்பது கருத்து.

“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலைஎன்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல்லோர் அவை தன்னொடு வந்
திருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்தின்றவன் வந்
திருப்பிடம் என்றன் இதயத்துள்ளே தனக்கின்புறவே” –(இராமனுச நூற்றந்தாதி 106)
என்ற நூற்றந்தாதி பாடலும் இக்கருத்து பற்றியே சொல்லப்பட்டது.

————

பணம், உயிர், உடல் முதலான அனைத்தும் அச்சார்யனுடைய சொத்தாக நினைத்திருப்பாரது மனம்
இறைவனுக்கு எந்நாளும் இருப்பிடமாகும் என்கிறது இப்பாடல்.

பொருளும் உயிரும் உடம்பும் புகலும்
தெருளும் குணமும் செயலும் -அருள் புரிந்த
தன்னாரியன் பொருட்டாச் சங்கற்பம் செய்பவர் நெஞ்சு
எந்நாளும் மாலுக்கு இடம் –37-

பதவுரை:

பொருளும்–தன்னுடைய செல்வமும்
உயிரும் –தன் உயிரும்
உடம்பும் –தன் உடம்பும்
புகலும் –தன் குடியிருப்பும்
தெருளும்–தன் அறிவும்
குணமும்–தன்னுடைய நற்பண்புகளும்
செயலும்–தான் செய்யும் அனைத்துக் காரியங்களும்
அருள் புரிந்த–தன்னைச் சீடனாக ஏற்றுக் கருணை காட்டிய
தன்னரியன் பொருட்டா–தன்னுடய ஆச்சாரியனுக்கு உடமையாக
சங்கற்பம் செய்பவர்–எண்ணி இருப்பவர்
நெஞ்சு–இதயம்
எந்நாளும்–எக்காலத்திலும்
மாலுக்கு –பகவானுக்கு
இடம்–உறையுமிடமாகும்.

பொருளும்:
தனக்குரிய அனைத்துச் செல்வங்களும்

உயிரும்:
தன்னுடைய மூச்சும்

உடம்பும்:
தன்னுடைய சரீரமும்

புகலும்:
தன்னுடைய குடியிருப்பும்

தெருளும்:
தன்னுடைய கல்வி அறிவும்

குணமும்:
தன்னிடமுள்ள அடக்கம் முதலிய நற்குணங்களும்

செயலும்:
தான் செய்யும் அனைத்துச் செயல்பாடுகளும் இவற்றை எல்லாம் அருள் புரிந்த தன் ஆரியன் பொருட்டா:
அதாவது காணிக்கை கொடுத்தல் , பணிவிடை செய்தல் முதலிய எதையும் எதிர் நோக்காமல்
தன்னிடம் கருணை காட்டித் தன்னைச் சீடனாக ஏற்றுத் தனக்கு மந்திரங்களை உபதேசம் செய்த ஆச்சார்யனுக்குச் சொந்தமானதாக

சங்கற்பம் செய்பவர் நெஞ்சு:
எப்பொழுதும் எண்ணி இருப்பவர் இதயம்

எந்நாளும் மாலுக்கிடம்:
எல்லாக் காலமும் பகவானுக்கு விருப்பத்துடன் உறையுமிடமாகும் சீடன் தன்னுடைய எல்லாவற்றையும்
தன்னுடைய ஆச்சார்யனுக்கு உடமையாகும் என்று எண்ணுவதால் இத்தகைய தூய நெஞ்சு
இறைவனுக்கும் விரும்பி உறையுமிடமளிக்கிறது .
மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரை ஆச்சார்யனாக அடைந்தவர்.அவரைத் தவிர ” தேவு மற்று அறியேன்: என்று
வேறு தெய்வத்தை அறியாதவராக இருந்தார்.
அன்னையாயத்தனா என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபனென் நம்பியே” என்று
அனைத்தும் நம்மாழ்வாரே என்று வாழ்ந்தவர்.
அத்தகைய தூய ஆச்சார்ய அன்புடயவரது இதயத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கண்ணன் விரும்பினான்.
தேவு மற்று அறியாத இவருடைய இதயம் தேவபிரானுக்கு உகந்து உரைஉமிடமாகும் என்ற கருத்துச் சொல்லப்பட்டது.
“தெருளாகும் மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே” என்று இந்நூலாசிரியர் போற்றப்பட்டவர்.
அதனால் இவருடைய ஒழுக்க நெறியான குருபக்தியும் குறிப்பாக உய்த்துரைக்கபடுகிறது.
ஸ்ரீ ஆண்டாள் நிலையும் இதுவாகவே சொல்லப்பட்டுள்ளது.
“வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே”
(நாச்சியார் திருமொழி 10-10) என்று கூறியது காண்க.

————–

ஆச்சார்ய வைபவம் 26வது பாடலான ‘தப்பில் குருவருளால்’ என்ற
பாடல் தொடங்கி 37வது பாடலான ‘பொருளும் உயிரும்’ என்ற பாடல் வரை பல கோணங்களில் கூறப்பட்டது.

அதாவது
(26) குருவருளால் இறைவனிடம் சரணாகதி பண்ணினவர் வைகுந்தம் சென்று அங்கு இறை அடிமை செய்வர் ,
(27) ஆசார்யனை அணுகாதவர் வைகுந்தம் சேராமல் இடத் அழுந்துவார் என்றும்
(29) குருவின் அருள் பெற்றவர் இடரை வென்று எளிதில் வீடு அடைவர் என்றும்
(30) குருவை அணுகாதவர் உறவை விடுகை சாஸ்திரக் கட்டளை என்றும்
(31) வேதம் முதலிய நூல்கள் கூறுவதெல்லாம் குருவின் திருவடிகளே தஞ்சமாகும் என்றும்
(32)குருவை மனிதனாக எண்ணுபவன் நரகு எய்துவான் என்றும்
(33+34) அருகில் இருக்கும் குருவைப் புறக்கணித்துத் தொலைவில் இருக்கும் இறைவனைத் தொடர்வது அறியாமையாகும் என்றும்
(35) குருவினிடம் அன்பு ஒழிந்தால் கருணையுடைய கடவுளே சுட்டு சாம்பலாக்கி விடிவான் என்றும்
(36) கடவுள் குடியிருக்கும் திருத்தலங்களும் பிறவும் குருவே என்று இருப்பதுவுமே
நற் சீடன் இலக்கணம் என்றும் தன்னுடைய செல்வம் உயிர் அனைத்தும் குருவுக்கு உடைமையாகும்
என்று எண்ணுவனது இதயம் கடவுள் உறையுமிடமாகும் என்றும்
(36)பொருளும், உயிரும், உடம்பும், புகழும், தெருளும், குணமும், செயலும் மற்றும் வேண்டுவதை
எல்லாம் ஆசார்யன் தன்னருளால் சீடனுக்குத் தேறுவான்–என்றும் சொல்லியதை நினவு கூர்தல் வேண்டும்.

“குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா ஏன்னும் நாமம்” (திருமங்கை ஆழ்வார்)

இங்கு நாராயணா என்னும் இறைவன் நாமத்தைச் சொன்னவர்க்கு எல்லாம் கிட்டும் என்று சொன்னது போல
குரு பக்தனுக்கு பொருள் முதலிய அனைத்தையும் அருளுவான் என்பதாம்.
ஆகையால் குரு பகவானுடைய தோற்றமே ஆவார் என்ற கருத்துப் புலனாகிறது.
அதனால் அனைவருக்கும் குருவின் திருவடிகளை எப்பொழுதும் எண்ணியிருப்பதுவே பொருத்தமுடையது என்றும்
கூறி நூலின் கருத்து இத்துடன் முடிக்கப்படுகிறது.

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –38-

பதவுரை:

தேனார் – தேன் நிரம்பிய
கமலம் – கமலப்பூவை இருப்பிடமாக உடைய
திருமாமகள் – பெரிய பிராட்டியாருக்கு
கொழுநன – கணவனான பகவான்
தானே – மேலான தானே
குருவாகி – மனித உருவத்தில் குருவாகி வந்து
தன்னருளால் – தன்னுடைய மிக்க கருணையினால்
மானிடர்க்கா -திருந்த தக்க மனிதர்களைத் திருத்துவதற்காக
இந்நிலத்தே – இப்பூவுலகத்தே
தோன்றுதலால் – மனிதனாக அவதரித்ததனால்
யார்க்கும் – அனைத்துத் தரப்பினர்க்கும்
அவன் தாளிணையை – தலைவனான குருவின் திருவடிகளை
உன்னுவதே – எப்பொழுதும் எண்ணி இருப்பதுவே
சாலவுறும் – மிகவும் பொருத்தமாகும்

தேனார் கமலத் திருமாமகள் கொழுநன்:
பிராட்டி தாமரையில் இருப்பதால் அவளது உராய்தல் பட்டு அது அழகு பெற்றது.
மேலும் தேன் இடையறாமல் ஒழுகுவதால் மேலும் அழகியதாய் உள்ளது.
இவ்வாறு தாமரைக்கு அழகு கொடுக்கும் பெரிய பிராட்டியாருக்கு மணாளன் என்று பகவான் சிறப்பிக்கப்பட்டான்
“திரு” என்று பெரிய பிரட்டியாருக்குப் பெயர். இது ஸ்ரீ என்னும் வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்.
திருப்பாவையில் ஸ்ரீ ஆண்டாள் “திருவே துயிலெழாய்” என்று கூறினாள்.
தானே திருவுக்கு மணாளனானதால் தனக்கு ஒப்பும் உயர்வும் இல்லாதவன்.

“திருவுடையார் தேவரெனில் தேவர்க்கும் தேவன்
மருவு திருமங்கை மகிழ்நன் கொழுநன் -ஒருவனே
அல்லோர் தலைவரெனல், அன்பினால் மெய் மறந்து
புல்லோரை நல்லரேணல் போம்: (மதுரை தமிழ்ச் சங்கப் புலவர் திரு.நா. அப்பனையங்கார்)
இதனால் அனைவருக்கும் மேலானவன் திருமாமகள் கொழுநன என்பதாம்.

குருவாகி:
தனது தெய்வ உருவத்தை மறைத்துக் கொண்டு மனித உருவத்தில் ஆசார்யனாய்
இவ்வாறு உருவம் மாறிவரக் காரணம் என்னவெனில்.

தன்னருளால்:
தன்னுடைய மிக்க பெரும் கருணை என்று சொன்னதால் இதற்கு வேறு காரணமில்லை என்பது கருத்து.
இப்படி உருவம் மாறி வந்தது யாருக்காகவென்றால்

மானிடர்க்கா:
மனித உடலிலே பிறந்து சாஸ்திரங்களுக்குக் கட்டுப்பட்டு உபதேசத்திலே திருந்தி
சேமத்தைப் பெற உரியரான ஆன்மாக்களுக்காக என்பது பொருள்.

இந்நிலத்தே தோன்றுதலால்:
குழந்தை கிணற்றிலே விழுந்தால் உடன் குதிக்கும் தாயைப் போல ஆன்மாக்கள்
பிறவிப் பெருங்கடலில் அழுந்திக் கிடக்கிற இப்பூமியில் பிறக்கையால்

யார்க்கும்:
அந்தணர் முதலிய சாதி வேறுபாட்டாலும் பிரமச்சர்யம் முதலிய நிலை வேறு பாட்டாலும்
ஆண், பெண் என்ற வேறுபாட்டாலும் பலவகைப் பட்டிருக்கும் ஆன்மாக்கள் அனைவருக்கும்

அவன் தாளிணையை உன்னுவதே:
“அவன்” என்ற தில் இறைவனுடைய அனைத்துச் சிறப்புக்களும் அடங்கி உள்ளன.
அதாவது
ஆன்மாக்கள் அனைவருக்கும் தலைவனாய் புகளிடமாய்ப் பயனாய் இருக்கிறவன் என்பதும்,
அவனுடைய திருவடிகள் இரண்டையும் அடைவதே லட்சியமாகவும் அடையத் தகுந்ததாகவும்
அடைவதற்கு வழியாகவும் என்றிப்படிப்பட்ட சிறப்புக்களை எண்ணியிரு ப்பதுவே என்று பொருள்.

“உன்னுவதே” என்ற ஏகாரத்தால்
இது தவிர வேறு ஒன்று எண்ண வேண்டாம் என்பது குறிப்பு.

சாலவுறும்:
மிகவும் பொருத்தம்.
சால- மிகவும்.
உறும்- பொருத்தம்.
இதனால் மேல் சொன்னபடி எண்ணியிருப்பது
ஆன்மாவின் இயல்புக்கு மிகவும் பொருத்தமாகும் என்பதாம்.

“திருமாமகள் நாயகனான பகவானே இடர்கடலில் துவளும் மனிதர்களை உபதேசத்தால் கரை எற்றுவதற்காகத்
தன்னுடய மிக்க கருணை குணத்தால் குருவாகி மனித உருவத்தில் தோன்றுகிறான்.
அவன் அனைத்து உயிர்களுக்கும் தலைவனாயும் புகழையும் அடையத் தகுந்தவனாயும் இருக்கிறான்.
அத்தகையவனுடைய திருவடிகளே அனைத்துயிர்க்கும் அடைய வேண்டிய லட்சியப் பொருளாகவும்
அவசியம் அடையத் தகுந்ததாகவும் அடைவதற்கு வழியாகவும்
எப்பொழுதும் மனதில் நினைத்த வண்ணம் இருப்பது தான் ஆன்மாக்களின் சேமத்திற்கு மிகவும் பொருத்தமானதாகும்.
”இப்படி எண்ணுவது தவிர வேறு காரியங்கள் செய்தால் பயனேதுமில்லை.

ஆகவே “குரு” என்பவன் கடவுளுடைய தோற்றமாய் மனிதர்களின் நலத்திற்காகவே அவதரித்திருப்பவன் என்றும்
அவன் திருவடிகளை நினைத்திருப்பதுவே ஆன்மாக்கள் அனைவருக்கும் தகுந்ததாகும் என்று உரைக்கப்பட்டது.
இதை எழுத்தறிவித்தவன் இறைவனாகும்” என்ற பிக எளிய தொடரால் பண்டை தமிழர்கள் உணர்த்தினர்.

———–

மேல் கூறிவந்த குருவின் சிறப்பை அறிந்து குருவினிடத்திலேயே ஒன்றி நிற்பார் பெருமையை அறிபவர்
மிக்க அறிவாளியாக இருப்பார்கள் அன்றோ!
குரு பக்தி உடையவரின் பெருமையை அறிய மாட்டாத உலோகர்கள்
“பகவானைக் காட்டிலும் குருவையே லட்சியமாகக் கொண்டு அவர்பின் திரிகிறார்களே என்று
பழி தூற்றுவார்களேயானாலும் அதற்குத் தக்க விடை யிறுக்கிரது இப்பாடல்.

மேல் சொன்ன உலோகர்கள் கூறும் கேள்விக் குறியில் மற்றொரு கருத்தும் உள்ளடங்கி இருக்கிறது.
அதாவது பகவானிடத்தில் அவனுடைய உருவம், குணம், செயல் அவதாரங்கள் ,கதைகள் முதலியவற்றில்
ஈடுபாடு கொண்டுள்ள பகவத் பக்தர்கள் குருவின் மேன்மை அறியாமல் குரு பக்தர்களை நோக்கி
” கடவுள் பின் செல்லாமல் மனிதனான குருவின் பின் செல்கிறீர்களே ” என்று குரு பக்தர்களை நோக்கி
இகழ்ந்து பேசுவதற்கும் வாய்ப்பிருந்தால்
இப்பாடல் மூலம் சாமான்யரான உலோகர்க்கும் சிறப்புடயரான பகவத் பெருமை நிலை நாட்டப்படுகிறது.

அதனால் குரு பக்தர்களைப் பழித்தால் அப்பழிப்பும் அவர்களுக்குத் துதியாகும் என்று கூறப்படுகிறது.
இது வஞ்சப் புகழ்ச்சியணி என்ற இலக்கணத்தின் பாற்படும்.

இதற்கு ஓர் உதாரணம் காணலாம்.
”உடையவர் காலத்தில் ஒரு நாள் திருவரங்கத்தில் பெருமாள் திருப்புன்னை அருகில் எழுந்தருளி நிற்க,
உடையவரும் மற்றும் பக்த ஜனகளும் பெருமாள் புறப்பாடு காண பெரும் திரளாய்க் கூடியிருக்கும் சமயத்தில்,
சிலர் பெருமாள் திருமுன்பு உடையவர் திருவடிகளைத் தண்டனிட்டு அவரை ஆதரித்து நிற்கிற வேளையில்,
சோழ மன்னன் அவைப்புலவரான “உடையார் சுப்ரமணிய பட்டர்” என்பவர்
இக்காட்சியை அருகில் வந்து இவ்வாறு வினவினார்.

“ஜீயரே, நாம் உம்மிடம் கேட்டுத் தெரிய வேண்டிய ஒன்று உண்டு” என்று சொல்ல
உடையவரும்”அது என்னது” என்று கேட்க
அப்பொழுது பெருமாள் புறப்பாட்டில் எழுந்தருளியிருக்கும்போது உம்மைச் சிலர் வணங்கிச் செல்கிறார்களே!
அவர்களும் உம்மை வணங்குவதில் மிகவும் விருப்புடையவராக இருக்கிறார்கள்.
நீரும் அவர்கள் வணங்குவதைக் குறித்து பெருமாள் திருமுன்பு என்னை வணங்க வேண்டாம் என்று கூறுவதில்லை.
இப்படிப் பேசாமல் இருந்ததற்கு என்ன காரணம் என்று கேட்டார்.

இவ்வாறு கேட்டதற்கு உடையவரும் கீழ் வருமாறு பதில் கூறினார்.
“இந்த கேள்வி அவசியம் கேட்கப் பட வேடியது தான். ஆனாலும் நீர் கேட்பது அதிசயமாயிருக்கிறது.” என்று பதில் கூறினார்.

அதற்கு சுப்ரமணிய பட்டர் எனக்கு அப்படி என்ன சிறப்பு? என்று கேட்க

அதற்கு பதிலாக நீர் ராஜ சேவை பண்ணித் திரிகிறீர் அல்லவா?
ராஜாவிடம் ஒருவன் ஒரு காரியத்தைப் பெற்றுப் போகவந்தால் ராஜாவினுடைய பாதுகைகளை எடுத்துத்
தலையிலே வைத்துக் கொண்டு கௌரவிப்பான். அப்பொழுது அதனைப் பார்த்த அரசன்
“தன் பாதுகைகளைத் தலையில் வைத்துக் கொண்டாடும் அவனை அரசன் தன்னிடம் அன்பு காட்டுவதற்காகவன்றோ
அவ்வாறு செய்கிறான் என்று மகிழ்ந்து அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைப்பன்.
விருப்பத்தைப் பாதுகையா செய்விக்கிறது? அரசன் அல்லவா செய்கிறான்.
தனது பாதுகையைத் தலையில் தாங்கும் ஒருவனை அரசன் அன்பு செய்து
அவனவன் விருப்பத்தை நிறைவேற்றுவதை நீர் பார்த்ததில்லையா?
அது போல இங்கும் பெருமாள் அரசன் போலேயும் , அடியேன் அவருடைய பாதுகையைப் போலேயும் இருப்பதால்
பகவானுடைய அருள் வேண்டி அவனுடைய பாதுகையான என்னை வணகிப் போகிறார்கள்.
என்னிடம் அன்புடயவரைப் பெருமாள் அன்பு செய்கிறார்.
ஆகவே தான் பெருமாள் திருமுன்பு என்னை வணங்கிப் போகிறார்கள் என்று உடையவர் பதிலுரைத்தார்.
சுப்ரமணிய பட்டரும் இவ்வரும் பெரும் பெருமை உடையவர் வாய் மூலம் அறிந்து மிகவும் களிப்புற்றார்.
“இச்செய்தியைத் திருவிருத்த உரையில் காணலாம்)

ஆகவே பகவத் பக்தியுடையவர் ஆசார்ய பக்தி உடையவரைப் பார்த்து குறைவாக நினைப்பார் என்பதும்
அவ்வாறு நினைப்போர்க்கு ஆசார்ய பக்தி உடையாரின் பெருமை தெரிய வேண்டுமென்றும்
அவர்களது பெருமை தெரியாமல் ஒருகால் அவர்களைத் தூற்றினாலும்
அது அவர்களது பெருமையையே காட்டும் என்னும் நுண் கருத்து இப்பாடலில் கூறப்படுகிறது.

அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர்
திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாதவர் இவரைப்
போற்றிலது புன்மையே யாம் –39-

பதவுரை:

அலகை முலை – பூதனையாகிற பேயின் முலைப்பாலை
சுவைத்தாற்கு – பருகின கண்ணனுக்கு
அன்பரடிக்கு – பக்தர்களான அடியவர்களின் திருவடிகளில்
திலதமென – நெற்றித் திலகம் போன்று சிறப்புடையவர் என்று கூறும்படி
திரிவார் தம்மை – நடமாடுகிற பெரியோர்களை
உலகர் – உலகியலில் வாழ்பவர்கள்
பழி தூற்றில் – இறைவன் பின் செல்லாமல் மனிதன் பின் செல்கிறார்களே என்று பழித்துப் பேசினால்
துதியாகும் – அது இவர்களது அடியார் பக்தியை வெளிப்படுத்துவதால் போற்றுவதேயாகும்.
அவர் – அந்த உலகர்கள்
தூற்றாது – அவ்வாறு பழிக்காமல்
இவரை – அடியார் பக்தரான இவரை
போற்றில் – நல்லவர் என்று புகழ்ந்தால்
அது – அப்புகழ்ச்சி
புன்மையேயாம் – பழிப்பதேயாகும்

அலகைமுலை சுவைத்தாற்கு:
அலகை என்று பேய்க்கு பெயர்..
திருவள்ளுவரும் “வையத்துள் அலகையா வைக்கப்படும்” பேயை அலகை என்று கூறினார்.
இங்கு அலகை என்றது பூதனையாகிற அரக்கியை,
திருவாய்ப்பாடியில் கண்ணன் ஒளித்து வளரும்போது கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்ற அரக்கி
யசோதை உருவத்தில் அங்கு வந்து குழந்தையாகிற கண்ணனை மடியில் எடுத்து வைத்து
முலைப்பாலுடன் சேர்த்து வைத்த விஷத்தையும் கொடுத்தாள்.
கண்ணன் அவ்விடப் பாலையும் அவளது உயிரையும் ஒரே சமயத்தில் சுவைத்து உறிஞ்சி உண்டான்.
இவ்வரலாறு அலகை முலை சுவைத்தாற்கு என்று குறிக்கப்படுகிறது. இதைத் திருமங்கையாழ்வார்

“பெற்ற தாய் போல் வந்த பேய்சசி பெருமுளையூடு உயிரை வற்ற வங்கி உண்டவாயன்” என்றும்

“கண்சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை மண்சோற முலையுண்ட மாமதலொய்” என்றும் கூறினார்.

நம்மாழ்வாரும்
“விடப்பால் அமுதா (க) அமுது செய்திட்ட மாயன்” என்று கூறினார்.
இவ்வாறு கண்ணபிரானின் சரிதையில் மனம் பறிகொடுத்த அன்பர்கள் என்றவாறாம்.

அன்பரடிக்கன்பர்:
இவ்வாறான கண்ணபிரான் கதையில் மனம் பறியுண்ட பக்தர்களின் திருவடிகளில் அன்பு பூண்டவர் என்று பொருள்.
பூதனைக் கண்ணனைக் கொல்ல வந்தாள். கண்ணன் அவளை முடித்தான்.
இச்சரிதத்தை நினைக்கும் பக்தர்கள் “தன்னைக் கொல்ல வந்த பூதனையைத் தான் கொன்று உலகத்துக்கு எல்லாம்
ஆணி வேரான தன்னை நமக்குக் காத்துக் கொடுத்தானே.!
அப் பேயைக் கொல்லாமல் போனால் கண்ணன் நமக்கு கிடைப்பானா? என்று அவனது குணங்களுக்கு அடிமையாகி
அவனிடம் ஈடுபட்டு காதலே மிகுந்த தொண்டர்களாகிறார்கள்.
அவர்களது திருவடிகளில் காதல் செய்பவர்களுக்கு “அன்பரடிக்கன்பர்” என்று சிறப்பு.

திலதமெனத் திரிவார் தம்மை:
இப்படி அடியார்க்கு அடியாராய் அடியார் பால் அன்புடையாராய் உலகத்துக்கே இவர்கள் ஒரு திலகம் என்று
பேரரறிஞர்கள் கொண்டாடும்படி நடமாடித் திரிகின்ற பெரியோர்களை என்று பொருள்.
அல்லது “அடியார்க்கு அடியாராய் இருப்பார்க்கு இவர்கள் திலகமாய் விளங்குபவர்கள் என்று
அறிவுடையார் கொண்டாடும்படி நடமாடி திரியும் பெரொயோர்கள் என்றும் சொல்லலாம்.
(திலதம்-பெண்கள்நெற்றிகரமானது மங்களகரமானது)

இதனால் அடியார்க்கு அடியாராய் இருப்பாரின் சிறப்புக் கூறப்பட்டது.
இச்சிறப்பினை நம்மாழ்வார் “பயிலும் சுடரொளி”, “நெடுமாற்கடிமை” என்ற இரண்டு திருவாய்மொழிகளிலும்
திருமங்கையாழ்வார் “கன்சோரவெங்குருதி”நண்ணாத வாள வுணரிடைப்புக்கு ” என்ற இரண்டு திருமொழிகளிலும்,
குலசேகராழ்வர் “தேட்டறும் திறன்” என்னும் திருமொழியிலும்,
தொண்டரடிப்பொடியாழ்வார் :மேம்பொருளுக்கு மேலிற்பாட்டுக்களிலும்
மற்றும் இதிகாச புராணங்களிலும் கூறிச் சிறப்பித்தத்தைக் காணலாம்.
ஸ்ரீவசனபூஷணம் சூத்திரம் 226ல் இவ்வாறு கூறப்பட்டுளதைக் காணலாம்.

உலகர் பழிதூற்றில் துதியாகும்: இப்படிப் பெருமைப் பட நிற்கும் அடியாரை சாதி, ஆசிரமம்,முதலிய வேறுபாடுகள்
ஒன்றும் பாராமல் “பாகவதர் (பகவத் பக்தர்) என்கின்ற ஒன்றை மட்டுமே பார்த்து
அதையே பற்றுக் கோடாகக் கொண்டு பகவானைக் காட்டிலும் இவர்களே அடையத் தகுந்தவர்கள் என்று நினைத்து
அவர்கள் பின்னால் திரிகிரார்கள் என்று சாமான்யரான உலகர்கள் பழி கூறினால்
அப்பழி அவ்வடியார்க்கு அடியாராகும் குணங்களை வெளிப்படுத்துவதால் பாராட்டப் படுவதாகுமேயொழிய பழியாகாது.

தூற்றாது அவர் இவரைப் போற்றில் அது புன்மையேயாம்:
உலகோர்கள் (சாமான்யர்கள்) இவ்வாறு அடியார்க்கு அடியாரை மேற்சொன்ன பழிகளைக் கூறாமல்
தங்களுக்காகச் செய்ய வெடிய சாஸ்திர ஒழுக்கங்கள் எவையும் தாங்கள் செய்ய வேண்டாத போதிலும்
சாமான்யரான உலகத்தார் கெட்டுப் போவார்களே என்னும் இரக்கத்தால் அவர்களுக்காகச் செய்யும் சில ஒழுக்கங்கள் உண்டலவா?
அவ்வொழுக்கங்களை மனப்பூர்வமாகச் செய்யாமல் மேல்வாரியாகச் செய்கையில் அவற்றைக் கண்டு,:
”சாஸ்திரப்படி தங்களைகடமைகளைச் செய்யும் நல்லொழுக்கம் உடையவர்களாக இருக்கிறார்களே ” என்று
புகழ்மது பேசினால் அது அவ்வடியார்க்கு அடியாராய் இருக்கும் இவர்கள் தகுதிக்குப் பொருந்தாததால்
மேல் வாரியாக அவைகள் செய்யும் ஒழுக்கம் குற்றமுடையதேயாகும்.
அதாவது நிந்தைக்கே இடமாகும். என்றவாறு

பகவானுடைய அடியார்க்கு அன்பு பூண்ட அடியார்.
அடியார்க்கு அடியார்: “உலகத்துக்கே திலத” மென்று அல்லது “அடியார்க்குத் திலத” மென்று சான்றோர்களால்
புகழும்படி நடமாடித் திரியும் பெரியோர்களை என்றவாறு
சாமான்ய உலகர்கள் “பகவானைப் புறக்கணித்து அவரடியாரிடம் ஈடுபட்டுத் திரிகிறார்களே” என்று
பழி சொன்னால் அப்பழி துதியிலே சேர்ந்ததாகும்.
அவ்வாறு துதிக்காமல் இவ்வுலகர்கள் அவர்கள் மேல் வாரியாகச் செய்யும் நல்லொழுக்கங்களைப் பார்த்து புகழ்வரேல்
அப் புகழ்ச்சி அவர்கள் நிலைமைக்குப் பழிப்பாகவேயாகும். இதனால் அடியார்க்கு அடியாராம் சிறப்புக் கூறப்பட்டது.

“இராமாயணத்தில் நல அறம் நிறுத்தத் தோன்றிய இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்கனன் என்னும்
இந்நால்வருள் சத்ருக்கனனது ஒழுக்கமே அனைவரிலும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.
அதற்குக் காரணம் இராமபக்தனான பரதனுக்குத் தொண்டு செய்து பரதன் அடியனை
(இராமனுக்கு அன்பர் பரதன். பாரதரடிக்கு அன்பன் சத்ருக்கனன்)
அடியார்க்கு அடியாராய் இருக்கும் சிறப்புக் கூறப்பட்டதாம்.”

” தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டனம் சடகோபன் ”
அடியார் அடியார் அடியார் எங்கோக்கள்” என்ற நம்மாழ்வார்
அவாவுற்ற அடியார்க்கு அடியாராம் நிலையும் இங்கு ஒப்பு நோக்குக.

மற்றும் ” அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்: என்று திருப்பாணரும்,
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய்” என்று தொண்டரடிபொடிகளும்
“அடியார்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே” என்று பெரியாழ்வாரும்
“தொண்டர் தொண்டர்கலாவர்” என்று குலசேகரரும்
அடியார்க்கு அடியாராம் தன்மையை ஆசைப்பட்டுப் பேசியிருப்பதையும் உற்று நோக்குக.

இந்நூல் ஆசிரியரான ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் இராமனுஜருக்கு அடியாராய் வாழ்ந்து
“அன்பரடிக்கன்பர்: என்றும்
“திலதமெனத் திரிவார்” என்றும் இங்கு கூறிய சிறப்புக்கு எடுத்துக்காட்டாக இவ்வாசிரியர் திகழ்ந்தார் என்பதையும் உணரலாம்.

இதைப் பற்றியே மதுரகவியாழ்வாரையும் இவரையும் இணைத்து
தெருளாரும் மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே” என்று இவர் போற்றப்பட்டார்.

அடியார்க்கு அடியாராய் வாழ்பவரின் சிறப்புக்கு மேலும் பல உதாரணங்கள் காணலாம்.
திருவரங்கத்து அமுதனார் இராமானுஜரடியார்க்கு அடியாராய் வாழ்ந்து இராமனுஜ நூற்றந்தாதி பாடினார்.
பட்டருக்கு நஞ்சீயர் அடியாராய் வாழ்ந்தார் என்பது பட்டர் வைபவத்தில் காணலாம்.

மணவாளமாமுனிகளும் இவ்வாறே அடியார்க்கு அடியாராய் யதிராஜவிம்சதை பாடினார்.
எறும்பியப்பா என்னும் ஆசாரியர் மணவாள மாமுனிகளுக்கு அடியாராய்”
பூர்வ தினசரி: முதலிய ஸ்தோத்திரங்களைப் பண்ணினார்.
அதில் ஒன்று “செருக்கில்லாதவர்களும் ஆசார்ய நிஷ்டைகளில் இருப்பவரும் சாஸ்திர சாரார்த்தங்களை அறிந்தவரும்
பணத்தாசை பெண்ணாசை முதலிய ஆசை அற்றவர்களும் பெருமையுற்றவர்களும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்புடயவர்களும்,
கோபம், உலோபம் முதலிய குற்றங்களைக் கடிந்தவர்களுமான மணவாளமாமுனிகளின் அடியார்களோடு அடியேனுக்கு
என்றும் உறவு உண்டாகட்டும் என்று கூறிய வார்த்தைகளையும் காணலாம்.

ஆக
“ஆழ்வார்களும் ஆசார்யர்களும் அடியார்க்கு அடியாராக இருப்பதையே விருபினார்கள்.
இதுவே அறிய வேண்டிய சாரங்களின் சாரமாகும்.”
அதனால் இக்கருத்து நூல் இறுதியில் கூறப்பட்டது.

—————

ஆசார்ய பக்தியும் அடியார்க்கு அடியராய் இருக்கும் அடியார் பக்தியும்
கீழே பல பாடல்களால் விளக்கமாக எடுத்துரைக்கபட்டது.
இப்படி விளக்கமாகக் கூறினாலும் அவ்வடியார்களின் பெருமை உலகோர்க்கு உணர்த்த வேண்டியதாயுள்ளது.
அவர்க்ள் சொற்கள் ஆசார்யனைப் பற்றியும் அடியார்களைப் பற்றியும் உள்ளன.
அவர்கள் செயலும் ஆசார்ய கைங்கர்யமாகவும் அடியார் தொன்டாகவும் உள்ளன.
இவர்களுடய குறிக்கோள் அப்படியே உள்லன. உலகியலுக்கு வேறாக உள்ளது.

இதற்கு உதாரணமாக வடுக நம்பி வரலாற்றைக் காணலாம்.
வடுக நம்பி உடையவருக்கு பால் காய்ச்சிக் கொண்டிருக்கும் பொழுது பெருமாள் பெரிய திரு நாளில்
அலங்காரஙளுடன் வீதியில் புறப்பட்டருள உடயவரும் பெருமாளை சேவிக்கப் புறப்பய்ட்டு
“வடுகா பெருமாளை சேவிக்க வா” என்ரு கூப்பிட,
அப்பொழுது வடுகா நம்பியும் “உம்முடய பெருமாளை சேவிக்க வந்தால் என்னுடய பெருமாளுக்குக் காய்ச்சுகின்ற
பால் பொங்க்ப் போகும். ஆதலால் வர இயலாது” என்று வராமலே இருந்துவிட்டர்.
இவ்வாறான உதாரணங்கள் பலவும் காணலாம்.

இத்தகை யவர்களுடய ஒழுக்கத்தையும் நாட்டர் பார்க்கையில் உலகியலுக்கு மாறாகத் தோன்றுவதால்
அவர்களுடைய ஒழுக்கத்தைப் பழிக்கக் கூடுமல்லவா?
மேலும் நாட்டார் என்னும் இவ்வெண்ணம் போலவே இறைவனடியார்களும் அடியார்கடியாரை நோக்கி
இது என்ன இவர்களுடய ஒழுக்கம்? பகவானை அணுகாமல் ஆசர்யனயும் அடியார்களையும் பின் தொடர்கிறார்களே?
அருள் செய்பவன்பகவானாயிருக்க இவர்களைத் தொடர்வது எதற்காக?
என்று இவர்கள் மீது பழி சொன்னால் என்ன செய்வது? என்ற வினா எழுகிறது.
நாட்டார்க்கும் பகவத் பக்தருக்கும் தோன்றும் இவ்வெண்ணெங்களுக்குப் பதில் சொல்லப்படுகிறது.
இப்பாடலில் மேலும் இவ்வாறு பதில் சொல்கிற முகத்தால் அப்பெரியார்களுடய பேச்சுக்களும் செயல்களும் பார்வைகளும்
உலகத்தாருடய நடத்தைகளும் வேறு பட்டிருக்கும் என்றும் இதுவே அவர்களுடய சிறப்பு என்றும் சொல்லி
இந்நூல் முடிக்கப்படுகிறது.

அல்லி மலர்ப்பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர்
சொல்லும் அவிடு சுருதியாம் -நல்ல
படியாம் மனு நூற்கு அவர் சரிதை பார்வை
செடியார் வினைத் தொகைக்குத் தீ –40-

பதவுரை:

அல்லிமலர்ப் பாவைக்கு — பெரிய பிராட்டியாரிடத்தில்
அன்பர் –காதலனாயிருக்கும் பகவானுடய
அடிக்கு அன்பர் — திருவடிகளில் பக்தராயிருக்குமவர்க்ள்
அவிடு சொல்லும் — வேடிக்கையாகச் சொல்லும் வார்த்தையும்
சுருதியால் — வேதத்துக்கு ஒப்பாகும்
அவர் சரிதை — அவர்களுடய செயல்கள்
மனுநூற்கு நல்லபடியாம் — மனுதர்ம ஸாஸ்திரத்திற்குநல்ல உதாரணமாகும்.
பார்வை — அவர்களுடய நோக்கு
செடியார்– தூறு மண்டிக்கிடக்கிற
வினைத் தொகைக்கு– பாவ கூட்டத்தை அழிப்பதற்கு
தீ–நெருப்புப் போன்றதாகும்.

அல்லிமலர்ப் பாவைக்கு –
தாமரையில் தோன்றிய இலக்குமிக்கு (அன்பர்) அவளிடம் அன்பாகவே இருக்கும் பகவான்.
பகவானே இப்பிராட்டியை முன்னிட்டு “அவளுக்கு அன்பனே” என்று அழைத்து
பகவானே அறிவதற்குப் பிராட்டி அடையாளமாய் இருப்பாள்” என்னும் குறிப்புத் தெரிகிறது.
மேலும் பிராட்டியிடம் அவன் ஆராத காதலாகயிருப்பான் என்னும் கருத்தும் புலனாகிறது.
இத்தகய பிராட்டியிடத்தில் அன்பனாய் இருக்கும் பகவானுடய திருவடிகலில் அன்புடயவர்கள்
“அல்லிமலர்ப் பாவைக்கு அன்பரடிக்கு அன்பர்” என்று சொல்லப்பட்டனர்.
அதாவது
இறைவன் திருவடிகலில் செய்யும் அன்பையே தங்களுக்கு அடையாளமாகக் கொண்டிருக்கும் பாகவதர்கள்.

சொல்லும் அவிடு சுருதியாம்:
அத்தகைய பாகவதர்கள் வேடிக்கை வினோதமாகச் சொல்ல்ம் வார்தைகள் வேதக் கருத்துக்க்களய் இருப்பதால்
வேதம் போன்று நம்பிக்கை உடையதாய் ஏற்கலாயிருக்கும் என்பதாம்.
குரு பரம்பரையில் இத்தகைய வார்த்தைகளைக் காணலாம்.
உடையவைர் வார்த்தை, பட்டர் வார்த்தை, ஆழ்வான் வார்த்தை, நம்பிள்ளை வார்த்தை, திருக்கோளூர் பெண்பிள்ளை வார்தை
என்று இப்படிப் பெரியோர்கள் சொல்லும் வார்த்தைக்ள் எல்லாம் வேத வேதாந்தங்களை எளிமையாகச் சொன்ன வார்த்தைகளாகும்.

”வாய் தந்தன கூறுதியோ மறை தந்த வாயால்” என்று கம்ப நாட்டாழ்வாரும்
இராமபிரான் இலக்குவனை நோக்கிக் கூறும் கவியில் குறிப்பிட்டார்.
“பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந்தடைந்த பேதை வேடனுக்கு உதவி செய்து
விறகிடை வெந்தீ மூட்டி பாடுறு பஸியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள்
வீடு பெற்று உயர்ந்த வார்தை வேதத்தின் விழுமிது அன்றோ” என்ற கம்பராமாயணப் பாடலில் சொல்லப்பட்ட
புறாக் கதையில் புறாவின் வாயினால் சொல்லப்பட்ட சரணாகதி
தர்மம் வேதத்தைக் காட்டினாலும் சிறப்பானதாகச் சொல்லப்பட்டுள்ளது அறியலாம்.

நல்லபடியாம் மனுநூற்கு அவர் சரிதை:
அவர்களுடய சரிதையாவது அவர்களுடய நடத்தையாகும்.
அதாவது
மனுநூலில் சொல்லப்பட்ட ஒழுக்க நெறிகளுக்கு அடியார்களுடைய அன்றாட நடத்தைகள் மாதிரியாக விளங்கும் .
தர்ம ஸாஸ்திரஙள் வர்ணாஸ்ரமஙளுக்கு ஏற்ப அவரவர்க்குரிய ஒழுக்கஙளைக் கட்டளையிட்டுள்ளன.
அவற்றைக் கற்றுணர்ந்தவர்கள் அதன்படி ஒழுகுவார்கள். சாதாரண மக்கள் அதைக் கற்கவோ கற்றபடி நடக்கவோ இயலாது.
ஆனாலும் தர்மஸாஸ்திரங்களைக் கற்றுணர்ந்த மேலோர்கள் நடப்பதைப் பார்த்து சாதரண மக்களும் அவற்றைக் கடைப் பிடிப்பார்கள்.
ஆகவே அத்தகைய பெரியோர்களுடைய நடத்தை மற்றவர்கள் பின் பற்றுவதற்குரியதாக இருக்கிறது.
அவர்களுடைய நடத்தயைக் கொண்டு தர்ம ஸாஸ்திரம் உண்டாயிற்று. என்று சொல்லும்படியாகவும் இருக்கும்.
அப்பொழுது இவர்களுடய நடத்தை அசல் போலவும் ஸாஸ்திரங்களிலே சொல்லப்பட்டவை நகல் போலவும் இருக்கிறது.
அவ்வாறு இவர்களுடைய ஒழுக்கதிற்கு நம்பிக்கைக் கூறப்பப்டுகிறது.
இதற்கு உதாரணமாக கம்ப ராமாயணத்தில் ஓரிடம் காணலாம்.

“எனைத்து உளமறை அவை இயம்பற் பாலன
பனைத்திறன் கரக்கரிப் பரதன் செய்கையே
அனைத்டிறம் அல்லன அல்ல: அன்னது
நினைத்திலை என்வயின் நேய நெஞ்ஜினால்”–(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் -திருவடி சூட்டு படலம்)

இது இராமபிரான் இலக்குவனை நோக்கிக் கூறுவதாகும்.

உலகத்துக்கெல்லம் ஒழுக்கங்களை வரையருத்துக் கூறுகிறது.வேதம்.
பரதனுடய ஒழுக்கம் எவையோ அவை வேதத்தில் கூறப்பட்டவையே.
அவனிடத்தில் காணப்படாத ஒழுக்கங்கள் வேதத்தில் கூறிருந்தாலும் அவை ஏற்கத் தக்கதல்ல.
பரதனது நடையில் உள்ளன எவையோ அவையே ஏற்கத் தக்கனவாம் என்ற உண்மையை
இராமன் இலக்குவனுக்கு எடுத்துரைப்பதாகக் கம்பன் கூறியுள்ளான்.
இங்குச் சொல்லப்பட்ட பரதன் சரிதை: மனு நூற்கு நல்லபடியாம்” என்று கூறப்படும் கருத்துக்கு ஒப்பு நோக்கலாம்.

பார்வை செடியார் வினைத் தொகைக்குத் தீ
பாகவதப் பெருமக்களான அப் பெரியோர்களுடய பார்வையானது தூறு மண்டிக் கிடக்கிற வினைக் குவியலை
அழிக்க வல்லதாக இருக்கும்.
அதாவது
பெரியோர்களுடைய பார்வை வல்வினை இருந்த சுவடு தெரியாமல் போக்கும் ஆற்றலுடயதாகும் என்பதால்
ஆன்ம ஞானத்தைக் விரிவு படுத்தும் என்பது உட்கருத்து.

பெரிய பிராட்டியாருக்கு அன்பான பகவானுடைய திருவடிகளில் அன்பு செய்வார்
வினோதமாகச் சொல்லும் வார்தைகளும் வேதமாகவே ஏற்றுக் கொள்ளப்படும்.
அவர்களுடைய நடைத்தைகள் ஒழுக்க நெறியைக் கற்பிக்கும் நூலான மனு நூலாகும்.
சரியான அசலாய் விளந்கும்
அதாவது
இவர்கள் ஒழுக்கம் அசலாகவும் நூலில் சொல்லப்படுவது நகலாகவும் கொள்ளப்படும்.
இவர்களுடைய பார்வை தூரு மண்டிக்கிடக்கிற பாவக் குவியலுக்கு தீ பொன்று அழிக்கும் கருவியாய் இருக்கும்.
இவர்களுடைய பார்வை பட்டவர்கள் வினையிலிருந்து விடுபட்டு தூயவராய் ஜ்ஞாநத்தைப் பெற்று வாழ்வார்கள் என்பதாம்.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ ஞான சாரம்–பாசுரங்கள்– 21-30—ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் விரிவுரை — –

August 30, 2021

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!

சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.

———

திருமகள் மணாளனான இறைவன் தன்னுடைய பக்தர்களுக்கு மிகத் துன்பங்களை கொடுத்தாலும்
அத் துன்பங்கள் அவர்களிடம் தான் கொண்ட அன்பினால் ஆகும் என்பது
உதாரணத்துடன் விளக்கப்படுகிறது இப் பாடலில்.

ஆரப் பெருந்துயரே செய்திடினும் அன்பர்கள் பால்
வேரிச் சரோருகை கோன் மெய் நலமாம் –தேரில்
பொறுத்தர்கரிது எனினும் மைந்தன் உடல் புண்ணை
அறுத்தற்கு இசை தாதை யற்று –21-

பதவுரை:

வேரிச் சரோருகை கோன் -நறுமணம் நிறைந்த தாமரைப் பூவை இருப்பிடமாக கொண்ட பெரிய பிராட்டியாருக்கு மணவாளன்
அன்பர்கள் பால் -பக்தி உடையவார்களிடத்தில்
ஆரப் பெருந்துயர் -மிக்க பெரும் துன்பத்தை
செய்திடினும் -தந்த போதிலும்
தேரில் -இதை ஆராய்கையில்
மெய்ந் நலமாம் -உண்மையான அன்பிலே யாகும்
பொறுத்தற்கு அரிது எனினும் -தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும்
அப்படித் தருவது
மைந்தன் -பிள்ளையினுடைய
உடற் புண்ணை -உடலில் உண்டான புண்ணை
அறுத்தற்கு -அறுவை சிகிச்சைக்கு
இசைதாதையற்று – அனுமதிக்கும் தந்தை போலவாம்

ஆரப்பெருந்துயரே –
துயர் – துன்பம், பெருந்துயர் – பெருந்துன்பர். ஆரப் பெருந்துயர் – மிக்க பெருந்துன்பம் என்றவாறாம்.
துயரே என்கிற ஏகாரத்தால்
நடுவில் ஒரு இன்பம் கலவாத துன்பம் என்று புலனாகிறது.

செய்திடினும் – கொடுத்தாலும் என்று பொருள்.

ஆன்மாக்களுடைய முன் வினைப் பயனால் துன்பங்கள் வந்தனவானாலும் அவற்றை நடத்துபவன்
இறைவனாகையாலே “போயபிழை” எனப்பட்ட பழவினைகளும்
‘புகுதருவான்’ எனப்பட்ட வரும் வினைகளும்
தற்பொழுது உடலுடன் கொண்டு வந்த வினைகளும் ஆகிய
மூன்று வினைகளையும் கழிக்கின்றவன் இறைவனாதலால்
அவனுக்கு மேற்சொன்ன மிக்க பெருந்துன்பங்களைக் கழிக்க முடியாதவையல்ல. அவர் எண்ணினால் அகற்ற முடியும்.
ஆயினும் தன் பக்தர்களின் தன்மைக்காக அப் பெரும் துன்பங்களைப் பக்தர்கள் துய்க்கும்படி செய்கிறான்.
அதனால் பக்தர்கள் துன்பம் துய்க்கும்படி ஆகிறது. ஏனெனில் பக்தர்கள் உலகப் பற்றிலிருந்து விடுபடவேண்டுமல்லவா?

இக்கருத்து ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்ற பழமொழியால் கூறப்பட்டது.

‘இயல்பாகவும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடமை
மயலாகம் மற்றும் பெயர்த்து’–என்ற குறளுக்கு
எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை மட்டும் விடாது போனால் அதைத் தொடர்ந்து விட்டனவெல்லாம்
மீண்டு வந்து தவத்திற்கு இடையூறாய் மனக்கலக்கம் செய்யும் என்ற பரிமேலழகர் உரையைக் காண்க.

வேரிச் சரோருகை கோன் – வேரி – நறுமணம், சரோருகம் – தாமரை

வேரிச் சரோருகம் – நறுமணமே வடிவாகவுடைய தாமரை

வேரிச் சரோருகை – அத் தகைய தாமரையை இருப்பிடமாக உடையவள் இலக்குமி.

சரோருகை கோன் :- அவளுக்குக் கணவனான திருமால் ‘கோன்’ என்ற சொல்லுக்கு
‘வேரிச்சரோருகை’ என்பது கருத்து அடையாக வந்தது.
அதாவது
பக்தர்களுக்குத் துன்பத்தை விளைப்பதற்காகப் பகவானோடு பிராட்டியும் துணை நிற்கிறாள் என்று தெரிகிறது.
காரணம் பக்தனுக்குப் பகவான் துன்பம் தருவது, அவனுடைய நன்மைக்காகவே என்று சொல்லுகையாலே
அந்நன்மைக்கு அவளும் துணை நிற்பது தவறல்லவே என்பதாம்.

மெய்ந்நலமாம் – உண்மையான அன்பின் அதாவது உண்மையான சினேகம் என்பதாம்.

தேரில் – ஆராயில், தேறுதல் – ஆராய்தல்

வேரிச் சரோருகைகோன், அன்பர்கள் பால் ஆரப்பெருந்துயரே செய்திடினும் தேரில் மெய்ந்நலமாம் என்று கொண்டு கூட்டுக.
இதற்கு எடுத்துக் காட்டாக கட்டுரைக்கப்படுகிறது மேல்தொடரில்.

பொறுத்தார்க்கு அரிதெனினும் மைந்தன் உடல் புண்ணை அறுத்தற்கு இசைதாதையற்று –
தன் புதல்வனுக்குத் தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும் அவன் உடலில் எழும்பிய கட்டியை
அறுவை மருத்துவத்திற்கு நல்லெண்ணத்துடன் ஏற்கும் தகப்பனைப் போல என்று பொருள்.
அதாவது
மகனுக்குத் தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும் அவனுடைய நன்மைக்காக அவனுடைய உடம்பில் எழும்பிய கட்டியை
அறுத்து எறிவதற்கு நல் எண்ணத்தாலே ஏற்றுக் கொள்ளும் பிதாவைப் போல,
பகவானும் தன் பக்தர்கள் வினைப்பயனைத் தீர்ப்பதற்கு மிக்க பெரும் துன்பங்களைக் கொடுத்து
அவ்வினையிலிருந்து அவர்களை மீட்பதற்காகவாம். இது பக்தனிடம் தான் கொண்ட உண்மையான நேசத்தாலே யாகும்.
இந் நற்செயலுக்கு இரக்கமே வடிவான பெரிய பிராட்டியாரும் துணை நிற்க இறைவன் செய்யும் செயலாகும் என்று பொருள்.

————

வினைப் பயன்களை அனுபவித்தே கழிக்க வேண்டும். அனுபவிக்காமல் யாரும் தப்ப முடியாது. ‘
உரற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா’ என்றது நீதி நூல்.
அதாவது
வந்து கூடுகின்ற தீ வினைகளைத் தடுப்பது தேவர்களுக்கும் முடியாவாம்.
அதுபோல பெறக் கூடிய நல் வினைகளையும் தடுக்க முடியாவாம்.
மழை வறண்டால் அதனை யாரும் தரமுடியாது. அதிக மழை பெய்தால் அதைக் குறைக்க வல்லவருமில்லை.
இதனால் வினைப் பயன்களைத் துய்த்தே ஆக வேண்டும் என்பது இறைவனால் இடப்பட்ட நியதி.
முற்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பில் நுகரப்படுவதாலும் இப்பிறப்பில் செய்த வினை வரும் பிறப்பில் நுகரப்படுதலுமாகிய
சுழல் போல் மாறி மாறி வந்து கொண்டிருக்கும்.
இவ்வாறு பிறவிச் சுழலில் சுழன்று வரும் ஆன்மாவுக்கு அதிலிருந்து தப்ப முடியுமா? என்று வினா எழுந்த பொழுது
அதற்கு பதில் கூறுகிறது இப்பாடல்.

பிறவிக்குக் காரணமான பழவினைகள் கழிதலால், பின் ஒரு பிறவி பிறந்து நுகரவிருக்கும் வினையும் இருக்குமோ? இராது.
ஆகவே வினைகளெல்லாம் ஆன்ம ஞானத்தால் தீயினில் பட்ட பஞ்சு போல் கருகி விடும்.
‘தீயினில் தூசாகும்’ என்பது தமிழ் வேதம். ஆகவே, பிறவித் தொடர் என்ற துயரமில்லை என்பதாம்-

உடைமை நான் என்று உடையான் உயிரை
வடமதுரை வந்து உதித்தான் என்றும் -திடமாக
அறிந்தவன் தன் தாளில் அடைந்தவர்க்கும் உண்டோ
பிறந்து படு நீள் துயரம் பின் –22-

பதவுரை:

நான் -நான் என்கிற ஆன்மா
உடைமை -இறைவனுடைய உடைமைப் பொருள் என்றும்
உயிரை உடையான் -இவ்வாத்மாவை சொத்தாக உடையவன்
வடமதுரை வந்துதித்தான் என்றும் -பிறந்தான் என்றும்
திடமாக அறிந்து -உறுதியாக அறிந்து
அவன்தன் தாளில் -இறைவனான அவன் திருவடிகளில்
அடைந்தவர்க்கும் -அடைக்கலம் புகுந்தவர்க்கும்
பின் பிறந்து படும் -இனி மேலும் ஒரு பிறப்பெடுத்து நுகரத்தக்க பழவினைகள்
நீள் துயரம் -பழ வினைகள்
உண்டோ -இருக்குமோ? இல்லை என்றவாறு –

உடைமை நானென்றும் –
நான் இறைவனுடைய உடைமைப் பொருள் என்றும்,
அதாவது
வேதம் முதலிய சாஸ்திரங்களில் ஆன்மாக்கள் இறைவனுடைய உடைமைகள் என்று
சொல்லப்பட்டதறிந்து அதன்படி இருத்தல்.

உடையான் உயிரை வடமதுரை வந்து உதித்தான் என்றும் –
நான் என்று சொல்லப்படுகிற இவ்வாத்மாவை உடைமையாகக் கொண்டவன்
வடமதுரையில் கண்ணனாக வந்து பிறந்தவன் என்றும்,
பகவத் கீதையில் தானே பரம்பொருள் என்றும், உலகமெல்லாம் என் உடைமைகள் என்றும்,
பிறவிப் பெருங்கடல் சுழலும் ஆன்மாக்களில் யாவர் என் பாதத்தையே அடைக்கலம் புகுகிறார்களோ
அவர்களை நான் பிறவியிலிருந்து கரையேற்றுவேன் என்றும் சொன்ன கண்ணபிரானுடைய தலைமையை.

திடமாக அறிந்து –
உறுதியாக அறிந்து
அதாவது
உண்மையை சாஸ்திரங்களால் ஆராய்ந்தால் ஆன்மாவுக்கு உடைமைத் தன்மையும்
இறைவனுக்கு உடையவனாம் தன்மையும் வகுக்கப்பட்டுள்ளது தெரியவரும்.
அதனால் உடைமை – உடையான் என்று இங்கு இரு பொருளில்,
உடைமை என்று உயிர்களுக்கும், உடையான் என்று இறைவனுக்கும் வகுத்துக் கூறப்பட்ட பெயராகும்.

ஆகையால் உடைமையான ஆன்மா இருக்குமிடத்திற்கு வருவானும்,
அதனைத் தன்னுடனே சேர்த்துக் கொள்வானும் அவனே.
இதனால் ஆன்மாவை வந்து அடைபவனும், அடைவதற்கு வழியாயிருப்பவனும் ,
அடைந்து மகிழ்வானும் அவனே என்று சொல்லப்பட்டது.

திடமாக அறிகையாவது
இறைவனுக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள உடைமை உடையான் என்னும் அநாதியான இவ்வுறவை ஐயம் திரிவற அறிதல்.
இவ்வாறு இருவருக்குமுள்ள உறவு முறையை அறிந்து.

அவன் தன் தாளில் அடைந்தவர்க்கும் –
ஆன்மாவுக்கு உடையவனான இறைவன் திருவடிகளில் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு
அடைக்கலம் புகுந்தவர்களுக்கும் என்று பொருள்.
அதாவது
த்வய மந்திரத்தில் முன் பாதியில் சொன்னபடி சரணாகதி செய்தவர்களுக்கும் என்று கருத்து.

உண்டோ பிறந்து படு நீள்துயரம் பின் –
நீள் துயரம் என்றது பழவினையை,
பிறப்புக்குக் காரணமாகிற பழைய வினைகள் சரணாகதி செய்த பிறகு இருக்குமோ?
சரணாகதி செய்த உடன் உயிரைப் பற்றி நின்ற வினையெல்லாம்.

“வானோ மறிகடலோ, மாருதமோ, தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் – ஆனின்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதித்தார் தாள் பணிந்தோம்
வன்துயரை அவா மருங்கு”–(பெரிய திருவந்தாதி – 54)

என்று நம்மாழ்வார் அருளியபடி வினை போனயிடம் தெரியாமல் போய்விடும்.
ஆகவே சரணாகதி செய்த பின்பு ஒருபிறவி பிறந்து நுகரத்தக்க பழைய வினையும் கழியாமல் இருக்குமோ?.
உடனடியாக வீடு பெற வேணும் என்னும் வேகத்துடன் அப்பொழுதே வீடுபேறு அடைவதும்
உடல் வீழ்ந்த பிறகு வீடு பேறு கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு
உடல் கழிந்த பிறகு வீடு பேறு கிடைப்பதும் உறுதியாக உண்டு.
இதனால் சரணாகதி செய்தவர்களுக்கு மறுபிறப்பின் தொடர்ச்சி இல்லை. “உறுதியாக இல்லை.”

————-

முன் செய்த வினைகளை எண்ணி, “அவ்வினை நம்மைப் பற்றிக் கொண்டு துன்புறுத்துமே” என்று
வருந்துகிற மனதுக்கு ஆறுதல் கூறுகிற பாடல் இது.
இறைவன் திருவடிகளில் சரணாகதியடைந்த பின்பு முன் வினைகளின் பயனான துன்ப நுகர்ச்சி இல்லை
என்னும் உண்மையை அனைவரும் அறிய இதில் உணர்த்தப்படுகிறது.

ஊழி வினைக் குறும்பர் ஓட்டருவர் என்று அஞ்சி
ஏழை மனமே யினித் தளரேல் -ஆழி வண்ணன்
தன்னடிக் கீழ் வீழ்ந்து சரண் என்று இரந்து ஒரு கால்
சொன்னதர் பின் உண்டோ துயர் –23-

பதவுரை:

ஊழிவினை -பழையதாக செய்யப்பட்ட வினைகளாகிற
குறும்பர் -கயவர்கள்
ஓட்டருவர் -ஓடிவந்து துன்புறுத்துவர் என்று
அஞ்சி -பயந்து
ஏழை மனமே -அறிவிலாத நெஞ்சமே
இனித்தளரேல் -இனிமேல் வருந்த வேண்டாம் ஏனெனில்?
ஆழிவண்ணன்தன் -கடல்போன்ற நிறமுடைய இறைவனது
அடிக்கீழ் -திருவடிகளில்
வீழ்ந்து -விழுந்து (சேவித்து)
சரண் என்று -நீயே தஞ்சமாக வேணும் என்று
இரந்து -வேண்டிக்கொண்டு
ஒருக்கால் -ஒரு தடவை
சொன்னதற்பின் -அடைக்கல வார்த்தை சொன்ன பின்பு
துயர் உண்டோ -வினைப்பயனால் வரும் துன்பம் உண்டாகுமோ உண்டாகாது என்பதாம்.

ஊழி வினைக்குறும்பர் –
பல பிறப்புகளிலும் சேர்க்கப்பட்ட வினைகளாகிற கயவர்.
ஊழ் என்பது பழமையை.
ஊழ்வினை என்பது பழைய வினை என்றவாறு. இதனால் முன் செய்த வினை கூறப்படுகிறது.

வினைகளைக் குறும்பர் என்று சொல்வது அவற்றின் கொடுமைத் தன்மைப் பற்றி
“அழுக்காறு என ஒரு பாவி” என்று சொல்வது போலக் கூறப்பட்டது.
“கயமை என்னும் பண்புச் சொல்’. பொருள் கொடுமை பற்றிக் கயவர் என்று உயர்திணையில் கூறப்பட்டது.
கயவர்கள் தங்கள் மறத்தால் (வலிமையால்) நாட்டைத் தன் வயமாக்கித் தாம் நினைத்தபடி நடத்துவது போல
வினைகளும் ஆன்மாவைத் தம் வழியே இழுத்துத் தான் விரும்பிய படி நடத்துவதால் குறும்பர் என்று கூறப்பட்டது.
‘கங்குல் குறும்பர்’ என்ற இடத்தில் இரவைக் குறும்பராகவும்,
ஐம்புலன்களை ‘ஐவர்’ என்றும் கூறும் வழக்குப் பற்றி இங்கு வினையைக் குறும்பர் என்று கூறப்பட்டது.

ஓட்டருவர் என்று அஞ்சி –
ஓடி வருவார் என்று பயப்பட்டு
குறும்பராகையாலே ஓடிவருவார் என்று சொல்லப்பட்டது.
கீழ்க் கூறிய வினைகள் விரைவாக வந்து துன்புறுத்ததலுக்கு பயப்பட்டு.

ஏழை மனமே –
அறிவிலியான நெஞ்சே!
அதாவது
அடைக்கலம் புகுந்தவரை ‘அஞ்சேல்’ என்ற கைவிளித்துக் காக்கும் இயல்புடைய இறைவன் பெருமையும்
(வீடு பேற்றுக்குச் சொல்லப்பட்ட பல நெறிகளிலும்) அடைக்கல நெறியின் சிறப்பும்,
அடைக்கலம் அடைந்தவன் பெறும் பயனும் அறிவதற்குத் தக்க ஞானமில்லாத நெஞ்சே! என்று
நெஞ்சின் அறியாமையைக் கூறியவாறு.
இத்தகைய நெஞ்சுக்கு மேல் தொடரால் ஆறுதல் கூறப்படுகிறது.

இனித்தளரேல் –
சரணாகதி செய்வதற்கு முன்பு தளர்ச்சி அடைந்தாலும் அது செய்த பிறகு தளர வேண்டாம்.
சரணாகதியின் பெருமை அத்தகையது என்பது இதனால் உள்ளத்தை நோக்கி
கவலைப்படாதே’ என்று ஆறுதல் கூறுகிறார் ஆசிரியர்.
இது கண்ணன் தேர்த்தட்டில் இருந்து கொண்டு அர்ஜுனனைப் பார்த்து ‘கவலைப்படாதே. அஞ்சற்க’ என்று சொன்னது போன்றது.

இனி என்று சொன்னதின் கருத்து
மேல் வெளிப்படையாகக் கூறப்படுகிறது.

ஆழி வண்ணன் –
கடல் போன்ற ஆழமான இயல்புடையவன்
அல்லது
கடல் போன்று துயர் தீர்க்கும் நீல நிற உருவை உடையவன் என்று பொருள்.

தன்னடிக்கீழ் வீழ்ந்து –
அவன் திருவடிகளின் கீழ் விழுந்து “ஆழி வண்ணன் நின்னடியினை அடைந்தேன்” என்று
திருமங்கை ஆழ்வார் கூறியது போல விழுந்து

சரண் என்று இரந்து –
நீயே எனக்குப் புகலாயிருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு
ஒருக்கால் சொன்னதற்பின் இவ்வாறு ஒரு தரம் வேண்டிக் கொண்ட பிறகு.
அதாவது
இறைவன் அடிகீழ் வீழ்ந்து வேண்டுதலுக்குப் பிரபத்தி அல்லது சரணாகதி என்று பெயர்.
இது ஒரு தடவையே செய்ய வேண்டியது. ஒரு தடவைக்கு மேல் செய்யத் தேவையில்லை.
அதனால் ஒருக்கால் சொன்னதற்பின் என்று கூறப்பட்டது.

உண்டோ –
இவ்வாறு சரணாகதி செய்த பிறகு முன்வினைகள் காரணமாக வருகின்ற – துன்பங்கள் உண்டாகுமோ? உண்டாகாது.
இறைவன் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த போதே முன் வினைகளும் வரு வினைகளும் எல்லாம் அழிந்து விடும்
என்று சாஸ்திரம் கூறுகின்ற வார்த்தைகளை நினைத்து
‘துயர் உண்டோ’ (போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்) என்று சொல்லப்படுகிறது.

ஆகவே இறைவன் திருவடிகளில் முறைப்படி அடைக்கலம் புகுந்தவனுக்கு
அனைத்து வினைகளும் அழிந்து விடுகின்றன என்பதும்.
அவற்றால் வரும் துன்பங்களும் வரமாட்டா என்பதும் இதனால் சொல்லப்பட்டன.

———–

ஊழ்வினை பற்றி சாஸ்திரம் கூறுகையில் முன்னை வினைகள், வரும் வினைகள், எடுத்த வினைகள் என்றும்
மூன்று வகையாகக் கூறுகின்றன. அவற்றுள் முன்னைய வினைப்பற்றி சென்ற பாடலில் கூறினார்.

எதிர் வருகின்ற வினைகளை நினைத்துத் தளர்கின்ற மனதை நோக்கி தேற்றுகிறது போன்று கூறுகிற பாடல் இது.
தன்னை அடைக்கலம் புகுந்த பக்தனிடம், அவனறியாமல் செய்யும் குற்றங்களில் இறைவன் கண் வைக்க மாட்டான் என்கிறது.
அதாவது
பார்த்தும் பாராமல் இருப்பான் என்று கருத்து.
(இது) அனைவரும் அறியக் கூறப்பட்டது.

வண்டு படி துளப மார்பன் இடைச் செய்த பிழை
உண்டு பல வென்று உளம் தளரேல் -தொண்டர் செய்யும்
பல்லாயிரம் பிழைகள் பார்த்து இருந்தும் காணும் கண்
இல்லாதான் காண் இறை –24-

பதவுரை:

வண்டுபடி -தேனைப் பருகுவதற்காக வண்டுகள் வந்து மொய்க்கின்ற
துளப மார்பனிடை -திருத்துழாயாலே அழகு செய்யப்பட்ட திருமார்பை உடைய பகவானிடத்தில்
செய்த பிழை -இழைத்த குற்றங்கள்
பல உண்டு என்று -அனேகங்கள் இருக்கின்றன என்று
உளம் -ஏ மனமே
தளரேல் -வருந்தாதே
இறை -(அடைக்கலம் புகுந்தாரை அஞ்சேல் என்று அருளும்) நம் தலைவர்
தொண்டர் செய்யும் -தன்னுடைய பக்தர்கள் செய்கின்ற
பல்லாயிரம் பிழைகள் -அனேகமாயிரம் குற்றங்களை
பார்த்திருந்தும் -தன்னுடைய ஞானத்தால் எல்லாவற்றையும் கண்டு கொண்டிருந்தும்
காணும் -பக்தர்களது பிழைகளைப் பார்க்கும் விஷயத்தில்
கண் இல்லாதவன் -கண் பார்த்தும் பாராதவனாகவே இருக்கிறான்

வண்டு படி துளப மார்பனிடைச் செய்த பிழை –
தேன் பருகுவதற்காக வண்டுகள் படிந்துள்ள திருத்துழாய் மாலையை மார்பில் அணிந்திருக்கும் இறைவனிடம்
செய்த குற்றங்கள் என்று பொருள்.

இப்பொழுது மார்பின் அழகை அடைமொழி கொடுத்துச் சொன்னதின் கருத்து
தன் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த பக்தர்களைத் தன் அழகின் இன்பத்தை நுகர்விப்பதற்காக
எப்பொழுதும் தன்னை அழகு படக் காட்டிக் கொண்டிருப்பவன்
புகுந்த பிறகு குற்றம் எதையும் செய்யமாட்டார்கள்.
அவர்களையும் அறியாமல் ஏதேனும் குற்றம் செய்ய நேர்ந்துவிட்டால் அத்தகைய குற்றங்களைப் பாராமலேயே இருந்து விடுவான்.

இக்கருத்தை உணர்த்துவதற்காகவே
திருத்துழாய் மாலையை அணிந்து கொண்டு அவ்வழகைக் காட்டிக் கொண்டிருக்கிறான்
என்று குறிப்பாக உணர்த்தப்படுகிறது.

உண்டு பல வென்று –
சரணாகதி பண்ணி யிருந்தாலும் ஐம்பொறிகள் அடங்கிய உடலோடு இருக்கையில்
அவ் வுடல் தீய காரியங்களைச் செய்வதற்கு ஏதுவாகயிருக்கும்.
“உரன் என்னும் தோட்டியால் ஓர் ஐந்தும் காப்பான்” என்ற திருக்குறளில்
ஐம்பொறிகளையும் யானையாகவும்
மனதை அவற்றை அடங்கும் அங்குசமாகவும் கூறியிருப்பதால்
ஐம்பொறிகளையும் அடக்கி வாழ்வது மிகவும் அரிது என்று தோன்றுகிறது.
மேலும் “ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்” என்றும்
‘உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி’ என்னும் சொல்லப்பட்ட ஆழ்வார்கள் பாடலாலும் உணரலாம்.

ஆக
அடக்கரும் புலன்கள் ஐந்து அடக்கி, வாழ்வது அரிதலால்
குற்றங்கள் பலவும் புகுகின்ற குற்றங்களை நினைத்து உள்ளம் தளர்கின்ற பொழுது.

உளம் தளரேல் –
அவ்வுள்ளத்தை நோக்கி ‘ஏ நெஞ்சே தளர வேண்டாம்’ என்று தேற்றுவதாயிருக்கிறது.
உளம் – உள்ளம். இங்கு மகர ஈறு விளி வேற்றுமையில் வந்தது. ‘உள்ளமே’ என்றவாறு.
தளராமல் இருப்பதற்கான காரணம் கூறப்படுகிறது மேல் தொடரால்.

தொண்டர் செய்யும் –
தன்னுடைய பக்தர்கள் செய்யும் தொண்டர் என்றதற்கு (சபலர்) உழல்பவர் என்று பொருள் கொண்டு
தன்னிடம் உழல்பவரான பக்தர்கள் என்று பொருள் காட்டப்பட்டுள்ளது.
அல்லது
தனக்கு அடிமைப்பட்டவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
ஆக,
தனக்கு அடிமைப்பட்டவரான தன்னுடைய பக்தர்கள் செய்யும்’ என்று இதற்குப் பொருளாகிறது.

பல்லாயிரம் பிழைகள் –
முக்குண வயப்பட்ட உடல் காரணமாக மதி மயங்கி மனம், மொழி, மெய் என்பவனற்றால்,
தன்னை அறியாமல் நாள் தோறும் செய்யும் பாபங்கள் அளவு கடந்திருக்கின்றனவாதலால்
“அநேகமாயிரம் பிழைகள்” என்று கூறப்படுகிறது.
பிழை – குற்றம் (பாவம்)

ஒரு ஜீவன் அரைக்கணத்தில் செய்யும் பாப பலன்களை பல்லாயிரம் நான்முகக் கடவுள்கள் ஆட்சி செய்யும் காலம்
துய்த்தாலும் கழியாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
அத்தகைய குற்றங்களாவன:-

சாஸ்திரம் விலக்கியவற்றை செய்தல்,
அதாவது
பிறரைத் துன்புறுத்துதல், பிறர் புகழ்பாடல், பிறர் மனையாளை விரும்புதல், பிறர் பொருள் வவ்வல்,
பொய் கூறல், உண்ணக் கூடாதனவற்றை உண்ணுதல் முதலியன ஆகும்.

சாஸ்திரம் விதித்தனவற்றைச் செய்யாமை என்பது பகவானிடம் பிழை செய்தல்.
அதாவது
உயர்ந்த தெய்வத்தை அற்பமான தேவர்களோடு ஒப்பிடுகை. அவனுடைய அவதாரங்களில் குற்றம் சாடுகை,
அர்ச்சா உருவத்தை எடை போட்டுச் சோதித்து ஆராய்ச்சி செய்தல், பூஜை குறைபாடுகள்,
பூஜைக்குரிய பொருள்களை மறைவாகவோ வெளிப்படையாகவோ களவு செய்தல்,
தான் நேரில் களவு செய்யாமல் போனாலும், களவு செய்பவருக்கு உடந்தையாதல்,
அத்தகைய களவுப் பொருட்களை இரந்தோ உரிமையாலோ பெறுதல் முதலான பாபங்கள் தெய்வக் குற்றங்கள் எனப்படும்.

பொருள் இன்பம் முதலியவைகளுக்காக அடியார்களிடம் பகை கொள்ளுதல்
இவ்வாறான பாவங்களும் ‘பிழைபல’ என்றதில் அடங்கும்.

இறை பார்த்திருந்தும் –
எல்லாப் பொருள்களுக்கும் உள்ளிருந்தும் அவற்றின் செயல்களை எப்பொழுதும் கண்டு கொண்டிருப்பவன் இறைவன்.
அத்தகையவன் தொண்டர்கள் செய்யும் பிழைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தாலும்
காணும் கண் இல்லாதவன் போல அவர்களது குற்றங்களைப் பார்த்தும் பார்க்காதது போல் இருப்பான் என்பதாம்.
இங்கு ‘கண்’ என்றது ஞானத்தை.

கண் இல்லாதவன் – என்பதால் ஞானமில்லாதவன் என்று பொருளாகும்.
இதனால் தன் அடியார் செய்யும் குற்றங்களை அறியாதவனாயிருப்பான் என்று பொருளாயிற்று.

இறை என்பதற்குச் சிறிது என்று பொருள் கொண்டு
அடியார்கள் செய்யும் பிழையைச் சிறிதளவு கூட அறிய மாட்டான் என்று கூறலாம்.
இக் கருத்து விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் அறியாதவன் என்ற பொருளில்
“அவிஜ்ஞாதா” என்று கூறப்படுவதைக் காணலாம்.

ஆக,
இறைவன் அடைக்கலம் புகுந்த பிறகு பாபங்களைப் பற்றி அஞ்ச வேண்டியதில்லை.
“இறைவன் தொண்டர்கள் செய்யும் பிழைகள் அறியாமல் இருந்து விடுவான்”.
இக் கருத்துக்கு நூல்கள் கூறுவதே சான்றாகும் என்பதாம்.

—————-

“அடைக்கலம் புகுந்தார் அறியாமல் செய்யும் பிழைகள் அறிய மாட்டான்” என்று
மனதுக்கு ஆறுதல் கூறப்பட்டது கீழ்ப்பாடலில்.
பழைய வினைகளில் ஏதேனும் ஒன்றை எவரேனும் நிரூபித்துக் காட்டினாலும் அதனை இன்பமாகக் கொள்வானேயன்றி
அது குறித்து அடியார்களை இகழ மாட்டான்.
காரணம் அவனுக்கு வத்சலன் என்று பெயர் உள்ளதால் குற்றத்தையும் குணமாகக் கொள்வதே அக்குணமாம்.
அக்குணத்திற்குத் தக்கபடி அடியார்களின் பழைய குற்றங்களையும் குணமாகக் கொள்வதனால்
பழவினகளைப் பற்றியும் கவலை வேண்டாம் என்று உதாரணத்துடன் எடுத்துரைக்கிறது இப்பாடல்.

அற்றம் உரைக்கில் அடைந்தவர் பால் அம்புயை கோன்
குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ -எற்றே தன்
கன்றின் உடம்பின் வழுவன்றோ காதலிப்பது
அன்று அதனை ஈன்று உகந்த வா –25-

பதவுரை:

அற்றம் உரைக்கில்–முடிவாகச் சொல்லில்
அம்புயை கோன் -தாமரை மணாளன்
அடைந்தவர்பால் -தன்னிடம் அடைக்கலம் அடைந்தவரது
குற்றம் -பாபங்களை
உணர்ந்து–அறிந்து (கண்டு கொண்டு)
இகழும் கொள்கையனோ –அவை காரணமாக வெறுக்கும் இயல்புடையவனோ வெறுக்கமாட்டான்
எற்றே –என்ன வியப்பு
ஆ –பசுவானது
தன் கன்றின் –தன் கன்றினுடைய
உடம்பின் –உடம்பிலுள்ள
வழுவன்றோ –கருப்பப்பையின் அழுக்கை
அதனை ஈன்று உகந்து –கன்றை ஈன்று மகிழ்ந்த
அன்று –அப்பொழுது
காதலிப்பது–ஆசையுடன் நாவால் சுவைப்பது

அற்றம் உரைக்கில் –
அற்றம் – முடிவு – முடிவாகச் சொல்லில்.
அதாவது
முடிவான பொருள் இது என்று சொன்னால் (அது இதுவேயாகும்).

அடைந்தவர் பால் –
தன்னை அடைக்கலமாக அடைந்த தொண்டர்கள் இடத்தில்,

அம்புயை கோன் –
திருவின் நாயகன் இலக்குவனுக்கு அண்ணன் என்று இராம பிரானைக் கூறுவது போல,
பால் – ஏழம் வேற்றுமை இடப்பொருள்.

இங்கு ‘அம்புயை கோன்’ என்று
பிராட்டியை முன்னிட்டு இறைவனடியாரை ஏற்றுக் கொள்பவன் என்ற குறிப்புப் புலனாகிறது.
இவ்வாறு பிராட்டிக்காக ஏற்றுக் கொண்டால் பின்பு
என்றைக்கும் அவ்வடியாரிடம் குற்றங்களைக் காணாதவனாகவே இருப்பான் என்று பொருள்.

இவ்வாறு தன் சிபாரிசு பண்ணின அடியவர்களை இறைவன் ஏற்றுக் கொண்டதன் உறுதிப்பாட்டை அறிவதற்காக
பிராட்டி தானே தன் அடியார்களின் குற்றங்களைக் கூறினாலும் இறைவன்
‘என் அடியார் அது செய்யார். செய்தாரேல் நன்று செய்தார்’ என்று கூறுவான்.
இதனால் பிராட்டி சிபாரிசுக்காக அடியரை இறைவன் ஏற்றுக் கொண்டது உறுதியாயிற்று.
பிராட்டியே தன் அடியாரது குற்றத்தைச் சொன்னாலும் அதை ஏற்க மறுத்து
‘என் அடியார்கள் குற்றங்களே செய்ய மாட்டார்கள்’ அப்படிச் செய்ததாகச் சொன்னாலும் அதை நான் குற்றமாக ஏற்க மாட்டேன்.
அதை நல்லாதாகவே நான் ஏற்றுக் கொள்வேன் என்று பகவானுக்கும் பிராட்டிக்கும் நடக்கும் உரையாடலைக் கொண்டு
இவ் வுண்மையை அறியலாம். பெரியாழ்வார் பாடலில் இக்கருத்து இங்கு ஒப்பு நோக்கற்குரியது (தன்னடியார் திறத்தகத்து).

குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ –
அடியவரின் குற்றங்களைக் குறித்து அது காரணமாக அவர்களை வெறுக்கும் இயல்பை உடையவனோ
அத்தகையவன் இல்லை என்பதாம்.
கொள்கை – இயல்பு (சுபாவம்) என்பதாம்.
பிராட்டி சிபாரிசு பண்ண அதனால் அத் தொண்டரை ஏற்றுக் கொள்பவன் என்பது கருத்து.

பகவான் அடியாரின் குற்றங்களைப் பற்றி அறியவே மாட்டான்.
ஒருகால் குற்றத்தை பிராட்டியே உணர்த்தினாலும் அடியாரது குற்றத்தை இன்பமாக ஏற்பானேயொழிய
அதைக் குறியிட்டு அவர்களை ஒருபோதும் வெறுக்க மாட்டான். இதுவே அவனுடைய இயல்பு என்பதாம்.
இவ்வாறான இயல்புக்கே வாத்சல்ய குணம் என்று பெயர்.
இக்குணத்தைக் குறித்து ‘வாத்சலன்’ என்று இறைவன் சொல்லப்படலானான்.
அடியாரது குற்றத்தையும் குணமாகக் கொள்பவன் என்று இதற்குப் பொருள்.
‘வத்ஸலம்’ என்றால் அப்பொழுது ஈன்ற கன்று அதனிடத்தில் தாய்ப் பசுவுக்குண்டான அன்பு வாத்ஸல்யம்,
அதையுடைய வத்ஸலன். குற்றத்தையும் குணமாகக் கொள்ளும் இயல்பு எங்கேனும் கண்டதுண்டோ என்று வினவினால்
அதற்கு உதாரணத்துடன் பதில் கூறப்படுகிறது மேல் தொடரால்.

எற்றே தன் கன்றினுடம்பின் வழுவன்றோ காதலிப்பது அன்று அதனையீன்று உகந்த ஆ:-
எற்றே – என்னே! வியப்பைக் குறிக்கும் இடைச்சொல்.
இறைவனுடைய வாத்சல்ய குணத்தின் பொருளை அறியாதாரன்றோ! ‘குற்றம் கண்டு இகழ்வான்’ என்று நினைப்பார்.
இப்படியும் நினைப்பார் உண்டோ என்று வருந்தி ஐயோ! (எற்றே) என்று ஆசிரியர் இரங்குகிறார்.
இதற்கு ஒரு உதாரணமும் மேல் தொடரால் காட்டப்படுகிறது.

(சுவடுபட்ட தரையில்) கால் மிதிபட்ட தரையில் புல் கவ்வாத பசு தன் கர்ப்ப பையிலிருந்து பூமியில் விழுந்த
தன் கன்றினுடைய உடம்பின் வழுவழுப்பை அல்லவா சுவைத்து பூசிக்கிறது.
‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்’ என்பது போல,
அப்பொழுது அதைப் பெற்ற அன்பினால் அதனிடம் நேசத்தைக் காட்டுகிறதல்லவா அப்பசு.
இது போன்று தன்னிடம் அடைக்கலம் புகுந்தவனது குற்றத்தையும் குணமாகக் கொண்டு அவனை ஏற்றுக் கொள்வான்.
பகவான் ஒரு போதும் வெறுக்க மாட்டான் என்று கருத்து உணர வேண்டும்.

இறைவனுடைய ‘வாத்ஸல்யம்’ என்னும் குணத்தை விளக்குகையில், இவ்வுதாரணத்தையே உரையாசிரியர்கள்
அனைவரும் எடுத்துரைக்கிறார்கள். வத்ஸம் – கன்று. கன்றினிடத்தில் தாய் பசு கொண்டுள்ள நேசம் (அன்பு) வாத்ஸல்யம் எனப்படும்.
அதை உடையவர் வத்ஸலர். இத்தகைய அன்பு இறைவன் ஒருவனிடமே காணத் தக்கதன்றி உலகில் காண இயலாது.
ஆகவே, இப்பண்பு தெய்வீகமானது என்று உணரலாகும்.
இப் பண்பின் சிறப்பை நோக்கி ‘எற்றே’ என்று வியந்து கூறப்பட்டதாம்.

——–

சரணாகதி என்பது இறைவனாலே சொல்லப்பட்ட நெறியாகும்.
திருவள்ளுவர், ‘பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி’ என்று கூறினார்.
இங்கு ‘ஐந்தவித்தானாகிற இறைவனால் சொல்லப்பட்ட உண்மையான ஒழுக்க நெறி’ என்று பொருள் கூறப்பட்டது.
இதையே ‘பற்றற்றான் பற்றினை என்ற திருக்குறளிலும் இறைவன் ஓதிய வீட்டு நெறி’ என்று கூறப்பட்டது.
அதுவே இங்கு சரணாகதி (அடைக்கலம் புகுதல்) என்று கூறப்படுகிறது.
இறைவனுடைய திருவடிகளில் அடைக்கலம் புகுவதான சரணாகதி என்பது குருவின் துணை கொண்டு செய்ய வேண்டிய ஒன்றாகும்.
சரணாகதியின் ஆழ் பொருள்களை எல்லாம் குருவினிடமிருந்து அறிந்து கொண்ட பின் அதில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள்,
‘வீட்டு உலகத்தில் சென்று அங்கு இறைத் தொண்டிலே ஊன்றி இருப்பார்கள்’ என்ற கருத்து இப் பாடலில் சொல்லப் படுகிறது.

தப்பில் குருவருளால் தாமரையாள் நாயகன் தன்
ஒப்பில் அடிகள் நமக்கு உள்ளது -வைப்பு என்று
தேறி இருப்பார்கள் தேசு பொலி வைகுந்தத்து
ஏறி இருப்பார் பணிகட்கு ஏய்ந்து–26-

பதவுரை:-

தப்பு இல்–அறிவு ஒழுக்கங்களில் ஒரு குறைதலுமில்லாத
குரு -குருவினுடைய
அருளால்–நல்லருளால்
தாமரையாள் நாயகன் –தன் திருவின் மணாளனான இறைவனுடைய
ஒப்பில் –உவமை யில்லாத
அடிகள் –திருவடிகள்
நமக்கு –அறிவு ஆற்றலில்லாத நமக்கு
உள்ளத்து இதயத்தில் இருக்கும்
‘வைப்பு’ என்று சேமநிதி என்று
தேறியிருப்பார்கள்–நம்பியிருக்குமவர்கள்
தேசுபொலி–ஒளிமிக்குயிருக்கிற
வைகுந்தத்து–வீட்டுலகத்தில்
ஏறி–அதற்கான வழியிலே சென்றடைந்து
பணிகட்கு–அங்கு செய்யும் இறைத் தொண்டுகளுக்கு
ஏய்ந்திருப்பார் –பொருத்தமுடைய அடியராயிருப்பார்

தப்பில் குருவருளால் –
தவறு இழைக்காத குருவினுடைய அருளாலே.
அதாவது,
கற்க – அதற்குத் தக நிற்க’ என்று கூறியவாறு
அறிவு ஒழுக்கங்களினுடைய அருளால் என்றவாறு.

தாமரையாள் நாயகன் தன் –
திருவின் மணாளனுடைய என்று பொருள்.
இதனால், “த்வய மந்திரத்தின்” முற்கூற்றில் சொல்லப்பட்ட ஸ்ரீமன் என்ற சொல்லிலும்
நாராயண என்ற சொல்லிலும் கூறப்பட்ட பொருள்கள் இங்கு உணர்த்தப்படுகின்றன.

தாமரையாள் நாயகன் என்ற தொடரில் பிராட்டியோடு சேர்ந்துள்ள பிரியா உடன் உறைதலைக் குறிக்கிறது.
இது ‘ஸ்ரீமன்’ என்றதன் பொருளும்
‘நாயகன் தன்’ என்கிறதில் நாராயண பதத்தின் பொருளும் அடங்கி உள்ளன.
அவை அடியவரை ஆதரிக்கும் பண்புகளாம்.
அவையாவன.
அடைக்கலம் புகவருகின்ற அடியார்களுக்கு உதவியாக இருப்பனவான
வாத்சல்யம், ஸ்வாமித்வம், சௌசீல்யம், சௌலப்யம் என்று சொல்லப்படும் நான்கு குணங்களும்,
அடைக்கலம் புகுந்த பிறகு அவர்கள் காரியம் செய்வதற்கு ஏற்றதான
ஞானமும், சக்தி (அறிவும், ஆற்றலும்) ஆகிய இரண்டு குணங்களும் மற்றும் ப்ராப்தி, பூர்த்தி என்பனவும் அடங்கும்.
நாயகன் தன் என்ற இதில்
‘ நாராயண’ என்ற சொல்லில் கூறப்படும் பொருள்கள் குறிப்பாகக் கூறப்பட்டுள்ளன.

ஒப்பிலடிகள் –
ஒப்பற்ற திருவடிகள்.
இதனால்
த்வய மந்திரத்தில் சொல்லப்பட்ட ‘சரணௌ’ என்ற சொல்லின் பொருள் சொல்லப்படுகிறது.
திருவடிகளுக்கு ஒப்பற்ற தன்மையாவது அடியவர்க்கு அருள் செய்யும் போது
எந்த உதவியையும் அவரிடம் எதிர்பாராமல் செய்யும் தனி ஆற்றலைக் குறிக்கிறது.

நமக்கு உள்ளத்து வைப்பென்று –
அடியவர்களான நமக்கு. பகவானுடைய அருள் பெறுவதற்கு எந்த ஆன்மாவுக்கும் வேறு புகலுமில்லை.
வேறு வழியுமில்லை என்பது சாஸ்திர உண்மை.
உண்மை உணர்வுடைய நமக்கு. இதயத்தில் இருக்கும் திருவடிகளே வைப்பு நிதி (சேமநிதி) ஆகும் என்று பொருள்.
இதனால் த்வய மந்திரத்திலுள்ள ‘சரணௌ’ என்ற சொல்லிலும்,
‘ப்ரபத்தி’ யே என்ற சொல்லிலும் சொல்லப்பட்ட பொருள்கள் கூறப்படுகின்றன. எவ்வாறு எனில் ?
ஒருவரிடம் வைப்பு நிதி இருந்தால் அதைக்கொண்டு எல்லாக் காரியங்களையும் சாதித்துக் கொள்ளலாம்.

அதுபோல இறைவனது திருவடிகளை, “அதுவே நமக்கு தஞ்சம்” என்று பற்றிக்கொண்டு
இதயத்தில் தியானித்தால் எதையும் சாதிக்கலாம்.
ஆகவே திருவடிகளை சேமநிதியாகக் கூறுவதில் எவ்விதக் குறையுமில்லை.
இறைவன் திருவடிகளைப் பற்றுவது மனதினால் ஆகையால் இதற்கு மானச சுவீகாரம் என்று பெயர்.
அதாவது
மனதினால் பற்றுதல் என்று பொருள்.
இவ்வாறு மனதில் எண்ணி

தேறியிருப்பார்கள் –
உறுதியாய் நம்பி இருப்பவர்கள் என்றவாறு.
திருவடியே தஞ்சம் என்று அத்திருவடியை உள்ளத்தில் வைத்து தியானத்தாலும் நம்பிக்கை வருவது அரிதாகும்.
ஆகவே, “அத்திருவடிகளையே தஞ்சமாக நம்பியிருப்பவர்கள் என்று பெயர்.
சரணாகதி பண்ணினவனுக்கு இறுதிவரை இந்த நம்பிக்கையே கைம்முதலாக இருக்க வேண்டியதொன்று.
நம்பிக்கை குலைந்தால் வீடு பேறு இல்லையாகி விடும்.
நம்பிக்கை குலையாதவர்களைத் ‘தேறியிருப்பார்கள்’ என்று இங்கு சொல்லப்படுகிறது.
அத்தகையவர்களுக்குக் கிடைக்கும் பயன் சொல்லப்படுகிறது மேல்.

தேசு பொலி வைகுந்தத்து ஏறி –
அதாவது
‘அந்தமில் பேரின்பத்து அழிவில் வீடு’ என்று
சொல்லப்படுகிற ஒளி மிகுந்த ஸ்ரீவைகுண்டத்தில் போய் என்று இதற்குப் பொருள்.
ஸ்ரீவைகுண்டமாகிற அத்திருநாடு பேரின்பத்தை நுகர்வதற்கும்
இறைவன் உகந்த தொண்டுகள் செய்வதற்கும் ஏற்ற இடமாகும் என்பதாம்.

இருப்பார் பணிகட்கேய்ந்து –
அங்கு போய்ப் பணிகளுக்கு ஏய்ந்திருப்பார். இறைத் தொண்டுகளுக்குத் தகுந்திருப்பார் என்று பொருள்.
‘பணிகள்’ என்றது இறைவனுக்குச் செய்யும் தொண்டுகளாகும்.
அதற்கு ஏய்ந்து இருக்கையாவது தகுதியுடைய அடியார்களாய் இருக்கை.
இருப்பார் என்றது இருப்பார்கள் என்றிவ்வாறு சொற்பொருள் காணலாம்.

இவ்வாறன்றி ‘பணி என்று
ஆதிசேஷனான திருவனந்தாழ்வானுக்குப் பெயராகக் கொண்டு
திருவனந்தாழ்வானுக்கு ஒப்பாய் இருப்பார் என்றும் பொருள் காணலாம்.
அதாவது
திருவனந்தாழ்வான் பரமபதநாதனாக பகவானுக்கு,
‘சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம், நீள் கடலுள்
என்றும் புனையாம் மணி விளக்காம், பூம் பட்டாம், புல்கும் அணையாம் திருமாற்கு அரவு’ என்று
சொல்லியபடி எல்லாத் தொண்டுகளிலும் தேர்ந்து இருக்குமாப் போல
இவர்களும் எல்லாத் தொண்டுகளிலும் செயல்படுபவர்களாய் இருப்பர் என்று பொருள்.

————–

ஆன்ம நலனுக்கு வழி அறியாதவரும் ஆன்ம நலனை உபதேசிக்கும் குருவைச் சேராதவரும்
கண்ணபிரான் சொன்ன கீதைப் பேருரையில் சொன்ன ‘சரணாகதி’ நெறியில் நம்பிக்கையில்லாதவர்களும்
வீடு பேற்றை அடைய மாட்டார்கள்.
பிறவிப் பெருங்கடலாகிற துன்பக்கடலுள் அழுந்தினராய்
பல பிறப்புக்களையும் எடுத்து உழன்று வருவார்கள் என்று கூறுகிறது இப்பாடல்.

நெறி அறியா தாரும் அறிந்தவர் பால் சென்று
செறிதல் செய்யாத் தீ மனத்தர் தாமும் -இறை யுரையைத்
தேறாதவரும் திரு மடந்தை கோன் உலகத்
தேறார் இடர் அழுந்துவார் –27-

பதவுரை:-

நெறி -உபாயம்
அறியாதாரும்–அறிந்து கொள்ளாதவரும்
அறிந்தவர்பால் சென்று–வழி அறிந்தவர்களான குருவிடம் சென்று
செறிதல் செய்யா பணிவுடையவராய் –வணங்கித் தொழுது குருவை மகிழ்விக்காத
தீமனத்தர் தாமும் –தீ மனம் உடையவர்களும்
திருமடந்தை கோன் உலகத்து–இலக்குமி நாதனுக்குச் சொந்தமான ஸ்ரீவைகுந்தத்தை
ஏறார்–அடைய மாட்டார்கள்
இடர்–பிறவிப் பெருங்கடலாகிற துன்பத்தில்
அழுந்துவார்–முழுகித் தவிப்பார்கள்

நெறியறியாதாரும் –
“மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” சுழன்று வரும் பிறவிச் சுழற்சியிலிருந்து தப்பிக்கும் வழி தெரியாதவரும்.
நெறி – வழி. இது தப்பிவிக்கும் உபாயத்தை காட்டுகிறது.
அது தெரியாதவர்.

அறிந்தவர் பால் சென்று செறிதல் செய்யாத் தீ மனத்தர் தாமும் –
பிறவிப் பெருங்கடலைக் கடத்தி விடும் வழி அறிந்த ஆசார்யர்களிடம் சென்று சேராதவர்கள் மேலும்
தங்களுக்கு அவ்வழியை உபதேசிக்க ஏதுவாக
அவர்கள் மனம் இரங்கும் வண்ணம் பணிதல்,
அடி வீழ்தல் வழியைச் சொல்லும்படி வினாவுதல்
மற்றும் அவர்கள் சொல்லும் பணியைச் செய்தல் முதலியன செய்து நெருங்கிப் பழகாமல்,
அப் பெரியோர்களை நம்மைப் போன்ற மனிதர்களாகக் குறைவாக எண்ணி
அவர்களிடம் குற்றங்களைக் கண்டு கொண்டிருக்கும் தீயமனம் உடையவர்களும்.

இறை உரையைத் தேறாதவரும் –
எல்லா உயிர்களையும் உள்ளிருந்து நடத்துபவனும் கீதையாகிற உபநிஷத்தை
ஆசார்யனாய் நின்று உபதேசித்தவனும்
அதாவது
எல்லா ஆன்மாக்களும் வீடு பேற்றை அடைவதற்கு உபயோகமாக அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு
அருளிச் செய்த கீதையின் 18ம் அத்தியாயத்தில் கடைசியாகச் சொல்லப்பட்ட
“சரணாகதி நெறியில்” நம்பிக்கை இல்லாதவர்களும்.

திருமடந்தை கோன் உலகத்து ஏறார் –
திருமால் வைகுந்தம் என்று சொன்னபடி திருமகள் நாயகனுடைய உலகமான ஸ்ரீவைகுண்டத்திற்குச் செல்லமாட்டார்கள்.

இடர் அழுந்துவார் –
பிறவிப் பெருங்கடலில் பிறவியாகிற துன்பத்தில் முழுகித் தவிப்பார்கள் என்பதாம்.

—————–

கீழே சொன்ன “தப்பில் குருவருளால்” என்ற பாடலில் வீட்டுலகத்தை அடைபவர்
ஆசார்யன் காட்டிக் கொடுத்த சரணாகதியின் பொருளை உள்ளத்திலே இருத்தி
அவ்வழியில் வீடு பேறு அடைவர் என்றும்
“நெறி அறியாதார்” என்ற அடுத்த பாடலில் சரணாகதியை குரு முகமாக அறியாதவரும்
கீதையில் சொன்ன கண்ணன் வார்த்தையில் நம்பிக்கை இல்லாதவரும் வீடு பேறு அடையமாட்டார்கள்,
பிறவிப்பிணியில் அழுந்தி துன்புறுவர் என்றும்
இவ்விரண்டு பாடல்களினால் வீடு செல்வாரது நிலையம் வீடு செல்லமாட்டாதார் நிலையம் உரைக்கபட்டன.

இனி இப்பாடலில் வீடு பேறு அடைவார்க்குச் சொல்லப்பட்ட நல்வழியான சரணாகதியின் உண்மைகள் கூறப்படுகின்றன.
“சரணாகதி” என்பது பிராட்டியோடு கூடிய பகவானுடைய திருவடிகளில்
“உன் திருவடிகளே சரணம் எனக்கு தஞ்சம் வேறு புகல் இல்லை” என்று அடி வீழ்ந்து வேண்டுவது.
“ஊழி வினைக்குறும்பர்” என்ற 23 ஆம் பாடலில் சரணாகதி பற்றிச் சொல்லப்பட்டது (அதை இங்கு நினைவு கூர்க).

இவ்வாறு பகவான் திருவடிகளே தஞ்சம் என்று அடைந்த பிறகு இப் பற்றுதல் நம் சேமத்திற்கு
போதுமோ போதாதோ என்று மனதில் சஞ்சலம் பிறந்து உறுதி நிலை ஏற்படாமல்
தன் முயற்சியில் வேறு வேறு புண்ணியங்களையும் செய்வானே யானால் பகவான்
இவன் செய்த சரணாகதியை மதிக்கமாட்டான், கை விட்டு விடுவான்,
நெறி இவனை கை விட்டு விடும் என்கிற சரணாகதியின் சிறப்பு தக்க உதாரணத்துடன் இதில் எடுத்துறைக்கபடுகிறது.

சரணாகதி மற்றோர் சாதனத்தைப் பற்றில்
அரணாகாது அஞ்சனை தன் சேயை -முரண் அழியக்
கட்டியது வேறோர் கயிறு கொண்டு ஆர்ப்பதன் முன்
விட்ட படை போல் விடும் –28-

பதவுரை:

சரணாகதி–பகவான் திருவடிகளில் நம்பிக்கையுடன் செய்யும் அடைக்கலம்
மற்றோர் சாதனத்தை–அடைக்கலத்தில் நம்பிக்கை குறைந்து தன்னால் செய்யப்படும் வேறு வேறு முயற்சிகளை
பற்றில் –தனக்கு பலன் கொடுக்கும் புண்ணியமாகக் கருதினால்
அரணாகாது–முதலில் செய்கிற அடைகலமாகிற சரணாகதி இவனைக்காவாது விட்டு விடும்
அஞ்சனை தன் சேயை –அஞ்சனை தேவியின் மகனான அனுமனை
முரண் அழிய –அவனது பலம் தொலையும்படி
கட்டியது –இந்திரஜித்தாகிற அரக்கனாலே கட்டப்பட்ட பிரம்மாஸ்திரமான ஆயுதம்
வேறோர் கயிறு கொண்டு –பிரம்மாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் வேறு வேறு சணல் கயிறு முதலிய கயிறுகளை (முயற்சிகளைக்) கொண்டு
ஆர்ப்பதன் முன் –கட்டும் பொழுதே
விட்ட படைபோல் –அனுமனை கட்டிலிருந்து விட்ட பிரம்மாஸ்திரம் போல
விடும் –சரணாகதி இவனைக்காவாது கை விட்டு விடும்

பகவானை அடைவதற்கு சாஸ்திரங்கள் பல புண்ணியங்களைச் சொல்லியிருகின்றன.
அவற்றுள் “சரணாகதி” என்ற ஒரே புண்ணியம் தான் பகவானை அடைவதற்கு சரியான புண்ணியமாகும்.
வேறு வேறு புண்ணியங்கள் எல்லாம் ஒருவரால் செய்யப்படும்போது உண்டாகிறது.
செய்யாதபோது அவைகள் இருப்பதில்லை.
சரணாகதி என்ற புண்ணியம் மற்ற புண்ணியங்கள் போல் ஒரு காலத்தில் உண்டாவதோ
ஒரு காலத்தில் இல்லாமல் போவதோ இல்லை. எப்பொழுதும் தயாராக இருந்து கொண்டிருகிறது.
மேலும் பகவனாகிய புண்ணியம் அறிவு ஆற்றல் முதலிய சிறப்புகளைக் கொண்டது.
இத்தன்மை மற்ற புண்ணியங்களுக்கு இல்லை.

அனைத்து புண்ணியங்களின் உருவமாய் இருப்பதால் சாஸ்திரம் ஆகுமென்றும் சொல்லப்பட்டுள்ளது.
அதாவது
தன்னையே நம்பித் தன் திருவடிகளைப் பற்றுவார்களுக்கு தானே புண்ணியமாக இருந்து அருள் செய்கிறான் என்று கருத்து.

இத்தகைய பகவானாகிற புண்ணியத்தை நீயே எனக்கு வேறில்லை என்று சொல்லி
அவன் திருவடிகளில் தலை சாய்ப்பதே சரணாகதி என்று சொல்லப்படுகிறது.
இதுவே “அடைக்கலம்” எனப்படும் இதற்க்கு நம்பிக்கை என்பது மிகவும் அவசியமாகும்.
இந்த நம்பிக்கையை “மகா விசுவாசம்” என்றும் “அத்யாவசாயம்” என்றும் சாஸ்திரம் கூறும்.

மகா விசுவாசமாகிற நம்பிக்கை குறைந்தால் பகவானாகிற புண்ணியம் பலன் அளிக்காது.
மேலும் இதனைச் செய்பவன் “யான்” “எனது” என்னும் செருக்குகளை அறவே விட்டவனாகவும் இருக்க வேண்டும்.
தன்னை வறியவனாகவும் துணை அற்றவனாகவும் உணர வேண்டும்.
இவற்றை உடையவனே சரணகதி செய்து கொள்வதற்கு தகுதி உடையவனாவான்.
இதையே “புகலொன்றில்லா அடியேன்” என்று கூறினார் ஆழ்வார்.
இம்மை வாழ்வில் வேதனைப்பட்டு உடனடியாக இறைவனை அடையவேண்டும் என்ற நோக்குடன்
இறைவன் அடி வீழ்ந்தால் அப்பொழுதே அவனுக்கு வீடு பேறு கிடைக்குமென்றும் கீழே கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு நுல்கள் சரணாகதி பற்றி விளக்கி உள்ளன.

மற்றோர் சாதனத்தைப் பற்றில்:
சரணாகதியின் சிறப்பை அறிந்து இதுவே நமக்கு தஞ்சமென்று நம்பிக்கைக் கொண்டு அடைக்கலம் புகுந்தபின்
இறுதிவரை இக்குறிகோளில் இல்லாமல் “இதுக்குத் துணையாக நாமும் சில செய்வோம்” என்று
தன் முயற்சியால் செய்யப்படும் எதாவது ஒன்றைச் செய்தால் அது அரணாகாது.
இவன் செய்த சரணாகதி இவனுக்கு துணை நில்லாமல் இவனை கை விட்டுப் போய்விடும்.
ஆகவே பகவானிடம் சரணகதி செய்தவன் ஒரே நம்பிக்கையில் இருக்க வேண்டுமேயொழிய
சரணாகதியில் அவநம்பிக்கை கொண்டு வேறு வேறு புண்ணியங்கள் செய்யக் கூடாது.
ஏதாவது செய்தால் சரணாகதி பலிக்காது என்று கருத்து.
இதற்க்கு உதாரணமாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

அஞ்சனை தன் சேயை:
அஞ்சனாதேவியின் புதல்வனான அனுமனை

முரண் அழியக்கட்டியது:
முரண்: பலம்; அது அழியும்படி கட்டின பிரம்மாஸ்திரம்

வேறோர் கயிறு கொண்டார்பதன்முன்:
அதனிடம் அவநம்பிக்கை வைத்து வேறு ஒரு சணல் கயிற்றைக்கொண்டு
கட்டுவதற்குத் தொடங்கும் பொழுதே (ஆர்த்தல் – கட்டுதல்)

விட்ட படைபோல் விடும்:
விட்டுப் போன பிரம்மாஸ்திரம் போல சரணாகதி இவனை விட்டு விடும் என்பதாம்

இராமாயணத்தில் அனுமன் இராம தூதனாக இலங்கை சென்ற போது அசோகவனத்தை முறித்து பாழ் படுத்தினான்.
இராவணன் புதல்வனான இந்திரஜித் அனுமனோடு போர் புரிந்து பிரம்மாச்திரதினால் அவனைக் கட்டினான்.
அனுமன் செய்த வீரச் செயல்களும் அரக்கர்கள் பலர் அவனால் அழிக்கப்பட்டதையும் கண்டு பயந்து,
“இவனைக் கட்டுவதற்கு ப்ரஹ்மாச்த்ரதுக்கு வலி போதுமோ?” என்று
பிரம்மாஸ்திரத்தை குறித்து அவநம்பிக்கை கொண்டான். அதனால், சணல் கயிறுகளைக் கொண்டு வந்து கட்டினான்.
கட்டும் போது பிரம்மாஸ்திரம் அனுமனை விட்டு விட்டது. இது போல பகவானிடம் சரணாகதி பண்ணின பிறகு
சரணாகதியில் அவநம்பிக்கை வைத்து வேறு வேறு புண்ணியங்களையும் முயன்று செய்வானே யானால்
முன்னம் பண்ணிய சரணாகதி பலனை அளிகாது அவனை விட்டு விடும் கை விட்டு விடும் என்பதாகும்.

சரணாகதிக்கு பிரம்மாஸ்திரமும் வேறு புண்ணியங்களுக்கு சணல் கயிறும் இங்கு எடுதுக்காட்டாகும்.

———–

எட்டெழுத்து மந்திரமான திருமந்திரத்திலும்
அம் மந்திரத்தை உபதேசித்த குருவினிடத்திலும்
மந்திரத்திற்கு பொருளான பகவானிடத்திலும்
ஆக இம்மூன்றினுடையவும் அருளுக்கு எப்பொழுதும் இலக்காயிருப்பவர்கள்
பிறவித் துன்பத்திலிருந்து விரைவில் விடுபடுவர் என்கிறது இப் பாடல்

மந்த்ரமும் ஈந்த குருவும் அம் மந்திரத்தால்
சிந்தனை செய்கின்ற திருமாலும் -நந்தலிலா
தென்று மருள் புரிவர் யாவரவரிடரை
வென்று கடிதடைவர் வீடு –29-

பதவுரை:

மந்திரமும்–திருமந்திரமும்
ஈந்த குருவும்–அம் மந்திரத்தை உபதேசித்த ஆச்சர்யரும்
அம் மந்திரத்தால் –அத் திருமந்திரதால்
சிந்தனை செய்கின்ற–மனனம் செய்கின்ற
திருமாலும்–ஸ்ரீமன் நாராயணனும்
நந்தலிலாது–(இடைவிடாமல்) – கேடில்லாமல்
என்றும் –எப்பொழுதும் (செய்யும்)
அருள் புரிவர்–அருளுக்கு இலக்காவார்
யாவர்–யாவரோ
அவர்–அவர்களே
இடரை வென்று–பிறவித் துன்பத்தை வெற்றி கண்டு
கடிது–விரைவில்
வீடு அடைவர்–வீடு பேற்றை அடைவார்கள்

மந்திரமும்:
தன்னை உருச்சொல்பவரைக் காப்பாற்றுவது மந்திரமாகும்.
உருவாவது திரும்பத் திரும்பச் சொல்லுவது.
ஆர்வத்துடன் சொல்லுவதும் ஆகும்.
இங்கு “மந்திரம்” என்று சொன்னது எட்டுழுத்தைக் கொண்ட திருமந்திரமாகும்.
“எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்லார் வானம் அளவே” என்பர் திருமழிசைப்பிரான்.

ஈந்த குருவும்:
அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனும்

அம் மந்திரத்தால் சிந்தனை செய்கின்ற திருமாலும்:
அம் மந்திரத்திற்குப் பொருளாய் மனனம் செய்யப்படுகின்ற ஸ்ரீமன் நாராயணன் ஆகிய மூவரும்.

நந்தலிலாது:
நந்துதல் – கேடு
அது இல்லை என்றது. தடையில்லாமல் என்று பொருள்.

என்றும் அருள் புரிவர் யாவர்:
எல்லாக் காலத்திலும் அருள் செய்யும் போது அதற்கு இலக்காய் இருப்பார் யாவர் சிலரோ

அவர் இடரை வென்று கடிதடைவர் வீடு:
அம்மூவரது அருளுக்கும் இலக்காயிருப்பவர் பிறவித்துன்பத்தை வென்று
விரைவில் அந்தமில் பேரின்பத்து அழிவில் விட்டுலகத்தை அடைவார்கள்.

இக்கருத்தை முமூக்ஷுபடியில்
“மந்திரத்திலும் மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்திரப்ரதனான ஆசார்யன் பக்கலிலும்
ப்ரேமம் கணக்க உண்டானால் கார்ய கரமாவது” என்று கூறியதை ஒப்பு நோக்குக.

—————–

தனக்குத் தேவையான அதாவது இம்மை மறுமைகளுக்கான பொருட்கள் எல்லாம்
‘திருவட்டாட்சர மந்திரத்தை (எட்டெழுத்து மந்திரத்தை) உபதேசித்த ஆசார்யனே என்று
குறிக்கோள் இல்லாதவர்களோடு கொண்டுள்ள உறவை அறவே விடுகை
சாஸ்திரக் கட்டளையாகும் என்கிறது இப்பாடல்.

மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் செம் நெறியும் –பீடுடைய
எட்டு எழுத்தும் தந்தவனே என்று இராதார் உறவை
விட்டிடுகை கண்டீர் விதி –30-

பதவுரை :

மாடும்–பாலைக்கொடுக்கும் பசுக்களும்
மனையும்–இன்ப நுகர்ச்சிக்கு இடமான வீடும்
கிளையும்–உறவினர்களும்
மறை முனிவர் தேடும்–வேதம் பயின்ற முனிவர்கள் நாடுகின்ற
உயர் வீடும்–மேலான வீட்டுலகமும்
சென்னெறியும்–அவ் வீட்டுலகத்தை அடைவிக்கும் அர்ச்சிராதி வழியும் எல்லாம்
பீடுடைய –பெருமையுடைய
எட்டெழுத்தும்–பெரிய திருமந்திரத்தை (அஷ்டாக்ஷர) மகா மந்திரத்தை
தந்தவனே–உபதேசித்த ஆசார்யனே
என்று இராதார்–என்று குறிக்கோள் இலாதாரின்
உறவை –தொடர்பை
விட்டிடுகை–சேராதபடி விட்டிடுகை
விதி–சாஸ்திரக் கட்டளையாகும்
கண்டீர் –காணுங்கோள் (நன்றாக அறிவீர்களாக)

மாடும்:
தனக்குச் சுவையான பால், தயிர் முதலிய சத்துணவுகளை கொடுப்பவை என்றதால்
பேணப்படும் கறவைகளும் (செல்வமும்)

மனையும்:
இன்ப நுகர்ச்சிக்கு (ஏதுவான) அடிப்படையான வீடும் கிளையும்:
கூடியிருந்து குளிர்தலே ஆனந்தம் என்றிருக்கும் உறவினர்களும்

இங்குச் சொன்ன இவை
மற்றும் இம்மை சுகத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களுக்கும் குறிப்பாகும்.

மறை முனிவர்:
வேத விற்பன்னர்களான பெரியோர்கள்
அதாவது
எப்பொழுதும் பகவானை மனதிலே எண்ணிக் கொண்டிருப்பவர்கள்

தேடும் உயர் வீடும்:
இதுவே நமக்கு அடையத் தகுந்தது என்று விரும்பி நாடி நிற்கும்.
இங்கு உயர் வீடு என்றதால் தாழ்வான வீடு ஒன்றுண்டு என்று குறிக்கப்படுகிறது.
அது கைவல்யம் எனப்படும்.
அது தன்னை தானே அனுபவித்தலாகும். அது தாழ்வான மோக்ஷம் என்று அறிவாளிகள் கூறுவர்.
அதனால் அதை கழித்து உயர்வீடி என்று “வைகுந்த வான் போகம் ” இங்கு கூறப்படுகிறது.
சிறப்பாக கூறப்படும் வைகுந்தத்தை அடைதலாகிற மோக்ஷமும் சென்நெறியும்
அந்த மோட்ஷத்தை அடைவதற்கு வழியாக சொல்லப்படும் அர்ச்சிராதி வழிகளும் அல்லது
மோட்ஷத்தை அடைவதற்கு காரணமான சாதனங்களும் புண்ணியங்களும் என்று சொல்லலாம்.

பீடுடைய எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதார் உறவை:
கீழ்ச் சொன்னவை எல்லாம் பிறவித் துன்பத்தை வளர்ப்பனவாய் அற்பங்களுமாய் இருப்பன.என்றும்
பெரிய திருமந்திரம் மற்ற மந்திரங்கள் போலில்லாமல் பிறவிக் கடலைத் தண்டிவிப்பதற்கு உரியதான
ஏற்றத்தை உடையதாய் இருப்பதால் அம்மந்திரத்தை உபதேசித்தருளின ஆசார்யனே எல்லாம்
என்ற குறிக்கோள் இல்லாதவர்களோடு ஏற்படும் உறவுகளை

விட்டிடுகை:
அறவே விட வேண்டியது

விதி:
இது சாஸ்திரக் கட்டளையாகும்.

கண்டீர்:
காண்பீர்களாக., அறிவீர்களாக.

இதனால் திருமந்திரோபதேசம் செய்த ஆச்சர்ய சம்பந்தம் இல்லாதவரோடு உறவு கொள்ளலாகாது.
அவர்களை அவசியம் விட்டு விட வேண்டும் என்று கூறப்படுகிறது.

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் ஸ்ரீ கிருஷ்ணன் திரு நாமங்கள்–

August 30, 2021

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி

தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்

வசுதேவர் தம் மகனாய் வந்து திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்

திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன்

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே

நந்தகோபன் குமரன் யசோதை இளம் சிங்கம் –

மன்னு வடமதுரை மைந்தனே –

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை –

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –

மாலாய்ப் பிறந்த நம்பி

மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை

நந்தன் பெறப் பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே எந்தை பெருமானே

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி யஞ்சோதி வுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன்

வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே

அல்லிக் கமலக் கண்ணனை –

அமரர் முழு முதல் ஆகிய வாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை –

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை

அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலை

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்

வல்வினை தீர்க்கும் கண்ணனை

என்னுடைய கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -என் திரு மார்பன் தன்னை –

எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே

அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே

மாயக் கூத்தா வாமனா கொண்டால் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா

மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –

பேய்ப்பால்முலையுண்ட பித்தனே -கேசவ நம்பீ

வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல்

பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன்

தேவக் கோலப் பிரான்

பேயின் முலையுண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர்க்கண்ணன் கண்ணன்

கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய வுதை செய்த பிள்ளை யரசே

மாயச் சகடம் உதைத்த மணாளற்கு

சகட வசுரருடல் வேறா பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே

கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலை-

கருளக் கொடி யொன்றுடையீர் தனிப்பாகீர்

பிள்ளை யரசே

மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து –வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏறு –

மருதம் முறிய நடை கற்றவன் –மதுரைப்பதி கொற்றவன்

போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே -தேனே -இன்னமுதே

புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -மருதிடை போய் –கண்ண பிரானுக்கு

கானக மா மடுவில் காளியின் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர வென் சிறுவா

பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன்

காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி–வித்தகனாய் நின்ற ஆயன்

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன்

காளியன் மேல் நடமாடிய கூத்தனார்

பொய்கை வாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே

சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் ஆடரவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே –

கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் கரு நிற வென் கன்றே –

விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து –யுலகுண்ட காளை

விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர்

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி எறிந்த பரமன்

கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன்

ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –

வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் –

கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா

யசோதை நல் ஆய்ச்சி தன புத்திரன் கோவிந்தனை

இந்த்ரன் போல் வரும் ஆய்ப்பிள்ளை

கோ நிரை மேய்த்தவனே எம்மானே

பட்டி மேய்ந்ததோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க் கன்றாய்

ஆவினை யன்று உய்யக் கொண்ட வாயர் ஏற்றை அமரரர்கள் தம் தலைவனை

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கொண் அணி அரங்கன்

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் –

ஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் –

மனைசேர் ஆயர் குலமுதலே மா மாயனே மாதவா

பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் போர் சக்கரத்து தரியினை அச்சுதனை

இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்

என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே

திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –

குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்

கோவலர் இந்திரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் –வாட்டமிலாப் புகழ் வாசுதேவா –

குன்று எடுத்து ஆநிரை காத்த வாயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே –

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே -மது சூதா -கண்ணனே –

வெற்பு எடுத்து மாரி காத்த மேக வண்ணன்-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் –பரன்

வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன்-

கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழலூதியிசை பாடிக் குனித்து ஆயரோடு ஆலித்து வருகின்ற வாயப்பிள்ளை

கரும் சிறுக்கன் குழலூதின போது

நாகத்தணையான் குழலூத அமர லோகத்தளவும் சென்று இசைப்ப-

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தனுடைய கோமள வாயில் குழல்-

அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏற்றினை-

குடமாடு கூத்தா வேதப் பொருளே என் வேங்கடவா வித்தகனே-

கோத்து அங்கு ஆயர்தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன்-

குரவை முன்னே கோத்தானை குடமாடு கூத்தன் தன்னை –எம்மானை-

குடமாடுவார் –தேவ தேவ பிரான்

குடமாடி உலகளந்த மாட்டார் பூங்குழல் மாதவனை

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன்

குரவை கோத்த குழகனை மணி வண்ணனைக் குடக் கூத்தனை –

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா என் அண்ட வாணா

சாளக்ராமமுடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்-

ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனை-

ஆய்ச்சி பாலையுண்டு மண்ணையுண்டு வெண்ணெய் யுண்டு பேய்ச்சி பாலையுண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா —

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினை

ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை

தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து இவ்வுலகாண்ட காளை

ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன்

கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும்

வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை கழ வேழ் வெண்ணெய் தொடு வுண்ட கள்வா

மாயோனே ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை

ஆய்ச்சி யாகிய வன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு கூத்தவப்பன்

மல்லரை சாவைத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன்

கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற நெடுமாலே

கால நேமி காலனே

மா பிளந்த கைத்தலத்த கண்ணன்

கடம் கலந்தவன் கரி மருப்பொசித்து–நடம் பயின்ற நாதனே

கொம்பு ஒசித்து உகந்த வுத்தமா துரங்கம் வாய் பிளந்து மண்ணளந்த பாத —

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன்

புள் வாய் பிளந்து எருதடர்த்த எந்தை –

கஞ்சனைக் கொன்று அன்று உலகமுண்டு உமிழ்ந்த கற்பகத்தை-

மல்லடர்ந்த்த மல்லா –

புள் வாய் பிளந்த புனிதா-

மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன்

கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டமாளும் மதியினை மாலை –

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே-

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே

ஓர் தூது ஆதி மன்னர்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான்

கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான்

தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்

நீர்மையில் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள் செய்ய நின்று பார் மல்கு சேனை யவித்த பரஞ்சுடரை

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி

நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பி

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா

அன்று பாரதப்போர் முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை

சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன்

நப்பின்னை தன் திறமா நல்விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனுமானவனே

பின்னை மணாளனை

ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை

பின்னை தன காதலன்

விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா

எருத்து இறுத்த நல்லாயர் ஏறு

எருது ஏழ் அடர்த்த என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே

அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட ஆய மகள் அன்பனே

பின்னை தோள் மணந்த பேராயா

அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான்

தண் பூ மரத்தினை வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதன்

பல்லாயிரம் பெரும் தேவிமாரொடு பௌவம் எறிது வரை எல்லாரும் சூழச் சின்காசனத்தே இருந்தானை

பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர்

————–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் பற்றிய விசேஷ விஷயங்கள்
1-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் -5235-வருஷங்களுக்கு முன்
2-பிறந்த நாள் -18th ஜுலை -3228-கி .மு –
3-பிறந்த மாதம் -ஆவணி -( ஸ்ரவணம் )
4-பிறந்த திதி -அஷ்டமி
5- பிறந்த நக்ஷத்ரம் -ரோஹிணி

6-பிறந்த கிழமை -புதன் கிழமை
7- பிறந்த நேரம் -இரவு 00-00 A M –
8- இங்கு இருந்து அருளியது –125 வருஷங்கள் -8 மாதங்கள் -7 நாள்கள்
9- தன்னுடை ஜோதிக்கு எழுந்து அருளிய நாள் -18th February 3102 கி மு
10-குருஷேத்ரா யுத்தம் -இவரது 89 -திரு நக்ஷத்திரத்தில்

11-மஹாபாரத யுத்தம் முடிந்து மேல் 36 திருநக்ஷத்ரங்கள் இங்கே இருந்து அருளி உள்ளார்
12-குருஷேத்ர யுத்தம் தொடக்கம் மிருகசீர்ஷ ஏகாதசி -3139 கி மு –8th Dec -முடிவு -25 th Dec
13-சூர்ய கிரஹணம் –21 st Dec -ஜெயத்ரன் முடிவு
14- பீஷ்மர் உயிர் நீத்தது -முதல் உத்தராயண ஏகாதசி -2nd -Feb –3138 கி மு

15-ஸ்ரீ வடமதுரை தேவகி வஸூதேவ புத்ரன்
16-ஸ்ரீ ஜெகன்நாத் -ஒரிசா
17-ஸ்ரீ நாதன் ராஜஸ்தான்
18-ஸ்ரீ துவாரகா தீசன் -குஜராத்
19-ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணன் கர்நாடக
20-ஸ்ரீ குருவாயூரப்பன் -கேரளா

21-ஸ்ரீ நந்தன் மதலை யசோதை இளஞ்சிங்கம் கோபீ வல்லபன் -திருவாய்ப்பாடி
22-நம்பி மூத்த பிரானின் தம்பி சுபத்ரா -தங்கை
23–ஸ்ரீ ருக்மிணி பிராட்டி -ஸ்ரீ சத்யபாமா பிராட்டி -ஸ்ரீ ஜாம்பவதி பிராட்டி -ஸ்ரீ காளிநிதி பிராட்டி –
ஸ்ரீ மித்ரவிந்தா பிராட்டி -ஸ்ரீ நக்நஜிதி பிராட்டி -ஸ்ரீ பத்ரா பிராட்டி -ஸ்ரீ லஷ்மணா பிராட்டி அஷ்ட திவ்ய மஹிஷிகள்

24) சாணூர -கம்ச -சிசுபால -தந்த்ரவத்ரன் -நால்வர் மட்டுமே கொல்லப்பட்டார்கள்

25- ஸ்ரீ ப்ருந்தாவனத்துக்கு ஒன்பதாவது திரு நக்ஷத்திரத்தில் –சென்று 20 மாதங்கள் அங்கேயே எழுந்து அருளி இருந்தான்
26-பின்பு வடமதுரை சென்று கம்சவதம் முடித்து தாய் தந்தை கால் விலங்கு விடுவித்து அருளினான்
27-ஸ்ரீ துவாரகா நிர்மாணம்
28-ஸ்ரீ சாந்தீபினி இடம் ஆய கலைகள் 60 தனது -16-18-திருநக்ஷத்ரத்தில் கற்றான்

——–

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் -ஸ்ரீ கீதா சாரமே இதுவே –

யத் கரோஷி யதஸ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்பணம்–9-27-

கௌந்தேய-குந்தி மகனே!
யத்கரோஷி-எந்த கர்மத்தை செய்கிறாயோ,
யதஸ்நாஸி-எதை உண்கிறாயோ,
யத் ஜுஹோஷி-எதை ஹோமம் செய்கிறாயோ,
யத் ததாஸி-எதை தானம் அளிக்கிறாயோ,
யத் தபஸ்யஸி-எந்த தவம் செய்கிறாயோ,
தத் மதர்பணம் குருஷ்வ-அதை எனக்கு அர்ப்பணம் செய்து விடு.

நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும்,
எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே, கடவுளுக்கு அர்ப்பணமென்று செய்.

ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஸ்ரய:
மத்ப்ரஸாதாதவாப்நோதி ஸாஸ்வதம் பதமவ்யயம்–18-56-

மத்வ்யபாஸ்ரய:-என்னையே சார்பாகக் கொண்டோன்,
ஸர்வ கர்மாணி-எல்லாத் தொழில்களையும்,
ஸதா குர்வாண: அபி-எப்போதும் செய்து கொண்டிருந்தாலும்,
மத்ப்ரஸாதாத்-எனதருளால்,
ஸாஸ்வதம் அவ்யயம் பதம்-அழிவற்ற நித்தியப் பதவியை,
அவாப்நோதி-எய்துகிறான்.

எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன்
எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.

சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர:
புத்தியோகமுபாஸ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ–18-57-

ஸர்வகர்மாணி-செயல்களை யெல்லாம்,
சேதஸா-அறிவினால்,
மயி ஸந்ந்யஸ்ய-எனக்கெனத் துறந்துவிட்டு,
புத்தியோகம் உபாஸ்ரித்ய-புத்தி யோகத்தில் சார்புற்று,
மத்பர:-என்னிடத்தே ஈடுபட்டு,
ஸததம் மத் சித்த: பவ-எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று,
எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

64. ஸர்வகுஹ்யதமம் பூய: ஸ்ருணு மே பரமம் வச:
இஷ்டோऽஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்

ஸர்வகுஹ்யதமம்-எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய,
மே பரமம் வச:-என்னுடைய பரம வசனத்தை,
பூய: ஸ்ருணு-மீட்டுமொருமுறை கேள்,
மே த்ருடம் இஷ்ட: அஸி-நீ திடமான நண்பன்,
தத: ஹிதம் இதி தே வக்ஷ்யாமி-ஆதலால் நல்லது என்று உனக்கு சொல்லுகிறேன்.

மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள்.
நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.

நீருக்குள் மிக ஆழமான இடத்தில் எல்லாரும் மூழ்கிப் பார்க்கமுடியாது. அதில் வல்லமை பெற்றவர்க்கே அது இயலும்.
இப்பொழுது பகவான் புகட்டுகிற கோட்பாடு மிகவும் ஆழ்ந்தது. ஏனென்றால் அது ஜீவனுக்குச் சிறப்பை அளிக்கவல்லது.
சிரேயஸைப் பெறவேண்டும் என்று அர்ஜுனன் ஆரம்பத்தில் விண்ணப்பித்தான்.
அதைப் பெறுதற்கு உற்ற வழி இப்பொழுது புகட்டப்படுகிறது. அதைக் குறித்து அவர் பகரும் சொல்லானது-
பரமம் வசனம்- மேலாம் மொழியாகிறது. மகாவாக்கியம் என்று அதை இயம்பலாம்.
வேதங்களில் உள்ள மகா வாக்கியங்கள் ஞானிகளால் நவிலப்பட்டவை. இது பரமாத்மாவானவர் தாமே பகர்கின்ற சொல்லாகிறது.
ஏற்கனவே இயம்பிய கோட்பாட்டை முடிவுரையில் அவர் சித்தாந்தப்படுத்துகிறார்.

புறவுலகின் அமைப்புப் பலர்க்கு மறைபொருளாயிருப்பது போன்று மனத்தகத்து உள்ள தெய்வீக மாண்பும் மறைபொருளாயிருக்கிறது.
எல்லார் உள்ளத்திலும் உறைந்திருக்கும் நல்ல உறவு ஆகின்றான் இறைவன்.
உயிர்களை உய்விப்பதற்கென்றே அவனுடைய அருள் இயங்குகிறது. இயற்கையில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள்
அனைத்தும் முடிவில் அந்த ஒரு காரியத்தை நிறைவேற்றி வைக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத ஜீவனைத்
தனக்கு உகந்தவனாக்கிப் பிறகு அவனைத் தெய்வம் தன்மயமாக்குகிறது. இயற்கையென்னும் பெரிய
தொழிற்சாலையில் இந்த அரும்பணியானது ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
மக்கள் காலில் மிதியுண்டு ஒன்றுக்கும் உதவாத செத்தையாகப் போகக்கூடிய நாணல் ஒன்றைக் கண்ணன்
கையில் எடுத்துப் புல்லாங்குழலாக மாற்றுகிறான். பிறகு அவன் அதில் உண்டு பண்ணும் கானமோ
மண்ணுலகத்தவரை விண்ணுலகுக்குக் கொண்டுபோக வல்லது. ஜடப்பொருளில் அவன் செய்யும் ஜாலம் அத்தகையது.
பிறகு சேதன வஸ்துவாகிய ஜீவனைத் தனக்குரியவன் என்றே அவன் ஆட்கொள்கிறான்.
இனி, இதிலும் ஆழ்ந்ததொரு கருத்து இயற்கையின்கண் உளது. அது அடுத்த சுலோகத்தில் வருகிறது.

உண்மையான பக்தன் ஒருவன் ஈசுவரனை எவ்விதம் காண்கிறான்? பிருந்தாவனத்திலுள்ள கோபஸ்திரீகள்
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை ஜகந்நாதனாகக் காணாமல் அவர்களுடைய பிரிய கோபிநாதனாகவே கண்டதைப்போல,
பக்தனும் ஈசுவரனைத் தனது நெருங்கிய பிரிய பந்துவாகவே காண்கிறான்.

பகவான் புகட்டும் நலம்தான் யாது? விடை வருகிறது :

65. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே

மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக,
மத்பக்த:-என் தொண்டனாகுக,
மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க,
மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக,
மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய்,
ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்,
மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக.
என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:–18-66

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய-எல்லா அறங்களையும் விட்டு விட்டு,
மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ – என்னையே சரண் புகு,
ஸர்வபாபேப்ய:-எல்லாப் பாவங்களினின்றும்,
அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி-நான் உன்னை விடுவிக்கிறேன்,
மா ஸுச:-துயரப்படாதே.

எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும்
நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸய:–18-68-

ய: மயி பராம் பக்திம் க்ருத்வா-எவன் என்னிடம் உயர்ந்த பக்தி செலுத்தி,
இமம் பரமம் குஹ்யம்-இந்தப் பரம ரகசியத்தை (கீதையை),
மத்பக்தேஷு ய: அபிதாஸ்யதி-என் பக்தர்களிடையே சொல்லுவோனோ,
மாம் ஏவ ஏஷ்யதி-என்னையே எய்துவான்,
அஸம்ஸய:-ஐயமில்லை.

இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி
என்னையே எய்துவான். ஐயமில்லை.

————

காயேன வாசா மனஸேந்த்ரியைா் – வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் l
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமா்ப்பயாமி ll

சரீரத்தாலோ,வாக்காலோ,மனத்தாலோ,கருமேந்திரியங்களாலோ, ஞானேந்திரியங்களாலோ,
இயற்கையின் இயக்கத்தாலோ எது எதைச் செய்கின்றேனோ
அது எல்லாவற்றையும் பரம புருஷனாகிிய நாராயணனுக்கே என்று ஸமா்ப்பிக்கிறேன்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ ஞான சாரம்–பாசுரங்கள்– 11-20—ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் விரிவுரை — –

August 29, 2021

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!

சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.

———

கீழே சொன்ன இரண்டு பாடல்களில்,
“ஆசிலருளால்” என்ற பாடலில் வேறு ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்தில் திருமகள் மணாளனான இறைவன்
விருப்பத்துடன் இருக்கும் இருப்பையும்,
“நாளும் உலகை” என்ற பாடலில் இறைவனைப் பற்றிக் கொண்டே வேறு ஒன்றை எண்ணுவாரது உள்ளத்தில்
இறைவன் துன்பத்துடன் இருக்கும் இருப்பையும் அருளிச் செய்தார்.

இப்பாட்டில்
தன் திருவடிகளில் வேறு பயனைக் கருதாது பக்தி செய்யும் உண்மையான பக்திமான்கள் மிக அன்புடன் கொடுக்கும்
பொருள் மிகச் சிறியனவாக இருந்தாலும் இறைவன் அச்சிறிய அளவான பொருளையும் மிகப் பெரியதாக நினைத்து
ஏற்பான் என்னும் கருத்தை அருளிச் செய்கிறார்.

“தினைத் துணை நன்றி செய்யினும் பனைத் துணையாகக் கொள்வார் பயன் தெரிவார்” என்று
பொய்யா மொழியும் இக் கருத்தைக் கூறுகின்றது.

உலகளந்த நிலையை வருணிக்கையில் “உயர்ந்தவர்க்கு உதவிய உதவியொப்பவே” என்றான் கம்பன்.

தன் பொன்னடி யன்றி மற்று ஒன்றில் தாழ்வு செய்யா
அன்பர் உகந்து இட்ட அணு வெனினும் -பொன் பிறழும்
மேருவாய்க் கொள்ளும் விரையார் துழாய் அலங்கல்
மாரிமாக் கொண்டல் நிகர் மால் –11-

பதவுரை:

விரையார் –நறுமணம் நிறைந்த
துழாய் அலங்கல் –திருத்துழாய் மாலையை அணிந்து கொண்டவனாய்
மாரி மாக் கொண்டல் நிகர்–மழை பொழியும் மேகத்தை நிகர்த்த வடிவுடையவனான
மால்–திருமால்
தன் பொன்னடி யன்றி–தன்னுடைய அழகிய திருவடிகளையொழிய
மற்றொன்றில் -வேறு பயன்களில்
தாழ்வு செய்யா -ஈடுபாடு கொள்ளாத
அன்பர் -பக்தியை உடையவர்கள்
உகந்திட்டது-மகிழ்ச்சியுடன் கொடுப்பது
அணுவெனினும் -மிகச் சிறியதாகயிருந்தாலும் அப்பொருளை
பொன் பிறழும் -பொன் மிளிரும்
மேருவாய் -பொன் மலையாய்
கொள்ளும் -ஏற்றுக் கொள்வான்

தன் பொன்னடியன்றி –
தன் என்பதற்கு
இறைவன் எக்காரணமும் இல்லாமல் இயல்பாகவே அனைத்து ஆன்மாக்களுக்கும்
தலைவனாக இருப்பவன் என்று பொருள்.

பொன்னடி அன்றி என்பதற்கு
மிக அழகாகவும் விரும்பத் தக்கதாகவும் உள்ள திருவடிகளை அல்லாமல் என்று பொருள்.

இங்கு
தன்னடி என்று கூறுவதால்
இறைவனுடைய திருவடிகள்
ஆன்மாக்கள் அனைவருக்கும் அவை உரிமையுடையன என்பதும்

“பொன்னடி” என்று கூறுவதால்
அவ்வடிவினுடைய
உயர்வும்
இன்பமும் சொல்லப்படுகின்றன.

மற்றொன்றில் தாழ்வு செய்யாவன்பர் –
கீழே சொன்ன இறைவன் திருவடிகள் ஆன்மாக்கள் அனைவருக்கும் உரிமையுடையதாய்
மிகவும் இனிமையுமாய் இருப்பதால் அத்திருவடிகளை யொழிய
வேறு பயனில் ஈடுபடாத அன்பை உடையவர் என்று பொருள்.

மற்றொன்று என்ற சொல்
செல்வம், ஆன்மா அனுபவம் முதலிய வேறு பயன்களைக் குறிக்கிறது.

தாழ்வாவது:- ‘தாழ்ச்சி’
அதாவது ஈடுபாடு என்பதாம்.

இங்கு ‘சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது’ என்ற பாடலில்
‘தாழ்ச்சி’ என்பதற்குப் பொருள் சொல்வது போல இங்கும் பொருள் கொள்ள வேணும்.

அதாவது ‘தாழ்ச்சி மற்றும் எங்கும் தவிர்த்து’ என்ற இடத்தில்
‘உன்னை ஒழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கடவதான தாழ்ச்சியையும் தவிர்த்து’ என்பதையும் ஒப்பு நோக்குக.

ஆக இவ்வாறு, “பகவானைத் தவிர வேறு பயன்களில் ஈடுபடாத பேரன்பர்கள்” என்று பொருள்.

உகந்திட்டது:–
உகப்பு – களிப்பு (மகிழ்ச்சி) –
இட்டது கொடுத்தது மகிழ்ந்து கொடுக்கும் பொருள்.

அடிமை செய்வதில் இரண்டு வகை உண்டு.
சாஸ்திரக் கட்டளைப்படி செய்வது ஒன்று. அதாவது அடியவனாயிருப்பவன். தொண்டே செய்து வரவேணும் என்பது.
மற்றொன்று, அன்பின் மிகுதியால் தொண்டு செய்வது.
உதாரணம், மனைவி கணவனுக்கு செய்யும் தொண்டு கற்புடைமை என்னும் சாஸ்திரக் கட்டளையாகும்.
‘தற்காத்துத் தற்கொண்டான் பேணி’ என்றார் திருவள்ளுவர்.
கணவன் மனைவிக்கு செய்யும் (சேவகம்) பணிகள் அன்பின் மிகுதியால் செய்ததாகும்.
அன்பர்கள் இறைவனுக்குச் செய்யும் தொண்டுகள் எல்லாம் கட்டளை என்று செய்யாமல்
அன்பின் மிகுதியால் செய்ய வேண்டுமென்பது மேலோர் கொள்கை.
இதை, “உகந்து பணி செய்வது” என்பர்.

“உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன், ஈதேயின்மை வேண்டுவதெந்தாய்”-(திருவாய்மொழி-10-8-10)
என்ற இடத்தில் “உகந்து பணி செய்து” என்று ஆழ்வார் கூறியதைக் காண்க.

இவ்வாறு அடியவர் அன்புடன் அர்ப்பணிக்கும் பொருள்
அணுவெனினும் மிகச் சிறிய அளவில் இருந்தாலும்.

பொன் பிறழும் மேருவாய் கொள்ளும் –
அதாவது
பொன் மயமாய் விளங்கும் மகா மேருவைப் போல மிகப் பெரியதாக நினைத்து ஏற்றுக் கொள்வான் என்பதாம்.
இறைவன் வறியவனாக இருந்தால் இவன் கொடுத்ததை ஏற்று நிரம்பியவனாவான்.
அதனால் இவன் கொடுக்கும் பொருள் மிகச் சிறிதளவாக இருந்தால் அதை அவன் ஆதரிப்பான்.
இதை ‘அல்பத்தனம்’ என்று உலகம் கூறும்.
இவ்வாறின்றி, இறைவன் குறை ஒன்றுமில்லாத நிறைவாளனாக இருப்பதால்
குறையை நிரப்பிக் கொள்ள வேண்டிய நிலை அவனுக்கில்லை.
ஆகையினால் அன்பர் தனக்கு அன்பினால் கொடுக்கும் பொருள் சிறிதளவாயினும்
அதை பொன்மலை போல் பெரிதாக மதித்து ஏற்பான் என்பது பொருள்.
இவ்வாறு ஏற்பவன் எத்தகையவன் என்றால்:-

விரையார் துழாயலங்கல் மாரிமாக் கொண்டல் நிதர் மால் –
‘நறுமணம் நிறைந்த திருத் துழாய் மாலையாலே அழகுறத் திகழ்பவன்.
நீருண்ட காளமேகம் போன்று இருக்கிற காரார்ந்த திருமேனி அழகுடையவன்.
‘இத்தகைய திருமால்’ என்று பொருள்.
விரை-நறுமணம்
அலங்கல்-மாலை,
மாரி-மழை,
மா-பெரிய,
கொண்டல்-மேகம் என்று பொருள் காண்க.

இவ்வாறு நிறைவாளன் என்று கூறியதால்
வேறு பயனை விரும்பாமல் தன்னிடம் மனதை வைத்தவர்களுக்குத் தன்னுடைய அழகான
அணிகலங்கள் பூண்ட வடிவழகைக் காட்டி எப்பொழுதும் அவ் வடிவழகையே அனுபவித்து பக்தியை வளர்ப்பவன்’ என்று கொள்க.

விரையார் துழாய் அலங்கல், மாரிமாக்கொண்டல் நிகர்மால்,
தன் பொன்னடியன்றி மற்றொன்றில் தாழ்வு செய்யா அன்பர் உகந்திட்டது
அணுவெனினும் பொன் பிறளும் மேருவாய்க் கொள்ளும்
என்று கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.

———-

வேறு பயன்களை விரும்புவார் மிகப் பெரிய செல்வத்தைத் தனக்கு காணிக்கையாகக் கொடுத்தாலும்
திருமகள் மணாளனான இறைவன் அச் செல்வத்தை விரும்பி ஏற்க மாட்டான்
என்று கூறுகிறார் இப்பாட்டில்.

மாறாய் இணைந்த மருதம் இறத் தவழ்ந்த
சேறார் அரவிந்தச் சேவடியைப் –பேறாக
உள்ளாதார் ஒள் நிதியை ஈந்திடினும் தான் உகந்து
கொள்ளான் மலர் மடந்தை கோன்–12–

பதவுரை:

மலர் மடந்தை கோன்-திருமகள் தலைவனான பகவான்
மாறாயிணைந்த -தன்னிடம் பகை கொண்டு சேர்ந்து நின்ற
மருதம் -இரட்டை மருத மரங்களான அசுரர்களை
இற -முறிந்து விழும்படி
தவழ்ந்த -தவழ்ந்து போன
சேறார் -சேற்றில் அலர்ந்த
அரவிந்தம்-செந்தாமரை போன்ற
வேறாக -சிறப்பாக (அதுவே பயனாக)
உள்ளாதார்-நெஞ்சால் நினையாதார்
ஒண்நிதியை-மிகப் பெருஞ்செல்வத்தை
ஈந்திடினும்-தனக்கு காணிக்கையாகக் கொடுத்தாலும்
தான்-பரிபூரணனான இறைவன்
உகந்து கொள்ளான்-மகிழ்வுடன் ஏற்க மாட்டான்

மாறாயிணைந்த மருதம் –
தன்னிடம் பகை உணர்வோடு இடைவெளி இல்லாமல் நெருங்கிருந்த மருத மரங்கள்
‘எமளார்ச்சனம்’ என்ற பெயர் உடைய வகைகள் (இறத் தவழ்ந்த) முறிந்து விழும்படி தவழ்ந்து போன என்று பொருள்.

கண்ண பிரானைத் தொட்டிலில் இட்டு யசோதை யமுனை நீராடப் போனாள். அப்பொழுது அவன் பசியினால் அழுதான்.
முலைப்பால் கொடுக்கும் தாய் அருகில் இல்லை. சீற்றத்தினால் திருவடிகளை நிமிர்ந்து உதைத்தான்.
கண்ணனைக் கொல்வதற்காக அசுரன் மறைந்திருந்த வண்டி அவனை அழிக்க வந்தது.
அப்போது தன் சிறு பாதத்தால் உதைத்தான். அவ்வளவில் அவ்வண்டி சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தது என்பது முன் வரலாறு.

அது போல இங்கு சாபத்தினால் இரட்டையாய் இணைந்துள்ள எமளார்ச்சனம் என்ற மருத மரங்களும்
இவனுடைய உராய்தலால் கீழே சாய்ந்தன. அதாவது, கண்ணன் வெண்ணையைக் களவிலே அமுது செய்தான்,
ஊரார் காணவே அவனை உரலிலே கட்டிப் போட்டுவிட்டு வேலையிலே ஈடுபட்டாள் யசோதை.
குழந்தைத் தனத்தால் உரலை இழுத்துக் கொண்டு கண்ணன் தன்னை இணைத்திருந்த மருத மரங்களின் நடுவே தவழ்ந்து நுழைந்தான்.

உரல் தடைப்பட்டது. பலத்து இழுக்கும் பொழுது அவன் ஊர்ந்து சென்ற தொடைகள் உராய்தலால் இரட்டை மருத மரங்களும் முறிந்து விழுந்தன,
மருத மரத்தில் மறைந்திருந்த அசுரர்கள் பலியானார்கள். எமளார்ச்சனர்கள் கம்சனுக்கு உதவியாக
மருத மரவடிவில் மறைந்து நின்று கண்ணனைக் கொல்ல எண்ணினார்கள். அவனாலேயே பலியானார்கள்.
பிறர்க்காகக் கண்ணனைப் பகைத்துக் கிட்டினாலும் கண்ணனாலே அழிக்கப்பட்டார்கள்.
ஆகவே, பிறர்க்காக எதிர்த்தாலும் அவர்களும் கண்ணபிரானால் அழியும்படி ஆவார்கள்.
எதிரிகள் யாரானாலும் அவர்களை அழிப்பது கண்ணன் இயல்பு என்பது கருத்து.

இயற்கையான தாமரைக் குளத்தில் அலர்ந்த செந்தாமரை போலே சிவந்த திருவடிகள்.

சேவடி என்று திருவடியின் சிவப்பைச் சொன்ன இடத்தில் மற்றும் உண்டான அலர்த்தி, குளிர்ச்சி, அழகு, நறுமணம்
இவை எல்லாவற்றையும் ஏற்புளிக் கோடல் என்ற உத்தியால் சேர்த்துக் கொள்ள வேணும்.

இக்கதையைச் சொல்ல வந்த பராசரமுனிவர் கண்ணன் மருத மரங்கள் நடுவே தவழ்ந்து போனபோது
அவை முறிந்து விழுகின்ற ஒசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்து அவ்வழகிய பார்வையாலே
சிவந்து மலர்ந்த திருக்கண்களின் அழகைக் கட்டுரைத்தார்.
இக்கதையை இப்பாடலில் கூறிய அருளாள மாமுனிவர் கண்ணன் தவழ்ந்து போகிற போது
மருத மரங்களை முறித்திட்டுப் போன திருவடிகளில் அழகைக் கட்டுரைக்கிறார் என்பது மணவாளமாமுனிகள் உரை.

“பொருந்திய மாமரு தின்னிடை போய வெம்
பெருந்தகாய், உன் கழல் காணியே பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே
இருந்திருந் தெத்தனை காலம் புலம்புவனே” –(திருவாய்மொழி – 3-8-10) என்றும்

“போனாய் மாமருதின் நடுவே என் பொல்லா மணியே” என்றும் ஆழ்வாரும் அனுபவிக்க ஆசைப்பட்டது
மருதத்தின் நடுவே போன திருவடிகளை அன்றோ?

வேறாக உள்ளாதார் – வேறுபடுத்தி எண்ணாதவர்கள்.

‘அதாவது வேறுபயன் எதிலும் சிறிதும் தொடர்பின்றி இத்திருவடிகளே நமக்கு மேலான பயன் என்று நினையாதவர்கள்’ என்று கருத்து.
அதாவது
கண்ணபிரான் மருதமரமாயுள்ள எமளார்ச்சனர்கள் கையில் அகப்படாமல் தன்னைத் தானே காத்து நமக்குத் தன்னை
அனுபவிக்கும்படி தந்ததால் அவன் திருவடிகளே அடையத் தகுந்த மேலான பலன்’ என்று
எப்பொழுதும் அதையே நினைத்துக் கொண்டு கிடப்பதன்றோ அடியவரானவர்க்குத் தருவதாகும்.
அவ்வாறு இருக்க வேண்டியதை விட்டுவிட்டு மனதை வேறு வேறு பயன்களில் ஈடுபடுத்தும் அவர்கள் என்பதாம்.

ஒண் நிதியை ஈந்திடினும் –
ஒண்மை – அதாவது சீரிய அளவற்ற நிதியைக் கொடுத்தாலும்

தான் உகந்து கொள்ளான் மலர் மடந்தை கோன் –
‘தான் திருவுக்கும் திருவாகிய செல்வனாகையால் எல்லாம் நிரம்பப் பெற்றவன். குறையொன்றுமில்லாதவன்.
ஆகவே மேலே சொல்லப் பட்டவர்கள் மிக்க பெரு நிதியைக் கொடுத்தாலும் அதை விரும்பி ஏற்க மாட்டான்’ என்பது பொருள்.
அவன் குறையுடையவனாய் இருந்தாலன்றோ கொடுக்கிற பொருளை பெருநிதி என்று அவாவுற்று ஏற்பான்!
இதை அவனிடம் சொல்ல முடியாது அல்லவா ?
மேலும் கொடுப்பவரது நெஞ்சின் தூய்மையைப் பார்த்து ஏற்கும் பெருமான் அன்றோ அவன்.
‘ஆகையாலே தன்னிடம் பக்தியில்லாது வேறுபயனை விரும்புவார் கொடுப்பதை மகிழ்ந்து ஏற்கமாட்டான்’ என்பதாம்.

‘மகிழ்ந்து ஏற்க மாட்டான்’ என்றதால் ‘தலைவிதியே’ என்று ஏற்பானாகத் தெரிகிறது.
இறைவன் எல்லோராலும் பற்றப் படுவனாதலால் அவன் யார் கொடுப்பதையும் ஏற்க வேணுமே!
கடமைக்காக ஏற்பானே அன்றி மகிழ்ந்து ஏற்க மாட்டான் என்பது இதன் குறிப்புப் பொருள்.

பெற்றோர்கள், நற்குணமுடைய குழந்தைகள் கொடுப்பதை ஏற்பது போல,
அக்குணமில்லாதவர்கள் கொடுப்பதையும் ஏற்க வேண்டுமல்லவா அதுபோல என்பதாம்.

————-

பகவானிடத்தில் வேறு பயன் எதையும் விரும்பாமல் தொண்டு செய்யும் தன்மை உண்டானாலும், ஆன்ம விவேகமில்லாமல் உடலில் பற்றுதல் உடைய உலகியல் மக்களோடு, (உண்ணல், உடுத்தல், திரிதல்) இவற்றையே லட்சியமாகக் கொண்டவர்களோடு தொடர்புடையவராயிருந்தால், இறைப் பணியையே இலக்காகக் கொண்ட அவ்வடியார்க்குப் பழுதாகுமன்றோ? என்று வினா எழும். அதற்கு விடையளிக்கப்படுகிறது இப்பாடலில். அதாவது, ஆன்மாவின் உண்மை நிலையான இறைப்பணியைக் கண்டறிந்தவர்களுக்கு உலகியல் மக்களோடு உறவு ஏற்படாது என்பதாகும்.

பண்டே உயிர் அனைத்தும் பங்கயத்தாள் நாயகற்கே
தொண்டாம் எனத் தெளிந்த தூ மனத்தார்க்கு -உண்டோ
பல கற்றும் தம்முடம்பைப் பார்த்து அபிமாநிக்கும்
உலகத்தவரோடு உறவு –13-

பதவுரை:

பண்டே -தொன்று தொட்டே
உயிரனைத்தும் -அனைத்து உயிர்களும்
பங்கயத்தாள் நாயகற்கே -லக்ஷ்மீ நாதனுக்கே
தொண்டாம் -அடிமையாகும்
எனத் தெளிந்த -என்ற உண்மையை அறிந்த
தூ மனத்தார்க்கு -தூய மனம் படைத்தார்க்கு
பலவும் கற்று -சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்று
தம் உடம்பைப் பார்த்து -தமது உடலில் காணப்படும் சாதி முதலியவற்றைப் பார்த்து
அபிமானிக்கும் -செருக்கித் திரியும்
உலகத்தவரோடு -உலகியல் மக்களோடு
உறவு உண்டோ -தொடர்பு உண்டாகுமோ?

பண்டே, உயிர் தொண்டாம் (என்று கொண்டு கூட்டிப் பொருள் சொல்லப்படுகிறது)
அதாவது உயிர்கள் எல்லாம் இயல்பாகவே இறைவனுக்கு அடிமை யாயிருத்தல் அநாதியாகும் என்பதை உணர்த்துகிறது.

உயிர் அனைத்தும் என்று கூறுவதால்,
ஆன்மாக்களுக்குரிய அவ்வடிமைத் தன்மை தான் சிலருக்கு உண்டாய், சிலருக்கு இல்லையாய், இல்லாமல்
அனைத்து ஆன்மாக்களுக்கும் பொதுவாகும் என்று உணர்த்தப்படுகிறது.

பங்கயத்தாள் நாயகற்கே
மேற்கூறிய அவ்வடிமை தான் யாருக்கு என்பதைத் தெளிவாக்குகிறது இத்தொடர்.
தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்ட பெரிய பிராட்டியாருக்கு நாயகனான ஸ்ரீயபதிக்கு என்று பொருள்.
உயிர்கள் திருமாலுக்கே அடிமையாகும் என்றதாயிற்று.
இதனால் அடியவர்களான ஆன்மாக்களுக்குத் தலைமையாயிருப்பவர் பிராட்டியும் பெருமாளுமான
இருவருமாவர் என்னும் கருத்துப் புலனாகிறது.

மேலும் நாயகற்கு என்ற நான்காம் வேற்றுமை உருபாலும்
“ஏ” என்ற தேற்றேகாரம் இடை நிலையாலும்,
ஆன்மாக்கள் அவ்விருவருக்கு மட்டுமே அடிமை, பிறர்க்கு அடிமையானவரில்லை என்ற கருத்தும் அறியப்படுகிறது.

தொண்டாம் எனத் தெளிந்த தூமனத்தார்க்கு –
மேற்சொன்ன ‘பங்கயத்தாள் நாயகற்கே இவ்வான்மா அடிமை’ என்று சாஸ்திரங்களால் தெளிவடைந்த
தூய மனத்தரான தொண்டர்களுக்கு, திருமந்திரம் சகல வேதங்களுடையவும் திரட்சியாகும்.
இக் கருத்து திருமந்திரத்தை உணர்ந்தவர்க்கு நன்கு தெரியும்.
திருமந்திரத்தின் பொருளுணர்ந்தவர்கள் தான் “தூமனத்தர்”.

உண்டோ – கிடையாது.
இவ்வினைச் சொல்லுக்கு மேல் வரும் உறவு என்ற சொல்லோடு கொண்டு கூட்ட வேணும்.
உறவு உண்டோ என்பதால் உறவு கிடையாது என்பது பொருளாகும்.

பல கற்றும் தம் உடம்பைப் பார்த்து அபிமானிக்கும் –
பல கற்றல் – அதாவது வேதம், மனு முதலிய ஸ்மிருதிகள், தர்க்கம், வியாகரணம் முதலிய சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்றலாம்.

(தம் உடம்பைப் பார்த்து அபிமானிக்கும்) – என்ற தொடரில் ‘தம் உடம்பு’ என்றது
அந்தணர் முதலிய வர்ணங்களுக்கு பிரம்மசரியம் முதலிய நிலைகளுக்கும் எல்லாம் இருப்பிடமாயிருக்கும்
தங்கள் தங்கள் உடம்பைப் பார்த்து ‘நாம் இன்ன சாதி அன்றோ நாம் இன்ன வர்ணம் அன்றோ,
நாம் இன்ன நிலை (பிரம்மசரியம்) முதலிய நிலைகள் இருப்பவர் அன்றோ என்று
இவற்றை குறியிட்டுத் தங்களை மிக உயர்வாக எண்ணி இருக்கும்’ என்று பொருள்.

உலகத்தவரோடு உறவு – இப்படித் தங்களைச் சாதி முதலியவற்றால் உயர்வாக எண்ணியிருக்கும் உலகத்தவரோடு.

தூமனத்தார்க்கு – தொடர்பு உண்டாகுமோ என்று வினை கூட்டிப் பொருள் முடிக்க,

“ஓம்” என்ற ப்ரணவத்தில்
அகாரத்தின் பொருளான நாராயணனுக்கே ஆன்மாக்கள் அனைவரும் அடிமை ஆவார் என்று சொல்லப்பட்டது.
இவ்வாறு சொல்லப்பட்ட அடிமைக்கு நிலைக்களமான ஆன்மாவை ‘ம’ காரத்திற்கு அர்த்தமாகக் காண வேண்டும்.
அவ்வான்மா அசேதனப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டதாய்
ஞானத்தையும் ஆனந்தத்தையும் அடையாளமாய்க் கொண்டதாய்,
ஞான வடிவமாய் என்றும் இருப்பதாய்,
இவ்வாறான இலக்கணங்களோடு கூடியிருக்கும் ஆன்மாவைப் பற்றித் தெரிந்திருக்கும் தூய மனத்தினருக்கு,
இத்தெளிந்த அறிவில்லாத உலகத்தவரோடு தொடர்பு உண்டாகுமோ?

அதாவது
உலகத்தவர் உடலையே முக்கியமாகக் கொண்டு அவ்வுடலைப் பற்றி வரும் சாதி முதலியவற்றைக் குறித்துத்
தங்களை மிக மதிப்பாக நினைத்து செருக்கித் திரியும் உலகத்தவர்’ என்று உலகர்களை அறிந்தால்
ஆன்மாவின் உண்மையை உணர்ந்தவர்களுக்கு அதை அறியாத உலகத்தவரோடு தொடர்பு உண்டாகுமோ? உண்டாகாது என்றவாறாம்.
அவர்களைக் கண்டால் உறவற வார்த்தை சொல்லிப் போதல் இத்தனை அன்றோ உள்ளது காண்க.

இதற்கு உதாரணமாக ஒரு பழைய வரலாறு இங்குச் சொல்லப்படுகிறது.
திருவயிந்திபுரம் என்ற ஊரிலே வில்லிபுத்தூர்ப் பகவர் என்று பிரபலமாய் இருப்பார் ஒரு சன்னியாசி (துறவி).
பிராமணர்கள் எல்லோரும் நீராடிக் கடன் செய்யும் துறையை விட்டிட்டு தாம்
வேறு ஒரு படித்துறையில் தம்முடைய கடன்களைச் செய்து வருகையில்
ஒரு நாள் பிராமணர்கள் அவரை நோக்கி, ‘எங்கள் துறையில் உமக்கு நீராட்டம் பண்ணக் கூடாதா? என்று கேட்க’
அதற்கு அவர் இவ்வாறு பதில் கூறினார்.
ஓ அந்தணர்களே! நாங்கள் விஷ்ணுவின் அடியார்கள். நீங்கள் சாதி, தர்மங்களைக் கடைபிடிக்கும் பிராமணர்கள்.
விஷ்ணு தாசர்களான எங்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு கிடையாது. நீங்கள் சரீரத்திற்கு அடிமைப்பட்டவர்கள்.
நாங்கள் பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள். நம் இருவருக்கும் உறவு ஏற்படுவதற்கு வழியில்லை என்று
உறவற வார்த்தை சொல்லிப்போனார் அன்றோ என்ற இவ்வரலாறு
இப்பாடல் உரையில் மாமுனிகளால் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஞானிகளுக்கு உலகத்தவர்களோடு தொடர்பு உண்டாகாது என்பதாம்.

———-

உடம்பு இருக்கும் வரையும் சாதி முதலிய வேறுபாடுகளின் பற்றுதல் தொடர்ந்து வருமல்லவா?
என்று வினா உண்டாக, “அவற்றால் என்ன பயன்” என்று விடை கூறி
எல்லா ஆன்மாக்களுக்கும் திருமகள் நாயகன் திருவடிகளே புகலாய்க் காண்பீர்கள்!
என்னும் உண்மை கூறப்படுகிறது இப் பாடலில்.

பூதங்கள் ஐந்தும் பொருந்து உடலினில் பிறந்த
சாதங்கள் நான்கினோடும் சங்கதமாம் பேதம் கொண்டு
என்ன பயன் பெறுவீர் எவ்வுயிர்க்கும் இந்திரை கோன்
தன்னடியே காணும் சரண் –14-

பதவுரை:

பூதங்கள் ஐந்தும் பொருந்தும்-நிலம், நீர், தீ, காற்று, வானம், என்னும் ஐந்து பொருட்களுடைய கூட்டுறவால் உண்டான
உடம்பினால்-உடலை அடிப்படையாக வைத்துப் பிறந்த
சாதங்கள்-சாதிகள்
நான்கினொடும்-அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாலு வகைப் பிரிவோடும்
சங்கதமாம்-சேர்ந்திருக்கிற
பேதங்கொண்டு-உயர்வு தாழ்வாகிற வேற்றுமைகளைக் கொண்டு
என்னபயன் பெறுவீர்-என்ன லாபத்தை அடைவீர்?
எவ்வுயிர்க்கும்-அனைத்து உயிர்களுக்கும்
இந்திரைகோன்-லக்ஷ்மீ நாயகனான
தன்னடியே-எம்பெருமானுடைய திருவடிகளே
சரண்-புகலாகும் என்று
காணும் -அறிவீர்களாக (குறிப்பு) காணும் முன்னிலை

“பூதங்களைந்தும் பொருந்து உடலினாற் பிறந்த” :
“மஞ்சு சேர் வானெரி நீர் நிலம் காலிவை மயக்கிநின்ற
அஞ்சுசேர் ஆக்கை -என்று திருமங்கை ஆழ்வாரும்

“சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் இவ்வைந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு” -என்று திருவள்ளுவரும் சொன்னபடி,

மண் முதலிய ஐம்பெரும் பூதங்களினுடைய கூட்டுறவே உடம்புகளாக உண்டாகி இருக்கின்றன.
இவ்வாறு கூறுவதால் ஆன்மாவுக்கும், உடலுக்கும் தொடர்பில்லை என்பதை நன்கு உணரலாம்.
மேலும் உடல், பேதை, குழவி, பால்யம், இளமை முதுமை முதலிய மாறுபட்ட தோற்றங்களைக் கொண்டதாய்
நிலை இல்லாததாகவும்,
பழிப்புக்கு இடமாகவும் இருக்கிறது.
இதனால் ஆன்மாவுக்கு இத்தகைய உடல் தாற்காலிகமாக ஏற்பட்டது என்று புலனாகிறது.

சாதங்கள் நான்கினொடும் –
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று சொல்லப்படும் சாதிகள் நான்கு.
சாதங்கள் என்பதற்கு சாதிகள் என்று பொருள்.
இந் நான்கு சாதிகளும் மேலே சொன்ன ஐம்பூதங்களால் ஆகிய உடலினால் ஏற்பட்டவைகளே.

நான்கினொடும் சங்கதமாம் பேதம் கொண்டு –
இவ்வாறான நான்கு சாதிகளோடு சேர்ந்திருக்கிற பற்பல சாதி வேறுபாடுகள் உயர்வு தாழ்வுகளுக்குக் காரணமாயிருப்பன.
அந்தணர் முதலிய சாதியைப் பற்றிக்கொண்டு பிரம்மச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், துறவறம் என்று வேறுபாடுகள் வருகின்றன.
உடலைப் பற்றி வருகின்ற இவ்வாறான வேறுபாடுகள் எவ்வளவோ கூறலாம்.

இக் கருத்தை பரிமேலழகர்
நால் வகை நிலைத்தாய் வர்ணம் தோறும் வேறுபாடுடைமையின் என்று கூறினார்.

என்ன பயன் பெறுவீர் –
இவ்வேறுபாடுகள் கொண்டு என்ன பயன் அடையப் போகிறீர்கள் என்று உலகோரை நோக்கிக் கேட்கப்படுகிறது.
பயன் எதுவுமில்லை என்பதுவே இதற்கு பதிலாகும்.
இதனால் உணர்த்தப்படும் குறிப்புப் பொருள் “யான்” “எனது” என்னும் குற்றங்களுக்குக் காரணமாயிருப்பதால்
சாதி வேறுபாடுகள் ஆன்மாவுக்குக் கேடுகளையே விளைவிக்கும் என்பதாம்.

இங்கு ‘என்ன பயன் கெடுவீர்! என்று பாடபேதம் கொண்டு
அதற்கு ‘கெடுவீர்கள்’ என்று விளி வேற்றுமை யாக்கி
அருகிலிருப்பவரை நோக்கிக் கூறுவதாகப் பொருளும் கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வுயிர்க்கும் இந்திரைகோன் தன்னடியே காணும் சரண் –
‘எவ்வுயிர்க்கும்’ என்றதால் “வேண்டுதல் வேண்டாமை இலான்” என்ற சிறப்புக்கேற்ப
இன்னார் இனியார் என்று வேறுபாடு இல்லாமல் எல்லா ஆன்மாக்களுக்கும்
திருமகள் மணாளன் திருவடிகளே புகலாகக் காண்பீர்களாக.
‘அனைத்துயிருக்கும் அவன் திருவடிகளே புகல்’ என்று கூறுவதால் அனைத்துயிர்களும்
அவன் திருவடிகளைச் சார்ந்திருப்பதால் பேதங்கள் ஒன்றுமில்லை
ஆகையால் பேதம் சொல்வது எல்லாம் உண்மை இல்லை.

இறைவனடியார் என்று சொல்வதே எல்லா உயிர்களுக்கும் நிலைநின்ற தன்மையாம்.
இது பற்றியே
“பொதுநின்ற பொன்னங்கழலே தொழுமின் முழு வினைகள் முன்னங்கழலும் தொழுமின்” -என்றார் பூதத்தாழ்வார்.

இங்கு “பொதுநின்ற பொன்னங்கழல்” என்று
இறைவனுடைய திருவடி அனைவருக்கும் பொது என்று கூறப்பட்டது.
இது பற்றியே வைணவத் திருக்கோயில்களில் வழிபாட்டுக்கு வரும் அனைவர் தலைகளிலும்
திருவடி நிலையை (சடாரி) வைப்பதைப் பார்க்கிறோம்.

—————-

எவ்வுயிர்க்கும் இந்திரை கோன் தன்னடியே காணும் சரண்:- என்று கீழ்க்கூறிய கருத்தை எடுத்துக்காட்டுடன்
இப்பாடல் நிலை நிறுத்துகிறது.
“திருமகள் மணாளனுக்கு அடியார்” என்னும் பெயரையே தங்களுக்கு அடையாளமாகக் கொண்டவர்களுக்கு,
ஞானம் பிறப்பதற்கு முன்பு அடையாளமாகக் குறிப்பிட்ட ஊர் பெயர், குலப்பெயர், மற்றும் சிறப்புடைய
அடையாளங்கள் எல்லாம் ஞானம் பிறந்த பிறகு அவன் திருவடிகளேயாகும் என்று கூறப்படுகிறது.

குடியும் குலமும் எல்லாம் கோகனகை கேள்வன்
அடியார்க்கு அவன் அடியே யாகும் படியின் மேல்
நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம்
ஆர்கலியைச் சேர்ந்திட மாய்ந்தற்று –15-

பதவுரை:

குடியும் -பிறந்த ஊரும்
குலமும் -பிறந்த கோத்திரமும்
எல்லாம் 0மற்றும் பிறப்பு (குறி) அடையாளங்கள் எல்லாம்
கோனகை-திருமங்கை மணாளன்
கேள்வனடியார்க்கு-தொண்டர்களுக்கு
அவனடியே யாகும்-இறைவனான அவனுடைய திருவடிகளே அனைத்தும் ஆகும்
இதற்கு எடுத்துக்காட்டு
படியின்மேல்-பூமியில்
நீர் கெழுவும்-நீர் நிறைந்த
ஆறுகளின்-நதிகளுடைய
பேரும்-கங்கை முதலிய பெயரும்
நிறமும்-சிவப்பு, வெளுப்பு, கருப்பு முதலிய
எல்லாம் வேற்றுமைகள் எல்லாம்
ஆர்கலி-சமுத்திரத்தை
சேர்ந்து-கலந்து
மாய்ந்திடும் அற்று-அழிந்து போவது போன்று

(குடியும் குலமுமெல்லாம்)
“சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன்” என்னும், புறநானூற்றுப் பாடலிலும்

“வெங்கண்மா களிறுந்தி விண்ணியேற்ற விறல் மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த
செங்கணான் கோச் சோழன்” -என்றும்

“இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன்” -என்றும் திருமங்கையாழ்வார் பாடல்களிலும்

வரும் குடி, குலம், கோத்திரம் மற்றும் சிறப்பு அடையாளங்கள் சொல்லியிருப்பனவற்றைக் காணலாம்.

குடி – பிறந்த கிராமம் அல்லது ஊர்

குலம் – கோத்திரம் எல்லாம் என்றது மற்றும் அடையாளமாகச் சொல்லப்படுபவை.

கோகனகை கேள்வன் அடியார்க்கு – திருமால் அடியார்களுக்கு,
கோகனகம் – தாமரை கோகனகை – தாமரையாள், கேள்வன் – நாயகன், திருவின் மணாளன் என்று பொருள்.
இப்படிப்பட்ட திருவின் நாயகனான இறைவன் திருவடிகளில் அடிமையே.
அதாவது
திருமால் அடியார் என்பதையே தங்களுக்கு அடையாளமாகக் கொண்டவர்க்கு.

அவனடியே யாகும் –
அதாவது
அடியவராவதற்கு முன்பு குடி, குலம், கோத்திரம், சூத்திரம் முதலிய காரணங்களைப் பற்றி வந்த
அடையாளப் பெயர்கள் எல்லாம் அடியரான பிறகு அழிந்து போய்,
திருமால் அடியார் என்ற ஒரு பெயரே நிலைத்து நிற்கும் என்பதாம்.
இறைவன் திருவடி உறவையே அடையாளமாய்க் கொண்டவராய் அதைப் பற்றியே ‘திருமாலடியார்’ என்று
அழைக்கப்படுவார் என்றதாயிற்று. இதற்குச் சரியான உதாரணம் மேலே சொல்லப்படுகிறது.

படியின் மேல் – பூமியின் மேல்

நீர் கெழுவும் ஆறுகளின் –
நீர் நிறைதலை யுடைய நதிகளின் பேரும் நிறமும் எல்லாம் அதாவது
கங்கை, யமுனை முதலிய பெயர்களும், செம்மை, கருமை, வெண்மை முதலிய நிறங்கள் எல்லாம் என்றவாறு.

ஆர்கலியைச் சேர்ந்து – சமுத்திரத்தைச் சேர்ந்து கலந்த பின்

மாய்ந்திடும் அற்று – அழிந்து போவது போன்று

அதாவது அடியவராவதற்கு முன்புள்ள குடி, குலம் முதலிய அனைத்தும் அடியவரான பிறகு மறைந்து போய்விடும்.
இது எது போன்றது எனில், பூமியில் நீர் நிறைந்து பெருகும் ஆறுகளின் பெயர்களும் நிறங்களும்
சமுத்திரத்தில் கலந்து காணாமல் போவது போன்றதாகும்.
ஆகவே நிலை நில்லாது மாயும் சாதி, குலம் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமென்றும்
நிலையான இறைவன் அடியராம் தன்மைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றும்.

(அடியராம் தன்மை) –
எல்லா ஆன்மாக்களுக்கும் பொதுவானது என்றும் உணர வேண்டும்.
இவ் வுணர்வினால் வேற்று மனப்பான்மைகள் ஒழியும் திருமாலடியார் என்னும் உணர்வு உண்டாகும் என்பதாம்.

———

ஆன்மாவின் உண்மை நிலையை உள்ளது உள்ளபடி அறிந்தவர்கள் எப்பொழுதும் தங்களின் நிலைத்து இருக்கும்
நிலையைத் தம்முடைய ஒழுக்க நெறியைக் கூறும் முகத்தால் விளக்குகிறார் ஆசிரியர்.

தேவர் மனிசர் திரியக்குத் தாவரமாம்
யாவையும் அல்லன் இலகும் உயிர் பூவின் மிசை
ஆரணங்கின் கேள்வன் அமலன் அறிவே வடிவாம்
நாரணன் தாட்கே யடிமை நான் –16-

பதவுரை:

நான்-உயிராகிற நான்
தேவர்-இந்திரன் முதலிய தேவர்கள்
மனிசர் -அந்தணர், அரசர் முதலியோர்
திரியக்கு-பசு, பறவை முதலிய விலங்குகள்
தாவரமாம்-மரம், செடி, கொடிகளாகிற தாவரங்கள்
யாவையுமல்லேன்-எவையுமாய் சொல்லப்பட மாட்டேன்
(இவையெல்லாம் நிலை நில்லாதனவாய் சிறிது பொழுது ஆத்மாவைப் பற்றி நின்று கழிவன.
ஆதலால் அவற்றைக் கொண்டு ஆத்மாவைக் குறிப்பிடுவது முறையில்லை என்பது)
நான்-நான் (அடியேன்)
பூவின் மிசை-தாமரை மலரில் வீற்றிருக்கும்
ஆரணங்கின்-தெய்வப் பெண்ணான திரு மகளின்
கேள்வன்-மணாளனும்
அமலன் -குற்றங்கள் இல்லாதவனும்
அறிவே வடிவாம் -அறிவு மயமாய் இன்பமயமாய் விளங்குபவனுமான
நாரணன்-நாராயணனுடைய
தாட்கே-திருவடிகளுக்கே
இலகும் -அறிவும் இன்பமுமாய் விளங்கும்
உயிர் -உயிர்கள்
அடிமை -அடிமையாகும்
“உயிர்கள் எல்லாம் நாராயணனுடைய அடிமைகள் ஆகும்.” -அடிமையே உயிர்களின் இயற்கையாம்.

தேவர் மனிசர், திரியக்குத் தாவரமாம் –
தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், செடி, கொடி, தாவரங்களாகிற (யாவையும் அல்லன்)
எந்தப் பெயரும் உடையவன் அல்லன். ஆன்மாவாகிற நான்.

ஓர் ஆன்மா தான் செய்த பற்பல நல்வினை, தீவினை வேறுபாட்டால்
தேவ சரீரம், மனித சரீரம், விலங்கு சரீரம், தாவர சரீரம், முதலிய பல உடல்களிலும் பிறக்கிறது.

இவற்றைத் திருக்குறள் உரை முதலியவற்றில் காணலாம்.
அவை வருமாறு:-

“ஊர்வ பதினொன்றாம், ஒன்பது மானிடம், நீர், பறவை நால்கால், ஒர் பப்பத்து,
சீரிய பந்தமாந் தேவர் பதினாலு, அயன் படைத்த அந்தமில் சீர்த் தாவரம் நாலைந்து,
மக்கள் விலங்கு, பறவை யூர்வன, நீருந் திரிவன பருப்பதம எனவினை யெழு பிறப்பாகு மென்ப”

வினைப்பயனால் ஆன்மாக்கள் எடுக்கும் பிறப்புக்களைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டவற்றை இங்கு ஒப்பு நோக்குக.
இவ்வாறு ஆன்மா பற்பல உடல்களை எடுத்தால் அந்தந்த உடலில் இருக்கும் போது
நான் தேவன், நான் மனிதன், நான் விலங்கு, நான் தாவரம் என்று
அது அதற்கு ஏற்ப நான் என்ற அகந்தையை எண்ணுகிறது.

இந்நிலை ஆன்மாவின் உண்மை நிலையை அதாவது,
‘இறைவனுக்கு மனிசர், விலங்கு, தாவரம் முதலிய யாவையும் அல்லன் நான் என்று தன்னை உணர்வான்.
மேலும் ‘நான் இறைவன் அடியேன்’ என்று தன்னை நினைப்பான்.

(இலகும் உயிர் நான்) என்று கொண்டு கூட்டுக.
உயிராகிற நான் என்று அறிக.
இதில் இலகும் என்ற அடைமொழியால் உயிருக்குரிய இலக்கணங்களை சாஸ்திரங்களில் கூறியபடி உணரவேண்டும்.
அதாவது
‘ஞானத்தையும் ஆனந்தத்தையும் அடையாளமாய் உடையவனும்,
ஒளி மயமானவனுமான உயிராகிற நான்’ என்று பொருள்.

மேலும், அசேதனப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டதாய்
ஞானத்தையும் ஆனந்தத்தையும் அடையாளமாய்க் கொண்டதாய்
ஞான வடிவமாய் இருப்பதாய் உள்ளது ஆன்மா என்பதையும் இங்கு காண்க.

மேலும் தத்வத்ரயம் என்னும் நூலில், சித் ப்ரகரணத்தில் ஆன்மாவினுடைய இலக்கணத்தை அருளிச் செய்கையில்
“ஆத்ம ஸ்வரூபம் சென்று சென்று பரம்பரமாய் என்கிறபடியே
தேஹேந்திரிய மந: ப்ராண புத்தி விலக்ஷணமாய், அஜடமாய், ஆநந்த ரூபமாய், நித்யமாய், அணுவாய்,
அவ்யக்தமாய், அசிந்த்யமாய், நிரவயவமாய், நிர்விகாரமாய், ஜ்ஞானாச்ரயமாய்,
ஈச்வரனுக்கு நியாம்யமாய், தார்யமாய், சேஷமாயிருக்கும்” என்று கூறியதையும் இங்குக் காண வேண்டும்

பூவின் மிசை ஆரணங்கின் கேள்வன் – “மலர்மேல் உறைவாள்” (திருவாய்மொழி – 4-5-2) என்று
நம்மாழ்வார் அருளிச்செய்தபடி
தாமரைப் பூவின்மேல் வசிப்பவளாய்,
அழகான வடிவை உடையவளான பெரிய பிராட்டியாருக்கு மணாளனாய் இருப்பவன் என்று இதற்குப் பொருள்.

அணங்கு – தெய்வப்பெண்
அழகு முதலிய தெய்வ குணங்கள் எல்லாம் நிறைந்த பெரிய பிராட்டியார்.
கேள்வன் – அவளுக்கு மணாளன்.

அமலன் – தீய குணங்களுக்கு எதிரியாய் இருப்பவன்.

அறிவே வடிவாம் – ஞானத்தையும் ஆனந்தத்தையும் தனக்கு வடிவமாய்க் கொண்டிருப்பவனான நாராயணனுடைய

தாட்கே அடிமை – திருவடிகளுக்கே ஆத்மா அடிமையானவன்

நாராயணன் என்றது தன்னை ஒழிந்த அனைத்துப் பொருள்களும் தனக்குச் சரீரமாய்த் தான் சரீரியாய் (சரீரி – உயிர்)
அதாவது
எல்லாவற்றுக்கும் தான் உயிராய் இருப்பவன் என்று பொருள்.

அறிவு மயமாய் சுகமயமாய் விளங்குகிற ஆன்மாவாகிற நான்,
தேவனல்லன், மனிதனல்லன், விலங்கல்லன், செடி, கொடி தாவரம் அல்லன், கூறிய யாவையும் அல்லன்.
தாமரை மலரில் தோன்றிய அழகிய தெய்வமான இலக்குமி தேவிக்கு மணாளனும்,
குற்றங்களுக்கு எதிரியாய் இருப்பவனும் ஞானத்தையே உருவமாகக் கொண்டவனும்,
அனைத்துப் பொருள்களுக்கும் உயிரானவனுமான நாராயணன் திருவடிகளுக்கே
அடிமைப்பட்டவனாவேன் என்பது பாடல் கருத்தாகும்.

——–

ஆத்ம ஞானம் பிறந்தவன் அதாவது,
‘ஆத்மா பகவானுக்கு அடிமையாய் இருப்பதுவே, ஆத்மாவின் உண்மை நிலையாகும்’ என்பதை உணர்ந்தவன்.
தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் இயல்பைத் தம்முடைய ஒழுக்க நெறியைக் கூறுகின்ற முகத்தால்
அருளிச் செய்யப்பட்டது கீழ்.

இதில் பெருஞ்செல்வம் சேர்வதும் அது அழிவதும் வாழ்நாள் நீள்வதும், அது குறைவதும்,
ஆன்மாவின் உண்மையை உணராதவர்களுக்குச் செருக்கையும் துன்பத்தையும் உண்டு பண்ணுவனவாகும்.
அவ்வாறின்றி ஆன்மாவின் உண்மை நிலையை அறிந்தவர்களுக்குச் செல்வம் வருவதும் போவதும் பற்றியோ
வாழ்நாள் நீள்வது குறைவது பற்றியோ, செருக்கு, துன்பங்கள் உண்டாகமாட்டா என்னும்
உயரிய கருத்தை இப்பாடல் உணர்த்துகிறது.

ஆன்மாவின் உண்மை நிலை அறிந்தவர்களுக்கு
செல்வம் வருவதிலும்
அது தன்னை விட்டுப் போவதிலும்
செருக்குத் துன்பங்கள் உண்டாக மாட்டா என்பது கருத்து.

ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
என்றும் இறவாது இருந்திடுக -இன்றே
இறக்க களிப்பும் கவரவும் இவற்றால்
பிறக்குமோ தன் தெளிந்த பின் –17-

பதவுரை:

விண்ணவர் கோன்-தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய
செல்வம் மிக்க -பெருஞ்செல்வம்
ஒன்றிடுக-ஒருவர் வேண்டாது இருக்கும்போது தானே வந்து சேர்ந்திடுக
ஒழிந்திடுக-அல்லது அதுவே தன்னைவிட்டு நீங்கிடுக
என்றும் இறவாது இருந்திடுக-எக்காலத்திலும் மரணம் இல்லாமல் வாழ்ந்திடுக (அல்லது)
இன்றே இறக்க-இப்பொழுதே மரணம் ஆயிடுக
தன் தெளிந்த பின்-ஆத்மாவான தன்னுடைய உண்மை நிலையை நன்றாக அறிந்த பின்பு
இவற்றால்-இந்த அறிவினால்
களிப்பும் கவர்வும்-இன்பமும் துன்பமும்
பிறக்குமோ-உண்டாகுமோ (ஆகாது)

ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் –
தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய மிக்க பெரிய செல்வம்.
அதாவது
பூ உலகம், புவர் உலகம், சுவர் உலகம் என்று சொல்லப்படுகிற மூன்று உலகங்களையும்
ஆள்கின்ற செல்வமானது விரும்பாது இருக்கும்போதே தானே வந்து சேரட்டும்.

ஒழிந்திடுக –
அத்தகைய பெருஞ்செல்வம் இனி ஒரு நாளும் கை கூடாது என்னும் அளவுக்குத்
தன்னோடு தொடர்பில்லாமல் மாய்ந்து போகட்டும்.

என்றும் இறவாது இருந்திடுக –
எக்காலத்திலும் மரணம் இல்லாதவனாய் வாழட்டும்.

இன்றே இறக்க
அவ்வாறு நீண்ட ஆயுள் இல்லாமல் இப்பொழுதே மரணம் வரக்கடவதாக.

களிப்பும் கவர்வும் இவற்றால் பிறக்குமோ தற்றெளிந்த பின் –
செல்வத்தால் களிப்பும், அது அழிவதால் துன்பமும் வாழ்வதால் மகிழ்வும்,
சாவதால் துன்பமும் உலகத்தாருக்கு இவை இயல்பாக உண்டாகும்.
ஆனால் தன்னைத் தெளிவாக அறிந்தவர்க்கு இத்தகைய செருக்கும் துன்பமும்
ஒரு போதும் உண்டாக மாட்டா என்பது இப்பாடலின் கருத்து.

தற்றெளிந்தபின் –
தன்னைத் தெளிவாக அறிகை.
அதாவது
ஆன்மா இறைவனுக்கு அடிமை என்னும் உண்மை நிலையை அறிகை.

————-

பகவான், தன்னிடம் பக்தி யுடையவராய் இருந்தாலும் (ஆத்ம ஞானம் இல்லாத) தெய்வ சிந்தனை இல்லாமல்
முகம் திரும்பிச் செல்லும் உலக மக்களோடு தொடர்பற்றவர்களுக்கே எளியவனாய் இருப்பதால்
அத்தகைய உலகியல் மக்களோடு தொடர்புடையவர்களுக்கு மிகவும் அரியனாய் இருப்பான்
என்னும் கருத்தை அனைவரும் அறிய இதில் அருளிச் செய்யப்படுகிறது.

ஈனமிலா வன்பர் என்றாலும் எய்திலா
மானிடரை எல்லா வணத்தாலும்-தான் அறிய
விட்டார்க்கு எளியன் விடாதார்க்கு அறவரியன்
மாட்டார் துழாய் அலங்கல் மால் –18-

பதவுரை:

மட்டு ஆர்-தேன் பெருகுகிற
துழாய் அலங்கல் -திருத்துழாய் மாலையுடைய
மால்-திருமால்
ஈனமில்லாத அன்பர்-தன் திருவடிகளில் பழுதற்ற
என்றாலும்-பக்தி யுடையவர்கள் ஆனாலும்
எய்திலா -பகவானுக்கு எதிரிகளான
மானிடரை-கீழ் மக்களை
எல்லா வண்ணத்தாலும்-பேச்சு முதலிய அனைத்து உறவுகளாலும்
தானறிய-வாலறிவனான இறைவனறிய
விட்டார்க்கு-துறந்தார்க்கு
எளியன் அவ்வாறு -அவர்களை விடாதவர்களுக்கு
அறவரியன்-மிகவும் அரியனாய் இருப்பான்

ஈனமிலா அன்பர் என்றாலும் –
ஈனமாவது பொல்லாத் தன்மை
இதை
‘பொல்லா அரக்கனை என்று இராவணன் செயல்களுக்கு அடைமொழி கொடுத்து சொன்னது காண்க.
“முன்பொலா இராவணன்” என்று திருமங்கையாழ்வார் பாசுரமும் கூறுகிறது.
“தீய புந்திக் கஞ்சன்” என்று கம்சனுடைய பொல்லாங்கும் பெரியாழ்வாரால் சொல்லப்பட்டது.

ஆக, இராவணன், கம்சன் போன்றவர்கள் செய்யும் செயல்கள் பொல்லாங்கு என்ற சொல்லால் உணர்த்தப்பட்டது.
இத்தகைய பொல்லாங்கு இல்லாதவர்கள் என்பதாம்.
தன் திருவடிகளில் பழுதற்ற பக்தியுடையவர்கள் என்று தேறி நின்றது.
கீதையில் “மனதில் வேறு எதையும் கருதாமல் என்னையே கருதும் பக்தனுக்கு நான் அடையத் தகுந்தவன்” என்று
கூறியவாறு. அத்தகைய பக்தியுடையவர்களை ‘ஈனமிலா அன்பர்’ என்று கூறியவாறு.

எய்திலா மானிடரை –
பகவானிடம் சிறிதளவு கூட நெருங்காத மனிதர்களை மனிதப் பிறப்பு இறைவழிபாட்டிற்கென்றே படைக்கப்பட்டதொன்று.
அவ்வழிபாட்டைச் செய்யாதவர்கள் “விலங்கொடு மக்களனையர்” என்ற பொய்யாமொழிக்கு இணங்க விலங்காவார்.

இக்கருத்தை
“ஆன் விடையேழன்றடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடவரல்லர் என்று என் மனத்து வைத்தேனே” என்று திருமங்கையாழ்வாரும்,

செங்கண்மால் நாமம் மறந்தாரை மானிடமாவையேன்” என்று பூதத்தாழ்வாரும்

இறைவனை மறந்தவர்கள் மனிதரல்லர் என்று கூறியதைக் காணலாம்.

“பேரறிவாளர்களான ஆழ்வார்கள் இகழும் வண்ணம் பகவானை மதியாது திரிகின்ற
பெரும் பாவிகளான அற்ப மனிதர்களை” என்று இத்தொடருக்குப் பொருள்.

இதனை நம்மாழ்வார் ‘யாதானும் பற்றி நீங்கும் விரதமுடையார்’ என்று அறிவிலிகளான மானிடரைக் கூறுவார்.

இங்கு “எய்திலா” என்றில்லாமல்
“எய்திலராம்” என்று பாடம் கொண்டால்
பகவானுக்கு எதிரிகளான மானிடரை என்று பொருள் கிடைக்கிறது.
இதைத் திருவள்ளுவர் “ஏதிலார் குற்றம் போல” என்ற குறளில்
‘பகைவர்’ என்ற பொருளில் ஏதிலார் என்ற சொல்லைக் கூறியது காணலாம்.

எல்லா வண்ணத்தாலும் –
அதாவது உடனுறைதல், பொருள்கள் கொடுத்துக் கொள்ளுதல், (பேச்சு) அளவளாவுதல் மற்றும்
உலகியல் பழக்கங்கள் எல்லாவற்றாலும் என்று பொருள்.

தானறிய விட்டார்க்கு –
தாங்களும் பிறரும் அறிந்த அவ்வளவோடு நில்லாமல்
இதயத்திற்குள்ளிருக்கும் இறைவன் அறியும்படி விடவேண்டும்.
அவ்வாறு விட்டவர்களுக்கு இறைவன் எளியவனாயிருப்பான்
‘உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறியும் அவனல்லவா’
இத்தகைய அவன் அறியும்படிக்கு மூடர்களின் தொடர்பை அறவே விடவேண்டும் என்பது கருத்து.

தானறிந்த வைணவத்துவமும், வைணவத்துவமல்ல.
நாடறிந்த வைணவத்துவமும் வைணவத்துவமல்ல.
நாராயணனறிந்த வைணவத்துவமே வைணவத்துவம் என்று
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் என்ற எடுத்துக்காட்டு உரையில் கூறப்பட்டுள்ளது.

விடாதார்க்கு அறவரியன் –
அவ்வாறு விடாதவர்களுக்கு அருகில் நெருங்கவும் முடியாதவாறு மிகவும் எட்டாக்
கையனாய் இருப்பான். இதை நம்மாழ்வார் ‘அடியார்க்கு எளியவன். பிறர்களுக்கு அரிய வித்தகன்’ என்று கூறினார்.
இதனால் பக்தர்கள் உலகியல் மக்களோடு உறவாடலாகாது என்பது கருத்து.

மட்டார் துழாயலங்கல் மால் –
பகவானின் திருத்தோள்களிலும் திருமுடியிலும் திருத்துழாய் மாலை அணிந்துள்ள திருமால் என்பது.
பகவானுடைய திருமேனியில் உராய்தலால் மிக அழகு பெற்றுத் தேன் பெருகுகிறது திருத்துழாய்.
இத்தகைய தேன் பெருகும் அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள திருமால் என்று பொருள்.
திருத்துழாய் மாலை திருமாலின் மேன்மையைக் குறிப்பதற்கு அடையாளமாகும்.

“மட்டார் துழாயலங்கல் மால்,
ஈனமிலா அன்பர் என்றாலும்
எய்திலா மானிடரை
எல்லா வண்ணத்தாலும்
தானரிய விட்டார்க்கு எளியன்
விடாதார்க்கு அறவரியன்” என்று கொண்டு கூட்டுக.

———–

புதல்வர், மனைவி, உறவினர், வீடு, நிலம் இவை முதலியன எல்லாம் நெருப்புக்கு ஒப்பாய்ச்
சுடுதல் நிலை அடைந்தவர்களுக்குப் பரமபதமான வீடு பேறு எளிதாகும் என்று கூறப்படுகிறது.

நல்ல புதல்வர் மனையாள் நவையில் கிளை
இல்லம் நிலம் மாடு இவை அனைத்தும் -அல்லல் எனத்
தோற்றி எரி தீயில் சுடுமேல் அவர்க்கு எளிதாம்
ஏற்றரும் வைகுந்தத்து இருப்பு -19-

பதவுரை:-

நல்ல புதல்வர்-நற்குணங்கள் நிரம்பிய பிள்ளைகள்
மனையாள்-நற்குண நற் செய்கையுடைய வாழ்க்கைத் துணைவி
நவையில் கிளை -குற்றமில்லாத உறவினர்கள்
இல்லம் -குடியிருப்புக்கு ஏற்ற வீடு
நிலம்-பொன் விளையும் பூமி
மாடு-வள்ளல் பெரும்பசுக்கள் (குடம் குடமாகப் பால் கறக்கும் பசுக்கள்)
இவை யனைத்தும்-இவை யெல்லாம்
அல்லலென-துன்பம் தருவன என்று
தோன்றி -மனதுக்குத் தோன்றி
எரிதீயில்-கொழுந்து விட்டு எரிகின்ற தீபோல
சுடுமேல் -எரியுமாகில் (எரிக்குமாகில்)
அவர்க்கு-அத்தகைய நிலை பிறந்தவர்களுக்கு
ஏற்றரும் -தன் முயற்சியால் பெறுதற்கரிய
வைகுந்தத்து-அழிவில்லாத வீட்டு உலகத்தில் போய்
இருப்பு-அடியார் குழாங்களுடன் கூடியிருக்கும் இருப்பு
எளிதாம் -மிக எளிதாகும்

நல்ல புதல்வர் –
பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய மக்கள் அதாவது குணக்கேடராய்
துன்பம் தருபவராய் இல்லாமல் தங்கள் பிரிவு பொறுக்க மாட்டாத
நற்குணங்கள் நிரம்பிய பிள்ளைகள் என்று பொருள்.

மனையாள் – நல்ல என்று மேற்கூறிய அடைமொழியை இங்கு கூட்டிக் கொள்க
“நல்ல மனையாள்” என்றவாறு நற்குணமுடையவளாய்

“மனைத்தக்க மாண்புடையளாகித் தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (திருக்குறள்) என்றபடியும்,
அறவோர்க்களித்தலும், அந்தணர் ஓம்பலும், துறந்தோர்க்கெதிர்தலும், தொல்லோர் மரபில் விருந்தெதிர் கோடலும் (சிலம்பு)
என்ற வாய்மொழிக்கிணங்க
துறந்தார்ப் பேணலும், விருந்தயர்தலும் வறியார் மாட்டு அருளுடைமையும் முதலிய நற்குணங்களும்,
வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், சமையல் தொழிலில் வண்மையும்,
தான, தர்மங்கள் செய்தலும் முதலிய நற்குண செய்கைகள் பொருந்திய மற்றும் கணவன் கருத்தறிந்து ஒழுகும் மனையாள்.

நவையில் கிளை – நவை – குற்றம், இல் – இல்லாத, கிளை – உறவு

அதாவது, பெயரளவில் உறவினராயும் செயல்பாட்டில் பகைவராயும் இல்லாமல்
அவர்களோடு உடனுறைதல் தகும் என்று ஆசைப்படத்தக்க குற்றமற்ற உறவினர்கள் (இல்லம்).
(கீழ்ச்சொன்ன “நல்ல” என்ற அடைமொழியை இது முதலாக மேல் வருவனவற்றோடும் கூட்டுக.)

நல்ல இல்லமாவது –
கண்ட கண்ட இடமெங்கும் இடிபாடு உடையதாய் குடியிருப்புக்குத் தகுதியற்றதாய் இல்லாமல்
பல நிலைகள் கொண்ட இடங்களும் உப்பரிகைகளும் கூடிய மிக அழகான குடியிருப்பு.

நல்ல நிலமாவது –
உவர் நிறைந்ததாய் ஒரு விதையும் முளைக்காத நிலமாய் இல்லாமல் உரமிடுதலின்றி
பயிர் தானே வளர்ந்து ஒன்றுக்கு நூறாக கட்டுகலம் மிக விளையக்கூடிய நல்ல நிலங்கள்
‘விளைவதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று’ (குறள்) என்று கூறியது போன்ற நிலங்கள்.
விடிந்தபோது நாற்று நட்டு மாலைப்போது வந்து பார்த்தால் கைகவித்துப் பார்க்கும்படி பயிர்களை விளைவிக்கும் நல்ல நிலங்கள்.
ஒரு நாற்று நிலம் முழுதும் பனைத்தெழும் விளைநிலங்கள்
‘செய் கொள் செந்நெல் கரும்பொடோங்கு’
‘புரவி முகம் செய்து செந்நெல்’ என்று கட்டுரைக்கும்படி வளங்கொழிக்கும் நன்செய், புன்செய் நிலங்கள்.

நல்ல மாடாவது –
கொடுவையாய் (கொடூரமாய்) அதாவது கட்டவும் பிடிக்கவும் முடியாமல் கொண்டியிலே மேய்ந்து திரிவதல்லாமல்
சிறு குழந்தைகளுக்கும் கூடி அடிக்கவும், கட்டவும், பிடிக்கும் வண்ணம் தன்னைக் காட்டிக் கொண்டு நிற்கும் பசுக்கள்,
குடம் குடமாய்ப் பால் சுரக்கும் பசுக்கள்.

இவை யனைத்தும் –
இவ்வாறு ஒரொன்றே மிகவும் வசீகரிக்கத் தகுந்ததாய் உலகோர்க்கு இன்பம் தருவன
எல்லாம் கீழே சொன்னவையெல்லாம்.

அல்லலெனத் தோன்றி –
துன்பம் தருபவையே என்று மனதுக்குத் தோன்றி, இங்கு ‘அல்லல்’ என்ற சொல்லுக்குத் துன்பம் என்ற
பொருளாகிலும் துன்பம் தருபவை என்று பொருள் கொள்ளவேணும்.

எரிதீயிர் சுடுமேல் –
கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்புப் போலே எரிச்சலை உண்டு பண்ணுமாகில்

அவர்க்கெளிதாம் ஏற்றரும் வைகுந்தத் திருப்பு –
அந்நிலை பிறந்தவர்க்கு அதாவது பக்குவப் பட்டவர்களுக்கு (சமைந்தவர்களுக்கு) தன் முயற்சியால் அடைய முடியாததான
அதாவது
{இறைவன் அருளிலே பெறக் கூடியதான} அந்தமில் பேரின்பத்து அழிவில் வீடான பரமபதத்திலே போய்
அங்கு அடியார்கள் குழாங்களுடன் கூடியிருக்கும் பேறு எளியதாகும்.
அதாவது
கீழ்ச் சொன்ன பக்குவம் பிறந்தவர்களுக்கு இறைவன் தானே வீடு பேறு அளிப்பான் என்பது கருத்து.

——————

தன்னிடம் பக்தியுடைய தொண்டர்கள் தங்களுக்குத் தீமை என்று அறியாமல்,
ஆசையால் அற்பப் பொருள்களில் சிலவற்றை விரும்பி, இதைத்தர
வேணும் என்று வேண்டினாலும் நன்மையே செய்பவனான இறைவன்
அதைக் கொடாமல் மறுத்து விடுவான்’ என்னும் கருத்தை உதாரணத்துடன் கூறுகிறார் இப் பாடலில்.

விருப்புறினும் தொண்டர்க்கு வேண்டும் இதம் அல்லால்
திருப் பொலிந்த மார்பன் அருள் செய்யான் நெருப்பை
விடாதே குழவி விழ வருந்தினாலும்
தடாதே ஒழியுமோ தாய் –20-

பதவுரை:

விருப்புறினும் -அற்பப் பொருள்களை விரும்பினாலும்
தொண்டர்க்கு –தன்பக்கல் பக்தி உடையவர்களுக்கு
வேண்டும் இதம் அல்லால் அவர்கள் க்ஷேமத்திற்குத் தேவையான தன்மையொழிய
திருப்பொலிந்த மார்பன் -திரு ஆன பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கையாலே பிரகாசமான அழகிய மார்பை உடையவன்
அருள் செய்யான் -அவர்கள் விரும்பிய அற்பப் பொருள்களைக் கொடுக்கமாட்டான் (உதாரணம் மேல்வருமாறு)
குழவி -பின் விளைவு அறியாத சிறு குழந்தை
நெருப்பை -தீச்சுடரை
விடாதே -அதன் ஒளியைக் கண்டுபிடித்தால் விடமாட்டாமல்
தாய்–குழந்தையின் அம்முயற்சி அதற்குத் தீமைதரும் என்றறிந்த பெற்ற தாயானவள்
தடாதே ஒழியுமோ-அந்நெருப்பில் விழாதபடி தடுக்காமல் இருப்பாளா? (தடுத்தேவிடுவாள்)

விருப்புறினும் –
அற்பப் பொருள்களில் ஆசை பண்ணினாலும்
அதாவது,
இதைக் கொடுக்கவில்லையானால் இவர்கள் மிகவும் கஷ்டப்படுவோம் என்று
மிகவும் நைந்து வேண்டினாலும் என்று பொருள்.
தங்கள் விஷயத்தில் இறைவன் மனம் உருகி கேட்டதைத் தரும்படி
அவ்வளவுக்கு குழைந்து வேண்டிக் கொண்டாலும் என்றவாறாம்.

தொண்டர்க்கு –
தன்னுடைய பக்தர்களுக்கு
இங்கு ‘தொண்டு’ என்னும் சொல் அடிமைக்கும் அவாவுக்கும் பொதுவாய் இருந்து
‘அவா’ என்னும் பொருளில் வழங்கி ‘அவாவுடையார் – பக்தர்கள்’ என்று பொருள் கொள்ளப்பட்டது.
அவா – பக்தி
அதுவுடையார் பக்தர்.
ஆகவே, தொண்டர் பக்தர் என்றறிக.

வேண்டும் இதம் அல்லால் –
அதாவது
அவர்களுக்குத் தேவையான நன்மையொழிய “ஹிதம்” என்ற வடசொல் “இதம்” என்று வந்தது.
இதற்கு “நன்மை” என்று பொருள்.
அவர்களுடைய க்ஷேமத்திற்குத் தேவையான நன்மை அது அல்லாமல்
அதாவது,
நன்மை தவிர என்று பொருள்.

திருப்பொலிந்த மார்பன் –
பெரிய பிராட்டியார் எழுந்தருளி இருக்கையாலே ஒளிமயமான திருமார்பை உடையவன்.
திருப்பொலிந்த மார்பன் என்றவாறு.
திருவால் வந்த பொலிவை உடைத்தான மார்பு என்று பொருள்.
திருமார்பு முழுவதும் (திருவின்) பிராட்டி நிறைந்திருக்கும் மார்பு.

“கருமாணிக்கக் குன்றத்துத் தாமரை போல் திருமார்பு, கால், கண், கை, செவ்வாய் உந்தியானே” என்றும்
‘உருமாணிக்க மலை மேல் மணித்தடந்தாமரைக் காடுகள் போல்,
திருமார்பு வாய் கண் கையுந்தி காலுடையாடைகள் செய்யபிரான் என்றும் வரும் பாடல்களில்
உறுப்புக்களின் அழகைச் சொல்வதால் ஏனைய உறுப்புக்கள் போல் திருமார்பும் சிவந்திருக்கும் என்று
திருமார்பை முதற்கண் சொல்லியிருக்கிறது.
‘அலர்மேல் மங்கை உறையும்’ மார்பாதலால்
அவளது ஒளி அவன் மார்பு எங்கும் நிறைந்து ஒளிமயமாகத் திகழ்கிறது என்று பொருள்.

“மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள், திருமார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடராழி சுரி சங்க மேந்தும்
கையா! உன்னைக் காணக் கருதும் என் கண்ணே”–(திருவாய்மொழி – 9-4-1) என்ற இப்பாடலிலும்
“திருவால் பொலியும் மார்பு” என்று பொருள் கூறப்பட்டது.

ஆக “திருவால் பொலிந்த மார்பன்” என்று அவன் மார்பழகு உரைக்கப்பட்டது.
இதனால் பிராட்டியோடு கூடியிருக்கும் சேர்த்தி கூறப்பட்டது.
இதனால் அருள் செய்யும் சூழ் நிலையிலும் என்று குறிப்பு.

அருள் செய்யான் –
அதாவது
அவர்கள் ஆசைப்பட்டு வேண்டினாலும் நன்மையே செய்பவனாதலால்
மறுத்து விடுவானன்றி கேட்டதைக் கொடுக்க மாட்டார் என்று பொருள்.

அருளுதல் –
கொடுத்தல்,
தன் தொண்டர்கள் ‘இன்னது வேணும்’ என்று அவனிடம் வேண்டிநின்றாலும்
அவன் அது கொடாமல் மறுத்தற்குத் தக்க உதாரணம் காட்டி விளக்கப் படுகிறது.

நெருப்பை விடாதே குழவி விழவருந்தினாலும் தடாதே யொழியுமோ தாய் –
மேல் விளைவறியாத சிறு குழந்தை நெருப்பு சுடும் என்றறியாமல் அதனுடைய ஒளியை மட்டும் கண்டு
அதை விடாமல் அதிலே விழுகைக்கு முயல்கின்ற பொழுது அதைப் பார்க்கும் தாய்
தன் குழந்தைக்கு அச்செயல் அழிவை விளைவிக்கும் என்று கருதி அதில் விழாதபடி தடுக்காமல் இருப்பாளோ?
தடுத்தே விடுவாள் அல்லவா!
அதுபோல, பக்தர்கள் தங்களுக்குத் தீமைதரும் என்பதை அறியாமல்
இறைவனிடம் சிலவற்றை வேண்டினாலும் அவர்களுக்கு அவை தீமையை விளைவிக்கும் என்பதை
அறிவானாதலால் அவற்றைக் கொடுக்கமாட்டான். மறுத்தே விடுவான் என்பது இதன் பொருள்.

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ ஞான சாரம்–தனியன்கள்-/பாசுரங்கள் 1-10—ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் விரிவுரை — –

August 29, 2021

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே!
ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்!!

கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் (அவதரித்தவரும்) தோன்றியவரும்,
துறவிகளுக்குத் தலைவரான ஸ்ரீராமாநுஜரைத் தஞ்சம் புகுந்தவரும்,
தமது ஞானஸார, ப்ரமேயஸார நூல்களில் ஆசார்ய பெருமை பேசியவருமான
அருளாள மாமுனியைப் பற்றுகின்றேன்.

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் !
சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே !!

ராமாநுஜாச்சார்யருக்கு நல்ல சீடரும் வேதம் முதலிய அனைத்து சாஸ்த்ரங்களில் வல்லுநரும்,
நான்காவது நிலையான துறவறத்தை மேற்கொண்டவருமான அருளாள மாமுனியை வணங்குகிறேன்.

(ராமாநுஜார்ய ஸச் சிஷ்யம்)
யக்ஞ மூர்த்தி என்னும் பூர்வாசார பெயருடன் முன்னைய நிலையில்
எம்பெருமானாரோடு பதினெட்டு நாட்கள் நடத்திய வேதாந்த விசாரத்தில் தர்க்கம் செய்து
எம்பெருமானாரைச் சோர்வுறச் செய்கையில்,
பேரருளாளரான அத்திகிரி வரதராஜப் பெருமாள் கனவில் தோன்றி,
“எம்பெருமானாரே! நீர் சோர்வுற வேண்டா, உமக்குத் திறமையுடைய ஒரு நற்சீடனை உண்டாக்கிக் கொடுத்தோம்.
அவனை வெல்வீராக” என்று உரைத்த குருபரம்பரைத் தொடர்களை இங்கு நினைவு கூர்க.

(வேத சாஸ்திரார்த்த ஸம்பதம்) –
உடையவரோடு பதினெட்டு நாட்கள் தர்க்கம் பண்ணின திறமையாலும் ஞானஸார ப்ரமேயஸார நூல்களில்
வேதம் முதலிய சாஸ்திரங்களிலிருந்து சாரமான கருத்துக்களை அழகிய வெண் பாக்களினால்
எடுத்துரைத்தமையாலும், இவரது சாஸ்திர புலமை நன்கு விளங்கும்.

(தேவராஜ முனிம்) –
தேவராஜனான பேரருளாளனுடைய திருவருளால் எம்பெருமானாருக்கு சீடரான பெருமையும்,
ஞான, பக்தி, வைராக்யங்களில் ராமாநுஜ முனிக்கு நிகராக விளங்கிய சிறப்பும் பற்றி
“அருளாள முனி” என்று திருநாமம் பெற்றமையும் உணரப்படுகிறது.

————-

சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன
பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கொளிசேர்
அருளாள மாமுனியம் பொற்கழல்கள் அடைந்த பின்னே.

நான்கு வேதங்களிலிருந்து உட்பொதிந்த ஆழ் பொருள்களையும், திருமந்திரத்தின் மெய்ப்பொருள்களையும்
ஞானஸார ப்ரமேயஸாரம் என்னும் நூல்களைக் கொண்டு அறிவைப் புகட்டியவரும்,
ஞானச் சுடர் விளக்காய் விளங்குபவரும், அருளாள மாமுனி என்னும் திருநாமம் உடையவருமான ஆசார்யருடைய,
அழகியதும், அனைவருக்கும் அடையத் தகுந்ததுமான அவரது திருவடிகளை அடைந்த பிறகு,
ஊழ் வினைகள் அழிவதற்கான வழியை அறிந்து கொண்டேன்.
ஊழ் வினையால் அறிவில் மயக்கம் ஏற்படுகிறது. அவ்வறிவு மயக்கத்தால் பெண்வழிச் சேரலில் துவழ்ச்சி ஏற்படுகிறது.
அத் துவழ்ச்சிக் காரணமாக அவர்களது சுருண்ட கருங்கூந்தலிலும் வேல் போன்ற பார்வையிலும் மனம் நெகிழ்கிறது.
அருளாள மாமுனிகளின் திருவடிகளை அடைந்த பிறகு காமம் முதலிய
இக் குற்றங்களிலிருந்து நீங்குவதற்கு வழி அறிந்து கொண்டேன் என்பது கருத்து.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாராகிற ஆசார்யருடைய திருவடிகளைப் பற்றின பிறகு
அவர் அருளிச் செய்த ஞான ஸார ப்ரமேய ஸார ப்ரபந்தங்களால் அறிவுக்குத் தெளிவு பிறந்தது.
அதனால் பெண்களின் அழகிய கூந்தலிலும் வேல் போன்ற விழியிலும்
மனம் நெகிழும் தீய வினைகளை அழிக்கும் வழிகளை அறியப் பெற்றேன் என்று கருத்து.

பெண்ணாசையைச் சொன்ன இதில் மற்றும் உண்டான கோபம், உலோபம், மோகம், மதம், பொறாமை
முதலிய குற்றங்களும் அடங்கும்.
“காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்” என்ற திருக்குறளின் சொல்படி
மனிதப் பண்பாட்டை அழிக்கும் குற்றங்கள் ஆசார்ய கடாக்ஷத்தால் தீரும் என்பது பாடலின் அருங்கிய கருத்து.
இதனால் இவ்வாசிரியருடைய பெருமை கூறப்பட்டது.

————

முதல் பாட்டின் முகவுரை

ஆன்மாவுக்குப் பேரின்பம் கொடுப்பது வீடுபேறு ஆகும்.
அதை அடைவதற்கு (1) திருமந்திரம் (2) த்வயம் (3) சரம ச்லோகம் என்று மூன்று மந்திரங்களின்
உண்மைப் பொருளை குருவின் மூலம் தெரிந்து கொள்ள வேணும்.
இம்மூன்று மந்திரங்களுக்கும் “இரகசியம்” என்று பெயர்.
இதைத் தெரிந்து கொள்ள வேணும் என்ற அவாவுடையோர்க்கு அன்றி ஏனையோர்க்குச் சொல்லலாகாது என்று மரபு உண்டு.
இவ்வாறு மறைத்து வைப்பதால் இதற்கு இரகசியம் என்று பெயர் இடப்பட்டது.
இம்மூன்று மந்திரங்களும் அனைத்து வேதாந்தக் கருத்துக்களின் முடிவாய்த் திகழ்வன.
மேலும் இம்மூன்றும் பரம்பொருளின் உண்மை, பரம்பொருளை அடைவதற்கு வழி, பரம்பொருளை அனுபவித்து நுகரும் பேரின்பம்
ஆகிய இவற்றின் உண்மைகளை உள்ளது உள்ளபடி சொல்லக்கூடியன.
இம்மூன்று மந்திரங்களும் பிறவிப் பெருங்கடலில் உழலும் ஆன்மாக்கள் கரைசேர்வதற்காக
(துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக) பகவானால் சொல்லப்பட்டவை ஆகும்.

“திருமந்திரம்” பதரிகாச்ரமத்தில் பகவான் தானே நாராயணனான ஆசார்யனாயும் நரனாகிற சீடனுமாயுமிருந்து வெளிப்படுத்தியது.
“துவய மந்திரம்” ஸ்ரீவைகுண்டத்தில் பெரிய பிராட்டியாருக்கு பகவானால் உபதேசிக்கப்பட்டது.
“சரம சுலோகம்” மஹாபாரத யுத்தத்தில் அர்ஜுனனுடைய தேர்த்தட்டிலிருந்து கொண்டு அவனைக் குறித்து சொன்ன
பகவத் கீதையின் இறுதியில் கண்ணபிரானால் சொல்லப்பட்டது.
இம்மூன்று மந்திரங்களும் குருபரம்பரை வழிவழியாக உபதேசத்தாலே சொல்லப்பட்டு வருவன.
செம்பொருள் கண்டவர்களில் முன்னோடிகளும் நம்முடைய முன்னோர்களுமான ஆசார்யர்களுக்கு இவையே மேலான
செல்வமாய் விளங்குவன மற்றும் அவர்களுக்கு நாடோறும் மனனம் செய்வதற்கு உரியனவாயும் இருப்பன.

இத்தகைய பெருமையுடையனவாய் விளங்குவன இம்மூன்று மந்திரங்களும்.
இவற்றுள் முதல் மந்திரமாய் விளங்குவது திருமந்திரம். இதற்கு “முதல் ரகசியம்” என்று பெயர்.
இது மூன்று பதங்களைக் கொண்டது. அவை “ஒம்” என்றும் “நம:” என்றும் “நாராயணாய” என்றும் சொல்லப்படும்.
இந்த மூன்று பதங்களில் முதல் பதமான “ஒம்” என்ற ப்ரணவத்தின் கருத்தை நடுப்பதமான “நம:” என்ற பதமும்
“நாராயணாய” என்ற பதமும் தெளிவு படுத்துவனவாகும்.
அதாவது “ஒம்” என்பது சுருக்கமாகப் பொருளைச் சொல்வது
“நம:” என்பதும் “நாராயணாய” என்பதும் அதனை விளக்கமாகச் சொல்வனவாகும்.

இங்ஙனம் திருமந்திரத்திலுள்ள நடுப்பதமான “நம:” பதத்தின் கருத்தையும் “நாராயணாய” என்ற கடைசி பதத்தின் கருத்தையும்
த்வய மந்திரத்தில் முறையே முதற்பகுதியும், பிற்பகுதியும் விளக்குவனவாகும்.
முதற்பகுதி, பிற்பகுதி என்ற இத்தகைய இரண்டு பகுதிகளைக் கொண்ட த்வய மந்திரம் மந்திரங்களுக்குள் சிறந்ததான
“மந்திர ரத்தினம்” என்று போற்றப்படும். அதன் முதற்பகுதியில் பகவானை அடைக்கலம் புகும் முறைகள் சொல்லப்படுகின்றன.
அதாவது பகவானுடைய திருவடிகளில் அடைக்கலம் புகும் போது எல்லா பற்றுதல்களையும்
தடம் தெரியாமல் விட்டே பற்றவேண்டும் என்றும், அவ்வாறு பகவானுடைய திருவடிகளைப் பற்றுதலையும்
ஒரு பற்றுக் கோடாகக் கருதாமல் அவன் பாதமே தஞ்சமென்ற உறுதிப்பாட்டில் இருக்கவேண்டும் என்றும் குறிக்கிறது.
பிற்பகுதியில் மேற்கூறியவாறு உறுதி பூண்டுள்ள அடியவர்க்குப் பயன் பிராட்டியும் பெருமாளும் கூடின
இருவருமான சேர்த்தியில் தொண்டு செய்வதேயாகும் என்பதாம்.

இது இராமாயணத்தில் சீதையும் இராமனுமான இருவருடைய சேர்த்தியில் இளைய பெருமாள்
தொண்டு செய்து வாழ்ந்தது போன்றதாகும்.
இத்தகைய (பேறு) ஊழ்வினையினால் வரும் அனைத்துத் தடைகளும் (பாபங்களும்) தடம் தெரியாமல் நீங்கிய பிறகே கை கூடுவதாகும்.
இவ்வாறான த்வய மந்திரத்தின் முதற்பகுதியும், பிற்பகுதியும் ஆகிய இரண்டு பகுதிகளின் கருத்துக்களையும்
“சரம சுலோகம்” எனப்படும் மூன்றாவதான மந்திரம் விளக்கமாக எடுத்துரைக்கிறது.
ஆகவே மூன்றாவதான சரம சுலோக மந்திரம் த்வய மந்திரத்திற்குச் சார்புடையதாய் நிற்கிறது.
ஆக இம்மூன்று மந்திரங்களிலும் த்வய மந்திரமே முக்கியமாக நம்முடைய முன்னோர்களான ஆசார்யர்களால் எண்ணப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க த்வய மந்திரத்தின் முதற்பகுதியால் சொல்லப்படுவது என்ன?
பகவானுடைய திருவடிகளில் அடைக்கலம் புகுவது. அது இரண்டு வகையாகும்.
“இப்பொழுதே வீடு பேறு அடைய வேண்டும்” என்னும் வேகத்தில் அடைக்கலம் புகுவது ஒன்று.
மற்றொன்று “உன் திருவடிகளில் அடைக்கலம் புகுகின்றேன். நீ எப்பொழுது வீடு பேறு அளிக்கிறாயோ
அப்பொழுது கொடுப்பாயாக” என்று அடைக்கலம் புகுவது.
இவ்விரண்டினுள் மிக விரைவில் வீடு பேறு அடைய வேண்டும் என்ற நோக்குடன் செய்யும் அடைக்கலமே சிறப்புற்றதாகவும்
மற்றது சிறப்பற்றதாகவும் கருதப்படும்.

இங்குக் கூறிய மிக விரைவுடன் செய்யும் அடைக்கலத்தின் இலக்கணங்கள்
ஞானசாரமாகிற இந்நூலில் முதல் பாடலான “ஊன உடற் சிறை” என்னும் பாடலில் சொல்லப்படுகின்றன.

“ஊன உடல் சிறை நீத்து ஒண் கமலை கேள்வனடித்
தேன் நுகரும் ஆசைமிகு சிந்தையராய்த் – தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்றற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு”

பதவுரை :-

ஊன – மாமிச மயமான
உடல் – சரீரமாகிற
சிறை – சிறைச் சாலையை
நீத்து – துறந்து (விட்டு நீங்கி)
ஒண் கமலை கேள்வன் – அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாகவுடைய லக்ஷ்மீ தேவியின் மணாளனான பகவானுடைய
அடித் தேன– திருவடிகளின் இனிமையை
நுகரும் – துய்க்கும் (அனுபவிக்கும்)
ஆசை மிகு சிந்தையராய் – ஆசை மிகுந்த மனதை உடையவராய்
பழுத்தால் – பழுத்துக் கனிந்தால்
தானே விழும் – தானே விழுகின்ற
கனி போல் – பழம் போல்
பற்றற்று – ஒட்டுதல் அற்று
வீழும் – சரணாகதி செய்யும்
விழுக்காடு தானே– அச்சரணாகதியே
வீடு அருளும்– வீடு பேற்றைக் கொடுக்கும்

உடல், மாமிசமயமானது. அது சதை, நரம்பு, எலும்பு, மஜ்ஜை, விஷ்டை, மூத்திரம் முதலிய
உட் குற்றங்கள் பலவும் நிரம்பியதொன்று. இதை “புண்ணாராக்கை” என்று கூறுவர்.
ஈயின் சிறகளவு தோல் உரித்தாலும் ஈ, எறும்பு, காகம் முதலிய ஜந்துக்கள் மொய்த்துக் கொள்ளும்.
(நாலடியார் துறவறவியல் – தூய்தன்மை – முதல் பாடல்).
உடல் உட்புறத்தை வெளிப்புறமாக்கினால் காக்கையை விரட்டுவதே காலமெல்லாம் பணியாக யிருக்கும்.

இவ்வாறு மிகவும் அருவருக்கத் தக்கதாயுள்ள இச்சரீரத்தின் குற்றங்களை உணர்பவர்களுக்கு
“நான்” என்று சொல்லப்படும் ஆன்மாவாகிற தான் இதனுள் இருக்கும் இருப்பு
(அதாவது உண்டு, உடுத்து வாழ்ந்து வருவது) சிறையில் அடைபட்டவன் போன்று கருதப்படுவதாகும்.

சட்டிக்குள் வைக்கப்பட்ட மாணிக்கத்தின் ஒளி உள்ளேயே அடங்கியிருப்பது போல
உடலுக்குள் அகப்பட்ட ஆத்மாவின் ஞான குணங்கள் அதற்குள்ளேயே சுருங்கிக் கிடக்கின்றன.
அதாவது ஆன்மா, உடலில் மறைந்து இருக்கிறது.
இதுவே ஆன்மாவுக்கு இறைவன் கொடுத்த சிறை தண்டனை என்று உணரலாம்.
இதனை சிறையாக உணராமல் இன்பமாக உணர்வது மூடர் செயலாகும்.
ஆகவே உடலின் உண்மைத் தன்மையை உணரும் அறிவுடையார் (ஞானிகள்) உலக வாழ்வை அருவருத்து
அதிலிருந்து விடுபடுவதற்கு முயலுவர்.
அவ்வாறு உடற்சிறையிலிருந்து விடுபடுவதற்கு முயலும் அறிவுடையார் (ஞானிகள்)
இறைவனிடம் சரணாகதி செய்வது தவிர வேறு வழியைக் காணமாட்டார்கள்.
இச்சிறையிலிருந்து ஆன்மாவை விடுவிப்பதும் இறைவனே என்ற உண்மையை கீதையில் பகவான் அருளிச் செய்துள்ளான்.
ஆன்மாவுக்குச் சரீரம் எற்பட்டது ஆன்மா செய்த வினைப்பயனால் ஆகும்.
அவ்வினையைச் சரணாகதி நெறியினாலன்றி வேறொன்றினால் கடக்க முடியாது.
“என் காலைக்கட்டி சரணாகதி பண்ணினால் நான் அச்சிறையிலிருந்து (ஆன்மாவை) விடுவிக்கிறேன்” என்று பகவான் கூறியுள்ளான்.

ஒரு குருவி பிணைத்த கூட்டை நம்மால் பிரிக்க முடிவதில்லை.
வினைப்பயனால் சர்வ சக்தியுடைய இறைவன் பிணைத்து வைத்த இவ்வுடலாகிற கூட்டை
நம்மால் பிரிக்க முடியுமா? என்று கூறியுள்ளார்.
சிறையில் அடைபட்ட செல்வந்தனுக்கு வெளியில் வந்து சுக போகங்களை அனுபவிப்பதைக் காட்டிலும்
சிறையிலிருந்து விடுபடுவதே முக்கியமாகும்.
அதுபோல ஆன்மா, சரீரச் சிறையிலிருந்து விடுபடுவதே அவசியமானது. சிறை என்பது மிகவும் இழிந்ததல்லவா?
ஆகவே உடல் சிறையிலிருந்து தப்புவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும்.

அவ்வாறு சரணாகதி செய்யும் போது த்வய மந்திரத்தில் சொல்லியபடி பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு
பகவான் திருவடிகளில் சரணாகதி பண்ணவேண்டும்.
அவன் திருவடிகளில் சரணாகதி பண்ணுவது தேனைச் சுவைப்பது போன்று மிக இனிமையாக இருக்கும்.
அவ்வினிமையை அனுபவித்தவர்களின் மனம், மிக்க விருப்புடன் அதிலேயே தோய்ந்திருக்கும்.
குழந்தை தாய்ப்பாலை சுவைப்பதற்கு எப்படி ஆர்வமுடன் இருக்குமோ,
அது போல சரணாகதி செய்பவன் இறைவன் திருவடித் தேனை நுகருவதில் ஆர்வமோடு இருப்பான்.
அவ்வார்வத்தினால் அவன் திருவடியைப் பற்றும் போது தான் முன்பு பற்றிக் கொண்டிருந்த உலகப் பற்றுக்களை அறவே விட்டு விடுவான்.
அப்பற்றுதல்களும் தாமே இவனை விட்டு விலகி விடும் என்பது இப்பாடலின் கருத்து.
இது எது போன்றது என்றால் மரத்தில் கனிந்த பழம் காம்பை விட்டுத் தானே கீழே விழுவது போன்றாய்
எல்லாப் பற்றுதல்களும் தானே விட்டுப் போகும்படி பகவான் திருவடிகளில் வீழ்வது சரணாகதியாகும்.
இச்சரணாகதி மிகவும் விரைவுடன் செய்யப்பட்டால் உடனே பகவானுக்கு இரக்கம் எற்பட்டு அவனுக்கு வீடுபேறு அளிப்பான்.
அவசரமில்லாமல் சரணாகதி செய்தாலும், இச்சரீரம் கழிந்தவுடன் வீடு பேறு அளிப்பான்.

ஆகவே, சரீர வாழ்வை சிறை என்று உணர்ந்து அதிலிருந்து தப்ப விரும்புபவன் பகவான் திருவடியை அனுபவிக்கும்
ஆசையுடையவனாய் பிராட்டி பரிந்துரையுடன் வெளிவுலகப் பற்றுக்களை அறவே விட்டு இறைவன் திருவடிகளில்
சரணாகதி பண்ணினால் அச்சரணாகதிக்கு இரங்கி இறைவன் உடனே வீடளிப்பான்.
ஆகவே, பரபரப்புடன் பண்ணும் சரணாகதி உடனே மோட்சம் தரும் என்பது இப்பாட்டின் கருத்து.

வீடு பேறு என்பது பிறவிக்கடலை கடந்து பகவானாகிற கரையை அடைதலாகும்.
“அக்கரையென்னும் அணர்த்தக் கடலுள் அழுந்தி இக்கரையேறி இளைத்திருந்தேன்”
(பெரியாழ்வார் திருமொழி – 5ம் பத்து – 3ம் திருமொழி – 7ம் பாசுரம்) என்றார் பெரியாழ்வார்.

இவ்விடத்தில் ஒரு வேதாந்த விசாரம் செய்யப்படுகிறது.
சரணாகதியே மோட்சம் தரும் என்ற கருத்தைச் சொன்னால் பகவானே மோட்சம் தருபவன் என்ற சித்தாந்தத்தோடு முரண்படாதா?
மேலும், சரணாகதி என்ற ஞானமில்லாத செயலுக்கு, மோட்சம் தரும் ஆற்றலுண்டு என்று சொல்வதும் உண்மைக்கு மாறாகாதா?
என்ற வினாக்கள் எழுகின்றன. இதன் பதில் வருமாறு:-

பக்தன் செய்யும் சரணாகதியோ, பக்தியோ தவமோ நோன்புகளோ எதுவாகயிருந்தாலும்
அவை அவனை மோட்சத்திற்குத் தகுதியுடையவனாக மட்டும் ஆக்கும் அவையே தவிர, மோட்சத்தைத் தரமாட்டா.
இத்தகைய சரணாகதிக்கு இரங்கி பகவான் தான் மோட்சம் தருவான் என்பது உண்மை.
இதை, சாஸ்திரம் “அதிகாரி விசேஷணம்” என்று கூறும்.

இதற்கு உதாரணம் – மேடான இடத்தை ஆழப்படுத்தி ஏரி கட்டுகிறார்கள்.
மழை பெய்யும் போது ஏரியில் தண்ணீர் நிரம்புகிறது. ஏரி கட்டுவது மழை பெய்வதற்குக் காரணமாகாது.
ஆனால், மழை பெய்யும் போது ஏரி இருந்தால்தான் மழை நீர் தேங்கும்.
அது போல ஆன்மாக்களிடத்திலுள்ள சரணாகதி முதலிய எந்த புண்ணியமும் பகவான் அருள் செய்வதற்குக் காரணமாகமாட்டா.
பகவானுடைய அருள் எந்த காரணத்தையும் எதிர்பாராமல் இயற்கையாக தானே வருவது.
அந்த அருள் தானாக வரும் போது அதை எற்றுக் கொள்ள ஆத்மாக்கள் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும்.
அந்தத் தகுதியுடைமையே “சரணாகதி” என்றும் “பக்தி” என்றும் நோன்பு புண்ணியங்கள் என்றும் சொல்லப்படுகின்றன.
இப்படித் தகுதியுடைமையைக் காரணம் என்று சொல்ல முடியாது.

“வனத்திடரை எரி ஆம் வண்ணம் இயற்றும் இதுவல்லால் மாரி யார் பெய்கிற்பார்? மற்று என்று
பூதத்தாழ்வார் இதைத் தெளிவுபடுத்தினார்.
ஆகவே, “இவை சரணாகதி பெறுவதற்குரிய தகுதியைத்தான் உண்டு பண்ணும்; பகவான் தானே வீடு தருவான்”
என்ற உண்மைகள் இங்கு கிடைக்கின்றன.
மாம்சமயமான சரீரத்தில் வாழ்வதைச் சிறையில் இருப்பதாகக் கருதி விடுதலையடைய மனம் துடிதுடிக்க வேணும்.
லக்ஷ்மீ நாயகனான பகவான் திருவடிகளின் சுவையை அனுபவிக்க ஆசைப்பட்டு அவன் திருவடிகளில் விழுவதே சரணாகதி ஆகும்.
அது கனிந்த பழம் காம்பிலிருந்து விழுவது போல சகல பற்றுதல்களையும் விட்டுச் செய்யப்படுவதாகும்.

மோட்சத்தை அடைவதற்கு சரீரம் விரோதியாகும்.
அவ்விரோதியை அழிப்பதற்கு பகவான் திருவடிகளில் பண்ணும் சரணாகதியே ஆயுதமாகும்.
இதற்கு விளக்கமாக ராமாயணத்தில் பரதனும் , விபீஷணனும் இராமன் திருவடிகளில் சரணாகதி செய்த கதையைக் காணலாம்.
பரதன் தன் தாயினால் துன்பம் அடைந்தவன். விபீஷணன் தன் அண்ணனால் துன்பம் அடைந்தவன்.
இருவரும் தங்கள் துன்ப நிலையைத் தாங்க மாட்டாதவர்களாய் உள்ளனர்.

“தொழுது உயர் கையினன், துவண்ட மேனியன்,
அழுது அழி கண்ணினன், ‘அவலம் ஈது’ என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான்
‘பரதனும் தொழுது தோன்றினான்’ மலரடி வந்து வீழ்ந்தனன்”–(கம்பராமாயணம் – அயோத்திய காண்டம் – திருவடி சூட்டு படலம் – 49)

இது பரதனின் சரணாகதி இதுவே “அதிகாரி விசேஷணம்” எனப்படும்.
இதுவே பகவான் அருளுவதற்கு உரிய தகுதியாகும்.

“கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர் மணி முடியன், கல்லும்
மரங்களும் உருக நோக்கும் காதலன், கருணை வள்ளல்
இரங்கினன் நோக்கும் தோலும், இருநிலத்து இறைஞ்சுகின்றான்
வரங்களின் வாரி அன்னதாள் இணை வந்து வீழ்ந்தான்”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – விபீஷணன் அடைக்கலப் படலம் – 137)

இதுவே விபீஷணன் நிலை.

இவை இரண்டு நிலைகளும் ஆன்மா உடற்சிறை வேதனையிலிருந்து விடுபடுவதால்
பகவான் திருவடிகளில் சரணாகதி பண்ணுவதற்கு ஒப்பாகும்.
பரதனுக்கு கைகேயியினால் வந்த துன்பம், விபீஷணனுக்கு இராவணனால் வந்த துன்பம்,
ஆன்மாவுக்கு உடற்சிறையினால் வந்த துன்பம்
எத்துன்பமாக இருந்தாலும் துன்பம் தீருவதற்கு வழி பகவான் திருவடிகளில் பண்ணும் சரணாகதியே.
மேலே சொன்ன பரதனும், விபீஷணனும் துன்பத்தை உடனடியாகத் தீர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் சரணாகதி செய்துள்ளார்கள்.
அவ்வாறே இவ்வான்மாவும் உடனடியாக உடற்சிறைத் துன்பத்திலிருந்து விடுபடத் துடிதுடிப்புடன் சரணாகதி செய்கிறான்.
“உண்டு கொல் உயிர்? ” என ஒடுங்கினான் உருக் கண்டனன்,
நின்றனன் – கண்ணன் கண் எனும் புண்டரீகம் பொழி புனல் –
அவன் சடாமண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே.

“அயாவுயிர்த்து, அழுகணீர் அருவி மார்பிடை
உயர்வுற, திருவுளம் உருக, புல்லினான்
நியாயம் அத்தனைக்கும் ஒர் நிலை ஆயினன்
தயா முதல் அறத்தினைத் தழீ இயது என்னவே”–(கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம் – திருவடி சூட்டு படலம் – 55)

இது பரதனிடம் ராமன் காட்டிய இரக்கம்.

இனி விபீடணனிடம் காட்டிய இரக்கம் காணலாம்..!

“குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம், எம் முழை அன்பு வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனோம்
புகல் அருங்கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் – நுந்தை”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – 143)

“திருவடி முடியின் சூடி, செங்கதிர் உச்சி சேர்ந்த
அருவரை என்ன, நின்ற அரக்கர்தம் அரசை நோக்கி
இருவரும் உவகை கூர்ந்தார், யாவரும் இன்பம் உற்றார்,
பொரு அரும் அமரர் வாழ்த்தி, பூமழை பொழிவதானார்”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – 145)

“தேடுவார் தேடநின்ற சேவடி, தானும் தேடி
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீ இய நல்நீர்
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி, மேல் அமரர் ஆவார்,
சூடுவார் எய்தும் தம்மை சொல்வார் யாவர்? சொல்லீர்”–(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – 150)

இவ்வாறே வேதனையுடன் “சரணாகதி பண்ணும் ஆன்மாக்களிடம் பகவான் இரங்கி அருள் செய்வான்” என்பது கருத்து.
இதை “இரக்கம் உபாயம், இனிமை உபேயம்” என்று சுருங்கச் சொன்னார்கள் ஆசார்யர்கள்.

மேலே கூறின பரத, விபீஷண சரணாகதிகளில் விபீஷண சரணாகதி பலித்ததாகவும்
பரத சரணாகதி பலிக்காததாகவும் தெரிகிறது.
“பரதனுக்கு நன்மைதானே தீமையாயிற்று” என்ற வாக்கியமும் காணலாம்.
ஆகவே தான் சரணாகதி முதலிய சாதனங்கள் எல்லாம் அதிகாரி விசேஷணமாகச் சொல்லப்படுவதன்றி
சாதனமாகச் சொல்லப்படுவதில்லை.
சரணாகதி வீடு தரும் என்றது கால தாமதமின்றி வீடு அளிக்கும் என்பதைப்பற்றிச் சொன்னது.
அதற்கு வீடு அளிக்கும் சக்தி கிடையாது.
இவ்வாறு சரணாகதியைப் பற்றிய பல உண்மைகளை இப்பாடல் உரையில்
மணவாள மாமுனிகள் விளக்கி யிருக்கிறார் என்பதை இங்கு உணர வேணும்.

————-

நரகும் சுவர்க்கமும் நாண்மலரள் கோனைப்
பிரிவும் பிரியாமையுமாய்த் – துரிசற்றுச்
சாதகம்போல் நாதன் தனதருளே பார்த்திருத்தல்
கோதிலடியார் குணம்–2-

நாண் மலராள் கோனை – திருவின் மணாளனை (திருமாலை)
பிரிவு – பிரிந்திருப்பது
நரகம் – துன்பமுமாய்
பிரியாமை – கூடி யிருப்பது
சுவர்க்கமுமாய் – இன்பமுமாய்
துரிசற்று – குற்றமற்று
சாதகம் போல் – சாதகப் பறவை போல (மழையையே எதிர்பார்த்திருக்கும்)
நாதன் தனது – பகவானுடைய
அருள் – கருணையையே
பார்த்திருத்தல் – எதிர்பார்த்திருத்தல்
கோதிலடியார் – குற்றமற்ற அடியார்களது
குணம் – இயல்பாகும்

நரகும் சுவர்க்கமும் என்ற சொற்கள் துன்பத்தையும் இன்பத்தையும் குறிக்கின்றன.
“துன்பமும் இன்பமும்” என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தில்
“இன்பமில் வெந்நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்” என்ற இடத்திற்கு உணரச் செய்கையில்
“சுக துக்கங்கள்” என்று உணர சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகவே நரகு என்றால் துன்பம் என்றும் சுவர்க்கம் என்றால் இன்பம் என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

பரபக்தியுடையவர்களுக்கு எது துக்கம்? எது சுகம்? என்பதை மேல் தொடர் விவரிக்கிறது.
நாண்மலராள் கோன் (பெரிய பிராட்டியாருக்குத் தலைவன்) அவனைப் பிரிதல் துன்பம் என்றும்
பிரியாமை (அவனோடு கூடியிருத்தல்) இன்பம் என்றும் சொல்வர்.

பரபக்தி என்றால் பிரிவில் ஆற்றமாட்டாமை, கூடிடில் ஆற்றாயிருத்தல். இதற்கு உதாரணம் பின்வருமாறு.

ஸ்ரீராமாயணத்தில் பெருமாள் (இராமன்) காட்டிற்கு எழுந்தருளும்போது பிராட்டி நானும் கூட வருவேன் என்று சொல்ல
அதற்குப் பெருமாள் நகர வாசத்திற்கும் வன வாசத்திற்குமுண்டான வேறுபாடுகளை எடுத்துரைத்து
அதனால் காட்டிற்கு உடன் வருவது துன்பம் என்றும், அரண்மனையில் இருப்பது இன்பம் என்றும் அருளிச் செய்தார்.

அதைக் கேட்ட பிராட்டி, “இன்ப துன்பங்கள் நீர் சொல்வது போல் அல்ல;
ஒவ்வொருவருக்கும் வேறு வேறாய் இருக்கும் உம்மோடு கூடியிருப்பது எதுவோ அதுவே சுகம்;
உம்மைப் பிரிந்து அரண்மனையில் இருப்பது துன்பமாகும்;
இந்த உண்மை உமக்குத் தெரியாமல் போனாலும் என்னிடம் கேட்டு அறிவீராக;
தமக்குத் தெரியாததைப் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்ள வேணும்; அது தவறில்லையே;
உம்மைப் போலே நாம் அளந்து அன்பு செய்யவில்லை. நான் உம்மிடம் கொண்டுள்ள அன்பு அளவு கடந்ததாகும்” என்று சொன்னாள்.

இதற்கு இராமன் “நம்மைக் காட்டிலும் உனக்கு அன்பு மலை போல் இருப்பதாய்ச் சொன்னாயே.
இதற்கு நம்மை என்ன செய்யச் சொல்கிறாய்?” என்றான்.
அதற்கு பிராட்டி “நான் முன்னே போகின்றேன். நீர் எனக்குப் பின்னாலே வரப்பாரும்” என்று கூறினாள்.
இது பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்.

இங்கு ஒரு வேதாந்த விசாரம்.
சீதை, இராமனைப் பார்த்து உம்முடன் கூடியிருந்தால் சுகம் என்றும்
உம்மைவிட்டுப் பிரிந்தால் துக்கம் என்றும் கூறினாள்.
இது அவள் அளவுக்குப் பொருத்தமாகயிருக்கும்.
இதே வார்த்தையை ஜீவாத்மா பரமாத்மாவைப் பார்த்துச் சொல்வது முறையற்றது.
பிராட்டி பகவானையே இன்பமாகக் கொண்டிருப்பவள்.
ஜீவாத்மாக்களோ பகவானையும் பிராட்டியையும் சேர்த்து இன்பமாகக் கொண்டிருப்பவர்கள்.

அதனால் பிராட்டிக்கு “ஏகாயணை” என்றும்,
ஜீவாத்மாக்கள் “மிதுனாயர்கள்” என்றும் சொல்லப் பட்டிருக்கிறார்கள்.
ஏகாயணை பகவானொருவனையே இன்பமாகக் கொண்டிருப்பவள்.
ஜீவாத்மாக்கள் மிதுனாயனர் என்று சொல்லப்படுவதால் பகவானையும் பிராட்டியையும் சேர்த்து
இருவரையும் இன்பமாகக் கொண்டிருப்பவர்கள்.
பிராட்டிக்கும் ஜீவாத்மாக்களுக்கும் உண்டான வேறுபாட்டை இவ்வாறு பிரித்து அறிய வேணும்.

“நாண் மலராள் கோனைப் பிரிவும் பிரியாமையுமாய்” –
பிராட்டியோடு கூடிய பகவானைப் பிரிதலும், பிராட்டியோடு கூடின பகவானைப் பிரியாமையும்
துன்பமும் இன்பமும் என்று சொல்லப்படுகிறது.
இளையபெருமாள் ராமனைப் பார்த்து “சீதை எப்படி உன்னைப் பிரிந்தால் வாழ மாட்டாளோ
அது போல நானும் உன்னைப் பிரிந்தால் வாழமாட்டேன்” என்று தன்னைப் பிராட்டிக்குச் சமமாகக் கூறிக் கொண்டுள்ளார்.
இங்கு பிரிவுத் துயர் பொறுக்க மாட்டாமைக்கு மட்டும் இருவரும் சமம் என்று கருத்தாகும்.

அவ்வாறன்றி ராமனை மட்டும் பற்றி நிற்கும் சீதையைப் போல் என்று பொருள் கொள்ளலாகாது.
இளைய பெருமாளுக்குப் பிராட்டியும் பெருமாளும் சேர்ந்திருக்கும் நிலையே இன்பமாகக் கொள்ள வேணும்.
ஆகவே தான் காட்டுக்குப் புறப்படும் பொழுது
“நீயும் சீதையும் மலை தாழ்வரைகளில் உலாவும் பொழுதும், உறங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும்
உங்கள் இருவருக்கும் நான் எல்லா அடிமைகளும் செய்ய வேணும். அதற்காகவே என்னை அழைத்துச் செல்லவேணும்” என்று
இலக்குவன் கூறியுள்ளதால் பகவான், பிராட்டி இருவருக்கும் சேர்த்து செய்யும் அடிமையே ஆன்மாக்கள் எல்லோருக்கும் உரிமையாகும்.

துரிசற்று – துரிசு – குற்றம். அற்று – அது இல்லாமல் அதாவது
பகவானையும் பிராட்டியையும் பிரிந்தால் துன்புற்றும் அவர்களைக் கூடினால் இன்புற்றும் அமைந்த பக்தி உண்டானால்
அதை (தகுதியுடைமையாக) அதிகாரி விசேஷணமாகக் கொள்ள வேணும்.
அதாவது
சாப்பிடுவதற்கு பசி எப்படி அவசியமோ அது போல பகவானை அனுபவிப்பதற்கு பக்தி வேணும்.
இந்த பக்தி சாதனமாக ஆகாது. பக்தியை உபாசகர்கள் சாதனமாகக் கொள்ளுகிறார்கள்.
சரணாகதர்கள் சாதனமாகக் கொள்ளமாட்டார்கள். சாதனமாகக் கொண்டால் அது குற்றமாகும்.
இங்கு துரிசற்று என்பதால் பக்தியை சாதனமாகக் கொள்ளும் குற்றம் இல்லாதவர்கள் என்று பொருள்.

“சாதகம் போல் நாதன் தனதருளே பார்த்திருப்பர்” – அதாவது
மழை நீரை யல்லது பருகாத சாதகப் பறவை விடாயினால் நாக்கு ஒட்டினாலும் மழை நீரையே பார்த்திருக்கும்.
அது போல இவ்வாத்மாவுக்கு வகுக்கப்பட்ட பகவானுடைய அருளையே அவனை அடைவதற்குச் சாதனமாக அறுதி யிட்டு
அவ் வருளையே பார்த்திருத்தல் குற்றமற்ற அடியார் குணம் “துணியேனினி நின்னருளல்லது நின்னருளே புரிந்திருந்தேன்” என்ற
ஆழ்வார் பாசுரங்களாலும் இக்கருத்தைக் காணலாம்.

“கோதிலடியார்குணம்” – அடியார் என்பதற்கு
வேறுவேறு பயன்களிலும், வேறுவேறு சாதனங்களிலும் தொடர்பு கொண்டிருக்கும் குற்றமில்லாதவர் என்று பொருள்.
தங்களுடைய அடிமை இலக்கணத்திற்கேற்ப பகவானையே ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்போனும் அவனே.
அடைய வேண்டியவன் ப்ராப்தா அடைய வழியாய் இருப்பவன் ப்ராபகன்.
அடைந்த பிறகு இவ்வாத்மாவுக்கு பகவானே வகுக்கப்பட்ட தலைவன் என்பது உண்மை.

ஆகையால் இப் பாட்டில் முன்னடியால் “பயன் பகவானே” என்ற கருத்தும்
பின்னடியால் “சாதனமும் பகவான்” என்ற கருத்தும் தோன்றச் சொல்லப் பட்டுள்ளது.
இப்படியிருப்பதே கோதிலடியார் குணம் என்று உணர வேண்டும்.

————

இதில் பரபக்தியின் பழுத்த நிலையான பரமபக்தி பேசப்படுகிறது.
அதாவது பிரிந்தால் ஆற்றமாட்டாமல் உயிர் பிரிதல் அளவுக்கு மீறிய பக்தி மிஞ்சி போகுதல்.
இதை உதாரணத்துடன் கூறுகிறார்.

“ஆனை யிடர் கடிந்த ஆழி அங்கை அம்புயத்தாள்
கோனை விடில் நீரில் குதித்தெழுந்த மீன் எனவே
ஆக்கை முடியும்படி பிறத்தல் அன்னவன்தாள்
நீக்க மில்லா அன்பர் நிலை”–3-

பதவுரை:

ஆனை கஜேந்திராழ்வானுடைய
இடர் முதலையினால் உண்டான துன்பத்தை
கடிந்த போக்கின
ஆழி அங்கை சுதர்சனம் என்னும் சக்கரத்தை அழகிய கையிலேந்திய
அம்புயத்தாள் கோனை லக்ஷ்மீ நாயகனை
விடில் பிரியில்
நீரில் தண்ணீரிலிருந்து
குதித்தெழுந்த துள்ளிக் குதித்துப் பிரிந்த
மீனெனவே மீன் போல
ஆக்கை முடியும்படி பிறத்தல் உடல் அழியும்படி நிலை உண்டாதல்
அன்னவன்தாள் அத் திருவின் மணாளனது திருவடிகளை
நீக்கமில்லா பிரிய மாட்டாதது
அன்பர் நிலை அன்புடையார் நிலையாகும்.
கீழ்ச்சொன்னதில் “பிரிவில் ஆற்றாமை, கூடில் ஆற்றுதல்” என்ற பர பக்தியின் நிலை பேசப்பட்டது.

புராணங்களிலும் ஆழ்வார் பாசுரங்களிலும் அடிக்கடி பேசப்படுவது கஜேந்திராழ்வான் சரிதம்.
கஜேந்திரனாகிற யானை பகவான் திருவடிகளில் தாமரைப் பூவை சமர்ப்பிப்பதற்காகத் தாமரைக் குளத்தில் இறங்கி
பூவைப் பறித்துக் கரையேறியது. அப்பொழுது நெடுநாளாக தன் சாபத்தைப் போக்கும் யானையை எதிர்பார்த்திருந்த
முதலை யானையின் காலைக் கவ்வியது. யானை கரைக்கு இழுக்க முதலை நீருக்கு இழுக்க தேவ வருஷத்தில் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன.
முதலைக்கு நீர் தன்னிடமாதலாலும் பலமானதாலும் தனது விருப்பம் நிறைவேறியதால் பலம் வளர்கையாலும்
யானையை நீருக்குள்ளே இழுத்தது. யானைக்கு நீர் நிலை வேற்றிடமாகையாலும் விருப்பம் நிறைவேறாததாலும்
பலம் சிறிது சிறிதாகக் குறைந்து துதிக்கை முழுகும்படியான நிலை ஏற்பட்டதாலும்,
இனி இதுக்கு மேல் துன்பம் இல்லை என்னும்படியான ஆபத்தை அடைந்த நிலையில்

“பக்தர்களின் விரோதியை அழிக்கும் இயல்புடைய இறைவனே (சர்வேஸ்வரனே) நமக்கு “ரட்சகன்” என்று எண்ணி
“நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய் வாராய் என் ஆனிடரை நீக்காய்” என்று கூப்பிட்ட உடனே
பகவான் ஒடோடி வந்து கஜேந்திராழ்வானுடைய துக்கத்தைப் போக்கினான்.
யானைக்கு துக்கமாவது முதலையின் வாயிலே அகப்படுகையாலே தன் சரீரம் அழிகிறது என்றல்ல.
கையில் எடுத்த பூவை அதன் அழகு அழியாமல் பகவான் திருவடிகளிலே சமர்ப்பிக்க முடியவில்லையே என்பதுவே துக்கம்.
அத்தகைய துக்கத்தை கஜேந்திரன் நோவுபடுகிற சமயத்திலே சென்று அவனுக்கு முகம் காட்டி
அவன் துக்கத்தைப் போக்கினான் என்பது புராணக் கதை. இது இங்கு “யானையிடர் கடிந்த” என்ற தொடரால் கூறப்பட்டது.

ஆழியங்கை – “திருவாழியை அழகிய கையிலேயுடைய” என்று பொருள்.
கஜேந்திரனைக் காக்கச் சென்ற போது அவன் விரோதியான முதலையின் தலை துணிப்பதற்கு
கையிலே திருவாழியை ஏந்திக் கொண்டு அப்பொழுது சென்றான் என்பது குறிப்பு.

“மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்த்
தொழுங் காதற் களிறளிப்பான் புள்ளுர்ந்து தோன்றினையே” என்று நம்மாழ்வாரும் இதைக் குறிப்பிட்டார்.

யானை இடர்கடிய சக்கரத்துடன் சென்றது – தெளிவு.
கஜேந்திரனைக் காக்க வருகின்ற வேகத்தில் கையில் இருக்கும் திருவாழியைக் கூடி அறியவில்லை போலும்,
அறிந்திருந்தால் இருந்த இடத்திலேயிருந்த சக்கரத்தை ஏவிக் காரியம் கொள்ளலாம் அல்லவா? என்று ஒரு பொருள்.
கையில் திருவாழியை அறிந்திருந்தே அப்படிச் செய்யாமல் ஒடோடி வந்து முதலையின் தலையைத் துணித்தான் என்பது மற்றொரு பொருள்.
காரணம், கஜேந்திரன் பக்தியுடன் அவனை அழைத்துத் தொழும் காதற் களிறு என்று இதனை ஆழ்வார் அருளினார்.
அதனால் கஜேந்திரன் பகவானுடைய கையும் திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டிருக்கிறவன் கையில்
பறித்த தாமரைப் பூவை பகவான் திருவடிகளில் சமர்ப்பிக்க ஆசைப்பட்டிருக்கிறவன்.
ஆகையால் அவன் இருக்கும் இடம் சென்று அவன் துக்கத்தைத் தீர்க்க வேண்டிய அவசியத்தினால்,
இருந்த இடத்திலேயே காரியம் கொள்ளாமல் தாமரை குளத்திற்குச் சென்றான்.
இதனால் “தன்னைக் காண ஆசைப்படும் பக்தர்களுக்கு ஆசைப்பட்டபடி முகம் காட்டுவான்” என்பது உட்கருத்து.
இக்கருத்து பேயார் “குட்டத்துக் கோன் முதலை துஞ்சக் குறித் தெறிந்த சக்கரத்தான்” என்றார்.

அம்புயத்தாள் கோனை:-
தாமரையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெரிய பிராட்டியாருக்கு நாயகனானவனை என்று இதன் பொருள்.
இதுவும் கருத்துடை தொடர். பாற்கடலில் பெருமாள் பள்ளி கொண்டிருக்க மண்மகளும், ஆய்மகளும் திருவடிகள் பிடிக்க,
திருமகளைத் திருமார்பிலே அணைத்துக் கொண்டு பள்ளி கொண்டருளா நிற்க,
அப்பொழுது கஜேந்திரன் கூப்பிட்ட அக்கூப்பீடு பகவான் திருச் செவிப்பட்டது.
அப்போது திருவடி பிடித்தவர்களின் கைகளிலிருந்து திருவடிகளை மெதுவாக இழுத்துக் கொண்டு படுக்கையிலிருந்தும்
சடக்கென எழுந்திருந்து திருக்கண்களையும் மலர விழித்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு திருமகளை அணைத்துக் கொண்டிருந்த
திருமார்பை அவ்விடத்திலிருந்து பக்குவமாக வாங்கி அதன் பிறகே அனைவரும் வியக்கும்படி,
கருடவாகனத்தில் ஏறி மிக வேகத்தோடே எழுந்தருளி ஸ்ரீகஜேந்திராழ்வான் துன்பத்தைப் போக்கினான் என்று புராணம் கூறுகிறது.

அதைப்பற்ற “அம்புயத்தாள் கோன்” என்ற கருத்து கூறப்பட்டது.
மேலும், அரசன் தன் மக்களை நல்லமுறையில் காப்பானானால் அதைக் கண்டு மகிழும் தாயைப் போல,
இறைவன் பக்தர்களை இடுக்கண் களைந்து காத்தால் அதைக் கண்டு களிப்பவள் பிராட்டியான தாயல்லவா?
அதனாலும் “அம்புயத்தாள் கோன்” என்று கூறப்பட்டது.

இதனால் “தன்னை அடைக்கலம் புகுந்தவருடைய ஆபத்து காலங்களில் அவர் இருப்பிடம் சென்று அவருக்கு உதவி காக்குமவன்” என்றும்,
அவர்களைக் காப்பது அவர்களுக்கு செய்த செயலாகக் கருதாமல் தனக்குச் செய்து கொண்ட காரியமாகக் கருதுவான் என்றும்
அத் தகையவன் பெரிய பிராட்டியாருக்குக் கணவனாவான் என்றும் பகவானுடைய இயல்புகள் கூறப்பட்டன.

விடில்:-
தன் பக்தரிடம் இப்படி அன்புடையவனாக இருக்கிறவனைப் பிரிய நேரிட்டால்;

நீரில் குதித்தெழுந்த மீனெனவே:-
நீரிலிருந்து குதித்துக் கிளர்ந்து அந்நீரைப் பிரிந்த மீன்போல;

ஆக்கை முடியும்படி பிறத்தல்:-
சரீரம் அழியும்படியான நிலை உண்டாகும்.
கலவியில் இன்பமும், பிரிவில் துயரமும் பரபக்தியின் இலக்கணம்.
அதைக் காட்டிலும் சிறப்பு பரபக்திக்கு உண்டு.
அதாவது பிரிந்தால் உயிர் போய்விடும் நிலை. இதுவே இதுக்குச் சிறப்பு.
இதை நீரை விட்டுப் பிரிந்த மீன் போல என்று உதாரணத்தோடு கூறினாராயிற்று.

அன்னவன்:-
கீழ் “அம்புயத்தாள் கோன்” என்று சொல்லப்பட்ட இறைவனை ‘அன்னவன்’ என்ற சொல்லால் இங்கே குறிப்பிடுகிறார்.
இங்கு ‘அன்னவன்’ என்றது
அப்படிப்பட்டவன் என்று பொருள்.
அல்லது
மீனுக்கு நீர்போல இவ்வான்மாவுக்கு தாரகனாயிருப்பவன் என்னவுமாம்.

தாள் நீக்க மில்லா அன்பர் நிலை –
அவன் திருவடிகளைப் பிரியப் பொறுக்கமாட்டாத அன்பு.
இப்படியிருந்துள்ள அளவு கடந்த அன்புடையவர்களது இயல்பு
அவனைப் பிரியில் நீரிலிருந்து பிரிந்த மீன் போல உயிர் போகும் நிலை உண்டாகும்.
இது பரம பக்தியின் நிலை என்பதை இப்பாடல் விளக்குகிறது.

————–

கீழ்ச்சொன்ன மூன்று பாடல்களிலும் சொல்லப்பட்ட சுருக்கமான கருத்து.
ஊன உடல் முதல் பாட்டில் –
துவய மந்திரத்தில் முதற்பகுதியில் சரணாகதியினுடைய சிறப்புத்தன்மை சொல்லப்பட்டது.
சரணாகதி செய்வதற்குக் காரணம் பிறவித் துன்பம் தாங்கமாட்டாமை.

அத்துன்பம் தாங்க மாட்டாத நிலை பரபக்தியின் அடிப்படையில் உண்டாகும் என்ற கருத்தை
“நரகும் சுவர்க்கமும்” என்ற இரண்டாம் பாட்டிலும்,

அதையும் காட்டிலும் பிரிவில் உயிரே போகும் நிலையான பரமபக்தியின் நிலை “ஆனையிடர் கடிந்த” 3வது பாட்டிலும் கூறப்பட்டன.

இனி த்வய மந்திரத்தின் பிற்பகுதியால் கூறப்படுகிற லட்சியத்தின் எல்லையான கைங்கர்யத்தின் சீர்மையை அறிந்து
வேறு பயன்களின் (தொடர்புகளை) ஆசாபாசங்களை அறவே விட்டு
ஆன்மாவின் அடிமை இலக்கணத்திற்கு ஏற்புடைய தொண்டுகளில் உறுதி பூண்டவர்களுடைய
சிறப்புத் தன்மை
இந்த நான்காம் பாடலில் கூறப்படுகிறது.

“மற்றொன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆட்செயலே
உற்றது இது என்று உளம் தெளிந்து – பெற்ற
பெரும் பேற்றின் மேலுளதோ பேர் என்று இருப்பார்
அரும் பேறு வானத்தவர்க்கு”–4–

பதவுரை:

மற்றொன்றை -செல்வம் முதலிய வேறு வேறு பயன்களை
எண்ணாதே -லட்சியமாகக் கருதாமல்
மாதவனுக்கு -திருமாலுக்கு
ஆட்செயலே -அடிமை செய்வதில்
இது உற்றது -இதுவே அடிமைக்கு ஏற்றது
என்று -என்று முடிவு செய்து
உளம் தெளிந்து -இதயம் தெளிவுற்று
பெற்ற பெரும் பேற்றின் மேல் -அடையப் பெற்ற இப் பெரும் பயனுக்கு மேல்
பேர் உளதோ -வேறு ஒரு பயன் உண்டோ
என்றிருப்பார் -என்று உறுதி கொண்டிருப்பார்
வானத்தவர்க்கு -வைகுந்தத்தில் இருக்கும் நித்ய முக்தர்களுக்கு
அரும் பேறு -பெறுதர்கரிய பயனாவார்

மற்றொன்றை எண்ணாதே:-
அதாவது கைங்கர்யம் என்பது பகவான் திருவுள்ளத்திற்கு உகப்பானது செய்தல்.
இதுவே ஒருவன் அடைய வேண்டிய லட்சியத்தின் எல்லை. இதுக்கு மேல் எதுவுமில்லை.
அத்தகைய கைங்கர்யத்திற்குப் புறம்பானது ஒன்றை லட்சியமாகக் கருதாமல் என்பது இதன் பொருள்.
புறம்பான லட்சியமாவது,
இவ்வுலக இன்பமும் சொர்க்கமும் முதலிய பரலோக இன்பமும் ஆன்மானுபவமாகிற கைவல்ய மோட்ச அனுபவமும்,
இம்மூன்றும் கைங்கர்யத்திற்குப் புறம்பானவை.

“ஆன்மானுபவம்” என்பது தன்னைத் தானே அனுபவித்தல் ஆகும். அதாவது ஆன்மா உடல் தொடர்பின்றியிருத்தலாம்.
ஆன்மாவின் தன்மை இயல்பாக இன்ப வடிவாயிருப்பது. ஆகவே எந்த உடல் தொடர்பும் இல்லாமல் இருந்தால்
அது தன் தன்மையான இன்பமே வடிவாயிருக்கும். அதுவே மோட்சம் என்று சிலர் கூறுவர்.
அது பகவத் கைங்கர்யத்தை பயனாகக் கொள்ளும் கொள்கைக்கு வேறுபட்டதாகையால் “மற்றொன்று” என்று கூறப்பட்டது.

இவற்றின் பெயர் சொல்வதும் விரும்பாமையால் மற்றொன்று என்று மறைத்துச் சொல்லப்பட்டது.
“விரும்பாதே” என்று கூறாமல் “எண்ணாதே” என்று கூறியது.
நினைத்தால் அன்றோ விரும்புவது. அவ்வாறே ஒரு பொருளாக நினையாததால் “எண்ணாதே” என்று சொல்லப்பட்டது.
இவ்வாறன்றி இவ்வுலக இன்பத்தையும் பரலோக இன்பத்தையும் ஆன்மா அனுபவத்தையும் விரும்புபவர்கள்
பகவத் கைங்கர்யத்தின் சுவையறியாதவர்களாக ஆவர்.
பகவத் கைங்கர்யத்தின் சுவையை அறிந்தவர்களுக்கு மற்றையவை உப்பு நீரைக் குடிப்பது போல்
சுவையற்றதாயும் கீழ்த்தரமாயு மன்றோ யிருப்பவை.

மாதவனுக்கு ஆட்செயல்:- என்பதாலே
அவர்கள் இருவருக்கும் செய்யும் அடிமையே ஒருவரால் பெற வேண்டியது என்ற இலட்சியத்தின் எல்லை என்று சொல்லப்படுகிறது.
இக்கருத்து த்வய மந்திரத்தின் பிற்கூற்றில் முதல் பதமான “ஸ்ரீமதே” என்ற பதத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
திருமந்திரத்தில் (ஒம் நமோ நாராயணாய) மூன்றாவது பதமான நாராயணாய என்ற பதத்திலும்
அடியார் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்பவர் பிராட்டியும் பெருமாளுமான இருவரும் என்பது மறைத்துச் சொல்லப்பட்டது.

மறைத்துச் சொன்ன அதைத் த்வய மந்திரம் விளக்குகிறது.
“இதிலே திருமந்திரத்தில் சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அநுஸந்தித்திருக்கிறது” என்று
பிள்ளை லோகாச்சாரியார் அருளிச் செய்ததை இங்கு மேற்கோளாகக் காணலாம்.
“பகவத் கைங்கர்யமே ஒருவன் பெற வேண்டிய லட்சியம்” என்பது திருமந்திரத்திலும்
த்வய மந்திரத்திலும் சொல்லப்படுகையாலே தெளிவாகும்.

“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்று கூறினார் அன்றோ ஆழ்வார்.

உளம் தெளிந்து:-
மேற்கூறிய ஆன்மா பெறும் பயனாக கைங்கர்யத்தில் மனம் தெளிவடைந்து
அதாவது
வேறு வேறு பயன்களை விரும்புவதற்குக் காரணமான “யான்” “எனது” என்ற இரண்டு குற்றங்களைக் களைய வேண்டும்.
செய்யும் தொண்டுகள் அவன் உகப்புக்காகவே அமைய வேண்டும்.
இக்கருத்துக்களை ‘தனக்கே ஆக எனைக் கொள்ளுமீதே’ என்று நம்மாழ்வாரும்
‘உமக்கே நாம் ஆட்செய்வோம்’ என்று ஸ்ரீஆண்டாளும் அருளிச் செய்த பாசுரங்கள் கூறுகின்றன.
கைங்கர்யமே ஆத்மாவிற்கு மேலான பயன் என்று சொல்வதற்குத் தக்கபடி இதயம் தெளிவடைந்து செய்ய வேண்டும்.
இதனால் த்வய மந்திரத்தின் பின் கூற்றில் இறுதிப்பதமான நமப் பதத்தின் பொருள் சொல்லப்பட்டது.

பெற்ற பெரும் பேற்றின் மேலுளதோ பேரென்றிருப்பார் –
அதாவது
இக் கைங்கர்யமாகிற பெரும் பயன் கிடைத்தால் ‘இதைக் காட்டிலும் மேலான ஒரு பயன் இல்லை என்று
கைங்கர்ய்மாகிற பயனையே மேலான பயனாக எண்ணியிருக்குமவர்கள் என்கை.
“பரமபதம்” என்கிற இடம் என்றைக்கும் அழியாமல் ஒரே மாதிரியாக இருப்பது. சுத்த சத்வமயமானது.
ஞான ஆனந்தங்களுக்கு உற்பத்தி நிலம். அதனால் கைங்கர்யமாகிற பயன் தடையில்லாமல் செய்வதற்கு ஏற்றது.
இக்காரணங்களால் அதை ஞானிகள் விரும்புகிறார்கள்.
ஆகையால் கைங்கர்யத்திற்கு மேல் வேறு பயன் உண்டோ என்று சொல்வதில் எவ்வித தடையுமில்லை.
இத்தகைய உயர்ந்த கைங்கர்யத்தில் உறுதியாகயிருக்கும் ‘அவர்கள்’ என்று பொருள்.

அரும்பேறு வானத்தவர்க்கு –
கீழ்ச்சொன்ன அடியவர்கள் இயல்பாகவே தங்களை இறைவனுக்கு அடியவராக எண்ணியிருப்பவர்.
பகவத் கைங்கர்யத்திலேயே எப்பொழுதும் ஊன்றியிருப்பவர். பகவானையே பேரின்பமாகக் கொண்டிருப்பவர்.
இத்தகையவர் இவ்வுலகத்தில் காண அரியராக இருப்பார்.
இவர்கள் பரமபதம் சென்றால் அங்குள்ள நித்ய ஸூரிகள் முதலானார்களுக்கும் கிடைத்தற்கரிய
பொருளாகக் கொண்டாடுவதற்கு உரியவர்கள் ஆவார்.
இதனால் எப்பொழுதும் ஆரா அமுதமான பகவானையே அனுபவித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு
அப் பகவத் விஷயத்தை அனுபவிப்பதைக் காட்டிலும் இவர்களுடைய அனுபவம் பெறாப் பேறாக நினைத்து
அனுபவிக்கப்படுவார்கள் என்பது கருத்து.

—————-

த்வய மந்திரத்தில் முதற்கூற்றினால் சொல்லப்படுகிற அர்த்தம் பகவானுடைய திருவடிகளையே பற்றுவதாகும்.
இதற்கு ‘ஸித்தோபாய வரணம்’ என்று பெயர்.
‘ஸித்தோபாயம்’ என்றால் எப்பொழுதும் தயாராக இருக்கும் உபாயம் என்று பொருள்.
பகவான் எப்பொழுதும் தயாராக இருப்பதால் அவனுக்கு ஸித்தோபாயம் என்று பொருள்.
இத்தகைய எம்பெருமானை “நீயே உபாயமாக இருக்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்கிற போது
வேறு எந்த உபாயத்திலும் தொடர்பு கொள்ளலாகாது.
ஏதாவது உபாயங்களில் தொடர்புகள் இருந்தால் அத்தொடர்புகளை முற்றிலும் விட்டு விட்டே பற்ற வேணும்.
இதனால் எம்பெருமானை உபாயமாகப் பற்றுமவனுக்கு மற்ற உபாயங்களை
அறவே விட்டு விட்டுப் பற்ற வேண்டும் என்கிற நியதி ஏற்படுகிறது.

அதனால் மற்ற உபாயங்களை விடுவது முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது.
இவ்விஷயங்கள் கீதையின் சரமஸ்லோகத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
சரமஸ்லோகத்தை நன்றாக அறிந்து எம்பெருமான் திருவடிகளைப் பற்றும் போது
வேறு எந்த உபாயங்களிலும் ஈடுபாடு வராது.
தன்னுடைய அடிமைத் தன்மைக்கேற்ப தன்னுடைய எல்லாப் பொறுப்புக்களையும் அவனிடத்திலேயே ஒப்படைத்து
நிம்மதியாயிருப்பார்.
“நம்முடைய சகல க்ஷேமங்களுக்கும் எம்பெருமானே பொறுப்பாய் இருப்பவன்.
அதில் நமக்கு எவ்விதத் தொடர்புமில்லை” என்ற உண்மையை எண்ணிக் கொண்டு நிம்மதியாய் இருக்கும்
அவர்கள் நிலையை எண்ணித் தாமும் அவர்களில் ஒருவராகத் தம்மை நினைத்துத்
தம் நிலையைத் தாமே கூறுகிறார் இந்தப் பாடலில்.

தீர்த்த முயன்றாடுவதும் செய்தவங்கள் செய்வனவும்
பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் – சீர்த்துவரை
மன்னன் அடியோ மென்னும் வாழ்வு நமக்கீந்ததற்பின்
என்ன குறை வேண்டு மினி”–5-

பதவுரை:

முன் – மாபாரதப் போரில் (பார்த்தனை) மனம் கலங்கின அர்ஜுனனை
காத்தபிரான் – கீதோபதேசத்தால் மனம் தெளிவித்து காத்தருளி உதவி செய்த கண்ணபிரான்
பார்ப்பதன் முன் – திருக் கண்களால் நோக்குவதற்கு முன்பு
தீர்த்தம் – புண்ணிய நதிகளான கங்கை முதலிய தீர்த்தங்களில் (பாபம் கழிவதற்காக)
முயன்று – முயற்சிகள் செய்து
ஆடுவதும் – முழுகிக் குளிப்பதுவும்
செய்தவங்கள் – உடல் வருந்தச் செய்யும் நோன்புகளும்
செய்வனவும் – மற்றும் செய்யும் புண்ணியங்களும்
சீர்த்துவரை – சீர்மை மிகுந்த துவராபதிக்கு மன்னன் இறைவனான கண்ணன்
நமக்கு – அவனுடைய அடியவர்களான நமக்கு
அடியோம் என்னும் வாழ்வு – அடிமைத் தன்மையாகிற நற்செல்வத்தை
ஈந்ததற்பின் – அருளின பின்பு
இனி – இனி வரும் காலமெல்லாம்
வேண்டும் குறை என்ன – சாதனங்கள் பற்றியும் பலன்கள் பற்றியும் குறைபட வேணுமோ?
(எதைப் பற்றியும் குறைபட வேண்டாம் என்பதாம்)

தீர்த்தம் முயன்று ஆடுவதும் –
கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான புண்ணிய தீர்த்தங்களிலே பாபத்தைக் கழிப்பதற்காகப்
பெரிய முயற்சியோடே குடைந்து நீராடுவதும் அதாவது உடம்பு முழுவதும் நனையும்படி
நீரில் முழுகுதல் (தீர்த்தங்கள் புண்ணிய ஜலங்கள்)

செய்தவங்கள் செய்வனவும் – ஊன்வாட உண்ணாது…
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நின்றும் வீழ்கனியும், ஊழ் இலையும் என்னும்
இவையே நுகர்ந்து உடலம் தான் வருந்தி என்பது முதலான ஆழ்வார்கள் பாசுரங்களில் சொல்லுகிறபடி
உடலை வருந்துவதற்காகச் செய்யப்படும் நோன்புகள் பலவற்றைச் செய்வனவும்.
இங்குச் சொல்கிற தவங்கள் என்னும் பன்மையினால் தானம், யாகம் முதலிய புண்ணியங்களும் அடங்கும்.

பார்த்தனை முன் காத்தபிரான் பார்ப்பதன் முன் –
அதாவது
அர்ஜுனனுக்கு கண்ணபிரான் பகவத் கீதயில் கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் முதலான
வேறு வேறு உபாயங்களையெல்லாம் உபதேசித்தான்.
அவற்றை எல்லாம் கேட்ட அர்ஜுனன் அவற்றை செயலாற்றுவதில் உண்டாகும் அருமையையும்
எம்பெருமானுக்கு ஆன்மா அடிமையாய் இருத்தலால் அடிமையாய் இருப்பவன் ஒரு உபாயத்தைச் செய்வதற்கு
உரிமையில்லாதவனாக இருப்பதையும் எண்ணிப் பார்த்து, கண்ணன் சொன்ன கர்ம, ஞான, பக்தியாகிற
இவ் வுபாயங்களை நாம் எப்படிக் கடைப்பிடிப்பது என்று எண்ணி துன்பப்பட்ட அர்ஜுனனைப் பார்த்து கண்ணன் இவ்வாறு சொன்னான்.

“அர்ஜுனா, கீழே நான் உபதேசித்த கர்மயோக, ஞானயோக, பக்தியோகமாகிற உபாயங்கள் ஒன்றையும் நீ செய்ய வேண்டாம்.
நான் சொன்ன அவற்றை அறவே விட்டுவிடு. அவற்றை நெஞ்சாலும் நினையாதே. நான் நற்குணக் கடலாயிருப்பவன்.
அடியவர்க்கு எளியவன். அடியவர் பிழை பாராதவன் பிழை பொறுப்பவன். நுண்ணறிவுடையவன்.
மிக்க ஆற்றல் உடையவன். பலம் உடையவன். இவ்வாறான குணங்கள் பலவுமுடைய என்னையே நீ உபாயமாகப் பற்றுவாயாக.
என்னைப் பற்றும் போது “கண்ணன் நம்மிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான். அவனுக்கு எதையும் கொடுக்க வேண்டாம்,
என்று என்னைப் பரிபூர்ணனாக நினைத்துப் பற்றவேண்டும்.”

இவ்வாறு என்னைப் பற்றினால் அறிவு, ஆற்றல் முதலிய குணங்களையுடைய முழுமுதற் கடவுளாகிற நான்
உன்னுடைய அறியாமை, சோர்வு, திறலின்மை முதலிய குணங்களை எண்ணுவேன்.
என்னிடத்தில் உன்னுடைய அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்த நிலையும் எண்ணுவேன்.
“இந்த நிலையில் இருக்கும் உன்னை ஒருபொழுதும் நான் கைவிட மாட்டேன்.”
என்னை அடைவதற்குத் தடையாக என்னென்ன பாபங்கள் உன்னிடத்தில் இருக்கின்றனவோ
அந்தந்த பாவங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிப்பேன். ஆகையினால் நீ கவலைப்பட வேண்டாம்” என்று
அர்ஜுனனுக்கு உபதேசித்து அவனுடைய சோகத்தைத் தீர்த்து அவனைக் காத்தருளினான்.

இத்தகைய பேருபகாரம் செய்த பகவானுடைய அருள் கண் நோக்கம் பெறுவதற்கு முன்பு என்று
(இவ்வாறு கூறிய அதனால் கண்ணன் சொன்ன வார்த்தையின் அர்த்தம் நெஞ்சில் படுவதற்கு முன்பு என்றவாறு).

சீர்த்துவரை மன்னன் –
“பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரையென்னுமதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்” என்கிறபடி
வேறு ஒருவர்க்கு அன்றி தனக்கே உரியராய்த் தன்னை அன்றி வேறு உபாயத்திலோ
வேறு பலன்களிலோ தொடர்பு இல்லாதவராய் இருக்கும் தன் மனைவியர்க்கு
மணாளனாய்க் கொண்டு ஸ்ரீமத் துவாரகாபுரிக்கு தலைவனாயிருக்கிறவன்” என்று பொருள்.

அடியோம் என்னும் வாழ்வு –
மேற்படி அவனுக்கு நாம் அடிமைப்பட்டவர் என்றறிந்து ‘தன்னைக் காத்துக் கொள்வதற்காகத் தன் முயற்சியில்
ஈடுபடாமலிருக்கும் அதாவது அவனையே எதிர்நோக்கி இருக்கும் நற்செல்வத்தை நமக்குக் கொடுத்துவிட்ட பிறகு என்பது இதன் பொருள்.

இத்தொடரில் அடியோம் என்று கூறியதால்
ஆன்மா ஞான ஆனந்த குணங்களுக்கு இருப்பிடமாயிருந்தாலும் அவற்றைக் காட்டிலும் அடிமைத் தன்மையே
அதற்கு உண்மை இலக்கணமாகத் தெரிய வருகிறது. ஆன்மாவுக்கு இதுவே முக்கிய அடையாளமாகும்.

‘வாழ்வு’ என்பதால்
இவ்வடிமைத் தன்மையை அறியும்போது தன் முயற்சி ஒழிதல், தன் நலம் ஒழிதல் முதலிய நற்பண்புகள் உண்டாகின்றன.
இவையே ஆன்மாவுக்குரிய செல்வமான வாழ்வு என்பதாம்.

நமக்கு ஈந்ததற்பின் –
எப்பொழுதும் இவ்வடிமைத் தன்மை ஆன்மாவுக்கு இருந்தாலும் அதை இழந்திருந்த என்று பொருள்.
ஈந்ததற்பின் என்றது –
இவ்வுண்மை அறிவு உண்டானதும் அவனருளாலே என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு அவன் நமக்கு அடிமைச் செல்வமாகிற இந்நல்வாழ்வைக் கொடுத்து விட்ட பிறகு.

என்ன குறைவேண்டுமினி –
அதாவது,
இனிமேல் வரும் காலங்களில் உபாயத்தைப் பற்றியோ எந்தக் குறையும் படவேண்டியதில்லை.
இதனால் பகவான் ‘கவலைப்படாதே’ என்று அர்ஜுனனைப் பார்த்துச் சொன்னதில் நாமும் நம் காரியங்களில்
எந்த பிரச்சினைகளும் இல்லாமல் பொறுப்பு ஏதுமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று பொருள் சொல்லப்பட்டது.

————-

பகவானை அடைவதற்கு வழியாகக் கர்ம யோக, ஞான யோக, பக்தி யோகாதிகள் சாஸ்திரங்களிலே
சொல்லப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் நடைமுறையில் செயல்படுத்த முடியாதவை என்றும்,
ஆத்மாவின் அடிமை இலக்கணத்திற்கு முரணானவை என்றும்,
குற்றங்களைச் சொல்லிப் பல ஆதாரங்களைக் கொண்டு புறக்கணிக்கப்பட்டதால் இனி அவை தொடர வாய்ப்பில்லை ஆகிவிட்டது.
ஆத்மாவின் க்ஷேமத்திற்கு மேலே சொன்ன குற்றங்கள் அற்றுப் போன நிலையே பெரும் பேறாகும்.
ஆயினும் நீண்ட காலம் (பல பிறப்புக்களில்) ஐம்புலன் அனுபவங்களில் பழகிப்போந்த ஆத்மாவுக்கு,
சாஸ்திரங்கள் குற்றம் என்று கடிந்து பேசின செல்வத்தைக் கண்டால், அதன்மேல் ஆசை செல்லாதிருக்குமோ?
செல்வத்தின் கவர்ச்சி நெஞ்சை கலங்கப் பண்ணாதோ? என்னும் சாதாரண மானிடருடைய நிலையில்
இத்தகைய கேள்வி எழுந்தால் அதற்குத் தக்க பதில் இப்பாடல் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.

அதாவது, பகவானுக்குத் தொண்டு செய்து அதன் சுவையை அறிந்தவர்கள்,
செல்வத்துக்கு எல்லையான ப்ரம்மபதம் கிடைத்தாலும் அதை ஒரு பொருளாக விரும்பார்;
அற்பப் பொருளால் நெஞ்சு கலங்கமாட்டார்கள் என்று விடையளிக்கிறார்.
இதற்கு உதாரணம் ஸ்ரீராமாயணத்தில் சரபங்க முனிவரது வரலாற்றைக் காணலாம்.

ஸ்ரீராமபிரான் தண்டக வனத்தில் சரபங்க முனிவரது தவக்குடிலுக்குச் சென்றான்.
அப்பொழுது இந்திரன், முனிவரோடு உரையாடிக் கொண்டிருந்தான்.
அவன் சென்ற பிறகு ராமபிரான் முனிவரை அணுகி வந்தனை புரிந்து நிற்கையில் முனிவன் கூறினான்.
தமது ஞானக்கண்ணால் ஸ்ரீராமபிரானைப் பார்த்து ‘ஆழியில் அரிதுயிலவன்’ என மகிழ்ந்து
“இந்திரன் அருளினன் இறுதி செய் பகலா வந்தனன். மருவுதி மலர் அயன் உலகம் தந்தனென்”
“என் உரவோய்! அந்தமில் உயர்பதம் அடைதலை முயல்வேன்” என்று கூறினான்.

அதாவது, ப்ரம்மதேவன் முனிவனைத் தன் உலகத்திற்கு இந்திரனை அனுப்பி அழைத்துவரச்
சொன்னதாகவும் சரபங்க முனிவன், அவ்வுலகத்திற்கு நான் வரமாட்டேன் என்று சொன்னதாகவும்,
“நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன். இனி ஒரு வினை இலை:- விறலோய்!” என்று கூறி
இராமனைப் பார்த்துக் கொண்டே அந்தமில் உயர் பதமான பரம பதத்தை அடைந்தான் என்னும் வரலாறு கூறப்படுகிறது.

இத்தகைய சரபங்க முனிவன் பிரம்மபதத்தை ஒரு பொருளாக மதிக்காமல் இறை இன்பத்தையே கூறுவதால்,
உண்மையை உணர்ந்த ஞானிகளைச் செல்வம் கலங்கப் பண்ணாது என்பது கண்கூடு.
இப்பாடல் மூலம் இவ்வுண்மை உணர்த்தப்படுகிறது.

“புண்டரிகை கேள்வன் அடியார் அப் பூமிசையோன்
அண்டமொரு பொருள் ஆதரியார் – மண்டி
மலங்க ஒரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக்
கலங்கிடுமோ முந்நீர்க் கடல்”–6-

பதவுரை:-

புண்டரிகை -தாமரையில் பிறந்த லக்ஷ்மீ தேவிக்கு
கேள்வன் -மணவாளனான ஸ்ரீ ய::பதியின்
அடியார்-தொண்டராயிருப்பவர்கள்
அப்பூமிசையோன் -தாமரை மலரில் பகவானுடைய அழகிய கொப்பூழ் பிறந்த பிரமனின்
அண்டம் பதினான்கு =உலகங்கள் கூடின அண்டத்தை
ஒரு பொருளா -ஒரு சரக்காக
ஆதரியார் -மதிக்க மாட்டார்கள்
ஒரு மீன் =ஒரு மீனானது
மண்டி -தன் ஆற்றல் எல்லாவற்றோடும் நெருங்கி
மலங்க –நிலை குலைந்து கலங்கும்படி
புரண்ட மாத்திரத்தால் =இடப்புறமாக வலப்புறமாக புரளுவதால்
முந்நீர்க்கடல் -மூன்று வகையான நீர் சேர்ந்த கடலானது
ஆர்த்து =நிலை குலைந்து பேர் ஒலி செய்து
கலங்கிடுமோ -கலக்கத்தை அடையுமோ? அடையாது

“பண்டை நாளாலே நின்றிருவருளும் பங்கயத்தாள் திருவருளுங் கொண்டு” என்று நம்மாழ்வார் கூறினார்.
பகவான் பிராட்டி இவ்விருவருடையவும் சிறப்பான அருள் நோக்கினால், பண்டை வினைகளிலிருந்து திருந்தி
அதாவது
“யானே என்னை அறியகிலாதே, யானே எனதனதே என்றிருந்தேன், யானே நீ என் உடைமையும் நீயே” என்று பேசும்படி ஆனார்.
இத்தகையவர்கள் பகவானுக்கு அடிமையாய் இருக்கும் தன்மையையே தங்களுக்குச் சின்னமாகக் (முத்திரையாகக்) கொண்டு
அவனுகந்த பணியைச் செய்வது ஒன்றிலேயே திளைத்திருப்பார்கள்.

(அப்பூமிசையோன் அண்டம் ஒரு பொருளா ஆதரியார்). செல்வத்துக்குக் கடைசி எல்லையாக நூல்களில் சொல்லப்படுவது
பிரமபதம் நான்முகக் கடவுளுக்கிருக்கை. அப்பிரமன் திருமாலின் கொப்பூழ்த்தாமரையில் பிறந்தவன்
அவனுடைய மகிழ்ச்சிக்கு காரணமாயும் பதினான்கு அடுக்குகள் கொண்டதுமான
இப்பிரமாண்டத்தை அடியார்கள் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்கள் என்பதாம்.

உடலுக்கும் உயிருக்கும் வேறுபாடு காணாமல் உடலையே உயிராக எண்ணும் அறிவிலிகளுக்கும்
இவ்வான்மா பகவானுக்கு அடிமையாய் இருக்கும் என்பது அறியாமல்,
தான் என்றும், தனது என்றும் தன்னை சுதந்திரமாக நினைத்திருக்கும் மூடர்களுக்குமே செல்வம் இன்பகரமாய்
அடைய வேண்டிய குறிக்கோளாயிருக்கும்.

பகவானுக்கு அடிமையாயிருக்கும் சுவையை அறிந்தவர்களுக்குச் செல்வம் சுவையற்றதாய் அருவருக்கத் தக்கதாய் இருக்கும்.
ஆகையால் அச்செல்வத்தை இறைவன் அடியார்கள் ஆதரிப்பார்களோ? ஆதரிக்க மாட்டார்கள் என்றவாறு.

இவ்வாறு சொல்லலாமா? செல்வத்தினுடைய கவர்ச்சி மிகு எழுச்சி, தன்னை ஆசைப்படும்படி
எத்தகையவராக இருந்தாலும் அவர்கள் நெஞ்சை கலங்கப் பண்ணாதோ? என்ற இவ்வினாவிற்கு

“மண்டி மலங்க ஒரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக் கலங்கிடுமோ முந்நீர்க்கடல்” என்று பதில் சொல்கிறார்.
இதன் பொருள் –
ஒரு மீனானது தன் வலிமை எல்லாவற்றோடும் கூடித் தள்ளிக் கொண்டு நிலை குலைத்துக் கலங்கும்படி
இடம் – வலமாகப் புரண்ட மாத்திரத்தால் கடல் கலங்குமோ? என்பதாம்.

கடலுக்கு “முந்நீர்” என்று பெயர்.
ஆற்று நீர், ஊற்று நீர், மழைநீர் என்ற இம்மூன்றும் சேர்வதால் கடலுக்கு முந்நீர் என்று பெயர்.
மீனுடைய புரட்சியால் கடல் கலங்கினாலன்றோ
செல்வத்தின் எழுச்சி கண்டால் இறை அன்பர்களின் பற்றற்ற மனம் கலங்குவதாகும்.
ஆகவே, எத்தகைய பெருஞ்செல்வத்திற்கும் இறைவனடியார்கள் மனம் கலங்கமாட்டார்கள் என்பது பொருள்.

————-

அடிமைச் சுவை அறிந்தவர்கள் செல்வத்துக்கு எல்லையான பிரம்ம பதத்தையும் விரும்பார்கள் என்று கீழ்ச் சொல்லப்பட்டது.
இதில் இறைவனது அழகிலே தோற்ற அவனுக்கு அடிமையானவர்கள் வேறு விஷயங்களை ஆதரிக்க மாட்டார்களென்று கூறப்படுகிறது.

“தோளார் சுடர்த்திகிரி சங்குடைய சுந்தரனுக்
காளானார் மற்றொன்றில் அன்புசெய்யார் – மீளாப்
பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு
நரகன்றோ இந்திரன் தன் நாடு”–7-

பதவுரை:

தோளார் -திருத்தோள்களோடே சேர்ந்துள்ள
சுடர்த்திகிரி-ஒளியுடைய சக்கரத்தையும்
சங்குடைய சுந்தரனுக்கு-சங்கையும் அழகையும் உடையவனுக்கு
ஆளானார்-அடிமையானவர்கள்
மற்றொன்றில் -அவனைத் தவிர வேறு ஒரு பொருளில்
அன்பு செய்யார் -பற்றுச் செய்ய மாட்டார்கள்
மீளா -திரும்பவும் வராததும்
பொருவரிய -உவமை இல்லாததுமான
விண்ணாட்டில் -மாக வைகுந்தம் என்று சொல்லப்படும் வைகுந்தத்தில்
போகம் –பேரின்பத்தை
நுகர்வார்க்கு –துய்ப்பவர்க்கு
இந்திரன் தன் நாடு -இந்திரனுக்குரிய சுவர்க்கமும்
நரகன்றோ =துன்பமயமாகும் அன்றோ

“தோளார் சுடர்த்திகிரி சங்குடைய சுந்தரனுக்கு”
திருத்தோள்களோடு சேர்ந்திருந்துள்ள ஒளிமயமான திருவாழியையும் அழகிய சங்கத்தையும் ஏந்தியிருப்பதாலே
உண்டான அழகனுக்கு என்று பொருள்.
“மனைப்பாற் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதாரத் தோள்” என்ற பூதத்தார்

பாடலில் இறைவனின் தோள்களைக் கண்களால் ஆரத் தொழுபவர்கள்,
இவ்வுலகில் அனுபவிக்கும் சிற்றின்பத்தையெல்லாம் துறந்து விடுவார்கள் என்று கூறினார்.

ஸ்ரீராமாயணத்தில், இராமபிரானது தோள் அழகைக் கண்டவர்கள் வேறு எதையும் காணவில்லை (காண விரும்பவில்லை)
“தோள் கண்டார் தோளே கண்டார்” என்றும்,
“ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்” என்றும் விசுவாமித்திரர் வாயிலாகவும் கம்பர் கூறுகிறார்.

நம்மாழ்வாரும் ‘தோளுமோர் நான்குடைக் காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம்’ என்றார்.

திருமாலின் திருவழகுக்கு கண் எச்சில் வராமல் ஆரத்தி எடுக்க வேணும்.
அத்தகைய அழகைக் கண்டவர்களின் உலகப் பற்றுதல்கள் அனைத்தையும் அறுக்க வல்லதான திருத்தோள்கள் என்றும்
“அணியார் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்” என்றார் ஆழ்வார்.
திருவாழியும் ஏந்து கையால் வந்த அழகு கூடினால் அழகு இரட்டித்திருக்கும் என்று
சங்கு சக்கரம் ஏந்தின தோள் அழகை வருணித்தார்.

ஆளானார் –
இவ்வாறு இருந்துள்ள அழகை உடையவனுக்கு அவ்வழகுக்குத் தோற்று அடிமையானவர்கள் என்று பொருள்.
இறைவனுக்கு அடிமையாயிருத்தல் இரண்டு வகையாகச் சொல்லப்படுகிறது.
ஒன்று அவனுடைய தலைமைக்கு அடிமையாதல்
மற்றொன்று அவன் குணத்துக்கு அடிமையாதல்.

புண்டரீக கேள்வனடியார் – என்றவிடத்து
தலைமைக்கு அடிமை என்று சொல்லப்பட்டது.
‘சுந்தரனுக்கு ஆளானார்’ என்ற இவ்விடத்தில்
அழகாகிற குணத்திற்கு அடிமையாதல் சொல்லப்படுகிறது.
ஆகவே, இரண்டு வகையான வழிகளாலும் அடியவர்களைத் தோற்கடித்து ‘அடியேன்’ என்று எழுதிக் கொடுக்கும்படி
செய்யும் பகவானின் அழகிய பெருமை இருப்பதால்
இங்கு இப்பொழுது அழகுக்குத் தோற்று அடிமையானவர்களைச் சொல்கிறது.

மற்றொன்றில் அன்பு செய்யார் –
அதாவது
“ஆன்மாவின் இயல்புக்கும் பகவானின் குணங்களுக்கும் அடிமையானவர்கள், அவற்றிற்கு வேறாயிருக்கும்
இவ்வுலக விஷயங்கள் ஒன்றிலும் பற்றுக் கொள்ள மாட்டார்கள்.”
பரமபதமாகிற திருநாடு சுத்த சத்வ குணமயமானவை.
அதனால் இவை ப்ராக்ருதம் என்றும் அவை அப்ராக்ருதம் என்றும் சொல்லப்படும்.
இங்குள்ள பொருள்களெல்லாம் கணந்தோறும் மாறுபட்டுக் கொண்டிருக்கும்
அங்குள்ள பொருள்கள் என்றைக்கும் ஒரு படியாகவே இருக்கும்.
மற்றும் அங்குள்ள பொருள்கள் மனதைக் கவருவதாக இருக்கும்.
இவ்வாறாக, இவ்வுலகப் பொருள்களின் தாழ்வுகளையும் அவ்வுலகப் பொருள்களின் உயர்வுகளையும் ஆராய்ந்து அறிந்து
அந்தமில் இன்பத்து அழிவில் வீடு என்று கூறப்படுகிற அப்பரமபதமாகிற அப்பேரின்பத்திற்குத் தோற்றிருக்கும் அவர்கள்
இவ்வுலகப் பொருள்களை விரும்புவார்களோ? மாட்டார்கள்.
காரணம், இவ்வுலகப் பொருள்கள் மேலுக்குக் கவரிச்சியாயிருந்து உள்ளுக்குக் குற்றமுடையதாயிருக்கும்,
அருவருக்கத் தகுந்ததாயும் இருக்கும். ஆகவே இதை விரும்பமாட்டார்கள் என்றவாறு.

இவ்வுலக விஷயங்கள் குற்றமுடையதாயும் அருவரூக்கத் தகுந்ததாயும் இருந்தாலும்
சுவர்க்கம் முதலிய ஏனைய மேலுலகங்களிலுள்ள உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பொருள்களும் சிறப்பாகப் பேசப்படுகின்றனவே
அவற்றைக் கண்டால் அந்த சுவர்க்கம் முதலிய இடங்களில் பற்றுச் செய்யாதோ என்று கேள்வி எழுந்தால்
அதற்குத் தகுந்த பதில் சொல்லப்படுகிறது மேல் தொடரால்.

“மீளாப் பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு” என்று தொடங்கி
அதாவது
வீடுபேறு என்பது “அழிவில் வீடு” என்று கூறப்படுகிறது.
மறுபிறவி இல்லாதது முக்குணங்களுக்கு அப்பாற்பட்டுத் தூய சத்வ மயமானது. அளவு கடந்த ஒளிமயமானது.
தனக்கு உவமையில்லாதது. மேலான வானம் என்று புனைந்து பாராட்டப் பெற்றது.
இத்தகைய திருநாட்டில் இன்பத்தை நுகர வேண்டும் என்று அவா உடையவர்களுக்கு என்று பொருள்.

நரகன்றோ இந்திரன்தன் நாடு –
அதாவது
கீழே சொல்லப்பட்ட சுவர்க்கம் முதலிய உலகங்கள் புண்ணியத்தால் அடையப்படுவது.
புண்ணியம் கழிந்தவாறே அங்கிருந்து தலைகீழாக இம்மண்ணுலகில் விழும்படி இருப்பது.
சுவர்க்கத்திற்கு ஒப்பான மற்றும் பலபல லோகங்களையும் உடையதாய் வினைவயப்பட்ட இந்திரன் முதலிய
தேவர்களின் அனுபவங்களுக்கு இடமாய் உள்ளன.
இத்தகைய சுவர்க்கம் முதலிய உலகங்கள் நரகத்திற்கு ஒப்பாகும் அல்லவா?
ஆகவே அடுக்கடுக்காக உள்ள பதினான்கு உலகங்கள் கூடிய இவ்வண்டம்
பரமபதத்தில் வாழ்வாருக்கு துன்பத்திற்கிடமான நரகமேயாகும் என்பதாம்.

———–

வேறு பயன் ஒன்றையும் விரும்பாமல் பகவத் அனுபவ கைங்கர்யத்தையே பெரும் பயனாகக் கொண்டு
பகவானிடம் மிக்க அன்புடையவர்கள் அடிமை செய்யும் போது முறை தவறிச் செய்தாலும்
அதைப் பகவான் மிகவும் களிப்புடன் தலையால் தாங்குவான் என்று சொல்லப்படுகிறது.
கீதையில் தன் பக்தன் பக்தியோடு கொடுக்கும் இலை, பூ, பழம், நீர் ஆகிய அனைத்தையும்
நான் அன்போடு அருந்துகிறேன் என்று கூறுகிறான். இதில் இலை, பூ சேர்க்கப்பட்டுள்ளன.
பக்தன் அன்பினால் கொடுப்பதால் அது எதுவாயினும் அதை அருந்துவதாகச் சொல்வதால்
கொடுக்கிற பொருளைப் பார்க்காமல் அவன் நெஞ்சில் அன்பையே பார்த்து ஏற்கிறான் என்பதை உணரலாம்.
இக்கருத்து இப்பாடலில் கூறப்படுகிறது.

“முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில் வண்ணன்
கற்றைத் துழாய் சேர் கழலன்றி – மற்றொன்றை
இச்சியா அன்பர் தனக்கு எங்ஙனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து”–8-

பதவுரை:

புவனமெல்லாம் -எல்லா உலகங்களையும்
முற்ற உண்ட -ஒன்று விடாமல் அனைத்தையும் விழுங்கித் தன் வயிற்றில் வைத்துக் கொண்ட
முகில் வண்ணன் -மேகம் போன்ற திருமேனியை உடைய இறைவனின்
கற்றைத் துழாய்சேர் -தழைக்கின்ற திருத்துழாய் சேர்ந்துள்ள
கழலன்றி -திருவடிகளைத் தவிர
மற்றொன்றை -வேறு ஒரு பயனையும்
இச்சியா அன்பர் -விரும்பாத பக்தர்கள்
தனக்கு –இறைவனான தனக்கு
எங்ஙனே செய்திடினும் -அடிமைகளை எப்படிச் செய்தாலும்
உகந்து -மிகவும் மகிழ்ந்து
உச்சியால் ஏற்கும் -தலையால் ஏற்றுக் கொள்வான்

“முற்றப் புவனம் எல்லாம் உண்ட முகில்வண்ணன்” –
அழிவு காலத்தில் அழிபடாமல் அனைத்து உலகங்களையும் ஒன்று விடாமல் தனது வயிற்றிலே வைத்துக் காக்கிறவன்
என்று கதை சொல்லப்படுகிறது.
இவ்வாறு உலகங்களைக் காத்தது பிறர்க்குச் செய்ததாக இல்லாமல் தன் பயனாகச் செய்பவன் என்ற கருத்தை
அவனது நீருண்ட காளமேகம் போன்ற வடிவின் நிறத்தைப் பார்த்தாலே தெரியும்.
மேகமும் பிறர்க்காகவேயிருப்பது.
பகவானும் பக்தர்களுக்காகவே இருக்கிறவன் என்ற குறிப்புப் பொருள் இங்குப் புலனாகிறது.

இப்போது இதைச் சொல்கிறது.
‘தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்’ என்ற பாசுரத்தில் சொன்னபடி
ஆபத்து காலத்தில் உலகங்களையும் அவையறியாதிருக்க, தானறிந்த உறவையே காரணமாகக் கொண்டு
தன் வயிற்றிலே வைத்து ரட்சித்தது தனக்கு லாபம் என்னும் கருத்தை தன் வடிவிலே தெரியும்படி இருந்தான்
என்று விளக்கம் சொல்லப்படுகிறது.
இதனால் வேறு பயன் ஒன்றையும் விரும்பாமல் தன்னிடம் மிக அன்புடையவர்கள் தன்னிடத்தில் செய்யும்
தொண்டுகளை ஆதரவுடன் ஏற்றுக் கொள்வான் என்னும் கருத்து குறிப்பால் உணரப்படுகிறது.

கற்றைத் துழாய் சேர் கழலன்றி –
இதில் பகவானுடைய திருவடிகளின் இனிமை சொல்லப்படுகிறது.
‘பூமியில் வளரும் திருத்துழாயைக் காட்டிலும் அவன் திருமேனியில் சாத்தப்பட்ட திருத்துழாய்
திருமேனியின் தொடர்பினால் தழை விடுகிறது. அத்தகைய தழைத்திருந்துள்ள திருத்துழாயோடே சேர்ந்திருந்துள்ள
திருவடிகளைத் தவிர என்பது பொருள்.
இக்கூற்றால் அவன் திருவடிகளில் உள்ள அலங்காரத்திற்கும் அழகுக்கும் சிறப்பு அறியப்படுகிறது

மற்றொன்றை இச்சியா அன்பர் –
இப்படியான மிக இனிமை பொருந்திய அவன் திருவடிகளை யொழிய
வேறு ஒரு பயனையும் விரும்பாத மிக்க அன்புடையவர்கள் என்பது இதன் பொருள்.

உலகில் பெரும்பாலும் பகவானை விரும்பாமல் அவனிடம் வேறு வேறு பயன்களைப் பெறுவதற்காக
அவனுக்கு ஏதோ உபசாரம் செய்வது போல செய்வார்கள். இது உலக இயல்பு.

இவ்வாறு இல்லாமல் ஸ்ரீஆண்டாள் அருளியபடி
“உனக்கு உகந்த நூறு தடா அக்கார வடிசலும் நூறு தடாவில் வெண்ணையும் சமர்ப்பிக்கிறேன்.
இதை நீ ஏற்றுக் கொண்டால் நூறை ஆயிரமாகப் பெருக்கிக் கொடுப்பதோடு நானும் உனக்கு ஆட்செய்வேன்” என்றாள்.
இது அவன் ஏற்றுக் கொண்டதற்குப் பலனாக சொல்லப்பட்டது.
அது போல பக்தர்கள் செய்யும் தொண்டினை அவன் ஏற்றுக் கொண்டால் மேலும் ஒன்றுக்கு மேல் பலவாகத்
தொண்டுகளே செய்வது பகவத் பக்தர்களின் இயல்பு.
இத் தகையவர்களுக்குப் பயன் கருதாமல் செய்யும் பண்புடையாளார் என்று பெயர்.

தனக்கு எங்ஙனே செய்திடினும் –
மேற்கூறிய அடியார்கள் தனக்கு அடிமை செய்யும் போது
அன்பில் வயப்பட்டு
முறையாகவோ
முறை தவறியோ
தொண்டுகளை எப்படிச் செய்தாலும்.

உச்சியால் ஏற்கும் உகந்து –
மிகவும் மகிழ்ச்சியுடன் தலையாலே ஏற்பான் என்பது பொருள்.

எங்ஙனே செய்திடினும் – உச்சியால் ஏற்கும் என்பதன் பொருள்.
பக்தன் காலாலே தூக்கி எறிந்ததையும் அவன் தலையாலே ஏற்பான் என்பதாம்.
உதாரணம் பெரியாழ்வார். (கண்ணனுக்காக) பெருமாளுக்காகத் தொகுத்து வைத்த மாலையை
ஸ்ரீஆண்டாள் தன் தலையில் சூட்டி அழகு பார்த்தாள்.
அம்மாலையில் ஸ்ரீஆண்டாள் தலையில் சிக்கிய கேசம் பின்னியிருப்பதைப் பார்த்த ஆழ்வார்
வெளியில் தூக்கி எறிந்து வேறு மாலையைக் கட்டிக் கொண்டு சென்றார்.
பெருமாள், ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்து எறியப்பட்ட அம்மாலைதான் தனக்கு வேணும் என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.
இன்றும் ஸ்ரீஆண்டாள் சூடின மாலையைப் பெருமாள் தலையால் சுமப்பதைக் காணலாம்.
இவ்வாறான பல உதாரணங்கள் காணலாம்.

—————–

பகவானிடம் வேறு பயன் எதையும் விரும்பாமல் அடிமை செய்தலையே விரும்பியிருக்கும்
அடியாரிடத்தில் அவனுக்குண்டான ஈடுபாட்டைக் கீழ்ப் பாடலில் கூறினார்.

இதில் கீழ்ச் சொன்ன ஈடுபாட்டைக் காட்டிலும் இன்னமும் அதிகமான ஈடுபாட்டைச் சொல்கிறார்.
இதில் பகவான்தான் பக்தர்களின் நெஞ்சைச் சோதனை செய்து அதைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்கிறான்.

அவ்வாறு நெஞ்சில் சோதனை செய்தாவது,
“இந்த நெஞ்சு நம்மை மட்டுமே நினைக்கிறதா?
நம்மிடம் ஏதாவது வேறு பயனை விரும்பி நம்மை நினைக்கிறதா?
எந்தப் பயனையும் நினைக்காமல் நம்மையே நினைக்கிறதா?” என்று ஆராய்ந்து பார்த்து
வேறு பயன் எதையும் விரும்பாமல் அவனை நினைப்பதுவே பயனாக எந்த நெஞ்சம் இருக்கிறதோ
அந்த நெஞ்சமே அவன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இடமாகும் என்ற கருத்து இங்கு சொல்லப்படுகிறது.

“ஆசில் அருளால் அனைத்து உலகும் காத்தளிக்கும்
வாச மலராள் மணவாளன் – தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறொன்றை
யெண்ணாதார் நெஞ்சத் திருப்பு”–9-

பதவுரை:

ஆசில் -குற்றமில்லாத
அருளால் -கருணையினால்
அனைத்து உலகும் -எல்லா உலகத்தையும்
காத்து -இரட்சித்து
அளிக்கும் –விருப்பங்களைக் கொடுக்கும்
வாச மலராள் மணவாளன் -தாமரையில் பிறந்த பிராட்டிக்கு நாயகனான பகவான்
தேசு பொலி -ஒளி மயமான
விண்ணாட்டில் -ஸ்ரீவைகுண்டத்தைக் காட்டிலும்
வேறு ஒன்றை எண்ணாதார் -தன்னையொழிய வேறு எதையும் நினைக்காதவர்களுடைய
நெஞ்சத்து -இதயத்தில்
இருப்பு -குடியிருப்பை
சால -மிகவும்
விரும்பும் -ஆதரிக்கும்

அருளுக்குக் குற்றமாவது என் எனில்?
ஒரு காரணத்தைப் பற்றி அருள் செய்தால் அவ்வருள் குற்றமாகும்.
அருளுக்கு இலக்கணம் கூற வந்த பரிமேலழகர்,
அருளாவது – தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை என்று கூறினார்.
இது துறவறத்திற்கு அடிப்படைப் பண்பாகக் கூறப்பட்டது.

அருளைப் பற்றி இவ்வாறு அறியும்போது இதோடு தொடர்புடைய அன்பைப் பற்றியும் அறிய வேண்டியதொன்றாகும்.
அதாவது மனைவி, மக்கள் முதலிய தொடர்புடையாரிடத்தில் செலுத்தும் அன்பு காதல் என்று விளக்கப்பட்டுள்ளது.
ஆகவே அதற்கு அருள் வேறுபட்டது.
தொடர்பு முதலிய எவ்விதக் காரணமும் இல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் கருணை தான்
பகவானுக்கும் பகவத் பக்தர்களுக்குமே உள்ள பண்பு என்று உணர வேணும்.

அனைத்துலகும் –
எல்லா உலகத்தையும்
பூமிக்கு மேலே ஏழு உலகங்களும் பூமிக்கு கீழே ஏழு உலகங்களுமாக மொத்தம் பதினான்கு உலகங்கள் என்று சொல்லப்பட்டுள்ளன.
இந்த பதினான்கிற்கும் சேர்த்து அண்டம் என்று பெயர்.
பூமிக்கு மேல் உள்ள ஏழு உலகங்களாவன:-
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனேலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்பன.
பூமிக்கு கீழ் உள்ள உலகங்களாவன:-
அதலம், விதலம், சுதலம், ரசாதலம், தலாதலம், மகாதலம், பாதாளம் என்பன.
ஆகவே இவை அனைத்துலகும் எனப்பட்டன.

ஒரு காரணத்தைப் பற்றி அருள் செய்வதானால் அவ்வருளில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும்.
பகவானுடைய அருள் எந்தக் காரணத்தைப் பற்றியும் நல்லவர் தீயவர் என்று பாகுபாடு பண்ணாமல்
எல்லோருக்கும் பொதுவாக இருப்பதால் ஆசிலருள் எனப்பட்டது.

இங்குச் சொல்லப்பட்ட உலகு என்ற சொல்
மக்களைக் குறிக்கும்.

காத்தளிக்கும் –
பக்தர்களுக்கு வேண்டாதவற்றைப் போக்கியும் வேண்டின விருப்பத்தைக் கொடுப்பதும் காத்தல் எனப்படும்.
இவ்விரண்டுமே இறைவனுடைய காக்கும் செயலாகும்.
வ்யாதி தீர்த்தல் ஒரு நன்மை.
அதுபோல வேண்டாததைக் கழித்தும் விரும்பியதைக் கொடுத்தலும் காத்தல் ஆகும்.
“காத்து” “அளிக்கும்” என்ற இரண்டு சொல்லும் ஒரே கருத்தைக் கூறுவதால் இவ்வாறு கூறப்பட்டது.

வாசமலராள் மணவாளன் –
“வேரி மாறாத பூமேலிருப்பாள்” என்று நம்மாழ்வார் அருளிச் செய்தபடி
தாமரையின் அழகு மாறாமையால் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கும் பெருமை உடையதும்
நறுமணம் அலை வீசுகின்றதுமான தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியார் என்று பொருள்.

அவளுக்குக் கணவனாகயிருப்பவன் என்று
வாசமலராள் மணவாளன் என்று எம்பெருமான் சிறப்பிக்கப்பட்டான்.

பெரிய பிராட்டியாருக்கு மணவாளன், “காத்தளிக்கும்” என்று கூறுவதால்
இறைவன் உலகங்களைக் காப்பதற்குப் பிராட்டியோடு கூடியிருந்து காக்கின்றான் என்றும்,
காக்கும் தொழிலில் பிராட்டிக்கும் முக்கிய பங்கு உண்டு என்றும் சொல்லும் வேதாந்தக் கருத்து இங்கு உணர்த்தப்படுகிறது.

மேலும் காத்தலுக்கு அடிப்படையான கருணை குணத்தைப் பிராட்டி
பகவானிடத்தில் தூண்டுகிறாள் என்றும்
அவ்வாறு இறைவன் உலக மக்களிடம் கருணை காட்டிக் காப்பதைக் கண்டு
மகிழ்தலும் பிராட்டியுடைய காரியமாகும் என்றும் அறியவேணும்.

இவ்வாறு பிராட்டியோடு கூடி நின்று ஆன்மாக்களைக் காப்பதில் பகவான் பண்ணின முயற்சி பயன் தரும்போது
அதாவது
இறைவனுடைய முயற்சிக்கு இலக்காகும் ஆன்மா சீர் திருந்தி (பண்டை வினைகளைப் பற்றோடு அறுத்து)
இறைவனைத் தவிர வேறு பயன்களை விரும்பாதவர்களாய்த் தூயனராகின்றார்கள்.
அத்தகைய தூய இதயத்தில் இறைவன் பண்ணும் அரவணைப்பின் சிறப்பு மேல் தொடரால் கூறப்படுகிறது.

தேசுபொலி விண்ணாட்டில் –
தேசுபொலி விண்ணாடு – பரமபதம், வைகுண்டம் என்று அழைக்கப்படுகிற அந்தமில் பேரின்பத்து அழிவில் வீடு என்பதாம்.
இது பெரிய பிராட்டியாரோடும் நித்ய சூரிகளோடும் பகவான் பேரின்பமாக எழுந்தருளியிருக்கிற இடம்.
இத்தகைய இன்பமிகு இடத்தைக் காட்டிலும்,

சால விரும்புமே –
மிகவும் உகந்திருக்கும் என்றவாறு.
ஏகாரம் ஈற்றசை இவ்வளவு ஆதரித்து நிற்கின்ற இடம் எது என்றால்
அது கூறப்படுகிறது மேல் தொடரால்.

வேறு ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்திருப்பு –
உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் என்று ஆழ்வார் இருந்தார்.
அவருக்குக் கண்ணனைத் தவிர வேறு பயன் எதுவும் தேவையில்லை.
அது போல, எல்லாப் பயன்களும் பகவானே என்று நினைத்து
வேறுபயன் எதையும் உள்ளத்தால் உள்ளலும் செய்யாமல் யார் இருக்கிறார்களோ
அவர்களுடைய இதயத்தில் இருக்கும் இருப்பு பரமபதத்தைக் காட்டிலும் மிக இன்பமாக இருக்கும் என்பது கருத்து.

—————

பகவானைத் தவிர வேறு பயன் எதையும் விரும்பாதார் உள்ளத்தில் இருந்தாலும்
அவ்விருப்பு அவனுக்குத் துன்பத்தைத் தருவதால் வெறுப்பாயிருக்கும் என்பதை இதில் அருளிச் செய்கிறார்.

பரமபதத்தைக் காட்டில் மிகவும் ஆதரவோடு இருப்பான் என்று கீழே சொன்னதற்கு மாறாக
இப்பாட்டில் வேறு வேறு பயன்களை விரும்புவாரது இதயங்களில் இருந்தாலும் அவ்விருப்பு
பகவானுக்கு துன்பத்தைத் தருவதால் பொறுக்க மாட்டாமல் இருக்கும் என்ற கருத்து இதில் கூறப்படுகிறது.

“நாளும் உலகை நலிகின்ற வாளரக்கன்
தோளும் முடியும் துணித்தவன்தன் – தாளில்
பொருந்தாதார் உள்ளத்துப் பூமடந்தை கேள்வன்
இருந்தாலும் முள் மேல் இருப்பு”–10-

பதவுரை:

நாளும் -நாள்தோறும்
உலகை -உலகத்தை எல்லாம்
நலிகின்ற -துன்புறுத்துகின்ற
வாளரக்கன் -வாளைத் தனக்குப் பக்கபலமாகக் கொண்ட இராவணனுடைய
தோளும் -இருபது தோள்களும்
முடியும் -பத்துத் தலைகளையும்
துணித்தவன் -அறுத்துத் தள்ளினவனான
பூ மடந்தை கேள்வன் தன் -திருமகள் நாயகனான இராமபிரானுடைய
தாளில் -திருவடிகளில்
பொருந்தாதார் -பற்றாதவர்களுடைய
உள்ளத்தில் -இதயத்தில்
இருந்தாலும் -கொள்கை அளவில் இருந்தாலும் அவ்விருப்பு
முள்மேலிருப்பு -முள் நுனியில் இருப்பது போன்றதாகும்

நாளும் உலகை நலிகின்ற –
ஏதோ ஒரு நாளில் அல்லாமல் தினந்தோறும் துன்புறுத்துகின்ற
அதிலும்
யாரோ ஒருவர் இருவர் என்றில்லாமல் உலகத்தார் அனைவரையும் துன்புறுத்துகின்ற,
துன்புறுத்துவதிலும்
சற்றும் இடையீடில்லாமல் ஒயாமல் துன்புறுத்துகின்ற என்று பொருள்.

வாளரக்கன் –
வாள் ஆயுதத்தையுடைய அரக்கன் இராவணன்.
சிவனை வழிபட்டு அவனிடம் பெற்றுக் கொண்ட வாளாயுதம்.
அதைத் தனக்குப் படைபலமாக பிடித்துக் கொண்டிருக்கும் அரக்கனான இராவணன் கூற்றாக
“சங்கரன் கொடுத்த வாளும்” என்ற கம்பன் கூறியது எண்ணற்குரியது.

தோளும் முடியும் துணித்தவன் –
இருபது தோள்களையும் பத்துத் தலைகளையும் அறுத்தவன்.
“நீள்கடல் சூழிலங்கைக்கோன் தோள்கள் தலை துணி செய்தான். தாள்கள் தலையில் வணங்கி,
நாள் கடலைக் கழிமினே” என்றார் நம்மாழ்வார்.
இதன் பொருளாவது: அவனைக் கொல்லும் போது “அகப்பட்டவன் அகப்பட்டான்”
தப்பி ஒடிப் போகாமல் கொன்றுவிடுவோம்” என்று எண்ணாமல் முதலில் அவனது இருபது தோள்களையும் அறுத்துத் தள்ளி.

“தான் போலு மென்றெழுந்தான் தரணியாளன்
அது கண்டு தரித்திருப்பானரக்கர் தங்கள்
கோன் போலும் என்றெழுந்தான் குன்ற மன்ன
இருபது தோளுடன் துணிந்த வொருவன் கண்டீர்”–(பெரிய திருமொழி-4-4-6)

“தலைகள் பத்தையும் வெட்டித் தள்ளி பொழுது போக
விளையாடினாற் போல கொன்றவன்
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னன்
சிரங்கள் பத்தறுத்து திர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்”–(திருச்சந்தவிருத்தம் – 802)

பூ மடந்தை கேள்வன் –
தாமரை மலரில் வசிப்பவளாயும்
மாருத யௌவனத்தை உடையவருமான பெரிய பிராட்டியாருக்குக் கணவனானவன்.

கீழ்ச்சொன்ன இராவணனை அழித்தற்குக் காரணம் நாட்டை நலிந்தது மட்டுமன்றி
பிராட்டியைப் பெருமாளிடமிருந்து பிரித்த செயலுமே முக்கிய காரணமாகும் –

“சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடு விசையரக்கன்
எரிவிழித்திலங்க மணிமுடி பொடி செய்து இலங்கை பாழ்படுப்பதற் கெண்ணி”–(பெரிய திருமொழி-5-5-7)

என்ற பாசுரத்தில் இராவணன் அழிவதற்கு முக்கிய காரணம் பெருமாளிடத்திலிருந்து பிராட்டியைப் பிரித்தது தான் காரணம்
என்று திருமங்கை ஆழ்வாரும் அருளிச் செய்திருக்கிறார்.
இவ்வாறு பிராட்டியும் தானுமாக இன்பமிக்க எழுந்தருளியிருக்குமவன்.

தன் தாளில் பொருந்தாதார் உள்ளத்தில் –
தன் திருவடிகளைப் பற்றி நிற்கும் போதே வேறு பயன்களில் மனதைப் பறிகொடுத்து தன் திருவடிகளில்
பொருத்தமற்றிருக்கும் பொய்யர்களுடைய உள்ளத்தில்.

‘பொருந்தாதார்’ என்ற சொல்,
தன் திருவடிகளைப் பற்றி நிற்கும் போதே என்ற பொருளைக் குறிப்பாக உணர்த்துகிறது.
வேறு பயன்களில் மனதைப் பறிகொடுத்தவர்கள் மனம் திருவடியில் பொருந்தி இருக்க முடியாதல்லவா!

இருந்தாலும் – என்ற சொல்லால்
வேறு பயன்களை விரும்புவார் மனதில் இருக்க மாட்டான் என்ற பொருள் குறிப்பாக உரைக்கிடக்கிறது.
தன்னிடம் வேறு பயனைக் கருதித் தன்னை வழிபடும் போலி பக்தருடைய வற்புறுத்தலுக்காக
அவர்கள் மனதில் இருந்தாலும் என்று பொருள்.

முள்மேல் இருப்பு –
முள் நுனியில் இருப்பது போன்றது.
அதாவது
பகவானுக்குத் துன்பம் தரக் கூடியதாகும் என்பதாம்.

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ உ.வே. V.K. ஸ்ரீநிவாஸாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஞ்சராத்ர-ஸ்ரீ வைகாநஸ ஆகமங்களும் வேறுபாடுகளும்–

August 28, 2021

ஸ்ரீ வைகானஸ ஆகமம் என்பது ஸ்ரீ பகவச் சாஸ்திரமாகும்.
ஸ்ரீ விகநஸ முநிவரால் சொல்லப்பட்டதால் ஸ்ரீ வைகானஸ சூத்திரம் என்று அழைக்கப்படுகின்றது.
ஸ்ரீ விகனஸரின் ஸம்பந்தமுற்றோர் ஸ்ரீ வைகானஸர் என்று அழைக்கப்படுவர்.
இவர் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் மாநஸ புத்திரர். இவருக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்ரீவைகானஸ சாஸ்திரத்தை உபதேசித்தார்.

ஸ்ரீ வைகானசர்கள் பிற்புரிமையால் வரும் சமூகத்தைச் சேர்ந்துள்ளனர். யாவரும் அந்தணர்கள்.
இவர்கள் ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில் சம்பந்தப்படாதவர்கள்.
அவர்கள் இராமாநுஜரையோ, நம்மாழ்வாரையோ தம் குல குருவாக ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனால் திவ்யப் பிரபந்தங்களை அவர்கள் அத்யயனம் செய்வதில்லை.
ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்களின் தனியன்களை அநுஸந்திப்பதும் இல்லை.
பஞ்ச ஸம்ஸ்காரம் எனும் வைஷ்ணவ தீiக்ஷயை இவர்கள் பெறுவதில்லை.
அத்தகைய தீiக்ஷயை இவர்கள் கர்ப்ப வாசத்தின்போதே மந்திர ஸம்ஸ்காரத்தால் பெற்றுவிடுகிறார்கள்.

இவர்கள் கொள்கை லக்ஷ;மி விசிஷ்டாத்வைதம் என்று குறிப்பிடப்படுகிறது.
இராமாநுஜ ஸம்ப்ரதாயக் கோட்பாடுகளைக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் பிராட்டியை ஈச்வர கோடியில் சேர்க்கிறார்கள்.
கைவல்யமும் மோக்ஷமே என்று கருதுகின்றனர்.

ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்றால் ஐந்து இரவுகள் என்று பொருள்.
ஸத்ர யாகம் ஒன்றில் ஐந்து இரவுகளில் எம்பெருமானை வழிபடும் விதம் உபதேசிக்கப்பட்டதால்
இப்பெயர் ஏற்பட்டதாக சதபத ப்ராஹ்மணத்தில் கூறப்பட்டுள்ளது.
இராத்திரியின் குணங்களான மஹாபூதம், தன்மாத்திரை, அஹங்காரம், புத்தி, அவ்யக்தம் என்ற
ஐந்தின் காரணமாக இப்பெயர் ஏற்பட்டதாக பரம ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது.
சாங்கியம், பௌத்தம், ஆர்ஹதம், காபாலம், பாசுபதம் ஆகிய பஞ்ச சாஸ்திரங்களும் இருளடைந்து போகும்படி செய்ததால்
பாஞ்சராத்ரம் என்று பெயர் வந்ததாக பாத்ம தந்திரம் என்னும் நூல் கூறுகிறது.
ப்ரஹ்மம், முக்தி, போகம், யோகம், ப்ரபஞ்சம் என்ற ஐந்தை அடையும் வழிகளைக் கூறுவதால்
இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
ஆனால் பரம்பொருளின் ஐந்து நிலைகளான பர, வ்யூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை எனும்
நிலைகளைப் பற்றிக் கூறுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
அதிலும் வ்யூஹத்தின் நிலையை விளக்குவன பாஞ்சராத்ர ஆகமங்கள் என அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்துள்ளார்.

ஸ்ரீ பாஞ்சராத்ர ஸம் ஹிதைகள் :-
பாஞ்சராத்ர ஸம்ஹிதை சில்ப சாஸ்த்ரம், வாஸ்த்து சாஸ்த்ரம், பல்வேறு தெய்வங்களின் உருவ வர்ணனை,
அவர்களின் ஆயுதங்கள், பிம்பங்களின் அளவுகள், ஆராதனை முறை, அண்டங்களின் சிருஷ்டி க்ரமம்,
யோகம் அதாவது கடவுளை நெருங்குவதற்கான வழிகளை விவரித்தல் ஆகியவை அடங்கியது.
இவையனைத்தும்
ஜ்ஞானம் (ச்ருஷ்டி முதலியன),
யோகம் (கடவுளை அடையும் வழி),
கிரியா (ஆலய – பிம்ப நிர்மாணங்கள்),
சரியா (பூஜை செய்யும் முறை) என்ற நான்கு தலைப்புகளில் அடங்கும்.

ஸ்ரீ பாஞ்சராத்ர ஸம் ஹிதைகள் 108 என்று பொதுவாகக் கருதப்பட்டாலும், அனைத்தும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என்று மூன்று ஸம்ஹிதைகளும் பகவானால் சொல்லப் பட்டதால் ரத்ன த்ரயம் என்றும்,
மூல ஸம்ஹிதைகள் என்றும் சொல்லப்படுகிறது.
பௌஷ்கரத்தின் விரிவை பாரமேச்வர ஸம்ஹிதையும்,
ஸாத்வத்தின் விரிவை ஈச்வர ஸம்ஹிதையும்,
ஜயாக்யத்தின் விரிவை பாத்ம ஸம்ஹிதையும் தெரிவிக்கிறது.
இவற்றுள் ஜயாக்யம் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

மேலும்
1. அஹிர் புத்ந்ய ஸம்ஹிதை
2.ஈச்வர ஸம்ஹிதை
3. ஜயாக்ய ஸம்ஹிதை
4. பாத்ம ஸம்ஹிதை
5. பாரமேச்வர ஸம்ஹிதை
6.லக்ஷ;மீ தந்த்ரம்
7. விஷ்வக்ஸேந ஸம்ஹிதை
8. ஸ்ரீப்ரச்ன ஸம்ஹிதை
9. ஸாத்வ ஸம்ஹிதை முதலிய ஸம்ஹிதைகளும் உள்ளன.

ஸ்ரீ பாஞ்சராத்ர – ஸ்ரீ வைகானஸ ஆகமங்களின் வேறுபாடுகள்

1. வைகானஸ ஆகம விதிகளின்படி வைகானஸ ப்ராம்மணர்களே கருவறையிலுள்ள
இறைவனுடைய திருமேனியை தீண்ட உரிமை பெறுகிறார்கள்.

2. வைகானஸ அர்ச்சகர்கள் திருவிலச்சினை என்ற பஞ்ச ஸம்ஸ்கார தீiக்ஷ பெறுவதில்லை.

3. குரு பரம்பரையில் ஸம்பந்தப்படாதவர்கள். ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களின் தனியன்களை அநுஸந்திப்பதில்லை.

4. வழிபாட்டு முறையில் மந்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

5. பலி பீடத்தின் பின்னால் கொடி மரம் இருக்கும்

6. விஷ்ணு, புருஷன், சத்யன், அச்யுதன், அநிருத்தன் முதலியோர்களை வழிபடுகின்றனர்.

மற்றும் கோயில் அமைப்புக்களிலும்
திருவாராதன முறையிலும்,
மூர்த்தியின் அமைப்பிலும் ,
நூப தீபங்கள் சமர்ப்பிப்பதிலும் வைகானஸ, பாஞ்சராத்ர ஆகமங்கள் வேறுபடுகின்றன.

————

நிர்மமே சார முத்யர்த்த ஸ்வயம் விஷ்ணு ரஸ அனுகூலம்
தத் பர வ்யூஹ விபவ ஸ்வபாவாதி நிரூபணம்
பாஞ்சராத் வயம் தந்த்ரம் மோக்ஷ ஏக பல லக்ஷணம்
ஸூ தர்சனாஹ்வயோ யோசவ் சங்கல்போ வைஷ்ணவா பரா
ஸ ஸ்வயம் பிபிதே தேந பஞ்சத பஞ்ச வக்த்ராக –அஹிர்புத்ய ஸம்ஹிதா ஸ்லோகம்

ஸூரி ஸூஹ்ருத் பாகவதா ஸாத்வத பஞ்ச கால வித்
ஏகாந்திகா தன்மயச் ச பாஞ்ச ராத்ரிக இத்யபி
ஏவமாதி ப்ராக்யாபி ஆக்யேய கமலாசன –ஸ்ரீ பத்ம ஸம்ஹிதா ஸ்லோகம் || (2-87)” -பாகவதருக்கு பர்யாய சப்தங்கள்

பஞ்ச கால வியவஸ்தியை வேங்கடேச விபாசித
ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸித்தாந்த வியவஸ்தேயம் சமர்த்தித – ஸ்ரீ பாஞ்சராத்ர ரஷா ஸ்லோகம் –

இதம் மஹா உபநிஷதம் சதுர் வேத சமான விதம்
சாங்க்ய யோக க்ரதான்தேந பஞ்ச ராத்ர அனு சப்தித்தம் –(ஸ்ரீ மஹா பாரதம் 339,112).

ராத்ரா – கதி -மார்க்கம்
ராத்ரம் ச ஞான வசனம் ஞான பஞ்ச விதம் ஸ்மர்தம்
தேநேதம் பாஞ்ச ராத்ரம் ஹி ப்ரவதந்தி மனிஷினா
தத்வம் –முக்த பிரதம் –பக்தி பிரதம் -யோகம் -வைஷயிகம் -விஷயாந்தர போகம் என்றவாறு

புராணம் வேத வேதாந்தம் ததா சாங்க்ய யோக ஜம்
பஞ்ச பிரகாரம் விஞ்ஞானம் யத்ர ராத்யேதேபிஜஜ || -பவ்ஷ்கர ஸம்ஹிதை

பாஞ்சராத்ரம் – ஏகாயான சாகை -சாந்தோக்ய சாரம் -என்பர் தேசிகர் தத்வ முக்த கலாபத்தில்

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ. வே ,வெங்கடேஷ் ஸ்வாமிகள் – திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பகவத் கீதையும் ஸ்ரீ பகவத் சாஸ்திரமான ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் –ஸ்ரீ உ. வே ,வெங்கடேஷ் ஸ்வாமிகள் —

August 28, 2021

பகவத் கீதையும் பகவத் சாஸ்திரமான பாஞ்ச ராத்ரம்
1-அடியவர்கள் உகந்த உருவமும் பேரும்
2- அவதார பூர்ணத்வம்
3-அர்ச்சாவதார ஸுலப்யம் -எளிமை நீர்மை
4-ஸரணாகதி
5-திருமேனி த்யானம் உபாஸ்யம்
6-பாஞ்சராத்ர உபாஸ்யமே ஸ்ரேஷ்டம்

1-அடியவர்கள் உகந்த உருவமும் பேரும்

ஜிதந்தே ஸ்தோத்ரம் -பாஞ்ச ராத்ரம் உள்ளே அடங்கியது
ந தே ரூபம் —பக்தாநாம் ப்ரகாசதே
உனக்கு -என்ற பின்பு அனைத்தும் உண்டே –
உனக்கு என்று கொள்ளாமல் ரூபம் கல்யாண குணங்கள் எல்லாம் அடியவர்களுக்கு

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:–4-11

பார்த யே மாம் யதா ப்ரபத்யந்தே-பார்த்தா! யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ
தாந் அஹம், ததா ஏவ பஜாமி-அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்,
மநுஷ்யா: ஸர்வஸ:-மனிதர் யாங்கணும்,
மம வர்த்ம அநுவர்தந்தே-என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்.
பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
ஸர்வஸ:-பிரியதம -பித்ரு -சாரதி -அர்ச்சாவதார -அனுபவிப்பான்

2- அவதார பூர்ணத்வம்
விஷ்வக்ஸேன ஸம்ஹிதை
நம் பெருமாள் அபிமானம்
பிராட்டி உடனே வந்து ஸந்நிஹிதன் ஆகிறேன்
ஸ்ரீ ப்ரஸ்ன சம்ஹிதை -இத்தையே சொல்லும்

அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா–4-6-

அஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி-பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும்,
பூதாநாம் ஈஸ்வர: அபி ஸந்-உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்,
ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாய-யான் எனது பிரகிருதியில் நிலை பெற்று,
ஆத்ம மாயயா ஸம்பவாமி-என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்.

ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்,
யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.

வனவாஸ ராமர் சேவிக்கிறோம் திருச்சேறை
மாயா சங்கல்பம் -divine will

3-அர்ச்சாவதார ஸுலப்யம் -எளிமை நீர்மை
புரிவதுவும் புகைப்பூவே –
துளஸீ -பல்லவம்–ஸப்த மாத்திரமே போதும் -பாஞ்ச ராத்ரம் சொல்வதையே
தாராயினும் வேராயினும் மண்ணாயினும்
பாலனாய் பதிகம் சொன்னாலே போதுமே
பாட்டு தோறும் திருத்துழாய் இருக்குமே
ஒவ்வொரு இலைக்கும் நூறு அஸ்வமேத யாக பலன் அளிக்கிறானாம்

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந:–9-26-

ய: பக்த்யா-எவர் அன்புடனே,
பத்ரம் புஷ்பம் பலம் தோயம்-இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும்
மே ப்ரயச்சதி-எனக்கு அளிப்பவன் ஆயின்,
ப்ரயதாத்மந:-முயற்சியுடைய அவர்,
பக்த்யுபஹ்ருதம்-அன்புடன் அளித்த,
தத் அஹம் அஸ்நாமி-அவற்றை நான் அருந்துகிறேன்.

இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய
அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.

சர்வ ஸூ லபம்
ஸர்வேஸ்வரேஸ்வரன்
அவாப்த ஸமஸ்த காமன்
மநோ ரதம் அலாப்ய லாபம் பெற்றதாக கொள்கிறானே

4-ஸரணாகதி
ந்யாஸ வித்யை
அஹிர்புத்யை ஸம்ஹிதை லக்ஷணம் சொல்லி
அங்கங்களும் காட்டும்
லஷ்மி தந்திரமும் சொல்லும்
ந்யாஸம் அதிரிக்தம்
சரம ஸ்லோகம் காட்டுமே –

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய-எல்லா அறங்களையும் விட்டு விட்டு,
மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ – என்னையே சரண் புகு,
ஸர்வபாபேப்ய:-எல்லாப் பாவங்களினின்றும்,
அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி-நான் உன்னை விடுவிக்கிறேன்,
மா ஸுச:-துயரப்படாதே.

எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும்
நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

அங்க பிரபத்தி கீதா பாஷ்யம்
ஸ்வ தந்த்ர பிரபத்தி கத்யம்
குறிப்புடன் மேவும் தர்மங்கள் -கோவலன் -கழலே அரண் என்று அடைந்து வினைத்திரள் போக்குவோம் -தேசிகன் –

5-திருமேனி த்யானம் உபாஸ்யம்
ச குண ச ஆகார
ஸ்ரீ ப்ரஸ்ன சம்ஹிதை
சதுர்புஜம் வாஸூ தேவம் –ஆனந்த ஜலாதி -பித்த வாஸஸம் -ப்ரஹ்மாதி காரணம் -கிஞ்சித் மந்தஸ்மிதம் -தேவம் புண்டரீகாக்ஷம்
குரு முகே -த்யானம்

யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா
ஸ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத​:6-47

ய: ஸ்ரத்தாவாந்-எவனொருவன் சிரத்தையுடைய யோகியோ,
மத்கதேந அந்ராத்மநா -என்னிடம் ஈடுபாடு கொண்ட உள்ளத்தால்,
மாம் பஜதே-என்னை போற்றுகிறானோ,
ஸ: மே யுக்ததம மத​:-அந்த யோகியே மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

மற்றெந்த யோகிகளெல்லாரிலும், எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை
நம்பிக்கையுடன் போற்றுகிறானோ அவன், மிக மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

கத்யத்தில் ஸ்வாமி விலக்கிக் காட்டி அருளுகிறார் திவ்ய ரூபம்

மய்யாவேஸ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே
ஸ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா:–12-2-

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
மயி மந: ஆவேஸ்ய-என்னிடத்தே மனத்தைச் செலுத்தி,
நித்யயுக்தா:-நித்திய யோகிகளாய்,
யே-எந்த பக்தர்கள்,
பரயா ஸ்ரத்தயா உபேதா:-சிறந்த சிரத்தையுடன் கூடியவர்களாக,
மாம் உபாஸதே-என்னை வழிபடுகிறார்களோ,
தே யுக்ததமா-அவர்கள் யோகிகளிலேயே மேலானவர் என்று,
மே மதா:-என்னால் மதிக்கப் படுபவர்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய் உயர்ந்த நம்பிக்கையுடன்
என்னை வழிபடுவோர் யாவர், அவர்களே சிறந்தோரென நான் கருதுகிறேன்.

நித்யர்களையும் திவ்ய ரூபத்துடன் உபாஸிக்க சொல்லும் பாஞ்சராத்ரம்
ஆக்கமும் இப்படியே சொல்லும்

6-பாஞ்சராத்ர உபாஸ்யமே ஸ்ரேஷ்டம்

அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக÷க்ஷமம் வஹாம்யஹம்–9-22-

அநந்யா: யே ஜநா-வேறு எதிலும் நாட்டமில்லாத எந்த பக்தர்கள்,
மாம் சிந்தயந்த:-என்னை தியானித்துக் கொண்டு,
பர்யுபாஸதே-எந்த பயனும் எதிர்பார்க்காது உபாசிக்கின்றாரோ,
நித்யாபியுக்தாநாம் தேஷாம்-இடைவிடாது என்னையே நினைத்துக் கொண்டிருக்கிற அவர்களுடைய,
யோக÷க்ஷமம் அஹம் வஹாமி-நன்மை தீமைகளுக்கு நானே பொறுப்பாவேன்.

வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன்.

பர்யுபாஸதே
சர்வ கல்யாண குணாத்மகம் –சர்வ விபூதி யுக்தம் –
முழுமையாக உபாஸ்யம்
அகண்டித குணம்
வைகானஸம் பாஞ்சராத்ரம் இரண்டுமே சொல்லுமே
அர்ச்சாவதாரமே பூர்ணம் என்று உபாஸிக்க வேண்டுமே

ஸ்ரீ பாஷ்யம் இதை விளக்கிக் காட்டும்
அபார காருண்ய -ஸ்வ ஸ்வரூப –ஸ்வ விபூதி –பாஞ்சராத்ர சாஸ்திரம் ஸ்வயம் ஏவ அருளி –
இந்த வழியில் உபாஸனமே பூர்ணம்
யோகமும் க்ஷேமமும் இவர்களுக்குத் தான்
அடுத்த ஸ்லோகம் இத்தை விளக்கும்

யேऽப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா:
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்–9-23-

கௌந்தேய-குந்தியின் மகனே,
யே பக்தா-எந்த பக்தர்கள்,
ஸ்ரத்தயா அந்விதா: அபி-நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும்,
அந்ய தேவதா: யஜந்தே-மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ,
தே அபி அவிதி பூர்வகம்- அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்),
மாம் ஏவ யஜந்தி-என்னையே தொழுகின்றனர்.

அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகின்றனர்.

சிரத்தையோடு கூடியிருத்தல் என்பது ஆஸ்திக்ய புத்தியுடைத்திருத்தல் அல்லது தெய்வம் துணைபுரியும் என்ற
நம்பிக்கையுடனிருத்தலாம். அக்ஞானத்தால் விதிவழுவிச் செய்யும் செயல் அவிதிபூர்வகம் எனப்படுகிறது.

விதிப்படி உபாஸனமே பாஞ்சராத்மா விதிப்படி -ஸ்ரேஷ்டம்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 2-2-
பாஞ்ச ராத்ரமே வேத வழி
இதுவே பரம பிரமாணம்

பக்த அபீஷ்ட
அவதரண சமய நிர்விகார ஸ்வ பாவம்
ஸுலப்யம்
ந்யாஸ வித்யாம்
ஸூபக ஸூதா தநு
யோகானாம் பாஞ்ச ராத்ரம் விதி மத மோக்ஷம் தர கீதாச்சார்ய வசனம் –
கதி அளிக்கும் நல்ல விதி இதுவே –

———-

பகவான் ஸ்ரீ வாசுதேவன் ஐந்து ராத்திரிகளில் ஐந்து நித்ய ஸூரிகளுக்கு
உபதேசம் செய்ததால் இதற்கு பாஞ்சராத்ர ஆகமம் என்று பெயர்

பாஞ்ச ராத்ர ஆகமம் மொத்தம் 5 ,00 ,000 சுலோகம் கொண்டது ஆகும் .

அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய ஸ்ரீ பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி என அழைக்கப்படும்
இந்த நாள் ஆவணி மாதத்தில் சிம்மம் ராசியில் சூரியன் இருக்கும் சமயம்.
இந்த தினம் ஸ்ரீ கிருஷ்ணபகவான் அவதரித்த தினமாகக் வைஷ்ணவர்களால் கொண்டாடப்_படுகிறது.

வைணவ ஆகமங்களில் பாஞ்சராத்ரம் வைகானசம் என்னும் இரண்டு விதமான ஆகமங்கள் உண்டு.
ஆகமங்கள் என்பது ஆராதனை முறைகளாகும்.
பாஞ்சராத்ரம் ஆகமம் என்பது பத்ரிகாஸ்ரமத்தில் பகவான் விஷ்ணு தானே
நரனும் நாராயணனுமாகி உபதேசித்த பூஜை முறைகளாகும்,
இந்த பூஜை முறை ஐந்து ராத்திரிகளில் சொல்லப்பட்டதால் பாஞ்சராத்ரம் என்று பெயர் பெற்றது.
வைகானச ஆகமம் என்பது பகவான் விஷ்ணு தானே வைகானச முனிவராகி சௌனகாதி முனிவர்களுக்கு
உபதேசம் செய்ததாக கூறப்படுவதால் இந்த ஆகமம் வைகானச ஆகமம் என்று கூறப்படுகிறது.

பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி என்பது ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம்
கிருஷ்ணபட்சம் அஷ்டமியன்று கொண்டாடப்படும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும்.
இன்று சூரிய உதயத்தில் சப்தமி அல்லது கிருத்திகை நட்சத்திரம் ஒரு வினாடி இருந்தாலும்
அது தோஷமுள்ள நாளாக கருதப்படுவதால் மறுநாள் தான் ஸ்ரீஜெயந்தியாக கொண்டாடப் படவேண்டும்.

ஸ்ரீ வைகானச ஸ்ரீஜெயந்தி ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம் நடு இரவில்
ரோகிணி இருக்கும் சமயம் கொண்டாடப்படும் ஸ்ரீஜெயந்தியாகும்.
அன்று தேய்பிறை அஷ்டமி அர்த்தராத்திரிக்கு முன்பு சிறிதளவு இருந்தாலும் போதுமானது.
இவ்வாறு பலவகையிலும் பலவித ஆச்சாரியார்களின் வழிகாட்டுதலின்படி
பலவிதமான நாட்களில் பலவித பெயர்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க,
குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.
இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

———————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ. வே ,வெங்கடேஷ் ஸ்வாமிகள் – திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய திருவடி மஹாத்ம்யம் –

August 26, 2021

ஸ்ரீ வில்லிபுத்தூர் பஞ்ச கருட சேவை —

ஸ்ரீ பெரிய திருவடி வேத ஸ்வரூபர் மட்டுமல்ல நாத ஸ்வரூபரும் கூடத்தான்.
ஷடகம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஸப்த ஸ்வர வடிவானவர்
ஸ்ரீ பெரிய திருவடியான இவர் ஸ்ரீ இராமாவதாரத்தில் இந்திரஜித் விடுத்த நாக பாசத்தினால் கட்டுண்டு கிடந்த
ஸ்ரீ இளைய பெருமாளையும் மற்ற வானர சேனைகளையும் விடுவித்து ஸ்ரீ பெருமாளுக்கு கைங்கர்யம் புரிந்தார்.
அது போலவே அவர் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பிராட்டியான ஸ்ரீருக்மணியிடமிருந்து அவர் அழகாக எழுதிக் கொடுத்த
மடலை எடுத்துக்கொண்டு சென்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து கைங்கர்யம் செய்தார்,
இவ்வாறே பல்வேறு திவ்ய தேசங்களிலும் செய்த கைங்கரியங்களினால் அவர் பெருமாளுடன்
சமமாக நின்று சேவை சாதிக்கும் பேறு பெற்றார். அத்தகைய திவ்ய தேசங்களுள் முதலாவதானது ஸ்ரீவில்லிபுத்தூர்.

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள், திருஅவதாரம் செய்து, ஆயனுக்காக கனா கண்டு, அரங்கனைக் கைப்பிடித்த
மென்னடையன்னம் பரந்து விளையாடும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் , கருடன் மற்றும் ரங்க மன்னார் மூவரும்
ஒரே சிம்மாசனத்தில் நின்ற கோலத்தில் சேவை சாதித்து அருளுகின்றனர்.

கருடன் விரைந்து சென்று காலம் தாழ்த்தாமல் பெருமாளை பிராட்டியாரிடம் சேர்த்தான்.
இதற்கு கை மாறாக ஆண்டாள் ரங்கமன்னாரிடன் பரிந்துரைக்க பெருமாளும் தங்களுடன் கருடனும் சரி சமமாக நின்று
சேவை சாதிக்கும் பேற்றை அளித்தார்.
கருடாழ்வார் திருவரங்கத்திலிருந்து பெருமாளை அழைத்து வந்ததால்
மாப்பிள்ளைத் தோழனாகவும் விளங்குகின்றார் என்பது ஐதீகம்.
மேலும் எப்போதும் கருடன் பெருமாளையும் பிராட்டியாரையும் வணங்க விருப்பப்பட்டதாலும்
எப்போதும் அருகில் இருப்பதாகவும் ஐதீகம்.

அர்த்த மண்டபத்தில் தங்க முலாம் மஞ்சத்தில், வலப்புறம் கோதை நாச்சியாரும், நடுவில் ரங்க மன்னாரும்,
இடப்புறம் கருடன் என மூவரும் ஒன்றாக சேவை சாதிக்கின்றனர்.
ரங்கமன்னார் நின்ற கோலத்தில் வலக்கையில் பெந்து கோல் (தற்காப்புக் கோல்), இடக்கையில் செங்கோல்,
இடையில் உடைவாள், கால்களில் திருப்பாதுகைகள் என்று இராஜாங்க கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
ஆண்டாள் இடக்கரத்தில் கிளியை தாங்கி, வலக்கரம் திருவடிகளை சுட்டிக் காட்ட
வைர மூக்குத்தி மின்ன எழிலாக சேவை சாதிக்கின்றாள்.
கருடன் அஞ்சலி ஹஸ்தத்துடன் திவ்ய தம்பதிகளை வணங்கும் நிலையிலும் நின்று சேவை சாதிக்கும் அழகே அழகு.
ஓம் என்னும் பிரணவத்தின் வடிவாக சேவை சாதிக்கின்றனர் மூவரும்.

கருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமனார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன்,
சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார்.

இத்தலத்தில் ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது
வருடத்தில் இரு முறை கோதை நாச்சியாரின் திருஅவதார தினமான ஆடிப்பூர உற்சவத்தின் ஐந்தாம் நாளன்றும்,
பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் ஐந்தாம் நாளன்றும்
ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது.

ஐந்து கருட சேவையில்
பெரிய பெருமாள் வடபத்ர சாயி, ரங்க மன்னார், காட்டழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள்,
திருவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள திருவண்ணாமலை திருவேங்கடமுடையான்,
மற்றும் அருகில் உள்ள திவ்ய தேசமான திருத்தண்கால் அப்பன்

———

ஸ்ரீ கருட பஞ்சமி வைபவம் –

ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும்.
பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள்.
கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், வினதை அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள்.
ஒருமுறை, கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது.
அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர்.
போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள்.
கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம் போல் ஆனான்.
இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான்.
அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டு வந்து தந்தால்,
அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள்.
கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான்.
தேவலோகத்தில், காவல் புரிந்து கொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது.
இறுதியில், கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான்.
மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான்,
கருடன். அந்தக் கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது.

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம்
ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி யன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய
அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.
அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள் தானே நாகங்கள்
அவர்கள் செய்த சூழ்ச்சியினால் தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத் தளையை களைய
கருடன் தேவ லோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது
அப்போது தான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது
பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது
எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம்.
மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.

கஷ்யப முனிவருக்கு வினதை, கத்ரு என்று இரண்டு மனைவியர்.
இவர்களில் வினதை கருடனையும், கத்ரு பாம்புகளையும் பெற்றெடுத்தனர்.
கத்ருவுக்கு வினதையைப் பிடிக்காது. அதனால், அவளை தனக்கு அடிமையாக்க நினைத்து, தந்திரமாக போட்டிக்கு அழைப்பு விடுத்தாள்.
அக்கா…நமக்குள் ஒரு போட்டி… பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட, உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை என்ன நிறம் தெரியுமா? என்றாள்.
இதிலென்ன சந்தேகம்; அது வெள்ளை நிறம்… என்றாள் வினதை. இல்லையில்லை, அதன் வால் மட்டும் கருப்பு… என்று கத்ரு கூற,
வினதை அதை மறுத்தாள். சரி…நாம் ஒரு பந்தயம் கட்டுவோம். யார் சொல்வது தவறோ,
அவர் மற்றவர்க்கு அடிமையாக வேண்டும்… என்றாள் கத்ரு. வினதையும் இதற்கு ஒப்புக் கொண்டாள்.
கத்ரு, ரகசியமாக தன் பாம்பு குழந்தைகளில் கருப்பானவற்றை அழைத்து, நீங்கள் போய்
குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுங்கள்… என, உத்தரவு போட்டாள். பாம்புகளும் அவ்வாறே குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டன.

உடனே கருடன், சின்னம்மா கத்ருவிடம் சென்று,என் தாயை விடுதலை செய்ய நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டது.
கத்ருவோ கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்தாள். கருடா… நீ தேவலோகம் சென்று, இந்திரனிடம் உள்ள
அமுதக் கலசத்தைப் பெற்று வந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், உன் அன்னையை விடுவிப்பேன்… என்றாள்.
கருடன் தேலோகம் சென்று இந்திரனிடம் போரிட்டது. இந்திரனின் பலம் வாய்ந்த வஜ்ராயுதத்தை செயல்பட விடாமல் செய்து, அவனைத் தோற்கடித்தது.
இருப்பினும், இந்திரா… இந்த வஜ்ராயுதம் முனிவரின் எலும்பால் ஆனது என்பதை நான் அறிவேன். அதற்கு மதிப்பளித்து,
இதை உன்னிடமே திரும்பத் தருகிறேன். அதற்கு பிரதியுபகாரமாக எனக்கு, அமுதம் கொடு. என் தாயை விடுவிக்கவே இதைக் கேட்கிறேன்… என்றது.
மகிழ்ந்த இந்திரன், அமுதத்தை கொடுத்தான். அதை கத்ருவிடம் ஒப்படைத்தது கருடன். அப்போது, குதிரையின் வாலில் சுற்றியிருந்த
கருப்பு பாம்புகள், அமுதத்தை குடிக்கும் ஆசையில் கீழே இறங்கின. வால் கருப்பாக மாறியதன் ரகசியம் வெளிப்பட்டு விட்டதால் அதிர்ந்தாள் கத்ரு.
இருந்தாலும், வினதை அவளை மன்னித்தாள். எதிரிக்கும் அன்பு செய்த வினதைக்கும், கருடனுக்கும் திருமால் காட்சி தந்து,
தாயைக் காத்த தனயனை, தன் வாகனமாக ஏற்றார்.

கருடன் பிறந்த நாளை, ஆடி மாதம் பஞ்சமி திதியில் ஒரு சாரார் கருட பஞ்சமியாகவும்,
ஆடி சுவாதி நட்சத்திரத்தை ஒரு சாரார் பட்சிராஜர் திருநட்சத்திரமாகவும் அதாவது, கருட ஜெயந்தியாகவும் கொண்டாடுவர்.

வைணவக் கோயில் பலவற்றில் கருடனுக்குத் தனி சன்னதிகள் உள்ளன.
பூரி ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்தில் தூண் ஒன்றில் உள்ள கருட மூர்த்தம் பிரசித்தி பெற்றது.
அக்கருட மூர்த்தியை வழிபட்டு விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நீங்கி நலம் பெறுகின்றனர்.
தென்னகத்திலும் பல தலங்கள் கருடனின் பெருமைக்குச் சான்றாக விளங்குகின்றன.
தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள திருவகீந்திபுரம் கருட க்ஷேத்திரம் எனப்படுகிறது.
இங்குதான் பகவானின் தாகம் தீர்த்த கருட நதி என்ற பெயர் கொண்ட கெடில நதியை உண்டாக்கினார் என்று கூறப்படுகிறது.
கருடோபாஸனையின் மூலம் ஸ்ரீவேதாந்த தேசிகர் கவித்துவம் பெற்றதாகவும் கூறுவர்.

கருட பகவானுக்கு இரண்டு கரங்கள். நான்கு கால்களும் உண்டு. அருள் ததும்பும் திருமுகம் கவலைக் குறியே இல்லாதவர்.
தனது இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர். சிறகுகளை விட உடல் பருத்திருக்கும்.
குண்டலங்களைக் காதுகளில் அணிந்தவர். வளைந்த புருவங்கள். உருண்டை கன்னங்கள், நீண்ட மூக்கு, வெளுப்பான முகம் உடையவர்.
பாமர மக்களைக் காப்பதில் திருமால் போன்றவர். நாள்தோறும் கருட தரிசனம் ஒவ்வொரு வகையில் பலன் தரும்

பதினாறு வகையான மங்கள வாத்தியங்களின் பலன் கருட த்வனியில் உள்ளது
சில்பா மிருதம் என்ற நூலில் கோயில்களில் நடக்கும் கும்பாபிஷேக சமயத்தில் விமான கலசாபிஷேகத்தின் போது
இரட்டைக் கருடன் மேலே வட்டமிடுவது நல்லது எனவும்.
கருட தரிசனமும் கருடத்வனியுமே கங்காபிஷேகத்திற்கு முகூர்த்தமாகும் என்று சொல்லப்பட்டுள்ளது என்பார்கள்.
கருடத்வனி கேட்கும்போது மங்களானி பவந்து என்று சொல்வதும்,
கருட தரிசனத்தின்போது குங்குமாங் கித வர்ணாய குந்தேந்துதவளா யச விஷ்ணு வாஹ நமஸ்துப்யம்
பக்ஷி ராஜாயதே நம என்ற சுலோகத்தைச் சொல்வதும் வழக்கம்.

ஆயிரக்கணக்கான மந்திரங்களில் கருட மந்திரமான கருட பஞ்சாக்ஷரிக்குத் தனிச் சிறப்பு உண்டு.
இது இம்மை மறுமைப் பலன்களை விரைவில் தரவல்லது.
இதற்கு விசுவாமித்திரர் ரிஷி
லக்ஷ்மி நாராயணனுடன் கூடிய கருட தேவதை என்பார்கள்.
கருட பஞ்சமி நாளன்று கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லி கருட பகவானை வழிபடலாம்.

கருட காயத்ரி

1. தத்புருஷாய வித்மஹே ஸுவர்ண பக்ஷாய தீமஹி தந்நோ கருட ப்ரசோதயாத்

2. ஓம் ககோத்தமாய வித்மஹே வைணதேயாய தீமஹி தன்ன தார்ஷ்ய ப்ரசோதயாத்

கருடன் பிறந்தது பஞ்சமி திதியில்தான். அதனால் தான் கருட பஞ்சமி என்று பெயர் ஏற்பட்டது.

கருட தண்டகம்:
எம்பெருமானுக்கு வாகனமாக இருக்கும் பட்சி ராஜனாகிய கருடனைப் பற்றி
வேதாந்த தேசிகர் அருளியது இந்த ஸ்தோத்திரம்.

கருட பகவானே! வேதம் படித்த பெரியோர்கள் உம்மை இடைவிடாமல் துதிக்கின்றனர்.
உம்முடைய சிறகுகளில் இருந்து மிகவும் வலிமையாக காற்று வீசுகிறது.
அந்தக் காற்றினால் கடல்கள் கரையை மீறிப் பொங்குகின்றன. அப்போது எழும்பும் அலைகள் பாதாள லோகம் வரையில் பாய்கின்றன.
அந்தப் பாய்ச்சல் காற்றோடு கலந்த மிகவும் விசையோடு பாம் என்ற பேரொலியை எழுப்புகின்றன.
அந்த சத்தத்தைக் கேட்டதும் பூமியைத் தாங்கும் திக்கஜங்கள் தங்களுடன் யாரோ போருக்கு வருவதாக நினைத்து
கோபத்தோடு எதிர்த்து வருகின்றன.
அந்த நேரத்தில் உம்முடைய நாகங்கள் என்ற ஆயுதத்தைக் கொண்டு திக்கஜங்களை அடக்கி விடுகிறீர்.

கருட பகவானே உம்முடைய கூர்மையான வளைந்த அலகு எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது.
நீர் உமது புருவங்களை நெறிக்கும்போது பாம்பு நெளிவதைப் போல அச்சமேற்படுகிறது.
உம்முடைய கோரைப் பற்களைக் காணும் எதிர்கள் இவை தேவேந்திரனின் வஜ்ராயுதமோ என்று கதி கலங்கிப் பின் வாங்குகிறார்கள்.
இத்தகைய பெருமைகள் கொண்ட உம்மை அடியேன் போற்றுகிறேன்.
வேதாந்த வித்தைகள் அடியேனுக்கு வசமாகும்படியாக அருள் செய்ய வேண்டும்.
மேலும் எப்போதும் உமக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் தவறாமல் அடியேனுக்கு தந்தருள வேண்டும் என்கிறார் தேசிகர்.

இந்த கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் தொல்லை ஒழிந்து போகும்.
நோய் நொடிகள் அண்டாது. விஷ ஐந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது என்று பெரியோர் கூறுவர்.

கருடாழ்வாரை வணங்குவோம்: இவரை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும்.
எம்பெருமான் பள்ளி கொள்ளும் ஆதி சேஷனையும்,
அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும் சிந்தித்து நல்ல வாழ்வு பெறுவோம்.

———-

ஸ்ரீ மூஷ்ணத்தில் த்வாதச கருட சேவை —

ஸ்ரீ மூஷ்ணத்தில் ஸ்ரீநம்மாழ்வார் கைங்கர்ய சபா சார்பில்
பன்னிரு கருட சேவை உற்சவம் இரவு நடைபெற்றது.
இதில், விருத்தாசலம் நகரம், பூவனூர், வண்ணாங்குடிகாடு, எரப்பாவூர், வலசக்காடு, வட்டத்தூர், காவனூர்,
ஜமீன் காட்டாத்தூர் ஆகிய 8 ஊர்களில் இருந்தும்
வரதராஜ பெருமாள், மேமாத்தூர், கோமங்கலம், கோபாலபுரம், ஆண்டிமடம், அணிக்குதிச்சான், எசனூர் ஆகிய 6 ஊர்களில்
இருந்தும் லட்சுமி நாராயண பெருமாள், ரெட்டிகுப்பம், கோ.பவழங்குடி, சொர்க்கப்பள்ளம், நந்தீஸ்வரமங்கலம்
ஆகிய ஊர்களில் இருந்து சீனிவாச பெருமாள், திருப்பயர் பட்டாபிராம பெருமாள், க.இளமங்கலம் ராதாகிரு‌‌ஷ்ணன பெருமாள்,
கோமங்கலம் பிரசன்ன வெங்கடேச பெருமாள், தேவஸ்தான கோபுராபுரம் ஆதிநாராயண பெருமாள்,
ஸ்ரீ நெடுஞ்சேரி வேணுகோபாலப்பெருமாள், மன்னம்பாடி வேணுகோபால் பெருமாள், விருத்தாசலம் பெரியார் நகர் ராஜகோபாலசுவாமி
ஆகிய பெருமாள் உற்சவர்கள் கருட வாகனத்தில்
ஸ்ரீ மூஷ்ணம் கடைவீதி காமராஜர் சிலை அருகில் உள்ள பஜனை மடத்தில் எழுந்தருளினர்.
அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

——————–

ஸ்ரீ திரு நாங்கூர் ஏகாதச கருட சேவை —

அது வீறு கொள்ளும் நாள் தை அமாவாசை.
லட்சோப லட்சம் ஜனங்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து விடுகிறார்கள்.
இரவே பகலாகிவிடுகிற கோலாகல வைபவம். அதன் பெயர் 11 கருட சேவை.
நூற்றுக்கணக்கான வருஷங்களாக தொடர்ந்து நடை பெறுகிறது.
இதை தோற்றுவித்தவர் ஸ்ரீ உ.வே. சித்ரகூடம் விஞ்சமூர் ஸ்ரீனிவாசாரியர் சுவாமிகள்.
அவருக்கு தான் முதலில் இந்தமாதிரியான 11 கருட சேவை உத்சவங்களை திருநாங்கூர் ஆலயத்தில் ஏற்படுத்தி​
எண்ணற்ற வைஷ்ணவ மனங்களை குளிரச் செய்யவேண்டும் என்று தோன்றியிருப்பத​​ற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
அவர் ஒரு தீவிர திரு மங்கை ஆழ்வார் பக்தர்.

மேற்சொன்ன சுவாமி என்ன செய்தார் தெரியுமா?
திருமங்கை​ ஆழ்வார் திருநாங்கூரை சார்ந்த பதினொரு திவ்ய தேசங்களுக்கு​ பறக்க​ கருடனில்லாமல்​ நடந்து​
கஷ்டப்பட்டு கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் ​அலைந்து​ ​ பெருமாள் தரிசனம் செய்து அந்தந்த ஆலயங்களில்
மங்களாசாசனம் செய்ததை ​நன்றியோடு நினைவு கூர்ந்து ​ ​ஒவ்வொரு வருஷமும் அந்த ஆழ்வாரை குமுதவல்லியோடு இணைத்து
மீண்டும் மங்களாசாசன ஒலி அங்கெல்லாம் கேட்க வழி செய்தவர்.

ஆழ்வார் இந்த பதினொரு திவ்யதேசங்களுக்கும் சென்று பெருமாளை திருநாங்கூருக்கு அழைத்து கருடவாகனத்திலேற்றி
பக்தர்கள் மனம் களிக்க செய்து மறுநாள் அந்தந்த கோவிலுக்கு குமுதவல்லியோடு திருமங்கை ஆழ்வாரே சென்று
அவர்களை யதாஸ்தானத்தில் தக்க வைணவ மரியாதையோடு அமர்வித்து திரும்புகிறார்.
120 வருஷங்களாக இது தொடர்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகளும் தொடரும்.

தை அமாவாசை அன்று ஆழ்வாருக்கு மஞ்சள் குளியல் என்று ஒரு விழா சம்பிரதாயமாக நடக்கிறது.
மறுநாள் சீர்காழி சுற்று வட்டாரத்தில் உள்ள 11 திவ்ய தேசங்களிலிருந்து உத்சவர்கள் பல்லக்கில் திரு நாங்கூர் வந்து விடுகிறார்கள்.
அவர்களை தனது தேவி குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கை ஆழ்வார் வரவேற்று, கருட வாகனத்தில் ஏற்றி
திருநாங்கூர் நாலு வீதிகளில் தரிசன உலா முடிந்து
மூன்றாம் நாளை காலை ஆழ்வார் அவர்களை அந்தந்த ஊருக்கு கொண்டு சென்று உடனிருந்து
பாசுரம் பாடி யதா ஸ்தானம் அமர்த்தி திருவாலி – திருநகரி திரும்புகிறார்.

அண்ணன் கோவில் என்கிற ஒரு திவ்ய தேசத்தில் திருமால் அடியார் குழாம் என்று ஒரு அமைப்பை நிறுவி
கலியன் ஒலி என்று வைணவ மாநாடு வருஷா வருஷம் நடத்தி வரும் 84+ வயதான ஸ்ரீ சடகோபன் கல்யாணராமன்

கண்ணுக்கெட்டியவரை ஜன வெள்ளம். திருநாங்கூர் பத்ரி நாராயணன் ஆலயத்தின் உள்ளே கண்ணைப் பறிக்கும்
பதினோரு ஒரே மாதிரியான கருட வாகனங்கள். வண்ணச் சீருடையில் அதைத் தாங்கும் ஸ்ரீ பாதம் தாங்கிகள். எங்கும் வைஷ்ணவ மயம்.

திருக்காவளம்பாடி, திருமணிக் கூடம், திருப் பார்த்தன் பள்ளி, அண்ணன் கோயில், திருவாலி,திரு நகரி, திரு நாங்கூர்,
திருத்தேவனார் தொகை,திருவண் புருஷோத்தமம், அரிமேய விண்ணகரம், செம்பொன் செய்கோவில், மணி மாடக் கோவில்,
வைகுந்த விண்ணகரம், திருத் தெற்றியம்பலம், ஆகியவை பிரசித்தி பெற்ற திவ்ய தேசங்கள் இந்த சீர்காழி பகுதியில்.
இந்த ஊர்களில் ஒரு 11 கோவில்களின் உத்சவர்கள் பங்கேற்பு.

பிரம்மஹத்தி பாபம் நீங்க சிவபெருமான் ஒருமுறை ஏகாதசி ருத்ர அஸ்வமேத யாகம் செய்கிறார்.
ஸ்ரீ மன் நாராயணன் ஸ்ரீ தேவி, பூதேவி, சமேதராக காட்சி கொடுத்து சிவன் விருப்பப் படியே 11 திருநாங்கூர் கிராமங்களில்
திவ்ய தேச ஸ்தலமாக கோயில் கொள்கிறார்.இவை ருத்ரர் வழிபட்டவை.
இந்த பதினொரு திவ்ய தேசத்திலும் திருமங்கை ஆழ்வார் ஒருவரே மங்களாசாசனம் செய்திருப்பது விந்தை.

—————

ஸ்ரீ நாச்சியார் கோயில் கல் கருட சேவை —

மாடக்கோவில்

75 அடி உயர ராஜகோபுரம், 5 நிலைகளோடு இக்கோவில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இக் கோவிலின் தல விருட்சம் மகிழ மரம். தீர்த்தம் மணி முக்தா குளம் ஆகும்.
இங்கு தென்கலை ஆகமம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இக் கோவில் மாடக்கோவில் என்பதால், 21 படிகள் அமைக்கப்பட்டு அதற்கு மேல் உள்ள மண்டபத்தில்
ஸ்ரீநிவாசபெருமாள் என்னும் நம்பி பெருமாள், தன் துணைவியான வஞ்சுளவல்லி நாச்சியாருடன் வீற்றீருகிறார்.
அவர்களுடன் பிரத்யுமணன், அனிருதன், புருஷோத்தமன், ஸங்கர்ஷணன், பிரமா ஆகியோர் புடை சூழ
திருமணக் கோலத்தில் காட்சியளிக்கிறார் பெருமாள்.

ஸ்ரீ நாச்சியாருக்கே முதல் மரியாதை
இத்தலத்தில் திருமகளான நாச்சியாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால்
இத்தலத்திற்கு நாச்சியார் கோவில் என்னும் பெயர் வந்தது.

இதனை கூறும் வகையில் கருவறையில் கையில் கிளியுடன் காட்சியளிக்கும் வஞ்சுளவல்லி தாயார்
சற்று முன்னே நின்று காட்சியளிக்கிறார்.
பெருமாள் சற்று தள்ளி பின்னே இருகரங்களுடன் காட்சியளிக்கிறார்.
இவளுக்கே எல்லாவற்றிலும் முதல் மரியாதை வழங்கப்படுகிறது. இவளுக்குத் தான் அபிஷேகமும் முதலில் நடைபெறுகிறது.

ஸ்ரீ கல் கருடன்

இத்தலத்தில் உள்ள கல் கருடன் மிகவும் பிரசித்தி பெற்றவர்.
மூலவர் ஸ்ரீநிவாசப்பெருமாள் கருவறைக்கு இடதுபுறம் கல் கருடன் சந்நிதி அமைந்துள்ளது.
இங்கு இவரே மூலவராகவும் உற்சவராகவும் விளங்குகிறார்.இவருக்கு 6 கால பூஜை தினமும் நடைபெறுகிறது.
கல்லால் ஆன உற்சவ மூர்த்தியை வேறு எங்கும் காண இயலாது.
இவர் தன் சிரம், கை, மேனி, கால் போன்ற இடங்களில் நாகாபரணங்களைப் பூண்டு காட்சியளிக்கிறார்.
இவரை வழிபட்டு வந்தால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.
இதில் முக்கிய நிகழ்வான கல் கருடனின் மீது பெருமாள் அமர்ந்து வீதியுலா காணும் வைபவம் மிகவும் புகழ் வாய்ந்தது.
அந்த சமயத்தில் கருவறையில் இருந்து பட்டு வஸ்திரம் அணிந்து சர்வ ஆபரணங்களோடு மலர்களால் அலங்கரிக்கபட்ட கருடன் புறப்படுவார்.

இதில் ஒரு சிறப்பம்சம் உண்டு. கருவறையில் இருந்து புறப்படும்போது 4 பேர் அவரை பல்லக்கில் தூக்குவர்.
மண்டபத்திற்கு வெளியே வரும்போது உற்சவரான கல்கருடனின் சுமை கூடும்.
கருடனை தூக்குவோரின் எண்ணிக்கை 4-இல் இருந்து 8, 16, 32, 64, 128 என்ற கணக்கில் உயர்ந்துகொண்டே போகும்.
பின்பு ஸ்ரீநிவாச பெருமாள் கருடாழ்வாரின் மீது அமர்ந்து வீதியுலா காண்பார்.
வீதியுலா முடித்து கோவிலை நெருங்கும்போது,–128 பேர் சுமக்கும் கல் கருடன் எடை மீண்டும் 64 பேர் சுமப்பதாக,
32 பேர் சுமப்பதா– 16 பேர் சுமப்பதாக– 8 பேர் சுமப்பதாக, 4 பேர் சுமப்பதாக படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
இந்த அதிசயம் எப்படி நடக்கிறது என்று இன்றுவரை தெரியவில்லை.
இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் அன்றைய தினம் கோவிலில் கூடுவர்.

இவ்வூரில் தாயாரையும் பெருமாளையும் கருடன் இணைத்து வைத்த படியால், ராமாயணத்தில் சீதா ராமர்களை
இணைத்து வைத்த அனுமனுக்கு உள்ள ஸ்தானம் இங்கே கருடனுக்கு உண்டு.
மார்கழி, பங்குனி ஆகிய இரண்டு மாதங்களில் நடைபெறும் கல்கருட சேவை மிகவும் பிரசித்தி ஆனது.
கருடன் புறப்பட்டு வருகையில், அவருக்கு எடை அதிகரித்துக் கொண்டே வருவதைக் காணலாம்.
இத் திருக்கோவிலுக்குப் புனரமைப்புப் பணிகள் செய்தவர் கோச்செங்கட் சோழ நாயன்மார் என்பது மற்றொரு சிறப்பம்சம்.

“வெங்கண் மா களிறு உந்தி விண்ணியேற்ற
விறல் மன்னர் திறல் அழிய வெம்மா உய்த்த
செங்கண்ணான் கோச்சோழன் சேர்ந்த கோவில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே!” – என்று இந்த நாயன்மாரைப் பற்றித் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.
இத் திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் விசாக நட்சத்திரத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகின்றது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி விசாக நட்சத்திரத்தில் திருமணம் செய்யக்கூடாது என்ற மரபு உள்ளதாகச் சொல்வார்கள்.
ஆனால் இத்திருக்கோவிலில் மட்டும் விசாக நட்சத்திரத்தன்று திருக்கல்யாணம் நடத்துவதற்கான பின்னணி என்ன?
நாச்சியார் கோவிலில் வாழ்ந்த மேதாவி முனிவர், சக்கரத்தாழ்வாரைப் பிரதிஷ்டை செய்து அவரை வழிபட்டு வந்தார்.
அந்த மேதாவி முனிவரின் மகளாக ‘வஞ்ஜுள வல்லி’ என்னும் பெயரோடு மகாலட்சுமி இவ்வூரில் அவதரித்தாள்.
வைகுண்டத்திலிருந்து தன்னைப் பிரிந்து சென்ற மகாலட்சுமி பூமியில் எங்கே அவதரித்திருக்கிறாள் என்று பெருமாள் தேடத் தொடங்கினார்.
தனது வாகனமான கருடனை மகாலட்சுமியின் இருப்பிடத்தை அறிந்து வரச் சொல்லி அனுப்பி வைத்தார்.

பூமி முழுவதும் தேடிய கருடன், கும்பகோணத்துக்கு அருகே உள்ள நாச்சியார்கோவிலுக்கு வந்தபோது,
ஒரு அதிசயமான வாசனை வீசுவதைக் கண்டார்.
அது மகாலட்சுமியின் திருமேனியில் இருந்து வரும் வாசனை என்றும் கருடன் உணர்ந்து கொண்டார்.
அந்த வாசனை உண்டாகும் இடத்தைக் கருடன் தேடிச் செல்லுகையில், மேதாவி முனிவரின் ஆசிரமத்தின் வாசலில் வஞ்ஜுளவல்லி,
பார்வதியின் அம்சமாகப் பிறந்த தன் தோழி பொன்னியுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
வஞ்ஜுளவல்லியின் கண்ணழகைக் கொண்டே அவள் தான் மகாலட்சுமி என்று ஊகித்து அறிந்து கொண்டார் கருடன்.

திருநறையூரில் மகாலட்சுமி வஞ்ஜுளவல்லியாக அவதரித்துள்ள விஷயத்தை வைகுண்டத்துக்குச் சென்று திருமாலிடம் தெரிவித்தார் கருடன்.
வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன், சங்கர்ஷணன், புருஷோத்தமன் என ஐந்து பிரம்மச்சாரிகளாக வடிவம் கொண்ட திருமால்,
தன் படைத்தளபதி விஷ்வக்சேனரையும், வாகனமான கருடனையும் அழைத்துக் கொண்டு மேதாவியின் ஆசிரமத்தை அடைந்தார்.
அவர்களை உள்ளே அழைத்த மேதாவி முனிவர், அவர்களுக்கு விருந்தளித்தார்.

விருந்து முடிந்து கை அலம்பச் செல்லும்போது, வாசுதேவன் வடிவில் வந்த பெருமாள்,
கை அலம்பச் சொம்பில் தண்ணீர் ஊற்றிய வஞ்ஜுளவல்லியின் கையைப் பற்றிக் கொண்டார்.
“அப்பா!” என்று வஞ்ஜுளவல்லி கதற, கோபத்துடன் மேதாவி முனிவர் வாசுதேவனை நோக்கி வந்தார்.
அப்போது தானே திருமால் என்று உணர்த்தும் பொருட்டு, மறைத்து வைத்திருந்த சங்கு சக்கரங்களைத் தூக்கி மேதாவியிடம் காட்டினார் திருமால்.
வந்திருப்பவர் திருமால் என உணர்ந்து கொண்ட மேதாவி முனிவர், அவருக்கே தன் மகளை மணம் முடித்துத் தர விரும்பினார்.
ஆனால், திருமணத்தை விசாக நட்சத்திரத்தன்றுதான் நடத்த வேண்டும் என்று திட்டவட்டமாகச் சொன்னார் மேதாவி.
அதை ஏற்று ஆவணி மாதம் விசாக நட்சத்திரத்தன்று வஞ்ஜுளவல்லியின் கைப்பிடித்தார் ஸ்ரீ நிவாசப் பெருமாள்.
இன்றும் அதே கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு இருவரும் அருட்பாலித்து வருகிறார்கள்.

* தானே திருமால் என்று மேதாவிக்கு உணர்த்தும் பொருட்டு சங்கு சக்கரங்களைத் தூக்கிப் பிடித்துக் காட்டினார் அல்லவா?
அதே திருக்கோலத்துடன், சங்கு சக்கரங்களைத் தூக்கிப் பிடித்த படி இன்றும் மூலவர் எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.

* திருமால் எடுத்து வந்த மற்ற நான்கு வடிவங்களான பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், சங்கர்ஷணன்
ஆகிய நால்வரும் பெருமாளோடு கருவறையில் எழுந்தருளியிருக்கிறார்கள்.

* திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதராக வந்த பிரம்மா கருவறையிலேயே எழுந்தருளியுள்ளார்.
மூலக்கருவறைக்குள் பிரம்மா இருக்கும் வெகு சில கோயில்களுள் இதுவும் ஒன்று.

* திவ்ய தம்பதிகளை இணைத்து வைப்பதற்குக் காரணமாக இருந்த கருடனைக் கௌரவிக்கும் வகையில்,
அவருக்கென்று தனி சந்நதி இவ்வூரில் உள்ளது.
அங்கே பிரசித்த பெற்ற கல்கருடனாக ஆறுகால பூஜையுடன் அவர் திகழ்கிறார்.

* வஞ்ஜுளவல்லிக்குத் தோழியாக வந்த பொன்னி யம்மனுக்கு இன்றும் நாச்சியார்கோவிலில் தனி சந்நதி உள்ளது.

* மேதாவி முனிவர் வழிபட்ட சக்கரத்தாழ்வார் இன்றும் தனி சந்நதியுடன் திருக்கோவில் பிராகாரத்தில் காட்சியளிக்கிறார்.
வருடந்தோறும் ஆடி அமாவாசையை ஒட்டி, நான்கு நாட்கள் அவருக்கு சுதர்சன ஹோமம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

* ‘நறை’ என்ற சொல் நறுமணத்தைக் குறிக்கும். இவ்வூர் முழுதும் பரவியிருந்த வஞ்ஜுளவல்லியின் திருமேனி
நறுமணத்தைக் கொண்டு கருடன் தாயாரின் இருப்பிடத்தைக் கண்டறிந்த படியால்,
இவ்வூர் ‘நறையூர்’ என்று பெயர் பெற்றது. வடமொழியில் ‘சுகந்தவனம்’ என்று அழைப்பார்கள்.

திருக்கல்யாண வைபவம் நிறைவடைந்த பின், ஸ்ரீ நிவாசப் பெருமாள் மேதாவி முனிவரிடம்,
“முனிவரே! விசாக நட்சத்திரத்தில் திருமணம் நடத்தும் வழக்கம் இல்லாத போது,
நீங்கள் ஏன் உங்கள் மகளின் திருமணத்தை அந்த நட்சத்திரத்தில் நடத்தச் சொன்னீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு மேதாவி முனிவர், “சாகா என்றால் கிளை என்று பொருள். ‘விசாகா’ என்றால் ‘வேறு கிளை இல்லை’ என்று பொருள்.
என் மகளான வஞ்ஜுளவல்லியை மணந்து கொள்ளும் நீங்கள் வேறு எங்கும் கிளைகள் தொடங்காமல்
(வேறு திருமணம் செய்து கொள்ளாமல்), ஏக பத்னி விரதனாக ஒரே மனைவியுடன் வாழ வேண்டும் என்று விரும்பினேன்.
அதனால் தான் வேறு கிளைகள் இல்லை என்று பொருள் படும் விசாக நட்சத்திரத்தில்
இந்தக் கல்யாணத்தை நடத்தி வைத்தேன்!” என்று விடையளித்தார்.

அவ்வாறே, இன்றும் நாச்சியார் கோவிலில் ஸ்ரீநிவாசப் பெருமாள் வஞ்ஜுளவல்லி என்னும் ஒரே நாச்சியாரோடு
ஏக பத்னி விரதனாகத் திகழ்வதைக் காணலாம்.
பொதுவாகப் பெருமாள் கோயில்களில் உற்சவருக்கு இருபுறமும் ஸ்ரீ தேவி, பூதேவிகள் இருப்பதுண்டு.
ஆனால் இங்கோ உற்சவருக்கு அருகிலும் வஞ்ஜுளவல்லித் தாயார் மட்டுமே எழுந்தருளியிருப்பாள்.
தாயாருக்குத் தனி சந்நதி இல்லை. அதுபோல், ஆண்டாள் சந்நதியும் இக்கோயிலில் தனியாக இல்லை.
ஏனெனில், ஸ்ரீ தேவி, பூதேவி, நீளாதேவி, ஆண்டாள், தனிக்கோவில் நாச்சியார் என அனைவருக்கும் பிரதிநிதியாக
ஸ்ரீ வஞ்ஜுளவல்லித் தாயார் மட்டுமே இங்கே எழுந்தருளியிருக்கிறாள்.

அன்று ஆவணி விசாகத்தில் ஸ்ரீ வஞ்ஜுளவல்லிக்கும் ஸ்ரீ நிவாசனுக்கும் மேதாவி முனிவர் நடத்தி வைத்த
திருமணத்தின் நினைவாக ஆண்டுதோறும்,
ஆவணி மாதம் விசாக நட்சத்திரத்தில் இத்திருக்கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
இவ்வருடம் செப்டம்பர் மாதம் 5ம் தேதி இந்த உற்சவம் நடைபெற உள்ளது.
ஆவணி விசாகத்துக்கு முந்தைய நாள் மாலை திருக்கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் நிச்சயதார்த்த வைபவம் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து ஆவணி விசாக நன்னாளில், காலை மேதாவி முனிவரின் ஆசிரமம் இருந்த இடமான
சக்கரத்தாழ்வார் சந்நதியில் இருந்து தாயாரும், கருவறையில் இருந்து பெருமாளும் புறப்பட்டு வந்து மாலை மாற்றிக் கொள்வார்கள்.
அதன் பின் நூற்றுக்கால் மண்டபத்தில் காலை ஒன்பது மணியளவில் வெகு சிறப்பாகத் திருக்கல்யாணம் நடைபெறும்.

அன்று மாலை பெருமாள் தாயார் திருக்கோலத்திலும், தாயார் பெருமாள் திருக்கோலத்திலும் எழுந்தருள்வார்கள்.
இந்த அலங்காரத்துக்கு அம்மான் திருக்கோலம் என்று பெயர்.
அம்மான் திருக்கோலத்திலேயே மாட வீதிகளில் வலம் வந்து தெற்கு மாட வீதியில் உள்ள
ஐவர் பணி மணிமாடத்தில் சிறிது நேரம் பெருமாளும் தாயாரும் இளைப்பாறிவிட்டு மீண்டும் சந்நதிக்கு எழுந்தருள்வார்கள்.

———–

ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி நவ கருட ஸேவை உத்சவம்

ஸ்ரீ ஆழ்வார் திருநகரியில், ஸ்ரீ நம்மாழ்வார் வைகாசி விசாக உற்சவத்தின் ஐந்தாம் திருநாள் காலை
ஆழ்வார்/ஆதிநாதர் கோவில் வாசல் பந்தலில் நவதிருப்பதி எம்பெருமான்களும் ஒவ்வொருவராக எழுந்தருள்வார்கள்.
ஆழ்வார் அந்தந்தப் பெருமாளைப் பிரதஷிணமாக வந்து,
அவர்கள் மீது தாம் அருளிச் செய்த திருவாய் மொழிப் பாசுரங்களைப் பாடுவார்.
ஆழ்வார் பாடியதை இன்று அரையர் தாளத்துடன் பாடுவார்.
ஒவ்வொரு பெருமாளும் ஆழ்வாருக்குத் தகுந்த மரியாதைகள்-தீர்த்தம்,சடகோபன்,சந்தனம்,மாலை,வஸ்திரம்(பரிவட்டம்) அருளுகின்றனர்.

இரவு ஆழ்வார் ஹம்ச வாகனத்திலும், அவரது உத்தமர் சீடர் மதுரகவி ஆழ்வார் பிறங்கி நாற்காலி யிலும்,
ராஜகோபுரத்துக்கு வெளியே எழுந்தருளி,
கருடன் மீது ஆரோகணித்து வரும் நவ திருப்பதி பெருமாளை வரவேற்கக் காத்திருப்பார்கள்.

எம்பெருமான்கள் இந்த வரிசையில் எழுந்தருள்வார்கள்:

1.ஸ்ரீஆதிநாதப்பெருமாள்/பொலிந்து நின்ற பிரான்-திருக்குருகூர்(ஆழ்வார் திருநகரி)

2.ஸ்ரீவைகுண்ட நாதர்/கள்ளர்பிரான், ஸ்ரீவைகுண்டம்

3.ஸ்ரீவிஜயாசனர்/எம்மிடர் கடைவான்,நத்தம்(வரகுண மங்கை)

4.ஸ்ரீபூமிபாலகர்காய்சினவேந்தர்,திருப்புளியங்குடி

5.ஸ்ரீமாயக்கூத்தன்/வேங்கட வண்ணன்,பெருங்குளம்.

6.ஸ்ரீ ஸ்ரீனிவாசன்/தேவர்பிரான்,இரட்டைத்திருப்பதி

7.ஸ்ரீ அரவிந்த லோச்சனர்/செந்தாமரைக் கண்ணன், இரட்டைத்திருப்பதி

8.ஸ்ரீமகரநெடுங்குழைக் காதர்/நிகரில்முகில்வண்ணன்,-தென்திருப்பேரை

9.ஸ்ரீவைத்தமாநிதிப்பெருமாள்,/-நிச்சோபவிதன்,திருக்கோளூர்.

ஆழ்வார் திருநகரியில் கருடன் வைபவம்: நம்மாழ்வாரைக் காட்டி அருளிய கருடாழ்வார்
ஆழ்வார் திருநகரியில் கருடனுக்குத் தனி ஏற்றம்.

கோவில் மதில் மேல் வட,கிழக்கு மூலையில் உள்ள கருடாழ்வாருக்கு ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சித்திரத்தன்று
திருமஞ்சனம் நடக்கிறது.அந்த மூலையில் தனியாகக் கருடன் சந்நிதி உள்ளது.
கருடனுக்கு இரண்டு உயரமான தீப ஸ்தம்பங்கள் உள்ளன.முன்பு நித்யமும் ஸ்தம்பங்களில் தீபம் ஏற்றுவார்களாம்.
இப்போது எப்போதாவது ஏற்றுகிறார்கள்.இந்தக் கருடனுக்குத் தினமும் ஆறு காலப் பூஜை நடக்கிறது.
ஆனி மாதம் சுவாதி கருட அவதார உற்சவம் இங்கு 10 நாட்கள் நடக்கிறது.
அங்குள்ள மண்டபத்தில் 10 நாட்களும் திவ்ய பிரபந்த சேவாகாலம் நடைபெறுகிறது.

பக்கத்துக் கிராமங்களிலிருந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் 10 நாட்கள் விரதமிருந்து,கருடனுக்குப் பால்குடம் எடுத்து வருவார்கள்.
இது அல்லாமல் தினமும் பலரும் நேர்ந்து கொண்டு வந்து சிதறு தேங்காய் உடைக்கின்றனர்.
பிரார்த்தனகளை நிறைவேற்றும் வரப்பிரசாதி கருடன் என்கின்றனர்
(சிதறிய தேங்காயை எடுத்து உலர்த்திக் கொப்பரை/எண்ணெய் செய்வதற்காகவே பணியாட்கள் உள்ளனர்;ஒரு கொட்டகையும் உள்ளது)

மற்ற பெருமாள் கோவில்களைக் காட்டிலும் இங்கு கருடனுக்கு ஏன் இத்தனை விசேஷம்?

முகமதியர்கள் படையெடுப்பின் போது நம்மாழ்வாரைக் காப்பாற்ற அர்ச்சகர்கள் அவரை எடுத்துக்கொண்டு பல்வேறு ஊர்களுக்குச் சென்றனர்.
அப்போது நேர்ந்த பல இடர்ப்பாடுகளில் நம்மாழ்வார் விக்ரகம் இருமுறை காணவில்லை.
ஒவ்வொரு முறையும் கருடனே ஆழ்வாரைக் காட்டிக் கொடுத்தார்.

கேரளாவில் திருக்கணாம்பி
(கோழிக்கோடு பக்கத்தில்) என்னும் இடத்தில் நம்மாழ்வாரை வைத்துப் பூஜை செய்து கொண்டிருந்தனர்.
அதே சமயத்தில்,ஶ்ரீரங்கத்தின் மீது ஊலுக்கான்(முகமது பின் துக்ளக்),படையெடுத்து வந்த போது
நம்பெருமாளையும், உபய நாச்சிமார்களையும், எடுத்துக்கொண்டு பிள்ளைலோகாசார்யர் தெற்கு திசை நோக்கி வந்தார்.
ஜோதிஷ்குடியில் லோகாசார்யர் பரம பதம் எய்தியபின்னர்,அவருடைய சீடர்கள் அவரை எடுத்துக் கொண்டு கேரளா பக்கம் வந்தார்கள்.
அவர்களும் திருக்கணாம்பி வந்து சேர்ந்தனர்.
அங்கு நம்பெருமாள்,நம்மாழ்வாருக்கு தம் வட்டமனையையும், முத்துச்சட்டையையும் கொடுத்தார்.
அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு நதியைக் கடக்க படகில் சென்றனர்.

நம்பெருமாள் சென்ற படகு முன்னால் சென்று விட்டது.
ஆழ்வார் சென்ற படகு நதியின் அலைகளில் தடுமாறியதில் நம்மாழ்வார் தண்ணீரில் வீழ்ந்து விட்டார்.
நதியின் ஆழத்தில் எங்கு விழுந்தார் என்று தெரிய வில்லை.
அப்போது அங்கு பறந்து வந்த கருடன் ஓரிடத்தில் வட்டமிட்டு ஆழ்வார் அங்கிருப்பதைக் காட்டினார்.

ஆழ்வாரை மீட்டவர்கள் மேலும் பயணம் தொடர்வது ஆபத்தானது என்று கருதி,
ஆழ்வாரை முத்திரிப்பூ மலை அடிவாரத்தில்,ஓரிடத்தில் பத்திரமாக மண்ணில்மூடி வைத்துவிட்டுத் திரும்பி விட்டனர்.
சில காலம் கழித்து ஆழ்வாரை மீட்டு ஆழ்வார் திருநகரிக்குக் கொண்டு வரச் சென்றவர்களுக்கு
ஆழ்வாரை வைத்திருந்த இடம் தெரியவில்லை.

அப்போது ஆழ்வார் இருக்கும் இடத்திலிருந்து ஒரு கருடன் கூவி அவர்களுக்குக் காட்டியது.
மிக சிரமப்பட்டு,அவர்கள் ஆழ்வாரை எடுத்துக்கொண்டு திருநகரி வந்தனர்.

ஆழ்வார் திருநகரி முகமதியர் படையெடுப்பில் சீரழிந்து காடாக மாறி விட்டது.காட்டில் பல புளிய மரங்கள் வளர்ந்து விட்டன.
ஆழ்வார் 16 ஆண்டுகள் இருந்த புளியமரம் எது என்று அவர்களால்(திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் சிஷ்யர்கள்) கண்டு பிடிக்கமுடியவில்லை.
அப்போதும் ஒரு கருடன் வந்து அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தார்.
அங்கே காட்டுக்குள் இருந்த கோவிலைக் கண்டு பிடித்து புணர் நிர்மாணம் செய்து
நம்மாழ்வார் விக்ரகத்தையும் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்.

இவ்வாறாக கருடாழ்வார், நம்மாழ்வாரை மீண்டும் ஆழ்வார் திருநகரிக்குக் கொண்டு வந்து சேர்க்க பேருதவி புரிந்தார்.
அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் இங்கு கருடனுக்கு விசேஷ ஆராதனை நடைபெறுகிறது

நான்கு கரங்கள் கொண்ட கருடன்

திருக்குருகூருக்கும்,கருடனுக்கும் உள்ள அருந்தொடர்பு நம்மாழ்வார் காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்தது.
திருக்குருகூர் புராதனமான வராக ஷேத்திரம்.

இந்த ஊரில் ஆதியில் வந்து கடாஷித்தவர் லட்சுமி வராகரான ஞானப் பிரான் ஆவார்.
அவருக்குப் பின்னால் வந்தவர் தான் ஆதிநாதப் பெருமாள் (பொலிந்து நின்றபிரான்).
ஆனால் திருமலை போல பின்னால் வந்த பெருமாள் பிரபலமடைந்தார்.
எனவே ஆதிநாதப் பெருமாள்/ஆழ்வார் கோவில் என்று அழைக்கப் படுகிறது.
இப்போதுள்ள கோவிலில் ஆதிநாதருக்கு வலப்புறம் ஞானப்பிரான் சந்நிதி உள்ளது.

ஞானப்பிரான் சந்நிதிக்கு எதிரில் உள்ள சந்நிதிக் கருடன் நான்கு கரங்களுடன் இருக்கிறார்.
சங்கு,சக்கரங்களை ஏந்தியவாறும்,வலது கீழ்க்கரம் அபய ஹஸ்தமாகவும்,
வலது கீழ்க்கரத்தில் நாகனை ஏந்தியும் உள்ளார்.
பல கோவில்களிலும் கருடன் இரு கரங்களில் அஞ்சலி செய்தவாறு இருப்பார்.
சில கோவில்களில் சங்கு,சக்கரம் தரித்திருந்தாலும் மற்ற இரு கரங்களிலும அஞ்சலி செயத்வாறே இருப்பார்.
இந்த ஒரு கோவிலில் மட்டுமே இவ்வாறு நான்கு கரத்தானாக இருக்கிறார்.

இதற்கு விளக்கம் சொன்ன அர்ச்சகர்
பெருமாள் வராக அவதாரம் எடுத்த போது,பூமியை மீட்க கடலுக்குள் செல்லும் முன் தம் சங்கு சக்கரங்களை கருடனிடம் கொடுத்ததால்
கருடன் அவற்றை ஏந்திக் கொண்டு, இங்கு வராகப் பெருமாள் முன் நிற்கிறார் என்றார்.
நாகனும் கருடனுடன் இருப்பதால்,நாகனைக் கையில் ஏந்தியவாறும், பெருமாள் இருக்கிறார்;
அஞ்சேல் என்ற அபய ஹஸ்தத்துடனும் சேவை சாதிக்கிறார் என்றார்.

——–

ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி பிரம்மோற்சவம் சிறப்பான ஒன்றாகும்.
சுவாமி நம்மாழ்வார் திருஅவதார தினத்தை முன்னிட்டு இந்த திருவிழா நடைபெறுகின்றது.
திருவைகாசி மாத திருவிசாகத்தில் ஆழ்வார் திருமஞ்சனம் கண்டருள பத்து நாள் உற்சவம்
வைகாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் தொடங்கி விசாக நட்சத்திரத்தில் நிறைவடைகின்றது.
தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

முதல் திருநாள் காலை கொடியேற்றம், இரவு வெள்ளி இந்திர விமானம்,
இரண்டாம் திருநாள் இரவு புஷ்பப் பல்லக்கு,
மூன்றாம் திருநாள் இரவு தங்கப் புன்னை மர வாகனம்,
நான்காம் திருநாள் இரவு தங்கத் திருப்புளி வாகனம்.
இந்த உற்சவத்தில் 5ம் நாள் உற்சவத்தில் ஒன்பது கருட சேவை காணக் கண் கொள்ள காட்சியாகும்.
இக் காட்சியைக் கண்டவர்கள் தேவாதி தேவர்களை விடவும் மேலான பிறப்புடையவர்களாக கருதப் படுகின்றனர்.

ஆறாம் திருநாள் மாலை தண்டியல் புறப்பாடு, இரவு வெள்ளி யானை வாகனம்,
ஏழாம் திருநாள் காலை உடையவர் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தி திருமஞ்சனம், இரவு வெள்ளி சந்திர பிரபை.
எட்டாம் திருநாள் காலை அப்பன் சன்னதிக்கு எழுந்தருளி ஆழ்வார் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம், இரவு தங்கக்குதிரை வாகனம்.
ஒன்பதாம் திருநாள் காலை கோரதம், இரவு பல்லக்கில் தாழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம்.
திருவைகாசி விசாகம் காலை பத்தாம் திருநாளன்று தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி, இரவு வெட்டிவேர் சப்பரம் வெள்ளி தோளுக்கினியான்.
பின்னர் பதினொன்றாம் நாள் ஆழ்வார் ஆஸ்தானம் எழுந்தருளுகின்றார்.

பின்னர் நான்கு நாட்கள் விடாயாற்று என்று சிறப்பாக நடைபெறுகின்றது.

இந்த திருவைகாசி திரு அவதார திருவிழாவின் ஐந்தாம் திருநாள்,ஊர் முழுவதும் வைணவர்களால் நிறைந்திருக்கின்றது.
இன்னும் பல அன்பர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். சன்னதி தெரு முழுவதும் மேலே பந்தல் தரையில் கோலம்.
அன்றைய தினம் –மாலரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தனென்று ஓலமிட்ட
நம்மாழ்வாரின் தீந்தமிழ் பாசுரத்தை அருந்த வரும் எம்பெருமான்கள் எவர் எவர் என்று பார்ப்போமா?
1.ஸ்ரீ கள்ளபிரான் – ஸ்ரீவைகுண்டம்,
2. ஸ்ரீ எம் இடர் கடிவான் – ஸ்ரீவரகுண மங்கை (நத்தம்),
3. ஸ்ரீ காய்சினவேந்தன் – திருப்புளியங்குடி,
4. ஸ்ரீ தேவர்பிரான் – இரட்டைத் திருப்பதி,
5. ஸ்ரீ செந்தாமரைக் கண்ணன் – இரட்டைத்திருப்பதி,
6. ஸ்ரீ மாயக்கூத்தன் திருக்குளந்தை (பெருங்குளம்),
7. ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் – தென்திருப்பேரை
8. ஸ்ரீ நிக்சோபவித்தன் – திருக்கோளுர்,
9. ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் – ஆழ்வார் திருநகரி.

அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன் தன் மேல் நண்ணி நன்குறைகின்றானை
ஞாலமுண்டுமிழ்ந்த மாலை பாடிய நம்மாழ்வாரின் தீந்தமிழ் பாசுரங்களை செவி மடுக்க
தோளுக்கினியானில் சகல அலங்காரத்துடன், பட்டு பீதாம்பரம் தரித்து அழகான கிரீடங்களுடன்
கையில் எழிலாக கிளி ஏந்தியவாறு நவதிருப்பதிகளில் கோயில் கொண்டுள்ள
எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளுகின்றனர்.

நல் வளஞ்சேர் பழனத் திருக்கோளுரிலிருந்து நிக்சோபவித்தன் பெருமாளும், மதுரகவியாழ்வாரும்,

தேன் மொய்த்த பூம்பொழில் தண்பணை சூழ தென் திருப்பேரையிலிருந்து நிகரில் முகில் வண்ணனும்,

திருக் குளந்தையிலிருந்து மாயக்கூத்தரும்,

நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல்லோங்கு செந்தாமரை வாய்க்குந் தண்பொருநல்
வடகரை வண் தொலைவில்லி மங்கலம், இரட்டைத் திருப்பதியிலிருந்து செந்தாமரைக் கண்ணரும், தேவர் பிரானும்
இரண்டு பெருமாள்களாக ஆழ்வார் திருநகரி ஆலயத்தின் முன்புள்ள மண்டபத்தில் ஒருவர் ஒருவராக எழுந்தருளுகின்றனர்.

(ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசமாக பார்க்கும் போது தொலைல்லி மங்கலம் ஒரே திவ்ய தேசம் ஆகும்,
ஆனால் தாமிரபரணியின் நவதிருப்பதி என்று பார்க்கும் போது இரண்டு ஆலயங்களாக கணக்கிடப்படுகின்றது).
திருக்குருகூரின் குறடில் ஆழ்வார் பெருமாள்களை வரவேற்க சர்வ அலங்காரத்துடன் காத்திருக்கின்றார்.
பக்தர்கள் மங்களாசாசன நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்று எதிர்பார்ப்புடன் கிடைத்த இடத்தையெல்லாம்
அடைத்துக் கொண்டு ஆவலாக காத்து நிற்கின்றனர்.

புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று என்று ஆழ்வார் பாடிய
ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவரகுணமங்கை, ஸ்ரீபுளிங்குடி எம்பெருமான்கள் வந்தவுடன் மங்களாசாசனம் நிகழ்ச்சி தொடங்குகின்றது.
ஏனென்றால் மற்ற ஆழ்வார்கள் திவ்ய தேசங்களுக்கு சென்று பெருமாளை மங்களசாசனம் செய்தனர்,
ஆனால் நம்மாழ்வாருக்கு அவர் திருப்புளியினடியில் அமர்ந்திருக்க பெருமாள்கள் அவருக்கு அருட்காட்சி அளிக்க
ஆழ்வார் அவர்களை மங்களாசாசனம் செய்தார்.
எனவே இங்கு ஆழ்வார்திருநகரியில், ஆழிநீர் வண்ணனை அச்சுதனை, தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்!
துணைமலர்க் கண்களாயிரத்தாய்! தாள்களாயிரத்தாய்! பேர்களாயிரத்தாய் என்று பாடிய ஆழ்வாரின்
செந்தமிழ் பாசுரங்களை செவி மடுக்க நவ திருப்பதி எம்பெருமான்கள் எழுந்தருளுகின்றனர்.

நம்மாழ்வார் மங்களாசாசனத்திற்கு எழுந்தருளுகின்றார்,
இந்த உற்சவம் தென்குறுங்குடி நம்பியே திருக்குருகூர் நம்பியாக அவதாரம் செய்ததாக ஐதீகம்.
அந்த திருக்குறுங்குடி ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் இந்த மங்களாசான உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ஒவ்வொரு பெருமாளின் பரிவட்டமும் மாலையும், சடாரியும் ஆழ்வாருக்கு சார்த்தப்படுகின்றது
பின்னர் கற்பூர ஆரத்தி காட்டப் படுகின்றது.
அப்போது அரையர் சுவாமிகள் ஆழ்வாரின் பாசுரங்களை தாளத்துடன் சேவிக்கின்றனர்.
ஆழ்வாரின் திருவாசியில் நவதிருப்பதி எம்பெருமான்களையும் நாம் சேவிக்கின்றோம்.
ஆழ்வாரின் அலங்காரத்தில் அவரது திருக்கூர் திவ்ய தேசத்தின் பாசுரங்கள் வெள்ளி மாலை அலங்கரிக்கின்றது.

பின்னர் ஆழ்வாரின் செந்தமிழ் பாசுரத்தை மூன்று பெருமாள்களும் செவி மடுக்கின்றனர். அந்த பாசுரம் இதோ.

புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாய்! எனக்கருளி
நளிர்ந்தசீருலகமூன்றுடன்வியப்ப நாங்கள்கூத்தாடிநின்றார்ப்ப
பளிங்குநீர்முகிலின்பவளம்போல்கனிவாய் சிவப்ப நீகாண வாராயே.

பெருமாளே! நீ திருப்புளிங்குடியிலே உன் பள்ளி கொண்ட அழகை காட்டினாய்;
வரகுண மங்கை திருப்பதியிலே இருந்த இருப்பைக் காட்டினாய்;
ஸ்ரீவைகுண்டத்திலே நின்ற கோலத்தில் காட்சி தந்து அருள் தருகிறாய்.
இவ்வாறு முன்று நிலைகளிலும் தெளிவு பெற்ற என் உள்ளத்துள் நிலைத்து நின்று என்னை ஆள்கின்றாய்.
நினைத்தவர்கள் மனம் குளிரும்படியாகவும் உன் சீல குணத்தாலே மூவுலகத்தில் உள்ளவர்கள் வியக்கும்படி நீ வர வேண்டும்.
நாங்கள் உன் குணங்களில் மூழ்கி ஆனந்தப்பட்டு கூத்தாடுவோம். பளிங்கு போன்ற தெளிந்த தண்ணீறை முகந்து வரும்
மேகத்தலே பவளக்கொடி படர்வதை போல கனிந்த உன் திருவாய் சிவந்து அழகுடன் விளங்க நீ வருவதைக் கண்டு மகிழ வேண்டும்.
என் எதிரே உன் அழகு காண நீ வர வேண்டும்.
என்று ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற கோல வைகுண்ட நாதர்-கள்ளபிரானையும்,
ஸ்ரீவரகுணமங்கை (நத்தம்) அமர்ந்த கோல விஜயாசனர்-எம்இடர்கடிவானையும்,
“ஸ்ரீபுளியங்குடி சயனக்கோல பூமிபாலகரையும் -காய்சினவேந்தரையும்,
“புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று” என்று
ஒரே பாசுரத்தில் வகுளாபரணர் மங்களாசாசனம் செய்துள்ளார்

தெளிந்தவென் சிந்தை என்பதன் மூலம் பராங்குசர் நம் மனதில் உள்ள குழப்பத்தையெல்லாம் எம்பெருமான் நீக்கியருள
நாம் கண்ணில் ஆனந்த கண்ணீர் சொரிய நிற்கும் காட்சியை பவளச்செங்கனிவாய் சிவப்ப காண வாராய் என்று கூப்பிட,
ஆழ்வாரின் சொல்லை நிரூபிப்பது போல, பக்தனுக்காக பகவான் வருவதற்கு இந்த உற்சவமே ஒரு சாட்சி.
பின்னர் ஆழ்வார் மூன்று பெருமாள்களையும் வலம் வந்து வணங்கியபின்,
ஆழ்வாரின் தீந்தமிழ்ப் பாடலை செவி மடுத்த மகிழ்ச்சியில் பெருமாள்கள் மூவரும் ஆனந்தமாக
ஆடி ஆடி திருக்கோவிலுக்குள் எழுந்தருளுகின்றனர்.

புளிங்குடி எம்பெருமான் மேல் நம்மாழ்வார் பத்து பாசுரங்கள் மங்களாசாசனம் செய்துள்ளார்
அவற்றுள் பாசுரங்கள்

பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின்கோயில் சீய்த்துப் பல்படிகால் குடிகுடி வழி வந்தாட் செய்யும்
தொண்டரோர்க்கருளிச் சோதிவாய் திறந்து உன் தாமரைக்கண்களால் நோக்காய்
தெண்திரைப்பொருநல்தண்பணைசூழ்ந்த திருப்புளிங்குடிக்கிடந்தானே.

பெருமாளே! மிகப்பழைய காலம் முதலாகவே நாங்கள் உன்னுடைய திருவருளையும்,
அதற்கு காரணமாகத் தாமரைப் பூவில் அமர்ந்துள்ள பெரிய பிராட்டியார் திருவருளையும் பெற்றிருக்கின்றோம்.
ஆகவே உனது திருக்கோவிலில் பலவிதமான கைங்கரியங்களச் செய்யும் பாக்கியத்தை
வம்ச பரம்பரையாக பெற்று .உனக்கு ஆட்பட்டுள்ளோம்.
அதிலும் திருஅலகிடுதல் முதலிய சிறப்பான கைங்கரியம் அல்லவா வாய்க்கப்பெற்றோம்.
அப்படிப்பட்ட உன் அடியார்களான எங்களை உன் தாமரைக் கண்களால் குளிரப்பார்த்து
உன் சோதி வாய் திறந்து பேசி அருள் செய்ய வேண்டும்.
தெளிந்த அலைகள் தவழும் தாமிரபரணி ஆற்றங்கரையில் வயல் சூழப்பட்ட திருப்புளிங்குடி என்னும்
திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளவனே! உன் திருக்கண் நோக்கு என்மேல் ஏற்பட அருள் செய்ய வேண்டும்.

காய்சினப்பறவையூர்ந்து, பொன்மலையின் மீமிசைக்கார்முகில்போல்
மாசினமாலிமாலிமாலிமானென்று அங்குஅவர்படக்கனன்றுமுன் நின்ற
காய்சினவேந்தே! கதிர்முடியானே! கலிவயல் திருப்புளிங்குடியாய்!
காய்சினவாழிசங்குவாள்மில் தண்டேந்தி எம்மிடர்கடிவானே!

மேருமலையின் மீது தங்கும் நீருண்ட மேகம் போலே, கோபம் கொண்டு தாக்க வல்ல கருடப்பறவையின் மேல் ஆரோகணித்து
வந்து மிக்க சினம் கொண்டு மாலி, சுமாலி என்னும் இரு அரக்கர்களை அழிந்துபோகும்படி தாக்கி வதைத்தாய்.
( இதனால் காய்சின வேந்தன் என்னும் பெயர் பெற்றாய்) காய்சின வேந்தே! ஒளி மிகுந்த திருமுடி உடையவனே!
வளம் மிகுந்த வயல்கள் சூழப்பட்ட திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டவனே!
காய்கின்ற சினம் கொண்ட சக்கரம், சங்கு, வாள், வில், தண்டு ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு காட்சி தரும் நீ
என் துயரத்தை நீக்குபவன் அன்றோ! அருள் புரிவாயாக?

பெருமாளை அரக்கர்களை அழிக்கும் காய்சின வேந்தராகவும்,
கருடனை அவருக்கு அதி உதவி புரியும் காய்சின பறவையாகவும்,
மற்றும் பெருமாளின் பஞ்சாயுதங்களையும் காய்சின ஆழி சங்கு வாள் வில் தண்டு என்றும், இவற்றால்
நம் இடர் களைபவர் என்று உற்சவரின் திருநாமத்தையும் சேர்த்து
ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார் காரிமாறப்பிரான்.

கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர்கெட அசுரர்கட்கிடர்செய்
கடுவினைநஞ்சே! என்னுடையமுதே! கலிவயல் திருப்புளிங்குடியாய்!
வடிவினையில்லா மலர்மகள் மற்றை நிலமகள்பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேனும் பிடிக்கநீயொருநாள் கூவுதல்வருதல் செய்யாயே.

பெருமானே! உன் பகைவரிடத்தே அடியார்களுக்காக ஆயுதம் எடுக்க வல்லவனே!
தேவர்கள் துன்பம் தொலைவதற்காக அசுரர்களைத் தாக்கி அழிப்பவனே! அவர்களுக்குக் கடுமையான நஞ்சு போன்றவனே!
எனக்கோ இனிய அமுதமாக இருப்பவனே! வளமான வயல்கள் நிறைந்த திருப்புளிங்குடி தலத்திலே
நீ பள்ளி கொண்டு காட்சி தருகின்றாய். இணையற்ற வடிவழகு கொண்ட பெரிய பிராட்டியாரும், மற்றும் பூமி பிராட்டியாரும்
உன் மெல்லிய திருவடிகளை வருடியபடி பிடிக்கிறார்கள்.
அவர்களைப் போலவே கொடிய வினையேனாகிய அடியேனும் உன் திருவடிகளைப் பிடிக்க விரும்புகிறேன்.
அதற்காக என்னை நீ ஒரு நாள் அழைத்துக் கூப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
என்னை அங்கே அழைத்துக்கொள்ளாவிடிலும் எனக்காக நீ இங்கேயாவது வர வேண்டும்.

மூலவர் :காசின வேந்தன், காய்சினவேந்தன், பூமிபாலகர், ஆதிசேஷனில் பள்ளி கொண்ட கோலம்,
தாயார் இருவருடன் கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.

தாயார் :மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார்(தனி சன்னதி இல்லை) உற்சவர் – புளியங்குடிவல்லி
விமானம்: வேதசார விமானம்.
தீர்த்தம் : வருணநிருதி தீர்த்தம், தேவ புஷ்கரணி.
பிரத்யட்சம் : வருணன், நிருதி, தர்மராஜா.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்:நம்மாழ்வார் 12 பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
கிரகம்: புதன் ஸ்தலம்.

———

ஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் கருட சேவை-

மூலவர் : வைகுந்த நாதன், நின்ற திருக்கோலம், கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: கள்ளர் பிரான் (சோர நாதர்)
தாயார் : வைகுந்த வல்லி, கள்ளர்பிரான் நாச்சியார்( தாயார்களுக்கு தனித்தனி சன்னதி)
விமானம்: சந்திர விமானம்
தீர்த்தம் : தாமிரபரணி,பிருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
தல விருட்சம்: பவள மல்லி
பிரத்யட்சம் : பிரம்மா, இந்திரன் , பிருகு சக்ரவர்த்தி
ஆகமம் : பஞ்சராத்ரம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம் : நம்மாழ்வார்
கிரகம்: சூரியஸ்தலம்

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம்.
நவ திருப்பதிகளில் முதலாவதாகவும், நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது.
ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.
நான்கு புஜங்களுடன், கையில் தண்டத்துடன், ஆதி சேஷனைக் குடையாகக் மார்பில் மஹா லக்ஷ்மியுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
பிரகாரத்தில் வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளது. மேலும் நரசிம்மர் சன்னிதி, கோதண்ட ராமர் சன்னிதியும் உள்ளன.
சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பௌர்ணமி நாளன்று, சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படி,
இதற்கு ஏற்றாற் போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம், மேரு வடிவ பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது.
இத்தலம் சூரிய தோஷ பரிகார ஸ்தலம் ஆகும். ஆதித்ய ஹ்ருதயம் சேவிக்க அருமையான் பலன் உண்டு.

108 திவ்ய தேச சேவை:
தை மாதம் முதல் நாள் அன்று கள்ளபிரானை 108 போர்வைகளால் போர்த்தி கொடி மரத்தை சுற்றி வந்த பின்
பூஜை செய்து ஒவ்வொரு போர்வையாக களைகின்றனர்.
அன்றைய தினம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசத்து எம்பெருமான்களாக
கள்ளபிரான் சேவை சாதிப்பதாக ஐதீகம்.

9 நிலைகளும் 110 அடி உயரமும் கொண்டுள்ள இராஜ கோபுரத்தில் அற்புதமான பல சுதை சிற்பங்கள் உள்ளன.
இக்கோவிலின் திருவேங்கடமுடையான் சன்னதியில் நாயக்கர் காலத்தை சார்ந்த அற்புதமான கற்சிற்பங்கள் உள்ளன.
அவை அனைவரது கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.
குறிப்பாக ஆதிசேஷனை குடையாகக் கொண்டு அமர்ந்த கோலத்தில் உபய நாச்சியார்களுடன் காட்சி தரும் வைகுண்ட பெருமாள் சிற்பம்,
மூன்று உலகங்களும் தன்னுள் அடக்கம் என்று உணர்த்தும் அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த பெருமாள் சிற்பம்,
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதை உணர்த்தும் இராமர், அனுமன் சிற்பம்,
கணவனின் காலில் இருந்து முள்ளுடன் சேர்த்து வலியையும் எடுக்கும் மனைவி, யாழியின் வாலுக்குள்ளே ஆஞ்சநேயர்,
பலவித கோலங்களில் வானரங்கள் என ஆயிரம் கதை சொல்லும் சிற்பங்கள் அனைத்தும் தத்ரூபம்.

—————

பின்னை கொல்?நிலமாமகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்
என்னமாயங்கொலோ? இவள் நெடுமா லென்றே நின்று கூவுமால்
முன்னிவந்தவன் நின்றிருந்துறையும் தொலைவில்லி மங்கலம்
சென்னியால்வணங்கும் அவ்வூர் திருநாமம் கேட்பது சிந்தையே.

தொலைவில்லி மங்கலத்தில் நெடுமால் நின்றும் (ஸ்ரீநிவாசன்) இருந்தும் ( அரவிந்த லோசனர்)
அருள் பாலிக்கும் அழகை, எளிமையை நம்மாழ்வார் பாடுகின்றார்.

திருத்தொலைவில்லி மங்கலம் இரண்டு திருப்பதிகளை அருகருகே கொண்டுள்ளதால் இரட்டைத்திருப்பதி என்றும் அழைக்கப்படுகின்றது.
தன்பொருநை நதியின் வடகரையில் திருப்புளியங்குடி திருப்பதியின் தென் கிழக்கிலும் நெற்பயிர்களும்,
மலர்களும் நிறைந்த இந்தத்தலம் திருப்பெருங்குளத்திற்கு மேற்கில் சுமார் 5 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
திவ்ய தேசங்களுள் 84வது நவதிருப்பதிகளில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது.
இத்திருத்தலங்களுக்கு மேற்கே ஒன்றரை கி.மீ தூரத்தில் நம்மாழ்வாரின் அவதார ஸ்தலம் அப்பன் கோவில் உள்ளது

தெற்குக் திருக்கோவில்:

மூலவர்: ஸ்ரீநிவாசன், உபய நாச்சியார்களுடன் நின்ற திருக்கோலம் கிழக்குப்பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: தேவர் பிரான்
தாயார்: அலர்மேல் மங்கை, பத்மாவதி தனி சந்நிதி இல்லை.
விமானம்: குமுத விமானம்.
தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி
பிரத்யட்சம்: இந்திரன், வாயு, வருணன்.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்: நம்மாழ்வார் 12 (6ம் பத்து -5ம் திருவாய் மொழி) பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
கிரகம்: இராகு ஸ்தலம்.

வடக்குத் திருக்கோயில்:

மூலவர் : அரவிந்த லோசனர் (அமர்ந்த திருக்கோலம்) கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர்: செந்தாமரைக்கண்ணன்.
தாயார் : கருந்தடங்கண்ணித் தாயார்.
விமானம்: குமுத விமானம்.
தீர்த்தம் : வருண தீர்த்தம்.
பிரத்யட்சம் : வருணன், இந்திரன், வாயு.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்:நம்மாழ்வார் 12 (6ம் பத்து -5ம் திருவாய் மொழி) பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
கிரகம்: கேது ஸ்தலம்.

குழையும் வாள்முகத்தேழையைத் தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழைபெய்தாலொக்குங்கண்ணநீரினொடுஅன்று தொட்டும்மையாந்து இவள்
நுழையுஞ்சிந்தயளன்னைமீர்! தொழும் அத்திசையுற்று நோக்கியே.

பெருமாளைக் கண்ட பின் வேறு எதுவும் நினைவில் இல்லாத பராங்குச நாயகியாய்
தன்னை பாவித்து நம்மாழ்வார் பாடிய தோழிப் பாசுரம்.

———–

பெருங்குளம் என்று தற்போது அழைக்கப்படும் இந்த திருக்குளந்தை திருத்தலம்,

பெருமாள்: ஸ்ரீநிவாசன்(வேங்கடவாணன்), நின்ற கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.
உற்சவர் : மாயக்கூத்தன் (சோர நாட்டியன்)
தாயார் : குளந்தைவல்லி(கமலா தேவி), அலர்மேல்மங்கை. (தனி சன்னதி இல்லை.)
விமானம்; ஆனந்த நிலையம்.
தீர்த்தம்: பெருங்குளம்.
பிரத்யட்சம்: பிரகஸ்பதி.
ஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.
மங்களாசாசனம்: நம்மாழ்வார் ஓர் (8ம் பத்து -2ம் திருவாய் மொழி) பாடலால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
கிரகம்: சனி ஸ்தலம்
திவ்ய தேசங்களுள் 86வது நவதிருப்பதிகளில் 7வது.
சிறப்பு: கமலாவதியை மார்பில் ஏற்றது. கருடன் (ஆடல்பறவை) ஏக ஆசனத்தில் உற்சவருடன் எழுந்தருளியுள்ளார்.

இங்கிருந்து கருடாழ்வார் மீது பெருமாள் புறப்பட்டு இமயம் சென்றதால் கருடன் இங்கு உற்சவராகவும் எழுந்தருளியுள்ளார்.
மேலும் உதவி புரிந்த கருடாழ்வாருக்கு உற்சவர் மற்றும் உபயநாச்சியர்களுடன் ஏக ஆசனம் அளித்துள்ளார் பெருமாள்.
கருடன் இங்கே சிறகுகளை உயரே தூக்கிய வண்ணம் பறக்கும் கோலத்தில் ஆடல் பறவையாகக் சேவை சாதிக்கின்றார்.
இத்திருக்கோயிலின் மதிலின் ஈசானிய மூலையில் வீற்றிருக்கும் கருடனுக்குப் பெருமாளுக்குச் சாற்றிய
பூச்சட்டையை மறு நாள் சாற்றுவது வழக்கம். இதன் பிறகே பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகம் செய்யப்படுகின்றது.
இத்தலத்தைப் மங்களாசாசனம்ச் செய்த நம்மாழ்வார் “ ஆடல் பறவை” என்று கருடனையும் மங்களாசாசனம் செய்துள்ளார். இதோ பாடல்

கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன் கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தேன்
மாடக்கொடிமதின் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக்கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல்லோர் ஆழிவலவனை ஆதரித்தே!!

“மாயக்கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா! கண்கைகால்
தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழ்தா
சாயல் சாமத்திருமேனி தன் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம்போல் வருவானே! ஒருநாள் காண வாராயே!” (8-5-1)

மாயக் கூத்தன் என அழைக்கின்றார் நம்மாழ்வார் கண்ணனை. மாயக் கூத்தனான அந்தக் கண்ணனைக் காணவேண்டும்,
அவன் வடிவழகை இரு கண்ணாரக் காணவேண்டும் என்ற ஆவல் மீதூற அவனை அழைக்கின்றார்.
மாயக் கூத்தா, வாமனா, உன் கண்களும் கைகளும், கால்களும் மலர்களால் ஆனவையோ,
உன் திருவாய் ஆம்பல் மலரின் அரும்போ? உன் கரிய திருமேனியைப் பார்த்தால் பச்சை இலை போல் உள்ளதே?
இவைகள் அனைத்தையும் உன்னிடத்தில் வைத்திருக்கும் நீ நான் தாகம் தீர்த்துக் கொள்ள அமைந்த திருக்குளம்போல் உள்ளாய்!
உன்னை நான் என் கண்ணாரக் காண நீ ஒரு நாள் நேரில் வரமாட்டாயா?” என்றும் அழைக்கின்றார் நம்மாழ்வார்

இத்தலத்திற்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
அங்கு ஆண்டாள் திருவவதாரம் செய்து எம்பெருமானுக்கே மாலையிடுவேன் என்று மணங்கொண்டாள்.
அதே போல இங்கு கமலாதேவி அவதரித்து எம்பெருமானை மணங்கொண்டாள்.
அங்கும் ஆண்டாள் அரங்கமன்னார் கருடன் ஏக சிம்மாசனம்.
இங்கும் மாயக்கூத்தர் உபய நாச்சியார்கள் கருடன் ஏக சிம்மாசனம்.

————————————

‘வினதை சிறுவன்’ என பெரியாழ்வார் மங்களாசாசனம்.
வினதையின் மற்றொரு புதல்வன் அருணன், சூரியனுக்கு தேரோட்டி என்றும் ஐதீஹம்.

பொலிந்திருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி,
மலிந்து திரு விருந்த மார்வன், – பொலிந்த
கருடன் மேல் கொண்ட கரியான் கழலே,
தெருடன் மேல் கண்டாய் தெளி.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பழைய சீவரம் ஸ்ரீ பரிவேட்டை உற்சவம்–

August 26, 2021

ஸ்ரீபுரி, ஸ்ரீபுரம், சீயபுரம், சீவரம், ஜீயர்புரம், விண்ணபுரம், பழைய சீவரம் மற்றும்
திரிபுவன வீர சதுர்வேதி மங்கலம் என்று பலவாறு அழைக்கப்பட்ட திருத்தலம் பழைய சீவரம்.
ஊர் பெயரிலேயே பழைய என்ற சொல் உள்ளது. பல்லவர் காலம் தொட்டு பழைமை மிக்க ஊராக பழைய சீவரம் திகழ்ந்துள்ளது.
முதலாம் பராந்தக சோழன் காலம் (கி.பி.907-957) இவ்வூர் முற்கால சோழரது ஆட்சியில் இருந்துள்ளது.
கோப்பரகேசரி முதலாம் பராந்தகனின் 15வது ஆட்சி கல்வெட்டு (கி.பி.922) இவ்வூரில் கிடைத்துள்ளது.

இவ்வூர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 1080-1) சீயபுரம் என வழங்கப்பட்டது.
மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சீயபுரம் என்ற ஊர் திரிபுவன வீர சதுர்வேதி மங்கலம் என்று மாற்றப்பட்டுள்ளது.
திரிபுவன வீரன் என்பது மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய விருது பெயராகும்.
இடைச்சோழர் காலத்தில் ராஜேந்திர சோழன் பெயரில் ராஜேந்திர சோழ விண்ணகர் என்று அழைக்கப்பட்டுள்ளது.
இவ்வூர் இறைவன் ராஜேந்திர சோழ விண்ணகர ஆழ்வார், திருமாலிருஞ்சோலை ஆழ்வார் என்று சோழர் காலத்தில் அழைக்கப்பட்டுள்ளார்.
கி.பி.1729-ல் ஜீயபுர லக்ஷ்மி நரசிம்மர் என இறைவன் வழங்கப்பட்டுள்ளார்.
சோழர்கள் முதல் தனி நபர்கள் வரை பலர் இக்கோயிலுக்கு தானம் தந்துள்ளனர்.

மூலவர் பற்றிய செவி வழிச் செய்தி ஒன்று குறிப்பிடத்தக்கது.
தற்போது காஞ்சிபுரத்தில் இருக்கும் ஸ்ரீவரதராஜப் பெருமாளின் மூலவர் பழைய சீவரத்தில் உள்ள
மேல் மலையிலிருந்து எடுத்துச் சென்றதாக செவி வழிச் செய்தி கூறுகிறது.

அடுத்து சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் வட இந்தியர்கள் யாத்திரை வந்தனர்.
அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்திருக்கிறது. இங்கு வரும்போது இறைவன் கனவில் தோன்றி,
இவ்விடத்தில் ஒரு மண்டலம் தங்கினால் நோய் குணமாகும் என்று கூறியுள்ளார்.
அதன்படியே இங்குள்ள பிப்பிலி மரத்தினடியில் தங்கி, ஆற்றில் நீராடி ஒரு மண்டலம் வழிபட்டிருக்கிறார்.
நோயும் நீங்கி இருக்கிறது. அதன் பிறகு கோயிலின் ஒரு முக்கிய பிரமுகராக அவர் இருந்திருக்கிறார்.

பழைய சீவரம் மலைக் கோயில் போன்று திகழ்கிறது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மேற்கு திருமுகமாக வீற்றருள்கிறார்.
இக்கோயில் மூலஸ்தானம், விமானம், அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடிமரம், பலிபீடம்,
திருச்சுற்று பிராகாரம், கருடாழ்வார் சந்நதி, யாகசாலை, கண்ணாடி அறை, மடப்பள்ளி, ராஜகோபுரம்,
நான்குகால் மண்டபம், வாகன மண்டபம், ஆகிய பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது.
இக்கோயில் மூலஸ்தானம் செவ்வக வடிவுடையது.
மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் லட்சுமி நரசிம்மர் இடக்காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டு பத்ம பீடத்தில் ஊன்றிய
நிலையில் சதுர் புஜங்களுடன் ஸ்ரீலட்சுமி தேவியை இடது தொடையின் மீது அமர்த்தி ஆலிங்கனம் செய்த வண்ணம்
மேற்கு திசையை நோக்கி அருட்பாலிக்கிறார். நரசிம்மரின் மேல் வலக்கரம் கத்தரி முத்திரையில் சக்கராயுதத்தைப் பற்றியுள்ளது.
அவ்வாறு மேல் இடக்கரம் கத்தரி முத்திரையில் சங்கினை ஏந்தியுள்ளது.

கீழ் வலக்கரம் அபயஹஸ்தம் காட்டுகிறது.
கீழ் இடக்கரம் இடது தொடையில் வீற்றிருக்கும் திருமகளை ஆலிங்கனம் செய்த வண்ணம் அமைந்துள்ளது.
அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரஹரி இவர். நரசிம்மரின் திருமுக மண்டலம் சிம்ம முகமாக அமைந்துள்ளது.
சிங்கபிரானின் தலையை கிரீடமகுடம் அலங்கரிக்கிறது. திருமார்பில் மகரகண்டிகையும், கௌஸ்துபமும் அலங்கரிக்கிறது.
புஜங்களில் கேயூரமும், பாஜிபந்தமும், முன்கரங்களில் வளைகளும், நாபியின் மேல் உதரபந்தமும்,
இடையிலிருந்து முழங்கால் வரை வஸ்திர அலங்காரமும் பாதங்களில் பாதசரமும் அணிந்து வனப்போடு காட்சியளிக்கிறார்.

ஸ்ரீலட்சுமியாகிய திருமகள் சிங்கபிரானின் இடது தொடைமீது இரு கரங்களுடன் அமர்ந்துள்ளாள்.
அவளது இடக்கரம் கடக ஹஸ்தத்தில் தாமரை மலரைப் பற்றியுள்ளது. வலக்கரம் அழகிய சிங்கபிரானை அணைத்து
ஆலிங்கனம் செய்த வண்ணம் காட்சியளிக்கிறது. திருமகளின் தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்கிறது.
காதிலும், கழுத்திலும், மார்பிலும், இடையிலும், திரு பாதத்திலுமாக குண்டலங்கள், கண்டாபரணம், முத்துவடம்,
மணிவடம், ஒட்டியாணம், மேகலை, வஸ்திர கட்டு, கொலுசு, சதங்கையாவும் அணி செய்ய எழிலுருவாய் காட்சியளிக்கிறாள்.
ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் திருவுருவம் சுமார் 6 அடி உயரத்தில் வீற்றிருந்த நிலையில் எழுந்தருளியுள்ளது.

மூல விக்கிரகத்திற்கு முன்பு பிரகலாதவரதன் எனும் பெயரில் அழைக்கப்படும் திருமால், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக
நின்ற கோலத்தில் தலையை கிரீடமகுடம் அலங்கரிக்க, மேற்கரங்களில் சங்கு சக்கரம் தரித்து,
கீழ் வலக்கரத்தில் அபயஹஸ்தம் காட்டி அருட்பாலிக்கிறார். இடக்கரம் கட்யவலம்பித ஹஸ்தத்தில் அமைந்துள்ளது.
வலப்புறம் ஸ்ரீதேவி நாச்சியார் வலது கரத்தை லோல ஹஸ்தமாகக் கொண்டு
இடக் கரத்தில் தாமரை மலரை கடக ஹஸ்தத்தில் கொண்டுள்ளாள்.
இடப்புறம் உள்ள ஸ்ரீதேவி நாச்சியார் வலக்கரம் நீலோற்பலம் பற்றியும், இடக்கரம் லம்ப ஹஸ்தமாக கொண்டு
திரிபங்கியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

இங்கு தனிக்கோயில் நாச்சியார் அகோபிலவல்லித் தாயார் என்ற பெயரில் பத்மா சனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.
உற்சவராகிய இவரது மேற்கரங்கள் இரண்டும் தாமரை மலரை தாங்கிய வண்ணம் காட்சியளிக்கிறது.
கீழ் கரங்கள் இரண்டும் அபய ஹஸ்தத்திலும், வரத ஹஸ்தத்திலும் அமைந்துள்ளது.
பெருமாளுக்கு இடப்புறம் உள்ள ஆண்டாள் திரிபங்கியாக நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கிறார்.
இவளது வலக்கரம் நீலோற்பலமலரைப் பற்றியுள்ளது. இடக்கரம் லம்ப கரமாக நீண்டுள்ளது.
தலையில் வசீகரிக்கும் ஆண்டாள் கொண்டையும், காதுகளில் குண்டலங்களும், கழுத்திலும், மார்பிலும் ஆபரணங்களும்,
இடையில் கச்சையும் அணிந்து திரிபங்கியாக ஆண்டாள் அற்புத வடிவில் அருட்கோலம் கொண்டு காட்சியளிக்கிறாள்.

பழைய சீவரம் மலையின் மேல் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சனம் கண்டருளுகின்றார்.
பின் அம் மண்டபத்தில் பூரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தருளுகின்றார்.
ஆங்கிலேயன் ராபர்ட் கிளைவ் அளித்த மகர கண்டியுடன் எழிலாக பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகின்றார்.
மண்டபத்தில் பெருமாளுக்கு மிக அருகில் நின்று நாம் திவ்யமாக இங்கு சேவிக்கலாம் என்பதால்
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பரிவேட்டை உற்சவத்தன்று பழைய சீவரம் வருகின்றனர்.

அந்தி சாயும் நேரம், புது அலங்காரத்துடன் மலையிலிருந்து கீழே இறங்கி முதலில்
பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்திற்கு எழுந்தருளுகிறார் வரதர்.
அவரை லக்ஷ்மி நரசிம்மர் எதிர் கொண்டு அழைக்கிறார்.
இவ்வாலயத்தில் சிறிது நேரம் இருந்த பின் இரு பெருமாள்களும். பாலாற்றின் அக்கரையில் அமைந்துள்ள
திருமுக்கூடல் ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆலயத்திற்கு எழுந்தருளுகின்றனர்.
பகதர் அனைவரும் கோவிந்தா! கோவிந்தா! என்ற முழக்கத்துடன், ஆனந்த பரவசத்துடன் உடன் செல்கின்றனர்

சிறிது நேரம் பழைய சீவரம் ஆலயத்தில் சேவை சாதிக்கின்றார் வரதர்,
பின்னர் இரு பெருமாள்களுமாக திருமுக்கூடல் அப்பன் ஆலயத்திற்கு எழுந்தருளுகின்றனர்.
சாலை வழியாக செல்லாமல் ஆற்றைக் கடந்தே இருவரும் வருகின்றனர்.
அப்போது வாண வேடிக்கைகள் சிறப்பாக நடைபெறுகின்றன

தொண்டை மண்டலத்திற்கே உரிய தூங்கானை மாட வடிவில் காணப்படும் கருவறையில் பெருமாள்
வடக்கு நோக்கி திருமுகம் காட்டி நின்ற கோலத்தில் ஆஜானுபாவனாய் காட்சி தரும் அற்புதக் கோலம்.
திருமுக்கூடலில் எழுந்தருளும் வெங்கடேசப்பெருமாள் மூம்மூர்த்தி ரூபமாக சேவை சாதிக்கின்றார்.
திருக்கரங்களில் சங்கமும், சக்கரமும் ஏந்தியுள்ளதால் விஷ்ணு ரூபமாகவும்,
தலையில் ஜடாமுடியும், நெற்றிக்கண்ணும் உள்ளதால் சிவரூபமாகவும்,
திருக்கரங்களிலும், திருவடியிலும் தாமரை மலர் இருப்பதால் பிரம்ம ரூபமாகவும் அருள் பாலிக்கின்றார் வேங்கடேசப் பெருமாள்.
பெருமாளின் திருவடியில் பூமாதேவியும் மார்க்கண்டேயரும் அமா்ந்து வழிபடுகின்றனா்.
பெருமாளின் திருமார்பில் அலர்மேல் மங்கைத் தாயார் ஒருபுறமும், பத்மாவதித் தாயார் மறுபுறமும் உறைகின்றனர்.
உற்சவர் திருநாமம் ஸ்ரீநிவாசப்பெருமாள்.
திருவேங்கட மலையில் இருக்கும் வேங்கடவனின் தரிசனத்தைக் கண்ட மன நிறைவு இங்கும் ஏற்படுகின்றது.

தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான் சக்கரவர்த்தி என்ற அரசர் ,
திருவேங்கடமலையில் அருளும் எம்பெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அ
ந்தப் பக்தியின் வெளிப்பாடாக திருமலை தெய்வத்துக்கு ஏராளமான திருப்பணிகளை மனமுவந்து செய்துவந்தார்.

ஒருமுறை திருமலையில் நடைபெறும் திருப்பணிகளைப் பார்வையிடச் சென்றார் மன்னர்.
இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி, தொண்டை நாட்டின் மீது படையெடுத்து வந்த பகை மன்னன், நாட்டை முற்றுகையிட்டுவிட்டான்.
மன்னர் நாட்டில் இல்லாத நிலையில், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றனர் அமைச்சர்கள்.
ஒற்றர்கள் மூலம் மன்னருக்குத் தகவல் சென்றது.
ஆனாலும், பகையரசன் முற்றுகை யிட்டுவிட்ட நிலையில், மன்னர் மட்டும் என்னதான் செய்யமுடியும்?

பெருமாளிடம் பேரன்பும், மாசற்ற பக்தியும் கொண்டிருந்த தொண்டைமான், வேங்கடவனிடமே சரணடைந்தார்.
மனமுருகப் பிரார்த்தித்தார். பக்தர்களிடம் வாத்சல்யம் கொண்டிருப்பதால், பக்தவத்சலன் என்று போற்றப் பெறும் வேங்கடவன்,
தன் பக்தனைக் காப்பாற்றத் திருவுள்ளம் கொண்டுவிட்டார். தன் திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கினையும்,
சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வாரையும் களம் காணச் செய்து பகைவர்களை விரட்டி, மன்னரையும் நாட்டையும் காப்பாற்றினார்.

திருமுக்கூடல் திரும்பிய பல்லவ மன்னர், தனது நித்ய ஆராதனை மூா்த்தியான முக்கூடல் அழகனைத் தரிசிக்க திருக்கோயிலுக்கு வந்தார்.
திருமலையில் வேங்கடவனின் திருக்கரங்களை அலங்கரிக்கும் சங்கும் சக்கரமும் திருமுக்கூடலில் இருப்பதைக் கண்டு வியப்படைந்து,
தன் வேண்டுதலுக்கு இரங்கி, திருவேங்கடமுடையானே பகையரசனை விரட்டிய அற்புதத்தை குறிப்பால் உணர்ந்தார்.

திருமலை தெய்வத்தின் பெருங்கருணையை எண்ணி வியந்த மன்னர் மெய்சிலிர்த்து,
‘என் அப்பனே!’ என்று பெருங்குரலில் இறைவனை அழைத்து, எம்பெருமானின் திருவடிகளில்
நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். அன்று முதல் சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டின் மக்களும்
மன்னரது வழியைப் பின்பற்றி, திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாளை
‘அப்பன் வெங்கடேசப் பெருமான்’ எனப் போற்றி வணங்குகின்றனா்.

பல்லவா், சோழா், விஜயநகர மற்றும் நாயக்க மன்னா்களின் காலத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள்
இந்தத் தலத்தின் புராதனத்தை எடுத்துக் கூறுகின்றன.
இந்தக் கல்வெட்டுகளிலிருந்து இத்தலத்தின் எம்பெருமான்,
‘விஷ்ணு படாரா்’, ‘திருமுக்கூடல் ஆழ்வார்’, ‘திருவேங்கடமுடையான்’ மற்றும் ‘ஸ்ரீவெங்க டேசுவர ஸ்வாமி’ எனப்
பல திருநாமங்களில் வணங்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.

ஸ்ரீதேவிக்கும், பூமாதேவிக்கும் தனிச்சன்னதிகள் உள்ளன. மேலும் தாயார் அலர்மேல் மங்கை, ஆண்டாள் நாச்சியார்,
சக்கரத்தாழ்வார், கருமாணிக்க வரதர் மற்றும் கர்ண குண்டல அனுமார் சன்னதியும் அமைந்துள்ளது.
இத்தலத்தில் ஸ்ரீஅனுமன் ‘கா்ணகுண்டலம்’ அணிந்து வித்தியாசமாகக் காட்சி தருகின்றார்.

பக்தா்கள், தங்கள் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட, திருமுக் கூடல் பெருமாளையும், இங்கு தனிச் சந்நிதியில் அருளும்
கர்ண குண்டல ஸ்ரீஅனுமனையும் பக்தியோடு வழிபடுகின்றனா்.
இங்கு இவருக்கு ‘வடை மாலை’க்கு பதில் தேன்குழல் மாலை சாத்தப்படுகிறது.

முற்காலத்தில் திருக்கோயில்கள் போர், வெள்ளம், வறட்சிக் காலங்களில் பாதுகாப்பான காவல் அரணாகவும்,
மக்களைக் காப்பாற்றும் மையங்களாகவும் திகழ்ந்தன. மேலும், மக்கள் நலன் சார்ந்த மருத்துவமனைகளாகவும்
கலைகளை வளர்க்கும் மன்றங்களாகவும் அக்கால ஆலயங்கள் அமைந்திருந்தன.
குறிப்பாக ஆலயங்களில் மருத்துவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டி ருந்தது.
ஆலயங்களிலிருந்த மருத்துவமனைகள், ‘ஆதுலர் சாலை’ என்ற பெயரில் அழைக்கப்பட்டன.

இவ்வாறு மருத்துவமனையையும் தன்னகத்தே கொண்டு திகழ்ந்த ஆலயங்களில் ஒன்றுதான்,
திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்!.
தற்போது இந்தக் கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் மிகச்சிறப்புடன் பராமரிக்கப்படுகிறது.
திருப்பதி சென்று வேங்கடவனை மனம் குளிர தரிசிக்க இயலாத அன்பா்கள், திருமலை தெய்வத்தை
தம் மனக்கண் முன் நிறுத்தி திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்யலாம்.

திருமுக்கூடலில் உள்ள அலங்கரிக்கப்பட்ட மண்டபங்களில் சாலவாக்கம் சீனிவாசப் பெருமாள் மற்றும்
காவாந்தண்டலம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆகியோருடன் திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாளும்
எழுந்தருளி, காஞ்சி வரதரும், பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மரும் வருவதற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பாலாற்றைக் கடந்து வரும் இரு பெருமாள்களையும் எதிர் கொண்டழைக்கிறார் திருமுக்கூடல் வெங்கடேசப்பெருமாள்,
பின்னர் திருமுக்கூடல் ஆலயத்தின் உள்ளே உள்ள மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார் வரதர்.
ஐந்து பெருமாள்களையும் சேவித்து மகிழ்கின்றனர் பக்தர்கள்.

திருமுக்கூடலில் பக்தர்களுக்கு சேவை சாதித்த பின்னர் காஞ்சி வரதர் சாலவாக்கம் எழுந்தருளுகிறார்.
பின்னர் அங்கிருந்து இரவு முழுவதும் பயணம் செய்து திருக்கச்சி அடைகின்றார்.
இவ்வாறு மாட்டுப் பொங்கலன்று பழைய சீவரம் பரிவேட்டை உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ உ வே கருணாகர ஸ்வாமிகள் வைபவ ஸப்த காதை =ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் —

August 26, 2021

कृपानिधेः रमानिधेः कटाक्षबोधवारिजं
कृपानिधेस्तु मानिधेश्च भागधेयमण्डनम्।
कृपानिधिं सुमङ्गलाद्भुतैर्गुणैस्सुभूषितं
कृपाकरार्यदेशिकं नमामि तं महागुरुम्॥–1-

க்ருபா நிதே ரமா நிதே கடாக்ஷ போத வாரிஜம்
க்ருபா நிதேஸ்து மாநிதேச் ச பாகதேய மண்டனம்
க்ருபா நிதிம் ஸூ மங்கலாத் புதைர் குணைஸ் ஸூ பூஷிதம்
க்ருபா காரார்ய ஸூ ரிணம் நமாமி தம் மஹா குரும்

கருணைக் கடலான திருமகள் கேள்வனின் அருளாகிய சூர்ய ஒளியால் மலர்ந்த தாமரை போன்றவரும்,
கருணைக் கடலான வில்லூர் ஸ்ரீநிதி ஸ்வாமியின் வாரிசு ரத்னமாகத் திகழ்பவரும்,
கருணைக் கடலும், அற்புதக் கல்யாண குணங்களைத் தனக்கு அணிகலனாய்க் கொண்டவருமான
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகன் என்னும் சிறந்த ஆசார்யனை வணங்குகிறேன்.

सहस्रनामसागरे नु मग्ननैजमानसं
सहस्रनेत्रनायकाङ्घ्रिचिन्तकं सदैव तम्।
सहस्रगीतिसारदं रहस्यमन्त्रबोधकं
सहस्रशाखपाठकस्त्वहं भजे कृपाकरम्॥ २–2-

ஸஹஸ்ர நாம ஸாகரே நு மக்னநை ஜமாநஸம்
ஸஹஸ்ர நேத்ரநாய காங்க்ரி சிந்தகம் ஸ தைவ தம்
ஸஹஸ்ர கீதி ஸாரதம் ரஹஸ்ய மந்த்ர போதகம்
ஸஹஸ்ர ஸாக பாடக்ஸ் த்வஹம் பஜே க்ருபாகரம் –2-

விஷ்ணு ஸஹஸ்ரநாமம், லக்ஷ்மீ ஸஹஸ்ரநாமம், வேங்கடேச ஸஹஸ்ரநாமம் போன்ற ஸஹஸ்ரநாமக் கடல்களில்
மூழ்கித் திளைத்த மனம் கொண்டவரும்,
ஆயிரம் கண் கொண்ட இந்த்ரனுக்கும் தலைவனான எம்பெருமானின் திருவடிகளை அநவரதம் த்யானிப்பவரும்,
ஆயிரம் பாசுரங்கள் கொண்ட திருவாய்மொழியின் ஸாரத்தை உபதேசிப்பவரும்,
ரஹஸ்யத்ரய மந்த்ரங்களின் ஸாரத்தை உபதேசிப்பவருமான
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகனை,
ஆயிரம் சாகைகள் கொண்ட ஸாம வேதத்தை அத்யயனம் செய்யும் அடியேன் வணங்குகிறேன்.

यतीन्द्रपादपूजकं ह्यतीन्द्रियस्ववैभवं
यतीन्द्रभाष्यशिक्षकं सुचक्रचिह्नदायकम्।
यतीश्वरैश्च मानितं नतानुशोकभञ्जकं
यतीन्द्रवीक्षभाजनं सदा भजे कृपाकरम्॥ ३–3-

யதீந்த்ர பாத பூஜகம் ஹ்யதீந்த்ரிய ஸ்வ வைபவம்
யதீந்த்ர பாஷ்ய சிந்தகம் ஸூ சக்ர சிஹ்ன தாயகம்
யதீஸ்வரைஸ் ஸ மா நிதிம் நதாநு சோக பஞ்சகம்
யதீந்த்ர வீக்ஷ பாஜநம் ஸதா பஜே க்ருபா கரம் –3-

எம்பெருமானாரின் திருவடிகளைத் தொழுபவரும்,
புலன்களுக்கு எட்டாத மேன்மைகள் பல கொண்டவரும்,
ஸ்ரீபாஷ்யத்தை நன்கு உபதேசிப்பவரும்,
சிஷ்யர்களுக்கு சங்கசக்ர முத்ரைகளை அருள்பவரும்,
பற்பல ஸந்யாஸிகள் மற்றும் மடாதிபதிகளால் கௌரவிக்கப்பட்டவரும்,
அடிபணியும் அடியார்களின் துன்பங்களைப் போக்குபவரும்,
எம்பெருமானாரின் கருணைப் பார்வைக்குப் பாத்ரமானவருமான
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகனை வணங்குகிறேன்.

श्रुतेरपार्थमर्दकं श्रुतेः रसार्द्रमानसं
श्रुतेश्च नस्सुरक्षकं दृशा सुसंशदायकम्।
श्रुतिस्वरूपमुत्तमश्रुतिस्वराप्तजिह्वकं
श्रुतेश्शिरोगुरोः पदप्रियं भजे कृपाकरम्॥ ४–4-

ஸ்ருத இதர அபார்த்தம் அர்த்தகம் ஸ்ருதேஸ் ரஸார்ர்த்ர மா நஸம்
ஸ்ருதேஸ் ச நஸ் ஸூர ரேசகம் த்ருஸா ஸூ ஸம் ஸதா யகம்
ஸ்ருதி ஸ்வரூபம் உத்தம ஸ்ருதி ஸ்வராப்த ஜிஹ்வகம்
ஸ்ருதேஸ் ஸிரோ குரோ பத ப்ரியம் பஜே க்ருபா கரம் –4-

வேதங்களுக்குச் சொல்லப்பட்ட தவறான அர்த்தங்களை முறையான வாதங்களின் மூலம் நீக்குபவரும்,
வேதச் சுவை தோய்ந்த திருவுள்ளம் படைத்தவரும்,
தம் உபந்யாஸங்களால் நம் காதுகளை ரக்ஷிப்பவரும்,
திருக்கண் பார்வையால் மங்களங்களை அருள்பவரும்,
வேத ஸ்வரூபியாகத் திகழ்பவரும்,
உத்தமமான வேத ஸ்வரங்கள் பொலியும் திருநாவை உடையவரும்,
வேத சிரஸ்ஸின் குருவான நிகமாந்த மஹாதேசிகனின் திருவடிகளுக்கு ப்ரியமானவருமான
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகனை வணங்குகிறேன்.

प्रभाषणे विशारदं प्रवाहकाव्यकारकं
सुभाषिते प्रतिष्ठितं सुगन्धशैलसेवकम्।
शुभानि नः प्रदायकं च कुम्भघोणसंभवं
प्रभाकरप्रकाशकं नमामि तं कृपाकरम्॥ ५–5-

ப்ரபாஷணே விசாரதம் ப்ரவாஹ காவ்ய காரகம்
ஸூ பாஷிதே ப்ரதிஷ்டிதம் ஸூ கந்த சைல ஸேவகம்
ஸூபாநி ந ப்ரதாயகம் ச கும்ப கோண ஸம்பவம்
ப்ரபாகர ப்ரகாசகம் நமாமி தம் க்ருபா கரம் –5-

பேச்சில் வல்லவரும்,
ப்ரவாஹமாகக் கவி பாடுபவரும்,
நல்மொழிகளில் நிலைபெற்றவரும்,
திருநறையூரில் பற்பல கைங்கர்யங்கள் செய்தவரும்,
நமக்கு சுபங்களை அருள்பவரும்,
கும்பகோணத்தில் அவதரித்தவரும்,
ஸூர்யன் போல் தேஜஸ் மிக்கவருமான
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகனை வணங்குகிறேன்.

श्रुतप्रकाशिकाप्रदस्वपूर्ववंश्यपादयोः
कृतज्ञतासमायुतं च वैभवप्रकाशकम्।
अतुल्यधीसमन्वितं सकर्मभक्तिसागरं
स्वधर्मयोगतत्परं नमामि तं कृपाकरम्॥ ६–6-

ஸ்ருத ப்ரகாசிகா பிரத ஸ்வ பூர்வ வம்ஸ்ய பாதயோ
க்ருதஜ்ஞதா ஸமா யுதம் ச வைபவ ப்ரகாசகம்
அதுல்ய தீசமன்விதம் ஸ கர்ம பக்தி சாகரம்
ஸ்வ தர்ம யோக தத் பரம் நமாமி தம் க்ருபாகரம் –6-

ச்ருதப்ரகாசிகையை உருவாக்கிய தம் குலமுன்னோரான நடாதூர் அம்மாளின் திருவடிகளிலே க்ருதஜ்ஞதை கொண்டவரும்,
அவர் திருவடிகளின் வைபவத்தை உலகுக்கு நன்கு எடுத்துக் காட்டுபவரும்,
ஒப்பற்ற ஞானம் கொண்டவரும்,
கர்மாநுஷ்டானத்தோடு கூடிய பக்தியின் கடலாய்த் திகழ்பவரும்,
ஸ்வ தர்மத்தை எப்போதும் விடாது செய்வதில் ஈடுபட்டிருப்பவருமான
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகனை வணங்குகிறேன்.

अहं पुरा तु बालिशश्च पण्डितैरुपेक्षितः
लघुत्वपात्रकं तथा च पाठनाद्बहिष्कृतः।
खलु प्रबोधमेलने हि येन वादकस्त्वहं
दिने दिने च तं भजे कृपाकरार्यदेशिकम्॥ ७–7-

அஹம் புரா து பாலி சச்ச பண்டிதைர் உபேக்ஷித
லகுத்வ பாத்ரகம் ததா ச பாடநாத் பஹிஷ் க்ருத
கலு ப்ரபோத மேலனே ஹி யேன வாதகஸ்த்வஹம்
தினே தினே ச தம் பஜே க்ருபா காரார்ய தேசிகம் –7-

ஆசார்ய வைபவத்தின் மத்தியில், அவரது மேன்மைக்குச் சான்றாக
அடியேனைப் பற்றிய விஷயத்தையும் விண்ணப்பிக்கிறேன்.
முன்னொரு காலத்தில் மூடனாகவும்,
பண்டிதர்கள் எனப்பட்டவர்களால் இகழப்பட்டவனாகவும்,
பல அவமானங்களைச் சந்தித்து வித்வத் ஸபைகளில் இருந்து வெளியே தள்ளப்பட்டவனாகவும் இருந்த அடியேன்,
இன்று ஞானிகள் நிறைந்த வித்வத் ஸம்மேளனத்தில் அமர்ந்து வாக்யார்த்தம் சொல்பவனாக
ஆகி இருப்பதற்கு எந்த ஒருவர் காரணமோ, அந்த
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகனைத் தினந்தோறும் வணங்குகிறேன்.

विकसितगुरुभक्तेरुत्थितां वेङ्कटेशात्
गुरुवरपदसूक्तिं तत्कृपादर्शिनीं च।
इह यदि पठति स्यात् सप्तपद्यान्वितां तां
स भवति करुणापूर्णार्यकामैकपात्रम्॥–8-

விகசித குரு பக்தேருத்தி தாம் வேங்கடேசாத்
குரு வர பத ஸூ க்திம் தத் க்ருபா தர்சினீம் ச
இஹ யதி படதி ஸ்யாத் ஸப்த பத்யான்விதாம் தாம்
ச பவதி கருணா பூர்ணார்ய காம ஏக பாத்ரம் –8

அவர் அருளால் மலர்ந்த ஆசார்ய பக்தியினால்,
அவரது கருணையை வெளிப்படுத்தும் விதமாக வேங்கடேசன் சொன்ன ஏழு ச்லோகங்கள் கொண்ட
இந்த ஆசார்ய திருவடி ஸ்துதியை இங்கே யார் ஒருவர் படிக்கிறாரோ, அவர்
ஸ்ரீமதுபயவே. கருணாகரார்ய மஹாதேசிகனின் அருளுக்குப் பாத்ரமாவார்

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே கருணாகர ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.