ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-6–காசும் கரை வுடை கூறைக்கும்–

நாவ காரியத்திலே (4-4 )
ப்ராப்ய அநு ரூபமான பக்தியோடே திரு நாம விசேஷங்களை ஓர் ஆச்சார்ய முகத்தால் அறிகை அன்றிக்கே
தம் தாமுடைய தர்ம வீர்ய ஞானத்தாலே பிறந்த வெளிச் சிறப்பு கொண்டு
திரு நாமங்களை ஒரு போகியாகச் சொல்லி நிர்ணயித்துப் பரிகணித்து ஊர்த்வ கதியிலே பர்வ க்ரமமாய்ப் போய்
ஒரு நிபுண ஆச்சார்யர் முகத்தாலே அடிமைத் தொழிலிலே திரு நாமங்களைச் சொல்லி மூளாத அளவே அன்றிக்கே
நின்ற நிலை தெரியாமல் நிற்க நிலை இன்றி ஏறின வழியே மீளுவாரைப் போல் அன்றிக்கே
ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் தன்னாலே ஏறி நிபுண ஆச்சார்யரைக் கிட்டி அடிமைத் தொழிலிலே மூண்டு மூண்டு
திரு நாம வாசி அறிதல்
உபதேச கம்ய ஞானத்தாலே இவர்களுடைய சரமத்தைப் பிரதமம் ஆக்கி
அடிமையாய்த் திரு நாமம் சொல்லுவாரையும் அடைவிலே அருளிச் செய்தார் –

இவ் வடைவிலே திரு நாமம் சொல்ல வல்லார்
செத்துப் போவதோர் போதை இப்போது இப்போது என்று நினைத்து
பக்தி பாரவஸ்யத்தாலும்
கைங்கர்யம் தேச கால அவஸ்தா ரூபமாகச் செய்யும் அடைவு அறிந்து செய்து போருமவர்கள்
சரீர அவசானத்திலே பெரும் பேற்றை ஆசை வாயிலே (4-5 ) அருளிச் செய்தார் –

இப்படி திரு நாமம் சொல்லும் அடைவு அறியாதவர்களும்
ஒரு வழியே அறிவிப்பதாகவும்
தம் அபிமானத்திலே சேர்ப்பதாகவும்
திரு உள்ளம் பற்றி அருளி

நெஞ்சு இளகி இருப்பாரும்
பாரதந்தர்யத்திலே ஒருபடிப்பட்டு இருப்பாரும் ஸ்த்ரீகள் ஆகையாலே
ந ஸ்த்ரீ ஸ்வாதந்தர்யம் அர்ஹதி -ஸ்திரீகளுக்கு ஒரு காலும் ஸ்வாதந்தர்யம் இல்லை

கன்யகையான போது மாதா பிதாக்கள் கீழ் நின்றும்
பின்பு பர்தாவின் கீழ் நின்றும்
பர்தா பாணி கிரஹண சமயத்தில் ப்ரதிஜ்ஜை குலைந்தாலும் தான் படி கடவாமல் நடந்தும்
அவன் தர்மத்தில் ஓருப்பட்ட போது தான் ஸஹ தர்ம ஸாரியுமாய்
அவனுடைய நியதி அநியதங்களைப் பாராமல் பாதி வ்ரத்தையாலே அத்யந்த பரதந்த்யையுமாய்
இவனுடைய வியோகத்தில் புத்ராதிகள் கீழ் ஒதுங்கியும்
அது இல்லையாகில் பின்னையும் மாதா பிதாக்கள் ஞாநி வர்க்க சம்பந்திகள்
இல்லையாகில் லோக அபவாதத்தின் கீழ் ஒதுங்கியும் போருகையாலே

பித்ராதிகளையும் காட்டில் மாத்ரு வர்க்கத்துக்கு புத்ராதிகளைத் திரு நாமம் சாத்தினால்
நிரய நிஸ்தாரகமான அநிஷ்ட நிவ்ருத்தி
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-என்று
முற்பட இவர்களுக்குக் கண் அழிவு அற சித்திக்கும் என்று திரு நாம ப்ரபாவத்தை
இதர சம்பந்த ரஹிதமாக்கி வைதமாக அருளிச் செய்கிறார் –

—————–

ஆபாசமான பேர்களை நச்சி நீங்கள் பெற்ற பிள்ளைகளை இதரர் பேரிட்டு
நரகாத்மாவாய்ப் போகாதே
எல்லாரையும் பெற்றவர்களை பெற்றவன் பேர் இட்டால்
யம அவஸ்யதை தவிரும்
பின்னையும் ஊர்த்வ கதியைப் பிராபிக்கவுமாம்
என்று உபதேசிக்கிறார்

காசும் கரை வுடை கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமின்
நாயகன் நாரணன் தம் மன்னை நரகம் புகாள் – 4-6 -1-

பதவுரை

காசுக்கு–ஒரு காசுக்காகவும்
கறை உடை–(தலைப்புகளில் நல்ல) கறைகளை யுடைய
கூறைக்கும்–வஸ்திரத்துக்காகவும்
ஓர் கற்றைக்கும்–ஒரு கட்டுக் கற்றைக்காகவும் (உண்டான)
ஆசையினால்–ஆசையாலே
பேர்–(ஷூத்ர பேர் பிள்ளைகளுக்கு) இடுகிற
ஆதர்காள்–அறிவு கெட்டவர்களே!
நீங்கள்
கேசவன்–கேசவனென்னுந் திருநாமத்தை யுடையவனும்
நாயகன்–ஸர்வ சேஷியுமான
நாரணன்–நாராணனுடைய
பேர்–திரு நாமங்களை
இட்டு–(உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு
தேனித்து இருமின்–மகிழ்ச்சி கொண்டிருங்கள்
(அப்படி நாமகரணஞ் செய்தால்)
தம் மன்னை–அப் பிள்ளைகளுடைய) தாய்மார்
நரகம் புகார்–துர்க் கதியை அடைய மாட்டார்கள்–
மாதாவைச் சொன்னது பிதாவுக்கு உப லக்ஷணம்

காசும் கரை வுடை கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால்
நாலு இரண்டு காசு கிடைக்கும் என்றும்
ஒரு தலைக்கு அறைச்சீரை கிடைக்கும் என்றும்
அங்கே பின்னையும்
ஒரு கோட்டை நெல் -ஒரு கட்டுக் கற்றை -ஒரு பொய்த்தரவும் கிடைக்கும் என்றும் ஸ்ரத்தையாலே

அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
அங்கு அவத்தப் பேர்-என்று ஸமஸ்த பதமான போது
மிகவும் பொல்லாப் பேர் அளவில் நிற்கும்

அங்கு என்றும்
அவத்தம் என்றும் பதமான போது
அங்கு என்று வஸ்துக்கள் விலகிப் போம் இடங்களிலே வசிக்குமவர்களைக் காட்டும்
அவத்தம் என்று அங்கு உள்ளவர்களும் பேர் சொல்லக் கூசும் படியான துர் நாமங்களைக் காட்டும்

ஆதர்காள்
அறிவு கேடர்காள்

கேசவன் பேரிட்டு
சர்வ காரண பூதனாய்
கிலேச நாசகனாய் இருக்கிறவனுடைய
பேரிட்டு -கேசவா -என்று அழைத்து

(ஸ்வரூப -ப்ரஹ்மாதிகளுக்கும் இடம் கொடுத்து
கேச பாசம் ரூபம்
குணம் -கிலேச நாசனம்
சேஷ்டிதம் விபவம் கேசி ஹந்த
நான்கையும் கேசவா காட்டுமே )

நீங்கள் தேனித்து இருமின்
நீங்கள் அப் பிள்ளை அளவிலே ஸ்நேஹித்து
ஸந்தோஷத்தோடே இருங்கோள்
தேனித்து -ஸ்நேஹித்து

நாயகன்
நாயகன் -சர்வ சேஷீ

நாரணன்
ஸமஸ்த கல்யாண குணாத்மகன்

தம் மன்னை
தம் மன்னை-தன் அன்னை

நரகம் புகாள்
பிள்ளைக்கு நாராயணன் என்று பேரானால் அவனைப் பெற்றவளுக்கு எங்கனே யம வஸ்யதை கூடுவது
பிள்ளை பெற்று நாராயணன் என்று பேர் இட்டது வஸ்யதை கூடுகைக்கோ

அன்றிக்கே
தம்மன்னை என்று
நாராயணனுடைய மனையில் உள்ளார் நாராயணன் என்று அழைக்கையாலே
இப்படி அழைத்தவர்கள் எல்லாருக்கும் யம வஸ்யதை இல்லை
ஆகையால் நரகம் புகார்கள் என்று சொல்லி விரித்ததாகவுமாம் -(புகார்கள் )

கேசவன் என்றது
நாராயணன் அளவில் பர்யவசிக்கும் பேர் இடும் மாதர்கள் என்னவுமாம்
நங்கைகாள் -என்னுமா போலே –

———–

அங்கு ஒரு கூறை யரைக்கு உடுப்பதனாசையால்
மங்கிய மானிட சாதிப் பேரிடும் ஆதர்காள்
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால்
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6 -2-

பதவுரை

அங்கு–அந்த நீசரிடத்தில்
ஒரு கூறை–ஒரு வஸ்த்ரத்தைப் (பெற்று)
அரைக்கு உடுப்பதன் ஆசையால்–அரையில் உடுக்க வேணுமென்னு மாசையினால்
மங்கிய–கெட்டுக் கிடக்கிற
மானிட சாதி பேர் இடும்–மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்களுடைய பெயரை இடுகிற
ஆதர்காள்–குருடர்களே!
நங்கைகாள்–சொல்லிற்றை அறிய வல்ல மதியினால் நிறைந்தவர்களே!
(நீங்கள் உங்கள் பிள்ளையை)
செம் கண் நெடு மால்–புண்டரீகரக்ஷனான ஸர்வேச்வரனே!
சிரீதரா–ஸ்ரீதரனே!
அழைத்தக்கால்–அழைத்தீர்களாகில்
நாரணன்–நாராயண நாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய
தம்மன்னை–தாயானவள்
நரகம் புகார்–

அங்கு ஒரு கூறை யரைக்கு உடுப்பதனாசையால்
அங்கு என்று
ஸூ தூரஸ்தர் வர்த்திக்கிற தேசத்தைக் காட்டுகிறது

ஒரு கூறை என்று
ஹேயமாய்
கொள் கொடைக்கு ஆற்றிப் போராது-மாற்றப் போகாது – என்கிறது
ஓன்று என்று
மேல் புடைவையும் தலைச் சீரையும் புறம்பே தேட வேணும் என்கிறது

ஆசையால்
இவனுக்கு ஆசையும்
அவனுக்கு நிராசையுமாய் இறே இருப்பது

மங்கிய மானிட சாதிப் பேரிடும் ஆதர்காள்
ஹேயராய்ச் செத்துப் போனவர்களுடைய
உங்களை ஆண்டார்
அப்பாண்டார்
ஜளி பிளி -ஐளி பிளி-என்றால் போலே சில பேர்களை இட்டுச் சென்றால் ஆகிலும் சில தருமோ என்று பேர் இடும் அல்பர்கள் –

செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால்
இப்படி பேர் இட்டு அழைத்தக்கால்

நங்கைகாள்
ஸ்த்ரீ பிராயம் இதரஞ் ஜகத்
நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர் -என்று எல்லாரையும் ஸ்த்ரீகளாகச் சொல்லுகையாலே
நங்கைகாள் என்கிறார்
(அவன் ஒருவனே புருஷோத்தமன் -மணி வல்லி பேச்சு வந்தேறி இல்லையே )

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
நாராயணன் தாயார் நரகம் புகாள்-

————

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர்
பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே
நச்சுமின் நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 3-

பதவுரை

எச்சம் பொலிந்தீர்காள்–ஸந்தாநத்தினால் விளக்குமவர்களே!
உச்சியில்–உச்சியில் (தடவத் தக்க)
எண்ணெயும்–
சுட்டியும்–(நெற்றியில் தொங்கும்படி கட்டத்தக்க) சுட்டியையும்
வளையும்–(கையில் அணியத் தக்க) வளையையும்
உகந்து–விரும்பி
என் செய்வான் ஏதுக்காக
பிறர்–(எம்பெருமானை யொழிந்த) மற்றவர்களுடைய
பேர்–பெயர்களை
இட்டீர்–(உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டீர்கள்?
பிச்சை புக்க ஆகிலும்–பிச்சை யெடுத்து ஜீவித்தாலும்
எம்பிரான் திரு நாமமே–எம்பெருமானுடைய திரு நாமத்தையே
நச்சுமின்–விரும்பி இடுங்கள்; (அப்படி இட்டால்)
நாரணன் –இத்யாதி பூர்வவத்–

உச்சியில் எண்ணெயும்
பேர் இட்டாலும் பிள்ளை தலைக்குத் துளி எண்ணெய் கிடைக்கும் அத்தனை அல்லது
(பேர் )இட்டவர்கள் தலைக்குக் கிடையாது இறே

சுட்டியும் வளையும் உகந்து
உங்கள் உகப்பு இறே

எச்சம் பொலிந்தீர்காள்
எச்சம் பிள்ளை
பிள்ளை பெற்று இருவர் பலராய் பொலிந்தீர்காள்
நாஸி -ஆத்மாவை புத்ர நாமாஸி –

என் செய்வான் பிறர் பேர் இட்டீர்
1-இந்தப் பிள்ளையை முழுக்க ரஷித்துத் தலைக்கட்ட வல்லர் என்றோ
2-உங்கள் மிடி -வறுமை -தீர்க்க வல்லர் என்றோ
3-அவர்கள் தங்கள் மிடி-வறுமை – தீர்ந்து நின்றது கண்டோ
4-லோக அபவாதம் தீரும் என்றோ
5-நிரய நிஸ்தாரகர் என்றோ

பிறர் என்று
உறவு அறுத்து வைத்தார் இறே

பிச்சை புக்காகிலும்
ஒரு ப்ராஹ்மணன் தன் பிள்ளையைப் பேர் இடுகின்ற ஸமயத்தில்
ஐஸ்வர்யம் தர வல்லான் ஒருவன் பேர் இட வேணும் என்ன
வைஸ்ரவணன் பேரை இடு என்ற அளவிலே
ஜளி பிளி -என்று இட்டு அழைத்து உஜ்ஜீவிப்பதில்
நாராயணன் என்கிற திரு நாமத்தைச் சாத்தி பிக்ஷை புக்கு ஜீவிக்கிறேன் என்றான் என்று
( நாலூர் ) பிள்ளை அருளிச் செய்வர் என்று ( நாலூர் )ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

எம்பிரான் திரு நாமமே நச்சுமின்
இதரர் பேர் இடுவதில் எனக்கு ஸ்வாமியானவன் திரு நாமத்தை பக்தியோடே சாத்தி அழையுங்கோள்
வர்ணாஸ்ரம தர்மம் வைதமானவோ பாதி
இதுவும் வைதமாக இடுங்கோள்

ஆகிலும் என்பான் என் என்னில்
வர்ணாஸ்ரம தர்மிகளுக்கு
ஜன்மாந்தர ஸித்தமான புண்ய பாப பலங்களை புஜிக்க விதித்தவோ பாதி
உங்களுக்கும் அந் நேர் வரும்

அது போராதாகில் பிச்சை எடுத்தாவது எம்பிரான் திரு நாமமே நச்சுமின்
(பிராணன் பரித்யஜ்ய அரியை காக்க வேண்டும்
பிராணனை விட்டாவது இல்லாமல் விட்டே காக்க வேண்டும்
அதே போல் பிச்சை எடுத்து அவன் பெயரை வைக்க விதியாகவே கொள்ள வேண்டும் )

————–

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நானுடை நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 4-

பதவுரை

மானிட சாதியில்–மநுஷ்ய ஜாதியில்
தோன்றிற்று–உண்டான
ஓர் மானிட சாதியை–ஒரு மநுஷ்ய ஜந்துவை
மானிட சாதியின் பேர் இட்டால்–(கர்ம பலன்களை அநுபவிக்கப் பிறந்த) மநுஷ்ய சாதியர்க்கு உரிய பெயரை இட்டழைத்தால்
மறுமைக்கு இல்லை–அத்ருஷ்ட பலம் (மோஷம்) பெறுகைக்கு யாதொரு வழியுமில்லையாம்,
வான் உடை–பரம பதத்தை (விபூதியாக) உடைய
மாதவா–ஸ்ரீயபதியே
கோவிந்தா–கோவிந்தனே!
என்று அழைத்தக்கால்–என்று (எம்பெருமான் திருநாமத்தை யிட்டு) அழைத்தால்,
நானுடை நாராணன்–எனக்கு நாதனான நாராயணனுடைய திருநாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய
தம்மன்னை நரகம் புகார்–

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மனுஷ்ய ஜென்மத்தில் பிறந்த
மனுஷ்ய ஜென்மத்தை

மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
மனுஷ்ய ஜென்மத்தின் பேர் இட்டால்
மறுமைக்கு என்ன பிரயோஜனம் உண்டு
வருகிற ஜன்மத்துக்கு என்ன பிரயோஜனம் உண்டாம் –

வானுடை மாதவா
நித்ய விபூதியை யுடைய ஸ்ரீ மானே

கோவிந்தா என்று அழைத்தக்கால்
லீலா விபூதியை விரும்பி ரக்ஷிக்கிற
கோவிந்தா என்று அழைத்தக்கால்

நானுடை நாரணன் நம் அன்னை நரகம் புகாள்
அஹம் அர்த்தோ நசே தாத்மா -என்கிறபடியே
அஹம் அர்த்தத்தை யுடையனான நாராயணன் என்று
பரம சேதனன் பேர் இட்ட சேதனனைக் காட்டுகிறது

(ஸ்ரீ பாஷ்யம்
அஹம் அர்த்தம் -ஆத்மா
அந்தக்கரணம் அத்வைதி பக்ஷம்
அப்படி இருந்தால் ப்ரத்யக்த்வம் வராதே
தனக்குத் தானே ஒளி விடும் தன்மையே வராதே
பராக் ப்ருத்யக் வேறு படுத்த வேண்டுமே
ஞானமும் ஆத்மா ஞானம் உடையவனும் ஆத்மா
என்னை யுடையவன் ஆத்மா )

நம் அன்னை நரகம் புகாள்
தம் அன்னை நரகம் புகாள்-

————

மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4 -6-5 –

பதவுரை

மலம் உடை–மலத்தை யுடையதும்
ஊத்தையில்–ஹேயமுமான சரீரத்தில் நின்றும்
தோன்றிற்று ஓர்–தோன்றினதொரு
மலம் ஊத்தையை–(தானும் அப்படியே) மலமுடையதும் ஹேயமுமான சரீரத்தோடே கூடி யிருக்கிற ஐந்துவை
அதனால் இம்மையிலே சில அல்ப பலன் கிடைத்தாலும்,
மறுமைக்கு–அத்ருஷ்ட பலத்துக்கு
இல்லை–ஒருவழியு மில்லையாம்:
குலம் உடை–நற்குலத்திற் பிறந்த
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக் கால்–கோவிந்தனே! கோவிந்தனே! என்று (பகவந் நாமத்தை யிட்டு) அழைத்தால்.
மலம் உடை–(கீழ்ச் சொன்ன படியே) மலத்தை யுடையதும்
ஸத்தையின் ஹேயமுமான சரீரத்தையுடைய மற்றொரு ஐந்துவினுடைய
பேர்–பெயரை
இட்டால்–இட்டு அழைத்தால்,
நலம் உடை–(தன் திருநாமத்தைச் சொன்னவர்களை வாழ்விக்கையாகிற) நன்மையையுடைய
நாரணன்–எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய
தம்மன்னை நரகம் புகார்–

மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலத்தை யுடைத்தான மலத்திலே தோன்றின மல ஊத்தையை

மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
மலமுடை மலத்தின் பேர் இட்டால்
வருகிற ஜன்மத்துக்கு என்ன பிரயோஜனம் உண்டு

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
கோப குலத்திலே பிறந்து
கோவிந்த அபிஷேகம் செய்த
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்

ராஜ குலத்தில் அவதரிக்கிலும் கோப குலம் இறே பிரதானம் ஆவது
கறையினார் -என்னக் கடவது இறே

நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
கோவிந்தன் பேர் இட்ட
கோவிந்தன் பக்கலிலே ஸ்நேஹத்தை யுடையளான
அந்த
நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-

————-

நாடும் நகரும் அறிய நாடு மானிடப் பேர் இட்டு
கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே
சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று
நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4- 6-6 –

பதவுரை

நாடும்–குக்ராமங்களிலுள்ள ஸாமாந்ய ஜ்ஞானிகளும்
அறிய–(இவன் உயர்ந்தவன்’ என்று) அறியும்படி,
நாடு மானிடர் பேர் இட்டு–(ஷுத்ர) மனுஷ்யர்கள் பெயரை விட்டு
கூடி–அவர்களோடு கூடி
அழுங்கி–ஒளி மழுங்கி
குழியில் வீழ்ந்து–(அவர்கள் விழுந்த) குழியிலே விழுந்து
வழுக்காதே–தவறிப் போகாமல்,
சாடு–‘சகடாஸுரன்
இற–முறியும்படி
பாய்ந்த–உதைத்தருளின
தலைவா–பெரியோனே!’ (என்றும்)
தாமோதரா என்று–‘தாமோதரனே! என்றும்
நாடுமின்–வாழ்த்திக் கொண்டு திரியுங்கள்;
(இங்ஙனேயாகில்,)
நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-

நாடும் நகரும் அறிய நாடு மானிடப் பேர் இட்டு
நாடு என்று அஞ்ஞரை
நகர் என்று நாகரீகராய் ஞாதாக்களைக் காட்டும்
இவர்கள் எல்லாரும் அசாரம் என்று அறிந்து நெகிழச் செய்தேயும்
அத்தை மதியாமை ஹேய மனுஷ்யர் பேர் இட்டு

கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே
அவர்களோடே கூடி
அவர்கள் பக்கலிலே கால் தாழ்ந்து
அவர்கள் விழுந்த குழியில் விழுந்து
அவர்கள் அறிவு கற்பிக்கும் படி தவற வர்த்தியாதே

சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று
பிள்ளையைப் பேர் இட்டு
இதுவே நமக்கு ஊற்றம் என்று

நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

————

மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேர் இட்டு அங்கு
எண்ணம் ஓன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்
கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் நாமமே
நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6-7-

பதவுரை

மண்ணில் பிறந்து–மண்ணில் நின்று முண்டாய்
மண் ஆகும்–பின்பு மண்ணாய் விடுகிற
மானிடர்–அல்ப மநுஷர்களுடைய
பேர் இட்டு–பெயரை (த் தங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு
அங்கு–ஆமுஷ்மிக பலத்தில்
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும்–ஒரு விசாரமற்றிருக்கிற
ஏழை மனிசர்காள்–அறிவற்ற மனுஷ்யர்களை!
கண்ணுக்கு–கண்ணால் காண்கைக்கு
இனிய –போக்யனாயும்
கரு முகில்–காள மேகம் போன்ற
கண்ணன்–நிறத்தை யுடைவனாயுமுள்ள எம்பெருமானுடைய
நாமமே–திரு நாமத்தையே
நண்ணுமின் நாரணன்–விரும்பி யிடுங்கள்
நாரணன் தம்மன்னை நரகம் புகாள்–

மண்ணில் பிறந்து
தேஹ உபாதானமான பஞ்ச பூதங்களிலும்
பிராஸுர்யமாகத் தோற்றுவது பூமி அம்சம் ஆகையால்
சாரீரத்தை மண் என்கிறது –
அதிலே
பார்த்திவமான ரேதஸ்ஸூ மூலமாகப் பிறக்கையாலே மண்ணில் பிறந்தேன் என்கிறது

மண்ணாகும்
சரீர அவசானத்திலே பின்னையும் மண்ணாகவே போகிற

மானிடப் பேர் இட்டு
அம் மானிடப் பேர் இட்டு

அங்கு எண்ணம் ஓன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்
அவர்கள் இடத்திலே கூடி
த்ருஷ்ட அத்ருஷ்டங்களில் விளைவது ஒன்றும் அறியாமல்
நிர்பரராய் இருக்கும் சபல பாவத்தையும் உடைய மநுஷ்யர்காள்

கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் நாமமே நண்ணுமின்
காண்கை தானே ப்ரயோஜனமாய் இருக்கிறவனுடைய திரு நாமத்தை உங்கள் பிள்ளைகளுக்கு இட்டு
உங்கள் பிள்ளையைச் சேர்ந்து போருங்கோள் –

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

————-

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்
நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம்
செம் பெரும் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால்
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6- 8-

பதவுரை

நம்பி பிம்பி என்று–நம்பி என்றும் பிம்பி என்றும்
நாட்டு மானிடப் பேரிட்டால்–க்ஷுத்ர மனுஷ்யர்களுடைய பெயரை
(உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்) இட்டால்
நம்பும் பின்பும் எல்லாம்–‘நம்பி’ ‘பிம்பி’ என்னும் பெயர்களுக்கு அடியான முதன்மை யெல்லாம்
நாலு நாளில்–நாலு நாளைக்குள்
அழுங்கிப்போம் அழிந்துபோம்;
செம் பெருந் தாமரை–சிவந்தும் பெருத்துமிருக்கிற தாமரைப் பூப் போன்ற
கண்ணன்–திருக் கண்களை யுடைய எம்பெருமானுடைய
பேர் இட்டு–திரு நாமத்தை இட்டு
அழைத்தக்கால்–அழைத்தால்
நம்பிகாள்–(அறிவினால்) குறைவற்றவர்களே!
நாரணன் தம்மன்னை நரகம் புகாள்–

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்
ஐஸ்வர்யத்தால் பூரணமாய் இருக்கிறவர்கள் பேரை எங்கள் பிள்ளைக்கு இட்டு
நாங்கள் அவர்கள் பக்கலிலே ஜீவனத்தை வாங்கி ஜீவித்தால் என்ன பொல்லாங்கு உண்டு
நரக ஹேதுக்களான கார்யம் செய்யில் அன்றோ நரகம் வருவது என்று சம்சாரிகள் அபிப்ராயமாக

நான் நிஷேதித்த பின்பு செய்வி கோளாகில் அநர்த்த பரம்பரைகள் ஆகும் என்ன

நீர் நிஷேதிப்பதற்கு முன்னே நாங்கள் அறியாத தனத்தால் இட்ட பேரை
என் செய்வான் பிறர் பேர் இட்டீர் -என்று நிஷேதித்தால்
நாங்கள் ஜீவிக்கும் படி என்
இனிமேல் தவிர்க்கும் அத்தனை அன்றோ -என்ன

அது ஒண்ணாது –
பிக்ஷை புக்காகிலும் ஜீவியுங்கோள்
இட்ட பேரை மாற்றி எம்பெருமான் திரு நாமத்தை இடுவதாக ஸ்ரத்தை பண்ணுங்கோள் -என்ன

இது தன்னையும் மாற்ற வேணும் என்றால் செய்வது என் என்ன

நிஷேத அபாவ ஸ்திதியில் அவதாரணையை பிரயோகித்து
தேவ தத்த நாமம் -ஆஸ்ரம பேதங்களாலும்
தீஷா பேதங்களாலும்
ஐஸ்வர்ய பேதங்களாலும்
ஜாதி வியக்தி நாமங்கள் பேதித்தமையைக் காட்டி
அவதாரணையைத் தெளிவித்தவர் ஆகையால்
நம்பி பிம்பி என்று நிஷேதிக்கிறார் –

(சர்வம் வாக்கியம் ஸாவதாரண்யம்
எம் அன்னை தளிகை பண்ணும் உள்ளில் இருக்கிறாள் என்றால் அங்கேயே இருக்கிறாள் சொல் இல்லா விட்டாலும்
தளிகை பண்ணும் உள்ளில் இருப்பது அவள் வரவேற்பு அறையில் இருக்கிறாள் என்ற மாற்ற கருத்து வரும் வரை
அதே போல் இங்கும் செந்தாமரைக் கண்ணன் பேரையே இட்டு என்றே இங்கும் கொள்ள வேண்டும்
சுருதி தேவ தத்தன் என்றே பல இடங்களிலும் உண்டே
ஆஸ்ரமம் மாற பேர் மாறும்
நாமும் இராமானுஜ தாசன் பேர் மாற்றிக் கொள்கிறோம்
தீஷா எஜமானனுக்கு பெயர் மாறுமே
பெரிய பண்ணையார் சின்ன பண்ணையார் ஐஸ்வர்ய பேதத்தாலும் மாறும்
ஆகவே இங்கும் பெயரை மாற்றியே ஆக வேண்டும் )

நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம்
பிம்புக்கு ஒரு பொருள் உண்டாய்த்தாகில் ஆய்த்து நம்பிக்கு ஒரு பொருள் உண்டாவது
உங்கள் அபிப்ராயத்தால் பிம்புக்கு ஒரு பொருள் உண்டாகிலும்
யோக ரூடிப் பேரும் நீங்கள் நினைத்த நம்பில் செல்லாது
(பங்க ஜ-சேற்றில் பிறந்த -தாமரை ரூடி யவ்வ்கிகம் நாய்க்குடையும் சேற்றிலே பிறந்ததே )
பிரபஞ்ச அவலம்ப நியாயத்தாலே சென்றாலும் அந் நியாயம் தன்னாலே நாலு நாளிலே அது நழுவிப் போகும்
நாட்டு மானிடம் -என்னும் அளவே நிலை நிற்பது
நாட்டு மானிடத்தை நம்பி பிம்பி என்னுமிவை நிலை நில்லாது இடாதே கொள்ளுங்கோள் –

செம் பெரும் தாமரைக் கண்ணன்
தாமரை போராமையாலே
செம் பெரும் -கண்ணன் என்கிறார்

பேரிட்டு அழைத்தக்கால்
இப்படிக்கு ஒத்த வனுடைய திரு நாமத்தைச் சாத்தி அழையுங்கோள்

அழைத்தக்கால்
இத்தை நிஷேதிக்க வல்லார் ஒருவரும் இல்லை என்ற அளவிலே

இங்கன் எல்லாத்தையும் நிஷேதிக்கிறது என்
மாதா பிதாக்கள் இட்ட பேரை வைத்தால் யம வஸ்யத்தை வருமோ -என்ன
வைதிக மார்க்கத்தில் கர்ம ஸ்ரேஷ்டரானவர்கள் வந்து ப்ரத்ய வஸ்திதராய்
மாத்ரு தேவோ பவ -பித்ரு தேவோ பவ -என்னா நின்றதீ என்ன

நம்பிகாள்
என்று நீங்கள் பூர்ணர் என்கிறார்
அதுக்கடி விஹித கர்மம் ஜென்மத்தில் மூட்டும்
ஜன்மத்துக்கு உஜ்ஜீவனம் பூர்வ பூர்வ ஜென்மங்களில் ஆர்ஜனத்திலேயாய் இருக்கும்
அத்தைப் பற்றி வரும் வாசனையாலே ஆர்ஜனம் கூடுதல்
பிரரோசக வாக்யங்களாலே ஆர்ஜனம் கூடுதல் செய்தால்
யம வஸ்யதை வரவும் கூடும் இறே

அவ்வளவே அன்றிக்கே
நான்ய தஸ்தீதி வாதிந (கீதை -2)-என்று இறே நீங்கள் தான் இருப்பது
மேலில் நிஷேதம் பாராமே —

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

————

ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள்
மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேரிட்டு
கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ
நாத்தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4- 6-9 –

பதவுரை

ஊத்தை குழியில் அமுதம் பாய்வது போல்–அசுத்தமானதொரு குழியிலே அம்ருதம் பாய்ந்தாற்போலே
உங்கள் மூத்திரப் பிள்ளையை–உங்களுடைய அசுத்தனான பிள்ளைக்கு
என் முகில் வண்ணன் பேர் இட்டு–எனக்குத் தலைவனும் காளமேகம் போன்ற திரு நிறத்தையுடையனுமான
எம்பெருமானுடைய திருநாமத்தை நாமகரணம் பண்ணி
(அதனால் அப்போதே நீங்கள் எம்பெருமானுடைய பரிக்ரஹமாகப் பெற்று)
கோத்து குழைத்து–(அவ் வெம்பெருமானோடு) கூடி கலந்து
(அதனாலுண்டாகும் ஆநந்த்த்துக்குப் போக்கு வீடாக)
குணாலம் ஆடி–குணாலைக் கூத்தாடிக் கொண்டு
திரிமின்–திரியுங்கள்
(இப்படியாகில்)
நாத்தகு நாரணன்–நாவினால் துதிக்கத் தக்க நாரா யணனுடைய பெயரைப் பூண்ட அப்பிள்ளையினுடைய
தம்மன்னை நரகம் புகாள்–

ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல்
துர் கந்த நிஷித்தச் சேறாய் இருபத்தொரு அங்கணக் குழியிலே
ஸூ கந்தமாய்
ஸூத்தமாய்
போக்யமாய்
தாவள்யமாய்
நிரய நிஸ்தாரகமாய்
மண ரஹிதமாய்ப்
ப்ராப்தமாய்
ஸகல லோக ஸங்க்ரஹமாய்
இருப்பதொரு அம்ருதம்
அதிலே பாய்ந்தால் போலே இருப்பது ஓன்று இறே

உங்கள் மூத்திரப் பிள்ளையை
உங்கள் ஸூக்ல ஸோணித பரிணாமமாய்
அஸூத்தாஸ் பதமான கர்ப்ப கோளகையில் நின்றும்
ஜல நிர் கமந யோநி ஜாதமான பிள்ளையை

என் முகில் வண்ணன் பேரிட்டு
என்னுடையவன் என்னும்படி தன்னை எனக்கு அமைத்து வைத்து
என்னாலே தனக்கு ரக்ஷையாம் படி இருக்கிற
ஸ்ரீ மன் நாராயணன் ஆகிற முகில் வண்ணன் திரு நாமத்தைச் சாத்தி

கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ –
எங்கள் குழுவினால் புகுதல் ஒட்டோம் -என்றது
எங்கள் அபிமானத்தில் புகுராமையால் அன்றோ

எங்களை அபிமானித்தவன் திரு நாமத்தைச் சாத்தின நீங்கள்
எங்களோடு பகவன் திரு நாமம் சொல்லும்படி இயல் கோத்துக்
குழைத்து
உங்கள் நெஞ்சை எங்களோடு கூட்டிக்
கோர்வை விடாமல் குணலைக் கூத்தாடி
எங்களை யுடையவர்களோடே திரியுங்கோள்

நாத் தகும்
உங்கள் நா உங்களுக்குத் தகுதியாம்

அந்ய சேஷத்வமும் துர் போஜனமும் தவிர்ந்தால்
பகவச் சேஷத்வமும் தீர்த்த ப்ரஸாதங்கள் ஜீவனம் ஆகையும் கூடும்

நாப் படைத்த பிரயோஜனமும் பெற்றி கோளாவுதி கோள்

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

———-

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

சீரணி மால் திரு நாமமே இடத் தேற்றிய
வீரணி தொல் புகழ் விட்டு சித்தன் விரித்த
ஓரணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்
பேரணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே – 4-6- 10-

பதவுரை

சீர்–கல்யாண குணங்களை
அணி–ஆபரணமாக வுடையவனும்
மால்–(அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான எம்பெருமானுடைய
திரு நாமமே–திருநாமத்தையே
இட–(தம் பிள்ளைகளுக்கு இடும்படி)
தேற்றிய–உபதேசித்தருளினவரும்
வீரம் அணி–(இந்திரியங்களை வெல்லுகை யாகிற) வீரப் பாட்டை ஆபரணமாக வுடையவரும்
தொல் புகழ்–சாச்வதமான கீர்த்தியை யுடையவருமான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரித்த–விரிவாக அருளிச் செய்தமையும்
ஓர் அணி–(கற்பார்க்கு) ஒப்பற்ற ஆபரணம் போன்றவையும்
ஒண் தமிழ்–அழகிய தமிழ்ப் பாஷை யுமாயிருந்துள்ள
ஒன்பதோடு ஒன்றும்–இப் பத்துப் பாட்டுக்களையும்
ஒன்பதில் விரோதி நிரஸனம் -ஒன்றில் இஷ்ட பிராப்தி
வல்லவர்–ஓத வல்லவர்
பேர் அணி–பெரியதும் அழகியதுமான
வைகுந்தத்து–ஸ்ரீவைகுண்டத்தில்
என்றும்–எந்நாளும்
பேரணி இருப்பர்–(எம்பெருமானுக்கு) மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு வாழப் பெறுவர்–

சீரணி மால் திரு நாமமே இடத் தேற்றிய
சீரணி
குணங்களை ஆபரணமாக யுடையவன் என்னுதல்
குணங்கள் புறம்பு ஓர் வியக்தியில் கிடவாமையாலே
கல்யாண குணங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமானவன் என்னுதல்

மால்
ஆஸ்ரித ரக்ஷணத்தில் வந்தால்
வ்யாமோஹத்தை யுடையவன்

திரு நாமமே இடத் தேற்றிய
இதர நாமங்களை மாற்றி
நாரணன் தன் நாமங்களையே தாம் தாம் பெற்ற பிள்ளைகளுக்குச் சாத்தும் படியாகப்
பல ஹேதுக்களாலும் தெரிவித்த

வீரணி தொல் புகழ் விட்டு சித்தன்
வீரப்பாட்டை ஆபரணமாக யுடையருமாய்
ஸூரிகளைப் போலே அநாதி ஸித்த மங்களா ஸாஸனப் புகழையும்
விஷ்ணு சித்தர் என்கிற திரு நாமத்தையும் யுடைய ஆழ்வார்

விரித்த
பகவத் அனுபவ பிரகாரத்தைத் திருப்பல்லாண்டு தொடங்கி
இவ்வளவும்
அந்யாபதேசத்தாலும்
ஸ்வா பதேசத்தாலும்
ஜகத்தில் உள்ளார்க்கு எல்லாம்
அத்விதீய ஆபரணமாக

ஓரணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்
ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றாக விரித்து உரைத்த இப் பத்துப் பாட்டையும்
ஸ அபிப்ராயமாக வல்லார்

அதாவது
மலை எடுக்கவும் –
கடலைச் சிறாங்கிக்கவும் வல்லார் என்கிற அளவேயும் அன்று இறே
இவர் திரு உள்ளத்தில் கருத்து அறிகை

அதாவது
இப் பிள்ளைகளுக்கு இட்ட திரு நாமம் விசேஷண பர்யந்தமோ விசேஷ பர்யந்தமோ என்று விகல்ப்பித்தால்
அசாதாரண நாமம் விசேஷணத்தில் நில்லாதாப் போலே
அசித் விசிஷ்ட ஜீவாந்தர்யாமி அளவிலும் நில்லாது

இது அறியும் போது
ஆச்சார்ய சேவையாலே வந்த வ்யுத்பத்தி அனுஷ்டான அபிமானங்களும் வேணும்

இவற்றில்
உத்தேஸ்யமுமாய்
ஸூலபமுமாயும் இறே இருப்பது இவர் அபி மானம்
இத்தை இறே வல்லார் என்கிறது

இப் பிரதிபத்தி யுடையவன் இட்டது இறே திரு நாமம் ஆவதும்
இத் திரு நாமமே யாகிலும் புத்ராதிகள் இடை ஈடனானால் அத் திரு நாமம் ஆகாது இறே

பேரணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே
அவனுக்கு அசாதாரணமான திரு நாமங்களைத் தங்களுக்கு ஆபரணமாகக் கொண்டு
ஸூரிகள் வர்த்திக்கிற தேசத்திலே என்றும் விரும்பி மங்களா ஸாஸன பரராய் வர்த்திக்கப் பெறுவர்

வீரணி -என்றது ஜிதேந்த்ரியத்வம்
அதாவது
பிராகிருத விஷயம் போலே அப்ராக்ருத விஷய ஸுந்தர்யத்தையும் ஜெயிக்க வல்லராய் இருக்கை

தம் தாம் பிள்ளைகளை ஆழ்வார்கள் அருளிச் செய்யப் பெற்றோம் என்கிற
அபிமானத்தோடே திரு நாமம் சாத்தினவர்கள் –
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா -என்றதை
விஸ்வஸித்து
நரக பீதி தவிர்ந்த அளவன்றிக்கே
இவர் அபிமானத்தாலே பரமபதமும் பெறுவர்கள் என்கிறது –

இது அன்றோ மேல் படி –
ஆச்சார்ய கைங்கர்யத்தில் ஈடுபட இதுவும் வேண்டுமே
அவனையும் தாண்டி ஆச்சார்ய கைங்கர்யத்தில் ஈடுபட வேண்டுமே
(பெரியாழ்வார் அருளிச் செய்த படியே நின்று அவர் அபிமானத்தில் ஒதுங்கி பேறு நிச்சயமாகப் பெறலாமே )

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: