ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-4–நா அகார்யம் சொல்லிலாதவர் நாள் தோறும்-

கீழே
கதிர் ஆயிரம் இரவிலே (4-1 )
சம தம தாதிகளை யுடையராய்
அவனைக் காண வேணும் என்னும் ஸ்நேஹம் யுடையீர்கள் ஆகில்
அவனைக் கண்டார் உளர் என்று காட்டின முமுஷுக்களை உத்தேச்யமாக அநு சந்தித்தார்

மேல் இரண்டு திருமொழியால்
அந்த முமுஷுக்களுக்கு உத்தேஸ்யராய்
சென்றால் குடையாம் -என்கிறபடியே
அழகரைத் தம் மடியில் வைத்து ரக்ஷிப்பாராய்
ஸூரிகளில் தலைவரான திரு அநந்தாழ்வானை அனுசந்தித்து

திரிதந்தாகிலும் -என்கிறபடியே
மாலிருஞ்சோலை என்னும் மலையை யுடைய மலை -என்று
அந்த திருமலையில் ஒரு கொடி முடியாய் நிற்கிற அழகரை அனுசந்தித்தாராய் நின்றார் கீழ்

இதில்
நாவகாரியம் (நா -அ காரியம் நாவுக்கு செய்யத் தகதாதது ) சொல்லாமல்
ஆச்சார்ய கிஞ்சித்க்கார பார தந்தர்யத்தோடே வர்த்திக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய திரிவித ப்ரவ்ருத்தியும்
அவர்களுடைய திரு உள்ளத்துக்கு ஈடாக லோக உபகார ப்ரவ்ருத்தியும்
சிஷ்ய புத்ராதிகளுடைய உஜ்ஜீவனத்துக்கும் ஈடாக கரிய கோலத் திரு உருவைக் காண்பாரையும்
இந் நேர் காணாதாரையும்
உத்தேஸ்ய பிரதிபத்தியும்
நிஷேத பிரதிபத்தியும்
சொல்லுகிறது –

(அன்பிலா மூடர்களை -சேவிக்காதவர்களை நிந்தித்தும்
சேவித்தவர்களை ஸ்லாக்கித்தும் பேசியும் )

————-

நா அகார்யம் சொல்லிலாதவர் நாள் தோறும் விருந்து ஒம்புவார்
தேவ கார்யம் செய்து வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர்
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனை சிந்தியாத அப்
பாவ காரிகளைப் படைத்தவன் எங்கனம் படைத்தான் கொலோ -4- 4-1 –

பதவுரை

நாவ காரியம்–நாவினாற் சொல்ல வொண்ணாத வற்றை
சொல்லில்லாதவர்–(ஒருநாளும்) சொல்லி யறியாத ஸ்ரீவைஷ்ணவர்கள்
நாள் தோறும்–நாடோறும்
விருந்து ஓம்புவார்–(ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விருந்தளித்துக் கொண்டும்
தேவர் காரியம் செய்து–பகவதாராதநம் பண்ணிக் கொண்டும்
வேதம்–வேதங்களை
பயின்று–ஓதிக் கொண்டும்-வேதங்களால் சொல்லப்பட்ட பெருமாளை அனுசந்தித்திக் கொண்டும்
வாழ்–வாழுமிடாமன-வாழுமிடமான-நித்ய வாசம் செய்து கண்டு அனுபவிப்பதே வாழ்ச்சி
திருக்கோட்டியூர்–திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்,)
மூவர்–பிரமன், ருத்ரன், இந்திரன் என்ற மூவருடைய
காரியமும்–காரியங்களையும்-வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதிகளையும்
திருத்தும்–செய்து தலைக் கட்டுமவனும்.
முதல்வனை–(எல்லார்க்கும்) தலைவனுமான எம்பெருமானை
சிந்தியாத–நெஞ்சாலும் நினையாத
அ பாவ காரிகளை-அப்படிப்பட்ட (மிகவுங்கொடிய) பாவஞ்செய்த பிராணிகளை
படைத்தவன்–ஸ்ருஷ்டித்தவன்
எங்ஙனம்–எதுக்காக
படைத்தான் கொல் ஓ–ஸ்ருஷ்டித்தானோ! (அறியோம்)-மனம் தளர்ந்து பேசுகிறார்

நா அகார்யம்
நாவுக்கு அகார்யமாவது
1-சப்தங்கள் நாரத்து அளவு பர்யவசிக்கையும்
2-பொய் சொல்லுகையும்
3-பிறருக்கு கிலேச அவஹமான ஹேதுக்களைச் சொல்லுகையும்

நா வாயில் உண்டே –இத்யாதி
அல்லாத திரு நாமங்கள் இடையிலே இளைப்பாற வேண்டும்
கொங்கிலே திருக் குருகைப் பிரான் பிள்ளான் எழுந்து அருளி ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மாளிகையிலே
விட்ட அளவிலே பிறந்த வார்த்தைகளை ஸ்மரிப்பது

அநந்தாழ்வான் சரம சமயத்திலே -பட்டர் உகக்கும் திரு நாமம் ஏது -என்று கேட்க
அழகிய மணவாளப் பெருமாள் -என்கிற திரு நாமம் என்று சொல்ல
இது பர்த்ரு நாம கிரஹணம் பண்ணுமா போலே இரா நின்றது
ஆகிலும் பட்டர் உகந்த திரு நாமம் அன்றோ என்று
இத் திரு நாமத்தைச் சொன்ன அநந்தரத்திலே திரு நாட்டுக்குப் போந்தான்

உடையவர் எழுந்து இருந்த காலத்திலே வடுக நம்பி அருகே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருளி
ஓம் நமோ நாராயணா என்று இத்தைச் சொல்ல
இத்தைக் கேட்ட வடுக நம்பி நாவை காரியம் என்று எழுந்து இருந்து கடக்கப் போனார்

ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் (உடைய )சரம சமயத்திலே உடையவர் எழுந்து அருளி –
இப்போது திரு உள்ளத்தில் அனுசந்தானம் ஏது -என்று கேட்க
பகவன் நாமங்களாய் இருப்பன அநேகம் திரு நாமங்கள் உண்டு -ஆயிருக்க திருவரங்கம் என்கிற
நாலைந்து திரு அக்ஷரமும் கோப்புண்ட படி என் -என்று நினைந்து இருந்தேன் காணும் என்று அருளிச் செய்ய
அத்தை ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் விரும்பிய திரு நாமம் என்று உடையவர் விரும்பி இருப்பர்

ஏதத் விரதம் மம -என்று ஈஸ்வர ஸங்கல்பம்
யாதானும் பற்றி நீங்கும் விரதம் -சம்சாரிகள் விரதம்
விரதம் கொண்டு ஏத்தும் என்று முமுஷுக்கள் விரதம்
முமுஷுக்களுக்குக் கூறாய் இறே அர்ச்சாவதாரம் இருப்பது –
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -என்னக் கடவது இறே

எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே –என்று கழித்து
ஆர் எண்ணும் நெஞ்சு யுடையார் அவர் எம்மை ஆள்வார் –என்று அருளிச் செய்தார் இறே (கலியன் )

ஒழிவில் காலம் எல்லாம் அடிமையும் அபேக்ஷித்து (3-3 )
புகழு நல் ஒருவனிலே வாஸிகமான அடிமை செய்து (3-4 )
மொய்ம் மாம் பூம் பொழிலிலே -அடிமையை இழியாதாரை நிஷேதித்து (3-5 )
செய்ய தாமரைக் கண்ணனிலே -பகவத் ஞானத்தை உபதேசித்து (3-6)
பயிலும் சுடர் ஒளியிலே (3-7 )-பண்டே திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு உகக்கிறார்

நாவ காரியம்
வாழ்த்துவர் பலராக -திருவாய் -3-7-1-
ஸ்ருஷ்டிக்குப் பிரயோஜனம் திரு நாமம் சொல்லுகை இறே

நாவ காரியம்
நாவுக்கு அகார்யமாவது
அஸத்யம் சொல்லுகிற நாக்காலே பகவத் விஷயத்தைச் சொல்லுகை

ஆவியை அரங்கமாலை எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறே என்று
அயோக்கியன் திரு நாமம் சொல்லுகையும் பாப பலம் என்றார் இறே

திருவாகம் தீண்டிற்றுச் சென்று -என்று அவனைப் பார்க்கும் எத்தனையோ –
தன்னைப் பார்க்க வேண்டாவோ என்று திரு உள்ளத்தைக் கர்ஹிக்கிறார் இறே

கொடு மா வினையேன் -என்று
பொய்ந் நின்ற ஞானம் தொடங்கி -நெடுமாற்கு அடிமை அளவும் கர்ம பலம் என்று அனுசந்தித்தார் இறே

சொல்லிலாதவர்
இவை புகுந்து கழியாதவர்

நாள் தோறும் விருந்து ஒம்புவார்
நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை அப்போது அமுது செய்ய எழுந்து அருளின
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் போலே ஆதரிப்பார்கள் –

தேவ கார்யம் செய்து
இவர்களுக்கு உகப்பாக பகவத் ஸமாராதனம் பண்ணிப் போருமவர்கள்
திரி தந்தாகிலும் -என்னக் கடவது இறே

வேதம் பயின்று வாழ்
பகவத் பாகவத கைங்கர்யத்துக்கு ஏகாந்தமான பிரதேசங்களை நெருங்க அனுசந்தித்து
வேத ப்ரதிபாத்ய வஸ்துவைக் கண்ணாலே கண்டு அனுபவிப்பவர்கள் –

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர் ஏத்தும் திறன் அறிமின் -என்னக் கடவது இறே

திருக் கோட்டியூர்
இவற்றை நினைத்து இறே இவர் தாம்
அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன் செல்வனைப் போலே
திரு மாலே நானும் உனக்குப் பழ அடியேன் -என்றது
இவரைப் போலே தம்மையும் அங்கீ கரிக்க வேணும் என்னும்படி இறே இவர்கள் ஏற்றம் –

மூவர் காரியமும் திருத்தும்
அவர்களுக்கு வந்த ஆபத்துக்களைப் பரிஹரிக்கும்
வேத அபஹார குரு பாதக–இத்யாதி
மஹாபலி போல்வார் கையிலே ராஜ்யத்தைப் பறி கொடுக்க -அத்தை மீட்டுக் கொடுக்குக்கையும்
இவை இறே மூவர் காரியமும் திருத்துகை யாவது

முதல்வனை
திருத்துகைக்கு அடி சம்பந்தம்

சிந்தியாத பாவ காரிகளைப்
துர்மானிகளாய் எதிரிட்டுப் போருகிற இவர்கள் தண்மை பாராதே இவர்கள் கார்யம் செய்த
உபகாரத்துக்குத் தோற்று அநுஸந்தியாத பாப கர்மாக்களை

படைத்தவன் எங்கனம் படைத்தான் கொலோ
என்ன ப்ரயோஜனத்துக்குப் படைத்தான் என்று அறிகிறி லோம் இறே

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -என்று
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்குமவன் இறே
சோம்பாது இப்பல் உருவை எல்லாம் படர்வித்த –என்னக் கடவது இறே

இப் பாட்டில்
பூர்வ வாக்யம் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் தொழில்
உத்தர வாக்யம் -ஈஸ்வரன் தொழில்
நாவ காரியம் சொல் இல்லாதவர் -என்று நிஷித்த நிவ்ருத்தி
நாடொறும் விருந்து ஓம்புவார் -என்று மாநஸம்
தேவ கார்யம் செய்து -என்று காயிகம்
வேதம் பயின்று வாழ் -என்று வாசிகம்

————

கீழில் பாட்டில் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அநுகூல விருத்தியை அனுசந்திக்கிறார்

குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய்
செற்றம் ஓன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
துற்றி ஏழ் உலகு உண்ட தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதார்
பெற்ற தாயர் வயிற்றினை பெரு நோய் செய்வான் பிறந்தார்களே – 4-4- 2-

பதவுரை

குற்றம் இன்றி–ஒரு வகையான குற்றமுமில்லாமல்
குணம்–(சமம், தமம் முதலிய குணங்களை)
பெருக்கி–வளரச் செய்து கொண்டு
குருக்களுக்கு–(தம் தம்) ஆசாரியர்களுக்கு
அனுகூலர் ஆய்–(கைங்கரியம் பண்ணுவதற்குப்) பாங்காயிருப்பவர்களும்
செற்றம் ஒன்றும் இலாத–பொறாமை யென்பது சிறிதுமில்லாதவர்களும்
வண் கையினார்கள்–உதார கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்–வாழுமிடமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
ஏழ் உலகு–ஸப்த லோகங்களையும்
துற்றி–ஒரு கபளமாகத் திரட்டி
உண்ட–அமுது செய்தருளினவனும்
தூ–பழிப்பற்ற
மணி–நீல மணி போன்ற
வண்ணன் தன்னை–நிறத்தை யுடையவனுமான எம்பெருமானை
தொழாதவர்–வணங்காதவர்
பெற்ற (தங்களைப்) பெற்ற–
தாயர்–தாய்மாருமடய
வயிற்றினை–வயிற்றை
பெரு நோய் செய்வான்–மிகவும் கொடுமைப் படுத்தமைக்காக
பிறந்தார்கள்–பிறந்தார்–

குற்றம் இன்றி
குற்றமாவது
தோஷ
குண ஹாநிகள்
அதாவது
கீழில் பாட்டில் சொன்ன நாவ காரியம்

தோஷ குண ஹாநிகள் தான்
அதிகார அனுகுணமாக வேறு பட்டு இறே இருப்பது –

குண ஹாநி யாவது –
அதிகார அனுகுணமாக ஸாஸ்த்ர ஸித்தமான அர்த்தங்களிலே
ஸதாசார்ய நியமனம் உண்டானால் அது செய்யாது ஒழிகை

தோஷம் ஆவது –
இவ் வடைவிலே அவ் வாச்சார்யன் வேண்டா என்றதைச் செய்கை –

அவன் வேண்டா என்றவை தான்
த்யாஜ்யம் என்றும்
நிஷேதம் என்றும்
நிஷித்தம் -என்றும்
நிந்திதம் -என்றும் நாலு வகையாய் இருக்கும்

அதில்
த்யாஜ்யம் ஆவது
ஆச்சார்யன் ஓர் அவஸ்தையிலே செய் என்றத்தை ஓர் அவஸ்தையிலே தவிரச் செல்லுகை

நிஷேதம் ஆவது
வைதம் அல்லாதவற்றிலே அல்பஞ்ஞர் செய்யுமவற்றைக் கண்டு அவன் நிஷேதிக்கச் செய்தே செய்கை

நிஷித்தமாவது
தத் கத தோஷ மாத்ரமாய்
ஸ்நாந மாத்ரத்தாலே ஸூத்தமாகை

நிந்திதமாவது
சரீர அவசான ப்ராயச் சித்தமாய்
புத்தி பூர்வமான பர தார பரிக்ரஹாதிகள்

இப்படிக் குற்றம் தீர்ந்து இருப்பாரைக் கிடைக்குமோ என்னில்
ஆச்சார்யர் பர தந்த்ராவதற்கு முன்புள்ளவை ஆச்சார்யன் ஷமித்த போதே கழியும்
பின்பு அந்த அபிசந்தி விராமம் தன்னாலே செய்யான்
பூர்வமே யுண்டான அபிசந்தி வாஸனை பின்பு நலிந்தாலும் வாசிக கிரியா பர்யந்தமாகச் செய்யான்
(கூரத்தாழ்வான் பிள்ளை பிள்ளான் – மானஸ குற்றம் மட்டும் —
எம்பெருமானார் திருவடிகளே சரணம் சொல்லி விடச்சொல்லிய ஐதிக்யம் )
ச மர்யாதாதி வர்த்தனம் உண்டாய்த்தாகில் தன் அதிகாரத்தை நோக்க அவனுடைய க்ஷமையாலே கழியும் –
யத் ப்ரஹ்ம கல்பேத் யாதி
நாளும் நின்று அடும் நம் பழ வினை உடனே மாளும் -(1-3-8 )-இத்யாதி

இனி நிருபாதிக நிஷேதமாவது
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்க்கை (1-2-) யாகிற
தியாக பிரகார நிர்ணயம் இறே

தோஷ
குண ஹாநிகள் அற்று –

குணம் பெருக்கி
ஸ்வார்த்த நிரபேஷமாக
அவன் சொன்னத்தைச் செய்து
குணத்தை அபி விருத்தமாக்கி

குருக்களுக்கு அனுகூலராய்
குருக்கள் என்கிற பஹு வசனத்தாலே
ஸம்ஸார வர்த்தகரான குருக்கள் அளவிலும் பிரதி கூலியாமல்
லோக அபவாத பீதி பரிஹார அர்த்தமாகவும்
லோக ஸங்க்ரஹதயா கர்த்தவ்யமாகவும்
சிஷ்ய புத்ராதிகளுடைய உஜ்ஜீவன அர்த்தமாகவும்
பேணிக் கொண்டு போரவும் வேணும் இறே

பஹு வசனம் நிவர்த்திக ஆச்சார்யர்கள் அளவிலேயான போது
ஸ்வரூப அனுரூபமாகவும்
மங்கள அனுரூபமாகவும்
ஆரோஹ ரூபமாகவும்
அவரோஹ ரூபமாகவும்
வருகிற குரு பரம்பரா அநு வர்த்தநமாகக் கடவது

குருக்கள் என்ன ஆச்சார்யர்களைக் காட்டுமோ என்னில்
ஆச்சாரோ வேத சம்பன்ன -என்று எடுத்து
குருரித் யபி தீயதே -என்று பர்யாயம் ஆக்கிற்று

இது ஆத்மநி குருஷு பஹு வசனமாய்
மந்த்ர ப்ரதிபாத்யமான ஏக -வகுத்த -விஷயத்தில் ஆன போது
உஜ்ஜீவனமும்
பிரதிபத்தியும்
கிஞ்சித்காரமும்
நித்ய அர்ச்சனையும் சேரக் கிடைக்கும் இறே

அத்ர பரத்ர ச அபி (ஸ்தோத்ர ரத்னம் )
அம்புதத்தைப் பார்த்து இருப்பான் அற்று ( ஞான சாரம் )
அப் பொருள் தேடித் திரிவான் அற்று –
(ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே )

செற்றம் ஓன்று இலாத
செற்றமாவது -பொறாமை -அதாவது
பர ஸம்ருத்ய அஸஹத்வம்

ஒன்றும் இல்லாமையாவது
பர ஸம்ருத்தி தானே ஸ்வ ஸம்ருத்தியாய் இருக்கை

வண் கையினார்கள் வாழ்
வண்மை -ஒவ்தார்யம் –
அதாவது
செய்த அம்சத்தை நினைக்கை அன்றிக்கே
செய்யும் அம்சத்தில் பிரதிபத்தியாய்
பிரிய ஹிதங்கள் செய்யா நிற்கச் செய்தே ஒன்றுமே செய்திலோமே என்று கை மறித்து நிற்கை –

வாழ் –
இது தானே ஸாத்யமாய் இருக்கை

திருக் கோட்டியூர்
ஏவம் பிரகாரரானவர்கள் நித்ய வாஸம் செய்கிற திருக்கோட்டியூரிலே சந்நிஹிதனாய் இருக்கை –

துற்றி ஏழு உலகு உண்ட
துற்றாக முன் துற்றிய தொல் புகழோன் (பெரிய திருமொழி -7-1 )என்னுமா போலே
ஏழு லோகத்தையும் துற்றாக அமுது செய்த

தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதார்
உண்டார் மேனி கண்டால் தெரியும் இறே
தூயதான நீல ரத்னம் போலே இருக்கிற திருமேனியை யுடையவனை
கரிய கோலத் திரு வுருக் காண்பன் நான் -என்றால் போலே
ஆச்சார்ய ப்ரீதி நிபந்தனமாக இவ் வடைவிலே தொழாதவர் –

பெற்ற தாயர் வயிற்றினை பெரு நோய் செய்வான் பிறந்தார்களே
இவனைப் பெறுவதற்கு முன்பு பட்ட வியசனம் அல்பம் என்னும்படி காணும்
இவன் பிறந்து தொழுகைக்கு யோக்யனாய் இருக்கச் செய்தேயும் தொழாமையாலே இவளுக்கு வந்த வியசனம்

இவனைக் காணும் தோறும் காணும் தோறும் வயிற்று எரி மண்ட அடித்துக் கொள்ளும் படி
இவர்கள் அடியாக வரும் வியசனம் ஆகையாலே
பெரு நோய் செய்வான் பிறந்தார்களே -என்கிறார்

மா அஜ நிஷ்டே–இத்யாதி (பிறக்காதவனுக்கு சமம் )
பெரு நோய் -மீளாத வியாதி

தொழுவார்க்கு இத்தனை அடைவு வேணும் போலே காணும் –

—————–

தொழுவார்களுக்கும் தொழாதவர்களுக்கும் உள்ள நன்மை தீமைகளை அனுசந்தித்தார் கீழ்ப் பாட்டில்
இதில் திரு நாமங்களை எண்ண யோக்யராய் இருக்கச் செய்தே
எண்ணாதவர்களுடைய அநர்த்தம் கண்டு வெறுக்கிறார் –

வண்ண நன் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக் கோட்டியூர் திருமாலவன் திரு நாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக் கவளம் உந்துகின்றார்களே -4-4-3 –

பதவுரை

நல் வண்ணம்–நல்ல நிறத்தை யுடைய
மணியும்–ரத்நங்களையும்
மரகதமும்–மரகதகங்களையும்
அழுத்தி–(ஒழுங்கு பட) இழைத்ததனால்
நிழல் எழும்–ஒளி விடா நின்றுள்ள
திண்ணை–திண்ணைகளாலே
சூழ்–சூழப் பெற்ற
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருக்கிற)
திருமால் அவன்–திரு மா மகள் கொழுநனுடைய
திரு நாமங்கள்–திரு நாமங்களை
எண்ண–(ஒன்று, இரண்டு என்று எண்ணுகைக்கா
கண்ட–படைக்கப் பட்ட
விரல்களால்–விரல்களாலே (அந்தத் திருநாமங்களை)
இறை பொழுதும்–க்ஷண காலமும்
எண்ண இலாது–எண்ண மாட்டாமல்
போய்–புறம்பே சென்று
உண்ணக் கண்ட–(சரீர போஷணார்த்தமாக) உண்ணா நின்ற
தம்–தங்களுடைய
நம் ஊத்தை வாய்க்கு–அசுத்தமான வாயிலே
கவளம்–சோற்றுத் திரள்களை
உந்துகின்றார்களே–(அவ் விரல்களினால்) தள்ளா நின்றார்களே!
(இதென்ன கொடுமை.!)-

வண்ண நன் மணியும் மரகதமும் மழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக் கோட்டியூர் திருமாலவன் திரு நாமங்கள்
நன்றாக வர்ணத்தை யுடைத்தான ரத்னங்களும் அப்படிப்பட்ட மர கதமும்
அழுத்தி நிழல் எழும் படி கைப் பணி இட்டுத் திருத்தின சுவரிலே ரத்னங்கள் ப்ரதி பிம்பிக்கும் படி
மாடங்களுக்கு அலங்காரமான திண்ணைகளாலே சூழப்பட்ட திருக்கோட்டியூரிலே

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் -என்னுமா போலேயும்
திரு விழவில் மணி அணிந்த திண்ணை( 7-8 ) -என்னுமா போலேயும்
சொக்க நாராயணர் திரு நாள் தோறும் அலங்கரிப்பர்கள் இறே –
அங்கே நித்ய வாஸம் செய்கிற ஸ்ரீ மானான சொக்க நாராயணருடைய திரு நாமங்களை –

எண்ணக் கண்ட விரல்களால்
அசாதாரணமான திரு நாமங்களை அர்த்த ஸஹிதமாக
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உணர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் (9-10 )-என்று
ஆழ்வார் அனுசந்தித்த திரு நாம வி சேஷங்களை
வாஸ்யத்துக்கு வாசகமாகவும் –

மன்னு நாரணன் நம்பி -என்று
வாசகத்துக்கு வாஸ்யமாகவும்

தேனும் பாலும் என்னும் படி நிரதிசய போக்யமான திரு நாமங்களை எண்ணி ஜபித்து
ப்ரதிஜ்ஜை தலைக்கட்டி விடுகை அன்றிக்கே
பேரும் ஓர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான் -என்கையாலே
கால தத்வம் உள்ளதனையும் விரல் மடக்கி எண்ணா நின்றால்
எண்ணின இடமும் எண்ணும் இடமும் அஸங்க்யாதமாய் இருக்கை —

அவனுடைய ஆநந்தத்தை அப்ராப்ய மனஸா ஸஹ -என்னாமல் ஒரு நியாயத்தாலே அளவிட்டாலும்
ஆனந்தாவஹமான திரு நாமங்களை எங்கனே அளவிடலாவது –

நீராய் நிலனாய் என்கிற சாதாரண நாமங்களை உபேக்ஷித்து மீளலாம்
எப்பொழுதான அப் பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதான திரு நாமங்களை எண்ணி எண்ணி
துல்ய விகல்பம் செய்து அவன் தன்னை
முடிச் சோதிப் படியே அனுபவிக்குமா போலே அவன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு வாசகமான
திரு நாமங்களையும் அனுபவிக்கும் அத்தனை இறே

தலையும் கையும் வணங்கவும் அஞ்சலி பண்ணவும் கண்டது -என்னுமா போலே
விரல் கண்டதும் திரு நாமம் எண்ணுகைக்கு என்று இருக்கிறார்
கரண ஸ்வ பாவங்களைச் செய்யலாவது இல்லை இறே

இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
அத்யல்ப காலமும் என்னாது ஒண்ண இருக்க ஒண்ணாத திரு நாமங்களை
அத்யல்ப காலமும் எண்ணவும் எண்ணாமல் போவதே

உண்ணக் கண்ட தம் மூத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்களே
போஜன நியதி பண்ணி அதிகார அனுகுணமாக உண்ணக் கண்ட வாயால் க்ரமத்தில் உண்ணாமல் –

ஷூத் அதிசய ஸுஷ்டவங்களாலே
கடமுண்டார் கல்லாதவர் -என்கிறபடி
ஊத்தைமாசேறும் படி ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின் எண்ணாத விரல்களால் கவளம் உந்துகிறது
பகவத் பாகவத ஆச்சார்ய விசேஷங்களுக்கு என் செய்வாராகத் தான்
உத்தமர்கட்க்கு என் செய்வார் -என்னக் கடவது இறே

பரமன் பவித்ரன் சீர் வாய் மடுத்துப் பருகிக் களித்தவர் தொண்டர்க்குச்
சொன்ன மாலை அமுது உண்ணக் கண்ட வாயால்
அது உண்ணாமல் ஊத்தைக் கவளம் உந்துவதே
தொண்டு பட்டுச் சொன்ன மாலை அமுது உண்கைக்குக் ஹேதுவாகத் தீர்த்த ப்ரஸாதங்களாலே
தேஹ தாரணம் செய்கை தானும் அரிதாவதே -என்று மிகவும் வெறுத்து அருளுகிறார் –

இத்தால்
பக்தி ரூபா பன்ன ஞான ப்ரகாச ரத்னமான
செல்வ நம்பி
திருக்கோட்டியூர் நம்பி போல்வார்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நிழல் கொடுத்துக் கொண்டு வர்த்திக்கும் தேசம் என்றதாய்த்து
செழு மா மணிகள் சேரும் -என்னுமா போலே –

———

இஷ்டப் பிராப்தி அறியாதாப் போலே
அநிஷ்ட நிவ்ருத்தியும் அறியாது ஒழிவதே என்கிறார் இப் பாட்டில் –

உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல் மட வன்னங்கள்
நிரை கணம் பரந்து ஏறும் செம்கமல வயல் திருக் கோட்டியூர்
நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன தான் கொலோ -4 4-4 –

பதவுரை

உரகம் மெல்–திருவனந்தாழ்வானை ஸுகுமாரமான
அணையான்–படுக்கையாக வுடைய எம்பெருமானது
கையில் உறை–திருக் கையில் உள்ள
சங்கம் போல்–ஸ்ரீ பாஞ்ச ஜந்யம் போல் (வெளுத்த)
மட அன்னங்கள்–மடப்பம் பொருந்திய ஹம்ஸங்களானவை
ஏறும்–ஏறி யிருக்கப் பெற்ற
செம் கமலம்–செந்தாமரை மலர்களை யுடைய
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
நரகம் நாசனை–(தன்னடியார்க்கு) நரக ப்ரவேசத்தை ஒழித்தருளுமவனமான எம்பெருமானை
நாவில் கொண்டு–நாவினால்
மானிட சாதியர்–மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்கள்
பருகும்–குடிக்கின்ற
நீரும்–தண்ணீரும்
உடுக்கும்–உடுத்துக் கொள்ளுகிற
கூறையும்–வஸ்திரமும்
பாவம் செய்தன தான் கொல் ஓ–பாவஞ்செய்தனவோ தான்!:-

உரக மெல் அணையான்
திருவனந்த ஆழ்வானை மிருதுவான படுக்கையாக யுடையவன்
சைத்திய மார்த்வ ஸுரப்யங்கள் ப்ரக்ருதியாய் இருக்கும் இறே -ஸர்ப்ப ஜாதிக்கு
ஆகையால் இறே திருவனந்த ஆழ்வான் தான் சேஷியான ஸர்வேஸ்வரனுடைய திருமேனியின்
மார்த்வ அனுகுணமாக இந்த வடிவைக் கொண்டு திருப்படுக்கையாய் இருக்கிறது
அங்குப் பள்ளி கொண்டு அருளுகிறவனுடைய திரு நாமம் உரக மெல்லணையான் என்று இறே
பரமபதம் திருப்பாற் கடல் விட அத்யந்த அபிமதம் இங்கே தானே

கையில் உறை சங்கம் போல்
கை வண்ணம் தாமரை -என்ற
திருக்கையிலே நித்ய வாஸம் செய்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே

மட வன்னங்கள் நிரை கணம் பரந்து ஏறும் செம்கமல வயல் திருக் கோட்டியூர்
நெல்லை மிகித்துக் கிளம்பின செந்தாமரை வயல்களிலே ஒன்றுக்கு ஓன்று பவ்யமான அன்னங்கள்
திரண்டு ஒழுங்கு பட நிறைந்து ஆமிஷார்த்தமாக நாநாவான வலைகளுக்குத் தப்பின ஜல சரங்களும் தப்பாத படி
பரந்தேறி ஜீவிக்கும் வயல்களை யுடைத்தான திருக் கோட்டியூரிலே பள்ளி கொண்டு அருளா நிற்கிற

நரக நாசனை
நரக நாசனை நாவில் கொண்டு அழைப்பாருக்கு
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும்படி (திருமாலை ) பண்ணுகிற நரக நாசனை

நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர்
அஹ் ருதயமாகச் சொல்லுகிற கட படாதி ஸப்தம் போலாகிலும் நாவால் சொல்லி
அநிஷ்ட நிவ்ருத்தி பண்ணிக் கொண்டு வர்த்திக்க மாட்டாமல்
பெறுதற்கு அரிதான மனுஜ்ய ஜாதியில் பிறந்தவர்கள் –

பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன தான் கொலோ
குடிக்கிற தண்ணீரும்
உடுக்கிற புடைவையும்
உடுக்கிறவன் தானும்
என்ன என்ன பாபங்களை செய்தானோ என்று வெறுத்து அருளுகிறார் –

குடிக்கிற தண்ணீருக்கும் உடுக்கும் கூறைக்கும் ஸாஸ்த்ர வஸ்யதை உண்டாகில் அன்றோ பாபம் வருவது
ஆயிருக்க ஸாஸ்த்ர வஸ்ய யோக்யனாய் இருக்கச் செய்தேயும்
அயோக்யனான பாபியோட்டை ஸ்பர்சம் சேதனம் அசேதனம் என்று பாராதே இறே

ஜலே ஜீவாஸ் ஸ்த்தலே ஜீவா -என்றும்
அனோர் அணீயான் -என்றும்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் -என்றும் சொல்லுகையாலே
அத்யந்தம் ஸூஷ்மமான விஸிஷ்ட ஜந்துக்கள் உண்டாக
வேதாந்தங்களை ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அருளிச் செய்கையாலே
பாப விமோசன அர்த்தமாக ஜாதமான அல்ப ஜந்துக்களை
பாப வர்த்தகன் ஸ்பர்சிக்கையாலே

இதுக்கு அடி
இவற்றுக்குப் பூர்வமேவ உண்டான பாபம் அத்தனை இறே

ஏத்த வல்லார் திரிதலால் தவமுடைத்துத் தரணி தானே (பெருமாள் திரு மொழி -10-5 ) என்று
நல்லவர்களால் அசேதனமான பூமிக்கு நன்மையைக் கற்பியா நின்றால்
இதுக்குச் சொல்ல வேண்டா இறே

குந்தோவா
ஊனேறு -இத்யாதிகளில்
பகவத் பாகவத ஸ்பர்சம் உள்ளவை ஞானாதிகருக்கும் பகவத் விவசர்க்கும்
உத்தேச்யமாகா நின்றால்
இதர ஸ்பர்சம் உள்ளவை சத்துக்களுக்கு
நிஷேத நிஷித்த நிந்திதங்கள் என்று மிகவும் தோன்றும் என்று கருத்து –

இத்தால்
ஸூரிகள் ஒரு புடைக்கு ஒப்பாம் படி (உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல்)
சார க்ராஹிகளாய் (மட வன்னங்கள்)-
ஸூத்த ஸ்வாபவரான முமுஷுக்கள்
சிஷ்ய ஆச்சார்ய முறைமை குன்றாமல் அஹம் அன்ன யோக்யராய் இருக்கச் செய்தேயும்
ஸுமநஸ்யம் விஞ்சினவர்கள் வசிக்கிற தேசத்தில் உண்டான குண விசேஷங்களைக் கண்டு
(அதிலே மக்நராய் விரும்பார்கள் என்றும் )
அதிலே மக்நரான ஸம்ஸாரிகளையும் போக்யமாக விரும்புவார்கள் என்று காட்டுகிறது
(அவன் இவர்கள் இடம் உகந்து இங்கு வாழ்வதாலேயே மாறுவார்கள் என்று விரும்புவார்கள் )
(நாமம் செல்லாதவார்களை -விரும்பார் -பாட பேதம் )

———–

ஊண் மாறி அடைக்கிறார்

ஆமையின் முதுகத்திடை குதி கொண்டு தூ மலர் சாடிப் போய்
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர்த் திருக் கோட்டியூர்
நேமி சேர் தடம் கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி புல்லை திணிமினே -4 -4 -5-

பதவுரை

இள–இளமை பொருந்திய
வாளைகள்–‘வாளை’ என்னும் மீன்கள்
ஆமையின்–ஆமைகளினுடைய
முதுகத்திடை–முதுகின் மேல்
குதி கொண்டு–குதித்துக் கொண்டும்
தூ மலர்–நல்ல புஷ்பங்களை
சாடிப் போய்–உழக்கிக் கொண்டும்
தீமை செய்து–(க்ஷுத்ர ஜந்துக்களைக் கலக்கி ஒட்டுகையாகிற தீம்புகளைச் செய்து கொண்டும்
விளையாடு–விளையாடுமிடமான
நீர்–நீரை யுடைய
திருக் கோட்டியூர்– திருக்கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
நேமி–திருவாழி யாழ்வானோடு
சேர்–சேர்ந்திருக்கிற
தட–பெரிய
கையினானை–திருக் கையை யுடையனுமான எம்பெருமானை
(கீழ் பாஞ்ச ஜன்யம் இங்கு திரு ஆழி ஆழ்வான் )
நினைப்பு இலா–(ஒரு காலும்) நினையாத
வலி நெஞ்சு உடை–கடினமான நெஞ்சை உடையவர்களும்
பூமி பாரங்கள்–பூமிக்குச் சுமையாயிருப்பவர்களுமான பாவிகள்
உண்ணும்–உண்கிற
சோற்றினை–சோற்றை
வாங்கி–பிடுங்கி விட்டு, (எறிந்து)
புல்லை–(அறிவற்ற பசுக்களுக்கு உண்வான) புல்லைக் கொண்டு
திணிமின்–(அவர்கள் வயிற்றைத்) துற்று விடுங்கள்-
(ஞான ஹீனர் பசு பிராயர் -புல்லைத் தானே கொடுக்க வேண்டும் )

இள வாளைகள்
நாளால் இளைய வாளை என்கிற மத்ஸ்யங்கள்

ஆமையின் முதுகத் திடை குதி கொண்டு
ஆமையினுடைய நடு முதுகில் குதித்து அதில் நில்லாமல்

தூ மலர் சாடிப் போய்
போது அலர்ந்த செவ்வி தாமரையிலே இதழ் மடியும்படி
பின்னையும் குதித்துப் போய்

தீமை செய்து விளையாடு
தஜ்ஜாதியோடே தீமை செய்து விளையாடும்படியான

நீர்த் திருக் கோட்டியூர்
நீரை யுடைத்தான திருக்கோட்டியூரிலே நித்ய வாஸம் செய்வானாய்

நேமி சேர் தடம் கையினானை
திருவாழி பொருந்தப் பிடித்த பெரிய திருக்கையை யுடையவனை
அலம் புரிந்த நெடும் தடக்கையை யுடையவனை

நினைப்பிலா வலி நெஞ்சுடை பூமி பாரங்கள்
நினைப்பில்லாத அளவே அன்றிக்கே
நிபுண ஆச்சார்யர்கள் ஸதா த்யேய வஸ்து காண் -என்று அறிவித்தால்
ஓம் காண் எனக்கு நினைவுக்கு வேறே விஷயம் இல்லையோ -என்னும்படி
வலிதான நெஞ்சை யுடைய க்ருதக்நராய் பூமிக்குப் பாரமானவர்கள்
பூமி தான் ந பாரம் ஸப்த ஸாகரா -இவர்களே எனக்குப் பாரம் என்னும் இறே

இவர்கள்
உண்ணும் சோற்றினை வாங்கி புல்லை திணிமினே
உண்ணும் சோறு -மிக்க பசியோடு வாயில் இட்ட சோறு
அத்தை வாங்கி
மிருகங்கள் தின்கிற புல்லைத் திணியுங்கோள்-என்றது
இவன் தின்னேன் என்றாலும் திணியுங்கோள்-என்ற படி –

திணித்தாலும் இவன் மென்று இரக்க வேண்டாவோ என்னில்
உங்கள் பூர்வர்கள் இப்படி காண் போந்த படி என்று இவர்களை இசைவித்து
வாங்கின சோற்றை அந்த மிருகங்களுக்கு இடுங்கோள்
மிருகங்கள் இட்டவனை அறிந்து வச வர்த்தியாய் வருமே
இவர்கள் இட்டவனையும் அறியார்கள்
இடுகிற ஜீவன வாசியும் அறியார்கள்
வாசி அறிந்தவர்களைப் பார்த்து இறே திணியுங்கோள் என்கிறது

இத்தால்
தம் தாமுடைய கடாக்ஷ விசேஷங்களாலே தம் தாமுக்கு ஆஸன்ன வர்த்திகளான
சிஷ்ய புத்ராதிகளை உஜ்ஜீவிப்பிக்க வல்ல ஆச்சார்யர்கள்
தம் தாமுடைய நினைவாலே தூரஸ்தரான சிஷ்ய புத்ரர்களை உஜ்ஜீவிக்கும் படி வல்லரானவர்களையும்
ஸூமானாக்களையும் கூடி பிரிந்து இருக்கச் செய்தேயும் அவர்களுடைய நீர்மையை விஸ்வஸித்து
ஸன்மர்யாத அதிவர்த்தந நிஷ் ப்ரயோஜன வியாபார போகிகளான பிரகாரத்தைக் காட்டுகிறது –

(ஆச்சார்யர்கள் -(பெரிய வாளை )-கடாக்ஷத்தாலே அருகில் உள்ள -சிஷ்யர் புத்திரர் -(ஆமை )
தூரஸ்தர் -சிஷ்யர் புத்திரர் -மனசால் வாழ்த்தி -மலர்ந்து மணம் பரப்பும் தாமரை ஆச்சார்யர்கள் -ஸூ மநாக்கள்
ஷூத்ர ஐந்து -ஸன்மர்யாத அதிவர்த்தந வியாபாரம் நிஷ் ப்ரயோஜன வியாபாரம் -உள்ளவர்
இவர்களை ஓட்டுவதே போகம் ஆகிய விளையாட்டு )

———–

கீழ்ப்பாட்டில்
நினைப்பிலா வலி நெஞ்சுடை பூமி பாரங்கள்-என்று
அவைஷ்ணவர்கள் ஹேயதையைச் சொல்லிற்று
இதில்
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஏற்றம் சொல்லுகிறது –

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே – 4-4-6-

பதவுரை

பூதம் ஐந்தொடு–பஞ்ச பூதமாகிய சரீரத்தினாலும்
ஐந்து வேள்வி–பஞ்ச மஹா யஜ்ஞங்களினாலும்
ஐந்து புலன்கள்–(சப்தம் முதலிய) ஐந்து விஷயங்களினாலும்
(ஐந்து) பொறிகளால்
பஞ்சேந்திரியங்களினாலும் (ஸம்பவிக்கக்கூடிய)
ஏதம் ஒன்றும் இலாத–குற்றமொன்றுமில்லாதவர்களும்
வண் கையினார்கள்–உதாரணமான கைகளை யுடையவர்கள்
வாழ்–வாழ்விடமான
திருக்கோட்டியூர்–திருக்கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்)
நாதனை–(எமக்கு) ஸ்வாமியும்
நரசிங்கனை–நரஸிம்ஹ ஸ்வரூபியுமான எம்பெருமானை
நவின்று–அநுஸந்தித்து
ஏத்துவார்கள்–துதிக்குமவரான பாகவதர்கள்
உழக்கிய பாதத் துளி–திருவடிகளினால் மிதித்தருளின தூளினுடைய
படுதலால்–ஸம்பந்தத்தினால்
இ உலகம்–இந்த லோகமானது
பாக்கியம் செய்தது–பாக்யம் பண்ணினதாகக் கொள்ளப்படும்–

பூதம் ஐந்தோடு
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கை
தத்வம் -இருபத்து நாலு
இதில் ஏழு பிரதானம்
இந்த ஏழிலும் ஐந்து பிரதானம்
இது எல்லா மதங்களுக்கும் ஒக்கும்

வேள்வி ஐந்து
பஞ்ச மஹா யஜ்ஞங்கள்

புலன்கள் ஐந்து
இந்திரியங்கள் ஐந்து

பொறிகள் ஐந்து
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி

ஏதம் ஒன்றும் இலாத
இவற்றோடு கூடி இருக்கச் செய்தே
தோஷம் இன்றிக்கே இருக்கை

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் ஏதம் ஒன்றும் இலாத
ஸத்வ ரஜஸ் தமஸூக்களோடே கலசி இறே ப்ரக்ருதி இருப்பது
ஸத்வத்துக்கு நிவ்ருத்தி குணம்
தமஸ்ஸூக்கு ப்ரவ்ருத்தி குணம்

முன்பு விஹிதத்தில் நிவ்ருத்தியும் நிஷித்ததில் ப்ரவ்ருத்தியுமாய்ப் போருமாகை இறே
அக்ருத்ய கரணத்திலும் க்ருத்ய அகரணம் க்ரூரம் ஆகிறது –
அக்ருத்ய கரணத்துக்கு
தேச தோஷத்தாலும் தேஹ தோஷத்தாலும் கூடும் என்று அனுக்ரஹத்துக்கு விஷயம் உண்டு
கீழ் தனக்கு அடைத்தது செய்யாத போது நிக்ரஹம் கனத்து இருக்கும்

நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்று
அநாத்ம குண பூர்த்தியையும்
ஆத்ம குண கந்தம் இல்லாமையையும் அருளிச் செய்தார் இறே

சத்வம் விஞ்சின போது மற்றை இரண்டும் சத்வத்தின் வழியே வரும்
அப்போது நிவ்ருத்தி நிஷித்ததிலும் பிரவ்ருத்தி விஹிதத்திலும் கிடக்கும்
அதாவது
தனக்கும் பிறர்க்குமாய்ப் போந்தவன் இரண்டுக்கும் பிராயச்சித்தம்
பகவத் பாகவத விஷயங்களிலே அந்வயிக்கும்

தனக்கு என்று இருக்கை -ஏதம்
ஈஸ்வரனுக்கு என்கை ஏதம் இன்றிக்கே இருக்கை
ஏதம் ஒன்றுமே இருக்கையாவது -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு என்று இருக்கை

வேதம் ஐந்து ஏதம் ஒன்றும் இல்லாத
ஸ்வர்க்காதி சாதனமாக அனுஷ்டிக்கை -ஏதம்
மோக்ஷ சாதனமாக அனுஷ்டிக்கை -ஏதம் இன்றிக்கே இருக்கை
பகவத் பாகவத ப்ரீதி என்று அனுஷ்டிக்கை -ஏதம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை யாவது –

புலன்கள் ஐந்து ஏதம் ஒன்றும் இலாத
இந்திரியங்களை இதர விஷயங்களில் மூட்டுகை ஏதம்
பகவத் விஷயத்தில் மூட்டுகை ஏதம் இன்றிக்கே இருக்கை
பாகவத விஷயத்தில் மூட்டுகை -ஏதம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை யாவது

பொறிகள் ஐந்தும் ஏதம் ஒன்றும் இலாத
ஸப்த ஸ்பர்ச ரூப ரஸங்களைத் தனக்கு என்று இருக்கை ஏதம்
இவற்றை பகவத் விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் இன்றிக்கே இருக்கை
பாகவத விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை —

வண் கையினார்கள் வாழ்
வண்மை -ஒவ்தார்யம் –
அதாவது
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றை வாங்கி
அப்பதார்த்தங்கள் நசியாத படி வாங்குகையும்
இவற்றை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குக் கொடுக்கையும்

ஈஸ்வரனையும் உள்படப் பறித்து இறே பாகவத கைங்கர்யம் பண்ணிற்று திரு மங்கை ஆழ்வார்
அதற்கு உபாயமாக இறே ஈஸ்வரன் திரு மந்த்ரத்தை உபதேசித்தது

துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றைத் தான் துற்றியது எற்றனவும் -என்று
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இடாதே தான் உண்டான் என்று இறே ஆழ்வார் கர்ஹித்தது

பொதுவாக யுண்பதனைப் புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு என்று
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானையும் உட்பட கர்ஹித்தார்கள் இறே பெண்கள்

அவ்வளவு அன்றிக்கே
சாதி கோட்டியுள் கொள்ளப் படுவார் என்கிறபடியே
தங்கள் திரளில் கூட்டாதே பாஞ்ச ஜன்யத்தை பத்ம நாபனோடே இறே கூட்டி விட்டது

அவதாரத்தில் உண்ட இழவு தீர இறே
அர்ச்சாவதாரத்தில் அமுது செய்தால் போலே குறையாமல் கொடுக்கிறது

வாழ்
கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் –

திருக் கோட்டியூர் நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
ஸ்ரீ வைகுண்ட நாதன்
ஸ்ரீ திருப்பாற் கடல் நாதன் -என்பதிலும்
திருக் கோட்டியூர் நாதன் -என்கை இறே ஏற்றம்

நாதனை -என்றது
சொக்க நாராயணரை

நரசிங்கனை-என்றது
தெற்கு ஆழ்வாரை

மார்வு இரண்டு கூறாகக் கீறிய கோளரியை வேறாக ஏத்தி இருப்பவர்கள் இறே இவர்கள்

ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானைத் திரு நாமம் சொல்ல ஓட்டேன் என்ற வாய் தகர்த்து இறே மார்பு இடந்தது –

பாத தூளி படுதலால்
அனுபவ ஜெனித ப்ரீதிக்குப் போக்கு விட்டு ஸஞ்சரிக்கிற
தூளி படுதலால்

இவ்வுலகம்
நினைப்பிலா வலி நெஞ்சுடைப் பூமிப் பாரங்கள் வர்த்திக்கிற லோகம்

பாக்கியம் செய்ததே
திரு உலகு அளந்த திருவடிகளில் தூளி பட்டது அன்று பாக்யம்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாத தூளி பட்டதே பாக்யம்
கல்லைப் பெண்ணாக்கி
சரீரத்தைப் பூண் கட்டிற்று அத்தனை இறே அவன் திருவடிகள்
கடல் வண்ணன் பூதங்கள் ஸ்ரீ பாத தூளி பட்டதால்
போயிற்று வல்லுயிர்ச் சாபம் -என்று ஸ்வரூபத்தைப் பற்றி வரும் விரோதிகளும் போம் இறே
பேர்த்த கர நான்குடையான் திருவடி படுவதிலும்
பேரோதும் தீர்த்த கரர் ஸ்ரீ பாதம் படுகை இறே பாக்யம் –

———–

குருந்தம் ஓன்று ஒசித்தானோடும் சென்று கூடி யாடி விழா செய்து
திருந்து நான் மறையோர் இராப் பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனை கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ – 4-4-7-

பதவுரை

திருந்து–(எம்பெருமான் ஸ்வரூபங்களைப் பிழையறக் கூறுகையாகிற) திருத்தத்தை யுடைய
நால் மறையோர்–நான்கு வேதங்களையுமோதின ஸ்ரீவைஷ்ணவர்கள்
ஒன்று குருத்தம்–ஒரு குருத்த மரத்தை
ஒசித்தானோடும்–முறித்தருளின கண்ண பிரானை
சென்று கூடி–சென்று சேர்ந்து
ஆடி–(அவனுடைய குணங்களிலே) அவகாஹித்து
விழாச் செய்து–(விக்ரஹ ஸேவையாகிற) உத்ஸவத்தை அநுபவித்துக் கொண்டு
இரா பகல்–இரவும் பகலும்
ஏந்தி–மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
வாழ்–வாழுமிடமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்,)
கருந்தட–கறுத்துப் பெருத்த
முகில்–மேகம் போன்ற
வண்ணனை–நிறத்தை யுடையனுமான எம்பெருமானைக் குறித்து
கடைக் கொண்டு–நைச்சியாநுஸந்தானத்துடன்
கை தொழும்–அஞ்ஜலி பண்ணா நின்றுள்ள
பக்தர்கள்–பக்தியை யுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள்
இருந்த–எழுந்தருளி யிருக்குமிடமான
ஊரில்–ஊரிலே
இருக்கும்–நித்ய வாஸம் பண்ணுகிற
மானிடர்–மநுஷ்யர்கள்
ஏதலங்கள்–எப்படிப்பட்ட பாவங்களை
செய்தார் கொல் ஓ-அனுஷ்டித்தார்களோ! (அறியேன்.)–

குருந்தம் ஓன்று
அத்விதீயமான குருந்தம் பூ முட்டாக்கு இட்டால் போலே இருக்கையாலே கிருஷ்ணன் விரும்பி இருக்கும்
பூம் குருந்து ஏறி இராதே -என்னக் கடவது இறே
இதிலே கிருஷ்ணன் வந்து ஏறக் கூடும் -பின்னை நலிகிறோம் -என்று இறே அஸூரன் பிரவேசித்தது

ஒசித்தானோடும் சென்று கூடி யாடி விழா செய்து
ஓசித்தான் -விரோதி நிரஸனம்
விரோதி நிரசன சீலனை சென்று கிட்டி –
இருவர் நினைவும் ஒன்றாய்
அவன் குணங்களில் அவகாஹித்து
அநந்தரம்
அவர்களுக்கு விக்ரஹ அனுபவத்தைக் கொடுக்கும்
அங்கும் ஸதா பஸ்யந்தி இறே

திருந்து நான் மறையோர்
வேதத்துக்குத் திருத்தமாவது
குண விக்ரஹ அனுபவத்துக்கு ஏகாந்தமான பிரதேசங்களில் சொல்லுகிறபடியே அனுஷ்டிக்கை

இராப் பகல் ஏத்தி
வேறே அந்ய பரதை இல்லாமையாலே இது மாறாதே நடக்கும்

வாழ்
அநந்ய ப்ரயோஜனர் ஆகையாலே
இது தானே பலமாய் இருக்கும்

திருக் கோட்டியூர்
அவர்கள் வர்த்திக்கிற தேசம்

கரும் தட முகில் வண்ணனை
கருத்துக் பெருத்து இருக்கிற
நீல முகில் போலே இருக்கிற திருமேனியை யுடையவனை

கடைக் கொண்டு கை தொழும்
1-தங்கள் நைச்யத்தையே முன்னிட்டுத் தொழுமவர்கள்
அன்றிக்கே
2-உத்க்ருஷ்டன் பக்கல் அபக்ருஷ்டன் செய்யும் தொழில் என்னவுமாம்
அன்றிக்கே
3-கடை என்று முடிவாய்
மேல் -விற்கவும் பெறுவார்கள் -என்கையாலும்
ததீய சேஷத்வமே தங்களுக்கு ஸ்வரூபம் என்று கண்டவர்களுக்கு உகப்பாக
பகவத் விஷயத்தைத் தொழுமவர் -என்னவுமாம்

பத்தர்கள்
வைதமாக அன்றியிலே
ராகமாகத் தொழுமவர்கள்

இருந்த ஊரில் இருக்கும் மானிடர்
மானிடர் என்கையாலே
மனுஷ்ய ஜன்மத்துக்குப் பிரயோஜனம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருந்த ஊரிலே இருக்கை
என்னும் இடத்தைக் காட்டுகிறது –
அங்குப் போகிறதும் -வானவர் நாடு -என்று இறே

சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் என்கையாலே
அவர்களில் இவர்களுக்கு வாசி உண்டானால் போலே
தேசத்துக்கும் அவதாரத்துக்கும் வாசி உண்டு

இருந்த ஊரில் இருக்கும் மானிடர் -என்கையாலே
அவர்கள் அல்லர் உத்தேஸ்யர்
அவர்கள் இருந்த தேசம்
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் –
(சாண்டிலியை -கருடன் -சிறகு இழந்த வ்ருத்தாந்தம் -பாகவதர்கள் இருக்கும் இடமே ஸ்ரீ வைகுண்டம் )

ஆழ்வானுக்கு ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருவடிச் சார்ந்தார் என்று விண்ணப்பம் செய்ய
பாகவத் கைங்கர்யமே யாத்ரையாகப் போந்தவரை அப்படிச் சொல்லலாகாது
திரு நாட்டுக்குப் போனார் என்று சொல்ல வேணும் காணும் என்று அருளிச் செய்தார்

ஸ்ரீ வைஷ்ணவர்களை நீராட -என்றும்
ஆச்சார்யனை -திரு மஞ்சனம் பண்ண -என்றும் சொல்லுகிறது
உத்தேஸ்ய தார தம்யத்தை இட்டு இறே

வடுக நம்பி திரு நாட்டுக்குப் போனார் என்று
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் அருளாள பெருமான் எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்ய
சிறிது போது மோஹித்துக் கிடந்தது
உணர்ந்து அருளி
அவரைப் பார்த்து -திரு நாட்டுக்குப் போந்தார் என்னலாகாது காணும்
உடையவர் ஸ்ரீ பாத்துக்குப் போந்தார் என்ன வேணும் காணும் என்று அருளிச் செய்தார்

(பகவத் திருவடி சேர்வது பிரதம நிஷ்டருக்கு –
திரு நாட்டுக்குப் போவது பாகவத நிஷ்டருக்கு –
உடையவர் திருவடி சார்ந்தார் இதுக்கும் மேற்படி
மூன்று நிலைகள் உண்டே )

ஸ்ரீ சபரியும் பெருமாள் திருவடிகளில் பிரார்த்தித்ததும் இதுவே இறே
(தமது பர்த்தா -மதங்கர் -ஆச்சார்யர்- திருவடி சேருவதைத் தானே பிரார்த்தித்தாள் )

ஆழ்வான் ஸம்ஸாரத்தில் ஆர்த்தியின் கனத்தாலே கலங்கிப் பெருமாள் திருவடிகளிலே
அடியேனைத் திரு நாடு ஏறப் போம்படி திரு உள்ளமாக வேணும் -என்று விண்ணப்பம் செய்ய
பெருமாளும் திரு உள்ளமாய்
பின்பு ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் திரு மாளிகையிலே புற வீடு விட்டு இருக்கிற அளவிலே

இத்தை உடையவர் கேட்டு அருளி
பஞ்சுக் கொட்டன் திரு வாசல் அளவாக எழுந்து அருளி -பெருமாளுக்கு விண்ணப்பம் செய்தால் செய்து அருளுவர்
நாம் அடியாகப் பெருமாள் இரண்டு வார்த்தை அருளிச் செய்தவராக ஒண்ணாது என்று
மீண்டும் ஆழ்வான் இருக்கும் இடத்தே எழுந்து அருளி
ஏன் ஆழ்வான் என்ன
அடியேன் மறந்தேன் -என்று விண்ணப்பம் செய்தான்
மறைக்கைக்கு அடி ஸம்ஸாரத்தில் ஆர்த்தியின் கனம்

எத் தவங்கள் செய்தார் கொலோ
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நாடாவுதீர் -இங்கோர்
பெண் பால் பொருளோ வெனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ -என்கிறபடியே
அவன் காவலுக்கு உள்ளே கிடக்கிறது தானே இறே தவமாவது –

நீர் நிலை நின்ற தவம் இது கொல் -என்று
பகவத் விஷயத்தைக் கிட்டுகைக்கு தவம் ஓன்று
பாகவத விஷயத்தை கிட்டுகைக்கு அநேகம் தபஸ்ஸூ வேணும் இறே

கொலோ
பகவத் விஷயத்தை கிட்டுகைக்குத் தபஸ் அறிவர்
பாகவத விஷயத்தைக் கிட்டும் தபஸ்ஸூக்கள் இறே இவர்க்கு அறியப் போகாது இருப்பது –

———–

ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருந்த ஊரில் பிரதிகூலர் மேலிடார்கள் என்கிறது இப் பாட்டில்

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4- 4-8 –

பதவுரை

நளிர்ந்த சீலன்–குளிர்ந்த ஸ்வபாவத்தை யுடையவரும்
நயாசலன்–நீதிநெறி தவறாதவரும்-நய -நீதி /அசலன் -தவறாமல் மலை போல் நிலை நின்று –
அபிமான துங்கனை–இடைவிடாது எம்பெருமானை அநுபவிக்கையாலுண்டான) அஹங்காரத்தால் உயர்ந்தவரும்
நாள் தொறும் தெளிந்த செல்வனை–நாடோறும் தெளிந்து வரா நின்றுள்ள கைங்கர்ய ஸம்பத்தை யுடையவருமான செல்வ நம்பியை
சேவகம் கொண்ட–அடிமை கொண்டவனாய்
சேவகம் செய்த இல்லாமல் சேவகம் கொண்ட -கைங்கர்யம் கொள்ள வேண்டுமே அவன்
செம் கண் மால்–செந் தாமரைபோன்ற கண்களையுடையவனாய் (அடியார் பக்கல்) மோஹமுடையனாய்
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில்
குளிர்ந்து உறைகின்ற–திருவுள்ளமுகந்து எழும் தருளி யிருப்பவனான எம்பெருமானுடைய
கோவிந்தன் குணம் படுவார்–கல்யாண குணங்களைப் பாடுமவரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
உள்ள நாட்டினுள் விளைந்த தானியமும்–எழுந்தருளி யிருக்கிற நாட்டிலே விளைந்த தாந்யத்தையும்
இராக்கதர்–ராக்ஷஸர்கள்
மீது கொள்ள கிலார்கள்–அபஹரிக்க மாட்டார்கள்–

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும் தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்த சீலத்தை யுடைய செல்வ நம்பி
ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும்

வாள் கொள் நீள் மழு வாளி யுன்னாகத்தான் -என்றும்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள் -என்றும்
துர்மானியான ருத்ரனும்
சாவாமைக்கு மருந்து தின்றும்
தேவ ஜாதியும் இறே இவனுக்கு அடிமை செய்வது

அக்கும் புலியினதளும் யுடையார் அவர் ஒருவர் பக்கம் நின்ற பண்பர் –என்றும்
தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன் நாணும் தோன்று மால் -என்றும்
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து தோற்றுகையாலே

ஏறாளும் இறையோனும் திசை மகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் -என்று
இவன் உடம்பு தேவதாந்தரமும் திருவிடையாட்டமுமாய் இறே இருப்பது
(தேவ -தானம் தேவதாந்த்ர சொத்து )
இப்படி இன்றியே
காணிலும் உருப்பொலார் செவிக்கு இனாத கீர்தியார் -என்று இறே இவன் இருப்பது

நய வென்றது
நீதியை
அங்கும் நீதி வானவர் -என்னக் கடவது இறே

அசலன் –
நீதிக்கு குலைதலிலாதவன்
சேஷ சேஷி பாவ சம்பந்தம்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் -என்கிற படி அடைவு பட்டு இறே அங்கு இருப்பது

இங்கும் அவை அடைவே -யானே என் தனதே -என்று அடைவு கெட்டு இருக்கும்
உக்ரசேனனை முடியை சூட்டி -ஆசனத்தில் உயர வைத்து –
தான் திருக் கையாலே வெண் சாமரம் இடும் இடம் இறே இவ்விடம்
விண்ணுளார் பெருமானை அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் -என்று
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவரும் அதிசங்கை பண்ண வேண்டும் இடம் இறே இது
இந்நிலத்திலே குறையாது இருக்கை
பாபம் மாண்டால் பண்ணும் கிருபை இறே பாபம் வந்தவாறே குலைவது
பாபம் கிடக்க பண்ணும் கிருபை ஆகையாலே குலையாது –

அபிமான துங்கன் –
என்னில் மிகு புகழார் யாவரே –
மாறுளதோ இம் மண்ணின் மிசையே –
யாவர் நிகர் அகல் வானத்தே –
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் -என்று
பகவத் அனுபவத்தால் வந்த செருக்கும் கர்வமும் இறே அபிமாநிக்கிறது

புவியும் இரு விசும்பும் நின் அகத்த -இது அன்றோ உன் படி –
நீயும்
சேதன அசேதனங்களை உன் வயிற்றில் வைத்த நீயும்
என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய் -என்று
தத்வ த்ரயத்தையும் -அணு பரிமாணனான என்னுடைய நெஞ்சுக்குள்ளே அடக்கின
நானோ நீயோ பெரியார் என்னும் இடத்தை –
உனக்கு பஷபாதியுமாய் -கை யாளுமாய் -கைப்பட்டவனோடே விசாரி
சிறியேனுடை சிந்தையுள் மூவுலகும் தன் நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தார் -என்னக் கடவது இறே

நளிர்ந்த சீலம் -என்று குணம்
நயா சலன் -என்று அனுஷ்டானம்
அபிமான துங்கன் -என்று இவற்றால்  வந்த செருக்குக்கு அடி ஞான கார்யம் என்கிறது
(அந்நிய சேஷம் கலசாமல் -ஞான பிரேம கார்யம் உடையவர் )

நாள் தோறும் தெளிந்த -என்று
இச் செருக்கோடே விபரீத செருக்கு ஒரு நாளும் கலசாது என்கிறது
கலக்கமிலா நல் தவ முனிவர் -என்று கலங்காது இருக்கை தான் அரிதாய் இருப்பது
தெளிவுற்று வீவின்றி நின்றவர் -என்கிற படியே இத் தெளிவு தான் குலையாது இருக்கை தன் ஏற்றமாய் இருப்பது –
அன்றிக்கே
நாள் தோறும் தெளிந்து வாரா நிற்கும் அவர்க்கு

செல்வனை –
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்றும்
அந்தரிஷா கதஸ் ஸ்ரீ மான் -என்றும்
சது நாகவரஸ் ஸ்ரீ மான் -என்றும் சொல்லுகிற மூன்று ஸ்ரீ யும் இவர்க்கும் உண்டே
(செல்வச் சிறுமீர்காள் -இதே வியாக்யானம் பெரிய வாச்சான் பிள்ளை )

லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்று பெருமாள் ராஜ்யத்தை இழந்தார்- இவர் கைங்கர்ய சாம்ராஜ்யத்தை பெற்றார் –
சுற்றம் எல்லாம் பின் தொடர -எல்லா அடிமையும் பெற்றார் –
சம்பன்ன -என்கையாலே பாகவத கைங்கர்ய பர்யந்தம் ஆகை இறே பூர்த்தி –

(காட்டில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்தவர் பாகவத கைங்கர்யம் செய்தது எங்கே என்னில்
சுற்றம் எல்லாம் பின் தொடர -அனைவரும் செய்த கைங்கர்யம் செய்ததால்
அயோத்யா ஜனங்கள் -பாகவதர் திரு முகம் மலர்ந்தனவே
ஆகவே பெருமாள் விட்டுப்போன பாகவத கைங்கர்யமும் ஸித்தித்து )

பகவத் கைங்கர்யம் செய்தது தம்முடைய சத்தை பெருகைகாக –
அந்த சத்தையை அழிய மாறி இறே பாகவத கைங்கர்யம் பண்ணிற்று

(சக்ரவர்த்தி திரு மகன் முக உல்லாசம் அன்றோ இவருக்கு உத்தேச்யம் என்னில்
கங்கா அவதாரணாத் பூர்வம் செய்தது
அப்புறம் அஹம் ஏகோ -கௌசல்யா ரக்ஷணம் செய்ய போகச் சொல்லியும் –
ஜனங்கள் முக மலர்த்தி உத்தேச்யமாக பின்னாலேயே போனான்
சத்ருக்னனை அன்றோ பாகவத நிஷ்டை என்பர் என்னில்
இவர் பெருமாள் முக மலர்த்தி த்வாரா பாகவத கைங்கர்யம்
அவரோ நேராக பாகவத கைங்கர்யம் )

அந்தரிஷா கதஸ் ஸ்ரீ மான் -என்று –
பிராட்டியையும் பெருமாளையும் கண்ட அன்று (காணாமலேயே ) இறே இவர் படை வீடு விட்டு புறப்பட்டது
ஆகாசம் இறே இவருக்கு உள்ளது
இளைய பெருமாளும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் படை வீட்டை விட்ட பின்பு அன்றே
ஸ்ரீ மான்களாய் ஆய்த்து –
பிராட்டி இலங்கைக்குள் எழுந்து அருளி இருக்கச் செய்தேயும்
சஹ வாச தோஷத்தாலே பிராட்டி கடாஷம் பெற்றது இல்லை –
இலங்கையை விட்டு கிளம்பின பின்பு இறே ஸ்ரீமான் -என்றது
(மானஸ கடாக்ஷம் மாத்திரம் -ஸ்ரீ வசன பூஷணத்தில் கடாக்ஷம் பெற்றான் என்றது கொள்ள வேண்டும் )

சது நாகவரஸ் ஸ்ரீ மான் -என்று ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஸுவ ரஷணத்தில்
ஸ்வ வியாபாரத்தை பொகட்ட பின்பு இறே ஸ்ரீ மான் ஆய்த்து
முதலை அல்ல விரோதி -அஹங்காரம்

இவற்றால் பலித்தது –
ப்ராப்யத்தை லபித்த படியும்
ப்ராப்தி விரோதி நிவர்த்தமான படியும் –
பிராபக விரோதி நிவர்தனமான படியும் -சொல்லிற்று

சேவகம் கொண்ட
இவன் செய்தான் என்றால் இவனுக்கு உகப்பாம்
கொண்ட -என்கையால்-ஈஸ்வரன் உகப்பன்-என்கிறது
சேவகம் கொண்ட ஸ்வரூபத்தை காட்டியோ என்னில் -அன்று –
கண் அழகை காட்டி -என்கிறது

செங்கண் மால் –
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண் மாலே -என்னக் கடவது இறே

திருக் கோட்டியூர் குளிர்ந்து உறைகின்ற
பரம பதத்திலே சம்சாரிகள் இழவிலே திரு உள்ளம் குடி போய் உள்ளுக் கொதித்து இருக்கும் –
அவ்விருப்பு நித்யமானாலும் -இருந்தாலும் முள் மேல் இருப்பு -என்னக் கடவது இறே
ப்ரீதியோடே பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு –என்று காட்டுத் தீயில் அகப்பட்டவன்
தடாகத்தில் வந்து விழுமா போலே இறே வந்து விழுந்தது –
வெள்ளத்தின் உள்ளானும் வேம்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் -என்னக் கடவது இறே
பள்ளி கொள்ளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -என்னக் கடவது இறே

கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் –
செங்கண் மால் -என்று வாத்சல்யம்
சேவகம் கொண்ட -என்று சௌசீல்யம்
கோவிந்தன் -என்று சௌலப்யம்
அவதாரம் பரத்வம் -என்னும் படி இறே அர்ச்சாவதார சௌலப்யம்

இதுக்கு ஏகாந்தமான குணங்களை சிநேகத்தோடு சொல்லுவார் உள்ள நாட்டினுள்
அவர்கள் அளவல்ல
அவர்கள் சம்பந்தம் உடையவர் அளவல்ல
அவர்கள் இருந்த ஊர் அளவல்ல –
அவ் வூரோடே சேர்ந்த நாட்டினுள் விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே –
தனக்கும் தம் பந்துக்களுக்கும் என்னல் இறே அவர்கள் கொள்ளுவது
பகவத் பாகவத விஷயங்களுக்கு என்றால் அவர்களுக்கு கொள்ள சக்தி இல்லை
புனத்தினைக் கிள்ளி புதுவவி காட்டி வுன்பொன் அடி வாழ்க -என்று இறே இவர்கள் இருப்பது –

அபிமான துங்கன் -என்று இவற்றால் வந்த செருக்குக்கு அடி ஞான கார்யம் என்கிறது

———-

இப் பாட்டில்
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கண்டு பகவத் அனுபவம் பண்ணப் பெறாத இழவு தீரும் என்கிறார்

கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4- 9-

பதவுரை

கொம்பின் ஆர்–கிளைகளாலே நெருங்கின
பொழில் வாய்–சோலைகளிலே
குயில் இனம்–குயில்களின் திரள்
கோவிந்தன்–கண்ண பிரானுடைய,
குணம்–சீர்மைகளை
பாடு–பாடா நிற்கப் பெற்றதும்,
சீர்–சிறந்த
செம் பொன் ஆர்–செம் பொன்னாலே சமைந்த
மதிள்–மதிள்களாலே
சூழ்–சூழப் பட்டதும்
செழு–செழுமை தங்கிய
கழனி உடை–கழனிகளை யுடையதுமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்).
நம்பனை–(ரக்ஷகன் என்று) விச்வஸிக்கக் கூடியவனும்
நரசிங்கனை–நரஹிம்ஹ ரூபியுமான ஸர்வேச்வரனை
நவின்று–அநுஸந்தித்து
ஏத்துவரர்களை–துதிக்கும் பாகவதர்களை
கண்டக்கால்–(யான்) ஸேவிக்கப் பெறுவேனாகில்
இவர் இவர்-“இந்த இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள்
எம்பிரான் தன்–எம்பெருமானுடைய
சின்னங்கள்–அடையாளமாயிருப்பவர்கள்”
என்று–என்று அநுஸந்தித்து
ஆசைகள்–நெடுநாளாய் பிறந்துள்ள ஆசைகளை
தீர்வன்–தலைக் கட்டிக் கொள்வேன்–

கொம்பினார் -இத்யாதி –
பனைகளால் நெருங்கின சோலை இடத்து குயில்கள்
குயில் ஆலும் வளர் பொழில் சூழ்

கோவிந்தன் குணம் பாடு-
குயில் இனங்கள் ஆனவை –
தாழ்ந்த குலத்திலே அவதரித்து தாழ்ந்த கார்யம் செய்வதே -என்று அவனுடைய
சௌலப்யத்தை அனுசந்தித்து -ப்ரீதிக்கு போக்கு விட்டு பாடா நிற்கும்
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லுவது –
சிலர் பயிற்று வித்தால் இறே –
அங்கன் இன்றிகே இவை தானே பாடா நிற்கும் –

நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன் -என்னும்படி
இவை ஒழிந்த நாமாந்தரங்கள் சொல்லுவதில் இங்கு நின்று போக அமையும் என்னும் படி இறே இவற்றின் படி —

இன் அடிசிலொடு பாலமுது ஊட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னோடு தோழைமை கொள்ளுவன் குயிலே – என்று கைக்கூலி
பெற்றால் இறே கூவுவது –
இவை அப்படி அன்று –

சீர் செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர் —
ஸ்லாக்கியமாய் சிவந்த பொன்னால் அமைந்த மதிள்களால் சூழப் பட்டு -அழகிய
கழனிகளை உடைத்தான திருக் கோட்டியூர்

உள்ளு புக்கு அனுபவிக்க வேண்டாதபடி
கொம்புகளாலே ஆர்ந்த சோலையும்
குயில்கள் பாடுகையும்
சிவந்த பொன்னால் சமைந்த திரு மதிள்களும்
அழகிய கழனி கட்டளையும்
கண்டு அனுபவிக்க வேண்டும்படி நிரதிசய போக்யமாய் இருந்துள்ள தேசம்

நம்பனை
விச்வச நீயனை
நரசிங்கனை
விச்வாசத்துக்கு அடி இந்த அபதானம்
அடுத்ததோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவர் உமர் -என்னக் கடவது இறே
ஸ்ரீ பிரகலாதனுக்கு உதவினது சம்சாரிகள் விச்வசிக்கைக்கு உடல்
ஆழ்வாருக்கு உதவின இது இறே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு விச்வச நீயம்
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் -என்று
ஸ்ரீ பிரகலாத் ஆழ்வானுக்கு (இருந்த விசுவாசமும் )ஹிரண்யனையும் விச்வசிக்கைக்கு இறே தோன்றிற்று

எம்பார் அருளி செய்யும் வார்த்தை –
ஈஸ்வரனுக்கு மூன்று ஆபத்து வந்து கழிந்தது -என்று அருளி செய்வர் –
அதாவது
திரௌபதிக்கும்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கும் -ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கும்
உதவிற்றிலன் ஆகில் -சம்சாரிகள் ஈச்வரத்வம் இல்லை என்று எழுத்து இடுவர்கள் இறே

ஆழ்வாரும் -எங்கனம் தேறுவர் தமர் -என்று தம்முடைய இழவிலும்
ஸ்ரீ வைஷ்ணவர்களின் அத்யாவசாயம் குலைகிறதோ -என்று இறே அஞ்சுகிறது –
பிழைக்கின்றது அருள் -என்று இறே அஞ்சுகிறது
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவன்-என்று தம்முடைய இழவுக்கு நோகை அன்றியிலே
ஈஸ்வரன் அருளுக்கு இறே இவர் நோவுவது

நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் –
ப்ரீதிக்கு போக்கு விட்டு சொல்லுவார்களைக் கண்டக்கால் -கண் படைத்த பிரயோஜனம் பெறலாம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே -என்னக் கடவது இறே

எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று –
சின்னம் என்று -அவனுடைய அடையாளம் –
இவர்களைக் கண்டக்கால் -அவன் -சாத்விக சேவ்யன்-என்று தோன்றும் –
அவநீத ப்ர்த்யவர்க்கன் என்று இறே அவனை கழித்தது –
கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் -என்று அவற்றோடு வாராத போது -போகாய் -என்று இறே இவர் இருப்பது
என் ஆவி சேர் அம்மானுக்கு அந்தாம வாண் முடி சங்காழி நூலாரமுள-என்னக் கடவது -இறே

ஆசைகள் தீர்வேனே-
ஆசைகள் -என்று
காண -என்றும்-கிட்ட -என்றும் –கூட இருக்க என்றும் இறே இவர்களுடைய ஆசைகள்
அவனைக் காண வேணும் -என்கிற ஆசைகள் தீரும் உகந்து அருளின நிலங்களை அனுபவித்தால்
அடியார்கள் குழாங்ளை உடன் கூடுவது என்று கொலோ -என்கிற இழவுகள் தீரும் இங்கே
ஸ்ரீ வைஷ்ணவ திரள்களைக் கண்டால்
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் -என்கிறபடியே கண்டவாறே ஆசைகள் தீரும் இறே –
ஈஸ்வரனைக் கண்டால் ஆசைகள் தீராது
இவர்களைக் கண்டால் ஆசை தீரும்

கடிவார் தண் அம் துளி கண்ணன் -இத்யாதி
அடியேன் வாய் மடுத்து பருகி களித்தேனே -என்று பூர்ண அனுபவம் பண்ணின பின்பு இறே
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -என்று பிரார்த்தித்து
தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே -என்று ஆசைகள் தீர்ந்தது
பயிலும் சுடர் ஒளி யிலே இறே
திரு நாவாய் அவையுள் புகலாவதோர் நாள் -என்று அத் திரள் இறே உத்தேச்யம்
ஒண விழவில் ஒலி அதிர பேணிவரு வேம்கடவா என்னுள்ளம் புகுந்தாய் -என்று
அவன் வரும் இடத்தில் அவர்களும் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு கூட வந்து புகுவார்கள் –

—————

திருநாமம் சொல்லுவார்க்கு உண்டான பெருமை என்னால் அளவிடப் போகாது என்கிறார்

காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியர்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே – 4-4 -10-

பதவுரை

காசின் வாய்–ஒருகாசுக்கு
கரம்–ஒரு பிடி நெல்
விற்கிலும்–விற்கும்படியான துர்ப்பிக் ஷகாலத்திலும்
சோறு இட்டு–(அதிதிகளுக்கு) அன்னமளித்து
தேச வார்த்தை–புகழ்ச்சியான வார்த்தைகளை
படைக்கும்–ஸம்பாதித்துக் கொள்ளுமவரும்
வண் கையினார்கள்–உதாரமான கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்–வாழுமிடமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற)
கேசவா–கேசவனே!
புருடோத்தமா–புருஷோத்தமனே!
கரவாது–(தமக்குள்ள பொருள்களை ) மறைத்திடாது
மாறு இலி–பதில் உபகாரத்தை எதிர் பாராமல்
கிளர் சோதியாய்–மிகுந்த தேஜஸ்ஸை யுடையவனே!
குறளா–வாமந வேஷம் பூண்ட எம்பெருமானே!
என்று–என்றிப்படி
பேசுவார்–(எம்பெருமான் திரு நாமங்களைப்) பேசுமவரான
அடியார்கள்–பாகவதர்கள்
எந்தம்மை–அடியோங்களை
விற்கவும் பெறுவார்கள்–(தம் இஷ்டப்படி) விற்றுக் கொள்ளவும் அதிகாரம் பெறுவார்கள்–

காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது
கழஞ்சு பொன்னுக்கு ஒரு பிடி நெல் விற்கும்படியான காலத்திலும்
தம் தாமுக்கு உள்ள பண்டங்களை ஒளியாமல்
மிடியர் தெளிய வெளியாக்கி

மாற்றிலி சோறிட்டு
ப்ரத்யுபகாரம் நச்சாமல்
லுப்தருக்கும்
மிடியர்க்கும்
பசியர்க்கும்
சோறிட்டு
துர்மானிகளுக்கு இரா மடம் கற்பித்து

தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
ஓவ்தார்ய தேஜஸ்ஸூம் கிருபையும் முதலான குணங்களும் எல்லாம் இவர்களுக்கேயோ யுள்ளது -என்னும்
வார்த்தை மிக யுண்டாம்படி யானாலும்
தங்கள் முன்பு செய்த ஒவ்தார்யங்களை நினையாமல்
செய்ய வேண்டுமவையே நினைக்கும் உதார குண பாவமே தங்களுக்கு வாழ்வாக நினைத்து இருக்கும்
அவர்கள் வர்த்திக்கிற திருக்கோட்டியூர்

கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று பேசுவார் அடியர்கள் –
கேசவா என்கிற அநேக திரு நாமங்களை
பக்தி பாரவஸ்யத்தாலேயும்
ப்ராப்தியாலேயும்
பேசுவார் யாவர் சிலருடைய அடியார்கள்

(புருடோத்தமா
புரு பஹு ஸூ நோதி -ததாதீதி -புருஷ தேஷு உத்தம வ்யுத்பத்தி )

எம் தம்மை விற்கவும் பெறுவார்களே-
அவர்களுக்கு கிரய விக்ரய அர்ஹர் நாங்கள் என்னப் பெறுவார்கள்
இது இறே பரம புருஷார்த்தப் பிராப்தி –

இத்தால்
ஷாம ஷோப வியாதி மிடிகளிலும் பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யங்களே புருஷார்த்தமாக
லோபம் அறச் செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
நித்ய விபூதியில் உள்ளார் எல்லாரும் கொண்டாடும்படியான தேஜஸ்ஸை
இங்கே வர்த்திக்கச் செய்தே பெறுவர் என்கிறது –

—————

நிகமத்தில் இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார்-

சீத நீர் புடை சூழ் செழும் கனி வுடைத் திருக் கோட்டியூர்
ஆதியான் அடியாரையும் அடிமை இன்றித் திரிவாரையும்
கோதில் பட்டர் பிரான் குளிர் புதுவை மன் விட்டு சித்தன் சொல்
ஏதமின்றி உரைப்பவர் இருடீகேசனுக்கு ஆளரே – 4-4 -11-

பதவுரை

சீதம் நீர்–குளிர்ந்த நீராலே
படை சூழ்–சுற்றும் சூழப் பெற்ற
செழு–செழுமை தங்கிய
கழனி உடை–கழனிகளை யுடைய
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற)
ஆதியான்–எம்பெருமானுக்கு-ஜகத் காரண பூதனுக்கு –
அடியாரையும்–அடிமை செய்யும் பாகவதர்களையும்
அடிமை இன்றி–அடிமை செய்யாமல்
திரிவாரையும்–திரிகின்ற பாவிகளையும் குறித்து,
கோதில்–குற்றமற்றவரும்
பட்டர் பிரான்–அந்தணர்கட்குத் தலைவரும்
குளிர்–குளிர்ந்த
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
மண்–நிர்வாஹருமான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சொல்–அருளிச் செய்த இப் பாசுரங்களை
ஏதும் இன்றி–பழுதில்லாதபடி
உரைப்பவர்–ஓதுமவர்கள்
இருடீகேசனுக்கு–எம்பெருமானுக்கு
ஆளர்–ஆட் செய்யப் பெறுவர்-

சீத நீர் புடை சூழ் செழும் கனி வுடைத் திருக் கோட்டியூர்
அகாதமாய்
வாத ஆதப ப்ரவேசத்தால் வரும் உஷ்ணம் இன்றியிலே
சைத்யமேயாய் இருக்கிற ஆற்று நீராலே சூழப்பட்ட ஜல ஸம்ருத்தி மாறாத வயல்களை யுடைத்தான
திருக்கோட்டியூரிலே நித்ய சந்நிஹிதனாய்

ஆதியான் அடியாரையும் அடிமை இன்றித் திரிவாரையும்
ஜகத் காரண வஸ்துவான சொக்க நாராயணர்க்கு
அடிமை செய்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பெருமையையும்
அடிமை இன்றியிலே நிலை திரிந்து அநர்த்தப் படுவாருடைய அநர்த்த பரம்பரைகளையும் அறிவிப்பதாக

கோதில் பட்டர் பிரான் குளிர் புதுவை மன் விட்டு சித்தன் சொல்
மங்களா ஸாஸனம் ஒழிந்த பிரதிபத்திகள் எல்லாம் கோதாய்
அவை இல்லாத மங்களா ஸாஸனம் ஒன்றுமே ஸாரமாக பிரதிபத்தி பண்ணி இருப்பாராய்
ப்ராஹ்மண உத்தமர்க்கு உபகாரகராய்
ஸோஹம் -ஸ அஹம்பாவத்தால் (ஸஹ அஹம் -தத் த்வம் அஸி )வந்த உஷ்ணம் தட்டாமல்
தாஸோஹத்தால் வந்த குளிர்ச்சி மாறாத திரு மாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
அருளிச் செய்த இப் பத்துப் பாட்டையும்

ஏதமின்றி உரைப்பவர்
இவருடைய அபிப்ராயம் ஒழிந்தவை எல்லாம் பொல்லாங்காக நினைத்து
உரைக்க வல்லவர்கள்

இருடீகேசனுக்கு ஆளரே
இந்திரியங்களை
சங்கல்பத்தாலும்
கிருபாதி குணங்களாலும்
ஸுந்தர்யத்தாலும்
ஸ்வ கரண நியமன சக்தியாலும்
ஆகந்துக ப்ரேராதிகளாலும்
நியமிக்க வல்ல சொக்க நாராயணர்க்கு
ஞான பக்தி வைராக்யங்களோடே
மங்களா ஸாஸன பர்யந்தமாக
அடிமை செய்யும் ஆளாகப் பெறுவர் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: