ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-3–உருப்பிணி நங்கை தன்னை மீட்பான்–

பிரவேசம்
இதுவும் கீழ்ப் போந்த ப்ரீதி பின்னாட்டிச்
சில உபமான விசேஷங்களோடே
அவதாரங்களில் உண்டான வியாபாரங்களை கூட்டி
அனுசந்திக்கிறார் –

——————

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் துடர்ந்து ஓடிச் சென்ற
உருப்பனை ஒட்டிக் கொண்டு இட்டு இறைத்திட்ட வுறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்போடு பொன் வழங்கும் வியன் மால் இரும் சோலை யதே -4 -3-1 –

பதவுரை

உருப்பிணி நங்கை தன்னை–ருக்மிணிப் பிராட்டியை
மீட்பான்–கண்ணனுடைய தேரில் நின்றும்) திருப்பிக் கொண்டு போவதற்காக
தொடர்ந்து–(அத் தேரைப்) பின் தொடர்ந்து கொண்டு
ஓடிச் சென்ற–ஓடி வந்த
உருப்பனை–உருப்பன் என்றவனை
ஓட்டிக் கொண்டு இட்டு–ஓட்டிப் பிடித்துக் கொண்டு (தேர்த் தட்டிலே) இருத்தி
உறைத்திட்ட–(அவனைப்) பரிபவப் படுத்தின
உறைப்பன் மலை–மிடுக்கை உடைய கண்ண பிரான் (எழுந்தருளு யிருக்கிற)மலையாவது
கொன்றை–கொன்றை மரங்களானவை
பொருப்பு இடை நின்று–மலையிலே நின்று
முறி–முறிந்து
பொன்–பொன் மயமான
ஆழியும்–மோதிரங்கள் போன்ற பூ நரம்புகளையும்
காசும்–(பொற்காசு)போன்ற பூ விதழ்களையும்
கொண்டு–வாரிக் கொண்டு
விருப்பொடு வழங்கும்–ஆதரத்துடனே (பிறர்க்குக்)கொடுப்பவை போன்றிருக்கப் பெற்ற
வியன்–ஆச்சரியமான
மாலிருஞ்சோலை அதே–அந்தத் திருமாலிருஞ்சோலையே யாம்–

(கொன்றைப் பூ சிவனுக்கு -இங்கு இருப்பதால் சைவர்கள் உபயோகப்படுத்தாமல்
வைஷ்ணவர்களும் உபயோகப்படுத்தாமல் வீணாக இருக்குமே
அவர்கள் திரு மலை இல்லை
இவர்கள் மலர் இல்லை -)

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் துடர்ந்து ஓடிச் சென்ற உருப்பனை ஒட்டிக் கொண்டு இட்டு இறைத்திட்ட
ருக்மிணி நாய்ச்சியாரை கிருஷ்ணனாம் கொண்டு போவான்
சிஸூ பாலன் முதலிய ராஜாக்கள் அஸக்யம் என்று விட
ருக்மன் தானும் மீட்ப்பான் துடர்ந்து ஓடிச் செல்வான்
அவனை ஓட்டிப் பிடித்துக் கொண்டு தேர்த தட்டிலே இட்டுச் சிக்கென பரிபவித்திட்ட

வுறைப்பன் மலை
நாய்ச்சியாரை விடாமல் வ்யவசித்துக் கைக்கொண்டவன் மலை

பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு விருப்போடு பொன் வழங்கும்
கொன்றைகள் பொருப்பிடை நின்று
பொன் முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்போடு வழங்கா நிற்கும்

வியன் மால் இரும் சோலை யதே
வியன் -வேறுபாடு

இங்கு வழங்கினாலும்
கைக் கொள்ளுவார் இல்லை
கைக் கொள்ளத் தகுதியானவரை இங்கு வர ஒட்டார்கள்

இத்தால்
தம் தாமுக்கு அடைத்த இடங்களிலே நில்லா விட்டால்
ஸுவ் மநஸ்யம் ஸ்ப்ருஹ அவஹமானாலும் நிஷ் ப்ரயோஜனம் என்று தோற்றுகிறது
இவ்வளவே அன்றிக்கே
நின்ற இடத்துக்கு அவத்யா வஹம் என்றும் தோற்றுகிறது
இது தான் எல்லாம் வேண்டுகிறது அங்கே தான் தோன்ற நிற்கில் இறே

இது தன்னை யிறே நிஷ் ப்ரயோஜனத்துக்கு நிதர்சனமாக
ஆழ்வார் திரு மகளார் பெரியாழ்வார் வயிற்றில் பிறக்கையாலும்
பிறந்தேன் நான் ஆகையாலும்
அநந்யார்ஹை யானாலும்
இரண்டு தலையும் உபேக்ஷிக்கும் படி நின்று தூங்கா நின்றேன் என்றதும்

(கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-

தாமச புருஷர்கள் புகுரும் தேசம் அன்று –
சாத்விகர் இது கொண்டு கார்யம் கொள்ளார்கள்-
பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து பகவத் அர்ஹமான வஸ்து -இங்கனே இழந்து இருந்து கிலேசப் படுவதே –
கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4- என்றும்
மானிடர்வர்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -1-5-
அவனால் ஏற்றுக் கொள்ளப் படாமல் சம்சாரிகளுக்கும் பயன்படாமல் வீணாக போவதே –)

இரண்டு தலையும் என்றது
அழகரையும் ஆழ்வாரையும் இறே
ஜனித்வாஹம்-(ஸ்தோத்ர ரத்னம் -61)-இத்யாதி

(ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி ஜகதி க்யாதய ஸ ஸாம்
ஸூசீ நாம் யுக்தா நாம் குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்
நிஸர்க்காத் ஏவ த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்
அதோ அத பாபாத்மா ஸரணத! நிமஜ்ஜாமி தமஸி–61-

ஜநித்வா வம்ஸே மஹதி –சிறந்த குலத்திலே பிறந்து வைத்து
அதோ அத பாபாத்மா தமஸி–பாபிஷ்டனாய்க் கொண்டு இருள்மயமான மூதாவியிலே
அடி காண ஒண்ணாத கீழ் எல்லையில்
நிமஜ்ஜாமி–அழுந்திக் கொண்டே கிடக்கிறேன்)

அதே
உறைப்பன் மலை அதே -அதுவே –
திருமலை அதுவே (திருவாய் -2-10 )-என்பாரைப் போலே –

————–

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை
நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியை
செஞ்சுடர் நா அளைக்கும் திரு மால் இரும் சோலை யதே -4 -3-2 –

பதவுரை

கஞ்சனும்–கம்ஸனும்
காளியனும்–காளிய நாகமும்
களிறும்–(குவலயாபீடமென்ற) யானையும்
மருதும்–இரட்டை மருத மரங்களும்
எருதும்–(அரிஷ்டாஸுரனாகிற) ரிஷபமும்
வஞ்சனையின்–(தந்தாமுடைய) வஞ்சனைகளாலே
மடிய–(தாம் தாம்) முடியும்படி
வளர்ந்த–(திருவாய்ப்பாடியில்) வளர்ந்தருளினவனும்
மணி வண்ணன் மலை–நீல மணி போன்ற நிறமுடையவனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கும்) மலையாவது:
நஞ்சு–விஷத்தை
உமிழ்–உமிழா நின்றுள்ள
காகம்–(மலைப்) பாம்பானவை
நளிர்–குளிர்ந்த
மா மதியை–(மலைச் சிகரத்தின் மேல் தவழுகின்ற) பூர்ணச் சந்திரனை–(தமக்கு உணவாக நினைத்து)
எழுந்து–(படமெடுத்துக்) கிளர்ந்து
அணலி–கிட்டி
செம் சுடர்–சிவந்த தேஜஸ்ஸை யுடைய
நா–(தனது) நாக்கினால்
அளைக்கும்–(சந்திரனை) அளையா நிற்குமிடமான
திருமாலிருஞ்சோலை அதே–

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை
விபரீத வர்க்கம் எல்லாம் தம் தாம் வஞ்சனைகளாலே
தாம் தாம் முடியும்படியாகத் திரு வாய்ப்பாடியிலே வளர்ந்தவன்
நீல ரத்னம் போன்ற திருமேனியோடே நித்ய வாஸம் செய்கிற திருமலை

நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியை செஞ்சுடர் நா அளைக்கும் திரு மால் இரும் சோலை யதே
மதி தவழ் குடுமியிலே நஞ்சு நக்கிப் பசித்துக் கிடக்கிற மாசுணப் பாம்புகள்
அம் மலையில் தவழுகிற குளிர்ந்த பூர்ண சந்த்ரனை அபிபவ ரூபேண
ஜாதி யுசித ஜீவனம் அன்றோ இது -என்று அதன் மேலே மிகவும் கிளம்பிச் சிவந்து பெரிதான நாக்காலே
வளைப்பதாகத் தேடா நின்றுள்ள திருமாலிருஞ்சோலை மணி வண்ணன் மலை
(ராகு கேது சந்திரனை பீடிக்கும் ஆகவே ஜாதி உசிதம் என்கிறார் )

இத்தால்
பர அநர்த்த வாக்மிகள் (நஞ்சு உமிழ் நாகம்)
பாகவத சேஷத்வ பர்யந்தமான அந்த திவ்ய தேஸம் வாஸம் தன்னாலே
அத்தை விட்டு அந்த தேஸத்திலே வர்த்திக்கிறவர்களுடைய
குளிர்ந்து தெளிந்த ஞானத்தைக் (நளிர் மா மதியை) கண்டு
இழந்த நாளைக்கு அநு தபித்து
மிகவும் ஊர்த்த கதியை பிராபித்து (எழுந்து அணவி)
பக்தி பாரவஸ்ய ப்ரார்தனையாலே கிரஹிக்கத் தேடுவார்கள் (செஞ்சுடர் நா அளைக்கும் )என்னும்
அர்த்த விசேஷங்கள் தோற்றுகிறது

பொய்யே யாகிலும் திவ்ய தேசங்களிலே வர்த்தித்தால்
ஒரு நாள் அல்லா ஒரு நாள் ஆகிலும்
உயர்ந்தவர்கள் அறிவைத்
தாழ்ந்தவர்கள் ஆசைப்படுவார்கள் என்னும் இடம் தோற்றுகிறது

உகந்து அருளின நிலங்களிலே பொய்யே யாகிலும் புக்குப் புறப்பட்டிரீர்
அந்திம தசையிலே கார்யகரமாம் -என்று
பூர்வாச்சார்யசர்கள் அருளிச் செய்வார்கள் என்று ஆச்சாம் பிள்ளை அருளிச் செய்வர்
அதாவது
துஞ்சும் போதும் (திருவாய் -1-10-4 )
இவ் விடத்திலே கணியனூர் சிறிய ஆச்சான் வார்த்தையை நினைப்பது
(நானே விட்டு விலகினாலும் நெஞ்சே நீ ஈடுபாட்டை விடாதே
திவ்ய தேச வாசம் விடாமல் இருக்க வேண்டும் என்னும் வார்த்தை )

விஷ வாக்காவது
த்ரிவித ப்ராவண்ய நிபந்தமான வார்த்தைகள் இறே –
(த்ரிவித ப்ராவண்ய-பிராதி கூல்யர் தேவதாந்த்ர பரர் விஷயாந்தர பரர் )

—————

மன்னு  நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் போகி மால் இரும் சோலை அதுவே – 4-3- 3-

பதவுரை

மன்னு–(தன்னை அழிவற்றவனாக நினைத்துப்) பொருந்திக் கிடந்த
நரகன் தன்னை நரகாஸுரனை
சூழ் போகி–கொல்லும் வகைகளை ஆராய்ந்து
வளைத்து–(அவனைத் தப்பிப்போக முடியாதபடி)வளைத்துக் கொண்டு
எறிந்து–(திரு வாழியாலே) நிரஸித்து
(அவனால் சிறையிலடைத்து வைக்கப்பட்டிருந்த)
கன்னி மகளிர் தம்மை–(பதினாறாயிரத் தொரு நூறு) கன்னிகளையும்
கவர்ந்த–தான் கொள்ளை கொண்ட
கடல் வண்ணன்–கடல் போன்ற நிறமுடையவனான கண்ண பிரான் (எழுந்தருளியிருக்கிற)
மலை–மலையாவது:
புன்னை–புன்னை மரங்களும்
செந்தியொடு–சுர புன்னை மரங்களும்
புனம் வேங்கையும்–புனத்திலுண்டாகிற வேங்கை மரங்களும்
கோங்கும்–கோங்கு மரங்களும்
நின்று–(புஷ்பங்களால் நிறைந்த ஒழுங்கு பட) நின்று
பொன்னரி மலைகள் சூழ்-(திருமலைக்குப்) பொன்னரி மாலைகள் சுற்றினாற் போலே யிருக்கப் பெற்ற
பொழில்–சோலைகளை யுடைய
மாலிருஞ்சோலை அதே

மன்னு  நரகன் தன்னை சூழ் போகி வளைத்து
விபரீதத்திலே நிலை நின்ற நரகாஸூரனை வளைத்து இளைப்பித்து

எறிந்து-கொன்று

சூழ் போகி-விசாரித்து

கன்னி மகளிர் தம்மை கவர்ந்த
பதினாறாயிரம் கன்யைகளையும் -அவர்கள் இஷ்டத்துக்கு ஈடாக நம்மை அமைத்து
பரிமாறக் கடவோம் -என்று
விசாரித்துக் கைக் கொண்ட

சூழ் போகி -என்று திரு நாமம் ஆகவுமாம்
(சூழ்ச்சி செய்து என்றும் சூழ்ச்சி செய்தவன் என்றும் )

கடல் வண்ணன் மலை
இவர்களை அங்கீ கரித்த பின்பு தன் நிறம் பெற்ற படி

புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று பொன்னரி மாலைகள் சூழ் போலி மால் இரும் சோலை அதுவே
ஸூ வர்ண ஸத்ருசமான புஷ்பங்களை ஒழுகும் படி
பொன்னரி மலை போலே தோற்றுவித்து நின்ற
பொழிலாலே சூழப்பட்ட
மாலிருஞ்சோலை -கடல் வண்ணன் மலை

இத்தால்
ஸூ மநாக்கள் பலரும் சேரும் தேஸம் என்கிறது –

————-

மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த
காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனை குற மாதர்கள் பண் குறிஞ்சி
பா வொலி பாடி நடம் பயில் மால் இரும் சோலை அதுவே – 4-3- 4-

பதவுரை

மா வலி தன்னுடைய–மஹாபலியினுடைய
மகன் வாணன்–புத்திரனாகிய பாணாஸுரனுடைய
மகள் இருந்த–மகளான உஷை இருந்து
காவலை–சிறைக் கூடத்தை
கட்டு அழித்த–அரனோடே அழித்தருளினவனும்
தனி காளை–ஒப்பற்ற யுவாவுமான கண்ணபிரான்
கருதும் மலை–விரும்புகிற மலையாவது;
கோவலர்–இடையர்களுக்கும்
கோவிந்தனை–கோவிந்தாபிஷேகம் பண்ணப் பெற்ற கண்ணபிரான் விஷயமாக
குற மாதர்கள்–குறத்திகளானவர்கள்
குறிஞ்சி மலர்–குறிஞ்சி ராகத்தோடு கூடின
பா–பாட்டுக்களை
ஒலி பாடி–இசை பெறப் பாடிக் கொண்டு (அப் பாட்டுக்குத் தகுதியான)
நடம் பயில்–கூத்தாடுமிடமான மாலிருஞ்சோலை அதே–

மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த காவலைக் கட்டழித்த
மஹா பலி மகனான பாணனுடைய மகளான
உஷா இருந்த கந்யா க்ருஹத்திலே
காவலை
தன் பேரனை வ்யாஜீ கரித்து அழித்த

தனிக் காளை கருதும் மலை
அத்விதீயமான காளை
அதாவது
காமனைப் பெற்ற பின்பும் பரமபதத்தில் படியே பஞ்ச விம்சதி வார்ஷிகனாய் இருக்கை

கருதும் மலை
பரம பதத்திலும் காட்டில் மிகவும் அபி மானித்து நித்ய வாஸம் செய்கிற மலை –

கோவலர் கோவிந்தனை
கோ ரக்ஷணம் விதேயமாம் போது
ஜாதியிலே பிறக்க வேணுமே

குற மாதர்கள் பண்
இனக்குறவர் வாழி பாடா நின்றால்
இனமான குற மாதர்களும் அது தன்னையே பாடும் அத்தனை இறே
பல்லாண்டு ஒலி இறே அத் திருமலை தன்னில் உள்ளது

குறிஞ்சி பா வொலி பாடி நடம் பயில் மால் இரும் சோலை அதுவே
நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று என்னுமா போலே –

————–

பல பல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன் தன்னை
அலை வலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
குலமலை கோலமலை குளிர் மா மலை கொற்ற மலை
நிலமலை நீண்டமலை திரு மால் இரும் சோலை யதே – 4-3 -5-

பதவுரை

பலபல நாழம்–பலபல குற்றங்களை
சொல்லி–சொல்லி
பழித்த–தூஷித்த
சிசு பாலன் தன்னை–சிசுபாலனுடைய
அலவலைமை–அற்பத் தனத்தை
தவிர்த்த–(சாம தசையில்) போக்கி யருளின
அழகன்–அழகை யுடையவனும்
சரம தசையில் அழகைக் காட்டி தன்னளவில் த்வேஷம் மாற்றி –
தான் என்றாலே நிந்திக்கும் அலவலைமை தவிர்தமை
அலங்காரன்–அலங்காரத்தை யுடையவனுமான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையானது:
குலம் மலை–தொண்டர் குலத்துக்குத் தலையான மலையும்
கோலம் மலை–அழகை யுடைய மலையும்
குளிர் மா மலை–குளிர்ந்த பெரிய மலைகள்
கொற்றம் மலை–ஜயத்தை யுடைய மலையும்
நிலம் மலை–(நல்ல மரங்கள் முளைக்கும் பாங்கான) நிலத்தை யுடைய மலையும்
நீண்ட மலை–நீட்சியை யுடைய மலையுமான
திருமாலிருஞ்சோலை அதே–

பல பல நாழம் சொல்லி பழித்த
ஷீராப்தியிலே நினைத்த வாஸனை
ஹிரண்ய ராவண ஜென்மங்களில் நினைத்தவை கூசாமல் சொன்ன பாப ஆசார வாசனைகள்
இவன் தான் அவற்றோடு ஆக்கிக் கொள்ளும் அளவே அன்றிக்கே
அவ் வாசனை தானும் இவன் இஜ் ஜென்மத்தில் ஆர்ஜித்த பாப விசேஷங்களோடே
அவை தான் அல்பம் என்னும் படி இவை வந்து கூடின படி
இவை எல்லாத்தையும் நினைத்து இறே
பல பல நாழம் சொல்லி பழித்தது -என்றது

நாழ் -குற்றம்
பழித்தல் -ஸ்துதி நிந்தையானால் போலும் அன்று
நிந்தா ஸ்துதியும் அன்று
நிந்தையே

சிசு பாலன் தன்னை
அஸூர ஜென்மத்தில் பிறந்து செய்த பாபங்களை போல் அன்றியே
ராஜ ஜன்மத்திலே பிறந்து
த்ரிவித கரணங்களாலும் செய்த பாப விசேஷங்கள்

அலை வலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
நாட்டை நலிகிற அலை வலை தனத்தை
விக்ரஹ ஸுந்தர்யத்தைக் காட்டித் தவிர்த்தான் அத்தனை அல்லது –

ஸாயுஜ்யம் கொடுத்தான் என்னும் போது
ஸங்கல்ப நிபந்தன நித்ய நைமித்திக வைகல்ய ப்ராயச்சித்தாதிகளும்
புரஸ் சரணாதிகளும்
காம்ய தர்மமான கர்ம ஞான பக்திகளும்
தியாக விஸிஷ்ட ஸ்வீ காரமான ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ப்ராதான்யங்களும்
மற்றும் ஸாஸ்த்ரங்களில் சொல்லுகிற சாதன ஸாத்யங்களும்
ஸிஷ்ய ஆச்சார்ய க்ரமங்களும்
குலைய வேண்டி வரும்

இப்படி துராசார பரனான இவனுக்கும் கூடக் கொடுத்தவன் ஸமாசார பரருக்குக்
கொடுக்கச் சொல்ல வேணுமோ என்னில்
அப்போது ஸமாசாரம் தான் உண்டாகாது
(கைமுதிக நியாயம் பார்க்காமல் உபமான நியாயம் பார்த்து இவனைப் போலவே ஆவார்கள் அன்றோ )
இவன் தனக்கு ஸாயுஜ்ய பிரார்த்தனையும் இல்லை –
(பிரார்த்தனை தானே புருஷார்த்தம் புருஷன் அர்த்திக்க வேண்டுமே )

ஆனால் தாட் பால் அடைந்தான் -என்கிறபடி என் என்னில்
இத் தன்மை அறிவாரை அறிந்தவர்கள் பக்கலிலே இந்த ரஹஸ்யம் கேட்ப்பார்கள்
கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ என்ற போதே இப் பேணுதல் தெரியும் இறே

வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா -என்றும்
தாட் பால் அடைந்த தன்மை அறிந்தவர் தாமே இறே இத்தை நிஷேதித்தார்

(ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா-63-

ஹே ரகுவர –ராகு வம்சத்தில் ஸ்ரீ ராமனாக திரு அவதரித்தவனே
த்வம் -நீ
தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய-அப்படிப்பட்ட மஹா அபராதியான காகாஸூரனது விஷயத்திலே
ப்ரணத இதி-இக் காகம் நம்மை வணங்கிற்று என்பதையே கொண்டு
தயாளூர் யத் அபூ –தயை பண்ணினாய் இறே
ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே
தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது – பிராட்டி சந்நிதி யாகையால் இறே-

முக்த கிருஷ்ண-குற்றம் அறியாத கண்ண பிரானே
கிருஷ்ணனாகி என்றும் கிருஷ்ண என்று சம்போதானமாகவும் –
பிரதிபவம் அபராத்துர்–பிறவி தோறும் அபராதம் பண்ணின
சைதயஸ்ய–சிசுபாலனுக்கு – யது வம்ஸ பூதரில் காட்டில்
சேதி குலோத்பவன் என்று தன்னை உத்க்ருஷ்டனாக அபிமானித்து இருக்குமவன் –
சாயுஜ்யதோ அபூச சயத-சாயுஜ்யம் அளித்தவனாயும் ஆனாய் இறே
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை –திருவாய் -7-5-3-
தஸ்ய தே ஷமாயா-அப்படி எல்லாம் செய்தவனான உன்னுடைய பொறுமைக்கு
அபதம ஆகஸ் கிம் அஸ்தி -இலக்காகாத குற்றம் என்ன இருக்கிறது
வத –அருளிச் செய்ய வேணும்
உனக்குப் பொறுக்க முடியாதது உண்டோ
சர்வஜ்ஞரான தேவருக்கும் மறு மாற்றம் இல்லை
க்ஷமித்து அருளி விஷயீ கரிக்கும் இத்தனை -என்கை –)

ஆனால் இங்கனம் பேண வேண்டுவான் என் என்னில்
பிரதிகூல அனுகூலங்கள்
தத் சாதனங்கள்
பல ஸாதனம் அன்று என்று தோற்றுகைக்காக இறே

இவன் பெற்றான் என்றதும்
த்ரிவித கரண ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியால் வந்த ஸூக துக்கங்கள்
அந வரத கால ரஹிதமாகக் கொடுக்கை அவனுக்கு நினைவாகையாலே குறையில்லை
இத்தைப் பற்ற இறே அலவலைமை தவிர்த்த என்று அருளிச் செய்ததும்

இது நினைவாகில் அழகைக் காட்டுவான் என் என்னில்
வாராமல் போகிறவனை புஜிப்பித்து விட வேணுமே என்று
(திரி தந்தாகிலும் -கரிய திரு உருக் கோலம் காண்பித்தார் அங்கும்
அவ்வளவு உயர்ந்த மதுர கவி ஆழ்வாருக்கும் )

இவ் விடத்தே ஆண்டாள் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது –
(வீர ஸூந்த்ர ராயன் விஷயம் )
ஒருவனைக் குறித்து நிரன்வய விநாசம் பர வேத்யமாகச் சொல்லுகை அரிது போலே காணும்

அலங்காரன் மலை
முடிச்சோதிப் படியே

குலமலை
தொண்டக் குலத்துக்குத் தலை நின்ற மலை

கோலமலை
தொண்டக் குலத்தில் உள்ளாருக்குத் தர்ச நீயமான மலை

குளிர் மா மலை
அவனுக்கும் அவனுடையாருக்கும்
சென்றால் குடையாம் -என்கிறபடியே
ஸ்ரமஹர போக்யதையை மிகவும் விளைக்கும் மலை

கொற்ற மலை
அந்த போக்யதையாலே சம்சாரத்தில் எப் பேர்ப்பட்ட ருசிகளாலும் வருகிற
அபிமான போக்யதைகளை ஜெயிக்கலான மலை

நில மலை
மணிப்பாறையாய் இருக்கும் அளவு அன்றிக்கே
ஸூ ரிகளுக்கும் முமுஷுக்களுக்கும் புஷ்ப பல த்ருமாதிகளாய் முளைக்கவும்
முளைக்க வேணும் என்று பிரார்த்திக்கவும் யோக்யமான மலை

நீண்ட மலை
பரம பதத்துக்கும் சம்சாரத்துக்கும் இடை வெளி அற்று ஒரு கோவையாம் படியான மலை
இப்படி இருக்கிற திரு மாலிருஞ்சோலை

அலங்காரன் மலை
இம் மலை யுண்டாய் இருக்க
இவ் வழகு யுண்டாய் இருக்க

ஞான விகாசத்துக்கும்
இவ் வாத்மாவுக்கு ஞான அநு தய சங்கோச மாத்ரமே அன்றிக்கே –
லீலா ரஸ ஹேதுவான அநுகூல வியாபாரம் போலே பிரதிகூல வியாபாரங்களும்
அசக்தரானால் தத் விஷய ஸுந்தர்யமும் ததீய பாரதந்தர்யமும் கழற்றிக் கோக்க ஒண்ணாதாப் போலே
மங்களா ஸாஸனம் என்கிற அர்த்த விசேஷத்தையும் ஆச்சார்ய முகத்தாலே அறியலாய் இருக்க
நிரன்வய விநாசத்திலே அந்வயிப்பதே என்று வெறுக்கவும் இறே

வெறுக்கிறது என்
திருவடிகளில் கூட்டிப் பழைய ஷீராப்தியிலே விட்டான் என்னிலோ என்னில்
அங்குப் புகுந்தான் என்ற ஒரு பிரமாணம் உண்டாக நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்யவும் கேட்டிலோம்
அங்கு சாயுஜ்யமும் கூடாது
எஞ்சாப் பிறவி இடர் கெடுவான் தொடர நின்ற துஞ்சா முனிவர் இறே (திரு விருத்தம் -98 )

இவன் தான் முன்பு அங்கு இசைந்து போந்த ஸாத்ரவ தர்மம் இங்கு நடத்த மாட்டாதாப் போலே
அங்கும் உள்ளோரோடும் பழம் பகை நெஞ்சு பொருந்தி நடத்த மாட்டாமையாலே அங்கும் கூடாது
அவர்களும் இவன் தான் முன்பு பொருந்தி வர்த்தித்தான் ஒருவன் அல்லாமை அறிந்து இருக்கையாலே
அவர்களையும் இவனோடு கூட்டுகையும் அரிதாய் இருக்கும்

தேச விசேஷத்திலே (ஸாந்தானிக லோகம் ) கொண்டு போனான் என்றும் கேட்டிலோம்
அன்று சராசரங்களை வைகுந்தத்தகு ஏற்றினான் -என்று ஓன்று உண்டே
அந் நேரிலே கிருபையால் செய்தான் என்னில்
அவை ராம குண ஏக தாரகங்களாய் இருக்கையாலே கிருபையால் செய்யவும் கூடும்
வைகுண்ட நாம ஸ்தான விசேஷம் இக் கரையில் உண்டு என்னவுமாம் –

கிருபை தனக்கு விஷயமாம் போது
அவை தன்னைப் போலே ராம விரஹ வாட்டம் உண்டாக வேணும்
அவை தான் உண்டானாலும்
ஞானான் மோக்ஷம் என்கிற நேரும்
அபிமானமும்
மோக்ஷ பிரார்த்தனா ருசியும் வேணும்

அது தன்னையும் அவற்றுக்குத் தத் காலத்திலே யுண்டாக்கிக் செய்தாலோ என்னில்
அப்போது அவை ஆஸ்ரயத்தோடே சேராது
சேரும் காலத்து அனுக்ரஹத்தால் வந்த ஆகந்துக ப்ரேராதிகளும் பரஸ்பர விரோதம் தோற்றும்

சாஸ்திரங்களும் உண்டாகில் அவையும் ஒருங்க விட்டுக் கொடுக்க வல்ல ஞான அனுஷ்டானங்களை யுடைய
ஆச்சார்ய அபிமானமும் சேதன ருசியும் வேணும்
அது என்
பகவத் அபிமானமும் சேதன ருசியும் ஆனாலோ என்னில்
அப்போதும் இவ் வடைவு யுண்டாக்கினால் அல்லது ஆத்ம குணம் ஒருவராலும் பிறப்பிக்கப் போகாது

ஸ்வ தந்த்ரனுக்கு அரியது உண்டோ என்னில் ஸ்வ தந்த்ர்யம் இரண்டு ஆஸ்ரயத்தில் கிடவாது
பர தந்த்ரனாக்கி இவ் வடைவிலே கொண்டு போக வேணும்
ஸ்வா தந்தர்யம் தான் தோற்றித்துச் செய்வது இல்லை
கார்யப்பாடானவை செய்யும் போது பிறரை கேள்வி கேளாமல் செய்யும் அளவு இறே உள்ளது

கார்யப்பாடாக ஸ்வா தந்தர்யத்தாலே த்வீ பாந்தர வாஹிஸிகளை அங்கு நின்றும் கொண்டு போந்து
த்வீ பாந்த்ர நியாயம் பயிற்று விக்கிறவோபாதி
கொண்டு போய் நித்ய விபூதி நியாயத்தைப் பயிற்று விக்கிலோ என்னில்
அங்கு கொண்டு போன வைதிக புத்ரர்களுக்கு தேஹ பரிணாமமும் ஞான விகாஸமும் அற்று
பூர்வ பரிணாமத்தோடே மீளுகையால் அதுவும் கூடாது

பிராகிருத அப்ராக்ருதங்கள் சேராதாப் போலே பிராகிருத ஞான வாசனை அப்ராக்ருதத்தில் சேராது –
அர்ச்சிராதி மார்க்க சம்பாவனையும் கூடாது
ஆழ்வார் விசேஷித்து அருளிச் செய்த சூழ் விசும்பு அணி முகிலில் மார்க்க ஸம்பாவநா ஆதரத்வமும் கூடாது
அங்குள்ளார் எதிரே வந்து ஸம்பாவித்துக் கொடு போக அடியாரோடு இருக்கையும்
சூழ்ந்து இருந்து ஏத்துகையும் கூடாது –

அவன் தானும் இவனைத் தாட் பால் அடைவித்த விக்ரஹத்தை அங்குக் கொண்டு போய்த்திலன் இறே
அகடிதமான வட தள ஸாயித்வமும்
அனோர் அணீ யான் -கரந்து எங்கும் பரந்துளன் -என்கிற வியாப்தி ஸுகர்யமும்
ஸங்கல்ப ஸஹஸ்ர ஏக தேசமான ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகளும்
அவன் தன்னுடைய ஸ்வ ஸங்கல்ப பாரதந்த்ரயாதிகளும்
எல்லாம்
ஓரொரு நியாயங்களாலே கடிதமாக்கினாலும்
ஆத்ம குணங்களை விளைப்பிக்கை அவனாலும் அரிதாய் இறே இருப்பது

இங்குள்ளாரையும் அங்குள்ளாரையும்
பிராமயன் யந்த்ரா ரூட-
வானிலும் பெரியன வல்லன் -(1-10-3)–என்னும் அவையும்
பிராகிருத அப்ராக்ருத விஷய நிபந்தனமாக்கி பிரமிப்பிக்கவும் மயக்குவிக்கவும் வல்ல யோக்யதா ஸக்தி மாத்திரம் அல்லது
நிலை நிற்க பிரமிப்பிக்கையும் மயக்குவிக்கையும் அரிது
எளிதானாலும் ஸ்வரூப விரோதியும் ப்ராப்ய விரோதியுமாய் நிஷ் ப்ரயோஜனத்தோடே தலைக் கட்டும்
ஸ்வ தந்த்ரர் என்னா தம் தாம் அவயவங்களைத் தம் தாமே
ஞப்தி சக்திகளால் ஹிம்ஸித்திக் கொள்வாரும் உண்டோ

ஆகையால்
ஸ்ரீ யபதியாய்
ஸர்வஞ்ஞனாய்
ஸர்வ ஸக்தியாய்
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய்
அவாப்த ஸமஸ்த காமனாய்
ஹேய குண ரஹிதனாய்
ஸர்வ பிரகார நிரபேஷனாய்
ததீய ஸா பேஷனாய்
இருக்கிற ஸர்வேஸ்வரனுடைய

நிரங்குச ஸ்வா தந்தர்யமும்
நிருபாதிக கிருபையும்
முதலான குணங்கள் எல்லாம்
சேதனருடைய ஸா பராத ஸ்வா தந்தர்யத்தையும் ஒவ்பாதிக ப்ராவண்யத்தையும் மாற்றி
அத்யந்த பாரதந்தர்யத்தையும் நிருபாதிக சேஷத்வத்தையும் விளைப்பித்து
மங்களா ஸாஸனத்திலே மூட்டுகைக்காக
விரோதி நிரஸனம் செய்ய வேண்டுகையாலே

அயோக்கியரை நிரஸித்த மாத்திரமே அன்றிக்கே
சங்கோச ரூபமான தேஹ விமோசன மோக்ஷ ஸித்தியாய்
மீளாத படியான பிரதேசத்தில் இட்டு வைத்த பிரகாரத்தை இறே
அல வலைமை தவிர்த்த என்று அருளிச் செய்தது –

————–

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருகத்
தோண்டல் உடைய   மலை தொல்லை மால் இரும் சோலை அதுவே -4- 3-6 –

பதவுரை

பாண்டவர் தம்முடைய–பஞ்சபாண்டவர்களுடைய (மனைவியாகிய)
பாஞ்சாலி–த்ரௌபதியினுடைய
மறுக்கமெல்லாம்–மனக் குழப்பத்தை யெல்லாம்
ஆண்டு–(தன்) திருவுள்ளத்திற்கொண்டு,
அங்கு–(அவள் பரிபவப்பட்ட) அப்போது (அத் துன்பங்களை யெல்லாம்)
நூற்றுவர் தம்–(துரியோதநாதிகள்) தூற்றுவருடைய
பெண்டிர் மேல்–மனைவியர்களின் மேல்
வைத்த–சுமத்தின
அப்பன்–ஸ்வாமியான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையானது :
பாண் தரு–பாட்டுக்குத் தகுதியான (ஜன்மத்தை யுடைய)
வண்டு இனங்கள்–வண்டு திரளானவை
பண்கள்–ராகங்களை
பாடி–பாடிக் கொண்டு
மது–தேனை
பருக–குடிப்பதற்குப் பாங்காக (ச் சோலைகள் வாடாமல் வளர)
தோண்டல்–ஊற்றுக்களை யுடைய மலையாகிய
தொல்லை மாலிருஞ் சோலை அதே–அநாதியான அந்த மாலிருஞ் சோலையேயாம்.

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
இவர்களைப் பாண்டவர்கள் என்கையாலே
அவளையும் பாஞ்சாலி என்று
ஆபி ஜாத்யம் சொல்லுகிறது –

தம்முடைய -என்கையாலே
இவர்களுடைய அபிமானத்திலே அவள் ஒதுங்கி
புருஷணாம் அபாவேந ஸர்வா நார்யா பதி வ்ரதா -என்கிற
பட்டாங்கில் பார தந்தர்யமும் ஸஹ தர்ம சாரித்வமும் தோற்றுகிறது

மறுக்கம் எல்லாம்
துரியோத நாதிகள் ஸபா மத்யத்திலே கொடு போய் துஸ் ஸாதனன் பரிபவிக்க
அத்தாலே ஈடுபட்டு க்ருத்யக்ருத்ய விவேக ஸூன்யையாய்
நெஞ்சு மறுகி அந்த சபையில் இருந்தவர்கள் எல்லாரையும் தனித்தனி முறைமை சொல்லி
சரணம் புக்க அளவிலும்

இவன் சோற்றை யுண்டோமே -என்று வயிற்றைப் பார்ப்பார்
துரியோதனுடைய மாத்சர்யத்தைப் பார்ப்பார்
தர்ம புத்ரனுடைய தர்ம ஆபாச ப்ரதிஜ்ஜையைப் பார்ப்பார்
மற்றும் தம் தாம் கார்யம் போலே தோற்றுகிற அஞ்ஞான பிரகாசத்தை ஞானமாக நினைத்து நிலம் பார்ப்பாராய்

இவளை அபிஜாதை யானாள் ஒரு ஸ்த்ரீ என்றும்
பதி வ்ரதை -என்றும்
ஸஹ தர்ம ஸாரி -என்றும் பாராமல்
துஸ்ஸாதனன் நலிவதைப் பார்த்து இருக்க

இவளும் தன்னுடைய அகதித்வத்தை அனுசந்தித்து
சங்க சக்ர கதா பாணே –நீயும் என்னைப் போலவோ –
துவாரகா நிலயா -பெண் பிறந்தார் வருத்தம் அறிந்து ரஷித்த பிரகாரங்களை மிகையோ
அச்யுத -ஆஸ்ரிதர் தங்கள் நழுவிலும் கை விடான் என்கிறது -வடயஷ ப்ரசித்தியோ
கோவிந்த -ஸர்வஞ்ஞராய் ஸர்வ ஸக்தர்களையோ ரஷித்தது
புண்டரீகாக்ஷ –அக வாயில் கிருபை காணலாம் படியாய் யன்றோ திருக் கண்களில் விகாஸம் இருப்பது –
உனக்கும் ஏதேனும் ஸ்வப்னம் முதலான சங்கோசங்களும் உண்டோ என்றால் போலே சொல்லி
ரக்ஷமாம் சரணாம் கத -ரஷக அபேக்ஷை பண்ணின அளவிலும்

ருணம் ப்ரவ்ருத்தம் இவ -என்றால் போலே
சில கண் அழிவுகளோடே ஸ்ரீ கஜேந்த்ரனுடைய ரக்ஷக அபேக்ஷையை நினைத்து வந்தால் போலே
வந்து முகம் காட்ட ஒரு வழியும் காணாமல்

அவன் பட்ட மறுக்கம் அறியாதே
அவனும் இவர்களைப் போலே கை விட்டான் ஆகாதே என்று
இவள் நினைத்து முன்பு கேட்டு வைத்த சுருசுருப்பையும் காற்கடைக் கொண்டு
லஜ்ஜா நிபந்தனமான சக்தியால் வந்த அசக்தியையும்
அந்த லஜ்ஜையையும் மிடுக்கலோடே கை விட்ட அளவிலே
(இரு கையும் விட்டேனோ திரௌபதியைப் போலே )

எல்லா அவஸ்தையிலும் தியாக விசிஷ்ட ஸ்வீகாரம் ஆகையால்
கழித்து உடுத்தமை தோன்றாமல் உடுத்துக் கழித்தால் போலே நிற்கும்படி
திரு நாம பிரபாவம் உதவும்படியான
சங்கல்ப மாத்ரத்தாலே வஸ்திரம் மாளாமல்
மறுக்கம் எல்லாம் மாண்டு –(துச்சானாதிகளும் )மாண்டு இவளை மயிர் முடிப்பித்து
வதார் ஹரையும் கரிக் கட்டையையும் மன்னரும் பிள்ளையும் ஆக்கும் அளவாக நினைத்து இறே
எல்லா மாண்டு -என்கிறது

ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த
இவ்வளவிலும் பர்யவசியாமல் நூற்றுவர் தம் பெண்டிர் மேலே இம்மறுக்கம் எல்லாம்
வாங்கி வைத்தால் இறே இவள் மறுக்கம் மாண்டது என்னாலாவது

அன்றியே
இவள் மறுக்கம் எல்லாம் தான் ஏறிட்டுக் கொண்டு ருணம் ப்ரவ்ருத்தம் என்று தான் மறுகையாலே
வ்யாதி யுடையவனை வியாதியாளன் என்னுமா போல் இன்றிக்கே
தானே பூண்டு கொள்கையாலே ஆண்டு என்கிறது
அந்த ஆட்சி முடிவது அவர்கள் மேல் வைத்தால் இறே என்னவுமாம்

(நோய் உடையவன் நோயாளி போல் மறுக்கம் ஆளி ஆண்டு என்கிறது )

அன்றிக்கே
மாண்டு அங்கு என்றது
மாண் தங்கு என்று என்று பதமாய்
மாட்சிமை தகுகிற ஸ்த்ரீகள் என்னுதல் –

ஆண் தங்கு -என்று பதமாய்
ஆண்மை அமர்ந்த நூற்றுவர் என்னவுமாம்
யுத்த உன்முகராய் படுகையாலே ஆண்மை அமருகையும் குறை இல்லை இறே
அங்கு அங்கு வைத்த என்னவுமாம்

அப்பன் மலை
ஸ்வ ஸங்கல்பத்தாலே அந்யோன்ய தர்சனம் இன்றிக்கே இருக்கச் செய்து இறே இது எல்லாம் செய்தது
இது எல்லாம் திரு நாமம் தானே இறே செய்தது
இவ் வுபகாரம் எல்லாம் தோற்ற அப்பன் என்கிறார் –
திரு நாம பிரபாவம் தானே அவனையும் ஸ்வ ஸங்கல்ப பரதந்த்ரன் ஆக்கும் போலே காணும்
தூத்ய ஸாரத்யங்கள் பண்ணிற்றும் இவள் சொன்ன திரு நாமத்துக்காகவே என்னுதல்
திரு நாமம் சொன்ன இவள் தனக்காக என்னுதல் –

பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருகத்
பண்ணைப் பாண் என்று பண்ணிலே பாடத் தகுதியான வண்டினங்கள் என்னுதல்
திருப் பாண் ஆழ்வார் போல் பண்ணிலே பாடுபவர் போல் என்னுதல்

பருக என்றது
வர்த்தமானமாய்
பருகப் பருக ஊற்று மாறாதே செல்லும் நீர் நிலமாய்
பூக்களை யுடைத்தான சோலையே நிரூபகமான மலை

தோண்டல் உடைய   மலை தொல்லை மால் இரும் சோலை அதுவே
தோண்டல் உடைய-ஊற்று மாறாதே
இம் மலைக்குப் பழைமை யாவது
அநாதியான திருமலை ஆழ்வார் தாமே திருவனந்த ஆழ்வான் என்னும் இடம் தோற்றுகிறது –

———-

கீழ்
நந்தன் மதலை என்றத்தை அனுசந்தித்தார்
இதில்
காகுத்தனை என்றதை அனுசந்திக்கிறார் –

கனம் குழையாள் பொருட்டாகக் கணை பாரித்து அரக்கர் தங்கள்
இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை
கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம்
இனம் குழு ஆடும் மலை எழில் மால் இரும் சோலை யதே – 4-3- 7-

பதவுரை

கனம்–ஸ்வர்ண மயமான
குழையாள் பொருட்டா–காதணியை யுடையாளான
கணை–அம்புகளை
பாரித்து–பிரயோகித்து
அரக்கர்கள் இனம்–ராஷஸ குலத்தை
கழு ஏற்றுவித்து–சூலத்தின் மேல் ஏற்றின வனும்
எழில் தோள்?–அழகிய தோள்களை யுடையவனுமான
இராமன்–இராமபிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையான
கனம்–பொன்களை
கொழி–கொழித்துக் கொண்டு வருகின்ற
தெள் அருவி–தெளிந்த அருவிகளிலே
இனக்குழு–அறிஞர்கள் எல்லாம்–
அகல் ஞாலமெல்லாம்–விசாலமான பூமியிலுள்ளா ரெல்லாரும்
வந்து சூழ்ந்த–வந்து சூழ்ந்து கொண்டு
ஆடும்–நீராடப் பெற்ற
எழில்–அழகிய
மாலிருஞ் சோலையிலே அதே–

கனம் குழையாள் பொருட்டாகக்
கனம் குழை-காதுப் பணி
நாய்ச்சிமார் பெருமாள் திருக் கையில் அறு காழி திரு உள்ளம் பற்றி இருக்குமா போலே
பெருமாளும் நாய்ச்சியாருடைய கர்ண விபூஷணத்திலே மிகவும் திரு உள்ளம் பற்றி இருக்கும் போலே காணும்
அத்தை அவருக்கு நிரூபகமாக அருளிச் செய்கிறார்
இவள் பொருட்டாக

கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம்
நாள் தோறும் அம்புகள் எல்லாம் கோணி நிமிர்த்துப் பாரித்துப் பார்ப்பார் என்னுதல்
ராக்ஷசர் உடம்புகளிலே மந்த கதியாகப் பாரித்துப் பார்ப்பார் –
இனியாகிலும் அநு தபித்து மீளுவார்களோ என்னும் நசையாலே -என்னுதல்
கிள்ளிக் களைந்தானை -என்னக் கடவது இறே

கழு ஏற்றுவித்த
இதில் மீளாதார் உடம்புகளிலே கூர் வாய் அம்புகளைக் கழுக் கோலினம் இனமாக ஊடுறவ ஏற்றுவித்த
ஒரு கோல் அரக்கர் இனம் எல்லாம் நேர் நின்றவர்களை பட்டு உருவுகையாலே அம்புகளைக் கழு என்கிறது

அன்றியே
லங்கா த்வாரத்திலே நேர் நில்லாமல் பட்டவர்களை ஸ்ரீ வானர வீரர்கள் பெருமாள் கேள்வி கொள்ளாமல்
கழுவிலே வைத்து விநோதிக்கவும் கூடும் இறே கோபத்தாலே –
வாலியைப் பார்த்து இவ்வார்த்தை சொல்லுவிதியாகில் கண்ட இடம் எங்கும்
கழு மலை ஆக்குவேன் என்றார் இறே பெருமாள் –
அது இங்கு கூடாமல் இராது இறே

கழுகு என்று பாடமாய்த்தாகில் போரச் சேரும் இறே
அன்றிக்கே
தலைக் குறைத்தலாய் கழுகைக் காட்டும் இறே

எழில் தோள் எம் இராமன் மலை
ஸுர்யம் விளங்குகிற தோள்
நற் குலையை உபகரிக்கையாலே தேஜஸ்ஸூ விளங்குகிற தோள்
பாப கரணங்களைக் குலைக்கக் குலைக்கப் பூரித்த தோள்

எம் இராமன் மலை
அம்புக்கு விஷயமானவர்களை யுத்தத்திலே ரமிப்பிக்கையாலும்
கிருபாதி குணங்களுக்கு விஷயமானவர்களை அவ்வோர் அளவுக்கு ஈடாக ரமிப்பிக்கையாலும்
ராமன் -என்கிறது
இத் தோள் அழகைக் கண்டிருக்கச் செய்தேயும் புமான்கள் ஈடுபடாமல் இருப்பதே
பும்ஸாம் த்ருஷ்ட்டி ஸித்த அபஹாரிணாம்
(ஆடவர் பெண்மையை அளாவும் தோளிணாய் )

கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து
பொன் கொழித்து வருகிற திருச் சிலம்பாறு என்னுதல்
அன்றியே
திருச் சோலைகள் அதி வ்ருஷ்டி அநா வ்ருஷ்டிகளாலே ஈடுபடாமல் கர்ஷகரைப் போலே
அம் மலை மேலே மேகங்கள் குடி இருந்து
அளவு பார்த்து மழை பொழிகையாலே
அருவி குதிக்கும் என்னுதல்

கனம்
பொன்னுக்கும் மேகத்துக்கும் பெயர்
இப்படி இருக்கிற திரு அருவியிலே

அகல் ஞாலம் எல்லாம் இனம் குழு ஆடும் மலை எழில் மால் இரும் சோலை யதே
ப்ரஹ்ம லோகம் பர்யந்தமாக யுள்ளார் எல்லாம் தம் தம்முடைய புத்ர பவுத்ராதிகளோடே வந்து
திரை சூழ்ந்து
பெருக்காறு ஆகையாலே தனி இழிய ஒண்ணாமையாலே
ஒருவரை ஒருவர் கை கோத்துக் கொண்டு திரள் திரளாகத்
தீர்த்தமாடுகிற அழகிய திருமாலிருஞ்சோலை மலை இராமன் மலை
இனம் குழும் ஆடும் எழில் திருமாலிருஞ்சோலை மலை இராமன் மலை –

————-

எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து வாய்கோட்டம் தவிர்த்து உகந்த
அரையன் அமரும் மலை யமரரோடு கோனும் சென்று
திரி சுடர் சூழு மலை திருமால் இரும் சோலை யதே – 4-3- 8-

பதவுரை

எரி–நெருப்பை
சிதறும்–சொரியா நின்றுள்ள
சரத்தால்–அம்புகளினால்
இலங்கையினை–இலங்கைக் காரனான ராவணனை
தன்னுடைய–தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து–நீண்ட வில்லின் வாயிலே (அம்பிலே )புகுரச் செய்து
வாய் கோட்டம்–(அவனுடைய) வாக்கின் அநீதியை
தவிர்த்து–குலைத்து
உகந்த–(தான் வெற்றி பெற்றமையாலே) மகிழ்ந்தருளின
அரையன்–ஸ்வாமியான இராமபிரான்
அமரும்–எழுந்தருளி யிருக்கிற
மலை–மலையாவது:
அமரரொடு–தேவர்களோடு கூட
கோனும்–(அவர்களுக்கு) தலைவனான இந்திரனும்
திரி–(இரவும் பகலும்) திரியா நின்ற
சுடர்–சந்த்ர ஸூர்யர்களும்
சென்று–வந்து
சூழூம்–பிரதக்ஷிணம் பண்ணப் பெற்ற
திருமாலிருஞ்சோலை மலை அதே–

எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து
தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து -சிதறும்-எரி சரத்தால் இலங்கையினை
தனக்கு அசாதாரணமாய்
அலங்கார வரியை யுடைத்தான சார்ங்க வில்
நாணிலே தொடுத்து
தொடுக்கும் போது ஒன்றாய்
விடும் போது பலவாய்
படும் போது நெருப்பாய் இறே பெருமாள் யுடைய திருச் சரங்கள் தான் இருப்பது

இலங்கையினை
இலங்கையில் உள்ள ராவண பக்ஷபாதிகளை
மஞ்சா க்ரோஸந்தி போலே

வாய் கோட்டம் தவிர்த்து உகந்த
செவ்வைக் கேடாகச் சொல்லுகிற வார்த்தைகளைத்
தவிர்த்து உகந்த
அதாவது
ந நமேயம் -என்றவை முதலானவை இறே

உகந்த அரையன் அமரும் மலை
இவர்களுடைய விபரீத கரணம் குலையப் பெற்றோம் -என்று
பிரியப்பட்ட ராஜா நித்ய வாஸம் செய்கிற திரு மலை

யமரரோடு கோனும் சென்று திரி சுடர் சூழு மலை திருமால் இரும் சோலை யதே
தேவர்களோடு இந்திரனும்
லோக உபகாரகமாக சஞ்சரிக்கிற சந்த்ராதித்யர்களும் தம் தாம் ப்ரயோஜனத்துக்காகச் சென்று
ப்ரதக்ஷிணமாக வருகிற திருமாலிருஞ்சோலை மலை
அது அரையன் அமரும் மலை

அன்றிக்கே
இலங்கையினை வரி சிலை சிதறும் எரி சர வாயில் வாய் கோட்டம் தவிர்த்து
உகந்த அரையன் அமரும் மலை -என்று அன்வயித்து
வில்லுக்கு வாய் அம்பு இறே
இலங்கையை பாம்பு நாக்காலே கிரசித்தது என்னுமா போலே
வில் அம்பாகிற வாயாலே க்ரஸித்து விட்ட பின்பு இறே வாய் கோட்டம் தவிர்த்தது
வாலியைக் கொன்ற அம்பு இலங்கையை விழுங்கிற்று என்னவுமாம்
ராவணன் பட்ட பின்பும் ஈரரசு தவிர்ந்து இல்லை இறே

இந்த்ரனோடு அமரர் என்னாதே -அமரரோடு கோன் என்றது
கர்ம நிபந்தமான ஸ்வ ஸ்வாதந்தர்யத்திலும்
நின்ற நின்ற அளவுகளிலே அந்ய சேஷத்வம் பிரபலம் என்கைக்காக இறே
கர்ம பலம் ஸித்தித்தாலும் அது புஜிக்கும் போதும் தேவ ப்ரஸாத அநு மதிகள் வேணும் இறே
அது இல்லாமையால் இறே ராவணன் எரி சரத்துக்கு இலக்காக வேண்டிற்றும்

வரம் கருதித் தன்னை வணங்காதவன் வன்மை யுரம் கருதி மூர்க்கத்தவனை (இரண்டாம் ) -என்றும்
பெரு வரங்கள் அவை பற்றிப் பிழக்குடைய விராவணன் -என்றும்
கல்லாதவர் இலங்கை -என்றும்
கட்டு அழித்து
கற்றவர் இலங்கை ஆக்கினான் இறே

ஒருவன் பக்கலிலே ஒன்றைப் பெற்றால் அது புஜிக்கும் தனையும் அது பெறும் போதும் போலே
அவனுடைய பிரசாத அனுமதிகள் வேண்டாவோ
தவசியைப் புகட்டி வாள் வாங்கி வந்தேன் என்னலாமோ
தேவா நாம் தானவாஞ்ச சாமான்யம் அதி தைவதம் என்கிறபடியே
இவ்வநு வர்த்தனத்தால் வருகிற ப்ரஸாத அனுமதிகளால் இறே தேவாஸூர ராக்ஷஸாதிகளுக்கும்
ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யங்களும் அல்ப ஜீவிகையாய்ப் போரு வதும்
ஆர்க்கும் அத்யுத்கட பல ஸித்தி உண்டு இறே
இவை தான் எல்லாம் போராது இறே
அநந்யார்ஹ சேஷத்வம் பிறந்தால் இரே ஈரரசு தவிர்ந்து ஆவது
ஆகை இறே அரையன் அமரும் மலை என்கிறது –

——-

நாநாவான அவதாரங்களிலும்
நாநாவான அபதானங்களிலும்
உண்டான குண விசேஷங்களை அனுசந்திக்கிறார்

கோட்டு மண் கொண்டு இடந்து குடம் கையில் மண் கொண்டு அளந்து
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடி இறை என்று
ஒட்டரும் தண் சிலம்பாறுடை திரு மால் இரும் சோலை யதே -4 -3-9 –

பதவுரை

மண்–ஹிரண்யாக்ஷனாலே பாயாகச் சுருட்டிக் கொண்டு போகப்பட்ட) பூமியை
(வராஹமாய் அவதரித்து)
இடந்து–(அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித்தெடுத்து
கோடு–(தனது) திரு எயிற்றிலே
கொண்டு–என்று கொண்டும்,
மண்–(மஹாபலியினால் தன் வசமாக்கிக் கொள்ளப்பட்ட) பூமியை
(வாமந ரூபியாய் அவதரித்து)
குடங் கையில்–அகங்கையில்
கொண்டு–(நீரேற்று) வாங்கிக் கொண்டு
அளந்து–அளந்தருளியும்
மீட்டும்–மறுபடியும் (அவாந்தர ப்ரளயத்திலே அந்தப் பூமி அழியப் புக.)
அது–அப் பூமியை
உண்டு–திரு வயிற்றில் வைத்து நோக்கி
(பின்பு பிரளயங் கழிந்தவாறே)
உமிழ்ந்து–(அதனை) வெளிப் படுத்தியும்
(இப்படிப்பட்ட ஆச்சரியச் செயல்களாலே)
விளையாடும்–விளையாடா நின்றுள்ள
விமலன்–நிர்மல ஸ்வரூபியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையாவது;
ஈட்டிய–(பெருகி வரும் போது) வாரிக் கொண்டு வரப் பெற்ற
பல் பொருள்கள்–பல தரப் பட்ட பொன், முத்து, அகில் முதலிய பொருள்கள்
எம் பிரானுக்கு–எம் பெருமானுக்கு
அடி இறை என்று–ஸ்ரீபாத காணிக்கை யென்று
ஒட்டரும்–(பெருகி) ஒடி வாரா நின்றுள்ள
தண்–குளிர்ந்த
சிலம்பாறு உடை–நூபுர கங்கையை யுடைய
திரு மாலிருஞ் சோலை அதே–

கோட்டு மண் கொண்டு இடந்து
பாதாள கதையான மஹா பிருத்வியை மஹா வராஹமாய் ஒட்டு விடுவித்து எடுத்து
ஸ்தானத்தே வைத்து
அதுக்கு மேலே

குடம் கையில் மண் கொண்டு அளந்து
கொடுத்து வளர்ந்த கையாலே வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து
உதக பூர்வமாக ஏற்றுக் கொண்டு
நமுசி பிரக்ருதிகளை நியாயத்தாலே சுற்றி எறிந்து த்ரிவிக்ரம வேஷத்தைப் பரிக்ரஹித்து
அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்தர்யம் போம் படி திருவடிகளைப் பரப்பி அளந்து கொண்டு

அந்ய சேஷத்வத நிவ்ருத்தியை முற்படச் சொல்லிற்று
கரை அருகே அழுந்துவாரைக் கைக் கொடுத்து ஏற விடுமா போலே
பிரதம அக்ஷரத்தில் சதுர்த்தி ஸ்தானத்திலே அணுக வந்தான் இவன் ஆகையாலே

(அந்நிய சேஷத்வம் நிவ்ருத்தி -லுப்த சதுர்த்தி உகார-அர்த்தம் -அவனுக்கே அடிமை
ஸ்வ ஸ்வாதந்தர்யம் நிவ்ருத்தி -நம -அர்த்தம் -நான் எனக்கு அல்லன் )

மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
பின்னையும் அபதான ஸங்கல்பங்களாலே உண்டு உமிழ்ந்து லீலை கொண்டாட நிற்கச் செய்தேயும்
தத் கத தோஷம் தட்டாதவன்
இன்புறும் இவ் விளையாட்டு உடையான் ( திருவாய் )-என்னுமா போலே

ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடி இறை என்று ஒட்டரும் தண் சிலம்பாறுடை மால் இரும் சோலை யதே
பொன் முத்தும் அரி யுகிரும் புகழைக் கை மா கரிக்கோடும் -என்கிறவை
நாநா வர்ண ரத்னங்கள் -அகில் -சந்தனம் -என்றால் போலே சொல்லுகிற இவை எல்லாம்
பர்த்திரு க்ருஹத்துக்குப் போம் பெண் பிள்ளைகள் மாத்ரு க்ருஹத்திலே பர்தாவுக்கு என்று
தேடி வைத்தவை எல்லாம் கொண்டு
கடுக நடை இட்டுச் செல்லுமா போலே
மலையில் உள்ள பதார்த்தங்களை எல்லாம் பல காலும் கொண்டு வந்து திருச் சிலம்பாற்று தன்னிலே சேர்க்க
இவை எல்லாவற்றையும் மஹா உபகாரகராய் இருக்கிற அழகர் திருவடிகளில்
ஸ்வரூப அனுரூபமாகச் சேர்க்க வேணும் என்று
பெரிய குளிர்த்தியோடே தூங்கு ( கொட்டும் )அருவியாய் வாரா நின்றதீ என்று
தோற்றும்படியான திருச் சிலம்பாற்றை யுடைய
திருமாலிருஞ்சோலை யது விமலன் மலை

இத்தால்
அசல ப்ரதிஷ்டிதரான ஆழ்வார் பக்கலிலே உண்டான ஞான பக்தி வைராக்யங்கள் எல்லாவற்றையும்
அழகருக்கு அழகருக்கு என்று திரு உள்ளத்திலே சேர்த்து வைத்து
இவற்றை அங்கீ கரிக்க வேணும் என்று பிரார்த்தித்து
தூங்கு (தொங்கும் ) பொன் மாலைகளோடு விகல்பிக்கலாம் படி இருப்பவர் தோன்றா நின்றது என்னுதல்

இன்று வந்து இத்தனையும் அமுது செய்யப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்து
பின்னும் ஆள் செய்வன் (நாச்சியார் )-என்கிற அபி நிவேசம் தோன்ற நிற்பாருக்குப்
போலியாய் இரா நின்றதீ என்னுதல் –

————

ஷீராப்தி நாதனுக்கு அந்தத் திரு அணைப் படுக்கை வாய்ப்பிலும் காட்டிலும்
(புல்கும் அணையும் அங்கு )
நின்றால் மர வடியாம் என்கிறபடியே
இத் திருமலை மேல் நிலை அத்யந்த அபிமதம் என்று தோற்றுகிறது –

ஆயிரம் தோள் பரப்பி   முடி ஆயிரம் மின்னிலக
ஆயிரம் பைம் தலைய அநந்த சயனன் ஆளும் மலை
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும்
ஆயிரம் பூம் பொழிலும் உடை மால் இரும் சோலை யதுவே -4-3 -10-

பதவுரை

ஆயிரம்–பலவாயிருந்துள்ள
தோள்–திருத் தோள்களை
பரப்பு–பரப்பிக் கொண்டும்.
முடி ஆயிரம்–ஆயிரந் திருமுடிகளும்
மின் இலக–(திருவபிஷேகத்திலுள்ள சத்தங்களினால்) மிகவும் விளங்கும்படியாகவும்
பை–பரந்த
ஆயிரம் தலைய–ஆயிரந்தலைகளை யுடைய
அனந்தன்–திருவந்தாழ்வான் மீது
சயனன்–பள்ளி கொண்டருளுமவனான எம்பெருமான்
ஆளும்–ஆளுகின்ற
மலை–மலையாவது,
ஆயிரம் ஆறுகளும்–பல நதிகளையும்
பல ஆயிரம் சுனைகளும்–அனேகமாயிரந் தடாகங்களையும்
ஆயிரம் பூம் பொழிலும் உடை– பல பூஞ்சோலைகளை யுமுடைய-

ஆயிரம் தோள் பரப்பி   முடி ஆயிரம் மின்னிலக
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி (திருவாய்)-என்னுமா போலே
அநேகம் ஆயிரம் திருத் தோள்களையும் பரப்பி
அநேகம் ஆயிரம் திரு முடிகளை மின்னிலகப் பரப்பி
திரு அபிஷேகங்களில் உண்டான ரத்நாதி ப்ரபைகளாலே திரு அபிஷேகம் மிகவும் மின்னித் தோற்றும் இறே

ஆயிரம் பைம் தலைய அநந்த சயனன் ஆளும் மலை
அநேகம் ஆயிரம் ரத்னங்களால் விளங்கா நின்ற அநேகம் ஆயிரம் திரு முடிகளை யுடைய
திரு அநந்தாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவன்
ப்ராப்த அனுரூபமாக அத்யந்த அபிமானத்தோடே
நங்கள் குன்றம் கை விடான் (திருவாய்-10-7 )-என்கிறபடியே ஆளும் மலை

ஆயிரம் ஆறுகளும்
திருச் சிலம்பாறு என்னும் ப்ரஸித்தியை யுடைத்தான ஆறு
திரு நாராயணப் பொய்கையை நோக்குகைக்கு ஹேதுவாக திருச் சிலம்பில் தெறித்த திவலைகள்
அந்ய ஸ்பர்சம் அற்று மற்றும் உண்டான ஆயிரம் ஆறுகளும்

சுனைகள் பல ஆயிரமும்
மணம் கமழ் சாரல்
வந்து இழி சாரல்
நலம் திகழ் நாராயணன்
ஆராவமுது
என்றால் போலே திரு நாமங்களை யுடைத்தான அநேகம் ஆயிரம் திருச் சுனைகளும்

ஆயிரம் பூம் பொழிலும் உடை மால் இரும் சோலை யதுவே
இவ் வாறுகளில் தீர்த்தங்களினாலும்
இச் சுனைகளில் தீர்த்தங்களாலும் வளருகிற அநேகம் ஆயிரம் திருச் சோலை களையும்
யுடைத்தான திருமாலிருஞ்சோலை மலை

இத்தால்
அங்கே நித்ய வாஸம் செய்கிற திருமாலை ஆண்டான் போல்வாருடைய
நிர்வாஹ ப்ரவாஹங்களைக் காட்டுகிறது
ஆயிரம் ஆறுகளால்

அவை எல்லாம் ஓர் அர்த்தத்தில் சேர்ந்தமை தோற்றுகிறது
திருச் சிலம்பாறு என்று திரு நாமத்தை உடைத்தான ஆறு திரு நாராயண பொய்கையை நோக்குகையாலே

ஆறுகள் போலே திருச் சுனைகளும் ஸ்தாவர ஜாதியில் அவதரித்த ஸூரிகளுக்கு
தாரகாதிகளாய் நோக்கினமையும் காட்டுகிறது

———–

நிகமத்தில் இத் திருமொழி யாலே 
அழகருடைய வைபவத்தை தாம் பிரகாசிப்பித்தமையை அருளிச் செய்து –
இதற்க்கு வேறு ஒரு பலம் சொல்லாதே- இத்தை அறிகை தானே பலமாக தலைக் கட்டுகிறார்-

மால் இரும் சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால் வேத கடல் அமுதை
மேலிரும் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்
மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே -4 -3-11 –

பதவுரை

மாலிருஞ்சோலை என்னும்–திருமாலிருஞ்சோலை என்கிற
மலையை–திருமலையை
உடைய–(தனக்கு இருப்பிடமாக) உடையவனும்
மலையை–ஒரு மலை சாய்ந்தாற்போன்றுள்ளவனும்
நால் இரு மூர்த்தி தன்னை–திருவஷ்டாக்ஷர ஸ்வரூபி யானவனும்
நால் வேதம் கடல் அமுதை–நான்கு வேதங்களாகிய கடலில் ஸாரமான அம்ருதம் போன்றவனும்
மேல் இருங் கற்பகத்தை–(ஸ்வர்க்க லோகத்திலுள்ள கல்ப வ்ருக்ஷத் தினம்) மேற்பட்டதும் பெரிதுமான கல்ப வ்ருஷமாயிருப்பவனும்
வேதாந்தம்–வேதாந்தங்களிற் கூறப்படுகின்ற
விழுப் பொருளில்–சிறந்த அர்த்தங்களுள்
மேல் இருந்த–மேற்பட்ட அர்த்தமாயிருப்பவனும்
விளக்கை–தனக்குத் தானே விளங்குபவனுமான எம்பெருமானைக் குறித்து
நந்தா விளக்கே -அளத்ததற்கு அரியான்
ஸத்யம் ஞானம் அநந்தம்
திரு மூழிக் காலத்து விளக்கே
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரித்தன–அருளிச் செய்தவை இப் பாசுரங்கள்.–
அவனை அறிவதே பலன் –வேறே தேடிப் போக வேண்டாமே

மால் இரும் சோலை என்னும் மலையை உடைய மலையை
அழகருக்கு ஏற்றம் திருமலையை யுடையவர் என்று
ஈஸ்வரனை மலை என்கைக்கு அடி
போக்யதா வெள்ளமும்
நிலை குலையாமையும் —

நாலிரு மூர்த்தி தன்னை
அஷ்ட வஸூக்களுக்கு அந்தர்யாமி யானவனை

அன்றிக்கே
வாஸூ தேவ சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்தரில்
இரு மூர்த்தி
பெரியவன் வாஸூ தேவன்

அன்றிக்கே
நாலிரு மூர்த்தி என்றது
திரு மந்திரத்தில் எட்டுத் திரு அஷரத்துக்கும் சரீரி என்றபடி

நால் வேத கடல் அமுதை
வேதத்தில் பிரயோஜன அம்சம் திரு மந்த்ரம்
மாதவன் பேர் சொல்வதே வேதத்தின் சுருக்கு (இரண்டாம் திருவந்தாதி )

மேலிரும் கற்பகத்தை
ஸ்வர்க்கத்தில் கற்பகத்திலும் வியாவ்ருத்தி சொல்கிறது
அந்தக் கல்பகம் தன்னை ஒழிந்தவற்றைக் கொடுக்கும் அத்தனை இறே
இந்தக் கல்பகம் அதிகாரியையும் உண்டாக்கி
தன்னையே கொடுக்கும்
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் ( இரண்டாம் திருவந்தாதி ) -என்னக் கடவது இறே

வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் -( திரு நெடும் தாண்டகம் )
இத்தால் பிரணவத்தைச் சொல்லுகிறது

மேலிருந்த விளக்கை
வேதாந்தத்தில் ஸர்வ ஸ்மாத் பரன் என்று ப்ரகாசகன் ஆனவனை
அதாவது
அகாரார்த்தம் ஆனவனை

விட்டு சித்தன் விரித்தனவே
பகவத் ஸ்வரூப குணங்களிலே வியாபித்த திரு உள்ளத்தை யுடைய
ஆழ்வார் இப் பிரபந்தத்திலே வெளியிட்டு அருளினார்

இதுக்குப் பல ஸ்ருதி சொல்லாமைக்கு அடி இது தானே பலமாகை –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: