தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –
கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–
கூறப் படா மறையின் பொருள் கூறிக் -தெளியா மறை நிலங்களை தெளியும்படி அருளிச் செய்து
குவலயத்தோர் மாறப் படா வினை மாற்றிய -பண்டை வல் வினை பாற்றி அருளிச் செய்து
மாறன் மகிழலங்கல் நாறப் படா நின்ற போது –மகிழம்பூ மணம் வீசப்பெறும் காலத்தில்
அமுது ஆகும் -தென்றல் காற்று அமுதம் போல் இருக்கும்
அதன்றி நஞ்சம் தேறப் படாது –அம்மணம் பெறாத போது விஷம் போலே கொடுமையாக இருக்குமே
கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே–ஆகவே தென்றல் காற்றை நம்பப் போகாதே
கெட்டேன் -மிக்க இரக்கத்தால் கூறும் வார்த்தை
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வில்லை -பெரியாழ்வார்
தென்றலும் தீயினும் கொடி தாம் -கலியன்
லௌகிக பதார்த்தங்கள் ஆழ்வார் சம்பந்தத்தால் உபாதேயமாகவும்
இல்லையாகில் த்யாஜ்யமாகவும் இருப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –
———–
தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–
தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை -தெண் திசை உண்டாக்கிய உபநிஷத்தும்
என் தீ வினையை நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை –எனது கர்மங்களைப் பாற்றி அருளி
பொருந்திய நீதி மார்க்கம் யுடையதுமாய்
நிறை குருகூர் மன்றலைத் தோன்றும் மதுரகவியை –எல்லா வளங்களும் நிறைந்த திருக்குருகூரில் அவதரித்த
ஆழ்வார் பக்கல் உண்டான சொல்லிலும் பொருளிலும் இனிய பாசுரங்களை
அலைத்து நின்று என்றுமாம் –
மனத்துள் வைப்பார்-ஓதி உணர்ந்து தம் மனதில் வைத்துக் கொள்பவர்கள்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் -என் சென்னியில் வைத்து விளங்கும் என் தலைவராவார்
என் நாவுக் குரியவரே.-என்னால் ஸ்துதிக்கப் படுமவரும் அவரே
அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர் மறுமையும் இம்மையும்
நம்மை அளிக்கும் பிராக்களே –
ஆழ்வார் அடியார் அடியார் அடியோங்களே என்கிறார்
————-
உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–
பிறர் புன் கவி -மற்றவரின் புல்லிய பாடல்கள்
உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என –உரிக்கப்படுகின்ற வெண் காந்தளின் பெரிய கிழங்கு போல்
காந்தம் -கிழங்கு
ஒன்றுமின்றி விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் –வகுத்து நோக்க நோக்க சாரம் ஒன்றும் இல்லாமல்
மிகவும் பயன் அற்றவையாய் போய் விடும்
மெய் தெரிக்கின்ற கோச் சடகோபன் –உண்மைப் பொருளையே உணர்த்தும் ஆழ்வார்
தன் தெய்வக் கவி -யுடைய திவ்ய ப்ரபந்தங்களோ
தோண்டச் சுரத்தலினே–ஆழ்ந்து நோக்க நோக்க மென்மேலும் நற்பொருள் இடையறாது வெளிப்படுதலால்
புவியில் சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் -நுண்ணிய மணல் பாங்கில் நீரூற்றைப் போன்று இருக்கும் –
தொட்டனைத்து உறும் மணல் கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊரும் அறிவு
————–
சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–
திரக்கும் -உறுதி பெற்ற -நன்கு வளர்ந்து முதிர்ந்த –ஸ்திரம் -வடமொழி
கழை நெடுந் தாளில் -நீண்ட கருப்பந்தண்டிலே
கழை-மூங்கில் என்றுமாம் -மருத நிலா வருணனைக்குச் சேராது
தொடுத்த செந் தேன் -கட்டிய சிவந்த தேனையுடைய கூடுகள்
கயல் குதிப்ப உடைந்து-கயல் மீன்கள் துள்ளி விழும் போது அவை படுதலால் உடைபட்ட
பரக்கும் –தேன் பரவிப் பாயப் பெற்ற
பழன வயல் குருகூர் –கழனி களை யுடைய மருத நிலம் சூழ்ந்த ஆழ்வார் திரு நகரி யுடைய
வளம் படுமினே-மஹிமையை கவி பாடி ஸ்துதியுங்கோள் –
அங்கனம் பாடினீராகில் உங்களுக்கு
சுரக்கும் திருவும் -கைங்கர்ய ஸ்ரீ வளரும்
வறுமையும் தீரும் –தரித்திரம் நீங்கும் -சம்சாரம் தொலையும்
தொடக்கு விட்டுக் கரக்கும் இருவினை –புண்ய பாப இரு வினைகளும் தொடர்ச்சி நீங்கி
இருந்த இடம் தெரியாதபடி அழிந்து விடும் –
தொடக்கு –கட்டு -பந்தம்
மேன்மையும் காணும்–எல்லா மேன்மைகளை உண்டாகும் –
———–
பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–
இச் சுழல் பிறவி ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை –காற்றாடி போன்று கர்மங்களால் உண்டாகும் பிறவிச் சூழலை
நீக்கி யுணர்வுதவி-அடியார்களுக்கு போக்கி அருளி நல் ஞானத்தையும் அருளி
வீடும் திறந்து தந்தானை –ஸ்ரீ வைகுண்டமும் கொடுத்து அருளி
பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் -வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டு
பாடும் -பக்கம் முழுவதும் என்றுமாம் –
பைந் தாள் குவளை யோடும் கறங்கும் -பசுமையான நாளத்தை யுடைய குவளைகளின் இதழ்களும் சுழலப் பெற்ற
குருகைப் பிரான் எந்நான்றும் விடகிலமே.–திருக் குருகையில் திரு அவதாரம் செய்து அருளிய ஆழ்வாரை விட்டுப் பிரிய மாட்டோம்
——-
விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்
விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–
விட வந்தகார –கருமையாலும் கொடுமையாலும் விஷம் போன்ற இருளை யுடைய
வெம் பாலிற் -கொடிய இரவாகிய காலப்பகுதியில்
பராங்குசர் மெல்லியலுக்கு இடர் வந்ததால் என்று இரங்கிப் புணர்ந்திலர் –மனம் இரங்கி வந்து கூடினார் அல்லர்
இன்று இவ் வந்தி வந்து பட –மாலைப்பொழுதாகிய பெரும் தீயும் வந்து சேர
அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே.–இருளாகிய பெரும் புகை எங்கும் பரவி
இன்னுயிரை அட வந்த காலன் கொலோ அறியேன்
——————
உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல்
பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–
சுருதிப் பசுக்கள் சுரவா தவற்றைச் சுரப்பித்து-வேதப்பொருளாகிய பாலை எளிதில் சுரக்கும்படி செய்து
அவை சொரியும் பொருள் பால் –தத்வப் பொருளாகிய பாலை
கரவாது உதவிய மாறன் –லோபம் செய்யாதே திவ்ய பிரபந்தங்கள் மூலம் அனைவருக்கும் கொடுத்து அருளிய ஆழ்வாருடைய
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் அன்றோ
கவி அனையாய் – ஆழ்வாருடைய திவ்ய பாசுரங்களை ஒத்த சிறப்பையும் இனிமையும் யுடைய மங்கையே
இனி இப்புறம் ஓர் சர வாதம் -இனி எனது ஊருக்கு இப்பால் செல்ல வேண்டிய இடம் ஓர் அம்பு வீழ்ச்சி அளவு தான்
சர பாதம் -சர வாதம் என்று விகாரப்பட்டுள்ளது-சர பாத ஸ்தானம் -எய்த அம்பு விழும் தூரம்
அப்புறம் அ தட பணையே காண் –அதற்கு அப்பால் முன்பு நான் சொல்லி இருக்கிற எனது ஊரின் எல்லை யாகிய மருத நிலமே காண்
ஆகவே
இனி பரவாது கேட்டு பைய நட -விரைவு கொள்ளாமல் நான் சொல்லும் வார்த்தையை கேட்டுக் கொண்டு மெல்ல நடப்பாய்
புணர்ந்து உடன் போந்த தலைமகன் நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப் பெய்தமை சொன்ன பாசுரம் –
சம்சார மார்கத்தைக் கடந்து ஸ்ரீ வைகுண்டம் அழைத்துச் செல்லும் ஆழ்வார் அந்த ஸ்தானம் அணித்தமையைச் சொன்னவாறு –
——————-
பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –
தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–
தடம் பணைத் –அகன்ற வயல்களை யுடையதும்
தண் -நீர் வளத்தால் குளிர்ச்சியானதும்
பொருநைக் குருகூரர் –ஆழ்வாருடைய
தகை வகுள வடம் –அழகிய மகிழம் பூ மாலையை
எவ்வகைத் தாபத்தையும் தணிக்க வல்ல வகுள மாலை அன்றோ
பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் –பாங்கிமார் கொணர்ந்து பருத்த எனது கொங்கைகளிலே வைக்கின்றார் இல்லை
மற்றை மாலை யெல்லாம் உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் –மற்ற மாலைகள் அனைத்தும்
விரஹ தாபத்தால் வெந்து பொடியாய் உதிர்ந்து விடும்
இந்நிலையில்
பனி தோய்ந்திடு மேகங்களே–நீர்த்துளி நிறைந்த மேகங்களோ
ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த விடம் பணைக் கொண்டனவே -கொடிய ஐந்து பாம்புகள் ஒருங்கே உமிழ்ந்த விஷங்கள் போலெ திரண்டனவே
கொடிய ஐந்தலை நாகம் என்றுமாம் –
பொருள் ஈட்டி பின்பு கார் காலத்தில் மீண்டு வருவதாக சொல்லிப் போந்த தலைமகன் வாராமையாலே
ஆழ்வாருக்கு போலியான மேகங்கள் இந்நிலையில் வருத்தத்தை மிகுவிக்கும் -போலி கண்டு அழிதல் –
————-
பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –
மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–
மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது –மேகங்கள் ஆகிய உங்களை இடை வழியிலே கண்டு
செய்தி கூறினேன் என்று இதனை ஒரு இழிவாக நீங்கள் நினையாமல்
மெய்யன் குருகூர்ப் பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் –உண்மைப் பொருளையே உணர்த்தும் ஆழ்வாரது
மிக இனிய சொற்களை யுடைய என் காதலியை
கண்ணீரின் துளி பரந்த மோகத்தை ஆற்றிக் கொண்டே –விஞ்சியுள்ள மோஹத்தை தணிவித்துக் கொண்டே
நீங்கள் சமீபிப்பவர்களாய்
கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச் சோகத்தை ஆற்றிக் கொண்டே –நீங்கள் வருகிற வழியில் நான்
மீண்டு வருவதைக் கண்ட செய்தியைச் சொல்லி அவளது விரஹ வேதனையை சாந்தப்படுத்திக் கொண்டே
துளித் தூவத் தொடங்குகவே.-மழைத் துளி பெய்யத் தொடங்குவீர்களாக
மேகங்களை பாகவதர்களாக சொல்லாத தட்டில்லையே
ஆழ்வார் வரை அறிவித்து ஆஸ்வாசப்படுத்த சொன்னபடி
——————
மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –
தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–
சவையீர்–சபையில் உள்ளவர்களே
சொல்லு கின்றேன்-நான் உங்களுக்கு ஒரு உறுதி சொல்கின்றேன் -கேளுங்கள்
மதங்கி–ஆடல் பாடல் வல்ல ஓர் இள மங்கை
நடம் தொடங்கு கின்றாள்–கூத்தாடத் தொடங்குகின்றாள்
குருகூரர் தொழா மடங்கு கின்றாள் –ஆழ்வாரை தொடக்கத்திலே தொழுது திரைக்குள்ளே திரும்பிச் செல்லுகின்றாள்
மண்டலம் சுற்றி யாடுகின்றாள் -மண்டலமாக அங்கேயே இருந்து சுழன்று கூத்தாடுகின்றாள்
விடங்கு கண்டார் பிழைப்பார் -இந்த மதங்கியின் அழகைக் கண்டு காதல் நோயால் மரண வேதனைப்படாது
பிழைப்பவர் எவர் -எவரும் இல்லை என்றபடி
இந்த படங்கு விண்டால் உம் பதிகளுக்கே பின்னைப் போக ஒண்ணாது –இந்தத் திரையை வாங்கி விட்டால் –
அவளது அழகைக் கண்டு மோஹித்து விழாமல் உங்கள் ஊருக்குப் போக முடியாதே
ஆதலால்
விரைந்து ஏகும் -யாத்திரை வாங்குவதற்கு முன்னே அப்பால் போய் விடுங்கோள் –
பக்தி அதிசயத்தைக் கண்டவர் இவர் பக்கல் ஈடுபடுவதை விட்டு
பிரபஞ்ச விஷயங்களில் செல்ல இயலாமையைச் சொன்னவாறு
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply